ஈஸ்வரன்

காசி நஸ்ருல் இஸ்லாம் – இந்த மகாகவிஞன் எந்தச் சிமிழிலும் அடங்காதவன். இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் தீவிரவாதி. ஐநூறுக்கும் மேலான இந்து பஜன்களை இயற்றியவன். மகன்களுக்கும் மகளுக்கும் இந்து-முஸ்லீம் பெயர்களை இணைத்துச் சூட்டியவன். மூத்த மகனுக்கிட்ட பெயர் – கிருஷ்ண முகம்மது. வங்கதேசத்தின் தேசிய கவி. துர்காபூர் விமான நிலையத்துக்கு இவன் பேர் சூட்டப்பட்டிருக்கிறது. மேற்கு வங்கமும் வங்க தேசமும் போட்டியிட்டு இவனைச் சொந்தம் கொண்டாடுகின்றன. மகனும் மகளும் டாக்கா சென்று சேர்வதற்குள் கவிஞன் அடக்கம் செய்யப்பட்டு விட, அவனுடைய புதைக்கப்பட்ட தகனப்பெட்டியை மீண்டும் தோண்டியெடுத்து இந்தியாவுக்கு கொண்டு வந்து புதைக்க வேண்டும் என்ற கோரிக்கை இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. கரடுமுரடான நஸ்ருல் இஸ்லாமின் கவிதைகளின் அழகியல் குருதேவ் தாகூரின் அதிநவீன பாணியுடன் ஒப்பிடுகையில் தனித்துவமானது. நவீன வங்க மொழியில் சமஸ்கிருதமயமான சொற்களை பயன்படுத்தி வந்த காலத்தில் பர்சிய-அரபு மூலச்சொற்களை பயன்படுத்துகிறான் என்பதால் இவன் பெயரைக் குறிப்பிடாமல் கடுமையாக விமர்சனம் செய்தார் குருதேவ் ரவீந்திரர். “கூன்” (ரத்தம்) எனும் பர்சிய மூலச் சொல்லை இஸ்லாம் பயன்படுத்தியதால் விளைந்த மிகப்பெரிய இலக்கியச் சண்டை இது. “ரக்தோ”(ரத்தம்) என்ற சொல்லை ஏன் பயன்படுத்தவில்லை என்று வங்க இலக்கிய உலகமே இரண்டு பட்டது. 1941இல் ரவீந்திரர் மறைந்த போது கண்ணீர் விட்டு அழுதான். செயலாற்றிய இருபதாண்டுகளில் எண்ணற்ற கவிதைகளை பாடல்களை கட்டுரைகளை எழுதிக் குவித்தான். தன்னுடைய பாடல்களுக்கு தானே இசையமைத்து கிராமபோன் ரிகார்டுகளை HMV நிறுவனம் மூலமாக கொண்டு வந்தான். வங்காள மொழியின் திரைப்படம் இயக்கிய முதல் முஸ்லீம் இயக்குனராகவும் திகழ்ந்தான். தாகூர் இறந்த ஓராண்டில் இஸ்லாமை ஒரு வித நோய் பீடித்தது. ஐம்பதுகளை மனநோய் மருத்துவமனையில் கழித்தான். பின்னாளில் சிகிச்சைக்காக ஐரோப்பா சென்ற போது இந்தியாவில் அவனுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று ஐரோப்பிய மருத்துவர்கள் தெரிவித்தனர். நோயிலிருந்து மீளாமல் 1976 வரை வாழ்ந்தான். 1972இல் வங்கதேசம் தனி நாடான போது புது அரசு டாக்காவுக்கு அழைத்துச் சென்று அவனைப் பார்த்துக் கொண்டது.வங்க தேசத்தின் தேசிய கவி என்றும் அறிவித்தது.

