(சங்கியின்) தோல்வி நிலையென நினைத்தால்

(அனுபவப்பகிரல் – அரசியல்)

நேற்று வாட்ஸ்-அப்பில் ஒரு பார்வர்டு வந்தது. “வெற்றி பெற்றவர்கள் தோல்வியுற்றவர்கள் போன்று கவலையுறுதலும் தோல்வியுற்றவர்கள் வெற்றி பெற்றவர்கள் போன்று குதுகலிப்பதும் என விசித்திரமான முடிவைத் தந்துள்ளது இந்த தேர்தல்”

அப்போது நான் நம்பவில்லை! பாஜக தானே ஆளப்போகிறது பிறகென்ன அதன் ஆதரவாளர்களுக்கு துக்கம்? கூட்டாட்சி என்ன புதிதா? அடல் பிஹாரி வாஜ்பாயி ஒரு கூட்டாட்சியைத் தானே தலைமை தாங்கினார்? ஆனால் இது அத்தனை நேரான விஷயமில்லை ; பல நுணுக்கங்கள் பொதிந்தது என்பது இன்று மதியம் தெளிந்தேன்.

தலையைப் பிளக்கும் வெயிலில் போகலாமா வேண்டாமா என்று யோசித்து சென்றாக வேண்டிய சூழலில் அந்த வாடிக்கையாளர் நிறுவனத்துக்கு இன்று மதியம் சென்றேன். அவர் பெயர் விக்ரம் (உண்மைப் பெயரல்ல). நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர். லக்னோ நகரைச் சொந்தவூராகக் கொண்டவராதலால் இயல்பாகவே அவருக்கு நகைச்சுவை வருகிறது என்பது என் எண்ணம். ஆனால் இன்று மதியம் அவரைச் சந்தித்தபோது ஒரு வித மனப்பாரத்துடன் பேசினார்.

மீட்டிங் அறைக்குள் அவர் வந்ததும் சில நிமிடங்களுக்கு ஒன்றுமே பேசவில்லை. ஏதோ யோசனையில் ஆழ்ந்திருப்பவர் போல எங்கோ நோக்கிக் கொண்டிருந்தார். நான் லேசாக கனைத்தேன். கண் விழித்தவர் போல ஓர் உலர் புன்னகையை வீசினார்.

“எப்படி இருக்கீங்க” என்று கேட்டேன்.

“என்ன சொல்றது….” என்று ஆரம்பித்தவர் மீண்டும் அமைதியானார். ஓரிரு நிமிடங்கள் கழித்து “சொல்றதுக்கொண்ணுமில்ல” என்றார்.

“ஏன் ஏதேனும் பிரசினையா?”

“இந்த தேசமே பிரச்னை…பாருங்க ஒரு நல்ல கட்சியைத் தோற்க வச்சிருக்காங்க இந்நாட்டு மக்கள்”

காங்கிரஸ் அனுதாபியாக அவர் இருக்கக்கூடும் என்பதால் வருத்தத்தில் இருக்கிறார் என்று நினைத்தேன்.

“அழகா ராமர் கோயில் கட்டித் தந்த கட்சிக்கு ஓட்டளிக்க வக்கில்ல….நன்றி கெட்ட உபி மக்கள்.”

பொதுவாக வாடிக்கையாளர்களுடன் அரசியல் குறித்துப் பேசுவதில்லை. வியாபாரத்தை அது பாதிக்கும் என்ற பழைய எண்ணம் கொண்டவன். எனவே அலுவலக நண்பர்களிடமோ வியாபாரத் தொடர்புகளுடனோ என் அரசியல் குறித்த எண்ணங்களைச் சற்றும் பகிர்வதில்லை. விக்ரம் பேசுவதை தடுத்து நிறுத்தும் நோக்குடன் “சென்ற வாரம் நான் அனுப்பி வைத்த சாம்பிள் வந்து சேர்ந்ததா?” என்று உப்பு பெறாத கேள்வியை முன் வைத்தேன். அவரோ என் கேள்வியைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

