Category Archives: Buddhism

ஆகஸ்டு பத்து

தனிமனித வழிபாட்டை எதிர்க்கும் நவீனவாதி நான். ஆனாலும் இன்று ஒரு விஷயம் நடந்தது. சிரி போர்ட் ஆடிட்டோரியத்தில் ஒருவர் உரையாற்றப்போகிறார் என்ற அந்த விளம்பரத்தை ஞாயிற்றுக்கிழமை செய்தித்தாளில் பார்த்தோம். மனைவியும் இளையமகளும் செல்வதாக உடன் முடிவெடுத்தனர். எனக்கு இரண்டு மனமாக இருந்தது. இன்று விடுமுறை நாள் இல்லை. கடமையா ஆர்வமா எது முக்கியம் என்ற ஊசலாடலில் என்னால் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. நேற்றிரவு ஒரு யோசனை தோன்றிற்று. வீட்டில் இருந்து வேலை செய்யும் அனுமதி பெற்றேன். காலை எட்டு மணிக்கே ஆட்டோவில் கிளம்பினோம். ஆடிட்டோரிய வாசலில் பெரும் வரிசை. அதிக கூட்டம் இராது என்று நினைத்துக்கொண்டு வந்த எனக்கு உரையாற்றப்போகிறவரின் பிரபலத்தன்மையை கண்ணால் காணும் சந்தர்ப்பம் இன்று கிட்டியது. அரசியல் பிரமுகர் இல்லை ; கலைத்துறையில் பணியாற்றுபவர் இல்லை ; எனினும் கூட்டம் குவிந்திருந்தது. பாதுகாப்பு பரிசோதனை சாவடிக்குள் நாங்கள் நுழைந்தவுடன் வாயிலை அடைத்துவிட்டார்கள். எங்களுக்குப் பின்னால் காத்திருந்தோர் ஏமாற்றத்துடன் திரும்பியிருப்பர். திரைப்படக் காட்சி துவங்கிய பிறகு அரங்கிற்குள் நுழைவது போல் ஆடிட்டோரியத்துக்குள் போனோம். உட்கார ஓர் இருக்கையும் காலி இல்லை. மூன்று மட்ட பால்கனிகளும் நிரம்பி வழிந்தன. இருக்கைகளின் வரிசைகளுக்கு நடுவே தரையில் உட்கார்ந்து கொண்டோம். அவர் மேடைக்குள் மெல்ல நடந்து வந்தார். மேடையில் வேண்டியவர் வேண்டாதவர் என்று நிறைய குமிந்திருந்தனர். மேடைக்கு வந்தவரின் காலைத் தொடுவதே அவர்கள் குறிக்கோள் போல விழா அமைப்பாளர்கள் எல்லோரும் மேடையை விட்டு கீழிறங்கவில்லை. அரங்கே அவரை பரவசத்துடன் பார்த்தது. சிரித்தார். கை கூப்பினார். மகிழ்ச்சியாய் இருப்பது பற்றி பேசினார். அவர் பேசியவை எதுவும் என் மனதில் பதியவில்லை. ஆடிட்டோரியத்தில் இருந்த எல்லோரை போன்றும் அவர் முகத்தை பார்த்து பரவசத்தில் ஆழ்ந்தேன். பேச்சு முடிந்து கேள்வி பதில்கள் பகுதி வந்தது ; நன்றியுரைக்கு முன்னம் “இங்கே வந்திருப்பவர்களில் எத்தனை பேர் திபெத் அகதிகள்?” என்று கேட்டார். பாதிக்கு மேற்பட்டோர் கை தூக்கினார்கள். அவர்களுக்காக சற்று நேரம் திபெத்திய மொழியில் பேசினார். திபெத்திய சகோதரர்கள் மந்திரத்தால் கட்டுண்டவர்கள் போல் கை கூப்பிக்கொண்டு அவர் பேசியதைக் கேட்டார்கள். எனக்கு முன்னால் அமர்ந்திருந்த திபெத்திய சகோதரியின் கண்ணில் நீர் வழிந்தது. மேடையிலிருந்து கிளம்பும் முன் பல முறை நன்றி சொன்னார். புன்னகைத்தார். சுவர்க்கம் வேறெங்கும் இல்லை. கருணை ஒளியை தூவியவாறு புன்னகைக்கும் அவரின் பிரசன்னத்தில் தான் இருக்கிறது சுவர்க்கம். ஆகஸ்டு பத்து. இன்றுதான் நான் முதல் முறையாக டென்ஸின் க்யாட்ஸோவை ரத்தமும் சதையுமாக தரிசித்த நாள். அவலோகிதேஸ்வரரின் அவதாரம் என நம்பப்படுபவரே, நீர் எடுத்துக் கொண்ட உறுதிமொழியின் படி, இவ்வுலகின் ஏழு பில்லியன் மனித உயிர்களும் புத்த நிலையில் உய்யும் வரை உயிர் தரித்திருப்பீராக! பொய்யான தலாய் லாமாவை உற்பத்தி செய்யும் வல்லரசு சீனாவின் திட்டத்தில் மண்ணைப் போடுவீராக!

Advertisements

மகாசித்தர்கள்

சித்தர்கள் யார்? வேத காலத்து ரிஷிகள் இல்லை அவர்கள் ; பௌத்த சங்கத்தின் பிக்குகளும் இல்லை. மடங்களில் வசித்தவர்களில்லை. ஊக சிந்தனைகளிலோ வாக்குவாதங்களிலோ ஈடுபடாதவர்கள். அவர்களின் தேடல்கள் அமைப்புகள்  சாராதவையாக இருந்தன. அவர்கள் உதாரணர்களாக இருந்தனர். மக்களுக்கு நடுவில் மக்களாக இருந்தனர். மரபு ஒழுங்கிற்கு மாறான சடங்குகளை கடைப்பிடிப்பவர்களாக இருந்தனர். கோரக்கர், போக நாதர் போன்ற சித்தர்களை இந்து மரபில் நாமறிவோம். இவர்கள் வரலாற்றில் இருந்த ஆளுமைகளா என்று அறுதியிட்டு சொல்லுதல் மிகக் கடினம். ஆனால் இவர்கள் பற்றிய எண்ணற்ற கதைகள் செவி வழியாக பல நூற்றாண்டுகளாக உலவி வருகின்றன. திருத்தொண்டர் வாழ்க்கை வரலாற்றியல் (Hagiography) சார்ந்த வரலாறுகளாக முழுக்க நம்பகத்தன்மை இல்லாதவையாக இருந்தாலும் மத்திய கால சமூகத்தின் வாழ்க்கை பற்றியும் நிலவி வந்த தத்துவங்கள் பற்றியும் வளமான செய்திகளை அவைகள் கொண்டிருக்கின்றன.

சைவ இந்து மரபைப்  போல பௌத்தர்களும் 84 மகா  சித்தர் மரபை போற்றுகின்றனர்  ; இரு மரபிலும் வழங்கப்படும் 84 மகா சித்தர்களின் பெயர்களில் நிறைய பொதுத் தன்மைகள்  உள்ளன. கி பி ஐந்தாம் நூற்றண்டுக்கும்  கி பி 11ம் நூற்றாண்டுக்கும்  இடையிலான காலத்தின் சமூக, வரலாற்று யதார்த்த நிலைகளில்  சமுகத்தை வழி நடத்தும் உதாரணர்களாக மகா சித்தர்கள் செயல் பட்டிருக்கிறார்கள்.

சித்திகளை உள்ளடக்கியவர்களாகவும் பண்படுத்தியவர்களாகவும் திகழ்ந்தவர்கள் சித்தர்கள். யோகிகளாகவும் யோகினிகளாகவும் இன்றும் வஜ்ராயன பௌத்த மரபில் பெரிதும் போற்றப்படுகிறார்கள்.

சித்தர்கள் மரபு உருவானதற்கு வரலாற்று அறிஞர்கள் பல்வேறு கருத்தாக்கங்களை சொல்கின்றனர் ; அவற்றுள் மிகவும் அதிகமாக வலியுறுத்தப்படுவது குப்தப் பேரரசுக்குப் பிறகு வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் நிலவிய அமைதியின்மை ; 7ம் நூற்றாண்டுக்குப் பிறகு வட இந்தியாவில் பேரரசுகள் எதுவும் உருவாகாத நிலை, சிற்றரசர்களுக்கிடையான போர்களினாலும்  பூசல்களினாலும்  சாதாரணர்களுக்கேற்பட்ட   பாதிப்பு, அதன் காரணமாக மக்களிடையே காணப்பட்ட மன்னர்களின் மீதான வெறுப்பு மற்றும்  பாதுகாப்பின்மை முதலானவை. ஆட்சியாளர்கள் மீதான வெறுப்பு மக்களை நம்பிக்கை, சரணாகதி போன்ற பண்புகளை நாடச் செய்தன. Grassroot level-இல் இயங்கிய சித்தர்கள் தமது சித்திகளின் துணையுடன் நம்பிக்கையுணர்வை பாதுகாப்புணர்வை மக்கள் உள்ளீர்த்துக் கொள்ளும்படி வழிநடத்தினார்கள்.

84 மகாசித்தர்களும் தாந்த்ரீகமும் என்னும் கட்டுரையில் Keith Dowman இவ்வாறு கூறுகிறார் : “தாந்த்ரீக மதம்  இந்தியர்களின் ஆன்மீக வாழ்க்கையின் முக்கிய சக்தியாக பரிணாம வளர்ச்சி பெற்ற காலத்தில் இந்தியாவின் வடமேற்கே கொடூரமான, பேரழிவை ஏற்படுத்தும் அச்சுறுத்தல்கள் பெருக ஆரம்பித்திருந்தன. அராபியர்கள் மொராக்கோவிலிருந்து சிந்து வரை பரவியிருந்த நிலப்பரப்பை தம் குடைக்கீழ் கொண்டு வந்திருந்தார்கள். துணைக்கண்டத்தில் குப்தப் பேரரசின் மகத்துவத்தை வாரிசுரிமையாய் பெற்ற வெவ்வேறு வம்சங்களின்  அரசர்களும் உட்பூசலிலும் கோரமான யுத்தங்களிலும் பரபரப்பாக ஈடுபட்டிருந்தார்கள். பழைய வகுப்பீடுகள் சிதைந்திருந்தன ; சமூகம் இறுகிய சாதீய விதிமுறைகளில் வழிமுறைகளில் சரணடைந்திருந்தது ; சடங்குகள் மேலோங்கிய சமயங்கள் புழக்கத்தில் இருந்தன. வலுவற்று ஒருங்கிணையாமல்  கிடந்த சமூகம் புது எதிரிகளான மதவெறி மிக்க இஸ்லாமிய படைகளை எதிர்க்க முடியாமல்  பலவீனப் பட்டுப் போயிருந்தது. பௌத்த மத்திய ஆசியாவின் அழிவு பற்றிய கதைகளோடு பௌத்த அகதிகள் துணைக்கண்டத்துள் நுழைந்த போது தாந்த்ரீகத்தின் செல்வாக்கு அதிகரித்திருந்தது, குறிப்பாக, முண்ணனிக் களமான ஒட்டியாணாவில் (இன்றைய பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கு). புது பௌத்த சாம்ராஜ்யமாக எழுச்சி கொண்ட பால் வம்சம் ஆண்டு கொண்டிருந்த கிழக்குப் பிராந்தியங்களிலும் (ஒரிஸா மற்றும் வங்காளம்). சமரசம் செய்து கொள்ளாத அத்வைத மெய்யியல், தன்னிச்சையான விடுதலையில் மாறா நம்பிக்கை, மாமிசம் தின்னும், குருதி குடிக்கும் தெய்வங்கள் – இவைகளைக் கூறுகளாக கொண்டிருந்த தாந்த்ரீக மதத்தில் தொடங்கப்போகும் ஊழுக்கு முன்னதாக இந்தியா சரணடைந்தது தற்செயலா? தாந்திரீகத்தை மறுத்து வந்த மேற்கில் இன்று தாந்த்ரீகத்துக்கு அதிகரிக்கும் வரவேற்பும் மனிதகுலம் அழிந்து போகலாம் என்னும் கருத்து நம்பகத்தன்மையை பெறுதலும் தற்செயலா?”                                  

