ஒரு முடிவிலாக் குறிப்பு

மே 14, 2018

எல்லாம் சுமுகமாகச் சென்று கொண்டிருந்தன.சென்ற வருடம் ஒரு நாள் தொடங்கியது. மார்ச் மாதம். தேதி நினைவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை மோசமடையும் என்பார்களே அதை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு கிட்டியது. மோசமடைந்து கொண்டிருக்கிறது என்பது தெரிந்தாலும் என்ன செய்ய வேண்டும் என்று எத்தனை யோசித்தும் தெளிவை எட்ட முடியவில்லை. வேலைகள் ஒழுங்காகவே போய்க் கொண்டிருந்தன. எனினும் என்னை மீறி ஏதோ நடக்கிறது. என்ன அது? சில மாதங்களுக்குள்ளேயே அனைத்தும் மாறி விட்டன. என் தோழர்கள் குறுகிய இடைவெளியில் வேறு வேலைக்கு சென்றுவிட்டனர். நண்பர்கள் என்று அலுவலகத்தில் ஒருவரும் எஞ்சியிருக்கவில்லை. இருப்பவர்கள் யாரும் என் நண்பர்கள் இல்லை. அலுவலகத்தில் நண்பர்கள் தேவையில்லை எனும் பண்பாடு எப்போது நுழைந்தது என்ற பிரக்ஞையற்று இருந்திருக்கிறேன். விற்பனை சரிய தொடங்கியது. ஒரு விற்பனை மேலாளரின் உழைப்பை யாரும் பார்க்கப் போவதில்லை. உழைப்பு விற்பனை எண்ணாக மாறாத வரை வில்லாக வளைந்து எலும்புகளை முறித்துக் கொண்டாலும் யாரும் சட்டை செய்யப் போவதில்லை.

இது ஒரு தற்காலிக நிலை. விரைவில் அனைத்தும் சரியாகி விடும் என்று நம்பிக்கையை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. ஏறிக்கொண்டு போகும் வயது, சராசரியை விட சற்று அதிகமாக ஈட்டும் ஊதியம் -இவற்றையெல்லாம் விட என்னைத் துன்பப்படுத்திய மிகப் பெருங்கவலை – சரிந்து கொண்டிருக்கும் என் தன்னம்பிக்கை. பயம் வந்தால் ஒருவனின் உழைப்பு பெருகும் என்று தான் நான் இதுநாள் வரை எண்ணிக் கொண்டிருந்தேன். இதற்கு முன்னர் எனக்கு வந்த நெருக்கடிகளின் போது பயம் பெருகும் போது உழைப்பையும் முயற்சியையும் பெருக்க வேண்டும் என்ற பாடத்தை நான் கற்று வைத்திருந்தேன். ஆனால் நம்பிக்கையின்மை இம்முறை என் உழைப்பை மந்தமாக்கியது.

ஒரு சனிக்கிழமை என் தொலைபேசி ஒலித்தது. விடுமுறை நாள். வீட்டில் தான் இருந்தேன். மனம் அமைதியாய் இல்லை. போன் செய்தவர் என் அதிகாரி. போனை எடுக்க நான் தயக்கம் காட்டினேன். இந்த தயக்கம் அசாதாரணமானது. அதிகாரி என்னை உரித்து சாப்பிட்டுவிடுவாரா? ஏன் பயப்படுகிறேன்? அவர் கேட்கக் கூடிய கேள்விகளுக்கு பதில் இல்லாமல் போகாது என்ற அடிப்படை நம்பிக்கையைக் கூட இழந்திருக்கிறேன் என்ற புரிதல் என்னை தூக்கிவாரிப் போட்டது. ஏதாவது முடிவெடுக்கும் நேரம் வந்து விட்டது என்பதை உணர்ந்தேன். உதவியை நாடுவது என்று உடன் முடிவெடுத்தேன்.

