Tlön, Uqbar, Orbis Tertius – ஒரு வாசிப்பு

போர்ஹேஸ் எழுதிய சிறுகதையொன்றின் ஆங்கில மொழிபெயர்ப்பை அனுப்பி வைக்குமாறு நண்பர் Vasu Devan அவர்களிடம் கேட்டிருந்தேன். அதன் தலைப்பு – Tlon, Uqbar, Orbius Tertius. பொதுவாக போர்ஹேஸின் சிறுகதைகளில் வரிக்கு வரி நிறைய குறிப்புகள் அடங்கியிருக்கும். இந்தக் கதையிலும் இது போலத்தான். நொடிக்கு நொடி இணையத்தில் தேடி அந்தக் குறிப்புகளின் அர்த்தத்தைத் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. சில குறிப்புகளைப் புரிந்து கொள்ள சில கட்டுரைகளை வாசிக்க வேண்டியிருந்தது. வாசிப்பாளரின் உழைப்பைக் கோரும் கதைகளையே போர்ஹேஸ் எழுதியுள்ளார். இணையம் எல்லாம் இல்லாத நாட்களில் எழுதப்பட்ட சிறுகதை. இத்தகைய கதைகளை எழுதுவதற்கு எத்தனை வாசித்திருக்க வேண்டும்! அவரின் ஒவ்வொரு கதையையும் வாசிக்கும் போது தோன்றும் வியப்புணர்வும் மலைப்புந்தான் இன்றும் தோன்றியது. இந்தக் கதைக்கு நான் வந்தடைந்ததும் ஒரு கட்டுரையில் படித்த குறிப்பு வாயிலாகத்தான். யாருக்கும் தெரியாமல் ஒரு பேரரசன் கொல்லப்பட அவனைப் போல பாவனை காட்டும் ஒரு போலி அரசனாக இன்னொருவன் வாழ்ந்திருக்க அவன் போலி என்று சரியாக ஊகித்து அவனைக் கொன்று அக்கமெனிட் வம்சத்தின் அரசனானார் முதலாம் டேரியஸ். இந்த சம்பவத்தை டேரியஸ் பெஹிஸ்துன் மலைகளில் செதுக்கிய கல்வெட்டுகளில் பதிவு செய்திருக்கிறார். கிரேக்கர் ஹெரடோடஸும் இதைப்பற்றி எழுதிவைத்துள்ளார். இது பற்றி ஏராளமான தொன்மக் கதைகளும் இருக்கின்றன. போலியாக வேடமிட்டு மன்னனான ஜொராஸ்ட்ரிய சமய பூசாரி பற்றிய குறிப்பை மேல் சொன்ன கதையில் போர்ஹேஸ் பயன்படுத்தியுள்ளார் எனுந்தகவலே இந்தக் கதையிடம் என்னைக் கொண்டு போய் சேர்த்தது. குறிப்புகளிலிருந்து கதைகளுக்குச் சென்று குறிப்புகளைத் தரிசித்து இதன் வாயிலாக மேலும் பல குறிப்புகளைச் சேகரித்துக் கொண்டு….குறிப்புகளில் தொலைந்து….போர்ஹேஸின் இந்தச் சிறுகதை சேர்க்கப்பட்டுள்ள தொகுப்பின் தலைப்பு Labyrinths….தேடல்களின் பாதையை இதைவிடப் பொருத்தமாக வர்ணித்துவிட முடியுமா?

“Of the historical names, only one: the impostor magician Smerdis, invoked more as a metaphor.”

ஐபோனை தொலைத்தல் ஓர் அனுபவம். மனித வாழ்க்கையில் அனுபவிக்கும் பல்வேறு சோக ரசத்தை நாம் தொலைத்த ஐபோனும் நமக்குத் தரும். ஊபர் டாக்ஸியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது அந்த போனில் எனக்குத் தெரிந்த ஒருவரைத் தொடர்பு கொண்டேன். அது தான் அந்த போன் என் கைகளில் இருந்த கடைசி நினைவு. சாலையில் நல்ல போக்குவரத்து நெறிசல். டாக்ஸி ஊர்ந்து கொண்டிருந்தது. எப்போது கண்களை மூடினேன் என்று தெரியவில்லை. போன் என் மடியிலிருந்து கார் சீட்டில் விழுந்திருக்கலாம். இதெல்லாம் இப்போது அந்த போன எப்படி தொலைந்து போயிருக்கும் என்று யோசித்து யோசித்து கற்பனையில் அரைகுறை ஞாபகத்தில் உருவாக்கி வைத்துள்ள காட்சிகள். டாக்ஸியில் வீடு வந்திறங்கிய போது இருட்டியிருந்தது. தெரு விளக்கு அன்று எரியாமல் இருந்தது என்ற ஞாபகம் தெளிவாக இருந்தது. காரிலிருந்து இறங்குவதற்கு முன்னம் ஒரு முறை உள்ளே நோட்டம் இட்டிருக்க வேண்டும். இது இப்போது புரிகிறது. காரிலிருந்து இறங்கும் போது ஐபோனை இழக்கப்போகிறேன் என்று முன்னமே தெரிந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். பத்து நிமிடங்கள் கழித்து போனை தொலைத்துவிட்டோம் என்ற பிரக்ஞை வந்த பிறகு மறுபடியும் என் வீட்டுவாசலுக்கு வரும் வரை அந்த டாக்ஸி அங்கேயே காத்திருந்திருக்கலாம்.

