Kashmir’s Transition to Islam – by Ishaq Khan – விமர்சனம்

வரலாற்று மூலங்களைத் திறந்த மனதுடன் அதே சமயம் விமர்சன பூர்வமாக அணுகுதல் அதிமுக்கியம். இல்லையேல் வெறும் விவாதமாக முடிந்துவிடக்கூடும். கருத்து நிலைகளுக்கேற்றவாறு சாயும் அணுகுமுறை வரலாற்றாளர்களின் பலவீனமாகக் கருதப்படும். என்னுடைய பார்வையில், இஷாக் கான் அவர்களின் Kashmir’s Transition to Islam ஒரு பலவீனமான நூல் என்றே சொல்வேன்.

இஷாக் கான் இரண்டு பார்வைகளை முன் வைக்கிறார். (1) Syncretism – அதாவது சமயங்களின் சேர்ந்தியங்குதல் – எனும் கருத்தை அவர் நிராகரிக்கிறார். இஸ்லாம் கஷ்மீரின் புராதன கலாசார அம்சங்களை ஏற்றுக் கொண்டதை மாறும் முறை என்று வர்ணிக்கிறார். இஸ்லாமின் இறுதி இலக்கு “ஷரியா” எனப்படும் இஸ்லாமிய உயர் கொள்கைகளே என்கிறார். (2) நந்த் ரிஷியும் அவருக்குப் பின் வந்த ரிஷிகளும் கஷ்மீரியத் என்ற அடையாளத்தை இஸ்லாத்தின் அடிப்படைச் சித்திரத்தின் பின்ணனியில் வரைய வந்தவர்கள்.

இரண்டு பார்வைகளும் பிரச்னைக்குரியவை. கஷ்மீர தேசியவாதத்தின் அடிப்படை முழுவதையும் “இஸ்லாம்” எனும் ஒற்றை அடையாளத்தில் சுருக்க நினைத்த குழுக்களின் குரல் வலுத்த (“அயல் நாட்டு உதவியுடன் வலுக்க வைக்கப்பட்ட”) தொண்ணூறுகளில் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் – கஷ்மீரக் கலாசாரத்தின் சிறப்பியல்பு என்று கஷ்மீரின் தற்கால சாதாரண நபர்களும் பெருமிதங்கொள்ளும் ஒன்றை மறுக்கிறது. சமயங்களின் ஒருங்கிணைவு என்ற ஒன்றும் இல்லை. பிராமணர்களின் சாதீயத்தால் பாதிக்கப்பட்ட வெகுஜனங்கள் இஸ்லாமைத் தழுவுதலுக்குச் சலுகையாக அவர்களின் முந்தைய கலாசாரத்தின் அம்சங்கள் இணைத்துக் கொள்ளப்பட்டன. இது இறுதியானதில்லை. கஷ்மீரில் இஸ்லாம் மாறும் தன்மையதாக இருக்கிறது. எனவே, சமயங்களின் ஒருங்கிணைவு இலக்கில்லை. இதற்கான தரவுகளை ஆசிரியர் தெளிவாகத் தரவில்லை. நந்த் ரிஷி-யின் பாடல்களில் இருக்கும் இந்து, பௌத்த அடையாளங்களை அவரின் ஆரம்ப காலச் சிந்தனை என்று சுருக்கிவிடும் இஷாக் கான், லல்லா எனும் சைவ சித்தரை முழுவதுமாக இஸ்லாத்தில் பொருத்திக் கொள்கிறார்.

கங்கைச் சமவெளியில் சாதீய கொடுமைகளுக்கு எதிராக பக்தி இயக்கம் பரவி பதினைந்தாம் நூற்றாண்டுகளில் இஸ்லாத்தின் பரவலை கட்டுப்படுத்தியது என்பதை ஏற்கும் இஷாக் கான், கஷ்மீரில் பக்தி இயக்கம் தோல்வியுற்றது என்று கூறும்போது இஸ்லாம் பிராமணரல்லாத வெகுஜனங்களை அரவணைத்துக் கொண்டதுதான் என்று எளிதில் கூறி விடுகிறார். இதே நிலைமை கங்கைச் சமவெளியில் ஏன் கை கூடவில்லை என்ற கேள்விக்கு பதிலேதும் சொல்லாமலேயே சென்று விடுகிறார் இஷாக் கான்.

