புத்தரும் ராவணனும் – பகுதி 1

lankavatara1

ராமாயணத்தில் வரும் ராவணன் சிவ பெருமானை வணங்கினான். லங்காவதார சூத்திரத்தின் முதல் அத்தியாயத்தில் வரும் ராவணன் பிரபஞ்ச புத்தரை வணங்குகிறான்; நீண்டதோர் உரையாடலும் நிகழ்த்துகிறான். ராமாயணத்தின் ராவணன் லங்காவதார சூத்திரத்தில் நுழைந்தது எப்படி?

அதற்கு முன்னால் லங்காவதார சூத்திரம் பற்றிய ஒரு சிறு அறிமுகம்! சீனாவிலும் ஜப்பானிலும் பல நூற்றாண்டுகளாக முதன்மைப் படுத்தப்பட்ட மகாயான பௌத்த நூல் – லங்காவதார சூத்திரம். மகாயான பௌத்தத்தின் முக்கிய கோட்பாடுகளான மனம்-மட்டும், ததாகத கர்ப்பம் மற்றும் ஆலயவிஞ்ஞானம் போன்றவைகளை விரிவாக விளக்கும் நூல். “மொழியைக் கடந்து செல் ; சிந்தனையை தாண்டிச் செல்” என்று சொன்ன போதிசத்துவர் போதி தர்மர் தன் வாழ்நாளில் தன்னுடன் வைத்திருந்த ஒரே நூல் – லங்காவதார சூத்திரம் மட்டுமே ; தன்னுடைய வஸ்திரம், பிச்சைப் பாத்திரம் – இவற்றுடன் லங்காவதார சூத்திரம் நூலையும் போதி தர்மர் தன் சீடர் ஹுய்க்க (Huike) –வுக்கு கொடுத்தார் என்பது தொன்மச் செய்தி. எண்ணற்ற மகாயான பௌத்த நூல்களைப் போலவே இதை இயற்றிய மூலநூலாசிரியர் யார்? எப்போது எழுதப்பட்டது? என்ற விவரங்கள் தெரியாது.

”லங்காவதார” என்பதன் சொற்பூர்வ அர்த்தம் “இலங்கைக்கு நுழைதல்” என்பதாகும். புத்தர் இலங்கை சென்ற போது இந்த சூத்திரத்தை வெளிப்படுத்தியிருக்கலாம் என்று எண்ண இடமிருக்கிறது. இலங்கை சென்றவர் வரலாற்று புத்தர் என்று சொல்ல முடியாது. ஆனால் பிரபஞ்ச புத்தர் எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாமே? பிரபஞ்ச புத்தருக்கும் இலங்கையில் குழுமியிருந்த போதிசத்துவர்களின் தலைவராக இருக்கும் மகாமதி என்கிற போதிசத்துவருக்குமிடையில் நிகழும் உரையாடலாக இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. மற்றொரு மகாயான நூலான அவதாம்ஸக சூத்திரத்தில் பிரபஞ்ச புத்தர் தன் உரையை ஒரு தொன்ம லோகத்தில் நிகழ்த்துவார். ராட்சஸர்களின் தலைவனாக உருவகப்படுத்தப்படும் ராவணனுடனான சம்பாஷணை என்றாலும் அது இலங்கையில் நடக்கிறது என்று சொன்ன படியால் லங்காவதார சூத்திரத்துக்கு ஒரு பூலோக பரிமாணம் கிடைத்து விடுகிறது.

வடமொழியில் இயற்றப்பட்ட இந்த சூத்திரத்தை இந்தியாவிலிருந்து சீனாவுக்குச் சென்ற பௌத்த அறிஞர்கள் வெவ்வேறு கால கட்டத்தில் சீன மொழியில் தந்திருக்கின்றனர். தற்போது கிடைக்கும் பதிப்புகளில் குணபத்ரரின் மொழிபெயர்ப்பு தான் காலத்தால் முந்தியது.

