வரலாற்றை எப்படி அணுகுவது?

வரலாற்றை எப்படி அணுகுவது? காலத்தின் பாய்ச்சல், கருத்துகளின் வெள்ளோட்டம், நிகழ் கலாச்சாரத்தின் உற்பத்தி ஸ்தானம், மனித இனம் முன்னர் செய்த தவறுகளின் பகுப்பாய்வு, இன்னும் எத்தனையோ விதமாக படிக்கலாம்! ஆனால் பெருமிதவுணர்வுடன்? கழிவிரக்கத்துடன்? முன்னர் நடந்த அநியாயங்களுக்கான பழி வாங்கும் உணர்வை தூண்டும் கதையாடலாக? ஓர் உதாரணமாக – ஜொராஸ்டிரர்களின் குறைந்த மக்கள் தொகையைப் பற்றி கேள்விப்படும் போது, விரைவாக மறைந்து போகத்தக்கதொரு கலாச்சாரக் குழுவாக அவர்களை எண்ணும் போது உடனடியாகத் தோன்றும் வருத்தம் / பரிதாப உணர்ச்சி. இது வரலாறை வாசிக்கும் சரியான வழியாக இருக்க முடியுமா?

சில வாரம் முன்னர் ஓர் ஆவணப்படம் பார்த்தேன். பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் மொத்தம் எஞ்சியிருக்கும் பார்சி மக்கள் தொகை வெறும் 23 பேர்களாம். அந்த 23 பேரில் இளைஞர்கள் வெறும் நான்கு பேராம். மற்றவர்களனைவரும் மரணம் எந்நேரமும் அணுகக் கூடிய வயதில் இருப்பவர்கள். அந்த ஆவணப்படம் என்னை மிகவும் பாதித்தது. ஒரு காலத்தில் உலகின் மூத்த நாகரீகங்களில் ஒன்றாக இருந்த சமய / கலாச்சாரக்குழு எண்ணிக்கையில் இவ்வளவு சுருங்கக் காரணங்கள் என்ன? அவர்களின் கலாச்சாரம் தவழ்ந்த மண்ணில் ஏன் இன்று அவர்கள் இல்லை? (இரானில் இன்று ஜொராஸ்டிரத்தை பின்பற்றும் மக்களின் எண்ணிக்கை இருநூறு!)  மிகவெளிப்படையான காரணம் ஏழாம் நூற்றாண்டில் பாரசீகம் அராபியர்களின் கட்டுப்பாட்டில் வந்ததுதான்! இது பற்றிய வரலாற்றுத் தகவல்களை படிக்கத் தொடங்கியதும் அராபியர்களின் அடக்குமுறை, ஜொராஸ்டிரர்களின் எதிர்ப்பை ஒவ்வொருமுறையும் ஒடுக்குதல், அவர்கள் இஸ்லாத்தை தழுவும் வகையிலான சமூக விதிமுறைகளை செயல்படுத்துதல், நெருப்பு கோயில்களை சேதப்படுத்துதல், முதுகெலும்பை உடைக்கும் ஜிஸியா வரியைவிதித்தல், – இவற்றை புரிந்துகொள்வதில் அதிக சிரமம் இருக்க முடியாது. 

ஒன்பதாம் நூற்றாண்டில்  குஜராத் கடற்கரை வழியாக இந்தியாவிடம் தஞ்சம் புகுந்திராவிடில் ஜொராஸ்டிரர்கள் இன்று எஞ்சியிருப்பார்களா? இந்த கேள்விக்கு நாம் ‘இல்லை’ என்று பதிலளிப்போமாயின் மனித வரலாற்றை ஒற்றை குமிழுக்குள் நாம் அடைக்க முயல்பவர்கள் ஆகிறோம். வரலாற்றின் போக்கை தர்க்க ரீதியாக கணித்தல் சாத்தியமில்லை என்னும் பாடத்தை வலுப்படுத்தும் பலதகவல்களில் ஒன்றாகத்தான் நாம் இதைப் பார்க்கவேண்டும். இந்தியா வராமல் தாய் நாட்டில் தங்கி அராபியர்களை எதிர்த்து மடிந்துபோனவர்களின் நோக்கில் இந்தியாவில் தஞ்சம் புகுந்தவர்கள் ‘கோழைகள்’ என்பதாக பார்க்கப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. பதினொன்று நூற்றாண்டுகள் கழித்து ஜொராஸ்டிர சமயத்தை இன்னமும் உயிர்ப்புடன் வைத்திருப்பவர்கள் அவர்கள்தாம் என்னும் தகவலின் வெளிச்சத்தில் ஒன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு அகதிகளாகச் செல்ல எடுக்கப்பட்ட முடிவின் முக்கியத்துவம் புரியும். 

