முதல் நீலம்

அது புதிதாய் என் கண்ணில் பட்டது. வெற்றிடமாகத் தெரிந்த இடத்தின் மேல் எதுவோ பூசப்பட்டிருக்கிறது. ஒரு சில கணங்கள் என் புலனுக்கு உணவானது அந்த தோற்றம். அருகில் நின்றவரிடம் அது பற்றி கேட்டேன். அது ஒரு நிறம் என்றார். அதன் பெயர் நீலம் என்றார். பின்னொரு சமயம் அந்த தோற்றம் மீண்டும் என் கண் புலனின் கவனத்துக்கு வந்த போது அது நீலம் என்று சொன்ன நபர் முதலில் என் ஞாபகத்துக்கு வந்தார். இந்த நீல நிறத்தை தான் முன்னொரு நாள் பார்த்தேன் என்பதை அப்போது உணர்ந்தேன். அடுத்தடுத்த முறை நீல நிறத்தை காணும் சமயங்களில் எல்லாம் நீலம் என்று அதை சரியாக அடையாளப்படுத்திக் கொள்ள முடிந்தது. என் கண்களை மூடி நீலம் என்ற சொல்லை அசை போட்டவுடன் நீலம் என் மனத்திரையில் ஓடுகிறது. நிறத்தை அதற்களிக்கப்பட்ட பெயராகிய நீலத்துடன் இணைத்து நினைவுபடுத்திக் கொள்ளும் பழக்கம் தொடங்கிய பிறகு முதன்முதலாக கண்ட அந்த நிற அனுபவம் மறுபடி கிடைக்கவேயில்லை.

நீலம் என்ற பெயர் அந்த முதல் நீலப் புலன் அனுபவத்தை மீண்டும் பெற முடியாமல் தடுத்துவிட்டது. நீலத்தின் நிற பேத வகைமைகளின் அறிவையும் -வான்நீலம், கருநீலம், ஊதா என – அவற்றுக்கு பெயரிட்டு நிலைப்படுத்திக் கொண்டேன். பெயரிட்ட பிறகு அனுபவங்களுக்கு திரும்பும் அவசியம் இருப்பதாக தோன்றவில்லை. வெற்றிடங்களில் காணப்படும் நீல வர்ணப்பூச்சு அனுபவங்கள் அனைத்தையும் ஒரே வகையாக ஒரே பெயரடையாளத்துக்குள் அடக்கிவிட்டால் நீலத்தன்மை எனும் பொது வரையறையை புலன்-மனம் தயார் செய்து வைத்துக் கொள்கின்றது. முதல் நீலத்தின் தூய சுட்டுணர்வு மனப்பழக்கத்தின் பெயரிடுதல் பண்பு வழியாக மன உணர்வாக மாற்றம் அடைந்து காலப்போக்கில் ஒரு பொதுமையாக கருதப்பட்டு விடுகிறது.

நீலம் போய் நீலத்தன்மை மட்டும் மனக்கருத்தியலாய் தங்கிவிடுகிறது. இதற்கு நடுவில் நீலம் என்னும் நிறம் ஒரு நாள் நம்முலகை விட்டு காணாமல் போய்விடுகிறது. நீல நிறத்தை தேடி எல்லாரும் செல்லலாயினர். நீலத்தன்மை பற்றிய அனைவரின் மனக்கருத்தியல்களின் உதவியுடன் நீல நிறத்தை தேடிக் கண்டு பிடிப்பதாகத் திட்டம். ஆனால் ஒவ்வொருவரின் நீலத்தன்மை பற்றிய எண்ணம் வெவ்வேறு மாதிரியாக இருக்கிறது. எது நீல நிறம் என்று அறுதியிட்டு யாராலும் சொல்ல முடியவில்லை. தப்பித்தவறி நீல நிறம் அதைத் தேடுபவர்களின் கண்ணில் தானாகவே பட்டால் தேவலை. முதன் முதலில் பார்த்த வெற்றிடத்தை தேடிச் செல்ல முனைந்தனர். வெற்றிடம் என்று ஓரிடமும் மிச்சமாக இல்லை. எல்லா வெற்றிடங்களுக்கும் வடிவம் அல்லது நிறங்களின் பெயரை வைத்தாகிவிட்டது. நீலத்தை எப்படி மறுபடியும் முதன்முதலாக கண்டு பிடிப்பது?

நன்றி : http://innaadhu.blogspot.in/2018/02/blog-post_24.html?m=1

Advertisements

அரகான் மகாமுனியும் பெரும்பான்மைவாத நோயும்

ஒரு விக்கிரகம். தொன்மத்தில் ஜனித்து வரலாற்றில் கலந்து இன்றளவும் பக்தர்களை ஈர்த்துக் கொண்டும் அது இருக்கும் நாட்டின் அரசியலில் இன்று வரை பாகமெடுத்துக் கொண்டுமிருக்கிறது. மகாமுனி பகோடா. மியான்மரின் மாண்டலே நகரின் தென்மேற்கில் இருக்கிறது அந்த பகோடா. அதற்குள் இருக்கிறது அந்த தங்க விக்கிரகம். கெளதம புத்தர் வாழ்ந்த நாட்களில் அவர் உருவையொத்த ஐந்து சிலைகள் இருந்தன. அவற்றில் ஒன்று இந்த பகொடாவில் இருக்கிறது. இந்த தகவல் வரலாறா? அல்லது தொன்மமா? எதுவாக இருந்தாலும் – சிலையின் உதயமும் பின்நிகழ்ந்தவையும் சுவாரசியமானவை.

தன்யவதி நகருக்கு புத்தர் ஒரு முறை விஜயம் செய்தார். அவருடன் அனந்தரும் பயணத்தில் சேர்ந்திருந்தார். ஸ்ராவஸ்தியிலிருந்து பத்மா நதிக்கரை வரை நீண்ட நடைப்பயணம். பிறகு சிறு படகில் ஏறி தன்யவதி ராச்சியத்துக்கு கடற் பயணம். தன்யவதி நகருக்கு வெளியே சலகிரி மலைத்தொடரின் கீழ்க்குன்று ஒன்றின் மேல் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தவரை யார் பார்த்தார்களோ தெரியவில்லை. கண் திறந்ததும் அவர் முன்னர் ஜனக்கடல். அரச உடையில் ஒருவன் கூட்டத்துக்கு நடு நாயகமாய் முன்னால் நின்றிருந்தான். குன்றிலிருந்து இறங்கி வந்தார் புத்தர். வரவேற்பு மரியாதைகளை ஏற்றுக் கொண்டார். தன்யவதி ராச்சியத்தை ஆண்டு கொண்டிருந்த மன்னனின் பெயர் சந்த துரியன். அவனின் விருந்தினராக புத்தர் சில காலம் தன்யவதியில் தங்கி தர்மத்தை போதித்தார். அவர் அங்கிருந்து தாயகம் கிளம்பும் வேளை வந்தது. தன்யவதி மக்களுக்கும் அரசனுக்கும் புத்தரை வழியனுப்ப மனமேயில்லை. மக்களின் உள்ளக்கிடக்கையை புரிந்து கொண்ட அரசன் ஒரு விண்ணப்பத்தை மக்கள் சார்பில் புத்தர் முன் வைத்தான். அவருடைய முக ஜாடையுடன் ஒத்துப்போகும் திருவுருவச் சிலையைப் பண்ண அனுமதி தருமாறு வேண்டினான். அதற்கு ஒத்துக் கொண்ட புத்தர் சிலை நிர்மாணிக்கும் பனி முடிவடையும் வரை தன்யவதியில் இருக்க முடிவு செய்தார். மழைக்கடவுள் சக்கரன் எனப்படும் இந்திரனின் சபையில் இருக்கும் விஸ்வகர்மா புத்தரின் சிலையை சமைக்கும் பணியை ஏற்றுக் கொண்டான். புத்தரின் சிலை தயாரானது. அதைக் கண்ணுற்ற புத்தர் தன் சுவாசத்தை சிலை மீது படும் படி விடவும் புத்தரிடம் இருந்த சக்திகள் அனைத்தையும் சிலை பெற்றது. புத்தர் உயிருடன் இருந்த நாட்களில அவர் திருவுருவையொத்து சமைக்கப்பட்ட சிலைகள் நான்கு. இரு சிலைகள் இந்தியாவிலும் மற்ற இரண்டு சிலைகள் தேவ லோகத்திலும் இருந்தன. தன்யவதியில் இருந்த சிலை ஐந்தாவது.

