எழுத்துக்குத் தடை

“Writer’s Block” என்று சொல்வார்கள். தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் ஒர் எழுத்தாளருக்கு எதுவுமே எழுதத் தோன்றாமல் இருக்கும் ஒரு phase-ஐ அப்படி சொல்வார்கள். கற்பனை சரிவர எழாது. “rhythm”ஐ இழந்து போயிருப்பார். சொந்த வாழ்க்கை ஏற்பட்ட சில துயர சம்பவங்களாலோ, துக்க நிகழ்வுகளாலோ எழுத்தாளருக்கு இப்படியொரு “block” ஏற்படக்கூடும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.

ஆகஸ்டு 16க்குப் பிறகு ஒன்றும் எழுதவில்லை. ஒரு வரி கூட. அலுவலகத்தின் வேலைப் பளுவோ, அலுவல்கள் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களோ, அலுவலகம் இடம் மாறிய பிறகு தினமும் இரண்டு மணி நேரம் காலை – மாலை பயணம் செய்ய வேண்டியிருப்பதால் ஏற்பட்ட உடற் களைப்போ…..எது காரணம் என்பது புரியவில்லை?

எழுதத் தொடங்கு முன்னர் எனக்கு கணினி திரை அவசியம். எல்லாருக்கும் தான் இது அவசியம். இக்காலத்தில் யார் பேனாவை எடுத்து தாளில் எழுதுகிறார்கள்? எல்லோருமே நேராக கணினியில் தட்டச்சு தானே செய்கிறார்கள் என்று ஒருவர் கேட்கலாம். உண்மை தான். நான் அதை சொல்ல வரவில்லை. ஒரு கரு சிந்தனையில் தோன்றுகிறது. அதை மனதிலேயே வார்த்தைகளைப் போட்டு முழு வடிவம் தர முடிவதில்லை. ஒரு கணினி முன்னால் உட்கார்ந்து தட்டச்சு செய்ய ஆரம்பிக்கும் போது தான் சரியான வார்த்தைகள் வந்து விழ, சிந்தனையில் உருவான கருவும் வளர்ந்து கவிதையாகவோ கதையாகவோ அல்லது கட்டுரையாகவோ வடிவம் கொள்கிறது.

கணினி இல்லையென்றால் என்னாகும்? காகிதத்தை வைத்துக் கொண்டு எழுத உட்கார “மூட்” வருவதில்லை. அலங்காரமில்லாமல் சொல்வதானால், சோம்பேறித் தனத்தை உதறி எழுத ஆரம்பிக்க முடிவதில்லை என்பதே உண்மை. அப்படியே எழுத ஆரம்பித்தாலும் கோழிக் கிறுக்கலாகப் போய் விட்ட என் கையெழுத்தைப் பார்க்கும் போது எனக்கே அவமானமாக இருக்கும். கையால் எழுதியவற்றை பின்னர் தட்டச்சு செய்யும் போது என்ன எழுதியிருக்கிறோம் என்று தடுமாறி விழிக்கும் பிரச்னை வேறு. “என்னப்பா…இவ்ளோ அசிங்கமா இருக்கு உன் கையெழுத்து” என்று என் மூத்த மகள் வேறு கேள்வி கேட்பாள். “இல்லேடா கண்ணு….அப்பா ஆஃபீஸில் பல வருஷங்களா கம்ப்யூட்டர்லயே வேலை பண்றதால கையில் எழுதி பழக்கமில்லாம போயிடுச்சு…சின்ன வயசுல என் கையெழுத்து மணி மணியா இருக்கும்” என்று மொட்டைக் காரணத்தோடு ஒரு பொய்யையும் சேர்த்து சொல்லி தப்பிக்கப் பார்ப்பேன்.

இதில் இன்னொரு விஷயத்தையும் நான் கவனித்திருக்கிறேன். இரண்டு வரிகள் தமிழில் எழுதியவுடன் கை வலிக்க துவங்கிவிடும். என்னுடைய நண்பன் ஒருவன் ஒரு விசித்திரமான ஆலோசனை வழங்கினான். ஆங்கிலத்தில் எழுதினால் கை வலி குறைவாக இருக்கும் என்று. இது எத்தனை தூரம் உண்மை என்று எனக்கு தெரியாது.

ரீடிங் ரூமில் இருக்கும் கணினி திரையில் ஏதோ கோளாறு. குழந்தைகள் இப்போதெல்லாம் ஐ-பேட்-ல் பிசியாக இருப்பதால் கணினி பக்கம் வருவதில்லை. எனவே அவர்களால் இந்தப் பழுது ஏற்பட்டிருக்க சாத்தியமில்லை. மூன்று வாரங்களாக கம்ப்யூட்டர் டெக்னீஷியனை கூப்பிட்டு சரி செய்ய வேண்டும் என்று பார்க்கிறேன். ஆனால் தள்ளிக் கொண்டே போகிறது.

ஆகஸ்ட் 16க்கு பிறகு ஏற்பட்ட இந்த எழுத்து இடைவெளி “writer’s block” ஆக இருக்கலாமோ என்ற ஐயம் அவ்வப்போது தோன்றி என்னை மகிழ்ச்சிப் படுத்திக் கொண்டிருந்தது. எழுத்தாளர்களுக்கு தான் block வரும் எனில் நான் எழுத்தாளன் ஆகி விட்டேன் என்று தானே பொருள்.

ஒரு நாள் மாலை வீடு திரும்பிய போது என் இளைய மகள் (ஏழு வயதாகிறது !) ஸ்டைலாக உட்கார்ந்து கணினியில் கேம் விளையாடிக் கொண்டிருந்தாள். “அம்மா கம்ப்யூட்டர் காரனை கூப்பிட்டாளா” என்று கேட்டேன். “அதெல்லாம் எதுக்கு…ஸ்க்ரீன் chord லூஸா இருந்தது…அதை நானே சரியா மாட்டி விட்டுட்டேன்” என்று சாதாரணமாக சொன்ன படி கணினித் திரைக்குள் மின்னல் வேகமாக மதில் சுவரில் ஓடிக்கொண்டே இருந்தவனை ஒரு லாங்-ஜம்ப் செய்ய வைத்து குழியில் விழ வைத்து சாகடித்தாள் (கம்ப்யூட்டர் கேமில் அய்யா!). ஐ-பேட்-டின் சார்ஜர் தொலைந்த வேளையில் என் குழந்தைகளின் கவனம் கணினியில் பட அது உயிர் பெற்று விட்டது.

இந்தப் பகிர்வு மொக்கையான (’தட்டையான’ – இலக்கியச் சிற்றிதழ் படிக்கும் பழக்கம் உள்ளவருக்கு) வாசிப்பனுபவத்தை தந்தால் மிகவும் மெதுவாக விலகிக் கொண்டிருக்கும் என்னுடைய writer’s block ஐத் தான் குற்றம் சொல்ல வேண்டும். இதை வாசித்து மிகவும் சலித்துப் போனவர்கள், இடுகைக்கு தரப்பட்டிருக்கும் தலைப்போடு “வேண்டும்” என்ற சொல்லையும் சேர்த்து மறு தலைப்பிட்டுக் கொள்ளலாம்.

எனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்

Image

(தில்லிகை இலக்கிய வட்டத்தில் 11.8.2012 அன்று ஆற்றிய உரை)

எல்லோருக்கும் வணக்கம். நான் மேடையேறிப் பேசுவது இதுதான் முதல் முறை. நெஞ்சுக்குள் நடுக்கம். கொஞ்சம் பதற்றம். நாக்கு குழறலாம். உச்சரிப்பு குளறுபடியாகலாம். வானிலை அறிக்கை வாசிப்பது மாதிரி உன் மனதின் கால நிலை பற்றி எங்களுக்கு ஏன் சொல்லுகிறாய் என்று யாரும் எழுந்து என்னைக் கேட்பதற்கு முன்னால், நான்கு வரி பாரதி கவிதையை சொல்லி விட்டு என் உரையை ஆரம்பித்து விடுகிறேன்.

”பயமெனும் பேய் தனை அடித்தோம் – பொய்மைப்

பாம்பைப் பிளந்துயிரை குடித்தோம்

வியனுலகனைத்தும் அமுதென நுகரும்

வேத வாழ்வினைக் கைப்பிடித்தோம்”

அசோகமித்திரன் எழுதும் கதைகளில் வரும் மாந்தர்கள் நாம் தினசரி வாழ்க்கையில் சந்திப்பவர்கள். சாதாரணத்துவத்தை எழுதிக் கொண்டே இருத்தல் குறித்த அவஸ்தைகளை புட்டுபுட்டு வைக்கும் எழுத்து அசோகமித்திரனின் எழுத்து.

எளிய சொற்கள் ; அலங்காரங்கள் இல்லாத நடை ; சாதாரண மனிதர்களே பாத்திரங்கள். சிக்கனமான வாக்கியங்கள் ; தேவைக்கு அதிகமாக ஒரு வாக்கியத்தையும் கதைகளில் பயன் படுத்தாதிருத்தல் ; தோலைச் சீவி உட்பொருளை அருகிருந்து உற்று நோக்கும் அணுகுமுறை. இவை அசோகமித்திரனுடைய சிறுகதையின் அம்சங்கள்.

அவருடைய கதைகள் வாழ்க்கையின் சுவையற்ற தன்மையை விவரித்தாலும்,  தினசரி தவிப்புகளைத் தாண்டிய, அதை விடப் பெரிதான ஏதொவொன்றை நுட்பமாக புலப்படுத்துபவை. அன்றாட கவலைகளை பேசிக்கொண்டே மானுடத்தின் உயர் உணர்வுகளை தொட்டுச் செல்பவை.

