ஆபுத்திரன் – 3

உதயகுமரனை விஞ்சையன் கொன்று விடுகிறான் ;  அதற்குக் காரணமானவள் என்று மணிமேகலை சிறையிடப்படுகிறாள் ;  பின் இராசமாதேவி அன்பு காட்டுபவள் போல் நடித்து வஞ்சிக்க தன்னுடன் மணிமேகலையை தங்க வைத்துக் கொள்கிறாள். மயக்க மருந்தூட்டுதல், காட்டுமிராண்டி இளைஞன் ஒருவனை தீங்கிழைக்க ஏவுதல், பொய்ந்நோய் சொல்லி புழுக்கறையில் அடைவித்தல் என மணிமேகலைக்கிழைக்கப்பட்ட ஒவ்வொரு இன்னலிலிருந்தும் துன்பமின்றி இருந்தாள். இராசமாதேவி வியந்து நிற்கையில் மணிமேகலை அவளுக்கு தான் முன்பிறவி பற்றிய ஞானம் கொண்டவள் என்பதை தெரிவிக்கிறாள்.

“உடற்கழு தனையோ வுயிர்க்கழு தனையோ

உடற்கழு தனையே லுன்மகன்  றன்னை

எடுத்துப் புறங்காட் டிட்டனர்  யாரே

உயிர்க்கழு தனையே லுயிர்புகும் புக்கில்

செயப்பாட்டு வினையாற் றெரிந்துணர் வரியது

அவ்வுயிர்க் கன்பினை யாயி னாய்தொடி

எவ்வுயிர்க் காயினு மிரங்கல் வேண்டும்”       (23 : 74 – 79)

அவள் வாழ்வில் அதுவரை நடந்தவற்றை இராணிக்குச் சொன்னாள். உதயகுமாரனுக்கும் தனக்கும் இருந்த முன்பிறவித் தொடர்பை விளக்கினாள். பஞ்ச சீலத்தை இராணிக்கு போதிக்கிறாள். செய்த தவற்றைப் பொறுக்க வேண்டும் என்று சொல்லி இராணி வணங்கினாள். மணிமேகலை அதைப் பொறுக்காமல் “என் கணவனின் தாயாக இருந்ததோடு மட்டுமல்லாமல் இத்தேசத்து மன்னனின் தேவியாகவும் நீங்கள் இருக்கிறீர்கள் ; எனவே என்னை நீங்கள் வணங்குதல் சரியாகாது” என்று சொல்கிறாள். (சிறை விடு காதை)

மணிமேகலை இராசமாதேவியின் அரண்மனையில் இருக்கிறாள் என்று மாதவி கேள்விப்பட்டு, அவளும் சுதமதியும் அறவண அடிகளைச் சென்று அதைப் பற்றி சொல்கிறார்கள். அறவண அடிகள் இராசமாதேவியின் அரண்மனைக்குச் சென்று சந்திக்கிறார், மரியாதைகளுடன் அவரை வரவேற்ற இராணிக்கு வாழ்வின் நிலையாமையை விளக்கி பேதைமை முதலான பன்னிரு நிதானங்களை அறிவுறுத்தினார்.

“தேவி கேளாய் செயதவ யாக்கையின்

மேவினே னாயினும் வீழ்கதிர் போன்றேன்

பிறந்தார் மூத்தார் பிணிநோ யுற்றார்

இறந்தா ரென்கை யியல்பே யிதுகேள்

பேதைமை செய்கை யுணர்வே யருவுரு

வாயி லூறே நுகர்வே வேட்கை

பற்றே பவமே தோற்றம் வினைப்பயன்

இற்றென வகுத்த இயல்பீ ராறும்

பிறந்தோ ரறியிற் பெரும்பே றரிகுவர்

அறியா ராயி னாழ்நர கறிகுவர்”                             (24 : 101 – 110)

 

அருகில் நின்றிருந்த மணி மேகலையிடம் “நீ பிற அறங்களைப் பற்றி அறிந்தவுடன் உனக்கு இதைப் பற்றி விளக்கமாக உரைப்பேன்” என்று சொல்கிறார்.

அறவண அடிகள் விடை பெறும் சமயத்து அவரை வணங்கி மணிமேகலை அங்கு குழுமியிருந்த மாதவி, சுதமதி மற்றும் இராசமாதேவி ஆகியோரை நோக்கி “இச்சான்றோர் சொன்ன நன்மொழிகளை மறவாது அவர் கூறியவாறே ஒழுகுமின்; யான் இந்நகரிலிருப்பேனாயின் உதயகுமரன் மரணம் காரணமாக என்னைப் பற்றி தவறாகப் பேசுவர்; இனி நான் இங்கிருந்து செல்வதே சிறந்தது. இனி ஆபுத்திரனாடடைந்து பின்பு மணிபல்லவமடைந்து புத்தபீடிகையைத் தரிசனம் செய்து யாங்கணுஞ்சென்று நல்லறம் செய்து கொண்டிருப்பேன் ; எனக்கு இடரேற்படுமோ என்று நீங்கள் இரங்க வேண்டாம்” என்று சொன்னாள். அவர்களிடமிருந்து விடை பெற்று சூரியன் மறைந்த மாலைப் பொழுதில் சம்பாபதியையும் கந்திற்பாவையையும் துதித்து வணங்கி, மேக மார்க்கமாக பறந்து சென்று இந்திரனுடைய வழித்தோன்றலாகிய புண்ணியராசனது நகர்ப்புறத்திலுள்ள ஒரு பூஞ்சோலையில் இறங்கினாள். அங்கிருந்த முனிவனொருவனை வணங்கி “இந்நகரின் பெயர் யாது? இதனையாளும் அரசன் யார்?” என்று கேட்டாள். “இதன் பெயர் நாகபுரம். இதனையாள்பவன் பூமிசந்திரன் மகனாகிய புண்ணியராசன் என்பான். இவன் பிறந்த நாள் தொட்டு இந்நாட்டில் மழை பிழைத்தறியாது ; மண்ணும் மரங்களும் பல வளங்களை அளிக்கும் ; உயிர்களுக்கு ஒரு நோயும் இல்லை” என்று அம்முனிவன் அரசன் பெருமையைக் கூறினான்.

 

உரை உதவி : மணிமேகலை – மூலமும் உரையும் – ந மு வேங்கடசாமி நாட்டார் & ஔவை சு துரைசாமிப் பிள்ளை

ஆபுத்திரன் – 2

ஒரு நாள் ஆபுத்திரன் நள்ளிரவில் துயின்று கொண்டிருக்கையில் சிலர் அவனை எழுப்பி “வருத்தும் பெரும் பசி வயிற்றினை வாட்டுகிறது” என்று சொல்லித் தொழுதனர். அதனைக் கேட்ட ஆபுத்திரன் அவர்கள் பசியைப் போக்கும் வழியறியாமல் திகைத்தான். வருத்தமுற்றான். அக்கணம் அவன் தங்கியிருந்த கலை கோயிலில் குடி கொண்டுள்ள சிந்தா தேவி அவன் முன்னம் பிரசன்னமானாள். அவள் கையில் ஓர் அழகிய அட்சயப் பாத்திரம் இருந்தது. அதனை அவனிடம் கொடுத்து “இதனைக் கொள்க; நாடெல்லாம் வறுமை யுற்றாலும் இவ்வோடு வறுமையுறாது; எவ்வளவு கொடுப்பினும் இதில் உணவு குறையாதிருக்கும்” என்றுரைத்தாள். அதனைப் பெற்று ஆபுத்திரன் மகிழ்ச்சியுற்று சிந்தா தேவியைப் பரவிப் பணிந்தான்.

“சிந்தா தேவி! செழுங்கலை நியமத்து

நந்தா விளக்கே! நாமிசைப் பாவாய்!

வானோர் தலைவி! மண்ணோர் முதல்வி

ஏனோ ருற்ற இடர் களைவாயெனத்

தான்தொழு தேத்தித் தலைவியை வணங்கி”                  (14 : 17-21)

அன்று முதல் அவன் எல்லோருக்கும் உணவளிப்பவனானான். அவனை எந்நேரமும் மக்கள் சூழ்ந்திருந்தனர். விலங்குகளும் பறவைகளும் கூட அவனைப் பிரிவின்றி சூழலாயின. அவனின் அறத்தின் மிகுதி தேவராஜன் இந்திரனை பாதித்தது. அவன் வெண்ணிறக் கம்பளமாகிய இருக்கையை நடுங்கச் செய்தது. நடை தளர்ந்து கைத்தடியை ஊன்றிய முதிய பிராமணன் உருக்கொண்டு ஆபுத்திரன் முன் தோன்றினான். “நான் இந்திரன். உனைக் காண உன்முன் வந்தேன். நின் எண்ணம் யாது? உனது தானத்திலாகிய மிக்க பயனை கொள்வாயாக” என்றுரைத்தான். இந்திரன் சொன்னதைக் கேட்ட ஆபுத்திரன் விலாவெலும்பு ஒடியும் படி சிரித்தான்.

“காணத்தக்க அழகின் சிறப்பினையுடைய நும் கடவுளர் இவ்வுலகிற் செய்த நல்வினையின் பயனை அவ்வுலகில் நுகர்ந்து கொண்டிருக்கிறார்கள். அறம் புரியும் எளிய மக்களைப் பாதுகாப்போர், நல்ல தவங்களைச் செய்வோர், பற்றுகளைக் களையும் முயற்சியில் ஈடுபடுவோர் ஆகியோர் யாரும் இல்லாத விண்ணோருலகின் தலைவனே! வருந்தி வந்தோருடைய அரும்பசியைப் போக்கி அவர் தம் இனிய முகத்தைக் காணுமாறு செய்யும் என் தெய்வக் கடிஞை (பாத்திரம்) ஒன்றே போதும் ; நின்பாற் பெறத்தக்கது ஏதும் இல்லை” என்று இந்திரனை மதியாதுரைத்தான்.

“ஈண்டுச் செய்வினை ஆண்டுநுகர்ந் திருத்தல்

காண்தகு சிறப்பின்நும் கடவுள ரல்லது

அறஞ்செய் மாக்கள் புறங்காத் தோம்புநர்

நற்றவஞ் செய்வோர் பற்றற முயல்வோர்

யாவரும் இல்லாத் தேவர்நன் னாட்டுக்

கிறைவன் ஆகிய பெருவிறல் வேந்தே

வருந்தி வந்தோர் அரும்பசி களைந்தவர்

திருந்துமுகங் காட்டுமென் தெய்வக் கடிஞை

உண்டி கொல்லோ உடுப்பன கொல்லோ

பெண்டிர் கொல்லோ பேணுநர் கொல்லோ

யாவையீங் களிப்பன தேவர்கோன்…..”              (14 : 40-48)

ஆபுத்திரன் சொன்னதைக் கேட்டதும் இந்திரன் வெகுண்டான் ; உலகில் பசித்தோரே இல்லையெனும் படிச் செய்வேன் என்று நினைத்துக் கொண்டான். எங்கும் மழை பெய்வித்து வளங்கொழிக்கச் செய்தான். அதனால் பசித்தோர் இல்லாதராயினர்.

ஆபுத்திரன் மதுரையிலிருந்து நீங்கி பசித்தோரைத் தேடி அலையலானான். ஊர்ஊராகச் சென்று “உண்போர் யாரேனும் உண்டா?” என்று வினவினான். அதைக் கேட்டவர்கள் எல்லாம் செல்வக் களிப்பால் அவனை இகழ்ந்தனர். மற்றவர் உண்ண பெரும் ஆவல் கொண்ட ஆபுத்திரனை தேடுபவர் யாருமில்லாததால் தனியனாய்த் திரிந்தான். மரக்கலத்தில் இருந்து திரும்பிய சிலர் “சாவக நாட்டில் மழையின்மை காரணமாக உணவின்றிப் பலர் மடிகின்றனர்” என்று சொல்கின்றனர்.  இந்திரன் ஆணையினால் உண்போரைப் பெறாமல், கன்னியாகவே காலங் கழித்த குமரிப் பெண் மாதிரி பயனற்றுப் போன கடிஞையை ஏந்திக் கொண்டு சாவகம் செல்வதென தீர்மானித்தான் ஆபுத்திரன். காற்று மிகுத்து கடலின் கலக்கத்தால் பாயை மணிபல்லவத் தீவில் இறக்கி கப்பல் ஒரு நாள் தங்கியது. ஆபுத்திரன் அங்கு இறங்கினான். இறங்கிய ஆபுத்திரன் மீண்டும் கப்பலில் ஏறினான் என்று நினைத்து அன்றிரவே பாய் உயர்த்தி கலம் கடலில் சென்றது. மரக்கலம் சென்ற பின்னர் ஆபுத்திரன் மிக்க துன்பத்தையடைந்தான். மணி பல்லவத்தில் வாழ்பவர்கள் ஒருவரும் இல்லாமையால் பல்லுயிரைப் பாதுகாக்கும் பெருமை பொருந்திய இந்த பாத்திரத்தை வறிதே வைத்துக் கொண்டு என் உயிரைக் காப்பதை யான் பொறுக்கிலேன் ; இப்பாத்திரத்தைப் பெற்றுப் பல உயிர்களைக் காக்குமாறு முற்பிறவியில் செய்த தவம் என்னை நீங்கியதால் ஒப்பற்ற துயரில் வீழலுற்றேன்.ஏற்போர் இல்லாத இவ்விடத்தில் இப்பாத்திரத்தை யான் சுமத்தலால் விளையும் பயன் யாது என்றெண்ணியவனாய் கடிஞையை வணங்கி “ஒராண்டுக்கு ஒருமுறை வெளிவருவாயாக” என்று சொல்லி கோமுகி என்னும் பொய்கையில் விட்டான். அருளறத்தை மேற்கொண்டு உயிர்களைப் பாதுகாப்போர் உளராயின் அவர் கைகளுக்குச் செல்லட்டும் என்று கூறி உண்ணா நோன்பிருந்து உயிர் துறப்பானாயினன். அப்போது அங்கு சென்ற நான் (அறவண அடிகள்) “நீ யாது துன்பமுற்றனை?” என்று கேட்டேன். அவன் நிகழ்ந்தவற்றையெல்லாம் எனக்குச் சொல்லிவிட்டு, மணிபல்லவத்துல் உயிர் விட்டு பல்லுயிர்களைப் பாதுகாக்கும் எண்ணத்துடன் சாவக நாட்டரசனின் பசுவின் வயிற்றில் உதித்தான்.