அதை இழந்த குற்றவுணர்ச்சி பல மாதங்கள் தொடர்ந்தது. ஐபோனை எவனும் தொலைப்பானா? எத்தனை விலை கொடுத்து வாங்கினோம்?…..என் மேல் நான் கொண்ட கோபம் சில நாட்களுக்கு குறையவேயில்லை. இனிமேல் ஒரு போனும் வாங்குவதில்லை என்ற விரதம் வேறு எடுத்துக் கொண்டேன்.

அந்த ஐபோன் என் ஞாபகத்தில் நிரந்தரமாக நிலைத்துவிட்டது. அதை நிஜமாகவே தொலைத்தேனா? தொலைத்திருந்தால் அது அடிக்கடி என் ஞாபகத்தில் ஏன் வரப் போகிறது? 

அந்த ஐபோன் அந்த டாக்ஸியின் அடுத்த பயணியின் கையில் கிடைத்ததெனில் அந்த ஐபோன் என் ஐபோனா? இல்லை அந்தப் பயணிக்கு கிடைத்த ஐபோன். நான் தொலைத்த நேரத்திலிருந்து இன்னொரு பயணியின் கையில் அது கிடைக்கும் நேரம் வரை அந்த ஐபோன் இருந்ததா? இருக்கவில்லை என்று கொள்வோமானால் பயணிக்கு கிடைத்த போன் எந்த போன்? அது நான் தொலைத்த போனின் நகல். இருந்தது என்பது பதிலானால் – தொடர்ச்சியை அந்தப் பொருளுக்கு நாம் வழங்குவதனால் – மறைந்த நிலையில் அந்த ஐபோன் மனிதர்களின் உணர்வாற்றலின் எல்லைக்குள் சிக்காமல் எங்கேனும் இருந்திருக்கும்….Tlos, Uqbar, Orbis Tertius – சிறுகதை ஏற்படுத்திய எண்ண வெடிப்புகளிலிருந்து ஓர் இழையைத் திரிக்கப்போக சிறுகதையில் வரும் ஒன்பது தாமிர நாணயங்கள் ஒன்றிணைந்து  ஐபோனாக நகலெடுத்தது. தொலைத்தல் என்ற வினையே இல்லாத ஒரு பிரதேசத்தை, ஒரு நாட்டை அல்லது ஒரு கோளை நாம் சிருஷ்டிக்க முடியுமானால்…..நிற்க, பொருட்களை எப்படி தொலைக்காமல் இருக்க முடியும்? தொலைத்தால் அது நம் அகத்திலிருந்து நாம் தொலைத்ததாகவே இருக்கும்…அது தொடர்ந்து ஞாபகத்தில் இருக்குமானால் அது எங்கு தொலைந்தது? “இழத்தல்” “கண்டுபிடித்தல்” எனும் வினைச்சொற்கள் ஐபோனுக்கென ஓர் அடையாளத்தை அனுமானிப்பதாலேயே எழுபவை.  ஐபோன் அனெக்டோட் நான் அறியாமலேயே போர்ஹேஸின் கதைக்குள் புகுந்துவிட்டது.  

__

மிக சுருக்கமாக, Tlönic கலாச்சாரத்தின் முக்கிய அம்சங்களைப் பின்வருமாறு  கூறலாம்: a. நேரம் எனும் கருத்தியல் இல்லை. ஒரு ட்லோனிக் சிந்தனைப் பள்ளி நாம் காலவரையறையற்ற, கடந்த மற்றும் எதிர்காலமாக பிரிக்கப்படாத நித்திய நிகழ்காலத்தில் வாழ்கிறோம் என்பதை உறுதிப்படுத்துகிறது, மற்றொரு பள்ளி  எல்லா நேரமும் ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டுவிட்டதாகவும், நாம் வாழ்வது நினைவுகளில் மட்டுமே என்றும் வலியுறுத்துகிறது. b. இந்தக் கருத்தின்படி அடையாளம் என்பது கற்பனைக்கு எட்டாதது, ஏனென்றால் எந்தப் பொருளும் காலப்போக்கில் அதன் தொடர்ச்சியை நீட்டிப்பதில்லை (“தொலைந்த ஐபோன்” – முந்தைய ஸ்டேடஸை பார்க்கவும்) c. நேரம் அல்லது பொருளின் தொடர்ச்சி மறுக்கப்படும் உலகில் வேறு எந்த பொது வகையினங்களும் இருக்க முடியாது.

