Pierre Menard, Author of the Quixote

ஜே ஜே சில குறிப்புகள் – நாவலை வாசித்துப் பிரமித்துப் போனதுண்டு. இப்படியும் புனைவுகள் எழுத முடியுமா என்றெண்ணி வியந்து போனேன். இலக்கிய அங்கதம் எனும் வகைமை என்பதாக நாவல் படித்த நாட்களில் என் புரிதல்! ஜே ஜே சில குறிப்புகளில் ஒரு கற்பனையான இலக்கிய ஆளுமை உயிர் பெறுகிறார். ஜே ஜே சில குறிப்புகள் நாவல் வெளிவருவதற்கு கிட்டத்தட்ட 48 ஆண்டுகளுக்கு முன்னர் Sur பத்திரிக்கையில் வெளியானது – Pierre Menard, Author of the Quixote. இதிலும் ஒரு கற்பனை இலக்கிய ஆளுமை வருகிறார். இந்தக் கதையிலும் கற்பனை இலக்கியவாதி ஏற்கனவே இறந்துவிட்டார். அவருடைய அபிமானி ஒருவர் பட்டியலிட்ட நூல் வரிசை குறித்தான எதிர்வினையாகத் தொடங்குகிறது “சிறுகதை”. எதிர்வினை செய்பவர் இறந்து எழுத்தாளர் மெனார்டின் நெருங்கிய நண்பர் மற்றும் இரசிகர். நூல் பட்டியலில் பிரபலமான நூல்கள் மட்டுமே சேர்க்கப்பட்டிருந்ததாகவும் பரவலாக அறியப்படாத பல அரிய நூல்களின் பெயர்கள் விடப்பட்டிருந்தன என்றும் “கட்டுரை”யாசிரியர் குறை பட்டுக் கொள்கிறார். பரவலாக அறியப்படாத, இன்னொருவர் பட்டியலிட்ட வரிசையில் இல்லாத நூல்களின் பட்டியல் கதையில் வருகிறது. இத்தகைய பட்டியல் ஒன்றைப் புனைவில் சேர்ப்பதற்கே நிறைய மேதமை வேண்டும். நம்பத்தகுந்த விதத்தில் வரிசை ஒலிக்க வேண்டும். அப்படியில்லாவிடில், கதை வடிவம் கேலிக்குள்ளாக்கப்பட்டுவிடும். கதையின் நம்பத்தகுந்த தொனி கடைசி வரை தொடர்கிறது. முதல் முறை வாசிப்பவர்களுக்கு இது “இறந்த இலக்கியவாதியின் பங்களிப்பு” குறித்த “கட்டுரையாகவே” தொனிக்கும். மரபார்ந்த சிறுகதையின் தரவடிவமான சிக்கல் – தீர்வு என்ற படிவத்தில் பயணிக்காத இதை எவ்விதத்தில் புனைவு என்று கொள்ள முடியும்?

சிறுகதையில் புனைவின் அடையாளங்கள் புதைந்துள்ளன. நுணுக்கமான வாசிப்பில் அவை வெளிப்படுகின்றன. ஓரிரு புனைவம்சங்களை மட்டும் இங்கு சொல்கிறேன்.

(1) கதையின் உள்ளிருக்கும் அங்கதம் – கதையை அற்புதமான இலக்கியப் பகடியாக வாசிக்கலாம். போர்ஹேஸ் இரு இயல்முரண்களைக் கதையில் விவரிக்கிறார். இறந்த எழுத்தாளரின் மீது அளவற்ற மரியாதை வைத்திருக்கும் அவரின் பரம ரசிகன். அந்தப் பரமரசிகனின் மதிப்புரையினுடே நாம் அறியவரும் மறைந்த இலக்கியவாதியின் எழுத்துத்திருட்டுத்தனம். கேள்விக்குரிய சாதனைகளுக்காக மெனார்டை வானளாவப் புகழ்வதைத் தவிர, கதையின் பெரும்பகுதியில், கதைசொல்லி Mme.Henri Bachelier-ஐ (அதாவது மெனார்டின் பிரபலமான நூல்களின் பெயரை மட்டும் நூல் பட்டியலில் சேர்த்தவர்) கடுமையாக விமர்சிக்கிறார். இதில் உள்ள முரண் Mme Bachelier-ம் கதைசொல்லியைப் போலவே மெனார்டின் இரசிகர். தன் பக்கத்தில் இருப்பவரைப் பின்தொடர்வதும், தெளிவில்லாத காரணங்களுக்காக அவரைக் கடுமையாக விமர்சிப்பதும் முரண்நகை.

(2) மெனார்டின் கலாசாரப் பின்னணியும் பொருந்தா விருப்பமும் – மெனார்ட் பிரெஞ்சு இலக்கியத்தின், கலாசாரத்தின் பின்னணி கொண்டவர் – முழுக்க முழுக்க பிரெஞ்சு கலாசாரத்தில் ஊறியவர். கதையில் “a Symbolist from Nimes, a devotee essentially of Poe, who begat Baudelaire, who begat Mallarme, who begat Valery” என்று அடையாளப்படுத்தப்படுகிறார். மேலும், கதைசொல்லி வரிசைப்படுத்தும் நூல் வரிசையில் “a study of the essential metrical rules of French prose, illustrated with examples taken from Saint-Simon” என்பதுவும் சேர்க்கப்பட்டிருக்கிறது. பிரெஞ்சுப் பின்னணியில் வேரூன்றிய ஒருவருக்கு ஸ்பானிய இலக்கியத்தைப் புரிந்து அதை மீளுருவாக்கம் செய்ய விரும்புவது விந்தையிலும் விந்தை. கதையில் மெனார்ட் ஒரிடத்தில் விளக்குவது மாதிரி அவரால் “குயிக்ஸாட்” இல்லாத உலகை அவரால் எளிதில் கற்பனை செய்துகொள்ள முடிகிறது. அவர் மேலும் சொல்கிறார் – “குயிக்ஸாட் ஒரு தற்செயல். அது தேவையில்லை. கூறியது கூறல் இல்லாமல், அந்த நாவலை என்னால் எழுத முடியுமென என்னால் முன்கூட்டியே திட்டமிட முடியும்”

(3) பகடியையும் எள்ளலையும் தாண்டி எதை விளையாட்டுத்தனமாக இந்தக் கதை ஆராய முனைகிறது? – ஓர் இலக்கியப் படைப்பை அணுகும் போது நாம் அதன் சூழல் சார்ந்த தகவல்களையும் நம்முடைய பிரக்ஞைக்குள் இழுத்து வருகிறோம் – ஆசிரியரின் அடையாளம், அவர்கள் வாழ்ந்த காலம், அந்தப் பிரதியை அவர் எப்போது எழுதினார், முதலியவற்றை.

(4) தலைப்பே ஒரு நகைச்சுவை – டான் குயிக்ஸாட் நாவல் ஸ்பானியர்களின் கலாசார அடையாளம்! கதையின் தலைப்பை வாசிக்கும்போதே – Pierre Menard, Author of the Quixote – ஒவ்வொரு ஸ்பானியனும் புன்முறுவல் பூத்து ஏதோ பகடி என்பதை புரிந்து கொள்வான் அல்லது “இது என்ன கிறுக்குத்தனம்” என்பான். உதாரணமாக “கம்ப ராமாயணம் – ஜெயகாந்தன் எழுதியது” என்பது போலத்தான்! (படைப்புக்கு கம்பர் இட்ட பெயர் – இராமாவதாரம் – என்பது தெரியும்!)