லங்காவதார சூத்திரத்தின் முதல் மொழிபெயர்ப்பு கி..பி 420க்கும் கி பி 430க்கும் இடைப்பட்ட காலத்தில் தர்மரக்‌ஷர் என்பவரால் செய்யப்பட்டது. ; இரண்டாம் மொழிபெயர்ப்பு ஏறத்தாழ இருபது வருடங்களுக்கு பிறகு நிகழ்ந்திருக்கிறது. இதைச் செய்தவர் குணபத்ரர். மூன்றாவது மொழிபெயர்ப்பு வெளிவர மேலும் நூறு ஆண்டுகள் பிடித்தன. மொழிபெயர்ப்பாளர் போதிருசி. கடைசி மற்றும் நான்காவது மொழிபெயர்ப்பு சிக்ஷானந்தா என்பவரால் எட்டாம் நூற்றாண்டில் செய்யப்பட்டது. முதல் மொழிபெயர்ப்புக்கும் கடைசிக்கும் கிட்டத்தட்ட முன்னூறாண்டுகள் இடைவெளி.

தர்மரக்‌ஷரின் மொழிபெயர்ப்பு காலப்போக்கில் அழிந்துவிட்டது ; நமக்கு கிடைக்கவில்லை.

திபெத்திய மொழியிலும் இரண்டு மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன. வெவ்வேறு மொழிபெயர்ப்புகளை ஆய்ந்து, 1923-இல் ஜப்பானிய சமஸ்கிருத மொழி வல்லுனரும் பௌத்த பிரசாரகருமான புன்யூ நான்ஜோ அவர்களால் அச்சிடப்பட்ட வடமொழி பிரதியுடன் ஒப்பு நோக்கிய பின் பேராசிரியர் சுஸுகி பின் வரும் முடிவுகளுக்கு வருகிறார் (1) குணபத்ரரின் பதிப்பு மற்ற பதிப்புகளை விட சுருக்கமானதும் எளிமையானதுமாகும் (2) சமஸ்கிருத வடிவத்தின் அத்தியாயப் பிரிவுகளோடு சிக்‌ஷானந்தரின் மொழிபெயர்ப்பு மற்றும் திபெத்திய மொழிபெயர்ப்புகள் ஒத்துப் போக்கின்றன. (3) போதிருசியின் புத்தகத்தில் அத்தியாயங்களின் எண்ணிக்கை அதிகம் ; மூலத்தின் பெரிய அத்தியாயங்களை சிறு சிறு பிரிவுகளாக பிரித்து எழுதியிருக்கிறார். (4) குணபத்ரரின் பதிப்பில் அத்தியாயப் பிரிவுகளே இல்லை.

குணபத்ரரின் மொழிபெயர்ப்பு மிகவும் பழமையானது. குணபத்ரருக்கும் போதிருசிக்கும் இடையிலான நூறாண்டு இடைவெளியில் மூன்று உதிரி அத்தியாயங்கள் பிற்காலத்திய மொழிபெயர்ப்புகளில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் இலங்கை மன்னன் ராவணன் பிரபஞ்ச புத்தரை சந்திப்பதும், அகவெளியின் சத்தியத்தை விரித்துரைக்கச் சொல்லி கேட்பதும். “லங்காவதார சூத்திரத்தின் விரிவாக்கத்துக்கான மேலோட்டமான முகவுரையாக கருதப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் இந்த அத்தியாயம் இணைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இது பின்னர் இணைக்கப்பட்டது தான் எனபதில் சந்தேகமில்லை” என்று பேராசிரியர் சுஸூகி கருதுகிறார்.

ராம-ராவண கதை கி.பி மூன்றாம் அல்லது நான்காம் நூற்றாண்டுகளில் திட்டவட்டமான காவிய வடிவத்தை எய்தியிருக்கக் கூடும் என்று வரலாற்றறிஞர்கள் சொல்கின்றனர். பிற்கால மகாயான பௌத்தர்கள் லங்காவதார சூத்திரத்துக்கு ஓரு ராமாயண இணைப்பு கொடுத்து விட வேண்டும் என்ற விழைவில் ராவண – பிரபஞ்ச புத்தர் சந்திப்பை முன்னுரையாக சேர்த்திருக்கக் கூடும். “குணபத்ரரின் மொழிபெயர்ப்பை வாசிக்கையில் ராவண நிகழ்வின் இடைச்செருகல் சூத்திரத்தை புரிந்து கொள்வதில் எந்த சிறப்பு உதவியையும் ஆற்றவில்லை என்பது தெளிவாகும்” என்கிறார் சுஸுகி.