சுல்தான் சிக்கந்தர் இந்துக் கோயில்களை அழித்ததைப் பதிவு செய்யும் ராஜதரங்கிணி நூல் மீது ஆசிரியருக்கு ஏனோ மனத்தாங்கல்! இஸ்லாமிய அரசர்களை காலரீதியாக பெரும்பான்மையான இடங்களில் தெளிவுடன் பதிவு செய்யும் ராஜதரங்கிணியின் விடுபடல்களுக்கு காரணம் கற்பித்தல் எந்த அளவுக்கு வரலாற்று அணுகுமுறை எனத் தெரியவில்லை? சுல்தான் சிக்கந்தரின் சிலை உடைப்புகளுக்கான பழியை புதிதாக மதம் மாறிய முன்னாள் பிராமணர் சுக பட்டர் மீது பழியைப் போடுகிறது ராஜதரங்கிணி! புது இஸ்லாமியராக தமது விசுவாசத்தை நிரூபிக்க சுக பட்டர் செய்த கொடுமைகள் என்று பதிவு செய்யும் ராஜ தரங்கிணி – மீர் அலி சைய்யத் ஹம்தானி-பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்பதற்கு காரணமாக ராஜ தரங்கிணியின் பிராமண ஆசிரியர்களினுடைய மனச்சாய்வு என்கிறார் இஷாக் கான். ஆனால் சைய்யத் ஹம்தானியின் புதல்வர் – முகம்மது ஹம்தானி கஷ்மீருக்கு வந்து, சுல்தானுடைய சபையின் அங்கமாக இருந்ததை ஜோனராஜா (ராஜ தரங்கிணியின் ஆசிரியர்களுள் ஒருவர்) கூறுவதை மேற்கோள் காட்டுகிறார்.

லல்லா குறித்தும் ராஜ தரங்கிணி மௌனம் சாதிப்பதை சதி என்ற நோக்கில் நோக்குகிறார் இஷாக் கான். லல்லா குறித்து வரலாற்று ரீதியாக நமக்கு அறியத்தருபவை இஸ்லாமியர்களின் குறிப்புகளே என்பது உண்மைதான். இந்த கூற்று ஒன்றை வைத்துக் கொண்டு லல்லாவை இஸ்லாமுக்கு நெருக்கமானவர் என்று புத்தகம் முழுதும் கூறிச் செல்கிறார். 17ம் நூற்றாண்டின் இஸ்லாமிய குறிப்பாளர்கள் ஹைதர் மாலிக் சதுரா, ஹஸன் பின் அலி கஷ்மீரி போன்றவர்களும் லல்லா பற்றி எதுவும் சொல்லவில்லை. அதைப் பற்றி இஷாக் கான் வாய் திறக்கவில்லை.

லல்லாவை இஸ்லாமுக்கு நெருக்கமானவர் என்று காட்டுவதற்கு அவர் தரும் ஆதாரங்கள் தொன்மங்களின் அடிப்படையிலானவை. தொன்மங்களைக் கேள்விக்குட்படுத்தவேயில்லை இஷாக் கான். முகம்மது ஹம்தானியை குருவாகக் கொண்டிருந்தவர் என்ற இஸ்லாமியர்களின் தொன்மக்கதையை ஐயமின்றி ஏற்றுக் கொண்டுவிடும் இஷாக் கான் ஶ்ரீ காந்த சித்தர் என்பவரை லல்லேஸ்வரியின் குருவாகக் கூறும் இந்துக்களின் தொன்மங்களை கண்டும் காணாமல் விட்டுவிடுகிறார்.