ஈஸ்வரன்

இறைவனுக்காக
வானையும் மண்ணையும்
தேய்த்துப் பார்ப்பவன் யார்?
மலையுச்சிகளில் ஏறியும்
காடுகளில் உலவியும்
திரிந்து கொண்டிருக்கும் நீ யார், துறவியே!
புதையலை உன் மார்பில் கட்டிக்கொண்டு
அதனை அனைத்திடங்களிலும் தேடித் திரிகிறாய்
படைப்பு உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறது
நீயோ உன் கண்ணைப் பொத்திக் கொண்டுள்ளாய்
படைத்தோனைத் தேடும் உன் முயற்சியில்
நீ உன்னையேதான் தேடிக் கொண்டிருக்கிறாய்
விருப்பக் குருடனே !
கண்ணைத் திற
உன் வடிவை கண்ணாடியில் பார்
அவனது நிழல்
உன் முழு வடிவிலும் வார்க்கப்பட்டிருக்கும்
வேதத்தின் அதிகாரிகள் மீது
மலைப்போ அச்சமோ கொள்ள வேண்டியதில்லை
நாயகனே!
இறைவனின் செயலர்கள் இல்லை அவர்கள்
அனைத்திலும் வெளிப்படும் அவன்
அனைத்தின் மத்தியிலும் இருக்கிறான்
நான் என்னைப் பார்க்கிறேன்
காணாத என் படைப்பாளியை
அடையாளம் கண்டுகொள்கிறேன்
கடல்-வழி வணிகர்கள்
நகை வர்த்தகம் புரிகின்றனர்
அவர்கள் நகை வணிகர்கள்
நகை செய்தவனை அறிந்தோம்
என்று பாசாங்கு செய்கிறார்கள்
முத்து விளையும் கடல்களின்
ஆழத்தில் என்றும் அவர்கள் மூழ்கியதில்லை
நூல்களை ஆராய்வதற்குப் பதிலாக,
உண்மைக் கடலில் ஆழ்ந்துவிடு நண்பனே

தொழுகை விரிப்பு

ஆகா ஷாஹித் அலி – ஆங்கிலத்தில் எழுதிய கஷ்மீரக் கவி. அரசியல் கவியாக இருந்தாலும், சமயம் மற்றும் கலாசாரக் கருப்பொருட்களில் இணக்கமாயிருந்தவர். அவரின் “தொழுகை விரிப்பு” என்னும் கவிதை மிகப்புகழ் பெற்றது. இஸ்லாமிய வாழ்க்கையின் அங்கமாக இருக்கும் தொழுகையைப் பற்றிய இக்கவிதையை வாசிக்கும்போது விசுவாசமும் ஆனந்தமும் நிரம்பிய மனவுணர்வுடன் தொழுகை விரிப்பில் முழங்கால்படியிட்டு இந்தக் கவிதையில் ஏறக்குறைய நாம் இருக்கிறோம் என்ற உணர்வு ஏற்படுகிறது. ​​​​​​மதக் குறிப்புகள் மற்றும் படிமங்களைப் பயன்படுத்தி தொழுகைச் சடங்கின் வீரியம் மற்றும் முக்கியத்துவத்தின் உணர்வை கவிதையினுள் உருவாக்குகிறார் ஷாஹித். தனது பாட்டிக்கு கவிதையை அர்ப்பணிக்கும் ஷாஹித், ஹஜ்ஜின் வருடாந்திர விழாவை, மக்காவுக்கான முஸ்லீம் புனிதப் பயணத்தை, சோகம் மற்றும் சோர்வு ஆகியவற்றின் தொனிகளுடன் இணைக்கிறார்.

சென்ற வருடம் இக்கவிதையை மொழிபெயர்க்க நான் எடுத்துக் கொண்ட முயற்சியை கைவிட வேண்டியதாயிற்று. இன்று மாலை கவிதையை மீண்டும் மொழியாக்கம் செய்ய முயன்றேன். முயற்சி எவ்வளவு வெற்றி பெற்றிருக்கிறது என்பதை வாசகர்கள்தான் சொல்ல வேண்டும்.

தொழுகை விரிப்பு

தினத் தொழுகைகளுக்கு நடுவே
அந்த ஐந்து இடைவெளிகள்

வீட்டின் பெண்கள்
காய்கறிகளினூடே
இழுக்கும் தடித்த இழைகள்

குளிர்காலத்துக்கென இலையுதிர் காலத்தில் உலரும்
இஞ்சியின் ஜெபமாலை
சலசலக்கும் மிளகாய்கள்

அந்த இடைவெளிகளில்
மடிக்கப்படும் விரிப்பு –
பாட்டி கொண்டுவந்த
வரதட்சணையின் ஒரு பகுதி –
ஆக, சாத்தானின் நிழல்
புனிதம் குலைக்காமலிருக்க –
கருஞ்சிவப்பில் நெய்த
தங்க மினாராக்களுடன் மக்கா

