மகாகருணை என்னும் தியானம்

எனக்கு மிகவும் பிடித்த திக் நியட் ஹான் கவிதை. இக்கவிதையை வாசிக்கும் போது லோட்டஸ் சூத்ரா நம் நினைவில் வராமல் போகாது. அதில் வரும் ததாகதர் உரை போன்று ஒலிக்கிறது இந்தக் கவிதை. இந்தக் கவிதை வரிகளை கருணை பற்றிய தியானத்திற்கான காட்சி ஊக்கியாக மறைந்த ஜென் மாஸ்டரின் சீடர்கள் பயன்படுத்துவார்களாம்.


இன்றிரவு முழு நிலவு என்பதனால்
நட்சத்திரங்களை நம் பிரார்த்தனையில் அழைப்போம்
பளீரென்ற ஒற்றைக் குவிய மனத்தினூடே
தியானத்தின் ஆற்றல்
இப்பிரபஞ்சத்தை அசைத்துக் கொண்டிருக்கிறது.

அனைத்து வாழும் உயிர்களும்
இன்றிரவு இங்கு குழுமியுள்ளன
அச்சத்தின் சமுத்திரத்தினுள்
இப்பூமி மூழ்குதலைக் காண்பதற்கு

நடுஇரவு மணிச்சத்தம் ஒலித்தவுடன்
பத்து திசைகளிலும் அனைவரும் தம் கைகளை பிணைத்து
மகாகருணை எனும் தியானத்திற்குள் நுழைவர்

வாழ்வின் காயங்களைத் துடைக்கும்
தூய நீரைப் போன்று
இதயத்திலிருந்து கருணை சுரக்கிறது

மன மலையின் உயரங்களிலிருந்து
புத்துயிர் தரும் தண்ணீர்
அருவியாகப் பொழிந்து
நெல் வயல்கள் ஆரஞ்சுப் புதர்கள் வழியே
பாய்ந்து செல்லும்

விஷப்பாம்பொன்று
இவ்வமுதத்தின் ஒரு துளியை
ஒரு புல் தாளின் நுனியிலிருந்து பருகுகிறது
அதன் நாவிலிருந்து
விஷம் மறைந்துவிடுகிறது

மாரனின் அம்புகள்
வாசமிகு மலர்களாக மாற்றம் கொள்கின்றன

நோய் நீக்கும் நீரின்
அற்புதச் செயல் திறன் –
புதிரான பரிமாற்றம்!
ஒரு குழந்தை அந்தப் பாம்பை
அதன் கள்ளங்கபடமற்ற கரங்களில் ஏந்துகிறது

புராதன தோட்டத்தில்
இலைகள் இன்னும் பச்சை
பனி மீது சிரிக்கும்
மின்னும் கதிரொளி
இன்னமும்
புனிதவூற்றின்
கிழக்கு நோக்கிய பாய்ச்சல்

அவலோகிதனின் கையிலிருக்கும்
சிறு கிளையோ
அல்லது என் இதயமோ
நோய் தீர்க்கும் நீர் ஒன்றே

இன்றிரவு
அனைத்து ஆயுதங்களும்
நம் காலடியில் வந்து வீழும்
தூசாக மாறும்

ஒரு மலர்
இரு மலர்கள்
ஒரு கோடி மலர்கள்
பச்சை வயல்களில் தோன்றும்

என் பரிசுத்தக் குழந்தையின் இதழ் சிரிப்புடன்
மீட்பின் வாயில் திறக்கும்

திக் நியத் ஹான் – 1967

அன்றைய நானும் இன்றைய அவனும்

கல்லூரி கால உயிர் நண்பர்கள்
பழைய பெண் சினேகிதிகள்
அதிகம் சந்திக்காத நெருங்கிய உறவினர்கள்
அனைவரும்
இப்போதும்
என்னை நேசிப்பதாகவே சொல்லுகிறார்கள்
கல்லூரி கால என் நெற்றித் திருநீறையும்
குடும்ப விழாக்களில் பாடிக்காட்டிய சாஜன் திரைப்படப்பாடலையும்
நன்னூல் யாப்பிலக்கண விதிகளை நான் விளக்கிய நாட்களையும்
அடிக்கடி நினைவு கூர்ந்தவாறே!
அவர்கள் அறிந்த நான்
இன்னும் இருக்கிறானா?
அவர்கள் அறியாத அவன்
இங்கிருக்கிறேன்

இந்தியா எனக்கு என்ன?

இந்தியா எனக்கு என்ன?

