“அதே நீ”

கவிதை புத்தகங்களை அதிகம் சேர்ப்பதில்லை. அடிக்கடி படிக்க வைக்கும் அம்சம் இல்லையெனி்ல் எழுதியவை எளிதில் அழுகிப்போகும் உணவாகி விடும். கதைகள் போலில்லாமல் கவிதைகள் அதிர்வைத் தரவில்லையெனில் புத்தக ஷெல்பின் அடித்தட்டில் சென்றுறங்க வேண்டியதுதான். நண்பரும் மொழிபெயர்ப்பாளருமான Sri N Srivatsa அவர்கள் தாம் மொழிபெயர்த்த “முகமுகமாய்ப் பூத்த மரங்கள்” நூலைத் தந்தபோது மறுக்க முடியவில்லை. தலைப்பு எனக்கு பிடிக்கவில்லை. இன்னும் வேறு தலைப்பு வைத்திருக்கலாம் என்று நண்பரிடம் சொன்னேன். கவிதைகளை நேற்றிரவு வாசிக்க ஆரம்பித்த போது என்னுடைய தலைப்பின் மீதான “விமர்சனம்” எத்தனை மேலோட்டமானது என்று உணர்ந்தேன்.

இயல்பான வாசிப்புக்காக தமிழ் மூலத்தைத் தான் முதலில் வாசித்தேன். நண்பர் ஶ்ரீவத்சாவுக்கு போன் செய்து அந்தக் கவிதைகளைப் பற்றிப் பேசும்போது “ஏனிந்த ஓரவஞ்சனை?” என்றார். “மொழிபெயர்ப்பை அப்புறம் வாசித்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன்” என்றேன்.

கவிதை நூல்கள் பற்றி குறிப்பெழுதுதல் எனக்கு மிகச்சிரமம். ஒரு கவிதை ஏன் அப்பீல் செய்கிறது என்பதற்கான தெளிவான புரிதல் எனக்கில்லை. உணவின் சுவையை சொற்களால் விவரிக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. நேராக உணவின் விள்ளலை எடுத்து வாயில் போட்டுக் கொள்ளலே உணவின் சுவையறிய உதவும்.

தொகுப்பில் பல நல்ல கவிதைகள் உள்ளன. உதாரணத்திற்கு நூலில் வரும் முதல் கவிதையை எடுத்துக் கொள்வோம்.

பல வருடங்களுக்குப் பின்னர் சந்திக்கும் Exஐ எப்போது கடைசியாக சந்தித்தோம் என்ற கேள்வி கவிதைசொல்லியின் மனதில் சுழல்கிறது. சந்திப்பின்போது கைத்தொலைபேசி எண் பகிரப்பட்டது என நாம் புரிந்து கொள்கிறோம். Ex-இன் குறுந்தகவல் வருகிறது. பதினான்கு வருடங்கள் என்று Ex-இன் பதில்! கவிதைசொல்லிக்கு மிக்க மகிழ்ச்சி. கைத்தொலைபேசி தரும் ப்ரைவஸி பழைய நெருக்கத்தை மீண்டும் உயிர்ப்பித்த மகிழ்ச்சி கவிதை சொல்லியை “அதே நீ” என்று குதூகலிக்கச் செய்கிறது. பலவித புதிர்ச்சுவையை எழுப்புகிறது இக்கவிதை.

நண்பரின் மொழிபெயர்ப்பு –

After a very long gap,
we met.
Only upon returning home
I calculated
after how many years.
You beat me to it.
As SMS landed
from the shared
mobile number
‘Fourteen long years’.
I have now reached you
as you were.
The same you.

இந்தக் கருவின் prequel ஆக இன்னொரு கவிதை 12ம் பக்கத்தில் வருகிறது.

“Distant laughter
Distant stare
Relationships
which cannot be
boxed in by courts”

தூரத்தை விலக்கி virtual நெருக்கத்தை மீளப்பெற்ற மகிழ்ச்சி நிலைக்கட்டும் என்று வாசகனை எண்ண வைக்கிறது – “அதே நீ”

கோயில் மரம் – ரீ-மிக்ஸ் அல்லது ரீ-டன்

கோயில் மரம்
கோயிலை தனக்குள் அடக்கி வளர்கிறது
பாம்பென வேர்கள் படர்ந்து
இறுகின சந்நிதிகள்
காலி சந்நிதானத்துள்
பிரதிஷ்டை கொள்ள ஓடியது வேர்
மரங்கள் கடவுளாகி மறைந்த பின்னர்
சட்டகத்தில் தொங்கவிட
ஓடும் வேர்களின் பின்னணியில்
ஒரு புகைப்படம்

(பதினைந்தாவது முறையாக திருத்தியது)

மூலப்பதிவு : மரக்கோயில்

உயிர் காக்கும் சீருடை உயிரெடுக்கும்

1971 எனும் ஹிந்தித் திரைப்படம். இரவுணவுக்குப் பிறகு காலை சாய்த்தவாறே தரையில் உட்கார்ந்துகொண்டு யூட்யூபை மேய்ந்தபோது கண்ணில் பட்டது. மனோஜ் பாஜ்பாய் நடித்திருக்கிறார் என்று அறிந்தபோது சில நிமிடங்கள் பார்ப்போம் என்று ஆரம்பித்தேன். கச்சிதமான திரைக்கதை. மிகைத்தனமில்லாத நடிப்பு. நாடகீய வசனங்கள், மார்தட்டல்கள் – இவை சற்றும் கலக்காத படம்.

1971இன் இந்தியா – பாகிஸ்தான் போரில் பாகிஸ்தானிய தளபதி மேஜர் ஜெனரல் நியாசி தனது 93,000 துருப்புக்களுடன் இந்தியாவின் ஈஸ்டர்ன் கமாண்ட் தலைமைத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் ஜக்ஜித் சிங் அரோராவிடம் சரணடைந்தார், இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நடந்த மிகப்பெரிய இராணுவ சரணடைதல்.. அவர்கள் அனைவரையும் கௌரவமாக தாயகம் அனுப்பி வைத்தது இந்தியா.

யுத்தத்தில் அடைந்த தோல்வியோ அல்லது உலக அரங்கில் சங்கடத்தை ஏற்படுத்திய சரணடைதலோ – எதுவெனத் தெரியவில்லை…போரின் கிழக்கு முன்னணியில் பாகிஸ்தான் சிறைப்பிடித்த இந்திய வீரர்களை பாகிஸ்தான் ஜெனீவா மரபின் படி நடத்தவில்லை. “எங்களிடம் இந்திய ராணுவ வீரர்கள் சிறைப்பட்டிருக்கவில்லை” என்று உலகிற்கு சொல்லிக் கொண்டிருந்தது பாகிஸ்தான். செஞ்சிலுவை போன்ற நிறுவனங்கள் நாட்டுக்கு விஜயம் செய்தும் அவர்களால் பாகிஸ்தானிய சிறைகளில் இந்திய நாட்டு போர்க்கைதிகளையும் கண்ணில் காட்டவில்லை. காணாமல் போன 54 இந்திய ராணுவ வீரர்களின் பெயர்களைத் தந்து பாகிஸ்தானிய அரசாங்கத்திடம் இந்தியா பல தடவை முறையிட்ட போதும் ஒரு வீரரும் எங்களிடம் இல்லை என்று பாகிஸ்தான் மறுத்து வந்தது. ஆனால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய வீரர்கள் கடைசியாக 1988 வரை பாகிஸ்தானில் காணப்பட்டனர். அவர்களுக்கு என்ன ஆனது, அவர்களில் எத்தனை பேர் உயிருடன் இருக்கின்றனர் என்று ஒரு தகவலும் இல்லை.

