Kashmir’s Transition to Islam – by Ishaq Khan – விமர்சனம்

வரலாற்று மூலங்களைத் திறந்த மனதுடன் அதே சமயம் விமர்சன பூர்வமாக அணுகுதல் அதிமுக்கியம். இல்லையேல் வெறும் விவாதமாக முடிந்துவிடக்கூடும். கருத்து நிலைகளுக்கேற்றவாறு சாயும் அணுகுமுறை வரலாற்றாளர்களின் பலவீனமாகக் கருதப்படும். என்னுடைய பார்வையில், இஷாக் கான் அவர்களின் Kashmir’s Transition to Islam ஒரு பலவீனமான நூல் என்றே சொல்வேன்.

இஷாக் கான் இரண்டு பார்வைகளை முன் வைக்கிறார். (1) Syncretism – அதாவது சமயங்களின் சேர்ந்தியங்குதல் – எனும் கருத்தை அவர் நிராகரிக்கிறார். இஸ்லாம் கஷ்மீரின் புராதன கலாசார அம்சங்களை ஏற்றுக் கொண்டதை மாறும் முறை என்று வர்ணிக்கிறார். இஸ்லாமின் இறுதி இலக்கு “ஷரியா” எனப்படும் இஸ்லாமிய உயர் கொள்கைகளே என்கிறார். (2) நந்த் ரிஷியும் அவருக்குப் பின் வந்த ரிஷிகளும் கஷ்மீரியத் என்ற அடையாளத்தை இஸ்லாத்தின் அடிப்படைச் சித்திரத்தின் பின்ணனியில் வரைய வந்தவர்கள்.

இரண்டு பார்வைகளும் பிரச்னைக்குரியவை. கஷ்மீர தேசியவாதத்தின் அடிப்படை முழுவதையும் “இஸ்லாம்” எனும் ஒற்றை அடையாளத்தில் சுருக்க நினைத்த குழுக்களின் குரல் வலுத்த (“அயல் நாட்டு உதவியுடன் வலுக்க வைக்கப்பட்ட”) தொண்ணூறுகளில் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் – கஷ்மீரக் கலாசாரத்தின் சிறப்பியல்பு என்று கஷ்மீரின் தற்கால சாதாரண நபர்களும் பெருமிதங்கொள்ளும் ஒன்றை மறுக்கிறது. சமயங்களின் ஒருங்கிணைவு என்ற ஒன்றும் இல்லை. பிராமணர்களின் சாதீயத்தால் பாதிக்கப்பட்ட வெகுஜனங்கள் இஸ்லாமைத் தழுவுதலுக்குச் சலுகையாக அவர்களின் முந்தைய கலாசாரத்தின் அம்சங்கள் இணைத்துக் கொள்ளப்பட்டன. இது இறுதியானதில்லை. கஷ்மீரில் இஸ்லாம் மாறும் தன்மையதாக இருக்கிறது. எனவே, சமயங்களின் ஒருங்கிணைவு இலக்கில்லை. இதற்கான தரவுகளை ஆசிரியர் தெளிவாகத் தரவில்லை. நந்த் ரிஷி-யின் பாடல்களில் இருக்கும் இந்து, பௌத்த அடையாளங்களை அவரின் ஆரம்ப காலச் சிந்தனை என்று சுருக்கிவிடும் இஷாக் கான், லல்லா எனும் சைவ சித்தரை முழுவதுமாக இஸ்லாத்தில் பொருத்திக் கொள்கிறார்.

கங்கைச் சமவெளியில் சாதீய கொடுமைகளுக்கு எதிராக பக்தி இயக்கம் பரவி பதினைந்தாம் நூற்றாண்டுகளில் இஸ்லாத்தின் பரவலை கட்டுப்படுத்தியது என்பதை ஏற்கும் இஷாக் கான், கஷ்மீரில் பக்தி இயக்கம் தோல்வியுற்றது என்று கூறும்போது இஸ்லாம் பிராமணரல்லாத வெகுஜனங்களை அரவணைத்துக் கொண்டதுதான் என்று எளிதில் கூறி விடுகிறார். இதே நிலைமை கங்கைச் சமவெளியில் ஏன் கை கூடவில்லை என்ற கேள்விக்கு பதிலேதும் சொல்லாமலேயே சென்று விடுகிறார் இஷாக் கான்.

