பிரயத்தன நதி

pursuit_of_happyness

சில வருடங்கள் முன்னர் “நீ நதி போல ஓடிக்கொண்டிரு” என்ற வரியை ஒரு திரைப்படப் பாடலில் கேட்டேன். அந்த வரி மனதுள் ஓடிக் கொண்டேயிருந்தது. இலக்கற்று பாய்வது போல் இருந்தாலும் மலை, சமவெளி, பள்ளத்தாக்கு, அணை என்று எல்லாவற்றையும் கடந்து இறுதியில் கடலை அடையும் நதி இடைவரும் தடைகளை பொருட்படுத்துவதில்லை. வழக்கமான, புளித்துப் போன உருவகம்! எனினும் வழக்கமான விஷயங்கள் பல முறை அர்த்தம் வாய்ந்த அமைதிக்குள் நம்மை தள்ளி விடுகின்றன.

“The Pursuit of Happyness” திரைப்படத்தை நேற்றிரவு வீடியோவில் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தது. எட்டு வருடங்களுக்கு முன்னர் வெளியான படம். தொலைக்காட்சியில் பல முறை ஒளிபரப்பப்பட்டு விட்டது. புதிதாக வெளியான திரைப்படமொன்றைக் காண குடும்பத்துடன் சென்றிருந்த போது தொழில் நுட்பக் கோளாறு காரணமாக காட்சி ரத்தானதும் டிக்கெட் தொகை ரொக்கமாக கையில் கிடைத்தது. வீடு திரும்புவதற்கு முன்னர் பக்கத்தில் இருந்த வீடியோ கடையில் தள்ளுபடி விலையில் கிடைத்தது என்று “The Pursuit of Happyness” திரைப்பட வீடியோவை வாங்கினேன்.

வில் ஸ்மித் தன் நடிப்பால் உச்சத்தை தொட்ட படம் ; க்ரிஸ் கார்ட்னர் என்ற புகழ் பெற்ற பங்குத் தரகரின் சொந்த வாழ்க்கை அனுபவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். வில் ஸ்மித்தின் மகன் மாஸ்டர் ஜேடன் ஸ்மித் (Jaden Smith)-துக்கு முதல் படம். சமீபத்தில் After Earth திரைப்படத்தில் இதே தந்தை – மகன் ஜோடி நடித்திருந்தார்கள். நட்சத்திர தந்தை-தாய்க்கு பிறந்திருக்கும் ஜேடன் வியக்க வைக்கும் திறமை படைத்த நடிகர் மற்றும் ராப் பாடகர். நோபல் பரிசு விழாவொன்றில் ராப்-கச்சேரி செய்திருக்கிறார். மகனின் திறமையை வெளிக்கொண்டு வர வைத்து ஓர் எதிர்கால கதாநாயகனை உருவாக்கும் முயற்சியில் வில் ஸ்மித் ஈடுபட்டிருக்கிறார் என்று முதலில் தோன்றியது. ஆனால் “தி பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினஸ்” பார்த்த பிறகு பையனுக்கு அப்பாவின் உதவியே தேவையில்லை ; இரு படங்களிலும் மனதில் பதிகிற மாதிரியான நடிப்பை வெளிக்காட்டி இருக்கும் ஜேடன் ஓர் இயல்பான கலைஞர் ; அவருடைய வளர்ச்சிக்கு ஒருவரின் உதவியும் தேவைப்படாது என்பது கண்கூடு. “தி பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினஸ்”ஸில் நடிக்கும் போது ஜேடனுக்கு எட்டு வயது. இப்போது ஹாலிவுட்டின் மிக வேகமாக வளர்ந்து வரும், பரபரப்பாக பேசப்பட்டு வரும் பதின்பருவ நடிகர் அவர்.

அதிகம் படிக்காத, மருத்துவக் கருவிகள் விற்பனையாளராக வேலை பார்க்கும் க்றிஸ் கார்ட்னர் ஃபெர்ராரி காரில் வந்திறங்கும் பங்குத் தரகரொருவரை பார்த்து ஊக்கமுற்று பங்குத் தரகு நிறுவனமொன்றில் ட்ரெய்னியாக சேருகிறார். முதல் ஆறு மாதங்களுக்கு சம்பளம் கிடையாது. ஆறு மாதத்துக்குப் பிறகு வேலை கிடைக்கும் என்ற நிச்சயமும் இல்லை. வருமானமின்மை காரணமாக க்றிஸ்ஸின் காதலி வீட்டை விட்டு சென்று விடுகிறார். ஐந்து வயதுப் பையனும், க்றிஸ்ஸும் கிட்டத்தட்ட ஒரு வருடம் வீடின்றி வீதிகளில் வாழ்ந்தனர். சர்ச்சொன்றின் தங்குமிடம் முதல் ரயில் நிலையமொன்றின் கழிப்பிடம் வரை இரவுகளில் தங்கினர். பகலில் மகன் பள்ளிக்கு செல்கையில் க்றிஸ் அலுவலகம் செல்கிறார். அயராத கடும் உழைப்பு. புன்னகை மாறாமல் வாழ்க்கை தரும் கஷ்டங்கள் சகிக்கிறார். வீடின்றி தவிக்கும் அவரின் கஷ்டத்தை அலுவலகத்தில் ஒருவரும் அறியவில்லை. க்றிஸ்ஸுக்கு பங்கு-தரகர் வேலை கிடைக்கிறது. 1987-இல் சொந்த தரகு நிறுவனத்தை சிகாகோவில் துவக்கினார். இன்று க்றிஸ் ஒரு கோடீஸ்வரர் ; ஊக்கமுட்டும் பேச்சாளர் ; கொடையாளர். தென்னாப்பிரிக்காவில் முதலீடு செய்யும் தனியார் பங்கு நிதியம் ஒன்றை க்றிஸ் துவக்கிய போது அந்நிதியத்தின் அமைதிக் கூட்டாளி யார் தெரியுமா? சமீபத்தில் மறைந்த தென்னாப்பிரிக்க முன்னால் அதிபர் – நெல்சன் மாண்டேலா.

“சொந்தமாக பங்கு-தரகு நிறுவனம் துவக்குவதற்கு ஆறு வருடம் முன்னர் ஒரு குழந்தையை முதுகில் சுமந்தவாறே ஒரு சாக்கடையிலிருந்து வெளிவரும் முயற்சியில் ஊர்ந்தும், போராடியும், தத்தளித்துக் கொண்டும் இருந்த ஒருவன் இப்போது வந்தடைந்திருக்கும் இடம் அவ்வளவு மோசமானதில்லைதான்” என்று க்றிஸ் கார்ட்னர் சொல்கிறார்.

வில் ஸ்மித் க்றிஸ் கார்ட்னராக நடித்திருக்கிறார். உந்துதல் மிக்க ஒரு கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும். காதலி வீட்டை விட்டு நீங்கும் இடங்களில் ஏமாற்றவுணர்வை நுட்பமாக வெளிப்படுத்துவதும், நிறுவன அதிபர்கள் அவனை வேலையில் நியமிக்கும் போது பரவச உணர்ச்சியை குளமாகிய கண்களால் கொண்டு வருவதும், சிறையிலிருந்து நேராக நேர்முகத் தேர்வுக்கு சட்டை அணியாமல் செல்கையில் அதற்கான காரணத்தை நகைச்சுவையைப் போர்த்தி சொல்லும் சால்ஜாப்பும், மகனோடு இரவு வீடு திரும்புகையில் தங்கும் அறை பூட்டப்பட்டு சாமான்கள் வெளியே வைக்கப்பட்டிருப்பதை காண்கையில் அடையும் தவிப்பும்….சொல்லிக் கொண்டே போகலாம். வில் ஸ்மித் பிய்த்து உதறியிருக்கிறார். அவர் விற்கும் மருத்துவக் கருவியை திருடிக் கொண்டு போனவரை துரத்தும் இடங்கள், டாக்ஸிக்காரருக்கு செலுத்த பணமில்லாமல் பணம் கொடுக்காமலேயே ஓடி விடுவதும் என்று ஆங்காங்கே தன் ட்ரேட்-மார்க் நகைச்சுவை நடிப்பையும் வில் ஸ்மித் தூவியிருக்கிறார்.