தன்யவதி நகரம் புராதன அடையாளங்கள் ஏதுமில்லாமல் சில சிதிலங்களுடன் கலடன் ஆற்றுக்கும் லெ-ம்ரோ ஆற்றுக்கும் இடையில் அமைந்துள்ள மலைப்பாலத்தில் இருக்கிறது. ரோஹிங்ய இஸ்லாமியர்களும் அரகான் பௌத்தர்களும் வசிக்கும் இன்றைய அரகான் பிரதேசம் தான் அன்றைய தன்யவதி. தென்மேற்கு ஆசியாவில் முதன்முதலாக பவுத்தத்தை தழுவியவர்கள் அரகான் மக்கள் தாம் என்று கருதப்படுகிறது. இஸ்லாமியர்கள் அராகானின் ஆதி குடிகள் இல்லை என்பதை நிறுவுதற்காக இன்று அரகான் பவுத்தர்கள் தன்யவதிக்கு புத்தர் விஜயம் செய்த தொன்மத்தை தம்முடைய இனவாதத்துக்கு பயன் படுத்திக் கொள்கிறார்கள். வடவிலங்கையில் சில புத்தர் சிலைகளை தோண்டியெடுத்துவிட்டு யாழ் குடாவை இந்து தமிழர்கள் சொந்தம் கொண்டாட முடியாது என்று இனவாதம் செய்த சிங்கள அரசியல் ஞாபகத்துக்கு வருகிறதல்லவா?

சிலையை நிறுவிவிட்டு புத்தர் பாரதம் திரும்பிய பிறகு ஒன்பது அற்புத நிகழ்வுகளை தன்யவதி மக்கள் கவனித்தனர். சிலையை குளிப்பாட்ட பயன்படுத்தப்பட்ட புனித நீர் நிரப்பப்பட்ட கொள்கலத்திலிருந்து வழிவதேயில்லை. புத்தர் சிலையின் தலையில் விட்ட குளத்து நீர் வருடக்கணக்கிற்கு கெட்டுப்போகாமல் இருந்தது. மாலை நேரத்தில் புத்தர் சிலையில் பட்டுத்தெறித்த ஆறு ஒளிக்கதிர்கள் பக்தர்கள் கண்ணுக்கு தெரிந்தன. நம்பிக்கையில்லாதவர்களின் கண்ணுக்கு அந்த ஒளிக்கதிர்கள் தெரியவில்லை. கோவில் தானாகவே விரிந்து எத்தனை பக்தர்கள் கூடினாலும் அவர்களுக்கு இடமளிக்கும். அக்கம்பக்கம் வளர்ந்திருந்த மரங்கள் எல்லாம் புத்தர் சிலையின் மீது விழும் படியாகவே தம் இலைகளை உதிர்த்தன. கோயில் இருந்த இடத்துக்கு மேலாகப் பறவைகள் பறக்கவில்லை. நுழைவு வாயிலில் இருந்த கல் துவார பாலகர்கள் தீயவர்களின் இருப்பை உணர்ந்து அவர்களை கோயிலில் நுழைய விடாமல் தடுப்பார்கள்.

தன்யவதி புத்தர் அரகான் மற்றும் பிரதான பர்மாவுக்கிடையில் நடைபெற்ற பல்வேறு யுத்தங்களுக்கு காரணமாக இருந்திருக்கிறார். பல சமயத்தில் பகைவர்கள் தன்யவதி தங்கப் புத்தரை கொள்ளையடித்துச் சென்று விடுவார்களோ என்று அரகான் மக்கள் பலமுறை காட்டில் அல்லது மண்ணுக்கடியில் சிலையை புதைத்து வைத்திருக்கிறார்கள். பல நூற்றாண்டுகளாக பகான் நகரை மையமாகக் கொண்டு ஆண்ட பல பர்மிய அரசர்கள் மகாமுனி புத்தரை அபகரிக்க முயன்றார்கள். 1784வரை மகாமுனி புத்தர் சிலை அரகானிலேயே இருந்தது. கோன்பாயுங் வம்சத்தின் பட்டத்து இளவரசன் மின்சாவின் தலைமையில் வந்த படையொன்று அரகானை தாக்கியது. அரகானின் அப்போதைய தலைநகரம் Mrauk U-விலிருந்து மகாமுனி சிலையை கடத்திச் சென்றது. பிரம்மாண்டமான தங்கச்சிலையை எடுத்துச் செல்ல ஏதுவாய் ஆறு பகுதிகளாக சிலை பிரிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டன. அப்போதைய பர்மிய தலைநகரம் அமரபுரத்தில் (இப்போதைய நவீன மாண்டலேவுக்கு தென்மேற்கே) மகாமுனி கோயிலில் குடி பெயர்ந்தார் தன்யவதி புத்தர். 1885இல் ஆங்கிலேயர்கள் வடக்கு பர்மாவை கைப்பற்றிய பிறகு முடியாட்சி முடிந்தது. ஆனால் மகாமுனி புத்தரின் வழிபாடு தொடர்ந்தது. அரகான், மோன் மற்றும் பர்மிய இனத்தாருக்கு மகாமுனி புத்தர் வழிபாடு மிகச் சிறப்பு.

பர்மிய பவுத்தத்தின் முக்கிய தலமாக இக்கோயில் கருதப்படுகிறது. விக்கிரகம் ஓர் அரியணையின் மேல் பூமி ஸ்பர்ச முத்திரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. பூமி ஸ்பர்ச முத்திரை ஒரு தெய்வீக முத்திரை ; பகவான் புத்தர் மாரனை வெற்றி கொண்டதை இம்முத்திரை குறிக்கிறது. மகாமுனி சிலை இருத்தப்பட்டிருக்கும் பீடத்தின் உயரம் 1.8 மீட்டர் ; விக்கிரகத்தின் உயரம் 3.8 மீட்டர் ; எடை ஆறாயிரம் கிலோ. புத்தர் சிலைக்கு அரச உடை அணியவைக்கப்பட்டிருக்கிறது ; அதன் மார்பில் பிராமணர்கள் அணியும் பூணுல் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அணிகலன்கள், மாணிக்கங்கள், மற்றும் நீலக்கற்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. சிலைக்கு கிரீடமும் அணிவிக்கப்பட்டிருக்கிறது. ஆண் பக்தர்கள் தம் மரியாதையை காண்பிப்பதற்கு தங்க இலைத் தாள்களை மகாமுனி சிலையின் மேல் ஓட்டுகிறார்கள். இதன் காரணமாக அதன் வடிவம் சற்று சிதைந்து தெரிவதாகச் சொல்கிறார்கள். ஒட்டப்பட்டிருக்கும் தங்க இலைத் தாள்கள் கிட்டத்தட்ட பதினைந்து சென்டி மீட்டருக்கு தடித்த அடுக்கை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. Mrauk U – விலிருந்து மாண்டலேவுக்கு சிலை இழுத்து வரப்பட்ட கதை தொடர் காவியச்சித்திரங்களாக கோயிலின் உள் பிரகாரத்தில் உள்ள கேலரியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

