‘இது காடு;நகரமல்ல’

கான்டர் எனப்படும் திறந்த லாரியில் ஏறி வனத்துக்குள் சென்றோம். எங்களது லாரியில் பத்து-பன்னிரண்டு சுற்றுலாப்பயணிகள் இருந்தனர். மூன்றுமணி நேரம் தேடினோம். நீர்நிலைகளுக்கருகே காத்திருந்தோம். குரங்குகளும் மான்களும் இடும் எச்சரிக்கை ஒலிக்குப் பின்னர், ஒலி வந்த திசையில் காத்திருந்தோம். புலிகளின் பாதச்சுவடுகளைத் தேடினோம். ஈரப்பதமாக இருந்த இடத்தில் அதன் காலடித் தடங்களைப் பார்த்தோம். இரண்டு நாட்களுக்கு முன்னர் புலி அங்கு உலவிய தடம் அது என்றார், வாகனத்தைச் செலுத்திய முன்னாள் ராணுவ வீரர். அந்தத் தடம் பெண் புலியினுடையதாக இருக்கலாம் என்றும் சொன்னார். ஆண்புலியின் தடம் பெண்புலியின் தடத்தைவிடப் பெரிதாக இருக்கும் என்றார்.

வாகன ஓட்டியுடன் ஒரு நடத்துநரும் இருந்தார். சஃபாரி நடத்துநரின் பெயர் என்னவென்று கேட்க மறந்துவிட்டேன். நேர்த்தியான ஆங்கிலத்தில் (லேசாக எட்டிப் பார்த்த ராஜஸ்தானி கொச்சை மொழியில்) பேசினார். வேளாண்மைத் துறையில் முதுகலைப் பட்டப்படிப்பு முடித்திருந்த அவருக்கு தர்தி என்ற பெயர் பொருத்தமாக இருக்கும்.

ஓரிடத்தில் வண்டியை நிறுத்திப் புலி தென்படுகிறதாவென நோக்கிக்கொண்டிருந்தோம். சுல்தானாவின் பகுதியில் வண்டியை நிறுத்தியிருப்பதாக தர்தி சொன்னார். சுல்தானா இளம் பெண்புலி. சமீபத்தில் மூன்று குட்டிகளை ஈன்றிருக்கிறது.

வேறோர் இடத்தில் நாங்கள் காத்திருந்தபோது சுல்தானாவின் சகோதரி நூரியின் பகுதியை அடைந்திருந்தோம். நூரிக்கும் சுல்தானாவுக்கும் அன்னை உண்டு. அதன் பெயர் நூர். நூர் முதுமையை எட்டிவிட்டதாம். அதற்குப் பதினாறு வயதாகிறது. இதில் குறிப்பிடத்தகுந்த அம்சம் – இரண்டாம் குட்டி நூரி அன்னை நூரைத் துரத்தி அன்னையின் பிரதேசத்தைக் கைப்பற்றிக்கொண்டதுதான்.

வாழும் பெருங்காட்டில் தனக்கென ஒரு பகுதியை நிர்ணயித்துக் கொண்டு தனித்து வாழும் புலி ஒரு தனிமை விரும்பியாகும். அன்னை, குட்டி எனத் தம் உறவு அனைத்திலிருந்தும் விலகி நிற்கும் பிராணி. குட்டிகள் தாயிடம் இரண்டு அல்லது இரண்டரை வருடங்கள் இருக்கும். அதன் பின்னர், குட்டி அன்னையைத் துரத்திவிடும் அல்லது தாய் குட்டியைத் துரத்திவிடும். தானிருக்கும் பிரதேசம் தன்னுடையதாய் மட்டும் இருக்க வேண்டும் என்று கருதுவது புலிகளின் மரபணுவில் உள்ளது. மரத்தின் மீது பற்குறிகளைப் பதிப்பது, மலம் – மூத்திரம் போன்றவற்றால் குறிப்பது எனத் தன்னுடைய பிரதேசத்தை வரையறை செய்யும். பெண் புலி, மரங்களின் மீது தன் மூத்திரத்தைத் தடவி அதன் வாசனையைப் பரப்புவதன் மூலம் ஆண் புலிகளைப் புணர்வதற்கென அழைக்கும்.

