
Blog
-
ருபைய்யத்துக்கு இன்னொரு தமிழ் மொழிபெயர்ப்பு ஏன் ?
ரூமி பல காலமாக என்னை திக்குமுக்காட வைத்துக் கொண்டிருக்கிறார். அவர் கவிதைகள் என்னை புதிர்சுவைக்குள் மூழ்கி தத்தளிக்க வைக்கின்றன. அவர் எழுதிய பர்ஸிய மொழியில் இயங்கிய மேலும் சிலரும் ரூமியுடன் சேர்ந்து என்னை மேலும் பித்து நிலைக்கு அழைத்துச் செல்கின்றனர். ஹபீஸ், சொராப் செபெஹ்ரி, ஓமர் கய்யாம் – இம்மூவரும் ரூமியுடன் சில காலம் முன்னர் சேர்ந்து கொண்டவர்கள். இவர்களை வாசிப்பது ஆங்கில மொழியாக்கம் வாயிலாக என்பது ஒரு குறை. முக்கால் வாசி மொழிபெயர்ப்புகள் மூலத்தை சரியான வகையில் பிரதிபலிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. எனினும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு வாயிலாகவாவது நம்மால் வாசிக்க முடிகிறதேயென்று திருப்திபட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

Rumi & Hafez ஹஃபிஸ் கிட்டத்தட்ட ரூமி போலத்தான். படிமங்களும் குறியீடுகளும் நிறைந்த சுஃபி இலக்கியத்தின் பிதாமகர்கள் இவ்விருவரும். செபெஹ்ரி ஒரு நவீன கவி. ஓவியக் கலையிலும் தேர்ந்தவர் என்பதால் அவருடைய சொற்களுக்கு வர்ண தூரிகையின் குணம் உண்டு. இருப்பினும் ரூமி, ஹபீஸ் போன்றோரின் படைப்புகளைப் போன்று செபெஹ்ரியின் அனைத்து கவிதைகளையும் எளிதாக உளவாங்கிக் கொள்ள முடிவதில்லை. வாசகரின் உழைப்பை அதிகம் கோருபவையாக உள்ளன செபெஹ்ரியின் கவிதைகள்.

Sohrab Sepehri ரூமிக்கும் இரண்டு நூற்றாண்டுகள் முன்னர் வாழ்ந்த ஓமர் கய்யாம் வேறு ரகம். கணிதவியல், வானவியல் போன்ற துறைகளில் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை செய்த கய்யாம் வாசகர்களை நன்கு ‘நக்கலடிக்கிறார்’. “எதைப் பற்றி எழுதியிருக்கிறேன் கண்டு பிடியுங்கள்” என்றுசவால் விடுகிறார். மது, போதை, என கிடடத்தட்ட அனைத்து “ருபைய்யத்”களிலும் வருவதைப் பார்த்து “இது நம்ம ஆளு” என்று “குடிமக்கள்” அவரை கொண்டாடுவதை பார்த்தால் தன் கல்லறையிலிருந்து ஓமர் கய்யாம் வயிறு குலுங்க சிரிக்கக்கூடும்.
எட்வர்ட் பிட்ஸ்ஜரால்ட்-டின் உலக புகழ் பெற்ற மொழியாக்கம் ஓமர் கய்யாமின் மீது உலக அரங்கில் வெளிச்சம் பாய்ச்சியது. ஈரடிகள் எனப்படும் ருபைய்யத்களை வெறித்தனமாக தன் வாழ்நாள் முழுதும் திரும்பத்திரும்ப மொழிபெயர்த்து வந்தார் எட்வர்ட். முதல்பதிப்புக்கு பிறகு தன் மொழிபெயர்ப்பில் பல திருத்தங்களை அவர் செய்தாலும் அவருடைய முதல் பதிப்பு கிட்டத்தட்ட ஒரு மறு-ஆக்கம் என்று பல பர்ஸிய மொழி வல்லுனர்களால் கருதப்படுகிறது.