காலம் அவர்களை மாற்றிவிடுமுன் – கவாஃபி



பிரிந்தபோது இருவருக்கும் மிக வருத்தம்
இருவருமே அதை நாடவில்லை
நிலவிய சூழல்தான் காரணம்
பிழைத்தலுக்கான அவசியம் ஒருவரை
வெகுதூரம் துரத்தியிருந்தது
– அமெரிக்காவுக்கோ கனடாவுக்கோ
அவர்களின் காதல் முன்பு போலிருக்கவில்லை
ஈர்ப்பு மெதுவாக குறைந்து கொண்டு வந்தது
ஈர்ப்பு வெகுவாக குறைந்தும் விட்டது
எனினும், பிரிவிற்கு அது காரணமில்லை
சூழல்தான் காரணம்- ஒரு வேளை
அவர்களின் உணர்வு முழுக்க மறையுமுன்
காலம் அவர்களை முழுதாக மாற்றிவிடுமுன்

ஊழானது கலைஞனாகத் தோன்றி
இருவரையும் பிரித்திருக்கலாம்
ஒருவருக்கு மற்றவர் என்றுமே
இருபத்தி நான்கு வயது அழகான இளம் வாலிபராகவே நினைவில் நிற்கவேண்டுமென்பதற்காக

பிரார்த்தனை

உன்னைத் தொழ
காரணம் வேண்டிக்
காத்திருந்தேன்
கடுந்துயரோ
கொடும்நோயோ
நலக்குறைவோ
பெரும் ஆசையோ
எதுவும் எனக்கில்லை
சாதாரண ஆசைகளின் பலிதம்
காலம் பொறுத்து கைகூடும் எனும்போது
தொழுதல் அவசியமா !
நன்றி செலுத்தலே
பிரார்த்தனை
எனச் சொல்லுவார்
ஆனந்த மனமே
நன்றிக்கான மனநிலை
ஆனந்தமான
மனநிலையை
என்றும் அருள்
உனக்கு நன்றி
சொல்ல வேண்டும்
வேண்டுதலன்றி
நன்றி கூடச் செலுத்தவியலாது
எல்லாம் அவன் செயல்
அவனளிப்பதை
மனமுவந்து ஏற்பதே
பிரார்த்தனை
காரணம் தேவையில்லை
இக்கணம்
நம்மை வந்தடையும்
அனைத்துக்கும் நன்றி சொல்
தூக்கத்தின் பலன்
தூக்கம்
தொழுதலின் பலன்
தொழுதல்

இறந்த காலத்தின் ஒரு துண்டு

நினைவிலிருந்து தொலைந்து போன ஒரு பாடல். அப்படி ஒரு பாடலை சில நாட்களாக ஞாபக மீட்பு செய்ய முயன்று வந்தேன். அதன் ட்யூன் சுத்தமாக மறந்து விட்டது. முதல் வரி ஞாபகமில்லை. பாடகர்கள் யாரெனவும் மறந்துவிட்டது. சீர்காழி கோவிந்தராஜன் பாடியிருக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஒரு காலத்தில் அடிக்கடி முணுமுணுத்த பாடல். இப்படி நினைவிலிருந்து அகன்றுவிட்ட பாடலோடு அப்படி என்ன உறவு? நான் தங்கி பயின்று வந்த கல்லூரியில் மாணவர்களை ஐந்து மணி வாக்கில் எழுப்பிவிட தெய்வப் பாடல்களை ஒலிக்க விடுவார்கள். ஐந்தரைக்கு பாடல்கள் ஒலிப்பது நிற்கும். அதன் பின் ஐந்தரையிலிருந்து ஆறரை வரை ஸ்டடி-ஹவர். அதற்குப் பின் சூர்ய நமஸ்காரம். பின்னர் குளியல். அதன் பின்னர் இறை வழிபாடு (தினத்தில் மூன்று முறை வழிபாடு). இப்படி ஒரு கல்லூரி இருந்ததா என்று கேட்டீர்களானால், சத்தியமாக சொல்கிறேன். இத்தகைய ஒரு கல்லூரியில் தான் நான் மூன்று வருடம் படித்தேன். ஐந்து மணிக்கு ஸ்பீக்கரில் அலற விடப்படும் இறை பக்திப் பாடல்களின் மேல் எவ்வளவு வெறுப்பு இருந்திருக்கும் என்பது புரிந்து கொள்ள முடியும். ஆனால் இருபத்தியெட்டு வருடங்களாக மறந்துவிட்ட அந்த பாடலின் மீது கல்லூரி காலங்களில் அதிக ஈர்ப்பு இருந்தது. அது ஒலிக்கும் அந்த விடியற்காலத்தில் குருவாயூரப்பன் சுவாமிக்கு நடத்தப்படும் தைலாபிஷேகம், கும்பாபிஷேகம், விஸ்வரூப தரிசனம் முதலானவற்றை விவரித்து நாராயணனை வழிபடும் பாடல் ஏனோ என்னை மிகவும் ஈர்த்தது. ஐந்து மணிக்கு மாணவர்களை எழுப்புவதற்காகவே ஸ்பீக்கரில் அதிக கனபரிமாணத்தில் அலற விடப்படும் எந்த பாடல் எந்த மாணவனுக்கு பிடித்தமாக இருக்கும்? ஆனால் அந்த குருவாயூரப்பன் பாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனக்குள்ளேயே (அதாவது எனக்கு மட்டும் கேட்கும்படியாக…மற்றவர்களுக்கு ஏன் துன்பம் தர வேண்டும்?) அந்த பாடலை நான் பாடிக் கொள்ளும் போது நெகிழ்ந்து போவேன்.

சரி மறந்து போன பாடலை திரும்ப ஏன் ஞாபகத்தில் கொண்டு வர வேண்டும்? மறந்துவிட்டதாகவே இருக்கட்டுமே? “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே” பாடல் மறந்து போகுமா என்ன? அந்த பக்திப் பாடல் தானே காலத்தை வென்ற பாடல்! இந்த குருவாயூரப்பன் பாடலுக்கு அல்பாயுசு என விட்டுவிட வேண்டியது தானே! ஓரிரு வாரங்களாக அந்த பழைய பாடலை மீண்டும் தேடிக் கண்டுபிடிக்கும் உந்துதல் அதிகமாகிவிட்டது. இறந்த காலத்திய நினைவுகளுடன் மீண்டும் தொடர்பேற்படுத்திக் கொள்ளும் ஆசையிது என்று நான் கருதவில்லை. இறந்த காலத்திலிருந்து ஒரு புதையல் வேட்டை என்று ஒரு விளையாட்டாகவே இதைக் கருதினேன்.