புள்ளிமான்களும் கலைமான்களும் ஏராளமாய்ச் சுற்றித்திரிந்துகொண்டிருந்தன. வடஇந்தியச் சமவெளி சாம்பர் மந்திகளும் நிறைய கண்ணில் பட்டன. மானுக்கும் மந்திக்கும் இருந்த நட்புறவைப் பற்றி அதிகம் குறிப்பிட்டார் தர்தி. மரத்தின் மேல் உட்கார்ந்திருக்கும் மந்தி, புலியின் நடமாட்டம் இருந்தால் உடனடியாகச் சத்தம் கொடுக்குமாம். மரத்தினடியில் மேய்ந்து கொண்டிருக்கும் மான்கள் மந்தியின் சத்தத்தைக் கேட்டவுடன் ஓடத் தொடங்கிவிடுமாம். காட்டு பெர்ரி மரங்களில் பழுத்திருக்கும் அதன் பழங்களைத் தரையில் வீசியெறிந்து மான் நண்பர்களுக்குத் தின்னத் தருமாம்.

இன்னோர் இடத்தில் காத்திருந்தபோது பாசி படிந்திருந்த நீர் நிலைக்கருகே இருந்த சேற்று மண்ணில் புரண்டு கொண்டிருந்தது கறுப்பு நிறமுள்ள ஓர் ஆண் கலைமான். அதற்குப் பக்கத்தில் இருந்த பாறாங்கல்லில் இரண்டடி நீளமான வெளிறிப் போன முதலையொன்று சூரியக் குளியல் எடுத்துக் கொண்டிருந்தது. குளிர்காலத்தில் உறக்க நிலைக்குச் சென்றுவிடும் பாம்புகள்போல, முதலைகள் குளிர்காலத்தில் சூரிய வெளிச்சத்தில் நாட்கணக்கில் படுத்துக்கிடக்குமாம்.

புள்ளிமான்களைப் பார்க்கப் பாவமாய் இருந்தது. நாங்கள் புலியின் வரவுக்காக ஏங்கி மான்களை ஆபத்துக்குள்ளாக்குகிறோமோ என்ற குற்றவுணர்வுடன் பார்த்துக்கொண்டிருந்தோம். வயது முதிர்ந்த ஆண் கலைமான்தான் புலிக்குப் பிடித்தமான இரை என்றார் தர்தி. ஓர் ஆண் கலைமானை வேட்டையாடினால் நான்கு நாட்களுக்குப் புலி மீண்டும் வேட்டைக்குச் செல்ல வேண்டியதிருக்காதாம். தர்தி இதைச் சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தில் சரியாக ஒரு கறுப்புக் கலைமான் எங்கள் வாகனத்துக்கு மிக அருகில் நின்றிருந்தது. அதன் கொம்புகள் நன்கு முதிர்ந்திருந்தன. நீட்டிக்கொண்டிருந்த மரக்கிளைகளைத் தன் கொம்புகளால் வளைத்துக் கடந்துசெல்லத் தொடங்கியது. கொம்புகள் உடைந்துபோய்விடுமோ என்று நான் பயப்பட்டேன். உடைந்தாலும் கொம்பு மீண்டும் வளரும் என்றார் தர்தி.