இக்கோயிலில் இந்து சமய சின்னங்களை சித்தரிக்கும் ஐந்து புகழ் பெற்ற வெண்கலச் சிலைகள் உள்ளன. முதலில் இச்சிலைகள் கம்போடியாவின் புகழ் பெற்ற அங்கோர் வாட் கோயிலில் இருந்தவை. இச்சிலையை சயாம் (தாய்லாந்து) காரர்கள் கம்போடியாவின் மீது படையெடுத்த போது அங்கோர் வாட்டிலிருந்து கொள்ளையடித்தனராம். Mrauk U விலிருந்து மகாமுனியை அபகரித்த கோன் பாயுங் வம்ச அரசன் சயாம் நாட்டைத் தாக்கி அறுபதுக்கு மேற்பட்ட சிலைகளைக் கொள்ளையடித்து மாண்டலே எடுத்து வந்தானாம். 1885இல் ஆங்கிலேயர் தாக்கிய போது அப்போதைய மன்னன் இப்போதிருக்கும் ஐந்து சிலைகளை மட்டும் விட்டுவிட்டுப் பிறவற்றை உருக்கி பீரங்கிகள் செய்யப் பயன்படுத்திக் கொண்டானாம். கோயிலில் இருக்கும் ஐந்து அங்கோர் வாட் சிலைகளின் உடற்பாகத்தை உரசினால் எந்த பாகத்தை உரசுகிறோமோ அந்த பாகம் சம்பந்தப்பட்ட உபாதைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

1879இலும் 1884இலும் நிகழ்ந்த பெரும் தீவிபத்தில் கோயில் சேதமடைந்தது. நல்ல வேளையாக மகாமுனி சிலை தப்பியது. விபத்தில் உருகாமல் எஞ்சிய தங்கத்தில் இருந்து செய்த நூல் ஒன்று விக்கிரகத்தை அலங்கரிக்கிறது. 1887-இல் ஆங்கிலேயரால் நியமிக்கப்பட்ட அமைச்சர் கோயிலை புனரமைத்தார்.

1996இல் பர்மிய இராணுவ ஆட்சியாளர்கள் கோயிலை சீரமைக்கும் பணியைத் துவங்கிய போது ஒரு திருட்டு முயற்சி நடந்தது. புனிதமான புத்தர் சிலையின் வயிற்றில் யாரோ ‘ட்ரில்’ செய்தது மாதிரி ஒரு ஓட்டை விழுந்தது. பல தலைமுறைகளாகவே சிலையின் தொப்புள் இருக்கும் இடத்தில் ஒரு பெரிய இரத்தினக்கல் இருக்கிறதென்றும் அது யார் கையில் இருக்கிறதோ அவர்களுக்கு அதிசயங்கள் நிகழ்த்தும் சக்திகள் கிடைக்கும் என்று நம்பப்பட்டது. சிலையின் உட்பாகத்தில் நகைகளும் அணிகளும் சுரப்பதாக வதந்தி இருந்தது. சில திருடர்கள் சீரமைக்கும் பணியை ஒரு சாக்காக வைத்து சிலையின் வயிற்றை ‘ட்ரில்’ செய்ய முயன்றிருக்கிறார்கள். இதில் சில ராணுவ வீரர்களும் உடந்தை என்று பேசப்பட்டது. இச்செய்தியை பொதுமக்களிடம் பரவாமல் செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது ராணுவ அரசாங்கம். மூத்த சாதுக்களின் வருடாந்திர பரிசோதனையைத் தள்ளிப்போட பல பிரயத்தனங்களை மேற்கொள்ளப்பட்டன. பிரகாரத்தின் சாவியை வைத்திருந்த இரண்டு சாதுக்கள் மூத்த சாதுக்களிடம் சாவியைத் தரக்கூடாது ராணுவ அரசாங்கம் மிரட்டியது. சிலையில் விழுந்த ஓட்டை பற்றி புலன் விசாரணை செய்ய பிரகாரத்தில் ராணுவ வீரர்களை விடுவதா வேண்டாமா என்று மூத்த சாதுக்கள் வாதிக்கத் தொடங்கினர். சாதுக்களின் மீட்டிங் நடந்து கொண்டிருக்கும் வேளையில் ஒரு பர்மியப் பெண்ணை ஒரு முஸ்லீம் வாலிபன் வன்புணர்வு செய்தான் என்று ஒரு வதந்தி பரப்பப் பட்டு மாண்டலே நகரில் ஒரு கலவரம் மூண்டது. பல நாட்கள் நடந்த இக்கலவரத்தில் புத்த பிட்சுக்களே கையில் தடியுடனும் கற்களுடனும் முஸ்லிம்களை தாக்கினர். இரண்டு மசூதிகள் தீக்கிரையாக்கப்பட்டன. இக்கலவரத்தால் புத்தர் சிலையில் ஏற்படுத்தப்பட்ட ஓட்டை பற்றிய செய்தி அமிழ்ந்து போனது. பொது மக்களின் கவனம் திசை திருப்பி விடப்பட்டது. கலவரம் முடிந்து சாதாரண நிலை திரும்புவதற்குள் சிலையின் ஓட்டை சரி செய்யப்பட்டுவிட்டது. இறுதியில் பர்மியப்பெண்ணை முஸ்லீம் இளைஞன் வன்புணர்ந்த செய்தி உண்மையல்ல என்று தெரிய வந்தது. சிலைக்குள் இரத்தினமோ நகைகளோ இருந்தனவா, உண்மையிலேயே நகைகள் சிலையிலிருந்து அகற்றப்பட்டனவா என்பது இன்று வரை புதிராகவே உள்ளது.

இப்போதைய அரகானில் சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு கிடைக்க வேண்டியது உரிய இடமும் உரிமைகளும் அரகான் பௌத்தர்களாலும் தேசிய இனவாத ராணுவத்தாலும் மறுக்கப்படுகின்றன. வீடு, வாசல் இழந்து வங்க தேசத்திலும் பிற தென்கிழக்காசிய நாடுகளிலும் அகதிகளாக தஞ்சம் புகும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பர்மாவின் தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி பர்மாவில் 125 சிறுபான்மை இனத்தவரும் குழுக்களும் வசிக்கின்றன. இந்த 125இல் ரோஹிங்க்ய முஸ்லீம்கள் இல்லை. ஏனெனில் பர்மியர்களாக ரோஹிங்யர்கள் அங்கீகரிக்கப்படவில்லை. அதனால் தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ரோஹிங்யர்களின் எண்ணிக்கை சேர்த்துக் கொள்ளப்படவில்லை. முதன்முதல் தென்கிழக்காசியாவில் பவுத்தத்தை தழுவிய இனத்திலிருந்து வந்த அரகான் முஸ்லீம்கள் நாடில்லாமல் வீடிலாமல் பாரம்பரிய தாயகத்தில் இருந்து விரட்டி விடப்படும் தற்போதைய காலகட்டத்தை நோக்கும் போது சக மனித கருணை இல்லாத ஒர் உள்ளீடற்ற சமயமாக பவுத்தம் பர்மாவில் அடையாளமிழந்து நிற்கிறதோ என்ற சந்தேகம் தோன்றுகிறது. பெரும்பான்மைவாத நோய் தீர மகாமுனி கோயிலில் உள்ள அங்கோர் வாட் சிலைகளின் எந்த பாகத்தை உரச வேண்டும்?

புத்தரும் நாத்திகமும்

நாத்திகம் என்பது கடவுள் அல்லது கடவுளர் மீது நம்பிக்கை வைக்காமல் இருப்பது தான் என்றால் நிச்சயம் பெரும்பான்மையான பௌத்தர்கள் நாத்திகர்களே. ஆனால் பௌத்தம் என்பது கடவுள் மீது நம்பிக்கை வைப்பதை அல்லது வைக்காமல் இருப்பதைப் பற்றியதல்ல. கடவுளரை நம்புதல் நிர்வாண நிலையை அடைய விரும்புவோருக்கு பயன் தரும் விஷயமன்று என்று சாக்கியமுனி போதித்தார். வேறு மாதிரி சொல்வதாக இருந்தால், பௌத்தத்தில் கடவுள் என்பவர் தேவையற்றவர், ஏனெனில் பௌத்தம் ஒரு நடைமுறை தத்துவம் ; தெய்வ நம்பிக்கையை, ஐதீகங்களை விட, நடைமுறை விளைவுகளையே அதிகம் வலியுறுத்தும் சமயம். இக்காரணத்தால், பௌத்தத்தை துல்லியமாக வர்ணிப்பதென்றால் non-theistic என்று தான் சொல்ல வேண்டும். Atheistic என்றல்ல.