பாடலின் மெட்டு மனதில் இருந்தால் முதல் வரி ஞாபகமிருக்கும். மெட்டு ஞாபகமில்லை. இரண்டாவது வரியில் “குருவாயூரப்பா” எனும் சொல் வரும். அந்த சொல்லை வைத்து தேடினால் ஆயிரக்கணக்கில் பாடல்கள்- தமிழில் மலையாளத்தில். ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன், எஸ்பிபி, கே வீரமணி என்று பல பாடகரகள் குருவாயூரப்பன் மீது ஆல்பம் போட்டிருக்கிறார்கள். அந்த பாடலில் வரும் இன்னொரு சொல் ஞாபகத்தில் இருந்தது. “மயிற்பீலி கிரீடம்” எனும் சொல் முதலாம் சரணத்திலோ இரண்டாம் சரணத்திலோ வரும். அந்த சொல்லை வைத்து தேடினால் பல மலையாள பாடல்கள் வரிசையாக வந்தன. அநேகமாக எல்லா குருவாயூரப்பன் பாடல்களிலும் “மயிற்பீலி கிரீடத்தை” பயன்படுத்தியுள்ளார்கள். இணையத்தில் தேடும் முயற்சியை சில மணி நேரம் நிறுத்தி வைத்தேன். ஆனால் உந்துதல் மேலும் அதிகமானது. இறந்த காலத்தின் ஒரு நினைவுத் துண்டு எப்படி நம்முடன் இல்லாமற்போகலாம்? ஓர் அவஸ்தையாக உருமாறத் தொடங்கிற்று அந்தத் தேடல். நேற்றிரவு தூக்கம் வராமல் புரண்டு படுத்தேன். குருவாயூரப்பனும் மயிற்பீலி கிரீடமும் என் மனத்துடனான உரையாடலில் வந்தவாறிருந்தன. “இது என்ன பைத்தியக்காரத்தனம்” என்று என் மனத்தை கடிந்து கொண்டேன். சற்று அமைதி. ஓரிரு நிமிடங்களாகியிருக்கும். இறந்த காலத்திலிருந்தா அல்லது ஞாபக அடுக்கிலிருந்தா….மெட்டை முணுமுணுக்க ஆரம்பித்தேன்…இரண்டாம் வரியில் “குருவாயூரப்பா” சரியாகப் பொருந்தியது. இரண்டாம் முறையாக மெட்டை முணுமுணுக்கும் போது முதல் வரி கிடைத்துவிட்டது.

“வைகறை பாடும் இன்னிசையோடு வாசல் திறக்கிறது
குருவாயூரப்பா எனும் கோஷம் அழைக்கிறது”

பி சுசீலாவும் கே வீரமணியும் பாடியிருக்கிறார்கள். இப்போது கேட்கும்போது டிபிகல் டெவோஷனல் ட்யூனாக ஒலிக்கிறது. இருந்தாலுமென்ன இறந்த காலத்திலிருந்து மீட்டெடுத்த இந்த நினைவு விளையாட்டு உற்சாகம் கொடுத்தது. நினைவுக்கு முன்னால் இணையம் ஒன்றுமில்லை. கடவுச் சொல்லை நினைவுதான் தர வேண்டும்.

ருபைய்யத்துக்கு இன்னொரு தமிழ் மொழிபெயர்ப்பு ஏன் ?

ரூமி பல காலமாக என்னை திக்குமுக்காட வைத்துக் கொண்டிருக்கிறார். அவர் கவிதைகள் என்னை புதிர்சுவைக்குள் மூழ்கி தத்தளிக்க வைக்கின்றன. அவர் எழுதிய பர்ஸிய மொழியில்  இயங்கிய மேலும் சிலரும் ரூமியுடன் சேர்ந்து என்னை மேலும் பித்து நிலைக்கு அழைத்துச் செல்கின்றனர். ஹபீஸ், சொராப் செபெஹ்ரி, ஓமர் கய்யாம் – இம்மூவரும் ரூமியுடன் சில காலம் முன்னர் சேர்ந்து கொண்டவர்கள். இவர்களை வாசிப்பது ஆங்கில மொழியாக்கம் வாயிலாக என்பது ஒரு குறை. முக்கால் வாசி மொழிபெயர்ப்புகள் மூலத்தை சரியான வகையில் பிரதிபலிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. எனினும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு வாயிலாகவாவது நம்மால் வாசிக்க முடிகிறதேயென்று திருப்திபட்டுக் கொள்ள வேண்டியதுதான். 

Rumi & Hafez

ஹஃபிஸ் கிட்டத்தட்ட ரூமி போலத்தான். படிமங்களும் குறியீடுகளும் நிறைந்த சுஃபி இலக்கியத்தின் பிதாமகர்கள் இவ்விருவரும். செபெஹ்ரி ஒரு நவீன கவி. ஓவியக் கலையிலும் தேர்ந்தவர் என்பதால் அவருடைய சொற்களுக்கு வர்ண தூரிகையின் குணம் உண்டு. இருப்பினும் ரூமி, ஹபீஸ் போன்றோரின் படைப்புகளைப் போன்று செபெஹ்ரியின் அனைத்து கவிதைகளையும் எளிதாக உளவாங்கிக் கொள்ள முடிவதில்லை. வாசகரின் உழைப்பை அதிகம் கோருபவையாக உள்ளன செபெஹ்ரியின் கவிதைகள். 

Sohrab Sepehri

ரூமிக்கும் இரண்டு நூற்றாண்டுகள் முன்னர் வாழ்ந்த ஓமர் கய்யாம் வேறு ரகம். கணிதவியல், வானவியல் போன்ற துறைகளில் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை செய்த கய்யாம் வாசகர்களை நன்கு ‘நக்கலடிக்கிறார்’. “எதைப் பற்றி எழுதியிருக்கிறேன் கண்டு பிடியுங்கள்” என்றுசவால் விடுகிறார். மது, போதை, என கிடடத்தட்ட அனைத்து “ருபைய்யத்”களிலும்  வருவதைப் பார்த்து “இது நம்ம ஆளு” என்று “குடிமக்கள்” அவரை கொண்டாடுவதை பார்த்தால் தன் கல்லறையிலிருந்து ஓமர் கய்யாம் வயிறு குலுங்க சிரிக்கக்கூடும். 

எட்வர்ட் பிட்ஸ்ஜரால்ட்-டின் உலக புகழ் பெற்ற மொழியாக்கம் ஓமர் கய்யாமின் மீது உலக அரங்கில்  வெளிச்சம் பாய்ச்சியது. ஈரடிகள் எனப்படும் ருபைய்யத்களை வெறித்தனமாக தன் வாழ்நாள் முழுதும் திரும்பத்திரும்ப மொழிபெயர்த்து வந்தார் எட்வர்ட். முதல்பதிப்புக்கு பிறகு தன் மொழிபெயர்ப்பில் பல திருத்தங்களை அவர் செய்தாலும் அவருடைய முதல் பதிப்பு கிட்டத்தட்ட ஒரு மறு-ஆக்கம் என்று பல பர்ஸிய மொழி வல்லுனர்களால் கருதப்படுகிறது. 

கவிமணியின் தமிழ்மொழிபெயர்ப்பு ஒன்று ருபைய்யத்துக்கு உண்டு. அதிலிருந்து கீழ்வரும் வரிகள் மிகப்பிரபலம் :-

வெய்யிற்கேற்ற நிழலுண்டு  வீசும் தென்றல் காற்றுண்டு 
கையில் கம்பன் கவியுண்டு  கலசம் நிறைய மதுவுண்டு 
தெய்வகீதம் பலவுண்டு  தெரிந்து பாட நீயுண்டு
 வையந் தருமிவ் வனமன்றி  வாழும் சொர்க்கம் வேறுண்டோ!