“சாலைகள், ரயில்கள், என எந்த அரசாங்கம் இது மாதிரி செஞ்சிருக்கு…அதுக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டாமா?..தேர்தல் நாளில் குல்லு, மணாலி என்று விடுமுறையில் சென்று விடுவது…..தாடி வைத்து குல்லா போட்டவர்கள் அனைவரும் காலை ஏழு மணிக்கே வந்து குத்தோ குத்து என்று எதிர்க்கட்சிக்கு குத்திவிட்டு சென்றிருக்கிறார்கள்..’நம் ஆட்களோ’ தண்ணியடிச்சுகிட்டு ஓட்டல் ரூமில் படுத்துக் கிடந்திருக்கிறார்கள்”

“சார், அதான் மோதி வந்துட்டாரே….பின்ன என்ன கவலை?” அவருக்கு ஆறுதல் அளிக்கும் என்று சொன்னால் அவர் மனச்சிக்கல் அதிகமானது போல் இன்னும் சத்தமாகப் பேசலானார்

“நானூறுக்கு மேல் என்று அந்த மனுஷன் கேட்டாரில்ல…அவருக்கு வாக்களிக்கிறது நம் கடமைன்னு தெரிய வேண்டாம்? தப்பு அந்த மனுஷன் மேல….ஆர் எஸ் எஸ் அடிப்படைகளின் படி ஆட்சி செய்யாமல் ஏழைகளுக்கு வீடு தருகிறேன் என்று முஸ்லீம்களுக்கு (அவர் உபயோகித்த உரிச்சொல்லை இங்கு நான் பயன்படுத்த முடியாது) வீடு கட்டிக் கொடுத்த ஆட்சிக்கு இதுவும் வேணும் இதுக்கு மேலயும் வேணும்! எதிர்க் கட்சிகளுக்கு பயந்துகிட்டே ஆண்டால் எவன் ஓட்டு போடுவான்?”

இவர் என்ன சொல்கிறார்? தான் ஆதரிக்கும் கட்சியை விமர்சிக்கிறாரோ என்று எண்ணினேன். அவர் ஆழ்ந்த வேதனையில் இருக்கிறார் என்று உடன் புரிந்து போனது.

“அதாரிடேரியனாக ஆளத்தானே 2019இல் ஓட்டளித்தோம்! அந்தப் பிரக்ஞை இல்லாமல் இலவசங்களை அறிவித்துக் கொண்டே போனால்….ஏழைகள் பாழைகள் என்று கூவிக் கொண்டே போனால்…சரியில்லை…எதுவும் சரியில்லை” என்று சொல்லி நிறுத்தினார். அவர் சம நிலைக்கு வந்துவிடுவார் என்ற நம்பிக்கை பூத்தது. ஆனால் அப்பொது நான் ஒரு தவறைச் செய்தேன். “ஆமாம் சார், சமூக நீதிக்காக ஏதாவது பங்களித்திருக்கலாம்” என்றேன். அவர் என்னை மேலுங்கீழும் பார்த்தார்.

“சமூக நீதியா! அந்த வெண்ணெயல்லாம் எதிர்க்கட்சிங்க தானே பேசும்? ராமர் கோயில் கட்டிக் கொடுத்தவருக்கு எத்தனை செய்யணும்….அவரைத் தோற்கடிச்சிருக்காங்களே!” – விக்ரம் முகத்தைத் திருப்பிக் கொண்டார். சுவர்ப் பக்கமாகத் திரும்பி கண்ணீர் வடிக்கிறாரோ! மேசையில் இருந்த டிஷ்யுவை வேகமாக எடுத்து சுவரைப் பார்த்துக் கொண்டே முகத்தைத் துடைத்துக் கொண்டார்.

எனக்கோ குற்றவுணர்ச்சி! அவரை எப்படி சமாதானப்படுத்துவது! தண்ணீர்ப் பாட்டிலை அவர் பக்கம் தள்ளினேன். தேவையில்லை என்பது போல சைகை செய்துவிட்டு குரலைக் கனைத்துக் கொண்டார்.

“வீர சாவர்க்கர் சொன்னார் – எனக்கு ஆங்கிலேயர்கள் மீது பயமில்லை, முஸ்லீம்கள் மீது பயமில்லை, இந்துக்கள் மீது தான் பயம். இந்து மதத்தை மதிக்காத இந்துக்களிடமிருந்து தான் இந்து மதத்தைக் காக்க வேண்டும் – நாயுடு, குமார் என்று மொள்ளைமாரிங்களோட சேர்ந்து மோதி ஆட்சியமைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருப்பது யாரால…இந்துக்களால” என்று முழங்கிய போது அவர் சற்று தெளிவடைந்தது போலத் தெரிந்தார்.

