தனிமைப்பயணம்

இதே சாலையில்
முடிவிலி காலமாகப் பயணிக்கிறேன்
அகன்ற சாலையின்
இரு மருங்கிலும் வெறுமை
ஆளரவமில்லை
கண்ணுக்கெட்டிய தூரமெங்கும்
வறண்ட பூமி
நெடிய தனிமை சூழ
நேர்ப்பாதையிலேயே
செல்ல வேண்டும்
நெடுஞ்சாலையில்
அந்தச் சிறு திருப்பம்
எங்கு வரும்?
மரங்கள் மறைத்திருக்கும் அத்திருப்பத்தில் என்றோ நுழைந்த ஞாபகம்!
குறுகிய சந்து அது
மரங்களிலெல்லாம் பல விதப் பூக்கள்
சந்தெல்லாம் கனிகள் விழுந்து உருளும்
பறவைகள் சத்தமிடும்
திரும்பிய சந்து விரைவில்
நெடுஞ்சாலையில் வந்து முடிந்துவிடும்
திரும்பச் சந்துக்குள் திரும்பிச் சென்றுவிட
எடுத்த முயற்சிகள் வியர்த்தம்
முன்னோக்கி மட்டுமே செல்லும்
வாகனத்தை யார் வடிவமைத்ததோ!
கண் கூசும் வெயிலில்
வியர்வையில் நனைந்து
சென்றவாரிருக்கிறேன்
வியர்வைத்துளி கண்ணுக்குள் வீழ்ந்து
பார்வையை மறைக்கும் கணங்களில்
மரங்கள் மூடிய
ஆயிரமாயிரம் திருப்பங்கள்
இருமருங்கிலும் சென்றிருக்கலாம்!
வாகனத்தின் ஒலி மட்டுமே
துணை வர
நீண்டுகொண்டிருக்கும் சாலையில்
பசுமைத் திருப்பங்களின் தேடலில்
ஒரு தனிமைப்பயணம்

இந்தியா எனக்கு என்ன?

இந்தியா எனக்கு என்ன?

– நொடிக்கு நொடி மாறும் அழகிய ஓவியம்
– சிறு குறை கொண்ட என் மகன்
– தொடர் வெற்றி காணும் என் மகள்
– பல சத்தங்களை எதிரொலிக்கும் பள்ளத்தாக்கு
– தாகங்கொண்ட நெஞ்சில் வந்து வீழும் ஒரு துளி
– சாலையோர வாக்குவாதம்
– ஒவ்வொரு வரியும் வெவ்வேறு மொழியில் எழுதப்பட்ட கவிதை
– முன்னூறாயிரம் கடவுளர் உறையும் பிரதேசம்
– சில சமயம் விமர்சனத்துக்குள்ளாகும் பிரதி
– மேடு பள்ளங்களாலான அழகிய மலைப்பாதை
– பெரும்பாறைகளைத் தாவி நகரும் காட்டாறு
– நெடிதுயர்ந்த கோபுரத்தின் துளைகளில் ஒதுங்கி நிற்கும் பறவைக் கூட்டம்
– பிரகாரச் சுவர்களில் வீசும் புராதன வாசனை
– நகர நதிக்கரையில் தேங்கும் மாசு நுரை
– ரூஃப் டாப்பிலிருந்து தெரியும் குடிசைக் கடல்
– பணி நிலையங்களின் கீபோர்ட் கீச்சு
– ராம் – ரஹீமீன் ஊடல்களும் கூடல்களும் நிறைந்த முடிவற்ற நாடகம்
– குல்லாக்களின் டர்பன்களின் நிறம் படிந்த நெற்றிகளின் டிசைன் கலவை
– வித்தியாசங்களுக்கு பெயரளித்து கூறு செய்யப்பட்டு நடக்கும் அணிவகுப்பு.
– இன்னும் நிறைய…..
மிக முக்கியமாக என் சுவாசம்