 

“குணதிசைத் தோன்றிக் காரிருள் சீத்துக்

குடதிசைச் சென்ற ஞாயிறு போல

மணிபல் லவத்திடை மன்னுடம் பிட்டுத்

தணியா மன்னுயிர் தாங்குங் கருத்தொடு

சாவக மாளுந் தலைத்தாள் வேந்தன்

ஆவயிற் றுதித்தனன்……”                     (14 : 99-104)

 

(பாத்திர மரபு கூறிய காதை)

 

உரை உதவி : மணிமேகலை – மூலமும் உரையும் – ந மு வேங்கடசாமி நாட்டார் & ஔவை சு துரைசாமிப் பிள்ளை

ராஞ்சா ராஞ்சா

மணி ரத்னம் இயக்கிய “ராவண்” இந்தித் திரைப்படத்தில் பாடல்களை எழுதியவர் குல்சார் ; அதில் வரும் ஓர் அருமையான பாடலை கேளுங்கள்

பாடலின் முதல் வரி குல்சார் அவர்களுடையதில்லை. சூஃபிக் கவிஞர் புல்ஹே ஷா-வின் பிரசித்தமான கவிதையின் முதல் வரியை குல்சார் இந்தப் பாட்டில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

சுரிந்தர் சிங் கோஹ்லி அவர்கள் புல்ஹே ஷா பற்றி எழுதிய கட்டுரைப் புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறேன். புல்ஹே ஷா ஒரு பஞ்சாபி சூஃபி. (காண்க : ஓ புல்லாவே! நான் யாரென்று நான் அறியேன்! ). புல்ஹே ஷாவின் வாழ்க்கை, காலம், அவருடைய படைப்புகள், சமய சிந்தனைகள் மற்றும் கவிதைப்பாணி – இவை பற்றி விரிவாகப் பேசுகிறார் கோஹ்லி.

பஞ்சாபி சூஃபி கவிதைகளில் வரும் படிமங்களும் குறியீடுகளும் செறிவானவை. பாரசீக சூஃபி கவிதைகளில் யூப்ரடீஸ் – டைக்ரீஸ் இணை நதிகள் ஒரு குறியீடாக வரும் ; அது போல, பஞ்சாபிக் கவிதைகளில் வரும் பிரபலமான படிமங்கள் : கைராட்டினங்கள் சுழற்றும் சகோதரிகள் (trinjhan) மற்றும் செனாப் நதி. பஞ்சாபிகளின் நாட்டார்-காவியக் காதல் கதைகளில் – ஹீர்-ராஞ்சா மற்றும் சோஹ்னி-மாஹிவால் –செனாப் நதி ஒரு முக்கியமான பங்கேற்கிறது. ஹீர்-ராஞ்சா கதை இரு குறியீடுகளை சூஃபிக் கவிதைகளுக்கு ஈந்திருக்கிறது. ஹீர் (ஆஷிக் – காதல் புரிபவன்) மற்றும் ராஞ்சா (மாஷுக் – காதலிக்கப்படுவது). பக்தன் ஹீராக உருவகப்படுத்தப்படுகிறான்/ள் ; அவன்/ள் ராஞ்சாவைத் தேடி அலைகிறான்/ள்.

மேற்சொன்ன இந்தித் திரைப்படப்பாடலின் முதல் வரி இது தான் :

“ராஞ்சா ராஞ்சா கர்தி நி மேய்ன் ஆபே ராஞ்சா ஹோய்”

“தலைவன் ராஞ்சாவின் பெயரை உச்சரித்து உச்சரித்து நானே ராஞ்சாவாகிவிட்டேன்”

இவ்வுலகம் பிறந்த வீடு ; கடவுளிருக்கும் இடம் புகுந்த வீடு என்று படிமமாக்கப்படுகிறது. பிறந்த வீட்டில் இருக்கும் பெண் மற்ற நண்பிகளின் துணை கொண்டு கைராட்டினங்களை (trinjhan) வைத்து இறைவன் எனும் காதலனுக்காக உரிய பரிசுப்பொருட்களை தயார் செய்ய வேண்டும். தன் உடலெனும் கைராட்டினத்தில் வேலை செய்து, நற்பண்புகள் எனும் நூலிழைகளை திரிக்க வேண்டும்.

சூஃபிக்கவிதைகளில் உலகத்தில் வாழ்பவன் பயணி (முசாஃபிர்) என்றும் வணிகன் (சௌதாகர்) என்றும் கூட உருவகப்படுத்தப்படுகிறான். உலகம் பயண வழியில் தென்படும் சத்திரம் (சராய்) ; வணிகர்களும் பயணிகளும் சத்திரத்தில் தங்கும் நேரம் மிகக் குறைவே. புல்ஹே ஷா தம் கவிதையில் ராமர், கிருஷ்ணர் என்கிற குறியீடுகளையும் கடவுளுக்கு பயன் படுத்தியிருக்கிறார்.

ஒரு கவிதையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார் :-

“பிருந்தாவனத்தில் பசு மேய்த்தாய்

லங்காவில் சங்கொலி செய்தாய்

மெக்காவில் ஹாஜியாக ஆனாய்

உன் நிறத்தையும் (வடிவத்தையும்) அற்புதமாக

அடிக்கடி மாற்றிக் கொள்கிறாய்

இப்போது உன்னை யாரிடமிருந்து மறைத்துக்கொண்டிருக்கிறாய்?”

துணைக்கண்டத்தின் சூஃபிக் குயில் அபிதா பர்வீனின் காந்தக் குரலில் புல்ஹே ஷாவின் பாடல் “ஜே ரப் மில்தா” என்கிற பாடலைக் கேட்டு இன்புறுங்கள்.

 

 

Source : Bulhe Shah – Surindar Singh Kohli – Sahitya Akademi – 1987 Edition

 

சும்மா இரு

naturedoesnothurry

“சும்மா இரு சொல்லற என்றலுமே” என்று கந்தர் அனுபூதியில் வரும். “சும்மா இரு” “சொல்லற” – இவையிரண்டும் முருகப்பெருமான் அருணகிரிநாதருக்கு தந்த போதனைகள். இதன் அர்த்தம் என்ன என்பதை அருணகிரிநாதரால் அப்போது சரியாக உணர்ந்து கொள்ள முடியவில்லை. திரும்பத் திரும்ப அவ்விரு போதனைகளைக் கூறிக் கொண்டே அதில் ஆழ்ந்து போனார்.

அருணகிரிநாதரைப் போலவே பட்டினத்தாருக்கும் இக்குழப்பம் இருந்திருக்கிறது. பட்டினத்தார் சொல்கிறார் : “சும்மா இருக்கவைத்தான் சூத்திரத்தை நானறியேன் அம்மா பொருளிதென அடைய விழுங்கினண்டி”

சும்மா இருக்க முடியாததால் தெய்வத்தின் துணையை நாடுகிறார் தாயுமானவர் :

“சொல்லால் முழக்கிலோ சுகமில்லை ; மௌனியாய்ச்
சும்மா இருக்க அருளாய்”

சும்மா இருப்பது சாத்தியமா? எல்லா உயிர்களும் சதா இயங்கியவாறு இருக்கின்றன என்று கீதையில் கண்ணன் கூறியிருக்கிறானே! சும்மா எப்படி இருப்பது?அருணகிரிநாதர் மற்றும் தாயுமானவர் போன்ற சித்தர் பெருமக்களின் ஆன்மீக தேடலில் சும்மா இருத்தல் எனும் கருவி நன்கு உதவி புரிந்திருக்கக்கூடும் என்பதற்கு ஆதாரங்களாக அவர்கள் இயற்றிய கருத்துச் செறிவான ஆன்மீக நூல்கள் இருக்கின்றன.

+++++

என் நண்பன் டேவிட் தன்னுடைய முகநூல் சுவரில் கீழ்க்கண்ட நிலைத்தகவலை இட்டிருந்தான் :-

divinetiming1

மேல்கண்ட நிலைத்தகவலை வாசித்ததும் எனக்கு அருணகிரிநாதரின் வரி ஞாபகத்துக்கு வந்தது. “சும்மா இருத்தல்” என்பதைத்தான் டேவிட் மேற்கண்டவாறு எழுதியிருக்கிறானா? நம்பிக்கைப் பூர்வமாக வாழும் ஒருவன் எந்த வித நிர்பந்தத்துக்கும் ஆளாகாமல் சரியான சமயத்தில் சரியான காரியத்தைச் செய்வதைத்தான் “சும்மா இருத்தல்” குறிக்கிறதா? அவசரப்படாமல் காரியங்களைஅணுகுதலையும், காரியங்களில் ஈடுபடும் அவசியம் இல்லாத  சமயங்களில் பொறுமையுடன் இயல்பாயிருத்தலையும் அகத்தூண்டுதல் நிகழும் சமயங்களில் உத்வேகத்துடன் ஆனந்தம் மேலிடச் செய்ய வேண்டியவற்றை செய்தலையும் “சும்மா இருத்தல்” என்ற சொற்றொடர் குறிக்கலாமோ?

டேவிட் இட்ட நிலைத்தகவலுக்குக் கீழ் அவனுடைய நண்பர்கள் சிலர் சுவை மிக்க பின்னூட்டங்களை இட்டனர்.

அ : “நீங்கள் சொல்வது உண்மை என்று ஒத்துக் கொண்டாலும் தனியார் நிறுவனத்தில் பணி புரியும் ஒருவனால் நீங்கள் சொல்லும் வழிமுறையை செயல்படுத்துதல் சிரமம்! என்ன சொல்கிறீர்கள்?

டேவிட் : சுயதொழில் செய்யும்  ஒருவனுக்கு இது எளிது, என்னைப்போல! நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு?……கூர்ந்து கவனித்தால் வாழ்க்கையைப் போல நிறுவனங்களினுள்ளும் இடையறாத்தன்மை கொண்ட ஒரு தாரணம் இருக்கிறது என்பதை உணரலாம் ; நிறுவனங்களின் இத்தன்மை உத்வேகத்துடன் வேலை செய்யும் வழியையும், அவ்வழி வாயிலாக இலக்கை அடைவோம் என்கிற நம்பிக்கையையும் கண்டிப்பாக உண்டு பண்ணும். என்ன தான் அவசரமாக இருந்தாலும், நீ செய்ய வேண்டிய காரியம் தானாக உன்னுடன் பேசும் வரை கொஞ்சம் பொறுத்திரு ; உன்னுணர்வில் ஒரு பாய்ச்சல் ஏற்படும் வரை காத்திருந்து பிறகு அக்காரியத்தைச் செய்வதால் மகிழ்ச்சி பெருகும்;  வேகமாக  அக்காரியமும் முடிவடையும்.

நிகழ்காலத்தில் முழுமையாக சஞ்சரித்தலே இது. இப்பிரபஞ்சத்தையும்,உன்னையும் உண்மையாக நம்புதலே இது.

அ : உத்வேகத்துக்காகக் காத்திருக்கும் போது காரியத்தைச் செய்யாமல் தவிர்க்கிறோமோ என்ற சந்தேகம் ஏற்படாதா?

டேவிட் : நல்ல கேள்வி! சீரான நடைமுறையால் இந்தத் தேர்ச்சியைப் பெற முடியும். நம் உடல் தரும் சமிக்ஞைகளைச் சரியாகப் புரிந்து கொண்டு, அதன் மாறாத தொடர்பில் இருந்து வருதலின் வழி இது சாத்தியம். நம் உடல், நம் உணர்ச்சிகள்…இவையெல்லாம் நம்மைப் பற்றிய ஏதாவதோர் உண்மையை நமக்குச் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. ஏதாவதொரு விஷயம் நமக்கு உவர்ப்பாக இருந்தால், நம்மின் ஏதோவொரு பாகம் அவ்விஷயம் சார்ந்த அனுபவத்தை வேண்டாமென்கிறது என்று பொருள். நமக்கான உண்மையை நாம் இவ்விதமாக பெறலாம். “இந்நேரத்தைப் பயன்படுத்த எனக்கான சிறந்த வழி என்ன?” என்பது போன்ற வினாக்கள் கூட வேறுபட்டதொரு விடைக்கான புது கதவை திறந்து விடக்கூடும்; கடமை மற்றும் நிபந்தனை சாரா விடையாக அது இருக்கலாம்

அமைதியாக ஆசனமிட்டமர்ந்து, சுவாசத்தை உற்றுக் கவனித்தல் போன்ற  செயல்பாடுகள் நம்முள்ளிருக்கும் தெளிவின்மையை விலக்கலாம் ; புதிய சிந்தனைகளைத் தூண்டலாம். சொல்லப்போனால் நம் உடலை, நம் செயல்பாடுகளை, நமது நேரத்தை நாம் மதிக்காமல் இருத்தலே நம்முடைய முக்கியமான பிரச்னை. நம்முள் நாம் ஆழமாக இணையும் போது தெய்வீக காலம் (Divine Timing) பூத்துச் சொரிகின்றது. ஆம், சில சமயம் நமக்குப் பிடிக்காத செயல்களை நாம் செய்தே தீர வேண்டியதாயிருக்கிறது. அதையும் நம்முடனாக ஆழ்ந்த இணைப்பின் மூலமாக வலிமையுள்ளதாக்கிக் கொள்ள முடியும். பிடிக்காத காரியத்தை அழுது கொண்டே செய்யாமல், “இக்காரியத்தின் சரித்தன்மை அல்லது விளையப் போகும் நன்மை என்ன?” என்பது போன்ற கேள்விகளை எழுப்பலாம். குப்பை பொறுக்கும் காரியத்தைச் செய்பவன் நம் குப்பையை அள்ளிச் சென்று நம்மிடம் காட்டும் அன்பின் பரிமாணம் போன்று நாம் செய்யும் நமக்கு விருப்பமில்லாத காரியத்தின் பின்னிற்கும் அன்பின் பரிமாணத்தைப் புரிந்து கொள்ள முயலலாம்.

ஆ : நம்மைத் தவிர நாம் எதையும் கட்டுப்படுத்தி விட முடியாது. ஆகவே நாம் செய்ய வேண்டியதை  தானாக நம்முள்ளிருந்து வரவிடுவதே உத்தமம். இயற்கையைப் பார். எது எது நிகழ வேண்டுமோ அது அது அந்தந்த காலத்தில் நிகழ்கின்றன. இயற்கை அவசரப்படுவதை யாரும் பார்த்ததில்லை.

இ : தெய்வீக காலம் என்னும் கருத்து வூ-வெய் (wu-wei) என்னும் டாவோயிசக் (Taoism) கருத்தை எதிரொலிக்கிறது என்று எண்ணுகிறேன். வூ-வெய் என்றால் செய்கையற்ற செய்கை என்று அர்த்தம். வூ-வெய் படி வாழ்வது என்பது சுய-கர்வத்தை விடுத்து, உணர்ச்சி முனைப்பு மிக்க முயற்சிகளைக் கைவிட்டு, சுயத்தை விடப் பெரிதான, நம்மைக் கடந்து நிற்கும் சக்தியின் கட்டுப்பாட்டில் இயங்க  நம்மை அனுமதித்தலை குறிக்கும். வூ-வெய்யை நீருடன் உருவகப்படுத்துவர். எந்த கொள்கலத்தில் அமைகிறதோ அதன் வடிவத்தை தண்ணீரானது பெற்றுக் கொள்கிறது. எங்கு பாய்ந்தாலும் தாழ்வான இடத்தை நோக்கி பயணிக்கிறது. தண்ணீரைப் போன்று நாமும் அதீத பிரயத்தனமின்றி டாவோவுடன் இணைத்துக் கொண்டு பாய்ந்தால்  வாழ்வின் இனிமையில் மூழ்கித் திளைக்கும் தருணங்களை நாம் சென்றடைவோம்.

