Category: Uncategorized

  • முதல் புத்தகம்

    சில இணைய இதழ்களில் வெளிவந்து பின்னர் இந்த வலைதளத்தில் வலையேற்றிய 23 சிறுகதைகளை காலச்சுவடு நிறுவனம் தொகுப்பாக வெளியிட்டிருக்கிறது.

    பக்கங்கள் : 208
    விலை : ரூ 190

     

    Book Cover

     

  • விரியும் காட்சி

    ஜூலியோ கொர்த்தசாரின் “blow-up” சிறுகதை குறித்து

    சிறுவயதில், அதாவது மூன்றாம் அல்லது நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது,  ஒரு முறை என் குடும்பத்தினருடன் காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு பயணமான போது நான் கண்ட காட்சி என் நினைவில் இன்னும் இருக்கிறது. அந்தப் பயணத்தை நான்  மறக்காமல் இருப்பதற்கு இன்னொரு முக்கிய காரணம் புளிமுட்டைகள் போல் அடைந்தவாறு பயணம் செய்தது. கூட்டமென்றால் அப்படியொரு கூட்டம். பஸ்சில் ஏறும்போது “இந்த பஸ் போகட்டும் ; வேறு பஸ்சில் போகலாம் “ என்று என் மூத்த அண்ணன் சொன்னார். ஆனால் யாரும் கேட்கவில்லை. முட்டி மோதிக்கொண்டு எல்லோரும் ஏறினார்கள். என் அம்மா முன் வாயில் வழியாக பஸ்சில் ஏறினார். நாங்களெல்லாம் பின் வழியாக. என்னால் முதல் படியிலிருந்து இரண்டாவது படிக்கு முன்னேற முடியவில்லை. கண்டக்டர் என்னை பஸ்சுக்குள் இழுத்துவிட்டார்.

    இருக்கைகள் எல்லாம் நிரம்பியிருந்தன. ஏற்கெனவே பல பேர் நின்றிருந்தனர். பஸ்சின் நடுப்பாகம் வரை முக்கி முக்கி முன்னேறினேன். வலப்புறம் ஜன்னல் இருக்கையொன்றில் அமர்ந்திருந்த பெரியவர் “வா தம்பி” என்று அழைத்தார். இருக்கைகளுக்குள் நுழைந்து பெரியவரின் மடியில் உட்கார்ந்து கொண்டேன். வெள்ளை ஜிப்பாவும் வெள்ளை வெட்டியும் அணிந்திருந்தார். நெற்றியில் விபூதிப்பட்டையும் சந்தனப் போட்டும் இட்டிருந்தார். நரைத்த மீசையின் ஒரு சில முடிகளை அவரின் விரல்கள் நீவிய வண்ணம் இருந்தன. “ஓவர் லோடு ஏத்தறான் பாரு” என்று சலித்துக் கொண்டார். என் தாய், தந்தை, சகோதரர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பஸ்சில் எல்லோரும் ஏறியிருப்பார்களா என்ற ஐயம் அவ்வப்போது வந்து என் பயவுணர்வை அதிகப்படுத்தியவாறிருந்தது. மனதில் “முருகா முருகா” என்று உச்சரித்துக் கொண்டிருந்தேன். பஸ் நகர ஆரம்பித்து கொஞ்ச தூரம் போனதும் பழகிவிட்டது. பயம் இல்லை. பெரியவர் தன்  பாக்கெட்டிலிருந்து பிளாஸ்டிக் காகிதம் சுற்றிய மிட்டாய் ஒன்றைக் கொடுத்தார். புளிப்பு ஆரஞ்சு மிட்டாய். ஆரஞ்சு மிட்டாயை மெல்லுகையில் நாக்கின் பின்பகுதி சற்று உலர்ந்து போகும். தாகமெடுக்கும். ஆனால் அதைப்பற்றி கவலைப்படாமல் நான் மெல்லத் தொடங்கினேன். என் தம்பியின் தலை இரண்டு வரிசை முன்னதாக தெரிந்தது. அப்பா பின் வரிசைகளுக்கருகே நின்று கொண்டிருப்பார். கூட்டம் குறைந்ததும் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் எங்கு உட்கார்ந்திருக்கின்றனர் என்று தெரிந்து விடும் என்ற சிந்தனை சுமைத்தணிவை ஏற்படுத்தியது.

    பஸ் வாலாஜாபாத் டவுனுக்குள் நுழையும் போது பெரியவரின் மாடியிலிருந்து இறங்கி, அவர் காலுக்கு நடுவே நின்று கொண்டேன். “பரவாயில்லே தம்பி…உட்கார்ந்துக்கோ” என்றார். பஸ் ஸ்டாண்டுக்கு மிக அருகே  முன்னும் பின்னுமாக  பஸ்கள். என் பார்வை கடைகளையும் சாலையில் நகரும் மனிதர்களையும் வாகனங்களையும் நோக்கிக் கொண்டிருந்தது. எதிரில் ஒரு வீதி கடை வீதியுடன் இணைந்தது. அந்த வீதியில் அவ்வளவாக போக்குவரத்து இல்லை. தார் ரோட்டின் இரு மருங்கிலும் சாக்கடைகளுக்கு முன்னர் மண் தரை. ஜல்லிக் கற்கள் ஆங்காங்கே குவிக்கப்பட்டிருந்தன. அப்போது தான் அந்தக் காட்சியைப் பார்த்தேன். ஒரு சிறுவன் முஷ்டிக்குள் ஏதோவொன்றை இறுக்கிக் கொண்டு தாறுமாறாக ஓடிக் கொண்டிருந்தான். அவன் முன்னால்  வந்த மாட்டின் பின்புறத்தை கிள்ளியதும் மாடு ஒதுங்கி அவனுக்கு வழிவிட்டது. அந்த பையன் அரை நிஜார் அணிந்திருந்தான். சட்டை அணியவில்லை. இரு பட்டிகள் அவன் அரை நிஜாரை தாங்கிப் பிடித்தன. சிறுவனின் முகத்தில் பவுடரா அல்லது சுண்ணாம்புப் பொடியா தெரியவில்லை. முகத்தில் திட்டுத்திட்டாக வெண்மை. அவன் தனியே ஓடிக்கொண்டிருக்கவில்லை. அவனை யாரோ துரத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் கவனிக்க சில வினாடிகள் பிடித்தன. அவனை துரத்துபவர் ஒரு  முதியவர். அவர் ஓட்டத்தில் முதுமை தெரியவில்லை. ஓர் இளைஞனின் வேகம் அவர் கால்களில். வேட்டி அணிந்திருந்தார். அவரும் சட்டை அணியவில்லை. வேட்டியை மடித்துக் கட்டியிருந்தார். அவர் தலைமுடி செம்பட்டை நிறத்தினதாக இருந்தது. அவர் ஏதோ கத்திக்கொண்டே வந்தார். பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைவதற்காக காத்து நின்றிருந்த பஸ்களின் ஹார்ன்  சத்தம் காரணமாக துரத்துபவர் என்ன கத்தினார் என்று எனக்கு கேட்கவில்லை. தள்ளு வண்டிக்காரன் ஒருவன் இடையில் வந்ததால் பையன் ஓடும் வேகத்தை குறைக்க வேண்டியதாய் போயிற்று. செம்பட்டை முடிக்காரர் மிகவும் நெருங்கிவிட்டார். பையனின் தோள் பட்டியை பிடித்திழுத்தார். பையன் அவரிடமிருந்து சில தப்படிகள் தள்ளி ஓடினான். ஆனால் துரத்தி வந்தவர் மிக அருகில் வந்து விட்டார். பையனின் முதுகில் கையை வைத்து தள்ளினார். பையன் தொபுக்கடீறேன்று தரையில் விழுந்தான். சாலையோரத்தில் குவிக்கப்பட்டிருந்த ஜல்லிக்கற்கள் மேல் தான் பையன் விழுந்திருக்க வேண்டும். அவனுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. நான் கவனிக்கவில்லை. தள்ளிவிட்ட செம்பட்டை முடிக்காரர் ஓரு  சலனமுமின்றி, எதுவுமே நடக்காதது போல  முதுகைத் திருப்பிக் கொண்டு  எந்த திசையிலிருந்து ஓடி வந்தாரோ அந்த திசை நோக்கி திரும்பி நடக்கலானார். அதற்குள் என் பஸ் நகர்ந்து வாலாஜா பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைந்துவிட்டது.

    பஸ்சில் இருக்கும் வேறு யாரும் சிறுவன் தள்ளிவிடப்படும் காட்சியை பார்க்கவில்லை என்று தோன்றியது. என்னை மடியில் உட்கார வைத்துக் கொண்டிருந்த பெரியவரும் பார்க்கவில்லையென்றே தோன்றியது. ரோட்டுக்கு நடுவில் எல்லோருக்கும் மத்தியில் நடந்த நிகழ்ச்சியை எப்படி பார்க்காமல் இருந்திருக்க முடியும். ஸ்தலத்தை விட்டு பஸ் நகர்ந்த பிறகு அங்கு என்ன நடந்திருக்கும்? சிறுவனுக்கு என்ன ஆயிற்று? ரத்தக் காயம் பட்டிருக்குமா? ஜல்லிக் கல் அவன் கண்ணை பதம் பார்த்திருக்குமா? ஒரு பலமான கல்லின் மேல் அவன் தலை மோதியிருக்குமா? அந்த ஆள் அப்படி ஏன் சிறுவனை மூர்க்கமாக தள்ளி விட வேண்டும்? யார் அந்த ஆள்? அந்த சிறுவன் என்ன பண்ணினான்? அவரிடமிருந்து சிறுவன் ஏதாவது திருடினானா? வன்முறைக் காட்சி என் மனதில் ஏற்படுத்திய அதிர்விலிருந்து எளிதில் மீளக் கூடியதாய் இல்லை. யாரோ துரத்திக் கொண்டு வருவது மாதிரியான கெட்ட கனவுகள், சிறுவனின் இடத்தில் என்னை கற்பனை கொண்டு சிறுவன் பட்டிருக்கக் கூடிய வலியை கற்பனை செய்து பார்த்தல் என்றவாறெல்லாம் என் கண்ணில் கண்ட காட்சியை வாழ்ந்து கொண்டிருந்தேன்.

    நாற்பது வருடங்களுக்குப் பின்னர் இன்று அக்காட்சியை நினைத்துப் பார்த்து தருக்க பூர்வ கற்பனையுடன்  காட்சியின் சூழலை பகுத்தாய்ந்து விரித்துக் கூறிவிட முடியும். ஆனால் அது வெறும் கற்பனையாக மட்டுமே இருக்கும். அந்த வயதில் எனக்கிருந்த முதிர்ச்சியில்  காட்சி என்னுள் ஏற்படுத்திய உணர்வலைகள் என்னைப் பொறுத்தவரையில் மட்டுமான நிஜம். கிண்டியில் வந்து நான் இறங்கும்  போது பிற பயணிகளும் என்னுடைய குடும்பத்தாரும் அவரவருக்கான யதார்த்தத்தில் தோய்ந்து  ஒரு பொது யதார்த்த உலகில் இருப்பதான  கற்பிதத்துடன் இறங்கியிருப்பார்கள்.           

    காட்சிகள் நம்முள் உச்ச பட்ச தாக்கத்தை உண்டு பண்ண வல்லன. காட்சிகளின் பொருள்படுத்தல் காட்சிக்கு முன்னதான சம்பவங்களின், பின்னதான சம்பவங்களின் பாற்பட்டது. காட்சி சார்ந்த சூழல் பற்றிய அறிதல் இல்லாமல் போகும் பொழுது நம்முள் வெவ்வேறு உணர்வு நிலைகள்  தோன்றியவாறு  இருக்கின்றன. அளவற்ற ஊகங்கள் வாயிலாகவும் அறிவார்ந்த ஆனால் போதிய தகவல்கள் இல்லாத பகுப்பாய்வுகள் வாயிலாகவும், அக்காட்சியைக் கண்ட போது நமக்கிருந்த மனநிலை நம்முள் எழுப்புவித்த உணர்வுகள் வாயிலாகவும், அக்காட்சி நெடுநாள் நம் மனக்கண்ணிலிருந்து நீங்காமல் இருக்கிறது. காலப்போக்கில் அக்காட்சியை நாம் மறந்துவிட்டாலும் என்றாவது ஒரு நாள் அது நினைவில் திரும்ப வரும் போது ஒரு சில நிமிடங்களுக்காவது முன்னர் ஏற்படுத்திய அதே தாக்கத்தை அதே உணர்வலைகளை ஏற்படுத்தாமல் இருப்பதில்லை. காட்சியைக் கண்ட காலத்திற்குப் பிறகு நம் அனுபவ அறிவு எவ்வளவு முதிர்ந்திருந்தாலும் காட்சியின் பிண்ணனி பற்றிய அறியாமை ஒரு வித இயலாமைக்குள் நம்மைத் தள்ளி விடுவதை உணராமல் இருக்க முடிவதில்லை.