புத்தரே தாம் கடவுளல்ல என்றும் முக்தி நிலையை எட்டியவர் மட்டுமே என்றும் சொல்லியிருக்கிறார். எனினும் ஆசியாவெங்கும் புத்தரையோ பல்வேறு பௌத்த தொன்ம கடவுளரையோ வழிபடுதல் பரவலாக காணப்படுகிறது. புத்தரின் ரெலிக்குகள் உள்ளதாகக் கருதப்படும் ஸ்தூபங்களை யாத்திரீகர்கள் மொய்க்கிறார்கள். பௌத்தத்தின் சில உட்பிரிவுகள் ஆழமான பக்தியை வலியுறுத்துபவை. பக்தியை வலியுறுத்தாத தேரவாதத்திலும் ஜென்னிலுமே கூட நமஸ்கரித்தலையும், பூ, பழம், ஊதுபத்தி போன்றவற்றை புத்தர் திருவுருவத்திற்கு படைத்தலையும் உள்ளடக்கிய சடங்குகள் உண்டு.

நம்மால் கண்டுணர முடியாத யதார்த்தத்தில் விழித்தெழுதலை நோக்கிய பாதை பௌத்தம். பல்வேறு பௌத்தப்பிரிவுகளில், நிர்வாணம் அல்லது முக்தி எந்த கருத்தாக்கத்துக்கும் உட்படாதது ; சொற்களால் விவரிக்க முடியாதது. அவற்றை புரிந்து கொள்ளும் ஒரே வழி அவ்வனுபவத்தை பெறுவது மட்டும் தான். வெறுமனே நிர்வாணத்தை முக்தி நிலையை நம்புதல் பயனற்றது.

பௌத்தத்தில் அனைத்து நெறிமுறைகளும் தற்காலிக பயனளிப்பவையென்றே கருதப்படுகின்றன. செயல்திறத்தின் அடிப்படையிலேயே அவைகள் தீர்மானிக்கப்படுகின்றன. சமஸ்கிருதத்தில் இது “உபாயா” (skilful means) என்று அழைக்கப்படுகிறது. நிர்வாணத்துக்கு வழிவகுக்கும் எந்த நெறிமுறையும் வழிமுறையும் உபாயா என்று கொள்ளப்படும், அந்த நெறிமுறை உண்மையானதா இல்லையா என்பது அர்த்தமற்றது.

கடவுளரில்லை, நம்பிக்கைகள் இல்லை, இருந்தாலும் பௌத்தம் பக்தியை ஊக்குவிக்கிறது. இது எப்படி?

முக்தியை அடைவதற்கு மிகப்பெருந்தடையாய் இருப்பது ‘நான்’ என்பது நிரந்தரமான, சுயேச்சையான வஸ்து என்று எண்ணுவது. சுயம் என்னும் மயக்கத்தை விட்டொழிக்கும் போது முக்தி நிலை துளிர் விடுகிறது. சுயச்சங்கிலியை உடைத்தெறிய பக்தி ஓர் உபாயம். இதன் காரணமாகவே பக்தி பூர்வ, மற்றும் மரியாதை பூர்வ மனப்பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுமாறு புத்தர் போதித்தார். ஆகவே, பக்தி பௌத்தத்தின் திரிபு அன்று ; வெளிப்பாடு.

அமெரிக்க மங்கை

வந்த நட்பு வேண்டுகோளை ஏற்றுக்கொண்டது முதற்கண் எனது தவறு. ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க ராணுவத்தில் வேலை பார்க்கும் பெண் அவர். உடன் உள்பெட்டிக்குள் வந்து அறிமுகப்படுத்திக் கொண்டார். தான் விதவை. தன் குழந்தை அமெரிக்காவில் தன் பெற்றோருடன் இருக்கிறான் என்ற தகவல்களுடன் தொடங்கியது பரிமாற்றம். ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க பெண் ராணுவ வீரரின் வாழ்க்கை, அனுபவம் பற்றி அறியக் கிடைக்கும் என்ற எழுத்தாளனுக்கிருக்கும் க்யூரியாஸிட்டி என்னை உரையாடலில் ஈடுபட வைத்தது. இரு மாதங்களுக்கு முன்னர் அவர் நெருங்கிய தோழி ஒருவர் ஒரு மிஷனின் போது தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்தை பற்றி சொல்லிவிட்டு ராணுவ வீரர்களினுடைய வாழ்வின் நிச்சயமற்ற தன்மையை குறிப்பிட்ட போது உரையாடலின் அடுத்த திருப்பத்தை கணிக்க முடியவில்லை. ஆர்வத்தை குறைத்துக்கொள்ளாமல் அவர் வாழ்க்கையை பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம் என்று மரண பயம் பற்றி தத்துவ நோக்கில் ஒரு கேள்வி கேட்டேன். என் கேள்வியை புறக்கணித்து விட்டு ஐஎஸ் தீவிரவாதியைக் கொன்ற போது அவர் கைப்பற்றிய ஒரு பெட்டியில் சில மில்லியன் டாலர்களை ரொக்கமாக பார்த்ததாகச் சொன்னார். அப்பணத்தை ஒரு லாக்கரில் ஒளித்து வைத்திருப்பதாகவும் அவற்றை அமெரிக்காவிற்கு அனுப்ப முடியாது என்றும் சொன்னார். அப்போதும் அவர் அடுத்து கேட்கப்போகும் உதவி பற்றி என்னால் அனுமானிக்க முடியவில்லை. அப்பணத்தை டிப்ளமாடிக் குரியரில் இந்தியா அனுப்ப திட்டமிட்டிருப்பதாகவும் அப்பணத்தை பெற்றுக்கொண்டு நான் அதை வைத்துக் கோள்ள வேண்டும் என்றும் சில மாதங்களுக்குப் பிறகு தான் இந்தியா வரவிருப்பதாகவும் அப்போது அந்த பணத்தை வைத்து அவர் இந்தியாவில் செய்யப் போகும் முதலீடுகளில் என்னையும் பங்குதாரராக சேர்த்துக் கொள்வார் என்றும் சொன்னார். பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னர் நைஜீரியா, கானா, ஐவரி கோஸ்ட் போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இது போன்ற கதைகள் சொல்லி மின்னஞ்சல்கள்
வரும். அதில் கூறப்படும் கதைகள் விறுவிறுப்பாக இருக்கும். நம் வங்கி கணக்கு விபரங்களை கேட்பார்கள். அதற்கு ஏதேனும் பதிலளித்தால் உடன் “இதோ பாருங்கள் நாங்கள் உங்களுக்கு அனுப்பப்போகும் பத்து மில்லியன் டாலர்களின் ரொக்கக் கட்டுகள்” என்று ஒரு வீடியோ ஃபைலை அனுப்புவார்கள். அதற்கு பதிலளித்தால் என்ன நடக்கும் என்று தெரியாது. அதற்கு மேல் முயற்சித்ததில்லை. முக நூலில் தொடர்பு கொண்ட ‘அமெரிக்க மங்கை’ பழைய ஆப்பிரிக்க மின்னஞ்சல் ஸ்கீமை ஞாபகப்படுத்தினாள். “அமெரிக்க மங்கை” யின் முகநூல் பக்கத்தில் இடப்பட்டிருந்த புரோஃபைல் புகைப்படத்தில் பெண் ராணுவ வீரர் ஒருவர் சீருடையணிந்த சக-வீராங்கனைகளுடன் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். போஸ்ட் செய்யப்பட்டிருந்த இன்னொரு புகைப்படத்தில் இயந்திரத் துப்பாக்கியின் ரவைகளை மாலையாக அணிந்திருந்தார். நான் அவருக்கு உதவத் தயாராக இல்லை என்று சொன்னால் இயந்திரத் துப்பாக்கி சகிதமாக இந்தியா வந்து என்னை சுட்டுத் தள்ளிவிடுவாரோ? அதிகம் பயப்படாமல் “சாரி ஐ கான்ட் ஹெல்ப்” என்று சொல்லி விட்டேன். “யூ ஸ்மெல்லிங் இந்தியன் நீக்ரோ” என்று என்னை திட்டினார். “அமெரிக்க மங்கை”யை ப்ளாக் செய்த போது என்னில் எழுந்த கேள்வி – ஹாலிவுட் திரைப்படங்களில் “நிக்கர்” என்றல்லவா சொல்வார்கள்?இவர் “நீக்ரோ” என்கிறாரே? கேள்விகள் மேலும் தொடர்ந்தன. ப்ரோஃபைல் படத்தோடு சேர்த்து அவர் முகநூல் பக்கத்தின் மூன்று படங்களிலும் அவர் முகம் மூன்று விதங்களில் உள்ளனவே? அவற்றில் ஒரு புகைப்படத்தை அவர் போடாமலேயே இருந்திருக்கலாம். ஏனெனில் அது 2008இல் ஆப்கானிஸ்தானில் வீரச்செயல் புரிந்தமைக்காக அமெரிக்க ராணுவ வரலாற்றிலேயே இரண்டாவதாக வெள்ளி நட்சத்திர விருது பெற்ற பெண் மோனிகா லின் ப்ரவுனின் புகைப்படம் என்பதை என்னைப் போன்ற அதிமூடர்களும் மிக எளிதில் கண்டு பிடித்து விடுவார்கள் என்பதை அறிந்து “அமெரிக்க மங்கை” இன்னும் அதிகம் மெனக்கெட்டிருக்க வேண்டும். முகநூல் மிஷனைத் தொடங்குமுன்னர் குறைந்த பட்சம் மேற்கு ஆப்பிரிக்க நாடொன்றுக்குச் சென்று பயிற்சியாவது எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.

