பகவத் கீதையும் பவுத்தமும்

பகவத் துதியை ஒரு கருத்தியலாக முன் வைத்த நூல் பகவத் கீதை. இதனை பக்தி மார்க்கம் என்று வகைப்படுத்துகிறது பகவத் கீதை. இதே நூலில் வலியுறுத்தப்படும் ஞான மார்க்கம், கர்ம மார்க்கம் – இரண்டையும் சேர்த்து வீடு – பேறடைய மூன்று மார்க்கங்களைத் தொகுத்தது கீதை. பவுத்தத்தின் மும்மணிகள் – புத்தம், தம்மம், சங்கம் போலவே ஏற்கனவே இருந்த ஞானம், கர்மம் – ஆகிய இரண்டோடு “பக்தி” என்ற ஒன்றை இணைத்தது வைதீக மதம். “பகவத் கீதையின் கருத்துக்கள் களவாடப்பட்டவை” என்ற பொருளில் யாரோ ஒருவர் பேசிய குறுங்-காணொளியை ஓரிரு தினங்கள் முன் கேட்டபோது “களவாடல்” என்று எப்படிக் கூற முடியும் என்ற கேள்வி எழுந்தது. பவுத்தத்தின் எழுச்சிக்கு வைதீக மதத்தின் எதிர்வினை என்றுதான் இதைச் சொல்ல முடியும்.

பவுத்தம் வளர்ச்சி பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் சமூகத்தின் உயரடுக்கு வர்க்கங்களையும் ராஜரீக விஷயங்களில் சம்பந்தப்பட்டிருந்த க்ஷத்திரியர்களையும் அது அதிகம் ஈர்த்தது. இவ்விரண்டு குழுக்களின் ஆதரவில் அது வரை தழைத்து வந்திருந்த வைதீக மற்றும் சாதாரணர்களின் ‘இந்து’ மதம் தம்முடைய ஆதரவைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கக் கூடும். இக்கால கட்டத்தில் பவுத்தத்தின் மீதான பல்வேறு “ஆத்திக எதிர்வினைகளை” – விலங்குப்பலியை தடை செய்தல், சாதிக்கட்டுப்பாடுகளை இறுக்குதல், ‘இந்து’ சமயத்தின் மிகசச்செயல் திறன் மிக்க ஆயுதமான “உட்கிரகித்தல்” போன்றவைகளை – ‘இந்து’ மதம் கைக்கொண்டது. புத்தரை விஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமாக உள்ளிழுக்க முயன்றது. புத்தர் விஷ்ணுவின் அவதாரமானதற்கு சொல்லப்படும் காரணம் – “தவறான போதனையால் எதிரிகளை தவறாக வழிநடத்தி அவர்களை பாவக்குழியில் தள்ளவே ; இதற்காகவே வேத யாகங்களை ஒழிப்பை புத்தர் பேசினார்.” “ஒன்பதாவது அவதாரம்” எனும் அடிப்படையில் புத்தர் பற்றிய புராணக்கதைகளுக்கு சீரழிந்த பவுத்தம் எந்த ஆட்சேபனையும் அளிக்காத காலகட்டங்களில் தம்முடைய கட்டுப்பாட்டின் கீழ் புத்தரின் வழிபாட்டை பவுத்த உபாசகர்கள் மேற்கொள்ள வைதீக மதம் அரை மனதுடன் சம்மதித்ததும் பின்னர் நடந்தது.

“பகவத் கீதையின்” கருத்துக்கள் “பவுத்தத்திலிருந்து” பெறப்பட்டவையா என்ற கேள்விக்கு வருவோம். கீதையில் வரும் அர்ஜுனனின் தடுமாற்றத்தை (அதாவது, யுத்தம், அதனால் எழக்கூடிய விளைவுகளின் பாதிப்பு – கர்மா அல்லது செயலின்மை ஆகியவற்றின் வாயிலாக புனிதமான சாதிக் கடமையை மீறுதல்) பல க்ஷத்திரியர்கள் மற்றும் உயரடுக்கு வர்க்கங்கள் அக்கால கட்டத்தில் எதிர்கொண்டிருக்கக் கூடிய சூழலின் உருவகமாக பார்க்க முடியும். கர்ம மார்க்கம் (அதாவது வர்ணம் அல்லது சாதி சார்ந்த கர்மம்) மற்றும் வைதிக அமைப்பின் குறியீடாக கிருஷ்ணர் போதிக்கும் “செயலாற்று” என்னும் அறிவுரையைக் கருத முடியும். “செயலற்று” இருப்பது பவுத்தத்தின் லட்சியமான துறவறத்தைக் (Monastic Withdrawal) குறிப்பதாகக் கொள்ளலாம்.

