வெட்டி உரையாடல்கள், எப்போதாவது சில நண்பர்களுடைய அறிமுகம் என நடைமுறை வாழ்க்கையில் காணும் அனுபவங்களை ஒத்தவாறு சுவையற்றதாகவே சமூக வளைதளங்களில் நேரம் கழிந்து வந்தது. இடும் கருத்துகள் ஏதோ இந்தவுலகை மாற்றியமைக்கப்போவது போலக் கூவுதற்கும் சொந்த வாழ்க்கையின் முன்னேற்றங்களை பறைசாற்றிக் கொள்வதற்குமான அரங்காக மட்டுமே சமூக வளைதளங்களைப் பயன்படுத்தி வந்த எனக்கு அவற்றுக்கு உயிர் காக்கும் வல்லமை உண்டு என்ற நேரடி அனுபவத்தைத் தந்த நாள் 23/4/2021.
கொவிட் பாசிடிவாகி ஏழு நாட்களாகியிருந்தன. ஜூரம் குறையவில்லை. 22ந்தேதி நடுஇரவு SPO2 தொண்ணூறாக குறைந்துவிட்டது. இரண்டு மணி நேரம் கழித்து 86. மனைவிக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. சில பெரிய மருத்துவமனைகளுக்கு போன் செய்தாள். மருத்துவமனைகள் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன. ஆக்ஸிஜன் படுக்கை கிடைக்குமா என்று கேட்டவுடன் இல்லை என்ற ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லி லைனை கட் செய்தார்கள். ஊரில் நண்பர்களுக்கு போன் செய்து என் காதில் விழாவண்ணம் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தாள். கையைப் பிசைந்து கொண்டிருந்தாள். என் ஜுரத்தை விட அவளின் அவஸ்தை எனக்கு மிகுந்த சங்கடமளித்தது.
நண்பர் ஒருவரை அழைத்துக் களைத்துப் போயிருந்த குரலில் மெதுவாகப் பேசினேன். தொண்டை வறண்டு போயிருந்தது. அவரின் பதிலை கண்ணை மூடிக்கொண்டே கேட்டேன். தற்போதைய சூழ்நிலையில் மருத்துவமனை கிடைப்பது அரிது என்றார். அவருக்கும் கொவிட் பாசிடிவ். ட்வீட் செய்கிறேன் என்று அவர் சொன்ன போது அவநம்பிக்கையோடு தான் போனை வைத்தேன். ஆனால் முற்றிலும் எதிர்பாராதபடி என் நண்பர் இட்ட சின்ன டிவிட்டர் நிலைத்தகவலை படித்துவிட்டு அறிமுகமில்லாத அரசியல் பிரமுகரின் தொண்டர் ஒருவர் அதிகாலை ஐந்து மணிக்கு தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டார்.
படுக்கைத் தட்டுப்பாடு நிலவிய இரண்டாம் அலை நாட்களில் நடுத்தர அளவிலான மருத்துவமனையில் எனக்கு இடம் கிடைத்ததையும்,
ஸ்கேனிங் சென்டரில் மிக நீண்ட க்யூ வரிசையில் நான் நின்றிருந்த போது அந்தத் தொண்டர் போனில் யாருடனோ பேசி என்னுடைய முறை உடனடியாக வரும்படி செய்ததையும்,
விதிமுறைக்கெதிராக மார்பு ஸ்கேன் ரிப்போர்ட் வரும் முன்னதாகவே (CT Severity Score 17/25) மருத்துவமனை என்னை அனுமதித்துக் கொண்டதையும்,
அனைத்து மருத்துவமனைகளிலும் பிராண வாயு சிலிண்டர்களின் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்த வேளையில் நான் படுத்திருந்த சிறு மருத்துவமனைக்கு மட்டும் ஒரு சின்ன லாரி நிறைய சிலிண்டர் கிடைத்ததையும் –
அற்புதம் என்ற சொல்லினாலன்றி வேறெந்த சொல்லால் குறிப்பது? நன்றியுணர்வு ஆன்மாவின் மது என்பார் ரூமி. என் உயிர் காக்கப்பட்ட நன்றியுணர்வின் போதை என் வாழ்நாளெல்லாம் நீடித்திருக்கும்.
ட்வீட் செய்த நண்பர் பெயர் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால் அவர் பெயரை இங்கே குறிப்பிடவில்லை.
சொல்வனம் இணைய இதழில் வந்த உங்கள் ‘ஒரு முடிவிலாக் குறிப்பு’ (https://solvanam.com/2021/11/28/ஒரு-முடிவிலாக்-குறிப்பு/) படித்தேன். புனைவா வாழ்க்கைக் குறிப்பா தெரியவில்லை, ஆனால் அதன் வலிமை என்னையும் கொஞ்சம் வாழ்க்கையை பற்றிச் சிந்திக்கத் தூண்டியது. இதோ அளிக்கிறேன், ஒரு தத்துவக் குறிப்பு.
நட்பாஸ்
நம் சிக்கல்களுக்கு நம்மைத் தவிர வேறு யாரும் தீர்வு காண முடியாது. நம் பிரச்சினைகள்தான் நாம், இவற்றால்தான் நாம் நாமாய் இருக்கிறோம். எந்த ஒரு விஷயத்திலும் தனி நபராய் என் பிரச்சினை வேறு யாருக்கும் அதே மாதிரி இருக்க வாய்ப்பில்லை. சிலந்தி, வலை பின்னுவது போல் உணர்ச்சிகளாலும் எண்ணங்களாலும் செயல்களாலும் நம்மைச் சுற்றி நாமே கண்ணுக்குத் தெரியாத இழைகளால் ஒரு வலை பின்னிக் கொள்கிறோம். துரதிருஷ்டவசமாக, நாமே அதில் சிக்கிக் கொள்ளவும் செய்கிறோம். (நான் சொல்வதில் நம்பிக்கை இல்லை என்றால் சிலந்தி வலை அதன் மனதின் பருண்ம வடிவம் என்று சொல்லும் இந்தக் கட்டுரையை பாருங்கள் – The Thoughts of a Spiderweb, Quanta Magazine https://www.quantamagazine.org/the-thoughts-of-a-spiderweb-20170523/)
நாம் பின்னிய வலைகளில் சிடுக்கு ஏற்படுகிறது என்றால், அதற்கு காரணம் நாம்தான், அது நம்மில் ஒரு அங்கமும்கூட. வெளியிலிருந்து பார்க்கும் ஒருவருக்கு அதன் வேர்கள் நம் இதயத்தோடு பிணைந்து நம்மில் ஒன்றியிருப்பது தெரிய வாய்ப்பில்லை. அவர் எவ்வளவு நியாயமாக பேசினாலும், அவரது தர்க்கம் எத்தனை வலுவானதாக இருந்தாலும், நம்மை அது காப்பாற்றக் கூடியதல்ல. நம் மனதுக்கு நியாயம் என்று தோன்றுவது, நம்மைச் சரியான திசையில் கொண்டு செல்லும் என்பது உறுதியல்ல. அறிவுரைகள் சரியாகவே இருந்தாலும் அது தீர்வு காண உதவாது. வேறொருவர் அப்படிச் செய்ய முடியும், ஆனால் என்னைப் போன்ற ஒருவனுக்கு இதில் என்ன தவறு, நம்மால் முடிகிற வேலைதானே என்று இருக்கும், இருந்தாலும் ஒன்றும் பண்ண முடியாது. காரணம், அவர் வேறு மாதிரி, நான் வேறு மாதிரி.
எனவே யாராக இருந்தாலும் இந்த புரிதலுடனும் தன்னடக்கத்துடனும்தான் நாம் தீர்வு சொல்ல வேண்டும்.
உலகில் வெற்றி பெற்றவர்களைப் பார்க்கிறோம் – விஞ்ஞானிகள், பெரும்பணக்காரர்கள், நடிகர்கள், இசையமைப்பாளர்கள், அரசியல்வாதிகள். உலகில் தலை சிறந்த அறிவு, மிக அதிக பணம், ஆகச் சிறந்த புகழ், அதிகாரம், எதுவும் போதுமானதாக இல்லை. இவர்கள் வாழ்க்கையைப் பார்த்தால் மிக மோசமான மன வேதனை, காயங்கள், செயல்கள் இருக்கும். குடும்பத்தை கவனித்துக் கொள்ள மாட்டார்கள், மற்றவர்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள், மணமுறிவு, போதைப் பழக்கம், தற்கொலை. வெற்றியோ, அதன் பயன்களோ, உபகரணங்களோ மனதுக்கு மகிழ்ச்சியோ ஆறுதலோ தருவதற்கு தம்மளவில் போதுமானதாக இருப்பதில்லை.
அதே சமயம் தெருவில் நடைபாதை பிச்சைக்காரன் பின்னால் கூட ஒரு நாய் போகிறது, அவனும் அதற்கு ஏதோ ஒன்றை சாப்பிடப் போடுகிறான். மனதுக்கு நல்லது எது என்று பார்த்தால், தன்னலமின்மை என்றுதான் தோன்றுகிறது. நான் எனது என்று எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பதற்கு மாறாக, நம்மைச் சுற்றி இருப்பவர்கள் வாழ்வை ஏதோ ஒரு வகையில் இன்னும் நன்றாக வாழத்தக்க ஒன்றாய் மாற்ற முயற்சி செய்பவர்கள். அவர்களுக்கும் மன அழுத்தம் வரலாம், அச்சம், அவநம்பிக்கை ஏற்படலாம். ஆனால் அவர்கள் குடும்பத்தை தவிக்க விடுவதில்லை, போதைக்கு அடிமையாவது இல்லை, தற்கொலை செய்து கொள்வதில்லை.
அகத்தின் மீது ஒரு போர்வை போல் இருப்பது சுயம். ஒவ்வொருவரும் அதை ஒவ்வொரு வகையில் இறுக்கமாய் வைத்துக் கொள்கிறார்கள். ஒரு சிலரே அதை மூச்சு முட்டும் அளவு இழுத்துப் போர்த்துக் கொள்கிறார்கள், கஷ்டப்படுகிறார்கள். இந்த விஷயத்தில் அதை விட அபூர்வமானது நிர்வாணம். இந்த அபூர்வ மனிதர்கள் எல்லாம் பிறருக்கு என்று இருக்கிறார்கள், ஒருவன் பிறருக்கு தருவதை எல்லாம் தனக்கே தந்து கொள்கிறான் என்று புதிர் போடுகிறார்கள்.
பிறருக்காக வாழ்பவர்கள் வாழ்வில் எத்தனை நெருக்கடி இருந்தாலும், எத்தனை அவலம் இருந்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. அவர்கள் எவ்வளவு வைத்திருக்கிறார்கள் என்பதைக் கொண்டு அதை அளவிட முடியாது. எவ்வளவு கொடுக்கிறார்கள், என்னவாக இருக்கிறார்கள் என்பதுதான் அவர்கள் வாழ்வின் அர்த்தம். ஒரு பணக்காரனைப் பற்றி, “He is worth Billions,” என்கிறோம். ஆனால் ஒரு அம்மா அல்லது அப்பாவைப் பற்றி, அவர்தான் குடும்பத்துக்கு எல்லாம் என்கிறோம். யார் மதிக்கிறார்களோ இல்லையோ, இவர்கள் வண்டி இழுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நாம் என்ன செய்தோம் என்பது அல்ல, நாம் என்ன செய்கிறோம் என்பதுதான் இறுதி அளவை. செய்து முடிந்தவுடன் ஒன்றுமில்லை என்று கையைத் தட்டி விட்டுக் கொண்டே போக வேண்டியதுதான்.
செய்ததை வைத்துக் கொண்டிருப்பது, செய்ய வேண்டியதைப் பற்றிய கவலைகளை வளர்த்துக் கொண்டிருப்பது, வாழ்க்கையைச் சிக்கலாக்குகிறது. நம்மையே சிக்கலான ஆட்கள் ஆக்குகிறது. இதற்கு மாறாக, இப்போது என்ன இருக்கிறதோ, அதிலிருந்து பிறருக்கு கொடுப்பது, நம்மை விடுவிக்கிறது. என்ன செய்வது பிடித்திருக்கிறதோ, எது சுலபமாக இருக்கிறதோ, அதை நன்றாகச் செய்வது என்று இருக்கும்போது எல்லாம் சரியாய்த் தொடர்கின்றன. எனக்கு கணிதம் பிடித்திருக்கிறது, கவிதை பிடிக்கிறது என்றால் நான் கணித மேதையாகவோ நோபல் கவிஞனாகவோ ஆகாதபோதும், அதனால் ஒரு பைசா பிரயோசனப்படாதபோதும், என் ரசனை, என் நேசம், நான் கற்றுக் கொண்டது என் வாழ்வை ஏதோ ஒரு வகையில் வளமைப்படுத்துகிறது.
இதை எல்லாம் இன்னொருத்தார் எனக்கு வேறு சொற்களில் சொல்லலாம், ஆனால் உண்மையை நான் என் கண்களால் காண வேண்டும், என் இதயம் கொண்டு நான் உணர வேண்டும். அதுதான் உள்ளே இறங்கும், எனக்கு உதவும். பிறர் சொல்வதல்ல, நானே கற்றுக் கொள்வது.