    +++++

    ஜூலியோ கொர்த்தசார் எழுதிய “Blow-up” சிறுகதையை நண்பர் ஒருவர் பரிந்துரைத்தார். முதன்முறை படித்த போது கண்ணைக் கட்டி காட்டில் விட்டது மாதிரி இருந்தது. சரியாகப் புரியவில்லை. ஆனாலும் கதை மேலும் படிக்கும் படி என்னைத் தூண்டியது. இரண்டாம் முறை படித்தேன். இணையத்தில் “Blow-up’ பற்றிக் கிடைத்த “reader”-களையும் வாசித்தேன். அவைகள் உதவிகரமாக இருக்கவில்லை.   நான்காவது வாசிப்பில் கதைப்பிரதியுடனான உறவு நெருக்கமானது. முழுமையான புரிதலை எட்டினேன் என்று சொல்ல முடியாது.  “முழுமையான  புரிதல் என்பதே ஒரு கற்பிதம் ; யதார்த்தம் பன்மைத் தன்மை பூண்டு பலவாறாக பிரிந்து கிடக்கிறது. ஒற்றைத் தன்மையும் தெளிவும் அதற்கில்லை” – இதைத்தான் கதை சொல்கிறதோ?

    வாலாஜாவின் வீதியொன்றில் ஒரு சிறுவன் தள்ளிவிடப்படும் காட்சி முதிரா மனநிலையில் என்னுள் ஏற்படுத்திய கொந்தளிப்பு மாதிரி கதைசொல்லி மிக்கேலுக்கும் நிகழ்கிறது. கொந்தளிப்பு அவன் கண்ணுற்ற சம்பவத்தாலா என்பது தெளிவாக கதையில் கூறப்படவில்லை. மிக்கேல் சம்பவத்தை  கண்ணுற்ற நாள் வேறு ; அவன் அதை நமக்கு சொல்லும் நாள் வேறு. இரண்டு நாட்களுக்குமிடையில் ஒரு மாத இடைவெளி இருக்கலாம் என்ற குறிப்பு கதையில் வருகிறது.  மிக்கேல்   தான் புகைப்படமெடுத்து என்லார்ஜ் செய்த ஒரு ஸ்டில்லைப் பார்த்துக் கொண்டே சம்பவத்தை விரித்துக் சொல்லும்  பாங்கில் அவனுக்கிருக்கும்   மனக்குழப்பம் வாசகரால் உணரத்தக்கதாய் இருக்கிறது. மிக்கேல் மூன்றாம் மனிதனின் கண்ணோட்டத்திலும் தன்மை நோக்கிலும் மாற்றி மாற்றி கதையைக் சொல்கிறான்.  ஒரு மாத இடைவெளியில் அதிர்ச்சி தரும் சம்பவம் ஏதோ நடந்திருக்க வேண்டும் – ஒரு விபத்து அல்லது வேறு ஏதோ ஒன்று காரணமாக மிக்கேலின் மனம் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறது. அவன் சொல்லும் சம்பவத்துக்கும் அவன் மனக்குழப்பத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா? இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம்.

    ஒரு ஞாயிற்றுகிழமை காலை பாரீஸ் நகரில் இருக்கும் பூங்காவுக்கு கால்நடையாகச் செல்லும் மிக்கேல் அங்கே ஒரு சம்பவத்தை காண நேரிடுகிறது. மாது ஒருத்தி ஒரு  இளம் வாலிபனைப்   படுக்க அழைக்கும் காட்சி போல மிக்கேலுக்கு தெரிகிறது. முதலில் அங்கு நடப்பதை ஆர்வத்துடன் உற்று நோக்குகிறான். கையில் கொண்டு வந்த காமிராவையும் தயார் நிலையில் வைத்துக்கொள்கிறான். சாவித்துளையினூடாக குளியலறையை உற்று நோக்குபவனின் மனநிலைதான் அவனிடம். சம்பவம் நிகழுகையில் அவன் மனநிலை மாறுகிறது. அதை அவன் காட்சியின் மாற்றத்தோடு சம்பந்தப்படுத்திக் கொள்கிறான். வலிமையான அந்தஸ்தில் எளிமையானவற்றின் மேல் எடுத்துக் கொள்ளப்படும் உரிமைகள் சுரண்டல் என்றே கருதப்படும் என்கிறான் மிக்கேல். புகைப்படக் கருவியில்  அங்கு நிகழ்வதைப் படம் பிடிக்கும் போது ஏற்படும் “க்ளிக்” சத்தத்தைக் கேட்டவுடன் மாது சுதாரித்துக் கொள்கிறாள். கோபப்பார்வையுடன் மிக்கேலுடன் சண்டை போடுவதற்காக அவனை நெருங்குகிறாள். இவற்றையெல்லாம் காருக்குள் செய்தித்தாளொன்றை வாசித்தவாறு ஓர் ஆள் பார்த்துக் கொண்டிருக்கிறார். மிக்கேல் புகைப்படம் எடுக்குமுன்னரே அவரைக் கவனித்திருந்தாலும் கேமராவின் குவியத்தில் காரையும் அந்த ஆளையும் நிரப்பவில்லை. தன்னைப் போலவே பூங்காவின் காதற்காட்சிகளை பார்க்கும் ஒருவர் என்றே காரில் இருப்பவரைப் பற்றி மிக்கேல் எண்ணுகிறான். மாது மிக்கேலுடன் சண்டையிடும் நேரத்தில் காரிலிருந்து இறங்கி மிக்கேலை நோக்கி கார்க்காரரும் வருகிறார். அனுமதியில்லாமல் ஃபோட்டோ எடுத்தது தவறு என்று வாக்குவாதம் செய்கிறாள் மாது. இதற்குள் மாதுவின் வற்புறுத்தலுக்கு ஆளாகியிருந்த இளைஞன் “விட்டால் போதும்” என்பது மாதிரி அங்கிருந்து ஓடிவிடுகிறான்.  இளைஞனின் ஓட்டம் மிக்கேலுக்கு  திருப்தி தருகிறது. இளைஞனை தாம் காப்பாற்றிவிட்டோம் என்ற உவகை அவனுள்.

    மேற்கண்ட பத்தியில் உள்ளது போல மிக்கேலின் விவரிப்பு அத்தனை தெளிவாக இல்லை. விவரிப்பின் நடுவில் மேகங்கள் செல்வதையும் புறாக்கள் பறந்து செல்வதையும் குறிப்பிட்ட வண்ணம் இருக்கிறான். புறாக்கள் எங்கு பறக்கின்றன? அவன் பூங்காவில் நின்றிருந்த இடத்திலிருந்து சற்று தள்ளி மாதுவும் இளைஞனும் நின்றிருந்த மரத்தடிக்கு மேலே பரந்திருந்த ஆகாயத்திலா? ஒரு மாதம் கழித்து மிக்கேல் மொழிபெயர்ப்பு வேலையில்  மூழ்கியிருக்கும் போது மிக்கேலின் அறை ஜன்னலுக்கு வெளியே விரியும் வானத்திலா? “என்லார்ஜ்” செய்த புகைப்படம் உயிர்பெற்று அதில் தெரியும் வானத்தில் பறக்கும் புறாக்களா அவை?

    பெரிய “போஸ்டர்” அளவிற்கு “என்லார்ஜ்” செய்த பூங்கா சம்பவப் புகைப்படம் மிக்கேலின் அறையில்  தொங்குகிறது. ஒரு கடினமான “ஸ்பானிய” வார்த்தைக்குப் பொருத்தமான பிரெஞ்ச் மொழியாக்கத்தை யோசிக்கையில் அவன் கவனம் சிதறி “போஸ்டர்” புகைப்படத்தின் மேல் பதிகிறது.

    “புகைப்படத்தில் இருப்பவர்கள் தம் எதிர்காலத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். நான் ஐந்தாம் மட்டத்தில் இருந்த  ஓர் அறையில் இன்னொரு காலத்தின் கைதியாய்  இருந்தேன். அவர்கள் யாரென்று நான் அறிந்திருக்கவில்லை. அந்த மாது, அந்த மனிதன், அந்தப் பையன். அவர்கள் என் கேமராவின் கண்கள் படம் பிடித்த உறைந்த, இடையீடு செய்யவியலா  உருவங்கள் மட்டுமே” என்று மிக்கேல் நிர்க்கதியான மனநிலையில் கூறுகிறான்.

    காட்சி விரிகிறது. மிக்கேலின் முந்தைய விவரிப்பில் இல்லாத காட்சிகள் ஓடுகின்றன. புகைப்படத்தில் காட்சிகள் திரைப்படகாட்சிகள் போன்று ஓடுதல் கற்பனையா? அல்லது ஒரு மாத இடைவெளியில் மிக்கேலுக்கு ஏற்பட்ட ஏதோவோர் அதிர்ச்சியில்  குழம்பிப் போன  மன நிலையா? மேகங்களும் புறாக்களும் கதை நெடுக பறந்து கொண்டிருத்தல் யதார்த்தத்தை தாண்டி வெகுதூரம்  மிக்கேல் வந்து விட்டதை சுட்டுகிறதோ? மிக்கேல் புகைப்படத்தினுள் பிரவேசிக்கிறான்.

    அரைகுறை அணைப்பில் இருப்பதாக முந்தைய விவரிப்பில் சொல்லப்பட்ட மாது வாலிபனை மயக்குவது போல் இப்போது தோன்றவில்லை. அவளின் பார்வை காருக்குள் இருப்பவரின் மேல் படிந்திருப்பதை மிக்கேல் கவனிக்கிறான். அவர் ஏவியதால்  தான்  வாலிபனுடன் அவள் ஏதோ பேசுகிறாளோ? அவர் எதற்காக மாதுவை வாலிபனிடம் எவியிருப்பார்? மிக்கேலின் கேமராவின் “க்ளிக்” சத்தம் கேட்டவுடன் இந்த முறை அவனை நோக்கி வருவது அந்த மாது அல்ல. காரில் இருப்பவர். அவர் அருகில் வரும் போது மிக்கேல் அதிர்ந்து போகிறான். அவரின் கண்கள் மறைந்து கருங்குழியாகத் தெரிகிறது. கறுத்துப் போன அவரின் நாக்கு அசைகிறது. உருவங்கள் மறைந்து காட்சி கருங்குழம்பாகி….மிக்கேல் கண்களை மூடிக் கொள்கிறான்.

    பார்க்கும் விழைவு  மேலிட காட்சியைப் உற்றுப் பார்க்கத்  துவங்கிய மிக்கேல் விவரிப்பின் முடிவில் பார்ப்பதில் உவப்பில்லாதவனாகிறான். அவன் எதைப் பார்த்தான்? அவன் பார்த்ததை தெளிவாக சொல்ல முடியாமல் போனதன் காரணமென்ன? அவனால் சொல்ல முடியாது என்பதல்ல. அவன் ஒரு மொழிபெயர்ப்பாளன். மொழி அவன் வசப்படும். எனினும் இரண்டு விவரிப்பிற்கும் இடையில் இருக்கும் முரண்பாடுகளை எப்படி விளக்குவது? புறாக்கள் பறந்த வண்ணம்,  மேகங்கள் மிதந்த வண்ணம் இருக்கின்றன.

    பனி கவிந்த சாலையில் தெரியும் வாகன முன்விளக்குகள் உமிழும் ஒளிக்கற்றை கோடுகளாகப்  பிரிவதைப் போன்று  காட்சி இரு வேறு விதத்தில் பொருள் கொள்ளப்பட எது காரணம்? மிக்கேலின் மாறும் மனநிலையா? மன நிலை குழம்பிக் கிடப்பது தான் காரணமா? உறுதியாகக் சொல்லிவிட முடியாது. எதையோ பார்த்து விட்டு அதை ஜீரணிக்காமல் போனதன் விளைவாகவும் இருக்கலாம். முதல் விவரிப்பில் காரில் உட்கார்ந்திருந்தவர் பற்றி அதிகம் பேசப்படாமல், இரண்டாம் விவரிப்பில் அவரைப் பற்றி எதிர் மறையான சித்தரிப்பு வருகிறது. சாத்தானின் குறியீடாக அவர் கண்களும் நாக்கும் சித்தரிக்கப்படுகின்றன. “blow – up” என்ற ஆங்கில மொழிபெயர்ப்புக்கதையின் ஸ்பானிய மூலத்தின் தலைப்பு “Las babas del diablo”. இதன் அர்த்தம் “சாத்தானின் உமிழ்நீர்”. இதில் சாத்தான் யார்? புகைப்படத்தின் ஓரத்தில் தெரியும் காருக்குள் செய்தித்தாளுக்குப் பின்னால் உட்கார்ந்திருப்பவரா? அல்லது பெரிதாக்கப்பட்ட புகைப்படமா?