“கண்கள்” என்றொரு சிறு கதை. முதன்முதலாக கண்ணாடி அணிந்து சாலையில் செல்லும் ஒருவனின் சில நிமிட அனுபவங்களை சொற் சித்திரமாக தீட்டியிருப்பார் ஆசிரியர்.

“ஒரு சிலரை நேருக்குநேர் பார்த்துவிட்டால் உடனே தான் அவர்களுக்குக் கடமைப்பட்டவன் போன்ற உணர்வு வந்துவிடுகிறது.” என்று ஒரு வரி வரும். இவ்வரியை படிக்கும் போது தொடர்ந்து வாசிக்காமல் அந்த வரியையே அசை போட்டுக் கொண்டிருப்போம். சரி, இவ்வரியை அப்புறம் மேலும் யோசிக்கலாம் என்று முடிவெடுத்து கதையைத் தொடர்வோம். அதற்கடுத்து வரும் வரிகள் : “அது அந்த மனிதனுக்கும் தெரிந்துவிடுகிறது. பிச்சைக்காரர்கள் உயிர் பிழைத்திருப்பதற்கு இது ஒரு காரணமோ?”

இப்படி வாசிப்பை தடுத்து நிறுத்தி சிந்தனையை முடுக்கும் வரிகளை தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தால் எப்போது கதையை படித்து முடிப்பது? கதையில் தொடர்ந்து பல வரிகள் நம் மனதில் புகுந்து எண்ணவோட்டத்தை ஆக்கிரமிக்கும்.

சினிமாக் கொட்டகை வாசலில் அமர்ந்து பிச்சையெடுக்கும் ஒர் அம்மாளைப் பற்றி வரும். கண்களில் சதை வளர்ந்து அவள் கண் குருடாகும் நிலையில் பிச்ச்சையெடுத்துக் கொண்டிருப்பாள். அதே பிச்சைக்காரி இரவில் நடைபாதையில் தூங்குவாள். சுற்றிலும் பூரான், சுண்டெலி என்று ஜந்துக்கள் அலைந்து கொண்டிருக்கும். இவற்றை வருணித்துக் கொண்டே “சிறு தூறல் போட்டால்கூட ஒதுங்க இடம் தேட வேண்டும். கடைகளுக்கு முன்னால் வழக்கமாகத் தூங்குகிறவர்கள் இருப்பார்கள். புது ஆளுக்கு இடம் கிடைக்காது.” என்று சுருக்கமாக சொல்லி நம் மனசாட்சியை சுருக்கென குத்தி விட்டு கதை நகரும்.

கதையில் எழுத்தாளர் பயன்படுத்தும் சில சொற்பிரயோகங்கள் மிகச் சுவையாக இருக்கும். அவற்றில் இரண்டை இங்கே பகிர்கிறேன்.

”ஏகப்பட்ட நசுங்கல்கள் கொண்ட ஒரு சிறிய அலுமினியத் தட்டு அவளருகில் இருக்கும்”

”குடுகுடுப்பைக்காரர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போது ஏதோ சங்கேத மொழி போல இருக்கிறது”

 உண்மையில் சொல்லப் போனால் கதையில் வரும் எல்லா வரிகளையுமே இவ்வுரையில் மேற்கொளாய் சொல்ல வேண்டும்.

பழைய பிளேடுகளை பிச்சை கேட்கும் ஒரு குடுகுடுப்பைக் காரர் கதையில் வருவார். கம்பீரமான காஸ்ட்யூம் அணிந்து பார்ப்பவரின் கவனத்தை கவரத் தக்கவராக வலம் வரும் குடுகுடுப்பைக் காரரை யாரும் முக்கியமான ஆளாக கருதுவதில்லை. அவர் நல்ல நல்ல விசேஷமான வாழ்த்துச் செய்திகள் கூறினாலும் கூட பழைய பிளேடு தவிர அவருக்கு கிடைக்கக் கூடியதொன்றுமில்லை.

முச்சந்தி சாலைக்கு நடுவில் கண்ணாடி அணிந்தவனைக் கொண்டு போவார் ஆசிரியர். ஒரு தொலைக்காட்சி காமிரா தோற்கும் வகையில் நாற்புற காட்சிகளை தெளிவுற சொற்களால் படம் பிடித்து நம் கண் முன் கொண்டுவருவார். டிராபிக் விளக்குகள், ட்ராபிக் கான்ஸ்டபிள்கள், அதிரடியாக சாலையைக் கடப்பவர்கள் என்று துல்லியமான காட்சி வர்ணனை.

”சாலைக் கடப்பு நிபுணர்கள்” என்று ஒரு சொற்றொடர் வரும். இவர்கள் வேறு யாரும் அல்லர் ; தைரியமாக மயிரிழை வித்தியாசத்தில் விபத்துகளை தவிர்த்து சாலையைக் கடந்து செல்பவர்கள். இத்தகைய ஒரு நிபுணரின் அருகில் சென்று அவருக்குப் பின்னால் நின்று அவரை அடிக்கு அடி சரிவர பின் தொடர்ந்தால் சாலையை எளிதில் கடந்து விடலாம் என்று அவரின் பின்னால் பச்சை விளக்கு விழுவதற்காக காத்திருக்கிறான்.

அங்கே ஒர் இனிமையான பாத்திரம் நமக்கு அறிமுகப் படுத்தப் படுகிறது. “ஈர்க்குச்சி நுனியில் பஞ்சைச் சுற்றிய பிரஷ்” அதாவது “பட்ஸ்” விற்கும் ஒரு நோஞ்சான் பெண் பதற்றம் மிகு ட்ராபிக் சிக்னலில் இவனை சந்திக்கிறாள். “வாங்கிக்கோங்க” என்றவாறு இவன் பின்னே நிற்கிறாள். இவன் வேண்டாம் என்று சொல்கிறான். அவள் மேலும் இவனை மன்றாடுகிறாள். அன்று ஒன்று கூட விற்கவில்லை என்று ஆதங்கப் படுகிறாள். இவன் அவளிடம் ஒரு பத்து ரூபாயைக் கொடுத்து, “பட்ஸ் வேண்டாம் ; பத்து ரூபாய் வச்சுக்க” என்று சொல்லி சாலைக் கடப்பு நிபுணரின் பின் செல்ல யத்தனிக்கிறான். பச்சை விளக்கு விழுந்து விட்டது. அவளோ அவன் பின்னே தொடர்ந்து வருகிறாள். கிட்டத்தட்ட நடுசாலையில் அவனை நிறுத்தி “இதை வைச்சுக்க, சார். கார் எல்லாம் ரொம்ப நல்லாத் துடைக்கும்.” என்று சொல்லி ஒரு மஞ்சள் துணியை தருகிறாள்.  இவன் என்னிடம் கார் இல்லை ; சைக்கிள் கூட இல்லை என்றவாறே மஞ்சள் துணியை அவளிடம் திருப்பித் தர முயல்கிறான். “கண்ணாடியைத் துடைக்க வச்சுக்குங்க” என்று சொல்லிக் கொண்டு ஒரு மோட்டார் வண்டிக்காரருக்கு “பட்ஸ்” விற்க சென்று விடுகிறாள். அவன் அந்த மஞ்சள் துணியை எப்படிப் பயன்படுத்துவது என்று யோசித்துக் கொண்டே சாலையில் நின்று கொண்டிருப்பது போல கதை முடிவடைகிறது.

படித்து வெகு நேரம் பின்னும் இக்கதை நம்முடன் பேசுகிறது. சமூகத்தின் apathy-யை விளிம்பு நிலை மக்களின் மேலுள்ள அக்கறையின்மையை இதை விட அழகாக சொல்லமுடியாது என்றே படுகிறது ! நம் பார்வையை துடைக்க நம் எல்லாருக்குமே ஒரு மஞ்சள் துணி தேவைப்படுகிறது என்று சொல்லாமல் சொல்லிவிடுகிறது “கண்கள்” சிறுகதை.

இரண்டாவதாக நாம் பேசப்போவது “அவனுக்கு மிகப் பிடித்தமான நக்ஷத்ரம்” என்ற சிறுகதை. 1956 இல் தீபம் இதழில் வெளியானது. எளிமையான கதை. நெஞ்சை பிழியும் கதை. அற்ப விஷயங்களில் இருக்கும் ஈடுபாடு, அதன் பொருட்டு பிறரை மன்னிக்க முடியா மனப்பான்மை – இவ்விரண்டும் ஏற்படுத்தும் எதிர்பாரா விளைவுகளை நெகிழ்ச்சியுடன் சொல்லும் இக்கதை.  

வீடு மாறி செய்திதாள்கள் போடப்படுவது சாதாரணமாக நிகழக்கூடியது தான். அதை வாசிப்பவருக்கு அது நம் வீட்டுக்கு போடப்படவேண்டிய செய்தித்தாள் இல்லை என்று தெரியும். இருந்தாலும், அதை புரட்டி பார்க்காமல் இருப்பதில்லை. இது மாதிரி தான் நிகழ்கிறது இக்கதையில். தவறுதலாக போடப்பட்ட செய்தித்தாளை வாசிக்கிறார் ராமசாமி அய்யர். அந்நேரம் புளி விற்கிறவன் வருகிறான். ஆறு வீசை புளியை வாங்கி செய்தித்தாளில் வைத்து வீட்டுக்குள் எடுத்து போகிறார். இதனால் செயதித்தாளில் புளி படிந்து லேசாக சேதமாகிவிடுகிறது. அந்த செய்தித்தாள் பக்கத்து வீட்டு இளைஞன் ஸ்ரீராமுடையது என்று தெரிந்தவுடன் இயன்ற வரை புளியை தட்டி பேப்பரை கொடுக்கிறார். முதல் பக்கத்தில் பிரபலமான தென்னிந்திய நடிகையின் முழு உருவப் படம் வந்திருக்கிறது. நடிகையின் படமெங்கும் புளியின் கறை. அழகியின் முகம் அலங்கோலமாகியிருந்தது. ஸ்ரீராம் கோபமுற்று ராமசாமி அய்யரிடம் சண்டை போடுகிறான். வாக்கு வாதம் ஏற்படுகிறது.