நாமே இவ்வுலகம். நமதே இவ்வுலகம். நாம் இவ்வுலகின் நாயகர்கள். நம்மைப் பற்றி மட்டுமே நினைத்து இதை நாசமாக்கிக் கொள்ளலாம், நம்மைக் குறைத்துக் கொண்டு பிறருக்கு இடம் கொடுத்து, இதை நல்லதாக்கிக் கொள்ளலாம். பெரிய பெரிய விஷயங்கள் செய்ய வேண்டும் என்பதில்லை. குறுகிய மானப்பான்மையிலும் உணர்வின்மையிலும் நம்மையொத்த இந்த தன்னலம் கொண்டு உழலும் அவல மனிதர்களுக்கு நாம் செய்யும் ஒவ்வொரு சிறிய நன்மையும் மாற்றம் அளிக்கும்.
இந்த அர்த்தத்தில்தான் பிறருக்கு கொடுப்பதெல்லாம் நமக்கே கொடுத்துக் கொண்டதாகிறது. நம் வாழ்வு இவ்வாறுதான் செழுமையடைகிறது. பணத்தால் அல்ல, புகழால் அல்ல, அறிவால் அல்ல, சக மனித உறவுகளில்தான் வாழ்வின் மதிப்பு கூடுகிறது. இதயத்தில் என்ன இருக்கிறது, அதிலிருந்து என்ன வருகிறது என்பதுதான் கேள்வி. ஏனெனில், இதயம்தான் காயப்படுகிறது, தனிமையை உணர்கிறது, வலியால் துடிக்கிறது. பிறரை இணைத்துக் கொள்வதில், இன்னும் விரிவதில், ஆழப்படுவதில் அது குணமடைகிறது.
முன்னர் அனிமேக்கள் என்றாலே ஓர் ஒவ்வாமை எனக்கிருந்தது. என் புதல்விகள் இருவரும் இருபத்தி நான்கு மணி நேரமும் ரத்தமாய்ச் சொட்டும் அனிமேக்களை அலுக்காமல் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இத்தனை கொடூரமான அனிமேக்களைப் பார்ப்பதனால்தான் ஜப்பானில் அதிகம் பேர் தற்கோலை செய்து கொள்கிறார்கள் என்ற என் உலர் நகைச்சுவை அனுமானத்தை அவர்கள் முன் வைத்த போது சின்னவள் சொன்னாள் – அருமையான ஐடியா அப்பா! கிப்லி ஸ்டூடியோக்காரர்கள் இதே கருப்பொருளில் கூட ஓர் அனிமே தயாரித்துவிடுவார்கள்-என்றாள். இதெல்லாம் நான் “பர்ஃபெக்ட் ப்ளூ” அனிமே திரைப்படத்தைப் பார்க்கும் வரைதான்.
புதல்விகளுடன் அதிக நேரம் செலவழிப்பதில்லை என்று என்னிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தார் மனைவி. அவரின் வாதங்களுக்கு எதிர் வாதங்களை அடுக்க முடியாமல் நான் திணறிக் கொண்டிருந்த போது உதவிக்கு வந்தாள் மூத்தவள். தன் மடிக்கணினியைத் தொலைக்காட்சியோடு இணைத்து ஒன்றன்பின் ஒன்றாக டிஜிடல் விளம்பர பேனர்கள் குதித்துக் கொண்டிருக்கும் ஓர் இணைய தளத்திற்கு ஏகி “பர்ஃபெக்ட் ப்ளூ” படத்தை ஓட்டினாள். நான் மட்டுமல்ல மனைவியும் சண்டையிடும் ஆர்வத்தை இழந்து அமைதியானார். சின்னவளும் எங்களுடன் சேர்ந்து கொண்டாள். இப்படத்தை அவள் பல முறை பாரத்திருக்கிறாள். ஆனாலும் அடுத்து என்ன நடக்கும் என்று ஒரு குறிப்பும் தராமல் முதல் தடவையாக படத்தைப் பார்க்கும் அதே ஆர்வத்துடன் பார்த்தாள்.
கற்பனாவாதம் – யதார்த்தம் இரண்டையும் சேர்த்துக் கட்டிய திரைக்கதையமைப்பு. இரண்டும் சரிவிகிதத்தில் கலந்து எது கற்பனாவாதம் எது யதார்த்தம் என்ற குழப்பத்தை எழுப்பியவாறே காட்சிகள் பயணப்படும். அனிமேக்களின் பலம் அவற்றில் பயன்படுத்தப்படும் நிறங்கள். அமெரிக்க சூப்பர் ஹீரோ கார்ட்டூன்களிடமிருந்து மிகவும் மாறுபட்ட அனுபவத்தை அனிமேக்கள் நமக்குத் தருவதில் வெற்றி பெறுவதன் காரணம் இருண்மைக் கருக்கள் மட்டுமல்ல ; அனிமேக்களின் வியக்கத்தக்க நிறக்கூட்டும் தான். பெரும்பாலான அனிமேக்களில் செயற்திறனுடன் பயன்படுத்தப்படும் மட்டுப்படுத்தப்பட்ட உயிரூட்டல் (limited animation) எனும் உத்தி அனிமேவை கார்ட்டூன்களிலிருந்து வித்தியாசப்படுத்தும் இன்னோர் அம்சம். இயக்கமும் நகர்வும் கார்ட்டூனுக்கு இன்றியமையாதவை. மட்டுப்படுத்தப்பட்ட உயிரூட்டல் உத்தி வாயிலாக கலைத் தரத்தை நிலை நிறுத்துபவை அனிமே.
அனிமேக்களையும் கார்ட்டூனையும் ஒப்பிடுவதே பிழையானது என்றாள் பெரியவள். “கார்ட்டூன்கள் பொதுவாக ஓவியங்களின் முன்மாதிரிகளாகவோ ஆய்வுகளுக்கெனவோ பயன்படுத்தப்பட்டன. இப்போதெல்லாம் நகைச்சுவை மற்றும் நையாண்டிக்கான கேலிச்சித்திரங்களாகவே கார்ட்டூன்கள் வரையப்படுகின்றன. அனிமேக்கள் பெரும்பாலும் வாழ்க்கைச் சிக்கல்கள் அல்லது மனித உணர்வுகளுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ள விஷயங்களில் கவனம் செலுத்துக்கின்றன. வன்முறை சார்ந்த பாலியல் சார்ந்த கருப்பொருள்களை அனிமேக்கள் தைரியமாகச் சித்திரிக்கின்றன. கார்ட்டூன்களின் முக்கியக் குறிக்கோள் பார்வையாளர்களைச் சிரிக்க வைப்பதே” – பரவாயில்லையே, நிறைய யோசித்து வைத்திருக்கிறார்களே புதல்விகள் என்று அப்புறம் பெருமிதப்பட்டுக் கொள்ளலாமென்று படத்தில் கவனம் செலுத்தலானேன்.
பாப் பாடகியாய் பிரபலமடைந்த மீமா நடிகையாக முடிவு செய்கிறாள். நடிப்பு அவ்வளவு எளிதாக இல்லை. திரும்பத் திரும்ப டேக் வாங்கும் போது அவள் சலிப்படைகிறாள். பாப் பாடகியாக இருந்த நாட்களை அசை போடுவது நிற்கவேயில்லை. முன்னாள் பாடகி தன் முடிவில் அவ்வப்போது சந்தேகம் கொண்டாலும் முன் வைத்த காலை பின் வைக்கவில்லை. நடிக்கும் டீ வி தொடரில் குழு வன்புணர்வுக் காட்சியில் நடிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறாள். வனபுணர்வுக் காட்சியில் நடிப்பது அவளின் இமேஜுக்கு குழி பறிக்கும் என்ற அவளுடைய மேனேஜர் ரூமியின் அறிவுறுத்தலை உதாசீனப்படுத்திவிட்டு துணிச்சலாக நடிக்கத் தயாராகிறாள். யதார்த்தத்தில் மீமா எடுக்கும் முடிவுகள் அவளின் அகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. தன்னுடைய பாப் பாடகி பிம்பம் அவளைத் தொடர்ந்து அலைக்கழிப்பதாக உணர்கிறாள். அவளுடைய வெறி பிடித்த ரசிகன் ஒருவன் பின் தொடர்ந்தவாறிருக்கிறான். மொட்டைக் கடிதம், மிரட்டல்கள், தபால் வெடிகுண்டு என்று அவனின் stalking மிகத் தீவிரமடைகின்றது. மேனேஜர் ரூமிக்கு மீமாவின் முடிவுகள் ஏமாற்றத்தை அளிக்கின்றன. உடையில்லாமல் கவர்ச்சி போட்டோக்கள் எடுத்துக் கொள்கிறாள் மீமா. முக்கியப் பத்திரிக்கைகளின் நடுப்பக்கங்களில் மீமாவின் புகைப்படங்கள் வெளியாகி மிக்க வரவேற்பு பெறுகின்றன. வெறிபிடித்த ரசிகனுக்கு மன உளைச்சல் அதிகமாகிறது. ரூமி வேலையை விட்டு நின்று கொள்கிறாள். கற்பனை – யதார்த்தம் இரண்டுக்குமான இடைவெளி குறைந்து கொண்டே வருகிறது மீமாவுக்கு. அவளுடைய ஏஜன்ட், கவர்ச்சிப் படங்கள் எடுத்த போட்டோகிராஃபர் என ஒவ்வொருவராக கொலை செய்யப்படுகிறார்கள். தூங்கி விழித்தவுடன் என்ன கனவு கண்டோம் என்ற தெளிவிலாமல் யதார்த்தத்தினுள் விழித்திருக்கிறோமா அல்லது கனவிலேயே விழித்திருக்கிறோமா எனும் மயக்கத்தில் புழங்குகிறாள் மீமா. முகம் பார்க்கும் கண்ணாடி வழியே, அறையில் விளக்கொளிரும் இரவு நேரத்தில் ஜன்னல் கண்ணாடியினூடே அவளின் பாப் பாடகி ஆளுமை சதா பரிகசித்தவாறு இருக்கிறது. அவள் நடிக்கும் தொலைக்காட்சித் தொடரின் சம்பவங்களும் யதார்த்தத்தின் சம்பவங்களோடு இணைந்து கொள்கின்றன.
கிரகித்துக் கொள்ளவும் உற்றுக் கவனிக்கவும் இப்படத்தில் நிறைய உள்ளன. பித்துப் பிடிக்க வைக்கும் எடிட்டிங் மற்றும் சற்றும் எதிர்பாராத திருப்பங்கள் வாயிலாக மிக அனுபவம் வாய்ந்த திரில்லர் பட பார்வையாளர்களையும் பர்ஃபெக்ட் ப்ளூ திக்குமுக்காட வைக்கும்.
அன்றைய நாளில் நடந்த வருத்தமான நிகழ்வுகளை மனக்கவலையுடன் எண்ணியவாறே கதையின் மூலப்பாத்திரம் படுக்கையில் குப்புறப்படுத்திருக்கிறது. அங்குமிங்குமாக பொருட்கள் (அழகாக) சீர் குலைந்து கிடக்கின்றன. அறையின் ஓரத்தில் உள்ள மீன் தொட்டிக்குள் நீந்தும் மீன்களும் நகராமல் அடிவாரத்தில் இருந்த படி கண்ணாடியூடாக மூல பாத்திரத்தை நோக்கிக் கொண்டிருக்கின்றன. அறையின் கூரையின் வழியாக காமிரா படுக்கையை நோக்கினால் எப்படித் தெரியுமோ அதே போல ஒரு பறவைப் பார்வையாக அறை முழுதும் நமக்குக் காட்சிப்படுத்தப் படுகிறது. தன்னை யாரோ stalk செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற கவலையில் இருக்கும் மூல பாத்திரத்தை கிராபிக் சித்திரிப்பு வாயிலாக பார்வையாளர்களையே stalk செய்ய வைக்கிறது திரைப்படம். இந்த ஓவியத்தை எங்கோ பார்த்திருக்கிறோம் என்று நான் யோசித்துக் கொண்டிருந்த போது – இது தான் என் வாட்ஸப் டிபி – என்றாள் சின்னவள்.
படத்தின் நடுவே சின்னவள் சொன்ன ஒரு குறிப்பு என்னைத் தொந்தரவு செய்தது. சற்று ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. கடந்த பத்தாண்டுகளில் வெளியான படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படமொன்று இந்த பர்பெக்ட் ப்ளூவின் தழுவல் என்றாள். அவள் குறிப்பிட்டது டேரன் அரனோஃப்ஸ்கியின் பிளாக் ஸ்வான் படத்தை. பிளாக் ஸ்வான் பற்றி அந்தக் காலத்தில் கட்டுரை கூட எழுதியுள்ளேன். (ப்ளாக் ஸ்வான்))
ஒரு பெண் கலைஞர் அவரின் தொழில் வாழ்க்கையின் அதிகரிக்கும் அழுத்தங்களின் விளைவால் யதார்த்தத்தின் பிடியை இழந்து பித்து நிலைக்குள் வீழ்கிறாள். இது 2010இல் வெளியான பிளாக் ஸ்வானின் கதைச் சுருக்கம் மட்டுமில்லை. பிளாக் ஸ்வான் வெளியாவதற்கு பதிமூன்று வருடங்கள் முன்னதாக ஜப்பானில் வெளிவந்த பர்ஃபெக்ட் ப்ளுவின் கதைச் சுருக்கமும் இதுவே தான்.
