ஒரு தத்துவக் குறிப்பு – நட்பாஸ்

சிறப்புப் பதிவு : நட்பாஸ் 

திரு கணேஷ் வெங்கட்ராமன் அவர்களுக்கு,

சொல்வனம் இணைய இதழில் வந்த உங்கள் ‘ஒரு முடிவிலாக்  குறிப்பு’ (https://solvanam.com/2021/11/28/ஒரு-முடிவிலாக்-குறிப்பு/) படித்தேன். புனைவா வாழ்க்கைக் குறிப்பா தெரியவில்லை, ஆனால் அதன் வலிமை என்னையும் கொஞ்சம் வாழ்க்கையை பற்றிச் சிந்திக்கத் தூண்டியது. இதோ அளிக்கிறேன், ஒரு தத்துவக் குறிப்பு.

நட்பாஸ் 

நம் சிக்கல்களுக்கு நம்மைத் தவிர வேறு யாரும் தீர்வு காண முடியாது. நம் பிரச்சினைகள்தான் நாம், இவற்றால்தான் நாம் நாமாய் இருக்கிறோம். எந்த ஒரு விஷயத்திலும் தனி நபராய் என் பிரச்சினை வேறு யாருக்கும் அதே மாதிரி இருக்க வாய்ப்பில்லை. சிலந்தி, வலை பின்னுவது போல் உணர்ச்சிகளாலும் எண்ணங்களாலும் செயல்களாலும் நம்மைச் சுற்றி நாமே கண்ணுக்குத் தெரியாத இழைகளால் ஒரு வலை பின்னிக் கொள்கிறோம். துரதிருஷ்டவசமாக, நாமே அதில் சிக்கிக் கொள்ளவும் செய்கிறோம். (நான் சொல்வதில் நம்பிக்கை இல்லை என்றால் சிலந்தி வலை அதன் மனதின் பருண்ம வடிவம் என்று சொல்லும் இந்தக் கட்டுரையை பாருங்கள் – The Thoughts of a Spiderweb, Quanta Magazine https://www.quantamagazine.org/the-thoughts-of-a-spiderweb-20170523/)

நாம் பின்னிய வலைகளில் சிடுக்கு ஏற்படுகிறது என்றால், அதற்கு காரணம் நாம்தான், அது நம்மில் ஒரு அங்கமும்கூட. வெளியிலிருந்து பார்க்கும் ஒருவருக்கு அதன் வேர்கள் நம் இதயத்தோடு பிணைந்து நம்மில் ஒன்றியிருப்பது தெரிய வாய்ப்பில்லை. அவர் எவ்வளவு நியாயமாக பேசினாலும், அவரது தர்க்கம் எத்தனை வலுவானதாக இருந்தாலும், நம்மை அது காப்பாற்றக் கூடியதல்ல. நம் மனதுக்கு நியாயம் என்று தோன்றுவது, நம்மைச் சரியான திசையில் கொண்டு செல்லும் என்பது உறுதியல்ல. அறிவுரைகள் சரியாகவே இருந்தாலும் அது தீர்வு காண உதவாது. வேறொருவர் அப்படிச் செய்ய முடியும், ஆனால் என்னைப் போன்ற ஒருவனுக்கு இதில் என்ன தவறு, நம்மால் முடிகிற வேலைதானே என்று இருக்கும், இருந்தாலும் ஒன்றும் பண்ண முடியாது. காரணம், அவர் வேறு மாதிரி, நான் வேறு மாதிரி.

எனவே யாராக இருந்தாலும் இந்த புரிதலுடனும் தன்னடக்கத்துடனும்தான் நாம் தீர்வு சொல்ல வேண்டும்.

உலகில் வெற்றி பெற்றவர்களைப் பார்க்கிறோம் – விஞ்ஞானிகள், பெரும்பணக்காரர்கள், நடிகர்கள், இசையமைப்பாளர்கள், அரசியல்வாதிகள். உலகில் தலை சிறந்த அறிவு, மிக அதிக பணம், ஆகச் சிறந்த புகழ், அதிகாரம், எதுவும் போதுமானதாக இல்லை. இவர்கள் வாழ்க்கையைப் பார்த்தால் மிக மோசமான மன வேதனை, காயங்கள், செயல்கள் இருக்கும். குடும்பத்தை கவனித்துக் கொள்ள மாட்டார்கள், மற்றவர்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள், மணமுறிவு, போதைப் பழக்கம், தற்கொலை. வெற்றியோ, அதன் பயன்களோ, உபகரணங்களோ மனதுக்கு மகிழ்ச்சியோ ஆறுதலோ தருவதற்கு தம்மளவில் போதுமானதாக இருப்பதில்லை.

அதே சமயம் தெருவில் நடைபாதை பிச்சைக்காரன் பின்னால் கூட ஒரு நாய் போகிறது, அவனும் அதற்கு ஏதோ ஒன்றை சாப்பிடப் போடுகிறான். மனதுக்கு நல்லது எது என்று பார்த்தால், தன்னலமின்மை என்றுதான் தோன்றுகிறது. நான் எனது என்று எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பதற்கு மாறாக, நம்மைச் சுற்றி இருப்பவர்கள் வாழ்வை ஏதோ ஒரு வகையில் இன்னும் நன்றாக வாழத்தக்க ஒன்றாய் மாற்ற முயற்சி செய்பவர்கள். அவர்களுக்கும் மன அழுத்தம் வரலாம், அச்சம், அவநம்பிக்கை ஏற்படலாம். ஆனால் அவர்கள் குடும்பத்தை தவிக்க விடுவதில்லை, போதைக்கு அடிமையாவது இல்லை, தற்கொலை செய்து கொள்வதில்லை.