    பலவித, இணையான யதார்த்தங்களின் சாத்தியக்கூறை சிறுகதை பேசுகிறது. அந்த யதார்த்தம் உண்மையாக இருக்கலாம் அல்லது புனைவாக இருக்கலாம். கொர்த்தசாரின் புகழ் மிக்க சிறுகதைகள் எல்லாவற்றிலும் இந்த கருப்பொருள் காணப்படுவதாக சில இணையக்கட்டுரைகள் தெரிவித்தன. போட்டோவுக்குள்   உருவங்கள் நகர்வதை சித்தரித்தல் “முதன்மையான” யதார்த்தத்தின் சார்பின்றி ஒரு மாற்று யதார்த்தம் இருக்கிறது என்ற கருவை எடுத்துக் காட்டுவதாகக் கொள்ளலாம்.  இந்த மாற்று யதார்த்தத்தில் அவனும் அவனுடைய கேமராவும் பங்கு பெற்றிருக்கின்றன. இதில்  சமமுக்கியத்துவம் பெறும் இன்னோர் அம்சம்  மிக்கேலின் கண் முன்னம் நடந்த சம்பவத்தின் இருவிதமான பொருள் கொள்ளல். உதாரணமாக, ஒரே சமயத்தில் கவர்ச்சிக்காரி தன் முயற்சியில் வெல்வதாகவும் தோற்பதாகவும் மிக்கேல் அர்த்தப்படுத்திக் கொள்கிறான். இவ்வாறு குறைந்த பட்சம் இரண்டு வெவ்வேறு யதார்த்தங்களை (அதில் ஒன்று கற்பனையே என்றாலும்!) மிக்கேல் நிறுவிவிடுகிறான்.  ஒன்றுக்கு மேற்பட்ட சாத்தியக்கூறை, ஒன்றுக்கு மேர்ப்பட்டதான “உண்மையை” பரிந்துரைப்பதன் வாயிலாக, தருக்கபூர்வமாக நாம் நினைப்பது போல,  “உண்மையான” யதார்த்தம் என்பதை நிலைநிறுத்துதல் அவ்வளவு எளிதான விஷயம் அல்ல என்பதை கொர்த்தஸார் எடுத்துக் காட்டுகிறார். வாலாஜாவில் நடந்த நிகழ்வில் தனித்தனி யதார்த்தங்களில்  மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற குறிப்பு கிட்டியதைப் போல அதே மனிதன் பல்வேறு யதார்த்த நிலைகளில் இருப்பதற்கான சாத்தியக்கூறை “blow-up” எனக்கு சொற்களால் படம் பிடித்துக் காட்டியது.

    நன்றி : பதாகை

  • காணாமல் போனவன்

    யார் கண்ணிலும் படாத படி காணாமல் போய் விட வேண்டும் என்று பல முறை எனக்கு தோன்றியிருக்கிறது. முன்னர் இல்லாத வகையில் இம்முறை எண்ணத்தின் தீவிரம் அதிகமாய் இருந்தது. அதைச் செயல் படுத்தாமல் இருக்க முடியாது என்று தோன்றிற்று. என் இதயத்துக்கு நெருக்கமானவர்களின் பார்வையில் நான் படுவது நின்று போய் சில காலம் ஆகியிருக்கிறது. நான் தான் அதை உணராமலேயே இருந்திருக்கிறேன். மற்றவர்கள் கண்ணில் காணாமல் போனதும் என் மனப்பரப்பில் நிம்மதி பரவிற்று. நிம்மதி மட்டுமல்ல. அசாதாரண சுகமும். இதற்கு முன்னர் உணர்ந்திராத இலேசான தன்மையையும் அடைந்தேன்.

    என் தம்பி சதா பத்தாம் வகுப்பில் தோல்வியுற்று வீட்டில் இருந்து ஓடிய பிறகு அவன் ஒரு ஹீரோவாக ஆனான். சிறுவயதில் கடைசி பென்ச் நண்பர்களின் சகவாசத்தில் படிக்காமல் பள்ளிக்கு ஒழுங்காகச் செல்லாமல் திரிந்து வந்தான் அவன். “அவிழ்த்து விட்ட கழுதை” “உதவாக்கறை” என்றேல்லாம் பட்டப் பெயர்கள் தாங்கி உலவினான். ஒருநாள் அவன் வீட்டிலிருந்து விலகி எங்கோ சென்று விட்டான். அவன் காணாமல் போனதும் வீட்டில் எல்லோரும் கவலைப்பட்டனர். ஊரெங்கும் அவனைத் தேடி நானும் என் தந்தையாரும் அலைந்தோம். தெரிந்த நண்பர்கள் எல்லோரிடமும் விசாரித்தோம். “பையனைக் கரித்து கொட்டியே வீட்டை விட்டு துரத்தியடிச்சுட்டீங்களே!” என்று அம்மா அப்பாவிடம் புலம்பிக் கொண்டிருந்தாள். கொஞ்ச நாள் கழித்து கோயம்புத்தூர் அத்தையிடமிருந்து கடிதம் வந்தது. (பதினைந்து பைசா தபாலட்டையில் கோழிக்கிறுக்கலான கையெழுத்தில்!) சதா ஒரு வாரம் அவர்கள் வீட்டில் வந்து விட்டு போனானாம். ஊருக்கு நலமுடன் திரும்பினானா என்று கேட்டு எழுதியிருந்தார்கள். தொடர்ந்து இது மாதிரி உறவினர்களிடமிருந்து கடிதங்கள் வந்த வண்ணம் இருந்தன. ஹைதராபாத் மாமா, ஜபல்பூர் பெரியப்பா, சென்னை பெரிய தாத்தா – இவர்களெல்லாம் கடிதம் எழுதினார்கள். வீட்டுக்கு வரும் கடிதங்கள் எல்லாம் “சதா இப்போது எந்த ஊரில் இருக்கிறான்?” என்பதை அறியும் ஆவலில் வாசிக்கப்பட்டன. சதா பற்றிய தகவல் வருவது நின்ற போதும் கவலையுணர்ச்சி ஏதும் எஞ்சியிருக்கவில்லை. பல வருடங்கள் கழித்து ரிஷி-முனி மாதிரி காடான தாடியுடனும் கூடவே ஒரு மணிப்பூர்க் காரியுடனும் வந்து என்னை சந்தித்தான். நான் அப்போது தான் பம்பாயில் குடியேறியிருந்தேன். என்னை விட நான்கு வருடங்கள் சின்னவனான சதா அந்த மணிப்பூர்க்காரியை “உன்னுடைய பாபி” என்று அறிமுகப்படுத்தினான். அவனுக்கு அப்போது ”பாபி” வந்திருக்கவில்லை. ஒரு காகிதத்துள் பொடியை போட்டுச் சுருட்டி சிகரெட்டாக புகைத்தான் சதா. அவன் பாதி புகைத்துவிட்டு அவளிடம் தருவான். அவளும் புகைப்பாள். சதாவும் மணிப்பூர்க்காரியும் இரண்டு – மூன்று நாட்கள் என்னுடன் தங்கியிருந்தார்கள். வீட்டை விட்டு ஓடிப்போன சதா இப்போதெல்லாம் பற்றி யாரும் கேட்பதில்லை. இந்தியாவின் ஒரு மூலையில் எங்கோ மணிப்பூர்க்காரியுடன் அவன் சுற்றிக் கொண்டிருப்பான் என்ற நம்பிக்கை குடும்பத்தில் இன்றளவும் நிலவுகிறது.

    சொந்தங்கள் விலகி தூரமாய்ப் போவது மாதிரி தான் காணாமல் போவதும். கொஞ்ச நேரம் தேடப்படுவோம். பின்னர் காணாமல் போன உண்மையை எல்லோரும் ஜீரணித்ததும் தேடுதல் கை விடப்படும். பாதிப்புக்குள்ளான நெருங்கிய உறவுகள் தத்தம் வாழ்க்கையைத் தொடர்ந்துவிடுவார்கள். மரணத்திற்கும் காணாமல் போதலுக்கும் என்ன வித்தியாசம்? இரண்டிலுமே உடம்பு இருப்பதில்லை. சிலரது நினைவுகளில் காணாமல் போனவர் நிறைந்திருக்கலாம். தான் விட்டுச்சென்ற வாழ்க்கையை எண்ணி காணாமல் போனவர் மருகாத வரை, மற்றவர்களின் நினைவுகளில் வருதலும் வராமல் இருத்தலும் அவருக்கு என்ன நட்டத்தை ஏற்படுத்தி விடக்கூடும்?

    வர்ஷா என்னைத் தேடுவாளா? எப்படித் தேடுவாள்? அவள் பக்க உறவு என்று யாரும் இல்லை. அவளை வளர்த்த பெரியப்பா குடும்பம் வெளிநாட்டில் இருக்கிறது. கிட்டத்தட்ட அனாதை போலத்தான். தர்மேஷ் என்னைத் தேடி அலைகிறானோ? காவல் நிலையத்து நடைமுறைகளைச் செய்து தருவது அவனுக்கு மிக எளிதாக இருக்கும். அவனே ஒரு போலீஸ் காரன் என்பதால். என் பக்கத்து ஃப்ளாட்டில் இருந்தான். ஒரு காலத்தில் என் நெருங்கிய நண்பனாக இருந்தவன். இப்போதெல்லாம் அப்படி இல்லை. அவன் வர்ஷாவுடன் பேசும் சமயங்களில் ஐந்தடி ஏழங்குல உயரமான நான் அவன் கண்களுக்கு காணாமல் போய் விடுகிறேன்.

    நான் எங்கிருக்கிறேன் என்பதை அவர்கள் இருவராலும் கண்டு பிடிக்கவே முடியாது. அவர்கள் தேடிக் கண்டுபிடிக்க முடியா தொலைவுக்குச் சென்று விடுவேன். அசைக்க முடியா நம்பிக்கை எனக்குள் வந்திருந்தது. இது வரை அப்படி நான் உணர்ந்ததில்லை. சுய ஐயம் நிரம்பிய மனிதனாய் இத்தனை காலமாய் உலவி வந்தேன். ஓர் இயந்திரம் போல. இயங்கிக் கொண்டிருத்தல் மட்டுமே எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறது என்றெண்ணிக் கொண்டிருந்தேன். வர்ஷாவின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வது, என் ஆறு வயது மகன் மகேஷை வளர்த்து பெரிய ஆளாக்குவது – இவ்விரண்டையும் தவிர வேறெதுவும் என் இலக்காக இருக்கவில்லை. வர்ஷாவின் அபிலாஷைகள் என்ன என்பதை எவ்வளவு புரிந்து வைத்திருந்தேன் என்பது என்பது வேறு விஷயம். நம் குடும்பம், சிறு தேவைகள், சின்ன திருப்திகள் என்ற நடுத்தர குடும்ப அளவுகோலில் அளக்கப்பட்ட விழைவுகள் தாம் அவளுள் ஆரம்ப காலத்தில் இருந்தன. எது அவளை மாற்றியது? பம்பாய் எனும் ராட்சத நகரமா? அதன் இயந்திரத்தனமான ஓட்டமா? அல்லது என்னுடைய ஓட்டமா? பொருளியல் பகட்டு அல்லது சமூக அந்தஸ்து என்கிற மாயவலையில் அவள் சூழ்ந்திருக்கிறாள் என்ற என் கணிப்பு சரியா எனப் புரியவில்லை. என் கணிப்பு உண்மை என்று வைத்துக் கொண்டாலும் அவள் தரப்பு நியாயம் எனக்குப் புரியாமல் இல்லை. பெரியப்பா குடும்பத்தினரால் ஒரு வேலைக்காரி போல நடத்தப்பட்ட வாழ்க்கை ; இளம் வயதிலேயே தாய்-தந்தையரை இழந்தது என கிட்டத்தட்ட அனாதை போல் வளர்ந்த ஒருத்தி பாதுகாப்பின்மையில் தத்தளிப்பது ஒன்றும் ஆச்சரியமான விஷயமில்லை. அவளுடைய பாதுகாப்பின்மையை என்னால் ஏன் போக்க முடியவில்லை என்ற கேள்விக்கு என்னிடம் ஒரு விடையும் இல்லை. அவளிடம் என்னை நிரூபித்துக்காட்ட வேண்டும் என்ற தூண்டுதலை என்னால் கடைசி வரை களைந்தெறிய முடியாமல் போனது தான் எங்களுடைய விலகலை வேகப்படுத்தியதோ?. நான் அவளுக்கு ஏற்றவன் என்பதை நிலைநிறுத்த வேண்டும் என்ற ஒரே இச்சை அவள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத ஓர் இயந்திரமாய் என்னை மாற்றியிருந்தது. புதுப் புது வேலைகளாக மாறிய வண்ணம் இருந்தேன். நெடுங்காலம் வேலை பார்த்த பம்பாய் நிறுவனத்தில் வழங்கப்பட்ட சம்பளம் போதவில்லையெனச் சொல்லிக் கொண்டிருந்தாள். அதிக சம்பளத்துக்காக அடிக்கடி வேலை மாற்றம் செய்து கொண்டேன். கோஹ்லாப்பூரில் ஒரு பால் பொருள் தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு வருடம் வேலை செய்தேன். குடும்பம் பம்பாயிலேயே இருந்தது. பின்னர் நாசிக்கில் சமையற் கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனத்தில் இரண்டு வருடம். மாதம் ஒரு முறையோ அல்லது இரு மாதங்களுக்கொரு முறையோ என்றுதான் பம்பாய் வந்து குடும்பத்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