யோக வசிஷ்டம் உரை நூலொன்றை படித்துக் கொண்டிருக்கிறேன். இளவரசன் ராமன் மனக்கலக்கமுற்று குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் சமயத்தில் விஸ்வாமித்திரரின் வேண்டுகோளுக்கிணங்க வசிஷ்டர் சொல்லும் அறிவுரைகளின் தொகுப்பு தான் யோகவசிஷ்டம். நூற்றுக் கணக்கான அழகான சிறுகதைகள் வாயிலாக தத்துவங்கள் இந்நூலில் விளக்கப்படுகின்றன. பல்வேறு சமய தத்துவங்களின் ஒன்றிணைந்த படைப்பாகவும் யோகவசிஷ்டம் கருதப்படுகிறது. வேதாந்த,ஜைன, யோக, சாங்கிய, சைவ சித்தாந்த மற்றும் மகாயான பௌத்த தத்துவங்களின் கூறுபாடுகள் இந்நூலில் அடங்கியிருப்பதாக தத்துவ ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

நூலின் முதல் அங்கத்தில் வசிஷ்டர் ராமருக்கு வழங்கும் முதல் உபதேசத்தை வாசித்தால் நமக்கு சந்தேகம் வந்து விடும் – நாம் படிப்பது ஆன்மீக நூலா? அல்லது சுய-உதவிப்புத்தகமா?

“பிரபஞ்ச வாழ்க்கையிலே நாம் முக்கியமாக அனுசரிக்க வேண்டியது ‘பௌருஷம்’ அல்லது தன் ஆண்மையை அடிப்படையாகக் கொண்ட தீவிர முயற்சி. தகுந்த முயற்சியால் உலகத்தில் அடையமுடியாதது ஒன்றுமே இல்லை. பிரம்ம பதவியுங் கூடத் தீவிரமும் ஒழுக்கமும் சேர்ந்த முயற்சியால் அடையத்தக்கதே.

ஆனால் செய்யும் முயறிசிகளைச் சரியான மார்க்கத்தை அனுசரித்தும் இடைவிடாமலும் செய்துவர வேண்டும், பலன் சித்திக்காவிடின் இதற்குக் காரணம், செய்த முயற்சியின் கோளாறே தவிர வேறு காரணமல்ல. தகுந்தபடி முயற்சி இருந்தால் காரியம் கை கூடியே தீர வேண்டும். இதுவே நியதி. இடைவிடாமல் முயற்சி செய்கிறவர்கள் உலகத்தில் எக்காலத்திலும் மிகவும் சொற்பம். பெரும்பாலும் ஜனங்கள் காரியம் எடுத்த பிறகு, அதில் ஊக்கம் குறைந்து முயற்சியில் தளர்ச்சி அடைவதாலேயே அதில் அபஜெயம் அடைகிறார்கள். சோம்பலே எல்ல ஜனங்களுடைய கஷ்ட-நிஷ்டூரங்களுக்கும் முதல் காரணம்”

“தவிர அநேகர் தங்களுக்கு விளையும் வினைப்பயன்களைப் பூர்வ ஜன்மத்தின் பலனாகக் கருதி சோர்வடைகிறார்கள். இதுவும் அஞ்ஞானமே, பூர்வ ஜென்மத்தில் செய்த பிரயத்தனங்களின் பலன்களை இந்த ஜென்மத்தில் நாம் அனுபவிப்பது வாஸ்தவமே. ஆனால் இனி நடக்க வேண்டிய யத்தனங்களில் அதன் வேகம் தற்சமயம் செய்யக் கூடிய முயற்சிகளுக்குக் குறைந்ததே. இவ்வித வாசனை வினைப்பயன்களைத் தற்சமயம் செய்யக்கூடிய பிரயத்தங்களால் ஜெயிக்கலாம். இது நம் வசத்தில் இருக்கிறது. இவ்வாறு எண்ணுவதை விட்டு நடப்பதெல்லாம் வினைப்பயன் என்று கருதி வாழ்க்கையில் சோகமடைந்து, செய்ய வேண்டிய முயற்சிகளை செய்யாமல் நிற்கும் மானிடர்கள் பரம மூடர்களே”

“நமக்கு வேண்டியவைகளைத் தேடிக்கொள்ள நம் பிரயத்தனத்தால் முடியுமே தவிர வேறொன்றினாலும் முடியாது. தீவிர முயற்சியே தெய்வம். இதையே ஒவ்வொருவரும் ஆசிரயிக்க வேண்டும். நமது முயற்சி இல்லாமல் ஒரு காரியமும் சித்தி பெறாது. நம் புத்திக்குப் புலப்படாமல் தெய்வம் எங்கிருந்தோ நம் செயல்களுக்குப் பலனை அளிப்பதாக எண்ணுவது மூடத்தனம். இதைவிட அஞ்ஞானம் வேறில்லை”

மலையிலிருந்து கொட்டும் அருவி சமவெளியை அடைந்து ஆறாக ஓடி இரு கரைகளை ஏற்படுத்தி குறுகியும் அகண்டும் ஓடி அணைகளால் தடுக்கப்பட்டாலும் தன் இலக்கை அடைந்து விடுகிறது. கவலை எனும் உணர்வின்றி தன் பாதையில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஓடுதல் ஒன்றே அதன் பணி. நம் கடனும் பணி செய்து கிடப்பதே. தெய்வத்தால் ஆகாதென்றாலும் முயற்சியானது நமக்கு கூலியைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையை, க்றிஸ் கார்ட்னரின் வெற்றியை திரையில் சித்தரித்து, நம்முள் ஏற்படுத்துகிறார் நடிகர் வில் ஸ்மித்.

Will_Smith_053

Source : யோகவாசிஷ்டம் : தமிழாக்கியவர் – எஸ்.கணபதி : அல்லயன்ஸ் கம்பெனி : 1948

ஒரு கை

zen2-03
“நான் எண்ணற்ற பௌத்தர்களுக்கும் ஏழை-எளியவர்களுக்கும் தான தர்மங்கள் செய்கிறேன் ; பல புத்த கோயில்களுக்கு நிவந்தங்கள் அளிக்கிறேன். இத்தகைய செயல்கள் எனக்கு என்ன மாதிரியான நல்-விளைவுகளைத் தரும்?” என்று அரசன் கேட்டபோது தயக்கமோ, முதன்முதலாக தென் – சீனாவின் பேரரசனைச் சந்திக்கிறோம் என்ற வியப்புணர்வோ இல்லாமல் அந்த அயல் நாட்டு பௌத்தர் மறுப்பது போல் தலையசைத்து, “ஒரு விளைவும் தராது”என்றார்.

அரசன் நெற்றி சுருக்கினான்; பிறகு சுதாரித்துக் கொண்டு, வினவினான். “புத்தர் இருக்கிறாரா? அவரைக் காணுதல் சாத்தியமா?”