பின்னர் சூரியாஸ்தமன
பிரார்த்தனைக்கு அழைப்பு

வேலைக்காரர்களின் தொழுகை –
அவிழ்க்கப்பட்ட வைக்கோல் விரிப்புகளில்
அல்லது தோட்டத்தில்

கோடையில் புற்களின் மீது
பிரார்த்தனைகள் முடிய விரும்பும்
குழந்தைகள்

ஆபிரகாமுடைய
தியாகத்தின் பட்டுக்கல்லை
ஸ்பரிசித்த
பெண்களின் நெற்றிகள்

சுவர்க்கத்திலிருந்து இறங்கிய
கருப்புக் கல்லைச் சுற்றி வரும்
வெள்ளையணிந்த பக்தர்கள்

இந்த ஆண்டு என் பாட்டி
ஒரு யாத்ரீகர்
மக்காவில் அவள் அழுகிறாள்

கல்லின் திரை விலக்கப்படுகையில்
தூண்களைப் பிடித்துக்கொண்டு
அவள் அழுகிறாள்

மூலத்தை வாசிக்க : https://www.poetryfoundation.org/poems/43277/prayer-rug

Agha Shahid Ali, “Prayer Rug” from The Half-Inch Himalayas. Copyright © 1987 by Agha Shahid Ali.

Agha Shahid Ali (1949-2001)

வொஹு மனோ-வின் தூய்மை

இனத்தின் தூய்மைக்கு
மாறாக
மனத்தின் தூய்மையையே
நான் விரும்புகிறேன்

அஹுரா மஸ்டாவின்
அருளை இழப்பதைவிட
மனிதர்களின் கோபத்தை
எதிர்கொள்வது மேல்
உலகம் முழுவதும்
நாம் கண்டுபிடித்துவரும்
பண்டைய நாகரிகங்கள்
மனத்தின் தூய்மைக்கு
நேரடி சாட்சி

மனம் ஒரு வலைப்பின்னல்
திரும்பத்திரும்ப
ஒவ்வொரு வினாடியும்
குறுக்கும் நெடுக்குமாக எண்ணங்கள்
நல்ல எண்ணங்களை
உலவ விடுங்கள்
கெட்ட எண்ணங்களின்
சுழற்சி இல்லாது போகட்டும்

வெறுக்கத்தக்க எண்ணங்களில்
எதிர்மறை உணர்ச்சிகளில்
மனத் தூய்மை வீணாகியிருந்தால்
ஒருபோதும்
பண்டைய நாகரிகங்கள்
கண்டுபிடிக்கப்பட்டிரா!


Copyright ©2008 Farida Bamji

Translation in Tamil : by the blogger

ஷிண்டோ

சோகம் நம்மை
ஆட்கொள்ளுகையில்
நினைவுகளின், கவனத்தின்
சின்ன சாகசங்களால்
நாம் சில கணங்கட்கு
காக்கப்படுகிறோம்:
கனியின் சுவை, நீரின் சுவை
கனவு நமக்குத் திரும்பித்தரும் முகம்,
நவம்பர் மாதத்துவக்கத்தின் மல்லிகைகள்,
திசைகாட்டியின் முடிவிலாத் தாபம்,
தொலைந்துவிட்டதாய் நினைத்த புத்தகம்,
லத்தின மொழிப் பாவகையின் சீர்,
வீட்டைத் திறக்கும் சிறு சாவி,
சந்தனம் அல்லது நூலகத்தின் வாசனை,
ஒரு நிழற்சாலையின் பழமையான பெயர்,
வரைபடத்தின் நிறங்கள்,
சற்றும் எதிர்பாராத சொல்வரலாறு,
மெருகேற்றிய நகம்,
நாம் எதிர்பார்த்திருந்த சந்திப்பு,
பனிரெண்டு முறை இருளில் கேட்கும் மணியோசை,
நாம் எதிர்பார்க்காத உடல்வலி.
எண்பது லட்சம் ஷிண்டோ தெய்வங்கள்
நம் பூமியில் பயணித்தவண்ணம் இருக்கின்றன
பணிவான அத்தெய்வங்கள் நம்மைத் தொட வருகின்றன
தொடுகி்ன்றன, பின் சுற்றித் திரிகின்றன.