அகத்தின் மீது ஒரு போர்வை போல் இருப்பது சுயம். ஒவ்வொருவரும் அதை ஒவ்வொரு வகையில் இறுக்கமாய் வைத்துக் கொள்கிறார்கள். ஒரு சிலரே அதை மூச்சு முட்டும் அளவு இழுத்துப் போர்த்துக் கொள்கிறார்கள், கஷ்டப்படுகிறார்கள். இந்த விஷயத்தில் அதை விட அபூர்வமானது நிர்வாணம். இந்த அபூர்வ மனிதர்கள் எல்லாம் பிறருக்கு என்று இருக்கிறார்கள், ஒருவன் பிறருக்கு தருவதை எல்லாம் தனக்கே தந்து கொள்கிறான் என்று புதிர் போடுகிறார்கள்.

பிறருக்காக வாழ்பவர்கள் வாழ்வில் எத்தனை நெருக்கடி இருந்தாலும், எத்தனை அவலம் இருந்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. அவர்கள் எவ்வளவு வைத்திருக்கிறார்கள் என்பதைக் கொண்டு அதை அளவிட முடியாது. எவ்வளவு கொடுக்கிறார்கள், என்னவாக இருக்கிறார்கள் என்பதுதான் அவர்கள் வாழ்வின் அர்த்தம். ஒரு பணக்காரனைப் பற்றி, “He is worth Billions,” என்கிறோம். ஆனால் ஒரு அம்மா அல்லது அப்பாவைப் பற்றி, அவர்தான் குடும்பத்துக்கு எல்லாம் என்கிறோம். யார் மதிக்கிறார்களோ இல்லையோ, இவர்கள் வண்டி இழுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நாம் என்ன செய்தோம் என்பது அல்ல, நாம் என்ன செய்கிறோம் என்பதுதான் இறுதி அளவை. செய்து முடிந்தவுடன் ஒன்றுமில்லை என்று கையைத் தட்டி விட்டுக் கொண்டே போக வேண்டியதுதான்.

செய்ததை வைத்துக் கொண்டிருப்பது, செய்ய வேண்டியதைப் பற்றிய கவலைகளை வளர்த்துக் கொண்டிருப்பது, வாழ்க்கையைச் சிக்கலாக்குகிறது. நம்மையே சிக்கலான ஆட்கள் ஆக்குகிறது. இதற்கு மாறாக, இப்போது என்ன இருக்கிறதோ, அதிலிருந்து பிறருக்கு கொடுப்பது, நம்மை விடுவிக்கிறது. என்ன செய்வது பிடித்திருக்கிறதோ, எது சுலபமாக இருக்கிறதோ, அதை நன்றாகச் செய்வது என்று இருக்கும்போது எல்லாம் சரியாய்த் தொடர்கின்றன. எனக்கு கணிதம் பிடித்திருக்கிறது, கவிதை பிடிக்கிறது என்றால் நான் கணித மேதையாகவோ நோபல் கவிஞனாகவோ ஆகாதபோதும், அதனால் ஒரு பைசா பிரயோசனப்படாதபோதும், என் ரசனை, என் நேசம், நான் கற்றுக் கொண்டது என் வாழ்வை ஏதோ ஒரு வகையில் வளமைப்படுத்துகிறது.

இதை எல்லாம் இன்னொருத்தார் எனக்கு வேறு சொற்களில் சொல்லலாம், ஆனால் உண்மையை நான் என் கண்களால் காண வேண்டும், என் இதயம் கொண்டு நான் உணர வேண்டும். அதுதான் உள்ளே இறங்கும், எனக்கு உதவும். பிறர் சொல்வதல்ல, நானே கற்றுக் கொள்வது.

நாமே இவ்வுலகம். நமதே இவ்வுலகம். நாம் இவ்வுலகின் நாயகர்கள். நம்மைப் பற்றி மட்டுமே நினைத்து இதை நாசமாக்கிக் கொள்ளலாம், நம்மைக் குறைத்துக் கொண்டு பிறருக்கு இடம் கொடுத்து, இதை நல்லதாக்கிக் கொள்ளலாம். பெரிய பெரிய விஷயங்கள் செய்ய வேண்டும் என்பதில்லை. குறுகிய மானப்பான்மையிலும் உணர்வின்மையிலும் நம்மையொத்த இந்த தன்னலம் கொண்டு உழலும் அவல மனிதர்களுக்கு நாம் செய்யும் ஒவ்வொரு சிறிய நன்மையும் மாற்றம் அளிக்கும்.

இந்த அர்த்தத்தில்தான் பிறருக்கு கொடுப்பதெல்லாம் நமக்கே கொடுத்துக் கொண்டதாகிறது. நம் வாழ்வு இவ்வாறுதான் செழுமையடைகிறது. பணத்தால் அல்ல, புகழால் அல்ல, அறிவால் அல்ல, சக மனித உறவுகளில்தான் வாழ்வின் மதிப்பு கூடுகிறது. இதயத்தில் என்ன இருக்கிறது, அதிலிருந்து என்ன வருகிறது என்பதுதான் கேள்வி. ஏனெனில், இதயம்தான் காயப்படுகிறது, தனிமையை உணர்கிறது, வலியால் துடிக்கிறது. பிறரை இணைத்துக் கொள்வதில், இன்னும் விரிவதில், ஆழப்படுவதில் அது குணமடைகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.