கவிமணியின் மொழிபெயர்ப்பு இனிமையானது. மரபுக்கவிதை வடிவத்தில்  அவர் மறு ஆக்கமாக அதை மொழிபெயர்த்திருந்தார். இந்த மொழிபெயர்ப்பில் வரும் “கம்பன் கவி” என்னும் motif ஓமர் கய்யாமின் உலகில் இருந்திருக்க வாய்ப்பில்லை. இதுபோல நம் மரபின் motif-களை பல இடங்களில் கவிமணி பயன்படுத்தியிருப்பார். மறு ஆக்கம் என்பதனால் அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. எனினும், குறியீடுகளை, படிமங்களை திரும்ப திரும்ப சொல்லும் சுஃபி இலக்கியத்தின் ஒரு தன்மை கவிமணியின் மறு – ஆக்கத்தில் இல்லாமல் போய்விட்டதோ எனும் சம்சயம் எனக்குண்டு.

ஊழ் வலிமை, தர்க்கங்களின் பயனற்ற தன்மை, கடவுட்தன்மையின் துளி உலக விஷயங்களில் இருத்தல், கடந்த கால சோகங்கள் மற்றும் எதிர்கால கவலைகள் – இவற்றை ஒதுக்கி இன்றைய பொழுதில் மட்டும் கவனம்செலுத்துதல் – ஆகிய தரிசனங்களை வழங்கும் motif-கள் இந்தியமரபிலும் உண்டு. கவிமணியின் மொழிபெயர்ப்பில் அவை உரிமையுடன் பயன்படுத்தப்பட்டிருப்பது ருபைய்யத்தின் சுஃபி தன்மையை நீர்க்கச் செய்கிறதோ என்று நான் நினைக்கிறேன்.

ருபைய்யத்துக்கு ஒரு நவீன தமிழிலான மொழிபெயர்ப்புக்கு இடமிருக்கிறது. மரபு வடிவத்தின் வரம்புகளின்றி வசனநடையிலான மொழிபெயர்ப்பு சுஃபி தரிசனங்களை உள்ளவாறே தமிழில் நிகழ்த்திக்காட்ட உதவும். ஒரே irony – மொழிபெயர்க்க இன்னொரு மொழிபெயர்ப்பையே – எட்வர்ட் பிட்ஸ்ஜெரால்டையே நம்பவேண்டியிருக்கிறது! சுமார் ஏழெட்டு ருபைய்யத்களை சாம்பிளுக்காக மொழிபெயர்த்தேன்.  அனைத்து ருபைய்யத்துக்களையும் மொழிபெயர்க்கும் திட்டம் உண்டு.

—–

ஜாம்ஷிட் மன்னன்
குடித்து கும்மாளமிட்ட
சபைகளில்
சிங்கமும் பல்லிகளும்
குதித்து விளையாடுகின்றன
கிறித்துவர்களை
வேட்டையாடிய பஹ்ராம்
மீளாத் துயிலில் கிடக்க 
அவன் தலையை காலால் 
உருட்டியது ஒரு வனக்கழுதை

__

வாதம், முயற்சி
என முடிவிலி தேடலில்
எத்தனை காலம்?
பழமற்றோ
கசந்த பழத்துடனோ
கவலையில் மூழ்குவதை விட
கனிந்த திராட்சையுடன்
 சந்தோஷத்தில் திளைப்பது சிறந்தது.

__

தோழர்களே
வெகுகாலம் கழித்து
வீட்டில் 
என் புது திருமணத்திற்கான
கொண்டாட்டம்
என் படுக்கையிலிருந்து
மலட்டு தர்க்கத்தை துரத்தி 
விவாகரத்து செய்துவிட்டு
திராட்சைக் கொடிமகளை 
மனைவியாய்க் கொண்டேன்

— 

கோப்பையை நிரப்பு ;
நம் காலுக்கு கீழ்
காலம் நழுவிச் செல்லுதல் பற்றி 
பேசிப் பயன் என்ன?
பிறக்காத நாளையும்
இறந்த நேற்றும் –
இவற்றுக்காக கவலைப்படுதல் வியர்த்தம்,
இன்று இனிதாயுள்ளபோது!
(XXXVII)

__

 சுழலும் சொர்க்கத்திடமே
 நான் கேட்டேன்-
“இருட்டில் தடுமாறும்
சிறு குழந்தைகளை வழிநடத்த
என்ன விளக்கை வைத்துள்ளது ஊழ்?”
சொர்க்கம் சொன்னது : “கண்மூடித்தனமான புரிதல்”

__

உள்ளே வெளியே
மேலே, சுற்றியெங்கும், கீழே –
வேறொன்றுமில்லை
சின்ன பெட்டிக்குள் நடக்கும் 
மந்திர நிழல்கூத்து 
மெழுகுவர்த்தியே சூரியன் 
அதைச் சுற்றி
வேதாள உருவங்கள்
வருவதும் போவதுமாய்

 __ 

ஆற்று விளிம்பில்
ரோஜாக்களின் வீச்சு
மூத்த கய்யாமிடம் 
செந்நிற, பழம்பானம்
இருண்ட கோப்பையுடன்
தேவன் உன்னை அணுகுகையில் 
அதை எடுத்துக்கொள் 
தயங்காதே
        (XLVIII)

__

யாரும் இதற்கு பதிலளித்ததில்லை ;
துரதிர்ஷ்டகரமாக பண்ணப்பட்ட
கிண்ணமொன்று மௌனம் காத்து
பின்னர் பேசியது:
“மோசமான அனைத்துடனும் 
சாய்வு கொண்டிருத்தலால்
அவர்கள் என்னை நிந்திக்கிறார்கள்;
குயவனின் கை அதிர்ந்ததா என்ன?” 
       ( LXIII)

__ 

Omar Khayyam

சும்மா இரு

naturedoesnothurry

“சும்மா இரு சொல்லற என்றலுமே” என்று கந்தர் அனுபூதியில் வரும். “சும்மா இரு” “சொல்லற” – இவையிரண்டும் முருகப்பெருமான் அருணகிரிநாதருக்கு தந்த போதனைகள். இதன் அர்த்தம் என்ன என்பதை அருணகிரிநாதரால் அப்போது சரியாக உணர்ந்து கொள்ள முடியவில்லை. திரும்பத் திரும்ப அவ்விரு போதனைகளைக் கூறிக் கொண்டே அதில் ஆழ்ந்து போனார்.