 இரண்டு நாட்கள் கழித்து ராமசாமி அய்யர் வேப்ப இலைகளை எடுத்துப்போவதை ஸ்ரீராம் பார்க்கிறான். ராமசாமி அய்யரின் மகனுக்கு அம்மை போட்டிருப்பதை ஸ்ரீராமின் அம்மா அவனிடம் சொல்கிறாள். வேலைவாய்ப்பு அலுவலகம், நூலகம், சினிமா – இங்கெல்லாம் ஸ்ரீராமுக்கு அன்று போக வேண்டியிருந்தது. அங்கெல்லாம் போவதற்கு முன்னால் சுகாதார இலாகாவுக்கு ஒரு மொட்டை கடிதம் எழுதி தபால் பெட்டியில் போடுகிறான். மாலையில் திரும்பி வருகிற ஸ்ரீராமுக்கு அதிகாரிகள் வந்து ராமசாமி அய்யரின் மகனை சுகாதார விதிகளின் படி வீட்டிலிருந்து எடுத்து போனதை பற்றி அவன் அம்மாவிடமிருந்து தெரிய வருகிறது. ராம சாமி அய்யர் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்து மகனை தேடி செல்கிறார். எவ்வளவு வேண்டியும் அதிகாரிகள் குழந்தையை வீட்டுக்கு எடுத்து போக முடியாது என்று மறுத்து விடுகின்றனர்.

 ஸ்ரீராமின் குற்றவுணர்வை மிக அழகாக இவ்விதம் பதிவு செய்கிறார் அசோகமித்திரன் :-

 “ஸ்ரீராமால் நிலை கொண்டு இருக்க முடியவில்லை. சாப்பாட்டை ருசித்து உண்ண முடியவில்லை. வீட்டு வெளிச்சுவர் அருகே நின்றுகொண்டு தெருவில் வருவோர் போவோரைப் பார்த்துக் கொண்டிருந்தான். மணி பத்துக்கும் மேலாகிவிட்டது. ஊரோசை அடங்கத் தொடங்கிவிட்டது. ரயில் நிலையம் அவன் வீட்டிலிருந்து அரைமைல் தூரத்தில் இருந்தது. அங்கு வண்டிகள் வந்து போகும் ஊங்கார சப்தம், லெவல் கிராஸிங்கில் அடிக்கும் மணியின் சப்தம், சக்கரங்கள் இருப்புப் பாதையில் உருளும் சப்தம், இவை எல்லாவற்றையும் ஸ்ரீராமால் மிகத் தெளிவாகக் கேட்க முடிந்தது. தன்னைச் சுற்றி ஊர் அடங்கி ஒடுங்கிப் போவதை அவன் அதற்கு முன்னால் உணர்ந்து கவனித்தது கிடையாது. வைத்தியக் கல்லூரியில் படிக்கும் அந்தக் கோடிவீட்டுப் பையனும் விளக்கை அணைத்து விட்டான். தெருவின் இரண்டு வரிசை வீடுகளும் கருத்த நிழல்களாகக் காணப்பட்டன. ஸ்ரீராமின் கண்கள் கனத்தன. அவன் படுக்கையில் சாய்ந்தான். அவனால் தூங்க முடியவில்லை. அவன் மறுபடியும் தெருவுக்கு வந்தான். அவன் வேஷ்டி மட்டும் அணிந்திருந்தான். அந்த வேளையில் எல்லாம் இருட்டாக இருந்தது. எல்லாரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவன் தன்னந்தனியாகத் தெருவில் காத்திருந்தான்.”

கதையில் அந்த குழந்தை வீடு திரும்பாமலேயே இறந்து விடுகிறது..

ஒரு மாதம் கழித்து கனமான மனதோடு ராமசாமி அய்யர் வீட்டுக்கு செல்கிறான். குழந்தையின் சுகமின்மையைப் பற்றி சுகாதார அதிகாரிகளுக்கு தெரியப் படுத்தியது தான்தான் என்று தெரிவிக்கிறான். ராமசாமி அய்யர் அதற்கு அமைதியாக தன் மனைவியை அழைத்து ஸ்ரீராமிடம்“இவளிடம் சொல்லு” என்கிறார். தான் செய்த தவறை ராமசாமி அய்யரின் மனைவியிடம் ஸ்ரீராம் சொல்கிறான். அவள் தன்னை கொடூரமாக சாபமிடப்போகிறாள் என்று எண்ணிக்கொண்டிருந்த ஸ்ரீராமிடம் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக நிற்கிறாள்.

ஸ்ரீராம் என்ற இளைஞனின் பாத்திரம் மிக இயல்பாகப் படைக்கப் பட்டிருக்கிறது இள ரத்தத்துக்குரிய கோபம், கோபத்தை செயலில் காட்டிவிடும் அசட்டு தைரியம்…..விளைவு வேறு மாதிரியானவுடன் ஸ்ரீராமின் மனதில் தோன்றும் அளவுக்கு மீறிய அமைதியின்மை….அமைதியின்மை மெதுவாக குற்றவுணர்வாக மாறும் இடங்கள்….கடைசியில் உண்மையை ஒப்புக்கொள்ளும் மன திடம்…..அசட்டு இளைஞன் பக்குவமான மனிதனாக transform ஆவதை உருக்கமாக சொல்கிறது இக்கதை.

மூன்றாவது சிறுகதை பற்றி பேசுவோம். குடும்பத்தில் யாராவது ஒருவர் – மனைவியோ, குழந்தைகளோ – நம்முடன் பேசுவதை நிறுத்திக் கொண்டால் நமக்கு எப்படி இருக்கும்? மனைவிகள் கோபத்தைக் காட்டும் போது மவுனத்தை ஆயுதமாக பயன் படுத்துவதை நாமெல்லோரும் கண்கூடாகப் பார்த்து வந்திருக்கிறோம். சில மணி நேரங்களுக்குள் அது சரியாகி விடும் என்ற நம்பிக்கை இருக்கும் வரை நாமும் ரிலாக்ஸ்டாக இருப்போம். மவுனம் சில நாட்களுக்கு தொடருமானால், நாம் கவலையுறுவோம். மவுனத்தோடு புறக்கணிப்பும் சேர்ந்து கொண்டால்….என்ன செய்வது? எப்படி இதனை கையாளப் போகிறோம் என்ற பயம் ஏற்பட்டு, வன்மம், வன்முறை என்று உருமாறும் சாத்தியக்கூறு இருக்கிறது.

அசோகமித்திரனின் “கணவன், மகள், மகன்” என்ற சிறுகதையில் வரும் மங்களம் என்ற பாத்திரம் அப்படியல்ல. குடும்பத்தினரின் எல்லா உதாசீனங்களையும் தாங்கிக் கொண்டு ”ஆயுட்காலப் பழக்க தோஷமாக”  தனிமையிலும் துக்கத்திலும் காலத்தை கடத்தும். அவளை சுற்றி நிகழ்வது என்ன என்பது அவளுக்கு புரிவதேயில்லை. யாரும் அவளுக்கு சொல்வதும் இல்லை. அவள் கணவன் ”தங்கமான மனிதன்” என்று பெயரெடுத்தவர். குடும்பத்துடனும், மங்களத்திடமும் பாசமாக இருந்தவர் தான். அவர் இன்னொரு குடும்பத்திடமும் பாசமாக இருந்திருந்தது அவளுக்கு அவர் காணாமல் போன பிறகு தான் தெரிய வருகிறது.

இவ்வாறு ஒரு பத்தி வரும் : “மங்களத்திற்கு ஒவ்வொரு கட்டத்திலும் புதிராக இருந்தது. அவள் இவ்வளவு நாட்கள் எந்த மனிதனோடு வாழ்க்கை நடத்தினாள் ? இருபத்தைந்து ஆண்டுகள் கூடவே இருந்தும் கூட அவளறியாத ரகசியங்கள் இவ்வளவு அவனிடமிருந்ததா ? அவன் மறைத்தானா அல்லது அவள் தான் ஒரேயடியாகக் கண்ணை மூடிக் கொண்டு இருந்து விட்டாளா ? இவ்வளவு குருடாக இருந்தவளால் கணவன் மீது பிடிப்பு வைத்திருக்க முடியுமா ? அதனால் தான் அவன் ஓடிவிட்டானா ?”

கதையின் இன்னொரு பாத்திரமான மங்களத்தின் மகள் ஒரு நாள் வீட்டிலிருந்து வேலைக்கு செல்லுமுன் ”கைக்கு மோர் சாதம்” எடுத்து சென்றாள். அன்றுதான் அவளுக்கு கல்யாணம் நடந்ததாக மங்களம் கேள்விப்பட்டாள். மகளிடமே கேட்க மங்களத்துக்கு ஆசைதான். ஆனால் கேட்க வாயே வரவில்லை, மகளாவது சொல்லியிருக்கலாம். சொல்லவில்லை.