இம்முறை போதி தர்மர் பதிலளிக்கச் சில வினாடிகள் எடுத்துக் கொண்டார்,. “இல்லை”

போதி தர்மரின் பதில்கள் அரசனுக்குச் சினமளித்தன. “. என் முன் நில்லாதீர். இங்கிருந்து எங்காவது சென்று விடுங்கள்”என்று அவன் ஆணையிட்டதும். போதி தர்மர் புன்னகைத்தார். அவர் உதடுகள் திறந்த மாதிரி தெரியவில்லை என்றாலும் உள்ளுக்குள் ஒரு பதற்றமுமில்லாமல் அவர் சிரித்துக் கொண்டிருக்கிறார் என்பதை அவரின் விழிகள் சபையோருக்கு உணர்த்தின.

சில வினாடிகளில் அவர் அவையை விட்டு நீங்கினார். அவையில் மௌனம் வெகு நேரம் நீடித்தது. அரசனின் கேள்விகளுக்குப் பின்னர் தொக்கி நின்ற குணங்களைப் புரிந்து சுருக்கமான பதில் தந்து போதி தர்மர் காத்த மௌனத்திற்கும், சபையோரின் மௌனத்திற்கும் புரியாததொரு பொதுத்தொடர்பு இருந்தது போன்று தோன்றியது. சபை வேறொரு அலுவல் எதுவுமின்றி அன்று கலைந்தது.

பேரரசன் வூ-வுக்கு அன்றிரவு தூக்கம் வரவில்லை. அந்தப்புர நங்கையரிடமும் அவன் செல்லவில்லை. அவையை விட்டு நீங்கும்முன் போதி தர்மர் பார்த்த பார்வை அரசனுக்குள் ஒரு வித அவஸ்தையை ஏற்படுத்தியிருந்தது. அவர் நீங்கிய பிறகு சபையோரின் கண்கள் வெட்கமுற்று அரசனின் பார்வையைத் தவிர்த்தது மாதிரி தோன்றியது பிரமையா அல்லது உண்மையா?

மந்திரிகளிடமோ அதிகாரிகளிடமோ யாரிடமும் அன்று சபையில் நடந்தவற்றைப் பற்றி அவனால் பேச முடியவில்லை. அப்படி பேசினால், அவர்கள் இவனை ஏளனமாகப் பார்த்து சிரிப்பார்களோ? சிரிக்கமாட்டார்கள். பேரரசன் முன் தைரியத்துடன் எதிர் வார்த்தை பேச அவர்கள் எல்லாம் என்ன போதி தர்மர்களா!

கோபமாக போதி தர்மரை விரட்டியடித்து விட்டாலும்வூ-வுக்கு போதி தர்மர் மேல் உள்ளுர கோபம் வரவில்லை என்பதுதான் உண்மை. சாதாரண குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை அளித்து பல மணி நேரங்கள் ஆனபின்னர், குற்றவாளிகள் மேல் எழுந்த அடக்கவொண்ணா சினம் காரணமாக தான் முன்னர் அளித்த தண்டனையை மரண தண்டனையாக மாற்றச் சொல்லியிருக்கிறான். இம்முறையோ அந்த பௌத்தரை துரத்தி அனுப்பியிருக்காமல் இருந்திருக்கலாமோ என்ற சிந்தனை ஏற்பட்டு வூ-வுக்கு குற்றவுணர்ச்சி அதிகரித்தது.

அடுத்த நாள், நான் – ஜின்-னுக்குக் கிளம்ப வேண்டும். அவனுடைய முன்னாள் தளபதியும் இந்நாள் பௌத்த துறவியுமான ஷென் – குவாங்-கை சந்திக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

நான் – ஜின் நகர மத்தியில் இருந்த பூங்காவொன்றில் மக்கள் திரளாகக். கூடியிருந்தனர். பல போர்களில் தலைமையேற்று வெற்றி கண்டு பேரரசின் எல்லைகளை விஸ்தரித்த ஷென் – குவாங் சில வருடங்களுக்கு முன் பௌத்த சமயத்தை தழுவி துறவு ஏற்றிருந்தார். நாடெங்கும் சுற்றி மக்களுக்கு பௌத்த சமயம் பற்றியும் சீன சாம்ராச்சியத்தின் பழம்பெருமைகள் பற்றியும் உரைகள் நிகழ்த்தி வந்தார் அவர். அன்றும் நல்ல கூட்டம் ; குறிப்பாக, இளைஞர் கூட்டம் அலை மோதியது.

பேரரசர் வூ-வின் சபையிலிருந்து துரத்தி விரட்டப்பட்ட போதி தர்மர் கூட்டத்தின் முதல் வரிசையில் நின்று கொண்டிருந்தார். அங்கு இருந்த மக்கள் திரளில் போதி தர்மரை எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. கருத்த தோல், சுருங்கிய கன்னங்கள், நல்ல உயரம், தீர்க்கமான பெரிய கண்கள்

வழக்கம் போல தேச பக்தி பாடலை பாடி தன் உரையைத் தொடங்கினார் ஷென் – குவாங். கூட்டத்தில் சலசலப்பு. துறவிகளுக்கான அங்கி அணிந்திருந்த ஷென் – குவாங் இரு கைகளால் சைகைகள் புரிந்தவாறு பேசினார். சாக்கிய முனியின் அரச குடிப்பிறப்பு பற்றியும் சிறு வயதில் அவருக்குப் பயில்விக்கப்பட்ட வீரக்கலைகள் பற்றியும் அவர் பேசியபோது, சீன மக்களும் அத்தகைய கலைகளைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று சொன்னார். அவர் பேச்சு ஒரு மணி நேரம் தொடர்ந்தது.

ஷென் – குவாங்-கின் உரையை கவனத்துடன் கேட்ட போதிதர்மர் உரை முடிந்தவுடன் அங்கிருந்து நகர்கையில் ஷென் – குவாங்-கின் உதவியாளர் ஒருவர் அவரை அணுகினார் ; ஷென் – குவாங் அழைத்து வரச் சொன்னதாக சொன்னார், தலையை ஆட்டி “ஹ்ம்ம்- செல்லலாம்”என்று பதிலளித்த போதிதர்மர் ஷென் – குவாங்-கிடம் அழைத்துச் செல்லப்பட்டார்.

“எங்கிருந்து வருகிறீர்கள்?” – கம்பீரமான குரலில் முன்னாள் தளபதி வினவினார்.

தலையை சற்றுச் குனிந்தவாறே மெலிந்த குரலில் பதில் சொன்னார் போதி தர்மர்.

“ஹ்ம்ம் வெகு தொலைவிலிருந்து வருகிறீர்கள்”

போதி தர்மர் ஷென் – குவாங்கின் முகத்தை நோக்கிக் கொண்டிருந்தார்.

“நான் பேசும்போது உங்களைப் பார்த்தேன். நான் சொல்லிய சில வார்த்தைகளை ஆமோதிப்பது போல தலையசைத்தீர்கள் ; பல சமயம் மறுப்பது போன்று உங்கள் தலையை பலமாக ஆட்டினீர்…அதற்கு என்ன அர்த்தம்?”

“எப்போதெல்லாம் உங்கள் கருத்து சரியென்று எனக்குப் பட்டதோ அப்போதெல்லாம் ஆமோதித்தேன்; சரியென்று படாதபோது மறுத்தேன்”

ஷென் – குவாங் போதி தர்மரை எரித்து விடுவது போன்று பார்த்தார்.

“நான் யாரென்று உமக்கு தெரியாது…சீனப் போர்படை தளபதியாக இருந்தவன். என் பேச்சைக் கேட்பவர்கள் படையில் இன்னும் இருக்கிறார்கள்”என்று சொல்லி நிறுத்தினார்.

