ஈஸ்வரன்

காசி நஸ்ருல் இஸ்லாம் – இந்த மகாகவிஞன் எந்தச் சிமிழிலும் அடங்காதவன். இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் தீவிரவாதி. ஐநூறுக்கும் மேலான இந்து பஜன்களை இயற்றியவன். மகன்களுக்கும் மகளுக்கும் இந்து-முஸ்லீம் பெயர்களை இணைத்துச் சூட்டியவன். மூத்த மகனுக்கிட்ட பெயர் – கிருஷ்ண முகம்மது. வங்கதேசத்தின் தேசிய கவி. துர்காபூர் விமான நிலையத்துக்கு இவன் பேர் சூட்டப்பட்டிருக்கிறது. மேற்கு வங்கமும் வங்க தேசமும் போட்டியிட்டு இவனைச் சொந்தம் கொண்டாடுகின்றன. மகனும் மகளும் டாக்கா சென்று சேர்வதற்குள் கவிஞன் அடக்கம் செய்யப்பட்டு விட, அவனுடைய புதைக்கப்பட்ட தகனப்பெட்டியை மீண்டும் தோண்டியெடுத்து இந்தியாவுக்கு கொண்டு வந்து புதைக்க வேண்டும் என்ற கோரிக்கை இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. கரடுமுரடான நஸ்ருல் இஸ்லாமின் கவிதைகளின் அழகியல் குருதேவ் தாகூரின் அதிநவீன பாணியுடன் ஒப்பிடுகையில் தனித்துவமானது. நவீன வங்க மொழியில் சமஸ்கிருதமயமான சொற்களை பயன்படுத்தி வந்த காலத்தில் பர்சிய-அரபு மூலச்சொற்களை பயன்படுத்துகிறான் என்பதால் இவன் பெயரைக் குறிப்பிடாமல் கடுமையாக விமர்சனம் செய்தார் குருதேவ் ரவீந்திரர். “கூன்” (ரத்தம்) எனும் பர்சிய மூலச் சொல்லை இஸ்லாம் பயன்படுத்தியதால் விளைந்த மிகப்பெரிய இலக்கியச் சண்டை இது. “ரக்தோ”(ரத்தம்) என்ற சொல்லை ஏன் பயன்படுத்தவில்லை என்று வங்க இலக்கிய உலகமே இரண்டு பட்டது. 1941இல் ரவீந்திரர் மறைந்த போது கண்ணீர் விட்டு அழுதான். செயலாற்றிய இருபதாண்டுகளில் எண்ணற்ற கவிதைகளை பாடல்களை கட்டுரைகளை எழுதிக் குவித்தான். தன்னுடைய பாடல்களுக்கு தானே இசையமைத்து கிராமபோன் ரிகார்டுகளை HMV நிறுவனம் மூலமாக கொண்டு வந்தான். வங்காள மொழியின் திரைப்படம் இயக்கிய முதல் முஸ்லீம் இயக்குனராகவும் திகழ்ந்தான். தாகூர் இறந்த ஓராண்டில் இஸ்லாமை ஒரு வித நோய் பீடித்தது. ஐம்பதுகளை மனநோய் மருத்துவமனையில் கழித்தான். பின்னாளில் சிகிச்சைக்காக ஐரோப்பா சென்ற போது இந்தியாவில் அவனுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று ஐரோப்பிய மருத்துவர்கள் தெரிவித்தனர். நோயிலிருந்து மீளாமல் 1976 வரை வாழ்ந்தான். 1972இல் வங்கதேசம் தனி நாடான போது புது அரசு டாக்காவுக்கு அழைத்துச் சென்று அவனைப் பார்த்துக் கொண்டது.வங்க தேசத்தின் தேசிய கவி என்றும் அறிவித்தது.

ஈஸ்வரன்

இறைவனுக்காக
வானையும் மண்ணையும்
தேய்த்துப் பார்ப்பவன் யார்?
மலையுச்சிகளில் ஏறியும்
காடுகளில் உலவியும்
திரிந்து கொண்டிருக்கும் நீ யார், துறவியே!
புதையலை உன் மார்பில் கட்டிக்கொண்டு
அதனை அனைத்திடங்களிலும் தேடித் திரிகிறாய்
படைப்பு உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறது
நீயோ உன் கண்ணைப் பொத்திக் கொண்டுள்ளாய்
படைத்தோனைத் தேடும் உன் முயற்சியில்
நீ உன்னையேதான் தேடிக் கொண்டிருக்கிறாய்
விருப்பக் குருடனே !
கண்ணைத் திற
உன் வடிவை கண்ணாடியில் பார்
அவனது நிழல்
உன் முழு வடிவிலும் வார்க்கப்பட்டிருக்கும்
வேதத்தின் அதிகாரிகள் மீது
மலைப்போ அச்சமோ கொள்ள வேண்டியதில்லை
நாயகனே!
இறைவனின் செயலர்கள் இல்லை அவர்கள்
அனைத்திலும் வெளிப்படும் அவன்
அனைத்தின் மத்தியிலும் இருக்கிறான்
நான் என்னைப் பார்க்கிறேன்
காணாத என் படைப்பாளியை
அடையாளம் கண்டுகொள்கிறேன்
கடல்-வழி வணிகர்கள்
நகை வர்த்தகம் புரிகின்றனர்
அவர்கள் நகை வணிகர்கள்
நகை செய்தவனை அறிந்தோம்
என்று பாசாங்கு செய்கிறார்கள்
முத்து விளையும் கடல்களின்
ஆழத்தில் என்றும் அவர்கள் மூழ்கியதில்லை
நூல்களை ஆராய்வதற்குப் பதிலாக,
உண்மைக் கடலில் ஆழ்ந்துவிடு நண்பனே

கண் திற

ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும் – எம் டி முத்துக்குமாரஸ்வாமி
தமிழ்வெளி வெளியீடு

குளிரூட்டப்பட்ட காருக்குள் மேற்கத்திய இசையில் லயித்து மதுவருந்தியபடி, பெண்ணொருத்தியின் அங்கங்களை, சிணுங்கல்களை கற்பனையில் ஏற்றிக் கொண்டு கண் மூடிப் பயணம் செய்கிறான். உமது திருச்சட்டத்தில் உள்ள அற்புதங்களை நான் காண என் கண்களைத் திற. – என்கிறது ஒரு விவிலிய வசனம். உடலின் ஒளியாகிய கண் மூடிக்கிடக்கும்போது எதைக் காணவியலும்? 

ஓட்டைக்கண்ணைத் திறந்து ஜன்னல் வழிப் பார்க்கிறபோது அவன் காணும் காட்சி அவனுள் பெரும் மாற்றத்தை உண்டாக்கிவிடுகிறது. ஜன்னல் வழி அவன் பார்க்கும் முதியவனின் முகம் அவனுடைய முகத்தை ஒத்திருக்கிறது. அவன் பார்ப்பது அவனுடைய பிரதிபலிப்பவையேவா? சில வினாடிகளுக்கு முன்னர் போதையுணர்வில் ஆழ்ந்திருந்த அவனை புரட்டிப்போடும் அந்த ஜன்னல் வழி தெரியும் உருவம் நிஜமா, அல்லது அவன் கற்பனை செய்து கொள்ளும் அவனுடைய பிரதிபலிப்பா? 

ஒரு கணத்தில் அவன் தன்னைப் பற்றிய தற்சோதனையில் ஈடுபட்டிருக்கக் கூடுமா? அதற்கான ஒரு சங்கேதமும் அந்தத் தருணத்துக்கு முன் கவிதையில் சித்திரிக்கப்படவில்லை. தீடீர் பெருமாற்றம் நிகழ ஒரு நொடி போதும் என்ற கருத்தை கவிதை சொல்ல வருகிறது என்றுதான் மேல் நோக்காகத் தோன்றுகிறது.

ஆனால், கவிதை சொல்ல வருவது அதனை மட்டுமில்லை என்பதற்கான பல வாசிப்புச் சாத்தியங்களை இக்கவிதை தன்னகத்தே கொண்டுள்ளது. 

கவிதையின் வரும் சில முக்கியக் குறிச்சொற்களைப் பார்ப்போம்.

நகரத்தின் பொறி

முகத்தின் முதிய சாயல்

அழியும் தற்போதம்

தன்னழிவு

இறுதி ஊர்வலம்

சாவு நடனம்

ஓட்டைக் கண்பார்வை

எலிப்பொறியில் சிக்கிக் கொள்ளும் எலிக்கு அடுத்து என்ன நிகழப்போகிறது என்பதை நினைத்து ஏற்படும் கிலியுணர்வைத் தான் நகரத்தின் பொறி நமக்குள் தோற்றுவித்துக் கொண்டே இருக்கிறது. ஓர் இருத்தலியல் சிக்கலின் குறியீடாகப் போக்குவரத்து நெரிசல் கவிதையின் ஆரம்பத்தில் நிகழ்கிறது. கார் நகராமல் அந்த நெரிசலில் காத்திருக்கும். காருக்குள்ளிருக்கும் பயணி நிலைமையின் உதவியற்ற தன்மையை மறுப்பவன் போல “ஜோஷுவா பெல்லின் வாசிப்பில் சாய்க்கோவ்ஸ்கியின் வயலின் இசையை கன்சர்ட்டோ சிங்கிள் மால்ட் விஸ்கியுடன்” உள்ளிறக்கிக் கொண்டிருக்கிறான்.