சுல்தான் சிக்கந்தர் இந்துக் கோயில்களை அழித்ததைப் பதிவு செய்யும் ராஜதரங்கிணி நூல் மீது ஆசிரியருக்கு ஏனோ மனத்தாங்கல்! இஸ்லாமிய அரசர்களை காலரீதியாக பெரும்பான்மையான இடங்களில் தெளிவுடன் பதிவு செய்யும் ராஜதரங்கிணியின் விடுபடல்களுக்கு காரணம் கற்பித்தல் எந்த அளவுக்கு வரலாற்று அணுகுமுறை எனத் தெரியவில்லை? சுல்தான் சிக்கந்தரின் சிலை உடைப்புகளுக்கான பழியை புதிதாக மதம் மாறிய முன்னாள் பிராமணர் சுக பட்டர் மீது பழியைப் போடுகிறது ராஜதரங்கிணி! புது இஸ்லாமியராக தமது விசுவாசத்தை நிரூபிக்க சுக பட்டர் செய்த கொடுமைகள் என்று பதிவு செய்யும் ராஜ தரங்கிணி – மீர் அலி சைய்யத் ஹம்தானி-பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்பதற்கு காரணமாக ராஜ தரங்கிணியின் பிராமண ஆசிரியர்களினுடைய மனச்சாய்வு என்கிறார் இஷாக் கான். ஆனால் சைய்யத் ஹம்தானியின் புதல்வர் – முகம்மது ஹம்தானி கஷ்மீருக்கு வந்து, சுல்தானுடைய சபையின் அங்கமாக இருந்ததை ஜோனராஜா (ராஜ தரங்கிணியின் ஆசிரியர்களுள் ஒருவர்) கூறுவதை மேற்கோள் காட்டுகிறார்.

லல்லா குறித்தும் ராஜ தரங்கிணி மௌனம் சாதிப்பதை சதி என்ற நோக்கில் நோக்குகிறார் இஷாக் கான். லல்லா குறித்து வரலாற்று ரீதியாக நமக்கு அறியத்தருபவை இஸ்லாமியர்களின் குறிப்புகளே என்பது உண்மைதான். இந்த கூற்று ஒன்றை வைத்துக் கொண்டு லல்லாவை இஸ்லாமுக்கு நெருக்கமானவர் என்று புத்தகம் முழுதும் கூறிச் செல்கிறார். 17ம் நூற்றாண்டின் இஸ்லாமிய குறிப்பாளர்கள் ஹைதர் மாலிக் சதுரா, ஹஸன் பின் அலி கஷ்மீரி போன்றவர்களும் லல்லா பற்றி எதுவும் சொல்லவில்லை. அதைப் பற்றி இஷாக் கான் வாய் திறக்கவில்லை.

லல்லாவை இஸ்லாமுக்கு நெருக்கமானவர் என்று காட்டுவதற்கு அவர் தரும் ஆதாரங்கள் தொன்மங்களின் அடிப்படையிலானவை. தொன்மங்களைக் கேள்விக்குட்படுத்தவேயில்லை இஷாக் கான். முகம்மது ஹம்தானியை குருவாகக் கொண்டிருந்தவர் என்ற இஸ்லாமியர்களின் தொன்மக்கதையை ஐயமின்றி ஏற்றுக் கொண்டுவிடும் இஷாக் கான் ஶ்ரீ காந்த சித்தர் என்பவரை லல்லேஸ்வரியின் குருவாகக் கூறும் இந்துக்களின் தொன்மங்களை கண்டும் காணாமல் விட்டுவிடுகிறார்.

லல்லாவின் கருத்துகளைத் தமக்கிஷ்டமான வகையில் வளைத்துக் கொள்ளும் இயல்பும் நூல் முழுக்கக் காணக்கிடைக்கிறது. உதாரணத்திற்கு, பக்கம் 75இல் கீழ்க்கண்ட லல்லாவின் வாக்- மேற்கோள் காட்டப்படுகிறது –

“வெட்கத்தின் தளைகளை உடைத்தெறிவது எப்போது?
ஏளனத்தை கேலியை அலட்சியம் செய்வது எப்போது?
தகுதியின் உடைகளை நிராகரிப்பது எப்போது?
என் மனதை ஆசைகள் தாக்கிக் கொண்டிருந்தால்”

இஷாக் கான் அவர்களுக்கு மேற்சொன்ன வாக் – லல்லா வாழ்ந்த காலத்தின் சமூக வேற்றுமைகளை விவரிக்கிறதாம்!

