இதுவும் கடந்து போகும்

ஏறத்தாழ இருபத்தியைந்து வெளிநாடுகளுக்கு சென்றிருக்கிறேன். ஓர் இடத்திலும் அங்கேயே தங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதில்லை. ஏக்கத்துடன் அந்த நிலப்பரப்புகளை நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால் கஷ்மீர் ஒரு வித நினைவேக்கத்தை ஏற்படுத்துகிறது. அது ஏன் என புரிந்துகொள்ள முயல்கிறேன். அதன் பழங்கால வரலாறு, தொன்மம், இலக்கியம் என்று அனைத்தையும் தாகத்துடன் படிக்கிறேன். ஒரு சுற்றுலா பிரதேசம் இத்தகைய அதிர்வை தருமா? பழைய தோழி தெருவில் நடந்து செல்ல திண்ணையிலிருந்து ஏக்கத்துடன் அவள் பார்வையில் படாமல் நோக்குவது போல் கஷ்மீர் பற்றி படித்த வண்ணமிருக்கிறேன். கல்ஹணரின் ராஜதரங்கிணி – முன்-நவீன இந்தியாவின் ஒரே வரலாற்று நூல் – மொழிபெயர்ப்பு நூலின் இரண்டு பெரும்பாகங்களை வாங்கி புத்தக அலமாரியை நிரப்புகிறேன். பிரிவினைவாதிகளை ஆதரிக்கிறாரோ எனும் சந்தேகத்தில் பல வருடங்களாக வாசிக்காமல் வைத்திருந்த பஷாரத் பீரின் நூலை (curfewed night) ஒரே நாளில் வாசித்து முடிக்கிறேன். நான் வாசிக்கவிருக்கும் அடுத்த சல்மான் ருஷ்டியின் நாவலாக Shalimar the clown-ஐ தேர்ந்தெடுக்கிறேன். யூ-ட்யூபில் கஷ்மீரி கிரிக்கெட் வீரர் உம்ரன் மலிக்-கின் தந்தையாருடைய பேட்டியை பார்க்கிறேன். பெய்ஜிங் குளிர் கால ஒலிம்பிக்கில் alpine skiing 🎿 விளையாட்டில் இந்தியாவிற்காக பங்கு பெற்ற முகம்மது ஆரிஃப் கான் குல்மரக் (gulmarg) பனிச்சரிவுகளில் பயிற்சி செய்யும் காணொலியை தேடிக் கொண்டிருக்கிறேன். உறக்கத்துக்கு முன் சடங்காக வாசிக்கும் கவிதைகள் எல்லாம் இப்போது கஷ்மீர சித்தர் லல்லேஸ்வரி எழுதியதாகவே இருக்கின்றன. 1384இல் மீர் சையத் அலி ஹம்தானி அவர்களின் பேருரையை கேட்டு இஸ்லாத்தை நான் தழுவியிருப்பேனா என்ற ஊகசிந்தனையில் அடிக்கடி ஆழ்கிறேன். புராதன இந்தியாவில் மிக அதிக அளவில் வர்ணக்கலப்பும் சாதிக்கலப்பும் நிகழ்ந்த பூமி இன்று ஒற்றை அடையாளம் எனும் குழிக்குள் தன் சவத்தை தானே இறக்கிக் கொண்டிருக்க, அதன் பன்முகத்தன்மையை மீட்டெடுத்து அதனுள் புது ரத்தம் பாய்ச்சும் மந்திரநிகழ்வு ஏதேனும் சாத்தியமா என்ற கனவில் மூழ்குகிறேன். நூறடிக்கு ஒருவர் என போர் உடையில் ஆயுதங்களுடன் நிற்கும் ராணுவ வீரர்களின் பிம்பங்கள் அதே கனவில் புகையாக கலைந்து போகின்றன. காவா தேனீர்ப் பொடி இருக்கிறது. அதைப் பருகப் பொருத்தமான கஷ்மீரத்தின் குளிர்ச்சியைத் தேடுகிறேன். ஷாலிமார் பாகில் பார்த்த சினார் மரத்தின் அசைவை ஏன் ஒலிப்பதிவு செய்து வைத்துக் கொள்ளவில்லை என்று கேட்டுக் கொள்கிறேன். கஷ்மீரில் வசிக்காமலேயே தன் முன்னோர்களின் பூமியைத் தன் ஒவ்வொரு படைப்பிலும் இணைத்துக் கொள்ளும் ருஷ்டியைப் புரிந்து கொள்ள முடிகிறது. கஷ்மீர் மீதான என்னுடைய ஈர்ப்பை புரிந்து கொள்ள முடியவில்லை. ஈர்ப்பு நெடுநாள் நிலைக்காது என்பர். இன்ப வேதனை நிலைக்கும் வரை நிலைக்கட்டும். கஷ்மீரக்கவி அமின் கமிலின் நன்னம்பிக்கை தெறிக்கும் வரிகளைப் போல் innocence மீண்டும் பூக்களாய் மலர்ந்து கைதட்டி மகிழட்டும் – என் மனதிலும் என் காதல் பூமியிலும்.

—-

பனி

தோட்டத்திற்குள் வந்தது பனி நேற்றிரவு
சோகச் செய்தி சொன்னது
இரவு முழுவதும் சொன்னது
மசூதியிலும் கோவிலிலும் ஒவ்வொரு பூசாரியும் சொல்வதை
மலரின் காதில் கிசுகிசுத்து அழுதது:
“உலகம் மரணகரமானது;
சிரிப்பு மற்றும் மகிழ்ச்சியை மறைக்கிறது.
அழுகையுடன் வருகிறோம், அழுகையுடன் செல்கிறோம்.”

காலை சூரியன் உதித்தது,
மனதின் குழப்பம் தெளிந்து கண்கள் சுற்றி பார்த்தன.
பயத்தால் சுருங்கியது பனி,
இருண்ட இரவின் தூதர் ஓடிவிட்டார்.
பூக்கள் சிரித்தன, மொட்டுகள் –
மகிழ்ச்சியில் கைதட்டி மலர்ந்தன.

—-

(சினார் மரம் – கஷ்மீரின் அடையாளம்)

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.