- போர்ஹேஸ்

(Translated from the English translation by Paul Weinfield)

பொருத்தம் பார்த்த குருவி – யஸுனாரி கவாபாடா

—-

சுய மகிழ்வுத் தனிமைக்கு நெடுங்காலமாய்ப் பழக்கப்பட்டுவிட்ட அவன் மற்றவர்களுக்குத் தன்னைத் தரும் அழகியலுக்காக ஏங்கத் தொடங்கினான். “தியாகம்” என்னும் சொல்லின் பெரும்பொருள் அவனுக்குத் தெளிவாயிற்று. மானுடம் என்னும் உயிரியின் வாழ்க்கையை கடந்த காலத்திலிருந்து எதிர் காலத்துக்கு எடுத்துச் செல்லும் ஒரே நோக்கம் கொண்ட ஒற்றை விதையாக தன்னுடைய சிறிய தன்மையை உணர்வதில் அவன் திருப்தியடையத் துவங்கினான். தாவரங்கள் தனிமங்கள் போன்ற பல்வேறு வகையினங்களுடன் சேர்த்து மனித இனம் என்பது இந்தப் பிரபஞ்சத்தில் மிதந்துலவும் ஒற்றைப் பரந்த உயிரமைப்பின் ஒரு சின்னத் தூண் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்ற எண்ணத்தின் மீதும், பிற விலங்குகள் மற்றும் தாவரங்களை விட அதிக விலைமதிப்பு ஏதும் அதற்கில்லை என்ற எண்ணத்தின் மீதுங்கூட அனுதாபங்கொள்ளத் தொடங்கினான்.

“சரி”

அவனுடைய மூத்த உறவினள் ஒரு வெள்ளி நாணயத்தைக் கண்ணாடி நிலையின் மேல் சுண்டினாள். பின், அதை தன் உள்ளங்கைக்குக் கீழ் அமிழ்த்திப் பிடித்துக் கொண்டு, தீவிரமான முகபாவத்துடன் அவனை உற்று நோக்கினாள். மந்தமான மனச்சோர்வான பார்வையை அவளின் வெள்ளைக் கரத்தின் மீது பதித்தான். “பூ” என்றான்.

“பூ? இதற்கு முன் முதலில் நீ முடிவெடுக்க வேண்டும். பூ விழுந்தால் அந்தப் பெண்ணை மணந்து கொள்வாயா?”

“மணக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம்”

“ஆ….தலை!”

“அப்படியா”

“இது என்ன முட்டாள்தனமாக பதில்?”

அவனுடைய உறவினள் சத்தம் போட்டுச் சிரித்தாள். அந்தப் பெண்ணின் புகைப்படத்தை கீழே எறிந்துவிட்டு அந்த அறையிலிருந்து எழுந்து சென்று விட்டாள். அவள் அதிகம் சிரிக்கக் கூடியவள். அவளின் தெளிவான சிரிக்கும் குரல் வெகு நேரம் ஒலித்தது. இது அவ்வீட்டு ஆண்களினுள் ஒரு விசித்திரமான விதத்தில் செவிவழிப் பொறாமையைக் கிளப்பியது.

புகைப்படத்தை பொறுக்கியெடுத்து அவன் அந்தப் பெண்ணைப் பார்த்தான். இந்தப் பெண்ணை மணப்பது நல்லது என்று எண்ணினான். இந்த அளவு அவனால் நேசத்தை உணர முடிகிறதென்றால், தங்கள் தலைவிதியை மூத்த சகோதரர்களிடமும் தந்தைகளிடமும் ஒப்படைத்துவிட்டு அவனை மணக்க ஜப்பானில் நிறைய பெண்கள் தயாராக இருக்க வேண்டும். அது எத்தனை அழகான விஷயம் என்று அவன் எண்ணினான். அசிங்கம் என்பது தான் மட்டுமே…எண்ணத்திரியை இழந்தான், ஏனெனில் அற்பமான சுய பிரக்ஞை அவனுக்கு விழிப்புணர்வைத் தந்தது.

“சரியாகச் சொன்னால், திருமணத் துணையைத் தேர்ந்தெடுப்பது என்பது ஒரு லாட்டரி மாதிரி. ஒரு நாணயத்தைச் சுண்டி முடிவெடுப்பது போன்றது” – அவனுடைய உறவுக்காரப் பெண் இதைச் சொன்னபோது, அவளுடைய உள்ளங்கைக்குள் இருக்கும் வெள்ளி நாணயத்திடம் தன் தலைவிதியை ஒப்படைப்பதில் அவன் உற்சாகமாகக் கூட உணர்ந்தான். ஆனால், அவள் அவனை வெறுமனே கேலி செய்கிறாள் என்பதை விளங்கிக்கொண்ட பின்னர், வராண்டாவின் விளிம்பில் இருந்த குட்டி ஏரியின் மீது அவன் தன் தனிமைப் பார்வையைத் திருப்பினான்.