நான் சொன்னது அருவமான, கற்பனாவாத கருத்தியல் போன்று ஒலிக்கலாம். வூ-வெய் தத்துவத்தை நடைமுறை வாழ்க்கையில் நான் எவ்விதம் செயல்படுத்துகிறேன் என்பதற்கு ஓர் உதாரணம் தருகிறேன். ஃபார்ச்சூன் 500 நிறுவனமொன்றில் நான் வேலை செய்கிறேன்.  அ சொல்கிற மன அழுத்தமடையச் செய்யும் கார்ப்பரேட் கலாச்சாரத்தில் ஊறிய சூழல் என்னுடையது. இச்சூழலில் நான் வூ-வெய் தத்துவத்தை இவ்விதம் செயல்படுத்துகிறேன் : குறுகிய காலக்கெடுவில் முடிக்க வேண்டிய ப்ராஜெக்டுகள் என் அதிகாரிகள் என்னிடம் கொடுத்த வண்ணம் இருக்கின்றனர். அப்பிராஜெக்டுகளை வெற்றிகரமாக முடிக்கத் தேவையான தகுதி வாய்ந்த மனித ஆதாரங்களோ கருவிகளோ பெரும்பாலும் கொடுக்கப்படுவதில்லை. வூ-வெய் தத்துவம் எனக்கு அறிமுகமாவதற்கு முன்னரெல்லாம் இத்தகைய பிராஜெக்டுகள் எனக்கு அளிக்கப்படுகையில் நான் மிகவும் பீதியடைவேன் ; நிறைய சக்தியை விரயமாக்கி பதட்டத்தை அதிகரித்துக் கொண்டு, நாலாபுறமும் அலைந்து திரிந்து, செயல்களை வேகப்படுத்தும் முயற்சியில் மெனக்கெடுவேன் – சக்கரத்தின் மேல் ஏற முயலும் வெள்ளெலியைப் போல். இப்போது அப்படியல்ல. பணியை என்னிடம் ஒப்படைக்கும் அதிகாரியின் கட்டளைகளை கவனமாகக் கேட்டு உள்வாங்கிக் கொள்கிறேன். பிறகு விரைவாக இப்பணியைச் செய்து முடிப்பதற்கான விஷயங்களுள் என் கட்டுப்பாட்டுக்குள் இருப்பவற்றையும் இல்லாதவற்றையும் என் மனதில் பட்டியலிட்டுக் கொள்வேன். என்னால் மட்டும் செய்ய வேண்டியவற்றை உடன் செய்து முடித்து விடுவேன். ப்ராஜெக்டை முன்னோக்கி எடுத்துச் செல்வதில் எழும், முட்டுக்கட்டைகளை நீக்குவதற்கு முட்டி மோதி இமாலய முயற்சிகளில் நான் ஈடுபடுவதில்லை. சம்பந்தப்பட்டவர்களிடம் அமைதியாகப் பேசி சூழ்நிலையை தெளிவுபடுத்தி இடையில் தோன்றும் தடைகளை அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்வேன். பொதுவாக நிலைமை என்னவென்று எடுத்துக்காட்டினால் அதிகாரிகள் அமைதியாகி விடுவார்கள்.

சுயமுக்கியத்துவம் பற்றிய கவலையும் மற்றவர்களுக்கு நிரூபித்துக் காட்ட வேண்டும் என்ற வேட்கையுமே பாதி பதற்றத்துக்குக் காரணம் என்ற தெளிவு பிறந்தது. மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்ற கவலையற்று, செய்ய வேண்டிய காரியத்தில் மட்டும் மனதைக் குவித்தேன். நான் என்கிற புள்ளியிலிருந்து உலகச் சேவை என்ற புள்ளி நோக்கி நான் நகரத் துவங்கிய போது அதுவரை காணாதிருந்த பல தீர்வுகள் என் கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்தன.

வூ-வெய்-யோ தெய்வீக நேரமோ ஒன்றும் செய்யாதிருக்கும் நிலையைச் சுட்டுவனவல்ல ; நம் உடல் நமக்குச் சொல்லும் உண்மையைக் கேட்டு, புற நிலையை கவனித்து செய்கை புரிதல் லாபகரமா அறிவுடமையா என்ற கேள்விக்கு விடையளித்து, பிறகு பொருத்தமான காரியத்தில் ஈடுபடுதலையே இவ்விரு சொற்றொடர்களும் குறிக்கின்றன. செய்கையற்றிருப்பது போன்ற பிரமையைக் கொடுக்கும் நேரத்தின் முடிவில் தானாகத் தோன்றிய இயற்கையான செய்கைகளே அவை.

ஈ : தெய்வீகநேரம், வூ-வெய் போன்ற வழிமுறைகள் இன்றைய நுண்ணறிவில்லா வாழ்க்கை முறையில் பயன்படுத்தப்படாதவைகளாக ஆகிவிட்டன. அவற்றின் அவசியத்தை இன்றைய சமூகம் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. மாறாத செயலியக்கமும் நுகர்வும் நமக்கு உதவி புரியவில்லை ; மாறாக நம்மை மிகவும் களைத்தவர்களாக ஆக்குகின்றன என்கிற தெளிவு என்றைக்கு நமக்குப் பிறக்கிறதோ அன்று நாம் வூ-வெய் படி வாழத் தொடங்குவோம்.

அ : இப்பிரபஞ்சம் சதாசர்வகாலமும் இயங்கிக் கொண்டே இருக்கின்றது என்று கீதாசார்யன் சொல்கிறானே! கீதைக்கும் டாவோயிஸம் சொல்லும் வூ-வெய்க்கும் ஏதாவது பொதுப்புள்ளி இருக்கிறதா?

உ : கீதையின் நான்காம் அத்தியாயத்தில் கண்ணன் சொல்கிறான் : “செய்கையில் செயலின்மையும் செயலின்மையில் செய்கையும் எவன் காணுகிறானோ, அவனே அறிவுடையோன். அவன் எத்தொழில் செய்கையிலும் யோகத்திலிருப்பான்”

செயலின்மையில் செய்கையைக் காணும் திறம் பெற்றோர் விஷயங்கள் தானாக வெளிப்பட அனுமதிக்கிறார்கள். எது செய்கை? எது செயலின்மை? என்ற குழப்பம் அவர்களுக்கு இருப்பதில்லை.

செய்கையற்றிருத்தலின் முடிவில் இயற்கையாக வெளிப்படும் செயல்களை மட்டும் செய்வது என்கிற டாவோயிசக் கருத்தைத் தானே மேற் சொன்ன கீதையின் வரிகள் எதிரொலிக்கின்றன!

divinetiming

பிரயத்தன நதி

pursuit_of_happyness

சில வருடங்கள் முன்னர் “நீ நதி போல ஓடிக்கொண்டிரு” என்ற வரியை ஒரு திரைப்படப் பாடலில் கேட்டேன். அந்த வரி மனதுள் ஓடிக் கொண்டேயிருந்தது. இலக்கற்று பாய்வது போல் இருந்தாலும் மலை, சமவெளி, பள்ளத்தாக்கு, அணை என்று எல்லாவற்றையும் கடந்து இறுதியில் கடலை அடையும் நதி இடைவரும் தடைகளை பொருட்படுத்துவதில்லை. வழக்கமான, புளித்துப் போன உருவகம்! எனினும் வழக்கமான விஷயங்கள் பல முறை அர்த்தம் வாய்ந்த அமைதிக்குள் நம்மை தள்ளி விடுகின்றன.

“The Pursuit of Happyness” திரைப்படத்தை நேற்றிரவு வீடியோவில் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தது. எட்டு வருடங்களுக்கு முன்னர் வெளியான படம். தொலைக்காட்சியில் பல முறை ஒளிபரப்பப்பட்டு விட்டது. புதிதாக வெளியான திரைப்படமொன்றைக் காண குடும்பத்துடன் சென்றிருந்த போது தொழில் நுட்பக் கோளாறு காரணமாக காட்சி ரத்தானதும் டிக்கெட் தொகை ரொக்கமாக கையில் கிடைத்தது. வீடு திரும்புவதற்கு முன்னர் பக்கத்தில் இருந்த வீடியோ கடையில் தள்ளுபடி விலையில் கிடைத்தது என்று “The Pursuit of Happyness” திரைப்பட வீடியோவை வாங்கினேன்.

வில் ஸ்மித் தன் நடிப்பால் உச்சத்தை தொட்ட படம் ; க்ரிஸ் கார்ட்னர் என்ற புகழ் பெற்ற பங்குத் தரகரின் சொந்த வாழ்க்கை அனுபவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். வில் ஸ்மித்தின் மகன் மாஸ்டர் ஜேடன் ஸ்மித் (Jaden Smith)-துக்கு முதல் படம். சமீபத்தில் After Earth திரைப்படத்தில் இதே தந்தை – மகன் ஜோடி நடித்திருந்தார்கள். நட்சத்திர தந்தை-தாய்க்கு பிறந்திருக்கும் ஜேடன் வியக்க வைக்கும் திறமை படைத்த நடிகர் மற்றும் ராப் பாடகர். நோபல் பரிசு விழாவொன்றில் ராப்-கச்சேரி செய்திருக்கிறார். மகனின் திறமையை வெளிக்கொண்டு வர வைத்து ஓர் எதிர்கால கதாநாயகனை உருவாக்கும் முயற்சியில் வில் ஸ்மித் ஈடுபட்டிருக்கிறார் என்று முதலில் தோன்றியது. ஆனால் “தி பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினஸ்” பார்த்த பிறகு பையனுக்கு அப்பாவின் உதவியே தேவையில்லை ; இரு படங்களிலும் மனதில் பதிகிற மாதிரியான நடிப்பை வெளிக்காட்டி இருக்கும் ஜேடன் ஓர் இயல்பான கலைஞர் ; அவருடைய வளர்ச்சிக்கு ஒருவரின் உதவியும் தேவைப்படாது என்பது கண்கூடு. “தி பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினஸ்”ஸில் நடிக்கும் போது ஜேடனுக்கு எட்டு வயது. இப்போது ஹாலிவுட்டின் மிக வேகமாக வளர்ந்து வரும், பரபரப்பாக பேசப்பட்டு வரும் பதின்பருவ நடிகர் அவர்.

அதிகம் படிக்காத, மருத்துவக் கருவிகள் விற்பனையாளராக வேலை பார்க்கும் க்றிஸ் கார்ட்னர் ஃபெர்ராரி காரில் வந்திறங்கும் பங்குத் தரகரொருவரை பார்த்து ஊக்கமுற்று பங்குத் தரகு நிறுவனமொன்றில் ட்ரெய்னியாக சேருகிறார். முதல் ஆறு மாதங்களுக்கு சம்பளம் கிடையாது. ஆறு மாதத்துக்குப் பிறகு வேலை கிடைக்கும் என்ற நிச்சயமும் இல்லை. வருமானமின்மை காரணமாக க்றிஸ்ஸின் காதலி வீட்டை விட்டு சென்று விடுகிறார். ஐந்து வயதுப் பையனும், க்றிஸ்ஸும் கிட்டத்தட்ட ஒரு வருடம் வீடின்றி வீதிகளில் வாழ்ந்தனர். சர்ச்சொன்றின் தங்குமிடம் முதல் ரயில் நிலையமொன்றின் கழிப்பிடம் வரை இரவுகளில் தங்கினர். பகலில் மகன் பள்ளிக்கு செல்கையில் க்றிஸ் அலுவலகம் செல்கிறார். அயராத கடும் உழைப்பு. புன்னகை மாறாமல் வாழ்க்கை தரும் கஷ்டங்கள் சகிக்கிறார். வீடின்றி தவிக்கும் அவரின் கஷ்டத்தை அலுவலகத்தில் ஒருவரும் அறியவில்லை. க்றிஸ்ஸுக்கு பங்கு-தரகர் வேலை கிடைக்கிறது. 1987-இல் சொந்த தரகு நிறுவனத்தை சிகாகோவில் துவக்கினார். இன்று க்றிஸ் ஒரு கோடீஸ்வரர் ; ஊக்கமுட்டும் பேச்சாளர் ; கொடையாளர். தென்னாப்பிரிக்காவில் முதலீடு செய்யும் தனியார் பங்கு நிதியம் ஒன்றை க்றிஸ் துவக்கிய போது அந்நிதியத்தின் அமைதிக் கூட்டாளி யார் தெரியுமா? சமீபத்தில் மறைந்த தென்னாப்பிரிக்க முன்னால் அதிபர் – நெல்சன் மாண்டேலா.

“சொந்தமாக பங்கு-தரகு நிறுவனம் துவக்குவதற்கு ஆறு வருடம் முன்னர் ஒரு குழந்தையை முதுகில் சுமந்தவாறே ஒரு சாக்கடையிலிருந்து வெளிவரும் முயற்சியில் ஊர்ந்தும், போராடியும், தத்தளித்துக் கொண்டும் இருந்த ஒருவன் இப்போது வந்தடைந்திருக்கும் இடம் அவ்வளவு மோசமானதில்லைதான்” என்று க்றிஸ் கார்ட்னர் சொல்கிறார்.

வில் ஸ்மித் க்றிஸ் கார்ட்னராக நடித்திருக்கிறார். உந்துதல் மிக்க ஒரு கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும். காதலி வீட்டை விட்டு நீங்கும் இடங்களில் ஏமாற்றவுணர்வை நுட்பமாக வெளிப்படுத்துவதும், நிறுவன அதிபர்கள் அவனை வேலையில் நியமிக்கும் போது பரவச உணர்ச்சியை குளமாகிய கண்களால் கொண்டு வருவதும், சிறையிலிருந்து நேராக நேர்முகத் தேர்வுக்கு சட்டை அணியாமல் செல்கையில் அதற்கான காரணத்தை நகைச்சுவையைப் போர்த்தி சொல்லும் சால்ஜாப்பும், மகனோடு இரவு வீடு திரும்புகையில் தங்கும் அறை பூட்டப்பட்டு சாமான்கள் வெளியே வைக்கப்பட்டிருப்பதை காண்கையில் அடையும் தவிப்பும்….சொல்லிக் கொண்டே போகலாம். வில் ஸ்மித் பிய்த்து உதறியிருக்கிறார். அவர் விற்கும் மருத்துவக் கருவியை திருடிக் கொண்டு போனவரை துரத்தும் இடங்கள், டாக்ஸிக்காரருக்கு செலுத்த பணமில்லாமல் பணம் கொடுக்காமலேயே ஓடி விடுவதும் என்று ஆங்காங்கே தன் ட்ரேட்-மார்க் நகைச்சுவை நடிப்பையும் வில் ஸ்மித் தூவியிருக்கிறார்.

யோக வசிஷ்டம் உரை நூலொன்றை படித்துக் கொண்டிருக்கிறேன். இளவரசன் ராமன் மனக்கலக்கமுற்று குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் சமயத்தில் விஸ்வாமித்திரரின் வேண்டுகோளுக்கிணங்க வசிஷ்டர் சொல்லும் அறிவுரைகளின் தொகுப்பு தான் யோகவசிஷ்டம். நூற்றுக் கணக்கான அழகான சிறுகதைகள் வாயிலாக தத்துவங்கள் இந்நூலில் விளக்கப்படுகின்றன. பல்வேறு சமய தத்துவங்களின் ஒன்றிணைந்த படைப்பாகவும் யோகவசிஷ்டம் கருதப்படுகிறது. வேதாந்த,ஜைன, யோக, சாங்கிய, சைவ சித்தாந்த மற்றும் மகாயான பௌத்த தத்துவங்களின் கூறுபாடுகள் இந்நூலில் அடங்கியிருப்பதாக தத்துவ ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

நூலின் முதல் அங்கத்தில் வசிஷ்டர் ராமருக்கு வழங்கும் முதல் உபதேசத்தை வாசித்தால் நமக்கு சந்தேகம் வந்து விடும் – நாம் படிப்பது ஆன்மீக நூலா? அல்லது சுய-உதவிப்புத்தகமா?