அனிமே படங்களின் விசிறியாக இல்லாதவர்கள் பர்ஃபெக்ட் ப்ளூ படம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பது கூட அரிது. ஆனால் சடோஷி கோன் எனும் இயக்குனரின் மாஸ்டர் பீஸ் இது என்று புகழப்படுகிறது, சைகலாஜிகல் த்ரில்லர் வகைமைப் படங்களின் ரசிகர்களுக்கு பர்ஃபெக்ட் ப்ளூ முக்கியமான படமாகக் கொண்டாடப்படுகிறது. ப்ளாக் ஸ்வானும் ஒரு மைல்கல் படமாகக் கருதப்படுகிறது. நடிகை நடலி போர்ட்மேனுக்கு அகாடமி விருதைப் பெற்றுத் தந்ததோடு விமர்சகர்களின் பாராட்டு, வணிக ரீதியான வெற்றி – இரண்டையும் ஒருங்கே பெற்ற படம்.
கரு, முக்கியப் பாத்திரப் படைப்பு மற்றும் விஷுவல்கள் – இவ்விஷயங்களில் இரண்டு கதைகளுக்கும் ஏகப்பட்ட ஒற்றுமை. பிளாக் ஸ்வான் இயக்குனர் டேரன் இரு படங்களுக்கிடையிலான ஒற்றுமைகளை ஏற்கிறார். ஆனால் பர்பெக்ட் ப்ளூவின் தாக்கம் பிளாக் ஸ்வான் என்பதை மறுக்கிறார்.
பிளாக் ஸ்வான் நினா என்னும் பால்லரீனாவின் கதையைச் சொல்கிறது. ஸ்வான் லேக் என்னும் நாட்டிய நாடகத்தின் மூல பாத்திரத்தைப் பெறும் போட்டியில் பங்கேற்கும்போது தன் இயல்பு நிலையைத் தக்க வைக்கப் போராடுகிறாள் நினா. பர்பெக்ட் ப்ளூவின் மீமா பாப் பிரபலம் என்னும் தன் நிலையைத் துறந்து தீவிர நடிகையாகும் முயற்சியில் யதார்த்தத்தின் பிடியை இழக்கிறாள். மேலோட்டமாக இரு வெவ்வேறு பாத்திரங்களின் வேறுபட்ட கதையைச் சொன்னாலும் இரண்டு படங்களின் கருவும் சொல்ல வரும் கருத்தும் மிகவும் ஒத்திருக்கின்றன.
இரண்டு கதைகளும் ஒரே மாதிரியான கதைக்களத்தைக் கொண்டுள்ளன. இரண்டு கதாபாத்திரங்களும் மிகவும் அழுத்தமான சூழல்களைச் சந்திக்கின்றன. இது அவர்களின் அடையாளம் குறித்த கேள்விகளை அவர்களுள் எழுப்புவதோடு இறுதியில் அவர்களின் ஆன்மாவை குழப்பும் ஓர் doppelganger-ஐ உருவாக்குகிறது. நினா ஒரு நடன கலைஞராக இருப்பதன் அழுத்தத்தால் பாதிக்கப்படுவது போல, மீமாவும் ஜப்பானிய பிரபலம் எனும் தகுதியின் கடுமையான எதிர்பார்ப்புகளைச் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
இரு பாத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கையின் பிரச்னைகள் தொழில் வாழ்க்கையிலும் கசிவது இரண்டு படங்களில் காணப்படும் இன்னொரு ஒற்றுமை. நினாவைப் பொறுத்தவரை இது அவளின் தாயின் ரூபத்தில் வருகிறது. மீமாவின் சூழ்நிலையில் ஒரு ஸ்டாக்கர் ரசிகர் வாயிலாக வருகிறது. தமக்கு நெருக்கமானவர்களால் கட்டமைக்கப்பட்ட innocent என்னும் பிம்பத்தை உடைத்தெறிந்து இரு பாத்திரங்களுமே படங்களின் குறிப்பிட்ட கட்டத்தில் பாலியல் விழிப்புணர்வை எய்துகின்றன. இரண்டு நாயகிகளும் தமக்குத் தாமே ஓர் உளவியல் போரில் ஈடுபடுகின்றனர். இதன் விளைவாக கற்பனைக்கும் யதார்த்தத்துக்குமிடையிலான கோடுகளை மங்கவைக்கும் மாயத்தோற்றம் ஏற்படுகிறது.
படத்தைப் பார்த்து முடித்தவுடன் சற்று நேரத்துக்கு அலசல் தொடர்ந்தது. பெரியவள் முன் வைத்த முன்னோக்கு படத்தை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள உதவியாக இருந்தது. – “நான் இதை coming of age வகைமை படமாகப் பார்க்கிறேன். இளம் பாப் பாடகியின் தொழில் வாழ்க்கை எத்தனை நாள் நீடிக்கும்? நடிப்புத் தொழில் மீமாவின் நடைமுறைத் தேர்வு. மேலதிக புகழும் அங்கிகாரமும் பெறுவதற்கான வழி. ஆனால் இந்த மாற்றம் எளிதானதல்ல. பழைய அனுபவங்களின் சாதனையுணர்வை புதுத் தொழில் உடனடியாக கொடுத்துவிடாது. பழைய தொழில் வாழ்க்கை பற்றிய இழப்புணர்வில் ஆழ்ந்திருப்பது புது யதார்த்தத்தை ஏற்பதாகாது. அந்த இழப்புணர்விலிருந்து மீளாமல் புதுத் தொழிலின் சாத்தியங்களை அறுவடை செய்ய இயலாது. பிளாக் ஸ்வானிலிருந்து இவ்விதத்தில் இப்படம் மாறுபடுகிறது என்பது என் எண்ணம்.”
பத்தாண்டுகளுக்கு மேலாக பணி புரிந்த நிறுவனத்திலிருந்து விலகி வேறொரு நிறுவனத்தில் உயர் பதவியேற்றுள்ள நான் இந்த மாற்றத்தை எப்படி எதிர்கொள்கிறேன்? பரிச்சயமான சூழலில் நன்கு பழக்கமான சக-அலுவலர்களுடன் வேலை செய்வது ஏறத்தாழ இரண்டாம் இயல்பாக மாறி விடுகிறது. செய்து முடித்த வெற்றிகரமான பணிகள், அடைந்த இலக்குகள், கிடைத்த அங்கிகாரம் – இவையெல்லாம் நினைவில் அடிக்கடி வருகின்றன. பழகிய நண்பர்கள் தொடர்பு கொள்ளும் போது நினைவேக்கத்துடன் பழைய அனுபவங்களைப் பேசுதல் ஒரு விதத்தில் அபத்தமாகவும் உள்ளது. நானே விரும்பி எடுத்துக்கொண்ட வாய்ப்புதானே இது? புதிது புதிதாகத் தானே தெரியும்? ஆனாலும் புது அலுவலகத்தின் எந்த விஷயத்தையும் பழைய அனுபவங்களோடு ஒப்பிடுதல் சதா மனதில் நிகழ்ந்தவாறுள்ளது. புது சகாக்களை பழைய சகாக்களுடன் புது வேலையமைப்புகளை பழையவற்றுடன்….ஒப்பீடுகள் ஓய்வதில்லை. நாம் புது நிறுவனத்தில் ஏற்றுக் கொள்ளப்படுவோமா…நம் வேலைக்கு அங்கிகாரம் கிட்டுமா…நம் அதிகாரிகள் நம்மை அமைதியாய் வேலை செய்ய விடுவார்களா….புதிய அதிகாரி புது சகாக்களும் நம்மைப் பற்றி மட்டமாக எடை போடுகிறார்களோ….நான் எப்போது தப்பு செய்வேன் என்று ஆர்வமாய் காத்திருக்கிறார்களோ…தோல்விப்பயம் நம்மை பிடித்தாட்டுகிறதே….பாதுகாப்பின்மை நம் குரல் வளையைக் கவ்வுகிறதே…கோபமும் உதவியற்ற உணர்வும் ஒருசேர கோர தாண்டவம் ஆடுகின்றனவே….முகத்தில் கடிதத்தை வீசியெறிந்துவிட்டு நகர்ந்துவிடலாமா….தோன்றும் எல்லா எண்ணங்களையும் செயற்படுத்தாமல் இருப்பது எத்தனை பெரிய வரப்பிரசாதம்! நினா யதார்த்தத்திலிருந்து தூர தூர விலகி்…தமக்குள்ளேயே போரில் ஈடுபட்டு…பிடியிழந்து…திரும்பவியலா பாதையில் செல்வது போல நாம் எண்ணுகின்றவற்றுக்கும் நமக்கமையும் யதார்த்தத்துக்கும் இடையிலான வெளி அதிகமாகாமல் பார்த்துக் கொள்ளுவது மாற்றத்தை நாம் ஏற்றுக் கொள்வதற்கான முதல் புள்ளி. வேலை மாற்றம் மட்டுமில்லை…வாழ்வின் எந்த மாற்றமும் எளிதானதல்ல…மீமாவைத் தள்ளாடச் செய்த புது மாற்றம், புதுத் தெரிவு – நடிப்புத் தொழில் என்றில்லை, எந்த வித மாற்றமாயிருந்தாலும் – நம்மையும் தள்ளாட வைக்கும்….
“அப்பா…அப்பா….” – சத்தம் போட்டு அழைத்து மனைவி கொடுத்தனுப்பிய தேநீரை என் கையில் கொடுத்தாள் சின்னவள்.
“டேரன் அரனோஃப்ஸ்கி சுட்டதுக்கே இப்படி அதிர்ச்சி ஆனா எப்படி? நோலனும் சடோஷி கோன் கிட்டர்ந்து சுட்டுருக்கார்…உனக்கு புடிச்ச இன்செப்ஷன் படத்துக்கு ‘இன்ஸ்பிரேஷன்’ எதுன்னு நெனைக்கிற? சடோஷி கோன் இயக்கிய அனிமே படம் Paprika தான்….அடுத்த அதிர்ச்சிக்கு தயாரா?” – என்று கேட்டாள்.
நெடுங்காலமாக சாதனாவில் ஈடுபட்ட சாதகனின் மேல் கருணை கூர்ந்து கடவுள் அவன் முன் பிரசன்னமாகிறார். “உனக்கு வேண்டும் வரத்தை கேள்” என்கிறார். சாதகன் அதற்கு பதிலளிக்கிறான் : “எப்போதெல்லாம் நான் உம்மை காண விரும்புகிறேனோ அப்போதெல்லாம் நீங்கள் எனக்கு தரிசனம் தர வேண்டும்” “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி கடவுள் அவன் பார்வையிலிருந்து மறைகிறார். பக்தன் மிக்க ஆனந்தத்தில் லயிக்கிறான். எப்போதெல்லாம் அவன் விரும்புகிறானோ கடவுள் தோன்றிய வண்ணம் இருக்கிறார். ஒரு நாள் சாதகன் சொல்கிறான் : “என்னை விட்டு விலகாமல் என்னுடனேயே நீங்கள் இருக்க வேண்டும்” இந்த வரமும் அவனுக்கு வழங்கப்படுகிறது. கடவுள் அவனுடனேயே இரவும் பகலும் இருக்கிறார். சாதகன் அளவிலா ஆனந்தத்தில் மூழ்கிக் கிடக்கிறான். இதன் விளைவு? ஒரு நாள் அவனுள் ஒரு புது எண்ணம் பிறக்கிறது. “கடவுள் என் முன்னம் தோன்றுவதற்கு முன்னர் அவரைக் காணும் ஆழமான ஆவல் அதிகமாய் இருந்தது. இப்போது அப்படி இல்லை. அந்த தீவிரமான விழைவுணர்வை நான் இழந்திருக்கிறேன்” மீண்டும் கடவுளிடம் பிரார்த்திக்கிறான். “உன்னைப் பிரிந்த போது நானுற்ற ஆழ்ந்த ஏக்கத்தை மீண்டும் எனக்குக் கொடு” அவன் கேட்டது அருளப்படுகிறது.
+++++
ஆசிரம வாசலை இரு மருங்கிலும் மரத்தில் செதுக்கப்பட்ட இரு புலிகள் காவல் காத்துக் கொண்டிருந்தன. இரையின் மீது பாயத் தயாராக இருப்பது போல் அவை தத்ரூபமாக வண்ணமிடப்பட்டிருந்தன. ஒரு முறை ஆசிரமத்துக்கு வெளியே ஒரு நாய் பசியாறுவதற்காக வந்தது. ஆனந்தமயி மா மரப்புலிகளுக்கருகே நாய்க்காக உணவு வைத்தார். நாய் குழம்பியது போல் காணப்பட்டது. உணவை சாப்பிட அதற்கு ஆவல்தான்.ஆனால் புலிகளின் மீதான பயம் அந்த உணவை சாப்பிடவிடாமல் தடுத்தது. நாயின் நிலைமை முக்கால்வாசி மனிதர்களின் நிலை போலவே கற்பனை பயங்களினால் கட்டுண்டிருப்பதாக ஆனந்தமயி மா நகைச்சுவையாகச் சொன்னார்.