கவிமணியின் தமிழ்மொழிபெயர்ப்பு ஒன்று ருபைய்யத்துக்கு உண்டு. அதிலிருந்து கீழ்வரும் வரிகள் மிகப்பிரபலம் :-
வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு
கையில் கம்பன் கவியுண்டு கலசம் நிறைய மதுவுண்டு
தெய்வகீதம் பலவுண்டு தெரிந்து பாட நீயுண்டு
வையந் தருமிவ் வனமன்றி வாழும் சொர்க்கம் வேறுண்டோ!கவிமணியின் மொழிபெயர்ப்பு இனிமையானது. மரபுக்கவிதை வடிவத்தில் அவர் மறு ஆக்கமாக அதை மொழிபெயர்த்திருந்தார். இந்த மொழிபெயர்ப்பில் வரும் “கம்பன் கவி” என்னும் motif ஓமர் கய்யாமின் உலகில் இருந்திருக்க வாய்ப்பில்லை. இதுபோல நம் மரபின் motif-களை பல இடங்களில் கவிமணி பயன்படுத்தியிருப்பார். மறு ஆக்கம் என்பதனால் அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. எனினும், குறியீடுகளை, படிமங்களை திரும்ப திரும்ப சொல்லும் சுஃபி இலக்கியத்தின் ஒரு தன்மை கவிமணியின் மறு – ஆக்கத்தில் இல்லாமல் போய்விட்டதோ எனும் சம்சயம் எனக்குண்டு.
ஊழ் வலிமை, தர்க்கங்களின் பயனற்ற தன்மை, கடவுட்தன்மையின் துளி உலக விஷயங்களில் இருத்தல், கடந்த கால சோகங்கள் மற்றும் எதிர்கால கவலைகள் – இவற்றை ஒதுக்கி இன்றைய பொழுதில் மட்டும் கவனம்செலுத்துதல் – ஆகிய தரிசனங்களை வழங்கும் motif-கள் இந்தியமரபிலும் உண்டு. கவிமணியின் மொழிபெயர்ப்பில் அவை உரிமையுடன் பயன்படுத்தப்பட்டிருப்பது ருபைய்யத்தின் சுஃபி தன்மையை நீர்க்கச் செய்கிறதோ என்று நான் நினைக்கிறேன்.
ருபைய்யத்துக்கு ஒரு நவீன தமிழிலான மொழிபெயர்ப்புக்கு இடமிருக்கிறது. மரபு வடிவத்தின் வரம்புகளின்றி வசனநடையிலான மொழிபெயர்ப்பு சுஃபி தரிசனங்களை உள்ளவாறே தமிழில் நிகழ்த்திக்காட்ட உதவும். ஒரே irony – மொழிபெயர்க்க இன்னொரு மொழிபெயர்ப்பையே – எட்வர்ட் பிட்ஸ்ஜெரால்டையே நம்பவேண்டியிருக்கிறது! சுமார் ஏழெட்டு ருபைய்யத்களை சாம்பிளுக்காக மொழிபெயர்த்தேன். அனைத்து ருபைய்யத்துக்களையும் மொழிபெயர்க்கும் திட்டம் உண்டு.
—–
ஜாம்ஷிட் மன்னன்
குடித்து கும்மாளமிட்ட
சபைகளில்
சிங்கமும் பல்லிகளும்
குதித்து விளையாடுகின்றன
கிறித்துவர்களை
வேட்டையாடிய பஹ்ராம்
மீளாத் துயிலில் கிடக்க
அவன் தலையை காலால்
உருட்டியது ஒரு வனக்கழுதை__
வாதம், முயற்சி
என முடிவிலி தேடலில்
எத்தனை காலம்?
பழமற்றோ
கசந்த பழத்துடனோ
கவலையில் மூழ்குவதை விட
கனிந்த திராட்சையுடன்
சந்தோஷத்தில் திளைப்பது சிறந்தது.__
தோழர்களே
வெகுகாலம் கழித்து
வீட்டில்
என் புது திருமணத்திற்கான
கொண்டாட்டம்
என் படுக்கையிலிருந்து
மலட்டு தர்க்கத்தை துரத்தி
விவாகரத்து செய்துவிட்டு
திராட்சைக் கொடிமகளை
மனைவியாய்க் கொண்டேன்—
கோப்பையை நிரப்பு ;
நம் காலுக்கு கீழ்
காலம் நழுவிச் செல்லுதல் பற்றி
பேசிப் பயன் என்ன?
பிறக்காத நாளையும்
இறந்த நேற்றும் –
இவற்றுக்காக கவலைப்படுதல் வியர்த்தம்,
இன்று இனிதாயுள்ளபோது!
(XXXVII)__
சுழலும் சொர்க்கத்திடமே
நான் கேட்டேன்-
“இருட்டில் தடுமாறும்
சிறு குழந்தைகளை வழிநடத்த
என்ன விளக்கை வைத்துள்ளது ஊழ்?”