இன்னொரு உதாரணம் – பக்கம் 74

“சிவன், எங்குமுள்ள, அனைத்திலும் உறைகிறான்
எனவே, இந்துவையும், முஸ்லீமையும் பிரித்துப் பார்க்காதீர்
ஞானமுண்டெனில் உம்மை அறிக
பிரபுவின் உண்மை ஞானம் அதுவே”

இஷாக் கானின் கருத்துப்படி மேற்சொன்ன வாக் பிராமணர்களைத் தாக்குகிறதாம்! சடங்கியல்கள் மட்டுமே அறியாமையைத் தெளிவிக்காது – என்ற கருத்து உபனிடத காலப் பழசு என்பதை இஷாக் கான் அறியாதவர் போலிருக்கிறது.

புழங்கும் தொன்மக் கதைகளின்படி, தன்னுடைய மானசீக குருவாக வரித்துக் கொண்ட லல்லாவை அவதாரம் என்கிறார் நூருத்தின் எனும் நந்த் ரிஷி தன்னுடைய ஒரு பாடலில் –

“பத்மன்புராவின் அந்த லல்லா
திருப்தியடையும் வரை தெய்வீக அமுதைக் குடித்தவள்
எங்களுக்கு அவதாரம் அவள்
கடவுளே, அதே ஆன்மீக ஆற்றலை எனக்கும் அளித்தருள்!” – பக்கம் 77

அதே பக்கத்தில் இஷாக் கான் கூறுவது –

“That Lalla, as an ardent lover of Siva, succeeded in reviving Saivism is an argument belied by the very silence of our Saivite chroniclers and poets of her near-contemporary and later times. What is, however, of significance to remember from the viewpoint of social history is the historical dimension of her elevation to avatar by a devout Muslim like Nuruddin”

இந்தப் பத்தியில் வெளிப்படும் முரண்களைப் பாருங்கள்! சைவத்தின் மறுமலர்ச்சியில் லல்லா வெற்றி பெறவில்லை என்று உறுதிபடக் கூறும் இஷாக் கான் அதற்களிக்கும் ஆதாரம் அவளின் சமகாலக் குறிப்பாளர்கள் அவளைப் பதிவு செய்யாததைக் குறிப்பிடுவது! அவளை “அவதாரம்” என்று நூருத்தின் எனும் ஆசாரமான முஸ்லீம் புகழ்வது சமூக வரலாற்றுப் பரிமாணத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது என்று இஷாக் கான் ஜிலேபி சுற்றுவதைத் தான் கஷ்மீர சமூகவியலாளர்கள் “Syncretism” என்கிறார்கள்.

நந்த் ரிஷி இஸ்லாமிய சூபி என்பதற்கு மறு கருத்தில்லை. ஆனால், இரண்டாம் தலைமுறை இஸ்லாமியர் என்ற முறையில் அவருடைய தந்தையின் முதல் மதத்தின் தொப்புள் கொடி உறவு அவரின் கவிதைகளில் வெளிப்படுவதை “ஆரம்பகாலம்” என்று கூறுவது நந்த் ரிஷியின் சமயச்சேர்ந்தியல் இலக்கை மறுப்பதாகும். கால வரிசை அடிப்படையிலான நந்த் ரிஷியின் பாடல்கள் தொகுப்பு இன்று வரை வெளிவரவில்லை எனும் போது தமது ஊகத்தை ஒரு வரலாறாக கட்டமைப்பது பிழையான அணுகுமுறை.

இறைத்தோட்டம்

ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமிய சிந்தனைகளையும் ஆளுமைகளைப்பற்றியும் தினம் ஓரிரு குறிப்புகளாக ஃபேஸ் புக்கில் பதிந்தேன். அதைத் தொகுத்து நண்பர் Uvais Ahamed அவர்களுக்கு சில மாதங்கள் முன் அனுப்பியிருந்தேன். இரு வாரங்கள் முன் என்னைத் தொடர்பு கொண்டு தொகுப்பு நூல் வடிவில் தயாராகிக் கொண்டிருக்கிறது எனும் செய்தியைத் தெரிவித்து ஆச்சரியத்திலாழ்த்தினார்.

