தனிமைப்பயணம்

இதே சாலையில்
முடிவிலி காலமாகப் பயணிக்கிறேன்
அகன்ற சாலையின்
இரு மருங்கிலும் வெறுமை
ஆளரவமில்லை
கண்ணுக்கெட்டிய தூரமெங்கும்
வறண்ட பூமி
நெடிய தனிமை சூழ
நேர்ப்பாதையிலேயே
செல்ல வேண்டும்
நெடுஞ்சாலையில்
அந்தச் சிறு திருப்பம்
எங்கு வரும்?
மரங்கள் மறைத்திருக்கும் அத்திருப்பத்தில் என்றோ நுழைந்த ஞாபகம்!
குறுகிய சந்து அது
மரங்களிலெல்லாம் பல விதப் பூக்கள்
சந்தெல்லாம் கனிகள் விழுந்து உருளும்
பறவைகள் சத்தமிடும்
திரும்பிய சந்து விரைவில்
நெடுஞ்சாலையில் வந்து முடிந்துவிடும்
திரும்பச் சந்துக்குள் திரும்பிச் சென்றுவிட
எடுத்த முயற்சிகள் வியர்த்தம்
முன்னோக்கி மட்டுமே செல்லும்
வாகனத்தை யார் வடிவமைத்ததோ!
கண் கூசும் வெயிலில்
வியர்வையில் நனைந்து
சென்றவாரிருக்கிறேன்
வியர்வைத்துளி கண்ணுக்குள் வீழ்ந்து
பார்வையை மறைக்கும் கணங்களில்
மரங்கள் மூடிய
ஆயிரமாயிரம் திருப்பங்கள்
இருமருங்கிலும் சென்றிருக்கலாம்!
வாகனத்தின் ஒலி மட்டுமே
துணை வர
நீண்டுகொண்டிருக்கும் சாலையில்
பசுமைத் திருப்பங்களின் தேடலில்
ஒரு தனிமைப்பயணம்

ஊர்பேர்

சராசரிக்கதிகமான நினைவாற்றல் எனக்குண்டு என்ற மிதப்பில் இத்தனை வருடங்களாக இருந்தவனுக்கு ஊர்களின் பெயர்களை மறந்து போகிறேன் என்பதை ஏற்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. ஒரு வாரம் முன் சென்ற ஊரை நினைவில் கொண்டு வர முயல்கிறேன். மனதின் காட்சியில் வீட்டிலிருந்து காரில் கிளம்பிய நேரம் ஞாபகமிருக்கிறது. தெருமுக்கில் இருந்த பிக் பஸார் கடையை கடந்து சென்றது, ஹூடா ஐங்ஷன் வந்தபோது நஜஃப்கர் வழியாகச் செல்லலாம் என்று ஓட்டுனர் சொல்கையில் லேசாக தலையாட்டியது – எல்லாம் மனக்காட்சியில் தெளிவாக வந்து விழுந்தன. நஜஃப்கர் தாண்டியதும் குறுகலான சந்தில் காய்கறிச் சந்தை நெரிசலில் சிக்கினோம். சற்று தூரத்தில் காரில் சிஎன்ஜி குறைவு என்பதால் அதை நிரப்புவதற்காக நின்ற போது யாரோ எனக்கு போன் செய்தார்கள். யார் போன் செய்தது? மனைவியோ குழந்தைகளோ நிச்சயமாக இல்லை. அலுவலகத்திலிருந்து வந்த அழைப்பு என்று எண்ணுகிறேன். ஞாயிற்றுக்கிழமை அல்லவா பயணமானோம்? அலுவலகத்திலிருந்தோ வாடிக்கையாளர்களிடமிருந்தோ அழைப்பு வந்திருக்க முடியாது. சிஎன்ஜி நிரப்பிய பின்தான் காய்கறிச் சந்தை நெரிசலில் சிக்கிக் கொண்டோமோ? ஊர் பேரை நினைவுபடுத்திக் கொள்ளச் சென்ற மனப்பயணம் வேறு சிலவற்றையும் நான் மறந்து போகிறேன் என்பதை புலப்படுத்தியது.

எந்த ஊரை நோக்கிப் பயணம் என்பது மூலவினா. அதற்கு விடையளிக்கும் வழியில் நிறைய துணைவினாக்கள். யார் போன் செய்தார்கள்? எனக்கு ஓட்டுனர் பெயரும் ஞாபகமில்லை. காய்கறிச் சந்தை நெரிசல் முதலில் வந்ததா? சிஎன்ஜிக்காக நின்றது முதலில் வந்ததா? தெளிவு என்பது கூரான ஞாபக சக்திதான். இல்லை..அப்படியும் சொல்லிவிட முடியாது. தெளிவு என்பது தெளிவான மன நிலை. நினைவுத் துல்லியம் தெளிவின் முக்கிய அங்கம் என்று சொல்லிக் கொள்ளலாம். 

சிஎன்ஜி ஸ்டேஷனுக்கப்பால் என் மனப்பயணம் நின்றுபோனது. எதையாவது பற்றி நிற்காவிடில் கீழே விழுந்துவிடுவோமில்லையா?  பிடி தளர்ந்து தடுமாறுகையில் ஏதாவது ஒரு நினைவைப் பிடித்துக் கொண்டால் நம் இருப்பு உறுதியாகும்.

குர்கான் வரைபடத்தை விரித்தேன். பக்கத்தில் என்னென்ன ஊர்கள் இருக்கின்றன?  நஜஃப்கரை நோக்கி விரலை நகர்த்தினேன். அதைச் சுற்றி பல ஊர்கள், கிராமங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. ரோகிணி, பகதூர்கர், பவானா……வெறும் பெயர்கள்…..எல்லாம் பெயர்கள்…தலையை அசைத்தேன். பெயர்கள் வைக்காவிடில் ஊர்களுக்கென தனித்த அடையாளம் ஏதேனும் இருக்குமா? வீடுகளும், வயல்களும், குளங்களும், மேடுகளும் பள்ளங்களும் – அவற்றின் எண்ணிக்கைகளும், வடிவங்களும், அமைப்புகளும் மாறுந்தன்மையை வைத்து…குழப்பமாய் இருக்கிறது…என் உடல் எங்கே? நான் இருக்கிறேனா…எனக்கு நினைவிருக்கிறது..எனவே நான் இருக்கிறேன்…எதையோ உதறுவது போல் சைகை செய்தேன்…

“உடம்பை அசைக்காதீங்க” – எனக்கு யாரோ ஊசி போட்டுக் கொண்டிருந்தார்கள். முக கவசம் அணிந்திருந்தனர். 

சற்றுத் தள்ளி ஒரு பெண் சதுர கண்ணாடி பதித்த கதவினுடே நோக்குகிறாள். ஒரு வித பயத்துடன் நின்றிருந்தாள். கண்ணில் நீர் படிந்திருந்தது. மனக்காட்சி மாறிவிட்டதா? ஊர் பெயர் மறந்ததை நான் இன்னும் மறக்கவில்லை. புதுக்காட்சியிலும் பழைய காட்சியைத் தொடர விழைந்தேன். 

என் தலையை யாரோ நேராகப் பிடித்துக் கொண்டனர். கதவு பக்கம் என் முகத்தை திருப்ப முடியவில்லை. வெண்ணிற திரையை….சுவரை வெறித்து மேல் நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்த போதும் “என்ன பெயர் என்ன பெயர்” என்று மனதில் அசை போட்டபடியிருந்தேன். என் கால்களை யாரோ தூக்கினார்கள். எதையோ யாரோ தூக்குவது மாதிரி எடையற்று உணர்ந்தேன். 

“நான் எந்த ஊருக்குப் போனேன். ” – என்று உரக்கக் கேட்டேன். உதடு மட்டும் அசைந்ததா எனத் தெரியவில்லை. நான் சொன்னது யார்க்கும் கேட்கவில்லை. யாரும் கேட்க பிரயாசப்பட்டதாகவும் தெரியவில்லை. என்னைச் சுற்றிலும் ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். கதவினூடே நின்றிருப்பவள் இன்னும் அழுது கொண்டிருப்பாளா? அவள் அழுகை நின்றதாவெனத் தெரியவில்லை. அழுகை வந்தது. கண்ணீர் சிந்தினேனா என்று சந்தேகமாய் இருக்கிறது. நான் அழுகிறேன் என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வது தான் பிரக்ஞையின் அடையாளமா? வேறொரு காட்சிக்குள் என்னை யாரோ தள்ளிவிட்டார்கள்….காட்சிகள் ஏதுமில்லை. இருட்டு அறைக்குள் நுழைந்துவிட்டேன். எங்கிருக்கிறேன். இது வேறோரு காட்சியா? அல்லது வேறொரு எண்ணமா? வடிவங்களும் சிந்தனைகளும் பிணைந்து என்னை நெருக்குவது போல் இருந்தது. காட்சிகள் இல்லாத புதுக்காட்சியா? இல்லை…நானே என்னை இந்த இருட்டுக்குள் என்னைத் தள்ளிக்கொண்டேனோ?

பித்ரு கடன் செய்யும் போது ஓதும் மந்திரங்கள் எங்கிருந்தோ ஒலித்தன. என் பெயர், என் தந்தையார் பெயர், தந்தையாரின் தந்தையார் பெயர் – இவற்றைச் சொல்லி வசு, ருத்ர, ஆதித்யர்களாக உருவகிக்கும் மந்திரங்களின் உச்சரிப்பு…பெயர்கள்…பெயர்கள்…பெயர்கள்.