நான் உதவியை நாடி ஆறு மாதமிருக்கும். புகை மூட்டம் விலகத் தொடங்கியிருந்தது. சிந்தனைக்குள் அதீத உணர்ச்சி புகும் வேகத்தை மட்டுப்படுத்தும் முயற்சியில் ஓரளவு வெற்றி பெற்றிருந்தேன். நரம்புகளினூடே அதீதமாய் சுரக்கும் பய ரசாயனத்தை கட்டுப்படுத்தும் மாத்திரைகள் வேலை செய்யத் தொடங்கியிருந்தன. ஒரு நாள் என் மன நல மருத்துவரை கேட்டேன். “ஆறு மாதம் முன்னர் எனக்கு நடந்தது என்ன?” அதற்கு அவர் சொன்ன பதில் – “ஆறு மாதம் முன்னர் என்னை சந்திக்க வந்த போது நீங்கள் Acute Depression-இல் இருந்தீர்கள்’

புறக்காரணிகளில் ஒரு மாற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை. அதே அலுவலகம். அதே சக ஊழியர்கள். அதே அதிகாரி. அதே சூழல். பயத்தின் தூண்டலில் பதற்றப்படுதலை நிறுத்தப் பழகியிருந்தேன். நகரும் தன்மை கொண்ட இலக்குகளின் இயல்பை என் அகவயமாக உற்று நோக்கத் தொடங்கியிருந்தேன். இது தான், இது மட்டும் தான் என் இலக்கு. இந்த இலக்கு மட்டும்தான் என்னை வரையறுக்கும் என்பதாக ஒற்றை இலக்கில் தொங்கிக் கொண்டிருப்பது வியர்த்தம். இலட்சியம் நல்ல விஷயம். ஆனால் அதன் மேல் முழு கனத்தையும் போட்டுப் பயனில்லை. வளைந்து செல்லும் ஒரு நதியைப் போன்று சூழலுக்கேற்றவாறு நம் ஆசைகள், லட்சியங்கள் எல்லாம் சற்று வளைந்து கொடுக்கட்டும். Physiologically, our body cannot be in perpetual state of anxiety. It has to return to its equilibrium. பிரக்ஞை பூர்வமாக சுய-அன்புடன் உணர்வு நிலைகளை manage செய்தால் கட்டுப்பாடின்றி பதற்றம், அச்சம் என்னும் உணர்ச்சிகள் பீறிடும் வாய்ப்பு குறையும். Let us Count our Blessings. முதலில் நம் மீது நாம் கருணை கொள்வோம். நம்மை பற்றிய அதிகமான எதிர்பார்ப்பின் காரணமாக நம்மை நாமே (மன ரீதியாக) வதைத்துக் கொள்வதை நிறுத்துவோம். ஆசைகள் நம்மை இயக்கத் தொடங்கிவிட்டால் நம் மீது நம் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும். நான் ஆசைப்படலாம். ஆனால் ஆசைகள் நம்மைக் கட்டுப்படுத்தலாகாது. தடைகள் இறுதி வரை தோன்றிக் கொண்டிருக்கும். வாழ்வில் இதுவரை தாண்டி வந்த தடைகளை நினைவுபடுத்திக் கொள்வோம். இதுவரை பெற்ற வெற்றிகளை எண்ணி மீண்டும் மகிழ்ச்சி கொள்வோம். நம்பிக்கைச் சுடரை இறுதி வரை அணையாமல் காப்போம்.

சென்ற வருடம் முழுதும் தன் பதற்றத்தை பாதுகாப்பின்மையை தாள முடியாமல் என்னை பந்தாடிய அதிகாரி இந்த வருடம் அமைதியாகிவிட்டார். வேறு வேலை தேடிக் கொண்டிருப்பதாக அரசல் புரசலாக பேச்சு. விரைவில் அவர் வேலையை விட்டுச் சென்று விடலாம். சூழல் மாறலாம். புதுச் சூழல் வேறு வித மாற்றங்களுக்கு வித்திடலாம். மாற்றம் இப்படித்தானிருக்கும் எனற ஒற்றைப் பரிமாணத்தில் நான் நிச்சயம் யோசிக்கப் போவதில்லை. உறுதியளிக்கப்பட்ட elevation கிடைத்துவிடும் என்ற கண்மூடித்தனமான எதிர்பார்ப்பு சென்ற வருடம் சுக்குநூறாக உடைக்கப்பட்ட பின்னர் நடந்த அகநாடகம் எனக்கு ஆசானாக இருந்து வழி காட்டும். நம் அனுபவங்கள் நமக்கான தொடரும் case-study.