    வர்ஷா என்றால் மழை. சிறு வயதிலிருந்தே கண்டிப்பும் கட்டிறுக்கமுமாக வளர்க்கப்பட்ட எனக்கு என் வாழ்வின் மழையாக அவள் வந்தாள். அவளுள் நான் ஆனந்தமாக நனைந்த நாட்கள் உண்டு. ஆனால் அவளிடமிருந்து வெகு தொலைவு வந்து விட்ட எண்ணத்தை கோஹ்லாப்பூர் – நாசிக் தினங்கள் என்னுள் தோற்றுவித்தன. பம்பாய் வரும் நாட்களில் மகேஷும் என்னிடமிருந்து விலகிப் போவதை கவனித்திருந்தேன். மகேஷுடனான தூரத்தை நீக்கி விட வேண்டும் என்ற உந்துதல் அதிகமாயிற்று. ஆனால் நாசிக் வேலையைத் தூக்கி எறியும் தைரியம் வரவில்லை. என் பழைய பம்பாய் நிறுவனத்தை மீண்டும் அணுகி வேலை கேட்டேன். சம்பளத்தில் சமரசம் செய்து கொண்டேன். வர்ஷாவுக்கு சம்பள விஷயம் அவ்வளவு திருப்தி தரவில்லை. “நீங்க சரியான ஏமாளியா இருக்கீங்க. இப்போ பம்பாய்ல ஒண்ணா சேர்ந்து இருக்கறதா முக்கியம். செலவுகள் அதிகரிச்சுகிட்டே போகுதே அது உங்களுக்குத் தெரியலியா?” ஒரு சராசரி இல்லறத்தலைவியின் புலம்பல்களாக அதை எடுத்துக் கொண்டாலும் நான் பம்பாய் வராமல் இருப்பதைத்தான் இவள் விரும்புகிறாளோ என்ற சந்தேகம் பேயாக என்னுள் ஒட்டிக்கொண்டது.

    சொன்னதற்கு பத்து நாட்கள் முன்னதாகவே நாசிக் வேலையிலிருந்து “ரிலீவ்” ஆகி தங்கியிருந்த அறையைக் காலி செய்துவிட்டு பம்பாய்க்குப் புறப்பட்ட மாலை! பேருந்தில் ஏறியதும் மழை பெய்ய ஆரம்பித்தது. வீடியோ டெக்கில் “ஏக் தூஜே கேலியே” படம் போட்டுக் கொண்டிருந்தார்கள். விதவையாக வரும் சந்தியா என்கிற பாத்திரம் வாசு என்கிற பாத்திரத்துக்கு நடனம் பயில்வித்துக் கொண்டிருந்தது. பஸ்சுக்கு வெளியே நான்கு மணிக்கு இருக்க வேண்டிய வெளிச்சம் தொலைந்து போயிருந்தது. பேருந்து ஓர் இருட்டான அறைக்குள் நுழைந்து விட்டதோ என்னும்படி மேகங்களின் கருமை பகலை இருட்டாக்கியிருந்தது. மனதில் அளைந்த இனம் புரியா பயவுணர்வு! அதற்கான வெளிப்படையான காரணத்தை விளங்கிக் கொள்ள முடியவில்லை. சொந்த வீட்டுக்குச் செல்லும் போது ஏற்படும் உற்சாகம் பல மாதங்களாக என்னுள் இல்லாமல் போனதை அதற்கு முன்னர் கூட அவதானித்ததுண்டு. உற்சாகமின்மை பயவுணர்வாக மாறிவிட்டதோ? ”பயமும் ஓர் எண்ணமாகத் தான் நம்முள்ளில் இருக்கிறது. எண்ணத்தை மாற்று ; உணர்வு மாறிவிடும்.” என்று சுய-உரையாடலில் ஈடுபட்டேன். கை முஷ்டியை இறுக்கிக் கொண்டேன்.

    குரூரமான க்ளைமாக்ஸுடன் படம் முடிவடைந்ததும் பஸ்ஸில் கொஞ்சம் அமைதி. கஸாரா காட்-டை பஸ் கடந்து பஸ் சமவெளியில் இறங்கியது. பாதையில் மழை ஈரம் கொஞ்சமும் இல்லை. கணவாயின் அந்தப் புறம் பெய்த மழை இந்தப் புறம் இல்லை. ஈரத்தின் சுவடின்றி மண் காய்ந்து கிடந்தது. ஒரே நிலப்பரப்பு. ஆனாலும் ஓரிடத்தில் மழை. வேறோரிடத்தில் மழையில்லை. எந்த இடத்தில் ஈரத்தரை முடிந்து ஈரமற்ற தரை தொடங்கியது என்பதைக் கவனிக்கவில்லை. பயண மும்முரத்தில் பாதையைக் கவனிக்காமல் விட்டது என் யதார்த்ததை பிரதிபலித்தது. வர்ஷாவுடனான என் வாழ்க்கையிலும் எப்போது ஈரம் விலகியது?

    செம்பூரில் வந்திறங்கிய போது ரொம்ப நேரமாகிவிட்டது. இரண்டொரு ஆட்டோ ரிக்‌ஷாக்காரர்களுக்கு முலுண்ட் வரை செல்ல மனமில்லை. ஆட்டோ கிடைத்து வீடு வந்து சேர்ந்த போது காம்ப்ளெக்ஸின் எல்லா ஃப்ளாட்டுகளிலும் லைட்கள் அணைக்கப்பட்டு காரிருளில் மூழ்கியிருந்தன. வாட்ச்மேன்கள் கேபினில் மட்டும் சின்ன பேட்டரி லைட் ஒளிர்ந்தது. இரண்டு கூர்க்காக்களும் விழித்திருந்தனர். ”லிஃப்ட் ரிப்பேர் சார்…உங்க ஃப்ளொர்ல இருக்கற தர்மேஷ் சாப் அணைச்சு வச்சிருக்க சொல்லியிருக்கார்” என்றான் ஒருவன். பின்னர் இன்னொருவனைப் பார்த்து “ஆறாம் ஃப்ளோர்ல லைட் எரியுதா பாரு” என்று சொன்னான். இருவரும் கேலிப் புன்னைகை புரிந்தது போல் தெரிந்தது. ஆனால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. வெளிச்சம் குறைவாக இருந்தது. கூர்க்காக்களின் புன்னகை ஒரு பிரமையாக இருக்கலாம்!.

    படியேற வேண்டியதாயிற்று. கையில் இருந்த லக்கேஜ்கள் கனத்தன. தர்மேஷின் அபார்ட்மெண்ட் கதவு திறந்து கிடந்தது. அவன் எப்போதுமே ஃப்ளாட்டின் கதவை திறந்து போட்டுக் கொண்டு தான் தூங்குவான். ஏன் அப்படி என்று கேட்டால் ”போலீஸ்காரன் வீட்டுக்கு எந்த திருடன் வர்றான்னு பார்க்கறேன்” என்று பதில் சொல்வான். தர்மேஷ் ஃப்ளாட்டைத் தொட்டடுத்த என் ஃப்ளாட்டின் பஸ்ஸரை அழுத்தியதும் உடனடி கதவு திறந்தது. ஏதோ கதவுக்குப் பின்னாலேயே இத்தனை நேரம் தயாராய் நின்றிருந்த மாதிரி!

    ஹால் விளக்கு போடப்படவில்லை. வர்ஷாவை இது வரை காணாத ரூபத்தில் கண்டேன். குட்டையான பாவாடை அணிந்திருந்தாள். அவள் அணிந்திருந்த பாவாடை கால்மூட்டைத் தொடவில்லை. என்னுடைய பழைய சட்டை ஒன்றை அணிந்திருந்தாள். புடைவையைத் தவிர வேறோர் உடையை அவள் அணிந்து பார்த்திராத எனக்கு ‘என் முன்னால் நிற்பது வர்ஷாவா இல்லை ; வேறு யாரோ மோகினியா’ என்ற எண்ணம் ஓடியது. பரபரப்பு உள்ளோடும் மனவெழுச்சியோடு ஃபளாட்டுக்குள் நுழைந்தேன். எப்போதும் படிய வாரி, பின்னிய கூந்தலுடன் இருப்பவள் அன்றிரவு குழலைக் கலைத்து விட்டிருந்தாள். பஸ் பயணத்தில் முகர்ந்த மழையின் வாசம் ஞாபகத்துக்கு வந்தது.

    “வரப்போறீங்கன்னு முன்னாடியே சொன்னா என்ன? ஒண்ணும் சாப்பிடறதுக்கு இல்ல….படுங்க…காலையில பாக்கலாம்” – குரலில் கடுமை தெறித்தது.

    அவள் ஒற்றைக் காலில் கொலுசு அணிந்திருந்தாள். இதுவும் புதிது. படுக்கையறையில் என்னிடமிருந்து கொஞ்சம் தள்ளி படுத்தாள். எங்கிருந்தோ ஜன்னலில் வந்த ஒளியில்….ஒளியா அல்லது இருட்டு பழகி விட்டதா…தெரியவில்லை…அவளின் சலவைக் கல் போன்ற வழவழு கால்கள் மின்னின. விரலால் அவள் கால்களை வருடும் ஆசை முளைவிட்டது. அவளிடம் பேச்சு கொடுத்தேன்.

    “மகேஷ் எங்க…காணல”

    “தர்மேஷ் வீட்டுல விளையாடிட்டிருந்தான்…அங்கயே படுத்துக் தூங்கிட்டான்….தர்மேஷ் அங்கயே தூங்கட்டும்னுட்டார்….”

    அவள் கவர்ச்சி என்னுள் ஏற்படுத்திய மயக்க நிலை என் சிந்தனையை ஊமையாக்கியது. சில நிமிடங்கள் தாம். திடுக்கென ஒரு கரு நிறப் போர்வையை எடுத்து உச்சி முதல் பாதம் வரை மூடிக் கொண்டாள். நடுநிசியின் அமைதியில் கீழே கேட்டுக்கருகே வாட்ச்மேன்கள் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டது.

    எட்டு மணி லோக்கலில் ஜனக்கடலுக்கு நடுவே நின்ற படி பயணம் செய்தேன். என் பழைய நண்பர்கள் – வைர-குரியர் படேல் பாயும் கூட்டுறவு வங்கியொன்றில் காசாளராக வேலை செய்யும் ஆரேகரும் என் கண்ணில் பட்டார்கள். என்னைப் பார்த்து கையாட்டி அவர்கள் உட்கார்ந்திருந்த கடைசி வரி இருக்கைகளுக்கருகே வரச் சொன்னார்கள். நான் தலையாட்டி “இங்கேயே நின்று கொள்கிறேன்” என்பது போல சைகை செய்தேன். வி டி ஸ்டேஷன் வந்ததும் அவர்கள் இறங்குவதற்கு முன்னமே இறங்கிச் சென்றேன். வேலையில் சேர இன்னும் ஒரு வாரம் இருந்தது. எனினும் கூட்டம் அலை மோதும் காலை எட்டு மணி ரயிலேறி “டவுனுக்கு” வருவதற்கு என்ன காரணம்? ”ஏதோ ஃபார்மாலிடிக்காக என்னை வரச் சொல்லியிருக்கிறார்கள்?” என்று பொய் சொன்னதும் “வீட்டிலேயே இருங்களேன். இன்னிக்கும் வெளியில் போகணுமா?” என்று வர்ஷா கேட்கவில்லை. முந்தைய வாரம் நண்பர்களுடன் ‘டவுனுக்குப்’ போன போது அக்பரல்லிஸுக்குப் பக்கத்தில் இருந்த ஓர் ஆடையகத்தில் உடை வாங்கியதாகவும் அதன் உயரத்தைக் குறைப்பதற்கென்று தைக்கக் கொடுத்திருப்பதாகவும், அதே ஆடையகத்துக்குப் போய் வாங்கி வருமாறும் ஒரு டோக்கனை என்னிடம் தந்தாள். வி டி ஸ்டேஷனுக்கு வெளியே டி என் ரோட்டின் இடப்புற நடைமேடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இடித்துக் கொண்டும் மோதிக் கொண்டும் மக்கள் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். நான் சாலைக்குள் இறங்கி ஓரமாக நடந்தேன். நியூ எம்பயர் தியேட்டரில் ஒன்பது மணிக்கே டிக்கெட் வாங்குவதற்காக மக்கள் காத்திருந்தனர். தியேட்டர் முகப்பில் இருந்த போஸ்டரில் அமிதாப்பச்சனின் இரு கைகளிலும் விலங்கிடப்பட்டிருந்தன. ஆக்ரோஷப்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார். போலீஸ் சீருடையிட்ட ப்ரான் கம்பீரமாய் நின்றிருந்தார். பம்பாய்க்கே உரித்தான காற்றின் வாசமும் ஈரப்பதமும் என் நாசியையும் சருமத்தையும் ஊடுருவின. காதணிகள் விற்பவர்கள், தர்பூசணிப் பழத்தையும் அன்னாசிப் பழத்தையும் வெட்டி துண்டுகளாக விற்பவர்கள், பழைய புத்தகக்காரர்கள் எல்லோரும் அதிசுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். ஃப்ளோரா ஃபவுண்டெனுக்கு வலப்புறம் இருந்த சாலையில் திரும்பி அக்பரல்லிஸ் பல்துறை அங்காடிக்கு இரண்டு கடைகள் தள்ளி இருந்த ஆடையகத்தை அடைந்தேன். டோக்கனைச் சரிபார்த்து திருத்திய ஆடையை என்னிடம் கொடுத்தார் கடைக்காரர். கூடவே துணிக்கான வவுச்சரையும் கொடுத்தார். வவுச்சருடன் பணம் செலுத்தியதற்கான கடனட்டை விற்பனை ரசிது “பின்” செய்யப்பட்டிருந்தது. வர்ஷாவிடம் கடனட்டை கிடையாது. கடனட்டைக்குச் சொந்தக்காரரின் பெயர் விற்பனை ரசீதில் ‘இம்ப்ரிண்ட்” செய்யப்பட்டிருந்தது. தர்மேஷ் வி கோரே.