நன்றி : சொல்வனம் (https://solvanam.com/2023/03/26/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/amp/)

கண்ணாடிக்குள் ஒரு புத்தகம்

Hazrat Bal, Sri Nagar, Kashmir (from Dal Lake Side)

பேக்கேஜ் டூரில் திட்டமிட்டிருந்த அனைத்து இடங்களையும் பார்த்தாயிற்று. சஷ்மேஷாய் தோட்டமும் பரிமஹலும் பார்க்க முடியவில்லை. கவர்னர் வந்ததனால் பாதுகாப்பு கருதி பொதுமக்களுக்கு இவ்விரு ஸ்தலங்களிலும் அன்று அனுமதி இல்லை. எங்களுடன் ஒட்டுனராக வந்திருந்த குல்ஸார் அன்று களைத்திருந்தார். ஷாலிமார் பாக்-குக்கு வெளியே நினைவுப் பொருட்களை வாங்கிக்கொண்டு டாக்ஸி நின்றிருந்த இடத்துக்குத் திரும்பியபோது குல்சாருடன் நின்று கொண்டிருந்த பிட்டு aka ஹஷீமைச் சந்தித்தேன். தன்னை தில்லிக்காரன் என்று சொல்லிக் கொண்டார். கிழக்கு தில்லியிலுள்ள ஷாட்ரா பகுதியில் அவர் வீடு இருக்கிறதாம். பொதுவாக ஶ்ரீநகரில் வெளி மாநிலத்துக் காரர்கள் எவரையும் டாக்ஸி ஓட்ட விட மாட்டார்கள். அவர் எப்படி ஶ்ரீநகரில் டாக்ஸி ஓட்டுகிறார் என்று எனக்குப் புரியவில்லை. குல்ஸார் எங்களை ஓட்டல் வாசலில் விட்டுச் சென்றவுடன் அருகிருந்த டீக்கடையில் காஷ்மீரப் பானம் காவா அருந்திக் கொண்டிருந்தோம். ஹஷீமுக்கு நாங்கள் தங்கியிருந்த ஓட்டல் எப்படித் தெரிந்தது எனத் தெரியவில்லை. டீக்கடையை விட்டு நாங்கள் வெளியே வந்தபோது எங்களைப் பார்த்து கையாட்டினார். பேக்கேஜ் டூரில் இடம்பெற்றிராத ஹஸ்ரத் பால் தர்கா ஷரீஃபுக்கு ஹஷீமுடன் போகலாமென உடனடியாக முடிவெடுத்தேன்.

ஹஸ்ரத் பால் சென்றடைந்தபோது இரவுப் பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. என்னை உள்ளே அனுமதிப்பார்களா என்று சந்தேகமாக இருந்தது. தலைமுடியை மறைக்கும் படி குல்லா அணிய வேண்டும் என்ற பிரக்ஞை இல்லாமல் உள்ளே நுழைந்துவிட்டேன். ஹஷீம் தன் குல்லாவை எடுத்து வந்திருந்தார். பிராரத்தனைக் கூடத்துக்கு முன்னதாக காவலர்கள் நின்றிருந்தனர். தயக்கத்துடன் நடந்து வந்து கொண்டிருந்த என்னைப் பார்த்து ஒரு காவலர் என் பெயர் என்ன என்று கேட்டார். என்ன பெயர் சொல்வது என்று சில கணம் தயங்கினேன். பின்னர் அசல் பெயரைச் சொன்னேன். அவர் ஏற்கனவே நான் இந்து என்று ஊகித்திருக்க வேண்டும். “இரவுப் பிரார்த்தனை முடிந்த பின் நீங்கள் உள்ளே செல்லலாம்” என்றார் போலீஸ்காரர். தர்காவின் பின் புறம் இருந்த டால் ஏரிக்கருகே நின்று காத்துக் கொண்டிருந்தோம். தொழுகை அரை மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. மைக்கில் ஒலித்த தொழுகையில் கவனத்தை குவித்து ஏரியின் மேல் பார்வையை பதித்திருந்தேன்.

பிரார்த்தனை முடிந்தது. நாங்கள் பிரதான வாயில் வழியாக முதல் பிரார்த்தனை பகுதிக்குச் சென்றோம். அந்தப் பகுதியில் சிலர் இன்னமும் அமர்ந்து தொழுகை செய்து கொண்டிருந்தனர். கையை எப்படி வைத்துக்கொள்வது? அவ்வப்போது கோயிலில் கையைக் கூப்புவது போல் வைத்துக் கொண்டேன். இது தர்காவல்லவா? கை கூப்புதல் சரியாக இருக்காது. கையைக் கட்டிக் கொண்டேன். நான் இயல்பாக இல்லை என்று எனக்கே தெரிந்தது. தொழுகையில் இருந்த சிலரைத் தாண்டி கண்ணாடிக்குள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான டயரி போன்ற ஒன்றை எனக்கு ஹஷீம் காண்பித்தார். கறுப்பு மையில் மணிமணியாக அரபி மொழியில் குர்ஆன் மூலமும் ஒவ்வொரு அடிக்கு கீழே சிவப்பு மையில் பர்சியனில் அந்த அடியின் அர்த்தமும் எழுதப்பட்டிருந்தன. பர்சியனை உர்து என்று சொன்னார் ஹஷீம். தொழுகையாளர்களுக்கு எங்களின் பேச்சு இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காக ஹஷீமுடன் அதிகம் பேசவில்லை. “இந்த குர்ஆனை போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார் ஹஷீம். அதைக் கண்டு கொள்ளாமல் நான் மூலப்பிரார்த்தனை அறைக்குள் சென்றேன். தொழுகை முடிந்து மக்கள் எழுந்தனர். குர்ஆன் ஓதிய அந்த இளவயது மௌல்வியிடம் சென்று ஒவ்வொருவராய் கைகுலுக்கி விடை பெற்றனர். மௌல்வி அங்கிருந்து கிளம்பும் முன்னர் என்னைப் பார்த்தார். பின் என்னருகே வந்து கை கொடுத்தார். “சப் கைரியத்?” என்று வினவினார். நான் தெற்கிலிருந்து வருவதாகச் சொன்னேன். அது ஒரு சம்பிரதாயமான பேச்சு. நான் தெற்கா, மேற்கா, வடக்கா என்று என் belongingness குறித்த குழப்பம் எனக்கு அடிக்கடி ஏற்படுவதுண்டு! மௌல்வி “குதா ஹாஃபீஸ்” எனச் சொல்லி இன்னுமொரு முறை கைகுலுக்கி விடை பெற்றார்.

பின்னர் ஒரு முதியவர் என்னை அணுகி என் பெயரைக் கேட்டார். ஹஸ்ரத் பால் ஷரீஃப் பற்றிய தகவல்களை எனக்குச் சொல்லலானார். நபிகள் நாயகத்தின் ரெலிக் எந்தெந்த நாட்களில் பொதுமக்களுக்கு காண்பிக்கப்படும் என்று விவரமளித்தார். நான் சற்றும் எதிர்பாராத வகையில் ரெலிக் இருக்கும் அறைக்கு என்னை அழைத்துச் சென்றார். மூடியிருந்த அறையின் பூட்டுகளில் என் தலையை லேசாக இடித்த மாதிரி வைத்துக் கொண்டு பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு பணித்தார். அவர் சொன்னது மாதிரி செய்து இரு நிமிடங்கள் கண்ணை மூடி பிரார்த்தனை செய்தேன். அந்த இரு நிமிடங்களில் சில கணங்களுக்கு தவறுதலாக என் கரங்களை கூப்பினேன். என் தலையில் கையை வைத்து வாழ்த்தினார் அம்முதியவர்.

ஓட்டலுக்குத் திரும்பும் வழியில் ஹஷீம் கேட்டார் – “கண்ணாடிக்குள் வைத்திருந்த அந்த கையெழுத்து குர்ஆன் பிரதியை ஏன் போட்டோ எடுக்கவில்லை? உங்களுக்கு வரலாற்று விஷயங்களில் மிகுந்த ஆர்வம் இருக்கும் என நினைத்தேன்.”

“அஃப்கோர்ஸ்…அந்தப் புத்தகத்தில் என்ன விசேஷம்?”

“முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் தன் கையால் எழுதிய குர்ஆன் அது என்று சொன்னேனே”

“எப்போதய்யா சொன்னீர்?”

“நான் சொல்லிக் கொண்டிருந்தேன். நீங்கள் கை கூப்பி நின்றிருந்தீர்களே”

“!?()/-@&₹@“

ஆப்பிள் தோட்டம்

பீம்தாலிலிருந்து நைனிடால் நகருக்குள் நுழையாமல் பவாலி என்னும் ஊர் வழியாக ராணிகேத்-தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தோம். ஒரு கோயிலுக்கருகே ஓட்டுநர் வண்டியை நிறுத்துகிறார். இந்தியில் ஏதோ ஒரு பெயரை சொல்கிறார். அவர் என்ன பெயரைச் சொன்னார் என்பதை சிரத்தையுடன் கவனிக்கவில்லை. ஓட்டுநர் வண்டியை நிறுத்தியது பிடிக்கவில்லை. சீக்கிரமே ராணிகேத் சென்றடைய வேண்டும் என்றிருந்தது எனக்கு. அங்கு ஒரு ரிஸார்ட்டில் ஒரு suite புக் செய்திருந்தேன். “எனக்கு தேநீர் குடிக்க வேண்டும்” என்றார் ஓட்டுநர். வேண்டா வெறுப்பாக காரிலிருந்து இறங்கினேன். மனைவியும் என் இளைய மகளும் கூட இறங்கினார்கள். பெரியவள் தூங்கிக் கொண்டிருந்தாள்.

அது ஒரு ஆசிரமம். துர்கா தேவி சந்நிதியும், அனுமார் சந்நிதியும் இருந்தன. சுற்றுலாப் பயணிகள் நிரம்பி வழிந்தனர். கோயிலின் பின்புறம் ஒரு சுவாமிஜியின் சிலை இருந்தது. சுவாமிஜிக்களுக்கு நான் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எனக்கு அதிகம் ரசிக்கவில்லை. ஆனால் ஒன்று கவனித்தேன். கோயில் செல்வச் செழிப்புடன் இருந்தது. புத்தம்புதுக் கோயிலைப் போல் இருந்தது. கோயிலை விட்டு வெளியேறுவதற்கு முன் சுண்டல் பிரசாதத்தை பெற்றுக் கொண்டோம்.

