மணிமேகலை – குறிப்புகளின் குவியல்

இப்போது இல்லாது மறைந்து போன பௌத்த பூமியை மறு-கற்பனை செய்ய வைக்கிறது மணிமேகலை காப்பியம். பாத்திரங்கள் தமிழகத்தில் வசித்தன ; தமிழ் பேசின. ஆனால் காப்பியத்தின் பௌத்த தரிசனம் ஒற்றை மொழியியல்-நில அடிப்படையிலானதன்று. சர்வ-தேசிய, சர்வ-மொழி அடிப்படையிலானது. கதையில் பல்வேறு தமிழரல்லாத பாத்திரங்கள். சுதமதி வங்காளப் பெண். புண்ணியராசன் இந்தோனேசியாவின் ஜாவா பெருந்தீவை ஆளும் மன்னன். ஆபுத்திரனின் தாயார் கங்கைச் சமவெளியிலிருந்து (வாராணசி) கன்னியாகுமரி வந்தவள். மகாபாரதக் குறுங்கதை வருகிறது. திருக்குறள் வருகிறது. தூரத்தீவுகளில் வசிக்கும் பழங்குடிகள் வருகின்றனர். வஞ்சி, காஞ்சி, காவிரிப்பூம்பட்டினம் – கதையில் வரும் நகரங்கள் சித்தரிக்கப்படும் விதம் அவை காஸ்மோபாலிட்டன் நகரங்கள் என நம்மை உணர வைக்கின்றன. வேத காலத்து ரிஷிகள் குறிப்பிடப்படுகின்றனர். தாந்திரீக பௌத்தக் குறியீடுகள் கதை நெடுக காணப்படுகின்றன. பௌத்தத்தை ஒரு சர்வ தேச சமயப்பண்பாடாக தமிழில் பதிவு செய்கிறது இந்த அற்புதக் காப்பியம்.

மணிமேகலை காப்பியம் சித்தரிக்கும் பௌத்தப் பெருநிலம் சேர, சோழ, பாண்டிய,பல்லவ நாடுகளை உள்ளடக்கியது மட்டுமல்ல. ஆந்திரம், கபிலவாஸ்து, காசி, கயா, வங்கம் என்னும் பிற பிரதேசங்களையும் உள்ளடக்கியது. அது மணி பல்லவம், ஆடம்ஸ் பீக் வாயிலாக இலங்கை, தரும சாவகன் எனும் சான்றோன் உலவும் சாவகம் என்று அன்றைய பௌத்த ஆசியா முழுதும் விரிகிறது.

மகாபாரதம்

மகாபாரதத்தின் சாந்தி பர்வத்தில் வரும் கௌசிக முனிவர் நாய்க்கறி உண்ணும் கதையை தீவதிலகை மணிமேகலைக்கு சொல்கிறாள். பசிப்பிணியின் கொடுமையையும் அதனைத் தீர்ப்போரது பெருமையையும் தீவதிலகை மணிமேகலைக்கு அறிவுறுத்துகிறாள்.

“புன்மரம் புகையப் புகையழல் பொங்கி

மன்னுயிர் மடிய மழைவளம் சுரத்தலின்

அரசுதலை நீங்கிய வருமறை யந்தணன்

இருநில மருங்கின் யாங்கணுந் திரிவோன்

அரும்பசி களைய வாற்றுவது காணான்

திருந்தா நாயூன் தின்னுத லுறுவோன்

இந்திர சிறப்புச் செய்வோன் முன்னர்

வந்து தோன்றிய வானவர் பெருந்தகை

மழைவளந் தருதலின் மன்னுயி ரோங்கிப்

பிழையா விளையுளும் பெருகிய தன்றோ”

(மணிமேகலை : பாத்திரம் பெற்ற காதை 11: 82-91)