போதிதர்மர் ஒரு சலனமும் இல்லாமல் புன்னகைத்தார். வெண் பற்கள் ஒளிர்ந்தன. அவர் சிரிக்கும்போது அவருடைய கண்களும் சேர்ந்து சிரித்தன.

ஷென் – குவாங் முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவரைவிட்டுத் திரும்பி, அவ்விடத்திலிருந்து நகர்ந்தார். உதவியாட்கள் ஷென் – குவாங்கின் கட்டளைக்காக காத்திருந்தனர். ஷென் – குவாங்கின் கண்கள் கோபத்துடன் காணப்பட்டாலும் அவர் ஒன்றும் சொல்லவில்லை ; மௌனமாயிருந்தார். போதி தர்மர் அவர் பார்வையிலிருந்து விலகும்வரை வாயிலையே நோக்கிக் கொண்டிருந்தார்.

பேரரசர் வூ இரண்டு நாட்கள் கழித்து நான் – ஜிங் வந்து பால்ய சினேகிதரைச் சந்தித்தார். இருவருமே போதிதர்மர் பற்றிய தத்தம் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இருவராலும் நீலக் கண் கொண்ட புத்தபிக்‌ஷுவை தம் நினைவுகளிலிருந்து அகற்ற இயலவில்லை.

போதி தர்மர் எங்கு சென்றார் என்று யாருக்கும் தெரியவில்லை. அவருக்கு சிஷ்யர்களோ புரவலர்களோ யாரும் இல்லை. வூ-வின் ஒற்றர்கள் போதி தர்மரை தேடிய வண்ணம் இருந்தார்கள். ஷென் – குவாங்கின் சீடர்கள் சீனாவின் பல்வேறு புத்த விகாரங்களிலும் அயல்-நாட்டு பௌத்தரைத் தேடினர். ஒரு கட்டத்தில் அந்த சன்னியாசி சீனாவை விட்டுச் சென்றிருக்கக் கூடும் என்ற முடிவுக்கு வந்து விட்டனர்.

ஆண்டுகள் பல சென்றன. வெய் பேரரசனின் ஆளுகைக்குட்பட்ட வட-சீனத்தின் வட எல்லையில் இருந்த மலைக்குகையொன்றில் ஒரு துறவி கண்களைத் திறந்தவாறே குகையின் சுவற்றைப் பார்த்துக் கொண்டு பல வருடங்களாக அமர்ந்திருக்கிறார் என்ற செய்தி ஷென் – குவாங்-கை எட்டியது. அது பல வருடங்களுக்கு முன் அவர் சந்தித்த “நீலக் கண் காட்டுமிராண்டியாக இருக்கலாம் என்ற ஐயம் அவருக்கு ஏற்பட்டது. கிடைத்த செய்திகளின்படி சுவர் நோக்கி அமர்ந்திருந்த துறவியின் அங்க அடையாளங்கள் நான் – ஜிங்கில் சந்தித்த இந்தியத் துறவியின் அங்க அடையாளங்களுடன் ஒத்துப் போயின.

பகை ராச்சியத்துக்குள் வூ-வால் நுழைய முடியாது. மாறுவேடம் அணிந்து வட-சீனாவுக்குள் நுழையும் திட்டத்தை வூ பிரஸ்தாபித்தபோது ஒற்றர் படை அதனை நிராகரித்துவிட்டது. ஷென் – குவாங் இப்போது நாடறிந்த பௌத்த துறவி. எனவே அவர் வட-சீனாவில் நுழைவதில் பிரச்னை இருக்காது. ஷென் –குவாங் தானே சென்று காட்டுமிராண்டி பௌத்தனை தென் – சீனாவுக்கு அழைத்து வருவதாக உறுதியளித்தார்.

வட-சீனாவின் வட எல்லை மலைக் குகையை அடைய பல மாதங்கள் பிடித்தன. ஷென் – குவாங்-குடன் வந்த உதவியாளர்கள் எல்லாம் வழியிலேயே இறந்து போயினர். மலையடிவாரத்தை அடைந்தபோது அவர் குழுவில் ஷென் – குவாங் மட்டுமே மிஞ்சியிருந்தார்.

ஆயிரம் ஆடிகள் மலையில் ஏறி குகையை கண்டு பிடித்தார் ஷென் – குவாங் . சுவற்றைப் பார்த்தபடி கண்களை திறந்திருக்க போதி தர்மர் உட்கார்ந்திருந்தார். ஜடாமுடியாக அவரின் கேசம் நீண்டு, முடிச்சிட்டு வளர்ந்திருந்தது. புதராக முகமெல்லாம் தாடி. கண்கள் இமைக்காமல் சுவரை வெறித்து நோக்கியபடி இருந்தன. புருவங்கள் இல்லாமல் பிறந்தவரோ என்ற கேள்வி ஷென் – குவாங்கின் உள்ளத்தில் பூத்தது. நான் – ஜிங்கில் பாரத்தபோது போதிதர்மருக்கு புருவம் இருந்ததே!

ஷென் – குவாங் “காட்டு-மிராண்டி”என்று உரக்க அழைத்தார். அதட்டினார். தோளைத் தட்டி கூப்பிட்டார். போதி தர்மரிடமிருந்து ஒரு மறுமொழியும் இல்லை. அவரின் சுவாசம் ஓருவித தாளலயத்துடன் குகையெங்கும் எதிரொலித்தது.

அன்றிரவே ஷென் – குவாங்-குக்கு கடும் குளிர்க் காய்ச்சல் பீடித்தது. கிராமத்துக்காரர்கள் ஷென் – குவாங்கிற்கு உணவும் மருந்தும் எடுத்து வந்தார்கள். சில நாட்களில் அவர் குணமானார். கிராம மக்கள் வருவதோ, தீபமேற்றிச் செல்வதோ, ஷென் – குவாங் அதே குகையில் தன்னுடன் இருந்து உணவு உண்பதோ, குகையை வளைய வருவதோ போதி தர்மருக்கு ஓர் இடையூறும் தரவில்லை. சுவரோடு சுவராக உயிரற்ற சிலை போல் அமர்ந்திருந்தார். விளக்கேற்றப்படாத நாட்களில்கூட அக்குகை ஒளியுடன் திகழ்வதாக ஷென் – குவாங்குக்குத் தோன்றியது.

மாதங்கள் பல சென்றன. ஷென் – குவாங்-கின் விண்ணப்பங்கள், அழைப்புகள், கூவல்கள் எதுவும் போதி தர்மர் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை.

குளிர் காலத்தில் ஒரு நாள் குகை வாசலை பனி மூடியது. அச்சிறு குகையில் போதி தர்மரும், ஷென் – குவாங்கும் மட்டும் இருந்தனர். ஷென் – குவாங்கிற்கு உணவு கொடுக்க கிராமத்தார் யாரும் பல வாரங்களாக வரவில்லை. பசி மீறி மயக்க நிலையில் ஷென் – குவாங் தரையில் விழுந்தார். சுவர் முன் ஒரு கல் போல உட்கார்ந்திருந்த போதி தர்மரை காண முடியாமல் போனது ; அவரது கண்கள் மூடியே கிடந்தன. மிகப் பிரயத்தனப்பட்டு சுவர்ப் பக்கம் ஒரு முறை நோக்கினார். போதி தர்மரைச் சுற்றி ஒளி வட்டம் பிரகாசமாய்ச் சூழ்ந்திருப்பது போல அரை மயக்கத்திலிருந்த ஷென் – குவாங்குக்கு தோன்றியது. மனதுள் அழுகை பீறிட்டு எழுந்தது. கண்ணீர்த் துளியும் தோன்றாத அளவுக்கு அவர் உடல் வலுவிழந்திருந்தது.