1971 திரைப்படம் பாகிஸ்தான் வசம் சிக்கிய இந்திய ராணுவ வீரர்களின் அவல நிலையைச் சித்திரிக்கிறது. மிக இயல்பான காட்சியமைப்பு. படத்தின் சில காட்சிகள் The Great Escape ஆங்கிலப் படத்தை நினைவு படுத்தினாலும் – நிலப்பரப்பைக் கையாண்டவிதம், கதைச் சம்பவங்கள் நடக்கும் காலக் குறிப்புகளை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கும் விதம், வீராப்பு வசனங்கள் இல்லாத உரையாடல்கள், தாய்நாட்டுப் பெருமிதத்தை சுட்டாத சமன் குலையாத திரைக்கதை – ஆகியவை ஒர் உயர் ரக போர் படத்தை பார்த்த திருப்தியைத் தந்தன.

சக்லாலா கேம்பிலிருந்து ஆறு இந்திய வீரர்களை தப்பிக்க உதவுவது பாகிஸ்தானிய ராணுவ சீருடை. இந்திய எல்லையை நோக்கி ஓடும் மேஜர் சூரஜ் சிங்கை (மனோஜ் பாஜ்பாய்) பாகிஸ்தானிய ராணுவம் துரத்தி வர, எல்லையைத் தாண்டும் பாகிஸ்தானிய ராணுவ வீரன் என்றெண்ணி இந்தியத் தரப்பு சுட இரு நாடுகளுக்கும் இடையிலிருக்கும் No Man’s Landஇல் விழுந்து இறக்கிறான். எந்தப் பக்கத்தில் நாமிருக்கிறோம் என்பதன் குறியீடு சீருடை. தப்பிப்பதற்கு உதவும் சீருடை எல்லை தாண்ட உதவவில்லை. சீருடை அணியாமல் இருந்தால் எல்லையை அடைந்திருக்க முடியாது. சீருடையைக் களைந்து அம்மணமாக ஓடியிருந்தால் என்ன நடந்திருக்கும்? ஏதோ ஒரு பைத்தியக்காரன் செய்வதறியாமல் உள்ளே நுழைகிறான் என்று இந்தியத் தரப்பு அவனை நோக்கி அனுதாபத்துடன் அணுகியிருக்குமா? தப்பிக்காமல் நெடுநாட்களாக பாகிஸ்தானில் சிக்கியிருக்கும் 1965 போர்க்கைதிகள் பாராக் 6 என்னும் இடத்திற்கும் அடைக்கப்பட்டு சித்தம் பிறழ்ந்து போகிறார்கள் என்று படத்தில் வரும் குறிப்பு எதை உணர்த்துகிறது? சித்தம் பிறழ்ந்து போனவர்கள் அணியும் சீருடை பற்றிக் கவலைப்படுவார்களா? நாடு, குடும்பம் என்பனவும் ஒரு வித பக்க சார்பு தானே? பாராக் 6 அல்லது எல்லையில் இறத்தல் – இரண்டில் எது சிறப்பு?

Masaki Kobayashi இயக்கிய ஆங்கிலத் திரைப்படம் எழுப்பிய அதே வினாக்களை திரும்ப இந்திய மொழியில் எழுப்புகிறது 1971. ஒரு கஜல் பாடகி தப்பிச் செல்லும் இந்திய வீரர்களைக் காட்டிக் கொடுக்காமல் பாகிஸ்தானிய மனித உரிமை கமிஷனுக்குத் தகவல் தரும் காட்சி குறிப்பிடத் தகுந்தது. இரு புற மக்களை இணைக்கும் பாலமாக கலைஞர்கள் இருக்க முடியும் எனில் Fawad Khan-கள் மும்பை வந்து ந்டிப்பது ஏன் தடை செய்யப்பட்டிருக்கிறது? கலைஞர்கள் சீருடை அணிந்திருக்கவில்லை என்பது ஒரு காரணமாய் இருக்குமோ?

படத்தில் ஒரு காட்சி – இந்திய ராணுவ வீரர்கள் சக்லாலா கேம்புக்கு ஒரு லாரியில் அழைத்துச் செல்லப்படுகையில் ராம் குர்ட்டுவிடம் கேட்பான்

“பாகிஸ்தானில் பஞ்சாபிக்கள் இருக்கிறார்களா?”
“இருக்கிறார்கள்”
“பாகிஸ்தானில் சிந்திக்கள் இருக்கிறார்களா?”
“இது என்ன கேள்வி…இருக்கிறார்கள்”
“பாகிஸ்தானில் முஸ்லீம்கள் இருக்கிறார்களா?”
“அடேய்…..இருக்காங்கடா”
“இவங்கல்லாம் இந்தியாவிலயும் இருக்காங்க…அப்புறம் எதுக்கு பாகிஸ்தான்?”
“ அடேய்…..தெரியாம தப்பு நடந்துருச்சு”

இதுவும் கடந்து போகும்

ஏறத்தாழ இருபத்தியைந்து வெளிநாடுகளுக்கு சென்றிருக்கிறேன். ஓர் இடத்திலும் அங்கேயே தங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதில்லை. ஏக்கத்துடன் அந்த நிலப்பரப்புகளை நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால் கஷ்மீர் ஒரு வித நினைவேக்கத்தை ஏற்படுத்துகிறது. அது ஏன் என புரிந்துகொள்ள முயல்கிறேன். அதன் பழங்கால வரலாறு, தொன்மம், இலக்கியம் என்று அனைத்தையும் தாகத்துடன் படிக்கிறேன். ஒரு சுற்றுலா பிரதேசம் இத்தகைய அதிர்வை தருமா? பழைய தோழி தெருவில் நடந்து செல்ல திண்ணையிலிருந்து ஏக்கத்துடன் அவள் பார்வையில் படாமல் நோக்குவது போல் கஷ்மீர் பற்றி படித்த வண்ணமிருக்கிறேன். கல்ஹணரின் ராஜதரங்கிணி – முன்-நவீன இந்தியாவின் ஒரே வரலாற்று நூல் – மொழிபெயர்ப்பு நூலின் இரண்டு பெரும்பாகங்களை வாங்கி புத்தக அலமாரியை நிரப்புகிறேன். பிரிவினைவாதிகளை ஆதரிக்கிறாரோ எனும் சந்தேகத்தில் பல வருடங்களாக வாசிக்காமல் வைத்திருந்த பஷாரத் பீரின் நூலை (curfewed night) ஒரே நாளில் வாசித்து முடிக்கிறேன். நான் வாசிக்கவிருக்கும் அடுத்த சல்மான் ருஷ்டியின் நாவலாக Shalimar the clown-ஐ தேர்ந்தெடுக்கிறேன். யூ-ட்யூபில் கஷ்மீரி கிரிக்கெட் வீரர் உம்ரன் மலிக்-கின் தந்தையாருடைய பேட்டியை பார்க்கிறேன். பெய்ஜிங் குளிர் கால ஒலிம்பிக்கில் alpine skiing 🎿 விளையாட்டில் இந்தியாவிற்காக பங்கு பெற்ற முகம்மது ஆரிஃப் கான் குல்மரக் (gulmarg) பனிச்சரிவுகளில் பயிற்சி செய்யும் காணொலியை தேடிக் கொண்டிருக்கிறேன். உறக்கத்துக்கு முன் சடங்காக வாசிக்கும் கவிதைகள் எல்லாம் இப்போது கஷ்மீர சித்தர் லல்லேஸ்வரி எழுதியதாகவே இருக்கின்றன. 1384இல் மீர் சையத் அலி ஹம்தானி அவர்களின் பேருரையை கேட்டு இஸ்லாத்தை நான் தழுவியிருப்பேனா என்ற ஊகசிந்தனையில் அடிக்கடி ஆழ்கிறேன். புராதன இந்தியாவில் மிக அதிக அளவில் வர்ணக்கலப்பும் சாதிக்கலப்பும் நிகழ்ந்த பூமி இன்று ஒற்றை அடையாளம் எனும் குழிக்குள் தன் சவத்தை தானே இறக்கிக் கொண்டிருக்க, அதன் பன்முகத்தன்மையை மீட்டெடுத்து அதனுள் புது ரத்தம் பாய்ச்சும் மந்திரநிகழ்வு ஏதேனும் சாத்தியமா என்ற கனவில் மூழ்குகிறேன். நூறடிக்கு ஒருவர் என போர் உடையில் ஆயுதங்களுடன் நிற்கும் ராணுவ வீரர்களின் பிம்பங்கள் அதே கனவில் புகையாக கலைந்து போகின்றன. காவா தேனீர்ப் பொடி இருக்கிறது. அதைப் பருகப் பொருத்தமான கஷ்மீரத்தின் குளிர்ச்சியைத் தேடுகிறேன். ஷாலிமார் பாகில் பார்த்த சினார் மரத்தின் அசைவை ஏன் ஒலிப்பதிவு செய்து வைத்துக் கொள்ளவில்லை என்று கேட்டுக் கொள்கிறேன். கஷ்மீரில் வசிக்காமலேயே தன் முன்னோர்களின் பூமியைத் தன் ஒவ்வொரு படைப்பிலும் இணைத்துக் கொள்ளும் ருஷ்டியைப் புரிந்து கொள்ள முடிகிறது. கஷ்மீர் மீதான என்னுடைய ஈர்ப்பை புரிந்து கொள்ள முடியவில்லை. ஈர்ப்பு நெடுநாள் நிலைக்காது என்பர். இன்ப வேதனை நிலைக்கும் வரை நிலைக்கட்டும். கஷ்மீரக்கவி அமின் கமிலின் நன்னம்பிக்கை தெறிக்கும் வரிகளைப் போல் innocence மீண்டும் பூக்களாய் மலர்ந்து கைதட்டி மகிழட்டும் – என் மனதிலும் என் காதல் பூமியிலும்.