+++++
வணிகன் ஒருவன் வியாபார காரணங்களுக்காக பயணமானான். அவனுடன் வியாபாரி என்ற போர்வையில் திருடன் ஒருவன் வணிகனிடமிருந்து வழிப்பறி செய்யும் எண்ணத்துடன் கூடவே சென்றான். ஒவ்வொரு காலையும் முந்தைய நாளிரவு அவர்கள் தங்கியிருந்த விடுதியில் இருந்து அன்றைய அலுவல்களுக்காக கிளம்பும் போது வணிகன் தன்னிடமிருக்கும் பணத்தை பகீரங்கமாக எண்ணி தன் சட்டைப்பைக்குள் போட்டுக் கொள்வது வழக்கம். சந்தேகப்படாதவன் போல் இரவில் வணிகன் தூங்கச் செல்வான். அவன் தூங்கிய பிறகு திருடன் வணிகனின் பயணச்சுமைகளை சோதனை போடுவான். பைகளை நோண்டுவான். ஆனால் அவனால் வணிகனின் பணத்தை கண்டுபிடிக்கவே முடியாது. பல இரவுகள் அவன் முயற்சி செய்தும் நோக்கம் நிறைவேறாதது திருடனுக்கு எரிச்சலேற்படுத்தியது. இறுதியில் முயற்சியைக் கைவிட்டு தன்னுடைய நோக்கத்தை ஒப்புக்கொண்டு இத்தனை வெற்றிகரமாக பணத்தை எங்கு ஒளித்து வைத்திருந்தான் என்பதை வணிகனிடம் கேட்டான். வணிகன் சொன்னான் : “துவக்கத்தில் இருந்தே உன் நோக்கத்தை நான் அறிவேன். ஆகவே, தினமும் என் பணத்தை உன் தலையணைக்கடியில் வைத்து விடுவேன். அந்த ஒரு இடத்தில் மட்டும் நீ என் பணத்தை தேடவே மாட்டாய் என்பதால் என்னால் நிம்மதியாய் தூங்க முடிந்து”
புனே வந்த தினத்திலிருந்தே தினமும் மழை. நிற்காமல் தூரிக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது கனமழையும். அபார்ட்மென்டுக்குப் பின்னால் சிறிய மலைத்தொடர். அதன் சரிவில் கட்டப்பட்ட கட்டிடம். திகில் பட பின்னணி இசை போல இரவு முழுதும் பலமான காற்றின் சத்தம். நேற்று நடு இரவில் போர்வையினால் காதை மறைத்துக் கொண்டு தூங்க முயல்கிறேன். திடீரென நெருப்பு அலார்ம். அடித்துப் போட்டுக் கொண்டு செருப்பு கூட அணியாமல் அபார்ட்மென்டுக்கு வெளியே வருகிறேன். கதவடைத்துக் கொண்டுவிடுகிறது. சாவியை எடுக்க மறந்துவிட்டேன். “ஃபால்ஸ் அலார்ம்” என்கிறார் வாட்ச்மேன். மற்ற பிளாட்டுகளிலிருந்து ஒருவரும் வெளிவரவில்லை. “இது இங்கே அடிக்கடி நடக்கிறது தான்” என்று வாட்ச்மேன் சொன்னதும் “எது? சாவி வீட்டுக்குள்ளேயே இருக்க கதவு வெளியிலிருந்து மூடிக் கொள்வதா?” என்று கடுப்புடன் கேட்கிறேன். “விசிட்டர் லௌன்ஜில் உட்கார்ந்துகிட்டே தூங்குங்க நாளைக்காலை பார்ப்போம்” என்கிறார். விசிட்டர் லௌன்ஜில் காற்றின் சத்தம் கேட்கவில்லை. மழை சத்தம் இல்லை. ரிசப்ஷனில் உறங்கும் வாட்ச்மேனின் பலமான குறட்டை சத்தம் மட்டும். எனக்கு கோபம். போர்வையை எடுத்து வந்திருக்க வேண்டும்! சட்டையையாவது அணிந்து வந்திருக்க வேண்டும். சாவியை மறக்காமல் எடுத்து வந்திருந்தால் செருப்பு அணியாததோ சட்டை அணியாததோ பெரிய தப்பாக தெரிந்திருக்காது. இரு கோடுகள் தத்துவம் என்று ஏதோ சொல்வார்களே!
புனே ஹார்ரர்
நகரத்துக்கு நான் வேண்டா விருந்தாளியோ! என் கேள்வியில் நியாயமிருக்கிறது என்றே நம்புகிறேன். திகிலிசை போன்று வீசும் காற்று, தானே மூடித் தாழ் போட்டுக்கொள்ளும் கதவு, ஆளரவமற்ற, காலியான ப்ளாட்டுகள், ம்….வார இறுதியில் இன்னொரு ஹார்ரர்…அறையில் தனித்திருந்து சலித்துப் போய் ஆறு மணியளவில் வாக்கிங் போகலாம் எனக்கிளம்பினேன். நேற்றிரவு இருந்த வாட்ச்மேனைக் காணோம். வரவேற்பு லாபியில் ஈ, காக்காய் இல்லை. நானூறு மீட்டர் தொலைவில் இருந்த கேட் வரை ஒருவரும் காணவில்லை. கேட்டைத் தாண்டி சாலையில் வந்தாலும் நிலைமையில் மாற்றமில்லை. ரோடில் கார்களோ, லாரிகளோ, ஆட்டோ ரிக்ஷாக்களோ- எவற்றையும் காணோம். ஒரு (மஹாராஷ்டிர) வடைக் கடை இருந்தது. ஷட்டர் போட்டிருந்தார்கள். ஷட்டரை லேசாகத் திறந்து வெளியில் நின்றிருந்த ஆளுக்கு ஒரு பொட்டலத்தை கடைக்காரர் மர்மமான முறையில் கொடுத்துக் கொண்டிருந்தார். பொட்டலத்தை வாங்கிக் கொண்டவர் அடுத்த கணம் காணாமல் போனார். அவர் போன ஸ்கூட்டர் சத்தமிட்டதா என்று இப்போது ஞாபகமில்லை. கடைக்குச் சென்று ஷட்டரைத் தட்டி “டீ கிடைக்குமா?” என்று கேட்டேன். என் பின்னால் யாரேனும் நிற்கிறார்களா என்பது போல் பார்த்தார். “டீ இல்லை, வடை பாவ் மட்டும் இருக்கிறது” என்று சொல்லி யோஜிம்போ திரைப்படத்தில் வரும் விடுதிக்காரர் பாத்திரத்தின் எக்ஸ்பிரஷனைத் தந்தார். நான் டோஷிரோ மிஃபுனே இல்லையே! வேகவேகமாக நடந்து அறைக்கு வந்து தாழ்ப்பாள் போட்டுக் கொண்டேன். வார இறுதி லாக்டவுன் எப்போது முடிவுக்கு வரும்?
வாஷிங் மெஷின் புதிர்
தங்கச்சங்கிலி இரவல் வாங்கினா- பாமா விஜயம் படப்பாடலை நான் வாழ்வேன் என்று நினைத்ததில்லை. புனேவுக்கு குடி புகுந்த பிறகு வாஷிங் மெஷினை வாடகைக்கு எடுத்துக் கொள்ள முடிவு செய்தேன். வீட்டு புரோக்கர் குல்வீர் அறைகலன்களையும் வாடகைக்கு தருகிறேன் என்றான். ஐந்தாறு நாட்களாயின. வாஷிங் மெஷின் வந்த பாடில்லை. ஆடைக்குவியல் வளர்ந்து கொண்டிருந்தது. தினமும் சாவியை கேட்டில் கொடுத்துவிட்டு அலுவலகம் சென்று கொண்டிருந்தேன். சாயந்திரம் கேட்டிலிருந்து சாவியைப் பெற்றுக் கொள்ளும் போது “குல்வீர் வந்தாரா” எனக் கேட்பேன். யாரும் வரவில்லை என்று விடை கிடைக்கும். ஒரு நாள் பால்கனியில் நீல நிற வாஷிங் மெஷின் வைக்கப்பட்டிருந்தது. பழைய மெஷின். எலக்ட்ரானிக் டிஸ்ப்ளே கண்களையிழந்து பிதுங்கியிருந்தது. ஆடைக்குவியலில் அன்று அணிந்திருந்த ஆடையும் சேர்ந்தது. அடுத்த நாள் விழி பிதுங்கிய மெஷினின் இடத்தில் இன்னொரு மெஷின். அதற்கு பிளாஸ்டிக் ஆடை அணிவிக்கப்பட்டிருந்தது. ஸ்விட்ச் ஆன் செய்து பார்த்தேன். தண்ணீர் பிய்ச்சியடித்து தொப்பலாக நனைந்து போனேன். வாஷிங் மெஷின் உருவில் வந்த வாஷிங் “பேசின்” அது என்று புரிந்தது. அடுத்த நாள் வாஷிங் “பேசின்” அங்கேயே கிடந்தது. ஆனால் கூடவே இன்னொரு வாஷிங் மெஷின் சேர்ந்திருந்தது. புதிது போல் தோற்றம் அதற்கு. ஆடைக்குவியலின் உயரத்தை பார்த்து வெட்கம் தாளாமல் சில துணிகளை எடுத்து புதிதாகச் சேர்ந்திருந்த வாஷிங் மெஷினுள் போட்டேன். வரும் வார இறுதியில் தோய்த்துவிட வேண்டும். குல்வீர் சாவியில்லாமல் எப்படி வீட்டுக்குள் வருகிறான் என்ற கேள்வி இன்னமும் குடைந்து கொண்டிருக்கிறது.
தொடரும் ஹார்ரர்
இது முற்றிலும் புதிது. இரண்டு வார இறுதிகளாக நிகழ்வுகளுக்கு அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. சென்ற வாரம் ஒரு கதை சொல்லல் நிகழ்வு. முரகாமியின் the elephant vanishes கதையை யாரோ வாசிப்பதாக இருந்தது. அதைத் தொடர்ந்து அந்த கதை பற்றிய கருத்துகள் பகிரப் படுமாம். இந்த வாரம் toast masters federation-இன் ஒரு நிகழ்வு. Cyber security பற்றி சக அலுவலர் ஒருவர் உரையாற்றப் போகிறாராம்! இவையொன்றும் புதிதல்ல. எது புதிது எனில் வாராது வந்த இரண்டு அழைப்புகளையும் ஏற்றுக் கொள்ளாமல் மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டு நான் உட்கார்ந்திருப்பதுதான் புதிது.
சமீபத்தில் தமிழமுது அமைப்பு நடத்திய இணைய வழி சந்திப்பில் என் புத்தகம் – சக்கரவாளம் – குறித்த மதிப்புரையை திருமதி சித்ரா பாலசுப்ரமணியன் அவர்கள் வழங்கினார். மதிப்புரையைத் தொடர்ந்து நடந்த கேள்வி – பதில் பரிமாற்றத்தில் நான் பங்கு கொண்டேன். கேள்வி – பதில் காணொளியின் யூ-ட்யூப் லிங்கை இத்துடன் பகிர்கிறேன்.
மேலாண்மை, கிராமப் பொருளாதாரம், இலக்கியம் என்று பல துறைகளில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர் நண்பர் பாலசுப்பிரமணியம் முத்துசாமி அவர்கள். கிழக்கு ஆப்பிரிக்காவில் வசித்தாலும் இந்தியாவின், குறிப்பாக தமிழ் நாட்டின் பொது நலம் சார்ந்த விஷயங்களில் தொடர்ந்து சிந்தித்தும் எழுதியும் வருபவர். சில மாதங்கள் முன் தமிழினி இணைய இதழில் அவர் எழுதிய உழவர்கள் சத்தியாக்கிரகம் எனும் கட்டுரை அவருடைய அனுமதியுடன் இங்கு சிறப்புப் பதிவாக வலையேற்றம் பெறுகிறது. நண்பர் முத்துசாமிக்கு எனது நன்றி.
கடந்த 50 நாட்களாக தில்லியின் நெடுஞ்சாலைகளை முற்றுகையிட்டு, உழவர்கள் நடத்தி வரும் போராட்டம் ஒரு வரலாற்று நிகழ்வாகும். இதற்கு முன்பு, மராத்திய மாநிலத்தில் நடந்த 150 கிலோமீட்டர் தூரம் மக்கள் கால்நடையாகச் சென்ற பேரணியும் முக்கியமான ஒன்று எனினும், அது சில நாட்களில் நடந்து முடிந்து விட்டது.
இந்தப் போராட்டம் வெற்றிகரமாக நடக்க முக்கியக் காரணம் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள உழவர்களும், உழவர் சங்கங்களும் ஒன்றிணைந்து, 3-4 மாத போராட்டத்துக்கான மனநிலையுடனும், உணவு, படுக்கை போன்ற முன்னேற்பாடுகளுடனும் வந்ததுதான். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பஞ்சாப், ஹரியானா உழவர்கள் ஓரளவு வசதியானவர்கள் என்பதும், இந்தச் சட்டங்கள் அவர்களை நேரிடையாகப் பாதிக்கலாம் என்னும் அச்சமும் இதர காரணங்கள்..