இன்று சனிக்கிழமை

முதலில் மின்னஞ்சல் வந்தது. மிக எளிதில் யார் வேண்டுமென்றாலும் மின்னஞ்சல்கள் அனுப்பிவிடுவர். அவற்றையெல்லாம் படிக்கும் பொறுப்பு பெறுநருடையது. அனுப்பியவர் தன் கடமையை செய்துவிட்டார். அவர் இளைப்பாறப் போய்விடுவார். எத்தகைய தகவல்களை அறிவுறுத்தல்களை மின்னஞ்சல் வாயிலாக அனுப்புவது என்ற வரையறை இல்லாமல் எல்லாவற்றையும் அஞ்சலில் எழுதிவிடல் சாதாரணமானதாகப் போய்விட்டது. அனைவருக்கும் ஓர் ஓட்டு என்பது மாதிரி அனைவருக்கும் மின்னஞ்சல் முகவரி. மேலதிகாரிகள் நேரில் புன்னகை மன்னர்கள் ; மின்னஞ்சலில் பராசக்திகள் ; மனோகராக்கள். விடுமுறை நாட்களில் தொலைபேசியில் தொல்லை கொடுக்க மாட்டார்கள். வார இறுதி உங்களின் சொந்த நேரம் என்ற நல்வசனம் பேசுவார்கள். மின்னஞ்சலில் ஓரிரு வரிகளிலான அர்ச்சனைகள் சனி, ஞாயிறு நெடுக வந்து விழுந்து கொண்டேயிருக்கும். அவற்றில் ஒன்றிரண்டுக்கு கூட பதிலளிக்காவிடில் திங்கட்கிழமையன்று வேறு காரணங்களைச் சொல்லி “விமர்சிப்பார்கள்” ; எந்த காரணத்துக்கு ‘விமர்சனம்’ என்று தெரிந்துவிட்டால் அதிகாரியின் செயல் திறன் கூர்மையடையவில்லை என்று பொருள்.

மின்னஞ்சலுக்குப் பிறகு வந்த குட்டிச்சாத்தான் வாட்ஸ் அப். அனைவரின் கைத்தொலைபேசியிலும் பதுங்கிக் கொண்டு இந்த குட்டிச்சாத்தான் பண்ணும் அக்கிரமங்கள் சொல்லி மாளாது. அதிகாரிகள் சப்ஜெக்ட்டுக்கு ஒன்று என வாட்ஸப் குழுக்களை சிருஷ்டித்து கண் மூடி திறப்பதற்குள் மக்களை இட்டு நிரப்பி ‘ராஜாங்க’ விஷயங்களை கையாள்வார்கள். அதிகாலை கண் விழித்து தூக்கக் கலக்கத்தில் நண்பர்கள் யாராவது தகவல் ஏதேனும் அனுப்பியிருக்கிறார்களா என்று பார்க்கப்போனால் முந்தைய நாளிரவு தூக்கம் வராமல் நிறுவன வாட்ஸப் குழுக்களில் “ஆணை” முட்டைகளை இட்டிருப்பார் மேலதிகாரி. அந்த முட்டைகள் எல்லாம் குழு அங்கத்தினர்களின் பதில்களாக குஞ்சு பொறித்திருக்கும். எல்லாவற்றையும் விட்டு விலகி நிற்கலாம் என்று அமைதியாக இருக்கவே முடியாது. ஏனெனில் என்னுடைய பதில் குஞ்சை காணாமல் வாட்சப் குழுவிலேயே என் பெயரை விளித்து கேள்விக்குறிகளையும் ஆச்சரியக்குறிகளையும் வரிசையாக நிறுத்தி வைத்திருப்பார் அதிகாரி.

நிரலிகளின் அட்டகாசம் இன்றைய சனிக்கிழமையும் தொடர்கிறது. சலிப்பு மேலிடுகிறது. மேலோட்டமான சில பதில்களை டைப்பிட்டு நிரலியை மூடி வைத்த போது மனமெங்கும் வெறுப்புணர்வு. தப்பி ஓடிவிட வேண்டும் என்பது மாதிரியான மனோநிலை. இந்த வேலையை விட்டுவிட்டு வேறு வேலை தேட வேண்டும் என்ற எண்ணம் சில மாதங்களாகவே நீடிக்கிறது. வாய்ப்புகள் எதுவும் கையில் சிக்கவில்லை. அவை சிக்காமலேயே போய் விடுமோ என்ற அச்சம் இபபோதெல்லாம் அடிக்கடி மனதை வாட்டுகிறது. வயது ஐம்பதை தொடுகிறது. நிறுவனங்களில் இளைஞர்களை பணியமர்த்த விரும்பும் போக்கு அதிகரித்து வரும் இந்நாட்களில் ஏற்கனெவே சீனியர் சிட்டிசன் அந்தஸ்தை அடைந்துவிட்டது மாதிரியான தாழ்வுணர்ச்சி தலை தூக்குகிறது.

நம்பிக்கைச் சிக்கலுக்கு என்ன மருந்து? மேலதிக நம்பிக்கை. நம்மை மீறிய சக்தியின் மேலான நம்பிக்கை. நம்முடைய பிரச்னைகளுக்கு நம்முடைய திறனை நம்பாமல் வேறொன்றை – இருக்கிறதா அல்லது இல்லையா என்று தெரியாத ஒன்றை – நம்புவதா என்ற கேள்வி தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிடும் என்றாலும் எப்படியோ ஒரு தெளிவு பிறந்தால் சரி – பிறக்கிறதா என்று பார்த்து விடுவோமே என்ற எண்ணத்துடன் படுக்கையின் மேல் கிடந்த அந்த புத்தகத்தை கையில் எடுத்தேன்.