சொர்க்கம் சொன்னது : “கண்மூடித்தனமான புரிதல்”__
உள்ளே வெளியே
மேலே, சுற்றியெங்கும், கீழே –
வேறொன்றுமில்லை
சின்ன பெட்டிக்குள் நடக்கும்
மந்திர நிழல்கூத்து
மெழுகுவர்த்தியே சூரியன்
அதைச் சுற்றி
வேதாள உருவங்கள்
வருவதும் போவதுமாய்__
ஆற்று விளிம்பில்
ரோஜாக்களின் வீச்சு
மூத்த கய்யாமிடம்
செந்நிற, பழம்பானம்
இருண்ட கோப்பையுடன்
தேவன் உன்னை அணுகுகையில்
அதை எடுத்துக்கொள்
தயங்காதே
(XLVIII)__
யாரும் இதற்கு பதிலளித்ததில்லை ;
துரதிர்ஷ்டகரமாக பண்ணப்பட்ட
கிண்ணமொன்று மௌனம் காத்து
பின்னர் பேசியது:
“மோசமான அனைத்துடனும்
சாய்வு கொண்டிருத்தலால்
அவர்கள் என்னை நிந்திக்கிறார்கள்;
குயவனின் கை அதிர்ந்ததா என்ன?”
( LXIII)__

Omar Khayyam -
தேளும் ஆமையும் அல்லது இயல்பும் பழக்கமும்
ஆற்றின் குறுக்கே ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு சென்று கொண்டிருந்தது ஓர் ஆமை. அதன் முதுகின் மேல் படர்ந்திருந்தது ஒரு தேள். தன் மேல் அமர்ந்திருக்கும் தேளின் மேல் ஆமைக்கு பரிதாபம். அடுத்த கரையை அடைந்தவுடன் தேளை இறக்கிவிட்டு விடலாம் எனும் எண்ணத்துடன் கற்கள் மேவிய நதியின் படுகையை மெல்ல கடந்து கொண்டிருந்தது ஆமை. அதிக ஆழமில்லாவிடினும் நீரின் விசை அதிகமாயிருந்தது. கவனத்துடன் பாதி ஆற்றை கடந்து வந்தாயிற்று. மீதிப் பாதியில் நதி சீரான வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தது. பாறைகள் ஏதும் கண்ணில் படவில்லை. அதிக சத்தமில்லாமல் சீரான நீரோட்டம். ஆழம் அதிகமாக இருக்கலாம்! ஆற்றை கடக்கும் வழியை ஆமை யோசித்துக் கொண்டிருக்கையில் அதன் முதுகில் படர்ந்திருந்த விருந்தினர் தன் கொடுக்கினால் ஒரு போடு போட்டார். தேளின் கொடுக்கினால் ஆமையின் ஓட்டை பிளக்க முடியவில்லையென்றாலும் ஆமையின் பரிதாபவுணர்வு சடக்கென இடம் மாறியது. “ஏய் தேளே! உன்னை பத்திரமாக மறு கரை சேர்க்க கஷ்டப்பட்டு இந்த காட்டாற்றை கடக்க முயல்கிறேன். நீயோ நன்றியுணர்வில்லாமல் என்னையே கொட்டுகிறாயே?” என்று கேட்டது ஆமை. “எனக்காக நீ படும் கஷ்டம் எனக்கு தெரியாமலில்லை. என்ன செய்ய! யாராயிருந்தாலும் கொட்டுவது என் இயல்பு. கொட்டாமல் என்னால் இருக்க முடியாது” – தேள் பதில் சொன்னது. இந்த தேளுக்கு உதவி செய்ய இந்த காட்டாற்றில் இறங்கினோம். இந்த நன்றி கெட்ட தேளோ நம்மைக் கொட்டுகிறதே! கழிவிரக்கம் அதன் கவனத்தை கலைத்த சமயத்தில் சற்று பெரிதான அலையொன்று ஆமையின் முதுகில் விசையுடன் பாய்ந்தடிக்க நதியின் ஆழங்களுக்குள் ஆமை தள்ளாடி மூழ்கியது. அதன் முதுகில் இருந்த தேள் பிழைத்திருக்க வாய்ப்பில்லை. அதிர்ஷ்டமிருந்தால் ஆமை தரை தட்டக்கூடும்!

-
அணு எடை
சின்ன வயதில் அறிவியல் எனில் வேப்பங்காய். பத்தாம் வகுப்புக்குப் பின்னர் அறிவியல் பக்கம் தலை வைத்துக் கூடப் படுத்தது கிடையாது. வணிகவியல் படிப்பு. விற்பனைத் துறையில் வயிற்றுப் பிழைப்பு.