இக்கட்டத்தில் சிறுகதையில் வரும் வரிகள் இவை :

”பதினைந்து நாட்கள் கழித்து உமாவாகவே தனிக்குடித்தனம் போகப் போவதாகச் சொன்னபோதும் கேட்க முடியவில்லை. அவளுடைய மாப்பிள்ளை இளவயதுக்காரனா, வயதானவனா, சைவமா, அசைவமா என்று கூடக் கேட்க்கவில்லை. உமாவாகவும் அம்மாவுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்ததாக தோன்றவில்லை. வீட்டிலிருந்த பாத்திரங்களிலேயே சிலவற்றை அவள் எடுத்துப் போனாள். அவள் கல்யாணத்தை நினைத்து வாங்கி வைத்திருந்த வெள்ளிப் பாத்திரங்களில் குங்குமச் சிமிழ் ஒன்றுதான் மிஞ்சியிருந்தது. எவர்சில்வர் பாத்திரங்களில் நான்கைந்து இருந்தன. அவள் அம்மாவை மேற்கொண்டு சீர், வரிசை என்று கேட்கவில்லை. அவளுடைய கணவன், அவள் கல்யாணம் செய்து கொண்டது எதைப் பற்றியும் தனியாகச் சொல்லவும் இல்லை.”

மகன் பாத்திரம் கணவன், மகள் பாத்திரங்களை விட குரூரம். சுயநலத்தின் மொத்த உருவம். மகன் ராமு எங்கு போகிறான் என்று ஒரு நாளும் மங்களத்துக்கு சொல்வதில்லை. ஒரு நாள் இரவு முழுக்க அவன் வீடு திரும்பவில்லை. மங்களம் அவன் வாடிக்கையாக செல்லக் கூடிய இடங்களுக்கெல்லாம் தானே சென்று தேடினாள். ஆஃபீசிலிருந்து ஐந்து மணிக்கும் மனமகிழ்மன்றத்திலிருந்து எட்டு மணிக்கும் கிளம்பிவிட்டான். விடியற்காலை வரை கண்ணயராமல் காத்திருந்த அன்னையிடம் இரவு எங்கு சென்றிருந்தான் என்பதை ராமு சொல்லவேயில்லை.

குடிப்பழக்கத்துக்கு ஆளாகிய ராமுவின் ஈரல் பழுதுபட்டு அவன் மருத்துவமனையில் படுத்துக்கிடந்தபோதிலும் அவளால் “குடிக்காதேடா” என்று கூற முடியவில்லை.

மங்களத்தின் மனவோட்டத்தை அசோகமித்திரன் இவ்விதம் படம் பிடித்திருப்பார் :

“அவன் குடிப்பது அவளுக்கு தெரியும் என்ற நிலையை உண்டாக்க மனம் வேண்டவில்லை. அவளுக்குத் தன் மகனறிய அவனைக் குடிகாரன் என்று அவள் நினைப்பது கூடச் சாத்தியமாயில்லை. அவனும் அவள் அறியாதவள் என்றுதான் நினைக்க விரும்புவான். இவ்வளவு முற்றிப் போயும் தெரியாமல் இருக்குமா என்ற தோன்றாது. அவளுக்குத் தெரியாதது போல அவள் நடந்து கொள்ளவேண்டும்; அவளுக்குத் தெரியாது, அவளுக்கு தெரிவதை அவன் விரும்பவில்லை என்பது போல அவன் நடந்து கொள்ளவேண்டும்.”

புருஷனிடம் தான் இப்படி இருந்தாயிற்று. மகனிடமுமா என்று அவளுக்குத் துக்கம் பொங்கிக் கொண்டு வந்தது, ஆனால் அழ முடியவில்லை என்று கதை முடியும்.

மங்களம் என்கிற பாத்திரத்தின் உளவியல் சிக்கல்களை கருணையுடன் எழுத்தாளர் இழை பிரிக்கிறார். இவ்வுரைக்காக ஆய்வில் ஈடுபட்ட போது, இலங்கை கவிஞர் அனார் அவர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்தேன். அப்போது அனார் இக்கதையை பற்றி இவ்வாறு சொன்னார் “எளிமையான எழுத்து, ஆனால் வலிமையும் வலியும் நிறைந்த எழுத்து” என்று வர்ணித்தார். அது மிக apt ஆன comment என்று நினைக்கிறேன்.

இக்கதையின் மங்களம் பாத்திரத்துக்கு பொருத்தமான ஒரு கவிதையை தன் படைப்பிலிருந்து எடுத்து வாசித்துக் காட்டினார். அனார் எழுதிய ”இறுதி நிலைகள்” என்ற கவிதை இவ்வாறு செல்லும் :

சாமர்த்தியங்களுடன் வருவான்
நேர்மையுடன் வருவாள்
தந்திரங்களை வழங்குவான்
நம்பிக்கைகளை வழங்குவாள்
நிறங்களை மாற்றிக்கொண்டிருப்பான்
ஒளியினை அணிந்துகொண்டிருப்பாள்
தொடுவான்
உணர்வாள்
அவனுடையவைகள் சுயநலன்கள் சார்ந்தவை
அவளுடையவைகள் தியாகங்கள் சார்ந்தவை
நிரந்தரமற்ற திசைகளில் அவனது பயணங்கள்
அவளது இருப்பு ஊன்றப்பட்ட பாறை
விரைவில் உதிர்ந்துவிடுகின்ற காயங்கள் அவனுக்கு
வலியில் ஆழமாகின்ற காயங்கள் அவளுக்கு

நான்காவது ”எலி’ என்று ஒரு சிறுகதை. மிகவும் ரசனையாக எழுதப்பட்ட கதை. ஓர் எலியைக் கொல்வதற்காக ஒருவன், சூடாக அப்போதுதான் போடப்பட்டுக்கொண்டு இருக்கும் மசால் வடை ஒன்றை வாங்கிக்கொண்டு வருவான். ‘இதை நான் தின்பதற்காக வாங்குகிறேன் என்று இந்த கடைக்காரன் நினைத்துக் கொண்டிருக்கிறான். ஓர் எலியைக் கொல்வதற்காக வாங்கிப் போகிறேன் என்று தெரிந்தால் வருத்தப்படுவானோ?’ என்று அவன் மனசுக்குள் நினைத்துக் கொள்வான். எலிப்பொறியில் வடையைப் பொருத்தி வைத்துவிடுவான். மறுநாள் காலை எலி பொறிக்குள் சிக்கியிருக்கும். அதை எடுத்துக்கொண்டு போய் ஒரு மைதானத்தில் விடுவிப்பான். மைதானத்தில் தள்ளாடி அங்கும் இங்குமாய் ஓடும் எலியை ஒரு காகம் கொத்தி சாகடித்துவிடும். அதன்பின் அசோகமித்திரன் கடைசி வரியாக எழுதியிருந்ததுதான் ரொம்ப டச்சிங்! ‘அந்த வடை துளியும் தின்னப்படாமல் முழுசாக இருந்தது கண்டு அவன் மனம் கலங்கியது’ என்று எழுதியிருப்பார். சாகிற எலி கடைசி நேரத்தில் அந்த வடையைச் சுவைத்துவிட்டாவது சாகக் கூடாதோ! பாவம், அதற்குக் கொடுப்பினை அவ்வளவுதான்!

இவ்வுரைக்காக நான் தேர்ந்தெடுத்தவை இந்நான்கு சிறுகதைகள் தாம். இருந்தாலும் இன்னுமொரு கதை பற்றி சுருக்கமாக பேசி இவ்வுரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்.

எந்த கதைகளை பற்றி பேசுவது என்று என் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் “பிரயாணம்” என்ற சிறுகதை படித்திருக்கிறீர்களா? என்று கேட்டார். இல்லை என்று சொன்னேன். அப்படியென்றால் முதலில் அச்சிறுகதையை படியுங்கள்; அதைப் பற்றி எழுதுங்கள் ; பிறகு மற்ற கதை பற்றி எழுதுங்கள் என்றார். இணையத்தில் சிறுகதை படித்தேன். 1969-இல் எழுதப்பட்ட கதை அது. ஆரம்பத்தில் சொன்னேன் ; அசோகமித்திரனின் புனைவுலகம் சாதாரண மனிதர்களையும் சாதாரணத்துவத்தையும் கொண்டிருப்பது. “பிரயாணம்” சிறுகதை அப்படியில்லை. வாசித்து முடித்தவுடன்…..கதையின் கடைசி வாக்கியத்தை படித்தவுடன் ஒரு நீண்ட மௌனம். பிரமிப்பு. இதயத்துள் இச்சிறுகதை தந்த எழுச்சியை  வார்த்தையினால் விளக்க முடியாது. தமிழ்ப் படைப்பிலக்கியத்தின் உச்சத்தை தொட்ட கதை இது என்று பல இலக்கியவாதிகளால் போற்றப் படும் “பிரயாணம்” சிறுகதை என்னை கடும் மௌனத்தில் ஆழ்த்தியது. மனதை சிந்தனையில் தள்ளும் கதைகள் நல்ல கதைகள் என்று வகைப்படுத்தப் படுகின்றன. நீண்ட மௌனத்தில் தள்ளும் கதைகள் எந்த ரகத்தை சார்ந்தன? “மிக அசாதாரண மனிதர்களின் மிக அசாதாரண வாழ்க்கைக்கணங்களைச் சொல்லும் முக்கியமான கதை” என்று எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு முறை எழுதியிருந்தார்.