+++++

Nanjio

நான் கேள்விப்பட்டது. பெருங்கடலின் மத்தியில் அமைந்த மலாய மலைச் சிகரத்தின் உச்சியில் இருந்த இலங்கைக் கோட்டையில் ஆசிர்வதிக்கப்பட்டவர் தங்கியிருந்தார். ஆபரணங்களால் செய்யப்பட்ட மலர்களால் அம்மாளிகை அலங்கரிக்கப்பட்டிருந்தது. பிக்‌ஷுக்களும், திரளான போதிசத்துவர்களும் அவரைச் சூழ்ந்திருந்தனர். அவர்களெல்லோரும் வெவ்வேறு புத்த நிலங்களிலிருந்து அங்கு வந்து சேர்ந்திருந்தனர். மகாமதி போதுசத்துவரின் தலைமையில் அங்கு கூடியிருந்த போதிசத்துவர்கள்-மகாசத்துவர்கள் பல்வேறு சமாதி நிலைகளின் வித்தகர்கள்; பத்து வித சுய-தேர்ச்சிகள், பத்து ஆற்றல்கள், ஆறு வித மனோ சித்திகள் – இவைகள் கை வரப் பெற்றவர்கள். மனதின் நீட்சியாகவே புறவுலகம் இருக்கிறது என்ற உண்மையின் மகத்துவத்தை அறிந்தவர்கள். வெவ்வேறு உயிர்களின் மனபோக்கை, நடத்தையைப் பொறுத்து வடிவம், போதனை மற்றும் ஒழுக்க நெறிமுறைகளை எப்படி கட்டுப்படுத்துவது என்று புரிந்தவர்கள். ஐந்து தர்மங்கள், மூன்று சுபாவங்கள், எட்டு விஞ்ஞானங்கள் மற்றும் இருவகை அனாத்மங்கள் – இவை பற்றி முழுமையாக உணர்ந்தவர்கள்.

கடல்-நாகங்களின் அரசனுடைய அரண்மனையில் போதனை செய்து விட்டு ஏழு நாட்களின் முடிவில் ஆசீர்வதிக்கப்பட்டவர். திரும்பியிருந்தார். சக்கரர்களும், பிரம்மனும், நாக கன்னிகைகளும் அவரை வரவேற்றனர். மலாய மலையின் மேலிருந்த லங்கா மாளிகையை நோக்கிய படி சிரித்தவாறே அவர் சொன்னார் “இறந்த காலத்தில் அருகர்களாகவும், முழு நிர்வாண நிலை அடைந்தவர்களாகவும் இருந்த புத்தர்களால், மலாய மலைச்சிகர உச்சியில் இருக்கும் இலங்கைக் கோட்டையில் தர்மம் எனும் உண்மை அவர்களுடைய உரையாடலின் கருப்பொருளானது – உயரிய ஞானத்தை அடைதல் வாயிலாக உள்ளார்ந்த சுயத்தில் மட்டுமே புரிந்து கொள்ளத்தக்க உண்மை அது ; தத்துவம் பேசும் தத்துவாசிரியர்களாலோ, ஸ்ராவகர்கள் மற்றும் பிரத்யேகபுத்தர்களின் பிரக்ஞை வாயிலாக கற்பனை செய்து பார்க்கவோ இயலாத உண்மை. யக்‌ஷர்களின் எஜமானனான ராவணனுக்காக நானும் அங்கு இருப்பேன்”

ததாகதரின் ஆன்மீக ஆற்றலால் அருளப்பெற்று, ராவணன், ராட்சசர்களின் தலைவன், அவரின் குரலையும் சிந்தனையையும் செவி மடுத்தான். “ஆசீர்வதிக்கப்பட்டவர் கடல் நாகங்களுடைய அரசனின் அரண்மனையை விட்டு, சக்கரர்கள், பிரம்மன் மற்றும் நாககன்னிகைகள் புடைசூழ, கடலின் மேலோடும் அலைகளை நோக்கியவாறு, கூடியிருப்போரின் மன அதிர்வுகளை புரிந்தவாறு, பொதுநிலையால் தூண்டப்பட்ட விஞ்ஞானங்கள் உட்கலக்கும் ஆலய விஞ்ஞானம் பற்றி சிந்தித்தவாறு வெளியே வருகிறார்.” அங்கு நின்ற ராவணன் சொன்னான் “நான் சென்று ஆசீர்வதிக்கப்பட்டவரை இலங்கைக்குள் வருமாறு கேட்டுக் கொள்வேன் ; அது (அவரின் வருகை) இந்த நீண்ட இரவில் லாபம் ஈந்து, நனமையை அருளி, கடவுளரின் மற்றும் மனிதர்களை மகிழ்ச்சிப்படுத்தும்”