கோயிலையொட்டி சிற்றோடை இருந்தது. அதை அசுத்தப்படுத்த வேண்டாம் என்ற அறிவுறுத்தலில் அது நதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மழைக்காலத்தில் அது நதியாக உருமாறலாம். நதியில் அதிக நீர் மட்டம் இல்லை. பூச்சிகளைப் போல் சின்னஞ்சிறு மீன்கள் கூட்டமாய் நீந்திக் கொண்டிருந்தன. ஒரு சிறுவன் பிஸ்கட்டுத் துண்டின் பொடியை நீரில் வீசினான் ; நூற்றுக்கணக்கான மீன்கள் அப்பொடியைக் கவ்விக்கொள்ளும் போட்டியில் அழகாக ஒரு புள்ளியில் குவியும் காட்சி மிக ரம்மியமாய் இருந்தது. ஒரு கணந்தான். மீண்டும் மீன்கள் தத்தம் திசைகளில் பிரிந்து சென்றன.

நாங்கள் கோயிலுக்கு வெளியே வந்தோம். ஓட்டுனர் வண்டியைக் கிளப்பிய போது கோயிலின் பெயர் என்ன என்று கேட்டேன். kainchi dham என்றார். Kainchi என்றால் கத்திரிக்கோல் என்று அர்த்தம் ; dham என்றால் தலம்.

+++++

கைடுகளுடனான உரையாடல் பல விஷயங்களை அறியத் தூண்டியிருக்கின்றன. கைடுகள் மிஸ்-கைடு செயவது வாடிக்கையான விஷயம் என்றாலும் கைடுகள் அவசியம். வரலாற்றுச் சின்னங்களுக்கான நுழைவுச்சீட்டுகளை வாங்கும் செயல் முறை எளிமையாகுதல் கைடுகளினால் மட்டுமே சாத்தியம். அவர்கள் தரும் வரலாற்றுத்தகவல்கள் நம்மை உண்மைத்தகவல்களை நோக்கிய உந்துதலை ஏற்படுத்தும். சில வருடம் முன்னர் ஓர் ஆங்கிலேய நண்பருக்குத் துணையாக ஆக்ரா சென்றேன். நடுவில் ஒரு கைடை எங்கள் காரில் ஏற்றிக் கொண்டோம். அவர் பெயர் அன்வர். டிப்டப்பாக கருப்பு கோட், கருப்பு கண்ணாடி அணிந்து சினிமா ஸ்டார் போல தோற்றமளித்தார். வி ஐ பி கைடு என்ற அடையாள அட்டையை காண்பித்தார். நானும் நண்பன் அட்ரியனும் பெருமிதப்பட்டோம். அன்றைய ஒரு நாளைக்கு நாங்களிருவரும் அன்வரின் தயவில் வி ஐ பிக்கள் ஆனோம். வழக்கம் போல தாஜ்மகால் நுழைவுச்சீட்டை நீண்ட வரிசையில் நிற்காமலேயே வாங்கினோம். தாஜ்மகாலுக்குள் பல்வேறு விளக்கங்களை கொடுத்துக் கொண்டே ஒரு தகவலை எங்களிடம் சொன்னார் அன்வர். இஸ்தான்புல்லின் நீல மசூதியை கட்டிய ஆர்கிடெக்ட்தான் தாஜ்மகாலையும் கட்டினார். அந்த தகவல் எனக்கு பயங்கர ஆச்சரியத்தை தந்தது. அட்ரியன் இஸ்தான்புல் நீல மசூதியை பார்த்திருக்கிறான். நான் திரைப்படங்களில் நீல மசூதியை பார்த்திருக்கிறேன். கடைசியாக நான் பார்த்தது ஏக் தா டைகர் இந்திப்படத்தில். சல்மான் கானும் கட்ரினா கைஃபும் நீல மசூதியின் பின்னணியில் ரொமான்ஸ் செய்து கொண்டிருப்பார்கள். நீல மசூதிக்கும் தாஜ்மகாலுக்கும் ஒரு தொடர்பும் இல்லையென்பதை உரிய தரவுகள் வாயிலாக மறுத்துக் கூறும் அறிவு அன்வரின் உதவியால்தான் கிட்டியது. நீல மசூதி கட்டி முடிக்கப்பட்டு கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு பிறகே தாஜ்மகால் கட்டும் பணி துவங்கியது. தாஜ்மகால் முழுமையாக கட்டி முடிக்கப்பட 21 வருடங்களானது. அன்வரை சந்தித்திருக்காவிட்டால் தாஜ்மகாலின் ஆர்க்கிடெக்ட் உஸ்தாத் அகமது லஹோரி என்பது எனக்கு தெரிய வாய்ப்பே இல்லை. அன்வர் கொடுத்த தகவல் ஏற்படுத்திய ஆச்சரியவுணர்ச்சி தாளாமல் அந்த தகவலை சரி பார்க்கும் உந்துதல் மேலிட நான் திரட்டிய மேலதிக தகவல்கள் முகலாய பேரரசு பற்றி நானறிய உதவியது. பொய்மையும் வாய்மையிடத்து என்பது இது தான் போல! அன்வருக்கு என் நன்றிகள்!

blue mosque

ராணிகேத் வந்தடைந்த அடுத்த நாள் குமாவோன் மலைச்சாலைகளில் நாற்பத்தியைந்து கிலோ மீட்டர் பயணம் செய்து துனகிரி வைஷ்ணோ தேவி கோயில் போய்ச் சேர்ந்தோம். அங்கிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது குகுசினா என்னும் இடம். இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர்கள் ட்ரெக்கிங் செய்து பாபாஜி குகையை அடைய வேண்டும். அது தான் எங்கள் இலக்கு. துனகிரி அம்மன் கோயிலின் சாலையோரத் திருப்பத்தில் நபினை சந்தித்தோம். நபு என்பது அவன் செல்லப்பெயர். நாற்பது வயதிருக்கும் அவனுக்கு. சராசரி குமாவோன் வாசிகளின் அச்சுஅசல் நபு. அவன் நெற்றியில் பொட்டு. செவ்வாய்க்கிழமையாதலால் வைஷ்ணோ தேவி கோவிலில் நல்ல கூட்டம்! வாடகை ஜீப்புகள் எல்லாம் பிஸி. குகுசினா வரை எங்கள் காரிலேயே போவது என முடிவு செய்தோம். முன்னிருக்கையில் நபு. பின்னிருக்கைகளில் எங்கள் குடும்பம்.

Kainchi Dham – சுவாமிஜியைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாதவன் காடு தாண்டி மலை தாண்டி பாபாஜி குகைக்கு குடும்பத்துடன் வருகை தருவதன் பின் என்ன அர்த்தம்? இது முரணாகாதா? தயவு செய்து குழம்ப வேண்டாம். இது ஒரு காதல்! பல வருடம் முன்னர் – எந்த வருடம் என்று ஞாபகமில்லை – படித்த புத்தகத்தின் 34ம் அத்தியாயம் என்னுள் ஏற்படுத்திய ரசாயன மாற்றம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இல்லையேல் இது ஒரு சாரமில்லாத வெற்று ஆர்வமாகக்கூட இருக்கலாம். என்னை இதயபூர்வமாக அழைத்தால் நான் அங்கு தோன்றுவேன் என்று தன் பிரியப்பட்ட சீடனுக்கு உறுதி தந்த அந்த மரணமிலா குரு மகாவதார் என்ற அடைமொழியால் பக்தர்களால் போற்றப்படுகிறார். பாபாஜி பற்றிய வரலாற்று பூர்வ தகவல்கள் மிகச் சொற்பம். எனினும் Para Gliding, Apple Garden, Highest Golf Course முதலான ராணிகேத்தின் ஈர்ப்புகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு புதல்விகளின் விருப்பமின்மையையும் புறக்கணித்துவிட்டு அவர்களையும் அழைத்துக்கொண்டு அதிகம் பேர் போகாத ஒரு குகைக்கு நான் போவதை பகுத்தறிவு கொண்டு எப்படி விளக்குவது? என் வாழ்க்கை என் விருப்பம் என்று சொல்வது எளிதாயிருக்கும்.

ஒரு புத்தகம் விவரிக்கும் சம்பவம் இத்தனை ஆர்வத்தையா ஏற்படுத்தும்? பொன்னியின் செல்வன் விவரிக்கும் அனுராதபுரம் நகரப்பகுதி வர்ணனைகள் படிக்கப் பிடித்தன. சிவகாமியின் சபதத்தில் வரும் வாதாபி நகர வர்ணனைகளுந்தான்! புத்தக வர்ணனைகளுக்காக மட்டும் அனுராதபுரத்துக்கோ வாதாபிக்கோ (இந்நாளைய பதாமி) டிக்கெட் வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதில்லை. இந்த குகைக்கு வர வேண்டும் என்ற விழைவுக்கும் காரணகாரியமான ஒரு விடை இருக்குமென்று எனக்கு தோன்றவில்லை.

பழைய காதலியை மறக்க முடியாமல் அவளின் பழைய விலாசத்துக்கு கடிதம் எழுதுதலை உணர்ச்சி பூர்வ விஷயம் என்றில்லாமல் வேறு எப்படி புரிந்து கொள்வது? பழைய காதலி எங்கிருக்கிறாள் என்று தெரியவில்லை. அவளிடம் தொடர்பு கொள்ளவேண்டும் என்ற தவிப்பேற்படும்போது அவள் இருந்த விலாசம் என்று நாம் கேள்விப்பட்ட இடத்துக்கு கடிதம் அனுப்புகிறோம். அது போலவே இது!

autobiography_yogi_book

பாபாஜி குகை ட்ரெக்கிங் கஷ்டமாக இருந்தது. ஃபிட்னெஸ் கொஞ்சம் கூட இல்லாமல் தஸ்புஸ்ஸென்று மூச்சு விட்டுக் கொண்டே ஏறினேன். என் குடும்பத்தினர் வேகமாக ஏறி எனக்கு முன்னால் சென்றுவிட்டனர். காவி ஜிப்பா போட்டுக் கொண்டு ஓர் இளைஞர் இறங்கி வந்து கொண்டிருந்தார். அவரிடம் இன்னும் எவ்வளவு தூரம் என்று கேட்டேன். பதினைந்து நிமிடங்கள் என்றார். எங்கிருந்து வருகிறீர்கள் என்று நான் அவரிடம் கேட்டதற்கு சிட்னி என்றார். ஏன் வந்தீர்கள் என்று கேட்டேன். ஒரு புத்தகத்தின் 34ம் அத்தியாயம் என்று முன்னர் குறிப்பிட்டிருந்தேனே அந்த புத்தகத்தின் பெயரைச் சொன்னார்.