அர்ஜுனன் (பவுத்தப்பாதையில் சென்ற க்ஷத்திரியர்கள் மற்றும் பிற உயர் வர்க்கத்தினர்) செயலற்ற தன்மையைத் (பௌத்தம்) தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக செய்ய வேண்டிய வர்ணக் கடமைகளை அணுகுவதற்கான ஒரு புதிய வழியை கிருஷ்ணர் (பிரம்மம்) முன்வைக்கிறார். தனிப்பட்ட ஆசை அல்லது உள்நோக்கத்துடன் செய்யப்படும் செயல்கள் மட்டுமே கர்மாவைப் பாதிக்கும் என்றும் கிருஷ்ணர் கூறுகிறார். மற்ற எல்லா செயல்களும் (எ.கா. வர்ணக் கடமையின் காரணமாக மட்டுமே செய்யப்படும் கருமங்கள்) ஒருவருடைய கர்மாவை பாதிக்காது. அடிப்படையில் இது பிந்தைய வகை செயலின்மைக்கு (“Monastic Withdrawal”) ஒத்ததானதாக ஆக்குகிறது.

குறைந்த தத்துவ நாட்டம் கொண்டவர்கள் பௌத்தத்தால் பெரிதும் ஈர்க்கப்படவில்லை என்பதைக் கண்டுகொண்ட வைதிகர்கள் மதத்துக்குள் உணர்ச்சிக் காரணியை நியாயப்படுத்தும் விதமாக பக்தி மார்க்கத்தின் கருத்தியலை, அதன் சிறப்பை கீதையில் விவரிக்கின்றனர்.

சுருக்கமாக சொல்லப்போனால், பகவத் கீதையில் வரும் பக்தி-மார்க்கக் கொள்கையின் வளர்ச்சியை பௌத்தத்திற்கு வைதீகர்கள் தந்த எதிர்வினையாகப் பார்க்க முடியும். மேலும், பௌத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள், பொதுவாக பண்டைய பிராமணியத்தினால் மிகவும் அதிருப்தி அடைந்தவர்கள் ஆகியோரை உள்ளடக்கிய பண்டைய இந்தியாவின் சமூக உயரடுக்கிற்கு விரும்பத்தக்கதான ஒரு பிரபல மதமாக முறைப்படுத்தியதில் பகவத் கீதை பெரும்பங்காற்றியிருக்கிறது எனலாம். .

பகவத் கீதைக்கும் பௌத்தத்துக்கும் என்ன தொடர்பு? வைதீக சமய நூலுக்கும் பௌத்தத்தின் அடிப்படைச் சிந்தனைக்கும் என்ன ஒற்றுமை இருக்க முடியும்? ஆத்மன்/பிரம்மம் கருப்பொருள் பகவத் கீதையின் அடிப்படை. இரண்டையும் மறுக்கும் அனாத்ம தத்துவம் பௌத்தம். ஆச்சாரிய நாகார்ஜுனர் இயற்றிய நூலான “சதுஸ்தவா”-வில் ஒரு செய்யுள் வரும்.

“பகவானே, உம்மிடம் சிந்தனையில்லை, பாகுபாடில்லை, நோக்கங்களில்லை, எனினும் உயிரினங்களின் நன்மைக்காக ஒரு புத்தரின் பணியை இவ்வுலகில் பற்றின்றி செய்கிறீர்.” – சதுஸ்தவா (நாகார்ஜுனர்)

கிட்டத்தட்ட இதே போன்ற கருத்து போல் ஒலிக்கும் பகவத் கீதையின் வசனம் ஒன்றுண்டு.

“மூவுலகங்களிலும் நான் செய்ய வேண்டிய கடமை ஏதுமில்லை. எனக்குத் தேவையோ, நான் அடைய வேண்டியதோ ஏதுமில்லை. இருந்தும் நான் விதிக்கப்பட்ட கடமைகளில் ஈடுபட்டுள்ளேன்” என்ற கீதையின் சுலோகம் (பகவத் கீதை – 3:22).