அருணகிரிநாதரைப் போலவே பட்டினத்தாருக்கும் இக்குழப்பம் இருந்திருக்கிறது. பட்டினத்தார் சொல்கிறார் : “சும்மா இருக்கவைத்தான் சூத்திரத்தை நானறியேன் அம்மா பொருளிதென அடைய விழுங்கினண்டி”

சும்மா இருக்க முடியாததால் தெய்வத்தின் துணையை நாடுகிறார் தாயுமானவர் :

“சொல்லால் முழக்கிலோ சுகமில்லை ; மௌனியாய்ச்
சும்மா இருக்க அருளாய்”

சும்மா இருப்பது சாத்தியமா? எல்லா உயிர்களும் சதா இயங்கியவாறு இருக்கின்றன என்று கீதையில் கண்ணன் கூறியிருக்கிறானே! சும்மா எப்படி இருப்பது?அருணகிரிநாதர் மற்றும் தாயுமானவர் போன்ற சித்தர் பெருமக்களின் ஆன்மீக தேடலில் சும்மா இருத்தல் எனும் கருவி நன்கு உதவி புரிந்திருக்கக்கூடும் என்பதற்கு ஆதாரங்களாக அவர்கள் இயற்றிய கருத்துச் செறிவான ஆன்மீக நூல்கள் இருக்கின்றன.

+++++

என் நண்பன் டேவிட் தன்னுடைய முகநூல் சுவரில் கீழ்க்கண்ட நிலைத்தகவலை இட்டிருந்தான் :-

divinetiming1

மேல்கண்ட நிலைத்தகவலை வாசித்ததும் எனக்கு அருணகிரிநாதரின் வரி ஞாபகத்துக்கு வந்தது. “சும்மா இருத்தல்” என்பதைத்தான் டேவிட் மேற்கண்டவாறு எழுதியிருக்கிறானா? நம்பிக்கைப் பூர்வமாக வாழும் ஒருவன் எந்த வித நிர்பந்தத்துக்கும் ஆளாகாமல் சரியான சமயத்தில் சரியான காரியத்தைச் செய்வதைத்தான் “சும்மா இருத்தல்” குறிக்கிறதா? அவசரப்படாமல் காரியங்களைஅணுகுதலையும், காரியங்களில் ஈடுபடும் அவசியம் இல்லாத  சமயங்களில் பொறுமையுடன் இயல்பாயிருத்தலையும் அகத்தூண்டுதல் நிகழும் சமயங்களில் உத்வேகத்துடன் ஆனந்தம் மேலிடச் செய்ய வேண்டியவற்றை செய்தலையும் “சும்மா இருத்தல்” என்ற சொற்றொடர் குறிக்கலாமோ?

டேவிட் இட்ட நிலைத்தகவலுக்குக் கீழ் அவனுடைய நண்பர்கள் சிலர் சுவை மிக்க பின்னூட்டங்களை இட்டனர்.

அ : “நீங்கள் சொல்வது உண்மை என்று ஒத்துக் கொண்டாலும் தனியார் நிறுவனத்தில் பணி புரியும் ஒருவனால் நீங்கள் சொல்லும் வழிமுறையை செயல்படுத்துதல் சிரமம்! என்ன சொல்கிறீர்கள்?

டேவிட் : சுயதொழில் செய்யும்  ஒருவனுக்கு இது எளிது, என்னைப்போல! நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு?……கூர்ந்து கவனித்தால் வாழ்க்கையைப் போல நிறுவனங்களினுள்ளும் இடையறாத்தன்மை கொண்ட ஒரு தாரணம் இருக்கிறது என்பதை உணரலாம் ; நிறுவனங்களின் இத்தன்மை உத்வேகத்துடன் வேலை செய்யும் வழியையும், அவ்வழி வாயிலாக இலக்கை அடைவோம் என்கிற நம்பிக்கையையும் கண்டிப்பாக உண்டு பண்ணும். என்ன தான் அவசரமாக இருந்தாலும், நீ செய்ய வேண்டிய காரியம் தானாக உன்னுடன் பேசும் வரை கொஞ்சம் பொறுத்திரு ; உன்னுணர்வில் ஒரு பாய்ச்சல் ஏற்படும் வரை காத்திருந்து பிறகு அக்காரியத்தைச் செய்வதால் மகிழ்ச்சி பெருகும்;  வேகமாக  அக்காரியமும் முடிவடையும்.

நிகழ்காலத்தில் முழுமையாக சஞ்சரித்தலே இது. இப்பிரபஞ்சத்தையும்,உன்னையும் உண்மையாக நம்புதலே இது.

அ : உத்வேகத்துக்காகக் காத்திருக்கும் போது காரியத்தைச் செய்யாமல் தவிர்க்கிறோமோ என்ற சந்தேகம் ஏற்படாதா?

டேவிட் : நல்ல கேள்வி! சீரான நடைமுறையால் இந்தத் தேர்ச்சியைப் பெற முடியும். நம் உடல் தரும் சமிக்ஞைகளைச் சரியாகப் புரிந்து கொண்டு, அதன் மாறாத தொடர்பில் இருந்து வருதலின் வழி இது சாத்தியம். நம் உடல், நம் உணர்ச்சிகள்…இவையெல்லாம் நம்மைப் பற்றிய ஏதாவதோர் உண்மையை நமக்குச் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. ஏதாவதொரு விஷயம் நமக்கு உவர்ப்பாக இருந்தால், நம்மின் ஏதோவொரு பாகம் அவ்விஷயம் சார்ந்த அனுபவத்தை வேண்டாமென்கிறது என்று பொருள். நமக்கான உண்மையை நாம் இவ்விதமாக பெறலாம். “இந்நேரத்தைப் பயன்படுத்த எனக்கான சிறந்த வழி என்ன?” என்பது போன்ற வினாக்கள் கூட வேறுபட்டதொரு விடைக்கான புது கதவை திறந்து விடக்கூடும்; கடமை மற்றும் நிபந்தனை சாரா விடையாக அது இருக்கலாம்

அமைதியாக ஆசனமிட்டமர்ந்து, சுவாசத்தை உற்றுக் கவனித்தல் போன்ற  செயல்பாடுகள் நம்முள்ளிருக்கும் தெளிவின்மையை விலக்கலாம் ; புதிய சிந்தனைகளைத் தூண்டலாம். சொல்லப்போனால் நம் உடலை, நம் செயல்பாடுகளை, நமது நேரத்தை நாம் மதிக்காமல் இருத்தலே நம்முடைய முக்கியமான பிரச்னை. நம்முள் நாம் ஆழமாக இணையும் போது தெய்வீக காலம் (Divine Timing) பூத்துச் சொரிகின்றது. ஆம், சில சமயம் நமக்குப் பிடிக்காத செயல்களை நாம் செய்தே தீர வேண்டியதாயிருக்கிறது. அதையும் நம்முடனாக ஆழ்ந்த இணைப்பின் மூலமாக வலிமையுள்ளதாக்கிக் கொள்ள முடியும். பிடிக்காத காரியத்தை அழுது கொண்டே செய்யாமல், “இக்காரியத்தின் சரித்தன்மை அல்லது விளையப் போகும் நன்மை என்ன?” என்பது போன்ற கேள்விகளை எழுப்பலாம். குப்பை பொறுக்கும் காரியத்தைச் செய்பவன் நம் குப்பையை அள்ளிச் சென்று நம்மிடம் காட்டும் அன்பின் பரிமாணம் போன்று நாம் செய்யும் நமக்கு விருப்பமில்லாத காரியத்தின் பின்னிற்கும் அன்பின் பரிமாணத்தைப் புரிந்து கொள்ள முயலலாம்.