    என் கால்கள் இலக்கின்றி நடந்தன. தெற்கு பம்பாயில் அன்று என் கால்கள் படாத இடம் இல்லை என்று சொல்லலாம். கேட்வே ஆஃப் இந்தியாவில் கடல் சற்று தள்ளிப் போயிருந்தது. லியோபோல்ட் கஃபேயில் வழக்கமாகக் காணப்படும் கூட்டம் இல்லை. கொலாபாவின் செருப்பு கடைகள், காலாகோடாவுக்கருகே வீதியின் இரு புறங்களிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் ஓவியங்கள், ஓட்டல் பிரெசிடெண்டின் வாசலில் காத்திருந்த கருப்பு-மஞ்சள் டாக்ஸிகள், ஒபெராய் ஓட்டலுக்கு வெளியே நின்றிருந்த சுற்றுலா பயணிகள், அரபிக்கடலோரத்தில் போடப்பட்ட பாறைகள், கைகளைப் பின்னிக்கொண்டும் தோள்களை உரசிக்கொண்டும் கடற்கரைச்சுவரில் உட்கார்ந்திருந்த ஜோடிகள், பிஸ்ஸா – ஆன் – தி – பே உணவகத்துக்கு வெளியே போடப்பட்டிருந்த இருக்கைகள் – கடந்து போகும் சித்திரங்களாக எல்லாம் நகர்ந்து கொண்டிருந்தன. நியூ எம்பயரில் ஓடும் திரைப்படமே ஈராஸ் தியேட்டரிலும் ஓடியது. காலியா. ஈராஸ் தியேட்டரை ஒட்டிய சிற்றுண்டி நிலையத்தில் கிஷோர் குமாரின் குரலில் “ஜஹான் தெரி யெ நஸர் ஹே” என்ற பாடல் அதிக கனபரிமாணத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது. சர்ச்-கேட்டுக்குப் போகும் சப்-வேயில் இருந்த மருந்துக் கடையில் நுழைந்தேன். பின்னர் ஜன சமுத்திரத்தில் ஒரு புள்ளியாகக் காணாமல் போனேன்.

    +++++

    மற்றவர்கள் கண்ணுக்குப் படாமல் வர்ஷாவின் வாழ்க்கையில் நிகழ்வதை அறிய ஆவல் என்னைத் தூண்டவும், மீண்டும் நான் வாழ்ந்த வீட்டுக்குச் சென்று பார்க்க முடிவு செய்தேன். எண்ண ரூபமாய் அங்கு அலைந்து திரிவதில் என்ன தடை ஏற்படப் போகிறது? ஆறாம் ஃப்ளோரை அடைந்தேன். தர்மேஷ் ஃப்ளாட், என் பழைய ப்ளாட் – இரண்டின் கதவுகளும் திறந்து கிடந்தன. தர்மேஷ் வீட்டில் மகேஷ் இருக்கிறானா என்று பார்த்தேன். இல்லை. என் வீட்டின் ஹால் காலியாகஇருந்தது. அன்று வி டி போன போது நான் எடுத்துச் சென்றிருந்த தோல் கைப்பை ஜன்னல் கம்பியில் தொங்கிக் கொண்டிருந்தது. திறந்திருந்த ஜிப்பர் வழி நோக்கினேன். உடை, ரசீது, மருந்துக் கடையில் வாங்கிய மாத்திரைப் புட்டி எல்லாம் இருந்தன. புட்டி காலி. ஒரு மாத்திரை கூட மிச்சமில்லை. அறையில் ஊதுபத்தி நெடி. சுவரில் என் உருவம் தாங்கிய சட்டகத்துக்கு மாலை போடப்பட்டிருந்தது. பிளாஸ்டிக் மாலை. படுக்கையறையில் வர்ஷா அழும் சத்தம் கேட்டது. கட்டிலில் உட்கார்ந்திருந்தாள். அவள் அடிக்கடி அணியும் பச்சை நிறச் சேலை. அடர் சிவப்பு நிற ரவிக்கை. ரவிக்கைச் சட்டையின் கை முழங்கை வரை நீண்டிருந்தது. கட்டிலுக்கருகே தர்மேஷ் நின்றிருந்தான். அவன் கை அவள் உச்சந்தலை முடியை மென்மையாக வருடிக் கொண்டிருந்தது. அவள் தன் முகத்தை அவன் இடுப்பில் புதைத்தவாறு அழுது கொண்டிருந்தாள். கணவாய்க்கு ஒரு புறத்தில் பெய்த மழையில் கணவாயின் மறுபுறம் நனையவில்லை. மற்றவர்கள் கண்ணுக்கு மட்டும் காணாமல் போயிருந்த நான் எனக்கும் காணாமல் போகும் சமயம் வந்து விட்டது. ஊதுபத்திப் புகைக்குள் புகுந்து காணாமல் போனேன்.

    +++++

    கருங்கற்கள் குவியலின் மேல் சாய்ந்த படி கண்ணயர்ந்திருந்தேன். முதுகுப் புறம் சில கற்களின் கூர்மையான முனைகள் குத்தின. கண்களைத் திறந்தேன். சமிக்ஞை கோளாறின் காரணமாக கௌஹாத்தி செல்லும் ரயில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நின்றிருந்தது. ரெய்ப்பூர் நகரம் தாண்டி ஏறத்தாழ ஐம்பது கிலோமீட்டர் தூரம் கடந்திருந்தது. என்னைப் போலவே பொது வகுப்பில் அமர்ந்திருந்த வேறு பயணிகளு ரயிலிலிருந்து இறங்கியிருந்தனர். கிழவி ஒருத்தி கொய்யாப்பழத் துண்டுகளைக் கூவி விற்றுக் கொண்டிருந்தாள். ஒரு சின்னப் பையன் தண்ணீர் விற்றுக் கொண்டிருந்தான். அவனிடமிருந்து ஐந்து பைசாவுக்கு ஒரு கோப்பை தண்ணீர் வாங்கி முகம் கழுவிக் கொண்டேன். ரயில் இப்போதைக்கு கிளம்பாது போலிருந்தது. அந்த ரயிலை விட்டுவிடுவது என்று முடிவு செய்தேன். தண்டவாளத்தை ஒட்டிய வயலில் மெதுவாக இறங்கினேன். வரப்பு வழியாக நடந்து ஒரு கிராமத்தை அடைந்தேன். கிராமத்தினுள் மூடிக்கிடந்த தபாலாபீஸைக் கடக்கையில் எனக்கு சதாவின் ஞாபகம் வந்தது. அவன் போய்ச் சென்று தங்கிய இடங்களிலிருந்தெல்லாம் எங்கள் உறவினர்கள் கடிதம் எழுதிக் கொண்டிருந்தார்கள். வர்ஷாவுக்கு கடிதம் போட்டு என் நலத்தைத் தெரிவிக்கும் வாய்ப்பை நான் யாருக்கும் கொடுக்கவில்லை.

    நன்றி : சொல்வனம்

  • வருடம் முடிகிறது

    சக்கரவாளம் கட்டுரைத் தொடர் இருபத்தியெட்டு இடுகைகளுடன் நிற்கிறது. கடும் அலுவலகப் பணிச்சுமை காரணமாக தவிர்க்க முடியாத இடைவெளி ஏற்பட்டுவிட்டது. கட்டுரைத்தொடரை மே மாதத்துக்குள் எழுதி முடித்துவிட வேண்டும்! பார்ப்போம் நடக்கிறதா என்று!

    இவ்வலையில் பதியப்பட்டிருந்த இருபது சிறுகதைகளை நீக்கி விட்டேன். அச்சிறுகதைகளை  எல்லாம் ஒரு தொகுதியாக காலச்சுவடு நிறுவனம் வெளியிடவிருக்கிறது. தொகுதியின் தலைப்பு – டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில். அச்சிடப்பட்டவுடன் புத்தகத்தின் முகப்புப் பக்கத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

    இவ்வருடம் இரண்டே இரண்டு சிறுகதைகள் தான் எழுதினேன். வரும் வருடத்தில்  அதிக எண்ணிக்கையிலான சிறுகதைகள் எழுத வேண்டும் என்று எண்ணியுள்ளேன்.

    இரண்டு நண்பர்களுக்கு என் நன்றியை நான் அவசியம் தெரிவிக்க வேண்டும் –  நட்பாஸ் மற்றும் ஸ்ரீதர் – என் கட்டுரைகள் பற்றியும் கதைகள் பற்றியும் தம் கருத்துகளைப் பகிர்பவர்கள். மின்னஞ்சல் வாயிலாக அடிக்கடி அவர்களை தொந்தரவு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். சலிப்பு காட்டாமல் ஒவ்வொரு முறையும் படைப்பு பற்றிய குறை-நிறைகளை சொல்லுவார்கள். அவர்களின் மாறாத ஊக்கம் தான் என் முதல் சிறுகதைத் தொகுதி வரை என்னை வழி நடத்தியிருக்கிறது. இத்தனைக்கும் இருவரையும் நான் சந்தித்தது கிடையாது. 2016 – இல் இவ்விரு நண்பர்களையும் சந்தித்து விட வேண்டும்.

    அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

     

    Capture

  • ஜப்பான் ஜுரம்

    high-and-low_592x299

    மூன்று மாதங்களுக்கு முன்னர் பலவீனமானதொரு தருணத்தில் அகிரா குரோசவாவின் ஐந்து படங்கள் அடங்கிய பேக் ஒன்றை ஒரு கடையில் வாங்கித் தொலைத்துவிட்டேன். தினம் ஒரு படம் என்று ஐந்து நாட்களில் ஐந்து படங்கள். இணையத்தில் எங்காவது குரொசவாவின் வேறு படங்கள் கிடைக்குமா என்று தேடிப் பார்த்து தோல்வியடைந்தேன். அமேசானில் வேறு மூன்று திரைப்படங்கள் அடங்கிய பேக் ஒன்று, தனித்தனியாக இரண்டு டிவிடிக்கள் என மேலும் ஐந்து படங்கள் வாங்கினேன்….ஹ்ம்ம் குரொசவாவின் மொத்தம் பத்து படங்கள்! ( Drunken Angel, High and Low, Seven Samurai, Yojimbo, Red Beard, Ikiru, Rashomon, Throne of Blood, Ran & Kagemusha)

    அவர் முப்பது படங்கள் இயக்கியிருக்கிறாராம். எப்படியாவது – சஞ்ஜூரோ, ஸ்கேன்டல், Bad sleeps well மற்றும் Hidden Fortress ஆகிய படங்களையும் தேடிப் பிடித்து பார்த்து விட வேண்டும்.