ஒரே பொருள் கொண்ட வசனங்கள் இரண்டும். ஆனால் கோட்பாட்டுப் பின்னணியில் பொருத்தும் போது அர்த்தம் மாறுபடுகின்றது.

நாகார்ஜுனரின் கருத்துப்படி – எதற்கும் சார்பற்ற சுயம் இல்லை. அனைத்தும் மற்றவற்றைச் சார்ந்தே உள்ளன. மாயை அல்லது பிரமையே உலகின் அனைத்து பொருட்களும். சாரமில்லை. நிரந்தர இருத்தல் எதற்கும் எவர்க்கும் இல்லை. எல்லாமே அநித்தியம். இவ்வுண்மையை உணர்ந்து நிர்வாண நிலையில் இருக்கும் புத்தருக்கு சிந்தனையோ, பாகுபாடோ, பற்றோ, கடமையோ, தேவைகளோ, நோக்கங்களோ எதுவும் இருக்காது. கடமையில் ஈடுபடுபவர் போல தோற்றமே நான் காண்பது. அனைத்தும் சூன்யம்.

இப்போது மேல்சொன்ன சதுஸ்தவாவின் செய்யுளை படித்துப்பார்த்தால் நாகார்ஜுனர் என்ன சொல்ல வருகிறார் என்பது விளங்கும்.

கீதையில் பேசுபவன் கடவுள், அவதாரம், பிரம்மமே அவன், அவன் நிலையானவன், அழிவற்றவன், மூலகாரணம் அவனே, அவனுக்கு காரணங்கள் எதுவும் இல்லை, மூவுலகையும் படைத்து, காத்து, அழித்து, மீண்டும் படைப்பவனுக்கு அடைய என்ன இருக்கிறது? ஆனாலும் அவன் கடமையில் ஈடுபடுகிறான். அர்ஜுனனுக்கு ரதமோட்டுகிறான். அவனே கடமை புரியும் போது க்ஷத்திரியனாக போர் புரியும் கடமை கொண்ட அர்ஜுனன் மனந்தளரலாமா? மயக்கமுறலாமா? உணர்ச்சியற்ற சாந்த நிலை அவனுக்கானதில்லை. அவனுக்கு விதிக்கப்பட்ட போரை அவன் புரிந்துதானாக வேண்டும்.

சதுஸ்தவா-வின் இந்தச் செய்யுளைத் தழுவி பகவத் கீதையின் ஆசிரியர் எழுதினாரா அல்லது நாகார்ஜுனர் பகவத் கீதையை வாசித்துவிட்டு இந்தச் செய்யுளை இயற்றினாரா என்ற தகவல் தெரியாத வரை யாரைப் பார்த்து யார் எழுதினார்கள் என்பது பற்றி எப்படி தீர்ப்பு சொல்வது?

இரண்டு தத்துவங்களும் பல நூற்றாண்டுகளாக வாதிட்டும் விவாதம் செய்தும் உரையாடியபடியே இருந்தன. தத்துவ நிலைப்பாட்டில் சமரசம் செய்து கொள்ளாமல் வடிவங்கள், தொன்மங்கள், முறைகள் என அனைத்தையும் இரு மரபுகளும் கொடுத்தல் வாங்கல் செய்திருக்கின்றன. காப்பியங்களைக் கூட இரு சமய இலக்கியங்கள் பகிர்ந்துகொண்டுள்ளன. மணிமேகலை, புத்தசரிதா எனும் காப்பியங்களில் வரும் இராமாயண, மகாபாரத குறிப்புகளை உதாரணமாகக் கூறலாம்.

பகவத் கீதையில் “நிர்வாணா” எனும் பௌத்த கலைச்சொல் இரண்டு இடங்களில் உபயோகிக்கப்படுகின்றன.