 “பிரயாணம்” சிறுகதை அம்ப்ரோஸ் பியர்ஸ் (Ambrose Bierce) என்ற அமெரிக்க எழுத்தாளரின் “தி போர்டட் விண்டோ” (The Boarded Window) சிறுகதையின் “காப்பி” என்று சொல்கிறார்கள். அசோகமித்ரன் காப்பி அடித்தாரா இல்லையா என்று நமக்கு தெரியாது. அவருக்கும் அதே கற்பனை வந்திருக்கலாம். இல்லை காப்பியே அடித்திருந்தாலும் ”மறு படைப்பு” என்று கருதத் தக்க சிறப்பம்சங்களை “பிரயாணம்” கதையில் சேர்த்திருக்கிறார் என்று சொல்கிறார்கள். நான் மூலக் கதையை படித்ததில்லை. எனவே, ஒரு வலைப்பதிவர் சொன்ன கருத்துகளை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். “இரண்டு கதைகளுக்கும் பெரும் இடைவெளி உள்ளது. ’பிரயாணத்தில்’ அசோகமித்ரன் கடந்திருக்கும் உயரம் அவ்வளவு எளிதில் மற்றவர்களால் எட்ட முடியாதது. பல தளங்களை சாதாரணமாகத் தாண்டிச் சென்றுள்ள கதை. பியர்சின் கதையில், முடிவு ஒரு அதிர்ச்சியான திருப்பம். அவ்வளவே. கதையில் திரும்பப் படிக்க ஒன்றுமில்லை. ’பிரயாணத்தின்’ முடிவு மனதை என்னவோ செய்து கொண்டேயிருக்கச் செய்வது. கதையைத் திரும்பத்திரும்பப் படிக்கத்தூண்டுவது.”

இம்மன்றத்தில் பேச வாய்ப்பளித்த தில்லிகைக்கு என்னுடைய உளமார்ந்த நன்றிகள். என்னுடைய பயத்தையும் நம்பிக்கையின்மையையும் காரணம் காட்டி தப்பிக்க நினைத்த என்னை, தப்பிக்க விடாமல் “உன்னால் முடியும் தம்பி தம்பி” என்று பாடாத குறையாய் என்னை ஊக்குவித்த தரன் அவர்களுக்கு  என் இதயங் கனிந்த நன்றிகள். பல்லை கடித்துக் கொண்டு அல்லது பல்லை கடிக்காமல் பொறுமையாக நான் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த உங்கள் எல்லோருக்கும் என் நன்றிகள்.

திணைப்பெயர்ச்சி – சுவாதி முகில்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரிலிருந்து வரும் சிற்றிதழ் ஒன்றில் வெளிவந்த கவிதையை தினமணி (5.8.2012) அன்று தமிழ் மணி பகுதியில் படித்தேன். என்னை மிகவும் கவர்ந்த கவிதை. கவிஞர் சுவாதி முகில் அவர்களின் சம்மதத்துடன் என் வலைப்பூவில் இடுகிறேன்.

திணைப்பெயர்ச்சி

டோல்கேட்..ஃப்ளை ஓவர்…

ஃபோர் லான்..சர்வீஸ் ரோட்…

மோட்டல்… பெட்ரோல் பங்க்…

என்று விரல் விட்டு

எண்ணிக்கொண்டே

வருகிறாள் ஹேமா

நெல்லு வயல்… வாழத்தோப்பு…

கம்மாயி…வெத்தலை கொடிக்கால்…

செவ்வந்தித் தோட்டம், கமலைக்கிணறு…

என்று சிறு வயதில்

என் விரல் வழி எண்ணிக்கையில்

கடந்து சென்ற

அதே சாலைவழி பயணத்தில்…

எஞ்சியவை – ந பெரியசாமி

நண்பர் பெரியசாமி சமீபத்தில் எழுதிய ஒரு கவிதையை முகநூலில் பங்கிட்டிருந்தார். மிக அழகான ஒரு கவிதை. படித்துப் பாருங்களேன்.

எஞ்சியவை

பிளந்த மாதுளையிலிருந்து
உதிர்ந்தன சிவந்த கண்ணீர் துளிகள்
எறும்பு ஒன்று
ஒரு துளியை இழுத்துச்செல்ல
மீந்ததை பங்கிட்டனர் மகன்கள்
எதிர் இல்ல யுவதி
பிணி நீக்க
எடுத்துச் சென்றாள் தொலிகளை
கழுவத் துவங்கினேன்
கையிலிருந்த பிசுபிசுப்பை…

 

தவளைக்கு சிக்கிய மீன் – ந பெரியசாமி

ஹோசூரில் வசிக்கும் கவிஞர் ந பெரியசாமி – என் நண்பரும் கூட – பரவலாக பல இணைய இதழ்களில் கவிதைகள் எழுதி வருகிறார், நவீன விருட்சம், பண்புடன், வல்லினம், திண்ணை – முக்கியமான எல்லா இதழ்களிலும் இவரது படைப்புகள் வந்திருக்கின்றன. அவர் எழுதியவற்றில் என்னை மிகவும் கவர்ந்த இரு கவிதைகளை கீழே பதிவிடுகின்றேன். பெரியசாமியின் வலைதள சுட்டி : http :// naperiyasamy.blogspot.com

தவளைக்கு சிக்கிய மீன்

குளக்கரையிலிருந்து தவளை
நீர் அதிர
சிரித்தது சிக்கிய மீன்
எனை பிடித்தென் செய்வாய்?
ஏளனம் தரையில் வழிந்தது
மனித வசிப்பிட சிறையிலடைப்பேன்
அங்கு உன் பெயர் தொட்டிமீன்
சிறார்கள் உணவிடுவார்கள்
தாளில்
பிறப்பித்த மீனை
துணைக்கு மிதக்கச் செய்வர்
கழிவில் கசடான நீரை
மறவாது மாற்றம் செய்வர்
உனது வளர்ச்சிக்கு உண்டங்கு ஊசி
பெருமையின் அடையாளமாவாய்
வந்துபோவோரெல்லாம் வேடிக்கையில் மகிழ்வர்
ஒளிரூட்டி கதகதப்பாக்குவார்கள்
ஒத்துப்போக ஓடித்திரியலாம்
முரண்கொள்ள செத்து மிதப்பாய்
வீசி எறிய வேரொன்று இடம் நிரப்பும்
என்றாவது விடுவிக்கவும்படலாம்
வதை என்பதறியும் சிசு அவதரிக்க…

கசப்பு

சோம்பிக் கிடந்த குழாயிலிருந்து
மழையை வரவழைத்துக்
கழுவிய இரு பாகற்காயை
துண்டாடினேன்
அலுப்பூட்ட விரும்பவில்லை
பொன்நிறமாகிட
வதக்கினேன்
சுவையறிய சிறுதுண்டை
நாக்கிலிட்டேன்
ஊறி ஊறி வழிந்த எச்சில்கள்
உடலுள் வளர்த்தது
ஒரு வேப்பமரத்தை

காலைத் தேனீர் – கவிஞர் றியாஸ் குரானா

நண்பர் றியாஸ் குரானாவின் கவிதைகள் ஒவ்வொரு வாசிப்பிலும் ஒவ்வொரு அர்த்த தளத்திற்கு இட்டுச்செல்லும் வல்லமை பொருந்தியவை. சமீபத்தில் அவருடைய வலைதளத்தில் (http : maatrupirathi.blogspot.com) கீழ்க்கண்ட கவிதையை படித்து மிகவும் ரசித்தேன். 

காலைத் தேனீர்

றியாஸ் குரானா

காலாவதியாகிப்போன நாளொன்றின்
காலைப் பொழுதிற்காக
காத்திருக்கிறேன்.

கடந்தது மீள வராது

ஆயினும்
நான் சந்தித்தேயாக வேண்டும்

அந்திப் பொழுதிலிருந்து
பின்நோக்கி நடக்கிறேன்

அல்லது சிந்திக்கிறேன்

கொஞ்ச நேரம்
எதுவும் தெரியவேயில்லை

அது எனது பகல் தூக்கம்

பின்னோக்கி வருவதுபோல்
பாவனை செய்தபோதும்
திடுக்கிட்டு எழுந்துவிட்டேன்

;காரணம்

கனவில் அவள் தந்த கடிதத்தை
வாங்கிச் செல்கிறாள்

அதுபோல இருந்தது

அதுதான் நிகழ்ந்தது

பின்னோக்கி வரும்போது
தந்தது வாங்கியதாக மாறிவிடும் அல்லவா

மன்னியுங்கள்
மீண்டும் சிந்திக்கலாம்

உச்சி வெயில்

சூட்டை அதிகரிக்கும்
ஆடைகளை உடுத்துகிறேன்

நிலத்தினுள் இறங்கிவிட்ட,
நான் குளித்த நீரையெல்லாம்
கிணற்றுக்குள் ஊற்றுகிறேன்

தலைமயிர்களுக்குள் தங்கிய ஈரமும்
வடித்தெடுக்கப்படுகிறது

சந்தையிலிருந்த மிகவேகமாக
சைக்கிளை பின்நோக்கிச் செலுத்துகிறேன்

எல்லோரும் என்னை அதிசயமாகப் பார்த்தபடி
முன்னோக்கிச் சென்றுகொன்டிருக்கின்றனர்

ஏனெனில், அவர்கள்
கடந்துபோன காலைப்பொழுதை சந்திக்கும்
முயற்ச்சியில் இறங்கவில்லை

முதல்முறை சந்தைக்கு போகும்போது
நானும் அவனும்
அருகருகே பேசிக்கொண்டு போனோம்

இப்போது நாங்கள் தனியே பேசிக்கொண்டு
அவன் முன்னோக்கியும்
நான் பின்நோக்கியும் விரைகிறோம்

சரியாக வீட்டில் வந்து நின்றது

பறவைகளின் ஒலிகள்
வெளியில் பரபரப்பாக இருக்கின்றன

தற்போது காலைப்பொழுது

இனி முன்னோக்கிப் பயணிக்கலாம்

ஆவிபறக்க
தேனீர் அருந்திக் கொண்டிருக்கிறேன்

இந்தத் தேனீரைத்
தவறவிட்டதனால்,

ஒரு பகற்பொழுதை
முன்னோக்கியும் பின்னோக்கியும்
கடந்துசெல்ல வேண்டிவந்தது

இரண்டுமுறை.