மான்களை எளிதில் புலிகள் வேட்டையாடிவிட்டால் காட்டில் மான்களின் எண்ணிக்கை குறைந்துவிடாதா என்ற குழந்தைத்தனமான கேள்வியைத் தர்தியிடம் கேட்டேன். உணவுச்சங்கிலியெனும் பெருங்கருத்தின் மிகச் சிறு அறிமுகத்தை எனக்களித்தார் தர்தி. 1700 கிலோ சதுர மீட்டர் பரப்பளவுகொண்ட ரண்தம்போர் காட்டில் 75 முதல் 80 புலிகள் வாழ்கின்றன. இருபது சதுர கிலோ மீட்டருக்கு ஒரு புலி. வேட்டையாடும் ஒவ்வொரு தடவையும் புலி வெற்றிபெறும் எனில் மான்களோ பிற மிருகங்களோ எஞ்சியிராது. அப்படி இரைகள் அனைத்தும் மடிந்துவிட்டால் புலிகள் எப்படி உயிர் வாழும்? Bio-diversityயை நிலைநிறுத்துவதில் இயற்கையாற்றும் பங்கை விவரித்தார் தர்தி. பத்துமுறை முயன்று ஒரு வெற்றியும் பெறாமல் இரையில்லாமல் குகைக்குப் பட்டினியுடன் திரும்பும் புலி பற்றிப் படித்த ஒரு சிறுகதை நினைவில் வந்தது. அதன் தலைப்பு ஞாபகமில்லை. வேட்டையாட வரும் மிருகத்திடமிருந்து காத்துக்கொள்ள சாது மிருகங்களுக்கு இயற்கை அளித்திருக்கும் வெகுமதிகள் அவற்றைப் பலமுறை காப்பாற்றிவிடுகின்றன. பசியுடன் பதற்றத்தையும் சுமந்து திரியும் புலியை எளிதில் கற்பனைசெய்துகொள்ள முடிந்தது. புலியின் வேட்டையில் சிக்கி உயிர்துறக்கும் மானைத் தூரத்திலிருந்து பார்க்கும் பிற மான்களுக்கும் பதற்றம் தொற்றலாம்.

கோரைப்புற்கள் அசைவதான பரபரப்பு ஏற்பட்டது. கேன்டர்களும் ஜிப்ஸிக்களும் ஒரே இடத்தில் நின்றன. “அங்கு தெரிகிறது அங்கு தெரிகிறது” எனும் சத்தங்கள்! கண்ணை வெறித்துக்கொண்டு சொன்ன திசையில் நோக்கினேன். புற்கள் அசைவது தெரிந்தது. பிராணி கண்ணில் படவில்லை. பக்கத்து கான்டரில் இருந்த அயல் நாட்டுச் சுற்றுலாப்பயணி பைனாகுலரை வைத்து உற்றுநோக்கிக்கொண்டிருந்தார். அவர் முகத்தில் திருப்தியில்லை; புன்னகையில்லை. புலி தெரிந்திருந்தால் ஒரு புன்னகை மலர்ந்திருக்கலாம். ஜிப்ஸி வாகனங்கள் நகர்ந்தன. எங்கள் ஓட்டுநருக்கு அங்கிருந்து கிளம்ப மனசு வரவில்லை. “அந்தக் கோரைப்புல்லுக்குப் பின்னால் நிச்சயம் புலிக்குட்டி இருக்கிறது” என்கிறார் ஓட்டுநர். ஐந்து நிமிடங்களாயின. கோரைப்புல்லில் இருந்து எதுவும் வெளியே வரவில்லை. ஏமாற்றத்துடன் நகர்ந்தது எங்களது வாகனம்.

காட்டுக்கு நடுவே மலசலம் கழிக்க சில அறைகள் கட்டப்பட்டிருந்தன. அதற்கருகே வாகனங்கள் சில நிமிடங்கள் நின்றபோது பறவைகள் வந்து பயணிகளின் கைகளிலும் தரைகளிலும் அமர்ந்து விளையாட்டுக் காட்டின. அழகான அடர்-மஞ்சள் நிறப் பட்டையுடன் பறவைகள் பார்க்க மிக வசீகரமாக இருந்தன. என் தலைமீது வந்தமர்ந்த ஒரு பறவை நான் தலைகுனிந்தபோது முதுகில் முத்தமிடுவது போன்று குத்திவிட்டுப் போனது. அதனை உள்ளூரில் புலிப்பறவை என்று அழைப்பார்கள் என்றார் தர்தி. காக்கை இனத்தைச் சார்ந்த புலிப்பறவையின் ஆங்கிலப்பெயர் -ரூஃபஸ் ட்ரீபி.

இலேசாக இருட்டத் தொடங்கிற்று. புலிகள் பகல்-தூக்கத்திலிருந்து விழித்து உலாவத் தொடங்கும் நேரம். சிறிய நீர்நிலைக்கருகே காத்திருந்தோம். மாமிச உணவுண்ணும் பெரும்பாலான மிருகங்கள் பொதுவாக இரவில் உலவுபவை. மான் போன்று தாவரவகைகளைத் தின்னும் விலங்குகள் சாயங்காலப் பொழுதுகளில் தூங்கச் செல்பவை எனும் சுவாரசியமான பார்வையைப் பகிர்ந்தார் தர்தி.