ஆளைக்குறை சம்பளத்தைக் குறை என கொஞ்சங்கொஞ்சமாக கடந்த இரண்டு வருடங்களாக டெக்னிகல் அஸிஸ்டென்ஸ் ஆட்கள் இல்லாமல் போய்விட ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்றிருப்பவரும் குவாரன்டைனில் இருக்க தலையில் வந்து விழுந்தது ஒரு டெக்னிகல் வேலை. வாடிக்கையாளருக்கு அவசரமாக ஒரு ஊட்டச்சத்து ஃபார்முலேஷன் தேவைப்பட்டது. சரி நாமே செய்து பார்ப்போம் என குருட்டு தைரியத்தில் துவங்கிவிட்டேன். டெம்ப்ளேட்டை பின்பற்றி முக்கால் கிணறு தாண்டிவிட்டேன். பொட்டாசியம் பைகார்பனேட்டில் பொட்டாசியத் தனிமத்தின் கன்டென்ட் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. இணையத்தில் சல்லி போட்டுத் தேடியும் வழி கிடைக்கவில்லை. தலையை பிய்த்துக் கொண்டேன். வேலை பாதியிலேயே நின்றது. வாடிக்கையாளர் போன் வழியாக துரத்திக் கொண்டிருந்தார்.
கம்பெனியில் சில வருடம் முன்னர் வேலை பார்த்த ஒருவரை போனில் அழைத்தேன். தூக்கக்கலக்கத்தில் பேசினார். “KHCO3 தானே?” என்றார். கூகுள் சரி என்று சொன்னது. பொட்டாசியம் – ஹைட்ரஜன்-கார்பன்- மூன்று பங்கு ஆக்ஸிஜன் – இவற்றின் அணு எடையை கூட்டச்சொன்னார். கூகுள் இருக்க பயமேது!
K – 39.0983
H – 1.00784
C – 12.0107
O3 – 3 * 15.999 = 47.997KHCO3 = 100.11384
K = 39.0983 / 100.11384 = 39%
யூரேகா என்று மனதுக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டேன். டெம்ப்ளேட்டை பின்பற்றாமல் மக்னீசியம் க்ளோரைடில் (mgcl2) மக்னீசியம், கால்சியம் அயோடைடில் (Cal2) அயோடின் என தேவையில்லாமலேயே கால்குலேஷன் போட்டு வேதியியல் வித்தகனாகிவிட்ட கற்பிதத்துடன் வாடிக்கையாளரிடம் பேசுகையில் ஸேல்ஸ் பிட்ச் உச்சஸ்தாயியை எட்டியது.
வீட்டுக்கு வந்ததும் புதல்விகளிடம் பெருமையடித்துக் கொள்ளுகையில் ஒரு ரியாலிடி செக்.
“ஒன்பதாம் கிளாஸ் அறிவியல் புத்தகத்தில் வரும் மேட்டர். இதுக்கு போயி இந்த புளிப்பு காட்டறே” என்றாள் சின்னவள்.
-
இரண்டு நண்பர்கள் இரண்டு பாடங்கள்
சில சமயங்களில், குறிப்பாக, பதற்றமாகக் கழிந்த நாளின் இரவுப்போதில் கவிதை வாசிக்கத் தோன்றும். இப்போதெல்லாம் அதிகமும் இரண்டு கவிஞர்களின் கவிதைகள் தாம் மனதை ஆற்றுப்படுத்துபவையாக இருக்கின்றன. ரூமி மற்றும் ரியோகன். மெல்ல மெல்ல மனதின் பரபரப்பை குறைத்து உறக்கத்துக்கு முன்னதான ஆல்பா ஸ்டேட்டுக்கு அழைத்துச் செல்பவையாய் உள்ளன இவ்விருவரின் கவிதைகளும். இது என் சொந்த அனுபவந்தான். எல்லோருக்குமே இக்கவிதைகள் இதே குளிர்ச்சியை அளிக்குமா எனத் தெரியாது.
சொந்த வாழ்வில் கிடைத்த ஓர் அனுபவம் அளவற்ற மன அவஸ்தையை கொடுத்து கொண்டிருந்தது. சதா அது பற்றிய சிந்தனையோட்டத்தினால் என் மனத்தில் மிகுந்த உளைச்சல். உடனடியாக அந்த அனுபவத்தின் விளைவைச் சரி செய்ய முடியுமா என்று தெரியவில்லை. என்ன செய்யவேண்டும் என்று தெரியும். ஆனால் செய்யமுடியாத சூழ்நிலை. உதவியற்ற ஒரு நிலை.