நன்றி : றியாஸ் குரானா

சுட்டி : http://maatrupirathi.blogspot.in/2012/03/blog-post.html

அறை முழுதும் அரவங்கள்

சிறுவயதிலிருந்தே நாகசொப்பனம் கண்டு அச்சத்தில் பலமுறை தூக்கம் விழித்திருக்கிறேன். சிறுவயதில் பாம்புக்கனவு வந்து தூக்கத்தில் கத்தினால், என் தாய்க்கு பக்கத்தில் தூங்கக்கிடைக்கும். வாலிபனான பிறகுகூட பாம்புக்கனவுகள் தொடர்ந்தன. இளமையில் காம உணர்ச்சி மிகுந்திருப்பதால் பாம்புக்கனவு வரக்கூடும் என்று சொன்னார்கள். ஒரு ஜோசியன் ஏன் ஜாதகத்தை பார்த்துவிட்டு, "உங்கள் கண்ணுக்கு நாக தரிசனம் அடிக்கடி கிடைத்து கொண்டிருக்கும்" என்றார். அவை கனவு தரிசனங்களா ? அல்லது நிஜ தரிசனங்களா? என்று தெளிவு படுத்தவில்லை. திருமணமான பிறகும் பாம்புகள் கனவில் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. இப்போதெல்லாம் பாம்புகள் வருவது வெகுவாக குறைந்துவிட்டது.

சிறுவயதிலும் இளம் வயதிலும் பாம்புகள் கனவில் பயமுறுத்தும். ஆனால் பொதுவாக ஒற்றை பாம்பு தான் வரும். திருமணமான பிறகு வந்த கனவுகளில் பாம்புகள் ஏராளமாக வரும். நானிருக்கும் ஓர் அறையின் எல்லா அறைகலனிலும் ஒவ்வொரு பாம்பும் படமெடுத்து நிற்பது போன்ற கனவுகள். சாதுவாக படமெடுத்து நிற்கும். சாந்த சொருபமாக த்யானத்தில் ஈடுபடுபவை போல தோற்றமளிக்கும். அல்லது என் தூக்கத்தில் வரும் கனவுக்குள் நுழைந்து அவைகள் படமேடுத்தபடியே உறங்குகின்றனவோ? நான் பயத்தில் வியர்த்திருப்பேன். சப்தநாடியும் ஒடுங்கியிருக்கும். கனவிலிருந்து விடுபட்டவுடன், அந்த பாம்புகளின் சாந்தசொருபத்தை இன்னும் கொஞ்சநேரம் பார்த்திருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றும்.

இப்போதெல்லாம் பாம்புக்கனவுகள் அதிகமாக வருவதில்லை. கடைசியாக வந்த பாம்புக்கனவில், நான் பாம்புகளோடு பேசிக்கொண்டிருப்பது போல வந்தது.

உண்மையாக சொல்லப்போனால், பாம்பை அதன் இயற்கை சூழ்நிலையில் இதுவரை நான் பார்த்ததில்லை. பாம்புப்பண்ணைகளிலும், விலங்குகள் சரணாலயங்களிலும் தூர நின்று பார்த்திருக்கிறேன். இயற்கை சூழ்நிலையில் பார்த்தால் பயந்துபோவேன் என்றுதான் நினைக்கிறேன். இரவு நேரங்களில் கழிவறையில் சிறுநீரோ மலமோ கழிக்கும்போது "பாம்பு இந்த கழிவறையில் நுழைந்தால் என்ன செய்வது?" என்ற சிந்தனை தோன்றி என்னை சில்லிட வைக்கும். நேரிடையாக தோன்றாமல், நினைத்த மாத்திரத்தில் நெஞ்சில் பயமுட்ட வல்ல ஒரே ஜந்து பாம்புதானே!

சில வாரங்களுக்கு முன் தென்னிந்தியாவில் உள்ள சுற்றுலாத்தலமொன்றில் ஐந்து நட்சத்திர ஓட்டலோன்றில் காபி பருகிக்கொண்டிருந்தேன். எனக்கு பக்கத்து மேசையில் ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த இளம் தம்பதிகள் மற்றும் அவர்களின் நான்கு வயதான மகனுடன் அமர்ந்து உணவு உண்டுகொண்டிருந்தனர். மகன் மேசையைச்சுற்றி ஓடிக்கொண்டு விளையாட்டு காட்டிகொண்டிருந்தான். ஒரு சமயத்தில் கால் தடுக்கி விழப்போனபோது, அவனை தாங்கி நான் பிடித்தேன். பின்னர், நன்றியுணர்ச்சியுடன் என்னை அவர்களுடன் சேர்ந்தமர அழைத்தார்கள்.

ஜிம் வட ஆஸ்திரேலியாவில் உள்ள டார்வின் நகரை சேர்ந்தவர். ஜிம்மின் மனைவி – எலிசபெத்தும் டார்வின் நகரை சார்ந்தவர். அவர்களிருவரும் இரண்டு மாதங்களுக்கு முன்னர், அவர்கள் நடத்தும் நிறுவனத்தின் கிளையை இந்தியாவில் துவங்கும் நோக்கத்துடன் வந்தனர். இந்தியாவில் ஒரிரு வருடம் வசிக்கும் எண்ணமிருந்தது. சுற்றுலாத்தலத்தையொட்டிய சிறு நகரத்தில் சொகுசு பங்களாவொன்றை வாடகைக்கு எடுத்திருந்தனர்.

பங்களாவின் உரிமையாளர் அந்த வீட்டின் ஒரறையை மட்டும் பூட்டி வைத்திருந்தார். பழைய தட்டுமுட்டு சாமான்களும், பரம்பரை அறைகலன்களும் உள்ளேயிருந்தன. அறைகலன்களோடு குடியிருந்த பாம்புகளைப்பற்றி யாரும் அப்போது அறிந்திருக்கவில்லை. ஒரு நாள், சமையலறையில் தேநீர் தயாரிக்க வந்த ஜிம் கேஸ் அடுப்புக்கு கீழ் படுத்திருந்த பாம்பை பார்த்தார். தொலைக்காட்சியில் வரும் வனவிலங்குகள் பற்றிய நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் பார்க்கும் ஜிம் படுத்திருந்த பாம்பைக்கண்டு “த்ரில்” ஆனார். ஒரு குச்சியின் உதவியுடன், லாவகமாக பாம்பை எடுத்து, கொல்லைப்புறத்தில் உள்ள மதிலுக்கு வெளியே இருந்த வயல் பகுதிக்குள் எரிந்தார். கிட்டத்தட்ட இரு நாளைக்கு ஒருமுறை பாம்பை எடுத்து வெளியே எறியும் பயிற்சி நடந்தது. சில நாட்களுக்கு பிறகு, படுக்கையறையின் தரையில் ஒரு பாம்பு காணப்பட்டது. அப்பொது, ஜிம்மின் மகன் படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்தான். எலிசபெத் தோட்டக்காரனை அழைத்து, அந்த பாம்பை அப்புறப்படுத்தினாள்.

பாம்பின் வரவு பெருக ஆரம்பிக்கவே, ஜிம் வீட்டின் உரிமையாளரை அழைத்து பூட்டியிருந்த அறையை திறக்க வைத்தார். திறந்த அறைக்குள், அவர்கள் கண்ட காட்சி படு பயங்கரமாக இருந்ததாம்…..கிட்டத்தட்ட நாற்பது – ஐம்பது நாகங்கள் அந்த அறைக்குள் காணப்பட்டன. வீட்டுக்காரர் வாயடைத்துப்போனாராம்…..பல வருடங்களாக பூட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்த அந்த அறையின் ஃப்ளோரிங்கை மாற்றும் பேச்சு வந்த போதெல்லாம், கஞ்சத்தனப்பட்டு தட்டிக்கழித்து வந்தது மிகப்பெரும் தவறுதானென ஒப்புக்கொண்டார்.

ஜிம்மும் எலிசபெத்தும் ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்ததன் பிண்ணனி இதுதான். வேறு ஒரு பங்களா கிடைக்கும் வரை தங்கியிருப்பார்கள். ”வீட்டு சாமான்களை என்ன செய்தீர்கள்?” என்று கேட்டேன். ”சாமான்களை வேறு வீடு வாடகைக்கு கிடைத்த பிறகே போய் எடுத்து வர வேண்டும்?” என்றார் ஜிம். ”சாமான்களை எடுக்கப்போகும் போதும் பாம்புகள் அங்கு இருக்குமா?” என்று கேட்கலாமென்று பார்த்தேன் ; கேட்கவில்லை.

அன்று இரவு கனவில் மீண்டும் பாம்புகள் விஜயம் செய்யும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், பாம்புக்கனவு வரவில்லை. நீண்டதொரு ரயிலில், பெயர் தெரியாத ஒர் இடத்திற்கு போவது போல் கனவு கண்டேன். கனவில் ரயில் பாம்புப்புற்றுகள் நிறைந்த ஒர் இடத்தை தாண்டி சென்றது. பாம்புகளெதுவும் புற்றிலிருந்து எட்டிப்பார்க்கவில்லை.

ஒன்று அறிய ஆசை. நிஜம்மாகவே, பாம்புப்புற்றுகளில் பாம்புகள் வாழ்கின்றனவா?