“இறைத்தோட்டம்” நூலை சென்னை புத்தக சந்தையில் வாங்கலாம். சீர்மை பதிப்பக வெளியீடு.

கணேஷ் வெங்கட்ராமன் மதங்களின் வரலாறுகள், அவற்றின் பொதுத்தன்மைகள் என்ற கருத்துலகில் சஞ்சரிப்பதில் விருப்பங்கொண்டவர். புத்த மதம் பற்றிய அவரின் புத்தகத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இஸ்லாத்தையும் அதன் கோட்பாடுகளையும் நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட ஒருவரின் பார்வையிலிருந்து ஆராய்வதில் ஆர்வம் காட்டிவருகிறார். இஸ்லாமிய வரலாறு, தொன்மங்கள், அறிவாளுமைகள் என இஸ்லாத்தின் வண்ணமயமான நாகரிகப் பங்களிப்புகளைப் பற்றி சுருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் ரம்ஜான் மாதம் முழுக்க எழுதியவற்றின் தொகுப்பு இது.

(பின்னட்டை குறிப்பு)

வரலாற்று ஆய்வில் புராணங்களின் பயன்பாடு

ராஜதரங்கிணி நூலில் வரும் கஷ்மீர மன்னர்களின் வரிசையை வாசித்த போது என்னுள் தோன்றிய அதே பெருவியப்பு விஷ்ணு புராணத்தில் வரும் அரசவம்சங்களின் பெயர்களை அவ்வம்சங்களின் அரசர்களின் பெயர்களை வாசிக்கும்போதும் தோன்றியது. ராஜதரங்கிணி போன்று வரலாற்றுப் பிரக்ஞையுடன் புராணங்கள் எழுதப்படவில்லை என்றாலும் புராணமும் வரலாறும் இணைவதைப் பல இடங்களில் அவதானிக்க முடிகிறது.

அசோகரின் பெயரை விஷ்ணு புராணத்தில் வாசித்தபோது அசோகரைத் தொன்ம பாத்திரமாக சித்திரிக்கும் பௌத்த இலக்கியங்கள் ஞாபகத்தில் வந்து சென்றன. புத்தர் வாழ்ந்த காலத்தை நிர்ணயிப்பதில் பௌத்த மூல நூல்களை விட விஷ்ணு புராணம் கூறும் காலவரிசை துல்லியமானது என்று வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.

“நந்தாவின் வம்சம் முடிவுக்கு வந்தவுடன் மௌரியர்கள் பூமியைக் கைப்பற்றுவார்கள், ஏனெனில் கௌடில்யர் சந்திரகுப்தனை அரியணையில் அமர்த்துவார்: அவனுடைய மகன் விந்துசாரர்; அவனுடைய மகன் அசோகவர்த்தனனாவான்…..”

மௌரியர்கள் ஆட்சி முடிவடைந்து சுங்கர்கள் ஆட்சியேறியதைப் பதிவு செய்கிறது விஷ்ணு புராணம் :-

“சுங்கர்களின் வம்சம் அடுத்து இறையாண்மையை உடையதாக மாறும்; கடைசி மௌரிய அரசரின் தளபதியான புஷ்பமித்ரர் தனது எஜமானரைக் கொன்றுவிட்டு அரியணை ஏறுவார்.”

சாதவாகன மன்னர்களையும் வரிசைப்படுத்துகிறது விஷ்ணு புராணம் :-

“சுசர்மன் கன்வாக்களின் (கடைசி மன்னன்) ஆந்திர பழங்குடியினத்தைச் சேர்ந்த சிப்ரகா என்ற சக்திவாய்ந்த வேலைக்காரனால் கொல்லப்படுவான், அவன் பிறகு மன்னனாவான்; அவனே ஆந்திராபிரித்ய வம்சத்தை நிறுவியவன்: அவனுக்குப் பிறகு அவரது சகோதரர் கிருஷ்ணர் ஆட்சிக்கு வருவார்; அவருடைய மகன் ஸ்ரீ ஶதகர்ணி; அவருடைய மகன் பூர்ணோட்சங்க; அவரது மகன் ஷாதகர்ணி (2வது); அவருடைய மகன் லம்போதரா; அவருடைய மகன் இவிலக; அவருடைய மகன் மேகஸ்வதி; அவருடைய மகன் படுமட்; அவருடைய மகன் அஷ்டகர்மன்; அவரது மகன் ஹளன்; அவரது மகன் தலகா; அவருடைய மகன் பிரவிலாசேனா; அவரது மகன் சுந்தரன், ஷாதகர்ணி; அவரது மகன் சகோர சாதகர்ணி; அவரது மகன் சிவஸ்வதி; அவருடைய மகன் கோமதிபுத்திரன்; அவரது மகன் புலிமாத்; அவருடைய மகன் சிவஸ்ரீ சாதகர்ணி; அவருடைய மகன் சிவஸ்கந்தா; அவருடைய மகன் யஜ்ஞஸ்ரீ; அவருடைய மகன் விஜயா; அவரது மகன் சந்திரஸ்ரீ; அவருடைய மகன் பூலோமர்சிஷ். இந்த முப்பது ஆந்திரபிரத்திய மன்னர்கள் நானூற்று ஐம்பத்தாறு ஆண்டுகள் ஆட்சி செய்வார்கள்.”