நேற்றிரவு தூக்கமே வரவில்லை. கவனத்தை திசை திருப்ப பலவிதங்களில் முயன்றேன். ரூமி ஞாபகம் வந்தார். The Essential Rumi புத்தகத்தைப் புரட்டினேன். எந்த குறிப்பான நோக்கமுமில்லாமல் ஒரு பக்கத்தில் நின்றேன்.
எனக்கென்ன ஆசையா
அவளோடு காலங்கழிக்க
அவள் பூசிக் கொள்ளும் வாசனையோ
அல்லது அணிந்து கொள்ளும் பிரகாசமான உடைகளோ –
இவை காரணமல்ல
அவளுடைய வெறுப்பு படிந்த பார்வையை
சகித்துக் கொள்ளுதல்
என்னுள் வலிமையையும் பொறுமையையும் வளர்த்தெடுக்கிறது
அவள் என் பயிற்சி
இன்னோரு துருவப்பாதி இல்லாவிடில்
எதுவும் தெளிவுறுவதில்லை
இரு பதாகைகள்
ஒன்று கருப்பு இன்னொன்று வெள்ளை
இரண்டுக்கும் நடுவில் அன்றோ தீர்வு பிறக்கிறது
பாரோவுக்கும் மோசஸுக்கும்
நடுவில் செங்கடல் போலமெலிதான அதிர்வு என்னுள். என்னுடைய சங்கடத்தை ரூமி அறிந்து கொண்டாரோ? எந்த அனுபவக் கூண்டுக்குள் சிக்கியுள்ளாயோ அதனுள்ளேயே இரு. வலிமையையும் பொறுமையையும் வளர்த்தெடு.
The Essential Rumi-யை மூடி வைத்தேன். One Robe One Bowl எனும் ரியோகனின் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை கையிலெடுத்தேன். கண்ணை மூடிக் கொண்டு ஒரு பக்கத்தை பிரித்தேன்.
அழகு இருந்தால்
அசிங்கம் இருந்தாக வேண்டும்
சரி என்ற ஒன்று இருந்தால்
தவறு என்ற ஒன்றும் இருந்தாக வேண்டும்
அறிவும் பேதைமையும் ஓர் இணை
மயக்கமும் ஞானமும்
பிரிக்கப்பட முடியாதவை
இது பழைய உண்மை
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டதென
நினைக்காதே
“இது வேண்டும் அது வேண்டும்”
என்பது முட்டாள்தனமின்றி வேறில்லை
நான் உனக்கொரு ரகசியத்தைச் சொல்வேன்
“அனைத்து பொருட்களும் நிரந்தரமில்லாதவை”ரியோகனுக்கும் என்னுடைய கவலை பற்றித் தெரிந்துவிட்டிருக்கிறது ! “இது வேண்டும் அது வேண்டும்” என விழைவது முட்டாள்தனமின்றி வேறில்லை என்று வைகிறார் ரியோகன். “எதுவும் நிரந்தரமில்லை” என்றொரு “ரகசியத்தையும்” பகிர்ந்திருக்கிறார்.
நண்பர்கள் கொடுத்த பாடங்களை அளவிலா ஆச்சரிய உணர்வுடன் சிந்தித்தவாறே தூங்கிப்போனேன்.
-
இரு மரங்கள்
தன்னுடைய ஞான முயற்சியின் சகாவாக போதி மரத்தை ஒரு வாரத்துக்கு நன்றியுணர்ச்சியுடன் புத்தர் நோக்கிக் கொண்டிருந்தார் என்று பௌத்த மரபு சொல்கிறது. பிற்காலத்தில் அந்த போதி மரத்தைச் சுற்றி ஒரு கோயிலை எழுப்பினார் அசோக மாமன்னர். போதி மரத்தின் மேல் அசோகர் கொண்டிருந்த அளவற்ற பக்தியை சகிக்க இயலாமல் அவருடைய அரசி – திஸ்ஸாரக்கா – போதி மரத்தின் கீழ் முள் செடிகளை வளர்த்ததாகவும் அதன் காரணமாக மிக விரைவில் போதி மரம் பட்டு வீழ்ந்ததாகவும் தொன்மக் கதை ஒன்று உண்டு. அதே இடத்தில் இன்னொரு போதி மரம் வளர்ந்ததாகவும் அந்த மரம் புஷ்யமித்ர சுங்கன் என்னும் மன்னனால் வெட்டி எறியப்பட்டதாகவும், பின்னர் அடுத்து வளர்ந்த போதி மரம் கி பி ஆறாம் நூற்றாண்டில் கௌட மன்னன் சசாங்கனால் வெட்டி எறியப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அசோகர் காலத்தில் இருந்த மூல போதிமரத்தின் கிளை இலங்கைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அனுராதாபுரத்தில் நடப்பட்டு இன்றளவும் உயிருடன் உள்ளது. உலகின் மிகப்பழமையான தாவரம் என்று தாவரவியல் வல்லுநர்கள் அனுராதாபுரத்தின் போதிமரத்தைக் குறிப்பிடுகிறார்கள்.