ட்லோனின் சிந்தனையாளர்களும் ஞானிகளும்  ஒரு இலட்சியவாத உலகக் கண்ணோட்டத்தை ஆதரிக்கின்றனர். ட்லோனின் கலாச்சாரத்தில் உள்ள அனைத்தும் தத்துவ இலட்சியவாதத்தை முன்னிறுத்துகின்றன. Tlönic மொழியியல் மற்றும் தத்துவக் கோட்பாடுகளின் விளக்கத்தில் போர்ஹெஸ் மிக உன்னிப்பாகக் கவனம் செலுத்துகிறார். வெளி என்பது தொடர்ச்சியானதில்லை என்றும், இடைவெளி என்பது வரையறையின்படி தொடர்ச்சியற்றது என்றும், காலத்தின் கண்ணோட்டத்தில் விண்வெளியில் உள்ள இடம் அல்லது பொருள் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது என்றும் ஞானிகள் கற்பனை செய்திருக்கிறார்கள். இது அடையாளத்தின் தர்க்கரீதியான கொள்கையையும், உலகத்தை உணர்ந்து அதன் பொருள்களை மதிப்பிடுவதற்கு நாம் பழகிய விதத்தையும் பாதிக்கிறது. (நாம் பயன்படுத்தும் ஐபோன் நேற்று நாம் பயன்படுத்திய அதே ஐபோன்தான் என்று நாம் நினைக்கிறோம், ஏனென்றால் அந்த அடையாளத்தை முன்னிறுத்துவது நமக்கு மிகவும் வசதியாக உள்ளது.) 

Tlön இல், காரணம் மற்றும் விளைவு போன்ற கருத்துகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை. அடையாளக் கொள்கை பாதிக்கப்பட்டால், இடஞ்சார்ந்த அல்லது தற்காலிக தொடர்ச்சி இல்லை என்றால், அறிகுறிகள் மற்றும் நிகழ்வுகளுக்கு இடையே எந்த தொடர்பையும் ஏற்படுத்த முடியாது: எரியும் சிகரெட், புகை மற்றும் நெருப்பு ஆகியவை தொடரியல் அல்லது படிநிலையில் பிணைக்கப்படாத ஒரு வரிசையில் தனித்துவமான தருணங்கள் . Tlön கிரகத்தில் அடையாளம் மற்றும் காரணத்தைப் பற்றிய சுருக்கக் கருத்துக்களைக் கருத்திற்கொள்ளும் சாத்தியம் இல்லை. இந்த வரையறையின்படி, அறிவியல் சாத்தியமில்லை. அதற்குப் பதிலாக, als ob (“as if”) கொள்கையில் அடித்தளமிட்ட நூற்றுக்கணக்கான தத்துவங்கள் வெளிப்புறக் குறிப்புடன் எந்தத் தொடர்பையும் கோராத அழகான அமைப்புகளாக வளர்கின்றன – கற்பனாவாத இலக்கியத்தின் அடிப்படை அமைப்பைக் கொண்டவைகளாக. als if கொள்கை என்பது கற்பனாவாத மற்றும் டிஸ்டோபியன் புனைகதை உத்திகளின் அடிப்படையான ஒன்றாகும், அங்கு “எப்படி” எனும் கருதுகோள் அந்தக் கதையின் கண்டுபிடிப்பைத் தொடங்குகிறது. நேரத்தையும் இடத்தையும் தொடர்ச்சியாகக் கருதுவதற்குப் பதிலாக இடைவிடாதவையாகக் கருதுவது Tlonஇன் அடிப்படை உலகக் கண்ணோட்டமாகும், அதே சமயம், ‘als ob’ அடிப்படையிலான கற்பனையான இடத்தைக் கண்டுபிடிப்பதை இது அனுமதிக்கிறது.

 Tlön இல் உள்ள இரண்டு மொழிகளுக்கும் பெயர்ச்சொற்கள் இல்லை. இரு மொழிகளில் ஒன்று கூட்டு உரிச்சொற்களை அடிப்படையாகக் கொண்டது; மற்றொன்று, கூட்டு வினைச்சொற்களில். பெயர்ச்சொற்கள், கொள்கையளவில், சாத்தியமற்றது, ஏனெனில் ஒரு பெயர்ச்சொல்லுக்கான அனுபவ/தருக்க அடிப்படையை வழங்கக்கூடிய தொடர்ச்சியான பொருள் எதுவும் இல்லை. பெயர்ச்சொற்கள் தற்காலிக நிலைகளைக் குறிக்கும் உரிச்சொற்களின் திரட்சியிலிருந்து ட்லோனில் எழுகின்றன.  நிச்சயமாக, இந்த வகை பெயரடை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட முடியும், ஏனெனில், வரையறையின்படி, எந்த நிலையும் காலக்கண்ணொட்டத்தில் மீண்டும் நிகழாது.