+++++

மடிக்கணினியின் முகப்புத் திரையினுள் குப்பையைப் போல் குவிந்து கிடந்த மின்கோப்புகளில் ஒன்றைத் திறந்தபோது மூன்றரை வருடங்கள் முன்பு நான் எனக்காக எழுதிக் கொண்ட குறிப்பு கண்ணில் பட்டது. வாசிக்கையில் ஒரு கதை போன்று சுவாரஸ்யமாய் இருந்தது. எனக்கு நானே சிரித்துக் கொண்டேன்.

மூன்றரை வருடம் முன்னர் குறிப்பை எழுதியதற்குப் பிறகு இது என்னுடைய வாசிப்புக்கு மட்டும் என வைத்துக் கொண்டேன். வழக்கமாக அனுப்பும் இணைய இதழ்களுக்கு அனுப்பி வைக்கவில்லை. எனது வலைப்பக்கத்திலும் இடவில்லை. எழுதியதையெல்லாம் பொதுத் தளத்தில் பகிரும் வியாதி உச்சத்திலிருந்த போதும் இதை மட்டும் ஏன் பகிராமல் வைத்துக் கொண்டேன் என்று எனக்கு இன்று விளங்கவில்லை.

என்னைப் பொறுத்த வரை முழுக்க முழுக்க நிஜம் என்று நான் நினைத்துக் கொண்டிருந்த இந்தக் குறிப்பின் உள்ளடக்கம் ஒரு புனைவைப் போன்று ஒலித்தது என்பதுதான் இப்போதைய உண்மை. சுழலும் டைட்டில்கள் வந்த பின்னரும் ஒரு Bio-Pic திரைப்படத்தின் கதாநாயகப் பாத்திரம் இறக்காத வரை அப்பாத்திரத்தின் நிஜ வாழ்க்கைச் சம்பவங்கள் நிகழ்ந்தவாறிருக்கும் எனும் பிரக்ஞையை இடைநீக்கம் செய்யும் போதுதான் படத்தின் முடிவை ரசிக்க முடியும். முடிவில்லாமல் ஒரு புனைகதை நீண்டு கொண்டிருந்தால் – எத்தனை வலிமையான எழுத்தென்றாலும் – ஓரு கட்டத்தில் வாசிப்பு சலிப்பு தட்டிப் போகும்.

ஐநூறு சொற்களில் எனக்கு நானே எழுதிக்கொண்ட குறிப்பு ஒரு சிறுகதை வடிவத்தைப் பூண்டிருந்தது. எனினும், மனவியல் சிக்கலுக்கு தீர்வைத் தேடிக் கொண்டதான பாவனையில் உற்சாகத்துடன் நான் எழுதிய அந்தக் குறிப்பு தரமான சிறுகதையாக அமையுமா எனும் ஆய்வுக்குள் நுழைவதல்ல என் நோக்கம்.

வாசித்து முடித்ததும் என்ன தோன்றியது? பயணித்த பாதையின் விவரிப்பு என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. இந்தக் குறிப்பு எழுதி முடித்த பிறகு வந்த நாட்களில் தொழில் வாழ்க்கை நான் முற்றிலும் ஊகித்திருக்க முடியாத திசையில் பயணப்பட்டது.