பாபாஜி குகைக்கு சற்று முன்னர் ஒரு மண்டபம் கட்டியிருந்தார்கள். மகாவதார் பாபாஜி லாஹிரி மஹாஷயருக்காக தோற்றுவித்த மந்திர மாளிகையைக் குறிப்பதான இடத்தில் கட்டிய மண்டபம் இது என்பது நபுவின் தகவல்.

பாபாஜி குகையில் சற்று நேரம் அமைதியாக கண்களை மூடியவாறு அமர்ந்திருந்தோம். மூச்சு வாங்குதல் நின்றது. நபு குகையைப் பற்றி பேசலானான். அவன் சிறுவயதினனாக இருந்த போது பாபாஜி குகை திறந்திருந்ததாகவும் அதற்குள் இறங்கி உள்ளே சென்றால் இருட்போர்வையில் இனிய சுகந்தங்களின் வாசனை மூக்கை துளைக்குமாம். ஆனந்த உணர்வு மேலிடுமாம். குகைக்குள் டார்ச் லைட்டுகள் வேலை செய்யாதாம். அமெரிக்கர் ஒருவர் ஆர்வமிகுதியில் ஆய்வு செய்கிறேன் என்று குகைக்குள் புகுந்து வெகுநேரமாக வெளியே வராமல் யோகதா ஆசிரமக்காரர்கள் அவரை குகையிலிருந்து வெளிக்கொணர்ந்த போது சித்தம் கலங்கிய நிலையில் இருந்ததாகவும் இதன் காரணமாக குகை வாசல் அடைக்கப்பட்டது எனவும் நபு சொன்னான். நபு சொன்னது விறுவிறுப்பைக் கூட்டிற்று எனினும் அது எத்தனை உண்மையாக இருக்கும் என்ற ஐயம் எழாமலில்லை. உத்தராகண்ட் மாநிலத்தில் பல சுற்றுலா தலங்களில் பார்த்திருக்கிறேன். கைடுகள் இது போன்ற மந்திரம் மாய விஷயங்களை அதிகம் கலந்து பேசுவார்கள். மாநில சுற்றுலா துறையின் வரவேற்பு வளைவுகளும் போர்டுகளும் “தேவ்பூமி” என்னும் உரிச்சொல்லுடன் உத்தராகண்டை விவரித்துக் கொள்வது போலத்தான் இது!

நாங்கள் குகையிலிருந்து இறங்கத் தொடங்குகையில் வெளிநாட்டு ஜோடி ஒன்று குகையை நோக்கி ஏறி வந்தார்கள். அவர்களிடம் பேச்சு கொடுத்தோம். இத்தாலியின் மிலானோ நகரத்திலிருந்து வந்திருக்கிறார்கள். அவர்களும் அந்த புத்தகத்தின் பெயரைச் சொன்னார்கள்.

நபுவுக்கும் அந்த புத்தகத்தின் ஆசிரியருக்கும் இடையில் என்ன வித்தியாசம்? எழுத்தாற்றல் என்பதைத் தவிர வேறென்ன? எழுதப்பட்ட சொற்கள் சக்தி படைத்தவையாக ஆகின்றன என்பதற்கு ஒரு ஆதாரம் என்றால் இந்த புத்தகத்தைச் சொல்லலாம் என்பது என் கருத்து. மனிதசக்தி உடல்-மனம் என்னும் இருமையின் எல்லைகளை தகர்த்துவிடக் கூடியது என்பதன் சிறு துளி சொற்களின் துணை கொண்டு நமக்கு விவரிக்கப்பட்டிருக்கும்.

நபு என்னுடனும் என் மனைவியுடனும் பேசிக் கொண்டே வந்தான். அவனுடைய குடும்ப வாழ்க்கை, அவனுடைய மனைவியின் மறைவுக்குப் பிறகு மறுமணம் செத்துக்கொள்ளாதிருந்தது, சுவாமி சத்யேஸ்வரானந்தா-வுடனான அவனுடைய தொடர்பு (அவனுக்கு நபின் என்று பெயரிட்டது அவர்தானாம் – குமோவோன்காரனுக்கு வங்காள மொழிப்பெயர் வந்ததன் ரகசியம் இவ்வாறு துலங்கியது), குக்குசினாவில் இருக்கும் ஒரே ஓட்டலின் சொந்தக்காரர் ஜோஷியுடன் அவனுடைய மனஸ்தாபம் என்று பல தகவல்களைப் பகிர்ந்தான். நடிகர் ரஜினிகாந்த் பாபாஜியிடமிருந்து பெற்ற மூன்று மந்திரங்கள், அசைவ உணவு சாப்பிடும் போது அவற்றை ரஜினிகாந்த் சொல்லாமல் இருக்க வேண்டும் என்று பாபாஜி அறிவுறுத்தியது என்று அவன் ஒன்றன்பின் ஒன்றாக தகவல்களை பகிரும் போது நானும் பாபா திரைப்படம் பார்த்திருக்கிறேன் என்று சொல்லலாமா என யோசித்தேன். ஆனால் சொல்லவில்லை. நபுவுக்கு சென்னை எக்ஸ்பிரஸ் என்றொரு செல்லப்பெயர் உண்டாம். பாபாஜி குகைக்கு வருவோரில் 60% தென்னிந்தியர்கள் என்று ஒரு புள்ளிவிவரம் தந்தான். அவர்களுக்கெல்லாம் நபுவே கைடாக இருப்பதால் இந்த பெயர் வழங்குகிறதாம். நபுவுக்கும் பிற வடஇந்தியர்கள் போல தென்னிந்திய மாநிலத்தவர்களை மாநில வாரியாக பாகுபடுத்த தெரியவில்லை. எனவே அவன் சொன்ன கணக்குப்படி 60% முழுக்க தமிழர்களாக இருப்பார்கள் என்று சொல்வது கடினம். அதிகமாக தென்னிந்தியர்கள் பாபாஜி குகைக்கு வருவதற்கு காரணம் ரஜினிகாந்த் என்று நபு நம்புகிறான்.

வழியில் ஒரு குடிசை வீடு. அங்கு சற்று நேரம் இளைப்பாறினோம். குடிசைக்காரர் குடிசையில் டீக்கடை நடத்துகிறார். கேட்டால் மேகியும் செய்து தருவார். உத்தராக்கண்ட் மலைப்பிரதேசங்களில் மேகி கிட்டத்தட்ட கோதுமை போல அரிசி போல staple food. டீ வேண்டாம் என்று சொல்லிவிட்டோம். நானும் என் மனைவியும் தமிழில் பேசுவதைக் கேட்ட குடிசைக்காரர் எனக்கு குடிசை வாசலில் தொங்கும் ஒரு புகைப்படத்தை காட்டினார். நடிகர் ரஜினிகாந்த் கையில் தடியுடனும் தலைப்பாகையுடனும் ஜிப்பா அணிந்து நிற்கும் புகைப்படம். நாங்கள் உட்கார்ந்திருந்த குடிசை வாசலில் எடுக்கப்பட்ட புகைப்படம். 2013 இல் எடுக்கப்பட்ட படம் என்றார். 2013க்குப் பிறகு அவர் வரவில்லை என்றும் சொன்னார். அந்த ஒற்றை குடிசையைத் தாண்டாமல் ரஜினிகாந்த்தால் கூட நிச்சயம் பாபாஜி குகைக்குச் சென்றிருக்க முடியாது. தகவல் – ஆதாரம் என்னும் ரயில்பாதையில் பயணிக்கிறது தர்க்கம். தர்க்கம் வாழ்க்கையின் இன்றியமையா அங்கம். நாம் வாழ்கிறோம் என்பதற்கு நமக்கு தர்க்கம் தேவைப்படுகிறது. நிரூபித்தல் வாழ்க்கையின் தவிர்க்க முடியா செயல்முறை.

லாஹிரி மஹாஷயர் பாபாஜியை ரத்தமும் சதையுமாக சந்தித்ததாக சொல்லப்படும் சம்பவத்தில் தர்க்கம் அணுவளவும் இல்லை எனினும் 400 கி மீ பயணம் செய்திருக்கிறேன் ; எதற்கும் மெனக்கெடாத நான் ஐந்து கி மீ டரெக்கிங் செய்து அந்த குகையை அடைந்திருக்கிறேன். நான் வந்த தூரத்தை விட அதிக தூரத்திலிருந்து வந்தவர்களை சந்தித்திருக்கிறேன். 1861லிருந்து 1935 வரை பாபாஜியை வெவ்வேறு கட்டத்தில் சந்தித்தவர்கள் பகிர்ந்த அனுபவங்களை பற்றி வாசித்திருக்கிறேன். அவற்றை வாசிக்கும் போது நம்பிக்கையின்மையை என்னால் தவிர்த்துவிட முடிகிறது. திறந்திருந்த பாபா குகையிலிருந்து வந்த சுகந்தம் பற்றி நபி சொல்லும் போது எனக்கு ஆதாரம் வேண்டியிருக்கிறது. முரண்கள் நிறைந்த மனித வாழ்க்கையின் அங்கமாகிய நானும் முரண்கள் நிரம்பியவனாகவே இருக்கிறேன். தர்க்கம் ஒரு வாள். அதை ஏந்தி நாம் விரும்பாதவற்றை வெட்டித் தள்ளுகிறோம். நமக்கு விருப்பமானவற்றின் திசையில் அந்த வாளை சுழற்றாமல் இருக்கிறோம்.