புலிகள் தலைகாட்டுவதாயில்லை. வண்டியைத் திருப்பிக் காட்டுப்பகுதி எண் ஒன்றை நீங்கும் தறுவாயில் கிட்டத்தட்ட முந்நூறு மீட்டர் தொலைவில் மாலைச் சூரியனின் ஒளியில் மஞ்சள் தோல் மின்ன எங்களுக்கு முதுகு காட்டிச் சென்றுகொண்டிருந்தது அம்மிருகம். மற்றவர் சொல்லாமலிருந்தால் அதைப் புலி என்று நான் எண்ணுவதற்கே வாய்ப்பு அதிகம். “அதோ பாருங்கள் சிறுத்தை!” என்றார். சிறுத்தையின் தோல்களில் புலிபோன்ற வரிகள் இருக்காது. புலியை விடச் சற்றுப் பலங்குறைந்த மிருகம். புலியைப் பார்க்காத ஏமாற்றத்துடன் திரும்பிக்கொண்டிருந்ததாலோ என்னமோ “சிறுத்தைகளைப் பார்ப்பது புலிகளைப் பார்ப்பதைவிட அபூர்வம்” என்றார் தர்தி.

ரண்தம்போர் தேசியப்பூங்காவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 114. புலிகளின் எண்ணிக்கையைவிட அதிகம். புலிகளைக் காட்டிலும் சிறுத்தைகள் கண்ணில் தென்படாமல் இருப்பதில் தேர்ந்தவை.

“புலியைப் பார்க்கப் போனேன். சிறுத்தை பார்த்து வந்தேன்” என்று முனகிக்கொண்டிருந்தபோது கான்டர், தேசியப் பூங்காவின் வாயிலை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தது. எங்களுக்கு முன் சென்றுகொண்டிருந்த ஜிப்ஸியில் இருந்த இளம்பெண்ணொருத்தி சிப்ஸ் பாக்கெட்டைத் தூக்கியெறிந்தாள். எங்களது வண்டியின் ஓட்டுநர் – முன்னாள் ராணுவ வீரர் உடனடியாக பிரேக் போட்டு நிறுத்தினார். “அம்மா, அக்கா”க்களைச் சேர்த்துச் சில வினைச்சொற்களை உச்சரித்தவாறே அந்த பிளாஸ்டிக் பாக்கெட்டைப் பொறுக்கியெடுத்தார். “இது காடு… மிருகங்கள் வாழும் பகுதி… நகரமல்ல” என்று கத்திச் சொன்னார்.

நன்றி : காலச்சுவடு

Kashmir’s Transition to Islam – by Ishaq Khan – விமர்சனம்

வரலாற்று மூலங்களைத் திறந்த மனதுடன் அதே சமயம் விமர்சன பூர்வமாக அணுகுதல் அதிமுக்கியம். இல்லையேல் வெறும் விவாதமாக முடிந்துவிடக்கூடும். கருத்து நிலைகளுக்கேற்றவாறு சாயும் அணுகுமுறை வரலாற்றாளர்களின் பலவீனமாகக் கருதப்படும். என்னுடைய பார்வையில், இஷாக் கான் அவர்களின் Kashmir’s Transition to Islam ஒரு பலவீனமான நூல் என்றே சொல்வேன்.

இஷாக் கான் இரண்டு பார்வைகளை முன் வைக்கிறார். (1) Syncretism – அதாவது சமயங்களின் சேர்ந்தியங்குதல் – எனும் கருத்தை அவர் நிராகரிக்கிறார். இஸ்லாம் கஷ்மீரின் புராதன கலாசார அம்சங்களை ஏற்றுக் கொண்டதை மாறும் முறை என்று வர்ணிக்கிறார். இஸ்லாமின் இறுதி இலக்கு “ஷரியா” எனப்படும் இஸ்லாமிய உயர் கொள்கைகளே என்கிறார். (2) நந்த் ரிஷியும் அவருக்குப் பின் வந்த ரிஷிகளும் கஷ்மீரியத் என்ற அடையாளத்தை இஸ்லாத்தின் அடிப்படைச் சித்திரத்தின் பின்ணனியில் வரைய வந்தவர்கள்.