—-

பனி

தோட்டத்திற்குள் வந்தது பனி நேற்றிரவு
சோகச் செய்தி சொன்னது
இரவு முழுவதும் சொன்னது
மசூதியிலும் கோவிலிலும் ஒவ்வொரு பூசாரியும் சொல்வதை
மலரின் காதில் கிசுகிசுத்து அழுதது:
“உலகம் மரணகரமானது;
சிரிப்பு மற்றும் மகிழ்ச்சியை மறைக்கிறது.
அழுகையுடன் வருகிறோம், அழுகையுடன் செல்கிறோம்.”

காலை சூரியன் உதித்தது,
மனதின் குழப்பம் தெளிந்து கண்கள் சுற்றி பார்த்தன.
பயத்தால் சுருங்கியது பனி,
இருண்ட இரவின் தூதர் ஓடிவிட்டார்.
பூக்கள் சிரித்தன, மொட்டுகள் –
மகிழ்ச்சியில் கைதட்டி மலர்ந்தன.

—-

(சினார் மரம் – கஷ்மீரின் அடையாளம்)

சுவரில் ஒரு கடிதம்

பெல்ஷஸார் – விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் வரும் டேனியலின் புத்தகத்தில் குறிப்பிடப்படும் பாபிலோனின் பட்டத்து இளவரசன். விவிலியத் தொன்மத்தில் பாபிலோனியப் பேரரசன் நெபுகத் நெஸாரின் மகன் என்று குறிப்பிடப்படும் பெல்ஷஸார் வரலாற்று ரீதியாக நெபுகத் நெஸாருக்குப் பின் வந்த நெபோடினஸ் என்னும் அரசனின் மகனாவான். டேனியலின் புத்தகத்தில் வரும் தொன்மக் கதையின் படி பெல்ஷஸார் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தான். அவ்விருந்தில் அவனுடைய பிரபுக்கள், அமைச்சர்கள், மனைவிகள், அந்தப்புரப் பெண்கள் எனப் பெருந்திரளாக அனைவரும் கலந்துகொண்டனர். நெபுகத் நெஸார் ஜெருசலேமைக் கைப்பற்றி யூதர்களின் தலைமைக் கோயிலிலிருந்து எடுத்து வந்த கோப்பைகளையும் பாத்திரங்களையும் விருந்தில் மதுவருந்த பயன்படுத்துமாறு ஆணையிடுகிறான் பெல்ஷஸார். விருந்தினர் அனைவரும் அந்தக் கோப்பைகளில் மதுவூற்றி அருந்துகின்றனர். பின்னர் அக்கோப்பைகளின் மூலப்பொருட்களான தங்கம், வெண்கலம், வெள்ளி முதலானவற்றுக்கான தேவதைகளை வணங்குகின்றனர். அப்போது விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்த அறையின் சுவரொன்றில் ஓர் ஆண் கரம் தோன்றுகிறது. சுவரில் பின் வரும் சொற்கள் எழுதப்படுகின்றன. அந்தச் சொற்களின் அர்த்தம் ஒருவருக்கும் புரியவில்லை. அமைச்சர் ஒருவரை அழைத்து ஜெருசலேமிலிருந்து பாபிலோனுக்கு அழைத்துவரப்பட்ட யூதர்களிலேயே அறிவு மிக்கவரும் பலவித மொழிகளை அறிந்தவருமான டேனியலை கூட்டிவரப் பணிக்கிறான். டேனியல் அங்கு வந்தவுடன் சுவரில் காணப்படும் சொற்களின் அர்த்தத்தைச் சொன்னால் பாபிலோனிய நாட்டின் மூன்றாவது அதிகாரமிக்கவனாக ஆக்குவதாகச் சொல்கிளான். டேனியல் தனக்கு பரிசோ பதவியோ வேண்டாம் என்று மறுத்துவிட்டு அர்த்தத்தை மட்டும் சொல்கிறார்.

מנא מנא תקל ופרסין
Mede Mede Tekel Upharsin

“Mene, தேவன் உமது ராஜ்யத்தின் நாட்களை எண்ணி, அதை முடிவுக்குக் கொண்டுவரப் போகிறார் ;Tekele, நீ எடைபோடப்பட்டாய்…உன் எடை குறைந்து காணப்படுகிறது ; “UPHARSIN”, உனது ராஜ்யம் பாரசீகர்களுக்குக் கொடுக்கப்படும்.”

அன்றிரவே பெல்ஷஸார் பாரசீகர்களால் கொல்லப்படுகிறான். பாபிலோனை பாரசீக பேரரசர் டரியஸ் கைப்பற்றுகிறார். டரியஸ் பாபிலோனில் அடிமைகளாக இருந்த யூதர்களை ஜுடேயாவுக்கே திரும்ப அனுப்பிவைக்கிறார்.

That very night Belshazzar the Chaldean (Babylonian) king was killed, and Darius the Mede received the kingdom.

— Daniel 5:30–31[1]

மூன்று நகரங்கள்

துணுக்கு (trivia) எனக்கு மிகவும் பிடித்த வாசிப்பு வகைமை. வெவ்வேறு வடிவங்களில் அதனை எழுதிப் பார்த்தல் – கட்டுரைகளில் அவற்றை அடுக்குதல், உரையாடல்களுக்கு நடுவே அவற்றை புகுத்துதல், நாவலின் நெடும்பத்திகளில் அவற்றை பதிவுசெய்தல், கவிதைகளில் குறிப்பாக்குதல் என – பல விதங்களில் விரியும். இந்தியாவில் எல்லைகளில் இருக்கும் மூன்று நாடுகளில் உள்ள மூன்று நகரங்களைப் பற்றிய துணுக்கு தோரணத்தை என்றோ எழுதினேன்.

மீர்ப்பூர்

அறுபதுகளில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் மீர்ப்பூரில் ஜீலம் ஆற்றுக்கு மேல் மிகப் பெரிய அணை கட்டப்பட்டது. உலகின் ஏழாவது பெரிய அணையான மங்ளா டேம் கட்டப்பட்ட போது 1,10,000 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் வேறு இடங்களுக்கு நகர வேண்டியிருந்தது. அவர்கள் வசித்துவந்த கிராமங்கள் நீருக்கடியில் மூழ்கின. பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடாக பாகிஸ்தானிய அரசு பிரிட்டிஷ் வேலை அனுமதியை (work permit) வழங்கியது. இன்று பிரிட்டனில் வசிக்கும் பாகிஸ்தானியர்களில் “மிர்ப்பூரிகள்” எழுபது விழுக்காடு. வடக்கு இங்கிலாந்தின் மேற்கு யார்க்‌ஷைரில் உள்ள ப்ராட்ஃபர்ட் நகரில் வசிக்கும் கிட்டத்தட்ட அனைத்து பாகிஸ்தானியரும் மிர்ப்பூரிகள். Smart Mirpuris. They knew how to negotiate.