அனைவர்க்கும் குடியரசு தின நல் வாழ்த்துகள்

புனே டயரி

நேற்று நடந்தது

புனே வந்த தினத்திலிருந்தே தினமும் மழை. நிற்காமல் தூரிக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது கனமழையும். அபார்ட்மென்டுக்குப் பின்னால் சிறிய மலைத்தொடர். அதன் சரிவில் கட்டப்பட்ட கட்டிடம். திகில் பட பின்னணி இசை போல இரவு முழுதும் பலமான காற்றின் சத்தம். நேற்று நடு இரவில் போர்வையினால் காதை மறைத்துக் கொண்டு தூங்க முயல்கிறேன். திடீரென நெருப்பு அலார்ம். அடித்துப் போட்டுக் கொண்டு செருப்பு கூட அணியாமல் அபார்ட்மென்டுக்கு வெளியே வருகிறேன். கதவடைத்துக் கொண்டுவிடுகிறது. சாவியை எடுக்க மறந்துவிட்டேன். “ஃபால்ஸ் அலார்ம்” என்கிறார் வாட்ச்மேன். மற்ற பிளாட்டுகளிலிருந்து ஒருவரும் வெளிவரவில்லை. “இது இங்கே அடிக்கடி நடக்கிறது தான்” என்று வாட்ச்மேன் சொன்னதும் “எது? சாவி வீட்டுக்குள்ளேயே இருக்க கதவு வெளியிலிருந்து மூடிக் கொள்வதா?” என்று கடுப்புடன் கேட்கிறேன். “விசிட்டர் லௌன்ஜில் உட்கார்ந்துகிட்டே தூங்குங்க நாளைக்காலை பார்ப்போம்” என்கிறார். விசிட்டர் லௌன்ஜில் காற்றின் சத்தம் கேட்கவில்லை. மழை சத்தம் இல்லை. ரிசப்ஷனில் உறங்கும் வாட்ச்மேனின் பலமான குறட்டை சத்தம் மட்டும். எனக்கு கோபம். போர்வையை எடுத்து வந்திருக்க வேண்டும்! சட்டையையாவது அணிந்து வந்திருக்க வேண்டும். சாவியை மறக்காமல் எடுத்து வந்திருந்தால் செருப்பு அணியாததோ சட்டை அணியாததோ பெரிய தப்பாக தெரிந்திருக்காது. இரு கோடுகள் தத்துவம் என்று ஏதோ சொல்வார்களே!

புனே ஹார்ரர்

நகரத்துக்கு நான் வேண்டா விருந்தாளியோ! என் கேள்வியில் நியாயமிருக்கிறது என்றே நம்புகிறேன். திகிலிசை போன்று வீசும் காற்று, தானே மூடித் தாழ் போட்டுக்கொள்ளும் கதவு, ஆளரவமற்ற, காலியான ப்ளாட்டுகள், ம்….வார இறுதியில் இன்னொரு ஹார்ரர்…அறையில் தனித்திருந்து சலித்துப் போய் ஆறு மணியளவில் வாக்கிங் போகலாம் எனக்கிளம்பினேன். நேற்றிரவு இருந்த வாட்ச்மேனைக் காணோம். வரவேற்பு லாபியில் ஈ, காக்காய் இல்லை. நானூறு மீட்டர் தொலைவில் இருந்த கேட் வரை ஒருவரும் காணவில்லை. கேட்டைத் தாண்டி சாலையில் வந்தாலும் நிலைமையில் மாற்றமில்லை. ரோடில் கார்களோ, லாரிகளோ, ஆட்டோ ரிக்ஷாக்களோ- எவற்றையும் காணோம். ஒரு (மஹாராஷ்டிர) வடைக் கடை இருந்தது. ஷட்டர் போட்டிருந்தார்கள். ஷட்டரை லேசாகத் திறந்து வெளியில் நின்றிருந்த ஆளுக்கு ஒரு பொட்டலத்தை கடைக்காரர் மர்மமான முறையில் கொடுத்துக் கொண்டிருந்தார். பொட்டலத்தை வாங்கிக் கொண்டவர் அடுத்த கணம் காணாமல் போனார். அவர் போன ஸ்கூட்டர் சத்தமிட்டதா என்று இப்போது ஞாபகமில்லை. கடைக்குச் சென்று ஷட்டரைத் தட்டி “டீ கிடைக்குமா?” என்று கேட்டேன். என் பின்னால் யாரேனும் நிற்கிறார்களா என்பது போல் பார்த்தார். “டீ இல்லை, வடை பாவ் மட்டும் இருக்கிறது” என்று சொல்லி யோஜிம்போ திரைப்படத்தில் வரும் விடுதிக்காரர் பாத்திரத்தின் எக்ஸ்பிரஷனைத் தந்தார். நான் டோஷிரோ மிஃபுனே இல்லையே! வேகவேகமாக நடந்து அறைக்கு வந்து தாழ்ப்பாள் போட்டுக் கொண்டேன். வார இறுதி லாக்டவுன் எப்போது முடிவுக்கு வரும்?