சாதவாகனர் மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுவிட்டு பின்னர் ஆண்ட வம்சங்களைக் குறிப்பிடுகிறது – குப்தர்கள் வரை குறிப்பிடும். சிந்து நதிக்கரைக்கு அப்பால் “காட்டுமிராண்டிகள்” ஆள்வார்கள் என்ற வரிகள் எட்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் “அராபியர்கள்” சிந்துவை ஆண்ட தகவலை விஷ்ணு புராண ஆசிரியர்கள் அறிந்திருந்தனரோ என்று எண்ண வைக்கிறது.

இந்தப் பெயர் வரிசைகள் மிகவும் நம்பகமான வரலாற்று ஆதாரங்களாகப் பயன்படுத்தப்படலாம், இருப்பினும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் கூடிய கவனம் மிக அவசியம்.

மத்ஸ்ய புராணம், வாயு புராணம் – இவற்றிலும் மன்னர்களின் வரிசை வருகின்றன. குறிப்பிடப்படும் அரச வம்சங்களின் பெயர்களை வைத்து எந்த நூற்றாண்டில் இந்தப் புராணங்கள் எழுதப்பட்டன என்பதை ஊகித்துவிடலாம்.

காஷ்மீர் ரிப்போர்ட்

பெருநிலப்பரப்பில் வழிபாட்டுரிமை என்று பேசப்படுவது காஷ்மீரிகளுக்கு மீண்டும் மீண்டும் தொடர்ந்து மறுக்கப்படும் ஒன்று. 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கூட, காஷ்மீரின் முக்கியச் சின்னமான ஜாமியா மஸ்ஜித் 136 நாட்களுக்கு மூடப்பட்டிருந்தது. இது முதல் முறை அல்ல. இது போன்று கடந்த ஐம்பதாண்டுகளில் பலமுறை வரலாற்றுச் சிறப்புமிக்க மசூதி மூடப்பட்டிருக்கிறது.

ஹஸ்ரத் பாலுக்குச் சென்ற போது அங்கு வைக்கபட்டிருந்த அறிவிப்பு பலகை எனக்கு அதிர்ச்சியைத் தந்தது – “இது ஒரு வழிபாட்டுத் தலம் மட்டுமே ; வேறு எந்தச் செயல்களும் அனுமதிக்கப்படாது”. தொழுகை செய்ய வருபவர்களை இப்படியா பயமுறுத்துவது?

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டபோது ஆறு மாதங்களுக்கு, காஷ்மீர் மக்கள் பட்ட இன்னல்கள் நெஞ்சை உலுக்கின. ஆறு மாதங்கள் மொபைல் இணைப்புகள் இல்லாமல் வாழ்வதை கற்பனை செய்து பாருங்கள்! டெல்லியில் தற்போதைய ஆட்சியும் அதன் முக்கிய இரட்டையரும் இங்கு அதிகம் விரும்பப்படுவதில்லை என்பது கண்கூடு.