    Mifune

    குரோசவாவின் அமர படைப்புகளின் மாறா அங்கமான மறைந்த நடிகர் டோஷிரோ மிஃபுனேவுக்கு இரசிகர் மன்றங்கள் இருக்கின்றனவா? அப்படி இருந்தால் ஆயுள் உறுப்பினராக மாறலாம் என்ற எண்ணம் இருக்கிறது.

    andha_naal

    Rashomon effect – ஐக் கருவாகக் கொண்ட படமான “அந்தநாள்” முக்கியமான தமிழ்த் திரைப்படங்களில் ஒன்று. ரஷமோன் ஜுரத்தில் இருந்து விடுபட முடியாமல் அந்த நாள் படத்தையும் யூ ட்யூபில் கண்டு களித்தேன். கதையின் ஆரம்பத்தில் கொல்லப்படும் ராஜன் பாத்திரமாக வரும் சிவாஜி பணத்தை எண்ணி பெட்டிக்குள் வைக்கும் காட்சி பலமுறை வருவதும், கதையின் அனைத்துப் பாத்திரங்களினாலும் அவர் சுட்டுக் கொல்லப்படுவதும் என்று ரஷமோன் effect இன் அனைத்து உத்திகளும் செம்மையாகக் கையாளப்பட்டுள்ள படம். ஒரு வித்தியாசம். ரஷமோனில் சொல்லப்படும் வாக்குமூலங்கள் முக்கால் வாசி மெய்யும் மீதி narcissm-மும் ஆக இருக்கும்.  வாக்குமூலம் அளிப்பவர்கள் தம்மைப் பற்றிய உயர்வான மதிப்பீட்டில் சொல்லப்படும் வாக்குமூலங்களாக இருக்கும். அந்தநாளில் சொல்லப்படும் வாக்குமூலங்கள் எளிமையானவை. நடந்த சம்பவங்களின் மறு கூறலாகவும் “யார் கொன்றிருப்பார்கள்?” என்ற ஊகத்தின் வெளிப்பாடாகவும் மட்டுமே “அந்தநாளின்” வாக்குமூலங்கள் இருக்கின்றன. ஒரு கட்டத்தில் ஒரு noir படமாக அந்தநாள் சுருங்கிவிடுகிறது. ராஜன் கொலையுண்டிருப்பதைப் பார்த்த சின்னையா போலீஸுக்குச் சொல்ல வேகவேகமாக மூச்சிரைக்க ஓடி வரும் காட்சியில் டைட்டில்கள் காட்டப்படுகின்றன. ரஷமோனின் விறகுவெட்டி காட்டுக்குள் பிணத்தைக் கண்ட அதிர்ச்சியில் வாயு வேகமாய் ஓடும் காட்சியில் டைட்டிலை ஓட்டாமல் காட்சிப்படுத்திய அகிரா குரோசவாவின் படைப்புச் சுதந்திரம் ‘அந்தநாள்’ இயக்குனருக்கு கிடைக்கவில்லையோ? வலிந்து திணிக்கப்பட்ட நகைச்சுவைக் காட்சிகள், சிஐடி சிவானந்தத்தின் (ஜாவர் சீதாராமன்) ஹீரோயிசம் மற்றும் போலீஸ்காரர்களை “caricature”களாக சித்தரித்தல் என்று தமிழ்சினிமாவின் அனைத்து கூறுகளும் ‘அந்தநாளில்’ காணக்கிடைக்கின்றன.

    Akutagawa

    ரஷமோன் திரைப்படத்தின் மூலக்கதை அகுடகவாவின் புகழ் பெற்ற In the Grove என்னும் சிறுகதை. அகுடகவாவின் இன்னொரு சிறுகதை “ரஷமோன்”. ஆனால் அந்த கதை முற்றிலும் வேறானது. அக்கதை நிகழும் இடமான ரஷமோன் என்னும் நகர எல்லைக் கதவைப் பின்புலமாகப் பயன் படுத்திக் கொண்டார் குரோசவா. ர்யுனோசுகே அகுடகவா ஜப்பானிய சிறுகதைகளின் தந்தை என்று கொண்டாடப்படுகிறார். பாரதியைப் போல், புதுமைப்பித்தனைப் போல் இளம் வயதிலேயே இயற்கை எய்திவிட்டவர். மனநோய் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்லப்படுகிறது.

    நவீன ஜப்பானிய இலக்கியத்தின் இரு முன்னோடிகளான – சொஸேகி மற்றும் அகுடகவா – இருவரும் ஆங்கிலம் போதிக்கும் ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. ஐரோப்பாவின் நவீன இலக்கியங்களின் பரிச்சயம் இருவருக்கும் இருந்தது. ஜப்பானிய உரைநடை மற்றும் சிறுகதை வடிவத்துக்கு இவ்விரு இலக்கியவாதிகளும் கணிசமான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்.

    rashomon and seventeen other stories

    ஒரு பாதையில் நடக்கத் தொடங்கி புதுப்பாதையொன்றை கண்டு பிடிப்பதைப் போல அகுடகவா என்னும் மகத்தான சிறுகதை எழுத்தாளரின் அறிமுகம் குரோசவாவின் ரஷமோன் திரைப்படம் வாயிலாக கிடைத்தது. Rashamon and seventeen other stories என்ற சிறுகதைத் தொகுப்பின் கின்டில் பிரதியை அமேசானில் வாங்கினேன். முரகாமியின் ஜப்பானிய நாவல்களின் ஆங்கில மொழி பெயர்ப்பாளரான Jay Rubin அகுடகவாவின் புகழ்பெற்ற பதினெட்டு சிறுகதைகளை மொழிபெயர்த்து தொகுத்திருக்கிறார். இத்தொகுப்பில் அகுடகவா பற்றி முரகாமி எழுதிய அறிமுகக் கட்டுரையும் இடம் பெற்றிருக்கிறது. அகுடகவாவின் சிறுகதைகளில் படிமங்களும், தனித்தன்மையான அழகியலும் மூர்க்கமான நகைச்சுவையும் நிரம்பி வழிகின்றன. A must read for literature lovers.

  • ரஷமோன் – மாறுபாடுகளும் ஒற்றுமையும்

    Rashomon

    “என்னால் படைப்புக்குள் நுழைய முடியவில்லை” என்ற வாக்கியத்தை நாம் கேட்டிருக்கிறோம். படைப்புக்குள் நுழைதல் என்றால் அப்படைப்பின் பாத்திரங்களுக்கு நடுவில் பாத்திரங்கள் உலவும் சூழலில், கண்ணுக்குத் தெரியாமல், வேவு பார்ப்பவனைப் போன்று கலந்து நிற்றலைக் குறிக்கும். பாத்திரங்களின் உணர்வுப் பெருக்கில் மிதந்து செல்லும் இலை மேல் எறும்பாக வாசகன் / பார்வையாளன் தன்னை உணர்தலைக் குறிக்கும்.

    ரஷமோன் திரைப்படத்தில் விறகுவெட்டி விடுவிடுவென்று நடந்து அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் வந்தடையும் முதற்காட்சி யதார்த்தத்திலிருந்து உண்மையைத் தேடி விரையும் மனித விழைவின் படிமம். சூரியனை நோக்கிய படி வேகமாக நகரும் காமிரா ; சுர்ரென்று வயிற்றைப் பிரட்டும் இசை ; விறகுவெட்டியின் மூச்சு முட்டும் சத்தம். பிரயாணத் தொப்பி, பட்டுப் பை, துண்டான கயிற்றுத் துணி, ரத்தினம் பதித்த கத்தி என்று ஆங்காங்கு காட்டுக்குள் விழுந்து கிடக்கும் பொருட்கள். படைப்புக்குள் எளிதில் நாம் நுழைந்து விட முடிகிறது.

    ரஷமோன் கதை சொல்லுதலைப் பற்றிய கதை. கதை முடிவற்றது ;. முடிவு இல்லை என்கிற தெளிவே கதை. காட்டில் நடந்த ஒரு கொடுமையான சம்பவம் பற்றிய வழக்கில் சம்பந்தப்பட்ட இரு சாட்சிகள் விசாரணைகள் முடிந்த பின்னர் நகர எல்லைக் கதவுக்கடியில் மழைக்கு ஒதுங்குகிறார்கள். அவர்கள் கேட்ட வாக்குமூலங்களின் நம்பகமிலாத் தன்மையைப் பற்றி அவர்கள் உரையாடுதலிலிருந்து கதை தொடங்குகிறது.

    மூன்று வாக்கு மூலங்கள். இதில் முரண் என்னவென்றால் மூவருமே கொலையைச் செய்தவர்கள் தாமே என்று ஒப்புக் கொள்கிறார்கள். மூவரில் ஒருவர் கொலை செய்யப்பட்டதாகக் கருதப்பட்டவர். ஆவியாக ஓர் ஊடகத்தின் உடம்பில் புகுந்து தன் தற்கொலை வாக்குமூலத்தை அவர் அளிக்கிறார். மூன்று வாக்குமூலத்திலும் கவனிக்கத் தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. வாக்குமூலத்தை அளிப்பவர் தன்னைப் பற்றி மட்டும் சாதகமான வெளிச்சத்தில் காண்பித்துக் கொள்வது.

    நிஜமும் நினைவும் இணைந்து நடத்தும் நிழல் கூத்தை படம் நெடுக நாம் காண்கிறோம். ஒவ்வொருவரும் தம் கண்ணோட்டத்தில் நடந்தது என்ன என்பதை அணுகுகிறார்கள். நடந்ததை கண்ணால் கண்ட ஒரே சாட்சியான விறகு வெட்டியின் கூற்றையும் சேர்த்து நான்கு கண்ணோட்டத்தில் ஒரு நிகழ்வு பற்றி பேசப்படுகிறது. என்றாலும், இறுதியில் கிடைக்கும் சித்திரம் தெளிவற்றதாகவே இருக்கிறது. படம் முழுக்க வரும் பாத்திரங்களின் முகம் போல நிழலும் ஒளியும் படர்ந்த குழப்பமான சித்திரமே நம் மனதில் விரிகிறது. இலைகளின் நிழலாட்டத்தில் அரை வெளிச்சத்தில் காட்சிகள் நகர்கின்றன. முழுமையான வெளிச்சம் என்ற ஒன்று எங்கும் காணக்கூடியதாய் இல்லை. கண்ணோட்டம் மாத்திரமே யதார்த்தத்தை அணுகும் உத்தியா? அல்லது கண்ணோட்டமே யதார்த்தமா?

    அலங்காரங்கள் இல்லாமல் ஒருவன் தன்னைப் பற்றிப் பேசுதல் சாத்தியமா என்னும் ஆழமான கேள்வியை எழுப்புகிறது ரஷமோன். சுயம் என்ற ஒன்று இருக்கும் வரையிலும் உண்மையைத் தேடும் முயற்சி அபத்தமானதாகவே இருக்க முடியும் என்ற கருதுகோளை நம்முன் வைக்கிறது ரஷமோன். உண்மையை யதார்த்தத்தின் பின்புலத்தில் தேடத்தொடங்குகையில் தற்சார்பான விளக்கங்களின் பாதையிலேயே நாம் பயணிக்க வேண்டியிருக்கிறது.

    உறைய வைக்கும் சிரிப்புடன் உடல் மொழியுடன் வழிப்பறி கொள்ளைக்காரனாக வரும் டோஷிரோ மிஃபுனே (அகிரா குரோசவாவின் ‘ஆஸ்தான கலைஞன்’), கொள்ளைக்காரனால் கயிற்றால் கட்டிபோடப்பட்டு நிராதரவான கணவனாக வரும் மசாயூகி மோரி, கொள்ளைக்காரனால் வன்புணரப்படும் மனைவியாக வரும் மச்சிகோ க்யோ – மூன்று கலைஞர்களும் மூன்று ஃப்ளாஷ் பேக்கிலும் தம் நடிப்பில் வேறுபட்ட பரிமாணங்களை கொண்டு வந்து பிரமிப்பூட்டுகிறார்கள். கொள்ளைக்காரனின் ஃப்ளாஷ்பேக்கில் மனைவியுடன் பிரயாணம் செய்யும் சமுராயிடம் தந்திரமாகப் பேசி காட்டுக்குள் அழைத்துச் சென்று கட்டிப்போட்டுவிட்டு ஒரு புதருக்குள்ளிருந்து சமுராய்யின் மனைவியை காமம் மேலிட பார்க்கும் காட்சியில் நம்மை உறைய வைக்கிறார் மிஃபுனே. மனைவி சொல்லும் ‘கதையில்’ ஏளனமாகப் பார்க்கும் கணவனின் பார்வை தாளாமல் பித்துப் பிடித்தவர் போல் ஆக்ரோஷம் ததும்ப நடிக்கும் காட்சியில் மச்சிகோ நடிப்பின் உயரத்தை தொடுகிறார். சமுராய்யின் ஆவி ஓர் ஊடகத்தினுள் உட்புகுந்து வாக்குமூலம் அளிக்கும் காட்சி மயிர் கூச்செறிய வைக்கிறது.

    தன் எல்லா படங்களிலும் மழையை படமாக்காமல் குரோசவா இருந்ததில்லை. ரஷமோனிலும் மழைக் காட்சி இருக்கிறது. கதையின் முக்கியப்பகுதிகளில் வெயில் சுட்டெரிக்கிறது. ரஷமோன் வாயிலில் விறகுவெட்டியும், துறவியும் கதைகளை சொல்லும் போது மழை பெய்கிறது. ஜப்பானிய திரைப்பட மேதை இரு மாறுபட்ட யதார்த்த வெளிகளை வெயில்-மழை என்று இருமைகளாகச் சித்தரித்திருக்கிறார்.