“பிரபஞ்ச வாழ்க்கையிலே நாம் முக்கியமாக அனுசரிக்க வேண்டியது ‘பௌருஷம்’ அல்லது தன் ஆண்மையை அடிப்படையாகக் கொண்ட தீவிர முயற்சி. தகுந்த முயற்சியால் உலகத்தில் அடையமுடியாதது ஒன்றுமே இல்லை. பிரம்ம பதவியுங் கூடத் தீவிரமும் ஒழுக்கமும் சேர்ந்த முயற்சியால் அடையத்தக்கதே.

ஆனால் செய்யும் முயறிசிகளைச் சரியான மார்க்கத்தை அனுசரித்தும் இடைவிடாமலும் செய்துவர வேண்டும், பலன் சித்திக்காவிடின் இதற்குக் காரணம், செய்த முயற்சியின் கோளாறே தவிர வேறு காரணமல்ல. தகுந்தபடி முயற்சி இருந்தால் காரியம் கை கூடியே தீர வேண்டும். இதுவே நியதி. இடைவிடாமல் முயற்சி செய்கிறவர்கள் உலகத்தில் எக்காலத்திலும் மிகவும் சொற்பம். பெரும்பாலும் ஜனங்கள் காரியம் எடுத்த பிறகு, அதில் ஊக்கம் குறைந்து முயற்சியில் தளர்ச்சி அடைவதாலேயே அதில் அபஜெயம் அடைகிறார்கள். சோம்பலே எல்ல ஜனங்களுடைய கஷ்ட-நிஷ்டூரங்களுக்கும் முதல் காரணம்”

“தவிர அநேகர் தங்களுக்கு விளையும் வினைப்பயன்களைப் பூர்வ ஜன்மத்தின் பலனாகக் கருதி சோர்வடைகிறார்கள். இதுவும் அஞ்ஞானமே, பூர்வ ஜென்மத்தில் செய்த பிரயத்தனங்களின் பலன்களை இந்த ஜென்மத்தில் நாம் அனுபவிப்பது வாஸ்தவமே. ஆனால் இனி நடக்க வேண்டிய யத்தனங்களில் அதன் வேகம் தற்சமயம் செய்யக் கூடிய முயற்சிகளுக்குக் குறைந்ததே. இவ்வித வாசனை வினைப்பயன்களைத் தற்சமயம் செய்யக்கூடிய பிரயத்தங்களால் ஜெயிக்கலாம். இது நம் வசத்தில் இருக்கிறது. இவ்வாறு எண்ணுவதை விட்டு நடப்பதெல்லாம் வினைப்பயன் என்று கருதி வாழ்க்கையில் சோகமடைந்து, செய்ய வேண்டிய முயற்சிகளை செய்யாமல் நிற்கும் மானிடர்கள் பரம மூடர்களே”

“நமக்கு வேண்டியவைகளைத் தேடிக்கொள்ள நம் பிரயத்தனத்தால் முடியுமே தவிர வேறொன்றினாலும் முடியாது. தீவிர முயற்சியே தெய்வம். இதையே ஒவ்வொருவரும் ஆசிரயிக்க வேண்டும். நமது முயற்சி இல்லாமல் ஒரு காரியமும் சித்தி பெறாது. நம் புத்திக்குப் புலப்படாமல் தெய்வம் எங்கிருந்தோ நம் செயல்களுக்குப் பலனை அளிப்பதாக எண்ணுவது மூடத்தனம். இதைவிட அஞ்ஞானம் வேறில்லை”

மலையிலிருந்து கொட்டும் அருவி சமவெளியை அடைந்து ஆறாக ஓடி இரு கரைகளை ஏற்படுத்தி குறுகியும் அகண்டும் ஓடி அணைகளால் தடுக்கப்பட்டாலும் தன் இலக்கை அடைந்து விடுகிறது. கவலை எனும் உணர்வின்றி தன் பாதையில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஓடுதல் ஒன்றே அதன் பணி. நம் கடனும் பணி செய்து கிடப்பதே. தெய்வத்தால் ஆகாதென்றாலும் முயற்சியானது நமக்கு கூலியைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையை, க்றிஸ் கார்ட்னரின் வெற்றியை திரையில் சித்தரித்து, நம்முள் ஏற்படுத்துகிறார் நடிகர் வில் ஸ்மித்.

Will_Smith_053

Source : யோகவாசிஷ்டம் : தமிழாக்கியவர் – எஸ்.கணபதி : அல்லயன்ஸ் கம்பெனி : 1948

கதைகளுக்குள் கிணறு : கிணறுக்குள் கதைகள்

அசோகமித்தி​ரனின் “கிணறு” சிறுகதையை முன்வைத்து

நமக்கு பிடிக்கின்ற சிறுகதைகளுக்கு நடுவில் இருக்கும் பொதுப்புள்ளி என்ன? இலக்கிய ஆய்வாளர்கள் இக்கேள்விக்கு வெவ்வேறு விடைகள் சொல்லக் கூடும். என்னைப் பொறுத்த வரையில், கதையில் வரும் நிகழ்வுகள் நம் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களுடன் சிறு அளவிற்கேனும் ஒட்டியோ வெட்டியோ சென்றால் அக்கதை நம் நினைவில் தங்கி விடும்.

பூமியைத் திறந்து குழி தோண்டி திட்டுகள் எழுப்பப்பட்டு கிணறு என்றழைக்கப்படும் நீர் நிலை மேல் இலக்கியவாதிகளுக்கு மாறாத காதல் இருந்திருக்கிறது எனலாம்.  கிணற்றோரக் காதல்கள், கிணறை சமூக ஏற்றத்தாழ்வுகளின் குறியீடாக சித்தரித்தல் போன்றவை நம் இலக்கியத்தில் காலகாலமாக இருந்து வந்திருக்கின்றன.

பள்ளத்தில் ஊறிய நீரை இறைக்க ஏதுவாய் இழுவை வழியாக கழுத்தில் கயிறு கட்டப்பட்ட குடம் கிணறின் நீர் மட்டத்தை தொட்டதும் ’டுபுக்’கெனும் சிறு சத்தத்துடன் நீர் நிரம்புவதும் பிறகு கிலுங் கிலுங்-ஙெனும் சத்தத்துடன் நீர்க்குடம் மேலே வருவதும் என்று ஒரு தொடர்ச்சியான ரிதத்துடன் செல்லுவதைக் கேட்பது சுகம்.

ஒரு முறை எங்கள் பூர்வீகக் கிராமத்துக்கு சென்றிருந்தேன். மழைக்காலம். நவம்பர் மாதம் என்று நினைவு. என் தாத்தாவின் கிணற்றில் திட்டைத் தாண்டி தண்ணீர் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. பொங்கல் பாத்திரத்தில் பொங்கி வழியும் பொங்கல் நுரையைப் பார்ப்பது போல இருந்தது. பத்து வருடம் முன்னர் என் அப்பா அந்த வீட்டை விற்பதற்கு முன்னால் ஒரு முறை அங்கு சென்ற போது அந்தக் கிணற்றில் தண்ணீர் மட்டம் கண்ணுக்கே எட்டவில்லை. நீளம் போதாமை காரணமாக பயன் படுத்தப்படாமல் குடத்தின் கழுத்தையும் விடாமல் தரையில் கிடந்தது கயிறு!.

காஞ்சிபுரத்தில் நாங்கள் வசித்த போது பக்கத்து வீட்டில் தறிவேலை நடக்கும். பல நிறங்களில் பல டிசைன்களில் தறியில் பட்டுப் புடவைகள் நெய்யப்பட்டுக் கொண்டிருக்கும். என் நண்பன் ராமு நெசவு செய்யும் அழகைப் பார்த்துக் கொண்டே அவர்கள் வீடே கதி என்றிருந்த நாட்கள் உண்டு. ராமுவின் வீட்டுப் பின் புறத்தில் மரத்தடியில் ஒரு திண்ணைக்குள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்போம். அது நெடுக வளர்ந்த வேப்ப மரம்! மஞ்சள் நிற வேப்பம் பழங்களை முதன்முதலாக தின்று பார்த்தது அங்கு தான். “நீ உட்கார்ந்திருக்கிறாயே! அது கிணறாக இருந்தது! எங்க அப்பா சின்னப் பையனா இருக்கும் போது மண்ணை நிரப்பி கிணற்றை மூடிவிட்டார்கள். இந்த மரத்தின் வேர்கள் பழைய கிணற்றின் அடிவாரத்தை தொட்டுக் கொண்டிருக்கும். ஒரு மாஜி கிணற்றின் மேல் தான் நீ உட்கார்ந்திருக்கிறாய்!”என்று சொன்னான். உட்கார்ந்திருந்த நான் தடக்கென எழுந்து நின்று விட்டேன். நாங்கள் உட்கார்ந்திருந்த இடத்தில் மண் விலகி பள்ளம் விழுந்து மரம் கிணற்றுக்குள் சென்று, கிளைகள் திட்டுக்கு மேல படர்ந்து……சில வினாடிகளில் என் கற்பனை விரிந்தது. அக்கிணறு மூடப்பட என்ன காரணமாக இருந்திருக்கும் என்று ஒரு நாள் இரவு எங்கள் பால்கனியில் படுத்துக் கொண்டே யோசனையில் மூழ்கியிருந்தேன். யாரேனும் செத்து விழுந்திருப்பார்களா? அதை மறைக்க மண் மூடி நிரப்பியிருப்பார்களா? சீ என்ன விசித்திர கற்பனை! ராமுவின் அப்பா ஸ்ரீனிவாசலு ராத்திரி நேரத்தில் சில சமயம் தறி சத்தத்தின் பின்னணியில் தெலுங்குச் சினிமாப் பாடல்கள் பாடுவார். உச்ச ஸ்தாயியில் கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ்வின் குரலின் நகலில்! கிணறு மூடப்பட்டதன் பின்னணி பற்றி நான் கற்பனையில் ஆழ்ந்திருந்த அன்று அவர் பாடிய பாட்டு என்னை எழுந்து உட்காரச்செய்து விட்டது. அன்று ”ஆமே எவரு?” தெலுங்கு திரைப்படத்திற்காக பி.சுசீலா பாடிய “வூ நா ராஜா….ராரா…ராரா” எனும் பாடலை கர்ண கடூரமாக பாடிக் கொண்டிருந்தார். பக்கத்து வீட்டில் கையில் விளக்கொளியை ஏந்திக் கொண்டு ஏதாவது உருவம் அலைகிறதா என்று பார்த்தேன். மின்சாரம் திரும்பி வந்ததும் அவர் பாட்டை நிறுத்தி விட்டார். இருட்டுக்குப் பயந்து சத்தமாக பாடியிருப்பார்! பாவம்! இருட்டுக்கு பயப்படாத அக்கம்பக்கத்தவர்கள் பயந்து போயிருப்பார்கள்.

உடுமலையில் இருந்த நாட்களில் ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது முதன்முதலாக பள்ளி சுற்றுலாவில் சென்றிருந்தேன். கர்நாடகாவிலிருக்கும் ஹசனுக்கு அருகில் இருக்கும் பேலூர் என்ற ஊருக்கு போனோம். ஹொய்சள மன்னன் விஷ்ணு வர்தனால் கட்டப்பட்ட சென்ன கேசவர் கோயில் அங்கிருக்கிறது. எங்களையெல்லாம் ஒரு சத்திரத்தில் தூங்க வைத்தார்கள். அந்தச் சின்ன சத்திரத்தில் எல்லா மாணவர்களும் உறங்க இடமில்லை. எனவே சத்திரத்துக்குப் பக்கத்தில் ஒரு பாழடைந்த மாளிகையின் சாவியை சத்திரத்தின் மேலாளர் வாங்கிக் கொடுத்தார். சில மாணவர்களை அந்த மாளிகைக்குள் இருந்த ஓர் அறையில் தங்க வைத்தார்கள். அம்மாளிகை பல வருடங்களாக பூட்டப்பட்டிருந்திருக்கும் போலிருந்தது. பல அறைகள் மண்ணும் தூசுமாக இருந்தன. வரவேற்புக் கூடத்தின் தரை பெயர்ந்து வந்திருந்தது. நாங்கள் படுத்திருந்த அறை மட்டும் சுத்தமாக இருந்தது. மாளிகையில் புழங்கும் அறையாக எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறை மட்டும் தான். சமையலறையைத்  தாண்டி  கொல்லைப் புறம்  விரிந்தது.

புது இடம் என்பதால் சீக்கிரமே எழுந்து விட்டேன். விடிந்திருந்தது. வாய் கொப்புளிக்க சத்திரத்துக்கு தான் போக வேண்டும். கொல்லைப் புறம் சென்று ஒரு புதருக்கருகே சிறுநீர் கழிக்கும் போது அந்தக் கிணறு என் கண்ணில் பட்டது. எந்த முட்புதருக்கருகே நான் நின்று கொண்டிருந்தேனோ அங்கிருந்து பத்தடி தள்ளி அந்தக் கிணறு இருந்தது. அதன் திட்டின் ஒரு பாகம் சுத்தமாக உடைந்து விட்டிருந்தது.தெரியாமல் யாரேனும் அங்கு போய் கிணற்றில் விழுந்து விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் தான் அந்த முட்புதரை யாரோ அங்கு வளர்த்திருக்கிறார்கள் போல! சில்லென்று என் முதுகெலும்பில் மின்சாரம் பாய்ந்தது போன்ற ஒரு காட்சியை அப்போது காணக் கிடைத்தது. ஒரு கரு நாகம் நான்கடி இருக்கலாம் ; மெலிய தேகத்துடன் நான் சிறு நீர் கழித்த முட்புதருக்குள்ளிருந்து வெளியேறி உடைந்திருந்த கிணற்றுச் சுவருக்குள் ஊர்ந்து சென்றது. முட்புதரில் தூங்கிக் கொண்டிருந்த நாகத்தின் தூக்கத்தை கலைத்ததற்கு அதன் சந்ததிகள் என்னைப் பழிவாங்குமா என்று தெரியவில்லை.ஆனால் அமைதியாக ஒரு நாகம் கிணறுக்குள் நுழையும் காட்சி என் ஞாபகத்தில் நிரந்தரமாகப் படிந்து போனது.