தன் பணியாளர்களை அழைத்துக்கொண்டு ராவணன் புஷ்பக விமானமேறி ஆசிர்வதிக்கப்பட்டவர் வந்திருந்த இடத்துக்கு வந்தடைந்தான். அவனின் பிரஜைகள் ஆசீர்வதிக்கப்பட்டவரை இடமிருந்த வலமாக சுற்றி வந்தனர். நீலக்கல் பதிக்கப்பட்ட பிரம்பை வைத்து ஓர் இசைக்கருவியை மீட்டத் தொடங்கினர். சஹர்ஷயம், ரிஷபம், காந்தாரம், தைவதம், நிஷாதம், மத்யமம் மற்றும் கைசிகம் முதலிய இசைக்குறிப்புகளை வாசித்தனர். சரியான கணக்கில் பாடும் குரல் சேர்ந்திசைக்கும் குழலோடு இழைந்து ஒலித்தது.

”சுய இயல்பு கற்பிக்கப்பட்ட மனம் எனும் கொள்கையுள்ள உண்மைப் புதையல் சுயத்தன்மையற்றது ; தர்க்கத்தினின்று தள்ளி நிற்பது ; அசுத்தங்களில்லாதது ; அது ஒருவனின் உள்ளார்ந்த உணர்வில் அடைந்த ஞானத்தை குறிக்கிறது. ஓ பிரபுவே, நீர் இங்கு எனக்கு இங்கே உண்மையை அடையும் வழியைக் காட்டுவீராக”

“பல வடிவங்களுக்கு சொந்தக்காரர்களான புத்திரர்களோடு இறந்த கால புத்தர்கள் பலர் இலங்கையில் வாழ்ந்திருக்கின்றனர். ஓ பிரபு! உயரிய ஞானத்தை எனக்கு போதிப்பீராக ; பல்வேறு உருவம் படைத்த யக்‌ஷர்களும் அதைக் கேட்கட்டும்”

பாடலின் யாப்பு சிதறாது ராவணன் ராகத்தோடு பாடினான்.

ததாகதருக்கு உரிய காணிக்கைகளை சமர்ப்பித்து விட்டு, மரியாதையுடன் பேசலானான் ராவணன்

“இங்கு வந்திருக்கும் என் பெயர் ராவணன், ராட்சசர்களின், பத்து தலை கொண்ட தலைவன்.

மதிப்பு வாய்ந்த கற்கள் பதிக்கப்பட்ட இச்சிகரத்தின் உச்சியில் இறந்த காலத்தில் முழுமையான ஞானம் அடைந்தவர்களால் உள்ளார்ந்த பிரக்ஞை மிக்க முழுமையாக ஞானமானது உணர்த்தப்பட்டது.

சீடர்களால் சூழப்பட்ட ஆசிர்வதிக்கப்பட்டவர் இப்போது அதே ஞானத்தை இலங்கையில் இருக்கும் எங்களுக்கு போதித்தருள வேண்டும்.

இறந்த கால புத்தர்களால் புகழப்பட்ட லங்காவதார சூத்திரம் எந்தவொரு குறிப்பிட்ட தத்துவக் கோட்பாட்டு முறையைச் சாராமல் இருப்பதால், உள்ளார்ந்த பிரக்ஞை நிலையை தெளிவுற அறிவிக்கிறது.

இறந்த கால புத்தர்கள் வெற்றி பெற்றவரின் மக்கள் புடை சூழ இச்சூத்திரத்தை ஓதுவதை நான் கேட்டிருக்கிறேன். ஆசிர்வதிக்கப்பட்டவரும் இப்போது அதைப் பேசுவார்.