மகாசித்தர்களில் முக்கால் வாசி சித்தர்கள் கிழக்கிந்தியாவை பிறப்பிடமாகவோ இருப்பிடமாகவோ கொண்டவர்கள். பால் வம்சம் ஆண்ட காலத்தில் சித்தர் மரபுக்கு நல்ல ஆதரவு இருந்தது. விக்ரமஷீலா மற்றும் சோமபுரி பௌத்த பல்கலை கழகங்கள் துவக்கப்பட்டன. இப்பல்கலைக்கழகங்களில் தாந்த்ரீக பௌத்த சாதனைகள் கற்பிக்கப்பட்டன ; நாளந்தாவும் விரிவுபடுத்தப்பட்டு தாந்த்ரீக பௌத்தத்தின் மையமானது. தாந்த்ரீகத்தின் மனப்பான்மைகளும் தத்துவங்களும் சித்தர்களின் காலத்துக்குப் பிறகே சமுதாய ரீதியாக ஒப்புக்கொள்ளப்பட்டன. ஆரம்ப கால சித்தர்கள் போலித்தனம், வெற்றுச் சடங்குகள், கற்பனைத் தத்துவங்கள், பண்டித மேதாவித்தனம், சாதி வித்தியாசங்கள், பாசாங்குத்தனம் போன்றவற்றை கடுமையாக எதிர்த்தார்கள். மந்திரம் – இணைவு சடங்குகள் – மண்டலங்கள் – இவற்றை வலியுறுத்தும் வழிமுறைகளை பின்பற்றுபவர்களாக இருந்தாலும் வெறும் செயல் முறைகளாக இல்லாமல் மறைபொருள் ஞானத்துடன் இணைந்து சடங்குகளைக் கடந்த மனநிலையை அடையும் இலக்கிற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

குளிக்காத சுத்தமில்லா  தோற்றம், முரட்டுத்தனமான பேச்சு, சில சமயம் பித்து நிலை மிகுத்து ஏறுமாறான நடத்தைகள் என்று சித்தர்கள் வலம் வந்தனர். தர்க்க ஒழுங்கு மாறாத அணுகுமுறையுடன் வளர்த்தெடுக்கப்பட்ட பௌத்தத்தில் சித்தர்கள இயக்கம் ஒரு முரண் போலத் தோன்றலாம். ஆனால் சமூக பரிவர்த்தனைகளின் விளைவாக இயல்பாக எழுந்ததே சித்தர் இயக்கம் என்று வரலாற்றறிஞர்கள் கருதுகின்றனர். பல பௌத்த சித்தர்களும் துவக்கத்தில் ஒழுங்கும் கட்டுப்பாடும் நிறைந்த மடாலய பௌத்தர்களாகவே இருந்தனர். வெறும் சூத்திரங்களின் அடிப்படையில் இருந்த சாதனைகள் அவர்களுக்கு அனுபவரீதியாக முன்னேற்றத்தை எதிர்பார்த்த வேகத்தில் தராததால் அந்தப் பாதையிலிருந்து விலகி, சிறு வனங்களிலோ அல்லது ஆற்றங்கரைப் பகுதிகளிலோ தங்கிக்கொண்டு   மது, உடலுறவு, மாமிசம் என்னும் மூன்று அம்சங்களை உட்படுத்திய தாந்த்ரீக சாதனைகளில் ஈடுபட்டனர்.

ஆன்மீக அராஜகம் அவர்களின் லட்சியமாயிருந்தது. சமய வடிவங்களில் அதிகம் மனம் லயிக்காத குணமும் அவர்களிடம் காணப்பட்டது. தீட்சை பெற்றவர்களுக்கு மட்டுமே சித்தர்-குருவின் சாதனையை  பயிற்சி செய்யும் உரிமை வழங்கப்பட்டது. எந்த வித நிறுவனத்துவமும் சித்தர்களினுடைய இருத்தலியல் சுதந்திரவுணர்வை மட்டுப்படுத்தவில்லை.

சித்தன் தாந்த்ரீக சாதகன் ; தியானத்தின் இலக்கை வெற்றிகரமாக அடைந்தவன். அவனுடைய சாதனை சித்தி. சித்தி இரு வகைப்படும் ; ஒன்று சாதாரண மந்திர சக்தி (Mundane) ; இன்னொன்று புத்தரின் நிர்வாண நிலை (Ultimate). எனவே சித்தன் என்பவன் ஞானி, மந்திரவாதி அல்லது அருட்தொண்டன். ஆனால் இச்சொற்கள் சித்தனின் தாந்த்ரீக வாழ்க்கை முறையை நம் மனதுக்குள் கொண்டுவருவதில் தோல்வியுறுகின்றன. பொதுவாக சித்தன்  என்றால் மந்திர சக்தி கொண்டவன் ; ஒரு யோகி சுவர்களை ஊடுருவி செல்கிறான் என்றாலோ அல்லது விண்ணில் பறந்தாலோ அல்லது நோய்வாய்ப்பட்டவர்களை சுகப்படுத்தினாலோ அல்லது நீரை மதுவாக்கினாலோ அல்லது காற்றில் மிதந்தாலோ  அவனுக்கு சித்தன் என்ற பெயர் பொருந்தும். அதே யோகியின் கண்களில் பைத்தியக்காரத்தனம் பளபளத்தாலோ, உடம்பெல்லாம் சாம்பலைப் பூசிக்கொண்டாலோ, தனக்கும் அடுத்தவர்க்கு கண்ணீர் வரும்படி பாடினாலோ, குரைக்கும் தெருநாய்களை தன்னுடைய பிரசன்னத்தினால் அமைதிப்படுத்தினாலோ, வலுக்கட்டாயமாக ஒரு குடும்பப்பெண்ணை தன்னோடு கவர்ந்திழுத்து வந்தாலோ, ஓரடி நீளமான சடா முடியில் வஜ்ரத்தை (உபாயம் அல்லது அசையாத்தன்மையின் குறியீடு) குத்தியிருந்தாலோ, பறவைகளுடன் பேசினாலோ, தொழுநோயாளிகளுடன் தூங்கினாலோ, தார்மீக விரக்தியுடன் வாயவீச்சாளர்களை ஏசினாலோ, உறுதியான எண்ணத்தோடு மரபுக்கு மாறான ஒரு காரியத்தை செய்யும் அதே வேளை தன்னுடைய “உயரிய யதார்த்த நிலையை” நிரூபித்த வண்ணம் இருப்பவன் நிச்சயம் சித்தனே. தோற்றத்தினால் ஈர்க்கப்படும் சாதாரண மக்கள் சித்தனின் அசாதாரண நோக்கத்தை – மஹாமுத்ரா (வஜ்ராயன பௌத்தக் கலைச்சொல்) –  அறியாமல் இருப்பார்கள். மேலும், சித்தன் என்பவன் அடையாளமற்ற விவசாயியாக இருக்கலாம் ; அலுவலகத்தில் பணி புரிபவராக இருக்கலாம் ; அரசனாக இருக்கலாம் ; பிக்குவாக இருக்கலாம் ; வேலைக்காரனாக இருக்கலாம் ; நாடோடியாக இருக்கலாம் என்பதையெல்லாமும்  அவர்களால் அறிய முடியாது.

சாதாரண மந்திர சக்திகளை அஷ்டமா சித்திகள் என்கிறார்கள் ; ஆனால் வஜ்ராயனத்தின் இலக்கு மஹாமுத்ரசித்தி. மஹாமுத்ரசித்தி பெற்றவர்களுக்கு மந்திர சித்தியும் தன்னிச்சையின்றி கிட்டும் ; ஆனால் மந்திர சித்தி கிட்டியவர்களுக்கெல்லாம் மஹாமுத்ர சித்தி கிடைக்கும் என்று நிச்சயம் கிடையாது.

நிர்வாணத்தின் போது புத்தர் அடைந்த நிலை. பூரண ஒருமை ; சுயத்தின் அழிப்பு ; ஞான விழிப்புணர்வு ; இறுதி யதார்த்தத்தை இருமைகளற்று நோக்குதல். சம்ஸ்கிருதத்தில் இது  பௌத்த கலைச்சொல் தததா (thatata) என்று குறிக்கப்படுகிறது.  ஆங்கிலத்தில் that-ness அல்லது such-ness என்று பொருள். இதுவே பௌத்தர்களின் இலக்கு.

ஸ்ராவகர்கள் (புத்தரின் குரல் வழி தம்மத்தை கேட்டவர்கள்) அருகராகி இறந்த காலக் கருமங்களை தொலைத்துவிட்டாலும் புதிதாக கருமங்கள் ஏதும் சேராமல் வாழ்ந்து பின்னர் நிர்வாணத்தை அடைதல் ஆதி பௌத்தத்தின் வழிமுறை ; பல ஜென்மங்களாக போதிசத்துவ வாழ்க்கை வாழ்ந்து புத்த நிலையை அடைதல் மகாயானத்தின் வழிமுறை ; தன்  வாழ்நாளிலேயே வஜ்ரத்தினால் குறுக்காக வெட்டுவது போன்று  கர்மயதார்த்தங்களை அரிந்து கருத்தியல்களை துறந்து மஹாமுத்ரசித்தியை அடைதல் வஜ்ராயனத்தின் வழிமுறை.

Maha Siddhas

ஒரு கொலைகாரனின் புனிதத்துவம் நோக்கிய பயணம்

தட்சசீலத்தில் படிப்பை முடித்து சாவத்தி திரும்ப தயாராகிக் கொண்டிருந்த அஹிம்ஸகனின் குரு கேட்ட தட்சிணை ஆயிரம் சுண்டு விரல்கள். மகாபாரதத்தின் துரோணர் போலவே அஹிம்சகனின் ஆசிரியரும் தன் மாணவனின் முன்னேற்றத்தைக் காண சகியாதவராய் தனக்கு ஆயிரம் மனிதர்களின் வலது கையிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட சுண்டு விரல்கள் வேண்டும் என்றார்.      கட்டை விரலை தட்சிணையாகக் கேட்ட துரோணரிடம் தன் விரலை சமர்ப்பித்துவிட்டுச் சென்ற ஏகலைவன் பின்னாளில் என்ன ஆனான் என்பது தெரியவில்லை. ஆனால் அஹிம்சகன் ஆயிரம் விரல்கள் சேர்க்கும் முயற்சியில் இறங்கி தொடர் கொலைகாரனாகி விரல்களை மாலையாக பூண்டு அங்குலிமாலா எனும் பெயரில் ஜாலினி வனத்தில் திரிந்து கொண்டிருந்தான். 999 விரல்கள் சேர்த்துவிட்டன. ஒரு விரல் மட்டும் பாக்கி. அங்குலிமாலா என்ற பெயர் கொண்டு அப்பாவி மக்களை கொன்று குவிப்பவன் தன் மகன் அஹிம்ஸகனாக இருக்கலாம் என்று தாய் மந்தானிக்கு உள்ளுணர்வு தோன்றியது. மகனைத் தேடி காட்டுக்குள் நுழைந்துவிட்டாள். அங்குலிமாலா தன் ஆயிரமாவது விரலைப் பெற தன் அன்னையையே தேர்ந்தெடுத்துவிடுவானோ?   பகவானுக்குள் அங்குலிமாலா பற்றிய பிரக்ஞை. நடப்பது என்ன என்ற ஞானவுணர்ச்சி அவருள் ஊற்றெடுத்தது. போதி சத்துவராய் தான் பிறப்பெடுத்திருந்த முந்தைய பிறவிகளில் பெரும் உடலும் பலமும் பொருந்தியவனாய் பிறந்த அவனைத் தன் மனபலத்தால் முறியடித்த சம்பவங்களை நினைவு கூர்ந்தார். தாயைக் கொல்லல் பெரும் பாவம். உடனடி நரக உலகிற்குள் தள்ளும் பாவம்.  புத்தர் உடன் காட்டை நோக்கி நடக்கலானார்.