புத்தருக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக இன்றைய கிழக்கு இரானில் புழங்கியவரும் இறைத்தூதர் என போற்றப்படுபவரும் சரதுஷ்டிரர் என்றும் ஜொராஸ்டர் என்றும் குறிப்பிடப்படும் ஜொராஸ்ட்ரிய சமயத்தின் நிறுவுனர் சுவர்க்கத்திலிருந்து ஒரு சைப்ரஸ் மரக்கிளையை எடுத்து வந்ததாக ஷாநாமாவில் பிர்தவுசி குறிப்பிடுகிறார். நாட்டின் மன்னனாக இருந்த விஷ்டாஸ்பா ஜொராஸ்டிர மதத்தை தழுவியவுடன் அக்கிளையை இன்றைய இரானில் உள்ள காஷ்மர் எனும் இடத்தில் ஜொராஸ்டிரர் நட்டார் என்பது ஜொராஸ்டிர மரபு. ஜொராஸ்டிரர்கள் அதை புனித மரமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வணங்கி வழிபட்டு வந்தனர். கி பி 861 இல் அப்பாஸித் காலிஃபா அல் – முத்தகீல் அம்மரத்தை வெட்டிச்சாய்த்து அதன் மரக்கட்டைகளை சமாரா–வில் (இன்றைய இராக்) அவர் கட்டிய அரண்மனையின் உத்திரமாக பயன்படுத்திக் கொண்டார். அந்த கோட்டை சமாராவில் இன்னும் நின்று கொண்டிருக்கிறது.
-
சப்பே சதா பவந்து சுகிததா
அனைவருக்கும் புத்த பூர்ணிமா வாழ்த்துகள்.
ஒரு தமிழ் தொலைக்காட்சி கேட்டுக்கொண்டதற்கு இணங்கி லாக் டௌனின் போது புத்த பூர்ணிமா தினத்தன்று ஒலிபரப்புவதற்கென ஒரு தம்ம உரையை மொபைலில் பதிவு செய்தேன். சில தொழில்நுட்ப காரணங்களால் அந்த உரையை ஒலிபரப்ப இயலாது என தொலைக்காட்சி சொல்லிவிட்டது. அந்த உரையை யூட்யூபில் ஏற்றினேன். சுட்டியை கீழே காணலாம்.
-
பயம் – கலீல் கிப்ரான்
கடலுள் நுழையுமுன்
நதிக்கு நடுக்கமேற்படுமென
கூறப்படுகிறதுமலைகளின் உச்சிகளிலிருந்து
காடுகளினூடே
கிராமங்களினூடே
வளைந்து செல்லும் பாதையில்
தான் வந்தவழியை
பின்திரும்பி நோக்குகிறாள்
தன் முன்னம்
பரந்து விரியும் கடலை நோக்குகிறாள்
இதற்குள் நுழைவது என்பது
நிரந்தரமாக மறைந்துபோவதைத் தவிர
வேறேதுமில்லை
ஆனால் வேறு வழியில்லை!நதி பின்திரும்பிச் செல்ல முடியாது
யாரும் பின்திரும்பிச் செல்ல முடியாது
இந்த இருப்பில் பின்திரும்பிச் செல்லுதல் சாத்தியமில்லை
கடலுள் நுழையும்
இடர்பாட்டை அது சந்தித்துத்தானாக வேண்டும்!
ஏனெனில் அப்போதுதான் அதன் பயம் விலகும்
ஏனெனில் அங்குதான் நதி ஒன்றைப் புரிந்து கொள்ளும்
– இது கடலுக்குள் மறைந்து போவதைப் பற்றியதன்று,
கடலாக மாறுவதைப் பற்றியது