வாஷிங் மெஷின் புதிர்

தங்கச்சங்கிலி இரவல் வாங்கினா- பாமா விஜயம் படப்பாடலை நான் வாழ்வேன் என்று நினைத்ததில்லை. புனேவுக்கு குடி புகுந்த பிறகு வாஷிங் மெஷினை வாடகைக்கு எடுத்துக் கொள்ள முடிவு செய்தேன். வீட்டு புரோக்கர் குல்வீர் அறைகலன்களையும் வாடகைக்கு தருகிறேன் என்றான். ஐந்தாறு நாட்களாயின. வாஷிங் மெஷின் வந்த பாடில்லை. ஆடைக்குவியல் வளர்ந்து கொண்டிருந்தது. தினமும் சாவியை கேட்டில் கொடுத்துவிட்டு அலுவலகம் சென்று கொண்டிருந்தேன். சாயந்திரம் கேட்டிலிருந்து சாவியைப் பெற்றுக் கொள்ளும் போது “குல்வீர் வந்தாரா” எனக் கேட்பேன். யாரும் வரவில்லை என்று விடை கிடைக்கும். ஒரு நாள் பால்கனியில் நீல நிற வாஷிங் மெஷின் வைக்கப்பட்டிருந்தது. பழைய மெஷின். எலக்ட்ரானிக் டிஸ்ப்ளே கண்களையிழந்து பிதுங்கியிருந்தது. ஆடைக்குவியலில் அன்று அணிந்திருந்த ஆடையும் சேர்ந்தது. அடுத்த நாள் விழி பிதுங்கிய மெஷினின் இடத்தில் இன்னொரு மெஷின். அதற்கு பிளாஸ்டிக் ஆடை அணிவிக்கப்பட்டிருந்தது. ஸ்விட்ச் ஆன் செய்து பார்த்தேன். தண்ணீர் பிய்ச்சியடித்து தொப்பலாக நனைந்து போனேன். வாஷிங் மெஷின் உருவில் வந்த வாஷிங் “பேசின்” அது என்று புரிந்தது. அடுத்த நாள் வாஷிங் “பேசின்” அங்கேயே கிடந்தது. ஆனால் கூடவே இன்னொரு வாஷிங் மெஷின் சேர்ந்திருந்தது. புதிது போல் தோற்றம் அதற்கு. ஆடைக்குவியலின் உயரத்தை பார்த்து வெட்கம் தாளாமல் சில துணிகளை எடுத்து புதிதாகச் சேர்ந்திருந்த வாஷிங் மெஷினுள் போட்டேன். வரும் வார இறுதியில் தோய்த்துவிட வேண்டும். குல்வீர் சாவியில்லாமல் எப்படி வீட்டுக்குள் வருகிறான் என்ற கேள்வி இன்னமும் குடைந்து கொண்டிருக்கிறது.