ஆ : நம்மைத் தவிர நாம் எதையும் கட்டுப்படுத்தி விட முடியாது. ஆகவே நாம் செய்ய வேண்டியதை  தானாக நம்முள்ளிருந்து வரவிடுவதே உத்தமம். இயற்கையைப் பார். எது எது நிகழ வேண்டுமோ அது அது அந்தந்த காலத்தில் நிகழ்கின்றன. இயற்கை அவசரப்படுவதை யாரும் பார்த்ததில்லை.

இ : தெய்வீக காலம் என்னும் கருத்து வூ-வெய் (wu-wei) என்னும் டாவோயிசக் (Taoism) கருத்தை எதிரொலிக்கிறது என்று எண்ணுகிறேன். வூ-வெய் என்றால் செய்கையற்ற செய்கை என்று அர்த்தம். வூ-வெய் படி வாழ்வது என்பது சுய-கர்வத்தை விடுத்து, உணர்ச்சி முனைப்பு மிக்க முயற்சிகளைக் கைவிட்டு, சுயத்தை விடப் பெரிதான, நம்மைக் கடந்து நிற்கும் சக்தியின் கட்டுப்பாட்டில் இயங்க  நம்மை அனுமதித்தலை குறிக்கும். வூ-வெய்யை நீருடன் உருவகப்படுத்துவர். எந்த கொள்கலத்தில் அமைகிறதோ அதன் வடிவத்தை தண்ணீரானது பெற்றுக் கொள்கிறது. எங்கு பாய்ந்தாலும் தாழ்வான இடத்தை நோக்கி பயணிக்கிறது. தண்ணீரைப் போன்று நாமும் அதீத பிரயத்தனமின்றி டாவோவுடன் இணைத்துக் கொண்டு பாய்ந்தால்  வாழ்வின் இனிமையில் மூழ்கித் திளைக்கும் தருணங்களை நாம் சென்றடைவோம்.

நான் சொன்னது அருவமான, கற்பனாவாத கருத்தியல் போன்று ஒலிக்கலாம். வூ-வெய் தத்துவத்தை நடைமுறை வாழ்க்கையில் நான் எவ்விதம் செயல்படுத்துகிறேன் என்பதற்கு ஓர் உதாரணம் தருகிறேன். ஃபார்ச்சூன் 500 நிறுவனமொன்றில் நான் வேலை செய்கிறேன்.  அ சொல்கிற மன அழுத்தமடையச் செய்யும் கார்ப்பரேட் கலாச்சாரத்தில் ஊறிய சூழல் என்னுடையது. இச்சூழலில் நான் வூ-வெய் தத்துவத்தை இவ்விதம் செயல்படுத்துகிறேன் : குறுகிய காலக்கெடுவில் முடிக்க வேண்டிய ப்ராஜெக்டுகள் என் அதிகாரிகள் என்னிடம் கொடுத்த வண்ணம் இருக்கின்றனர். அப்பிராஜெக்டுகளை வெற்றிகரமாக முடிக்கத் தேவையான தகுதி வாய்ந்த மனித ஆதாரங்களோ கருவிகளோ பெரும்பாலும் கொடுக்கப்படுவதில்லை. வூ-வெய் தத்துவம் எனக்கு அறிமுகமாவதற்கு முன்னரெல்லாம் இத்தகைய பிராஜெக்டுகள் எனக்கு அளிக்கப்படுகையில் நான் மிகவும் பீதியடைவேன் ; நிறைய சக்தியை விரயமாக்கி பதட்டத்தை அதிகரித்துக் கொண்டு, நாலாபுறமும் அலைந்து திரிந்து, செயல்களை வேகப்படுத்தும் முயற்சியில் மெனக்கெடுவேன் – சக்கரத்தின் மேல் ஏற முயலும் வெள்ளெலியைப் போல். இப்போது அப்படியல்ல. பணியை என்னிடம் ஒப்படைக்கும் அதிகாரியின் கட்டளைகளை கவனமாகக் கேட்டு உள்வாங்கிக் கொள்கிறேன். பிறகு விரைவாக இப்பணியைச் செய்து முடிப்பதற்கான விஷயங்களுள் என் கட்டுப்பாட்டுக்குள் இருப்பவற்றையும் இல்லாதவற்றையும் என் மனதில் பட்டியலிட்டுக் கொள்வேன். என்னால் மட்டும் செய்ய வேண்டியவற்றை உடன் செய்து முடித்து விடுவேன். ப்ராஜெக்டை முன்னோக்கி எடுத்துச் செல்வதில் எழும், முட்டுக்கட்டைகளை நீக்குவதற்கு முட்டி மோதி இமாலய முயற்சிகளில் நான் ஈடுபடுவதில்லை. சம்பந்தப்பட்டவர்களிடம் அமைதியாகப் பேசி சூழ்நிலையை தெளிவுபடுத்தி இடையில் தோன்றும் தடைகளை அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்வேன். பொதுவாக நிலைமை என்னவென்று எடுத்துக்காட்டினால் அதிகாரிகள் அமைதியாகி விடுவார்கள்.

சுயமுக்கியத்துவம் பற்றிய கவலையும் மற்றவர்களுக்கு நிரூபித்துக் காட்ட வேண்டும் என்ற வேட்கையுமே பாதி பதற்றத்துக்குக் காரணம் என்ற தெளிவு பிறந்தது. மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்ற கவலையற்று, செய்ய வேண்டிய காரியத்தில் மட்டும் மனதைக் குவித்தேன். நான் என்கிற புள்ளியிலிருந்து உலகச் சேவை என்ற புள்ளி நோக்கி நான் நகரத் துவங்கிய போது அதுவரை காணாதிருந்த பல தீர்வுகள் என் கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்தன.

வூ-வெய்-யோ தெய்வீக நேரமோ ஒன்றும் செய்யாதிருக்கும் நிலையைச் சுட்டுவனவல்ல ; நம் உடல் நமக்குச் சொல்லும் உண்மையைக் கேட்டு, புற நிலையை கவனித்து செய்கை புரிதல் லாபகரமா அறிவுடமையா என்ற கேள்விக்கு விடையளித்து, பிறகு பொருத்தமான காரியத்தில் ஈடுபடுதலையே இவ்விரு சொற்றொடர்களும் குறிக்கின்றன. செய்கையற்றிருப்பது போன்ற பிரமையைக் கொடுக்கும் நேரத்தின் முடிவில் தானாகத் தோன்றிய இயற்கையான செய்கைகளே அவை.

ஈ : தெய்வீகநேரம், வூ-வெய் போன்ற வழிமுறைகள் இன்றைய நுண்ணறிவில்லா வாழ்க்கை முறையில் பயன்படுத்தப்படாதவைகளாக ஆகிவிட்டன. அவற்றின் அவசியத்தை இன்றைய சமூகம் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. மாறாத செயலியக்கமும் நுகர்வும் நமக்கு உதவி புரியவில்லை ; மாறாக நம்மை மிகவும் களைத்தவர்களாக ஆக்குகின்றன என்கிற தெளிவு என்றைக்கு நமக்குப் பிறக்கிறதோ அன்று நாம் வூ-வெய் படி வாழத் தொடங்குவோம்.

அ : இப்பிரபஞ்சம் சதாசர்வகாலமும் இயங்கிக் கொண்டே இருக்கின்றது என்று கீதாசார்யன் சொல்கிறானே! கீதைக்கும் டாவோயிஸம் சொல்லும் வூ-வெய்க்கும் ஏதாவது பொதுப்புள்ளி இருக்கிறதா?