சில்ஹேட்

மிர்ப்பூரிகள் போன்று பங்க்ளாதேஷின் சில்ஹேட் (Sylhet) நகர் பூர்வீக மக்களும் அதிகம் இங்கிலாந்தில் குடியேறியவர்கள். பங்க்ளாதேஷின் மூன்றாவது பெரிய நகரம் சில்ஹேட். ஈஸ்ட் இந்தியா கம்பெனி காலத்திலருந்தே கப்பல்களில் சிற்றேவலர்களாக ( lascars) பணியாற்ற சில்ஹேட்டியர்கள் மிகவும் விருப்பங்காட்டினார்கள். முதன் முதலாக லண்டனில் இந்திய உணவகத்தை 1810 இல் தொடங்கியவர் சில்ஹேட்டியிலிருந்து வந்த வங்க முஸ்லீம் ஷேக் தீன்மொஹமட். இன்றும் லண்டனின் புகழ் பெற்ற இந்திய உணவகங்களை சில்ஹேட்காரர்களே நடத்துகிறார்கள். இதற்காகவே உள்ளூர் சில்ஹேட்காரர்கள் வெளிநாட்டுக்கு குடியேறியவர்களை ‘லண்டனி’ என்று வேடிக்கையாக குறிப்பிடுவார்கள். எழுபதுகளிலும் எண்பதுகளிலும் சில்ஹேட்டிலுருந்து பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்கும் குடியேற்றம் தொடர்ந்தது. வங்க சுதந்திரப் போரின் போதும் அதற்கு முன்னரான 1970இன் பல உயிர்களை பலி வாங்கிய போலா சூறாவளியின் போதும் குடியேற்றம் உச்சத்தை தொட்டது.

நீர்க்கொழும்பு

கதுநாயக விமான நிலையத்தில் இறங்கி E3 வழியில் கொழும்பு செல்கையில் வலப்புறத்தில் மிக அழகான Lagoon தென்படும். Negombo Lagoon என்பது அதன் பெயர். கடலோர விடுதிகள், அழகான பல சர்ச்சுகள் என்று பயணிகளுக்கான பல கவர்ச்சிகளை கொண்டுள்ள Negombo-வை தமிழில் நீர்க்கொழும்பு என்று அழைக்கிறார்கள். இருபத்தியைந்துக்கும் மேலான சர்ச்சுகள் இருப்பதால் நீர்க்கொழும்பை குட்டி ரோம் என்றும் குறிப்பிடுகிறார்கள். ஊரின் பெயர்க்காரணமாக இரண்டு தொன்மங்கள் வழங்குகின்றன. சிங்களர்கள் நிகம்போ என்ற பெயர் மீகமூவ எனும் பழைய பெயரிலிருந்து மருவியது என்கிறார்கள். தமிழர்கள் நிகும்பள என்னும் பெயரிலிருந்து மருவியது என்கிறார்கள். நிகும்பளன் என்பவன் இராமாயணத்தில் வரும் ஒரு பாத்திரம். இவன் இராவணனின் மைத்துனன்.

இந்த தோரணம் இன்னும் முழுமையடையவில்லை. மீர்ப்பூருக்கும் சில்ஹேட்டுக்கும் இடையே மேலை நாட்டுக்குக் குடிபெயர்தல் எனும் பொதுப்புள்ளி இருக்கிறது. நீர்க்கொழும்பிற்கு? இத்தாலியில் டைரேனியன் கடலின் கரையில் அமைந்துள்ள Negombo எனும் ஊருடன் ஏதேனும் தொடர்பு இருக்குமா?

தொடர்பு படுத்தல் கற்பனையின், எழுத்தின் இன்றியமையா அங்கம். தொடர்புபடுத்தலின் நீட்சி புனைவின் ஆரம்பம் என்ற சொந்த தியரி ஒன்று என்னிடத்தில் உண்டு.

மணிமேகலை – குறிப்புகளின் குவியல்

இப்போது இல்லாது மறைந்து போன பௌத்த பூமியை மறு-கற்பனை செய்ய வைக்கிறது மணிமேகலை காப்பியம். பாத்திரங்கள் தமிழகத்தில் வசித்தன ; தமிழ் பேசின. ஆனால் காப்பியத்தின் பௌத்த தரிசனம் ஒற்றை மொழியியல்-நில அடிப்படையிலானதன்று. சர்வ-தேசிய, சர்வ-மொழி அடிப்படையிலானது. கதையில் பல்வேறு தமிழரல்லாத பாத்திரங்கள். சுதமதி வங்காளப் பெண். புண்ணியராசன் இந்தோனேசியாவின் ஜாவா பெருந்தீவை ஆளும் மன்னன். ஆபுத்திரனின் தாயார் கங்கைச் சமவெளியிலிருந்து (வாராணசி) கன்னியாகுமரி வந்தவள். மகாபாரதக் குறுங்கதை வருகிறது. திருக்குறள் வருகிறது. தூரத்தீவுகளில் வசிக்கும் பழங்குடிகள் வருகின்றனர். வஞ்சி, காஞ்சி, காவிரிப்பூம்பட்டினம் – கதையில் வரும் நகரங்கள் சித்தரிக்கப்படும் விதம் அவை காஸ்மோபாலிட்டன் நகரங்கள் என நம்மை உணர வைக்கின்றன. வேத காலத்து ரிஷிகள் குறிப்பிடப்படுகின்றனர். தாந்திரீக பௌத்தக் குறியீடுகள் கதை நெடுக காணப்படுகின்றன. பௌத்தத்தை ஒரு சர்வ தேச சமயப்பண்பாடாக தமிழில் பதிவு செய்கிறது இந்த அற்புதக் காப்பியம்.

மணிமேகலை காப்பியம் சித்தரிக்கும் பௌத்தப் பெருநிலம் சேர, சோழ, பாண்டிய,பல்லவ நாடுகளை உள்ளடக்கியது மட்டுமல்ல. ஆந்திரம், கபிலவாஸ்து, காசி, கயா, வங்கம் என்னும் பிற பிரதேசங்களையும் உள்ளடக்கியது. அது மணி பல்லவம், ஆடம்ஸ் பீக் வாயிலாக இலங்கை, தரும சாவகன் எனும் சான்றோன் உலவும் சாவகம் என்று அன்றைய பௌத்த ஆசியா முழுதும் விரிகிறது.

மகாபாரதம்

மகாபாரதத்தின் சாந்தி பர்வத்தில் வரும் கௌசிக முனிவர் நாய்க்கறி உண்ணும் கதையை தீவதிலகை மணிமேகலைக்கு சொல்கிறாள். பசிப்பிணியின் கொடுமையையும் அதனைத் தீர்ப்போரது பெருமையையும் தீவதிலகை மணிமேகலைக்கு அறிவுறுத்துகிறாள்.