குறிப்பினில் கூறப்பட்டபடி அக நாடகத்தின் படிப்பினை உதவியாக இருந்தது என்று சொல்ல முடியாதெனினும் சுயத்துடனான உரையாடலில் சில தெளிவான அணுகுமுறையை சட்டகத்தை (தற்காலிகமாகவேனும்) எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. குறிப்பில் பதிவு செய்த சம்பவங்கள் – குறிப்பாக எந்த சம்பவங்களைப் பற்றியும் விரிவாக எழுதவில்லை ; வெறும் கொடி காட்டலோடு சரி – நடந்த பின்னரான தொழில் வாழ்க்கை பற்றி விவரமாகச் சொல்லுமளவுக்கு அது ஒன்றும் அதிசுவாரஸ்யமானதொன்றுமில்லை. தனியார் வேலையிலிருக்கும் ஆயிரமாயிரம் மனிதர்களின் வாழ்வில் வழக்கமாக நடப்பதுதான். சாகசமோ விறுவிறுப்போ அதிகம் இல்லாது அதிகாரம் மட்டுமே ஜெயிக்கும் அக்கப்போர்தான்.

  1. உயரதிகாரி வேலையிலிருந்து நீங்குதல்

  2. தற்காலிக மகிழ்ச்சி

  3. மீண்டும் பணிவுயர்வு பற்றிய எதிர்பார்ப்பு

  4. ஆனால், அயல் நாட்டுத் தலைமையலுவலகத்திலிருந்து மாற்றலாகிவந்த ஒருவருக்கு தலைமைப் பொறுப்பு வழங்கப்படல்

  5. புதிய அதிகாரி என்னிடமிருந்த கொஞ்சநஞ்ச அதிகாரங்களையும் பறித்துக் கொள்ளல்

  6. வேலை சார்ந்த சுதந்திரங்கள் மட்டுப்படுத்தப்படல்

  7. வியாபாரக் கொள்முதல் சார்ந்த லஞ்சம் பற்றி உயர் மட்டத்துக்கு துப்புத் தரப்போக அது குறித்த அதிகார விசாரணையை என் மீதே ஏவினார் அயல் நாட்டு அதிகாரி. (பழைய அதிகாரி போலவே இவரும் தொடர்ந்து எரிச்சல் படுத்திவந்தார் ; நான் என் வேலையை விட்டுவிட்டுப் போக வேண்டும் என்ற பழைய அதிகாரியின் அதே எண்ணந்தான் இவருக்கும் இருந்தது என்று இப்போது தோன்றுகிறது.)

  8. பெருந்தொற்று ஊரடங்கின் போது அதிகாரி சொந்த நாடு சென்றுவிட தொழிற்சாலை முடங்கியது. தாய் நிறுவனத்திலிருந்து சம்பளப் பட்டுவாடாவுக்கான நிதி ஆதரவு கிடைக்கப் போவதில்லை எனும் சமிக்ஞை தெரிந்தவுடன் கடுமையான உழைப்பின் உதவியால் குறைந்த காலத்துள் வியாபாரத்தை மீட்டெடுத்து ஊழியர் அனைவருக்கும் தொடர்ந்து நேரத்தில் சம்பளம் கிடைக்க வழிவகை செய்தல். (அடுத்தவர்கள் இதை ஒரு சாதனையாக ஒப்புக் கொள்வார்களோ மாட்டார்களோ – “அதற்குத் தகுந்த கூலி உனக்கு வழங்கப்பட்டுவிட்டது” – என்னைப் பொறுத்த வரை எனது நலிந்த தொழில் வாழ்க்கையின் சிறப்பம்சங்களில் ஒன்றாக இது இருக்கப் போகிறது என்ற எண்ணம் எனக்குண்டு.)

  9. பெருந்தொற்று காரணமாக விமானங்கள் பறக்காததால் நிறுவனத்தை நிர்வகிக்க அயல் நாட்டிலிருந்து யாரையும் அனுப்ப முடியவில்லை என்ற சாக்கில் அதல பாதாள விலையில் முகந்தெரியாத முதலீட்டாளருக்கு இந்திய நிறுவனம் விற்கப்படல்.

  10. நிறுவனம் விற்கப்பட்ட அடுத்த நாள் கம்பீரமாக நடை போட்டு மீண்டும் அலுவலகத்துக்குள் நுழைந்தார் முதலீட்டாளர் அதாவது (குறிப்பில் நான் சொல்லியிருந்த) பழைய அதிகாரி. அவர் தான் இப்போது முதலாளி.