அன்னையை அடையாளம் கண்டு விட்டான் அங்குலிமாலா. கோடரி சகிதம் அவன் தாய் வரும் திசையை நோக்கி நடந்தான். இடைவெளி குறுகிக் கொண்டே வந்தது. சமீபித்துவிடுவான் போலிருக்கும் சமயத்தில் தாய்க்கும் மகனுக்கும் இடையில் புத்தர் நின்றார். அங்குலிமாலாவின் கவனம் சிதறி அம்மாவை விட்டுவிடுவோம், இந்த துறவியை வெட்டுவோம் என்று புத்தரை அணுகினான். ஆனால் என்ன மாயம்! எத்துணை வேகத்தில் நடந்தாலும் அவனால் புத்தரை நெருங்க முடியவில்லை. புத்தரோ நிதானமாக நடந்து கொண்டிருந்தார். வியர்வை கொட்டியது. மூச்சு இரைந்தது. களைத்துப் போய் நின்றான் அங்குலிமாலா. திரௌபதியை துகிலுரியும் முயற்சியில் களைத்து வீழ்ந்த துச்சாதனன் ஞாபகம் வருகிறானல்லவா?

பெற்ற மகன் மீதான பாசத்தினால் ஆபத்தை அறியாமல் மரணத்தை நோக்கி நடந்த தாய்! தாயின் விரல் வெட்டப்போய் பின்னர் கவனம் சிதறி சாக்கிய முனியைக் கொல்ல நோக்கி நடந்த அங்குலிமாலா! தாயின் உயிர் காத்து, நிகழவிருக்கும் பெரும்பாவச் செயலை நிகழாது நிறுத்துவதற்கு நடந்த புத்தர்!

புத்தரை நோக்கி கூவினான். “ஏ, சந்நியாசி, நில்லு”

“நான் நிறுத்திவிட்டேன் அங்குலிமாலா. நீ நிறுத்து் இப்போது”

இவர் நடக்கிறார். நாம் நடையை நிறுத்தியாயிற்று. ஆனால் இவரோ என்னை நிற்கச் சொல்கிறாரே? இது என்ன குழப்பம்?  அங்குலிமாலா கேள்வியாக அவரிடம் கேட்கவும் செய்கிறான். புத்தர் உரைக்கிறார் :

“நான் என்றென்றைக்குமாக நிறுத்திக்கொண்டுவிட்டேன்,
உயிர்களின் மீதான வன்முறையை நான் தவிர்க்கிறேன்;
ஆனால் உனக்கோ சுவாசிக்கும் உயிர்களின் மேல் ஒரு கட்டுப்பாடும் இல்லை:
அதனால் நான் நிறுத்திவிட்டேன் ஆனால் நீ நிறுத்தவில்லை”

இச்சொற்களை அங்குலிமாலா கேட்டபோது அவன் இதயம் பெரும் மாறுதலுக்குள்ளானது. கெட்டித்துப் போன குரூரத்தன்மையை உடைத்துக்கொண்டு தூய விழைவுகள் ஊற்றெடுத்தன. தன் முன்னால் நிற்பது சாதாரண பிக்குவல்ல; சாட்சாத் புத்த பகவானே என்று புரிந்து கொண்டான். தன்னிச்சையாக தன்னைத் தேடி இவ்வனத்தினுள் அவர் நுழைந்திருக்கிறார் என்பதை உணர்ந்தான். முடிவில்லா துக்கக் குப்பைக்குள்ளிருந்து தன்னை பிடித்திழுப்பதற்காகவே வந்திருக்கிறார். பெரும்பாபக் குழியினுள் விழ இருந்த என்னை அவர் காப்பாற்றியிருக்கிறார். தன் இருப்பின் ஆழமான வேருக்குள் நகர்ந்தவனாய், ஆயுதங்களை தூக்கியெறிந்து முழுக்கவும் ஒரு புது வாழும் வழி முறைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் உறுதி மேற்கொண்டான்.

அங்குலிமாலாவை அழிப்பதற்கு ஒரு சிறப்புப்படை திரட்டப்பட்டது.  கோசல மன்னன் பாஸநாடியே அதன் தலைமை தாங்கினான். காட்டை நோக்கிப் போகும் வழியில் ஜெதாவனம் வந்தது. புத்தர் அங்கு வந்திருப்பதாக கேள்விப்பட்டு அவரை சந்திப்பதற்காக உள்ளே சென்றான். எந்த நாட்டு மன்னனுடன் போர் என்று வினவினார் புத்தர். அங்குலிமாலா எனும் கொலைகாரனை தேடிக் கண்டுபிடிப்பதற்காக போய்க்கொண்டிருப்பதாக மன்னன் சொன்னான். “அங்குலிமாலா காட்டில் இல்லாமல் என்னுடன் இங்கிருந்தால்?” என்று புத்தர் கேட்டபோது மன்னன் “அங்குலிமாலாவாவது ஜெதாவனத்திலாவது?” என்று உதட்டை பிதுக்கினான். “உங்கள் பின்னால் வலப்புறத்தில் நின்று கொண்டிருக்கிறாரே அவர் தான் பிக்கு அங்குலிமாலா” என்று புத்தர் சொன்னார். மன்னனின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன. காவி நிற உடையணிந்து, முக கேசத்தை மழித்து மொட்டைத் தலையுடன் தோற்றமளித்த இவரா அங்குலிமாலா? அவரை அணுகி “நீங்கள் எந்த ஊர்?” என்று கேட்டான் பாஸநாடி.

“சாவத்தி”

“தாய்-தந்தை”

“பாக்கவர் – மந்தானி”

பாக்கவர் மன்னனின் பண்டிதர்.

ஆச்சரியம் அகலாதவனாய் புத்தரிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து அரண்மனைக்குத் திரும்பிச் சென்றான் பாஸநாடி.

அங்குலிமாலா அருகனானாலும் சாவத்தியின் மக்கள் அவனை அன்புடன் ஏற்கவில்லை. பெரும்பாலானோர் பாசநீடியின் தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக புத்தரை அவன் சரணடைந்திருக்கிறான் என்பதாகவே அவர்கள் எண்ணினார்கள். வெகு சிலரே அங்குலிமாலாவுக்கு சோறிட்டனர். பல நாட்கள் அவன் பசியாறாமல் இருக்க வேண்டியதாயிற்று. பசி வயிற்றுடன் தியான சாதனைகளில் அங்குலிமாலாவால் அதிக முன்னேற்றம் காண முடியவில்லை. ஒரு நாள் சாவத்தி நகர வீதிகளின் வீடுகளில் சோறு எதுவும் இடப்படாமல் அலைந்து கொண்டிருந்தபோது ஒரு வீட்டின் வாசலில் ஒரு நிறை மாத கர்ப்பிணியின் அலறும் குரல் கேட்கிறது. பிரசவம் பார்க்கும் வைத்தியச்சி குழந்தை வெளிவருவதில் சிக்கல் என்று யாரிடமோ சொல்வதும் அவன் காதில் விழுகிறது. கர்ப்பிணியின் அலறல் பிக்கு அங்குலிமாலாவினுள் மெத்தா என்னும் அன்பெண்ணத்தை எழுப்புவிக்கிறது. நான்கு பிரம்ம விகாரங்களில் ஒன்று மெத்தா. விடுவிடுவேன ஜெத்தாவனத்துக்கு திரும்பி பகவானிடம் தான் கண்டதை கேட்டதை சொல்கிறான்.

“பிக்குவே, ஒன்று செய்யுங்கள். அந்த பெண்ணிடம் சென்று – நான் பிறந்ததிலிருந்து என் மனமறிந்து ஓர் உயிரையும் அதன் உடலிலிருந்து நீக்கும் தீய காரியத்தைச் செய்ததில்லை. இது உண்மையெனில், சகோதரி, நீங்கள் நலத்துடன் உங்கள் மகவை பெற்றெடுப்பீராக என்று சொல்லுங்கள்” என புத்தர் அறிவுறுத்தினார்.

அங்குலிமாலா பணிவுடன் “அது உண்மையில்லையே ஐயனே, என் மனமறிந்து பல உயிர்களை நான் கொன்றிருக்கிறேனே. நீங்கள் சொல்வது போல சொன்னேன் என்றால் அது பொய்யாகிவிடுமே” என்றான்.

“அப்படியானால் இப்படிச் சொல் – நான் புது பிறப்பு எடுத்ததிலிருந்து என் மனமறிந்து ஓர் உயிரையும் அதன் உடலிலிருந்து நீக்கும் தீய காரியத்தைச் செய்ததில்லை. இது உண்மையெனில், சகோதரி, நீங்கள் நலத்துடன் உங்கள் மகவை பெற்றெடுப்பீராக”

கர்ப்பிணியின் வீட்டை அடைந்து வாசலில் முன்னர் போடப்பட்டிருந்த திரைச்சீலைக்கு வெளிப்புறம் நின்று புத்தர் சொல்லச்சொன்ன வார்த்தைகளை பிக்கு அங்குலிமாலா அன்பெண்ணத்துடன் சொல்லவும் சில நிமிடங்களில் சிக்கல் தணிந்து சுகப்பிரசவம் ஆனது.

இறந்தவர்களை உயிர்ப்பித்தல் மற்றும் நோய்களை தணித்தல் போன்ற அதிசயங்களை நிகழ்த்துதலில் புத்தர் ஆர்வம் காட்டியதில்லை. அப்படி நோயிலிருந்து மீண்டவர் என்றாவது ஒரு நாள் இறந்து போவார் என்பதை அவர் அறிவார். உண்மையான மரணமின்மை நிலை பற்றியும் அதை அடையும் வழி பற்றியும் அவர் போதிக்கையில்  அவரின் பெருங்கருணை வெளிப்படும். அவர் அங்குலிமாலாவுக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு அளித்தார்? கர்ப்பிணியின் சிகிச்சையின் பொருட்டு அங்குலிமாலா உண்மையின் வலிமையை அதிசயச் செயலாக வெளிப்படுத்த அங்குலிமாலாவுக்கு ஏன் அறிவுறுத்த வேண்டும்?