“புன்மரம் புகையப் புகையழல் பொங்கி

மன்னுயிர் மடிய மழைவளம் சுரத்தலின்

அரசுதலை நீங்கிய வருமறை யந்தணன்

இருநில மருங்கின் யாங்கணுந் திரிவோன்

அரும்பசி களைய வாற்றுவது காணான்

திருந்தா நாயூன் தின்னுத லுறுவோன்

இந்திர சிறப்புச் செய்வோன் முன்னர்

வந்து தோன்றிய வானவர் பெருந்தகை

மழைவளந் தருதலின் மன்னுயி ரோங்கிப்

பிழையா விளையுளும் பெருகிய தன்றோ”

(மணிமேகலை : பாத்திரம் பெற்ற காதை 11: 82-91)

“புல்லும் மரமும் கரியுமாறு புகையை உடைய தீ போல வெப்பம் மிகுத்து உயிர்கள் அழியுமாறு மழையாகிய செல்வம் மறைந்து போனமையால் அரசு புரிதலினின்றும் நீங்கிய அரிய மறைகளையுணர்ந்த அந்தணனாகிய விசுவாமித்திரன் பெரிய பூமியிடத்து யாண்டும் சுற்றுகின்றவன் அரிய பசியை நீக்க உதவுவதாகிய உணவு ஒன்றையுங் காணாதவனாய் சிறிதும் பொருந்தாத நாயின் ஊனைத் தின்னத் தொடங்குவோன் உண்ணுமுன் செய்தற்குரிய தேவ பலியினைச் செய்கின்ற பொழுது அவன் முன்னர் வெளிப்பட்ட அமரர் தலைவன் மழைவளத்தை அளித்தலான் உயிர்கள் மிகுத்து தப்பாத விளைவும் மிகுந்த தன்றோ”

திகிலூட்டும் பிறவிக்கதைகள்

“தீவ திலகை செவ்வனந் தோன்றிக்

கலங்கவிழ் மகளிரின் வந்தீங் கெய்திய

இலங்குதொடி நல்லாய் யார்நீ என்றலும்

எப்பிறப் பகத்துள் யார்நீ யென்றது

பொற்கொடி யன்னாய் பொருந்திக் கேளாய்”

கோமுகி ஏரியில் அமுதசுரபியின் காவல் தேவதை தீவதிலகை மணிமேகலையை பார்த்ததும் கேட்கும் கேள்வி : யார் நீ?

மணிமேகலை என்ன பதில் சொல்வது என்று குழம்பி பின்னர் சொல்கிறாள் : யார் நீ என நீ வினவியது எந்த பிறப்பின் நிகழ்ச்சி குறித்து?

The King and the Clown in South Indian Myth and Poetry நூலில் David Shulman இதுபற்றி சொல்கிறார் : “the Tamil Buddhist exploration of the cognitive experience of reincarnation finds the resulting awareness to be baffling, even terrifying”

புண்ணியராசன் மணிபல்லவத்தை அடைந்து தன் முன் பிறவி உடம்பின் எலும்புகளை தோண்டியெடுக்கும் காட்சி நிச்சயம் terrifying தான்!

வள்ளுவரும் சாத்தனாரும்

மருதி என்பாளுடன் சதுக்கப்பூதம் உரையாடும் கட்டத்தில் திருவள்ளுவரை மேற்கோள் காட்டுவார் மணிமேகலை ஆசிரியர்.

“தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றஅப்

பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்”

(மணிமேகலை : 22 : 59-61)

சுடுகாட்டுக் காட்சிகள்

“என்புந் தடியு முதிரமு மியாக்கையென்

றன்புறு மாக்கட் கறியச் சாற்றி

வழுவொடு கிடந்த புழுவூன் பிண்டத்து

அலத்தகம் ஊட்டிய அடிநரி வாய்க்கொண்

டுலப்பி லின்பமோ டுளைக்கு மோதையும்

கலைப்புற அல்குல் கழுகுகுடைத் துண்டு

நிலைத்தலை நெடுவிளி யெடுக்கு மோதையும்

கடகஞ் செறிந்த கையைத் தீநாய்

உடையக் கவ்வி யோடுங்கா வோதையும்

சாந்தந் தோய்ந்த ஏந்தின வனமுலை

காய்ந்தபசி யெருவைக் கவர்ந்தூ ணோதையும்

பண்புகொள் யாக்கையின் வெண்பலி யரங்கத்து

மண்கனை முழவ மாக…….”

(மணிமேகலை : 6 : 107 – 119)

சார்ங்கலன் எனும் பார்ப்பனச் சிறுவன் ஒரு காட்டில் தனிவழிச் செல்கையில் காணும் காட்சிகளை, கேட்ட சத்தங்களை சாத்தனார் மேற்கண்ட வரிகளில் சொல்கிறார்.

“எலும்பும் சதையும் குருதியுமாகியவற்றை உடம்பு என்று அதன் மேல் அன்பு வைக்கின்ற மக்களுக்கு அறியக் கூறும் வண்ணம் புழுக்கள் மலிந்த ஊண் பிண்டமாகி விழ்ந்து கிடந்த உடலில் செம்பஞ்சுக் குழம்பு ஊட்டப்பெற்ற அடிகளை நரி வாயிலே கவ்விக் கொண்டு கேடில்லாத இன்பத்துடன் ஊளையிடுகின்ற ஒலியும், உடையை ஒழித்த அல்குலைக் கழுகு குடைந்து உண்டு நிலத்தின் கண் பெரிய கூவுதலைச் செய்யும் ஓசையும், கடகமணிந்த கையைத் தீயநாய் உடையுமாறு கவ்விக் கொண்டு இடும் ஒடுங்காத முழக்கமும், சந்தனம் பூசப்பெற்ற இளங்கொங்கையை பசி கொண்ட பருந்து கவர்ந்துண்ணும் ஓசையும், இனிமையுடைய உடல்கள் வெந்த சாம்பற்குவையாகிய அரங்கில்….”

1616

அமுதசுரபியைப் பெற்ற பிறகு ஆகாய மார்க்கமாக காவிரிப்பூம்பட்டினம் திரும்புகிறாள் மணிமேகலை. மணிமேகலா தெய்வம் அறிவுறுத்தியபடி அரவண அடிகளைச் சந்தித்து மணிமேகலா தீவில் நடந்தவற்றை எடுத்துக் கூறுகிறாள்.

உலகில் அவதரிக்கப் போகின்ற வருங்கால புத்தர் (மைத்ரேய புத்தர்) பற்றி அரவண அடிகள் மணிமேகலைக்குச் சொல்கிறார். கீழ்க்கண்ட வரிகளில் புத்தர் 1616ம் ஆண்டில் பிறப்பார் என்று சொல்லப்படுகிறது. அது எந்த அப்தம் என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.

“சக்கர வாளத்துத் தேவ ரெல்லாம்

தொக்கொருங் கீண்டித் துடிதலோ கத்து

மிக்கோன் பாதம் விழுந்தனர் இரப்ப

இருள்பரந்து கிடந்த மலர்தலை உலகத்து

விரிகதிர்ச் செல்வன் தோன்றின னென்ன

ஈரெண் ணூற்றோ டீரெட் டாண்டில்

பேரறி வாளன் தோன்றுமதற் பிற்பாடு

பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி

இரும்பெரு நீத்தம் புகுவது போல

அளவாச் சிறுசெவி யளப்பரு நல்லறம்

உளமலி யுவகையோ டுயிர்கொளப் புகூஉம்”

( அறவணர்த் தொழுத காதை : 12 : 72-82 )

“சக்கரவாளத்திலுள்ள தேவரனைவரும் சேர்ந்து ஒன்றாகக் கூடித் துடிதலோகத்துள்ள (dusita heaven) சிறந்த தேவன் திருவடிகளில் விழுந்து இரக்க, இருள் பரவிய அகன்ற பூமியின் கண் விரிந்த கிரணங்களையுடைய பரிதிவானவன் தோன்றினாற் போல ஆயிரத்து அறுநூற்றுப் பதினாறாம் ஆண்டில் புத்தன் தோன்றுவான். அதன் பின்பு பெரிய குளத்திலுள்ள மதகாகிய சிறிய வழியில் மிகப்பெரிய வெள்ளம் புகுவதைப் போல பேரளவில்லாத சிறிய செவிகளின் வழியே அளத்தற்கரிய நல்லறங்கள் உள்ளத்தில் நிறைந்த மகிழ்ச்சியோடு உயிர்கள் ஏற்றும்படி புகாநிற்கும்”

புத்த துதி

அமுதசுரபியைப் பெற்றதும் மணிமேகலை அளவற்ற மனமகிழ்ச்சி கொண்டாள் ; புத்த தேவரைப் பலவாறு துதித்தாள்.