neemkaroli baba
Neem Karoli Baba

குகுசினா வந்த பிறகு குமாவோனில் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றி எங்கள் பேச்சு திரும்பியது. Kainchi Dham பார்த்தீர்களா என்று கேட்டான் நபு. நீம் கரோலி பாபா பற்றி சொன்னான். கத்திரிக்கோல் தலத்தில் நான் பார்த்த சிலை நீம் கரோலி பாபாவினுடையது. – “ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் கம்பெனி தொடங்குவதற்கு முன்னர் பல வியாபாரம் தொடங்கி நொடித்துப் போனார் ; இந்தியா வந்து நீம் கரோலி பாபாவிடம் வந்து தன் குறையை சொன்னார். பாபாவின் கையில் ஓர் ஆப்பிள் இருந்தது. ஆப்பிள் பாபாவுக்கு மிகவும் பிடித்தது. அந்த ஆப்பிளை சிறிது கடித்து சீடன் ஸ்டிவ்-க்கு தந்தார். இனிமேல் அனைத்தும் வெற்றியில் முடியும் என்று ஆசீர்வதித்தார். ஆப்பிள் உலகின் மிகப் பெரிய டெக்னாலஜி கம்பெனியானது. தன் நிறுவனத்துக்கு ஆப்பிள் என்று ஸ்டிவ் பெயரிட்டதற்கு காரணம் நீம் கரோலி பாபா மீது ஸ்டிவ்க்கு இருந்த பக்தி. ஸ்டீவ் வாயிலாக நீம் கரோலி பாபா பற்றி கேள்விப்பட்ட மார்க் ஸுக்கர்பர்க் (ஃபேஸ் புக்) 2015 இல் Kainchi Dham விஜயம் செய்தார்”

நபு சொன்ன தகவலை இதற்கு முன்னர் நான் கேள்விப்பட்டிருக்கவில்லை. ஸ்டிவ் ஜாப்ஸுக்கு இந்திய குருவா? ஓர் ஹிப்பியாக ஸ்டீவ் ஜாப்ஸ் எழுபதுகளில் இந்தியா வந்திருப்பதை பற்றி படித்திருக்கிறேன். மகேஷ் யோகி, ரஜ்னீஷ் போன்றவர்கள் அமெரிக்க இளைஞர்களிடையே அறுபதுகளிலும் எழுபதுகளிலும் கிளப்பிய கிளர்ச்சியின் விளைவே ஸ்டிவின் இந்திய விஜயத்துக்கு காரணம் என்பதாகவே என் புரிதல்.

நபு சொன்ன விஷயங்களில் என்னை மிகவும் துண்டுதலை உண்டுபண்ணியது ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிய இந்த தகவல் தான். நீம் கரோலி பாபா யார்? எப்போது வாழ்ந்தார்? நபு சொன்ன விஷயம் உண்மையா? கைடுகள் வழக்கமாக அடித்து விடுவது போன்றதான பொய்த்தகவலா?

மலைப்பிரதேசத்தில் மொபைல் சிக்னல் சரியாக இல்லை. Data Roaming-உம் வேலை செய்யவில்லை. ராணிகேத் ஓட்டலிலும் இணையத் தொடர்பு கிடைக்கவில்லை. அடுத்த நாள் காலை இணையத் தொடர்பு கிட்டியது. Did Steve Jobs visit Kainchi Dham? என்ற கேள்விக்கு விடை தேடினேன்.

steve_jobs-apple
Steve Jobs (Founder of Apple)

இரண்டு குறிப்புகள் கிடைத்தன. நீம் கரோலி பாபாவின் பக்தர் ஒருவர் கீர்த்தனை இசையமைப்பாளர். sacred music என்னும் இசை வகைமையின் முன்னோடி எனக் கருதப்படுபவர். அவர் பெயர் ஜெய் உத்தல். உத்தல் படித்த ரீட் கல்லூரியின் மாணவர் ஸ்டீவ் ஜாப்ஸ். மாணவர் ஸ்டீவை ஒரு முறை சந்திக்கும் போது உத்தல் நீம் கரோலி பாபாவுடனான தன் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். ஸ்டீவ் அந்த உரையாடலில் கிடைத்த விவரங்களால் ஈர்க்கப்பட்டு தன் நண்பர் ஒருவருடன் இந்தியப் பயணம் மேற்கொள்ள முடிவு செய்கிறார். அக்டோபர் 1974இல் Kainchi Dham வருகிறார். துரதிர்ஷ்டவசமாக நீம் கரோலி பாபா 1973இலேயே பூதவுடலை துறந்துவிட்டிருக்கிறார். ஸடீவ் பாபாவை சந்திக்கவில்லை. உத்தலுடனான உரையாடலே தன்னை இந்தியா செல்லத் தூண்டியது என்று ஸ்டீவ் பல முறை குறிப்பிட்டுள்ளதாக ஸ்டீவுடன் சேர்ந்து இந்தியா பயணம் சென்ற நண்பர் பிற்காலத்தில் உத்தலுக்கனுப்பிய மின்னஞ்சலொன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.

இன்னொரு குறிப்பு கிருஷ்ண தாஸ் என்று இன்று அறியப்படும் ஜெஃப்ரே கெகல் என்பவரைப் பற்றியது. இவர் நீம் கரோலி பாபாவின் நேரடி சீடர். பாபாவினுடைய தன் முதல் சந்திப்பை பற்றி இவ்வாறு விவரிக்கிறார் :-

“அவருக்கு ஆப்பிள் பழங்கள் பிடிக்கும் என்று கேள்விப்பட்டிருந்தோம். எனவே ஆப்பிள்களை எடுத்து வந்திருந்தோம். எனக்கு வேடிக்கையாய் இருந்தது. ஆப்பிள்களை அவரிடம் கொடுத்தோம். அவற்றை வாங்கிக்கொண்டார். உடன் அந்த ஆப்பிள்களை அறையில் இருந்தவர்களுக்கு பகிர்ந்தளித்துவிட்டார். “இவருக்கு நான் கொடுத்த ஆப்பிள்கள் பிடிக்கவில்லை போலிருக்கிறது” என்று நினைத்தேன். என்னை நோக்கினார். ‘நான் என்ன செய்தேன்?’ என்று கேட்டார். நான் சொன்னேன் : ‘எனக்கு தெரியாது’. ‘நான் செய்தது சரியா?’ என்று கேட்டார். நான் மீண்டும் ‘எனக்கு தெரியாது’ என்று சொன்னேன். அவர் திரும்பவும் ‘நான் செய்தது சரியா?’ என்று கேட்டார். ‘நீங்கள் செய்யும் எதுவும் சரி’ என்று பதில் சொன்னேன். அவர் சிரித்தார். பிறகு சொன்னார் “ஒருவனுக்கு கடவுள் இருப்பானாயின், அவனுக்கு எதுவும் தேவையில்லை. அவனிடம் ஆசைகள் இராது’ அவர் சொன்னதைக் கேட்டதும் நான் என்னைப் பற்றி யோசித்தேன். என்னிடம் எவ்வளவு ஆசைகள்! நான் இன்னும் வெகுதூரம் செல்லவேண்டும் என்பதை உணர்ந்தேன். இது வேடிக்கையாகத் தோன்றலாம். ஆனால் அவர் என் எண்ணத்தை படித்திருந்ததை எனக்கு காட்டினார். என்னுள்ளில் நான் உணரத்தக்க வகையில் எனக்கு வழி காட்டினார்”

வானிலை சற்று மோசமடைந்திருந்ததால் ஓட்டலிலிருந்து கிளம்ப தாமதமானது. இதனால் தில்லிக்கு கிளம்புமுன் Apple Garden பார்க்கலாம் என்று போட்ட திட்டம் நிறைவேறவில்லை. மோசமான வானிலை காரணமாக Para Gliding spot அன்று மூடியிருந்தது. Golf Course மூடுபனியில் கவிந்திருந்தது. ஓட்டுனர் Kainchi Dham அருகே தேநீர் குடிப்பதற்காக வண்டியை நிறுத்தினார். நாங்கள் காரில் இருந்து வெளியே இறங்கவில்லை. அதே இடத்தில் இரண்டு நாட்கள் முன்னர் காருக்குள் தூங்கிக் கொண்டிருந்த பெரியவள் “அப்பா! இந்த கோவிலுக்கு போகவில்லையா?” என்று கேட்டாள். அதற்கு சின்னவள் “நாங்க அன்னிக்கே போயிட்டோம்… இன்னொரு ஸ்டீவ் ஜாப்ஸ் ஆகணும்னா நீயும் போய் கும்பிட்டுட்டு வந்துடு” என்று பெரியவளைக் கேலி செய்தாள்.

  1. இதில் குறிப்பிடப்படும் புத்தகம் பரமஹம்ச யோகானந்தர் எழுதிய சுயசரிதம் – Autobiography of a Yogi. இந்நூலின் 34ம் அத்தியாயத்தை இணையத்தில் வாசிக்க → https://www.crystalclarity.com/yogananda/chap34.php
  2. நீம் கரோலி பாபா பற்றி → https://en.wikipedia.org/wiki/Neem_Karoli_Baba
  3. ஸ்டீவ் ஜாப்ஸ்-ஸின் இந்திய விஜயத்தின் பிண்ணனி குறித்து → http://www.abc.net.au/radionational/programs/rhythmdivine/jobs-holy-man-and-apple-logo/4609698

மேகங்களுக்கு அப்பால் நீல வானம்

ஹரி பார்த்திக்கு சொன்னது :

“இன்று காலை தில்லியிலிருந்து கிளம்பிய போது சுசிதாவும் அதே விமானத்தில் வருகிறாள் என்று எனக்கு தெரியாது. இருவரும் சேர்ந்து ஒரே தொழிற் கண்காட்சிக்கு செல்கிறோம் என்றாலும் சுசிதா என்னுடன் பயணம் செய்ய மாட்டாள் என்று தெரியும். நானும் என் பயண விவரங்களை அவளுக்கு தெரிவிக்கவில்லை. கண்காட்சித் திடலுக்கு வந்த பின்னர் போனில் தொடர்புகொள்வதாக சொல்லிவிட்டேன்.