“பார்த்தா! இது பிரம்ம ஸ்திதி. இதையடைந்தோன் பிறகு மயங்குவதில்லை. இறுதிக் காலத்திலேனும் இதில் நிலைகொள்வோன் பிரம்ம நிர்வாண மெய்துகிறான்.” (2-72, மொழிபெயர்ப்பு : மகாகவி பாரதி)

தனக்குள்ளே இன்பமுடையவனாய், உள்ளே மகிழ்ச்சி காண்பவனாய், உள்ளே ஒளி பெற்றவனாகிய யோகி, தானே பிரம்மமாய், பிரம்ம நிர்வாணமடைகிறான்.

*இருமைகளை (*நன்மை – தீமை; குளிர் – சூடு; இன்பம் – துன்பம் என எல்லாப் பொருள்களைப் பற்றி நிற்கும் இரட்டை நிலைகள்) வெட்டிவிட்டுத் தம்மைத்தாம் கட்டுப்படுத்தி, எல்லா உயிர்களுக்கும் இனியது செய்வதில் மகிழ்ச்சியெய்தும் ரிஷிகள் பாவங்களொழிந்து பிரம்ம நிர்வாணம் அடைகிறார்கள்.

விருப்பமும், சினமும் தவிர்ந்து சித்தத்தைக் கட்டுப்படுத்திய ஆத்ம ஞானிகளாகிய முனிகளுக்கு பிரம்ம நிர்வாணம் அருகிலுள்ளது. (5-24/25/26, மொழிபெயர்ப்பு : மகாகவி பாரதி)

“நிர்வாணா” என்ற பவுத்த கலைச்சொல் இங்கு கடன் வாங்கப்பட்டுள்ளது. அக்கால பவுத்தர்களை குழப்பும் எண்ணத்துடன் இது செய்யப்பட்டிருக்கலாம். பவுத்தத்திற்கு முந்தைய வேதக் கருத்தியலான “பிரம்மம்” எனும் மீப்பொருண்மையியல் முழுமையுடன் பவுத்த நிர்வாண நிலை இங்கு இணைக்கப்பட்டுள்ளது. இரண்டு கலைச்சொற்களின் பொருளையும் தெரிந்தோர்இந்தச்சூழலமைவில் எப்படி பொருள் கொள்ளப்பட வேண்டும் என்பதை அறிந்திருக்கிறார்கள். மகாத்மா காந்தி கூறுகிறார் : “பவுத்தர்களின் நிர்வாணம் ஷுன்யதா ; கீதை சொல்லும் நிர்வாணம் சாந்தி ; பிரம்மத்துள் ஒன்றாதல் எனும் பொருளில் பிரம்ம-நிர்வாணம் என்று கீதை சொல்கிறது.”

அதெப்படி பவுத்த கலைச்சொல்லை இந்து சமய நூலில் சேர்க்கலாம் என்போர்க்கு தெவிஜ்ஜ சுத்தத்தை உதாரணம் காட்டலாம்.

பிராமண இளைஞனுக்கு தம்மத்தை போதிக்கும் ததாகதர் வேத பாரம்பரியத்தின் கலைச்சொல்லைப் பயன்ப்டுத்துவதைப் பாருங்கள் :-

“நீ சொல்வதைப் போல பிக்கு கோபத்திலிருந்து விடுபட்டவர், தீமையிலிருந்து விடுபட்டவர், மனத்தில் தூய்மையானவர், தனக்குத் தானே எஜமானர்; பிரம்மாவும் கோபத்திலிருந்து விடுபட்டவர், தீமையிலிருந்து விடுபட்டவர், மனத்தில் தூய்மையானவர், அவருக்கு அவரே எஜமானர். அது போல, கோபம் இல்லாதவனாகவும், தீமை இல்லாதவனாகவும், மனத்தூய்மை உடையவனாகவும், தன்னைத் தானே எஜமானனாகவும் கொண்ட பிக்கு, மரணத்திற்குப் பிறகு, உடலைக் கரைத்து, அதே பிரம்மாவுடன் ஐக்கியமாக வேண்டும், அத்தகைய நிலை எல்லா வழிகளிலும் சாத்தியம்”

பகவத் கீதை கருத்துகளைக் களவாடிற்று! திக்க நிகாயம் கருத்துகளைக் களவாடிற்று என்பதெல்லாம் மடத்தனம். ஒரே கலாசார நிலத்தில் விளைந்த வாதமுறைகளை, கூறுமுறைகளை இரு பெரும் மரபுகளும் எடுத்தாண்டன என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.