ஆனால், இந்தப் போராட்டங்கள் இந்த மூன்று சட்டங்களை மட்டுமே எதிர்த்து நடக்கிறதா என்றால் ஆம் என ஒரு வார்த்தையில் பதில் சொல்ல இயலாது.. இதன் உண்மையான காரணங்கள், இந்தச் சட்டங்கள் பேசும் தளத்திற்கும் அப்பாற்பட்டவை. இந்தியா மட்டுமல்ல, உலக அளவில் வேளாண்துறை எதிர் கொண்டிருக்கும் சிக்கல்கள் அவை. அரசின் மூன்று சட்டங்களும், ஏற்கனவே நீறு பூத்த நெருப்பாக இருந்த பிரச்சினையை ஊதிக் கொளுந்து விட்டு எரியச் செய்து விட்டன.
வேளாண் துறையின் அடிப்படைச் சிக்கல்கள்:
தேவேந்தர் ஷர்மா என்னும் வேளாண் பொருளியல் நிபுணர் சமீபத்தில், பசுமை விகடனுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில், வேளாண்துறை குறிப்பாக இந்திய வேளாண் துறை சந்திக்கும் சிக்கல்களை மிக விரிவாக ஆராய்ந்து முன் வைத்தார்.
அவர் வைக்கும் முதல் வாதம் – வேளாண் துறை மற்ற துறைகளுடன் ஒப்பிடுகையில், பொருளியல் பரிவர்த்தனைகளில் (terms of trade), பின் தங்கி விட்டது. எடுத்துக்காட்டாக, 1970 ஆம் ஆண்டு துவங்கி, அடுத்த 45 ஆண்டுகளில் வேளாண் வருமானமும், மற்ற துறை வருமானங்களும் எப்படி உயர்ந்தன என்னும் ஒப்பீட்டை தேவேந்தர் முன்வைக்கிறார்.
1970 ஆம் ஆண்டு, கோதுமையின் அடிப்படை விலை குவிண்டாலுக்கு 76 ரூபாய். 2015ல், அது 1450 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது 19 மடங்கு உயர்வாகும்.. இதே காலகட்டத்தில், அரசு ஊழியர்களின் ஊதியம் 120-150 மடங்கு உயர்ந்துள்ளது. கல்லூரி ஆசிரியர்களின் ஊதியம் 170 மடங்கும், பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் 320 மடங்கும் உயர்ந்திருக்கிறது.. 40-50 ஆண்டு கால வெளியில் உழவர்கள் ஒப்பீட்டளவில் வருமானம் மிகக் குறைந்து, இன்று 80% க்கும் அதிகமான உழவர்கள் நட்டத்தில் வேளாண்மை செய்துவருகிறார்கள். இதுதான் ஆதாரப் பிரச்சினை என்கிறார் தேவேந்தர்.
இந்தப் புள்ளி விவரத்தைச் சொன்னவுடனேயே உடனே மராபார்ந்த வேளாண் பொருளியல் நிபுணர்கள் ஓடி வந்து முன்வைக்கும் தீர்வுகள் என்ன? இந்தியாவின் வேளாண் அலகுகள் மிகச் சிறியவை. அதனால் உழவர்களால் உற்பத்தியைப் பெருக்க முடியவில்லை.. அதனால், வேளாண்மை லாபகரமாக இல்லை. எனவே, வேளாண் வர்த்தகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பெரும் வேளாண் பண்ணைகள் உருவாக்கப்பட வேண்டும்.. அதை அரசு செய்ய முடியாது.. எனவே தனியார் இதில் அனுமதிக்கப்பட்டு, முதலீடுகள் செய்ய அனுமதிக்க வேண்டும்.. அப்போதுதான் உற்பத்தி பெருகும். வேளாண்மை லாபகரமாக மாறும் என்பது அவர்கள் தீர்வு.
இந்தத் தீர்வு எவ்வளவு உண்மை என்பதை, உலகின் மிகப் பெரும் முதலாளித்துவ நாடான அமெரிக்கா இதே கொள்கையை 50 ஆண்டுகளுக்கு முன்பு முன்னெடுத்ததை வைத்துப் புரிந்து கொள்ள முயல்வோம்.
1970 களின் அமெரிக்க அதிபர் நிக்ஸனின் வேளாண் துறை ஆலோசகர் எர்ல் பட்ஸ், அமெரிக்க வேளாண் பண்ணைகள் பெரியதாக வேண்டும் – பெரிதாகு இல்லையே வெளியேறு என்னும் ஒரு கருதுகோளை முன்வைத்தார். அப்போதுதான், தொழில்நுட்ப முதலீடுகள் அதிகரித்து, உற்பத்தி பெருகி லாபம் பெருகும் என்பதே அந்தக் கருதுகோளின் அடிப்படை. அதன் விளைவுகளைக் காண்போம்.
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், அமெரிக்காவில் கிட்டத்தட்ட 60 லட்சம் பண்ணைகள் இருந்தன. சராசரி வேளாண் அலகு, 200 ஏக்கராக இருந்தது. 60 களுக்குப் பின்பு, இந்த அலகுகள் பெரிதாகி, இன்று 440 ஏக்கர் என உயர்ந்திருக்கிறது.
வேளாண் பொருள் உற்பத்தி 4-5 மடங்கு பெருகியிருக்கிறது. உலகின் மிகப் பெரும் மக்காச் சோளம் மற்றும் சோயா பீன்ஸ் உற்பத்தியாளர் அமெரிக்கா.
ஆனால், வேளாண் வருமானம் பெருகவில்லை.. இன்றைய அமெரிக்க வேளாண் வருமானத்தை, பண வீக்க அளவை நீக்கிப் பார்க்கையில், 1970 களில் இருந்து தொடர்ச்சியாக வருமானம் வீழ்ந்து கொண்டேயிருக்கிறது. 2006 க்குப் பின் வருமானம் உயர்ந்தது என்றாலும் 1970 களின் அளவை இன்னும் அடையவில்லை.
1970 களில், அமெரிக்காவில் 6.5 லட்சம் பால்பண்ணைகள் இருந்தன. 1980 களில், சராசரியாக 90 மாடுகள் இருந்த பால்பண்ணை, இன்று 900 மாடுகளாக உயர்ந்துள்ளது. இன்று 75 ஆயிரம் பால் பண்ணைகள் உள்ளன. அவற்றுள் 40 ஆயிரம் பண்ணைகள் நஷ்டத்தினால் மூடப்பட்டுவிட, இன்று இயங்கிக் கொண்டிருப்பவை 35 ஆயிரம் மட்டுமே.
2013 ஆம் ஆண்டுக்குப் பின்பு, 50% வேளாண் பண்ணைகள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. அமெரிக்காவில் வேளாண் துறையில் ஈடுபட்டிருப்பவர்கள் 26 லட்சம் பேர் (மக்கள் தொகையில் 0.8%). அமெரிக்காவின் சராசரி வேளாண் பண்ணையின் அளவு 440 ஏக்கர்கள். அமெரிக்காவில் வேளாண்மை, அதன் பொருளாதாரத்தில் 0.6% மட்டுமே பங்களிக்கிறது. அமெரிக்கா உழவருக்கு வழங்கும் மானியம் ஒருவருக்கு வருடம் 44 லட்சம் ரூபாய் (62000 டாலர்).
இந்தியாவின் சராசரி வேளாண் அலகு 2.5 ஏக்கர். இதில் ஈடுபட்டிருக்கும் மக்கள் தொகை கிட்டத்தட்ட 65 கோடி (மக்கள் தொகையில் 50%). இந்தியப் பொருளாதாரத்தில் வேளாண்மையின் பங்கு 15%. 1950 களில் இந்திய தானிய உற்பத்தி 51 மில்லியன் டன். இந்த ஆண்டு உற்பத்தி 300 மில்லியன் டன். சராசரி இந்திய உழவர் பெறும் மானியம் வருடம் 20 ஆயிரம் ரூபாய். இந்திய உழவர்களில் 80% பேர் நஷ்டத்தில் இயங்கி வருகிறார்கள்..
அமெரிக்காவில் பெரிதாகு இல்லையேல் வெளியேறு என்னும் முழக்கத்துடன் பெரும் வேளாண்/பால் பண்ணைகள் உருவாகி வந்த அதே காலகட்டத்தில், வால் மார்ட் போன்ற சில்லறை விற்பனை வணிகச் சங்கிலிகள் உருவாகி வந்தன. இவை பெரும் அளவில் வேளாண் பொருட்களை உழவர்களிடம் இருந்து கொள்முதல் செய்யும், இதனால், உற்பத்தி சரியான உணவுத் தொடர்புச் சங்கிலிகள் வழியாக நுகர்வோரை அடையும்.. பெரும் அளவிலான கொள்முதல், பெரும் பொருளியல் அலகுகள் இவையிணைய, உழவர்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்னும் ஒரு கருத்தியல் முன்வைக்கப்பட்டது.
ஆனால், அந்தப் பெரும் சில்லறை வணிகக் குழுமங்கள், பெரும் அலகு கொள்முதல் என்னும் அதிகாரத்தை உபயோகித்து, கொள்முதல் விலைகளைக் குறைத்து, தங்கள் பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொண்டன.. உற்பத்தியாளர் வேறு, கொள்முதலாளர் வேறு என்னும் நிலையில், யாரிடம், பொருளைக் கொள்முதல் செய்து நுகர்வோருக்கு அளிக்கும் தொடர்புச் சங்கிலி உள்ளதோ, அவரே, அந்தப் பலத்தை முன்னிறுத்தி, பொருளாதார பேர மேசையில், லாபத்தை அடைவார் என்பதே உண்மை. அதுவே நடந்தது.
இந்த சம நிலையில்லாப் பேரக் கட்டமைப்பில், நுகர்வோர் பொருட்களை வாங்கும் விலையில், மிகக் குறைவான சதவீதத்தையே உற்பத்தியாளர்கள் பெற முடிந்தது. எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில், பால் பொருட்களுக்கு, நுகர்வோர் வாங்கும் விலையில், 28-30% வரையே உற்பத்தியாளர்களைச் சென்றடைகிறது.
இந்தியாவில் ஒப்பீட்டளவில் அரசின் தலையீடு இல்லாமல் முழுக்க முழுக்க தனியார்கள் மூலமாகச் சந்தைப் படுத்தப்படும் பொருட்களில் இந்தப் பிரச்சினை உள்ளது. எடுத்துக்காட்டாக மஞ்சள் போன்ற வர்த்தகப் பொருட்களில், நுகர்வோர் வாங்கும் விலையில் 30-32% மட்டுமே உற்பத்தியாளருக்குச் செல்கிறது.
1939 ஆம் ஆண்டு, மத்தியப் பிரதேசம் மற்றும் பிரார் பிராந்தியத் தொழிற்துறைப் பொருளியல் ஆய்வறிக்கையில், பணம் என்னும் பொருள் பொருளாதாரத்தின் எல்லாப்பரிமாற்றங்களின் அடையாளமாக மாறுவதன் எதிர்மறை விளைவுகளை குமரப்பா எடுத்துரைக்கிறார். ஒரு கச்சாப் பொருள், பல தேசங்களைக் கடந்து, உற்பத்தித் தொழிற்சாலைகளை அடையும் ஒரு தொழில்முறையில், பணம் ஒரு இன்றியமையாத கண்ணியாகி விடுகிறது. கச்சாப் பொருள் ஒரு நாட்டில் உற்பத்தியாகி, பல நாடுகள் கடந்து செல்லும் தொழில் முறையில், உள்ளூர் உற்பத்தியாளர் என்பவர், வெளிநாட்டு நிறுவனத்துக்காகக் கொள்முதல் செய்யும் வணிகரின் தயவில் வாழ நேரிடுகிறது. கொள்முதல் செய்பவரிடம் இருக்கும் பணமும், உற்பத்தியாளர் உற்பத்தி செய்யும் பொருளின் மதிப்பும் ஒரே அளவாக இருந்தாலும், பேர மேசையில், கொள்முதல் செய்பவரின் பணம், அதிக அதிகாரம் கொண்டதாக இருக்கிறது என்கிறார் குமரப்பா.
இந்த நிலை, உள்ளூரில் உற்பத்தியாகி, வணிகர்கள் மூலமாக சந்தையையும், நுகர்வோரையும் அடையும் இந்தியத்தொழிற் கண்ணிகளிலும் உள்ளதுதான். குமரப்பாவின் இந்தக் கருதுகோள் மிக முக்கியமான ஒன்றாகும். மரபார்ந்த பொருளியல் அறிஞர்கள், இது போன்ற புள்ளிகளில் இருந்து தேற்றங்களை, தொழில் திட்டங்களைப் பொது வெளியில் விவாதிப்பதில்லை. இந்தப் புள்ளியில் இருந்து, சமீபத்தில் அரசு கொண்டு வந்துள்ள மூன்று சட்டங்கள் வழியாகத் தனியார் துறை பெரும் நிதியின் பலத்தோடு வேளாண் தொழிற் சங்கிலியில் பங்கு பெறுவதை நோக்கினால், பேர மேசையில் யார் கை ஓங்கியிருக்கும் என்பதையும், ஏன் உழவர்கள் இதைச் சந்தேகப்படுகிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.