நேர்முகத்துக்குப் பிறகு பணியமர்த்தப்படும் தகுதி சுசிதாவுக்கில்லை என்று நாம்இருவருமே பரிந்துரைத்தோம். ஆனால் நேர்முகமே கண்  துடைப்பு என்று நமக்கு பின்னால் புரிந்தது. உயர் அதிகாரி நம் பரிந்துரையை காதில் வாங்கிக்கொள்ளவில்லை. பணியில் நியமித்ததோடு மட்டுமின்றி சுசிதாவுடைய வேலையின்  மேற்பார்வைப் பொறுப்பையும்  நான் மறுதலித்தும் என் தலையில்  திணித்தார். மேற்பார்வை எல்லாம் சும்மா பேச்சுக்காக ! அதிகாரப் படிநிலையும் இல்லை. ஒன்றும் இல்லை. சுசிதா மணிக்கணக்கில் அதிகாரியின் அறையே பழியென்று கிடக்கிறாள். மருந்துக்கும் கூட அலுவல் சம்பந்தப்பட்ட ஓர் ஆலோசனைக்கும் அவள் என்னிடம் வருவதில்லை. சொல்லப்போனால் நான் அதைப்பற்றி கவலையும் படவில்லை.

பாதுகாப்பு பரிசோதனை முடித்து புறப்பாட்டு அழைப்புக்காக காத்திருந்தேன். அதிகாலை பொழுதின் தூக்கக்கலக்கத்தை காபி குடித்து முறிக்க முயன்று கொண்டிருந்தேன். “ஹை ஹரி” என்று யாரோ என் தோளைத் தட்டினார்கள். திரும்பிப்பார்த்தால் சில வருடங்களுக்கு முன்னர் நான் டேனிஸ்கோவில் வேலை பார்த்த நாட்களில் என்னுடன் வேலை பார்த்த ஆதித்யா. அவன் இப்போது டி எஸ் எம்-மில் பெரிய பொறுப்பில் பணி புரிகிறான். பெரிதாக அனுபவமோ விஷய ஞானமோ இல்லாதிருந்தும், சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருக்கும் அதிர்ஷ்டம் அவனுக்கிருந்தது. என்னை விட மூன்று மடங்கு சம்பளம் வாங்குகிறான். பெரிய மனித தோரணை அவனுடைய உடல்மொழியில் மட்டுமில்லாமல் அவன் வாய்மொழியிலும் ஒட்டியிருந்தது.

நல விசாரிப்புகள், வணிகக் கிசுகிசுக்கள் என வழக்கமான விஷயங்களைப் பரிமாறிக்கொண்ட பிறகு ஆதித்யா சுசிதா நம் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்திருப்பதைப் பற்றி கேட்டான். நான் சிறிது துணுக்குற்றேன். இவனுக்கு எப்படி அவளைத் தெரியும்? அவள் உணவுத்தொழிற்துறைக்கு புதிதாயிற்றே! என் சிந்தனையைப் படித்துவிட்டவன் மாதிரி சுசிதாவை அவன் எப்படி அறிவான் என்பதற்கு விளக்கம் கொடுத்தான். சுசிதாவின் கணவர் ஆதித்யாவின் குடும்ப நண்பராம். நான் அதிகம் எதுவும் சொல்லவில்லை. “ஆம் சுசிதாவின் என் அணியில் தான் இருக்கிறாள். சேர்ந்து இரு மாதங்கள் ஆகின்றன. எப்படி வேலை செய்கிறார் என்பது போகப்போகத் தான் தெரியும்.”

ஆதித்யாவும் நான் பயணம் செய்யவிருந்த விமானத்தில் மும்பை வருகிறானாம். இருவரும் சேர்ந்தே விமானம் ஏறினோம். எனக்கு இரு வரிசை முன்னர் ஒரு ஜன்னலோர இருக்கையில் ஆதித்யா அமர்ந்தான். அவனுக்கு பக்கத்துக்கு இருக்கை கொஞ்ச நேரம் காலியாக இருந்தது. எல்லோரும் ஏறிய பிறகு கடைசியாக விமானத்துள் சுசிதா நுழைந்தாள். நான் உட்கார்ந்திருந்ததை அவள் கவனித்ததாக தெரியவில்லை. ஆதித்யாவைப் பார்த்ததும் புன்னகை பூத்தவாறே அவனுடைய பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

என் பார்வை அவர்கள் மீதே இருந்தது. ஒருவர் மீது  ஒருவர் இழைந்த வண்ணம் அவர்கள் நெருக்கமாய் பயணித்ததை கண்ட போது இரு குடும்ப நண்பர்களின் பரிச்சயம் போல இருக்கவில்லை. சுசிதா ஆதித்யாவின் தோள் மீது சிரத்தை புதைத்துக் கொண்டாள். தன் கரத்தை ஆதித்யாவின் கரத்தோடு கோர்த்துக் கொண்டாள். கொஞ்ச நேரத்துக்கு ஆதியாவின் கரங்கள் சுசிதாவின் தோள்களின் மேல் இருந்த மாதிரியும் இருந்தது.

என்னை சந்தித்ததை ஆதித்யா நிச்சயம் சொல்லியிருப்பான். சுசிதா ஒருமுறை கூட தன் முகத்தை திருப்பி பின் வரிசைகளை பார்க்கவில்லை. பாத்ரூம் செல்வது மாதிரி நடந்து அவர்களைக் கடக்கும் போது அவர்கள் இருவரையும் கைத்தொலைபேசியின் காமிராவில் சிறைப்படுத்திவிடலாமா என்ற குழந்தைத்தனமான எண்ணம் தோன்றி மறைந்தது.

விமானம் தரையை தொட்டு கதவுகள் திறக்கப்பட்டனவோ இல்லையோ சுசிதா அவசர அவசரமாக முன்புறம் சென்று முதலாம் வரிசையில் உட்கார்ந்தவர்கள் இறங்கும் முன்னர் இறங்க சென்று விட்டாள். நான் மெதுவாக இறங்கி ‘கோச்சில்’ ஏறி டெர்மினலை அடைந்தேன். பயணப் பேட்டிக்காக நான் காத்திருந்த போது ‘ஹலோ சார்’ என்ற படி சுசிதா அருகே வந்தாள்.

சற்று தள்ளி நின்றிருந்த ஆதித்யா “ஸீ யூ” என்று என்னுடன் கை குலுக்க  அருகே வரவும், சுசிதா தற்செயலான சந்திப்பைப் போல “ஆதித்யா சார் நீங்களா? மும்பைல? பார்த்து எத்தனை நாளாச்சு ? ஒரு வருஷத்துக்கு மேலாச்சு!  முடியெல்லாம் கூட கொட்டிப் போயிடிச்சு…” என்று சொல்லி பல்வரிசையை காட்டினாள். என் பெட்டி பெல்ட்டில் வரவும் அதை எடுத்துக் கொண்டேன். “என்ன சுசிதா, ஆதித்யாவுக்கு முடி கொட்டிடுச்சுன்னு இப்பதான் தெரிஞ்சுதா ? ஒன்றரை மணிநேரமா அவர் பக்கத்துல உக்கார்ந்த போது பார்க்கலியா?” என்று நக்கலாகச்  சொன்னேன். இருவரும் சில கணங்களுக்கு அசட்டுப் புன்னகை புரிந்தவாறு நின்றிருந்தார்கள். ஆதித்யா அவ்விடத்திலிருந்து அகன்றான்.

விமான நிலையத்துக்கு வெளியே கருப்பு-மஞ்சள் டாக்சியைப் பிடித்து கோரேகாவ்ன்-இல் இருக்கும் தேசிய பொருட்காட்சி மையத்துக்கு செல்லும் வழியெல்லாம் சுசிதா ஒரு வார்த்தையும் பேசவில்லை. அவளின் முகபாவம் எப்படி இருந்தது என்றும் தெரியவில்லை. அவள் முன் சீட்டில் ஓட்டுனருக்குப பக்கத்திலும் நான் பின் சீட்டிலும் உட்கார்ந்திருந்தோம்.”

பார்த்தி சொல்கிறான் :

“சுசிதாவும் ஹரியும் பொருட்காட்சி மையத்துக்கு வருவதற்கு முன்னரே நானும் இன்னொரு சக-ஊழியரும் சாவடியைத் தயார் செய்து வைத்திருந்தோம். ஹரி வந்ததும் வராததுமாக என்னை காலை சிற்றுண்டி சாப்பிட அழைத்தான். பொருட்காட்சி மையத்துக்கு வெளியே இருந்த ஓர் உடுப்பி ஓட்டலில் இட்லி சாப்பிட்டோம். ஹரி விமானப் பயண அனுபவத்தைக் சொன்னதும் உரக்க சிரித்தோம். கிண்டலும் கேலியுமாக பேசிக் கொண்டிருந்தோம். நாங்கள் தெரிவு செய்யாத சுசிதாவை உயர் அதிகாரி நியமித்ததை ஒரு வித கசப்புணர்வுடன் சகித்துக் கொண்டிருந்த எனக்கு  ஹரி சொன்ன  சம்பவம் மலிவான மகிழ்வுணர்வை ஏற்படுத்திற்று.   புறச்செருகல்கள், இடைச்செருகல்கள், ஊகங்கள், மூர்க்கமான கற்பனைகள் என்று ஹரி சம்பவத்துக்கு கண்ணும்  காதும் இட்டு ஒரு கதாகாலட்சேபனை செய்பவன் போல் பேசிக்கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டிருந்தேன்.”

சுசிதா பார்த்திக்கு சொன்னது :

“பெண்களைக்  குறைவாக எடை போடுபவர்களை சந்திப்பது எனக்கொன்றும் புதிதல்ல. பெண்களை கையாலாகாதவர்கள் என்று நினைக்கும் மனப்போக்கு எல்லா ஆண்களிடமும் துளியேனும் இருக்கிறது. ஹரியிடம் அது கொட்டிக்கிடந்தது. அவனுடன் வேலை பார்த்த ஒரு நாளும் நான் வசதியாக உணர்ந்ததில்லை. என்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாக அவன் பேசி வந்தது என் காதில்  எட்டாமல் இல்லை. ஆனாலும் கண்ணியக் குறைவிலாமல் பேசியும். முடிந்த வரை மூத்த ஊழியருக்கு காட்டவேண்டிய மரியாதையுணர்வுடனும் பழகி வந்ததை ஹரி பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. அவனுக்கு என் மேலிருந்த  வெறுப்பு அவனுடைய நிதானவுணர்ச்சியை இழந்த சம்பவம் ஒன்று சென்ற வருடம் நடந்தது.