    அகிரா குரோசவா ஆசாரமான பௌத்தர் இல்லை. ஆனால் அவர் படங்களில் பௌத்த சிந்தனைகள் விரவிக் கிடக்கின்றன. ரஷமோன் சொல்லும் மையக் கருத்து பௌத்தத்தின் மூலக் கருத்தை ஆமோதிக்கிறது – அனுபவங்களின் நிச்சயமின்மை. கதையில் சொல்லப்படும் நான்கு கதைகளும் ஒன்றுதான், ஆனாலும் முற்றிலும் மாறுபட்டவை. கதைகளின் சுருக்கம் ஒன்றுதான். ஆனால் அக்கதைகளின் விவரங்கள் தாம் அவைகளெல்லாம் வெவ்வேறு கதைகள் என்கிற பாவனையை உண்டு பண்ணுகின்றன. மயக்கமா அல்லது வன்புணர்ச்சியா? சமுராய்யை கொன்றது கொள்ளைக்காரனா? அல்லது மனைவியா? அல்லது சமுராய் வாளை வயிற்றுக்குள் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டானா? எந்த கதை உண்மை? உண்மையில் என்ன நடந்தது? யார் பொய் சொல்லுகிறார்கள்? பல வினாக்கள். பல வித மாறுபாடுகள். மேலோட்டமான மாறுபாடுகளை ஒதுக்கி விடலாம். அவைகள் முக்கியமானவைகள் அல்ல. அவைகள் மாறுபட்ட தன்மை கொண்டவைகளாக இருக்கின்றன. அவ்வளவே.

    திரைப்படம் முடிவடையும் தருணங்களில் தனியாக விடப்பட்ட குழந்தையின் அங்கியை வழிபோக்கன் திருடுகிறான். ஆறு குழந்தைகளின் தந்தையான ஏழை விறகுவெட்டியோ ஏழாவது குழந்தையாக அந்த அனாதை குழந்தையை தன்னுடன் எடுத்துப் போகிறான். பல்வேறு உயிர்களாக, பல்வேறு குணாதிசயங்களுடன் நம் எல்லோருடைய வாழ்வும் ஒன்றுடன் ஒன்றாக பின்னிப் பிணைந்திருக்கிறது என்பது பௌத்த சிந்தனை. இப்பிணைப்பை துண்டித்தலோ இந்த பிணைப்பிலிருந்து விடுபடுதலோ சாத்தியமில்லை. மாறுபாடுகளை ஒதுக்கி பிணைப்பின் ஒன்றிணைந்த தன்மையை சிந்தித்தலையே ரஷமோன் பேசுகிறது.

    நன்றி : பதாகை

  • மருகும் முருகன் – மாதவன் நாராயணன்

    PERUMAL_MURUGA_2265940f

    சிறப்புப் பதிவு : மாதவன் நாராயணன்

    ‘யாமிருக்க பயமேன்?’ என்ற ஆறுதற்சொற்களுக்கு மேல் வேலேந்தி நிற்கும் முருகன் படம் தொங்கும் தமிழ்நாட்டில் இன்று எழுத்தாளர் பெருமாள் முருகன் ‘மதம்’ பிடித்த யானைகளின் கால்களில் சிக்கித் தவிக்கிறார் ; ஓடி மறைகிறார்!

    நக்கீரனும் பொய்யாமொழிப்புலவனும் வாழ்ந்த பூமி! நாத்திகமும் ஓங்கி, சைவமும் தழைத்து, .ராமானுஜர் வகுத்த வழியில் வைணவம் சாதிச் சுவர்களையெல்லாம் தாண்டி அந்தணரையும் மற்ற வகுப்பினரையும் இணைத்துச் செழித்த நாடு !

    மீசைக்கார பாரதி சாதிகள் இல்லையென்று உரைத்தான்! தமிழும் இனிமையும் இடையறாமல் சேர்ந்தே இருந்தது – தினத்தந்தி மொழியில் சொல்லப்போனால் -தெரிந்ததே! ஆனால் வாய்மைக்கும் பட்டிமன்றத்துக்கும் பெயர் பெற்ற நாடு தமிழ் நாடு என்பதையும் நினைவில் வைத்துக் கொண்டால் பெருமை ஓங்கும். பண்பாடும், நவீன எண்ணங்களும் சேர்ந்து செழிக்கும் நாள் எப்போது வரும்?

    நந்தனார் பாடலை பாடிப் போற்றும் தமிழ்நாட்டில் பகுத்தறிவும் போஷாக்குடன் வளர்ந்திருக்கிறது.

    இதே தருணத்தில் சாதிக் கொடுமையின் புது அவதாரத்தையும் கொஞ்சம் கவனித்தாக வேண்டியிருக்கிறது. மேல்சாதி, கீழ் சாதி என்று சொன்னது போய், இடைச் சாதிச் சக்திகளாக மூன்றாவது சாதிக் குழுக்கள் எண்ணிக்கையின் பலத்தில் ஜனநாயகத்திற்கொரு வக்கிர வடிவம் தந்து புதுப் புட்டியில் பழைய கள்ளை ஊற்றி போதை பெருக்கெடுத்து ஆடுகின்றன. தாகூர் சொன்ன விசாலமான நோக்கு என்று வருமோ?

    குறுகிய மனப்பான்மை என்றால் என்ன என்று கேள்வி கேட்ட மரபு தமிழருடையது. சமீப காலத்திய இறக்குமதி செய்யப்பட்ட சித்தாந்தங்கள் தமிழ் நாட்டிற்கு அவசியமா என்ற கேள்வி எழுகிறது. சிவபெருமானிடமே வாதாடிய நக்கீரன் தோன்றிய தமிழ்நாட்டில் ஒர் எழுத்தாளரை இங்ஙனம் இம்சைப்படுத்துவது நியாயமா? நகைச்சுவை நாயகர் வடிவேலு பாணியில் சொன்னால் : இது தேவையா?

  • அமைதியின் சத்தம் அல்லது பலரின் ஒற்றைக் குரல்

    Thanks The Hindu

    பெருமிதமா? நெகிழ்வா? எழும் உணர்வை துல்லியமாக வரையறுக்க இயலவில்லை. கைலாஷ் சத்யார்த்தி – யூசஃப்சாய் மலாலாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட நிகழ்வை தொலைக்காட்சியில் காண்கையில் ஏற்பட்ட உணர்வை எப்படி சொல்வது?

    ராஹத் ஃபதே அலி கான் தன் தந்தையின் அமர கவாலி “அல்லாஹூ அல்லாஹூ” வை மண்மணம் கமழ பாடுகையில் மனவெழுச்சி தணிந்து சமநிலையடைந்தது போலிருந்தது. நோபல் பரிசுக்குழுவின் தலைவர் பரிசு பெறும் இரட்டையரைப் பற்றிய அறிமுகவுரையைத் துவக்கினார். மஹாத்மா காந்தியின் மேற்கோள் ஒன்றோடு முடித்தார்.  “நான் ஏற்கும் ஒரே கொடுங்கோலன் என்னுள் கேட்கும் அசைவிலாத உட்குரல் தான்” (“The only tyrant I accept is the still, small voice within me.”) “தத்தம் உட்குரலைக் கேட்ட” இருவருக்கும் மெடல்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. சான்றிதழை அருகில் நின்றிருந்தவரிடம் சற்று நேரத்துக்கென கொடுத்துவிட்டு மெடலை உயர்த்திப் பிடித்தார் மலாலா. சத்யார்த்தியையும் உயர்த்திப் பிடிக்கச் சொன்னார். கை தட்டல் சில நிமிடங்களுக்கு நீடித்தது.

    பரிசளிப்புக்குப் பிறகு ஓர் இசை இடைவேளை. சரோத் கலைஞன் அம்ஜத் அலி கான் தன் புதல்வர்கள் இருவருடன் சேர்ந்து “அமைதிக்கான ராகம்” என்ற இசை மீட்டினார்.

    கைலாஷ் சத்யார்த்தி தன் உரையை முதலில் இந்தியில் தொடங்கினார். பிறகு ஆங்கிலத்தில் தொடர்ந்தார். பேசிக் கொண்டே இருந்தவர் திடீரென ஒரு பக்கம் ‘மிஸ்’ ஆவதைக் கவனித்தார். சில வினாடிகளுக்கு அவருள் ஒரு பதற்றம். சில வினாடிகள் தாம். “மாநாடுகளில் உரையாற்றுவதன் வாயிலாகவோ, தூர நின்று கொடுக்கும் பரிந்துரைகளினாலோ பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்துவிடப்போவதில்லை…..நண்பர்களே, இப்போது என் பிரச்னை என் உரையின் ஒரு பக்கம் எனக்கு கிடைக்காமல் இருப்பது தான்” என்று சொல்லவும் ஆங்காங்கு மெலிதான நகைப்பொலிகள் எழுந்தன. நிகழ்ச்சிப் பொறுப்பாளர் சிறிது நேரத்தில் ஒரு தாளை அவரிடம் கொடுத்ததும் “இதற்கு முன்னர் வேறொரு நோபல் இது மாதிரி நிகழ்ந்திருக்கிறதா என்று தெரியவில்லை…நான் ஏற்கெனவே சொன்னது மாதிரி இன்று என்னென்னவோ நடக்கிறது….தைரியமிக்க ஓர் இளம் பாகிஸ்தானிய பெண் ஒர் இந்தியத் தந்தையையும், ஒர் இந்தியத் தந்தை ஒரு பாகிஸ்தானிய மகளையும் சந்தித்த நாளல்லவா இது!” என்று சத்யார்த்தி பேசினார். கருணையை உலகமயமாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். உரையை முடிக்கும் தறுவாயில் பார்வையாளர்களை கண்களை மூடிக் கொண்டு இருதயப் பகுதியைத் தொட்டுக் கொள்ளச் சொன்னார். “உங்களுள் இருக்கும் குழந்தையை உணருங்கள்…அது சொல்வதைக் கேட்க முயலுங்கள்….அக்குழந்தை சொல்வதைக் கேளுங்கள்….” பிரகதாரண்யக உபநிஷத்தில் வரும் இறவா வரிகளுடன் தன் உரையை முடித்துக் கொண்டார்.

    “அசதோமா சத் கமய

    தமசோமா ஜ்யோதிர் கமய

    ம்ருத்யோர்மா அம்ருதம் கமய”

    பாகிஸ்தானியப் பெண் பேசத் தொடங்கும் முன்னர் எல்லை காந்தி பாச்சா கானின் புத்திரர் கனி கானின் கவிதைகளை சர்தார்அலி டக்கர் பாடினார். பஷ்தோ பெண்ணான மலாலா கவிதைகளை புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தார்.

    பின்னர், மலாலா பேசத் தொடங்கினார்.  ‘பிஸ்மில்லா ஹிர் ரஹ்மானீர் ரஹீம்’ என்று புனித குரானின் சொற்களோடு துவங்கினார். தன் சிறகுகளைக் கட்டிப் போடாத தாய்-தந்தையருக்கு நன்றி செலுத்தினார், கல்வி மறுக்கப்படும் ஆறு கோடி சிறுமிகளின் பிரதிநிதியாக இப்பரிசை ஏற்பதாகக் கூறினார். பாகிஸ்தானின் ஸ்வாத் பிரதேசத்தில் பள்ளி சென்ற போது அவருடன் படித்த அவடைய நண்பர்களும் விழாவிற்கு வந்திருந்தனர். தீவிரவாதிகளால் மலாலாவுடன் சேர்த்து சுடப்பட்ட அவருடைய தோழிகள் – ஷாசியாவும் கைநாத்தும் – பார்வையாளர்களில் இருந்தனர். போகோ அராம் என்னும் தீவிரவாத கும்பலின் பயங்கரவாதத்துக்கு தினம் தினம் பலியாகிக் கொண்டிருக்கும் வடக்கு நைஜீரியப் பெண்களில் ஒருவரான ஆமினாவும், பெண் கல்விக்காக சிரியாவில் போராடி இன்று ஜோர்டானில் அகதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் மேசோன் என்பவரும் நோபல் பரிசு நிகழ்வுக்கு வந்திருந்தனர். அந்நால்வரும் மலாலா உரையின் போது ஆர்வத்துடன் கை தட்டியவாறும் கைத் தொலைபேசியில் புகைப்படங்கள் எடுத்தவாறும் இருந்தனர்.

    “நான் என் கதையை சொல்வது அது வித்தியாசமானது என்பதால் இல்லை ; அது வித்தியாசமானதாக இல்லை என்பதால்.

    இது பல பெண் குழந்தைகளின் கதை.

    நான் அவர்களின் கதைகளையும் சொல்கிறேன்.

