தனிமைப்பயணம்

இதே சாலையில்
முடிவிலி காலமாகப் பயணிக்கிறேன்
அகன்ற சாலையின்
இரு மருங்கிலும் வெறுமை
ஆளரவமில்லை
கண்ணுக்கெட்டிய தூரமெங்கும்
வறண்ட பூமி
நெடிய தனிமை சூழ
நேர்ப்பாதையிலேயே
செல்ல வேண்டும்
நெடுஞ்சாலையில்
அந்தச் சிறு திருப்பம்
எங்கு வரும்?
மரங்கள் மறைத்திருக்கும் அத்திருப்பத்தில் என்றோ நுழைந்த ஞாபகம்!
குறுகிய சந்து அது
மரங்களிலெல்லாம் பல விதப் பூக்கள்
சந்தெல்லாம் கனிகள் விழுந்து உருளும்
பறவைகள் சத்தமிடும்
திரும்பிய சந்து விரைவில்
நெடுஞ்சாலையில் வந்து முடிந்துவிடும்
திரும்பச் சந்துக்குள் திரும்பிச் சென்றுவிட
எடுத்த முயற்சிகள் வியர்த்தம்
முன்னோக்கி மட்டுமே செல்லும்
வாகனத்தை யார் வடிவமைத்ததோ!
கண் கூசும் வெயிலில்
வியர்வையில் நனைந்து
சென்றவாரிருக்கிறேன்
வியர்வைத்துளி கண்ணுக்குள் வீழ்ந்து
பார்வையை மறைக்கும் கணங்களில்
மரங்கள் மூடிய
ஆயிரமாயிரம் திருப்பங்கள்
இருமருங்கிலும் சென்றிருக்கலாம்!
வாகனத்தின் ஒலி மட்டுமே
துணை வர
நீண்டுகொண்டிருக்கும் சாலையில்
பசுமைத் திருப்பங்களின் தேடலில்
ஒரு தனிமைப்பயணம்

பசித்திருந்த பேய் நண்டு

பசித்துத் திரிந்தது
பேய் நண்டு
காதலிக்காகத் தோண்டிய
மணல் மேட்டின் துளைகட்கு மீளும் தெம்பின்றி
வெகுநேரப் பட்டினியில் அயர்ந்து
வீசும் அனல் காற்றில்
மணல் மூடி படுத்துக் கிடந்தது
புழுக்கள், பிணங்கள்
எதுவுமில்லா பிரதேசத்தில்
எமை உலவ விட்டீரே
என்று உருவமிலா இறைவனிடம்
முனகிய பேய் நண்டின் கண்ணில்
யாரோ ஒருவர் நெற்றித் தழும்புடன்
சுடும் மண்ணில் தலை படிந்து
தொழுகை செய்யும் காட்சி!
மயக்கத்தில் தோன்றும் பிரமையா
கடும்பாலையின் மாயமா
சோலையோ வெகுதொலைவில்,
இங்கு வந்து மண்டியிட வந்தவர் யாரோ!
அவர் அருகில் செல்லும்
ஆர்வமெழ
உடலைத் தள்ளிக்கொண்டு நகர்ந்தது
மறைந்துவிட்டாரவர்
கண்ணில் படவில்லை
இங்கும் அங்கும் தேடிய நண்டு
களைத்துப்போய்
நின்ற இடத்தின்
மூன்றங்குல தூரத்தில்
இறந்து கிடந்த
பெரும்பூச்சியை
மொய்க்கும்
ஓர் எறும்புக்கூட்டம்
பசியாறிய பின்
இறைவன் தம்மை உலவ விட்ட
இடம் பற்றிக் குறை சொல்ல
ஏதுமில்லை என்ற புரிதலில்
மணல்மேட்டின் துளை நோக்கி
ஓடத்துவங்கிற்று
தன் தடங்களை
அந்தப் பெரும் நிலத்தில்
பதித்தவாறே

Ghost Crab Mounds

பயம்-பற்று-ஆசை-வேட்கை

தோழியாய் இருந்தவள்

அமைதியானாள்

பின்னர் அன்னையானாள்

அவளுடனிருக்கப் பிரியந்தான்

அவளருகே நிற்க ஆனந்தந்தான்

அந்த ஆனந்தம் தனி ஆனந்தம்

அது பற்றின்மையால் வருவது

அவளருகே நிற்க பற்றின்மை

வெள்ளம் போல் பொங்குகிறது

பின்னர் தூரமாய்

என் குடும்பத்தின் நினைவு

என் குழந்தை கணவனின் நினைவு

ஓடிச் செல்கிறேன்

என் வீட்டை நோக்கி

இத்தனை பற்றின்மை

உடம்புக்காகாது

பின்னர் ஒரு நாள்

அன்னை எனும் தோழி

என் வீட்டுக்கு வந்தாள்

ஒன்றும் பேசவில்லை

அவள் சிரிப்பில் புரிந்தது

பற்றின்மையோ பயம் தருவது?