அங்குலிமாலா சுத்தம் பற்றிய உரையில்,  பௌத்த சான்றோரின் சிந்தனைப்படி இது புத்தர் செய்த மந்திரமன்று. உண்மையின் வலிமை மருத்துவச் செயலன்று. ஒருவனுடைய சுய சீலத்தை மையப்படுத்தி எழுவது. பிச்சை பெறுவதில் அங்குலிமாலா படும் கஷ்டத்தை புத்தர் அறிந்தேயிருந்தார். பிக்குவான பழைய கொலைகாரன் பற்றிய பயம் பெரும்பாலோருக்கு இன்னும் இருந்தது. அவன் வீட்டு வாசலுக்கு வந்து இரங்கும் போது அவனைப் பார்த்து பயந்து ஓடுவது வழக்கமாயிருந்தது. இத்தகைய சூழலில் இருந்து அவனை மீட்கவே அங்குலிமாலாவை அதிசயம் நிகழ்த்த வைத்தார். அதைப் பார்த்த, கேள்விப்பட்ட மக்கள் “அன்பெண்ணத்தை எழுப்பியதன் வாயிலாக பிக்கு அங்குலிமாலா மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியும்” என்று நினைப்பார்கள். அவனைக் கண்டு இனி பயப்படமாட்டார்கள். பிச்சை உணவு குறைவு படாமல் சாதுவின் பணிகளை அங்குலிமாலா திறம்படச் செய்ய ஏதுவாகும்.

அதுவரை அடிப்படை தியானப் படிகளில் அங்குலிமாலாவால் மனங்குவிக்க முடியவில்லை. இரவு பகலெல்லாம் பயிற்சி செய்தாலும் அவன் கொன்ற மனிதர்கள் தம்மை விட்டுவிடுமாறு இறைஞ்சிய குரல்கள் அவன் நினைவில் ஒலித்தவாறிருந்தன;  அவனால் மரணமுற்றோர் மரிக்கும் முன்னர் நடுநடுங்கி கை-கால்கள் உதறலெடுக்கும் காட்சிகளும் அவன் மனக்கண்ணில் ஓடியவாறிருந்தன. அந்த நினைவுகள் அவனுள் குற்றவுணர்ச்சியை மிகுதியாக்கின. இத்தகைய நினைவுகளுடன் தியான இருக்கையில் அவனால் வசதியாக அமரமுடியவில்லை. ஆகையால் பகவான் அவனுடைய புதுப்பிறப்பு பற்றிய உண்மைக் கூற்று அதிசயத்தை நிகழ்த்த வைத்தார். பிக்குவாக அவனுடைய “புதுப்பிறப்பை” சிறப்பான ஓன்று என அவன் எண்ணும் போது அவன் அடைந்த நுண்ணறிவு இன்னும் வலுப்பெறும் என்றெண்ணினார்.

சங்கத்தில் சேர்ந்து விட்டாலும் அங்குலிமாலாவை மரியாதையுடன் ஏற்றுக்கொண்டவர்கள் குறைவே என்று ஏற்கனவே பார்த்தோம். அவனுடைய இறந்த காலம் கடைசி வரை அவனை துரத்திக் கொண்டிருந்தது.  “சாக்கிய முனியின் சாதுக்கள் எப்படி ஒரு கொடியவனை பிக்குவாக நியமித்தார்கள்?” என்று பொதுமக்கள் பகீரங்கமாகப் பேசிக்கொண்டதைக் கேட்ட மூத்த பிக்குகள் சிலர் புத்தரிடம் இதைப் பகிர்ந்து கொண்டனர். ஒரு புது வினய விதிமுறையை உடனுக்குடன் அறிவித்தார் புத்தர். “சாதுக்களே, பேர்போன குற்றவாளி எவரையும் சாதுவாக நியமிக்கக் கூடாது. அவ்வாறு நியமிப்பவர் கடுந்தவறைப் புரிந்தவராவர்” ஒரு குற்றவாளிக்குள் இருக்கும் நற்குணத்தின் சாத்தியத்தை ஒரு புத்தராக அவர் உணரக்கூடியவராக இருந்தாலும், அவருக்குப் பின் வருவோருக்கு அத்திறமை இல்லாமற் போகலாம் ; அத்திறமை இருந்தாலும் தன் இஷ்டப்படி அந்த குற்றவாளியை வழிநடத்தும் அதிகாரம் இல்லாமல் போகலாம். மேலும், முன்னாள் குற்றவாளிகளை சங்கத்தில் அனுமதிக்கும் பழக்கம் ஒரு மரபாக ஏற்றுக்கொள்ளபட்டால், திருந்தாத குற்றவாளிகள் கைதையும் தண்டனையையும் தவிர்க்கும் சரணாலயமாக பௌத்த சங்கத்தை பயன்படுத்திக்கொள்ளக் கூடும்.

அங்குலிமாலாவின் பிற்கால வாழ்க்கை பற்றி பௌத்த இலக்கியங்களில் குறிப்பேதும் இல்லை,  அங்குலிமாலாவே எழுதி தேராகதாவில் வரும் செய்யுளைத் தவிர.

“குருதி படிந்த கரத்தினனாக முன்னரொருமுறை
விரல்-மாலை எனும் பெயரோடு இருந்திருந்தாலும்
எனக்குக் கிடைத்த அடைக்கலத்தைப் பார்
இருத்தலின் தளை வெட்டப்பட்டுவிட்டது.”

இடைத்தங்கல் மையங்கள்

“எங்கள் பல்கலைக்கழகங்களுக்கு வந்து படியுங்கள்” என்று ஆஸ்திரேலிய பல்கலைகழகங்கள் கூவியழைக்கின்றன. “எங்கள் நாட்டுக்கு சுற்றுலா வாருங்கள்” என்று இஸ்ரேல் அழைக்கிறது. இத்தகைய விளம்பர சுருதியை யிஜின் என்ற சீனப்பயணியின் குறிப்பில் நமக்கு படிக்கக் கிடைக்கிறது. ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு விஜயம் செய்தவர் யிஜின். இந்தியா – சீனா இரண்டுக்குமிடையிலான வர்த்தக, கலாசார பரிவர்த்தனையின் முக்கிய இணைப்பாக தென்கிழக்காசிய அரசுகள் பங்காற்றிவந்தன. தெற்கு சுமத்ராவிலிருக்கும் பாலெம்பாங்-கை தரைநகராகக்கொண்டு ஆண்ட ஶ்ரீவிஜயர்களின் காலத்தில் இந்தியா செல்லுமுன்னர் பாலெம்பாங்-கில் ஆறு மாதம் தங்கி சமஸ்கிருத இலக்கணத்தை பயின்றாராம் யிஜின். சீனா திரும்பும் வழியிலும் பாலெம்பாங்கில் சிறிது காலம் தங்கியிருந்து சில பௌத்த நூல்களின் மொழிபெயர்ப்புகளை செய்து முடித்தாராம். அவர் சொல்கிறார் : “முழுக்க முழுக்க பௌத்த வாசிப்பில் மூழ்கியிருந்த ஏறக்குறைய ஆயிரம் பௌத்த பிக்குகள் அங்கு வசித்தனர். பௌத்தம் மட்டுமல்லாமல் அனைத்து வகை அறிவியல்களையும் அவர்கள் கற்று வந்தனர்.மூல ஆகமங்களை படித்தறிவதற்காக மேற்கு திசைக்கு பயணஞ்செய்ய விழையும் சீன சாது ஒருவர், ஓரிரு வருடங்கள் இங்கு தங்கியிருந்து (பாலெம்பாங், ஶ்ரீவிஜய பேரரசு) இந்திய பயணத்துக்கு தயார் செய்து கொள்ளலாம்.” கிழக்கு திசைப் பயணத்தின் போது தங்கள் விமான நிலையங்கள் வழியாக “transit” செய்யலாம் எனும் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளின் தேசிய விமான நிறுவனங்களின் விளம்பர வாசகங்களை நினைவுபடுத்தும் யிஜினின் இந்த குறிப்பு.

——

அதினா பூர் என்று புராதன காலத்தில் வழங்கப்பட்ட,  பௌத்தம் தழைத்த, பாஹியான், யுவான் சுவாங் போன்ற சீன யாத்திரிகர்கள் விஜயம் செய்த, அலெக்ஸாண்டர் கைக்குள் இருந்து அவரின் மறைவுக்குப் பிறகு அவரின் தளபதிகளுள் ஒருவரான செலியூக்கஸ் என்பவரிடம் வந்து, சந்திரகுப்த மௌரியர்களின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு, கிரேக்க-பௌத்த பேரரசு, குஷானப் பேரரசு, அராபிய முஸ்லிம்கள், கஜினி, கோரி, தைமூர், முகலாய வம்சங்கள் கீழ் வந்து, பெருத்த உயிரிழப்புகளுக்குப் பிறகு ஆங்கிலேயர்களின் கைக்கு வந்து…..அந்த நகரத்தில் இன்னும் போர் முடிந்தபாடில்லை….புராதன பட்டுச் சாலைக்கு அருகில் இருந்த காரணத்தால் வணிகமுக்கியத்துவமும் மத்திய ஆசியாவிலிருந்து இந்திய நிலப்பரப்புக்குள் ஊடுருவிய ஹூணர்கள், மங்கோலியர்கள் போன்றோரின் முதல் நிறுத்தமாக  கைபர் கணவாய்க்கு அருகில் இருந்தமையால் பூகோள-அரசியல் முக்கியத்துவமும் அந்நகருக்கு பன்னெடுங்காலமாக இருந்து வந்திருக்கிறது.  தன் பேரன் அந்நகரைப் பெரிதாகக் காட்டுவானென்ற முகலாய மன்னன் பாபரின் கனவை பூர்த்தி செய்தான் பேரன்….ஜலாலுத்தின் முகமது அக்பர் என்ற பேரனின் பெயரிலேயே அந்த நகரம் இன்று வழங்கப்படுகிறது….கிழக்கு ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரம் – ஜலாலாபாத்!

Tapari Kalan சிதிலங்கள் ஜலாலாபாதிலிருந்து பத்து கி மீ தொலைவில் இருக்கின்றன. அங்கு அகழ்வாராய்ச்சி நடந்த நாட்களில் (1923) எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் பாரிஸ் மியூசியத்தில் தொங்கவிடப்பட்டிருக்கிறது. தலையற்ற முண்டமாக புத்தரின் சிலை  காந்தாரக் கலையின் எழில் மிளிர நின்றுகொண்டிருக்க, தரையில் சிலையின் தலை விழுந்து கிடக்கிறது.

tapari-kalan-excavation

Tapari Kalan என்ற புராதன பௌத்த மடாலயத்தின் சிதிலங்கள் 1920-30களில் பிரெஞ்சு தொல்லியலாளர்களால் கண்டெடுக்கப்பட்டன. ஜலாலாபாத்திற்கு தெற்கே ஹட்டா என்ற இடத்தில் Tapari Kalan உள்ளது. அகழவாராய்ச்சியில் கிடைத்த முக்கியமான சிற்பங்கள் இன்று பாரிஸ் அரும்பொருட் காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆப்கானிஸ்தானின் உள்நாட்டுப்போரில் பாமியான் புத்தர்கள் போல Tapari Kalan-னும் சேதமுற்றுவிட்டதாகச் சொல்கிறார்கள். Tapari Kalan-இன் இன்றைய கால புகைப்படத்தை பார்க்கலாம் என்று கூகிளில் தேடினேன். கிடைக்கவில்லை. தேடலின் முடிவுகள் உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களை வரிசைப்படுத்தின. Tapari Kalan, Jalalabad, Hadda என்று பல ஆப்கன் ஊர்களின் பெயர்களைக் கொண்ட ஊர்களும் சஹாரன்பூர் மாவட்டத்தில் இருக்கின்றன. அங்கிருப்பவர்களின் மூதாதையர் ஆப்கானிஸ்தானிலிருந்து வந்தவர்கள் போலும். மனிதர்கள் போன்று சின்னங்களும் நகர்ந்திருந்தால்…..