‘கண்டுபிடிப்பது’ மற்றும் ‘இழப்பது’ போன்ற சில வினைச்சொற்களிலும் இதுவே நடக்கும். இரண்டு செயல்களும் Tlön இல் நினைத்துப் பார்க்க முடியாதவை, ஏனெனில், பொருள்களுக்கு இடையே அடையாளம் இல்லை மற்றும் இடம் மற்றும் நேரம் தொடர்ச்சி இல்லை என்றால், எந்த பொருளையும் இழக்க முடியாது; மீண்டும் கண்டுபிடிக்க முடியாது. ‘இழந்தது’ என்று நாம் கருதும் ஒன்று ஒரு பொருளுக்கு நிகழும்போது, ​​ஒரு வகையான இரண்டாம் நிலைப் பொருள் (இழந்த ஒன்றிலிருந்து தெளிவற்ற வேறுபட்டது) பெருகத் தொடங்குகிறது. இந்த உருத்தோற்றங்கள் Hrönir என்று அழைக்கப்படுகின்றன. அவை கடந்த காலத்தை கண்டுபிடிப்பதற்கும் மாற்றியமைப்பதற்கும் பயன்படுத்தப்படலாம், இது Tlön இல் தொல்பொருளியலை ஆக்கிரமிக்கிறது.

ஒரு வருடம் கழித்து இன்னொரு ஐபோன் வாங்கினேன். பழைய கறுப்பு நிற ஐபோனின் நகலாக நினைத்து அதன் மேல் வாஞ்சையை செலுத்தாமல், புதுப்பொருள் மீது புதுக்காதல் கொண்டவனாக மகிழ்ச்சியானேன். சிறுகதையின் இறுதியில் வருவது மாதிரி பூமி இன்னும் முழுமையாக Tlon-இன் தாக்குதலுக்கு ஆளாகவில்லை. 

போர்ஹேஸின் மிக நீளமான கதைகளில் ஒன்றான, ‘Tlön, Uqbar, Orbis Tertius’ பெரும்பாலும் ஊகப் புனைகதை அல்லது சில சமயங்களில் ‘அறிவியல் புனைகதை’ என்று முத்திரை குத்தப்படுகிறது.

தொலைந்த ஐபோன் பற்றி விலாவாரியாகப் புலம்பிவிட்டு அடுத்த சில பத்திகளிலேயே “உண்மையில் நான் வைத்திருந்தது ஐபோன் இல்லை. வேற்று கிரகத்திலிருந்து வந்த யாரோ விட்டுவிட்டுப் போன திசை காட்டும் கருவி” என்று சொல்லி பின்னர் ஐபோனை மறந்துவிட்டு அந்த வேற்றுக் கிரகம் பற்றி பல தகவல்களை அடுக்கி…..கிரகம் ஒரு கற்பனை என்று அறிவித்துவிட்டால்…அடுக்கிய தகவல்கள் அனைத்தும் கற்பனையென்று தானே ஆகும்……ஐபோன் கதைக்குள் விரியும் ஒரு கோள் பற்றிய கதை….இதைச் “சட்டகக் கதை” என்று வகைப்படுத்துவார்கள்…..ஒரு கதையை வகைப்படுத்துவது போர்ஹேஸுக்கு ஒவ்வாத விஷயம்…..இக்கதையை வகைப்படுத்த வேண்டுமென்றால் போர்கேஸியக் கதை என்று தான் வகைப்படுத்த வேண்டும். ​​​​​​ போர்ஹேஸின் எழுத்து முரண்பாடுகள், கண்ணாடிகளினுடே விரியும்  எல்லையற்ற பிரதிபலிப்புகள், சிக்கலான புதிர்ப்பாதைகள்  ஆகியவற்றால் நிரம்பியிருக்கும். 

‘Tlön, Uqbar, Orbis Tertius’ இல், போர்ஹெஸ், ‘பிஷப் பெர்க்லி’ என்று அழைக்கப்படும் ஜார்ஜ் பெர்க்லியைக் குறிப்பிடுகிறார். இந்த ஐரிஷ் தத்துவஞானி அவரது அகநிலை கருத்தியல் கோட்பாட்டிற்கு (‘Subjective Idealism’) மிகவும் பிரபலமானவர். அவரது பெயர் ஒரு அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்துக்கு – பெர்க்லி – இடப்பட்டுள்ளது. பெர்க்லி விவரித்த கோட்பாட்டை சுருக்கமாக ஒரு கேள்வி வடிவத்தில் விளக்குவார்கள் – “​​காட்டில் மரம் விழுந்தால், அதைக் கேட்க யாரும் இல்லை என்றால், அது ஒலி எழுப்புமா?” – என்பது தான் அந்தக் கேள்வி. இதற்கு பெர்க்லியின் பதில் ‘இல்லை’ என்பதாக இருக்கும், ஏனெனில் அவை மனிதர்களால் அந்த ஒலி உணரப்படும்போது மட்டுமே அது ஒலிக்கும்.