கார் ஜன்னலுக்கப்புறம் தீடீரென்று வெகுஅருகே வந்து உள்ளே நோக்கும் உருவங்கள் பொதுவாகவே திடுக்கிட வைக்கும். இங்கோ இசையும், மதுவும் பெண் சிந்தனையும் அளைய ஓட்டைக் கண் திறந்து பார்த்தவுடன் தோன்றும் திடுக்கிடல் தடாலென அவனுள் மாற்றத்தை நிகழ்த்திவிடுகிறது. அவன் பார்க்கும் கிழ உருவம் அவனுடய முகத்தின் முதிய சாயல் என்பதாக இருந்தது என்ற குறிப்பு கவிதையில் உள்ளது. யாசகம் செய்யும் பிச்சைக்காரக் கிழவனுடனான உருவ ஒற்றுமையாக அதைப் பார்த்தாலும், மதுவின் போதையில் ஆழ்ந்திருந்தவன் ஓட்டைக் கண்ணைத் திறந்து புறம் நோக்கினானா, அல்லது தன்னுள் நோக்கினானா?

ஒருவனுடைய தற்போதம், அதாவது தன்னினைவு அல்லது ஆணவம் எப்போது அழியும்? போதையுணர்வில் அவனுடைய தற்போதம் நீங்க வாய்ப்பு உண்டெனினும், அப்போதையுணர்விலிருந்து அவன் நீங்க அவனுக்கு மனம் வந்திருக்குமா என்பது சந்தேகம். அழியும் தற்போதம் அகத்தினுள் தன்னுடைய முகத்தின் முதிய சாயலைத் தரிசித்ததனால் விளைந்தது என்பதாகப் பொருள் கொள்ள கவிதை வாய்ப்பளிக்கிறது.

தன்னழிவு என்றால் என்ன? பொதுவாக எதிர்மறைச் சொல்லாக கருதப்படும் பதம் – தன்னழிவு. தற்கொலை, தீக்குளிப்பு முதலான செயல்கள், சுயவதை என்பன போன்றவற்றைத் தன்னழிவு என்ற சொல்லால் குறிப்பர். இக்கவிதையில் சுயத்தின் அழிவு என்பதான அர்த்தத்தில் வாசிக்க இடமிருக்கிறது. மேட்டிமை அடையாளங்களை உடனடியாக இழந்து (யாரோ ஒருவரின்) இறுதி ஊர்வலத்தில் அவன் தன்னை மறந்து நாக்கைத் துருத்திக் கொண்டு சாவு நடனம் ஆடியதில் அவன் இழந்தது எதை? அந்தத் தன்னழிவு தன்னை அழித்துக் கொண்டதைக் குறிக்கிறதா? அல்லது சுயத்தின் அழிப்பைக் குறிக்கிறதா?

“உள், அகநிலை சுயம் மற்றும் வெளி உலகிற்கு இடையே”யான பாலமாக நீண்ட காலமாகவே கண்களைக் கருப்பொருளாகக் கொண்ட ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.  கவனம், உண்மை, தெளிவு, ஒளி, பார்வை, தீர்க்கதரிசனம், விழிப்புணர்வு மற்றும் அவதானிப்பு ஆகிய    கருத்துக்களை நனவில் பரப்பும் கற்பனையைத் தூண்டுவதற்கு முயற்சிக்கும் கலைஞர்களுக்கு கண் ஒரு சரியான அடையாளமாகத் திகழ்கிறது. “பொய்க் கண்ணாடி” என்ற மிகப் புகழ் பெற்ற கண்ணோவியம் ஒன்று உண்டு.  ஓர் உயிர்ப்பில்லா கண். அதற்கு புருவமில்லை. அதன் கண்மணி கடுங்கருப்பு நிறத்தில் இருக்கிறது. அதற்கு மாறாக கருவிழி மேகம் பரவிய நீல வானம். உயிர்ப்பற்ற ஒரு கண்ணில் சுதந்திர வானம் தெரிந்தாலும் அதை ரசிக்கவோ உத்வேகம் கொள்ளவோ முடியுமா?  முதல் உலகப் போரை அசை போடும் ஓவியர் போரில் சிக்கிய மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த பார்வையாளனின் உயிரற்ற சித்தரிப்பைப் பயன் படுத்திக் கொள்ளுகிறார். பயத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாளை அந்தக் கண் நோக்கும்போதும் அது உயிரற்றுக் கிடக்கிறது. 

ஜன்னலில் தெரிந்த அவனுடைய முகத்தின் முதிய சாயல் கொண்ட உருவம் வெறித்து நோக்கிய இவனுடைய கண் பொய்க்கண்ணாடியா? ஓட்டைக் கண் திறந்ததும் பொறியிலிருந்து தப்பி சுதந்திரமாக ஓடும் எலி போல சாவின் நடனத்தில் பங்கு பெறுகிறான் காரில் இருந்தவன். இம்மாறுதல் அவன் கார் ஜன்னல் வழி ஒட்டைக் கண் திறந்ததனால் சாத்தியமாயிற்று. இருத்தலியல் பயம் படிந்து உயிர்ப்பில்லாத மூடிய ஓட்டைக் கண் பார்வை சற்று திறந்ததும் அங்குமிங்கும் மேகம் பரவிய நீல வானத்தின் உண்மையான தரிசனம் கிட்டி வாழ்வின் உயிர்ப்பைத் தழுவிக் கொள்ளும் முயற்சியில் இறங்கினான் காருக்குள்ளிருந்தவன். அடுத்தவரின் இறப்பில் கலந்துகொண்டு சாவு நடனம் ஆடுகிறான். மேற்கத்திய இசை, வசதி, பெண் சுகம் – இவ்வனைத்தும் தப்பித்தல்கள். வாழ்வின் நிகழ்வில் முழுமையாக இருத்தலே இருத்தலியல் தவிப்பின் உண்மையான ஆற்றுப்படுத்தல்கள் என்று Moral of the story பாணியில் எழுதி விடுதல் போல இக்குறிப்பை முடித்துவிடலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கையில், கவிதையின் அர்த்த அடுக்கை மேலும் விரிவாக்குகிறது இன்னுமொரு வினா. நெரிசல் மிக்க சாலையில் இறப்பு ஊர்வலம் செல்கிறது. யாசகம் கேட்கும் முதியவர் கார் ஜன்னலைத் தட்டிப் பிச்சை கேட்பது போல் இருக்கிறது. ஆனால் அம்முதியவர் காருக்குள்ளிருக்கும் இவனை வெளியே அழைப்பது போலவும் உடன் அவர் அழைப்பை ஏற்று அவன் வெளிச் சென்றது போலவும் உள்ளது. இறுதி ஊர்வலத்தில் செல்லும் பிணம், இவன் முகத்தின் சாயல் கொண்ட அந்த முதியவர், காருக்குள் இருந்து இறங்கி சாவு நடனமாடும் இவன் – மூவரும் ஒருவரோ?

ஊர்பேர்

சராசரிக்கதிகமான நினைவாற்றல் எனக்குண்டு என்ற மிதப்பில் இத்தனை வருடங்களாக இருந்தவனுக்கு ஊர்களின் பெயர்களை மறந்து போகிறேன் என்பதை ஏற்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. ஒரு வாரம் முன் சென்ற ஊரை நினைவில் கொண்டு வர முயல்கிறேன். மனதின் காட்சியில் வீட்டிலிருந்து காரில் கிளம்பிய நேரம் ஞாபகமிருக்கிறது. தெருமுக்கில் இருந்த பிக் பஸார் கடையை கடந்து சென்றது, ஹூடா ஐங்ஷன் வந்தபோது நஜஃப்கர் வழியாகச் செல்லலாம் என்று ஓட்டுனர் சொல்கையில் லேசாக தலையாட்டியது – எல்லாம் மனக்காட்சியில் தெளிவாக வந்து விழுந்தன. நஜஃப்கர் தாண்டியதும் குறுகலான சந்தில் காய்கறிச் சந்தை நெரிசலில் சிக்கினோம். சற்று தூரத்தில் காரில் சிஎன்ஜி குறைவு என்பதால் அதை நிரப்புவதற்காக நின்ற போது யாரோ எனக்கு போன் செய்தார்கள். யார் போன் செய்தது? மனைவியோ குழந்தைகளோ நிச்சயமாக இல்லை. அலுவலகத்திலிருந்து வந்த அழைப்பு என்று எண்ணுகிறேன். ஞாயிற்றுக்கிழமை அல்லவா பயணமானோம்? அலுவலகத்திலிருந்தோ வாடிக்கையாளர்களிடமிருந்தோ அழைப்பு வந்திருக்க முடியாது. சிஎன்ஜி நிரப்பிய பின்தான் காய்கறிச் சந்தை நெரிசலில் சிக்கிக் கொண்டோமோ? ஊர் பேரை நினைவுபடுத்திக் கொள்ளச் சென்ற மனப்பயணம் வேறு சிலவற்றையும் நான் மறந்து போகிறேன் என்பதை புலப்படுத்தியது.

எந்த ஊரை நோக்கிப் பயணம் என்பது மூலவினா. அதற்கு விடையளிக்கும் வழியில் நிறைய துணைவினாக்கள். யார் போன் செய்தார்கள்? எனக்கு ஓட்டுனர் பெயரும் ஞாபகமில்லை. காய்கறிச் சந்தை நெரிசல் முதலில் வந்ததா? சிஎன்ஜிக்காக நின்றது முதலில் வந்ததா? தெளிவு என்பது கூரான ஞாபக சக்திதான். இல்லை..அப்படியும் சொல்லிவிட முடியாது. தெளிவு என்பது தெளிவான மன நிலை. நினைவுத் துல்லியம் தெளிவின் முக்கிய அங்கம் என்று சொல்லிக் கொள்ளலாம். 