இரண்டு பார்வைகளும் பிரச்னைக்குரியவை. கஷ்மீர தேசியவாதத்தின் அடிப்படை முழுவதையும் “இஸ்லாம்” எனும் ஒற்றை அடையாளத்தில் சுருக்க நினைத்த குழுக்களின் குரல் வலுத்த (“அயல் நாட்டு உதவியுடன் வலுக்க வைக்கப்பட்ட”) தொண்ணூறுகளில் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் – கஷ்மீரக் கலாசாரத்தின் சிறப்பியல்பு என்று கஷ்மீரின் தற்கால சாதாரண நபர்களும் பெருமிதங்கொள்ளும் ஒன்றை மறுக்கிறது. சமயங்களின் ஒருங்கிணைவு என்ற ஒன்றும் இல்லை. பிராமணர்களின் சாதீயத்தால் பாதிக்கப்பட்ட வெகுஜனங்கள் இஸ்லாமைத் தழுவுதலுக்குச் சலுகையாக அவர்களின் முந்தைய கலாசாரத்தின் அம்சங்கள் இணைத்துக் கொள்ளப்பட்டன. இது இறுதியானதில்லை. கஷ்மீரில் இஸ்லாம் மாறும் தன்மையதாக இருக்கிறது. எனவே, சமயங்களின் ஒருங்கிணைவு இலக்கில்லை. இதற்கான தரவுகளை ஆசிரியர் தெளிவாகத் தரவில்லை. நந்த் ரிஷி-யின் பாடல்களில் இருக்கும் இந்து, பௌத்த அடையாளங்களை அவரின் ஆரம்ப காலச் சிந்தனை என்று சுருக்கிவிடும் இஷாக் கான், லல்லா எனும் சைவ சித்தரை முழுவதுமாக இஸ்லாத்தில் பொருத்திக் கொள்கிறார்.

கங்கைச் சமவெளியில் சாதீய கொடுமைகளுக்கு எதிராக பக்தி இயக்கம் பரவி பதினைந்தாம் நூற்றாண்டுகளில் இஸ்லாத்தின் பரவலை கட்டுப்படுத்தியது என்பதை ஏற்கும் இஷாக் கான், கஷ்மீரில் பக்தி இயக்கம் தோல்வியுற்றது என்று கூறும்போது இஸ்லாம் பிராமணரல்லாத வெகுஜனங்களை அரவணைத்துக் கொண்டதுதான் என்று எளிதில் கூறி விடுகிறார். இதே நிலைமை கங்கைச் சமவெளியில் ஏன் கை கூடவில்லை என்ற கேள்விக்கு பதிலேதும் சொல்லாமலேயே சென்று விடுகிறார் இஷாக் கான்.

சுல்தான் சிக்கந்தர் இந்துக் கோயில்களை அழித்ததைப் பதிவு செய்யும் ராஜதரங்கிணி நூல் மீது ஆசிரியருக்கு ஏனோ மனத்தாங்கல்! இஸ்லாமிய அரசர்களை காலரீதியாக பெரும்பான்மையான இடங்களில் தெளிவுடன் பதிவு செய்யும் ராஜதரங்கிணியின் விடுபடல்களுக்கு காரணம் கற்பித்தல் எந்த அளவுக்கு வரலாற்று அணுகுமுறை எனத் தெரியவில்லை? சுல்தான் சிக்கந்தரின் சிலை உடைப்புகளுக்கான பழியை புதிதாக மதம் மாறிய முன்னாள் பிராமணர் சுக பட்டர் மீது பழியைப் போடுகிறது ராஜதரங்கிணி! புது இஸ்லாமியராக தமது விசுவாசத்தை நிரூபிக்க சுக பட்டர் செய்த கொடுமைகள் என்று பதிவு செய்யும் ராஜ தரங்கிணி – மீர் அலி சைய்யத் ஹம்தானி-பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்பதற்கு காரணமாக ராஜ தரங்கிணியின் பிராமண ஆசிரியர்களினுடைய மனச்சாய்வு என்கிறார் இஷாக் கான். ஆனால் சைய்யத் ஹம்தானியின் புதல்வர் – முகம்மது ஹம்தானி கஷ்மீருக்கு வந்து, சுல்தானுடைய சபையின் அங்கமாக இருந்ததை ஜோனராஜா (ராஜ தரங்கிணியின் ஆசிரியர்களுள் ஒருவர்) கூறுவதை மேற்கோள் காட்டுகிறார்.

