இரு மரங்கள் 

தன்னுடைய ஞான முயற்சியின் சகாவாக போதி மரத்தை ஒரு வாரத்துக்கு நன்றியுணர்ச்சியுடன் புத்தர் நோக்கிக் கொண்டிருந்தார் என்று பௌத்த மரபு சொல்கிறது. பிற்காலத்தில் அந்த போதி மரத்தைச் சுற்றி ஒரு கோயிலை எழுப்பினார் அசோக மாமன்னர். போதி மரத்தின் மேல் அசோகர் கொண்டிருந்த அளவற்ற பக்தியை சகிக்க இயலாமல் அவருடைய அரசிதிஸ்ஸாரக்காபோதி மரத்தின் கீழ் முள் செடிகளை வளர்த்ததாகவும் அதன் காரணமாக மிக விரைவில் போதி மரம் பட்டு வீழ்ந்ததாகவும் தொன்மக் கதை ஒன்று உண்டு. அதே இடத்தில் இன்னொரு போதி மரம் வளர்ந்ததாகவும் அந்த மரம் புஷ்யமித்ர சுங்கன் என்னும் மன்னனால் வெட்டி எறியப்பட்டதாகவும், பின்னர் அடுத்து வளர்ந்த போதி மரம் கி பி ஆறாம் நூற்றாண்டில் கௌட மன்னன் சசாங்கனால் வெட்டி எறியப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அசோகர் காலத்தில் இருந்த மூல போதிமரத்தின் கிளை இலங்கைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அனுராதாபுரத்தில் நடப்பட்டு இன்றளவும் உயிருடன் உள்ளது. உலகின் மிகப்பழமையான தாவரம் என்று தாவரவியல் வல்லுநர்கள் அனுராதாபுரத்தின் போதிமரத்தைக் குறிப்பிடுகிறார்கள்.

புத்தருக்கு பல  நூற்றாண்டுகளுக்கு  முன்பாக  இன்றைய  கிழக்கு இரானில் புழங்கியவரும் இறைத்தூதர் என போற்றப்படுபவரும்  சரதுஷ்டிரர் என்றும் ஜொராஸ்டர் என்றும் குறிப்பிடப்படும் ஜொராஸ்ட்ரிய சமயத்தின் நிறுவுனர் சுவர்க்கத்திலிருந்து ஒரு சைப்ரஸ் மரக்கிளையை எடுத்து வந்ததாக ஷாநாமாவில் பிர்தவுசி குறிப்பிடுகிறார். நாட்டின் மன்னனாக இருந்த விஷ்டாஸ்பா ஜொராஸ்டிர மதத்தை தழுவியவுடன் அக்கிளையை இன்றைய இரானில் உள்ள காஷ்மர் எனும் இடத்தில் ஜொராஸ்டிரர் நட்டார் என்பது ஜொராஸ்டிர மரபு. ஜொராஸ்டிரர்கள்  அதை புனித மரமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வணங்கி வழிபட்டு வந்தனர். கி பி 861 இல் அப்பாஸித் காலிஃபா அல்முத்தகீல் அம்மரத்தை வெட்டிச்சாய்த்து அதன் மரக்கட்டைகளை சமாராவில் (இன்றைய இராக்) அவர் கட்டிய அரண்மனையின் உத்திரமாக பயன்படுத்திக் கொண்டார். அந்த கோட்டை சமாராவில் இன்னும் நின்று கொண்டிருக்கிறது.

 

ப்ரொகிராமிங்

உதிரிபாகம் பழுதாகி
கட்டுப்பாட்டை இழந்து
கண்மண் தெரியாமல் ஓடி
டெட் என்ட் ஸ்ட்ரிட்டில்
நின்று போன வண்டியை
ஓட்டுபவன் அறிவான்
பழுதான பாகம் எதுவென
உயிர் வண்டியை ஓட்டியவனோ
ஒன்றும் தெரியாமல் விழிக்கிறான்
தானே ஓட்டுனனென
நினைத்த வண்டியை
ப்ரொகிராமிங் செய்தது யார்
எனும் கேள்வியும்
அவனுள் ப்ரொகிராமிங் செய்யப்பட்டிருக்கிறது.

சப்பே சதா பவந்து சுகிததா

அனைவருக்கும் புத்த பூர்ணிமா வாழ்த்துகள்.

ஒரு தமிழ் தொலைக்காட்சி கேட்டுக்கொண்டதற்கு இணங்கி லாக் டௌனின் போது புத்த பூர்ணிமா தினத்தன்று ஒலிபரப்புவதற்கென ஒரு தம்ம உரையை மொபைலில் பதிவு செய்தேன். சில தொழில்நுட்ப காரணங்களால் அந்த உரையை ஒலிபரப்ப இயலாது என தொலைக்காட்சி சொல்லிவிட்டது. அந்த உரையை யூட்யூபில் ஏற்றினேன். சுட்டியை கீழே காணலாம்.

பயம் – கலீல் கிப்ரான்

 

கடலுள் நுழையுமுன்
நதிக்கு நடுக்கமேற்படுமென
கூறப்படுகிறது

மலைகளின் உச்சிகளிலிருந்து
காடுகளினூடே
கிராமங்களினூடே
வளைந்து செல்லும் பாதையில்
தான் வந்தவழியை
பின்திரும்பி நோக்குகிறாள்
தன் முன்னம்
பரந்து விரியும் கடலை நோக்குகிறாள்
இதற்குள் நுழைவது என்பது
நிரந்தரமாக மறைந்துபோவதைத் தவிர
வேறேதுமில்லை
ஆனால் வேறு வழியில்லை!

நதி பின்திரும்பிச் செல்ல முடியாது
யாரும் பின்திரும்பிச் செல்ல முடியாது
இந்த இருப்பில் பின்திரும்பிச் செல்லுதல் சாத்தியமில்லை
கடலுள் நுழையும்
இடர்பாட்டை அது சந்தித்துத்தானாக வேண்டும்!
ஏனெனில் அப்போதுதான் அதன் பயம் விலகும்
ஏனெனில் அங்குதான் நதி ஒன்றைப் புரிந்து கொள்ளும்
– இது கடலுக்குள் மறைந்து போவதைப் பற்றியதன்று,
கடலாக மாறுவதைப் பற்றியது