ஒரு குட்டிக்கதை

புறநகரின் ஆள் அரவமில்லாத மாளிகையொன்றில் அரவங்கள் புகுந்து மொய்த்தன. மாளிகைவாசிகள் குலை நடுங்கி வெளியெறினர். பாம்பு பிடிக்கும் மனிதர்களை கூட்டி வந்தனர். பாம்புகளுக்கும், மனிதர்களுக்கும் இடையே நடந்த யுத்தத்தில் ஒவ்வொரு உயிரிழந்த பாம்புக்கும் ஒன்றன் பின் ஒன்றாக பாம்புகள் வந்து கொண்டேயிருந்தன. மனிதர்கள் சோர்வுற்று இறுதியில் அம்மாளிகையை பாம்புகளின் ஆலயமாக ஆக்கினர். ஆலயம் என்றாலும் பக்தர்களெல்லாரும் தூர நின்றே தரிசிப்பார்கள். பின்னர் புராணக்கதைகள் புனையப்பட்டு அவ்வாலயம் பெயரும் புகழும் பெற்றது.

மாளிகையையொட்டி பூ விற்கும் கடைகள், அர்ச்சனை தட்டு விற்பவர்கள், பக்தர்களின் உடைமைகளை பாதுகாப்பவர்கள் என்று பலருக்கும் வயிறு நிறைந்தது. நெரிசல் அதிகமாகி, வெளிச்சம் அதிகமாகி… பாம்புகள் ஆலயத்தை விட்டு அகன்றன. ஆலயத்தின் வாசலில் சில பாம்புகள் உயிரை விட்டன. தூர நின்று வழிபடும் பக்தர்களோ பாம்புகள் இல்லாத ஆலயத்தில் பாம்புகள் இருப்பதாக எண்ணி பாம்புத்தெய்வங்களை வழிபடுகின்றனர்.

பாம்பில்லாததோர் இடத்தை ஆலயமாக தொழுவது பகுத்தறிவன்று என்று சொல்லி ஒரு சாரார் கொடிபிடித்தனர். அவர்கள் குரலோங்க பாம்பாலயத்தை தொழுவது நின்றது. மாளிகை வாசிகளின் வழித்தோன்றல்கள் திரும்பி வந்து புனருத்தாரணம் செய்து வசிக்கத்துவங்கினர். வீட்டின் பின்னே ஒளிந்திருந்த குட்டிப்பாம்பை வளர்த்தனர். அங்கு இப்போது பாம்புகளின் சரணாலயம் இருக்கிறது. நூறுக்கும் மேற்பட்ட ஆட்கள் அங்கு வேலை செய்கின்றனர். இப்போது அந்த மாளிகையில் பாம்புகள் – மனிதர்கள் இருவரும் வாழ்கின்றனர்.

+++++

என்னை மிகவும் கவர்ந்த பாம்பு பற்றிய கவிதையொன்றை கீழே தருகின்றேன்.

கவிதையின் தலைப்பு : பேட்டி***

எழுதியவர் : எம் டி முத்துகுமாரசாமி

கிடா விழுங்கும் மலைப்பாம்பல்ல
நான் என அறிய
வீசினால் தண்ணீர்
அடித்தால் செத்தது
தாண்டினால் பழுது
கக்கினால் ரத்தினம்
கடித்தால் விடம்
சுருட்டினால்
பைந்நாகப் பாய்
விரித்தால்
சிவலிங்கக் குடை
தரிசித்தால்
தன் வாலைத் தானே கவ்வுமிது.

*** “நீர் அளைதல்”கவிதை தொகுதியிலிருந்து.

கவிதை தொகுதியைதரவிறக்க : https://docs.google.com/viewer?a=v&pid=explorer&chrome=true&srcid=0BzHCwqQ3UxT7ZDNmYjQ1YzctNTk1Ni00MjMyLThkODktNGNmOTYyYjMyMGNi&hl=en_US

அத்தி பூத்தது

யாரோ எழுப்பிவிட்டது போல ஆறு மணிக்கே எழுந்துவிட்டேன். வார நாட்களில் கூட ஏழரை அல்லது எட்டு மணிக்கு குறைவாக எழும்பிய ஞாபகம் இல்லை. ஞாயிற்றுக்கிழமைகளில் ஒன்பதறைக்கு முன்னர் எழுந்ததாக சரித்திரமே இல்லை. இன்று என்னவோ சீக்கிரம் விழித்துவிட்டேன்.

இயற்கையின் அழைப்பு வரும்போது தூக்கத்திலிருந்து எழுந்து சிறுநீர் கழித்து பின்னர் படுக்கைக்கு திரும்பி தொடர்ந்து தூங்குதல் நிறைய நாள் நடந்திருக்கிறது. இன்றும் அப்படிதான் நினைத்தேன். சிறுநீர் கழித்தவுடன், என்ன தோன்றியதோ பற்பசையையும் பிரஷ்ஷையும் எடுத்து பல் துலக்கினேன். பல் துலக்கிவிட்டேனென்றால், அந்த நாள் துவங்கிவிட்டது என்று அர்த்தம்.

மனைவி போர்வையால் முகத்தை மூடி உறங்கிக்கொண்டிருக்கிறாள். குழந்தைகள் அவர்களின் அறையில் தூங்கிக்கொண்டிருந்தார்கள். கைத்தொலைபேசியில் மின்னஞ்சல்கள் ஏதாவது வந்திருக்கிறதாவென பார்த்தேன். ட்விட்டரில் முகம் தெரியாத நண்பர்களுக்கு காலை வணக்கம் சொன்னேன். அப்புறம் என்ன செய்வது என்று தெரியவில்லை. இதற்குத்தான், தினமும் சீக்கிரம் எழுந்து பயிற்சி இருக்கவேண்டும்.

இன்று புத்தாண்டின் முதல் நாள். வாழ்த்து சொல்கிறேன் பேர்வழியென்று மனைவியை எழுப்பலாமா என்று யோசித்தேன். அதற்கு வாய்ப்பு இல்லை. நள்ளிரவு வரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப்பார்த்துவிட்டு “ஹாப்பி நியு இயர்” சொல்லிவிட்டுதான் தூங்கினோம்.

குழந்தைகளை எழுப்பினால், இன்று பள்ளி லீவு பின்னர் ஏன் சீக்கிரம் எழுந்துகொள்ளவேண்டும் என்று கடுப்புடன் ஒரு லாஜிக் சொல்லிவிட்டு போர்வை இழுத்து போர்த்திக்கொள்வார்கள்.

வீட்டின் நிசப்தத்தை தொலைக்காட்சியை போட்டு குலைக்க எனக்கு மனமில்லை. இத்தனை ”அதிகாலை” யாருக்கும் தொலைபேசியில் பேசி பழக்கமில்லை. தொலைபேசியில் நண்பர்களுக்கு “ஹாப்பி நியு இயர்” சொல்ல மதியம் 12மணி வரை காத்திருக்கவேண்டும்.

யோசனையை நிறுத்தும்படி, ஒரு கைத்தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. இவ்வளவு சீக்கிரம் யார் போன் செய்கிறார்கள்? என் அம்மாதான் பேசினாள். அவளின் பிறந்த நாள் வாழ்த்துகளை தூங்கும் குரலில் பேசி ஏற்றுக்கொண்டே பழக்கமாகிப்போன எனக்கு, இன்று விழிப்புடன் பேசுவது த்ரில்லாக இருந்தது. “ஏண்டா ரொம்ப நாளாக போன் செய்யவில்லை” என்ற வழக்கமான பாட்டை பாடினாள், “வேலைப்பளு தான் காரணம்” என்று சொன்னேன். புத்தாண்டின் முதற்பொய்.

போனை வைத்த பிறகு, பொய் சொன்ன பாரத்தோடு இருந்தேன். பின்னர், பாதி படித்து வைத்திருந்த நாவலை படிக்க முயன்றேன். முடியவில்லை. நாவல் படிப்பது என்றால், இரவுத்தூக்கத்துக்கு முன்னர் என்று ஆகிவிட்டது. மற்ற நேரங்களில் எதுவும் படிப்பது இல்லை.

எட்டு மணிவாக்கில் மனைவி எழுந்திருப்பாள். பின்னர், காபி கிடைக்கும். குழந்தைகள் எழுவார்கள். அவர்களுடன் கொஞ்ச நேரம். பின்னர், தொலைக்காட்சி உயிர் பெறும். செய்தித்தாள்களின் பக்கங்கல் புரட்டப்படும். குளிக்காமலேயே மதியவுணவு. பின்னர் குளியல். அதற்குள், சாயந்திரமாகிவிடும். யோசிக்கும்போது, ஒரு மிஷின் மாதிரி, ஒரே மாதிரி என் ஞாயிற்றுக்கிழமைகள்.

இன்றாவது, சாவி கொடுக்கப்பட்ட பொம்மை போல இயங்காமல், பிரக்ஞையோடு ஏதாவது உருப்படியானவற்றை செய்யவேண்டும். அம்மாவிடம் பொய் சொல்லி புத்தாண்டின் முதல் தினத்தை துவங்கியாயிற்று. இல்லை. போக்கை விரும்பும்வகையில் மாற்றிக்கொள்ளும் ஆற்றல் என்னிடமிருக்கிறது. என்ன செய்யலாம்?

ஹும்ம்ம்….என் மனைவி எழுவதற்குமுன்னர், காபிக்கு டிகாக்‌ஷன் போட்டு வைக்கப்போகிறேன்…..

புத்தாண்டு வாழ்த்துகள்!……….

நண்பனின் மரணம்

மும்பையில் என் நண்பன் – நினாத் – உயிரிழந்துவிட்டான். பூனாவிலிருந்து இன்னொரு நண்பன் போன் செய்துசொன்னான். எதாவது வம்புக்காக மட்டும் போன் செய்து கொஞ்சம் "போர்"அடிக்கும் பூனா நண்பனின் தொலைபேசி அழைப்பை நிறைய நேரம் எடுக்காமல் இருந்திருக்கிறேன். இன்று நான் அப்படி செய்யவில்லை. எடுக்காமல் விட்டிருக்கலாமோ? இல்லை இன்று என்றில்லை, நினாத் (Ninad) தின் மரணச்செய்தி எப்போது எட்டியிருந்தாலும், இன்றைய மாலையில் எனக்குள் ஏற்படுத்திய அதே அதிர்ச்சியை மாறாமல் தந்திருக்கும்.