சிஎன்ஜி ஸ்டேஷனுக்கப்பால் என் மனப்பயணம் நின்றுபோனது. எதையாவது பற்றி நிற்காவிடில் கீழே விழுந்துவிடுவோமில்லையா?  பிடி தளர்ந்து தடுமாறுகையில் ஏதாவது ஒரு நினைவைப் பிடித்துக் கொண்டால் நம் இருப்பு உறுதியாகும்.

குர்கான் வரைபடத்தை விரித்தேன். பக்கத்தில் என்னென்ன ஊர்கள் இருக்கின்றன?  நஜஃப்கரை நோக்கி விரலை நகர்த்தினேன். அதைச் சுற்றி பல ஊர்கள், கிராமங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. ரோகிணி, பகதூர்கர், பவானா……வெறும் பெயர்கள்…..எல்லாம் பெயர்கள்…தலையை அசைத்தேன். பெயர்கள் வைக்காவிடில் ஊர்களுக்கென தனித்த அடையாளம் ஏதேனும் இருக்குமா? வீடுகளும், வயல்களும், குளங்களும், மேடுகளும் பள்ளங்களும் – அவற்றின் எண்ணிக்கைகளும், வடிவங்களும், அமைப்புகளும் மாறுந்தன்மையை வைத்து…குழப்பமாய் இருக்கிறது…என் உடல் எங்கே? நான் இருக்கிறேனா…எனக்கு நினைவிருக்கிறது..எனவே நான் இருக்கிறேன்…எதையோ உதறுவது போல் சைகை செய்தேன்…

“உடம்பை அசைக்காதீங்க” – எனக்கு யாரோ ஊசி போட்டுக் கொண்டிருந்தார்கள். முக கவசம் அணிந்திருந்தனர். 

சற்றுத் தள்ளி ஒரு பெண் சதுர கண்ணாடி பதித்த கதவினுடே நோக்குகிறாள். ஒரு வித பயத்துடன் நின்றிருந்தாள். கண்ணில் நீர் படிந்திருந்தது. மனக்காட்சி மாறிவிட்டதா? ஊர் பெயர் மறந்ததை நான் இன்னும் மறக்கவில்லை. புதுக்காட்சியிலும் பழைய காட்சியைத் தொடர விழைந்தேன். 

என் தலையை யாரோ நேராகப் பிடித்துக் கொண்டனர். கதவு பக்கம் என் முகத்தை திருப்ப முடியவில்லை. வெண்ணிற திரையை….சுவரை வெறித்து மேல் நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்த போதும் “என்ன பெயர் என்ன பெயர்” என்று மனதில் அசை போட்டபடியிருந்தேன். என் கால்களை யாரோ தூக்கினார்கள். எதையோ யாரோ தூக்குவது மாதிரி எடையற்று உணர்ந்தேன். 

“நான் எந்த ஊருக்குப் போனேன். ” – என்று உரக்கக் கேட்டேன். உதடு மட்டும் அசைந்ததா எனத் தெரியவில்லை. நான் சொன்னது யார்க்கும் கேட்கவில்லை. யாரும் கேட்க பிரயாசப்பட்டதாகவும் தெரியவில்லை. என்னைச் சுற்றிலும் ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். கதவினூடே நின்றிருப்பவள் இன்னும் அழுது கொண்டிருப்பாளா? அவள் அழுகை நின்றதாவெனத் தெரியவில்லை. அழுகை வந்தது. கண்ணீர் சிந்தினேனா என்று சந்தேகமாய் இருக்கிறது. நான் அழுகிறேன் என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வது தான் பிரக்ஞையின் அடையாளமா? வேறொரு காட்சிக்குள் என்னை யாரோ தள்ளிவிட்டார்கள்….காட்சிகள் ஏதுமில்லை. இருட்டு அறைக்குள் நுழைந்துவிட்டேன். எங்கிருக்கிறேன். இது வேறோரு காட்சியா? அல்லது வேறொரு எண்ணமா? வடிவங்களும் சிந்தனைகளும் பிணைந்து என்னை நெருக்குவது போல் இருந்தது. காட்சிகள் இல்லாத புதுக்காட்சியா? இல்லை…நானே என்னை இந்த இருட்டுக்குள் என்னைத் தள்ளிக்கொண்டேனோ?

பித்ரு கடன் செய்யும் போது ஓதும் மந்திரங்கள் எங்கிருந்தோ ஒலித்தன. என் பெயர், என் தந்தையார் பெயர், தந்தையாரின் தந்தையார் பெயர் – இவற்றைச் சொல்லி வசு, ருத்ர, ஆதித்யர்களாக உருவகிக்கும் மந்திரங்களின் உச்சரிப்பு…பெயர்கள்…பெயர்கள்…பெயர்கள்.

நன்றி : சொல்வனம் (https://solvanam.com/2023/03/26/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/amp/)

பொருத்தம் பார்த்த குருவி – யஸுனாரி கவாபாடா

—-

சுய மகிழ்வுத் தனிமைக்கு நெடுங்காலமாய்ப் பழக்கப்பட்டுவிட்ட அவன் மற்றவர்களுக்குத் தன்னைத் தரும் அழகியலுக்காக ஏங்கத் தொடங்கினான். “தியாகம்” என்னும் சொல்லின் பெரும்பொருள் அவனுக்குத் தெளிவாயிற்று. மானுடம் என்னும் உயிரியின் வாழ்க்கையை கடந்த காலத்திலிருந்து எதிர் காலத்துக்கு எடுத்துச் செல்லும் ஒரே நோக்கம் கொண்ட ஒற்றை விதையாக தன்னுடைய சிறிய தன்மையை உணர்வதில் அவன் திருப்தியடையத் துவங்கினான். தாவரங்கள் தனிமங்கள் போன்ற பல்வேறு வகையினங்களுடன் சேர்த்து மனித இனம் என்பது இந்தப் பிரபஞ்சத்தில் மிதந்துலவும் ஒற்றைப் பரந்த உயிரமைப்பின் ஒரு சின்னத் தூண் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்ற எண்ணத்தின் மீதும், பிற விலங்குகள் மற்றும் தாவரங்களை விட அதிக விலைமதிப்பு ஏதும் அதற்கில்லை என்ற எண்ணத்தின் மீதுங்கூட அனுதாபங்கொள்ளத் தொடங்கினான்.

“சரி”

அவனுடைய மூத்த உறவினள் ஒரு வெள்ளி நாணயத்தைக் கண்ணாடி நிலையின் மேல் சுண்டினாள். பின், அதை தன் உள்ளங்கைக்குக் கீழ் அமிழ்த்திப் பிடித்துக் கொண்டு, தீவிரமான முகபாவத்துடன் அவனை உற்று நோக்கினாள். மந்தமான மனச்சோர்வான பார்வையை அவளின் வெள்ளைக் கரத்தின் மீது பதித்தான். “பூ” என்றான்.

“பூ? இதற்கு முன் முதலில் நீ முடிவெடுக்க வேண்டும். பூ விழுந்தால் அந்தப் பெண்ணை மணந்து கொள்வாயா?”

“மணக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம்”

“ஆ….தலை!”

“அப்படியா”

“இது என்ன முட்டாள்தனமாக பதில்?”

அவனுடைய உறவினள் சத்தம் போட்டுச் சிரித்தாள். அந்தப் பெண்ணின் புகைப்படத்தை கீழே எறிந்துவிட்டு அந்த அறையிலிருந்து எழுந்து சென்று விட்டாள். அவள் அதிகம் சிரிக்கக் கூடியவள். அவளின் தெளிவான சிரிக்கும் குரல் வெகு நேரம் ஒலித்தது. இது அவ்வீட்டு ஆண்களினுள் ஒரு விசித்திரமான விதத்தில் செவிவழிப் பொறாமையைக் கிளப்பியது.

புகைப்படத்தை பொறுக்கியெடுத்து அவன் அந்தப் பெண்ணைப் பார்த்தான். இந்தப் பெண்ணை மணப்பது நல்லது என்று எண்ணினான். இந்த அளவு அவனால் நேசத்தை உணர முடிகிறதென்றால், தங்கள் தலைவிதியை மூத்த சகோதரர்களிடமும் தந்தைகளிடமும் ஒப்படைத்துவிட்டு அவனை மணக்க ஜப்பானில் நிறைய பெண்கள் தயாராக இருக்க வேண்டும். அது எத்தனை அழகான விஷயம் என்று அவன் எண்ணினான். அசிங்கம் என்பது தான் மட்டுமே…எண்ணத்திரியை இழந்தான், ஏனெனில் அற்பமான சுய பிரக்ஞை அவனுக்கு விழிப்புணர்வைத் தந்தது.

“சரியாகச் சொன்னால், திருமணத் துணையைத் தேர்ந்தெடுப்பது என்பது ஒரு லாட்டரி மாதிரி. ஒரு நாணயத்தைச் சுண்டி முடிவெடுப்பது போன்றது” – அவனுடைய உறவுக்காரப் பெண் இதைச் சொன்னபோது, அவளுடைய உள்ளங்கைக்குள் இருக்கும் வெள்ளி நாணயத்திடம் தன் தலைவிதியை ஒப்படைப்பதில் அவன் உற்சாகமாகக் கூட உணர்ந்தான். ஆனால், அவள் அவனை வெறுமனே கேலி செய்கிறாள் என்பதை விளங்கிக்கொண்ட பின்னர், வராண்டாவின் விளிம்பில் இருந்த குட்டி ஏரியின் மீது அவன் தன் தனிமைப் பார்வையைத் திருப்பினான்.

