“பாரதியின் காளி” வாசித்து முடித்துவிட்டேன்.
பாரதிப் பித்தர்களும் பாரதி எதிர்ப்பாளர்களும் எதிர்முனைகளாக இருபுறம் குவிந்து நிற்கிறார்கள். “பாரதி போல் உண்டா” என்ற வழிபாட்டு மன நிலையில் உள்ளோர் ஒரு புறம். வைதிக வர்ணாசிரமக் கருத்துகளின் மறைமுக ஆதரவாளர் என்று வர்ணிப்போர் இன்னொரு புறம். நான் பெரும்பாலும் முந்தைய நிலையில் வளர்ந்தவன். பின்னர் அவருடைய சில போக்குகள் – கனகலிங்கத்துக்கு பூணுல் அணிவித்த நிகழ்வு குறித்த வரலாறு – என்னை சற்று அவரிடமிருந்து விலக வைத்தது. பாரதியின் கவிதைகள் வெறும் பாடல்கள், வீறு பெற்று முழங்கும் முழக்கங்கள், கவிதையின் அமைதி வாய்க்கப் பெறாத பாடல்கள் என்று எழுதிய சில கவிதையியல் விற்பன்னர்களின் கருத்துகளால் சில காலம் ஈர்க்கப்பட்டேன். அவர் கவிதைக்கு மொழி பெயர்ப்புத் தன்மை இல்லை. எனவே சாதாரண ஒரு கவிஞர் அவர் என்று ஒருவர் சொன்ன கருத்து -“இது உண்மையாய் இருக்குமோ?” என்று எண்ண வைத்தது. எந்தப் புள்ளியில் பாரதிக்குத் திரும்பினேன் என்று யோசித்த போது – நண்பர் மாதவன் சொன்ன வார்த்தையைக் கேட்ட பின்னர் தான் என்று சொல்வேன். நண்பர் சொன்னது இது – Bharathi is not part of the problem ; but of the solution.
பாரதியின் காளி நூலின் எழுத்தாளரும் என்னைப் போல் தான் – “அவர் ஒரு மேலோட்டமான கவி என்று தீர்ப்பு விலகிச் செல்ல முயன்றிருக்கிறேன். ஆயினும் அனைத்து சமயங்களிலும் நான் பாரதியிடம் தான் மீண்டும் திரும்பி வந்திருக்கிறேன்” – என்கிறார். அதற்கான காரணத்தை இவ்வாறாகச் சொல்கிறார் – “பாரதியைப் பற்றிய ரகசியங்களைப் பாரதியிடமே தெரிந்து கொள்ளலாம் மற்றவர்களின் துணையின்றி….தம்மை என்றும் சுய விமரிசனத்திற்கு ஆளாக்கிக் கொள்ளும் மிகக் குறைந்த எழுத்தாளர்களில் ஒருவர் பாரதி”
பாரதியின் தமிழ் முதலில் பாடல்களாக மலரத் தொடங்கிய காலங்களில் அவருக்கு ஆழ்வார் தமிழின் அறிமுகம் இல்லை என்ற விஷயம் இந்நூல் வழி எனக்குத் தெரிய வந்த போது அளவிலா வியப்பு. தேவாரமும் திருவாசகமும் கேட்டும் வாசித்தும் வளர்ந்தவருக்கு ஆழ்வார் தமிழ் பற்றி அறிய பிறந்து இருபத்தியெட்டு வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது.
உணர்ச்சிப் பெருக்கான ஆவேசமிகு பாடல்கள் பின்னர் கவிதையாக்கமாக உயர்ந்தமைக்கு ஆழ்வார் தமிழின் அறிமுகம் மட்டுமன்று – ஶ்ரீ அரவிந்தர் உடனான தொடர்பு ஏற்பட்ட பிறகு ரிக் வேதத்தின் மேல் பாரதிக்குப் பிறந்த ஆழ்ந்த ஈடுபாடும் இன்னொரு காரணம். 1910க்குப் பின்னரே கவிதைகள் நிறைந்த ஆக்கங்களெல்லாம் எழுதப்பட்டன என்னும் கூர்மையான நோக்கை முன்வைக்கிறார் மோகனரங்கன்.
பாரதியின் தொகுப்பில் சரி வரக் கலந்திருக்கும் பாடல், கவிதைகள் குறித்து விரிவாக நூலில் பேசியிருக்கும் மோகனரங்கன் குயில் பாட்டு கவிதையாவது எங்ஙனம் என்று உரைத்துவிட்டு குயில் பாட்டின் இறுதியில் வரும் “ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே ஆனாலும் வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க யாதானும் சற்றே இடமிருந்தால் கூறீரோ” என்ற வரிகள் அதுவரை பாட்டில் சிறந்திருந்த கவித்திறத்தை சரிக்கின்றன என்று கூறுகிறார். பாஞ்சாலி சபதம் பாடல்-கவிதை இரண்டுங்கலந்த பதிப்பு. கண்ணன் பாட்டு பாரதியின் வாழ்க்கை தரிசனம். – என்று படி பரிணாமமாக அவர் கவிதையாக்கம் உயர்ந்ததை பதிவு செய்கிறார் மோகனரங்கன்.