“புல்லும் மரமும் கரியுமாறு புகையை உடைய தீ போல வெப்பம் மிகுத்து உயிர்கள் அழியுமாறு மழையாகிய செல்வம் மறைந்து போனமையால் அரசு புரிதலினின்றும் நீங்கிய அரிய மறைகளையுணர்ந்த அந்தணனாகிய விசுவாமித்திரன் பெரிய பூமியிடத்து யாண்டும் சுற்றுகின்றவன் அரிய பசியை நீக்க உதவுவதாகிய உணவு ஒன்றையுங் காணாதவனாய் சிறிதும் பொருந்தாத நாயின் ஊனைத் தின்னத் தொடங்குவோன் உண்ணுமுன் செய்தற்குரிய தேவ பலியினைச் செய்கின்ற பொழுது அவன் முன்னர் வெளிப்பட்ட அமரர் தலைவன் மழைவளத்தை அளித்தலான் உயிர்கள் மிகுத்து தப்பாத விளைவும் மிகுந்த தன்றோ”

திகிலூட்டும் பிறவிக்கதைகள்

“தீவ திலகை செவ்வனந் தோன்றிக்

கலங்கவிழ் மகளிரின் வந்தீங் கெய்திய

இலங்குதொடி நல்லாய் யார்நீ என்றலும்

எப்பிறப் பகத்துள் யார்நீ யென்றது

பொற்கொடி யன்னாய் பொருந்திக் கேளாய்”

கோமுகி ஏரியில் அமுதசுரபியின் காவல் தேவதை தீவதிலகை மணிமேகலையை பார்த்ததும் கேட்கும் கேள்வி : யார் நீ?

மணிமேகலை என்ன பதில் சொல்வது என்று குழம்பி பின்னர் சொல்கிறாள் : யார் நீ என நீ வினவியது எந்த பிறப்பின் நிகழ்ச்சி குறித்து?

The King and the Clown in South Indian Myth and Poetry நூலில் David Shulman இதுபற்றி சொல்கிறார் : “the Tamil Buddhist exploration of the cognitive experience of reincarnation finds the resulting awareness to be baffling, even terrifying”

புண்ணியராசன் மணிபல்லவத்தை அடைந்து தன் முன் பிறவி உடம்பின் எலும்புகளை தோண்டியெடுக்கும் காட்சி நிச்சயம் terrifying தான்!

வள்ளுவரும் சாத்தனாரும்

மருதி என்பாளுடன் சதுக்கப்பூதம் உரையாடும் கட்டத்தில் திருவள்ளுவரை மேற்கோள் காட்டுவார் மணிமேகலை ஆசிரியர்.

“தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றஅப்

பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்”

(மணிமேகலை : 22 : 59-61)

சுடுகாட்டுக் காட்சிகள்

“என்புந் தடியு முதிரமு மியாக்கையென்

றன்புறு மாக்கட் கறியச் சாற்றி

வழுவொடு கிடந்த புழுவூன் பிண்டத்து

அலத்தகம் ஊட்டிய அடிநரி வாய்க்கொண்

டுலப்பி லின்பமோ டுளைக்கு மோதையும்

கலைப்புற அல்குல் கழுகுகுடைத் துண்டு

நிலைத்தலை நெடுவிளி யெடுக்கு மோதையும்

கடகஞ் செறிந்த கையைத் தீநாய்

உடையக் கவ்வி யோடுங்கா வோதையும்

சாந்தந் தோய்ந்த ஏந்தின வனமுலை

காய்ந்தபசி யெருவைக் கவர்ந்தூ ணோதையும்

பண்புகொள் யாக்கையின் வெண்பலி யரங்கத்து

மண்கனை முழவ மாக…….”

(மணிமேகலை : 6 : 107 – 119)

சார்ங்கலன் எனும் பார்ப்பனச் சிறுவன் ஒரு காட்டில் தனிவழிச் செல்கையில் காணும் காட்சிகளை, கேட்ட சத்தங்களை சாத்தனார் மேற்கண்ட வரிகளில் சொல்கிறார்.