என்னுடைய மனைவியாக வேண்டியவள் வேறொருத்தியாக இருப்பாளென்றால், அவளின் முகம் நீரில் பிரதிபலிக்கட்டும் என்று ஏரியிடம் பிரார்த்தித்தான். கால, வெளியூடாக காண முடியும் என்று அவன் நம்பினான். அந்த அளவுக்கு அவன் தனிமையில் இருந்தான்.

நீரின் மேற்பரப்பை உன்னிப்பாகப் பார்த்தபோது, கடவுள் எறிந்த கூர்மையான கருங்கல் ஒன்று அவனது பார்வைத் துறையில் சரிந்தது. இனச்சேர்க்கையில் ஈடுபட்டிருந்த ஒரு ஜோடிக் குருவிகள் கூரையிலிருந்து நீரில் விழுந்தன.

“இது இப்படித்தானோ!” என்று முணுமுணுத்தான்.

நீரின் மேற்பரப்பில் சலசலப்பு பரவி மீண்டும் அமைதி படர்ந்தது. மிக ஆர்வத்துடன் ஏரியை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். நீரின் அமைதியான மேற்பரப்பைப் போல அவனது இதயம் ஒரு கண்ணாடியாக ஆனது. திடீரென்று ஓர் ஒற்றைக் குருவியின் பிம்பம் அதில் தெரிந்தது. அந்தக் குருவி பாடியது. பாட்டின் அர்த்தம் இது தான்:

“குழப்பத்தில் தொலைந்திருக்கும் உங்களுக்கு உங்களின் மனைவியாகப் போகும் பெண்ணின் உருவத்தை நான் காட்டினாலும் ஒரு வேளை நீங்கள் நம்பாமல் போகலாம். அதனால், உங்களின் அடுத்த பிறப்பில் உங்களின் மனைவியாகப் போகும் பெண்ணின் பிம்பத்தைக் காட்டுகிறேன்.”

அவன் குருவியிடம் பேசினான், “குருவியே உனக்கு நன்றி. குருவியாக மறு பிறப்பெடுத்து அடுத்த ஜென்மத்தில் உன்னை நான் மணப்பேன் என்றால், இதோ இந்தப் பெண்ணையே இவ்வுலகில் மணந்துகொள்கிறேன். ஒருவன் அவனுடைய அடுத்த பிறப்பின் தலைவிதியைப் பார்த்துவிட்டான் என்றால், இப்பிறப்பின் இவ்வுலகில் அவன் இழக்கப்போவது எதுவுமில்லை. என் அடுத்த உலகின் அன்பான அழகான மனைவி எனக்கு இவ்வுலகில் எனக்கான திருமண முடிவை எடுத்திருக்கிறாள்”

புகைப்படத்தில் இருக்கும் பெண்ணுக்கு தெளிவான மனதின் வாழ்த்துகளுடன் அவன் கடவுளின் பெருந்தன்மையை உணர்ந்தான்.


யசுனாரி கவாபாடாவின் “உள்ளங்கைக் கதைகள்” தொகுப்பிலிருந்து

ஆங்கிலம் வழி தமிழாக்கம் – கணேஷ் வெங்கட்ராமன்

மகாகருணை என்னும் தியானம்

எனக்கு மிகவும் பிடித்த திக் நியட் ஹான் கவிதை. இக்கவிதையை வாசிக்கும் போது லோட்டஸ் சூத்ரா நம் நினைவில் வராமல் போகாது. அதில் வரும் ததாகதர் உரை போன்று ஒலிக்கிறது இந்தக் கவிதை. இந்தக் கவிதை வரிகளை கருணை பற்றிய தியானத்திற்கான காட்சி ஊக்கியாக மறைந்த ஜென் மாஸ்டரின் சீடர்கள் பயன்படுத்துவார்களாம்.


இன்றிரவு முழு நிலவு என்பதனால்
நட்சத்திரங்களை நம் பிரார்த்தனையில் அழைப்போம்
பளீரென்ற ஒற்றைக் குவிய மனத்தினூடே
தியானத்தின் ஆற்றல்
இப்பிரபஞ்சத்தை அசைத்துக் கொண்டிருக்கிறது.