——

நவீன காலத்தில் சீனர்கள் அந்நகரை காசி என்றழைக்கிறார்கள். பெரும்பான்மை உய்கர் இன முஸ்லிம்கள் வாழும் அந்த ஊர் – காஷ்கார் . சீனாவின் மேற்கோரத்தில் இருக்கும் ஷீன்ஜாங் (Xinjiang) பிராந்தியத்தில் உள்ள இரண்டாவது பெரிய நகரம்.

வரலாற்றுக் காலந்தொட்டு மத்திய ஆசியாவின் முக்கியமான வணிக நகரங்களில் ஒன்று காஷ்கார் . தெற்கு பட்டுச்சாலையில் அமைந்திருக்கும் ஊர். கிருத்துவ யுகத்தின் துவக்கத்தில் ஹான்-சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. உள்ளூர் மன்னரின் ஆட்சியை மேற்பார்வை செய்ய ஹான் – சீனாவின் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். இரண்டாம் நூற்றாண்டின் போது அண்டைய ராஜ்யமான குஷானப்பேரரசின் மீது காஷ்காருக்கு பயம். அவர்கள் தம்மைத் தாக்கக்கூடாது என்பதால் தம் குடும்பத்தின் வாரிசொன்றை பணயமாக குஷான அரசிடம் ஒப்படைத்திருந்தது காஷ்கார் அரசகுடும்பம். இதற்கு நடுவில் ஹான் – சீனப் பிரதிநிதியுடன் ஏற்பட்ட ஒரு பூசல் காரணமாக சீனப்பிரதிநிதி கொலை செய்யப்பட்டுவிட ஹான்-சீனா காஷ்கார் மீது படையெடுத்தது. குஷானப் பேரரசின் உதவி நாடப்படுகிறது. அதுவரை அவர்களிடம் பணயமாக இருந்த இளவரசனுக்கு முடிசூட்டுகிறார்கள் குஷானர்கள். காஷ்கார் இப்போது குஷானர்களின் பாதுகாப்பில் இருப்பதால் ஹான்-சீனா படை பின் வாங்குகிறது. இது நடந்தது கிபி 170 இல். காஷ்காரில் பௌத்தம் தழைக்கத் தொடங்கியது இந்த சமயத்தில்தான். கிட்டத்தட்ட பத்தாம் நூற்றாண்டு வரை பௌத்தம் காஷ்கார் மக்களின் முக்கிய சமயமாகத் திகழ்ந்தது. பௌத்தம் சீனாவில் பரவித் தழைத்தற்கு குஷானர்களின் கட்டுப்பாட்டில் காஷ்கார் வந்தது ஒரு முக்கியக் காரணம்.

குஷானர்கள் காலத்தில் இரானிய மக்கள் குழுக்களின் கிளைகளில் ஒன்றான சாகா மக்களும், இந்தோ- ஐரோப்பிய மொழி பேசிய டொகாரிய இன மக்களும் காஷ்காரில் வசித்தனர். எட்டாம் நூற்றாண்டில் பௌத்தம் மறைந்து இஸ்லாம் கோலோச்சத்தொடங்கியபோது இவர்கள் புறந்தள்ளப்பட்டு துருக்கிய பழங்குடிகளான உய்கர் குடியேறினர். எட்டு நூற்றாண்டு காலம் பிரசித்தமாயிருந்தும், குறிப்பிடத்தக்க பௌத்த அடையாளங்கள் ஏதும் இன்று காஷ்காரில் மிஞ்சியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

—–

பாலெம்பாங் (இந்தோனேசியா), ஜலாலாபாத் (ஆப்கானிஸ்தான்). காஷ்கார் (சீனா) என்னும் மூன்று முக்கியமான இடைத்தங்கல் மையங்களில் இன்று பௌத்தம் காணாமல் போய்விட்டது. உலகின் நான்காவது பெரிய சமய நம்பிக்கையாக பௌத்தம் இன்றளவும் நிலைத்து நிற்பதற்கு இந்த வரலாற்றுக்காலத்து இடைத்தங்கும் இடங்கள் முக்கியப்பங்காற்றின.

 

சில துணுக்குகள்

மகாயானத்தின் எழுச்சிக்குப் பின்னால் வைதீக சமயத்தின் தாக்கமோ செல்வாக்கோ இருந்திருக்கலாம் என்று சில அறிஞர்கள் சந்தேகித்திருக்கிறார்கள். உ-ம் கெர்ன், மேக்ஸ் முல்லர், கீத், ஷெர்பாட்ஸ்கி முதலானோர். கடவுள் என்னும் கருத்துரு, புத்தபக்தி, மாறும் நிகழ்வுகளின் மைதானமாக இருக்கும் அழியா முழுமை ஆகிய கருப்பொருட்கள் ஒரு வேளை வைதீக சிந்தனைகளின் தாக்கத்தால் உள்ளே நுழைந்திருக்கலாம் என்று கருதத் தோன்றுகிறது. ஆனால் இது பற்றி அறுதியிட்டுச் சொல்லிவிட முடியாது. ஏனெனில் இதற்கான நேரடி ஆதாரங்கள் கிடைக்கவில்லை. வைதீக மதத்திடமிருந்து அப்படி ஏதாவது பெறப்பட்டிருந்தால், அவை மறைமுகமானதாகவோ அல்லது தற்செயலானதாகவோதான் இருந்திருக்க முடியும். முழுமைவாத மெய்யியலை நோக்கியும் இறைநிறைவாத சமயவியலை நோக்கியும் உள்ளார்ந்த பௌத்த சிந்தனை இயல்பாக நகர்ந்திருக்கக்கூடிய சாத்தியக்கூறே மிக அதிகம்.

(Source : the central philosophy of Buddhism – a study of Madhyamika System — T R V Murti)

+++++

golden-leaf

தாய்லாந்து மற்றும் இதர தென்கிழக்காசிய நாடுகளில் அஞ்சலி செலுத்துவதற்கு மிகவும் ஏற்றதான தனிமமாக தங்கம் கருதப்படுகிறது. அந்த நாட்டு மரபுகளில் தங்கத்தை புத்த கோயில்களுக்கு கொடையளிப்பது பக்தியின் உச்ச வெளிப்பாடு. சாரநாத், கயா போன்ற இடங்களுக்குச்  சென்ற போதெல்லாம் தென்கிழக்காசியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் தங்க இலைத் தாள்களை அங்குள்ள புத்தர் சிலைகளின் மேல் ஓட்டுவதை நான் பார்த்திருக்கிறேன். இது  ஒரு புண்ணியச் செயல் என்று  தென்கிழக்காசியர்கள் நம்புகிறார்கள். தங்க ஒளி வீசும் வாழும் புத்தரை நினைவு கூறும் விதமாக இந்த மரபு பின்பற்றப்படுகிறது.

+++++

திரிபிடகத்துக்கு மறுவிளக்கம் தந்து தொகுக்கும் பணியில் ஈடுபட்ட புத்தகோசர் (ஐந்தாம் நூற்றாண்டு) புத்தரின் மொழி என்று சொல்லப்படும் மகதி அல்லது பாலி மொழியைத் தேர்ந்தெடுக்காமல்  தமிழைத் தேர்ந்தெடுத்திருந்தால் தமிழ்ப்பௌத்தத்தின் நிலைமை எவ்வாறு இருந்திருக்கும்? பௌத்த மையமான காஞ்சியில் வாழ்ந்து பின்னர் இலங்கை சென்ற புத்தகோசர் தம்மத்தை தமிழில் ஏன் எழுதவில்லை என்பது ஒரு விதத்தில் புதிர்தான். வினய-பிடகத்தில்  (Culavagga, V 33) சாக்கியமுனி சொல்வார் : “சாதுக்களே! புத்தர்களின் வாக்குகளை அவரவர் மொழிகளில் வாசித்துக்கொள்ள நான் அனுமதிக்கிறேன்”  சாக்கியமுனியின் வாக்கை மீறி தமிழ் மொழியை ஒதுக்கிவிட்டு புத்தகோசர் பாலியைத் தேர்ந்தெடுத்தது தொகுப்புக்கு ஒரு  சர்வதேச அங்கீகாரத்தை  பெற்றுத்தரும் முயற்சியாய் இருந்திருக்குமா? இன்றளவும் இலங்கையிலும் பிற தேரவாத தென்கிழக்காசிய நாடுகளிலும் புத்தவசனமாக போற்றி வாசிக்கப்படுவது புத்தகோசர் திரிபிடகத்துக்கு எழுதிய உரைகள்தாம். விசுத்திமக்கா (Path of Purity) புத்தகோசரின் முக்கியமான நூலாகும்.

+++++

அசோகரின் கொசம்பி (இன்றைய அலகாபாத்) தூண் அரசாணையில் புத்தசங்கத்தில் எழுந்த பேதங்கள் பற்றியும் அந்த பேதங்கள் சங்கத்தை துண்டாடுமளவுக்கு வளர்ந்தது பற்றியும் குறிப்புகள் வருகின்றன. சங்கத்தைப் பிரிக்க யத்தனிப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பிக்கு என்னும் தகுதியை இழப்பார்கள் என்னும் மெலிதான எச்சரிக்கையும் அந்த அரசாணையில் உள்ளது. உண்மையான பௌத்தத்தை ஸ்தாவிர வாதிகளே (பின்னாளைய தேரவாதத்தின் மூலம்) போதிக்கின்றனர் என்றும் சங்கிகர்கள் என்றழைக்கப்பட்ட சங்கத்தில் பேதத்தை எழுப்பினவர்கள் பேசியது பௌத்தமே அல்ல என்று அசோகரின் தமையனாரும் பௌத்த தேரராகவும் விளங்கிய திஸ்ஸர் தீர்ப்பு வழங்கி சங்கத்தில் தோன்றிய கலகத்துக்கு முற்றுப்புள்ளியிடப்பட்டதாகவும் அசோகர் மறைந்து ஏறக்குறைய 700 வருடங்களுக்குப்பிறகு எழுதப்பட்ட மகாவம்சம் சொல்லுகிறது. அசோகர் தனிப்பட்ட முறையில் பௌத்தத்தின் எந்த பிரிவையும் ஆதரித்ததாக அவரின் அரசாணைகள் எதிலிருந்தும் நமக்கு தெரியவரவில்லை. அசோகாவதானா-விலும் அசோகர் ஒரு குறிப்பிட்ட பௌத்தப் பிரிவுக்கு ஆதரவு அளித்ததாக தகவல் இல்லை. மகாவம்சமும் ஏனைய இலங்கை நூல்கள் மட்டும் இலங்கையில் பின்பற்றப்பட்ட தேரவாதத்துக்கு நெருக்கமான பௌத்தப்பிரிவை மட்டும் அசோகர் ஆதரித்தார் என்று சொல்வது தத்தம் பிரிவுகளை முன்னிலை படுத்த வரலாற்று நாயகர்களை துணைக்கு அழைத்துக்கொள்ளல் என்னும் அரதப்பழைய பழக்கத்திற்கோர் உதாரணம். பொதுவாக, சமயவரலாற்று நூல்களுக்கும் துல்லியத் தன்மைக்கும் சம்பந்தம் இருப்பதில்லை. இந்த உலகளாவிய பழக்கத்திற்கு இன்று வரை அழிவில்லை. துல்லியமான தகவல்கள் அவசியமற்றவை எனும் போக்கு அறிவியல் யுகத்திலும் மாறாது தொடர்கிறது.

