இதற்கு முன் வாசித்த இரு கதைகளைப் போல The Lottery of Babylon சிக்கலான கதையில்லை. அது கூற வருவதை நேரடியாக கையாள்கிறது. அதன் வடிவம் ஒரு தொன்மக்கதை பாணியிலிருக்கிறது. இதனை ஒரு நவீனத் தொன்மம் என்று வகைப்படுத்தலாம். பாபிலோன் எனும் தொன்ம நாட்டிலிருந்து வெளியேறிய ஒருவன் சொல்லும் கண்ணோட்டத்தில் அமைந்திருக்கிறது கதை. பாத்திரங்கள், நிகழ்வுகள் என்று எதுவும் இல்லை. ஒரு பத்திபோல எழுதப்பட்டிருக்கிறது கதை.
எதுவும் கிடைக்கும் என்ற ஒழுங்கு நிலவிய பூமியில் எப்போது “சந்தர்ப்பம்” எனும் தன்மை உள்நுழைந்தது? “சந்தர்ப்பம்” என்பதை யார் நிர்வகிக்கிறார்கள்? அது தானாகவே நிகழும் “தற்செயல்” என்று ஏன் ஏற்பதில்லை நாம்? அது ஏன் விளைந்தது எனும் கேள்விக்கு பதில் தேடும் உணர்வு நம்முள் இரண்டாம் இயல்பாக இருக்கிறது. தான் செய்த நல் வினைகளால் நடந்த நல்விளைவென்றும், யாரோ ஒருவர் நம் மீது செய்த தீங்கு எனவும் காரணம் கற்பித்துக் கொற்கிறோம்.
“சந்தர்ப்பம்” என்ற காரணி இல்லாமல் இருந்திருந்தால் எவ்வளவு சலிப்பாக இருந்திருக்கும்! செய்யும் காரியம் எல்லாமே ஒரே விளைவைத் தரும் என்றிருந்தால், அதனுள் தோல்விக்கான வாய்ப்பு அறவே இல்லாமல் இருந்தால் மனிதனின் சாதனையுணர்வு மறைந்து போய்விடுமல்லவா? அப்படியானால் “சந்தர்ப்பம்” என்னும் காரணியை மனிதனே வரிந்து கொண்டானா? அல்லது ஏதொவொரு பிரபஞ்ச சக்தி “சந்தர்ப்பத்தை” கட்டுப்படுத்துகிறதா? கட்டுப்பாட்டை அந்த பிரபஞ்ச சக்திக்கு அவனாகவே தந்தானா? (ஏடன் தோட்டத்துக் கதை போல). தான் கட்டுப்படுத்தப்படுகிறோம் என்ற உணர்வு அவனுள் “லாட்டரி”யில் இருந்து கிடைக்கும் பரிசு தரும் அதே சிலிர்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்துகிறதா? “தண்டனை” என்ற ஒன்று இருப்பதனால்தான் “வெகுமதி” அதிபூரிப்பை தருகிறதோ?
“லாட்டரி” விளையாட்டை நிர்வகிக்க ஒரு “கம்பெனி’ இருப்பது போல் நம் வாழ்வின் “சந்தர்ப்பங்களை” இயக்கவும் “அதிகார மையம்” என்ற ஒன்று இருக்கிறதா? அதிகாரத்தை “லாட்டரியின்” நுகர்வோர்கள் தான் “கம்பெனிக்கு” ஆதியில் அளித்தார்கள். அதிகாரம் வந்து நுகர்வோர் தம்மை சுய-பலி செய்து கொண்டபோது “கம்பெனி” விஸ்வரூபங்கொண்டு சர்வ வல்லமையால் மனித இனத்தையே கட்டியாள்கிறது. ஆனால், “கம்பெனி” ஒரு இரகசியம். அது எங்கிருக்கிறது என்று யாரும் அறிகிலர். “ஒரு புனிதமான கழிப்பறைக்குள்ளிருந்து “கம்பெனி” செல்லும் வாயில் இருக்கிறது” – புனிதத்தன்மை இங்கு எதைச் சுட்டுகிறது? சர்வாதிகாரத்தை? மத அதிகாரத்தை? இறை வல்லமையை?
Kafka-பாணியில் சொல்லப்படும் கதைக்குள் Kafkaவுக்கு tribute செலுத்தப்படுகிறது. அந்தப் புனித கழிப்பறையின் பெயர் – Qaphqa.