+++++

writer_ashokamitran

எதிர் பாராமல் கிணறுகள் கண்டு பிடிக்கப்பட்ட போது ஏற்பட்ட விபரீத விளைவுகளுக்கு இரு காரணங்கள் ; ஒன்று மூடப்பட்டகிணறுக்குள் மர்மங்களும் தூங்கக் கூடும் என்ற யூகம் இரண்டு, அக்கிணறு இருக்கும் இடத்தின் சிதிலமான தன்மை. அசோகமித்திரனின் ”கிணறு” சிறுகதையிலும் ஒரு கிணறு கண்டு பிடிக்கப்படுகிறது.அது ஏற்படுத்தும் விளைவு என்ன என்பது ஒரு புறம் இருக்கட்டும். அதற்கு முன்னர் பாழடைந்த கோட்டைகளைப் பற்றி பேச வேண்டியிருக்கிறது.

+++++

பழைய கோட்டைகளை களமாக வைத்து பல மர்மக் கதைகளும் சாகசக் கதைகளும் புனையப்பட்டிருக்கின்றன. கோட்டைகளுக்குள் மர்மங்கள் ஒளிந்துள்ளன என்னும் அனுமானம் பல திகில் கதை எழுத்தாளர்களுக்கு சோறு போட்டுக் கொண்டிருக்கிறது.

தாகூரின் சிறுகதைகளில் ”பசித்த கற்கள்” முக்கியமான ஒன்று. அக்கதையில் ஒரு கோட்டை வரும்.

பாரிச் ஒர் அழகான இடம். சுஸ்தா நதி கற்களோடு பேசிக் கொண்டும் கூழாங்கற்களை அலம்பிக் கொண்டும் திறமை வாய்ந்த நடன மங்கை போல அந்த காட்டின் வழி நகர்ந்து கொண்டிருந்தது. நதியின் கரையில் இருந்து 150 படிகள் ஏறினால், மலையடிவாரத்தில் கம்பீரமான  ஒற்றை பளிங்கு மாளிகை நிற்கும்.மாளிகைக்கு அருகில் ஒருவரும் வசிப்பதில்லை” என்ற அழகான வர்ணனை வாயிலாக அந்த அரண்மனை நமக்கு அறிமுகப்படுத்தப்படும். கதைசொல்லி தனியாக அந்த கோட்டையில் தங்கும் போது அவனுக்கேற்பட்ட அனுபவங்களை கதையில் விவரிப்பான்.

தாகூரின் “பசித்த கற்கள்” அசோகமித்திரனின் “கிணறு” சிறுகதையிலிருந்து ஒரு விதத்தில் வித்தியாசமானது. யதார்த்தத்தில் அழுத்தமாக காலூன்றியிருக்கும் அசோகமித்திரனின் மற்ற கதைகள் போன்றே “கிணறு” கதையும் யதார்த்தத்தில் நிலை கொண்டது. கதை உள்ளே கதை என்ற உத்தியில் அமைந்திருக்கும் “பசித்த கற்கள்” மாற்று மெய்ம்மை பாவனையுடன் கற்பனாவாதத்தின் கொண்டாட்டமாக எழுதப்பட்டிருக்கும். ரயிலின் வருகைக்காக ரயில் நிலையத்தில் காத்திருக்கும் போது கதைசொல்லி சொல்லும் கதையில் ஒரு தெளிவான முடிவு இருக்காது. அதற்குள் அவர்கள் பயணம் செய்ய வேண்டிய ரயில் வந்து விடும். கதைசொல்லி டாட்டா-பை பை சொல்லிக்கொண்டே ரயிலில் ஏறிச் சென்று விடுவார். கதை கேட்ட நபர் “அவர் சொன்னதெல்லாம் ரீலு தான்” என்பது மாதிரியாக சொல்லுவார்.

பசித்த கற்களில் கதைசொல்லி அந்த அரண்மனையில் தனியாக வசிப்பான் ; பைத்தியம் பிடித்த கரீம் கான் என்ற உதவியாளன் மட்டும் கூட இருப்பான். “கிணறு” கதையில் வரும் சொகுசு சுற்றுலா விடுதியாக மாற்றப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கும் கோட்டையில் சதாசிவன் தனியே இல்லை. சதாசிவனுடன் அவனுடைய நண்பனும் அந்த ஓட்டலில் தங்கியிருக்கிறான். பல அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் கூட தங்கியிருக்கின்றனர். ஆனாலும் பசித்த கற்களின் கதை சொல்லி போல சதாசிவனும் தனித்தே வளைய வருகிறான். அந்த விடுதியில் இண்டெர்-காம் போன்கள் இல்லை. வரவேற்பறையில் மட்டும் ஒரே ஒரு தொலைபேசி இணைப்பு இருக்கிறது. கதையில் இரு முறை நண்பனுடனும் சுற்றுலா பயணிகளுடனும் சதாசிவன் உணவு உண்பது போல் வருகிறது. ஆனாலும் கதை முழுதும் சதாசிவன் தன் எண்ணங்களில் தனித்திருக்கிறான். அவனுடைய அறைக்கு தேநீர் கொண்டு வரும் ஆளும், மத்திய கால அரசவைச் சேவகன் போல உடையணிந்த சேவகன் ஒருவனும் கதையில் வருகிறார்கள். சேவகனிடம் மட்டும் ஒரு சம்பாஷணை நடக்கிறது.

திகில் கதைகளில் பாத்திரங்கள் தனித்திருக்கும் போது தான் அவர்கள் மனதின் பிடியில் இருப்பதை சொல்ல முடியும். மனதிற்குள் தானே பயம் இருக்கிறது.

”பசித்த கற்களில்” பகலில் அமைதியாக இருக்கும் பாழடைந்த அரண்மனை இரவில் உயிர் பெறும். மனிதர்கள் நகரும் போது எழும் மிதியடிகளின் சத்தம், ஆனந்தமாக சுஸ்தா நதியில் நீராடச்செல்லும் நங்கையரின் சிரிப்போலிகள் என மாயைப் போன்ற காட்சிகள் கதைசொல்லியின் கண்களுக்கு முன்னால் ஓடுகின்றன. காட்சியில் வருபவர்களின் கண்ணுக்கு அவன் தெரிவதில்லை. ஒரு திரைப்படம் போன்று ஒவ்வோர் இரவும் இக்காட்சிகள் அவனுக்கு தெரிகின்றன. முதலில் பயத்தோடிருக்கும் கதைசொல்லி பிறகு இக்காட்சிகளுக்கு பழகி விடுகிறான். இரவுக்காக காத்திருக்க ஆரம்பிக்கிறான். ஒரு வித பித்து நிலையை அந்த பாழடைந்த கோட்டையின் சூழல் அவனுள் ஏற்படுத்திவிடுகிறது. மனதின் பங்கேற்பில்லாமல் அந்த காட்சிகளும் பிரமைகளும் தோன்றியிருக்க முடியாது!

இரு சிறுகதைகளுக்கும் நடுவிலான பொது இழை – வரலாற்று கால நிகழ்வுகள் பற்றிய யூகங்களும் ஆர்வங்களும். கோட்டைகளில் வசித்தவர்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்ற கற்பனை. எத்தகைய சதிச் செயல்கள் அக்கோட்டையில் நிகழ்ந்திருக்கக் கூடும் என்ற யோசனை. பசித்த கற்களில் கதைசொல்லி கற்பனையின் ஈர்ப்பை இப்படி விவரிப்பான் : “ஆர்வத்தை தூண்டும் அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தை, ஒர் அழகான கதையின் துண்டுகளாக என்னால் உணர முடிந்தது ;ஆனால் அக்கதையை ஒரு தொலைவிலிருந்து பின் தொடர முடிந்ததேயொழிய, அதன் முடிவு என்ன என்று என்னால் அறிய முடியவில்லை.” 

கிணறு கதையின் கதாநாயகனும் கிட்டத்தட்ட அதே மனநிலையில் தான் இருந்தான். பயம் ஒரு விசித்திரமான உணர்வு. பயவுணர்வு நீடிக்கும் போது அவ்வுணர்வைத் தூண்டி விடும் புறப் பொருட்கள் மீதான ஈர்ப்பு அதிகரிக்கக் கூடும் என்கிற அனுமானம் இரு கதைகளிலும் பயன் படுத்தப்பட்டிருக்கிறது.

+++++

சதாசிவன் தங்கியிருக்கும் அறையின் ஜன்னல் மூடியிருக்கிறது. யாரும் எளிதில் திறக்காமல் இருக்க கம்பிகளை இறுக்க சேர்ந்து அடித்திருக்கிறார்கள்.  அந்த ஜன்னல் கம்பிகள் உளுத்துத் துருப் பிடித்துப் போன நிலையில் இருக்கின்றன. மதிய உணவுக்கு அழைக்க வந்த சேவகனைக் கொண்டு அந்த ஜன்னலை திறக்க முயல அது முடியாமல் போகிறது. மதிய உணவு உண்டு திரும்பிய பிறகு சதாசிவன் தனியே இருக்கையில் ஜன்னலை மீண்டும் திறக்கப் பார்க்கும் போது,கம்பிகள் எளிதில் விழுந்து விடுகின்றன. கம்பிகளை எல்லாம் விலக்கி வெளியில் பார்க்கிறான்.

ஜன்னல் வழியாகப் பார்த்தான். முதலில் ஒன்றும் தெரியவில்லை.எட்டிப் பார்த்தான். ஜன்னலைத் தாங்கிய சுவர் கீழே செங்குத்தாக நின்றது. அதையொட்டியபடி ஆழத்தில் ஒரு கிணறு இருந்தது தெரிந்தது.”

அவன் அறைக்கு நேர் கீழே கிணறு இருக்கிறது என்பது தெரிந்தவுடன் அவனால் அமைதியாக இருக்க முடியவில்லை. அவன் பத்து வயதில் பார்த்த ராட்சத கிணறு அவனுக்கு ஞாபகத்தில் வருகிறது. மலை மீது இருக்கும் கிணறுகளின் வரலாறு சாதாரண கிணறுகளின் வரலாறு போல் இருக்காது என்ற சதாசிவத்துக்கு தோன்றுகிறது. அறையை மாற்றிக் கொள்ளலாமா என்று கூட யோசிக்கிறான்.

தண்ணீர் அவனை எப்போதும் கலக்கத்துக்கு உட்படுத்தியது. தண்ணீர் என்பது குழாயில் வருவது மட்டுமில்லை. அது கிணறாக இருக்கும். ஏரியாக இருக்கும்.ஆறாக இருக்கும். அருவியாக இருக்கும். அவன் முதன் முறையாக கடலைப் பார்த்த போது பயத்தில் வயிறு உள்ளிழுத்துக் கொண்டது, முகம் இல்லை, கை-கால் இல்லை, கண் மூக்கு இல்லை, ஆனால் கடல் ஓர் அரக்கனாக காட்சி அளித்தது. அந்த அரக்கன் சில நேரங்களில் படகுகளையும் கட்டுமரங்களையும் கப்பல்களையும் கவிழ்த்துவிடாதிருந்தால் அவனுக்கும் அவ்வப்போது பெருந்தன்மை, இரக்கம் உண்டு என்று பொருள். ஆனால் அரக்கர்களின் பெருந்தன்மையையும் இரக்கத்தையும் நம்ப முடியுமா? எந்த வினாடியும் அவை மறையக் கூடியவை, விளைவு, அழிவுதான். அதனால்தான் எல்லாக் கலாச்சாரங்களும் பிரளயம் வந்து உலகம் அழியும் என்று நம்புகின்றன..

பயம் இருக்கிறது என்பது புரிகிறது, ஆனால் அதை ஒத்துக் கொள்ள முடிகிறதா? சதாசிவத்துக்கு பழங்காலத்தில் அறைகளில் தனியாகப் படுத்திருப்பார்களா என்ற சந்தேகம் எழுகிறது. அந்த கோட்டையில் இருந்த ராஜாவுக்கு எத்தனை ராணியர் இருந்திருப்பர்? அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி அறையில் இருந்திருப்பார்கள்.இரு ராணியரை ஒரே அறையில் தங்க வைக்க ராஜா சம்மத்தித்திருக்க மாட்டான் என்றெல்லாம் அவன் மனம் தறி கெட்டு ஓடுகிறது.

+++++

அச்சவுணர்வு பற்றிய பிரக்ஞை இருந்தும் கிணறு சிறுகதையின் கதாநாயகன் கதையின் முடிவில் சந்தித்த முடிவை எப்படி சந்தித்திருக்க முடியும் என்ற கேள்வி இயற்கையாக எழுகிறது. ஆனால் கதையின் ஆரம்பத்தில் எழுத்தாளர் காரணத்தை கொடி காட்டி விடுகிறார்.

சிறுகதையின் ஆரம்ப வரி இது தான்! – “அந்த இடத்திற்கு அவனாகத் தேடி வரவில்லை” அது அவனுக்கு விதித்தது என்பதை முதலிலேயே நமக்கு தெரிவித்துவிடுகிறார். சதாசிவத்துக்கு தண்ணீரில் கண்டம் என்ற தகவலும் நமக்கு அளிக்கப்பட்டுவிடுகிறது.

கதையின் முடிவிலேயே இதையெல்லாம் சொல்லிவிட்டால் கதை எப்படி “திகில்” கதையாகும். வாழ்வின் அபத்தத்தை சொல்வதாகத் தானே ஆகும்!

அசோகமித்திரனின் எழுதிய சிறுகதைகளில் அவரின் செகந்திராபாத்தில் இருந்த காலத்து இளம் வயதுக் கதைகள், சென்னையில் திரைப்பட நிறுவன நிர்வாகியாக வேலை பார்த்த பின்புலக் கதைகள் மற்றும் ”ஓற்றன்” நாவலில் வருவது மாதிரியான அமெரிக்க மாநிலம் அயோவாவைக் களமாகக் கொண்ட சிறுகதைகள் மிகப் பிரசித்தமானவை. இவை தவிர ஒரு வித intense-ஆன சிறுகதை வகையையும் அவர் தந்திருக்கிறார் என்று கூறலாம். “பிரயாணம்” என்கிற சிறுகதை இத்தகைய ஒரு வகையைச் சார்ந்தது எனலாம். பிரயாணம் கதை சொல்கிற அபத்த தரிசனத்தை “கிணறு” கதையும் சொல்கிறது. ஒரே வித்தியாசம், கிணறு கதையில் அது ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டுவிடுகிறது.

+++++

“கிணறு” கதையின் முதல் பத்தியையும், சதாசிவத்துக்கும் அவன் அம்மாவுக்கும் இடையில் நடக்கும் சிறு உரையாடலைக் கதையிலிருந்து வெட்டி விட்டால் இந்த சிறுகதையை ரஸ்கின் பாண்ட் எழுதியிருக்கிறாரோ என்று ஐயம் தோன்றலாம்.. ஆனால் அசோகமித்திரனின் தனித்தன்மையான அபத்த தரிசனம் வெளிப்படுவது அந்த முதற் பகுதி வாயிலாகத்தானே!