“மாரனை வெல்லும் வீர நின்னடி

தீநெறிக் கடும்பகை கடிந்தோய் நின்னடி

பிறர்க்கறம் முயலும் பெரியோய் நின்னடி

துறக்கம் வேண்டாத் தொல்லோய் நின்னடி

எண்பிறக் கொழிய இருந்தோய் நின்னடி

கண்பிறர்க் களிக்குங் கண்ணோய் நின்னடி

தீமொழிக் கடைத்த செவியோய் நின்னடி

வாய்மொழி சிறந்த நாவோய் நின்னடி

நரகர் துயர்கெட நடப்போய் நின்னடி

உரகர் துயரம் ஒழிப்போய் நின்னடி

வணங்குதல் அல்லது வாழ்த்தலென் நாவிற்

கடங்கா து…….”

“மாரனை வென்ற வீரனே நின் திருவடிகளை, தீய வழிகளாகிய மிக்க பகையை நீக்கினோய் நின் திருவடிகளை, ஏனையோர்க்கு அறம் உண்டாதற்கு முயல்கின்ற பெரியோய் நின் திருவடிகளை, சுவர்க்க இன்பத்தை வேண்டாத பழையோனே நின் திருவடிகளை, மக்களுடைய எண்ணங்கள் எட்டாமற் பின்னே மேற்பட்ட நிலையிற் சென்றோய் நின் திருவடிகளை, உயிர்கட்கு ஞானத்தை அளிக்கும் மெய்யுணர்வுடையோய் நின் திருவடிகளை, தீயமொழிகளை கேளாதிருக்குமாறு அடைக்கப்பட்ட காதினை உடையோனே நின் திருவடிகளை, மெய்மொழிகள் சிறந்த நாவினையுடையோய் நின் திருவடிகளை, நரகத்திலிருப்போரின் துன்பம் நீங்குமாறு ஆண்டுச் சென்றோய் நின் திருவடிகளை, நாகர்களின் துன்பத்தை நீக்குவோய் நின் திருவடிகளை வணங்குதலேயன்றி வாழ்த்துதல் என் நாவில் அடங்காது”

மணிமேகலை : பாத்திரம் பெற்ற காதை : 11 : 61-72

இராமாயணம்

விருச்சிக முனிவன் இட்ட சாபத்தால் அடங்காப் பசியால் அவதியுறுகிறாள் காயசண்டிகை. இராமாயணத்தில் இராமர் பாலம் கட்ட முயன்ற போது எல்லாக் குரங்குகளும் கொண்டு வந்து போட்ட மலை, கற்களை இக்கடல் விழுங்கியதுபோல எல்லா உணவுப் பொருள்களையும் அவளின் வயிறு கரைத்துவிடுகிறது என்ற உவமை வழியாக இராமயணக் கதையை எடுத்தாள்கிறது மணிமேகலை.

நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி

அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று

குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம்

அணங்கு உடை அளக்கர் வயிறு புக்காங்கு

இட்டது ஆற்றாக் கட்டு அழல் கடும் பசிப்

பட்டேன் என் தன் பழ வினைப் பயத்தால்

(உலக அறவி புக்க காதை, 10-20)

முருகன்

முருகப்பெருமான் பற்றிய குறிப்புகளும் மணிமேகலையில் உண்டு.

கார் அலர் கடம்பன் அல்லன்

(பளிக்கறை புக்க காதை அடி 49)

குருகு பெயர்க்குன்றம் கொன்றோன் அன்ன முருகச் செவ்வி முகத்து

( மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை, 12-13)

கடம்ப மாலை அணிந்தவன் முருகன்.

கிரௌஞ்சம் என்ற பறவை பெயர் கொண்ட மலையைப் பிளந்துச் சிங்கமுகனைக் கொன்றவன் முருகன்.

+++++

உரை : ந மு வேங்கடசாமி நாட்டார் & ஔவை சு துரைசாமிப்பிள்ளை

ஒரு நிமிஷம்

அலுவலக நண்பர்களுடன் மாலைப் பொழுதுகளைக் கழிப்பது இப்போதெல்லாம் சிறு பதற்றத்தை தருகிறது. இரு நாட்கள் முன்னம் நண்பர் ஒருவருடன் உணவு விடுதிக்குச் சென்றிருந்தேன். பல வருடம் வெளிநாடுகளில் வேலை செய்தவர். அலுவலக வதந்தி, வேலை சம்பந்தப்பட்ட விஷயங்கள் எனப் பாதுகாப்பாகப் போய்க்கொண்டிருந்த உரையாடல் எப்போது சமூகநீதி நோக்கித் திரும்பியது என்று தெரியவில்லை.

  • இப்பல்லாம் முன்ன மாதிரி இல்ல
  • உயர் சாதிக்காரங்க பிற்படுத்தப்பட்டவர்களுக்கு விட்டுத் தராங்க இல்லாட்டி பகிர்ந்துக்கறாங்க
  • எல்லோர்க்கும் சம நீதி வந்துட்டா எல்லாம் சரியாயிடும்
  • என்னோட கேரியர்ல யாரோட சாதியையும் கேட்டதில்ல
  • நம்ம தாத்தாக்கள் எக்ஸ்ப்ளாய்ட் பண்ணியிருக்கலாம். இப்ப யாரும் பண்றாங்கன்னு தோணலை. நான் பார்த்ததில்லை.
  • கல்யாணம் என்பது கலாசாரம் சார்ந்தது. ஒருத்தன் அவன் சாதிக்காரப் பெண்ணையே கல்யாணம் பண்ணிகிட்டான்னா அவன் தலித்துகளை அவமானப்படுத்துகிறான் என்று அர்த்தமில்லை. நவீனத்துவத்தால இந்தச் சிக்கலை தீர்க்க முடியலை. கல்லூரியில் படித்த தாராளவாத அறிவொளி பெற்ற மேற்கத்திய நாட்டவர் ஒருவர் கீரை பறிக்கும் மெக்சிகன் தொழிலாளியை வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்வது மிகவும் அரிது.
  • இதில் எனக்கு சில தீவிரமான கருத்துக்கள் உள்ளன.. அனைவரையும் ஒரே நேரத்தில் பிராமண+க்ஷத்ரிய+வைஷா+சூத்திரராக்கும் நேரம் இது என்று நினைக்கிறேன். இது நடக்க வேண்டுமானால், சமுதாயத்தை தட்டுப்படுத்தும் சட்டங்கள் தேவை.

சகிப்புத்தன்மை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்தது. நானும் லால் சிங் சத்தா, கரீனா கபூர், என்று உரையாடலின் – இதை இப்படிக் குறிப்பிட தயக்கமாக இருக்கிறது. ஒருவரே பேசிக் கொண்டிருப்பது எப்படி உரையாடல் ஆகும்? – மையத்தை கலைக்க முயன்று கொண்டிருந்தேன். டேய் வாயை மூடுடா என்று சொல்ல வேண்டும் போலிருந்தது.

அவர் பேச்சு “ரிசர்வேஷன்” என்ற சப்ஜெக்டுக்குள் நுழைந்தது. என் பதற்றம் அதிகரித்தது. Affirmative Action, Sense of Entitlement போன்ற சொற்களின் தாத்பர்யத்தை உணராமல் அவர் பேசிக் கொண்டு போனார்.

கிளாஸில் எஞ்சியிருந்ததை வாயில் கவிழ்த்துக் கொண்ட பின் சத்தத்துடன் மேசையில் வைத்தேன்.

ஒரு நிமிஷம்! என்று சொல்லி அவர் பேச்சை இடைமறித்தேன். நான் ஏதோ அவர் மீது வாந்தியெடுத்துவிடுவேனோ என்று அவர் நினைத்திருக்க வேண்டும். கொஞ்சம் பின்னுக்குச் சென்று நாற்காலியின் மீது சாய்ந்து உட்கார்ந்து கொண்டார்.

எனக்கு தொண்டை எரிவது போல் இருந்தது.

ஒரு நிமிஷம்! – எச்சிலை விழுங்கிக் கொண்டேன்.