இந்த பரிணாமத்துக்கிணையாக வேறு இரண்டு விஷயங்களும் பாரதியின் வாழ்வில் நடந்திருக்கிறது எனத் தரவுகளின் மூலம் நிறுவப்படுகிறது – பாரதியின் கருத்து நிலை வளர்ச்சியும் சுதேசியத்தின் வீறுநிலை வளர்ச்சியும் சமகாலத்தில் இயங்கியவை.
சில முக்கிய வினாக்களை எழுப்பி அதற்கான பதில்களை பாரதியின் கவிதை, கட்டுரை, பத்திரிக்கை குறிப்புகள் வாயிலாக கண்டுபிடிக்க முயல்கிறது “பாரதியின் காளி”.
-தேச பக்தி என்ற ஒன்றிற்காக அத்துணை பாடல்கள் பாடியது ஏன்?
-சமுதாய சீர்திருத்தம் உடனடித்தேவையா அல்லது தேச விடுதலையா?
-பாரதி தேசபக்தியை தேர்ந்தெடுத்தது ஏன்?
-பாரதியின் கருத்தில் நிறைந்த ஆளுமைகளின் – முதலில் திலகர், பின்னர் ஸ்ரீ அரவிந்தர் -தாக்கத்தில் ஜாதி வேற்றுமைகள் போன்ற முக்கியமான விஷயங்களில் பாரதியின் கருத்து நிலைகள் எப்படி மெல்ல மெல்ல மாறிக்கொண்டு வந்தன? (1906ல் பாரதி எழுதிய கட்டுரை வரிகளையும் 1916இல் ஓர் ஆங்கிலப்பத்திரிக்கைக்கு எழுதிய The Crime of Caste என்ற கட்டுரைகளின் வரிகளை ஒப்புநோக்கி பாரதி நடந்து வந்த தூரத்தை சுட்டிக் காட்டுகிறார் நூலாசிரியர்)
– அவருடைய கருத்து நிலை மாற்றங்களில் ராமகிருஷ்ணர் – விவேகானந்தர் – சகோதரி நிவேதிதா எனும் தொடரின் பங்கு எத்தகையது?
-தேசபக்தி என்பதை “பிரதான மத இயக்கங்களை ஒருங்கிணைப்பதில் முனைப்பு கொண்ட இயக்கமாக அறியப்பட்டு வந்திருக்கும்” சாக்தம் என்பதற்கு புதுவிளக்கமாக பாரதி வனைந்தெடுத்ததன் பின்னணி என்ன?
மேற்க்கண்ட கேள்விகளுக்கான விடையைப் பெறுவதில் குறிப்பிடத்தக்க வெற்றியை மோகனரங்கன் பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
“நவசக்தி மார்க்கத்தின் விரிவான பாரதியின் புதிய பார்வை சுதேசிய உணர்வை ஆன்மீகமாக உணர்ச்சிகளும், வழிபடு மனத் தொய்வும் மிக்க தரிசனமாக காட்டுவதே” எழுதிய பாடல்களில் கருத்துக்களில் பாரதி கருதிய பொருள் என்ற முடிவுக்கு வரும் மோகனரங்கன் பாரதியின் கட்டுரைகளின் வாசிப்பின்றி பாரதியின் கவிதைகளின் தாத்பர்யத்தை முழுமையாக அறிய முடியாது என்றும் அழுத்தமாகக் கூறுகிறார்.
“பாரதியின் அடிப்படை ஊக்கம் ஆன்மீகத் தேட்டம் என்ற நிதர்சனத்தைப் புரிந்துகொண்டால்தான் அவருடைய எழுத்து அனைத்தும் தம்முள் ஒன்றிற்கொன்று ஒத்திசைவனவாய், ஒன்றை ஒன்று விளக்கி நிற்பனவாய் பிரிகதிர்ப் படாமல் அர்த்தப்படுகிறது.” “அவருடைய பாடல்களை உரைநடை விளக்குகிறது; உரைநடையைப் பாடல்கள் அடிக்கோடிடுகின்றன. இரண்டின் உட்கருத்துகளாய்த் திகழும் சிலவற்றைப் பெறுக விளக்கிய படைப்புகளாய் அவருடைய சாத்திர, வேத விசாரங்கள் திகழ்கின்றன”
–
இருப்பில் இன்னும் சில பாரதியியல் நூல்கள் இருக்கின்றன, அவற்றையும் விரைவில் படித்து முடித்துவிட வேண்டும்.