வலது கைக்கு தரையில் ஏதோ தட்டுப்பட்டது. ஒரு முனை கூர்மையாக இருந்த கனமாக கல். உணர்ச்சி அலை மோத, கொஞ்சநஞ்ச சக்தியை ஒன்று திரட்டி. ஒருக்களித்துப் படுத்துக் கொண்டு, அக்கல்லால் தன் இடது கையை பலமுறை குத்திக் கொண்டார் ;. ரத்தம் பெருகி வழிந்தது. முட்டிக்குக் கீழ் தன் இடது கையை பெயர்த்தெடுத்தார். வலது கையால் அதை போதி தர்மர் முன் வீசியெறிந்தார். சுவற்றுக்கும் போதிதர்மருக்கும் இடையில் இருந்த இடைவெளியில் ஷென் – குவாங்கின் இடக்கை விழுந்தது.

போதி தர்மரின் தலை ஒன்பது வருடங்களுக்குப் பிறகு அன்று அசைந்தது. ஷென் – குவாங் தரையில் குற்றுயிராகக் கிடந்தார்.

ஷென் – குவாங்கை தன் மடியில் கிடத்தி வெட்டப்பட்ட இடக்கையின் நீள் வெட்டு தோற்றத்தை போதிதர்மர் சோதித்துக் கொண்டிருந்தபோது குகைவாயிலின் பனிக் கதவை உடைத்துக் கொண்டு கிராமத்தினர் குகைக்குள் நுழைந்தனர்.

Bodhidharma_and_Huike-Sesshu_Toyo

984072310_Hpu6F-S-1

நன்றி : பதாகை (http://padhaakai.com/2014/03/23/bodhi-dharma/)

தொலைந்த சத்தம்

செருப்படி சத்தம்
காதைக் கிழித்தது
பொறுக்கவியலாமல்

சத்தம் நின்றதும்
வாசல் வெளியே
ஒரு ஜோடி செருப்பு

பாதங்கள் எங்கேயென
திசையெல்லாம் அலைகையில்
செருப்படி சத்தத்தின் மாறாத ஞாபகம்

திரும்பவும் அறையில் அடைந்தேன்
செருப்படி சத்தம்
மீண்டுமொருமுறை கேட்குமெனும் நம்பிக்கையில்

முண்டங்களின் தலைவன்

தலைகளில்லா
முண்டங்கள்
ஒரு படை அமைத்தன
தலைவன்
ஒருவனை நியமிக்க
தலை தேடும் பணியில் இறங்கின
கிடைக்காமல் போன
தலைக்கு பதிலாய்
தலையின் சித்திரம் வரைந்த
பலகையொன்றை
எடுத்து
ஒரு முண்டத்தின் மேல்
ஒட்டி வைத்தவுடன்
அதன் உயரம் பன்மடங்காகி
எடை பல்கிப் பெருகி
அதன் காலடி நிழலின்
சிறு பகுதிக்குள்
மற்ற முண்டங்களெல்லாம் அடங்கின.

வறட்சி நீங்குதல்

மண்டியிட்டு
திட்டில் தலை வைத்து
பார்க்கையில்
ஆழத்தில் போய்விட்ட நீர் மட்டம்
ஈரமிலா தொண்டையில்
சொற்களின் உற்பத்தி முடக்கம்.
வறண்ட கோடைக்கு நடுவே
பெய்த சிறு தூறலின்
ஒற்றைத் துளி
நாக்கை நனைத்தவுடன்
பெருகிய
வெள்ளத்தில்
கிணறு பொங்கி வழிந்தது.

கதைகளுக்குள் கிணறு : கிணறுக்குள் கதைகள்

அசோகமித்தி​ரனின் “கிணறு” சிறுகதையை முன்வைத்து

நமக்கு பிடிக்கின்ற சிறுகதைகளுக்கு நடுவில் இருக்கும் பொதுப்புள்ளி என்ன? இலக்கிய ஆய்வாளர்கள் இக்கேள்விக்கு வெவ்வேறு விடைகள் சொல்லக் கூடும். என்னைப் பொறுத்த வரையில், கதையில் வரும் நிகழ்வுகள் நம் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களுடன் சிறு அளவிற்கேனும் ஒட்டியோ வெட்டியோ சென்றால் அக்கதை நம் நினைவில் தங்கி விடும்.

பூமியைத் திறந்து குழி தோண்டி திட்டுகள் எழுப்பப்பட்டு கிணறு என்றழைக்கப்படும் நீர் நிலை மேல் இலக்கியவாதிகளுக்கு மாறாத காதல் இருந்திருக்கிறது எனலாம்.  கிணற்றோரக் காதல்கள், கிணறை சமூக ஏற்றத்தாழ்வுகளின் குறியீடாக சித்தரித்தல் போன்றவை நம் இலக்கியத்தில் காலகாலமாக இருந்து வந்திருக்கின்றன.

பள்ளத்தில் ஊறிய நீரை இறைக்க ஏதுவாய் இழுவை வழியாக கழுத்தில் கயிறு கட்டப்பட்ட குடம் கிணறின் நீர் மட்டத்தை தொட்டதும் ’டுபுக்’கெனும் சிறு சத்தத்துடன் நீர் நிரம்புவதும் பிறகு கிலுங் கிலுங்-ஙெனும் சத்தத்துடன் நீர்க்குடம் மேலே வருவதும் என்று ஒரு தொடர்ச்சியான ரிதத்துடன் செல்லுவதைக் கேட்பது சுகம்.

ஒரு முறை எங்கள் பூர்வீகக் கிராமத்துக்கு சென்றிருந்தேன். மழைக்காலம். நவம்பர் மாதம் என்று நினைவு. என் தாத்தாவின் கிணற்றில் திட்டைத் தாண்டி தண்ணீர் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. பொங்கல் பாத்திரத்தில் பொங்கி வழியும் பொங்கல் நுரையைப் பார்ப்பது போல இருந்தது. பத்து வருடம் முன்னர் என் அப்பா அந்த வீட்டை விற்பதற்கு முன்னால் ஒரு முறை அங்கு சென்ற போது அந்தக் கிணற்றில் தண்ணீர் மட்டம் கண்ணுக்கே எட்டவில்லை. நீளம் போதாமை காரணமாக பயன் படுத்தப்படாமல் குடத்தின் கழுத்தையும் விடாமல் தரையில் கிடந்தது கயிறு!.