இறக்கும் வயதல்ல நினாத்துக்கு. 35 வயதுதான் ஆகியிருக்கும். அவனின் அழகான சிரிப்பு அவனது இம்மியளவு கூட தீங்கற்ற மனப்பாங்கை பிரதிபலிக்கும். களங்கமற்ற குழந்தை மனதுதான் அவனுக்கு என்பது மிகையில்லாத வருணனை. அவனை தெரிந்தவர்கள் எல்லாரும் இதை ஒப்புக்கொள்வார்கள்.

ஐந்து வருடங்கள் நானும் நினாதும் சேர்ந்து ஒரே நிறுவனத்தில் பணி புரிந்தோம். கல்லூரியிலிருந்து வெளிவந்து வேலையில் சேர்ந்த வாலிபனாக அவனை நான் அறிவேன். நிறுவனத்தில் திடீரென்று பெருந்தலைகள் வேலையை விட்டபோது, நாங்கள் இருவரும் ஒரே அணியில் இணைந்து இரவு பகல் என பேரார்வத்துடன் பொறுப்புடன் பணிபுரிந்த தினங்கள் எனக்கு ஞாபகமிருக்கிறது.

நிறுவனத்தலைவர் மேல் அவ்வப்பொழுது எழும் வெறுப்பை இருவரும் மதியவுணவு சேர்ந்து உட்கொள்ளும்போது பகிர்ந்துகொள்வது வழக்கம். அப்போதெல்லாம், நினாத் புன்னகை வழிய "நீ சொல்லு…நாளைக்கே இருவரும் சேர்ந்தே வேலையை ரிசைன் பண்ணிவிடுவோம்" என்று சொல்வான். அப்போது அவன் திருமணமாகாத பிரம்மச்சாரி. எனக்கோ இருகுழந்தைகள் பிறந்திருந்தன. எனவே இந்த சம்பாஷணை ஒரு நகைச்சுவைக்காக மட்டுமே என்று இருவருமே அறிந்திருந்தோம். வேடிக்கை என்னவென்றால், அவன் நகைச்சுவைக்காக சொன்னது உண்மையாகவே நடந்தது. ஜூலை 2008 இல் எங்கள் இருவருக்கும் ஒரே சமயத்தில் வேறு நல்ல வேலை கிடைத்தது. எனக்கு தில்லியில். அவனுக்கு பெங்களூரில். ஒரேசமயத்தில் ராஜினாமா கடிதத்தை தந்தபோது, "என்ன பேசிவைத்துக்கொண்டு ராஜினாமா செய்கிறீர்களா?" என்று நிறுவனத்தலைவர் கேட்டார். அறையிலிருந்து வெளிவந்ததும், நானும் அவனும் சேர்ந்து பலநிமிடங்கள் சிரித்தோம்.

நாங்கள் வேலை மாறிய பிறகு எங்கள் தொடர்பு இன்னும் வலுப்பட்டது. எங்கள் புதுவேலைகளின் அவஸ்தைகள், போராட்டங்கள் எல்லாம் நீண்ட தொலபேசியுரையாடல்களில் பரிமாறிக்கொண்டிருப்போம். முன்று வருடங்கள் முன்னர் அவனின் திருமணம் நடந்தது. அலுவலகப்பணி தொடர்பாக ஓர் அயல்நாட்டு விஜயம் மேற்கொண்டதால், அவனுடைய திருமணத்துக்கு போகமுடியவில்லை. பின்னர் அவனுடைய நிறுவனம் அவனை மும்பைக்கு இடமாற்றம் செய்யச்சொன்னது. அலுவலகப்பணிக்காக எப்போது மும்பை சென்றாலும், நினாதும் நானும் எங்களுடைய வாடிக்கையான காபி ஷாப்பில் மணி நேரங்கள் உட்கார்ந்து அரட்டை அடிப்பது வழக்கம். கடைசியாக அவனை சந்தித்தது அக்டோபர் 2010 இல். அவனுடைய இரண்டு மாதக்குழந்தை -ஆரவ்-வை தூக்கிக் கொஞ்சியதை இப்போது நினைக்கும்போது நெஞ்சுக்குழியில் இனம்புரியா சங்கடம்.

நண்பா, உனக்கேன் அவசரம் ! வாழ்வை நகைச்சுவை, ரசனை, கும்மாளம் என்று வாழத்தெரிந்த உனக்கு, இவ்வளவு சீக்கிரமாக உலக வாழ்வை நீங்கும் அவசரம் ஏன்? பக்தி (நினாத்தின் இளம் மனைவி) யையும் ஆரவ்-வை யும் நினைத்தால், உன் மரணத்தின் மேல் கண்ணீரோடு, கோபமும் சேர்ந்து வருகிறது. கொடூரமான மரணத்தின் செயல் முறைகளை புரிந்துகொள்ளமுடியவில்லை.

சிரிக்க முடியுமான்னு பாருங்க

‎”அந்த எழுத்தாளர் எழுதறது ஒண்ணும் புரிய மாட்டேங்குதே, ஏன்?”

“Facebook-ல ஸ்டேடஸ் மெசேஜ் போட்டு எழுதப்பழகினாரு இல்லையா…அதனால..”

+++++

பஸ்ஸில் பயணி நடத்துனரிடம் : “விடுதியில் வண்டி நின்னப்போ சீட்டில் கழட்டி வச்ச செருப்ப யாரோ திருடிட்டு போயிட்டாங்க”
நடத்துனர் : “செருப்ப கழட்டிட்டு ஏன்யா பஸ்-லேர்ந்து இறங்கினிங்க?”

பயணி : “கல்யாணத்துல அடிச்ச செருப்புக்கு கைப்பையுமா கூட கெடைக்கும். கால்-ல போட்டுகிட்டுதான் செருப்பு தைக்கறவர் கிட்ட போயி வித்துட்டு வந்தேன்”

+++++

கையில் சிறு பெட்டியுடன் ரயிலில் ஏறினார் அவர். வண்டி லேசாக நகர ஆரம்பித்த பிறகுதான், தாம் தவறான ரயிலில் ஏறியிருக்கிறோம் என்பது புரிந்தது. உடனே பெட்டியை ஜன்னலிலிருந்து எரிந்து விட்டு,அவர்
படியிலிருந்து குதிக்கத் தயாரானார். அப்போது ரயிலுக்குள்ளிருந்த பிச்சைக்காரன் ஒருவன் அவரை ரயிலுக்குள்ளே இழுத்து விடுகிறான்.

பிச்சைக்காரன்: “இங்கேயே விழுந்தா உயிர் போகாதுயா..ரயில் போலீஸ் காப்பாற்றி, ஜெயிலுக்குள்ள வச்சுடும்”

பிரமுகர் மலங்க மலங்க விழித்து “பெட்டி..பெட்டி” என்று கத்தினார்.

பிச்சைக்காரன் : “யோவ்..நீ சாகவே இல்லன்னா சவபெட்டியெல்லாம் தேவைபடாதுய்யா”

பிரமுகர் : ஐயோ..பெட்டில பத்துலட்சம் ரூபா இருக்குதே”

பிச்சைக்காரன் : “தற்கொலை பண்ணிகரதுக்கு முன்னால உயில் எழுதி வச்சிட்டு வரலையா? பசங்க சண்டை போட்டுக்கபோறாங்க”

பிரமுகருக்கு மார்வலி வந்துவிட, மயக்கம் போட்டு விழுந்தார்.

பிச்சைக்காரன் : “முன்ஜாக்கிரதையான ஆளுய்யா..குதிச்சாலும்
தப்பிசுருவோம்னு தூக்க மாத்திரைய ஏற்கெனவே முழுங்கியிருக்கான்யா”

+++++

பையன் : “சேவல் கூவும், மயில் அகவும் – னு புத்தகத்துல சொல்லி
இருக்கு…ஆனா அப்பா கத்துவாரு அப்படின்னு எழுதலையே?”

அம்மா : “அப்படின்னா குரங்கு கத்தும்-னு போட்டிருக்கும் பாரு

+++++

“ஊருக்கு போகலாம்னு பஸ் பிடிக்க கெளம்பினா, பாதைல பூனை குறுக்கே போகுது சார்!..அதனாலே வீட்டுக்கே திரும்பி வந்துட்டேன்”
“அந்த பூனைக்கும் போன காரியம் ஆகலே…”
“என்ன கிண்டலா? ”
“உங்களை தாண்டி நாலடி போனதும், கிரிக்கெட் பால் பட்டு இறந்து போனதைத்தான் என் திண்ணைலர்ந்து மத்தியானம் பார்த்தேனே…சந்தைக்கு போகலாம்னு பார்த்தேன்..உங்களை பார்த்துட்டேன்…ஒங்களோட சேர்ந்தே வீட்டுக்கு திரும்பிப்போயிடறேன்”

+++++

“கொடுத்த கடன் திரும்பி வரலன்னா, என்ன பண்றது?”
“திரும்பி வந்தா என்ன பண்ணுவீங்க?”
“பணத்தை safe-ஆ வங்கி-ல போட்டுட்டு ஹாய்-யா மறந்துட வேண்டியது தான்”
“அதே மாதிரி, வராத கடனை வங்கி-ல போடாமலேயே மறந்துடுங்க…ஹாய்யா இருப்பிங்க”

+++++