கொற்கை நாவலில், துவக்கத்தில், தலைச்சுமையாக கருவாட்டைக் கொள்முதல் செய்ய வணிகர்கள் (நாடார்கள்) வருகிறார்கள்.. மீனவர்களின் தயவினால், தொழிலை நிலைநிறுத்திக் கொண்டு, காலப்போக்கில், மீனவர்களின் உற்பத்தியைக் கொள்முதல் செய்யும் அதிகாரத்தினால், வணிகர்கள் செல்வந்தர்களாக மாறுகையில், மீனவர்கள் பொருளாதாரப் பலம் குறைந்து கீழே சென்ற சரித்திரத்தை மிக அழகாக ஜோ டி குருஸ் சொல்லியிருப்பார்
குமரப்பா முன்வைத்த இன்னொரு முக்கியமான குறிக்கோள் – உற்பத்தியாகும் பொருள், நுகர்வோரை அடையும் வணிகச் சங்கிலியில், மிக அதிகமாகப் பொருளியல் மதிப்புக் கூட்டும், நுகர்வோருக்கு மிக அருகில் இருக்கும் கண்ணிதான் மிக அதிகப் பொருளாதாரப் பயனை அடையும் என்பதாகும்.
இதன் பின்ணணியில், இந்தியாவில் மிகவும் வெற்றிகரமாக இயங்கி வரும் கூட்டுறவுப் பால் உற்பத்தி முறையை அணுகினால் சில புதிய திறப்புகள் கிடைக்கும். இன்று இந்தியாவில் நுகர்வோர் பால் பொருட்களை வாங்கும் விலையில் 70% உற்பத்தியாளர்களுக்குக் கிடைக்கிறது. அதுவும் சீராக, வாரா வாரம் அவர்கள் வங்கிக் கணக்கைச் சென்றடைகிறது. இந்திய விவசாய விளை பொருட்களில், பாலில் மட்டும்தான் ஓரளவு கட்டுபடியாகும் விலை உற்பத்தியாளருக்குக் கிடைக்கிறது. இந்தத் துறைக்கு அரசாங்கம் மானியமாகச் செலவழிக்கும் நிதியும், உணவு தானியங்களோடு ஒப்பிடுகையில் மிகக் குறைவு. கூட்டுறவுப் பால்த் தொழில் முறை, உற்பத்தியாளருக்கு மேம்பட்ட வகையில் பலனளிக்கும் அதே சமயத்தில் அரசுக்கும் மானிய பாரத்தைக் குறைக்கிறது. இந்த முறையில், உற்பத்தியிலிருந்து, நுகர்வோர் இல்லம் அடையும் வரை எல்லாத் தொடர்புச் சங்கிலிக் கண்ணிகளையும், உற்பத்தி செய்யும் நிறுவனமே உருவாக்கி, நிர்வகிக்கிறது.
வழக்கமான வணிகத் தொடர்புச் சங்கிலிகளில், ஒவ்வொரு கண்ணியும், தான் செய்யும் செயலுக்கான லாபத்தையும், பொருளின் விலையில் சேர்த்துக் கொள்ளும். ஆனால், பால் வணிகத் தொடர்புச் சங்கிலியின் எல்லாக் கண்ணிகளுமே ஒரே நிறுவனத்தின் நிர்வாகத்தின் கீழ் இருக்கையில், இடைத்தரகர்கள் லாபம் விலக்கப்பட்டு, உற்பத்தியாளரும், நுகர்வோரும், ஒரு நியாயமான விலைப் புள்ளியில் சந்திக்கும் வாய்ப்பு உண்டாகிறது. பால் உற்பத்தியாளர் கூட்டுறவுகள் மூலமாக, இந்தியாவில், பால்த் தொழிலில் வெற்றிகரமாக நிகழ்ந்தது இதுதான்.
இந்தப் பால்க் கூட்டுறவு இருந்திருக்கா விட்டால், என்ன நடந்திருக்கும்? பால் உற்பத்தி அதிகமாக இருக்கும் குளிர் காலத்தில், நுகர்வோருக்கு, பால் மிக மலிவாகவும், உற்பத்தி குறைவாக இருக்கும் கோடை காலத்தில், அதீத விலையிலும் கிடைத்திருக்கும்.. தன் பொருளை விற்க முடியாமல், உற்பத்தியாளர் குளிர்காலத்தில், உற்பத்திக்கு மிகக் குறைவான விலையைப் பெறுவார்.. கோடை காலத்தில், நல்ல விலை கிடைக்கும் சூழல் இருந்தும், உற்பத்தி குறைவாக இருப்பதால், அப்போதும் அவருக்குப் பெரிதாக நன்மை கிடைக்காது.. தக்காளி போன்ற காய்கறிகளில் நிகழ்வதை நாம் கண் முன்னே பார்க்கிறோமல்லவா?
இந்தப் பிரச்சினையைப் பால் உற்பத்திக் கூட்டுறவுகள் எப்படித் தவிர்க்கின்றன? அதிக பால் உற்பத்திக் காலங்களில், உபரிப் பாலை, பால் பொடியாக மாற்றி வைத்துக் கொள்கின்றன. உற்பத்திக் குறைவான காலத்தில், பொடியை மீண்டும் பாலாக்கி விற்கின்றன. எனவே பால் கொள்முதல் விலையும் சரி, விற்பனை விலையும் சரி, வருடம் முழுதும் சீராக இருக்கின்றன.
இந்திய வேளாண்மையின் மிக முக்கியமான பகுதி உணவுப் பொருள் உற்பத்தியும், இறையாண்மையுமாகும். அதில் 50% மக்கள் ஈடுபட்டுள்ளார்கள். பெரும்பாலானவர்கள் (80%) சிறு உற்பத்தியாளர்கள் எனவே, இந்தச் சிறு உற்பத்தியாளர்கள், பொருளாதார ரீதியில் நலமாக இயங்குதல் இந்திய நாட்டின் சமூகப் பொருளாதாரப் பாதுகாப்புக்கு இன்றியமையாதது.
இன்று சட்டங்கள் மூலமாக, இந்திய அரசு முன்னெடுக்க விரும்பும், தனியார் துறை முறை, கடந்த 50-60 ஆண்டுகளாக, அமெரிக்கா போன்ற முதலாளித்துவப் (சுதந்திரச் சந்தை?) பொருளியல் அமைப்பிலும் தோல்வியைத்தான் கண்டுள்ளது..
அதே சமயத்தில், சிறு உற்பத்தியாளர்களின் நலனையும், நுகர்வோரின் நலனையும் ஒரளவு சமநிலையில் நிறுத்தி வெற்றி பெற்றுள்ள – இடைத்தரகர் இல்லாத, உற்பத்தியாளர் வயலிலிருந்து நுகர்வோர் உணவு மேசைக்குச் செல்லும் பால் உற்பத்திக் கூட்டுறவு என்னும் முழுமையான இந்தியத் தொழில் முறையும் நம் முன்னே உள்ளது.
அங்கும் இங்கும் பாதை உண்டு.. இன்று நாம் எந்தப் பக்கம்?
நினைவிலிருந்து தொலைந்து போன ஒரு பாடல். அப்படி ஒரு பாடலை சில நாட்களாக ஞாபக மீட்பு செய்ய முயன்று வந்தேன். அதன் ட்யூன் சுத்தமாக மறந்து விட்டது. முதல் வரி ஞாபகமில்லை. பாடகர்கள் யாரெனவும் மறந்துவிட்டது. சீர்காழி கோவிந்தராஜன் பாடியிருக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஒரு காலத்தில் அடிக்கடி முணுமுணுத்த பாடல். இப்படி நினைவிலிருந்து அகன்றுவிட்ட பாடலோடு அப்படி என்ன உறவு? நான் தங்கி பயின்று வந்த கல்லூரியில் மாணவர்களை ஐந்து மணி வாக்கில் எழுப்பிவிட தெய்வப் பாடல்களை ஒலிக்க விடுவார்கள். ஐந்தரைக்கு பாடல்கள் ஒலிப்பது நிற்கும். அதன் பின் ஐந்தரையிலிருந்து ஆறரை வரை ஸ்டடி-ஹவர். அதற்குப் பின் சூர்ய நமஸ்காரம். பின்னர் குளியல். அதன் பின்னர் இறை வழிபாடு (தினத்தில் மூன்று முறை வழிபாடு). இப்படி ஒரு கல்லூரி இருந்ததா என்று கேட்டீர்களானால், சத்தியமாக சொல்கிறேன். இத்தகைய ஒரு கல்லூரியில் தான் நான் மூன்று வருடம் படித்தேன். ஐந்து மணிக்கு ஸ்பீக்கரில் அலற விடப்படும் இறை பக்திப் பாடல்களின் மேல் எவ்வளவு வெறுப்பு இருந்திருக்கும் என்பது புரிந்து கொள்ள முடியும். ஆனால் இருபத்தியெட்டு வருடங்களாக மறந்துவிட்ட அந்த பாடலின் மீது கல்லூரி காலங்களில் அதிக ஈர்ப்பு இருந்தது. அது ஒலிக்கும் அந்த விடியற்காலத்தில் குருவாயூரப்பன் சுவாமிக்கு நடத்தப்படும் தைலாபிஷேகம், கும்பாபிஷேகம், விஸ்வரூப தரிசனம் முதலானவற்றை விவரித்து நாராயணனை வழிபடும் பாடல் ஏனோ என்னை மிகவும் ஈர்த்தது. ஐந்து மணிக்கு மாணவர்களை எழுப்புவதற்காகவே ஸ்பீக்கரில் அதிக கனபரிமாணத்தில் அலற விடப்படும் எந்த பாடல் எந்த மாணவனுக்கு பிடித்தமாக இருக்கும்? ஆனால் அந்த குருவாயூரப்பன் பாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனக்குள்ளேயே (அதாவது எனக்கு மட்டும் கேட்கும்படியாக…மற்றவர்களுக்கு ஏன் துன்பம் தர வேண்டும்?) அந்த பாடலை நான் பாடிக் கொள்ளும் போது நெகிழ்ந்து போவேன்.
சரி மறந்து போன பாடலை திரும்ப ஏன் ஞாபகத்தில் கொண்டு வர வேண்டும்? மறந்துவிட்டதாகவே இருக்கட்டுமே? “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே” பாடல் மறந்து போகுமா என்ன? அந்த பக்திப் பாடல் தானே காலத்தை வென்ற பாடல்! இந்த குருவாயூரப்பன் பாடலுக்கு அல்பாயுசு என விட்டுவிட வேண்டியது தானே! ஓரிரு வாரங்களாக அந்த பழைய பாடலை மீண்டும் தேடிக் கண்டுபிடிக்கும் உந்துதல் அதிகமாகிவிட்டது. இறந்த காலத்திய நினைவுகளுடன் மீண்டும் தொடர்பேற்படுத்திக் கொள்ளும் ஆசையிது என்று நான் கருதவில்லை. இறந்த காலத்திலிருந்து ஒரு புதையல் வேட்டை என்று ஒரு விளையாட்டாகவே இதைக் கருதினேன்.
பாடலின் மெட்டு மனதில் இருந்தால் முதல் வரி ஞாபகமிருக்கும். மெட்டு ஞாபகமில்லை. இரண்டாவது வரியில் “குருவாயூரப்பா” எனும் சொல் வரும். அந்த சொல்லை வைத்து தேடினால் ஆயிரக்கணக்கில் பாடல்கள்- தமிழில் மலையாளத்தில். ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன், எஸ்பிபி, கே வீரமணி என்று பல பாடகரகள் குருவாயூரப்பன் மீது ஆல்பம் போட்டிருக்கிறார்கள். அந்த பாடலில் வரும் இன்னொரு சொல் ஞாபகத்தில் இருந்தது. “மயிற்பீலி கிரீடம்” எனும் சொல் முதலாம் சரணத்திலோ இரண்டாம் சரணத்திலோ வரும். அந்த சொல்லை வைத்து தேடினால் பல மலையாள பாடல்கள் வரிசையாக வந்தன. அநேகமாக எல்லா குருவாயூரப்பன் பாடல்களிலும் “மயிற்பீலி கிரீடத்தை” பயன்படுத்தியுள்ளார்கள். இணையத்தில் தேடும் முயற்சியை சில மணி நேரம் நிறுத்தி வைத்தேன். ஆனால் உந்துதல் மேலும் அதிகமானது. இறந்த காலத்தின் ஒரு நினைவுத் துண்டு எப்படி நம்முடன் இல்லாமற்போகலாம்? ஓர் அவஸ்தையாக உருமாறத் தொடங்கிற்று அந்தத் தேடல். நேற்றிரவு தூக்கம் வராமல் புரண்டு படுத்தேன். குருவாயூரப்பனும் மயிற்பீலி கிரீடமும் என் மனத்துடனான உரையாடலில் வந்தவாறிருந்தன. “இது என்ன பைத்தியக்காரத்தனம்” என்று என் மனத்தை கடிந்து கொண்டேன். சற்று அமைதி. ஓரிரு நிமிடங்களாகியிருக்கும். இறந்த காலத்திலிருந்தா அல்லது ஞாபக அடுக்கிலிருந்தா….மெட்டை முணுமுணுக்க ஆரம்பித்தேன்…இரண்டாம் வரியில் “குருவாயூரப்பா” சரியாகப் பொருந்தியது. இரண்டாம் முறையாக மெட்டை முணுமுணுக்கும் போது முதல் வரி கிடைத்துவிட்டது.
