நகர்ந்த ஸ்தம்பங்கள்

வைசாலியில் உள்ள அசோக ஸ்தம்பம்
வைசாலியில் உள்ள அசோக ஸ்தம்பம்

அசோகர் என்ற ஒருவர் இருந்தாரா அல்லது வெறும் தொன்மக்கதைகளில் சித்தரிக்கப்படும் பாத்திரமா என்ற ஐயம் துவக்க கால பிரிட்டிஷ்-இந்திய வரலாற்றறிஞர்களிடையே இருந்து வந்தது. “அசோகாவதானம்” என்னும் இரண்டாம் நூற்றாண்டு சம்ஸ்கிருத நூலொன்றும்,  இலங்கையின் நாளாகமங்களான  – தீபவம்சம், மகாவம்சம் – இரண்டும் புராணக்கதையின் மிகைப்படுத்தல்களோடு அசோகரின் வாழ்க்கை சம்பவங்களை சித்தரிக்கின்றன. ஒரு நாடகீயமான பாத்திரம் போன்று கலிங்கப் பெரும் போரை நிகழ்த்தி பின்னர் போரை வெறுத்து பௌத்த நெறிமுறையின் படி தேசத்தை ஆண்டு வந்தவர் என்றவாறு மேற்சொன்ன பௌத்த இலக்கியங்களில் அசோகர் பற்றிய குறிப்புகள்  வந்தாலும் அசோகரின் ஆட்சி பற்றிய உறுதியான வரலாற்றுப் பதிவுகள் கிடைக்காமலேயே இருந்தன. அசோக சக்கரவர்த்தியைப் பற்றிய தொன்மச் செய்திகளே ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளாக உலவி வந்தன.

James Prinsep என்னும் ஆங்கிலேயர் தில்லியில் இருக்கும் ஒரு ஸ்தம்பத்தில் பொறிக்கப்பட்டிருந்த பிராமி வடிவ எழுத்துகளைப் புரிந்துகொண்டது ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. “தேவனாம்பிய” (தெய்வங்களுக்கு பிரியமானவன்) “பியதஸ்சி” (மக்களை அன்புடன் கருதுபவன்) போன்ற பட்டப்பெயர்கள் தில்லி ஸ்தம்பத்தில் மட்டுமில்லாமல் வேறு ஸ்தம்பங்களிலும் பொறிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

19ம் நூற்றாண்டில் துணைக்கண்டம்  முழுமையும் (இந்தியா, நேபால், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான்) அசோகரின் கல்வெட்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன. ஸ்தம்பங்களிலும், கற்பாறைகளிலும், குகைச்சுவர்களிலும் பொறிக்கப்பட்ட  அரசாணைகள், பிரகடனங்கள் எல்லாம்  அசோகரின் சீர்திருத்தங்களையும் கொள்கைகளையும் குடிமக்களுக்கு வழங்கிய அறிவுரைகளையும் நவீன உலகிற்கு பறை சாற்றின. நன்னெறிகளின் அடித்தளத்தில் ஒரு பேரரசை நிறுவிய ஆற்றல் மிகு பேரரசரின் நுண்ணறிவை இக்கல்வெட்டுகள் நமக்கு அறியத்தந்தன. இந்திய வரலாற்றின் மிகப் பழமையான, குறிப்பிடத்தக்க நீளமான, முழுதும் புரிந்து கொள்ளப் பட்ட கல்வெட்டுகள் அசோகர் காலத்தவை தாம்!

அசோகரின் கலைத்திட்டங்களுள் முதன்மையானவை மௌரியப் பேரரசு முழுமையும் அவர் நிறுவிய தூண் சாசனங்கள். 40 முதல் 50 அடி உயரத்தினதாய் வான் நோக்கிய தூண்கள். அவைகள் இரண்டு வித கற்களிலிருந்து சமைக்கப்பட்டவை – தூணின் நடுக்கம்பத்திற்கு ஒன்று ; தூண் சிகரத்திற்கு இன்னொன்று. நடுக்கம்பம் ஒற்றைக் கல்லிலிருந்து வெட்டப்பட்டதாக இருக்கும். மதுராவிலும் காசிக்கு முப்பது கிலோ மீட்டர் தெற்கில் இருக்கும் சுனார் பகுதியிலிருந்தும் இருந்த சுரங்கங்களில் வெட்டப்பட்டு தூண்கள் நிறுவப்பட்ட இடங்களுக்கு தள்ளிச் செல்லப்படும். ஒவ்வொரு தூணும் கிட்டத்தட்ட 50 டன் எடை கொண்டவை. இன்று 19 தூண்களே எஞ்சியிருக்கின்றன ; அவற்றிலும் பல உடைந்த துண்டுகளாகிவிட்டன.

பௌத்த சமயக் கொள்கைகளை அடிக்கோடிட்டுக் காட்டும் பொருட்டு நிறுவப்பட்ட தூண்களின் சிகரத்தில்  விலங்குகளின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பௌத்த சமயத்தின் பரவலான சின்னமாக இருக்கும் தாமரை மலரை தலைகீழாக்கி அதன் மேல் விலங்குகளின் சிலை அமைக்கப்பட்டிருக்கும் ; சிங்கம் அல்லது நின்ற நிலை அல்லது உட்கார்ந்த நிலையில் மாடு.