பற்றன்றோ பயம் தருவது

எண்ணத்தின் ஓட்டம்

எளிதில் உணர்ந்தவளாய்

“பயப்பட ஒன்றும் இல்லை”

என என் காதில் சொன்னாள்

பின்னர் யாரோ அன்னையிடம் கேட்டார்கள்

“இறைவனை அடைவது எப்படி”

“அளவற்ற பற்றினால்,

அடங்கா ஆசையால்”

“அமைதியை அடைவது எப்படி?”

“ ஓய்வற்று வேட்கை கொள்”

Sri Anandamayi Ma

ஷிண்டோ

சோகம் நம்மை
ஆட்கொள்ளுகையில்
நினைவுகளின், கவனத்தின்
சின்ன சாகசங்களால்
நாம் சில கணங்கட்கு
காக்கப்படுகிறோம்:
கனியின் சுவை, நீரின் சுவை
கனவு நமக்குத் திரும்பித்தரும் முகம்,
நவம்பர் மாதத்துவக்கத்தின் மல்லிகைகள்,
திசைகாட்டியின் முடிவிலாத் தாபம்,
தொலைந்துவிட்டதாய் நினைத்த புத்தகம்,
லத்தின மொழிப் பாவகையின் சீர்,
வீட்டைத் திறக்கும் சிறு சாவி,
சந்தனம் அல்லது நூலகத்தின் வாசனை,
ஒரு நிழற்சாலையின் பழமையான பெயர்,
வரைபடத்தின் நிறங்கள்,
சற்றும் எதிர்பாராத சொல்வரலாறு,
மெருகேற்றிய நகம்,
நாம் எதிர்பார்த்திருந்த சந்திப்பு,
பனிரெண்டு முறை இருளில் கேட்கும் மணியோசை,
நாம் எதிர்பார்க்காத உடல்வலி.
எண்பது லட்சம் ஷிண்டோ தெய்வங்கள்
நம் பூமியில் பயணித்தவண்ணம் இருக்கின்றன
பணிவான அத்தெய்வங்கள் நம்மைத் தொட வருகின்றன
தொடுகி்ன்றன, பின் சுற்றித் திரிகின்றன.

- போர்ஹேஸ்

(Translated from the English translation by Paul Weinfield)

ர்யோகனும் நானும்


மூங்கில் சத்தம்
நீரோடை
மலைக்காற்று – இவை சூழ்ந்த
ர்யோகனின் குடிலுக்குள்
சென்று வசிக்கும் கனவில்
ர்யோகன் என்னிடம் சொல்கிறார் :
“ஸ்லைடுகளாய் நகரும் ப்ரஸென்டேஷன்
உதிரும் இலைகள்
வியாபாரத் திட்டங்கள்
மலையோர நடை
விற்பனை எண்கள்
பறவைகளின் ஒலி
வேறொரு காலத்தின்
ர்யோகன் நீ”

நூருத்தின் வலி*-யுடன் ஓர் உரையாடல்

உன்னிடத்தில் பலவற்றை
கேட்டதுண்டு
சிலதைத் தருவாய்
சிலதை மறுப்பாய்
சிலதை காலந்தாழ்த்தி மறுப்பாய்
சிலதை காலந்தாழ்த்தி கொடுப்பாய்
தந்ததற்காக உவகை சில நேரம்
மறுத்ததற்காக கோபம் பல நேரம் –
“கோபம் என்றும் இஸ்லாத்தை தழுவ முடியாது”
என்கிறார் ஷைக் நூருத்தின் வலி
மனதுக்குள் பேசியதை சொல் மாறாமல் கேட்டுவிட்ட அற்புதத்தைப் புறக்கணித்து
இது புறக்கோபம் என்று
சாக்குபோக்குச் சொல்லி விலக முயன்ற போது
“உள்கோபம் உள்ளிருந்தாலன்றி
ஏது வெளிக்கோபம்” என்றார் ஷைக்
“அவனுடனான என் உரையாடலில்
நீர் ஏன் நுழைந்தீர்?”
“அடடா – அவனைத்தேடி
தூரத்து தேசங்களுக்குச் சென்றேன்
காம்பவுண்டிலிருந்து வரும் குரலுக்காக காத்திருந்தேன்
நீரோ இங்கு உட்கார்ந்தபடியே அவனுடன்
உரையாடிக் கொண்டிருக்கிறீர்”
ரிஷி, ஷைக், ஆலிம்தார்
பல பேருக்குரியவருக்கு பதில் தாராமல்
என் இல்லத்துக்குள் சென்றேன்
துளியிருட்டு கூட மிஞ்சாமல்
கரைத்துவிட்ட ஞானப்பேரொளியில் நிறைந்தபோது
எதன் மூலப்பொருள்
உள்கோபம் என்பது விளங்கிற்று