+++++

மணிமேகலையின் ஆறாம் காதை சக்கரவாளக் கோட்டமுரைத்த காதை. ஒரு சூனியக்காரியின் ஆவி உள்புகுந்து அதன் விளைவாய் மரணமுறும் மகன் சங்களனுடைய உடலைச் சுமந்து கொண்டு சம்பாபதி தெய்வத்திடம் முறையிடுகிறாள் கண்பார்வையற்ற கோதமி. அவளின் அரற்றல் கேட்கப் பொறுக்காமல் அவள் முன் தோன்றுகிறது சம்பாபதி தெய்வம். சிறுவன் ஊழ்வினை காரணமாகவே இறந்தான் என்றும் அவனை உயிர்ப்பிக்க யாராலும் முடியாது என்றும் கூறுகிறது. கோதமி அதை நம்ப மறுத்து மகன் மீண்டும் உயிர்பெறாவிடில் தானும் உயிர் நீப்பதை தவிர வேறு வழியில்லை என்கிறாள். தன் சக்தியால் ஆனதைச் செய்வதாக சொல்லும் சம்பாபதி கீழ்க்கண்டவர்களை கோதமி முன்னிறுத்தியது.

நால்வகை மரபி னரூபப் பிரமரும்

நானால் வகையி னுரூபப் பிரமரும்

இருவகைச் சுடரு மிருமூ வகையிற்

பெருவனப் பெய்திய தெய்வத கணங்களும்

பல்வகை யசுரரும் படுதுய ருறூஉம்

எண்வகை நரகரு மிருவிசும் பியங்கும்

பன்மீ னீட்டமு நாளுங் கோளும்

தன்னகத் தடக்கிய சக்கர வாளத்து.....

அரூபப்பிரமர்கள், உரூபப்பிரமர்கள், சூரிய சந்திரர்கள், அறுவகைத் தெய்வங்கள், மனிதர்கள், நட்சத்திரங்கள் முதலான அனைத்தும் அங்கு குழுமின. சம்பாபதி ஏற்கெனவே சொன்னதை அவைகள் உறுதி செய்தன. கோதமியும் மனதைத் தேற்றிக்கொண்டு மகனின் மரணத்தை ஏற்றுக்கொண்டவளாய் அவன் உடலத்தை சிதைத்தீக்கு படைக்கிறாள்.

பௌத்த மரபில் அங்கு குழுமிய கடவுளர் எல்லாம் உறையுமிடம் சக்கரவாளம் என்று சொல்லப்படுகிறது. அதனால் அந்த சுடுகாட்டில் அவர்கள் குழுமிய இடம் சக்கரவாளக் கோட்டம் என்றழைக்கப்படலானது. தேவதச்சனாகிய மயன் அவ்விடத்தில் சக்கரவாளக் கோட்டத்தை பின்னாளில் எழுப்புகிறான். நடுநாயகமாக மேருமலையும் அதனைச்சுற்றி எட்டு மலைத்தொடர்களும், நான்கு கண்டங்களும், ஈராயிரம் தீவுகளையும் சமைத்தான்.

இந்த விவரிப்பை பௌத்த cosmologyயின் கூறுகளின் குறியீட்டுச் சித்தரிப்பாக காணலாம். முழுக்கோட்டமும் ஓர் யந்த்ரமாகக் கொள்ளலாம். வழிபாட்டுக்கும் தியானத்துக்குமான ஒரு மண்டலம். கதைக்குள் வரும் நிகழ்வின் வாயிலாக பௌத்த அண்டவியலின் சிறு கண்ணோட்டத்தை நமக்கு காட்டிவிடுகிறது மணிமேகலை காப்பியம்.

மந்திரம் – இணைவு – மண்டலம்

“அடிப்படையான, உள்ளார்ந்த மனதின் தெளிவான ஒளியே உன்  இயல்பு என்பதை நீ உணரும் வரை, நீ புறப்பொருள் நிலையுணரும் ஜீவனாய் இருக்கிறாய் ; ஆனால் உன்னுடைய கடையியல்பை உணர்ந்த பின்னரோ, நீ புத்தனாகிறாய்”

                                                                                                             – தலாய் லாமா     

தாந்த்ரீக பௌத்தத்தின் வடிவம் வஜ்ரயானம் ; வஜ்ரம் என்றால் சமஸ்கிருதத்தில் “மின்னல்” அல்லது “வைரம்” என்று பொருள். பௌத்த வரலாற்றில், மகாயான ஊக சிந்தனைகளிலிருந்து பௌத்த உயர் இலக்குகளை தனிப்பட்ட வாழ்க்கையில் அரங்கேற்றுதலை நோக்கிய நகர்வை வஜ்ரயானம் வலியுறுத்துகிறது. “வஜ்ரம்” எனும் சொல் ஒரு மனிதனுள் இருக்கும் முற்றிலும் உண்மையான, அழியாததுமாகிய ஒன்றை குறிக்கும் ; அது தன்னைப் பற்றியும் தன்னியல்பைப்  பற்றியும் அம்மனிதன் எண்ணும் புனைவுகளுக்கு எதிரானது.

வஜ்ரயானத்தை  மந்த்ரயானம் என்றும் அழைப்பர் ; ஏனெனில் மந்திரங்கள் வஜ்ரயானத்தின் முக்கியமான அம்சம். மந்திரங்களின் உச்சரிப்பு மனம் கட்டுப்பாட்டை இழந்து தன்னைப் பற்றிய புனைவுலகத்துக்குள்  வழி தவறி அலைவதிலிருந்து கிளைக்கும் சொல்லாட்சியை தடுப்பதற்கு உதவுகிறது. “குஹ்ய மந்த்ர யானம்” என்றும் இப்பௌத்தப் பிரிவு அழைக்கப்படுகிறது. “குஹ்ய” என்றால் “மறைந்திருப்பது”. யதார்த்தத்தை அறியும் செயல் முறையின் உணர்ந்தறிய முடியாத்தன்மையை விவரிக்கும் சொல் இது.

தத்துவார்த்தமாக, மனத்தின் இறுதித்தன்மையை பேசும் யோகசார பௌத்தத்தின் கருத்து மற்றும் சார்பியல் வாத கொள்கைகளை உண்மை என்று ஏற்றுக்கொள்வதற்கு எதிரான மத்யமிகா தத்துவம் – இரண்டையும் உருவடிவமாக வஜ்ரயானம் திகழ்கிறது. அக அனுபவங்களை கையாளும் வஜ்ரயான நூல்கள் அடையாள, சங்கேத மொழியை உள்ளடக்கியவையாய் இருக்கின்றன. இந்த அடையாளங்களும் சங்கேதங்களும் வஜ்ரயானத்தை பின்பற்றுவோரின் சொந்த அக அனுபவங்களுக்கு தூண்டுதலாக இருக்கும் வண்ணம் படைக்கப்பட்டிருக்கின்றன.  இதன் வாயிலாக வரலாற்றுப் புத்தரின் அறிவொளி அனுபவங்களை மீட்டுப்பெறுதலே வஜ்ரயானத்தின் குறிக்கோள்.

மேல்பூச்சான வேறுபாடுடைய  இரண்டு எதிர் கொள்கைகள் உண்மையில் ஒன்றே என்பதை உணர்தலின் மூலமே அறிவொளி எழுகிறது என்பது வஜ்ரயானத்தின் கருதுகோள். செயலற்ற கருத்தியல்கள் எல்லாம் உரிய செயல்கள் வாயிலாக தீர்க்கப்படல் வேண்டும். உதாரணமாக, ஷுன்யதா (வெறுமை) மற்றும் பிரக்ஞா (மெய்ஞ்ஞானம்) எனும் கருத்தியல்கள் கருணா (கருணை) மற்றும் உபாயம் (Skillful Means) போன்ற செயல்களினாலேயே அர்த்தம் பெறும். இந்த அடைப்படை இருமையும் அதன் தீர்வும் பாலியல் சின்னங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்படுகின்றன. உதாரணம் : யப்-யும் ( Yab-Yum )

Yab-Yum

இந்தியா, நேபாளம் மற்றும் திபெத்தின் பௌத்த கலைச்சித்தரிப்பு யப்-யும் ; ஆண் தெய்வம் ஒன்று தன் பெண் துணையுடனான பாலியல் அணைப்பின் உருவமைப்பே யப்-யும். செயல் சக்தி அல்லது வழிமுறையானது  (உபாயம் – ஆணாக உருவகிக்கப்பட்டது) ஞானத்துடனான (பிரக்ஞா – பெண்ணாக உருவகிக்கப்பட்டது) மறைபொருள்-கூடலை சித்தரிப்பதாக இது பொதுவாக புரிந்து கொள்ளப்படுகிறது. ஆன்மீக அறிவொளியைத் தேடும் முயற்சியில் தோற்றவுலகின் பொய் இருமைகளை முறியடிப்பதில் யப்-யும் இணைவின் புரிதல் அவசியம். பாலியல் கூடலின் பயன்பாடு இந்து தாந்த்ரீக மரபில் இருந்து பெறப்பட்டிருக்கலாம் என வல்லுநர்கள் கருதுகிறார்கள்.  சீன – ஜப்பானிய பௌத்தர்கள் யப் – யும்  சித்தரிப்பை முழுமையாக ஏற்றுக்கொள்வதில்லை. திபெத்திலும் கூட மறைபொருள் முக்கியத்துவம் அறிந்து  முறையாக போதனை பெற்றவர்களுக்கு மட்டுமே யப்-யும் சித்திரங்கள் மீதான தியானம் அனுமதிக்கப்படுகிறது. பெண்-துணையுடன் இருக்கும் தெய்வங்களின் மீதான பிராத்தனைகள் மட்டுமே பயன் தரும் என்னும் நம்பிக்கையும் திபெத்தில் உண்டு. பிக்குகளாலும் சாதுக்களாலும் வழிபாட்டுக்காக ஏற்கப்படும் காவல் தெய்வங்களும் (yi-dam) மாறுபாடில்லாமல் யப்-யும் அணுகுமுறையை ஏற்பதாகவே திபெத்தில்  சித்தரிக்கப்படும்.