என்னுடைய மனைவியாக வேண்டியவள் வேறொருத்தியாக இருப்பாளென்றால், அவளின் முகம் நீரில் பிரதிபலிக்கட்டும் என்று ஏரியிடம் பிரார்த்தித்தான். கால, வெளியூடாக காண முடியும் என்று அவன் நம்பினான். அந்த அளவுக்கு அவன் தனிமையில் இருந்தான்.

நீரின் மேற்பரப்பை உன்னிப்பாகப் பார்த்தபோது, கடவுள் எறிந்த கூர்மையான கருங்கல் ஒன்று அவனது பார்வைத் துறையில் சரிந்தது. இனச்சேர்க்கையில் ஈடுபட்டிருந்த ஒரு ஜோடிக் குருவிகள் கூரையிலிருந்து நீரில் விழுந்தன.

“இது இப்படித்தானோ!” என்று முணுமுணுத்தான்.

நீரின் மேற்பரப்பில் சலசலப்பு பரவி மீண்டும் அமைதி படர்ந்தது. மிக ஆர்வத்துடன் ஏரியை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். நீரின் அமைதியான மேற்பரப்பைப் போல அவனது இதயம் ஒரு கண்ணாடியாக ஆனது. திடீரென்று ஓர் ஒற்றைக் குருவியின் பிம்பம் அதில் தெரிந்தது. அந்தக் குருவி பாடியது. பாட்டின் அர்த்தம் இது தான்:

“குழப்பத்தில் தொலைந்திருக்கும் உங்களுக்கு உங்களின் மனைவியாகப் போகும் பெண்ணின் உருவத்தை நான் காட்டினாலும் ஒரு வேளை நீங்கள் நம்பாமல் போகலாம். அதனால், உங்களின் அடுத்த பிறப்பில் உங்களின் மனைவியாகப் போகும் பெண்ணின் பிம்பத்தைக் காட்டுகிறேன்.”

அவன் குருவியிடம் பேசினான், “குருவியே உனக்கு நன்றி. குருவியாக மறு பிறப்பெடுத்து அடுத்த ஜென்மத்தில் உன்னை நான் மணப்பேன் என்றால், இதோ இந்தப் பெண்ணையே இவ்வுலகில் மணந்துகொள்கிறேன். ஒருவன் அவனுடைய அடுத்த பிறப்பின் தலைவிதியைப் பார்த்துவிட்டான் என்றால், இப்பிறப்பின் இவ்வுலகில் அவன் இழக்கப்போவது எதுவுமில்லை. என் அடுத்த உலகின் அன்பான அழகான மனைவி எனக்கு இவ்வுலகில் எனக்கான திருமண முடிவை எடுத்திருக்கிறாள்”

புகைப்படத்தில் இருக்கும் பெண்ணுக்கு தெளிவான மனதின் வாழ்த்துகளுடன் அவன் கடவுளின் பெருந்தன்மையை உணர்ந்தான்.


யசுனாரி கவாபாடாவின் “உள்ளங்கைக் கதைகள்” தொகுப்பிலிருந்து

ஆங்கிலம் வழி தமிழாக்கம் – கணேஷ் வெங்கட்ராமன்

மனம் – மகாயான பௌத்தப் பார்வை

bodhidharma

மன அமைப்பு
ஒரு பிரஸ் ரிப்போர்ட்டர் பார்ப்பவற்றையெல்லாம் தன் காமிராவில் பதிந்து தலைமை அலுவலகத்துக்கு அனுப்புகிறார். தலைமை அலுவலகம் காமிராவில் பதிந்த காட்சிகளையும் வர்ணனைகளையும் பார்த்து கிரகித்து நல்ல செய்தியா கெட்ட செய்தியா, செய்தித்தாளில் இடம்பெறத் தக்கதா இல்லையா என்று அலசி ஆராய்ந்து ஒரு முடிவெடுக்கும்.

மனம் இயங்குவதும் இப்படித்தான்! ரிப்போர்ட்டர் என்பது புலன்கள் (கண், காது, வாய், மூக்கு, தொடுவுணர்ச்சி)! ரிப்போர்ட்டர் தன் காமிராவில் பதிந்த செய்திக்குறிப்பு அப்புலன்களை ஒட்டிய மனங்கள். மகாயான பௌத்தம் ஒவ்வொரு புலனுக்கும் ஒரு மனமிருப்பதாக சொல்கிறது. கண் ஒரு பூனையைப் பார்க்கிறது என்று வைத்துக் கொள்வோம். அது பூனை, அது கருமை நிறமுள்ளதாக இருக்கிறது. அதன் கண்கள் சிவப்பாக இருக்கின்றன என்றெல்லாம் கண் பார்த்தவற்றின் தகவல்-அர்த்தங்களை பட்டியலிட அக்கண்ணுடன் சேர்ந்த ஒரு மனம் இருக்கிறது. அது கண் – மனம்; இது போலவே மற்ற புலன்களுக்குத் துணையாகவும் மனங்கள் இயங்குவதாக லங்காவதார சூத்திரம் சொல்கிறது. தலைமை அலுவலகமாக இயங்கி புலன்கள் பதிவு செய்தவை, கிரகித்தவையெல்லாவற்றையும் எத்தகைய தன்மை கொண்டவை, அவை நல்லனுபவங்களா, வேண்டுவனவையா, என்றெல்லாம் பகுத்து, புலன் – மனங்களின் உயர் அடுக்காக செயல் பட்டுவரும் மனம் ஒன்று இருக்கிறது. ஐம்புலன்கள் மற்றும் புலன் மனங்கள் வந்திணையும் மையப்புள்ளி! அது தான் பகுக்கும் அல்லது சிந்திக்கும் மனம். நன்மை-தீமை, நல்லது-கெட்டது, சுகம்-துக்கம், வேண்டியது – வேண்டாதது என்றவாறு ஐம்புலன்-மனதினால் அறியப்பட்ட / பெறப்பட்ட அனுபவங்களை பகுக்கின்ற இயல்பு கொண்டதால் பகுக்கும் மனம் என்று அது கொள்ளப்படுகிறது.

அனுபவங்கள் பகுக்கப்பட்ட பிறகு அவற்றின் மேல் தீர்ப்புகள் இடப்படுகின்றன. வழங்கப்பட்ட தீர்ப்புக்கேற்றவாறு அவ்வனுபவம் விரும்பத்தக்கதாகவோ வெறுக்கத்தக்கதாகவோ ஆகிறது. இவ்வாறு தொடர்ந்தும் பின்னிப்பிணைந்தவாறும் மனம் எனும் முழு அமைப்பும் இயங்குகிறது.

மன அமைப்பின் இயக்கம்

மன அமைப்பின் இயக்கங்களை மூன்று வழிகளில் பிரிக்கலாம்.

மனத்தின் இயக்கங்கள் சாதாரணமாக புறவுலகில் காணும் பொருளின் தக்க கூறுகளை முதலில் கிரகித்துக் கொள்ளும். புலன் மனதில் அதற்கேற்ற புரிதலும் உணர்ச்சியும் எழும் ; மற்ற புலன்களிலும், புலன் – மனங்களிலும் கூடவோ குறையவோ புரிதலும் உணர்ச்சியும் எழும், ஒவ்வொரு தோல் துளைகளிலும்…ஏன் உடலின் ஒவ்வொரு அணுக்களிலும் கூட புரிதலும் உணர்ச்சியும் தோன்றும். பொருட்களை பிரதிபலிக்கும் கண்ணாடி போன்று தளம் முழுமையும் புரிந்துணர்ந்து கொள்ளப்படுகிறது.

இரண்டாம் இயக்கமாக இப்புரிந்துணர்வுகள் பகுக்கும் மனதுடன் எதிர்வினை புரிந்து ஈர்ப்புகள், வெறுப்புகள், உணர்ச்சிகள், செயல்கள் மற்றும் பழக்கங்கள் முதலானவற்றை தோற்றுவிக்கின்றன.

மூன்றாவது இயக்கம் பகுக்கும் மனதின் வளர்ச்சி, முன்னேற்றம், துவக்கமிலா காலம் முதல் திரட்டப்பட்டு வளர்ந்த பழக்க சக்தி – இவற்றைப் பொறுத்ததாக எழும்.. திரட்டப்பட்ட பழக்க சக்தி உலகளாவிய மனதிலிருந்து பெறப்படுவதாக மகாயான பௌத்தம் விவரிக்கிறது. உலகளாவிய மனம் என்றால் என்ன? உலகளாவிய மனத்தை சமஸ்கிருதக் கலைச்சொல் – ஆலயவிஞ்ஞான – என்ற பிரயோகத்தின் மூலம் சுட்டுகிறது லங்காவதார சூத்திரம். மன – அமைப்பின் முக்கியமான கருத்தாக்கம் – வாசனைகள் (‘வாசனா’) வாசனா என்பது ஞாபகம். ஒரு செயல் செய்த பின் எஞ்சியிருப்பது தான் வாசனா. எஞ்சியிருப்பது ஒரு மனோகாரணியாக இருக்கலாம் அல்லது பின்னால் எழப்போகிற ஜடம் அல்லது நிகழ்வுக்கான மூலக்கூறாக இருக்கலாம். செயல்களின் எச்சங்கள் வெடித்தெழ தயார் நிலையில் இருக்கிற உள்ளார்ந்த ஆற்றலாக ‘ஆலயத்துக்குள்’ சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஞாபகங்களின் குவியல் அல்லது பழக்கங்களின் ஆற்றல் ஒரு தனி உயிருக்கானது மட்டுமில்லை. எல்லா உயிர்களினாலும் அனுபவிக்கப்பட்ட ஞாபகங்களின், பழக்கங்களின் மொத்த குவியலாக அது இருக்கிறது. துவக்கமிலா காலம் முதல் எல்லா நிகழும் எல்லாவற்றையும் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் விதைகள் ஒரு தனி உயிரை மட்டும் சார்ந்தது என்று சொல்ல முடியாது. தனி உயிரைத் தாண்டி எல்லா உயிருக்கும் பொதுவானது. ஆதியில் ‘ஆலயம்’ தனித்தன்மை வாய்ந்த அறிவு மற்றும் பீடிப்பு போன்ற மாசுக்கள் எட்ட முடியாத தூய்மை கொண்டதாக இருந்தது. தூய்மை என்பது தருக்கபூர்வமாக பொதுத்தன்மையை குறிக்கிறது ; மாசு என்பது வெவ்வேறு வடிவங்களில் பற்றுதலை ஏற்படுத்தும் தனிப்பண்புகொள்ளும் தன்மையை குறிக்கிறது. சுருக்கமாக, இவ்வுலகம் ஞாபகத்தில் இருந்து துவங்குகிறது ; ஞாபகம் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ‘ஆலயம்’ தீங்கானது இல்லை. தவறாக பகுக்கும் தன்மையின் தாக்கத்திலிருந்து விலக முடியுமானால், ‘ஆலயத்தை’ மையமாகக் கொண்டு பின்னப்பட்டிருக்கும் மன அமைப்பானது உண்மையான ஞானத்தை நோக்கி பிரிந்து செல்லமுடியும் என்பது தான் லங்காவதார சூத்திரத்தின் சாரம்.