அவர் கவனம் முழுதும் என் மீது இருப்பதை உறுதி செய்த பின்னர் –

“தயவு செய்து திறந்த மனதுடன் பின்தங்கியவர்கள் என்ன அனுபவிக்கிறார்கள் என்பதைப் பரிவுடன் படியுங்கள். உங்கள் அனுபவத்தின் கண் கொண்டு மட்டுமே எல்லாவற்றையும் பார்க்காதீர்கள். நமது அனுபவம் மற்றும் சொந்தப் பார்வையை விட இந்த உலகம் மிகப் பெரியது. முங்கேகர், நூன், ஓம்வெல்ட் போன்ற தலித் அறிவுஜீவிகளின் புத்தகங்களையும், மாபெரும் ஆளுமையான பாபா சாஹேப் அம்பேத்கரின் புத்தகங்களையும் படிக்குமாறு உங்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். அம்பேத்கரின் The Annihilation of Caste வாசித்த பிறகு எனது நிலைப்பாடு மற்றும் கருத்துகளை வெகுவாக மாற்றிக்கொண்டேன். என்னை வரையறுக்கிறது என்று நான் நினைத்துக் கொண்டிருந்த பிறப்பு சார்ந்த அடையாளத்திலிருந்து வெளியே வர முடிந்தவரை முயற்சி செய்வது என்று அப்போதுதான் முடிவெடுத்தேன்..”

அவர் எதுவும் பேசாமல் என்னைச் சில கணங்கள் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய உளறல்களுக்கு இது தான் மிகச் சிறந்த come back என்று தோன்றியது.

Fair enough என்று முணுமுணுத்தார்

எனது நெஞ்செரிச்சல் குறைந்து சற்று குளிர்ச்சி பாய்ந்தது.

காஷ்மீர் ரிப்போர்ட்

பெருநிலப்பரப்பில் வழிபாட்டுரிமை என்று பேசப்படுவது காஷ்மீரிகளுக்கு மீண்டும் மீண்டும் தொடர்ந்து மறுக்கப்படும் ஒன்று. 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கூட, காஷ்மீரின் முக்கியச் சின்னமான ஜாமியா மஸ்ஜித் 136 நாட்களுக்கு மூடப்பட்டிருந்தது. இது முதல் முறை அல்ல. இது போன்று கடந்த ஐம்பதாண்டுகளில் பலமுறை வரலாற்றுச் சிறப்புமிக்க மசூதி மூடப்பட்டிருக்கிறது.

ஹஸ்ரத் பாலுக்குச் சென்ற போது அங்கு வைக்கபட்டிருந்த அறிவிப்பு பலகை எனக்கு அதிர்ச்சியைத் தந்தது – “இது ஒரு வழிபாட்டுத் தலம் மட்டுமே ; வேறு எந்தச் செயல்களும் அனுமதிக்கப்படாது”. தொழுகை செய்ய வருபவர்களை இப்படியா பயமுறுத்துவது?

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டபோது ஆறு மாதங்களுக்கு, காஷ்மீர் மக்கள் பட்ட இன்னல்கள் நெஞ்சை உலுக்கின. ஆறு மாதங்கள் மொபைல் இணைப்புகள் இல்லாமல் வாழ்வதை கற்பனை செய்து பாருங்கள்! டெல்லியில் தற்போதைய ஆட்சியும் அதன் முக்கிய இரட்டையரும் இங்கு அதிகம் விரும்பப்படுவதில்லை என்பது கண்கூடு.

உ.பி முதல்வர் டெம்ப்ளேட்டில் செயல்படுகிறார் தற்போதைய லெஃப்டினன்ட் கவர்னர். கடந்த ஞாயிற்றுக்கிழமை (8/5/2022), இந்தியத் தொல்லியல் கழகத்தின் (ஏ எஸ் ஐ) பாதுகாப்பில் இருக்கும் வரலாற்று நினைவுச்சின்னத்திற்குள் முன்னறிவிப்பின்றி நிழைந்து ஹோமம் நடத்துகிறார். இது இதுவரை கேள்விப்படாத ஒன்று. இதற்கு ஏஎஸ்ஐ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ராணுவத்தின் பங்கு பற்றி பலரிடம் பேசினேன். ஊக்கமளிக்கும் கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை. ஒரு கடைக்காரரிடம் நான் கேட்ட கேள்விக்கு – அவர் இந்தியாவை வெறுக்கிறாரா என்றால் – சுருக்கமான பதில் – “ஆம், அது இயற்கைதானே”.

ஒவ்வொரு 20 அடிக்கும் ஒரு முழு ஆயுதமேந்திய சிப்பாய் தெருக்களைக் கண்காணிப்பதைக் காணலாம்.

விரும்பத்தகாத அரசியல் பார்வைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், காஷ்மீரிகள் மிகவும் இனிமையாகவும், மரியாதையாகவும், விருந்தோம்பல் மிக்கவர்களாகவும் இருப்பதைக் கண்டேன்.

பல சீக்கியர்கள் காஷ்மீரில் வாழ்வதைப் பார்த்தேன். பஹல்காமில் ஒரு சீக்கியரும் ஒரு காஷ்மீரியும் பங்காளிகளாக நடத்தும் ஓர் உணவகத்தில் உணவுண்டேன். சீக்கியர்கள் பள்ளத்தாக்கில் வாழும்போது பண்டிட்கள் ஏன் வெளியேற்றப்பட்டனர் என்பது குழப்பமாக உள்ளது.

நாங்கள் தில்லி திரும்ப விமானத்தைப் பிடிக்க விமான நிலையத்தை அடையும் அதே நேரத்தில், விமான நிலையப் பகுதிக்கு அருகிலிருக்கும் அலுவலகமொன்றில் வேலை பார்க்கும் ஒரு காஷ்மீரி பண்டிட் (மீள்குடியேற்றத் திட்டத்தில் பள்ளத்தாக்கு திரும்பியவர்) வேலையிடத்திலேயே இரு தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தெற்கு காஷ்மீரில் இன்னும் மிலிடன்ஸி ஓயவில்லை. சுற்றுலாப் பயணிகளைச் ஓட்டிச் செல்லும் ஓட்டுநர்கள் முடிந்தவரை நெடுஞ்சாலை NH44 வழியாக மட்டுமே ஓட்டுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக அனந்த்நாக் செல்லும் சில உள் சாலைகளை பயன்படுத்த வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

தி காஷ்மீரி ஃபைல்ஸ் பிரபலமான திரைப்படம் அல்ல – நான் சந்தித்த கடைக்காரர்களிடம் நடத்தப்பட்ட முறைசாரா கருத்துக்கணிப்பின் அடிப்படையில். ஒரு சால்வை விற்பனையாளர் குறிப்பிட்டார் – நாங்கள் படத்தை எங்கே பார்ப்பது? – ஆம், இரண்டு தசாப்தங்களாக முழு பள்ளத்தாக்கிலும் சினிமா அரங்குகள் மற்றும் மல்டிபிளக்ஸ்கள் இல்லை. நம்ப முடிகிறதா?

இந்தக் கோடையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் காஷ்மீரை மொய்க்கின்றனர். ஐனவரியிலிருந்து மே மாதத் தொடக்கம் வரை ஏழு லட்சம் சுற்றுலாப் பயணிகளை காஷ்மீர் வரவேற்றுள்ளது. இதை ஒரு மகிழ்ச்சி தரும் முன்னேற்றமாக சராசரி காஷ்மீரிகள் கருதுகின்றனர்.