யோகசார பௌத்தம் வளர்ச்சி பெற்ற காலத்தில் அதனுடன் இயைந்து வளர்ந்தது என்பதைத் தவிர, வஜ்ரயானத்தின் வரலாற்று மூலம் பற்றிய தெளிவான தகவல் ஏதும் அறியக் கிடைக்கவில்லை ; ஆறாம் நூற்றாண்டு முதல் பதினொன்றாம் நூற்றாண்டு வரை தழைத்தோங்கிய வஜ்ரயானம் இந்தியாவை சுற்றியிருக்கும் நாடுகளில் நீடித்த செல்வாக்கை இன்றளவும் செலுத்தி  வருகிறது.   

vairo

வைரோசனரின் மண்டலம்

வஜ்ரயானத்தின் வளமான சித்திரக் கலைகள் புனித மண்டலத்தில் உச்சக்கட்டத்தை எட்டின. மண்டலம் எனப்படுவது பிரபஞ்சத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சித்தரிப்பு ; வஜ்ரயான பௌத்தத்தில் மண்டலங்கள் தியான ஊக்கிகள். ஆன்மீகச்சசடங்குகளை நிகழ்த்துவதற்காகவும் இந்த குறியீட்டு வரைபடங்கள் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன. பரிசுத்தப்படுத்தப்பட்ட இடத்தில் பிரபஞ்சத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மண்டலங்கள் வரையப்பட்டு கடவுளர்களைத்  தாங்கிக் கொள்ளும்  வாங்கியாகவும், பிரபஞ்ச சக்திகளைக் குவிக்கும் புள்ளியாகவும் மணடலத்தை கருதும் ஐதீகம் இன்றும் தொடர்கிறது. நுண்ணுயிரான மனிதன் மானசீகமாக மண்டலத்துக்குள் “நுழைந்து” அதன் மையம் நோக்கி “நகர்தல்”  சிதைவு மற்றும் மீள் ஒருங்கிணைப்பு என்னும் பிரபஞ்ச செயல் முறைகளின் ஒப்புமை தியானமாக வஜ்ரயானத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

பௌத்த மண்டலங்கள் இரு வகைப்படுவன ; ஒன்று, கர்ப்ப-தாது ; இம்மண்டலம் ஒன்றிலிருந்து பலவாக நகர்தலைக் குறிக்கும். இன்னொன்று வஜ்ர-தாது – பலவற்றிலிருந்து ஒன்று.

மண்டலங்கள் காகிதத்தில் அச்சிடப்பட்டதாக இருக்கலாம் ; துணியில் வரையப்பட்டதாக இருக்கலாம் ; சுத்தம் செய்யப்பட தரையில் வெள்ளை மற்றும் பலவித நிற கயிறுகளால் வரையப்படலாம் ; கோலங்களாக இருக்கலாம் ; பித்தளையில் வடிவமைத்ததாக இருக்கலாம் ; கற்களில் கட்டப்பட்டதாக இருக்கலாம். கற்களில் கட்டப்பட்ட மண்டலத்துக்கான மிகச் சிறந்த உதாரணம் – இந்தோனேசியாவில் இருக்கும் போரோபுதூர் நினைவுக் சின்னம் ; அங்கு ஸ்தூபத்தை வலம் வருதல் மையத்தை நோக்கிய சடங்குமுறையை அனுஷ்டிப்பதற்கு ஒப்பாகும்.

indo-boro-aerial_3030577c

போரோபுதூர் ஆலயம் – இந்தோனேசியா – எட்டாம் நூற்றாண்டு

 

 

பௌத்தத்தில் மகாவிஷ்ணு

kanavu-chirai-800x800

இலங்கை அதிபர்கள் இந்தியா வரும்போதெல்லாம் திருப்பதி மற்றும் குருவாயூர் கோயில்களுக்கு செல்வது ஏன்? ஸ்டண்டாக இருக்கும் என்று நான் நினைத்ததுண்டு. நான் நினைத்தது தவறு. இலங்கை பௌத்தத்தில் விஷ்ணு வழிபாடு இருக்கிறது.

எழுத்தாளர் தேவகாந்தனின் “கனவுச்சிறை” நாவலை வாசித்த போதுதான் எனக்கு இது தெரிய வந்தது. ஈழப்போராட்டத்தின் துவக்கத்திலிருந்து முடிவு வரையிலான காலவோட்டத்தை ஒரு குடும்ப அங்கத்தினர்களின் வாழ்வின் நோக்கில் காப்பியமாக படைத்திருக்கிறார் தேவகாந்தன். சங்கரானந்தர் என்கிற ஒரு அருமையான பாத்திரத்தை நாவலில் உருவாக்கியிருப்பார் தேவகாந்தன். அந்தப் பாத்திரம் அவருக்கு நேரெதிரான எண்ணங்களைக் கொண்ட இன்னொரு புத்தபிக்குவுடன் ஒரு வாக்குவாதத்தில் ஈடுபடும்.

+++++

”நிகழ்வின் சாத்தியம்தான் வரலாறு. இரண்டு காலங்களை…இரண்டு எல்லைகளை…இரண்டு நிகழ்வுகளை வெகு அநாயாசமாய் இணைக்கக்கூடிய காரணங்களின் சாத்தியம் அது. இந்தச் சாத்தியத்தினூடாக வரலாற்றில் முன்னனுமானமே நிகழ்ந்திருக்கிறது. எழுதிய வரலாற்றின் ஓரங்களில் இதுபோல மறைக்கப்பட்ட சம்பவங்களுக்கான ஆதாரத் துணுக்குகள், எச்சங்கள் ஒட்டியிருக்கின்றது, உண்மையில் கண்டடையப்பட்டிருக்கிறது.”

”எக்காலகட்டத்தில் நிகழ்ந்தது அது?”

“கிறித்து சகாப்தம். புத்த காலத்தின் ஐந்நூறு வருஷங்கள் கழிந்து. தென்பகுதியில் கல்யாணி ஆறு தொடங்கி மாணிக்க கங்கை ஈறாகவும், வடபகுதியில் நயினாதீவிலும் வல்லிபுரப் பகுதியிலும் தமிழர்கள் புத்தசமயிகளாக இருந்தார்கள். ஏறக்குறைய அன்றைய தமிழ்நாட்டு நிலைமையை இலங்கை பிரதிபலித்தது. ஆனால் பிற்காலத்தில் அனுராதபுரத்திலிருந்து தெற்கு நோக்கிய நம் நகர்வு வடபகுதிப் புத்த சமயத் தமிழர்களைத் தனிமைப் படுத்திற்று. மேற் கொண்டு எமது அரசியல் நடப்புகள் தமிழ்ப் பவுத்தர்களை இழக்கச் செய்தன.”

“தெற்கிலுள்ள தமிழ்ப் பவுத்தர்களுக்கு என்ன ஆனது?”

“அவர்கள் சிங்கள் பவுத்தர்களாக மாறியது நடந்தது. அதனால்தான் இந்துசமய சடங்காசாரங்கள், நம்பிக்கைகள் புத்தசமயத்திலே வந்து கலந்தன மிகுதியாகவும்.”

……….

“அது அவர்கள் தவறல்ல”

….

“நமது தவறுதான். அனாத்மவாதமென்று சொல்லிக் கொண்டோம். வேதங்களை மறுதலித்தோம். ஆனாலும் பிரம்மென்ற அம்சத்தின் அடையாளமாய் நின்றிருந்த விஷ்ணுவை புத்தரின் அவதாரமென்று சொல்லிக் கொண்டோம்”

+++++

சுவையான, ஆனால் தீவிரமான உரையாடல். ஒரு கட்டத்தில் குரூரமான பிக்கு குணாநந்த, சங்கரானந்தரிடம் தன் நிலைப்பாட்டிலிருந்து எழுந்த கருத்தை வரலாற்றுக் கூற்றின் பாவனையில் வெளிப்படுத்துவான்.

+++++

”விஷ்ணு அவதாரமான புத்தர் பற்றிய கற்பனை அவசியமான அரசியல் காரணம் பற்றியது. தேரவாதம் மதத்தில் சீலத்தையும் போதனைகளையும் கட்டிறுக்கத்துக்கு வற்புறுத்திய அதே வேளையில், சாந்தியும் அஹிம்சையும் பிரதானப்படுத்தப்பட்ட பௌத்த கிளையாகிப் போனது. அது வெகுஜன செல்வாக்குப் பெறப்பெற சிங்கள இனத்தின் மீது ஒரு மந்தமே வந்து கவிந்துவிட்டது. அந்த மந்த குணத்தைப் போக்கி அவர்களைப் போர்க்குணமுள்ள ஒரு இனமாக மாற்றுகிற ஒரு எத்தனத்தின் விளைச்சல்தான் விஷ்ணு கதை. விஷ்ணு அவதாரி. ஒன்பது அவதாரங்களை எடுத்தவர். மீதி ஒரு அவதாரத்துக்காய்க் காத்திருப்பவர். அந்த ஒன்பது அவதாரங்களும் பெரும்பாலும் அரசியல் காரணம் பற்றியவையே. ராமாவதாரம், கிருஷ்ணாவதாரம், நரசிம்மாவதாரம், வராகவதாரம் யாவுமே மூலத்தில் ருத்திரம் நிறைந்தவை. மூர்க்கமும் குயுக்தித்தனமும் உடையவை. அரச ஸ்தாபகங்கள் அவற்றில் நிகழ்ந்துள்ளன. அதனால் தான் விஷ்ணு வணக்கம் பவுத்தத்தில் புகுத்தப்பட்டுள்ளது. வடக்கே வல்லிபுரத்தில் மகா கலைச் செழுமையுள்ள பிரம்மாண்டமான விஷ்ணு கோயில் இருந்ததை அகழ்வாராய்ச்சி கூறுகிறது…..”

+++++

குணாநந்தரின் வாதம் மெள்ள மெள்ள சிங்களப் பேரின வாதத்தின் திசையில் சென்று விடும்.

+++++

 

விஷ்ணு வழிபாடு இந்து சமயத்தில் வேதங்களிலிருந்து பெறப்பட்டது. வேதங்களில் இந்திரனே அதிகம் குறிப்பிடப்படுகின்றான். மழையின் அதிபதி என்கிற ஸ்தானம் உடையவனாதலால் இது இருக்கலாம். சுவர்க்கத்தின் அதிபதியாகவும் இந்திரன் பேசப்படுகின்றான். ரிக் வேதத்தில் விஷ்ணுவும் வருகிறார். ஆனால் இந்திரனைப் போன்ற பெரிய கடவுள் தகுதி அவருக்களிக்கப்படுவதில்லை. விஷ்ணுவின் பெயராக வேதத்தில் உபேந்திரன் என்ற பெயரும் வருகிறது. இதன் பொருள் இந்திரனின் துணை. பின்னர் இந்து சமயக் கடவுளர் கூட்டம் பல மாறுதல்களுக்குள்ளாகிறது. ஸ்ருதிகளுக்குப் பின்னர் வந்த ஸ்மிருதிகளில் விஷ்ணு மும்மூர்த்திகளுள் ஒருவர். இந்திரன் தன் ஆணவத்தின் காரணமாக அசுரர்களிடம் அடிமைப்பட நேரிடும்போதெல்லாம் அசுரர்களை அழித்து இந்திரனின் சங்கடத்தை தீர்ப்பது விஷ்ணு தான்.

ஐந்தாம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட இலங்கையின் நாளாகம நூலான மகாவம்சத்தில் உபுல்வன் என்ற பெயரில் ஒரு கடவுள் வருகிறார். மகாவம்சத்தின் ஆரம்பத்தில் கலிங்க இளவரசன் விஜயன் தன் நாட்டிலிருந்து விலகி இலங்கை வந்தடைகிறான். விஜயன் இலங்கை வந்தடைந்தவுடன் உபுல்வன் என்னும் கடவுள் அவனை ஆசீர்வதிக்கிறார். நான் இலங்கையின் காவல் தெய்வம் ; என் பெயர் உபுல்வன் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டு விஜயனுக்கும் அவனுடன் இலங்கை வந்தடைந்தோருக்கும் அவர்கள் கைகளில் பாதுகாப்பாக சரடுகளைக் கட்டிவிடுகிறார். குவெணி என்ற நாகர்களின் அரசியுடன் நடைபெறும் மோதலில் உபுல்வன் கட்டிய சரடு விஜயனையும் அவனது படைகளையும் காக்கிறது. இலக்கியச் சான்றுகளில் இந்த உபுல்வன் என்கிற கடவுள் ஏழாம் நூற்றாண்டுக் குறிப்புகளில் பின்னர் மீண்டும் வருகிறார். பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 13ம் நூற்றாண்டுக் குறிப்புகளில் ”உயர்ந்த கடவுள்” என்று உபுல்வன் குறிப்பிடப்படுகிறார்.