லல்லா குறித்தும் ராஜ தரங்கிணி மௌனம் சாதிப்பதை சதி என்ற நோக்கில் நோக்குகிறார் இஷாக் கான். லல்லா குறித்து வரலாற்று ரீதியாக நமக்கு அறியத்தருபவை இஸ்லாமியர்களின் குறிப்புகளே என்பது உண்மைதான். இந்த கூற்று ஒன்றை வைத்துக் கொண்டு லல்லாவை இஸ்லாமுக்கு நெருக்கமானவர் என்று புத்தகம் முழுதும் கூறிச் செல்கிறார். 17ம் நூற்றாண்டின் இஸ்லாமிய குறிப்பாளர்கள் ஹைதர் மாலிக் சதுரா, ஹஸன் பின் அலி கஷ்மீரி போன்றவர்களும் லல்லா பற்றி எதுவும் சொல்லவில்லை. அதைப் பற்றி இஷாக் கான் வாய் திறக்கவில்லை.

லல்லாவை இஸ்லாமுக்கு நெருக்கமானவர் என்று காட்டுவதற்கு அவர் தரும் ஆதாரங்கள் தொன்மங்களின் அடிப்படையிலானவை. தொன்மங்களைக் கேள்விக்குட்படுத்தவேயில்லை இஷாக் கான். முகம்மது ஹம்தானியை குருவாகக் கொண்டிருந்தவர் என்ற இஸ்லாமியர்களின் தொன்மக்கதையை ஐயமின்றி ஏற்றுக் கொண்டுவிடும் இஷாக் கான் ஶ்ரீ காந்த சித்தர் என்பவரை லல்லேஸ்வரியின் குருவாகக் கூறும் இந்துக்களின் தொன்மங்களை கண்டும் காணாமல் விட்டுவிடுகிறார்.

லல்லாவின் கருத்துகளைத் தமக்கிஷ்டமான வகையில் வளைத்துக் கொள்ளும் இயல்பும் நூல் முழுக்கக் காணக்கிடைக்கிறது. உதாரணத்திற்கு, பக்கம் 75இல் கீழ்க்கண்ட லல்லாவின் வாக்- மேற்கோள் காட்டப்படுகிறது –

“வெட்கத்தின் தளைகளை உடைத்தெறிவது எப்போது?
ஏளனத்தை கேலியை அலட்சியம் செய்வது எப்போது?
தகுதியின் உடைகளை நிராகரிப்பது எப்போது?
என் மனதை ஆசைகள் தாக்கிக் கொண்டிருந்தால்”

இஷாக் கான் அவர்களுக்கு மேற்சொன்ன வாக் – லல்லா வாழ்ந்த காலத்தின் சமூக வேற்றுமைகளை விவரிக்கிறதாம்!

இன்னொரு உதாரணம் – பக்கம் 74

“சிவன், எங்குமுள்ள, அனைத்திலும் உறைகிறான்
எனவே, இந்துவையும், முஸ்லீமையும் பிரித்துப் பார்க்காதீர்
ஞானமுண்டெனில் உம்மை அறிக
பிரபுவின் உண்மை ஞானம் அதுவே”

இஷாக் கானின் கருத்துப்படி மேற்சொன்ன வாக் பிராமணர்களைத் தாக்குகிறதாம்! சடங்கியல்கள் மட்டுமே அறியாமையைத் தெளிவிக்காது – என்ற கருத்து உபனிடத காலப் பழசு என்பதை இஷாக் கான் அறியாதவர் போலிருக்கிறது.

