கோயில்

மூலவர் முன்
அலைமோதும் கூட்டம்
பிரகாரச்சுவர் கடவுளைச்
சீந்துவார் யாருமில்லை
மூலவரை மிகஅருகிருந்து
தரிசனம் செய்வதற்கு
பூசாரிகளின் கெடுபிடி
பிரகாரச்சுவர்
தெய்வத்தை
எத்தனை நேரமானாலும் தரிசி!
அதன் அழகில் மயங்கி கிறங்கி
பக்தை ஒருத்தி
கைகூப்பி அழுது நின்றாள்
விளக்கேற்ற வரும் ஓரிரு பக்தர்களும்
அண்டவில்லை அன்று!
“என்னுடன் வந்துவிடு”
என்றாள்;
தேம்பினாள்
பெண்ணின் தேம்பல்
வலுத்தவுடன்
இருண்ட பிரகாரத்தில் அசரீரி
“உன்னுடன் வந்துவிட்டால்
பிற பக்தர்கள் என்ன செய்வார்கள்?”
தனக்கு மட்டும்
காதில் விழுந்ததென
மனத்துக்குள்ளேயே
பதிலை முணுமுணுத்தாள் பக்தை
“மூலவர் இருக்கட்டுமிங்கே
நீ வந்துவிடு
உம்மை யார் தரிசிக்க விரும்புகிறார்?”
“மூலவர்க்கும் எனக்கும்
என்ன வித்தியாசம்?
அமைதியின் அடையாளம் நான்
இயக்கத்தின் அடையாளம் அவர்
குறைகள், பிரார்த்தனைகள்
மன்றாடல்கள் – அனைத்தையும் அவர் கேட்பார்
அழகை ரசித்துவிட்டு
அமைதியில் தோய்ந்துவிட்டு
என்னை விட்டு நகர்ந்துவிடுவர் பக்தர்
அவர்களின் மனத்தின் சத்தங்கள்
காதுக்குள் விழ அனுமதிப்பதில்லை நான்
கூட்டம் ஒரு பொறுப்பு
தனிமை ஒரு விடுதலை
உன்னுடன் வந்துவிட்டால்
நானும் மூலவர் போலாகிவிடுவேன்”
புரிந்த மாதிரி தெரிந்தது
முழுதாய்ப் புரியவில்லை
புலம்பித் தீர்த்தாள்
“அவர் இங்கிருக்கட்டும்
நீ என்னுடன் வந்துவிடு”
காதலனைப் போல
கடவுளைக் கடத்த எண்ணியவளுக்கு
பாடம் புகட்டுவோமென
பிரகாரக் கடவுள் மறைந்து போனார்
பித்துற்று
கோயிலின்
மூலையெல்லாம் ஓடினாள்
மூலவரைக் காணவில்லை
பக்தர்கள் கூட்டமும் காணோம்
கோயிலுள் நானா?
என்னுள் கோயிலா?
குழப்பம் மேலிட
குழிந்திருந்த பிரகாரச்சுவரை
மீண்டும் நோக்கினாள்
அதற்குள் அடங்கி
மறைந்து போனாள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.