லல்லாவின் கருத்துகளைத் தமக்கிஷ்டமான வகையில் வளைத்துக் கொள்ளும் இயல்பும் நூல் முழுக்கக் காணக்கிடைக்கிறது. உதாரணத்திற்கு, பக்கம் 75இல் கீழ்க்கண்ட லல்லாவின் வாக்- மேற்கோள் காட்டப்படுகிறது –

“வெட்கத்தின் தளைகளை உடைத்தெறிவது எப்போது?
ஏளனத்தை கேலியை அலட்சியம் செய்வது எப்போது?
தகுதியின் உடைகளை நிராகரிப்பது எப்போது?
என் மனதை ஆசைகள் தாக்கிக் கொண்டிருந்தால்”

இஷாக் கான் அவர்களுக்கு மேற்சொன்ன வாக் – லல்லா வாழ்ந்த காலத்தின் சமூக வேற்றுமைகளை விவரிக்கிறதாம்!

இன்னொரு உதாரணம் – பக்கம் 74

“சிவன், எங்குமுள்ள, அனைத்திலும் உறைகிறான்
எனவே, இந்துவையும், முஸ்லீமையும் பிரித்துப் பார்க்காதீர்
ஞானமுண்டெனில் உம்மை அறிக
பிரபுவின் உண்மை ஞானம் அதுவே”

இஷாக் கானின் கருத்துப்படி மேற்சொன்ன வாக் பிராமணர்களைத் தாக்குகிறதாம்! சடங்கியல்கள் மட்டுமே அறியாமையைத் தெளிவிக்காது – என்ற கருத்து உபனிடத காலப் பழசு என்பதை இஷாக் கான் அறியாதவர் போலிருக்கிறது.

புழங்கும் தொன்மக் கதைகளின்படி, தன்னுடைய மானசீக குருவாக வரித்துக் கொண்ட லல்லாவை அவதாரம் என்கிறார் நூருத்தின் எனும் நந்த் ரிஷி தன்னுடைய ஒரு பாடலில் –

“பத்மன்புராவின் அந்த லல்லா
திருப்தியடையும் வரை தெய்வீக அமுதைக் குடித்தவள்
எங்களுக்கு அவதாரம் அவள்
கடவுளே, அதே ஆன்மீக ஆற்றலை எனக்கும் அளித்தருள்!” – பக்கம் 77

அதே பக்கத்தில் இஷாக் கான் கூறுவது –

“That Lalla, as an ardent lover of Siva, succeeded in reviving Saivism is an argument belied by the very silence of our Saivite chroniclers and poets of her near-contemporary and later times. What is, however, of significance to remember from the viewpoint of social history is the historical dimension of her elevation to avatar by a devout Muslim like Nuruddin”

இந்தப் பத்தியில் வெளிப்படும் முரண்களைப் பாருங்கள்! சைவத்தின் மறுமலர்ச்சியில் லல்லா வெற்றி பெறவில்லை என்று உறுதிபடக் கூறும் இஷாக் கான் அதற்களிக்கும் ஆதாரம் அவளின் சமகாலக் குறிப்பாளர்கள் அவளைப் பதிவு செய்யாததைக் குறிப்பிடுவது! அவளை “அவதாரம்” என்று நூருத்தின் எனும் ஆசாரமான முஸ்லீம் புகழ்வது சமூக வரலாற்றுப் பரிமாணத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது என்று இஷாக் கான் ஜிலேபி சுற்றுவதைத் தான் கஷ்மீர சமூகவியலாளர்கள் “Syncretism” என்கிறார்கள்.

நந்த் ரிஷி இஸ்லாமிய சூபி என்பதற்கு மறு கருத்தில்லை. ஆனால், இரண்டாம் தலைமுறை இஸ்லாமியர் என்ற முறையில் அவருடைய தந்தையின் முதல் மதத்தின் தொப்புள் கொடி உறவு அவரின் கவிதைகளில் வெளிப்படுவதை “ஆரம்பகாலம்” என்று கூறுவது நந்த் ரிஷியின் சமயச்சேர்ந்தியல் இலக்கை மறுப்பதாகும். கால வரிசை அடிப்படையிலான நந்த் ரிஷியின் பாடல்கள் தொகுப்பு இன்று வரை வெளிவரவில்லை எனும் போது தமது ஊகத்தை ஒரு வரலாறாக கட்டமைப்பது பிழையான அணுகுமுறை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.