நான் என் மடிக்கணினியைத் திறந்தேன். அவர் கவனத்தை திசைதிருப்பி எப்படியேனும் பேச வேண்டிய வியாபார விஷயத்துக்கு கொண்டு வந்து விட வேண்டும்!

“800 ஆண்டுகள் முகலாயர்களின் கீழ், பின்னர் 200 ஆண்டுகள் ஆங்கிலேயர்களின் கீழ் அடிமைகளாக இருந்திருந்து அடிமைகளாகவே இருக்கப் பழகி விட்டோம்”

“ஓ…தலித்துகளைச் சொல்லுகிறீர்களா,,,,ஆமாம் சாதீய சமூகத்தில்” – என்று நான் ஏதோ சொல்லி வைக்க, யாக குண்டத்தில் சுள்ளிகளை அள்ளிப் போட்டு விட்டால் பெரிதாகப் பற்றிக் கொள்ளும் தீ போல தன் வார்த்தைகளை உக்கிரமாக வீசினார் –

“இந்த கெட்ட வார்த்தைகளை காங்கிரஸ் போன்ற குடும்பக் கட்சிகள் மக்களிடையே பழக்கிவிட்டு…..ராகுல் கையில் அந்தச் சிவப்பு நிற அட்டை கொண்ட புத்தகத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டு குத்தோ குத்துன்னு குத்தியிருக்காங்க….அயோத்தியில் கூட பாஜகவை தோக்கடிச்சா அடுக்குமா…அந்தக் கோயில் வந்தது யாரால….அந்த மகானுபாவர் கட்டிக் கொடுத்திருக்காட்டி முட்டி போட்டு தொழுகைதான் பண்ண வேண்டியிருந்திருக்கும்”

விக்ரமின் சீனியர் முகுல் சரியாக அந்நேரமாக அறைக்குள் நுழைந்தார். பேசுபொருள் மாறிவிடும் வாய்ப்புகள் பிரகாசமாயிற்று.

“அனுப்பிய சாம்பிள் குறித்து” என்று நான் பேச யத்தனித்த என்னை “ஒரு நிமிஷம் கணேஷ்” என்று கூறி மீண்டும் தடுத்தார் விக்ரம்.

“நேற்றைய டிபாகிள் பத்தித் தான் கணேஷ்கிட்ட பேசிக்கிட்டிருந்தேன்”

“பேசிப் பயன் என்ன….பதினைஞ்சு சீட் ஜெயிச்சுட்டு 240 சீட் ஜெயிச்ச கட்சிகிட்ட உள்நாட்டு விவகாரம், சபாநாயகர், துணை பிரதம மந்திரி என்று பட்டியல் கொடுக்கும் கட்சிகளுடன் காலந்தள்ள வேண்டிய இக்கட்டுக்கு இந்நாட்டு மக்கள் தள்ளிவிட்டு விட்டனர்” – இது முகுல்.

“குமாரை கூட்டணிக்குள் மோதி தானே இழுத்துகிட்டு வந்தாரு?” என்று அப்பாவித்தனமாகச் சொன்னேன்.

“இந்தக் கண்றாவிக்காகத் தான் 273 சீட்டுகளை கூட்டணியில்லாமலேயே தலைவர் வென்றிருக்கணும்…அங்கே கோட்டை விட்டுட்டு நாயுடு, குமார் இருவர் கிட்டயும் கையேந்தி நின்னா?”

காதுகளில் இருந்து ஏதோ வழிவது போல இருந்தது. அதைத் தொட்டுப் பார்த்துக் கொண்டேன். “எக்ஸ்க்யூஸ் மீ” என்று சொல்லி அறைக்குள்ளிருந்து வெளியே வந்து பர்ஸில் வைத்திருந்த பஞ்சை எடுத்து இரண்டாகப் பிரித்து காதுக்கொன்றாக அவற்றை வைத்து அடைத்துக் கொண்டு அறைக்குத் திரும்பினேன்.

இப்போது முகுல் கண்களில் கண்ணீர்! விக்ரம் டிஷ்யூ பேப்பரால் முகுலின் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தார். காதுகளில் பஞ்சடைந்திருந்ததால் ஒருவருக்கொருவர் என்ன ஆறுதல் சொல்லிக் கொண்டனர் என்பதைக் கேட்க முடியவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.