படம்: ஜாமியா மஸ்ஜித், ஶ்ரீநகர் – காஷ்மீரிகளின் மத-கலாச்சார நரம்பு மையம்

கண்ணாடிக்குள் ஒரு புத்தகம்

Hazrat Bal, Sri Nagar, Kashmir (from Dal Lake Side)

பேக்கேஜ் டூரில் திட்டமிட்டிருந்த அனைத்து இடங்களையும் பார்த்தாயிற்று. சஷ்மேஷாய் தோட்டமும் பரிமஹலும் பார்க்க முடியவில்லை. கவர்னர் வந்ததனால் பாதுகாப்பு கருதி பொதுமக்களுக்கு இவ்விரு ஸ்தலங்களிலும் அன்று அனுமதி இல்லை. எங்களுடன் ஒட்டுனராக வந்திருந்த குல்ஸார் அன்று களைத்திருந்தார். ஷாலிமார் பாக்-குக்கு வெளியே நினைவுப் பொருட்களை வாங்கிக்கொண்டு டாக்ஸி நின்றிருந்த இடத்துக்குத் திரும்பியபோது குல்சாருடன் நின்று கொண்டிருந்த பிட்டு aka ஹஷீமைச் சந்தித்தேன். தன்னை தில்லிக்காரன் என்று சொல்லிக் கொண்டார். கிழக்கு தில்லியிலுள்ள ஷாட்ரா பகுதியில் அவர் வீடு இருக்கிறதாம். பொதுவாக ஶ்ரீநகரில் வெளி மாநிலத்துக் காரர்கள் எவரையும் டாக்ஸி ஓட்ட விட மாட்டார்கள். அவர் எப்படி ஶ்ரீநகரில் டாக்ஸி ஓட்டுகிறார் என்று எனக்குப் புரியவில்லை. குல்ஸார் எங்களை ஓட்டல் வாசலில் விட்டுச் சென்றவுடன் அருகிருந்த டீக்கடையில் காஷ்மீரப் பானம் காவா அருந்திக் கொண்டிருந்தோம். ஹஷீமுக்கு நாங்கள் தங்கியிருந்த ஓட்டல் எப்படித் தெரிந்தது எனத் தெரியவில்லை. டீக்கடையை விட்டு நாங்கள் வெளியே வந்தபோது எங்களைப் பார்த்து கையாட்டினார். பேக்கேஜ் டூரில் இடம்பெற்றிராத ஹஸ்ரத் பால் தர்கா ஷரீஃபுக்கு ஹஷீமுடன் போகலாமென உடனடியாக முடிவெடுத்தேன்.

ஹஸ்ரத் பால் சென்றடைந்தபோது இரவுப் பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. என்னை உள்ளே அனுமதிப்பார்களா என்று சந்தேகமாக இருந்தது. தலைமுடியை மறைக்கும் படி குல்லா அணிய வேண்டும் என்ற பிரக்ஞை இல்லாமல் உள்ளே நுழைந்துவிட்டேன். ஹஷீம் தன் குல்லாவை எடுத்து வந்திருந்தார். பிராரத்தனைக் கூடத்துக்கு முன்னதாக காவலர்கள் நின்றிருந்தனர். தயக்கத்துடன் நடந்து வந்து கொண்டிருந்த என்னைப் பார்த்து ஒரு காவலர் என் பெயர் என்ன என்று கேட்டார். என்ன பெயர் சொல்வது என்று சில கணம் தயங்கினேன். பின்னர் அசல் பெயரைச் சொன்னேன். அவர் ஏற்கனவே நான் இந்து என்று ஊகித்திருக்க வேண்டும். “இரவுப் பிரார்த்தனை முடிந்த பின் நீங்கள் உள்ளே செல்லலாம்” என்றார் போலீஸ்காரர். தர்காவின் பின் புறம் இருந்த டால் ஏரிக்கருகே நின்று காத்துக் கொண்டிருந்தோம். தொழுகை அரை மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. மைக்கில் ஒலித்த தொழுகையில் கவனத்தை குவித்து ஏரியின் மேல் பார்வையை பதித்திருந்தேன்.

பிரார்த்தனை முடிந்தது. நாங்கள் பிரதான வாயில் வழியாக முதல் பிரார்த்தனை பகுதிக்குச் சென்றோம். அந்தப் பகுதியில் சிலர் இன்னமும் அமர்ந்து தொழுகை செய்து கொண்டிருந்தனர். கையை எப்படி வைத்துக்கொள்வது? அவ்வப்போது கோயிலில் கையைக் கூப்புவது போல் வைத்துக் கொண்டேன். இது தர்காவல்லவா? கை கூப்புதல் சரியாக இருக்காது. கையைக் கட்டிக் கொண்டேன். நான் இயல்பாக இல்லை என்று எனக்கே தெரிந்தது. தொழுகையில் இருந்த சிலரைத் தாண்டி கண்ணாடிக்குள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான டயரி போன்ற ஒன்றை எனக்கு ஹஷீம் காண்பித்தார். கறுப்பு மையில் மணிமணியாக அரபி மொழியில் குர்ஆன் மூலமும் ஒவ்வொரு அடிக்கு கீழே சிவப்பு மையில் பர்சியனில் அந்த அடியின் அர்த்தமும் எழுதப்பட்டிருந்தன. பர்சியனை உர்து என்று சொன்னார் ஹஷீம். தொழுகையாளர்களுக்கு எங்களின் பேச்சு இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காக ஹஷீமுடன் அதிகம் பேசவில்லை. “இந்த குர்ஆனை போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார் ஹஷீம். அதைக் கண்டு கொள்ளாமல் நான் மூலப்பிரார்த்தனை அறைக்குள் சென்றேன். தொழுகை முடிந்து மக்கள் எழுந்தனர். குர்ஆன் ஓதிய அந்த இளவயது மௌல்வியிடம் சென்று ஒவ்வொருவராய் கைகுலுக்கி விடை பெற்றனர். மௌல்வி அங்கிருந்து கிளம்பும் முன்னர் என்னைப் பார்த்தார். பின் என்னருகே வந்து கை கொடுத்தார். “சப் கைரியத்?” என்று வினவினார். நான் தெற்கிலிருந்து வருவதாகச் சொன்னேன். அது ஒரு சம்பிரதாயமான பேச்சு. நான் தெற்கா, மேற்கா, வடக்கா என்று என் belongingness குறித்த குழப்பம் எனக்கு அடிக்கடி ஏற்படுவதுண்டு! மௌல்வி “குதா ஹாஃபீஸ்” எனச் சொல்லி இன்னுமொரு முறை கைகுலுக்கி விடை பெற்றார்.

பின்னர் ஒரு முதியவர் என்னை அணுகி என் பெயரைக் கேட்டார். ஹஸ்ரத் பால் ஷரீஃப் பற்றிய தகவல்களை எனக்குச் சொல்லலானார். நபிகள் நாயகத்தின் ரெலிக் எந்தெந்த நாட்களில் பொதுமக்களுக்கு காண்பிக்கப்படும் என்று விவரமளித்தார். நான் சற்றும் எதிர்பாராத வகையில் ரெலிக் இருக்கும் அறைக்கு என்னை அழைத்துச் சென்றார். மூடியிருந்த அறையின் பூட்டுகளில் என் தலையை லேசாக இடித்த மாதிரி வைத்துக் கொண்டு பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு பணித்தார். அவர் சொன்னது மாதிரி செய்து இரு நிமிடங்கள் கண்ணை மூடி பிரார்த்தனை செய்தேன். அந்த இரு நிமிடங்களில் சில கணங்களுக்கு தவறுதலாக என் கரங்களை கூப்பினேன். என் தலையில் கையை வைத்து வாழ்த்தினார் அம்முதியவர்.

ஓட்டலுக்குத் திரும்பும் வழியில் ஹஷீம் கேட்டார் – “கண்ணாடிக்குள் வைத்திருந்த அந்த கையெழுத்து குர்ஆன் பிரதியை ஏன் போட்டோ எடுக்கவில்லை? உங்களுக்கு வரலாற்று விஷயங்களில் மிகுந்த ஆர்வம் இருக்கும் என நினைத்தேன்.”

“அஃப்கோர்ஸ்…அந்தப் புத்தகத்தில் என்ன விசேஷம்?”

“முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் தன் கையால் எழுதிய குர்ஆன் அது என்று சொன்னேனே”

“எப்போதய்யா சொன்னீர்?”

“நான் சொல்லிக் கொண்டிருந்தேன். நீங்கள் கை கூப்பி நின்றிருந்தீர்களே”

“!?()/-@&₹@“