அதற்குப் பிறகு சொல்ல வேண்டிய அவசியமில்லை. இறங்குமுகந்தான். மனஅழுத்தம், மனச்சோர்வு, மனக்கவலை – இவற்றை தாற்காலிகமாகத் துறந்தேன். பகுப்பாய்வு செய்யும் அவசியம் இருக்கவில்லை. அவமதிப்புகளை அமைதியாய் சகித்துக் கொள்ளவில்லை. சொற்களைச் சொற்களால் எதிர் கொண்டேன். கேவலப்படுத்துதல்கள் மின்னஞ்சல்களில் தொடர்ந்த போது வழக்கமாக மௌனம் காக்கும் என் இயல்பில் மாற்றம் வந்தது. சரி சமமாக முதலாளியான அதிகாரிக்கு பதிலளித்தேன். நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தம் காரணமாக குறைந்த பட்சம் ஒரு வருடத்துக்கு யாரையும் வேலையை விட்டுக் கழித்து விட முடியாது என்பதால் பிடிக்காதவர்கள் எல்லாம் அவர்களாகவே வேலையை விடும் சூழலை உருவாக்கினார் அதிகாரி.

பெருந்தொற்றின் இரண்டாம் அலையின் போது ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு சிறு அறையில் கிட்டத்தட்ட முப்பது பேரை உட்கார வைத்து வியாபார தந்திரோபாயம் குறித்த உரையாடல் நடத்தியதுதான் அவர் புரிந்த ஈனச் செயல்களுக்கெல்லாம் திலகம். அந்தச் சந்திப்பிற்குப் பின் நிறுவனத்தில் பெரும்பாலானோர்க்கு கொரொனா தொற்று. இரு ஊழியர்கள் உயிரிழந்தனர். எனக்கும் கோரொனா வந்து மருத்துவமனையில் சேர்க்கும்படி ஆனது. நல்ல வேளை எனக்கு ஒன்றும் ஆகவில்லை. இதில் “விசித்திரம்” என்னவெனில் முன்னாள் அதிகாரி / இந்நாள் முதலாளியை மட்டும் கொரோனா அண்டவேயில்லை. சக ஊழியர்களின் மரணச் செய்தியைக் கேட்ட பிறகு “இது தான் அந்தக் கணம்” என்று தோன்ற மின்னஞ்சலில் என் ராஜிநாமாவை அனுப்பி வைத்தேன்.

ஏறிக்கொண்டு போகும் வயது பற்றி குறிப்பில் கூறியிருப்பேன். வாஸ்தவத்தில் அது அத்தனை பெரிய தடையாக இருக்கவில்லை. நல்ல நிறுவனத்தில், நல்ல பதவி, நல்ல சம்பளத்தோடு வேறு வேலை உடனே கிடைத்தது. என் திறமையின் காரணமாக எனக்கு கிடைத்த வேலை என்பதான என் நம்பிக்கையை – “பெருந்தொற்றுக் காலத்தில் வேலை கிடைப்பதே கடினம் ; நீ அதிர்ஷ்டக் காரன்” என்று கூறி – லேசாகக் கீறினார்கள் சில நண்பர்கள். வாயு வெளியேறியது. பெருந்தொற்றுக் காலத்தில் நிறுவனங்களின் மோசமான நிதி நிலைமை காரணத்தால் வேலையை இழந்த சில நண்பர்கள் வாயிலிருந்தும் வேறு சில துவாரங்களிலிருந்தும் உஷ்ணப்புகை.

குறிப்பை ஓர் இடத்தில் முடித்ததை போல இங்கேயே என் தொழில் வாழ்க்கைக் கதையையும் முடிக்கலாமா? சுப முடிவு போல தோற்றமளிக்கும் இதை முடிவு என்று எண்ணினால் ஒரு feel good திரைப்படம் அளிக்கும் சுகத்தை உணரலாம். இது ஒரு வளைவுதான் சாலையின் முடிவல்ல என்று எண்ணிக் கொண்டு…ஓடும் பேருந்தில் ஏறி இருக்கையில் அமரும்வரை ஏற்படும் அதிர்வைப் போல் புது வேலையில் சில மாதங்களாய்த் தள்ளாடிக் கொண்டிருக்கிறேன்.