அனாத்ம வாதத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் பௌத்தம் உலகளாவிய மனம் என்ற கருப்பொருள் பற்றி பேசுவது தகாதது என்று தேரவாத பௌத்தர்கள் இக்கருத்தியலை ஒப்புக்கொள்வதில்லை. தேரவாதத்துக்கும் மகாயானத்துக்குமான முக்கியமான வேறுபாடு இங்கிருந்து தான் தொடங்குகிறது,

மகாயான பௌத்தர்கள் இக்குற்றச்சாட்டை எப்படி எதிர் கொள்கிறார்கள்?

பேராசிரியர் D.T Suzuki சொல்கிறார் : அனாத்ம வாதத்தை புறவுலகிற்குப் பொருத்தி விரிவுபடுத்துவதன் விளைவாக எழும் கிளைக் கருத்தியலே உலகளாவிய மனம். இரண்டு கருத்துகளுமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை தாம். எல்லா பொருட்களுக்கும் உயிர்களுக்கும் ஆன்மா இல்லை என்று சொல்வது எல்லா இருத்தல்களுக்கும் இடையே ஒரு சிக்கலான உறவுமுறை இருப்பதை அங்கீகரிப்பதாகும். சார்புடைத் தோற்றத்தை கண்டறிந்த போதே இச்சிக்கலான உறவு முறையை புத்தர் கவனித்திருக்கிறார், ஆனாலும் அவருடைய உடனடி ஆர்வம் சீடர்களின் பேதைமைகளை பற்றுதல்களை விலக்குவதிலேயே இருந்த படியால், அனாத்மாவாதத்தின் முதற்படிகளை விளக்குவதோடு புத்தர் நின்றுவிட்டார். பௌத்த மதச் சிந்தனைகள் அனுபவங்களின் வளர்ச்சியினால், மனோதத்துவம் மீப்பொருண்மையையியலாக வளர்ந்தது ; சூன்யதா கோட்பாடு மகாயான பௌத்தர்களின் கருத்தில் அமர்ந்தது. அனைத்து பொருட்களும் ஆன்மா என்கிற சுயமற்றவை என்பதை வேறு மாதிரியாக சொல்லும் வழிதான் சூன்யதா தத்துவம். அனாத்ம வாதம் நிறுவப்பட்டபிறகு மகாயான பௌத்தர்களின் சூன்யதா (All things are empty), நிஷ்வபாவம் (without self-substance), அனுத்பாதம் (unborn) போன்ற கோட்பாடுகள் முக்கியமான அனுமானங்களே”

இச்சிறு கட்டுரையை எழுத உதவிய நூல்கள் : (1) பேராசிரியர் D.T Suzuki எழுதிய லங்காவதார சூத்திரக் கட்டுரைகள், (2) அவருடைய மாணவர் Dwight Goddard எழுதிய லங்காவதார சூத்திரம் ; சுருக்கம்

lankavatara

அருவி சத்தம்

Water falls in Glassசிறு வயதில் ஒரு முறை என் பெற்றோருடன் ஒர் அருவியைக் காண சென்றிருந்தோம். அன்று மாலை அருவி இருக்கும் இடத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தோம். இரவு எனக்கு தூக்கம் வரவில்லை. அருவி கொட்டும் சத்தம் தூங்கும் வரை என் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. அன்று மதியம் நான் கண்ட அருவி ஐநூறு அடி உயரத்தில் இருந்து கொட்டிக் கொண்டிருந்தது. தூங்கிய பின்னரும் அக்காட்சி என் கனவுத்திரையில் தெரிந்தது. பின்னிசையாக கேட்ட அருவி சத்தம் கனவிலிருந்தா அல்லது நனவிலிருந்தா என்ற சந்தேகத்துடனேயே அன்றைய இரவு கழிந்தது. அன்று கேட்ட அருவி கொட்டும் சத்தத்தை நான் நெடு நாளாக மறக்கவில்லை.

நான் வசிக்கும் புறநகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஷாப்பிங் மாலில் வார இறுதி நாட்களில் கூட்டம் அள்ளும் போது சத்தம் அருவி சத்தத்தை போல சோவென்று கேட்கிறது. மூடிய கூரைக்குள் கேட்கின்ற சத்தங்கள் புதிரானவை. பாதி சத்தம் மக்களின் குரல்கள் மற்றும் இயக்கங்களால் ஏற்படுகின்றன. மீதி சத்தம் நெடிதுயர்ந்த கூரை வரை நீண்டு தொட்டுத் திரும்பும் எதிரோலியால் ஏற்படுவன. ஷாப்பிங் மாலின் மூன்றாம் அடுக்கில் இருக்கும் கையேந்தி பவன்களும், உட்கார்ந்து உணவருந்தும் விடுதிகளும் தான் அதிக பட்சமான மக்களை ஈர்க்கின்றன. ஆனால் அங்கு உணவருந்தும் யாரும் அப்படியொன்றும் சத்தம் போட்டு பேசுவதாக தெரியவில்லை. ஆனாலும் சத்தம் அங்கிருந்து வருவது போலவே தோன்றும். பெரும்பாலும், இளவயது காதலர்கள் ஒரே ஒரு சாண்ட்விச் ஆர்டர் செய்து, அது பூஞ்சைக் காளான பிடிக்கும் வரை பொறுமையாக காத்திருந்து அமைதியாக உண்கிறார்கள். அம்மா அப்பாவுடன் மாலுக்கு வந்திருக்கும் குழந்தைகள் பஞ்சு மிட்டாய் வாங்க க்யூவில் காத்திருக்கும் போது போடும் சத்தம் அதிக டெசிபல் உள்ளதாக இருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை. திரைப்படக் காட்சி துவங்குவதற்காக காத்திருக்கும் இளைஞிகள் ஒருவரையொருவர் கிண்டலடித்துக் கொண்டே போடும் சத்தம் சமயத்தில் அதீதமாக இருந்தாலும் கொஞ்ச நேரத்தில் குறைந்து விடும். பல பொருள் சிறப்பங்காடியில் பொது அறிவிப்பு செய்து “அவர் வரவும்…இவர் வரவும்” என்று சொல்லி அழைப்பார்கள். அதன் சத்தம் சிறப்பங்காடியை ஒட்டி இருக்கும் பன்னாட்டு பிராண்ட் காலணி விற்கும் கடையில் அலறும் “டிங்சுக்கு….டிங்சுக்கு” இசையோடு சேரும். பண்பலை வானோலியின் புகழ் பெற்ற ஆர்ஜே ஒருத்தி சிறு மைக்கில் கொஞ்சிப் பேசிக்கொண்டே குலுக்கல் விளையாட்டொன்றுக்கு பங்கேற்பாளர்களை அழைப்பாள். பணக்காரர்களின் மற்றும் உயர் நடுத்தர வர்க்க மக்களின் வீடுகளில் வைக்கப்படும் பீன் – பை இருக்கைகளை அறுபது விழுக்காடு தள்ளுபடியோடு விற்போர் வாடிக்கையாளர்களை அழைத்துக் கொண்டிருப்பார்கள். ப்ளே-சோன்-க்கு வெளியே டோக்கன் வாங்கி தம்முடைய முறைக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன், பேராவலுடன் காத்திருக்கும் சிறுவர்கள் சத்தமிட்டு உரையாடிக் கொண்டிருப்பார்கள். பொம்மை ஹெலிகாப்டர்களால் கட்டப்பட்ட எலக்ட்ரானிக் ரங்கராட்டினம் கட்டுக்கடங்கா ஒசையை தந்து கொண்டிருக்கும். நிழல் குத்துச் சண்டை வீரர்கள் மாதிரி மிண்ணனு திரை முன்னால் கையை ஆட்டியும் வீசியும இளைஞர்கள் கணினி விளையாட்டு விளையாடுகையில், டெர்மினல் விசித்திரமான சப்தங்களை எழுப்பிக் கொண்டிருக்கும்.