பெர்க்லிக்கும், ட்லோனில் வசிப்பவர்களுக்கும், பொருள் அல்லது பொருட்கூறு – அதாவது, பௌதீகப் ‘பொருள்’ – இல்லை. அது மனத்தால் உணரப்பட்ட ஒரு யோசனை மட்டுமே. நான் வைத்திருந்த ஐபோன் இல்லை, ஆனால் அது இருப்பதை நான் உணர்கிறேன். அவ்வளவே. அது ‘தொலைந்து போனதற்கு அழுத நேரத்திலும்” அது என்னுடனேயே ‘இருந்தது’. நிச்சயமாக, Tlön மக்கள் ஒரு கற்பனை. எனவே முரண்பாடாக, அவர்கள் சொல்வது சரிதான் (அவர்கள் இல்லாமல் இருந்தாலும்): அவர்களின் உலகம் போர்ஹேஸ் வாயிலாக, அவரது கதையின் பக்கங்கள் மூலம் நாம் உணரும் உணர்வுகளின் தொகுப்பாக மட்டுமே உள்ளது.

‘Tlön, Uqbar, Orbis Tertius’ இல் போர்ஹெஸ் குறிப்பிடும் பலர் உண்மையான அர்ஜென்டினா நாட்டு ஆளுமைகள். 1940 இல் Sur இதழில் இந்தக் கதையை முதன்முறையாக வாசித்த வாசகர்கள் உண்மை மற்றும் புனைகதை, யதார்த்தம் மற்றும் குழப்பம் – இவற்றின் திசைதிருப்பும் கலவையாக இருப்பதைக் கண்டு அதிர்ந்திருப்பார்கள். 

தியரியெல்லாம் எழுதியாயிற்று. இந்தக் கதை ஏன் பிடிக்கிறது? 

– குறிப்புச் சிதறல்கள்

– தகவல்களைக் கதையில் செதுக்கியுள்ள லாவகம்

– வகைமைப்படுத்த முடியாத இதன் வடிவம்

– தத்துவங்களைப் பின்னி ஒரு கதையில் கோர்த்திருக்கும் செயல் திறன்

– கருவின் விரிந்த தன்மை

– படித்த வெகுநேரம் கழித்தும் வாசகனை அசை போட வைக்கும் தன்மை

– மர்மக்கதை போலத் தொடங்கி, அறிவியல் புனைவாக மடை மாறி, தத்துவம், மனோதத்துவம், தொல்லியல் என்று பல துறைகளையும் தொட்டு பின்னர் ஒரு புரளியாக வடிவங்கொண்டு டிஸ்டோபியன் முடிவை எட்டும் அபூர்வம்  

-செறிவான ஓர் எளிமையான புனைவு

வரலாற்று ஆய்வில் புராணங்களின் பயன்பாடு

ராஜதரங்கிணி நூலில் வரும் கஷ்மீர மன்னர்களின் வரிசையை வாசித்த போது என்னுள் தோன்றிய அதே பெருவியப்பு விஷ்ணு புராணத்தில் வரும் அரசவம்சங்களின் பெயர்களை அவ்வம்சங்களின் அரசர்களின் பெயர்களை வாசிக்கும்போதும் தோன்றியது. ராஜதரங்கிணி போன்று வரலாற்றுப் பிரக்ஞையுடன் புராணங்கள் எழுதப்படவில்லை என்றாலும் புராணமும் வரலாறும் இணைவதைப் பல இடங்களில் அவதானிக்க முடிகிறது.

அசோகரின் பெயரை விஷ்ணு புராணத்தில் வாசித்தபோது அசோகரைத் தொன்ம பாத்திரமாக சித்திரிக்கும் பௌத்த இலக்கியங்கள் ஞாபகத்தில் வந்து சென்றன. புத்தர் வாழ்ந்த காலத்தை நிர்ணயிப்பதில் பௌத்த மூல நூல்களை விட விஷ்ணு புராணம் கூறும் காலவரிசை துல்லியமானது என்று வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.

“நந்தாவின் வம்சம் முடிவுக்கு வந்தவுடன் மௌரியர்கள் பூமியைக் கைப்பற்றுவார்கள், ஏனெனில் கௌடில்யர் சந்திரகுப்தனை அரியணையில் அமர்த்துவார்: அவனுடைய மகன் விந்துசாரர்; அவனுடைய மகன் அசோகவர்த்தனனாவான்…..”

மௌரியர்கள் ஆட்சி முடிவடைந்து சுங்கர்கள் ஆட்சியேறியதைப் பதிவு செய்கிறது விஷ்ணு புராணம் :-

“சுங்கர்களின் வம்சம் அடுத்து இறையாண்மையை உடையதாக மாறும்; கடைசி மௌரிய அரசரின் தளபதியான புஷ்பமித்ரர் தனது எஜமானரைக் கொன்றுவிட்டு அரியணை ஏறுவார்.”