+++++

நகர வாழ்க்கையில் கிணறுகளைக் காண்பது வெகு அபூர்வமாகிவிட்டது. மிகச் சமீபத்தில் யாரும் பயன்படுத்தாத ஒரு கிணற்றைக் காணும் சந்தர்ப்பம் வாய்த்தது. அது ஒரு பழங்கிணறு. ஏறத்தாழ நூறு வருடங்கள் முன் நூற்றுக் கணக்கானோர் அதற்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர். துப்பாக்கி தோட்டாக்கள் துளைப்பதிலிருந்து தப்பிப்பதற்காக அப்பாவி மனிதர்கள் கிணற்றில் விழுந்து உயிர் நீத்த வரலாற்று சோகம். அந்த கிணற்றுக்குள் பார்க்கையில் காலியான பிளாஸ்டிக் புட்டிகளும் மூடிகளுமாக தெரிந்தன. தியாகிகளின் உயிர் குடித்த அந்த கிணறில் நீர் இருந்த அடையாளமே இல்லை. அக்கிணறு அம்ரித்சரில் இருக்கிறது.

+++++

துணுக்குகள்:

  1. அசோகமித்திரனின் “கிணறு” சிறுகதை குமுதம் ஜங்சன் ஜனவரி 2002 இதழில் வெளியானது.
  2. “கிணறு” சிறுகதை ”அழிவற்றது” (காலச்சுவடு பதிப்பகம்) சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றிருக்கிறது.

 

நன்றி : சொல்வனம் (http://solvanam.com/?p=31335)

well

தி இந்துவில் என் வலைப்பதிவு

27.12.2013 அன்று வலையேற்றிய ”குளம் கோவில் புத்தகம்” என்கிற பதிவு 2.1.2014 அன்று தி இந்து தமிழ் நாளிதழில் அச்சேறியிருக்கிறது.

Scan doc

குளம் கோவில் புத்தகம்

golden temple 1
கருணையுள்ளம் பருத்தியாகி
திருப்திகுணம் நூலாகி
தன்னடக்கம் முடிச்சாகி
வாய்மை முறுக்காகி
அமைந்த பூணுலொன்று
உங்களிடம் இருந்தால்
அதை எனக்கு அணிவியுங்கள்
அது அறுந்து போகாது ;
அது அழுக்காகாது ;
எரிந்து போகாது ;
தொலைந்தும் போகாது ;
நானக் சொல்கிறான்
அத்தகைய பூணூலை அணிந்தோரே
ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
-குரு நானக்

ஒரு குளம். புனிதக் குளம். ராமதாஸ்பூரில் இருந்த குளம் என்று சொன்னால் யாருக்கும் தெரியாது. இன்று அக்குளத்தின் பெயரே அவ்வூருக்கும் பெயராக இருக்கிறது.ஆம்.அமிர்தம் நிரம்பிய குளம் என்று அர்த்தம் பெறும் அமிர்த சரஸ் என்கிற அம்ரித்சர் தான் அந்தக் குளத்தின் பெயர். நகரின் பெயரும் அதுவே!

”எப்போது பார்த்தாலும் நேற்று கட்டியது போன்ற தோற்றத்தைத் தரும் கோயிலது” என்று பல வருடங்களுக்கு முன்னர் ஒரு பஞ்சாபி நண்பர் என்னிடம் சொன்னது கோயிலுக்குள் நுழைந்ததும் ஞாபகம் வந்தது. மேற்கு வாசலில் இருந்து உள் நுழைந்தேன். மக்களே சேவகர்களாக பணியாற்றி யாத்திரிகர்களின் செருப்பை வாங்கி வைப்பதைப் பார்க்கையில் பணிவு பேசுவதில் இல்லை ; சேவை செய்வதில் இருக்கிறது என்கிற சிந்தனை நம்முள் ஊடுருவுகிறது. கைகளை கழுவி நீர்ப்பாதையில் கால்களைப் பதித்து சுத்தம் செய்து விலாசமான கோயில் வளாகத்தினுள் நுழைந்தால் பிரம்மாண்டமான குளம், அதற்கு நடுவில் தங்கத் தகடுகள் மேவிய ஹர்மந்திர் சாஹிப், குளத்தைச் சுற்றி நடையிடும் ஆயிரக் கணக்கிலான பக்தர்கள், காற்றில் அலைந்து நம் காதுகளை நிரப்பும் குர்பானி, – பொற்கோயிலின் சூழல் நம் மனதை இலேசாக்கி நெகிழ்வு நிலையை நோக்கி செல்ல வைக்கிறது.

golden temple 2

கூட்டம் அலை மோதும் கோவில்கள் என்னுள் ஒரு பதற்றத்தையே ஏற்படுத்தும். எப்போது இக்கூட்டத்தில் இருந்து வெளிவரப்போகிறோம் என்ற எண்ணத்திலேயே கடவுள் தரிசனத்தின் போது மனம் அலை பாய்ந்தவாறு இருக்கும். நம் மீது வந்து மோதும் பக்தர்களின் மீது வெறுப்பும் கோபமும் எழும்.

அகால் தக்த்துக்கு எதிரில் துவங்கும் பக்தர் வரிசையில் நின்று மெதுவாக ஹர்மந்திர் சாஹிப்பை நோக்கி நகர்கையில் ஒரு வித அமைதி நம்மை ஆட்கொள்கிறது. குர்பானி-கீதம் நம்முள் சாந்தவுணர்வை விதைத்து, கூட்டத்தின் மேல் வெறுப்பு தோன்றாமல் செய்கிறது. ஹர்மந்திர் சாஹிப்பில் நுழைந்த பிற்பாடும் யாரும் முட்டி மோதி நம்மை தள்ளுவதில்லை. புனித கிரந்தத்தை விசிறியால் விசிறி பக்தி பண்ணுகிறார்கள் கிரந்திகள். கிரந்தி என்றால் கவனித்துக் கொள்பவர் என்று பொருள். சீக்கிய சமயத்தில் பூசாரிகள் இல்லை.

ஹர்மந்திர் சாஹிப்பின் இரண்டாம் மட்டத்திலும் மூன்றாம் மட்டத்திலும் பக்தர்கள் அமைதியாக குர்பானியை கேட்டுக் கொண்டோ அல்லது குரு கிரந்த் சாஹிப்பின் சில பகுதிகளை வாசித்துக் கொண்டோ அமர்ந்திருக்கிறார்கள்.

ஹர்மந்திர் சாஹிப்புக்கு வெளியே பிரசாதம் தரப்படுகிறது. பிரசாதத்தின் இனிப்பு அனுபவத்தின் இனிப்புடன் ஒன்று சேர்கிறது.

Akaal Takht Akaal Takht

ஹர்மந்திர் சாஹிப்புக்கு நேர் எதிராக வரலாற்று முக்கியத்துவமிக்க அகால் தக்த் இருக்கிறது. அங்கும் பக்தர்கள் குரு கிரந்த் சாஹிப்பை வாசித்தவாறு உட்கார்ந்திருக்கிறார்கள். அகால் தக்த் என்றால் காலமிலா அரியணை என்று பொருள். அகால் தக்த் சீக்கிய மதத்தின் மிக உயர்ந்த சமய அதிகார பீடம். சீக்கிய மதத்தின் பத்தாவது குரு – குரு கோபிந்த் சிங் – அகால் தக்தை தோற்றுவித்தார். குரு கோபிந்த் சிங்குடன் பத்து குருக்களின் வரிசை முற்றுப் பெறுகிறது. இதற்குப் பின் சீக்கிய மதத்தை வழி நடத்துபவையாக – குரு கிரந்த் சாஹிப்பும், அகால் தக்த்தும், சீக்கிய புண்யத்தலங்களும் – இருக்கின்றன.

1984-இல் ராணுவம் பொற்கோயிலுக்குள் நுழைந்த போது நடைபெற்ற அழிவில் அகால் தக்த்துக்கு வெளியே இருந்த சீக்கியர்களின் புனித கிணறும் ஒன்று. அகால் தக்த் திரும்ப கட்டப்பட்டபோது அக்கிணறை காக்கும் முகமாக அகால் தக்த்துக்குள்ளேயே கிணறு இணைக்கப்பட்டு மாற்றி கட்டப்பட்டது. ஒரு கிரந்தியிடம் அக்கிணறு எங்கிருக்கிறது என்று விசாரித்தேன். அகால் தக்த்தின் அடித்தளத்தில் ஒரு சுரங்கம் மாதிரியான படிகளில் இறங்கி அக்கிணறை தரிசித்தேன். கிணற்றில் ஏதோ வேலை நடந்து கொண்டிருந்தது.

பதினேழு-பதினெட்டாம் நூற்றாண்டுகளில் முகலாயர்களின் அதிகாரத்துக்கெதிரான அரசியல் அரணாக அகால் தக்த் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. அதன் விளைவாக பல தாக்குதல்களுக்கும் உள்ளாகியிருக்கிறது. அவற்றுள் முக்கியமானவையாகக் கருதப்படுபது ஆப்கானிய மன்னன் அஹ்மத் ஷா அப்தாலியின் தாக்குதல். கோவிலின் தூய்மைக்கு பங்கம் விளைவிக்க நூற்றுக் கணக்கான பசுக்களை வதை செய்தானாம் அப்தாலி. 18ம் நூற்றாண்டில் ஆப்கானிய மன்னனின் தூண்டுதலில் பொற்கோயிலுக்குள் குடியாட்டம் போட்டு கோவிலை அசுத்தப்படுத்திய மஸ்ஸார் ரங்கார் என்ற அதிகாரியையும் கோவிலுக்கு பங்கமேற்படுத்தியவர்களில் ஒருவனாகச் சொல்வார்கள். 1984இல் நிகழ்ந்த ஆபரேஷன் ப்ளூஸ்டாரின் போது அகால் தக்த் பீரங்கிகளால் சுடப்பட்டு சின்னாபின்னப் படுத்தப்பட்டது. இந்நிகழ்வு சீக்கியர்களின் மனதில் ஆறா காயத்தை ஏற்படுத்தியிருப்பதை அகால் தக்த்துக்கு வெளியேயிருந்த கல்வெட்டை வாசிக்கும் போது நன்கு உணர முடிந்தது.

குளத்திற்கருகே பல நிமிடங்கள் நின்று கொண்டிருந்தேன். புஷ்டியான ஆரஞ்சு நிற மீன்கள் கரைக்கருகே வாய்களை திறந்தவாறு நீந்திக்கொண்டிருந்தன. அக்குளத்தின் நீரைக் கைகளில் பிடித்து சிறிது அருந்தி, தலையில் தெளித்துக் கொண்டேன். நிஷான் சாஹிப் வாசலுக்கருகே விரிக்கப்பட்டிருந்த கம்பளத்தில் சிறிது நேரம் இளைப்பாறினேன்.

சீக்கிய நூலகம் எங்கிருக்கிறது என்று யாத்திரிகர் ஒருவரிடம் கேட்டேன். ”இன்று ஞாயிற்றுக் கிழமை ; நூலகம் திறந்திருக்காது” என்று சொன்னார். நுழைவு வாயிலுக்கு மேல் சீக்கிய மியுசியம் இருந்தது. சீக்கியர்களின் வரலாற்றை ஓவியங்கள் வாயிலாக சித்தரித்திருந்தார்கள். பல அரிய தகவல்கள் அறியக் கிடைத்தன.

செருப்பணிவதற்காக போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்த போது பக்கத்தில் உட்கார்ந்திருந்த சீக்கியர் ஒருவர் “எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார். அவரிடம் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தேன். மஹாராஷ்டிராவில் உள்ள நந்தேத் நகரிலிருந்து வந்திருக்கிறார். (நந்தேத் குரு கோபிந்த் சிங் அமரரான தலம் ; புகழ்பெற்ற ஸ்ரீ அஸூர் சாஹிபு குருத்வாரா அங்கு இருக்கிறது.) என்னைப் போலவே அவருக்கும் அம்ரித்சர் வருவது இது தான் முதல்முறை, சீக்கியராக இருந்தாலும் இதற்கு முன் ஹர்மந்திர் சாஹிப் வர சந்தர்ப்பம் அமையவில்லையாம். ’எனக்கும் தான்’ என்றேன். தன் டர்பனைக் காட்டி ”இதை அணிந்தவன் இவ்வளவு காலம் கழித்து வருவது சரியில்லை தானே!” என்று சொல்லி முறுவலித்தார். “நீங்கள் டர்பன் அணிந்திருக்கிறீர்கள் ‘ நான் அணிந்திருக்கவில்லை..அது ஒன்றைத் தவிர வேறு என்ன வித்தியாசம்” என்றேன். அவர் ’மிக சரியாகச் சொன்னீர்கள்’ என்று சொல்லி கையில் வைத்திருந்த சிறு புத்தகத்தை திறந்து குரு கோபிந்த் சிங்கின் ஷபத் ஒன்றை வாசித்துக் காட்டினார். இனிமையான பஞ்சாபி மொழியின் சத்தம் நெஞ்சை நிறைத்தது. அவரிடமிருந்து அந்த ஷபத்தின் அர்த்தத்தை சுருக்கமாக விளங்கிக் கொண்டேன். பின்னர் இணையத்தில் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை விகிபீடியாவில் வாசித்தேன்.

“வெவ்வேறு தோற்றங்கொண்டவரானாலும் அனைத்து மனிதரும் ஒருவரே.
வெளிச்சமானவர்களும், இருண்டவர்களும் ; அழகானவர்களும் அழகற்றவர்களும்,
வெவ்வேறு சூழ்நிலைகளில் இருந்ததனாலேயே
இந்துக்களாகவும் முஸ்லீம்களாகவும் வளர்ந்திருக்கிறார்கள்.
எல்லா மனிதர்களுக்கும் அதே கண்கள், அதே காதுகள் ;
பூமி, காற்று, தீ, நீர் – இவற்றால சமைக்கப்பட்டதே நம் உடல்கள்.
அல்லாவும் பகவானும் ஒரே கடவுளின் நாமங்கள்
புராணங்களிலும் குரானிலும் இதுவே சொல்லப்பட்டிருக்கிறது
எல்லா மனிதர்களும் ஒரே கடவுளின் பிரதிபலிப்புகளே
முழு மனித இனமும் ஒன்றே என்று உணர்”

golden temple4

ஓ புல்லாவே! நான் யாரென்று நான் அறியேன்!

Bullehshah_2009
சூஃபி மரபில் மிக முக்கியமானவராகக் கொண்டாடப்படும் புல்லே ஷா பதினேழு-பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பஞ்சாபி சூஃபிக்களில் அவரைப் போன்று பரந்த பிரபலம் பெற்றவர்களும் அதிகமாகக் கொண்டாடப்படுவர்களும் யாருமில்லை ; காஃபி என்னும் பஞ்சாபி கவிதை வடிவத்தில் அவர் எழுதிய கவிதைகளும் பாடல்களும் மிகப் பிரசித்தமானவை. உலகின் மிகச்சிறந்த சூஃபிக்களூள் ஒருவரான புல்லே ஷாவின் சிந்தனைகள் ஜலாலூத்தின் ரூமி மற்றும் டப்ரேஸ் போன்ற சூஃபிக்களின் சிந்தனைகளுக்கு ஒப்பானவை. ஒரு கவிஞராக, புல்லே ஷா பிற பஞ்சாபி சூஃபிக்களிடமிருந்து வேறு பட்டவர் ; தன் கவிதைகளில் உணர்ச்சி பூர்வமான பொது பஞ்சாபி குணங்களை சித்தரிக்காதவர் ; ஜீவனுள்ள, பக்தி நிரம்பிய பஞ்சாபி குணங்களை வலியுறுத்தி எழுதியவர். மரபார்ந்த ஆன்ம சிந்தனை வழி வந்த புல்லே ஷாவின் கவிதைகளில் மறைஞான சொற்றொடர்களும் மனக்கிளர்ச்சிகளும் நிறைந்திருந்தாலும், அவரின் கவிதைகளில் முக்கிய அங்கம் வகிப்பது – அறிவு சார் வேதாந்த சிந்தனையே.