புழங்கும் தொன்மக் கதைகளின்படி, தன்னுடைய மானசீக குருவாக வரித்துக் கொண்ட லல்லாவை அவதாரம் என்கிறார் நூருத்தின் எனும் நந்த் ரிஷி தன்னுடைய ஒரு பாடலில் –

“பத்மன்புராவின் அந்த லல்லா
திருப்தியடையும் வரை தெய்வீக அமுதைக் குடித்தவள்
எங்களுக்கு அவதாரம் அவள்
கடவுளே, அதே ஆன்மீக ஆற்றலை எனக்கும் அளித்தருள்!” – பக்கம் 77

அதே பக்கத்தில் இஷாக் கான் கூறுவது –

“That Lalla, as an ardent lover of Siva, succeeded in reviving Saivism is an argument belied by the very silence of our Saivite chroniclers and poets of her near-contemporary and later times. What is, however, of significance to remember from the viewpoint of social history is the historical dimension of her elevation to avatar by a devout Muslim like Nuruddin”

இந்தப் பத்தியில் வெளிப்படும் முரண்களைப் பாருங்கள்! சைவத்தின் மறுமலர்ச்சியில் லல்லா வெற்றி பெறவில்லை என்று உறுதிபடக் கூறும் இஷாக் கான் அதற்களிக்கும் ஆதாரம் அவளின் சமகாலக் குறிப்பாளர்கள் அவளைப் பதிவு செய்யாததைக் குறிப்பிடுவது! அவளை “அவதாரம்” என்று நூருத்தின் எனும் ஆசாரமான முஸ்லீம் புகழ்வது சமூக வரலாற்றுப் பரிமாணத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது என்று இஷாக் கான் ஜிலேபி சுற்றுவதைத் தான் கஷ்மீர சமூகவியலாளர்கள் “Syncretism” என்கிறார்கள்.

நந்த் ரிஷி இஸ்லாமிய சூபி என்பதற்கு மறு கருத்தில்லை. ஆனால், இரண்டாம் தலைமுறை இஸ்லாமியர் என்ற முறையில் அவருடைய தந்தையின் முதல் மதத்தின் தொப்புள் கொடி உறவு அவரின் கவிதைகளில் வெளிப்படுவதை “ஆரம்பகாலம்” என்று கூறுவது நந்த் ரிஷியின் சமயச்சேர்ந்தியல் இலக்கை மறுப்பதாகும். கால வரிசை அடிப்படையிலான நந்த் ரிஷியின் பாடல்கள் தொகுப்பு இன்று வரை வெளிவரவில்லை எனும் போது தமது ஊகத்தை ஒரு வரலாறாக கட்டமைப்பது பிழையான அணுகுமுறை.

தனிமைப்பயணம்

இதே சாலையில்
முடிவிலி காலமாகப் பயணிக்கிறேன்
அகன்ற சாலையின்
இரு மருங்கிலும் வெறுமை
ஆளரவமில்லை
கண்ணுக்கெட்டிய தூரமெங்கும்
வறண்ட பூமி
நெடிய தனிமை சூழ
நேர்ப்பாதையிலேயே
செல்ல வேண்டும்
நெடுஞ்சாலையில்
அந்தச் சிறு திருப்பம்
எங்கு வரும்?
மரங்கள் மறைத்திருக்கும் அத்திருப்பத்தில் என்றோ நுழைந்த ஞாபகம்!
குறுகிய சந்து அது
மரங்களிலெல்லாம் பல விதப் பூக்கள்
சந்தெல்லாம் கனிகள் விழுந்து உருளும்
பறவைகள் சத்தமிடும்
திரும்பிய சந்து விரைவில்
நெடுஞ்சாலையில் வந்து முடிந்துவிடும்
திரும்பச் சந்துக்குள் திரும்பிச் சென்றுவிட
எடுத்த முயற்சிகள் வியர்த்தம்
முன்னோக்கி மட்டுமே செல்லும்
வாகனத்தை யார் வடிவமைத்ததோ!
கண் கூசும் வெயிலில்
வியர்வையில் நனைந்து
சென்றவாரிருக்கிறேன்
வியர்வைத்துளி கண்ணுக்குள் வீழ்ந்து
பார்வையை மறைக்கும் கணங்களில்
மரங்கள் மூடிய
ஆயிரமாயிரம் திருப்பங்கள்
இருமருங்கிலும் சென்றிருக்கலாம்!
வாகனத்தின் ஒலி மட்டுமே
துணை வர
நீண்டுகொண்டிருக்கும் சாலையில்
பசுமைத் திருப்பங்களின் தேடலில்
ஒரு தனிமைப்பயணம்