உ.பி முதல்வர் டெம்ப்ளேட்டில் செயல்படுகிறார் தற்போதைய லெஃப்டினன்ட் கவர்னர். கடந்த ஞாயிற்றுக்கிழமை (8/5/2022), இந்தியத் தொல்லியல் கழகத்தின் (ஏ எஸ் ஐ) பாதுகாப்பில் இருக்கும் வரலாற்று நினைவுச்சின்னத்திற்குள் முன்னறிவிப்பின்றி நிழைந்து ஹோமம் நடத்துகிறார். இது இதுவரை கேள்விப்படாத ஒன்று. இதற்கு ஏஎஸ்ஐ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ராணுவத்தின் பங்கு பற்றி பலரிடம் பேசினேன். ஊக்கமளிக்கும் கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை. ஒரு கடைக்காரரிடம் நான் கேட்ட கேள்விக்கு – அவர் இந்தியாவை வெறுக்கிறாரா என்றால் – சுருக்கமான பதில் – “ஆம், அது இயற்கைதானே”.

ஒவ்வொரு 20 அடிக்கும் ஒரு முழு ஆயுதமேந்திய சிப்பாய் தெருக்களைக் கண்காணிப்பதைக் காணலாம்.

விரும்பத்தகாத அரசியல் பார்வைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், காஷ்மீரிகள் மிகவும் இனிமையாகவும், மரியாதையாகவும், விருந்தோம்பல் மிக்கவர்களாகவும் இருப்பதைக் கண்டேன்.

பல சீக்கியர்கள் காஷ்மீரில் வாழ்வதைப் பார்த்தேன். பஹல்காமில் ஒரு சீக்கியரும் ஒரு காஷ்மீரியும் பங்காளிகளாக நடத்தும் ஓர் உணவகத்தில் உணவுண்டேன். சீக்கியர்கள் பள்ளத்தாக்கில் வாழும்போது பண்டிட்கள் ஏன் வெளியேற்றப்பட்டனர் என்பது குழப்பமாக உள்ளது.

நாங்கள் தில்லி திரும்ப விமானத்தைப் பிடிக்க விமான நிலையத்தை அடையும் அதே நேரத்தில், விமான நிலையப் பகுதிக்கு அருகிலிருக்கும் அலுவலகமொன்றில் வேலை பார்க்கும் ஒரு காஷ்மீரி பண்டிட் (மீள்குடியேற்றத் திட்டத்தில் பள்ளத்தாக்கு திரும்பியவர்) வேலையிடத்திலேயே இரு தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தெற்கு காஷ்மீரில் இன்னும் மிலிடன்ஸி ஓயவில்லை. சுற்றுலாப் பயணிகளைச் ஓட்டிச் செல்லும் ஓட்டுநர்கள் முடிந்தவரை நெடுஞ்சாலை NH44 வழியாக மட்டுமே ஓட்டுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக அனந்த்நாக் செல்லும் சில உள் சாலைகளை பயன்படுத்த வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

தி காஷ்மீரி ஃபைல்ஸ் பிரபலமான திரைப்படம் அல்ல – நான் சந்தித்த கடைக்காரர்களிடம் நடத்தப்பட்ட முறைசாரா கருத்துக்கணிப்பின் அடிப்படையில். ஒரு சால்வை விற்பனையாளர் குறிப்பிட்டார் – நாங்கள் படத்தை எங்கே பார்ப்பது? – ஆம், இரண்டு தசாப்தங்களாக முழு பள்ளத்தாக்கிலும் சினிமா அரங்குகள் மற்றும் மல்டிபிளக்ஸ்கள் இல்லை. நம்ப முடிகிறதா?

இந்தக் கோடையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் காஷ்மீரை மொய்க்கின்றனர். ஐனவரியிலிருந்து மே மாதத் தொடக்கம் வரை ஏழு லட்சம் சுற்றுலாப் பயணிகளை காஷ்மீர் வரவேற்றுள்ளது. இதை ஒரு மகிழ்ச்சி தரும் முன்னேற்றமாக சராசரி காஷ்மீரிகள் கருதுகின்றனர்.

படம்: ஜாமியா மஸ்ஜித், ஶ்ரீநகர் – காஷ்மீரிகளின் மத-கலாச்சார நரம்பு மையம்

வரலாற்றை எப்படி அணுகுவது?