சில ஸ்தம்பங்களில் சமர்ப்பண கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் தேதிகள் குறிப்பிடப்பட்டு அசோகர்  புரவலர் என்ற தகவலும் அவற்றில் இருக்கும் பிராமி எழுத்தே கல்வெட்டுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் மேற்குப்பகுதியில் காணப்பட்ட கல்வெட்டுகளில் சமஸ்கிருதத்துக்கு தொடர்புடைய எழுத்து வடிவம் பயன்படுத்தப்பட்டுள்ளது. கிழக்குப் பகுதிகளில் உள்ள ஸ்தம்பங்களின் கல்வெட்டுகள் அசோகர் காலத்து மகதி மொழியில் செதுக்கப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் கண்டெடுக்கப்பட்ட ஸ்தம்பத்தில் அரமைக் மற்றும் கிரேக்க மொழிகளில் செதுக்கப்பட்டுள்ளது. தன் முடியரசின் பல்வேறு பண்பாட்டு, இனக்  குழுக்களைச்  சென்றடைய அசோகர்  விழைந்ததின் பிரதிபலிப்பாக இதைக் கொள்ளலாம். சில கல்வெட்டுகள் மதச் சார்பற்றவையாக இருக்கின்றன. கலிங்கப்  பேரழிவிற்கு அசோகர் மன்னிப்பு கேட்கிறார் ; மக்களின் நலமே தன்  குறிக்கோள் என்று உறுதி கூறுகிறார். சில கல்வெட்டுகள் அசோகர் மக்களுக்கு செய்த நன்மைகளை புகழ்ந்து கூறும் முகமாக செதுக்கப்பட்டுள்ளன.

அசோகர் ஸ்தம்பங்கள் பிற்காலத்தில் வந்த சில பேரரசர்களின் கவனத்தை கவர்ந்தன. புராதன கௌஷம்பி நகரத்தில் நிறுவப்பட்ட ஸ்தம்பம் இன்று அலஹாபாத்தில் திரிவேணி சங்கமத்துக்கு அருகில் முகலாயப் பேரரசர் அக்பர் கட்டிய கோட்டைக்குள் காணப்படுகிறது. கௌஷம்பியில் இருந்த தூணின் சிகரமாய் இருந்த விலங்குச் சிலை தூணின் அலஹாபாத்  நகர்வுக்கு முன்னர் அகற்றப்பட்டிருக்கலாம்.  அலகாபாத் ஸ்தம்பத்தில் பிராமி எழுத்தில் அசோகரின்  கல்வெட்டில்  கி மு 232ம் ஆண்டின் தேதியிடப்பட்டிருக்கிறது. அதே ஸ்தம்பத்தில் குப்தவம்சப் பேரரசர் சமுத்திரகுப்தர் கி பி 375 இல் குப்தர் கால பிராமி எழுத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டில் தான் பெற்ற வெற்றிகளைப் பற்றி பெருமிதத்துடன் பேசுகிறார். அதே ஸ்தம்பத்தில் பாரசீக மொழியில் முகலாயப் பேரரசர் ஜஹாங்கிரும் ஒரு கல்வெட்டை பதிந்திருக்கிறார்.

அலஹாபாதின் அசோகா ஸ்தம்பம் போல், தில்லியில் இருக்கும் இரண்டு அசோக ஸ்தம்பங்களும் முறையே மீரட் மற்றும் அம்பாலாவில் இருந்து இடம் பெயர்ந்தவை. 14ம் நூற்றாண்டில் தில்லியை ஆண்ட பெரோஸ் ஷா துக்ளக் என்கிற  சுல்தானால் நகர்த்தப்பட்டவை. இவ்விரண்டு ஸ்தம்பங்களிலும் சிகரம் இல்லை.

ஆப்கானிய நகரம் காண்டஹாரில் எழுப்பப்பட்ட ஸ்தம்பம் இன்று காபூலில் இருக்கும் தேசிய மியுசியத்தினுள் இருக்கிறது. இந்த ஸ்தம்பத்தில் தான் அரமைக், கிரேக்க மொழிக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன.

சாரனாத்தின் அசோக ஸ்தம்பத்தை அலங்கரித்த நான்கு சிங்கங்களின் சிகரம் அதிமுக்கியமானது. நம்  தேசியச் சின்னம் கூட. ஒற்றைத் தொகுதியான பளபளப்பூட்டப்பட்ட மணற் பாறையில் செதுக்கப்பட்டது. நான்கு ஆசிய சிங்கங்கள் பின்னுக்குப் பின்னாக நிற்பதை சித்தரிக்கிறது. ஒரு வட்டச்சட்டத்தின் மேல் பொருத்தப்பட்டிருக்கின்றன அந்த சிங்கச்சிலைகள். வட்டச்சட்டத்தைச்  சுற்றி செதுக்கப்பட்ட யானை, ஓடும் குதிரை, மாடு, சிங்கம் – இவற்றுக்கிடையிடையே 24 ஆரங்களையுடைய  சக்கரங்கள். எல்லாம் மணி வடிவ தலைகீழ்த் தாமரையின் மேல் வைக்கப்பட்டுள்ளன.