அனைத்து வாழும் உயிர்களும்
இன்றிரவு இங்கு குழுமியுள்ளன
அச்சத்தின் சமுத்திரத்தினுள்
இப்பூமி மூழ்குதலைக் காண்பதற்கு

நடுஇரவு மணிச்சத்தம் ஒலித்தவுடன்
பத்து திசைகளிலும் அனைவரும் தம் கைகளை பிணைத்து
மகாகருணை எனும் தியானத்திற்குள் நுழைவர்

வாழ்வின் காயங்களைத் துடைக்கும்
தூய நீரைப் போன்று
இதயத்திலிருந்து கருணை சுரக்கிறது

மன மலையின் உயரங்களிலிருந்து
புத்துயிர் தரும் தண்ணீர்
அருவியாகப் பொழிந்து
நெல் வயல்கள் ஆரஞ்சுப் புதர்கள் வழியே
பாய்ந்து செல்லும்

விஷப்பாம்பொன்று
இவ்வமுதத்தின் ஒரு துளியை
ஒரு புல் தாளின் நுனியிலிருந்து பருகுகிறது
அதன் நாவிலிருந்து
விஷம் மறைந்துவிடுகிறது

மாரனின் அம்புகள்
வாசமிகு மலர்களாக மாற்றம் கொள்கின்றன

நோய் நீக்கும் நீரின்
அற்புதச் செயல் திறன் –
புதிரான பரிமாற்றம்!
ஒரு குழந்தை அந்தப் பாம்பை
அதன் கள்ளங்கபடமற்ற கரங்களில் ஏந்துகிறது

புராதன தோட்டத்தில்
இலைகள் இன்னும் பச்சை
பனி மீது சிரிக்கும்
மின்னும் கதிரொளி
இன்னமும்
புனிதவூற்றின்
கிழக்கு நோக்கிய பாய்ச்சல்

அவலோகிதனின் கையிலிருக்கும்
சிறு கிளையோ
அல்லது என் இதயமோ
நோய் தீர்க்கும் நீர் ஒன்றே

இன்றிரவு
அனைத்து ஆயுதங்களும்
நம் காலடியில் வந்து வீழும்
தூசாக மாறும்

ஒரு மலர்
இரு மலர்கள்
ஒரு கோடி மலர்கள்
பச்சை வயல்களில் தோன்றும்

என் பரிசுத்தக் குழந்தையின் இதழ் சிரிப்புடன்
மீட்பின் வாயில் திறக்கும்

திக் நியத் ஹான் – 1967

காலம் அவர்களை மாற்றிவிடுமுன் – கவாஃபி



பிரிந்தபோது இருவருக்கும் மிக வருத்தம்
இருவருமே அதை நாடவில்லை
நிலவிய சூழல்தான் காரணம்
பிழைத்தலுக்கான அவசியம் ஒருவரை
வெகுதூரம் துரத்தியிருந்தது
– அமெரிக்காவுக்கோ கனடாவுக்கோ
அவர்களின் காதல் முன்பு போலிருக்கவில்லை
ஈர்ப்பு மெதுவாக குறைந்து கொண்டு வந்தது
ஈர்ப்பு வெகுவாக குறைந்தும் விட்டது
எனினும், பிரிவிற்கு அது காரணமில்லை
சூழல்தான் காரணம்- ஒரு வேளை
அவர்களின் உணர்வு முழுக்க மறையுமுன்
காலம் அவர்களை முழுதாக மாற்றிவிடுமுன்

ஊழானது கலைஞனாகத் தோன்றி
இருவரையும் பிரித்திருக்கலாம்
ஒருவருக்கு மற்றவர் என்றுமே
இருபத்தி நான்கு வயது அழகான இளம் வாலிபராகவே நினைவில் நிற்கவேண்டுமென்பதற்காக

ஞானியும் குடிகாரனும் – ரூமி

ஓர் அச்சில் சுழலுமிப்பிரபஞ்சம்
மேசையைச் சுற்றிச்சுழலட்டும் என் ஆன்மா
ஒரு பிச்சைக்காரனைப்போல்
நீள்வட்டத்தில் சுழலும் கோளைப்போல்
அநாதியாய்
சுதந்திரமாய்