சில வருடங்களுக்கு முன்னர் ராபி ஷெர் கில் என்ற பாடகர் புல்ஹே ஷாவின் “புல்லா… கீ ஜாணா மை கோன்…” என்ற பிரசித்தமான பாடலை ஜன ரஞ்சக பாப்-இசையாகத் தந்தார். உலக முழுதும் ரசிகர்களின் மனதை ஈர்த்த இப்பாடலை சில நாள் முன்னர் யூ-ட்யூபில் கேட்டு மெய்ம்மறந்து போகையில் இவ்வரிகளுக்கு என்ன அர்த்தம் என்று அறியும் ஆவல் ஏற்பட்டது. பாகிஸ்தானிய இணைய தளமொன்றில் எனக்கு கிடைத்த ஆங்கில மொழி பெயர்ப்பை கீழ்க்கண்டவாறு தமிழ்ப்படுத்தினேன் :-

ஓ புல்லாவே! நான் யாரென்று நான் அறியேன்!

நான் யாரென்று நான் அறியேன்
நம்பிக்கையுடன் மசூதிக்கு செல்பவனுமல்லன் ;
நம்பிக்கையின்மைக்கு சரணடைபவனுமல்லன் ;
சுத்தமானவனுமில்லை ; அசுத்தமானவனுமில்லை ;
மோசஸுமில்லை ; பாரோ-வும் இல்லை ;
நான் யாரென்று நான் அறியேன்
வேதப் புத்தகங்களில் இல்லை நான் ;
போதைப் பொருள்களிலும் இல்லை;
கெட்டவர்களின் கூட்டாளியாக மதுக்கடையிலும் நான் இல்லை ;
தூங்கவுமில்லை ; விழித்திருக்கவுமில்லை ;
நான் யாரென்று நான் அறியேன்
பாவிகளுக்கு நடுவிலுமில்லை ; புனிதர்களுக்கு நடுவிலுமில்லை ;
மகிழ்ச்சி மிக்கவனில்லை ; கவலை நிறைந்தவனுமில்லை ;
நீரைச் சார்ந்தவனில்லை ; பூமியைச் சார்ந்தவனுமில்லை ;
நான் வாயு இல்லை ; தீயுமில்லை ;
நான் யாரென்று நான் அறியேன்
அரேபியாவைச் சேர்ந்தவனில்லை ; லாகூரில் வசிப்பவனுமில்லை ;
இந்தியனில்லை ; நாக்பூரில் வசிப்பவனுமில்லை ;
இந்துவோ அல்லது பெஷாவர் வாழ் துருக்கி-இஸ்லாமியனோ இல்லை
நதௌன் நகரில் இருப்பவனும் இல்லை.
நான் யாரென்று நான் அறியேன்
சமயங்களின் ரகசியங்களை அறிந்தவனில்லை நான் ;
ஆதாம்-ஏவாளுக்குப் பிறந்தவனில்லை நான்;
எனக்கென்று ஒரு பெயரையும் இட்டுக் கொண்டதில்லை ;
மண்டியிட்டு தொழுகை புரியும் கூட்டத்தைச் சேர்ந்தவனில்லை ;
வழிதவறிச் சென்றவர்களின் கூட்டத்தையும் சேர்ந்தவனில்லை ;
நான் யாரென்று நான் அறியேன்
தொடக்கத்தில் நான் இருந்தேன் ; இறுதியிலுமிருப்பேன் ;
ஒன்றைத் தவிர வேறெதையும் அறியாத ஒருவன் நான்
என்னை விட ஞானி இருப்பானா?
புல்லா, அறிய முனையத் தக்க வேறொருவன் இருக்கிறானா?

தமிழின் நிலை – மகாகவி பாரதியார்

கல்கத்தாவில் “ஸாஹித்ய பரிஷத்” (இலக்கியச் சங்கம்) என்றொரு சங்கமிருக்கிறது. அதை தென்னாட்டிலிருந்து ஒருவர் சிறிது காலத்திற்கு முன்பு போய் பார்த்து விட்டு வந்து அச் சங்கத்தார் செய்யும் காரியங்களைப்பற்றி “ஹிந்து” பத்திரிகையில் ஒரு விஸ்தீர்ணமான லிகிதம் எழுதியிருக்கிறார்.மேற்படி பரிஷத்தின் நிலைமையையும் காரியங்களையும் அவர் நமது மதுரைத் தமிழ்ச் சங்கம் முதலிய தமிழ் நாட்டு “முயற்சிகளுடன் ஒப்பிட்டுக் காட்டி, நம்மவரின் ஊக்கக் குறைவைப் பற்றி மிகவும் வருத்தப்படுகிறார். தெலுங்கர்,மலையாளத்தார், கன்னடர் எல்லாரும் தத்தம் பாஷைகளின் வளர்ச்சியின் பொருட்டு வருஷாந்தரப் பெருங்கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். அவற்றால் விளையும் பயன் நமது சங்கத்தாரின் காரியங்களால் தமிழ் நாட்டிற்கு விளையவில்லை. வங்காளத்திலுள்ள ‘ஸாஹித்ய பரிஷத்’தின் நோக்கமென்னவென்றால், ‘எல்லா விதமான உயர்தரப் படிப்புக்களும் வங்காளப் பிள்ளைகளுக்கு வங்காளி பாஷையில் கற்றுக் கொடுக்கும் காலத்தை விரைவில் கொண்டு வந்து விடவேண்டும்’ என்பது ‘விரைவாகவே இந்த நோக்கத்தை அவர்கள் நிறைவேற்றிவிடுவார்கள்’ என்பது பல அடையாளங்களினால் நிச்சயமாகத் தோன்றுகிறது என்று அந்த லிகிதக்காரர் சொல்லுகிறார். வங்காளிகளின் விஷயம் இப்படியிருக்க, மைலாப்பூரில் சிறிது காலத்திற்கு முன்னே நடந்த ஸ்ரீ வைஷ்ணவ சபைக் கூட்டத்தில் பெரும்பான்மையோர் இங்கிலீஷ் தெரியாத வைதீக பிராமணராக இருந்தும் அதிலே சில இங்கிலீஷ் உபந்நியாஸங்கள் நடந்ததைஎடுத்துக்காட்டி மேற்படி லிகிதக்காரர் பரிதாபப்படுகிறார். ‘நமது ஜனத் தலைவர்கள் இங்கிலீஷில் யோசிப்பதையும் பேசுவதையும் நிறுத்தினால் ஒழிய நமது பாஷை மேன்மைப்பட இடமில்லை’ என்று அவர் வற்புறுத்திச் சொல்லுகிறார்.

மேற்படி லிகிதக்காரர், தமது கருத்துக்களை இங்கிலீஷ் பாஷையில் எழுதி வெளியிட்டிருப்பது போலவே தமிழில் எழுதித் தமிழ் பத்திரிகைகளில் பிரசுரப்படுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஸபைகள், ஸங்கங்கள், பொதுக் கூட்டங்கள், வருஷோத்ஸவங்கள், பழஞ்சுவடிகள் சேர்த்து வைத்தல், அவற்றை அச்சிடல் இவையெல்லாம் பாஷைவளர்ச்சிக்கு நல்ல கருவிகள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தமிழ் மக்கள் தமது மொழியைமேன்மைப்படுத்த விரும்பினால் அதற்கு முதலாவது செய்யவேண்டிய காரியம் ஒன்று உண்டு. அதாவது கால விசேஷத்தால் நமது தேசத்திலே விசாலமான லௌகீக ஞானமும் அதனைப் பிறருக்கு உபயோகப்படும்படி செய்வதற்கு வேண்டிய அவகாசம் பதவி முதலிய ஸௌகரியங்களும் படைத்திருப்பவராகிய இங்கிலீஷ்படித்த வக்கீல்களும், இங்கிலீஷ் பள்ளிக்கூடத்து வாத்தியார்களும், தமது நீதி ஸதலங்களையும், பள்ளிக் கூடங்களையும் விட்டு வெளியேறியவுடனே இங்கிலீஷ் “பேச்சை விட்டுத் தாம் தமிழரென்பதை அறிந்து நடக்க வேண்டும். பந்தாடும் போதும், சீட்டாடும் போதும், ஆசாரத் திருத்த ஸபைகளிலும், வர்ணாச்ரம ஸபைகளிலும், எங்கும், எப்போதும், இந்தப் “பண்டிதர்கள்” இங்கிலீஷ் பேசும் வழக்கத்தை நிறுத்தினால், உடனே தேசம் மாறுதலடையும். கூடியவரை, இவர்கள் தமிழெழுதக் கற்றுக்கொள்ள வேண்டும். இவர்கள் அத்தனை பேரும் தமிழ் பத்திரிகைகளில் லிகிதங்களாகவும், இவர்கள் எழுதுகிற கதைகாவியம், விளையாட்டு வார்த்தை, வினை வார்த்தை, சாஸ்திர விசாரணை, ராஜ்ய நீதி எல்லாவற்றையும் தமிழில் எழுதவேண்டும். தமிழ்ப் பத்திரிகைகள் நடத்துவோர் இப்போது படுங் கஷ்டம் சொல்லுந்தரம் அல்ல. வெளியூர் வர்த்தமானங்களைத் தவிர மற்றபடி எல்லா விஷயங்களும் பத்திராதிபர்கள் தாமே எழுதித் தீரவேண்டியிருக்கிறது.

வெளியூர்களிலுள்ள “ஜனத்தலைவரும்” ஆங்கில பண்டித”சிகாமணிகளும்” தமிழ்ப் பத்திரிகைகளைச் சரியானபடி கவனிப்பதில்லை. அந்தந்த ஊரில் நடக்கும் பொதுக்காரியங்களையும், அவரவர் மனதில் படும் புதுயோசனைகளையும் தெளிந்த தமிழிலே எழுதி தமிழ்ப் பத்திரிகைகளுக்கு அனுப்புதல் மிகவும் ஸுலபமான காரியம். ஜனத்தலைவர்களால் இக்காரியம் செய்ய முடியாத பக்ஷத்தில் பிறருக்குச் சம்பளம் கொடுத்தாவது செய்விக்க வேண்டும்.

நூலாசிரியர் படும் பாடு
பத்திராதிபரின் கஷ்டங்கள் அதிகமென்று சொன்னேன். இக்காலத்தில் தமிழ் நூலாசிரியர் படுங் கஷ்டங்களை ஈசனே தீர்த்துவைக்க வேண்டும். உண்மையான கவிதைக்குத் தமிழ் நாட்டில் தக்க மதிப்பில்லை. இங்கிலீஷ் பாஷையிலிருந்து கதைகள் மொழிபெயர்த்துப் போட்டால் பலர் வாங்கி வாசிக்கிறார்கள். அல்லது, இங்கிலீஷ் முறையைத் தழுவி மிகவும் தாழ்ந்த தரத்தில் பலர் புதுநாவல்கள் எழுதுகிறார்கள்; அவர்களுக்குக் கொஞ்சம் லாப மேற்படுகிறது. தமிழில் உண்மையான இலக்கியத் திறமையும் தெய்வ அருளும் பொருந்திய நூல்கள் எழுதுவோர் ஒரு சிலர் தோன்றியிருக்கிறார்கள்; இவர்களுடைய தொழிலை அச்சடிப்பாரில்லை; அச்சிட்டால் வாங்குவாரில்லை. அருமை தெரியாத ஜனங்கள்புதிய வழியில் ஒரு நூலைக் காணும் போது அதில் ரஸ மனுபவிக்க ” வழியில்லை. இங்கிலீஷ் படித்த “ஜனத்தலைவர்” காட்டும் வழியையே மற்றவர்கள் பிரமாணமென்று நினைக்கும்படியான நிலைமையில் தேசம் இருக்கிறது. இந்தப் ‘பிரமாணஸ்தர்கள்’ தமிழ் நூல்களிலே புதுமையும் வியப்பும் காணுவது சாத்தியமில்லை என்ற நிச்சயத்துடனிருக்கிறார்கள். ஆகவே, நூலாசிரியர், தமக்குத் தெய்வம் காட்டிய தொழிலிலே மேன்மேலும் ஆவலுடன் பாடுபட வழியில்லாமல், வேறு தொழில் செய்யப்போய் விடுகிறார்கள்.

காலம் சென்ற ராஜமையர் புதிதாகத் தமிழ்க் கதை எழுதுவதில் உண்மையான திறமை காட்டியிருக்கிறார். அவருக்குத் தகுந்த சம்மானமில்லை. ஆதலால், அவர் அந்தத் திறமையை மேன்மேலும் வளர்த்துக் கொண்டு போக இடமில்லாமல், ஆரம்பத்திலேயே கைவிட்டு, இங்கிலீஷ் மாதப்பத்திரிகை நடத்தப் போய்விட்டார். ஜமீன்தார்கள் மீதும், பிரபுக்கள் மீதும், ‘காமா சோமா’ என்று புகழ்ச்சிப் பாட்டுகள் பாடினால், கொஞ்சம் ஸன்மானம் கிடைக்கிறது. உண்மையான் தொழிலுக்குத் தகுந்த பயன் கிடைக்கவில்லை. மேற்படி ‘பிரமாணஸ்தர்’ தமிழ் மணத்தை விரும்பாமல் இருந்ததால், இந்த நிலைமை உண்டாய் விட்டது. ஆகையால், இங்கிலீஷ் படித்த தமிழ் மக்கள்-முக்கியமாக, வக்கீல்களும் பள்ளிக்கூடத்து வாத்தியார்களும் – தமது வாக்கிலும் மனத்திலும் தமிழரசியைக் கொலுவிருக்கும்படி செய்து வணங்கவேண்டு மென்றும், அதுவே இப்போதுள்ள ஸ்திதியில்தமிழ் வளர்ப்புக்கு மூலஸ்தான மாகுமென்றும் அறிக்கையிட்டுக் கொள்ளுகிறேன்.

பத்திரிக்கைகளின் நிலைமை
கும்பகர்ணன் தூங்கினானாம். இலங்கையில் சண்டை நடக்கிறது. மூன்று லோகமும் நடுங்குகிறது. “ராமராவண யுத்தத்திற்கு ராமராவண யுத்தமே நிகர்’ என்று முன்னோர் சொல்லியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சண்டையின் அதிர்ச்சியிலே கூட, கும்பகர்ணனுடைய தூக்கம் கலையவில்லை. ஆயிரக்கணக்கான ஆடுமாடுகுதிரைகளின் காலில் கூர்மையான கத்திகளைக் கட்டி அவன் மேலே நடக்கச் சொன்னார்கள்; தூக்கம் கலையவில்லை. ஏழெட்டு மேகங்களை அவன் காதுக்குள்ளே போய் இடியிடிக்கச் சொல்லி ” ராவணன் கட்டளையிட்டானாம்; மேகங்கள் போய் இடித்தனவாம்; கும்பகர்ணன் குறட்டை நிற்கவே யில்லை.