அரைகுறையான வரலாற்று வாசிப்பிற்குப் பின்னர் ‘அது அநியாயம்’ என்பதாக சீற்றம் அல்லது வருத்தம் அல்லது கழிவிரக்கம் கொள்ளுதல் வரலாற்றின்  இயக்கத்தை, அதன் உண்மையான பாடங்களைப் புரிந்து கொள்ளாமல் செய்துவிடும். வரலாற்றை வாசிப்பதன் நோக்கம் அதீத உணர்ச்சிகளை நம்முள் எழுப்பிக் கொள்வதன்று.

இஸ்லாமிய காலிஃபாக்கள் பெர்சிய சாஸனியப் பேரரசைத் தாக்கி பெர்சியாவை தம் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். ஆம், கடுமையான போர் மற்றும் வன்முறை தான் அவர்களின் உத்தியாக இருந்தது. ஆனால் ஒன்றை நாம் மறுக்க முடியாது. பலத்த எதிர்ப்பை அவர்கள் சந்திக்காமல் இல்லை. ஜொராஸ்டிரர்களின் எதிர்ப்பு வரலாற்றில் நன்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

இஸ்லாமிஸ்டுக்களான அராபியர்கள் இரானின் கலாச்சாரத்தை, பண்பாட்டை அழிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. இதன் காரணமாக ஜொராஸ்டிரர்களுக்கு புது மதத்தை ஏற்பது எளிதாக இருந்தது. அதே சமயத்தில் இஸ்லாமைத் தழுவினாலும் இரகசியமாக பல நூற்றாண்டுகளாக ஜொராஸ்டிர கலாசாரத்தை பின்பற்றுபவர்களாக வே இருந்து வந்துள்ளனர் என்பதுவும் வரலாறு. 

பின் வந்த நூற்றாண்டுகளில் புதுவகை சமய உட்பிரிவுகள் (‘மதப்’) தோன்றின. யர்சான், அலாவிஸ் போன்ற உட்பிரிவுகள் ஜொராஸ்டிரிய, ஷியா இஸ்லாமிய சமயங்களின் கலவைகளாக இருந்தன. இத்தகைய பிரிவுகளை தம்மை இஸ்லாமியர்களாக காட்டிக் கொள்வதாகவே பயன்படுத்திக் கொண்டனர் இரானியர், ஆனால் வாஸ்தவத்தில் ஜொராஸ்டிரத்தின்  மூலக்கொள்கைகளை நம்புபவர்களாகவே அவர்கள் இருந்திருக்க வேண்டும்.

சுன்னி பிரிவிலிருந்து சமய ரீதியாக கோட்பாட்டு ரீதியாக வேறுபட்ட பிரிவு ஷியா என்பது உண்மைதான். எனினும், துவக்கத்தில் அதிகாரத்தில் இருந்த இஸ்லாமிஸ்ட்டுக்களை மறுக்கும் ரீதியிலேயே ஷியா பிரிவுக்குள் சேர்ந்தனர் இரானியர். அடிப்படையில் பழைய மதக்காரர்கள் (ஜொராஸ்டிரர்கள்) கடைசி வரை புது மதத்தை நம்பவில்லை. பெரும்பான்மையர் இஸ்லாத்துக்குள் வந்தனர் என்பது உண்மை தான், ஆனால், அவர்களின் பழைய மதத்தின் நம்பிக்கைகளும் சடங்குகளும் அவர்களுடனேயே இருந்தன. உதாரணத்திற்கு, சோஷண்ட் என்னும் மீட்பருக்காக காத்திருத்தல் ஜொராஸ்டிரர்களின் மதநம்பிக்கை. இந்தக் குறிப்பிட்ட அம்சம், பன்னிரெண்டாவது இமாமுக்காக (மஹ்தி) ஷியாபிரிவைச்சார்ந்தவர்கள் இன்னும் எதிர்நோக்கியிருக்கும் நம்பிக்கையாக உருமாறியது என்கிறார்கள். 

வரலாற்றின் இயக்கம் hindsight – இன் உதவியால் மட்டுமே உணரக் கூடியதாக இருக்கிறது. உடனடி நிகழ்கால சம்பவத்துக்கான நம்முடைய எதிர்வினைகள் நம் மனச்சமநிலையை மீட்பதற்கான முயற்சிகள். அவ்வெதிர்வினைகளின் உண்மை விளைவை காலத்தின் பாய்ச்சல்தான் சில முறை நமக்கும், பொதுவாக வருங்கால சந்ததிக்கும் நிகழ்த்திக் காட்டும்.