“உன் பதவி உன் வேலை பற்றிய விவரணத்தைத் தருகிறது என்று எண்ணிவிடாதே” என்று நிறுவனத் தலைவர் முதல் நாளில் சொன்னதிலிருந்தே பிடித்தது கிலி. “மேலே உயர உயர நிறுவனத்திற்கிருக்கும் உன் மீதான எதிர்பார்ப்பும் உன்னுடைய வேலை விவரணமும் வேறு வேறாகத் தான் இருக்கும்” என்று கூடுதல் வியாக்கியானம் வேறு. நேர் முகத்தின்போது என் கீழ் நான்கு பேர் வேலை செய்வார்கள் என்று கூறப்பட்டது. அந்த நால்வரை இங்கு வந்து சேர்ந்தது முதல் தேடிக் கொண்டிருக்கிறேன். அலுவலகத்தின் எந்த மூலையில் அவர்கள் ஒளிந்திருக்கிறார்களென்று தெரியவில்லை. ஒன்றுக்கு இரண்டு உயரதிகாரிகள் எனக்கு. இருவருக்கும் நான் பதில் சொல்ல வேண்டும். ஒருவர் வாயே திறக்கமாட்டார். எதுவும் கேட்க மாட்டார். வேலை பற்றிய சந்தேகங்களுக்கு பதிலளிப்பது அவருடைய கடமையே இல்லை என்பது போல மௌனியாய் இருப்பதே அவர் வாடிக்கை. இன்னொரு அதிகாரியோ எப்போது பார்த்தாலும் “அது என்னாச்சு இது என்னாச்சு” ரகம். என்னைப் பேசவே விட மாட்டார். “உன் குதிரையைப் பிடித்து வைத்துக்கொள்” என்ற சொற்றொடரை அவரிடமிருந்து அடிக்கடி கேட்க வேண்டியிருக்கிறது. கடிவாளம் மாட்டிக்கொண்ட உணர்வுதான் எனக்கு.

“நம் அனுபவங்கள் நமக்கான தொடரும் case-study” என்ற குறிப்பின் கடைசி வரியை மூன்றரை வருடங்களுக்குப் பிறகு இப்போது படித்துப் பார்க்கிறபோது பாசாங்கு எழுத்து என்று தான் என்னை விமர்சித்துக் கொள்ள வேண்டியதிருக்கிறது. அதை உண்மையாக உள் வாங்கிக் கொண்டவனாக இருந்தால் நான் ஏன் சென்ற வாரம் (புது வேலை காரணமாக எழும்) பதற்ற உணர்வுகளைத் தணிக்க உதவியை நாட வேண்டும்?. அரை மணி நேரம் நான் சொன்னதைக் கேட்ட ஆலோசகர் – “இப்போதைய அதிகாரிகளோ முந்தைய அதிகாரியோ – உங்களுள்ளிருக்கும் சின்னப்பையன் அவர்களிடமிருந்து எதை எதிர்பார்க்கிறான் என்ற கேள்விக்கு பதில் காணாத வரை……” என்று சொல்லி நிறுத்தினார். அவர் என்ன சொல்லிவிடப்போகிறாரோ எனும் சிறு பதற்றத்தில் நான் அவரை நோக்கிக் கொண்டிருந்தேன். “வரப்போகும் சில வார அமர்வுகளில் இந்தக் கேள்விக்கான பதிலைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுவோம்” என்று சொல்லி சிறு காகிதத்தில் ஆலோசனைக் கட்டணத்தை எழுதி என் கையில் திணித்தார்.

குறிப்பை அடக்கி வைத்திருந்த மின் கோப்பினை மின் மறுசுழற்சித் தொட்டிக்குள் தள்ளினேன். இந்தக் குறிப்பு இனிமேல் தேவைப்படாது. புதிதாக இன்னொரு குறிப்பெழுதும் வேளை வந்துவிட்டது.

நன்றி : சொல்வனம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.