காஞ்சிபுரத்தில் நாங்கள் வசித்த போது பக்கத்து வீட்டில் தறிவேலை நடக்கும். பல நிறங்களில் பல டிசைன்களில் தறியில் பட்டுப் புடவைகள் நெய்யப்பட்டுக் கொண்டிருக்கும். என் நண்பன் ராமு நெசவு செய்யும் அழகைப் பார்த்துக் கொண்டே அவர்கள் வீடே கதி என்றிருந்த நாட்கள் உண்டு. ராமுவின் வீட்டுப் பின் புறத்தில் மரத்தடியில் ஒரு திண்ணைக்குள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்போம். அது நெடுக வளர்ந்த வேப்ப மரம்! மஞ்சள் நிற வேப்பம் பழங்களை முதன்முதலாக தின்று பார்த்தது அங்கு தான். “நீ உட்கார்ந்திருக்கிறாயே! அது கிணறாக இருந்தது! எங்க அப்பா சின்னப் பையனா இருக்கும் போது மண்ணை நிரப்பி கிணற்றை மூடிவிட்டார்கள். இந்த மரத்தின் வேர்கள் பழைய கிணற்றின் அடிவாரத்தை தொட்டுக் கொண்டிருக்கும். ஒரு மாஜி கிணற்றின் மேல் தான் நீ உட்கார்ந்திருக்கிறாய்!”என்று சொன்னான். உட்கார்ந்திருந்த நான் தடக்கென எழுந்து நின்று விட்டேன். நாங்கள் உட்கார்ந்திருந்த இடத்தில் மண் விலகி பள்ளம் விழுந்து மரம் கிணற்றுக்குள் சென்று, கிளைகள் திட்டுக்கு மேல படர்ந்து……சில வினாடிகளில் என் கற்பனை விரிந்தது. அக்கிணறு மூடப்பட என்ன காரணமாக இருந்திருக்கும் என்று ஒரு நாள் இரவு எங்கள் பால்கனியில் படுத்துக் கொண்டே யோசனையில் மூழ்கியிருந்தேன். யாரேனும் செத்து விழுந்திருப்பார்களா? அதை மறைக்க மண் மூடி நிரப்பியிருப்பார்களா? சீ என்ன விசித்திர கற்பனை! ராமுவின் அப்பா ஸ்ரீனிவாசலு ராத்திரி நேரத்தில் சில சமயம் தறி சத்தத்தின் பின்னணியில் தெலுங்குச் சினிமாப் பாடல்கள் பாடுவார். உச்ச ஸ்தாயியில் கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ்வின் குரலின் நகலில்! கிணறு மூடப்பட்டதன் பின்னணி பற்றி நான் கற்பனையில் ஆழ்ந்திருந்த அன்று அவர் பாடிய பாட்டு என்னை எழுந்து உட்காரச்செய்து விட்டது. அன்று ”ஆமே எவரு?” தெலுங்கு திரைப்படத்திற்காக பி.சுசீலா பாடிய “வூ நா ராஜா….ராரா…ராரா” எனும் பாடலை கர்ண கடூரமாக பாடிக் கொண்டிருந்தார். பக்கத்து வீட்டில் கையில் விளக்கொளியை ஏந்திக் கொண்டு ஏதாவது உருவம் அலைகிறதா என்று பார்த்தேன். மின்சாரம் திரும்பி வந்ததும் அவர் பாட்டை நிறுத்தி விட்டார். இருட்டுக்குப் பயந்து சத்தமாக பாடியிருப்பார்! பாவம்! இருட்டுக்கு பயப்படாத அக்கம்பக்கத்தவர்கள் பயந்து போயிருப்பார்கள்.

உடுமலையில் இருந்த நாட்களில் ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது முதன்முதலாக பள்ளி சுற்றுலாவில் சென்றிருந்தேன். கர்நாடகாவிலிருக்கும் ஹசனுக்கு அருகில் இருக்கும் பேலூர் என்ற ஊருக்கு போனோம். ஹொய்சள மன்னன் விஷ்ணு வர்தனால் கட்டப்பட்ட சென்ன கேசவர் கோயில் அங்கிருக்கிறது. எங்களையெல்லாம் ஒரு சத்திரத்தில் தூங்க வைத்தார்கள். அந்தச் சின்ன சத்திரத்தில் எல்லா மாணவர்களும் உறங்க இடமில்லை. எனவே சத்திரத்துக்குப் பக்கத்தில் ஒரு பாழடைந்த மாளிகையின் சாவியை சத்திரத்தின் மேலாளர் வாங்கிக் கொடுத்தார். சில மாணவர்களை அந்த மாளிகைக்குள் இருந்த ஓர் அறையில் தங்க வைத்தார்கள். அம்மாளிகை பல வருடங்களாக பூட்டப்பட்டிருந்திருக்கும் போலிருந்தது. பல அறைகள் மண்ணும் தூசுமாக இருந்தன. வரவேற்புக் கூடத்தின் தரை பெயர்ந்து வந்திருந்தது. நாங்கள் படுத்திருந்த அறை மட்டும் சுத்தமாக இருந்தது. மாளிகையில் புழங்கும் அறையாக எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறை மட்டும் தான். சமையலறையைத்  தாண்டி  கொல்லைப் புறம்  விரிந்தது.

புது இடம் என்பதால் சீக்கிரமே எழுந்து விட்டேன். விடிந்திருந்தது. வாய் கொப்புளிக்க சத்திரத்துக்கு தான் போக வேண்டும். கொல்லைப் புறம் சென்று ஒரு புதருக்கருகே சிறுநீர் கழிக்கும் போது அந்தக் கிணறு என் கண்ணில் பட்டது. எந்த முட்புதருக்கருகே நான் நின்று கொண்டிருந்தேனோ அங்கிருந்து பத்தடி தள்ளி அந்தக் கிணறு இருந்தது. அதன் திட்டின் ஒரு பாகம் சுத்தமாக உடைந்து விட்டிருந்தது.தெரியாமல் யாரேனும் அங்கு போய் கிணற்றில் விழுந்து விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் தான் அந்த முட்புதரை யாரோ அங்கு வளர்த்திருக்கிறார்கள் போல! சில்லென்று என் முதுகெலும்பில் மின்சாரம் பாய்ந்தது போன்ற ஒரு காட்சியை அப்போது காணக் கிடைத்தது. ஒரு கரு நாகம் நான்கடி இருக்கலாம் ; மெலிய தேகத்துடன் நான் சிறு நீர் கழித்த முட்புதருக்குள்ளிருந்து வெளியேறி உடைந்திருந்த கிணற்றுச் சுவருக்குள் ஊர்ந்து சென்றது. முட்புதரில் தூங்கிக் கொண்டிருந்த நாகத்தின் தூக்கத்தை கலைத்ததற்கு அதன் சந்ததிகள் என்னைப் பழிவாங்குமா என்று தெரியவில்லை.ஆனால் அமைதியாக ஒரு நாகம் கிணறுக்குள் நுழையும் காட்சி என் ஞாபகத்தில் நிரந்தரமாகப் படிந்து போனது.

+++++

writer_ashokamitran

எதிர் பாராமல் கிணறுகள் கண்டு பிடிக்கப்பட்ட போது ஏற்பட்ட விபரீத விளைவுகளுக்கு இரு காரணங்கள் ; ஒன்று மூடப்பட்டகிணறுக்குள் மர்மங்களும் தூங்கக் கூடும் என்ற யூகம் இரண்டு, அக்கிணறு இருக்கும் இடத்தின் சிதிலமான தன்மை. அசோகமித்திரனின் ”கிணறு” சிறுகதையிலும் ஒரு கிணறு கண்டு பிடிக்கப்படுகிறது.அது ஏற்படுத்தும் விளைவு என்ன என்பது ஒரு புறம் இருக்கட்டும். அதற்கு முன்னர் பாழடைந்த கோட்டைகளைப் பற்றி பேச வேண்டியிருக்கிறது.

+++++

பழைய கோட்டைகளை களமாக வைத்து பல மர்மக் கதைகளும் சாகசக் கதைகளும் புனையப்பட்டிருக்கின்றன. கோட்டைகளுக்குள் மர்மங்கள் ஒளிந்துள்ளன என்னும் அனுமானம் பல திகில் கதை எழுத்தாளர்களுக்கு சோறு போட்டுக் கொண்டிருக்கிறது.

தாகூரின் சிறுகதைகளில் ”பசித்த கற்கள்” முக்கியமான ஒன்று. அக்கதையில் ஒரு கோட்டை வரும்.