தொடரும் ஹார்ரர்

இது முற்றிலும் புதிது. இரண்டு வார இறுதிகளாக நிகழ்வுகளுக்கு அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. சென்ற வாரம் ஒரு கதை சொல்லல் நிகழ்வு. முரகாமியின் the elephant vanishes கதையை யாரோ வாசிப்பதாக இருந்தது. அதைத் தொடர்ந்து அந்த கதை பற்றிய கருத்துகள் பகிரப் படுமாம். இந்த வாரம் toast masters federation-இன் ஒரு நிகழ்வு. Cyber security பற்றி சக அலுவலர் ஒருவர் உரையாற்றப் போகிறாராம்! இவையொன்றும் புதிதல்ல. எது புதிது எனில் வாராது வந்த இரண்டு அழைப்புகளையும் ஏற்றுக் கொள்ளாமல் மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டு நான் உட்கார்ந்திருப்பதுதான் புதிது.

ஔரங்கசீப் சாலை

aurangzeb-road_647_082815051544

தெருப் பெயர்கள் மாற்றப்பட்டு
வரலாற்றின் பக்கங்கள் அழிக்கப்பட்டு
பொது மனதின் பிம்பங்கள் துடைக்கப்பட்டு
கற்பனையான இறந்த காலத்தின் சித்திரங்கள் வரையப்பட்டு….
+++++
தேடிப் போகும் வீடு இன்னும் கிடைக்கவில்லை
இணைய வரைபடத்தின் புதுப்பதிப்பை இன்னும் தரவிறக்கவில்லை
குறைவான தகவல் வேகம் தாமதப்படுத்துகிறது
தேடிப் போகும் மனிதர்களின் பெயர்களும் மாறியிருக்கக் கூடுமா?
+++++
கல்லறையிலிருந்து எழுந்து
வாளேந்தி வடக்கு நோக்கி சென்றதும்
இன்னொரு கல்லறையிலிருந்து குதித்து
குதூகலமாய் வடக்கு நோக்கி சென்றதும்
நடுவழியில் சந்தித்துக் கொண்டன
ஒன்றின் ஆவேசமும்
இன்னொன்றின் உவகையும்
ஒரு தெருவின் பெயர் மாற்றம் பற்றியதென
இரண்டும் புரிந்து கொண்டபோது
பெயரற்ற ஒரு காட்டுக்கிடையே இருந்த
ஓர் இடுகாட்டை அடைந்திருந்தன
திறந்திருந்த இரு குழிகளுக்குள் இறங்கி
இளைப்பாற கண் மூடியவை
பெயர் தெரியா காற்றடித்து
பெயர் தெரியா மணல் மூடி
பெயர் தெரியாமல் மறைந்து போயின

தேவபூமி *

Rishikesh

சுரங்கங்களைத் தோண்டு
நதிகள் இடையில் வந்தால்
அவற்றின் பாதையை மாற்றி விடு
மரங்களை வெட்டு
அணைகளைக் கட்டு
பள்ளம் தோண்ட
குண்டுவெடிப்பு நிகழ்த்து
பிளவு பட்ட பாறைத் துகற்களை
நதிக்குள் தள்ளு
நிலச்சரிவினால் இழந்த
மோட்டார் சாலைகளை மீட்க
மலையின் பக்கங்களை மேலும் செதுக்கியெடு
நதியில் இன்னும் பாறைகள் வந்து விழ வை
பச்சைப் போர்வையை
எடுத்து மலைகளைக் குன்றுகளாக்கு
காடுகளைக் களைந்து
வரிசை மேல் வரிசைகளாக
ஓய்வு விடுதிகளை நிறுவு
வியாபாரம் செய்
முன்னேற்றமொன்றே உனது குறிக்கோள்
ஊர்கள் அழிந்துவிட்டால்
புராணக் கதைகளைக் காரணம் காட்டிக் கொள்ளலாம்

* – சார்தாம் என்று ஹிந்தியில் அழைக்கப்படும் புனிதத்தலங்களாகிய – பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி – உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ளன. ரிஷிகேஷ், அரித்வார் போன்ற மேலும் பல புராதனமான திருத்தலங்களும் உத்தராகண்ட் மாநிலத்தில் இருக்கின்றன. இதனால், அம்மாநிலத்தை தேவபூமி என்றும் அழைக்கின்றனர்.