இவ்வெல்லா சத்தங்களும் ஒன்றிணைந்து பெரும் சத்தமாகி கூரையைத் தொட்டு எதிரொலி எழுப்பி…….பக்கத்து மேஜையிலிருந்து டிங்கென்று கண்ணாடி கிளாஸ் கீழே விழுந்தது. நீல நிற பானமொன்று தரையில் ஓடியது. அது நான் உட்கார்ந்திருந்த இடம் நோக்கி வந்தது. ஒரு ஞாயிறன்று எதுவும் ஆர்டர் செய்யாமல், யாருக்காகவும் காத்திருக்காமல் உட்கார்ந்திருந்த காபி கடையை விட்டு வெளியே வந்தேன். என் காலணி சர்சர்ரென்று சத்தமெழுப்பி ஷாப்பிங் மாலின் பெருஞ்சத்தத்தின் மிகச்சிறு அங்கமாக இணைந்தது.

++++++

“இது என்னது? கவிதையா? சிறுகதை மாதிரியும் இல்லை. துணுக்கா இது? துணுக்கு என்றால் எதாவது தகவல் தர வேண்டும். இல்லையேல் நகைச்சுவையாவது தர வேண்டும். சிறுகதையென்றால் குறைந்த பட்சம் 1500 சொற்களாவது இருக்க வேண்டும். எத்தனை சொற்கள் வருகின்றன? எண்ணினாயா?…நிறைய வாசிப்பு இருக்க வேண்டும். ஆழமான வாசிப்பும் இருக்க வேண்டும். அப்போது தான் நன்கு எழுத முடியும். ஒரு சிறுகதை ஏதாவது ஒரு பிரச்னையை கையாள வேண்டும். ஒர் அழுத்தமான உணர்வை கருவாக கொண்டிருக்க வேண்டும். இது எதுவும் உன்னுடைய சிறுகதைகள் எதிலும் தென்படவில்லை.”

புகழ் பெற்ற எழுத்தாளர் (பு.பெ.எ) சொல்லுவதை ராகவன் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான். ஐந்தாறு நாவல்கள் ; நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் ; கவிதைத் தொகுதி ஒன்று என பு.பெ.எ- தமிழ் இலக்கிய உலகின் ஒரு பிரசித்தமான படைப்பாளியாக இருந்தார்.

”நான் எப்பொதிருந்து எழுத ஆரம்பித்தேன் தெரியுமா? ஐம்பது வயதில் தான். அது ஏன் தெரியுமா? என்னால் ஐம்பது எட்டுவதற்கு முன்னாலேயே எழுதியிருந்திருக்க முடிந்திருக்கலாம். எழுதுவது என்பது ஒரு பொறுப்பான விஷயம் என்பதை நான் அறிந்திருந்தேன்.”

”சிறு வயதில் இருந்து சிறு துண்டுப் பிரசுரத்திலிருந்து, குழந்தை நாவல்கள், காவியங்கள், கவிதைகள்…..நான் தொடர்ந்து படித்து வருகிறேன்.”

”இன்று கூட நான் எழுதும் என் படைப்புகள் எனக்கு பூரண திருப்தியை அளிப்பதில்லை.”
இதற்கு முன்னர் ராகவன் தான் எழுதியவற்றை பு.பெ.எ-விடம் கொடுத்து நேரம் கிடைக்குமானால் படிக்குமாறு பணிவுடன் பலமுறை வேண்டியிருக்கிறான். அவர் ஒரு முறை கூட அவன் எழுத்தைப் பற்றிய கருத்தை சொன்னதில்லை. அவனும் “படித்தீர்களா?” என்று பிறகு அவரை கேட்டதில்லை. அவருடைய ரசனையின் உயரத்தை தன்னுடைய படைப்புகள் எட்டியிருக்காத காரணத்தால்தான் அவர் எதுவும் சொல்வதில்லை என்று அவன் நினைத்துக் கொள்வான்.

பு.பெ.எ அலமாரியிலிருந்து ஒரு கோப்பை எடுத்தார். அதற்குள் ராகவன் அவருக்கு வாசிக்க தந்திருந்த அவனுடைய படைப்புகளின் பிரதிகள் இருந்தன. அவற்றை வாசித்ததன் அடையாளமாக காகிதங்கள் முழுதும் திருத்தங்களும் குறிப்புகளும் இருந்தன. கோப்பினை ராகவனிடம் தந்தார்.

“என்னுடைய திருத்தங்களும் ஆலோசனைகளும் ஒரு தேர்ந்த எழுத்தாளனாக ஆக்கும் என்று ஒரு உத்திரவாதமும் இல்லை. ஏனென்றால், நானொரு நல்ல எழுத்தாளன் என்று இன்றுவரை நான் ஒரு நாளும் எண்ணிக்கொண்டதில்லை. அந்த எண்ணம் தான் என்னுடைய ஒவ்வொரு படைப்பின் பின்னும் அயராத உழைப்பை போட தூண்டுகோளாக அமைகிறது”

“வாரமொரு முறை ஒரு நாவல், நாளுக்கொரு கட்டுரை, மணிக்கொரு கவிதை என்று உற்பத்தியின் அளவு முக்கியமல்ல ; படைப்பின் தரமே அளவுகோல்.”

ராகவனுக்கு இன்னொரு எழுத்தாளரை தெரியும். பழக்கமுண்டு. அவர் இவன் வீட்டுக்கு கூட ஒரு முறை வந்திருக்கிறார். அவர் சினிமா புகழ் எழுத்தாளர் (சி.பு.எ). ஒவ்வொரு முறையும் அவர் ராகவன் வசிக்கும் நகரத்துக்கு வருவதற்கு முன்னர் மின்னஞ்சல் அனுப்புவது வழக்கம். இவனும் அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு சென்று அவரைப் போய் பார்ப்பான். அவருடனான சம்பாஷணைகள் எல்லாமே ஒற்றை வழிப்பாதைகள் தான். அவர் மட்டுமே பேசுவார். இவன் கேட்டுக் கொள்வான். சி.பு.எ பேச ஆரம்பித்தால் நிறுத்தவே மாட்டார். சி.பு.எ-வை சந்திக்கப் போகும் போது ராகவன் கூடவே அவருக்கு பிடித்த பிராண்ட் “விஸ்கி”யை வாங்கிப் போவான். இரவு அவருக்கு டின்னரும் வாங்கித் தருவான்.
சி.பு.எ-வுக்கு பலமுறை தன் படைப்புகளை மின்னஞ்சல் செய்திருக்கிறான். அம்மின்னஞ்சல்கள் தனக்கு கிட்டியதாக அவர் ஒரு தடவை கூட காட்டிக்கொண்டதில்லை. ”சத்தம்” சிறுகதையை அனுப்பு முன்னர் தொலைபேசியில் பேசினான். அவர் “அனுப்பி வைங்க ; கண்டிப்பா படிக்கிறேன்” என்று சொன்னார். மின்னஞ்சல் அனுப்பி பல நாட்கள் ஆன பின்னாலும், சி.பு.எ ஒரு சாஸ்திரத்துக்காகவென்றாவது ராகவன் எழுதிய சிறுகதை பற்றி ஒன்றும் சொல்லவில்லை.

சி.பு.எ எழுதி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த திரைப்படத்தை பற்றி ஒரு நாள் உரையாடிக் கொண்டிருக்கும் திடீரென்று சி.பு.எ கேட்டார்.

“இலக்கிய கதைகள் எழுதுவது மட்டும் தான் உனது இலட்சியமா?”

”நானும் பத்து வருடம் முன்னர் வரை வெறித்தனமாக இலக்கிய நாவல்களை எழுதிக் குவித்துக் கொண்டிருந்தேன். இன்று என்னை இலக்கியத்தில் இருந்து மசாலாவுக்கு போனவன் என்று ஏளனமாக என்னை பத்திரிக்கைகளில் எழுதுகிறார்கள். இன்று சினிமாவில் சூப்பர் ஸ்டார்களுக்கு பஞ்ச் டயலாக் எழுதுகிறேன். இலக்கிய பரவ்ச நிலையை என் எழுத்துகள் இன்று தராமல் இருக்கலாம். ஆனால் என் எழுத்து இன்று எனக்கு நாலு பைசா சம்பாதித்து தருகிறது.”

“இலக்கிய விழாவில் கைதட்டு விழும். ஆனால் விழா முடிந்த பிறகு பசியோடு நீ படுக்கைக்கு செல்வதைப் பற்றி யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.”

“நல்லதொரு உத்தியோகத்தில் நீ இருக்கிறாய். மேலும் காசு எப்படி சேர்ப்பது என்று பார். வேண்டுமானால் என்னுடைய உதவியாளனாக சேர்ந்து கொள். என்னுடைய ஸ்கிரிப்டை சரி பார்ப்பது, திருத்தி தருவது மாதிரி இதர வேலைகள்….இதற்காக நான் இருக்கும் ஊருக்கு வந்து தங்க வேண்டும் என்பதில்லை. நீ வீட்டில் இருந்த படியே செய்யலாம்”

+++++
Water falls in Glass2
ஒரு நாள் என்னுடைய உயர் அதிகாரி – பிராந்திய விற்பனை மேலாளர் – என் நகருக்கு வந்து திடீரென்று போன் செய்தார். ”இன்னும் இரண்டு மணி நேரத்தில் வருகிறேன். பிசினஸ் செண்டரில் சந்திப்போம். உன்னுடைய அணியில் உள்ளவர் எல்லோரையும் இந்த சந்திப்பிற்கு வரச்சொல்” என்றார். அவர் என்ன சொல்லப் போகிறார் என்று ஓரளவிற்கு எனக்கு தெரிந்தே இருந்தது. மார்ச் 31 முடிந்து இரண்டு வாரங்கள் ஆகியிருந்தன. விற்பனை இலக்கை எங்கள் அணி எட்டவில்லை. இலக்கின் 65% சதவிகித விற்பனையையே நாங்கள் முழுமை செய்திருந்தோம். இந்த மோசமான முடிவுகளுக்கு பல காரணங்கள். கடினமான முயற்சியின்மை அதில் ஒன்று நிச்சயமாக அல்ல. எனக்கு கீழ் வேலை செய்யும் விற்பனை பிரதிநிதிகள் பழுத்த அனுபவமும் நல்ல தொடர்புகளும் உள்ளவர்கள். என் கீழ் ஐந்தாறு வருடங்களாக வேலை செய்பவர்கள். எங்கள் அணி உறுப்பினர்களுக்கு நடுவில் நல்ல புரிதல் இருந்தது. ஆனால் எனக்கு தெரியும். இன்று எதுவும் கேட்கப்பட மாட்டாது. அணியில் உள்ளவர்களின் முந்தைய வருட செயல்பாடுகளை, உண்மையான உழைப்பை கருத்தில் கொள்ளாமல் தீர்ப்புகள் வழங்கப்படும். இதற்கு அப்பீலெல்லாம் கிடையாது.