    அணிந்திருக்கும் காலணியின் உயரத்தையும் சேர்த்து ஐந்தடி இரண்டங்குல உயரமான ஒற்றைப் பெண்ணாக நான் தோற்றமளித்தாலும். என் குரல் தனிக்குரலன்று. பலரின் குரல்கள் என்னுள் ஒலிக்கின்றன.

    நான் மலாலா. நான் ஷாசியாவும்.

    நான் ஆமினா

    நான் மேசோன்”

    மலாலா உரையை முடித்து தன் இருக்கைக்குச் செல்லும் வரை அவையோர் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர். தன் இருக்கையை அடைந்ததும் மார்பில் தன் வலது கரத்தை வைத்து அவையோரின் கரவொலியை பணிவுடன் ஏற்றுக் கொண்டு உட்காரலாம் என்று மலாலா இருக்கையில் அமர எத்தனிக்கையிலும் கரவொலி நிற்கவில்லை. மலாலாவின் கை அவர் மார்பில் பதிந்தவாறே இருந்தது.

    இரு நாடுகள் ; ஒர் இந்து ; ஒரு முஸ்லீம் ; அறுபது வயது ஆண் ; பதினேழு வயது சிறுமி ; வித்தியாசங்கள் அர்த்தமிழந்து மனிதம் என்னும் ஓருணர்வில் கலப்பதற்கான சாத்தியத்தின் சிறு மங்கலான மினுக்கொளியை இந்நிகழ்வில் காண முடிந்தது.

    கைலாஷ் சத்யார்த்தியின் நோபல் பரிசு ஏற்புரை

    மலாலாவின் நோபல் பரிசு ஏற்புரை

  • மரம் வெட்டும் திருவிழா

    மரம் வெட்டும் திருவிழா

    காலனியில் இன்று

    இனிப்பு விநியோகம்

    முன்வாசலில் நின்ற

    வயதான மரங்கள்

    வெட்டப்பட்டு

    கட்டிட பால்கனிகளில்

    வெளிச்சம் பாய்ந்த மகிழ்ச்சியில் ;

    கலைந்த கூடோன்றுள்

    கிடந்த பறவை முட்டைகளை

    வீசியெறிந்து விளையாடி

    குழந்தைகள் குதூகலிப்பதை

    மரங்களின் இடத்தடையின்றி

    நகர்ந்த வாகனங்களின்

    உறுமலில் எழுந்த புகையை சுவாசித்தவாறு

    சுழலும் சங்கிலி-இரம்பமிடும் சத்தத்தின் பின்னணியில்

    பால்கனிக்காரர்கள்

    கண்டு களித்தார்கள்

    மரண தினத்தை

    கொண்டாடும் மரபு

    மரம் மரணித்த அன்றும்

    மாறாமல் தொடர்ந்தது

    ​@ studiothirdeye.com

    செயல்முறை

    சிந்தனைப்பாத்திரத்தில்

    நிரம்பி வழிந்த சொற்கள்

    காகிதப் பக்கங்களில் ஒட்டிக் கொண்டு

    பின்னர்

    வாசிப்பின் உஷ்ணத்தில்

    எண்ணங்களாக ஆவியாகி

    இன்னொரு சிந்தனைப் பாத்திரத்துள்

    புகுந்து கொண்டன

  • ஹைதர்

     

    சிறப்புப் பதிவு : மாதவன் நாராயணன்

    Haider_Poster

    காஷ்மீர் ஓர் அரை-விதவை. சமவெளியுமல்லாத மலையுமல்லாத ஒரு பள்ளத்தாக்கு. இது ஒரு நாடு என்று சிந்திக்கும் சிலர் வசிக்கிற ஒரு மாநிலம். துள்ளலான நாட்டார் உச்சரிப்புக்கும்  உறவிலாத வேறோர் அதிகார பூர்வ மொழியின் பகட்டான இலக்கணத்துக்கும் நடுவில் தள்ளாடும் மொழி. சைவத்திலும் சூஃபியிலும் தோய்ந்த, இறக்குமதி செய்யப்பட்ட தீவிரவாத எண்ணங்களால் பாதிப்புறும் பரந்த கலாச்சாரம்.

    தடுமாற்றம் நிரந்தர இயல்பு இங்கே ; இருப்பதா? இல்லாமற் போவதா? நான் இருக்கிறேனா அல்லது இல்லையா? ஹாம்லெட்டை விடப் பொருத்தமான உருவகம் இதற்கு இருக்குக் கூடுமா? அல்லது எண்ணற்ற அடுக்குகளாய் விரியக்கூடிய நேசங்கள், கோபம் மற்றும் மனத்தடுமாற்றம் கொண்ட அவன் அன்னையா? அல்லது தந்தை, சகோதரன் மற்றும் காதலன் இவர்களுக்கிடையே சிக்கிச்சுழலும் தேவதை அனைய அவனின் காதலியா? 1947 இன் பின்பனிக்காலத்தில் காஷ்மீரின் பெண்களையும் குடிமக்களையும் பாகிஸ்தானிலிருந்து அனுப்பப்பட்ட சூறையாடும் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து காக்க இந்தியத் துருப்புகள் விரைந்தன. அப்போது இந்தியத் துருப்புகளின் உச்ச தளபதியாக இருந்தவர் ஜெனரல் மௌன்ட்பேட்டன் என்பது ஒரு தொலைந்த முரண் ; அவரே நேருவின் மேல் – இந்திய வரலாற்றின் மேல் – ஜம்மு-காஷ்மீரின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வழியாக பொது வாக்கெடுப்பு எனும் வலிமிக்க திட்டத்தை திணித்தவர். காயங்கள் இன்னும் ஆறவில்லை ; ஹாம்லெட்டைப் போல ஹைதர் போல மனங்கள் குழப்பத்தில் தள்ளாடுகின்றன.

    இங்கிலாந்தின் மிகப்பெரிய இலக்கிய ஆளுமை புனைந்த ஆங்கிலக் கதைப்பாத்திரத்தை கையிலெடுத்துக் கொண்டிருக்கிறார் விஷால் பரத்வாஜ் ; ஆங்கிலேயர்களின் தாக்கம் படிந்த வரலாற்றின் மீது அழுத்தமாய்ப் பதிந்த ராணுவ காலடித்தடங்களை அழித்துக் கொள்ள விழையும் சாம்பல் நிறமான மந்தார நிலப்பரப்புகளையும் மயங்க வைக்கும் பனியையும் இலையிலா மரங்களையும் ஆழமான படிமமாக்கியிருக்கிறார் விஷால்.

    Haider-Shraddha-Kapoor

    ஹைதர் ஒரு கவிஞன் ; எளிதில் பாதிப்படைபவன் ; அன்னையின் மேல் வெறிப்பற்று கொண்டிருப்பவன் ; அதே நேரம் கடமையின் அழைப்பை மறுக்காத, அதன் காரணமாக ராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் சிக்கிக் கொண்ட மருத்துவர்-தந்தையால் பேணப்பட்டவன். உயிர் பிழைத்தல், இலட்சியம் மற்றும் குழப்பம் – இவற்றின் கலவையில் பின்னப்பட்ட பாத்திரங்கள் உலவும் கிராமிய இல்லங்கள், படகுவீடுகள், குறுகலான சந்துகள் நிரம்பிய சூழலில்  துரோகம் – நிஜமோ கற்பிதமோ – ஒர் இயல்பான பிண்ணனி ; பழிவாங்கல் ஒர் இயல்பான விளைவு.

    இந்தக் கொடூரமான சோகத்தை அதற்கேயுரிய கருப்பு நகைச்சுவையுடனும் பாலிவுட்டின் நிறங்களுடனும் சொல்ல படைப்பாற்றலும் கலைத்திறனும் தேவைப்படுகிறது. ஷேக்ஸ்பியரின் நகைச்சுவையை தாராளமாகப் பயன்படுத்தி விஷால் பின் – நவீனத்துவ உணர்வை தந்திருக்கிறார்.

    குடும்பக் கதையை அரசியல் உருவகமாக மாற்றிச் சொல்லும் ஒரு திருமணப் பாட்டு படத்தில் வருகிறது. இரட்டை சல்மான்கான் இரசிகர்கள் மறை-உளவாளிகளாக வருகிறார்கள்.  இவ்விரண்டு அம்சங்கள் தவிர ஹைதர் காஷ்மீரை பட்டகத்தின் மேல் பட்டுச்சிதறும் ஒளி வண்ணங்களாக காட்டுகிறது. ஒவ்வொரு வண்ணத்தின் பின் ஒளிந்திருக்கும் உண்மைகளை நம்மால் முழுமையாக அறிய முடியாமற் போகலாம். ஹைதர் காஷ்மீரை பன்முக பட்டகப் பார்வையாக நம்முன் வைக்கிறது – மனிதம், ஆவணம், பால், தத்துவம், கலை, அரசியல் மற்றும் தாய்மை.

    ஷாஹித் கபூர் தன் வாழ்நாளின் முக்கியமான பாத்திரத்தை ஏற்று திறம்பட நடித்திருக்கிறார். எல்லா நடிகர்களுமே திரைப்படத்துக்கு நம்பகத்தன்மையை நல்குகிறார்கள். கொந்தளிப்பான தாய் பாத்திரத்தில் தபு ; சில்லறை இலட்சியங்களுக்கும், தெருக்கோடித் தரமான காதலுக்கும் இடையில் அல்லாடும் வில்லத்தனம் கொண்ட சித்தப்பா பாத்திரத்தில் கேகே மேனன் ; ஹைதரின் மருத்துவர்-தந்தை டாக்டர் ஹிலால் மீர்-ஆக நரேந்திர ஜா ; பிந்தைய கால தந்தையின் ஆவியாக சிறப்புத் தோற்றத்தில் இர்ஃபான் கான்.

    ஒல்லியான, தேவதையாக, அன்பான பாத்திரத்தில் ஷ்ரத்தா கபூர் – கஷ்டப்படுத்தும் பேச்சு நடை கொண்டு ஒரு புதிய முகம் எத்தனை ஆழத்தை எளிமையை காட்ட முடியும்?

    காஷ்மீரின் கம்பிகளாலான நாட்டு வாத்தியங்கள் எழுப்பும் அச்சமூட்டும் இசையும், பதற்றமான பள்ளத்தாக்கின் தனித்து விடப்பட்ட அழகை பதிவு செய்யும் ஒளிப்பதிவும் நனவிலியுடன் பேசுகின்றன ; எதையும் தீர்மானிக்கவியலாத, காயப்பட்ட இளவரசனின் உருவகத்தை மேம்படுத்துகின்றன.

    அடிப்படையாக அந்திமயங்கிருள் கருப்பொருளான ஹைதரில் கறுப்பு – வெள்ளை சித்தரிப்பை எதிர்பார்ப்போர் படத்தை கடுமையாக விமர்சிக்கக்கூடும். இந்திய ராணுவத்தின் கடினமான நிலையையும் குடிமக்களைக் காக்க ராணுவம் மேற்கொண்ட காஷ்மீர்  தலையீட்டின் வரலாற்று நுட்பங்களையும் ஹைதர் தெளிவாகச் சித்தரிக்கிறது. இராணுவக் கண்காணிப்பில் உள்ள பிரதேசத்தின் மனிதச் சிக்கல்களைப் பற்றியும் பேசவும் தவறவில்லை.

    ஷேக்ஸ்பியர் வகைமைத் திரைப்படங்களில் விஷாலுக்கு இது ஹேட்ரிக் ; மக்பூல் என்ற மக்பெத் ஒர் உத்தேசமான ஆனால் நம்பிக்கையான துவக்கம். ஓத்தெல்லோவாக ஓம்காரா ஒரு சூத்திரமாக வளர்ந்தது. ஹாம்லெட்டாக ஹைதர் ஒரு பரிபூரணத்தை எட்டியிருக்கிறது.

    துப்பாக்கிகளும் கல்லறைகளும் ஒரு வாழும் துக்கத்தை எதிரொலிக்கையில், பாத்திரங்கள் கனமாக நம் நெஞ்சுள் தொங்குகின்றன ; அரை-விதவைப் பள்ளத்தாக்கில் நண்பகலின் மூடுபனி போல், வானில் வட்டமிடும் கழுகுகளின் குரல்களின் பிண்ணனியில் வீழும் பனித்துளி போல கண்ணில் சொட்டும் கண்ணீர். அமைதியான் ஜீலம் நதியின் சலசலப்பைப் போல், இயக்குனரின் செய்தி நம்மை வந்தடைகிறது ; நீ விடுதலை (azaadi) பெற வேண்டியது பழி வாங்கும் (inteqam) உன் எண்ணத்திடமிருந்து தான்.
    Official-Haider-movie-trailer-gains-YouTube-success

    (நண்பர் மாதவன் நாராயணன் ஹிந்துஸ்தான் டைம்ஸில் எடிட்டராகப் பணி புரிகிறார். பத்தியாளரும் கூட. ட்வீட்டர் சமூக தளத்தில் மிகப் பிரபலம். அவரின் ட்வீட்டர் ஹேன்டில் : @Madversity )