உ : கீதையின் நான்காம் அத்தியாயத்தில் கண்ணன் சொல்கிறான் : “செய்கையில் செயலின்மையும் செயலின்மையில் செய்கையும் எவன் காணுகிறானோ, அவனே அறிவுடையோன். அவன் எத்தொழில் செய்கையிலும் யோகத்திலிருப்பான்”

செயலின்மையில் செய்கையைக் காணும் திறம் பெற்றோர் விஷயங்கள் தானாக வெளிப்பட அனுமதிக்கிறார்கள். எது செய்கை? எது செயலின்மை? என்ற குழப்பம் அவர்களுக்கு இருப்பதில்லை.

செய்கையற்றிருத்தலின் முடிவில் இயற்கையாக வெளிப்படும் செயல்களை மட்டும் செய்வது என்கிற டாவோயிசக் கருத்தைத் தானே மேற் சொன்ன கீதையின் வரிகள் எதிரொலிக்கின்றன!

divinetiming

மிலிந்தனின் கேள்விகள் 2

milin
சொல்வனம் இதழ் 80 இல் வெளியான கட்டுரையை வாசித்த நண்பர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். “முன்னுரையில் ஆர்வமூட்டும் இரண்டு வினாக்களைப் பட்டியலிட்டு அவற்றிற்கு மிலிந்தா பன்ஹா விடையளிக்கிறது என்றீர்கள்; முழு கட்டுரையிலும் ’ஆன்மா இல்லையென்றால், மறுபிறவியில் பிறப்பது எது?’ மற்றும் ‘ஆன்மா இல்லையென்றால், இப்போது பேசிக்கொண்டிருப்பது எது?’ என்ற வினாக்களுக்கு விடை இல்லையே” என்றார். மற்ற வாசகர்களுக்கும் இது தோன்றியிருக்கலாம்.

இவ்விரண்டு வினாக்களுக்கும் “மறுபிறப்பு” என்ற இரண்டாவது அத்தியாயத்தில் விடை இருக்கிறது. அதன் சில பகுதிகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்

(1)

”நாகசேனரே, மறு பிறப்பெடுத்த ஒருவன் அதே மனிதனா? அல்லது வேறொருவனா?”

”அவனுமில்லை. வேறொருவனுமில்லை”

”உதாரணம்?”

”பானையில் இருக்கும் பால், தயிராகவும், பின்னர் வெண்ணையாகவும், பிறகு நெய்யாகவும் மாறுகிறது. நெய், தயிர், வெண்ணை இவை எல்லாம் பாலைப் போன்றதே என்று சொல்வது சரியானது அல்ல; ஆனால் அவைகளெல்லாம் பாலில் இருந்து வந்தவையே, எனவே அவைகளெல்லாம் வேறுவேறானவை என்றும் சொல்ல முடியாது”

(2)

”மறுபிறப்பெடுக்காமல் இருக்கப் போகிறவன் அதைப் பற்றி அறிவானா?”

“ஆம் வேந்தனே”

”எப்படி அறிவான்?”

“மறுபிறப்புக்கான காரணங்களும் சூழ்நிலையும், முடிவுக்கு வருவதன் வாயிலாக. உழாமல், நடாமல், அறுவடை செய்யாமல் இருக்கும் விவசாயி, களஞ்சியம் நிரம்பவில்லை என்பதை அறிவான்.”

(3)

”மறுபிறப்பெடுக்காமல் இருக்கப் போகிறவன் துன்பத்தை உணர்வானா?”

”அவன் உடல் வலியை உணரலாம் ; மன வலியை உணர மாட்டான்”

“அப்படி அவன் வலியை உணர்வானேயானால், அவன் ஏன் உடன் மரணத்தை தழுவி, தத்தளிப்பில்லாமல், துக்கத்தை முடிவுக்கு கொண்டு வரக் கூடாது?”

”அருகன் வாழ்வின் மேல் விருப்போ வெறுப்போ கொள்ளாதவன். கனியாத பழத்தை அவன் அசைத்து உதிர்ப்பதில்லை; பழத்தின் முதிர்ச்சிக்காக காத்திருக்கிறான். புத்தரின் முக்கிய சீடரும் வணங்குதற்குரியவருமான சரிபுத்தர் இவ்வாறு கூறுகிறார் :-

”மரணமுமில்லை ; நான் நெஞ்சார விரும்புவது வாழ்வுமில்லை.
சம்பள வேலைக்காரன் போல
காலம் கடத்துகிறேன்.
மரணமோ வாழ்க்கையோ அல்ல நான் வேண்டுவது
கவனத்துடனும் தெளிவான புரிதலுடனும்
காலம் கடத்துகிறேன்”
– (தேரகதா 1002-1003)

(4)

”இன்ப உணர்ச்சி ஆரோக்கியமானதா, ஆரோக்கியமற்றதா, அல்லது நடு நிலையானதா?”

”இம்மூன்றில் எதுவாகவும் இருக்கலாம்”

“வணக்கத்துக்குரியவரே, ஆரோக்கியமான நிலைகள் துன்பம் தராதவையாக இருக்குமென்றால், துன்ப உணர்வைத் தருபவை ஒவ்வாதவையாக இருக்குமென்றால், வலியைத் தரும் ஆரோக்கியமான நிலை இல்லாமல்தானே இருக்கும்?” [விளக்கம் : ஆரோக்கியமான கருமங்கள் வலியைத் தருவனவல்ல ஆனால் அக்கருமங்களை செய்தல் கடினம் என்று நாம் எண்ணுவதற்கு காரணம் நம்முடைய பற்றும் வெறுப்புமே. ஒவ்வாத காரியங்களின் விளைவுகள் வலியுணர்ச்சி தருவன ஆனால் அக்காரியங்களைச் செய்து மகிழ்வடையக் காரணம் நம்முடைய மயக்கமே)

”அரசனே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதன் ஒரு கையில் சூடான இரும்பு பந்தையும், இன்னொரு கையில் பனிக்கட்டியாலான பந்தையும் எடுத்துக்கொள்ளுமாறு பணிக்கப்பட்டால், இரண்டும் அவனுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துமா?”

”கண்டிப்பாக”

“அப்படியானால், உங்களுடைய அனுமானம் தவறாகிப் போகும். அவை இரண்டும் சூடானவையாக இல்லாதிருக்குமானால், சூடு அசௌகரியத்தை ஏற்படுத்துமானால் மற்றும் அவை இரண்டும் குளிர்ச்சியாக இல்லாதிருக்குமானால், குளிர்ச்சி அசௌகரியத்தை தருமானால், அசௌகரியம் சூட்டிலிருந்தோ குளிர்ச்சியிலிருந்தோ எழுவதில்லை என்றுதானே பொருள்?”