சாதவாகன மன்னர்களையும் வரிசைப்படுத்துகிறது விஷ்ணு புராணம் :-

“சுசர்மன் கன்வாக்களின் (கடைசி மன்னன்) ஆந்திர பழங்குடியினத்தைச் சேர்ந்த சிப்ரகா என்ற சக்திவாய்ந்த வேலைக்காரனால் கொல்லப்படுவான், அவன் பிறகு மன்னனாவான்; அவனே ஆந்திராபிரித்ய வம்சத்தை நிறுவியவன்: அவனுக்குப் பிறகு அவரது சகோதரர் கிருஷ்ணர் ஆட்சிக்கு வருவார்; அவருடைய மகன் ஸ்ரீ ஶதகர்ணி; அவருடைய மகன் பூர்ணோட்சங்க; அவரது மகன் ஷாதகர்ணி (2வது); அவருடைய மகன் லம்போதரா; அவருடைய மகன் இவிலக; அவருடைய மகன் மேகஸ்வதி; அவருடைய மகன் படுமட்; அவருடைய மகன் அஷ்டகர்மன்; அவரது மகன் ஹளன்; அவரது மகன் தலகா; அவருடைய மகன் பிரவிலாசேனா; அவரது மகன் சுந்தரன், ஷாதகர்ணி; அவரது மகன் சகோர சாதகர்ணி; அவரது மகன் சிவஸ்வதி; அவருடைய மகன் கோமதிபுத்திரன்; அவரது மகன் புலிமாத்; அவருடைய மகன் சிவஸ்ரீ சாதகர்ணி; அவருடைய மகன் சிவஸ்கந்தா; அவருடைய மகன் யஜ்ஞஸ்ரீ; அவருடைய மகன் விஜயா; அவரது மகன் சந்திரஸ்ரீ; அவருடைய மகன் பூலோமர்சிஷ். இந்த முப்பது ஆந்திரபிரத்திய மன்னர்கள் நானூற்று ஐம்பத்தாறு ஆண்டுகள் ஆட்சி செய்வார்கள்.”

சாதவாகனர் மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுவிட்டு பின்னர் ஆண்ட வம்சங்களைக் குறிப்பிடுகிறது – குப்தர்கள் வரை குறிப்பிடும். சிந்து நதிக்கரைக்கு அப்பால் “காட்டுமிராண்டிகள்” ஆள்வார்கள் என்ற வரிகள் எட்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் “அராபியர்கள்” சிந்துவை ஆண்ட தகவலை விஷ்ணு புராண ஆசிரியர்கள் அறிந்திருந்தனரோ என்று எண்ண வைக்கிறது.

இந்தப் பெயர் வரிசைகள் மிகவும் நம்பகமான வரலாற்று ஆதாரங்களாகப் பயன்படுத்தப்படலாம், இருப்பினும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் கூடிய கவனம் மிக அவசியம்.

மத்ஸ்ய புராணம், வாயு புராணம் – இவற்றிலும் மன்னர்களின் வரிசை வருகின்றன. குறிப்பிடப்படும் அரச வம்சங்களின் பெயர்களை வைத்து எந்த நூற்றாண்டில் இந்தப் புராணங்கள் எழுதப்பட்டன என்பதை ஊகித்துவிடலாம்.

ஷிண்டோ

சோகம் நம்மை
ஆட்கொள்ளுகையில்
நினைவுகளின், கவனத்தின்
சின்ன சாகசங்களால்
நாம் சில கணங்கட்கு
காக்கப்படுகிறோம்:
கனியின் சுவை, நீரின் சுவை
கனவு நமக்குத் திரும்பித்தரும் முகம்,
நவம்பர் மாதத்துவக்கத்தின் மல்லிகைகள்,
திசைகாட்டியின் முடிவிலாத் தாபம்,
தொலைந்துவிட்டதாய் நினைத்த புத்தகம்,
லத்தின மொழிப் பாவகையின் சீர்,
வீட்டைத் திறக்கும் சிறு சாவி,
சந்தனம் அல்லது நூலகத்தின் வாசனை,
ஒரு நிழற்சாலையின் பழமையான பெயர்,
வரைபடத்தின் நிறங்கள்,
சற்றும் எதிர்பாராத சொல்வரலாறு,
மெருகேற்றிய நகம்,
நாம் எதிர்பார்த்திருந்த சந்திப்பு,
பனிரெண்டு முறை இருளில் கேட்கும் மணியோசை,
நாம் எதிர்பார்க்காத உடல்வலி.
எண்பது லட்சம் ஷிண்டோ தெய்வங்கள்
நம் பூமியில் பயணித்தவண்ணம் இருக்கின்றன
பணிவான அத்தெய்வங்கள் நம்மைத் தொட வருகின்றன
தொடுகி்ன்றன, பின் சுற்றித் திரிகின்றன.

