திரைக்கதை உருவான கதை

திரு. கார்த்திக் சுப்புராஜ் கண்ணை கசக்கிக் கொண்டிருந்தார். அடுத்த படத்துக்கான கதைக்கருவை யோசித்து யோசித்து எதுவும் தோன்றாமல் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தார். அவர் ஓர் இயக்குனர் என்பதை அவரால் மறக்க முடியவில்லை. ஏதாவது படம் எடுத்தாக வேண்டும் என்ற கட்டாயம் அவரை துரத்திக் கொண்டிருந்தது. பாகுபலி போன்ற படங்களின் வெற்றியைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தவருக்கு எங்கிருந்து ஆரம்பிப்பது என்று பொறி தட்டியது. தானியக்கிய ஒரு நல்ல படத்தின் ப்ரான்சைஸ் அல்லது சீக்வல்தான் எடுக்கப்போகும் அடுத்த படம் என்று முடிவெடுத்தார். பார்வையாளர்களை ஈர்ப்பதற்கான அவரின் செயல்முறையில் நல்ல தெளிவு இருந்தது. ஜிகர்தண்டா என்ற பெயர் படத்தின் தலைப்பில் இருந்துவிட்டால் போதும்! ஜிகர்தண்டா பாகம் ஒன்றின் ரசிகர்கள் நிச்சயம் தியேட்டர்களுக்கு வந்து விடுவார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவருக்கு இருந்தது.

நெட்ப்ளிக்ஸைத் திறந்து ப்ரௌஸ் செய்யலானார். ஓர் ஆவணத்தொடர், ஓர் ஆவணப்படம், வெற்றி பெற்ற பான் இந்தியா தெலுங்கு படம் – மூன்றையும் ஒன்றன் பின் ஒன்றாகப் பார்த்தார். சரி விகிதத்தில் கலக்கலாம் என்று வேலையை ஆரம்பித்தபோது பழங்குடிகள் படும் அவலத்தை சித்திரித்து வெற்றி பெற்ற தமிழ்ப்படம் ஞாபகம் வந்து அதையும் சேர்த்துக் கொண்டார். போன வருடம் பெரும் வெற்றி பெற்ற கன்னடப்படம் ஒன்றையும் ஊறுகாய் போலத் தொட்டுக் கொண்டார். கலவையின் பண்டங்கள் குறித்து முடிவானதும் அதிக நேரம் பிடிக்கவில்லை. முதல் காட்சியில் வழக்கமான “காட்ஃபாதர்” குறிப்பையும் சேர்த்துக் கொண்டார். அதில்லாமல் தமிழ்ப்படம் எடுக்க முடியுமா என்ன? கிளின்ட் ஈஸ்ட்வுட் பாணி தொப்பி ராகவா லாரன்ஸுக்கு நன்றாக இருக்கும். ஆனால் மதுரை கேங்க்ஸ்டர் தொப்பி அணிவானா என்ன? கிளின்ட் ஈஸ்ட்வுட்டை படத்துக்குள் கொண்டுவந்துவிட்டால் தொப்பி அணியலாம். ஈஸ்ட்வுட் படத்தை செர்ஜியோ லியோன் தான் இயக்க வேண்டும் என்று சட்டமேதும் இல்லையாதலால் சத்யஜித் ரே-யின் உதவியாளர் ஒருவர் இயக்குவதாக வைத்துக் கொண்டார் கார்த்திக். இரண்டாம் பாதியை எழுதும் போது வினியோகம் செய்யப்போகும் நிறுவனத்தை திருப்திப் படுத்த வேண்டும் என்று நினைத்தார். பெயரிடப்படாத பெண் முதல்வர் பாத்திரம் மந்திரிகளை செருப்பால் அடிப்பது போல் காட்சி வைத்தால் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய வினியோக நிறுவனத்துக்கு ஊக்கம் பிறக்கும். சென்டிமென்ட், சமூகக் கருத்து – இவையில்லாத தமிழ்ப்படங்கள் உப்பில்லாப் பண்டங்கள் என்பதை அறியாதவரா என்ன இயக்குனர்? பச்சடி, துவையலாக படைக்கும் விருந்தில் அவற்றையும் சேர்த்துக் கொண்டார்.

எழுதி முடித்து நெட்டி முறித்துக் கொண்டிருந்தபோது இசையமைப்பாளர் சந்தோஷ் போனில் அழைத்தார். “காதல் பாட்டு ஒண்ணு வேணும்னு கேட்டீங்களே, மெட்டு தயார், வாட்ஸப்பில் அனுப்பியிருக்கேன்” என்றார். “படத்துல காதல் பாட்டு இல்ல சந்தோஷ், பழங்குடிகள் கோஷ்டியாக பாடும் வனப்பாடல் ஒன்று உண்டு” என்று கார்த்திக் சொன்னபோது “பிரச்சினையில்லை, வாட்ஸப்பில் அனுப்பின அதே சத்தத்தையே யூஸ் பண்ணிக்கலாம். இன்ஃபாக்ட் நீங்க சிச்சவேஷனே சொல்ல வேண்டாம். எந்த சிச்சுவேஷனா இருந்தாலும் அதே டியூன யூஸ் பண்ணலாம். பா ரஞ்சித்தோட அடுத்த படத்துக்காகக்கூட அஞ்சு நிமிஷம் முன்னாடி அவருக்கு இதே டியுன அனுப்பிவச்சேன்” என்றார் சந்தோஷ்.