தேடல்கள் அனைத்துமே curosity-யின் குழந்தைகள். பதற்றமும் பயமும் Curiosity-யாக வடிவ மாற்றம் கொள்ளும் தருணத்தில் நம்பிக்கை பூர்வ காத்திருப்பு என்கிற ஆன்மீக வாயிலுக்குள் நுழைந்து விட முடிகிறது. தனிப்பட்ட வாழ்க்கையில் ஒருவர் ஆத்திகராயிருக்கலாம் ; நாத்திகராயிருக்கலாம் ; யாரும் எதுவாகவேனும் இருந்து விட்டு போகலாம் ; நம்பிக்கை பூர்வ காத்திருப்பு என்னும் குணம் வயதான தளர்ந்தோரின் கையில் இருக்கும் கைத்தடி போன்றது. (இந்த குறிப்பிட்ட உவமைக்கான காரணம் கட்டுரையின் முடிவில் வரும்).

புத்தக கிரிக்கெட் விளையாடுபவன் போல் புத்தகத்தின் ஒரு பக்கத்தை குறிப்பின்றி திறந்தேன்.

+++++

ஹேமத்பந்த் இப்போது பாபா சமாதானம் நிலைநாட்டும் பாகத்தை ஏற்றுக்கொண்ட மற்றொரு வேடிக்கையான சம்பவத்தைக் கூறுகிறார். தாமோதர் கன்ஷ்யாம் பாபரே என்று அழைக்கப்பட்ட அன்னாசின்சினிகர் என்ற அடியவர் ஒருவர் இருந்தார். அவர் எளிமையானவர். முரடர். நேர்மையானவர். அவர் எவரையும் லட்சியம் செய்யமாட்டார். எப்போதும் கண்டிப்பாக பேசி வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்ற ரீதியிலேயே எல்லாவற்றையும் நடத்துவார். வெளிப்படையாகக் கடுமையாகவும் வசப்படாதவராகவும் இருந்த போதும் அவர் நற்பண்பாளர். கள்ளமற்றிருந்தார். எனவே சாயிபாபா அவரை நேசித்தார் (படுக்கையில் கிடந்த புத்தகம் – ஸ்ரீ சாயி சத் சரித்திரம் – ஹேமத்பந்த் என்ற புனைபெயர் கொண்ட ஸ்ரீ கோவிந்தராவ் ரகுநாத் தபோல்கர் அவர்கள் எழுதிய மராட்டிய மூலத்திலிருந்து இந்திரா கேர் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கில நூல்). ஒருநாள், ஒவ்வொருவரும் தங்கள் வழியில் சேவை செய்வதைப் போன்று, அன்னாவும் பாபாவின் கைப்பிடியை பிடித்து விட்டுக் கொண்டிருந்தார். அம்மா என்று பாபாவாலும் மாவிசிபாய் என்று பிறராலும் அழைக்கப்பட்ட கிழவிதவையான வேணுபாய் கௌஜால்கி வலது புறத்தில் அமர்ந்து கொண்டு அவளுக்கே உரிய விதத்தில் சேவை செய்தாள். மாவிசிபாய் தூயவுள்ளம் கொண்ட முதியவள். அவள் தன் இரு கைகளையும் கோர்த்துக்கொண்டு பாபாவின் அடிவயிற்றைச்சுற்றி அழுத்தமாகப் பதித்துப் பிசைந்தாள். அடிவயிறே தட்டையாகிவிடும்படி வேகமாக பிசைந்தாள். பாபா இப்படியும் அப்படியுமாக அசைந்து புரண்டு கொண்டிருந்தார். மற்றொரு புறமிருந்து அன்னா நிதானத்துடன் இருந்தார். ஆனால் மாவிசி பாயின் அசைவுகளுடன் அவள் முகமும் அசைந்தது. ஒரு சமயத்தில் அவளது முகம் அன்னாவின் முகத்திற்கு வெகுஅருகே வந்துவிட்டது. வேடிக்கையான பண்பு கொண்ட மாவிசிபாய் “ஓ இந்த அன்னா ரொம்ப கெட்டவன். அவன் என்னை முத்தமிட விரும்புகிறான். அவனுக்கு தலை நரைத்தும் ஆசை நரைக்கவில்லை” என்றாள். இச்சொற்கள் அன்னாவை கோபாவேசம் கொள்ளச் செய்தன. முஷ்டியை மடக்கிவிட்டுக் கொண்டு அவர் “நான் ஒரு கெட்ட கிழவன் என்றா சொல்கிறாய். நான் அவ்வளவு முட்டாளா? ஏன் வீணே என்னுடன் சண்டையை ஆரம்பிக்கிறாய்?” என்றார். அங்கு குழுமியிருந்தவர்கள் அனைவரும் இருவரின் வாய்ச்சண்டையை வெகுவாக ரசித்தனர். அவர்கள் இருவரையுமே பாபா மிகவும் நேசித்தார். சண்டையை நிறுத்த விரும்பிய அவர் இவ்விஷயத்தை மிகத்திறமையுடன் கையாண்டார். “அன்னா, ஏன் அனாவசியமாக கூச்சலையும் குழப்பத்தையும் உண்டாக்குகிறாய்? ஒரு மகன் தாயை முத்தமிடுவதில் என்ன தவறிருக்கிறது?” என்றார். பாபாவின் இம்மொழிகளைக் கேட்டவுடன் அனைவரும் மனமகிழ்ச்சியுடன் நகைத்தனர்.

+++++

ஹேமத்பந்த் பாபாவின் லீலைகளை ஒவ்வொன்றாகச் சொல்லி ஒவ்வொரு லீலைக்கும் பின்னர் தொக்கி நின்ற அர்த்தத்தின் தன்னுடைய புரிந்து கொள்ளலை வாசகரிடம் பகிர்வார். மேற்சொன்ன சம்பவத்திற்கான அவரின் குறிப்பு என்னுள் பல திறப்புகளை ஏற்படுத்தியது.

“A person may be burst out laughing while being caned and dissolve into tears when hit by a merest flower! It is the feeling that causes these waves of emotion. Who does not have this experience?”

+++++

நிரலிகள் இன்றி ஏது வாழ்வு? மேற்பகிர்ந்த மேற்கோளின் தமிழாக்கத்தை நிலைத்தகவலாக இடும் எண்ணம் பிறந்தது. முகநூல் நிரலியைத் திறக்கவும் செய்தேன். Feeling மற்றும் Emotion – இவ்விரு சொற்களின் சரியான தமிழ் இணைச்சொல்லை நான் அறிந்திருக்கவில்லை. கூகிள் மொழிபெயர்ப்பு நிரலி இரண்டு சொற்களுக்கும் உணர்வு என்றும் உணர்ச்சி என்றும் தமிழ்ப்படுத்தியது. இரண்டு சொற்களையும் ஒன்றுக்கு மாற்றாகவே இத்தனை நாள் பயன்படுத்தி வந்ததால் உணர்வும் உணர்ச்சியும் ஒன்றையே குறிக்கிறது என்று இதுநாள் வரை நினைத்து வந்தேன். ஆனால் மேற்சொன்ன மேற்கோளில் Feeling என்ற சொல்லும் Emotion என்ற சொல்லும் ஒன்றைக் குறிக்கவில்லை என்பது விளங்கினாலும் இரண்டு சொற்களுக்கும் இடையிலான சரியான வித்தியாசத்தை புரிந்து கொள்ளும் முயற்சியில் இறங்கினேன்.

உணர்வு என்பதும் உணர்ச்சி என்பதும் வெவ்வேறாக இருக்கலாம் என்று என் மனைவி சொன்னார். தமிழ் விக்சனரி இணைய தளத்தில் இவ்விரு பதங்களின் அர்த்தத்தை நோக்கினேன்.