பிசினஸ் செண்டர் ஷாப்பிங் மாலின் இரண்டாம் மாடியில் இருந்தது. இரண்டாம் மாடியின் பால்கனியில் நின்றபடி மாலின் லாபியை பார்க்க முடியும். மேலாளர் வர தாமதமானது. மூன்று விற்பனைப் பிரதிநிதிகளும் புகைப்பதற்காக ஷாப்பிங் மாலின் பின்புறம் சென்றிருந்தார்கள். வார நாட்களில் ஷாப்பிங் மாலில் மக்கள் அலை மோதுவதில்லை.

லாபி ஏரியாவில் ஒரு நெடிய கண்ணாடிக் குழாய்க்குள் சிறைப்படுத்தப்பட்ட செயற்கை நீரருவி ஒன்றை அமைத்திருந்தார்கள். நீர் கம்பிகளாக கண்ணாடிக் குழாயின் மேல் பகுதியிலிருந்து கீழே விழுந்து கொண்டிருந்தது. நீண்ட நேர்க் கோடுகளாக நீர் விழுவதற்காக கண்ணாடிக் குழாய்க்குள் சிறு சிறு குழாய்கள் பொருத்தப் பட்டிருந்தன. வெளிப்புற கண்ணாடிக்குழாயின் கீழ்ப்பகுதி தரையைத் தொட்ட இடத்தை சுற்றி ஒரு தொட்டியில் நீர் நிரம்பியிருந்தது. தொட்டியில் ஆரஞ்சு நிற மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன. தொட்டியில் வந்து விழும் நீர் ரீ-சர்குலேட் ஆகி, மேலிருந்து மீண்டும் நீர்க்கம்பிகளாக கீழே விழுந்து ஒர் அருவி போன்ற தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. சத்தம் மிகையாக இருந்தது, வார இறுதி நாட்களில் வரும் கூட்டத்தின் சத்தத்தோடு கண்ணாடி அருவியின் சத்தமும் சேர்ந்து கொண்டால் ராட்சச சத்தமாகத்தான் இருக்கும்.
எதிர்பார்த்த படியே பிராந்திய விற்பனை மேலாளருடனான சந்திப்பு கசப்பான ஒன்றாகவே இருந்தது.

“சந்தை நிலவரம் சரியில்லை என்பதை என்னால் ஒத்துக்கொள்ள முடியாது”

“போன வருடமும் 85% சதவிகித விற்பனையையே செய்தீர்கள்…இந்த வருடம் படு மோசம்”

”உங்கள் அணியின் மேலும் உங்களின் தலைமை மேலும் எனக்கு நம்பிக்கை போய் விட்டது”

“போன வருடமாவது 50% சதவிகித போனசை ரிலீஸ் செய்தோம், இம்முறை அதுவும் கிடையாது. உங்களுக்கும் உங்கள் அணியில் உள்ளவர்களுக்கும் போனசை ரத்து பண்ணுகிறேன்”

“அதிருப்தி கொண்டு ஒரிருவர் ராஜினாமா செய்யக்கூடும். அது பற்றி கவலையில்லை. மோசமான வேலை வாய்ப்பு சந்தையில் அவ்வளவு எளிதில் இன்னொரு நல்ல வேலை கிடைத்து விடுமா,,,என்ன?”

என் அணி உறுப்பினர்களின் முகங்களில் வாட்டம் படிந்திருந்தது. நான் ஏதாவது ஆறுதல் வார்த்தை சொல்லுவேன் என்ற எதிர்பார்ப்பில் என்னைப் பார்த்தார்கள்.

செயற்கை அருவி திடீரென நின்றிருந்தது. தொட்டிக்குள் ஒருவர் இறங்கி நின்று எதையோ ஆராய்ந்து கொண்டிருந்தார். ஆரஞ்சு நிற மீன்கள் எங்கே? கொஞ்சம் தள்ளி ஒரு ஜாடிக்குள் ஆரஞ்சு மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன. அருவி நின்றிருந்ததால் சத்தம் அடியோடு குறைந்திருந்தது. ஒரு சில கடைக்காரர்கள் ஏழு மணிக்கே கடைகளை அடைத்துவிட்டிருந்தனர்.

+++++

கிருஷ்ணமனோ என்ற பெயருடன் ப்ளாகுகளில் ஒருவர் பின்னூட்டம் போடுவார், ராகவனின் ஆரம்ப கால சிறுகதைகளை தன் வலைப்பூவில் இடும் போது கிருஷ்ணமனோ தொடர்ச்சியாக பின்னூட்டமிட்டு வந்தார். கதைகளின் குறைநிறைகளை நேர்மறையான நோக்குடன் சுட்டிக் காட்டுவார். ராகவன் அவருடன் மின்னஞ்சலில் தொடர்பில் இருந்தான்.

“நாம் சொல்வது சரியா தவறா என்பது பிரச்சினையில்லை. நாம் சொல்ல வந்ததை எப்படிச் சொல்கிறோம் என்பதுதான் விஷயம். அதை வாசகர்கள் அவரவர் அளவில் புரிந்து கொள்வார்கள், அதைப் பற்றி அதிகம் கவலைப்படுவதற்கில்லை. நம் கவலை நமக்கு, அவர்கள் கவலை அவர்களுக்கு. தொடர்ந்து எழுதுங்கள், சரி தவறுகளைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல், நீங்கள் சொல்ல வருவதை அதற்குத் தகுந்த மொழியில் சொல்லுங்கள் – எதிர்காலம் தன் சரி தவறுகளை உங்கள் பார்வையைக் கொண்டு தீர்மானிக்கக் கூடும்”

“நீரளவே ஆகுமாம் நீராம்பல்னு என்னவோ சொல்லுவாங்க. உங்க எழுத்தில் இல்லாத இலக்கியம் எந்த இதழிலும் இல்லை.
தொடர்ந்து எழுதுங்க, நிறைய இடத்தில் எழுதுங்க
இந்த வருஷ முடிவுல ஒரு நாலு அல்லது அஞ்சு கதை/ கவிதைகளாவது அடுத்த வருஷ முடிவிலும் நினைத்துப் பார்க்கும் வகையில் இருக்கணும். நிறைய சோதனை முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.”

“தடங்கலில்லாமல் நல்ல தமிழில் அழகாகச் சொல்லப்பட்ட கதை. ஒரேயொரு திருத்தம். ஆரம்பத்தில் பல பெயர்கள் முதல் இரண்டு பத்திகளில் வருகின்றன. அவை குழப்பத்தை கொடுத்தன. அவை கதைக்கு தேவையில்லை.”

“ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரி படிப்பார்கள், அதனால் கருத்து வேறுபடலாம். என் கருத்து – பின் குறிப்பு தேவையில்லை. சில சிறு சிறு மாற்றங்கள், சொற்களில் வாக்கிய அமைப்பில், தேவைப்படலாம்.”

“உண்மையில் நீங்கள் எழுத எடுத்துக் கொண்ட விஷயம் மிகவும் முக்கியமானது. இதை ஒரு கட்டுரையாக எழுதினால்கூட நன்றாக வரும். ஆனால் கதையாக வரும்போது இன்னும் சில விஷயங்கள் தேவைப்படுகின்றன.
கொஞ்சம் சிரமம் பார்க்காமல், ஒரு புறக் காரணத்தால் internal conflict, பின்னர் அதன் resolution என்று எழுத முடியுமா? இதை எல்லாம் உரக்கச் சொல்ல வேண்டாம், ஒரு undercurrentஆக இந்த விஷயங்கள் கதையில் பேசப்பட வேண்டும். இரண்டாம் வாசிப்பிலாவது அது வாசகனுக்குப் புரிய வேண்டும்.”

“அழியாச் சுடர்கள் என்ற தளத்தில் அண்மையில் பதிக்கப்பட்ட பத்து கதைகளின் துவக்கங்களைப் பாருங்கள்.

கதையின் மையப் பிரச்சினை

முக்கிய கதாபாத்திரங்களின் குணம்

அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது குறித்த தொனி (உணர்ச்சிகள்)

எவ்வளவு இயல்பாக துவக்கப் பத்தியைத் தொடர்ந்து விரிந்து கொண்டே போகின்றன!”

பல மின்னஞ்சல் பரிமாற்றங்கள்…தொலைபேசி உரையாடல்கள். கிருஷ்ணமனோ தொடர்ந்து ராகவனை ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார்.