*-நந்த் ரிஷி (1377-1438, காஷ்மீர்)

நந்த் ரிஷி தர்கா, சரார் ஏ ஷரீஃப், காஷ்மீர்

டைபுட்ஸு

அமைதியை எண்ணிக் கொண்டே
அமைதியில் புக முயன்றேன்
காலணியின் ஃப்ளிப்ஃப்ளாப் சத்தம்

புத்தனை ஏன் வணங்கவேண்டும்?
வணங்குகையில் எண்ணம் நிற்கும்
காலணியின் சத்தம் மறையும்

எண்ணம் நின்றவுடன் கவனம் பதிப்பது பிறந்ததையா, நிர்வாணத்தையா
அல்லது பரிநிர்வாணத்தையா?

பிறப்பு, நிர்வாணம், பரிநிர்வாணம்
மூன்று கருத்தும் மறைய
டைபுட்ஸூவுக்கு தீபமேற்று

சுடரொளியில் பூச்சிகள் படையெடுக்க
கருணா த்யானத்தில் மூழ்குமுன்
தீபத்தை அணைத்துவிடு

டைபுட்ஸு உயரத்துக்கு
உன் நிழல் வளர்ந்துவிடக்கூடும்
தலையை சற்றுக் குனிந்தபடியிரு

All the time I pray to Buddha
I keep on
killing mosquitoes.
– Kobayashi Issa

புத்த பூர்ணிமா வாழ்த்துகள்
Happy Vesak

ரியோகனும் பஷோவும்

பஷோவும் ரியோகனும்
சந்தித்தபோது
தத்தம் குடிலைப் பற்றிப் பேசிக் கொண்டனர்
பின்னர் தேநீர் சுட வைக்கச்
சுள்ளி பொறுக்க ரியோகன் சென்றபோது
மதியப் பயணத்துக்கு
அணிய வேண்டிய
கருப்பு அங்கியை
பெட்டிக்கடியில் வைத்து
அழுத்திக் கொண்டிருந்தார் பஷோ

திங்கட்கிழமை

திங்கட்கிழமையை
ஒரு நாள் தள்ளி வைத்தால்
அடுத்த தினமும்
திங்கள்
முழுக்கவும் தவிர்த்தால்
ஞாயிறும் திங்கள்
வெள்ளிக்கிழமை மாலையில்
நிரந்தரமாய்த் தங்கிவிட
நேரத்தைக் கேட்டுக் கொண்டேன்
பரிசீலிக்கிறேன்
என்று சொல்லிக்கொண்டே
திங்களுக்கு வெகு அருகில் சென்றுவிட்டது
நேரம் நகர்ந்து சென்ற பின்னர்
நேரும் வெறுமையில்
திக்குத் தெரியாமல்
கண்கள் கூசி
தோராயமாய் திங்களை நோக்கி ஓடினேன்
நேரத்தை நோக்கி
என்று சொன்னால்
இன்னும் பொருந்தும்

பாதையில் கற்கள்

ஒவ்வொரு முறையும்
அதே பாதையில் வழி நடத்துகிறாய்

முட்களற்ற
சமன் செய்யப்பட்ட
இயலுமெனில்
பூக்கள் இறைந்து கிடக்கும் பாதையில்
வழி நடத்தக்கூடாதா!

காலில் குத்திய
கல்லை நோக்குகையில்
பளிச்சென பிரகாசம்
கல்லின் மறு பாதி
இருண்டு கிடந்தது
இருட்டும் பிரகாசமுமாய்
கல்லின் இரு புறங்கள்
கல் இருள்கிறதா
பிரகாசிக்க முயல்கிறதா

புவியும் ஒரு கல்
அதன் இருளின் ஒளியின்
மூலம் ஒன்று

செல்லும் பாதையைச்
சலித்துக் கொள்ளாதே

பாதையில் நடக்கையில்
கவனத்துடன்
ஒரு பாதி இருண்டு
மறு பாதி ஒளிரும் கல்லைத் தேடு