“எலும்பும் சதையும் குருதியுமாகியவற்றை உடம்பு என்று அதன் மேல் அன்பு வைக்கின்ற மக்களுக்கு அறியக் கூறும் வண்ணம் புழுக்கள் மலிந்த ஊண் பிண்டமாகி விழ்ந்து கிடந்த உடலில் செம்பஞ்சுக் குழம்பு ஊட்டப்பெற்ற அடிகளை நரி வாயிலே கவ்விக் கொண்டு கேடில்லாத இன்பத்துடன் ஊளையிடுகின்ற ஒலியும், உடையை ஒழித்த அல்குலைக் கழுகு குடைந்து உண்டு நிலத்தின் கண் பெரிய கூவுதலைச் செய்யும் ஓசையும், கடகமணிந்த கையைத் தீயநாய் உடையுமாறு கவ்விக் கொண்டு இடும் ஒடுங்காத முழக்கமும், சந்தனம் பூசப்பெற்ற இளங்கொங்கையை பசி கொண்ட பருந்து கவர்ந்துண்ணும் ஓசையும், இனிமையுடைய உடல்கள் வெந்த சாம்பற்குவையாகிய அரங்கில்….”

1616

அமுதசுரபியைப் பெற்ற பிறகு ஆகாய மார்க்கமாக காவிரிப்பூம்பட்டினம் திரும்புகிறாள் மணிமேகலை. மணிமேகலா தெய்வம் அறிவுறுத்தியபடி அரவண அடிகளைச் சந்தித்து மணிமேகலா தீவில் நடந்தவற்றை எடுத்துக் கூறுகிறாள்.

உலகில் அவதரிக்கப் போகின்ற வருங்கால புத்தர் (மைத்ரேய புத்தர்) பற்றி அரவண அடிகள் மணிமேகலைக்குச் சொல்கிறார். கீழ்க்கண்ட வரிகளில் புத்தர் 1616ம் ஆண்டில் பிறப்பார் என்று சொல்லப்படுகிறது. அது எந்த அப்தம் என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.

“சக்கர வாளத்துத் தேவ ரெல்லாம்

தொக்கொருங் கீண்டித் துடிதலோ கத்து

மிக்கோன் பாதம் விழுந்தனர் இரப்ப

இருள்பரந்து கிடந்த மலர்தலை உலகத்து

விரிகதிர்ச் செல்வன் தோன்றின னென்ன

ஈரெண் ணூற்றோ டீரெட் டாண்டில்

பேரறி வாளன் தோன்றுமதற் பிற்பாடு

பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி

இரும்பெரு நீத்தம் புகுவது போல

அளவாச் சிறுசெவி யளப்பரு நல்லறம்

உளமலி யுவகையோ டுயிர்கொளப் புகூஉம்”

( அறவணர்த் தொழுத காதை : 12 : 72-82 )

“சக்கரவாளத்திலுள்ள தேவரனைவரும் சேர்ந்து ஒன்றாகக் கூடித் துடிதலோகத்துள்ள (dusita heaven) சிறந்த தேவன் திருவடிகளில் விழுந்து இரக்க, இருள் பரவிய அகன்ற பூமியின் கண் விரிந்த கிரணங்களையுடைய பரிதிவானவன் தோன்றினாற் போல ஆயிரத்து அறுநூற்றுப் பதினாறாம் ஆண்டில் புத்தன் தோன்றுவான். அதன் பின்பு பெரிய குளத்திலுள்ள மதகாகிய சிறிய வழியில் மிகப்பெரிய வெள்ளம் புகுவதைப் போல பேரளவில்லாத சிறிய செவிகளின் வழியே அளத்தற்கரிய நல்லறங்கள் உள்ளத்தில் நிறைந்த மகிழ்ச்சியோடு உயிர்கள் ஏற்றும்படி புகாநிற்கும்”

புத்த துதி

அமுதசுரபியைப் பெற்றதும் மணிமேகலை அளவற்ற மனமகிழ்ச்சி கொண்டாள் ; புத்த தேவரைப் பலவாறு துதித்தாள்.