“வைகறை பாடும் இன்னிசையோடு வாசல் திறக்கிறது குருவாயூரப்பா எனும் கோஷம் அழைக்கிறது”
பி சுசீலாவும் கே வீரமணியும் பாடியிருக்கிறார்கள். இப்போது கேட்கும்போது டிபிகல் டெவோஷனல் ட்யூனாக ஒலிக்கிறது. இருந்தாலுமென்ன இறந்த காலத்திலிருந்து மீட்டெடுத்த இந்த நினைவு விளையாட்டு உற்சாகம் கொடுத்தது. நினைவுக்கு முன்னால் இணையம் ஒன்றுமில்லை. கடவுச் சொல்லை நினைவுதான் தர வேண்டும்.
பௌத்தம் ஒரு புராதன, சிக்கலான நம்பிக்கை முறை. மனித துக்கங்கள் பற்றியும் அவற்றைக் களையும் வழிகள் பற்றியும் தியானிக்கும் சிந்தனை முறையை அஸ்திவாரமாகக் கொண்டது. பௌத்த தர்மம் உலகின் சூழலியல் பிரச்னைகளுக்கு ஏதானும் தீர்வுகளை அளிக்க முனைகிறதா?. சூழல் பாதுகாப்பு முறைகள் மற்றும் சூழலியல் சீர்கேடு காரணமாக எழுந்துள்ள அச்சுறுத்தல்கள் – இவை ஒப்பீட்டளவில் புதிய பிரச்னைகள். சுற்றுப்புறம் மாசுபடுதல் பௌத்த சிந்தனை துவங்கிய காலத்தில் அறியப்படாத ஒரு பிரச்னை. எனவே சூழலியல் பிரச்னை குறித்த நேரடிக் குறிப்புகள் பாலி நெறிமுறையிலோ மகாயான சூத்திர இலக்கியங்களிலோ காணப்படுவதில்லை. சூழலியல் சீர்கேடு பற்றிய எதிர்வினைகள் அல்லது தீர்வுகள் மனித நேய அணுகுமுறையிலானதாக இருக்க வேண்டும். அல்லாது வெவ்வேறு மானிட நம்பிக்கைகளின் அடிப்படையில் அமையுமெனில் குழப்பமே மிஞ்சும் என்று கருதும் சூழலியல் வல்லுனர்கள் உண்டு. இருந்தாலும், இயல்புகளை, இன்னொரு விதமாகச் சொல்லப்போனால், இயற்கையின் அனைத்து அனுபவங்களை பிரதிபலிக்கும் முழுமையான தத்துவம் எனும் நோக்கில் பௌத்த இலக்கியங்களை வாசிக்கும்போது, பாலி நெறிமுறைகளிலும் மகாயான சூத்திரங்களிலும் இயற்கை சார்பான பௌத்த அணுகுமுறைகள், பௌத்தர்கள் கொள்ள வேண்டிய மனப்பான்மைகள் போன்றவை பற்றி போதுமான அளவுக்கு கருத்துமூலங்கள் இருப்பது தெளிவாகிறது.
வரலாற்றுப் புத்தர் வாழ்ந்த காலத்தில் குறிப்பிடத் தகுந்த வகையில் வட இந்தியா, குறிப்பாக அவர் புழங்கிய கங்கைச் சமவெளி – நகரங்களின் வளர்ச்சி மற்றும் அரசியல் அதிகாரக்குவிப்பு வாயிலாக – சுற்றுப்புறச் சூழல் சார்ந்த எழுச்சிக்காளாகிக் கொண்டிருந்தது. விவசாய விரிவாக்கத்துக்கும் நகரங்களை திட்டமிடவும் மனிதப் புழக்கமிராத காடுகள் அகற்றப்பட்டுக் கொண்டிருந்தன. காண்டா மிருகங்கள், யானைகள், புலிகள், பெரும் பாம்புகள் இன்ன பிற மிருக வகைகள் வசிக்கும் வீடாக இருந்த காடுகள் அச்சுறுத்தும் இடங்களாகவும் விளிம்பு நிலப் பிரதேசங்களாகவும் நோக்கப்படலாயின. புத்தரும் அவருடைய சீடர்களும் இந்த விளிம்பு நிலப் பிரதேசங்களை பயன்படுத்திக் கொண்டனர். எனினும், விவசாய பருவங்களுக்கு இடமளிக்கும் வகையில் அவர்களின் தம்மபோதனை மற்றும் பின்வாங்கல் (retreat) நேரங்களை மாற்றியமைத்துக் கொண்டனர். உள்ளூர் சமூக ஆதரவைப் பெறுதலையும் பௌத்த சங்கத்தின் இன்றியமையாத அங்கமாக அமைத்துக் கொண்டனர். உள்ளூர் சமூகங்கள் சங்கத்தின் நடவடிக்கைகளால் பாதிப்புறாவண்ணம் பார்த்துக் கொண்டனர். உதாரணமாக பிக்குகளும் பிக்குணிகளும் நீரோடைகளுக்கருகே மலசலம் கழிக்கக் கூடாது என விதிக்கப்பட்டிருந்தது. ஏனெனில், நீரோடைகளில் பொதுமக்கள் கை கால் கழுவிக் கொள்வர் அல்லது நீரருந்துவர். இதே போல, பிக்குகளும் பிக்குணிகளும் பிற உயிரினங்களின் வாழ்விடங்களுக்கு இடையூறு விளைவிக்காமல் இருக்க வேண்டும் என்றும் பிற உயிர்களைக் கொல்லக் கூடாது என்றும் வழிமுறைகள் இருந்தன. அனைத்து உயிர்களின் பாதுகாப்பு ஒரு பௌத்த கொள்கை. புத்த பிக்குவின் முதல் உறுதி மொழி – “வாழ்க்கையை அழிப்பதை நான் தவிர்க்கிறேன்.” – என்பது.
வாழ்க்கையைப் போற்றுதலிலிருந்து பௌத்தம் தொடங்குகிறது. வாழ்வின் ஒன்றுடன் ஒன்று சார்ந்த தன்மையை அது வலியுறுத்துகிறது. எல்லா உயிர்களும் நிர்வாணத்தை எய்தும் ; துக்கத்தை முடிக்கும் ; பிறப்பு – இறப்பு சக்கரத்திலிருந்து விடுதலை பெறும் என்னும் உயரிய லட்சியத்தை பறை சாற்றுகிறது. வாழும் உயிர்களின் ஒருமையை அது உறுதிப்படுத்துகிறது. அனைத்து உயிர்களும் புத்தவியல்பை கொண்டவையாயுள்ளன, எனவே ஒவ்வோர் உயிரும் புத்த நிலையை அடையும் சாத்தியக் கூறுள்ளவை. உயிர்களுக்கு நடுவே இரண்டாந்தர உயிர் என்று எதுவுமில்லை. பிற உயிர்களை விட மனிதனுக்கென்று இவ்வுலகில் சிறப்பான இடம் ஒன்றும் இல்லை.
ஜாதகக் கதைகளை எடுத்துக் கொள்வோம். புத்தரின் பல முன்பிறவிக் கதைகளில் குரங்காக, கிளியாக, மரமாக அவர் பிறவியெடுத்த கதைகள் வருகின்றன. அந்த பிறவிகளில் துயரப்படும் பிறரின் மேல் அவர் காட்டிய பெருங்கருணையை கதைகள் நமக்கு எடுத்துச் சொல்கின்றன. ஜாதகக் கதைகளில் சொல்லப்படும் நீதிகள் பலவும் சூழலியல் கவலைகளை நிவர்த்தி செய்யும் வழிவகைகளைச் சுட்டுகின்றதோ என்றெண்ண இடமுண்டு. பெரும்பாலான ஜாதகக் கதைகள் சுற்றுப்புறம் சார்ந்த நல்லொழுக்க நெறிமுறைகள் என்பதாக வாசிக்க முடியும்.
சுற்றுச் சூழல் மாசுபடுவதற்கு மானிட ஆணவம் ஒரு முக்கிய காரணி. ஆணவ குணத்தினால் இவ்வுலகின் மையமாக மனித இனம் தன்னைக் கருதிக் கொள்கிறது. அறிவுள்ள உயிர் என்பதினால் தம்மை ஆற்றல் படைத்தவர்களாக எண்ணுவது மட்டுமில்லாமல், விளைவுகளைச் சந்திக்காமல் எதையும் சாதித்து விடலாம் என்னும் தவறான மனப்பாங்குடையவர்களாகவும் மனித இனம் இயங்கிக் கொண்டுள்ளது. நியாயமற்ற அதிகாரம் குறித்த கேள்வியும் “மனித மையம்” என்னும் கருத்தியல் அதன் அங்கீகரிக்கப்பட்ட அம்சமாக இருப்பது பற்றியும் இன்றைய சுற்றுச்சூழல் விவாதங்கள் வலியுறுத்தியவாறுள்ளன. இதே கருத்தை பல ஜாதகக் கதைகள் பிரதிபலிக்கின்றன. கதையின் நாயகன் அளவு கடந்த அதிகாரத்தைக் கொண்டிருப்பதும் அவனின் செய்கைகள் அவனுக்கு கொடுமையான விளைவுகளைத் தருவதும் திரும்பத்திரும்ப பல கதைகளில் நிகழ்த்திக் காட்டப்படுகின்றன.
இயற்கை நம்முள் ஏற்படுத்தும் வியப்புணர்ச்சியும் மலைப்பும் ஆன்மீக சாதனைகளுக்கான மதிப்பு மிக்க கருவி. இந்த கருத்தும் ஜாதகக் கதைகளில் பேசப்படுகிறது. இயற்கையில் காணும் மாற்றங்களை உன்னிப்பாக கவனிப்பதன் வாயிலாக அனைத்துப் பொருட்களின் நிலையாமை பாடத்தை பிக்குகள் கற்கின்றனர்.
நன்றியுணர்வைக் கைக்கொள்ளாதோர் மீது இயற்கை காட்டும் சினத்தை சித்திரிக்கும் கதைகளும் ஜாதகக் கதைகளில் உண்டு. நமக்கு நன்மை புரிந்தோர் மேல் நன்றி காட்டாமல் இருப்பது தண்டனைக்குரித்தாகும் பெரும் பிழை. இயற்கை மீது நன்றி பாராட்டாமல் இருப்பதனால் எழும் கேடு ஒரு குறியீட்டளவில் இல்லாமல் நியதி என்பதாகவே ஜாதகக் கதைகளில் சித்திரிக்கப்படுகின்றன.
தவறான அல்லது அதீத நுகர்வை தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை ஜாதகக் கதைகள் பேசத் தயங்கவில்லை. சுற்றுப் புறச் சூழல் மாசுபடுதற்குப் பின்னர் இருக்கும் பெருந்தீங்கு – பேராசை. பல ஜாதகக் கதைகள் பேராசைக் குணம் பற்றி எச்சரிக்கின்றன.
பாலி வினய நூல்களின் முக்கிய வழிகாட்டல் கொல்லாமை. அஹிம்சை. பிற வாழும் உயிர்களுக்கு இம்சை விளைவிக்காதிருத்தல். கொல்லுதலை ஏன் தவிர்க்க வேண்டும்? ஏனெனில், எல்லா உயிர்களிலும் தம் வாழ்வை விரும்புகின்றன. இறக்க விரும்புவதில்லை. நம்மை கடிக்க வரும் கொசு கூட நம் உடலின் சிறு அசைவில் பறந்து போய் விடும். வாழ்க்கையை போற்றுதல் கருணைச் சிந்தனையை வளர்த்தெடுக்கும். வாழ்க்கையைப் போற்றுதலின் இன்னொரு பரிமாணம் இயற்கையுடன் ஒன்றுதல். இயற்கையுடன் ஒன்றுதலைப் பேசும் பழம் பெரும் பௌத்த இலக்கியங்களில் தேரகதாவும்[1] ஒன்று.
புத்தர் காலத்திலேயே இயற்கையுடன் ஒன்றி தம்ம சாதனையை இணைத்துக் கொண்ட ஓர் அருகர் இருந்திருக்கிறார். அவர் புத்தரின் பிரதான சீடர்களில் ஒருவர். மகாகஸ்ஸபர். புத்தரின் பரிநிர்வாணத்துக்குப் பின் கூடிய முதல் பௌத்த சபையை தலைமையேற்று வழி நடத்தியவர் அவர் எனக் கூறப்படுகிறது. மகாகஸ்ஸபர் மற்ற சீடர்களைப் போன்று மடாலயங்களில் அதிகம் வசிக்க மாட்டார். சில முறை புத்தரே அவரிடம் கேட்டுக் கொள்ளும்போது கூட பிற பிக்குக்களுடன் சேர்ந்து மடாலயத்தில் தங்குவதை மறுத்து விடுகிறார். காடுகளிலும், மலைகளிலும் ஒரு வசதியுமில்லாமல் தங்கி தம்ம சாதனைகளில் ஈடுபடுவதை தன் வழக்கமாகக் கொண்டிருந்தார். இது ஏன் என அவரிடம் அடிக்கடி தொடுக்கப்பட்ட வினாவுக்கான விடையை தேரகதாவின் 1062-1071 எண் செய்யுட்களில் தருகிறார்.