பௌத்த நெறியின் குறியீடாக சிங்கச் சின்னத்தை பார்க்க முடியும். பௌத்த மரபுகளில் சிங்கத்தை புத்தரின் குறியீடாக சித்தரிப்பது வழக்கம். நான்கு சிங்கங்கள் நான்கு  திசைகளில் நோக்குவது சம முக்கியத்துவம் கொண்ட நான்கு விஷயங்களைக் குறிப்பதாகக் கருதலாம். அவைகளை  நால்வகை வாய்மைகள் (Four Noble Truths ) என்றும் சொல்லலாம்  வட்டச்சட்டத்தில் காணப்படும் நான்கு விலங்குகளுக்கும் குறியீட்டர்த்தம் உண்டு. புத்தரின் தாய் புத்தரைக் கருவுற்ற போது அவர் வயிற்றுக்குள் யானை நுழைந்ததைப் போல கனவு கண்டாள் ; யானை புத்தரின் பிறப்பைக் குறிக்கிறது. புத்தரின் இளமைப்பருவத்தை மாடு குறிக்கிறது. மனைவியை விட்டு விலகி புத்தர் தேடலில் ஈடுபட்டதை குறிப்பது ஓடும் குதிரை. நிர்வாண நிலையை புத்தர் எய்தியதை குறிப்பது சிங்கம். புத்தர் போதித்த தர்மத்தை சக்கரம் குறிக்கிறது.

+++++

மார்ச் மாதத்தில் ஒரு நாள்  பின் மதியம்  சாரநாத் சிதிலங்களைக் காணச் சென்றேன் ;   உடைந்து கிடந்த அசோகா ஸ்தம்பத்தை மூடிய கண்ணாடி அறைக்குள் பூட்டி வைத்திருக்கிறார்கள். அசோகர் சிங்கங்கள் மெருகு குலையாத பளபளப்புடன் சாரநாத் மியுசியத்தினுள் இருக்கிறது. ஸ்தம்பத்தின் மேல் சிங்கச்சின்னத்தையும் அதன் மேல் ஒரு காலத்தில் இருந்த தர்ம சக்கரத்தையும் என் மனக்கண் முன்னால்  தோற்றுவித்தேன். சிதிலங்கள் மறைந்து அசோகர் ஸ்தம்பத்துக்கு பின்னிருந்த மூல கந்த குடி விகாரமும் வளாகத்தில் இருந்த மற்ற விகாரஙகளும் அவற்றுக்கெல்லாம் பின்னணியில் இருந்த தமேக் ஸ்துபமும் (இப்போது தரை மட்டமாகியிருக்கும்) தர்ம ராஜிக ஸ்தூபமும் என பல நூற்றாண்டுகளுக்கு முன்னதான காட்சிகள் உயிர் பெற்றன. இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு முன்னம் நினைவுக்காட்சிகள் நகர்ந்த போது விகாரைகள் ஸ்தம்பங்கள் ஏதுமில்லை. பசுமையான காட்டுக்கு நடுவே  மான்கள் துள்ளிக் குதித்தாடின. கால வரிசையில்லாமல் காட்சிகள் மாறிக் கொண்டேயிருந்தன. வேறொரு காட்சியில் துருக்கிய தளபதியொருவனின் படைகளால் வளாகத்தில் இருந்த சைத்யங்கள் இடித்துத் தள்ளப்பட்டன. புத்தர் சிலைகள் அருவங்களாக்கப்பட்டன. காலத்தின் இன்னோர் அசைவில் தமேக் ஸ்துபத்திலிருந்து உருவப்பட்ட செங்கற்களின் பொதி  கழுதைகளின் மேல் ஏற்றப்பட்டு காசி நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டன.  ஒருமுறை பொதியினுள் கிடைத்த புத்தரினுடைய தியானக் கூழாங்கல்லொன்று  குப்பையெனக்  கருதப்பட்டு நதிக்குள் எரியப்பட்டது. பின்னொரு காட்சியில் கன்னிங்ஹாம் பிரபு தமேக் ஸ்தூபத்தினுள் இறங்கி அதன் சுவர்களுக்குள் பொறிக்கப்பட்டிருந்த ‘யெ தம்ம ஹேதுப்ப பவ’ என்னும்  பாலி சுலோகத்தை வாசிக்க முயன்று கொண்டிருந்தார்.

சுற்றுலா பயணிகளுக்கான இருக்கையில் அமர்ந்து முத்தமிட்டுக் கொண்டிருந்த இளஞ்ஜோடியொன்றை  சீருடையிட்ட காவலாளி  ஒருவன் அங்கிருந்து விரட்டிக் கொண்டிருந்த சத்தம் நிகழ்காலத்துக்கு அழைத்து வந்தது.  மண் தரையில் பரவியிருந்த என்னை விட நான்கு மடங்கு நெடிய என் நிழலை நோக்கியவாறு  வெகு நேரம் அங்கே நின்றிருந்தேன்.