வரலாற்றை எப்படி அணுகுவது? காலத்தின் பாய்ச்சல், கருத்துகளின் வெள்ளோட்டம், நிகழ் கலாச்சாரத்தின் உற்பத்தி ஸ்தானம், மனித இனம் முன்னர் செய்த தவறுகளின் பகுப்பாய்வு, இன்னும் எத்தனையோ விதமாக படிக்கலாம்! ஆனால் பெருமிதவுணர்வுடன்? கழிவிரக்கத்துடன்? முன்னர் நடந்த அநியாயங்களுக்கான பழி வாங்கும் உணர்வை தூண்டும் கதையாடலாக? ஓர் உதாரணமாக – ஜொராஸ்டிரர்களின் குறைந்த மக்கள் தொகையைப் பற்றி கேள்விப்படும் போது, விரைவாக மறைந்து போகத்தக்கதொரு கலாச்சாரக் குழுவாக அவர்களை எண்ணும் போது உடனடியாகத் தோன்றும் வருத்தம் / பரிதாப உணர்ச்சி. இது வரலாறை வாசிக்கும் சரியான வழியாக இருக்க முடியுமா?

சில வாரம் முன்னர் ஓர் ஆவணப்படம் பார்த்தேன். பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் மொத்தம் எஞ்சியிருக்கும் பார்சி மக்கள் தொகை வெறும் 23 பேர்களாம். அந்த 23 பேரில் இளைஞர்கள் வெறும் நான்கு பேராம். மற்றவர்களனைவரும் மரணம் எந்நேரமும் அணுகக் கூடிய வயதில் இருப்பவர்கள். அந்த ஆவணப்படம் என்னை மிகவும் பாதித்தது. ஒரு காலத்தில் உலகின் மூத்த நாகரீகங்களில் ஒன்றாக இருந்த சமய / கலாச்சாரக்குழு எண்ணிக்கையில் இவ்வளவு சுருங்கக் காரணங்கள் என்ன? அவர்களின் கலாச்சாரம் தவழ்ந்த மண்ணில் ஏன் இன்று அவர்கள் இல்லை? (இரானில் இன்று ஜொராஸ்டிரத்தை பின்பற்றும் மக்களின் எண்ணிக்கை இருநூறு!)  மிகவெளிப்படையான காரணம் ஏழாம் நூற்றாண்டில் பாரசீகம் அராபியர்களின் கட்டுப்பாட்டில் வந்ததுதான்! இது பற்றிய வரலாற்றுத் தகவல்களை படிக்கத் தொடங்கியதும் அராபியர்களின் அடக்குமுறை, ஜொராஸ்டிரர்களின் எதிர்ப்பை ஒவ்வொருமுறையும் ஒடுக்குதல், அவர்கள் இஸ்லாத்தை தழுவும் வகையிலான சமூக விதிமுறைகளை செயல்படுத்துதல், நெருப்பு கோயில்களை சேதப்படுத்துதல், முதுகெலும்பை உடைக்கும் ஜிஸியா வரியைவிதித்தல், – இவற்றை புரிந்துகொள்வதில் அதிக சிரமம் இருக்க முடியாது. 

ஒன்பதாம் நூற்றாண்டில்  குஜராத் கடற்கரை வழியாக இந்தியாவிடம் தஞ்சம் புகுந்திராவிடில் ஜொராஸ்டிரர்கள் இன்று எஞ்சியிருப்பார்களா? இந்த கேள்விக்கு நாம் ‘இல்லை’ என்று பதிலளிப்போமாயின் மனித வரலாற்றை ஒற்றை குமிழுக்குள் நாம் அடைக்க முயல்பவர்கள் ஆகிறோம். வரலாற்றின் போக்கை தர்க்க ரீதியாக கணித்தல் சாத்தியமில்லை என்னும் பாடத்தை வலுப்படுத்தும் பலதகவல்களில் ஒன்றாகத்தான் நாம் இதைப் பார்க்கவேண்டும். இந்தியா வராமல் தாய் நாட்டில் தங்கி அராபியர்களை எதிர்த்து மடிந்துபோனவர்களின் நோக்கில் இந்தியாவில் தஞ்சம் புகுந்தவர்கள் ‘கோழைகள்’ என்பதாக பார்க்கப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. பதினொன்று நூற்றாண்டுகள் கழித்து ஜொராஸ்டிர சமயத்தை இன்னமும் உயிர்ப்புடன் வைத்திருப்பவர்கள் அவர்கள்தாம் என்னும் தகவலின் வெளிச்சத்தில் ஒன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு அகதிகளாகச் செல்ல எடுக்கப்பட்ட முடிவின் முக்கியத்துவம் புரியும். 