ஆளி மலர்களின் நீலநிற மொட்டுப் போன்று
மேகம் சூழ் இலையுதிர்கால வானம் போன்று
பலவகை பறவைக் கூட்டங்கள் வட்டமடிக்கும்
மலைச் சிகரங்கள் எனக்கு மகிழ்வைத் தருபவை
உபாசகர் வந்து அலை மோதுவதில்லை
ஆனால் மான் கூட்டம் வசிக்குமங்கே
பலவகை பறவைக் கூட்டங்கள் வட்டமடிக்கும்
மலைச் சிகரங்கள் எனக்கு மகிழ்வைத் தருபவை
தெளிவான நீரோடும் அகன்ற பள்ளத்தாக்கு
மான்களும் குரங்குகளும் நடமாடுமங்கே
ஈரப் பாசிக் கம்பளம் விரித்த
மலைச் சிகரங்கள் எனக்கு மகிழ்வைத் தருபவை
ஐந்து கருவிகளின் இசை சங்கமமும்
அத்துனை மகிழ்வை எனக்களிக்காது
ஒருமுகமாக மனதைக் குவித்து
பெறும் தம்மத்தின் நுண்ணறிவைப் போல
மகாகஸ்ஸபர் மறைந்து ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் சீனாவிலும் ஜப்பானிலும் தோன்றி வளர்ந்த மகாயான ஜென் பௌத்த மரபில் அதன் முதல் ஆசாரியராக மகா கஸ்ஸபரைக் கருதுகிறார்கள். இதற்கான காரணம் சீன சான் / ஜென் மரபுகளில் கூறப்படும் ஒரு தொன்மத்தில் வருகிறது. ஒரு முறை சங்கத்தில் தன் பிரசங்கத்தை துவக்குமுன்னர் ஒற்றை மலரொன்றை ஏந்தி அமைதியாக சற்று நேரம் இருந்தார் புத்தர். அங்கு கூடியிருந்தோர் அனைவரும் புத்தரின் பிரசங்கம் துவங்க காத்திருந்தார்கள். மலரை புத்தர் கையில் ஏந்தியிருந்ததை அவர்கள் பார்த்தார்களே தவிர தாத்பர்யத்தை உணர்ந்தார்களில்லை. கூடியிருந்தவர்களில் கஸ்ஸபர் மட்டும் புத்தரைப் பார்த்து புன்னகைத்தார். புத்தர் மனதில் நினைத்ததை அவர் வாய் திறக்காமலேயே வாய்மொழியின் துணையின்றி உணர்ந்து தேருபவராக கஸ்ஸபர் இருந்தார் என்று ஜென் பௌத்த மரபு சொல்கிறது. மலர் பிரசங்கம் என்று குறிக்கப்படும் இந்த தொன்மம் வாய் மொழி அல்லது ஆகமங்களின் துணையின்றி அவற்றை மீறி நிற்கும் உண்மையின் இயல்பை நேரடியாக உணரும் ஜென் பௌத்தத்தின் அடிப்படையை விளக்குகிறது. புத்தரின் மலர் பிரசங்க மரபுக்கதையில் மகா கஸ்ஸபரின் இணைப்பு இயற்கைப் பின்னணியில் தம்மசாதனை புரியும் தொன்மத் தகவலிலிருந்து பெறப்பட்டிருக்கலாம். மகா கஸ்ஸபரை ஜப்பானிய பௌத்தர்கள் மகாகஷோ என்று குறிப்பிடுகிறார்கள்.
சீனாவிலும் ஜப்பானிலும் மலைப்பகுதிகளிலும் வனப்பிரதேசங்களுக்குள்ளுமே அதிகமாக ஜென் கோயில்கள் கட்டப்பட்டிருப்பதைக் காணலாம். ஹைகூ மற்றும் பிற செவ்வியல் கவிதை வடிவங்களிலும் இயற்கையுடன் ஒன்றும் தன்மை பிரதானக் கருப்பொருளாக உள்ளது.
மகாகஷோவை முதல் ஆசாரியராகக் கொண்டு வளர்ந்த ஜென் பௌத்த குருமார்கள் வரிசையில் அதிமுக்கியமானவர் தோகென்(1200 – 1253 CE). பதிமூன்றாம் நூற்றாண்டில் ஜென் பௌத்தம் ஜப்பானில் அடைந்த மறுமலர்ச்சிக்கு அவருடைய பங்கு மகத்தானது. சோடோ ஜென் பிரிவின் ஸ்தாபகராக அவர் கருதப்படுகிறார். அவர் தங்கியிருந்த eiheiji கோயில் சோடோ ஜென் உபாசகர்களின் முதன்மைக் கோயிலாக இன்றும் உள்ளது.
மகாயான சூத்ரங்கள் இந்தியாவிலிருந்து சீனா வழியாக இறக்குமதி செய்யப்பட்டு ஜப்பானிய ஆன்மிக மரபில் வேரூன்றியிருந்தது. தோகென் மகாயான சூத்திரங்களின் பாணியில் பௌத்த மெய்யியலையும் ஜப்பானிய கவிதையியல் கருப்பொருள்களையும் ஒன்றிணைத்து தொண்ணூற்றி மூன்று கட்டுரைகள் எழுதினார். இந்த கட்டுரைத் தொகுதியின் பெயர் ஷோபோகென்ஸொ.
இந்த நூலின் மிகப் பிரபலமான கட்டுரை – மலைகள் மற்றும் நதிகள் சூத்திரம். மகாயான சூத்திரங்களில் பொதுவாகக் காணப்படும் இந்து புராண பாணி அற்புதங்களை விலக்கி மலைகளை, நதிகளை சூத்திரங்களாக எழுதினார். இருமையற்ற (nondualistic) புரிதலை, தர்ம இயல்பின் (Dharma Nature) நேரடி அறிதலை, தியானத்தின் இலக்காக வலியுறுத்தும் ஆழ்ந்த சிந்தனையை வெளிப்படுத்தியது மலைகள் மற்றும் நதிகள் சூத்திரம். மலைகளை, நதிகளை தர்ம எழுச்சியின் அடையாளங்களாகப் பார்க்கிறார் தோகென். நால்வகை வாய்மையின் முதல் வாய்மையில் விவரிக்கப்பட்டுள்ள துக்கங்கள் இருமை வாதப் புரிதலின் அடிப்படையில் எழும் அகங்கார நோக்கில் எவ்வாறு உருவாகின்றன என்பதை விளக்குகிறார் தோகென். இத்தகைய இருமைவாதப் பார்வைகளை நீக்கி தன்னையும் பிறரையும் ஒரே ஆற்றல் மிக்க நிகழ்வின் பாகங்களாக நோக்குதலின் வாயிலாகவே ஆன்ம விடுதலை சாத்தியம் என்கிறார் தோகென்.
ஆங்கில மொழிபெயர்ப்பில் மலைகள் – நதிகள் சூத்திரம் வாசிக்க பரமசுகம். அறிவொளி பெற்ற மனதின் யதார்த்தத்தை இயற்கை-கவிதை அழகியலாக வெளிப்படுத்தும் மலைகள் – நதிகள் சூத்திரம் ஓர் உன்னத ஆன்மீக இலக்கியம். ஜென் பௌத்த சாதனைக்கு இன்றும் பயன்பாட்டில் உள்ள அத்தியாவசியமான சூத்திரம்.
தோகென் இயற்கையின் காதலர். மலைகளுக்கு நடுவே பாழ்படாத காட்டுச் சூழலினுள் பாய்ந்தோடும் நீரோடைச் சத்தங்களின் பின்னணியில் Eiheiji கோயிலை அவர் கட்டியது இதற்குச் சான்று. முதற்கண் அவர் ஒரு ஜென் ஞானி. எனவே அவர் எழுத்தில் வரும் மலைகளும் நதிகளும் கவிதைகளில் வரும் மலைகளோ நதிகளோ அல்ல. மலைகளும் நதிகளும் தர்மத்தின் கண் ; உணரப்பட்ட பிரபஞ்ச உண்மை. மலைகள் – நதிகள் சூத்திரம் மலைகள், நதிகளைப் பற்றியதன்று. மலைகள், நதிகளே சூத்திரங்கள். அவையே உண்மையான புத்ததர்மம்.
மலைகள் – நதிகள் சூத்திரத்திலிருந்து சில துளிகள் :-
“மலைக்குணத்துக்கு
குறைவா என்ன மலைக்கு?
எனவே அது
அமைதியில் உறைந்து
நடந்து கொண்டிருக்கும்
மலையின் நடையை நன்கு கவனி
மனிதரைப் போலவே நடக்கும் அது”
++++
“ஒரே வித
நீர்ப்பாய்ச்சலைக் காண்பது
குறைப்பார்வை
உண்மையில்
பல வித நீர்ப்பாய்ச்சல்கள் உள்ளன
நீர் பூமியில் பாயும்
வானிலும் பாயும்
ஒற்றை வளைவில் பாயும்
அடிமட்டமில்லா குழியினில் பாயும்
நீர் தன் பாதையில்மேலுயரும் போது மேகங்களாகும்
நீர் தன் பாதையில் கீழே விழும் போது நதிகளாகும்”
+++++
“நீரைக் கோட்டைகளாகப்பார்க்கும்
டிராகன்களும் மீன்களும்
அவற்றிடம் சொல்லிப் பார்
நீர் பாய்ந்து கொண்டிருக்கிறதென
உன்னை ஆச்சரியமாய்ப் பார்க்கும் அவை
“மலைகள் நடக்கின்றன” எனக் கேட்டால்
நீ ஆச்சரியப்படுவது போலவே”
+++++
“நினைவு தெரிந்த காலத்திலிருந்து ஞானிகளும் துறவிகளும் மலைகளுக்குச் செல்கின்றனர். அதை தன் வசிப்பிடமாக ஆக்கிக் கொள்கின்றனர். வசிப்பிடமாக மட்டுமன்று. தன் மனமாகவும், காயமாகவும் ஆக்கிக் கொள்கின்றனர். வந்து சேர்ந்த ஞானிகளின் வாயிலாக மலைகளும் தம்மை உணர்ந்து கொள்கின்றன. ஆனால், மலைகளுக்குள் சென்ற ஆயிரமாயிரம் ஞானிகளையும் துறவிகளையும் அங்கு சென்று சேர்ந்த பிறகு அவர்களுள் ஒருவரைக் கூட யாரும் சந்திக்கவில்லை. மலைகளினுடைய வாழ்க்கையின் உணர்ந்தறிதல் மட்டுமே அங்குள்ளது ; அவர்கள் மலைகளினுள் நுழைந்ததன் ஒற்றைச் சின்னம் கூட எஞ்சியிருக்கவில்லை.”
+++++
மலைகளைத் தம்முடைய மனமாகவும் உடலாகவும் உணர்வது ஏன் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் கணமாகிறது?ஏனெனில் “மலைகள்” என்று சொல்லும் போது நாம் “மலைகளை” மட்டும் குறிக்கவில்லை. அனைத்து வடிவங்களையும்,அனைத்து – உணர்வுள்ள, உணர்வில்லாத – உயிர்களையும் குறிக்கிறோம். அனைத்து வடிவங்களும் நம் காயம் – மனம் எனும் பேருண்மையை உணர்ந்த பின்னர் நாம் வேறொர் உலகில் வசிக்கிறோம். இன்னும் பிறக்காத, அழிக்க முடியாத, ஆரம்பமும் முடிவும் இல்லாத பிரபஞ்சத்தில் வசிக்கிறோம். உனக்கும் முடிவோ தொடக்கமோ கிடையாது. மலைகளை, நதிகளை, உனது மனத்தை, உடலை, பிரபஞ்சத்தின் உடலை, மனதை எப்படி பேணிக் காப்பாய்? தோகென் சுட்டிக் காட்டும் பிணைப்பு நம் ஒவ்வொருவரிலும் புதைந்துள்ள வாழ்க்கை நிலையுடனானது. இதை நாம் உணரும் போது நமக்கு நாமே சக்தியளித்துக் கொண்டு இந்த உணர்வை மெய்யாக்குவோம். நாம் உணர்கிறோமோ இல்லையோ, அது நம்முள் என்றும் உறைந்திருக்கிறது.
“நாம் உண்மையாகவே மலைகளுக்குள் நுழையும் போது
பறவைகளும், பூச்சிகளும், விலங்குகளும், மலர்களும்
அமானுஷ்ய மேன்மையை கதிர்வீசுகின்றன
நம் பிரசன்னத்தில் பெரும் ஆனந்தம் எய்துகின்றன.”
________
நன்றி : கனலி
உதவி :-
(1) Dharmanet.org
(2) Great Disciple of Buddha – Their Lives, Their Works, Their Legacy – Nyanaponika Thera & Hellmuth Hecker
(3) Environmental Ethics in the Jatakas : Further reflections – an essay by Dr Pragati Sahni (published in the Book – Buddhist Approach to Environmental Crisis – UNDV Conference Volume)
(4) Mountains and Waters Discourse (Sansui Kyo) By Zen Master Dogen – Translated by Kazuaki Tanahashi
(5) Becoming the mountains and rivers – an essay by John Daido Loori – Published on Lion’s Roar