உணர்ச்சி – நம் மனதில் உணரப்படும் அறிவற்ற உணர்வு.

நமக்குத் தேவையான உணர்ச்சியை அறிவுப் பூர்வமாக சிந்தனை செய்து, நமக்கு வேண்டும் என ஏற்கும் திறனை உணர்வு என்கிறோம்

கொஞ்சம் தெளிவாவது போலிருந்தது. இணையத்தில் மேலும் என் ஆய்வுகளைத் தொடர்ந்தேன்.

உணர்ச்சிகள் பொருண்மைத் தன்மை படைத்தவை. ஒரு வெளிப்புற தூண்டுதலால் உடனடியாக ஏற்படும் மனோநிலை. உணர்ச்சிகள் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளின் பரிணாமங்களின் வழியாக நம் ஜீன்களுக்குள் நுழைந்தவை. அவை சிக்கலானவை. பல வித பொருண்மையியல் மற்றும் அறிவார்ந்த எதிருணர்ச்சிக் குறிப்புகளை உள்ளடக்கியவை. உதாரணத்திற்கு ஒரு வனாந்தரத்தில் உலவுகையில் ஒரு சிங்கம் நம் வழியில் வந்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். உடன், நம்முள் பயம் தொற்றிக்கொண்டு விடுகிறது. ரத்த ஓட்டம், மூளை இயக்கம், முக பாவம் மற்றும் உடல் மொழி – இவைகள் வாயிலாக உணர்ச்சிகள் புறவயமாக அளக்கப்படக் கூடியவை. மூளையின் வெளிப்புறத்தில் ஓடும் துணை நரம்புகள் (subcortical) உணர்ச்சிகளை பதனிட்டு கடத்திச் செல்பவை. அவை முரண் தன்மை மிக்கவை ; தருக்க ஒழுங்கில் அடங்காதவை.

உணர்வுகள் நம் தலையில் உலவுபவை ; சொந்த, அனுபவ ரீதியாக பெற்ற உணர்ச்சியின் எதிர்க் குறிப்புகள் அவை. ஆங்கிலத்தில் 3000த்துக்கும் மேலான உணர்வுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. பொதுவாக ஐநூறுக்கும் மேலான உணர்வுகளை மக்கள் எளிதில் அடையாளம் காண்பர். ஆனால் அவர்களிடம் உணர்ச்சிகளை பட்டியலிடச் சொன்னாலோ ஐந்து முதல் பத்து வகை உணர்ச்சிகள் மட்டுமே தேறும். உணர்ச்சிகள் உலகளாவிய ரீதியில் பொதுவானவை ; முதலில் வருபவை. அவை எந்த வித உணர்வாக பின்னர் மாறும் என்பது தனிப்பட்ட குணாம்சம், அனுபவம், நம்பிக்கைகள் போன்றவற்றைப் பொறுத்தது. உதாரணத்திற்கு, ஒரு விலங்கியல் பூங்காவில் கூண்டிற்குள் இருக்கும் சிங்கத்தை காண்கிறோம். அப்போது எழும் நமது உணர்வு ஆர்வம் மற்றும் வியப்பு முதலானவையாக இருக்கலாம் ; விலங்குகள் சிறையிலிடப்படக் கூடாது என்னும் கருத்துடையவராக இருப்போமாயின் கசப்புணர்வும் எழலாம்.

உணர்வைப் பற்றி (Feeling), உணர்ச்சியைப் பற்றி (Emotion) மேலும் யோசித்த போது ஒரு சமன்பாடு எனக்கு விளங்கியது :- Feeling = Emotion + Cognitive Input

+++++

அன்னா – மாவிசிபாய் சம்பவத்துக்குத் திரும்புவோம். ஷீர்டி பாபா அன்னாவுக்கு சொன்னது மாதிரி – அன்னாவும் மாவிசிபாயும் மகன் – தாய் உணர்வு மேவிய எண்ணங்களைக் கொண்டிருப்பாராயின் வாய்ச்சண்டை மூண்டிருக்காது. மாவிசிபாய் வாக்குவாதம் என்னும் புறத்தூண்டுதலை வெளிப்படுத்தினாலும் அதனால் தூண்டப்பெறாதவராக அன்னாவினுடைய அன்புணர்வு சண்டையைத் தவிர்த்திருக்கும்.

உணர்ச்சி உணர்வுக்கு முந்தையது என்று மனோதத்துவம் விவரித்தாலும் உணர்வு ஏற்கனவே நம் மனக்கூடத்தில் குவிந்திருப்பதால் தீயஉணர்ச்சிக்கு மாற்றாக நல்லுணர்வை அதிகமும் நாம் சேகரித்து வைக்கலாம். வெறுமனே மனக்கரையை தொட்டுப் போகும் அழகிய அலைகளாக மட்டுமே உணர்ச்சியை காணும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளலாம்.

+++++

நிரலிகள் ஏராளம் – மின்னஞ்சல், வாட்ஸப், முகநூல், இணையம் என. அவற்றில் பொறிக்கப்படும் “ஆணை” முட்டைகள் வெறும் எண்ணியல் துண்மிகள். அவற்றுக்கு பதில் சொல்லும் முறை நம் உணர்விலிருந்து எழுகிறது. அதற்கு மட்டுமே நாம் பொறுப்பாளிகள். நம் பதிலுக்கு நம் அதிகாரிகளுள் எழும் உணர்ச்சிகளுக்கு நாம் பொறுப்பல்ல.

+++++

சனிக்கிழமை மதியம் வாட்ஸ்அப்பில் அதிகம் “ஆணை” முட்டைகள் இடப்படவில்லை. மின்னஞ்சலிலும் அமைதி தவழ்ந்தது. நண்பர் சுவாமி நாதன் வாட்ஸ்அப்பில் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் எழுதிய சமீபத்திய வலைப்பூ இடுகையை பகிர்ந்திருந்தார். கடவுளும் கைத்தடியும் – அனுபவமா புனைவா தெரியவில்லை. அது சொல்ல வந்திருக்கும் கருத்து என் உணர்வில் நிறைந்தது.

IMG_2549

பாவங்களின் சங்கமம் – a fable


பாவங்கள் பல செய்துவிட்டு அவற்றை கரைக்க கங்கை நதி நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த ஒருவனை அணுகினார் நாரத முனி. விதவிதமாக அவன் பண்ணிய பாவங்கள் பற்றிய விவரங்கள் கேட்டு பதறிப்போனார். யாத்திரீகனோ அதிகம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ‘கங்கை நதி சென்று நீராடி என் பாவங்களைக் கழுவிக் கொள்வேன்: கவலைப் பட ஏதும் இல்லை’ என்று கூறினான் அவன்.

நாரதர் ஆகாய மார்க்கமாக விரைந்து கங்கா தேவி முன் சென்று நின்றார். ‘என்ன பதற்றம் முனிவரே? ஏன் இவ்வளவு மூச்சிறைக்கிறது உமக்கு?’ என்று பரிவுடன் வினவினாள்.

‘பாரத தேசத்தின் அனைத்துப் பாவிகளும் தம் பாவங்களை உன்னில் நீராடிக் களைகிறார்களாமே. உண்மையா?’

‘ஆம். இதிலென்ன சந்தேகம். பல யுகங்களாக நடப்பது தானேயிது?’

‘லோகத்தின் பாவங்கள் அனைத்தும் உம்மில் கரைந்தால் உங்கள் நிலை என்னாவது தாயே?’

‘எனக்கு என்ன ஆகும்? ஒன்றும் ஆகாது. நான் சென்று சமுத்திரத்தில் கலக்கும் போது எல்லா பாவங்களும் அங்கேயே கலந்து கொள்கின்றன’

நாரத முனியின் வியப்புணர்ச்சி அதிகமானது. எல்லா பாவங்களும் கடலில் சென்று தேங்கிவிடுகின்றனவா? விடை காணும் ஆர்வம் அவரை உந்த சமுத்திர ராஜனைக் காணச் சென்றார்.