அரைகுறையான வரலாற்று வாசிப்பிற்குப் பின்னர் ‘அது அநியாயம்’ என்பதாக சீற்றம் அல்லது வருத்தம் அல்லது கழிவிரக்கம் கொள்ளுதல் வரலாற்றின்  இயக்கத்தை, அதன் உண்மையான பாடங்களைப் புரிந்து கொள்ளாமல் செய்துவிடும். வரலாற்றை வாசிப்பதன் நோக்கம் அதீத உணர்ச்சிகளை நம்முள் எழுப்பிக் கொள்வதன்று.

இஸ்லாமிய காலிஃபாக்கள் பெர்சிய சாஸனியப் பேரரசைத் தாக்கி பெர்சியாவை தம் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். ஆம், கடுமையான போர் மற்றும் வன்முறை தான் அவர்களின் உத்தியாக இருந்தது. ஆனால் ஒன்றை நாம் மறுக்க முடியாது. பலத்த எதிர்ப்பை அவர்கள் சந்திக்காமல் இல்லை. ஜொராஸ்டிரர்களின் எதிர்ப்பு வரலாற்றில் நன்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

இஸ்லாமிஸ்டுக்களான அராபியர்கள் இரானின் கலாச்சாரத்தை, பண்பாட்டை அழிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. இதன் காரணமாக ஜொராஸ்டிரர்களுக்கு புது மதத்தை ஏற்பது எளிதாக இருந்தது. அதே சமயத்தில் இஸ்லாமைத் தழுவினாலும் இரகசியமாக பல நூற்றாண்டுகளாக ஜொராஸ்டிர கலாசாரத்தை பின்பற்றுபவர்களாக வே இருந்து வந்துள்ளனர் என்பதுவும் வரலாறு. 

பின் வந்த நூற்றாண்டுகளில் புதுவகை சமய உட்பிரிவுகள் (‘மதப்’) தோன்றின. யர்சான், அலாவிஸ் போன்ற உட்பிரிவுகள் ஜொராஸ்டிரிய, ஷியா இஸ்லாமிய சமயங்களின் கலவைகளாக இருந்தன. இத்தகைய பிரிவுகளை தம்மை இஸ்லாமியர்களாக காட்டிக் கொள்வதாகவே பயன்படுத்திக் கொண்டனர் இரானியர், ஆனால் வாஸ்தவத்தில் ஜொராஸ்டிரத்தின்  மூலக்கொள்கைகளை நம்புபவர்களாகவே அவர்கள் இருந்திருக்க வேண்டும்.

சுன்னி பிரிவிலிருந்து சமய ரீதியாக கோட்பாட்டு ரீதியாக வேறுபட்ட பிரிவு ஷியா என்பது உண்மைதான். எனினும், துவக்கத்தில் அதிகாரத்தில் இருந்த இஸ்லாமிஸ்ட்டுக்களை மறுக்கும் ரீதியிலேயே ஷியா பிரிவுக்குள் சேர்ந்தனர் இரானியர். அடிப்படையில் பழைய மதக்காரர்கள் (ஜொராஸ்டிரர்கள்) கடைசி வரை புது மதத்தை நம்பவில்லை. பெரும்பான்மையர் இஸ்லாத்துக்குள் வந்தனர் என்பது உண்மை தான், ஆனால், அவர்களின் பழைய மதத்தின் நம்பிக்கைகளும் சடங்குகளும் அவர்களுடனேயே இருந்தன. உதாரணத்திற்கு, சோஷண்ட் என்னும் மீட்பருக்காக காத்திருத்தல் ஜொராஸ்டிரர்களின் மதநம்பிக்கை. இந்தக் குறிப்பிட்ட அம்சம், பன்னிரெண்டாவது இமாமுக்காக (மஹ்தி) ஷியாபிரிவைச்சார்ந்தவர்கள் இன்னும் எதிர்நோக்கியிருக்கும் நம்பிக்கையாக உருமாறியது என்கிறார்கள். 

வரலாற்றின் இயக்கம் hindsight – இன் உதவியால் மட்டுமே உணரக் கூடியதாக இருக்கிறது. உடனடி நிகழ்கால சம்பவத்துக்கான நம்முடைய எதிர்வினைகள் நம் மனச்சமநிலையை மீட்பதற்கான முயற்சிகள். அவ்வெதிர்வினைகளின் உண்மை விளைவை காலத்தின் பாய்ச்சல்தான் சில முறை நமக்கும், பொதுவாக வருங்கால சந்ததிக்கும் நிகழ்த்திக் காட்டும்.