- போர்ஹேஸ்

(Translated from the English translation by Paul Weinfield)

ஊர்பேர்

சராசரிக்கதிகமான நினைவாற்றல் எனக்குண்டு என்ற மிதப்பில் இத்தனை வருடங்களாக இருந்தவனுக்கு ஊர்களின் பெயர்களை மறந்து போகிறேன் என்பதை ஏற்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. ஒரு வாரம் முன் சென்ற ஊரை நினைவில் கொண்டு வர முயல்கிறேன். மனதின் காட்சியில் வீட்டிலிருந்து காரில் கிளம்பிய நேரம் ஞாபகமிருக்கிறது. தெருமுக்கில் இருந்த பிக் பஸார் கடையை கடந்து சென்றது, ஹூடா ஐங்ஷன் வந்தபோது நஜஃப்கர் வழியாகச் செல்லலாம் என்று ஓட்டுனர் சொல்கையில் லேசாக தலையாட்டியது – எல்லாம் மனக்காட்சியில் தெளிவாக வந்து விழுந்தன. நஜஃப்கர் தாண்டியதும் குறுகலான சந்தில் காய்கறிச் சந்தை நெரிசலில் சிக்கினோம். சற்று தூரத்தில் காரில் சிஎன்ஜி குறைவு என்பதால் அதை நிரப்புவதற்காக நின்ற போது யாரோ எனக்கு போன் செய்தார்கள். யார் போன் செய்தது? மனைவியோ குழந்தைகளோ நிச்சயமாக இல்லை. அலுவலகத்திலிருந்து வந்த அழைப்பு என்று எண்ணுகிறேன். ஞாயிற்றுக்கிழமை அல்லவா பயணமானோம்? அலுவலகத்திலிருந்தோ வாடிக்கையாளர்களிடமிருந்தோ அழைப்பு வந்திருக்க முடியாது. சிஎன்ஜி நிரப்பிய பின்தான் காய்கறிச் சந்தை நெரிசலில் சிக்கிக் கொண்டோமோ? ஊர் பேரை நினைவுபடுத்திக் கொள்ளச் சென்ற மனப்பயணம் வேறு சிலவற்றையும் நான் மறந்து போகிறேன் என்பதை புலப்படுத்தியது.

எந்த ஊரை நோக்கிப் பயணம் என்பது மூலவினா. அதற்கு விடையளிக்கும் வழியில் நிறைய துணைவினாக்கள். யார் போன் செய்தார்கள்? எனக்கு ஓட்டுனர் பெயரும் ஞாபகமில்லை. காய்கறிச் சந்தை நெரிசல் முதலில் வந்ததா? சிஎன்ஜிக்காக நின்றது முதலில் வந்ததா? தெளிவு என்பது கூரான ஞாபக சக்திதான். இல்லை..அப்படியும் சொல்லிவிட முடியாது. தெளிவு என்பது தெளிவான மன நிலை. நினைவுத் துல்லியம் தெளிவின் முக்கிய அங்கம் என்று சொல்லிக் கொள்ளலாம். 

சிஎன்ஜி ஸ்டேஷனுக்கப்பால் என் மனப்பயணம் நின்றுபோனது. எதையாவது பற்றி நிற்காவிடில் கீழே விழுந்துவிடுவோமில்லையா?  பிடி தளர்ந்து தடுமாறுகையில் ஏதாவது ஒரு நினைவைப் பிடித்துக் கொண்டால் நம் இருப்பு உறுதியாகும்.

குர்கான் வரைபடத்தை விரித்தேன். பக்கத்தில் என்னென்ன ஊர்கள் இருக்கின்றன?  நஜஃப்கரை நோக்கி விரலை நகர்த்தினேன். அதைச் சுற்றி பல ஊர்கள், கிராமங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. ரோகிணி, பகதூர்கர், பவானா……வெறும் பெயர்கள்…..எல்லாம் பெயர்கள்…தலையை அசைத்தேன். பெயர்கள் வைக்காவிடில் ஊர்களுக்கென தனித்த அடையாளம் ஏதேனும் இருக்குமா? வீடுகளும், வயல்களும், குளங்களும், மேடுகளும் பள்ளங்களும் – அவற்றின் எண்ணிக்கைகளும், வடிவங்களும், அமைப்புகளும் மாறுந்தன்மையை வைத்து…குழப்பமாய் இருக்கிறது…என் உடல் எங்கே? நான் இருக்கிறேனா…எனக்கு நினைவிருக்கிறது..எனவே நான் இருக்கிறேன்…எதையோ உதறுவது போல் சைகை செய்தேன்…

“உடம்பை அசைக்காதீங்க” – எனக்கு யாரோ ஊசி போட்டுக் கொண்டிருந்தார்கள். முக கவசம் அணிந்திருந்தனர். 