பாரிச் ஒர் அழகான இடம். சுஸ்தா நதி கற்களோடு பேசிக் கொண்டும் கூழாங்கற்களை அலம்பிக் கொண்டும் திறமை வாய்ந்த நடன மங்கை போல அந்த காட்டின் வழி நகர்ந்து கொண்டிருந்தது. நதியின் கரையில் இருந்து 150 படிகள் ஏறினால், மலையடிவாரத்தில் கம்பீரமான  ஒற்றை பளிங்கு மாளிகை நிற்கும்.மாளிகைக்கு அருகில் ஒருவரும் வசிப்பதில்லை” என்ற அழகான வர்ணனை வாயிலாக அந்த அரண்மனை நமக்கு அறிமுகப்படுத்தப்படும். கதைசொல்லி தனியாக அந்த கோட்டையில் தங்கும் போது அவனுக்கேற்பட்ட அனுபவங்களை கதையில் விவரிப்பான்.

தாகூரின் “பசித்த கற்கள்” அசோகமித்திரனின் “கிணறு” சிறுகதையிலிருந்து ஒரு விதத்தில் வித்தியாசமானது. யதார்த்தத்தில் அழுத்தமாக காலூன்றியிருக்கும் அசோகமித்திரனின் மற்ற கதைகள் போன்றே “கிணறு” கதையும் யதார்த்தத்தில் நிலை கொண்டது. கதை உள்ளே கதை என்ற உத்தியில் அமைந்திருக்கும் “பசித்த கற்கள்” மாற்று மெய்ம்மை பாவனையுடன் கற்பனாவாதத்தின் கொண்டாட்டமாக எழுதப்பட்டிருக்கும். ரயிலின் வருகைக்காக ரயில் நிலையத்தில் காத்திருக்கும் போது கதைசொல்லி சொல்லும் கதையில் ஒரு தெளிவான முடிவு இருக்காது. அதற்குள் அவர்கள் பயணம் செய்ய வேண்டிய ரயில் வந்து விடும். கதைசொல்லி டாட்டா-பை பை சொல்லிக்கொண்டே ரயிலில் ஏறிச் சென்று விடுவார். கதை கேட்ட நபர் “அவர் சொன்னதெல்லாம் ரீலு தான்” என்பது மாதிரியாக சொல்லுவார்.

பசித்த கற்களில் கதைசொல்லி அந்த அரண்மனையில் தனியாக வசிப்பான் ; பைத்தியம் பிடித்த கரீம் கான் என்ற உதவியாளன் மட்டும் கூட இருப்பான். “கிணறு” கதையில் வரும் சொகுசு சுற்றுலா விடுதியாக மாற்றப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கும் கோட்டையில் சதாசிவன் தனியே இல்லை. சதாசிவனுடன் அவனுடைய நண்பனும் அந்த ஓட்டலில் தங்கியிருக்கிறான். பல அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் கூட தங்கியிருக்கின்றனர். ஆனாலும் பசித்த கற்களின் கதை சொல்லி போல சதாசிவனும் தனித்தே வளைய வருகிறான். அந்த விடுதியில் இண்டெர்-காம் போன்கள் இல்லை. வரவேற்பறையில் மட்டும் ஒரே ஒரு தொலைபேசி இணைப்பு இருக்கிறது. கதையில் இரு முறை நண்பனுடனும் சுற்றுலா பயணிகளுடனும் சதாசிவன் உணவு உண்பது போல் வருகிறது. ஆனாலும் கதை முழுதும் சதாசிவன் தன் எண்ணங்களில் தனித்திருக்கிறான். அவனுடைய அறைக்கு தேநீர் கொண்டு வரும் ஆளும், மத்திய கால அரசவைச் சேவகன் போல உடையணிந்த சேவகன் ஒருவனும் கதையில் வருகிறார்கள். சேவகனிடம் மட்டும் ஒரு சம்பாஷணை நடக்கிறது.

திகில் கதைகளில் பாத்திரங்கள் தனித்திருக்கும் போது தான் அவர்கள் மனதின் பிடியில் இருப்பதை சொல்ல முடியும். மனதிற்குள் தானே பயம் இருக்கிறது.

”பசித்த கற்களில்” பகலில் அமைதியாக இருக்கும் பாழடைந்த அரண்மனை இரவில் உயிர் பெறும். மனிதர்கள் நகரும் போது எழும் மிதியடிகளின் சத்தம், ஆனந்தமாக சுஸ்தா நதியில் நீராடச்செல்லும் நங்கையரின் சிரிப்போலிகள் என மாயைப் போன்ற காட்சிகள் கதைசொல்லியின் கண்களுக்கு முன்னால் ஓடுகின்றன. காட்சியில் வருபவர்களின் கண்ணுக்கு அவன் தெரிவதில்லை. ஒரு திரைப்படம் போன்று ஒவ்வோர் இரவும் இக்காட்சிகள் அவனுக்கு தெரிகின்றன. முதலில் பயத்தோடிருக்கும் கதைசொல்லி பிறகு இக்காட்சிகளுக்கு பழகி விடுகிறான். இரவுக்காக காத்திருக்க ஆரம்பிக்கிறான். ஒரு வித பித்து நிலையை அந்த பாழடைந்த கோட்டையின் சூழல் அவனுள் ஏற்படுத்திவிடுகிறது. மனதின் பங்கேற்பில்லாமல் அந்த காட்சிகளும் பிரமைகளும் தோன்றியிருக்க முடியாது!

இரு சிறுகதைகளுக்கும் நடுவிலான பொது இழை – வரலாற்று கால நிகழ்வுகள் பற்றிய யூகங்களும் ஆர்வங்களும். கோட்டைகளில் வசித்தவர்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்ற கற்பனை. எத்தகைய சதிச் செயல்கள் அக்கோட்டையில் நிகழ்ந்திருக்கக் கூடும் என்ற யோசனை. பசித்த கற்களில் கதைசொல்லி கற்பனையின் ஈர்ப்பை இப்படி விவரிப்பான் : “ஆர்வத்தை தூண்டும் அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தை, ஒர் அழகான கதையின் துண்டுகளாக என்னால் உணர முடிந்தது ;ஆனால் அக்கதையை ஒரு தொலைவிலிருந்து பின் தொடர முடிந்ததேயொழிய, அதன் முடிவு என்ன என்று என்னால் அறிய முடியவில்லை.” 

கிணறு கதையின் கதாநாயகனும் கிட்டத்தட்ட அதே மனநிலையில் தான் இருந்தான். பயம் ஒரு விசித்திரமான உணர்வு. பயவுணர்வு நீடிக்கும் போது அவ்வுணர்வைத் தூண்டி விடும் புறப் பொருட்கள் மீதான ஈர்ப்பு அதிகரிக்கக் கூடும் என்கிற அனுமானம் இரு கதைகளிலும் பயன் படுத்தப்பட்டிருக்கிறது.

+++++

சதாசிவன் தங்கியிருக்கும் அறையின் ஜன்னல் மூடியிருக்கிறது. யாரும் எளிதில் திறக்காமல் இருக்க கம்பிகளை இறுக்க சேர்ந்து அடித்திருக்கிறார்கள்.  அந்த ஜன்னல் கம்பிகள் உளுத்துத் துருப் பிடித்துப் போன நிலையில் இருக்கின்றன. மதிய உணவுக்கு அழைக்க வந்த சேவகனைக் கொண்டு அந்த ஜன்னலை திறக்க முயல அது முடியாமல் போகிறது. மதிய உணவு உண்டு திரும்பிய பிறகு சதாசிவன் தனியே இருக்கையில் ஜன்னலை மீண்டும் திறக்கப் பார்க்கும் போது,கம்பிகள் எளிதில் விழுந்து விடுகின்றன. கம்பிகளை எல்லாம் விலக்கி வெளியில் பார்க்கிறான்.