– நொடிக்கு நொடி மாறும் அழகிய ஓவியம்
– சிறு குறை கொண்ட என் மகன்
– தொடர் வெற்றி காணும் என் மகள்
– பல சத்தங்களை எதிரொலிக்கும் பள்ளத்தாக்கு
– தாகங்கொண்ட நெஞ்சில் வந்து வீழும் ஒரு துளி
– சாலையோர வாக்குவாதம்
– ஒவ்வொரு வரியும் வெவ்வேறு மொழியில் எழுதப்பட்ட கவிதை
– முன்னூறாயிரம் கடவுளர் உறையும் பிரதேசம்
– சில சமயம் விமர்சனத்துக்குள்ளாகும் பிரதி
– மேடு பள்ளங்களாலான அழகிய மலைப்பாதை
– பெரும்பாறைகளைத் தாவி நகரும் காட்டாறு
– நெடிதுயர்ந்த கோபுரத்தின் துளைகளில் ஒதுங்கி நிற்கும் பறவைக் கூட்டம்
– பிரகாரச் சுவர்களில் வீசும் புராதன வாசனை
– நகர நதிக்கரையில் தேங்கும் மாசு நுரை
– ரூஃப் டாப்பிலிருந்து தெரியும் குடிசைக் கடல்
– பணி நிலையங்களின் கீபோர்ட் கீச்சு
– ராம் – ரஹீமீன் ஊடல்களும் கூடல்களும் நிறைந்த முடிவற்ற நாடகம்
– குல்லாக்களின் டர்பன்களின் நிறம் படிந்த நெற்றிகளின் டிசைன் கலவை
– வித்தியாசங்களுக்கு பெயரளித்து கூறு செய்யப்பட்டு நடக்கும் அணிவகுப்பு.
– இன்னும் நிறைய…..
மிக முக்கியமாக என் சுவாசம்

அனைவர்க்கும் குடியரசு தின நல் வாழ்த்துகள்

இது ரியோகன் எழுதியதில்லை

கண்கள் மூடிப் படுத்திருக்கிறேன்

ஏதேதோ நினைவுகள்

அடுத்த நாள் பற்றிய எண்ணங்கள்

பகலில் நடந்தவை பற்றிய அசை போடல்கள்

விடியச் சில மணி நேரங்கள்

இத்தருணத்திற்கு மீண்டு இரவைப் பருகினேன்

மூடிய கண்களில் உறக்கம் படிந்தது

நீர் நகரும் சத்தம் கேட்டவாறிருந்தது

யாரோ எதுவோ கால் கழுவிக்கொண்டது

நீரளையும் ஓசை

கரை தட்டிய கால்கள்

தரையில் தள்ளிவிடும் நீர்

மனதில் வந்து தேங்குகிறது

மனம் சுத்தமாகட்டும்

புதுக்காலையில் புது மனம்

1.44 AM Fri 21 Jan

காலம் அவர்களை மாற்றிவிடுமுன் – கவாஃபி



பிரிந்தபோது இருவருக்கும் மிக வருத்தம்
இருவருமே அதை நாடவில்லை
நிலவிய சூழல்தான் காரணம்
பிழைத்தலுக்கான அவசியம் ஒருவரை
வெகுதூரம் துரத்தியிருந்தது
– அமெரிக்காவுக்கோ கனடாவுக்கோ
அவர்களின் காதல் முன்பு போலிருக்கவில்லை
ஈர்ப்பு மெதுவாக குறைந்து கொண்டு வந்தது
ஈர்ப்பு வெகுவாக குறைந்தும் விட்டது
எனினும், பிரிவிற்கு அது காரணமில்லை
சூழல்தான் காரணம்- ஒரு வேளை
அவர்களின் உணர்வு முழுக்க மறையுமுன்
காலம் அவர்களை முழுதாக மாற்றிவிடுமுன்

ஊழானது கலைஞனாகத் தோன்றி
இருவரையும் பிரித்திருக்கலாம்
ஒருவருக்கு மற்றவர் என்றுமே
இருபத்தி நான்கு வயது அழகான இளம் வாலிபராகவே நினைவில் நிற்கவேண்டுமென்பதற்காக

தாயமுருட்டலானார்

விதிகள் என்னென்று தெரியாத
விளையாட்டில்
அன்னை தாயமுருட்ட
தோல்வியுற்ற பரமன்
வெகுண்டெழுந்தார்

துணையற்று
பித்துற்று
தனிமையில்
தவித்திருந்தார்

இன்னும் தவிக்கட்டும்! –
புன்சிரிப்புடன்,
காத்திருக்காதவர் போன்று
அன்னை
நடித்திருந்தார்

தனிமைத்தீயின்
உக்கிரம் பொறுக்காது
தவத்திலாழ்ந்தார் சிவன்
நெடுநாள்
தவத்துள்ளிருந்தவருக்கு
ஒருநாள்
தானாக நகைப்பு

சற்று தூரத்தில்
இமவான் மகளாக
அன்னை
தம் தோழிகளுடன்
பூவனம் நோக்கி வந்து
கொண்டிருந்தார்

அன்னை இப்போது
மறந்து போயிருந்த
தாய விளையாட்டை
நினைவு கூர்ந்த பரமனின்
அகப்புன்முறுவல்
தொடர்ந்தது

“ஒவ்வொரு முறையும்
தாய விளையாட்டை மறந்துவிடுகிறாள் இவள்
எனினும்
ஒவ்வொரு முறையும்
இவளே வெல்கிறாள்”

அப்போது
அவர் மீது
எய்யப்பட
கரும்புவில்லொன்று
தயாராக இருந்தது