சற்றுத் தள்ளி ஒரு பெண் சதுர கண்ணாடி பதித்த கதவினுடே நோக்குகிறாள். ஒரு வித பயத்துடன் நின்றிருந்தாள். கண்ணில் நீர் படிந்திருந்தது. மனக்காட்சி மாறிவிட்டதா? ஊர் பெயர் மறந்ததை நான் இன்னும் மறக்கவில்லை. புதுக்காட்சியிலும் பழைய காட்சியைத் தொடர விழைந்தேன். 

என் தலையை யாரோ நேராகப் பிடித்துக் கொண்டனர். கதவு பக்கம் என் முகத்தை திருப்ப முடியவில்லை. வெண்ணிற திரையை….சுவரை வெறித்து மேல் நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்த போதும் “என்ன பெயர் என்ன பெயர்” என்று மனதில் அசை போட்டபடியிருந்தேன். என் கால்களை யாரோ தூக்கினார்கள். எதையோ யாரோ தூக்குவது மாதிரி எடையற்று உணர்ந்தேன். 

“நான் எந்த ஊருக்குப் போனேன். ” – என்று உரக்கக் கேட்டேன். உதடு மட்டும் அசைந்ததா எனத் தெரியவில்லை. நான் சொன்னது யார்க்கும் கேட்கவில்லை. யாரும் கேட்க பிரயாசப்பட்டதாகவும் தெரியவில்லை. என்னைச் சுற்றிலும் ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். கதவினூடே நின்றிருப்பவள் இன்னும் அழுது கொண்டிருப்பாளா? அவள் அழுகை நின்றதாவெனத் தெரியவில்லை. அழுகை வந்தது. கண்ணீர் சிந்தினேனா என்று சந்தேகமாய் இருக்கிறது. நான் அழுகிறேன் என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வது தான் பிரக்ஞையின் அடையாளமா? வேறொரு காட்சிக்குள் என்னை யாரோ தள்ளிவிட்டார்கள்….காட்சிகள் ஏதுமில்லை. இருட்டு அறைக்குள் நுழைந்துவிட்டேன். எங்கிருக்கிறேன். இது வேறோரு காட்சியா? அல்லது வேறொரு எண்ணமா? வடிவங்களும் சிந்தனைகளும் பிணைந்து என்னை நெருக்குவது போல் இருந்தது. காட்சிகள் இல்லாத புதுக்காட்சியா? இல்லை…நானே என்னை இந்த இருட்டுக்குள் என்னைத் தள்ளிக்கொண்டேனோ?

பித்ரு கடன் செய்யும் போது ஓதும் மந்திரங்கள் எங்கிருந்தோ ஒலித்தன. என் பெயர், என் தந்தையார் பெயர், தந்தையாரின் தந்தையார் பெயர் – இவற்றைச் சொல்லி வசு, ருத்ர, ஆதித்யர்களாக உருவகிக்கும் மந்திரங்களின் உச்சரிப்பு…பெயர்கள்…பெயர்கள்…பெயர்கள்.

நன்றி : சொல்வனம் (https://solvanam.com/2023/03/26/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/amp/)

ஔரங்கசீப் சாலை

aurangzeb-road_647_082815051544

தெருப் பெயர்கள் மாற்றப்பட்டு
வரலாற்றின் பக்கங்கள் அழிக்கப்பட்டு
பொது மனதின் பிம்பங்கள் துடைக்கப்பட்டு
கற்பனையான இறந்த காலத்தின் சித்திரங்கள் வரையப்பட்டு….
+++++
தேடிப் போகும் வீடு இன்னும் கிடைக்கவில்லை
இணைய வரைபடத்தின் புதுப்பதிப்பை இன்னும் தரவிறக்கவில்லை
குறைவான தகவல் வேகம் தாமதப்படுத்துகிறது
தேடிப் போகும் மனிதர்களின் பெயர்களும் மாறியிருக்கக் கூடுமா?
+++++
கல்லறையிலிருந்து எழுந்து
வாளேந்தி வடக்கு நோக்கி சென்றதும்
இன்னொரு கல்லறையிலிருந்து குதித்து
குதூகலமாய் வடக்கு நோக்கி சென்றதும்
நடுவழியில் சந்தித்துக் கொண்டன
ஒன்றின் ஆவேசமும்
இன்னொன்றின் உவகையும்
ஒரு தெருவின் பெயர் மாற்றம் பற்றியதென
இரண்டும் புரிந்து கொண்டபோது
பெயரற்ற ஒரு காட்டுக்கிடையே இருந்த
ஓர் இடுகாட்டை அடைந்திருந்தன
திறந்திருந்த இரு குழிகளுக்குள் இறங்கி
இளைப்பாற கண் மூடியவை
பெயர் தெரியா காற்றடித்து
பெயர் தெரியா மணல் மூடி
பெயர் தெரியாமல் மறைந்து போயின