உபுல்வன் என்ற சொல் “உப்பலவண்ணா” என்கிற பாலி சொல்லில் இருந்து மருவியது. “அல்லி போன்ற நீல நிறமுடையவன்” என்பது அதன் பொருள்.

பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில், உபுல்வன் இந்து சமயக்கடவுள் விஷ்ணுவாக அடையாளம் காணப்பட்டார். இரு தெய்வங்களின் வடிவ ஒற்றுமை இதற்கு காரணமாய் இருக்கலாம். கண்டி சாம்ராஜ்யத்தின் போது நிலவிய இந்து சமயத் தாக்கமும் இதற்கொரு காரணமாய் இருந்திருக்கலாம். இந்த கால கட்டத்தில் புத்தரின் அருகே நிற்பது மாதிரியாக புத்தர் கோயில்களில் விஷ்ணு சித்தரிக்கப்படலானார்.

இலங்கையில் விஷ்ணு வழிபாடு மரபு பற்றி இன்றைய வரலாற்றாளர்களுக்கிடையே பல வித கருத்துகள் நிலவுகின்றன. உபுல்வனும் விஷ்ணுவும் ஒன்றல்ல என்று சில வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். சில ஆதாரங்களில் உபுல்வன் வைதீகக் கடவுள் வருணனாக சுட்டப்படுகிறார். அதனாலேயே உபுல்வன் இலங்கையின் பாதுகாவல் தெய்வமாக இருக்கிறார் என்கிற ஐதீகம் தோன்றியதாகக் கருத இடமிருக்கிறது.

மகாவம்சம் போன்று தீபவம்சம் என்னும் நூலிலும் உபுல்வன் பற்றி நிறைய குறிப்புகள் கிடைக்கின்றன. புத்தர் பரிநிர்வாணம் அடையும் முன்னரே விஜயன் என்னும் க்‌ஷத்திரியன் ஜம்புதீவிலிருந்து கிளம்பி இலங்கை வந்தடைவான் என்றும் அவன் இலங்கையை ஆள்வான் என்ற கணிப்பை வெளிப்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது. இலங்கையின் வெற்றிகரமான, பாதுகாப்பான நிறுவுதலைப் பற்றிய கரிசனத்துடன் புத்தர் சக்கரனை அழைத்து (வேதங்களில் வரும் இந்திரன்!) உடன் அதற்காவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறார். சக்கரன் உப்பலவண்ணனை அழைத்து இலங்கையைப் பாதுகாக்கும் பொறுப்பை அளிக்கிறான்.  சக்கரனின் ஆணையை ஏற்றுக்கொண்டு உப்பலவண்ணன் இலங்கை வந்தடைவதாக தீபவம்சம் சொல்கிறது. தீபவம்சம் சொல்லும் இதே தொன்மத்தகவலை மகாவம்சமும் வலியுறுத்துகிறது. பின்–வேத கால இந்தியத் தொன்மங்களில் காணப்படும் விஷ்ணு – இந்திரன் இருவருக்கிடையிலான நெருங்கிய நட்பு என்ற கருப்பொருளை பௌத்த தொன்மங்களிலும் ஒரு தொடர்ச்சியாக எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக இதைக் கொள்ளலாம்.

+++++

Upulvan Devale in Devinuruwa, Matara

Upulvan Devale in Devinuruwa, Matara

தேவிநுவாரா
இலங்கையின் தென்மூலையில் இருக்கும் நகரம் மாத்தரை. மாத்தரைக்கு தென்கிழக்கில் ஆறு கி மீ தொலைவில் தேவிநுவாரா இருக்கிறது. 13ம் நூற்றாண்டு வாக்கில் முக்கியமான துறைமுகமாக தேவிநுவாரா திகழ்ந்தது. தங்கமுலாம் பூசப்பட்ட தாமிரத்தகடுகள் மூடிய கூரை கொண்ட புகழ்பெற்ற கோவிலொன்றும் அங்கிருந்தது. இராமாயணத்தில் வரும் ராவணனின் காலத்தில் மலர்ச்சியுடன் விளங்கிய நகரம் இது என்றும் நம்பப்படுகிறது. “பாரவி சந்தேஷாயா” என்னும் பதினைந்தாம் நூற்றாண்டுக் கவிதைப் படைப்பு தேவினுவாராவில் இருக்கும் தெய்வத்தை அசுரர்களின் சம்ஹாரி என்று வர்ணிக்கிறது. இராமாயணத்துடனான இந்நகரத்தின் தொடர்பை குறிக்கும் முகமாக கவிஞர் இதைக் குறிப்பிட்டிருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பதிவு செய்யப்பட்டிருக்கும் வரலாற்றுத் தகவலின் படி முதலாம் தப்புல என்னும் அரசனால் இக்கோயில் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 1587இல் மாத்தரையைத் தாக்கிய போர்ச்சுகீசியப்படை கோயிலைத் தரைமட்டமாக்கி கொள்ளையடித்தது. ஆனால் இரண்டாம் ராஜசிங்கன் என்னும் கண்டி மன்னன் மாத்தரையை போர்ச்சுகீசியர்களிடமிருந்து மீட்டு தேவிநுவாராவில் விஷ்ணு தேவாலயத்தை மீண்டும் கட்டினான்.

Vallipuram Aazhvar Temple, Valli Puram

Vallipuram Aazhvar Temple, Valli Puram

வல்லிபுரம்
யாழ் குடா பிராந்தியத்தில் கிழக்கு வடமராச்சிப் பகுதியில் அமைந்துள்ளது வல்லிபுரம். அங்கு பவுத்தர்கள் இருந்ததற்கான தொல்லியல் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அங்கு ஒரு பிரம்மாண்டமான விஷ்ணு கோயில் இருந்திருக்கிறது என்றும் வரலாற்றாளர்கள் சொல்கின்றனர். இதை வைத்துக் கொண்டு இலங்கை முழுதும் சிங்களர்கள் தான் ஆதியில் வசித்தார்கள் என்ற தவறான பொருள்விளக்கம் கொடுத்துக் கொண்டு சிங்களப் பேரினவாதம் அரசியல் செய்தது வேறு கதை.

காஞ்சிபுரத்திலிருந்து மகாபலிபுரம் செல்லும் வழியில் இருக்கும் ஓர் ஊரின் பெயர் வல்லி புரம். திருக்கழுக்குன்றம் மற்றும் காஞ்சிபுரம் போல வல்லி புரமும் பல்லவர் காலத்தில் பௌத்தம் தழைத்த இடமாக இருந்திருக்கலாம். பல்லவர் காலத்தில் தமிழகத்துக்கும் இலங்கைக்குமிடையே நெருங்கிய வரலாற்றுத் தொடர்பு இருந்தது. வடமராச்சியில் இருந்த வல்லி புரத்திலும் பௌத்தம் தழைத்திருக்கலாம். பௌத்த மடாலயங்கள் நிரம்பியிருந்த நாகைப்பட்டினம் கரை வல்லி புரத்திலிருந்து அதிக தூரத்தில் இல்லை என்பதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும். வல்லி புரத்திலிருந்து ஆந்திரக் கரையை அடைதல் எளிது. வல்லி புரம் ஆழ்வார் கோயிலுக்கு அருகே அகழ்வாராய்ச்சியில் கிடைத்த ஆளுயர புத்தர் சிலையை சர் ஹென்றி ப்ளேக் என்கிற ஆங்கில அதிகாரி தாய்லாந்து நாட்டு மன்னருக்கு அன்பளிப்பாக 1906ல் அளித்தார். புத்தர் சிலை கிடைத்த விதம் காஞ்சி கோயில்களில் கிடைத்த புத்தர் சிலைகளையும் சின்னங்களையும் நினைவு படுத்துகிறது. அந்த சிலை பாங்காக்கில் உள்ள ஒரு கோயிலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வல்லிபுர புத்தர் சிலை ஆந்திராவின் புராதன அமராவதி நகரில் தழைத்த பௌத்த சிற்பக்கலை பாணியில் செதுக்கப்பட்டது என்பதில் வரலாற்றாசிரியர்களுக்கு நடுவே ஒருமித்த கருத்து உண்டு. ஆனால் வல்லிபுரத்தில் கிடைத்த தங்கத் தகட்டில் பொறித்த வரிகளை இலங்கை வரலாற்று வல்லுனர் பரணவிதன வேறு விதமாகப் பொருள் கொண்டமை  “யாழ்ப்பாணப் பிரதேசம் சிங்களவர்களின் கீழ்தான் இருந்தது” என்ற பேரினவாதிகளின் தியரியை வலுப்படுத்தியது. ஆனால் பரணவிதனவின் அனுமானங்களை பாகிஸ்தானிய வரலாற்று வல்லுனர் ஏ ஹெச் தானி மறுத்தார். தகட்டில் இருந்த எழுத்து வடிவங்களை வைத்து தகடு நான்காம் நூற்றாண்டுக்கு முன்னதானதாக இருக்க முடியாது என்று சொன்னார். பரணவிதன அந்தத் தகடு இரண்டாம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்டது என்று சொல்லியிருந்தார். வல்லிபுர தகட்டின் பிராகிருத எழுத்துப் பொறிப்பு திராவிடப் பாணியைப் பின்பற்றியதாகவே இருக்கிறது என்றும் ஏ ஹெச் தானி சொன்னார். வல்லி புரத் தகட்டில் பொறிக்கப்பட்டிருப்பது ஒன்றரை அடிகள் மட்டுமே கொண்ட சிறிய வாக்கியம் என்பதால் உறுதியான, தெளிவான முடிவுக்கு வருதல் மிகக் கடினம்.

கந்தரோடையின் (இது குடா நாட்டில் சுன்னாகத்துக்கருகே இருக்கும் ஊர் ; இங்கு நடந்த அகழ்வாய்வுகளில் புராதன பௌத்த சின்னங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன) பௌத்த சின்னங்களையும், வல்லி புரப் புத்தர் சிலையையும் ஒப்பு நோக்கும் போது ஆந்திர பௌத்தத்தின் தாக்கம் யாழ்ப்பாண பௌத்தத்தில் ஆழமாக இருந்திருக்கிறது என்ற முடிவுக்கு வர முடியும்.

குடா நாட்டில் இருந்த தமிழ்ப்  பௌத்தர்கள்  என்னவானார்கள்? தமிழ்நாட்டில் வல்லி புரம் மற்றும் காஞ்சியில் இருந்த பௌத்தர்கள் போன்று அவர்களும் பிற்காலத்தில் தம் அடையாளத்தை தொலைத்து விட்டு இந்து சமயத்தாராகியிருக்கலாம்.

Mataravalli

உதவிய கட்டுரைகள் :
Upulvan or Uppalavanna – the guardian deity of sri lanka – Professor Dhammavihari Thera www.sobhana.net/contact/english/dhammavihari/dv088.doc

நூல்கள் :

Buddhism among Tamils in Pre-Colonial Tamilakam and Ilam Part 1 – Edited by Peter Schalk – Uppsala University
கனவுச்சிறை – நாவல் – எழுத்தாளர் தேவகாந்தன் – காலச்சுவடு பதிப்பகம்