23/4/2021

வெட்டி உரையாடல்கள், எப்போதாவது சில நண்பர்களுடைய அறிமுகம் என நடைமுறை வாழ்க்கையில் காணும் அனுபவங்களை ஒத்தவாறு சுவையற்றதாகவே சமூக வளைதளங்களில் நேரம் கழிந்து வந்தது. இடும் கருத்துகள் ஏதோ இந்தவுலகை மாற்றியமைக்கப்போவது போலக் கூவுதற்கும் சொந்த வாழ்க்கையின் முன்னேற்றங்களை பறைசாற்றிக் கொள்வதற்குமான அரங்காக மட்டுமே சமூக வளைதளங்களைப் பயன்படுத்தி வந்த எனக்கு அவற்றுக்கு உயிர் காக்கும் வல்லமை உண்டு என்ற நேரடி அனுபவத்தைத் தந்த நாள் 23/4/2021.

கொவிட் பாசிடிவாகி ஏழு நாட்களாகியிருந்தன. ஜூரம் குறையவில்லை. 22ந்தேதி நடுஇரவு SPO2 தொண்ணூறாக குறைந்துவிட்டது. இரண்டு மணி நேரம் கழித்து 86. மனைவிக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. சில பெரிய மருத்துவமனைகளுக்கு போன் செய்தாள். மருத்துவமனைகள் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன. ஆக்ஸிஜன் படுக்கை கிடைக்குமா என்று கேட்டவுடன் இல்லை என்ற ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லி லைனை கட் செய்தார்கள். ஊரில் நண்பர்களுக்கு போன் செய்து என் காதில் விழாவண்ணம் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தாள். கையைப் பிசைந்து கொண்டிருந்தாள். என் ஜுரத்தை விட அவளின் அவஸ்தை எனக்கு மிகுந்த சங்கடமளித்தது.

நண்பர் ஒருவரை அழைத்துக் களைத்துப் போயிருந்த குரலில் மெதுவாகப் பேசினேன். தொண்டை வறண்டு போயிருந்தது. அவரின் பதிலை கண்ணை மூடிக்கொண்டே கேட்டேன். தற்போதைய சூழ்நிலையில் மருத்துவமனை கிடைப்பது அரிது என்றார். அவருக்கும் கொவிட் பாசிடிவ். ட்வீட் செய்கிறேன் என்று அவர் சொன்ன போது அவநம்பிக்கையோடு தான் போனை வைத்தேன். ஆனால் முற்றிலும் எதிர்பாராதபடி என் நண்பர் இட்ட சின்ன டிவிட்டர் நிலைத்தகவலை படித்துவிட்டு அறிமுகமில்லாத அரசியல் பிரமுகரின் தொண்டர் ஒருவர் அதிகாலை ஐந்து மணிக்கு தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டார்.

படுக்கைத் தட்டுப்பாடு நிலவிய இரண்டாம் அலை நாட்களில் நடுத்தர அளவிலான மருத்துவமனையில் எனக்கு இடம் கிடைத்ததையும்,

ஸ்கேனிங் சென்டரில் மிக நீண்ட க்யூ வரிசையில் நான் நின்றிருந்த போது அந்தத் தொண்டர் போனில் யாருடனோ பேசி என்னுடைய முறை உடனடியாக வரும்படி செய்ததையும்,

விதிமுறைக்கெதிராக மார்பு ஸ்கேன் ரிப்போர்ட் வரும் முன்னதாகவே (CT Severity Score 17/25) மருத்துவமனை என்னை அனுமதித்துக் கொண்டதையும்,

அனைத்து மருத்துவமனைகளிலும் பிராண வாயு சிலிண்டர்களின் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்த வேளையில் நான் படுத்திருந்த சிறு மருத்துவமனைக்கு மட்டும் ஒரு சின்ன லாரி நிறைய சிலிண்டர் கிடைத்ததையும் –

அற்புதம் என்ற சொல்லினாலன்றி வேறெந்த சொல்லால் குறிப்பது? நன்றியுணர்வு ஆன்மாவின் மது என்பார் ரூமி. என் உயிர் காக்கப்பட்ட நன்றியுணர்வின் போதை என் வாழ்நாளெல்லாம் நீடித்திருக்கும்.

ட்வீட் செய்த நண்பர் பெயர் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால் அவர் பெயரை இங்கே குறிப்பிடவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.