”உங்களுடன் என்னால் விவாதிக்க இயலாது. தாங்களே விளக்குங்கள்”

பெரியவர் மன்னனுக்கு அபிதம்மத்தை போதிக்கலானார். “இவ்வுலகோடு இணைந்த இன்பங்கள் ஆறு. துறவோடு இணைந்தவை ஆறு. உலகியல் துக்கங்கள் ஆறு ; துறவு சார்ந்த துக்கங்கள் ஆறு. இரண்டு வகையிலும் நடுநிலை சார்ந்த உணர்ச்சிகள் ஆறு. மொத்தம் முப்பத்தியாறு. இறந்த, நிகழ் மற்றும் வருங்காலம் எனும் மூன்று காலங்களிலும் எழும் முப்பத்தியாறு உணர்ச்சிகள் ; ஆக மொத்தம் நூற்றியெட்டு உணர்ச்சிகள்.”

(5)

“நாகசேனரே, மறுபிறப்பெடுப்பது எது?”

“மனமும் பருப்பொருளும்”

“இதே மனமும் பருப்பொருளும்தான் மறு பிறவி எடுக்கிறதா?”

“இல்லை. ஆனால் இம்மனமும் பருப்பொருளும் சேர்ந்து கருமங்களைப் புரிகின்றன. அக்கருமங்களால் இன்னொரு மனமும் பருப்பொருளும் பிறக்கிறது. ஆனால், மனமும் பருப்பொருளும் அதன் முன்னைய கருமங்களின் விளைவுகளிலிருந்து விடுதலையாவதில்லை”

”ஏதாவது ஓர் உதாரணம் தாருங்கள்”

“ஒரு மனிதன் சிறு கனலை ஊதி தன்னை வெப்பப்படுத்திக் கொண்டபிறகு, அக்கனலை அப்படியே எரியவிட்டு அவ்விடத்திலிருந்து அகல்வது போன்றது இது. அக்கனல் பரவி அண்டை வயலொன்றின் விளைச்சலை எரித்து சாம்பலாக்கிவிட்டது என்று வைத்துக் கொள்வோம். அந்நிலத்தின் உரிமையாளன் இம்மனிதனை பிடித்து, அரசன் முன்னால் விசாரணைக்குக் கொண்டு வந்தானென்றும் வைத்துக் கொள்வோம். அப்போது அம்மனிதன் “இந்த ஆளின் வயலுக்கு நான் தீ வைக்கவில்லை. நான் அணைக்காமல் விட்டுப் போன தீயும் வயலை எரித்து சாம்பலாக்கிய தீயும் வேறு வேறானவை. எனவே நான் குற்றவாளியல்ல” என்று சொல்கிறான். அம்மனிதன் தண்டிக்கப்படத்தக்கவனா?”

”நிச்சயமாக. அவன் என்ன சொன்னாலும் பிந்தைய நெருப்பு முன்னர் பற்றி வைக்கப்பட்டதிலிருந்து வந்தது என்பதே உண்மை”

”ஆகையால் இம்மனமும் பருப்பொருளும் சேர்ந்து கருமங்களைப் புரிகின்றன. அக்கருமங்களால் இன்னொரு மனமும் பருப்பொருளும் பிறக்கிறது. ஆனால், மனமும் பருப்பொருளும் அதன் முன்னைய கருமங்களின் விளைவுகளிலிருந்து விடுதலையாவதில்லை”

(6)

”மனம்-பருப்பொருள் பற்றி விளக்கினீர்கள். எது மனம்? எது பருப்பொருள்?”

”எதெல்லாம் தூலமோ அது பருப்பொருள், எதெல்லாம் நுட்பமானவைகளோ அகம் சார்ந்த மனநிலைகளோ அது மனம்.”

“இவையிரண்டும் தனித்தனியே ஏன் பிறப்பதில்லை?”

”முட்டையின் கருவும் ஓடும் போன்றது இது. இவையிரண்டும் சேர்ந்தே எழுகின்றன ; நினைவுக்கெட்டாத காலந்தொட்டு இவைகள் இணைந்தே இருக்கின்றன.”

(7)

“நினைவுக்கெட்டாத காலம்” என்று நீங்கள் சொல்லும்போது, காலம் என்றால் என்ன? அப்படியொன்று இருக்கிறதா?”

”காலம் என்றால் கடந்தது, நிகழ்வது மற்றும் வரப்போவது. சிலருக்கு காலம் என்ற ஒன்று இருக்கிறது ; சில பேருக்கு இல்லை. எங்கு மறுபிறப்பெடுப்பவர்கள் இருக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் காலம் என்ற ஒன்று இருக்கிறது. எங்கு மறுபிறப்பு எடுக்காமல் இருக்கப் போகிறவர்கள் இருக்கிறார்களொ, அவர்களுக்கெல்லாம் காலம் என்ற ஒன்று இல்லை”

“சரியாகச் சொன்னீர்கள் நாகசேனரே. நீங்கள் பதிலளிப்பதில் வல்லவர்”

~~~0~~~

Source : Pesala, Bhikkhu (ed.), The Debate of King Milinda: An Abridgement of the Milindapanha. Delhi: Motilal Banarsidass, 1992. Based on Rhys Davids (1890, 1894)

நன்றி : சொல்வனம் (http://solvanam.com/?p=23844)

Milinda Panha

சார்பியல் : ஒரு வரைபட கையேடு

(RELATIVITY : A GRAPHIC GUIDE என்ற புத்தகத்தின் சில பக்கங்களை படிக்கும் போது வந்த தூக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. புத்தகத்தை மார்பில் மடித்து வைத்தவாறே உறங்கிய போது கண்ட கனவில் பின் வரும் வரிகளை யாரோ படித்தார்கள்)

இடம் காலம் என்ற

இரட்டை தொடர்ச்சிகள்

பிரக்ஞை என்றொரு

மறைபொருளின்

நூல் பொம்மைகள்

நரைத்த மீசை

இரைந்த முடி கொண்ட

இயற்பியல் மேதை

உணர்ந்து சொன்னான்.

+++++

சுவரில் சாய்ந்து

அமர்ந்த படி உறங்கியபோது

அண்ட வெளியில்

பறந்தேன்.

சட்டைப்பையிலிருந்து

விடுபட்ட

என் எழுதுகோலும்

நிலையான சித்திரம் போல்

என்னுடன் சேர்ந்து பறந்தது.

வெகு நேரமாகியது தரையைத்தொட.

குப்புறவிழுந்த நான்

எழச்சிரமப்பட்டேன்.

அறை உருள ஆரம்பித்தபோது

ஒரு மூலையிலிருந்து

எதிர் மூலையில் போய் விழுந்தேனாம்

சில வினாடிகளில் நடந்தேறியதாம்.

உருண்ட அறையிலிருந்து

என்னை மீட்டவர்கள் சொன்னார்கள்.

வெகு நேரமாக பறந்து கொண்டிருந்தேனே!

சில வினாடிகள் மட்டும் கழிந்தன

என்பது எங்ஙனம் சாத்தியம்?

இடங்களின் தூரமும்

கால அளவைகளும்

வெவ்வேறு யதார்த்த தளங்களில்

வேறுபடும் எனில்

யதார்த்தம் என்பதே பிரக்ஞை தானோ?

+++++

அறை உருளுதல்

எப்படி சாத்தியம் என்று

விழித்தவுடன் வினவப்போகும்

உனக்கு ஒரு சமிக்ஞை !

RELATIVITY : A GRAPHIC GUIDE

கட்டிலுக்கு பக்கத்தில்

தரையில் விழுந்து கிடக்கும்.