ஜன்னல் வழியாகப் பார்த்தான். முதலில் ஒன்றும் தெரியவில்லை.எட்டிப் பார்த்தான். ஜன்னலைத் தாங்கிய சுவர் கீழே செங்குத்தாக நின்றது. அதையொட்டியபடி ஆழத்தில் ஒரு கிணறு இருந்தது தெரிந்தது.”

அவன் அறைக்கு நேர் கீழே கிணறு இருக்கிறது என்பது தெரிந்தவுடன் அவனால் அமைதியாக இருக்க முடியவில்லை. அவன் பத்து வயதில் பார்த்த ராட்சத கிணறு அவனுக்கு ஞாபகத்தில் வருகிறது. மலை மீது இருக்கும் கிணறுகளின் வரலாறு சாதாரண கிணறுகளின் வரலாறு போல் இருக்காது என்ற சதாசிவத்துக்கு தோன்றுகிறது. அறையை மாற்றிக் கொள்ளலாமா என்று கூட யோசிக்கிறான்.

தண்ணீர் அவனை எப்போதும் கலக்கத்துக்கு உட்படுத்தியது. தண்ணீர் என்பது குழாயில் வருவது மட்டுமில்லை. அது கிணறாக இருக்கும். ஏரியாக இருக்கும்.ஆறாக இருக்கும். அருவியாக இருக்கும். அவன் முதன் முறையாக கடலைப் பார்த்த போது பயத்தில் வயிறு உள்ளிழுத்துக் கொண்டது, முகம் இல்லை, கை-கால் இல்லை, கண் மூக்கு இல்லை, ஆனால் கடல் ஓர் அரக்கனாக காட்சி அளித்தது. அந்த அரக்கன் சில நேரங்களில் படகுகளையும் கட்டுமரங்களையும் கப்பல்களையும் கவிழ்த்துவிடாதிருந்தால் அவனுக்கும் அவ்வப்போது பெருந்தன்மை, இரக்கம் உண்டு என்று பொருள். ஆனால் அரக்கர்களின் பெருந்தன்மையையும் இரக்கத்தையும் நம்ப முடியுமா? எந்த வினாடியும் அவை மறையக் கூடியவை, விளைவு, அழிவுதான். அதனால்தான் எல்லாக் கலாச்சாரங்களும் பிரளயம் வந்து உலகம் அழியும் என்று நம்புகின்றன..

பயம் இருக்கிறது என்பது புரிகிறது, ஆனால் அதை ஒத்துக் கொள்ள முடிகிறதா? சதாசிவத்துக்கு பழங்காலத்தில் அறைகளில் தனியாகப் படுத்திருப்பார்களா என்ற சந்தேகம் எழுகிறது. அந்த கோட்டையில் இருந்த ராஜாவுக்கு எத்தனை ராணியர் இருந்திருப்பர்? அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி அறையில் இருந்திருப்பார்கள்.இரு ராணியரை ஒரே அறையில் தங்க வைக்க ராஜா சம்மத்தித்திருக்க மாட்டான் என்றெல்லாம் அவன் மனம் தறி கெட்டு ஓடுகிறது.

+++++

அச்சவுணர்வு பற்றிய பிரக்ஞை இருந்தும் கிணறு சிறுகதையின் கதாநாயகன் கதையின் முடிவில் சந்தித்த முடிவை எப்படி சந்தித்திருக்க முடியும் என்ற கேள்வி இயற்கையாக எழுகிறது. ஆனால் கதையின் ஆரம்பத்தில் எழுத்தாளர் காரணத்தை கொடி காட்டி விடுகிறார்.

சிறுகதையின் ஆரம்ப வரி இது தான்! – “அந்த இடத்திற்கு அவனாகத் தேடி வரவில்லை” அது அவனுக்கு விதித்தது என்பதை முதலிலேயே நமக்கு தெரிவித்துவிடுகிறார். சதாசிவத்துக்கு தண்ணீரில் கண்டம் என்ற தகவலும் நமக்கு அளிக்கப்பட்டுவிடுகிறது.

கதையின் முடிவிலேயே இதையெல்லாம் சொல்லிவிட்டால் கதை எப்படி “திகில்” கதையாகும். வாழ்வின் அபத்தத்தை சொல்வதாகத் தானே ஆகும்!

அசோகமித்திரனின் எழுதிய சிறுகதைகளில் அவரின் செகந்திராபாத்தில் இருந்த காலத்து இளம் வயதுக் கதைகள், சென்னையில் திரைப்பட நிறுவன நிர்வாகியாக வேலை பார்த்த பின்புலக் கதைகள் மற்றும் ”ஓற்றன்” நாவலில் வருவது மாதிரியான அமெரிக்க மாநிலம் அயோவாவைக் களமாகக் கொண்ட சிறுகதைகள் மிகப் பிரசித்தமானவை. இவை தவிர ஒரு வித intense-ஆன சிறுகதை வகையையும் அவர் தந்திருக்கிறார் என்று கூறலாம். “பிரயாணம்” என்கிற சிறுகதை இத்தகைய ஒரு வகையைச் சார்ந்தது எனலாம். பிரயாணம் கதை சொல்கிற அபத்த தரிசனத்தை “கிணறு” கதையும் சொல்கிறது. ஒரே வித்தியாசம், கிணறு கதையில் அது ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டுவிடுகிறது.

+++++

“கிணறு” கதையின் முதல் பத்தியையும், சதாசிவத்துக்கும் அவன் அம்மாவுக்கும் இடையில் நடக்கும் சிறு உரையாடலைக் கதையிலிருந்து வெட்டி விட்டால் இந்த சிறுகதையை ரஸ்கின் பாண்ட் எழுதியிருக்கிறாரோ என்று ஐயம் தோன்றலாம்.. ஆனால் அசோகமித்திரனின் தனித்தன்மையான அபத்த தரிசனம் வெளிப்படுவது அந்த முதற் பகுதி வாயிலாகத்தானே!

+++++

நகர வாழ்க்கையில் கிணறுகளைக் காண்பது வெகு அபூர்வமாகிவிட்டது. மிகச் சமீபத்தில் யாரும் பயன்படுத்தாத ஒரு கிணற்றைக் காணும் சந்தர்ப்பம் வாய்த்தது. அது ஒரு பழங்கிணறு. ஏறத்தாழ நூறு வருடங்கள் முன் நூற்றுக் கணக்கானோர் அதற்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர். துப்பாக்கி தோட்டாக்கள் துளைப்பதிலிருந்து தப்பிப்பதற்காக அப்பாவி மனிதர்கள் கிணற்றில் விழுந்து உயிர் நீத்த வரலாற்று சோகம். அந்த கிணற்றுக்குள் பார்க்கையில் காலியான பிளாஸ்டிக் புட்டிகளும் மூடிகளுமாக தெரிந்தன. தியாகிகளின் உயிர் குடித்த அந்த கிணறில் நீர் இருந்த அடையாளமே இல்லை. அக்கிணறு அம்ரித்சரில் இருக்கிறது.

+++++

துணுக்குகள்:

  1. அசோகமித்திரனின் “கிணறு” சிறுகதை குமுதம் ஜங்சன் ஜனவரி 2002 இதழில் வெளியானது.
  2. “கிணறு” சிறுகதை ”அழிவற்றது” (காலச்சுவடு பதிப்பகம்) சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றிருக்கிறது.

 

நன்றி : சொல்வனம் (http://solvanam.com/?p=31335)

well