மேற்படி கும்பகர்ணனைப்போலே சில தேசங்கள் உண்டு. அண்டங்களத்தனையும் இடிந்து விழுந்தாலும் காதுகேட்காத செவிடர் வாழும் தேசங்கள் சிலவுண்டு. அந்த தேசங்களிலே வாஸம் செய்வோர் மஹா பாவிகள். மாதுர் துரோகம், பிதுர் துரோகம், சகோதரத் துரோகம், தெய்வத் துரோகம், சுதேசத் துரோகம் முதலிய பெரிய பாதகங்கள் செய்து சீரழிந்த மானிடர் அப்படிப்பட்ட தேசங்களில் வாழ்கிறார்கள்.

ஆனால், ஹிந்து தேசம் அப்படி…………….யில்லை! இங்கு தமிழ் நாட்டைப்பற்றி முக்யமாகப் பேச வந்தோம்; தமிழ் நாடு மேற்படி மஹா பாதக ஜாப்தாவைச் சேர்ந்ததன்று, அன்று!

ராமலிங்க சுவாமிகளும், ‘சுதேசமித்திரன்’ சுப்பிரமணிய அய்யரும், இவர்களைப்போன்ற வேறு சில மகான்களும் தமிழ் நாட்டின் புதிய விழிப்புக்கு ஆதிகர்த்தாக்களாக விளங்கினர். ஹிந்து தர்மத்தின் புதுக் கிளர்ச்சிக்கு விவேகாநந்தர் ஆரம்பம் செய்தார். அவரைத் தமிழ் நாடு முதலாவது அங்கீகாரம் செய்துகொண்ட பிறகு தான், வங்கம், மாஹாராஷ்ட்ரம் முதலிய ஹிந்து தேசத்துமாகாணங்கள் அவருடைய பெருமையை உணர்ந்தன.
பூமண்டல முழுதிலும் பெரிய விழிப்பொன்று வரப் போகிறது. அதற்காதாரமாக ஹிந்துஸ்தானம் கண்ணை விழித்து இருபதாண்டுகளாயின. ஹிந்துஸ்தானத்துக்குள் தமிழ் நாடு முதலாவது கண் விழித்தது. ஆனால், இன்னும் புத்தி சரியாகத் தெளியாமல் கண்ணை விழிப்பதும் கொட்டாவி விடுவதுமாக இருக்கிறது.

ஒரு தேசத்தின் பொதுப்புத்தியை அளந்து பார்க்க வேண்டுமானால், அதற்கு எத்தனையோ அறிகுறிகள் உண்டு. அந்த தேசத்து ராஜாங்க நிலை, தர்ம ஸ்தாபனங்களின் நிலை, கோயில்களின் நிலை முதலிய எத்தனையோ அடையாளங்களால் ஒரு தேசத்தாரின் பொது ஞானத்தை அளவிடலாம். இவற்றுள்ளே சமாசாரப் பத்திரிகைகளையும் ஓரடையாளமாகக் கருதத்தகும். ஆனால் ஐரோப்பா, அமெரிக்க கண்டங்களில் நடக்கும் பத்திரிகைகளுடன் தமிழ்நாட்டுப் பத்திரிகையை ஒப்பிட்டுப் பார்த்து, இவற்றின் பரிதாபகரமான நிலைமையைக் கண்டு, ‘ஆஹா’ இப்படிப் பட்ட தமிழ் நாடுஎங்கே பிழைக்கப்போகிறது!’ என்று எண்ணி பாழும் நெஞ்சு “உடைந்து போகவேண்டாம். ஏனென்றால், வர்த்தமானப் பத்திரிகை நாமாக உண்டாக்கிய கருவியன்று. பிறரிடமிருந்து கற்றுக்கொண்டதந்திரம்; சென்ற முப்பது வருஷங்களாகத்தான்தெரிந்து கொண்டிருக்கிறோம். இன்னும், சரியாக முதிர்ச்சி அடையவில்லை.தவிரவும், தமிழ்ப் பத்திரிகைகளுக்கு ராஜாங்கத்தார் உதவி கிடையாது. பத்திரிகைகளுக்கு ராஜாங்கத்தார் எத்தனைக் கெத்தனை மதிப்புக் கொடுக்கிறார்களோ, அத்தனைக்கத்தனை நாட்டில் மதிப்பேறி, அதனால் பத்திரிகைகளுக்கு தகுந்த லாபமுண்டாய், அதிலிருந்து சரியான வித்வான்களின் கூட்டம் யதேஷ்டமாய்ச் சேர்ந்து, அந்தத் தொழில் மேன்மையடைய இடமுண்டாகும்.

தமிழ்நாட்டில் இப்போது நடைபெறும் ராஜாங்கம் தமிழ் பாஷையில் தேர்ச்சியுடைய தன்று. தமிழ் பாஷையை முதலாக மதிப்பதன்று. ‘தமிழ் முழு நாகரீக முடையதா, இல்லையா’ என்பதைப் பற்றி சந்தேகங்களுடையது; ஆதலால், தமிழ்ப் படிப்பில்லாமலும், தமிழ் மணமில்லாமலும் ஸந்தோஷமடைந்திருக்கும் இயல்புடையது.

தவிரவும், தமிழ்ப் பத்திரிகைகள் நடத்துவோருக்குச் சரியான திரவிய லாப மில்லாமலிருப்பதற்கு வேறு பல காரணங்களும் உள. அவற்றுள் பத்திராதிபர்களின் அஜாக்கிரதை (சோம்பேறித்தனம்) ஒன்று எனக்கு நாலைந்து முக்கியமான தமிழ்ப் பத்திரிகைகள் வருகின்றன. அவற்றுள் ஒன்று வாரப் பத்திரிகை. அது பழுத்த சுதேசீயக் கக்ஷியைச் சேர்ந்தது. ஆனால் தக்கபயிற்சியில்லாதவர்களால் நடத்தப்படுவது. சில தினங்களின் முன்பு அந்தப் பத்திரிகையில் யுத்த சம்பந்தமான தலையங்கம் ஒன்று எழுதப்பட்டிருந்தது. அதில் ருஷியாவில் “போல்ஷெவிக்” என்ற ஒரு மனுஷ்யன் இருப்பதாகவும், அவன் ஒரு கக்ஷி ஏற்படுத்தி நமது நேசக் கக்ஷிக்கு விரோதம் செய்வதாகவும் சொல்லியிருந்தது! அஃது அந்நாட்டில் ராஜ்யப் புரட்சிக் கூட்டங்களில் ஒன்றாகிய’மகிஸிமிஸ்த்’ கக்ஷிக்கு மற்றொரு பெயரென்றும் ஒரு மனுஷ்யனுடைய பெயர் அல்லவென்றும் அந்தப் பத்திராதிபர் தெரிந்து கொள்ளவில்லை. மேலும், அதே பத்திரிகையில் ஒவ்வொரு வியாசத்துக்கும் தமிழ் மகுடத்துக்கு மேலே இங்கிலீஷ்மகுடமொன்று சூட்டியிருக்கிறது. “ருஷியாவின் நிலைமை” “The Situation in Russia, ” “தாய்ப்பாஷையின் மூலமாகக் கல்வி பயிற்றல்” “The Vernaculars as media of instruction.” ஆஹா! நான் மாற்றி எழுதுகிறேன். தமிழைமுதலாவது போட்டு, இங்கிலீஷை பின்னே போட்டேன். அந்தப் பத்திரிகைகளில் அப்படியில்லை. இங்கிலீஷை முன்னே போட்டு, தமிழைக் கீழே போட்டிருக்கிறது. “அமெரிக்கா ஸ்திரீ” பார்த்தாயா? என்னைத் தெரியாமலே என் கை முதலாவது தமிழ் வார்த்தை “எழுதுகிறது “American woman” “அமெரிக்கா ஸ்திரீ”, “Our Mathadhipaties” “நமது மடாதிபதிகள்,” என்று எழுதியிருக்கிறது. காயிதப் பஞ்சமான காலம்; என்ன அநாவசியம் பார்த்தீர்களா?
இங்கிலாந்தில் வர்த்தமானப் பத்திரிகைகள் ப்ரான்ஸ் தேசத்து மந்திரிகளுடைய உபந்யாசங்களையும் பெரிய சாஸ்திரிமார், பெரிய கைத்தொழில் நிபுணர், த்ரவ்ய சாஸ்திர நிபுணர், ஜனத்திருத்தத் தலைவர் முதலியவர்களின் உபந்யாசங்களையும், பல ப்ரெஞ்சு ராஜாங்க சம்பந்தமான விவகாரங்களையும், ப்ரெஞ்சு பத்திரிகைகளிலிருந்து மொழி பெயர்த்துப் போடுகின்றன. அப்படியே பிரான்ஸ் தேசத்துப் பத்திரிகைகள் ஜெர்மன் பாஷையிலிருந்து பல விஷயங்களை மொழிபெயர்த்து எழுதுகின்றன. ஆனால் அந்த மொழி பெயர்ப்புகளில் ஸ்வபாஷையின் வழக்கங்களையும் பிரயோகங்களையும் கைவிட்டு அன்னிய பாஷையின் வசன நடையைப் பின்பற்றும் வழக்கம் கிடையாது. ஆனால் தமிழ் நாட்டிலோ முழுவதும் தமிழ் நடையைவிட்டு இங்கிலீஷ் நடையில்தமிழை எழுதும் விநோதமான பழக்கம் நமது பத்திராதிபர்களிடம்காணப்படுகிறது. முதலாவது, நீ எழுதப்போகிற விஷயத்தை இங்கிலீஷ் தெரியாத ஒரு தமிழனிடம் வாயினால் சொல்லிக்காட்டு.

பஞ்ச பூதங்களின் இயற்கையைப் பற்றின ஆராய்ச்சிகளிலே, நம்மைக்காட்டிலும் ஐரோப்பியர் முன்னே நிற்பது தெரிந்த விஷயம். ஆதலால் ஐரோப்பாவில் வழங்கும்லௌகிக சாஸ்திரங்களைத் தமிழில் எழுதவேண்டுமென்று பல பண்டிதர் மிகவும் ஆவலோடிருக்கிறார்கள். ஏற்கெனவே, சில பகுதிகளின் ஆரம்பம் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறது. இந்த முயற்சி மேன்மேல் வளரும்; வளர்ந்து தீரவேண்டும். அந்த சாஸ்திரங்களையெல்லாம் ஏக காலத்திலே தமிழில் எழுதி முடிப்பதற்காக ஒரு பண்டித-சங்கம் ஏற்படக்கூடும். நமது ராஜாக்களுக்கும், ஜெமீன்தார்களுக்கும், செட்டிகளுக்கும் நல்ல புத்தியுண்டாகித் தமிழில் நவீன சாஸ்த்ரம் சேர்ப்பதாகிய காரியத்தை அவர்கள் தக்க பண்டிதர்களின் உதவி கொண்டு, “விரைவில் நிறைவேற்றி மேன்மை பெறக்கூடு.

அஸ்திவாரக் காரியம்
இதற்கெல்லாம் முன்னதாகவே பண்டிதர்கள் செய்து வைக்கவேண்டிய அடிப்படைக் காரியம் ஒன்றுண்டு. கூடியவரை சாஸ்த்ர பரிபாஷையை நிச்சயப்படுத்தி வைத்தால், பிறகு மொழிபெயர்ப்புத் தொடங்குவோர்க்கு அதிக சிரமமிராது;ஸங்கடமிராது. பரிபாஷை, ஸங்கேதம், குழூவுக்குறி என்ற மூன்று சொல்லும் ஒரே பொருளைப் பல வகையிலே குறிப்பன; அதாவது, ஒரு கூட்டத்தார் அல்லது ஒரு சாஸ்த்ரக்காரர் விசேஷார்த்தம் தோன்றும்படி உடன்பட்டு வழங்கும் பொதுவழக்கமில்லாத சொல். இங்ஙனம் பரிபாஷையை நிச்சயப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்துடன், சேலத்தில் வக்கீல் ஸ்ரீ சக்ரவர்த்தி ராஜகோபாலாசார்யரும், ஸ்ரீ வெங்கட சுப்பையரும் சேர்ந்து ஒரு மாதப் பத்திரிகையைத் தொடங்கி யிருக்கிறார்கள். இந்தப் பத்திரிகையின் பெயர் ‘தமிழ் சாஸ்த்ர-பரிபாஷைச் சங்கத்தாரின் பத்திரிகை’. மேற்கண்ட பெயருடன் ஒரு சங்கம் சேலத்தில் ஏற்பட்டிருக்கிறது. அந்த சங்கத்தின் கார்யஸ்தர், அந்த ஊர்க் காலேஜில் ப்ரகிருதி சாஸ்த்ர பண்டிதராகிய ஸ்ரீ ராமநாதய்யர்.
‘தமிழில் சாஸ்த்ர பரிபாஷை மாஸப்பத்திரிகை’ என்ற சேலத்துப் பத்திரிகையின் முதலாவது சஞ்சிகை இங்கிலீஷில் வெளிப்பட்டிருக்கிறது. ஆரம்பத்திலே தமிழில் எழுதாமல் தமிழருக்கு “வேண்டிய இக்காரியத்தை இங்கிலீஷ் பாஷையிலே தொடங்கும்படிநேரிட்டதற்கு ஸ்ரீ ராஜகோபாலாசார்யர் சொல்லும் முகாந்தரங்கள் எனக்கு முழு நியாயமாகத் தோன்றவில்லை. ஆனால் கூடிய சீக்கிரத்தில் தமிழ்ப்பகுதி யொன்று அந்தப் பத்திரிகையில் சேருமென்று தெரிகிறது. அநேகமாக, இரண்டாம் ஸஞ்சிகையிலே தமிழ்ப்பகுதி சேருமென்று கேள்விப்படுகிறேன். அங்ஙனம், தமிழ் சேர்ந்து நடக்கும் சாஸ்த்ரப் பத்திரிகையினால், தமிழ் நாட்டாருக்கு மிகப்பெரிய பயன் விளையுமென்பதில் சந்தேகமில்லை.

பரிபாஷை சேகரிக்க ஓருபாயம்
ஸ்ரீீகாசியிலே, ‘நாகரி ப்ரசாரிணி சபையார்’ ஐரோப்பிய ஸங்கேதங்களை யெல்லாம் எளிய ஸம்ஸ்கிருத பதங்களில் போட்டு, மிகப் பெரியதோர் அகராதி உண்டாக்கி வருகிறார்கள். அந்தச் சொற்களை வேண்டியவரை, இயன்றவரை, தேச பாஷைகள்எல்லாவற்றிலும் ஏககாலத்தில் கைக்கொண்டு வழங்கலாம். ஐரோப்பாவில் எல்லா பாஷைகளும் இவ்விதமாகவே லத்தீன், யவன பரிபாஷைகளைக் கைக்கொண்டிருக்கின்றன. இவ்வாறு செய்வதால் நமது தேச பாஷைகளில் ஸங்கேத ஒற்றுமை யேற்படும். அதனால் சாஸ்த்ரப் பயிர் தேச முழுவதிலும் வளர்ந்தோங்கி வருதல் எளிதாகும்.