+++++

என் அணியில் இருப்பவர்களை ஒரு நாள் என் இல்லம் அழைத்து இரவு விருந்தளித்தேன். எங்களின் போனஸ்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. எனக்கு கிடைக்காமல் போனதை விட என் கீழ் வேலை பார்ப்பவர்களுக்கும் போனஸ் கட் செய்யப்பட்டது என்னுள் பலத்த வேதனையையும் வெறுப்பையும் அளித்தது. என் வேண்டுகோள்களை மேனேஜ்மெண்ட் மறுதளித்தது. “இந்த சப்ஜெக்ட்-இல் மேலும் ஏதும் பேச வேண்டாம்” என்று மேலாளர் சொல்லிவிட்டார்.
நான் ராஜினாமா செய்யலாம் என்றிருக்கிறேன் என்று என் அணிக்காரர்களுக்கு சொன்னவுடன் அவர்கள் அதிர்ச்சியாயினர்.

“எதுக்கு சார் இந்த அதீதமான முடிவு?” என்றார்கள். ஆனால் என் உணர்வை புரிந்து கொண்டனர்.
என் அணியில் வேலை பார்த்தவர்களில் ஒருவன் – மணீஷ். பணமுள்ளவன். சில நாட்களாகவே சொந்தமாக வியாபாரம் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தான். நான் என் வேலையை துறந்தவுடன் மணிஷ் என்னை தன் மாமாவிற்கு அறிமுகம் செய்து வைத்தான். என்னுடைய வழிகாட்டுதலில் மணீஷின் மாமா உணவுப்பொருள் வினியோகிக்கும் வியாபாரம் தொடங்கினார். மணீஷ் தன் வேலையை விட்டுவிட்டு மாமாவின் நிறுவனத்தில் இயக்குனராக ஆனான். மணீஷும் அவன் மாமாவும் என்னையும் மூன்றாவது கூட்டாளியாக சேருமாறு கேட்டனர். நான் மறுத்தேன்.

“நான் ஒரு பகுதி நேர ஆலோசகனாக மட்டும் இருக்கிறேன். அதற்குரிய ஊதியம் மட்டும் வழங்கினால் போதும். என் நீண்ட நாள் கனவு ஒன்று இருக்கிறது. அதை தீவிரமாக பின் தொடரலாம் என்று எண்ணுகிறேன்”

மணீஷின் நிறுவனத்தின் அலுவலகம் ஷாப்பிங் மாலுக்குள்ளேயே இருந்தது. அமைதியான வார நாட்களின் முதல் பாதியில் மட்டும் அலுவலகம் செல்கிறேன். பல வருடம் முன்னர் ஹோட்டல் அறையில் கேட்ட அருவி சத்தம் மாதிரி, கண்ணாடி அருவியின் சத்தத்தை என் அலுவலக அறையில் தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

+++++

கிருஷ்ணமனோ ஒரு நாள் போன் செய்தார். புதிதாக இணைய இலக்கிய இதழ் ஒன்று நடத்த திட்டம் தீட்டியிருப்பதாக சொன்னார். ஒரிரு மாதங்கள் கழித்து “எழுத்து மலர்கள்” என்ற இணைய இதழ் தொடங்கப்பட்டது. ராகவனின் சிறுகதைகள் “எழுத்து மலர்களில்” தொடர்ந்து வெளிவந்தன. மு.ராகவன் என்ற பெயரை மாற்றி “முனி” என்ற பெயரில் ராகவனின் கதைகள் பிரசுரிக்கப்பட்டன. சீக்கிரமே ”எழுத்து மலர்கள்” புத்தகங்கள் பதிப்பிட ஆரம்பித்தது. எழுத்து மலர்கள் வெளியிட்ட முதல் புத்தகம் – முனி எழுதிய சிறுகதைத் தொகுதி. சிறுகதைத் தொகுதியில் இருந்த முதல் கதையின் தலைப்பே தொகுதியின் தலைப்பானது – “சத்தம்”

+++++

கிருஷ்ணமனோ ”சத்தம்” சிறுகதைத் தொகுதியின் முதல் காப்பியை குரியரில் அனுப்பி வைத்தார். மணிஷின் அலுவலகத்திற்கே அதை அனுப்பி வைக்குமாறு கிருஷ்ணமனோவிற்கு சொல்லியிருந்தேன். யாரோ ஒரு பிரபல எழுத்தாளரைப் பிடித்து மதிப்புரை வாங்கி வெளியிடப் போவதாக கிருஷ்ணமனோ முன்னரே சொல்லியிருந்தார். எனவே ஆவலுடன் பிரித்துப் பார்த்தேன். ஒரு மதிப்புரையல்ல : இரண்டு மதிப்புரைகள் போடப் பட்டிருந்தன. எழுதியிருந்தவர்கள் : பு.பெ.எ-வும் சி.பு.எ-வும்

0000
Water Falls in Glass3

நன்றி : வல்லமை.காம் (http://www.vallamai.com/literature/short-stories/29795/)

வட்டம்

சிதறிய
மாமிசத் துண்டங்களைத் திண்பதற்கு
ஓடி வந்த நாயொன்றின் மேல்
கல் வீசப்பட
அது வள்ளென்று குரைத்தவாறு
கண்ணாடி ஜாடியின் மேல் வந்து மோத
ஜாடியின் உள்ளிருந்து விழுந்து
சிதறிய
மாமிசத் துண்டங்களைத் திண்பதற்கு
ஓடி வந்த நாயொன்றின் மேல்
கல் வீசப்பட
அது வள்ளென்று குரைத்தவாறு
கண்ணாடி ஜாடியின் மேல் வந்து மோத
ஜாடியின் உள்ளிருந்து விழுந்து
சிதறிய
மாமிசத் துண்டங்களைத் திண்பதற்கு………
ஆரம்பம் எது முடிவெது
என்ற குழப்பத்தில்
ரங்கராட்டினம் போல்
ஒரு வட்டத்தில் இலக்கின்றி
சுழன்று கொண்டிருந்த அது என்ன?
எண்ணவோட்ட்மா? நினைவுப்பெருக்கா?.

சுழன்று கொண்டிருந்த எண்ணத்தை
அல்லது நினைவை
நேர்படுத்துவதற்காய்
இன்னொரு தளத்தில்
செலுத்தும் போது
இயந்திரக் கோளாறு
காரணமாக
விமானம் தரையிறங்குவதாக
அறிவிப்பு.
தரை தட்டும் முன்னர்
நீர் தட்டியது.
தலைகீழ் “ட” வடிவில்
விமானத்தின் சிறகுகள் வளைந்து
துடுப்பு போல இயங்கின
மூழ்காத விமானம்
நீரில் பேருந்தாக
அசுர வேகத்தில்,
வட்டப் பாதையில் ஓடியது
வட்டத்திலிருந்து குதிக்காமல்
கரையை அடைதல் சாத்தியமா?
பதற்றத்துடன் நகர்ந்த
காலத்துளிகளில்
மாமிசத்துண்டுகளை திண்ண வந்து
அடிபட்ட நாயின் அவஸ்தையுடனும்
கண்ணாடி ஜாடியுள்ளிருந்து
விழுந்த மாமிசத் துண்டுகள் போல
எல்லா திக்குகளில் சிதறியும்
ஒய்வற்று சுற்றியது.

சடக்கென விழித்தெழுந்தது உடல் பிரக்ஞை.
அடிவயிற்றில் ஒர் இறுக்கம்.
கழிப்பறை சென்று
விசையுடன் வெளிவரும் குழாய் நீரென
சிறுநீரை கழித்து ஆசுவாசமடைந்த பின்னர்
உறக்கத்தை நிம்மதியாய் தொடர்கையில்
உடல்பிரக்ஞை மீண்டும் மாயமாய் மறைந்து
சுழற்சிக்குள் நுழைந்து
வண்ணத்துப்பூச்சி உருவில்
ஒவ்வொரு மலராக
உட்கார்ந்து உட்கார்ந்து
நீள்வட்டப் பூப்பாதையில்
போய்க் கொண்டிருந்தது..

நன்றி : நவீன விருட்சம் (http://navinavirutcham.blogspot.in/2012/11/v-ganesh.html)

காட்சி –> சிந்தனை –> கருத்து?

வெண்மணல்.

உடைந்த சிறுசிறு கண்ணாடித்துண்டுகள்.

காயாத செந்நிற திரவம்.

ஒர் இறுக்கமான ஒவியத்தின்

சாத்தியக்கூறுகள்.

திருட்டுத்தனமாக

புகைக்க வந்த சிறுவன்

மணல்மேட்டில்

சிதறிக்கிடந்த

கூறான கண்ணாடித்துண்டுகளை

கவனிக்காமல்

தடுக்கிவிழுந்திருக்கலாமோ?

ஆற்றோரமாயொரு சமயவிழாவில்

நடந்த குரூரமான

வன்முறையின்

குறியீடோ?

காதலனொருவன்

காதலியின் மேல்

சிவப்புநீரடித்து

ரகசியமாக

“ஹோலி” கொண்டாடுகையில்

உடைந்துபோன

வெண்ணிற வளையல்துண்டுகளோ?

உரிமம் பெறாத

மருத்துவர் செய்த

கருக்கலைப்புக்கான

ஆதாரங்களின்

குவியலோ?

+++++

மணற்புயலுருவாகி

மணல் மூடி

கண்ணாடித்துண்டுகள் மற்றும்

செந்நிற திரவம்

மறைந்து போயின.

+++++

விழியிலிருந்த காட்சி

சிந்தனைகளாக உருமாறின.

சிறுவனின் கள்ளம்,

வன்முறை தூண்டும் மதங்கள்,

ரகசியக்காதல்கள்,

நெறிமுறையற்ற உத்தியோகங்கள்

எனப்பல சிந்தனைகள்.

சிந்தனைகளும் விரைவில்

உருமாறக்கூடும்….

கருத்துகளாக!