“மாரனை வெல்லும் வீர நின்னடி

தீநெறிக் கடும்பகை கடிந்தோய் நின்னடி

பிறர்க்கறம் முயலும் பெரியோய் நின்னடி

துறக்கம் வேண்டாத் தொல்லோய் நின்னடி

எண்பிறக் கொழிய இருந்தோய் நின்னடி

கண்பிறர்க் களிக்குங் கண்ணோய் நின்னடி

தீமொழிக் கடைத்த செவியோய் நின்னடி

வாய்மொழி சிறந்த நாவோய் நின்னடி

நரகர் துயர்கெட நடப்போய் நின்னடி

உரகர் துயரம் ஒழிப்போய் நின்னடி

வணங்குதல் அல்லது வாழ்த்தலென் நாவிற்

கடங்கா து…….”

“மாரனை வென்ற வீரனே நின் திருவடிகளை, தீய வழிகளாகிய மிக்க பகையை நீக்கினோய் நின் திருவடிகளை, ஏனையோர்க்கு அறம் உண்டாதற்கு முயல்கின்ற பெரியோய் நின் திருவடிகளை, சுவர்க்க இன்பத்தை வேண்டாத பழையோனே நின் திருவடிகளை, மக்களுடைய எண்ணங்கள் எட்டாமற் பின்னே மேற்பட்ட நிலையிற் சென்றோய் நின் திருவடிகளை, உயிர்கட்கு ஞானத்தை அளிக்கும் மெய்யுணர்வுடையோய் நின் திருவடிகளை, தீயமொழிகளை கேளாதிருக்குமாறு அடைக்கப்பட்ட காதினை உடையோனே நின் திருவடிகளை, மெய்மொழிகள் சிறந்த நாவினையுடையோய் நின் திருவடிகளை, நரகத்திலிருப்போரின் துன்பம் நீங்குமாறு ஆண்டுச் சென்றோய் நின் திருவடிகளை, நாகர்களின் துன்பத்தை நீக்குவோய் நின் திருவடிகளை வணங்குதலேயன்றி வாழ்த்துதல் என் நாவில் அடங்காது”

மணிமேகலை : பாத்திரம் பெற்ற காதை : 11 : 61-72

இராமாயணம்

விருச்சிக முனிவன் இட்ட சாபத்தால் அடங்காப் பசியால் அவதியுறுகிறாள் காயசண்டிகை. இராமாயணத்தில் இராமர் பாலம் கட்ட முயன்ற போது எல்லாக் குரங்குகளும் கொண்டு வந்து போட்ட மலை, கற்களை இக்கடல் விழுங்கியதுபோல எல்லா உணவுப் பொருள்களையும் அவளின் வயிறு கரைத்துவிடுகிறது என்ற உவமை வழியாக இராமயணக் கதையை எடுத்தாள்கிறது மணிமேகலை.

நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி

அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று

குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம்

அணங்கு உடை அளக்கர் வயிறு புக்காங்கு

இட்டது ஆற்றாக் கட்டு அழல் கடும் பசிப்

பட்டேன் என் தன் பழ வினைப் பயத்தால்

(உலக அறவி புக்க காதை, 10-20)

முருகன்

முருகப்பெருமான் பற்றிய குறிப்புகளும் மணிமேகலையில் உண்டு.

கார் அலர் கடம்பன் அல்லன்

(பளிக்கறை புக்க காதை அடி 49)

குருகு பெயர்க்குன்றம் கொன்றோன் அன்ன முருகச் செவ்வி முகத்து

( மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை, 12-13)

கடம்ப மாலை அணிந்தவன் முருகன்.

கிரௌஞ்சம் என்ற பறவை பெயர் கொண்ட மலையைப் பிளந்துச் சிங்கமுகனைக் கொன்றவன் முருகன்.

+++++

உரை : ந மு வேங்கடசாமி நாட்டார் & ஔவை சு துரைசாமிப்பிள்ளை

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.