உங்களுக்கு ஞாபகம் இருக்கும்! போன வருடம் மும்பையில் ஒரு பொருட்காட்சியில் பங்கு கொண்டோமே, அப்போது நானும் ஹரியும் ஒரே விமானத்தில் வந்தோம். அதற்கு அடுத்த நாள் நான் உங்களிடம் அது பற்றி ஹரி ஏதும் சொன்னானா  என்று கேட்டேன். நீங்கள் ‘எதுவும் சொல்லவில்லை’ என்று சொன்னீர்கள். ஹரியும் அதே விமானத்தில் பயணம் செய்யப்போகிறான் என்று உண்மையில் எனக்கு தெரியாது.

டி எஸ்  எம்-மில் வேலை பார்க்கும் என் நண்பர் ஆதித்யாவை ஒரு முறை உங்களுக்கு அறிமுகம் செய்தி வைத்தேனில்லையா? நான் வேலை பார்த்த முதல் நிறுவனத்தில் அவர் என் அதிகாரியாக இருந்தார். நான் பிறந்து வளர்ந்த ஹரித்வார் தான் அவருக்கும் சொந்த ஊர். நாங்கள் நெருங்கிய நண்பர்கள். ஒரு நாள் முன்னதாக ஆதித்யாவுடன் போனில் பேசுகையில் நாங்களிருவரும் ஒரே விமானத்தில் மும்பை செல்லப்போகிறோம் என்று தெரிந்தது. இருவரும் பக்கத்து இருக்கைகளில் உட்காரும் படியாக இருக்கைகளை தேர்ந்தெடுத்துக் கொண்டோம்.

நான்கு வரிசை தள்ளி ஹரி உட்கார்ந்திருக்கிறான் என்று ஆதித்யா எனக்கு சொன்னார். அதற்குள் விமானம் கிளம்பி விட்டதால் டெர்மினலில் ஹரியை சந்திக்கலாம் என்று விட்டுவிட்டேன். ஹரியுடன் அவர் நடத்திய உரையாடல் பற்றியும் ஆதித்யா என்னிடம் சொன்னார்.

ஹரிக்கு நானும் ஆதித்யாவும் நண்பர்கள் என்று தெரியாது. ஒரு முன்னாள் சக-ஊழியர் என்ற அடிப்படையில் ஹரி மனந்திறந்து என்னைப் பற்றி என்ன நினைக்கிறான் என்பதை ஆதித்யாவிடம் பிட்டு வைத்து விட்டான்.

‘விற்பனை முன்னனுபவமும் இல்லை ; உணவுத்துறை நிறுவனத்தில் பணி  புரிந்ததும் இல்லை. வாடிக்கையாளரிடம் எப்படிப் பேசுவது என்ற இங்கிதமும் தெரியவில்லை. இவளைப் பார்த்துக்கொள் என்று என் தலையில் கட்டி விட்டார் என் உயர் அதிகாரி. பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறாள் என்றால் தனக்கு கீழ் வைத்துக் கொள்வது தானே. ஒன்றை ஒத்துக் கொள்ள வேண்டும். கவர்ச்சியான உடை அணியும் திறமை அவளிடம் இருக்கிறது’

ஒரு செக்சிஸ்டின் வக்கிரம் மற்றும்  சமநிலைப் பார்வையுடன்  ஒருவரைக் கணிக்கும் திறமையற்று தோல்வியடைந்த ஒரு மேலாளரின் மனநிலை – இரண்டும்  கலந்த கருத்தை என் நண்பரிடமே பகிர்ந்து கொண்ட ஒரு முட்டாள் அவன். ஆதித்யா பகிர்ந்து கொண்ட விஷயம் என்னுள் சினத்தை உண்டு பண்ணிற்று. தேர்ந்தெடுத்த கெட்ட வார்த்தை உரிச்சொற்களால் ஹரிக்கு என் மனதில் அர்ச்சனை செய்தேன். என் முக வாட்டத்தை கண்ட ஆதித்யா ஆறுதல் தரும் வார்த்தைகளால் ஹரியின் அசட்டுத்தனத்தை புறக்கணிக்குமாறு கேட்டுக் கொண்டார். சிறிது சமாதானமடைந்ததும் எங்கள் பேச்சு வேறு திசைகளில் திரும்பிவிட்டது.

டெர்மினலில் பெட்டிகளை சேகரிக்கும் பெல்ட்டுக்கருகில் ஹரியை சந்தித்தேன். ஹரியிடமிருந்து விடை பெற்றுக்கொள்ள அந்த சமயம் அங்கு வந்த ஆதித்யாவையும் அங்கு எதேச்சையாய் சந்தித்ததைப் போல காட்டிக்கொண்டேன். எத்தனை கோபமிருந்தாலும் கண்ணியமாக தன்  தலையை காப்பாற்றிக் கொள்ளும் வாய்ப்பை நானே அவனுக்கு வழங்கினேன். என்னுடைய நாகரிக நடத்தையை அவன் புரிந்து கொள்வான் என்ற எதிர்பார்ப்பு இருக்கவில்லை. ஏனென்றால் நாகரிகம் தெரிந்தவர்களால் தான் அதை புரிந்து கொள்ளமுடியும்.

டாக்சியில் கொரேகாவ்ன் போகும் போதும் என் எரிச்சலை வெளிக்காட்டாமல் சாதாரணமாக பேசினேன். ஆதித்யாவுக்கு வயதான தோற்றம் வந்துவிட்டது எனவும் வழுக்கைக் கோடு இன்னும் மேலேறிச்  சென்றுவிட்டது எனவும் சொல்லிக் கொண்டு வந்தான். அவன் பேசுவதை கேட்பதில் ஆர்வமில்லை என்றாலும் சிரிப்பது போல் பாவனை செய்தேன்.”

பார்த்தி சொல்கிறான் :

ஆறு மாதம் முன்பு, ஹரி வேலையை ராஜினாமா செய்து விட்டு செல்லும் முன்பு, உடுப்பி ஓட்டலில் ஹரி சொன்ன கதையை கேட்டு உரக்க சிரித்தது எனக்கு ஞாபகம் வந்தது. சுசிதா விவரித்த சம்பவத்தில் டாக்சியில் அவள் சிரித்துக் கொண்டே வந்ததற்கும் நான் சிரித்துக்கொண்டே ஹரி சொன்னதை கேட்டதற்கும் வித்தியாசம் இருக்கிறதா? ஆறு மாதத்தில் ஏற்பட்ட படிநிலை மட்ட மாறுதல்கள் இன்று நிறுவனத்தில் என்னை உயர் அதிகாரியாக ஆக்கியிருக்கிறது. அதன் காரணமாக வாடிக்கையாளரொருவரை  காண்பதற்காக சுசிதாவுடன் ருத்ரபூர் செல்லுகையில் நடந்த உரையாடலின் போது விமான சம்பவத்தின் இன்னொரு கோணம் எனக்கு தெரிய வந்தது. இதே சம்பவத்தைப் பற்றி ஆதித்யா என்ன சொல்லக்கூடும்? ஆதித்யா எனக்கு தெரிந்தவரில்லை. அவர் கோணம் எனக்கு தெரிய வாய்ப்பேயில்லை.

அவசர அவசரமாக ஹரி சிற்றுண்டிக்காக என்னை வெளியே அழைத்துக் சென்றதும், அதே பொருட்காட்சியின் போது  ‘ஹரி ஏதேனும் சொன்னாரா?’ என்று சுசிதா என்னிடம் கேட்டதும், சுசிதாவுடனான  உரையாடலின்  வழியை கற்பிதமான முக்கியத்துவத்தைக் கொண்டு நானே அடைத்துவிட்டதும், மாதங்கள் கழிந்த பின்னர் ஹரி நிறுவனத்தில் இல்லாது போன பின்னர் சுசிதாவின் கோணம் எனக்கு தெரிய வருவதும் என விமான சம்பவம் தறுவாய், சூழல் மாற்றங்களுக்கிடையில் புதுப்புது  நிறங்களுடன், புதுப்புது அர்த்தங்களுடன்  வெப்ப நீரூற்றைப்போல் கொந்தளித்தவாறிருக்கிறது.

பார்த்தி பின்னொரு சமயம் ஒரு வலைதளத்தில் வாசித்தது :

என் தோழி S-இன் வரவுக்காக விமான நிலையத்தில் காத்திருந்தேன். அதிகாலை புறப்படும் விமானத்தில் நான் மும்பை செல்கிறேன். S-ம் மும்பை செல்கிறாள். அவள்  செல்வது தன் நிறுவனம் பங்கு கொள்ளும் கண்காட்சியில் கலந்து கொள்ளச் செல்கிறாள். நான் மும்பை செல்கிறேன் என்று சொன்ன போது S-இன் கணவர் எனக்கு S மும்பை செல்லும் விஷயத்தை தெரியப்படுத்தினார். S-ம் நானும் பக்கத்து இருக்கைகளில் உட்காருமாறு  முன்பதிவும் செய்து கொடுத்தார்.

’நான் கிளம்ப தாமதமாகிவிட்டது ; நீ செக்-இன் செய்து கொள் ; சிறிது நேரத்தில் அங்கு வந்து சேருகிறேன்’ என்று குறுஞ்செய்தி அனுப்பினாள். விமான நிலையத்துக்கு வந்து செக்-இன் செய்துவிட்டு பாதுகாப்பு பரிசோதனைக்கான வரிசையில் எனக்கு முன்னதாக H நின்றிருந்தான் ; H என் பழைய பரிச்சயம்.  சில வருடங்கள் முன்னால் நானும் H -ம்  ஒரே நிறுவனத்தில் வேலை செய்திருந்தோம். அவன் கொஞ்சம் குண்டாக கொழுகொழுவென்று இருந்தான். அவன் அங்கவளைவுகளை  அவன் வித்தியாசமாக நினைக்காத படி பார்த்துக்கொண்டே சில நிமிடங்களுக்கு பேசிக் கொண்டிருந்தேன். சில மாதங்களுக்கு முன்னர் என் வாழ்வில் நடந்தேறிய அதிரடி நிகழ்வுகளைப் பற்றி அவன் இன்னும் கேள்விப் படவில்லை போலும். கேள்விப் பட்டிருந்தால் என்னைப் பார்த்தும் பார்க்காதவன் போல் கடந்து சென்றிருக்கலாம்.