ராணியும் யானையும் கூர்மையாய் நகரும்
சதுரங்கப்பலகையில்
எனினும் உண்மையில் ராஜாவை மையங்கொண்டு
வட்டமிடுகின்றன அவை

காதல் உனது மையமெனில்
உன் விரல்களில் மோதிரமிடப்படும்

அந்திப் பூச்சியினுள்
ஏதோவொன்று தீயினால் பண்ணப்பட்டுள்ளது

ஞானியொருவன்
தூய இன்மையின்
அழிக்கும் முனையைத் தொடுகிறான்

குடிகாரனொருவன்
சிறுநீர் கழிப்பதை
பாவமன்னிப்பாகக் கருதுகிறான்
பிரபுவே, என்னிடமிருந்து
அசுத்தங்களை எடுத்துவிடுங்கள்

பிரபு பதிலளித்தார்
முதலில் அசுத்தத்தின் இயல்பினைப்
புரிந்துகொள்
உனது சாவி வளைந்திருந்தால்
பூட்டு திறக்காது

நான் அமைதியானேன்
அரசன் ஷம்ஸ் வந்து விட்டான்
எப்போதும் நான் மூடும்போது அவன் திறக்கிறான்

கி மு 15-3-44

பிரம்மாண்டம் ஜாக்கிரதை ஓ மனமே
உன் இலட்சியங்களை விஞ்ச முடியாவிடில்
தயக்கங்கலந்த முன்னெச்சரிக்கையுடன்
அவற்றைப் பின்தொடர்
முன்னகர்ந்து செல்லச்செல்ல
மேலதிக விசாரணையும் கவனமும்
உள்ளவனாய் நீ இருக்கவேண்டும்
இறுதியில் ஜூலியஸ் சீஸரைப் போன்று
உச்சியை அடையும்போதோ
அத்தகைய புகழ்மிக்க மனிதனொருவனின்
இடத்தை நீ பெறும்போதோ
தமது பரிவாரங்கள் புடை சூழும் தலைவனைப் போன்று –
தெருவில் செல்லும் சமயங்களில்
அதிவிழிப்புடனிருத்தல் மிக அவசியம்
சந்தர்ப்பவசமாக கும்பலிலிருந்து வெளிப்பட்டு
கையில் கடிதத்துடன் அர்டெமிடோரஸ் உன்னை அணுகி
"இக்கடிதத்தை உடனே படியுங்கள்
உங்களை பாதிக்கும்
தீவிர விஷயங்கள் இதில் உள்ளன" என்கையில்
நிற்காமலிராதே
காரியங்களையோ உரைகளையோ
ஒத்திவைக்கத் தவறாதே
உன்னை கும்பிட்டு தலைவணங்குபவர்களிடமிருந்து
தலை திருப்பாமல் இருந்துவிடாதே
– அவர்களை பின்னர் சந்தித்துக் கொள்ளலாம் !
அமைச்சரவை கூட காத்திருக்கட்டும்
உடனுக்குடன்
அர்டெமிடோரஸின் எழுத்தை
நீ வாசித்தேயாக வேண்டும்

( The ides of March – by Constantin Cawafy)

சுவர்கள்

நேற்றிரவு கின்டில் புத்தகம் வாங்கினேன். கான்ஸ்டன்டீன் கவாஃபியின் கவிதைகள்.

கவாஃபியின் கவிதைத் தொகுதியில் முதலில் வாசித்த கவிதை –

சுவர்கள்

முன்யோசனையின்றி, பரிவின்றி, வெட்கமின்றி
அவர்கள் உயரமான இந்த திண்சுவர்களை என்னைச் சுற்றி கட்டியிருக்கின்றனர்

இப்போது நானிங்கே விரக்தியில்.
வேறெதைப்பற்றியும் சிந்தனையெழவில்லை; இந்த விதி என் மனதை நுகர்கிறது;

வெளிப்புறத்தில் எனக்கு செய்ய நிறைய வேலைகள்.
இந்த சுவர்கள் கட்டப்படும்போது நான் ஏன் கவனிக்கவில்லை?

ஆனால் கட்டிடக்காரர்களின் அல்லது பிற சத்தங்களை நான் கேட்கவேயில்லை.
புலப்படாமல், அவர்கள் என்னை இவ்வுலகத்திலிருந்து மூடிவிட்டார்கள்.

மொழியாக்கம் : அடியேன்