வருங்காலத்தில் புத்தர்களும், புத்த-மக்களும் யக்‌ஷர்களிடம் கருணை கொள்வார்கள் ; ஈடிணையற்ற இக்கோட்பாட்டைப் பற்றி இரத்தினக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட இம்மலையின் உச்சியில் நின்று தலைவர்கள் போதிப்பார்கள்.

ஆசிர்வதிக்கப்பட்டவரே ! பேராசை எனும் குறையிலிருந்து விடுபட்டுவிட்ட இங்கிருக்கும் யக்‌ஷர்கள் உள்நிறை பிரக்ஞையைத் தெளிந்து விட்டார்கள் ; இறந்த புத்தர்களுக்கு காணிக்கையிடுகிறார்கள். ; அவர்கள் மகாயான போதனையில் நம்பிக்கையுடையவர்கள் ; ஒருவருக்கொருவரை ஒழுக்கப்படுத்திக் கொள்ளும் நோக்கம் கொண்டவர்கள்.

மகாயானம் பற்றி அறியும் ஆர்வமிக்க இளம் யக்‌ஷர்களும், ஆடவரும், பெண்களும் இங்கிருக்கிறார்கள். ஆசீர்வதிக்கப்பட்டவரே! வாரும்! நீங்கள் எம் ஆசான்! மலாய மலையின் மேலிருக்கும் இலங்கைக்கு வாருங்கள்.

கும்பகர்ணனின் தலைமையில் இந்நகரில் வசிக்கும் ராட்சசர்கள் மகாயானத்தின் மேலுள்ள அர்ப்பணிப்பால், உங்களிடமிருந்து உட்கருத்து உணர்தலைப் பற்றி அறிய ஆவலாய் உள்ளனர்.

ஓ முனிவரே! என் மாளிகையை ஏற்றுக் கொள்ளுங்கள், அப்சரஸ் நங்கைகளின் துணையையும், பல்வித அணிநகைகளையும் மற்றும் உல்லாச மிகு அசோக வனத்தயையும் கூட ஏற்றுக் கொள்ளுங்கள்.

“புத்தர்களுக்கு சேவை செய்ய நான் என்னையே அர்ப்பணித்துக் கொள்வேன்.. அவர்களுக்கு விட்டுக் கொடுக்கத் தயங்கும் எதுவும் என்னிடம் இல்லை. ஓ மாமுனியே! என்னிடம் இரங்குவீராக

அவன் இவ்வாறு பேசுவதைக் கேட்ட மூவுலகின் பிரபு சொன்னார் “யக்‌ஷர்களின் அரசே! இரத்தினக்கற்கள் பதித்த இம்மலைக்கு இறந்த காலத் தலைவர்கள் பலர் விஜயம் புரிந்திருக்கின்றனர்.

உன் மேல் கருணை மிகுத்து அவர்களின் உள்நிறை ஞானத்தைப் பற்றி உரையாடியிருக்கிறார்கள். வருங்கால புத்தர்களும் அதே ஞானத்தை மீண்டும் பிரகடனப்படுத்துவார்கள்.

உண்மைக்கருகில் நிற்கும் பயிற்சியாளர்களுக்குள்ளே உறையும் உள்ளார்ந்த ஞானம். யக்‌ஷர்களின் ராஜனே! என்னிலும் சுகதாவிலும் இருக்கும் இரக்ககுணம் உன்னுள்ளிலும் இருக்கிறது”

ராவணனின் அழைப்பை ஏற்று, ஆசீர்வதிக்கப்பட்டவர் அமைதியாகவும் குழப்பமில்லாமலும் இருந்தார். ராவணனின் புஷ்பக விமானத்தில் ஏறிக்கொண்டார்.

இன்ப நகரத்தை அடைந்ததும் புத்தருக்கு மீண்டும் மரியாதைகள் செய்யப்பட்டன ; ராவணன் அடங்கிய யக்‌ஷர்களின் குழுவொன்றும், யக்‌ஷிகளின் குழுவொன்றும் அவருக்கு மரியாதை செய்தன.

—- (to be continued)

Source : (1) Studies in the Lankavatara Sutra – D T Suzuki (2) The Lankavatara Sutra – Volume one – Edited by Bunyiu Nanjio

DTSuzuki

 

1 Comment

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.