“அலமாரியில்  இருப்பவர்கள்”  என்ற ஆங்கிலச் சொற்றொடர் எத்துனை பொருத்தமானது. இருண்ட அலமாரிக்குள் தாழ் போட்டுக்கொண்டு மூச்சுத் திணறியபடி பல ஆண்டுகள் இருந்துவிட்டேன். நடுவில் பெற்றோரின் வற்புறுத்தலை தட்ட முடியாமல் திருமணம் செய்து கொண்டேன். முதல் வருடம் ஒரு மாதிரி சமாளித்தேன். மனைவி ஒரு வித்தியாசத்தையும் கண்டு பிடிக்கவில்லை. அவளுக்கு பாலுறவில் விருப்பம் குறைவாக இருந்தது அல்லது நானாகவே அப்படி நினைத்துக் கொண்டேன். ஆடவர்கள் மேல் ஈர்ப்பு இருந்தாலும் திருமண உறவில் இருந்தவரை ஒழுக்கம் பிறழாமல் பற்றுறுதியுடனேயே இருந்து வந்தேன். இரண்டாவது வருடம் இடைவெளி பெருக ஆரம்பித்தது. விவாகரத்து கேட்டாள். விலகிக் கொண்டோம். விவாகரத்து பெறும் சமயத்திலும் என் (முன்னாள்) மனைவிக்கு என் பாலியல் சார்பு பற்றிய ஐயம் தோன்றவில்லை என்றே எண்ணுகிறேன். மனைவியே கண்டு பிடிக்க முடியாமல் போன போது கூட சேர்ந்து வேலை செய்த நண்பர்கள் எப்படி கண்டு பிடித்திருக்க முடியும்!

நிலையான துணை இல்லாமல் காலத்தை கழிப்பது  சொல்லொணா அவஸ்தையை உண்டு பண்ணிற்று. வறண்ட பாலைவனத்தில் பயணிப்பவனுக்கு எப்போதாவது பருகக் கிடைக்கும் நீரைப் போல இரண்டு – மூன்று தற்காலிக உறவுகள் ; ஆனால் எதுவும் நிலைக்கவில்லை. விரக்தி அதிகமான ஒரு நாளில், விளைவுகள் பற்றி யோசிக்காமல், நிதானமிழந்த தருணத்தில் ஒரு விபத்து நடந்தது. என் அலுவலகத்தில் வேலை செய்யும் இளைஞனின் பின் பாகத்தை அவன் சம்மதமில்லாமல் தொட்டு விடவும் பிரச்னை வெடித்தது. நடந்த சம்பவத்துக்கு எல்லோர் முன்னிலையிலும் அந்த இளைஞனிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன்.  பாலியல் சிறுபான்மையரின் உரிமைகள் பற்றிய பிரக்ஞை சிறிதேனும் இல்லாத இந்திய நிறுவனச் சூழல் ; முகத்துக்குப் பின்  கேலி செய்யும் சக ஊழியர்கள் ; அனுதாபம் காட்டிக் கொண்டே உள்ளூர மகிழும் மேலதிகாரிகள். நல்ல வேளை, அடிப்படையில் என் நிறுவனம் சர்வ தேச நிறுவனம். விஷயம் தலைமை அலுவலகத்தை எட்டியது. ‘ஹோமொபோபிக்’ மனோபாவங்கள் வெற்றி பெறா வண்ணம் வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டு மாத கட்டாய விடுமுறையில் இருந்த நான் கவுரவத்துடன் பணியில் திரும்பச் சேர்த்துக்கொள்ளப்பட்டேன்.

H சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தான். அவன் வேலை செய்யும் நிறுவனத்தைச் சொல்லவும் எனக்கு ஆச்சர்யம். S வேலை செய்யும் அதே நிறுவனம். S -ஐப் பற்றி விசாரித்தேன். அவனும் அவளும் ஒரே அணியில் வேலை செய்வதாகச் சொன்னான்.

அவன் போர்டிங் கேட்டுக்குச்  சென்ற பிறகு S இன் வரவுக்காக காத்திருந்தேன். எப்போதும் போல் அன்ன நடை போட்டு தாமதமாக வந்தாள். விமானத்துள் சென்று நாங்கள் அமர்ந்தவுடன் H அதே விமானத்தில் வந்திருக்கிறான் என்று சொன்னேன். பின் வரிசையில் எங்கேனும் உட்கார்ந்திருப்பான் என்று  சொன்னேன். அவள் ஆர்வம் காட்டவில்லை. ”தூக்கம் வருகிறது ; இறங்கும் போது சந்தித்துக் கொள்ளலாம்” என்று சொன்னாள். விமானம் பறக்குமுன்னரே தூங்கிப் போனாள்.

சில நிமிடங்களில் அவள் தலையை என் தோள்களில் சாய்த்துக் கொண்டாள். அவள் வலக்கையை  என் தொடைப்பகுதியில் போட்டுக் கொண்டு அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.  டியோடரண்ட்-டின் வாசத்தை முகர முடிந்தது. அவளின் மார்புகள் அளவாக விம்மின. அவள் வலக்கையால்  என் இடக்கையை இறுக்கப் பற்றிக் கொண்டாள். பல வருடங்களாகக் செய்யாத ஒன்றை அப்போது நான்  செய்தேன். அவள் கையை விலக்கிக் கொண்டு  அவள் முதுகுப் புறத்தை தொட்டேன். திருமண வாழ்க்கையின் துவக்க காலம் ஞாபகத்தில் வந்தது. ஒரு வருட தாம்பத்ய வாழ்க்கையில் என்னுடைய ‘ஓரியெண்டஷனை’ என் மனைவி கண்டு பிடிக்க முடியாது போன காரணம் எனக்கு புரிந்தது. அவள் கழுத்துப் புறத்தை வருடிக்கொண்டிருந்தேன். ஒரு சமயம் என் வலக்கை அவளின் கூந்தலை தடவியது.  குற்றவுணர்வும்  ஆனந்தவுணர்வும் ஒரு சேரப் போட்டியிட்டன. அதுவரை என்னைப் பற்றி நானே அறிந்திராத ஓர் அம்சத்தை அறிய வைத்தன.

“என் கணவரின் வடிவான பின் பாகத்தை நோட்டமிடாதே” என்று என் கன்னத்தை கிள்ளியிருக்கிறாள் ; தன் இரு கைகளால் இதமாக என் தோள்களுக்கு மசாஜ் செய்திருக்கிறாள் ; டிஸ்கோ-க்களில் என்னுடன் சேர்ந்து  குதியாட்டம் போட்டிருக்கிறாள். அப்போதெல்லாம் தோன்றிராத உணர்வு அன்று அந்த விமானப்பயணத்தில் என்னுள் எழுந்தது. ஆனந்தவுணர்வு சரி-தவறு என்ற சமூக அளவுகோல்களுக்குள் அடங்காது என்பதை பல வருடங்களுக்கு முன்னாலேயே உணர்ந்த எனக்கு ஆனந்தானுபவத்தின் இன்னொரு புது கால்வாய் அந்த ஆகாய விமானப் பயணத்தின் போது திறந்தது.

விமானம் தரையிறங்கத்  தொடங்கியதும் S விழித்துக் கொண்டாள். விமானம் தரை தொட்டதும் ‘பை’ சொல்லிவிட்டு வேகமாக முன்னாள் சென்று முதலாவதாக விமானத்திலிருந்து இறங்கிச் சென்றாள். H-ஐ தவிர்க்கிறாளோ?   ‘டெர்மினலை’ அடைந்த நான் என் ‘லக்கேஜ்’க்காக வெகுநேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. என்னுடைய ‘லக்கேஜும்’ H-ன் ’லக்கேஜும்’ கடைசியாக வந்தன. Hம் நானும் ‘லக்கேஜ்’ வந்தபிறகும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். S-ஐ அவன் விமானத்தில் பார்க்கவில்லை என்று தோன்றியது. S விமான நிலையத்துக்கு வெளியே எனக்காகவோ H -க்காகவோ காத்திருக்கவில்லை.    என்னைத் தவிர்க்கிறாளோ? நான் S-ஐ சந்தித்தது அன்றே கடைசி.

பார்த்தி சொல்கிறான் :

வலைத்தளத்தில் எழுதுபவரின் பெயர் என்னவென்று தெரியவில்லை. அது ஆதித்யாவாக இருக்க சாத்தியமேயில்லை. ஏனெனில் உத்தராகண்ட் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த இந்திக்காரன் ஆதித்யா தமிழில் எப்படி எழுத முடியும்? வலைதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்த மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பாராட்டு கடிதம் எழுதி. பதில் வந்தால் கடிதத்தின் இறுதியில் எந்தப் பெயரில் ஒப்பம் இடப்பட்டிருக்கிறது என்று பார்த்து விடலாம். அது எனக்கு முக்கியமாகப் படவில்லை.  யாரோ எழுதிய கற்பனைக் கதை இது என்றே  கொண்டாலும், சில வருடங்களுக்கு முன்னர் இரு விதமாகக்  கேள்விப்பட்ட ஒரே சம்பவத்தின் நீட்சியாகவே எனக்கு தோன்றியது. ஹரியும் சுசிதாவும் என் தொடர்பில் இல்லை. ஆதித்யாவை நான் அறிந்ததில்லை. இம்மூவரின் அனுபவத்தில் ஒரு நேரடிப் பாத்திரமாக நான் பங்கு பெறவில்லை. ஒவ்வொருவரின் பார்வையிலும் சொல்லப்பட்ட  அனுபவ விவரணைகளை  (கற்பனையான மூன்றாவது விவரணையையும் சேர்த்து!) ஆணாதிக்க மனோபாவத்தில் தொடங்கி பெண் மைய நோக்கு வழியாக வேற்றுமை தாண்டிய அன்புணர்வு நோக்கிய என் உருவகப் பயணத்தின்  விவரணைகளாக எடுத்துக் கொண்டேன்.

நன்றி : வல்லினம்