நாரதரின் கேள்வியைக் கேட்டு வயிறு புடைக்க சிரித்தான் சமுத்திர ராஜன்.

‘முனிவரே, யாராலும் கற்க முடியாத பிரம்ம சூத்திரங்களையெல்லாம் தம் விரல் நுனிக்குள் வைத்திருக்கும் நீங்களா இத்தனை எளிமையான விஷயத்தைக் கேட்க என்னிடம் வந்தீர்கள்? என்னில் வந்து கலந்த நீரெல்லாம் சூரிய வெளிச்சத்தில் ஆவியாக மேகக் கூட்டத்துக்கு செல்லுமே, அவற்றோடு பாவக் கூட்டங்களும் சென்று விடாதா?’

நாரதர் சற்று வெட்கப்பட்டார். பின்னர் ராஜனின் தொடரும் சிரிப்பொலியுடன் தன் சிரிப்பொலியை இணைத்துக் கொண்டார்.

அவரின் அடுத்த பயணம் இந்திர சபை நோக்கி. இந்திரனின் சிரிப்பொலி சமுத்திர ராஜனின் சிரிப்பொலியை விட பலமாக இருக்கும் எனத் தெரிந்தும் தொடங்கிய கேள்வித் தேடலை அதன் தர்க்க பூர்வ முடிவுக்கு எடுத்துச் செல்வதில் உறுதியாய் இருந்தார் நாரதர்.

கேள்வியை கேட்டதும் மேகங்களின் அதிபதி இந்திரன் சமுத்திர ராஜன் போலச் சிரிக்கவில்லை. கேள்விக்கான முகாந்திரம் அறிந்தவுடன் தீவிரமான பார்வையுடன் நாரதருக்குச் சொன்னான் :

‘மேகங்கள் மழை பொழியும் போது நீர்த்தாரைகளுடன் பாவங்களும் ஒட்டிக்கொண்டு மீண்டும் பூமிக்கே சென்றுவிடுகின்றன. சொல்லப் போனால் ஒவ்வொரு பாவமும் அதை செய்தவரின் தலையிலேயே மழைத் துளிகளுடன் போய் விழுகின்றன’

நாரதர் முதலில் சந்தித்த மானிடன் கங்கை நதியில் நீராடிவிட்டு ஊர் திரும்பும் வழியில் பெருமழை பெய்தது. எங்கும் ஒதுங்காமல் அதில் நனைந்து கொண்டே அந்த மானிடன் பயணம் செய்து கொண்டிருந்ததை ஒரு மேகத்தின் மேல் நின்று பார்த்துக் கொண்டிருந்த நாரதர் கன்னத்தில் நீர் வழிந்தது. நீர் உப்புக்கரித்தது.

ஆகஸ்டு பத்து

தனிமனித வழிபாட்டை எதிர்க்கும் நவீனவாதி நான். ஆனாலும் இன்று ஒரு விஷயம் நடந்தது. சிரி போர்ட் ஆடிட்டோரியத்தில் ஒருவர் உரையாற்றப்போகிறார் என்ற அந்த விளம்பரத்தை ஞாயிற்றுக்கிழமை செய்தித்தாளில் பார்த்தோம். மனைவியும் இளையமகளும் செல்வதாக உடன் முடிவெடுத்தனர். எனக்கு இரண்டு மனமாக இருந்தது. இன்று விடுமுறை நாள் இல்லை. கடமையா ஆர்வமா எது முக்கியம் என்ற ஊசலாடலில் என்னால் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. நேற்றிரவு ஒரு யோசனை தோன்றிற்று. வீட்டில் இருந்து வேலை செய்யும் அனுமதி பெற்றேன். காலை எட்டு மணிக்கே ஆட்டோவில் கிளம்பினோம். ஆடிட்டோரிய வாசலில் பெரும் வரிசை. அதிக கூட்டம் இராது என்று நினைத்துக்கொண்டு வந்த எனக்கு உரையாற்றப்போகிறவரின் பிரபலத்தன்மையை கண்ணால் காணும் சந்தர்ப்பம் இன்று கிட்டியது. அரசியல் பிரமுகர் இல்லை ; கலைத்துறையில் பணியாற்றுபவர் இல்லை ; எனினும் கூட்டம் குவிந்திருந்தது. பாதுகாப்பு பரிசோதனை சாவடிக்குள் நாங்கள் நுழைந்தவுடன் வாயிலை அடைத்துவிட்டார்கள். எங்களுக்குப் பின்னால் காத்திருந்தோர் ஏமாற்றத்துடன் திரும்பியிருப்பர். திரைப்படக் காட்சி துவங்கிய பிறகு அரங்கிற்குள் நுழைவது போல் ஆடிட்டோரியத்துக்குள் போனோம். உட்கார ஓர் இருக்கையும் காலி இல்லை. மூன்று மட்ட பால்கனிகளும் நிரம்பி வழிந்தன. இருக்கைகளின் வரிசைகளுக்கு நடுவே தரையில் உட்கார்ந்து கொண்டோம். அவர் மேடைக்குள் மெல்ல நடந்து வந்தார். மேடையில் வேண்டியவர் வேண்டாதவர் என்று நிறைய குமிந்திருந்தனர். மேடைக்கு வந்தவரின் காலைத் தொடுவதே அவர்கள் குறிக்கோள் போல விழா அமைப்பாளர்கள் எல்லோரும் மேடையை விட்டு கீழிறங்கவில்லை. அரங்கே அவரை பரவசத்துடன் பார்த்தது. சிரித்தார். கை கூப்பினார். மகிழ்ச்சியாய் இருப்பது பற்றி பேசினார். அவர் பேசியவை எதுவும் என் மனதில் பதியவில்லை. ஆடிட்டோரியத்தில் இருந்த எல்லோரை போன்றும் அவர் முகத்தை பார்த்து பரவசத்தில் ஆழ்ந்தேன். பேச்சு முடிந்து கேள்வி பதில்கள் பகுதி வந்தது ; நன்றியுரைக்கு முன்னம் “இங்கே வந்திருப்பவர்களில் எத்தனை பேர் திபெத் அகதிகள்?” என்று கேட்டார். பாதிக்கு மேற்பட்டோர் கை தூக்கினார்கள். அவர்களுக்காக சற்று நேரம் திபெத்திய மொழியில் பேசினார். திபெத்திய சகோதரர்கள் மந்திரத்தால் கட்டுண்டவர்கள் போல் கை கூப்பிக்கொண்டு அவர் பேசியதைக் கேட்டார்கள். எனக்கு முன்னால் அமர்ந்திருந்த திபெத்திய சகோதரியின் கண்ணில் நீர் வழிந்தது. மேடையிலிருந்து கிளம்பும் முன் பல முறை நன்றி சொன்னார். புன்னகைத்தார். சுவர்க்கம் வேறெங்கும் இல்லை. கருணை ஒளியை தூவியவாறு புன்னகைக்கும் அவரின் பிரசன்னத்தில் தான் இருக்கிறது சுவர்க்கம். ஆகஸ்டு பத்து. இன்றுதான் நான் முதல் முறையாக டென்ஸின் க்யாட்ஸோவை ரத்தமும் சதையுமாக தரிசித்த நாள். அவலோகிதேஸ்வரரின் அவதாரம் என நம்பப்படுபவரே, நீர் எடுத்துக் கொண்ட உறுதிமொழியின் படி, இவ்வுலகின் ஏழு பில்லியன் மனித உயிர்களும் புத்த நிலையில் உய்யும் வரை உயிர் தரித்திருப்பீராக! பொய்யான தலாய் லாமாவை உற்பத்தி செய்யும் வல்லரசு சீனாவின் திட்டத்தில் மண்ணைப் போடுவீராக!