இந்தக் கதை ஒரு வினோதம். Tlon, Uqbar, Orbius Tertius – கதையைவிட எளிதில் அணுகத்தக்கது. பெரிய அளவில் தத்துவச் சித்திரிப்பு இதில் இல்லை. ஓர் உளவுக் கதை. மர்மக் கதையும் கூட. எட்கர் ஆலன் போ, ஜி கே செஸ்டர்டன் – இவர்களின் மகாரசிகனாக இருந்த போர்ஹேஸ் உளவுக் கதையின் வேகத்தை எளிதில் கதையின் துவக்கத்திலேயே நிறுவி விடுகிறார். முழுக்கதையும் தூக்கிலிடப்படுவதற்காக காத்திருக்கும் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலத்தின் வடிவில் கூறப்படுகிறது. உளவாளி தூக்கிலிடப்படப் போகிறான் என்ற பிரக்ஞையில் நாம் வாசிக்கத் தொடங்குகிறோம் என்றாலும் சாகசத்தின் சூட்டில் உளவாளி மீதான ஆதரவு துளிர் விட்டு கடைசியில் அவனுடைய உளவுச்செயல்திறனை எண்ணி வியக்கிறோம். கதையில் வரும் சாகசத்தின் இறுதியில் உளவாளி தப்பிவிடப் போகிறான் என்ற லேசான உணர்வுடனும் படிக்கிறோம். பாதிக்கதை விறுவிறுவென நகர்ந்து ஒரு சமயத்தில் surreal தன்மையை எய்துவது போல் தோன்றும். கேயாஸ் கோட்பாடு, குவாண்டம் மெக்கானிக்ஸ் – இவற்றின் பாதிப்பை நிகழ்த்தியவாறு நகர்கிறது கதை.
டெலிபோன் டைரக்டரியிலிருந்து ஆல்பர்ட் என்ற பெயருள்ளவரை random-ஆக தேர்வு செய்து அவரைத் தேடிப்போகும் உளவாளியிடம் அவனுடைய பாட்டனார் எழுதிய நாவல் ஒன்றைப் பற்றிப் பேசுகிறார் ஆல்பர்ட். ஆல்பர்ட்டைத் தேடி உளவாளி ஏன் வந்தான் என்பது இதுவரை வாசகர்களுக்குத் தெளிவு செய்யப்படுவதில்லை. அனைத்து சாத்தியங்களின் வழிகளையும் ஒரே நேரத்தில் தேர்வு செய்வது பற்றிய அந்த நாவலில் ஒவ்வொரு சாத்தியமும் ஒவ்வொரு விதமான முடிவுக்கு இட்டுச் செல்வதை தொடர்ச்சியற்று பேசுவதாக உளவாளியிடம் விளக்கம் கொடுக்கிறார் ஆல்பர்ட்.
இதற்குள் உளவாளியைத் தேடிக் கொண்டிருக்கும் எதிரி நாட்டுக்காரன் ஆல்பர்ட்டுடன் இருக்கும் உளவாளியைத் தேடி வந்துவிடுகிறான். அவன் உள்ளே நுழைவதற்கு ஓரிரு நிமிடங்களே உள்ளன. உளவாளி அப்போது நாம் எதிர்பார்க்காத ஒன்றைச் செய்கிறான்.
டெலிபோன் டைரக்ட்டரியில் ஒரு பெயரைத் தேடுதல் எனும் random செயல் ஒரு random தேர்வுக்கு வித்திட்டு ஆல்பர்ட்டின் random முடிவுக்கு எடுத்துச் செல்கிறது. ஆல்பர்ட்டுக்கு உளவாளியின் பாட்டனாரின் வாழ்க்கை பற்றித் தெரிந்திருப்பது யதேச்சை. உளவாளியின் ஆச்சரியமும் தன்னுடைய தாத்தா குறித்துப் பேசுவதில் அவன் அடையும் மகிழ்ச்சியும் கதையில் பதிவு செய்யப்படுகின்றன.
“எண்ணற்ற எதிர்காலங்களை நோக்கி காலம் என்றென்றும் தன்னைப் பிரித்துக் கொண்டிருக்கிறது, அத்தகைய ஒரு பிரிவில் நான் உங்கள் எதிரி.”- என்று ஆல்பர்ட் சொல்கிறான். “அந்த எதிர்காலம் இப்போது இங்குள்ளது” என்கிறான் உளவாளி.
குவாண்டம் கோட்பாட்டை எதிரொலிக்கும் விதத்தில், குறிப்பாக, ஷ்ரோடிங்கரின் பூனை சொல்லும் கருத்தை எதிரொலிக்கும் வகையில், கதாபாத்திரங்கள் ஒரே நேரத்தில் இறந்தும், உயிருடனும் உள்ளன. ஒரு அத்தியாயத்தில் மட்டுமே கொல்லப்பட்டு அடுத்த அத்தியாயத்தில் உயிருடன் திரிகின்றன. ஒவ்வொரு கதை சாத்தியத்தையும் உள்ளடக்கிய ஓர் எல்லையற்ற கதையை உருவாக்குவதே, உளவாளியின் தாத்தாவின் யோசனை மட்டுமல்ல, போர்ஹேஸினுடையதும் போல. இது உளவாளியின் கதையா, மர்மக்கதையா என்று கேட்டால் இரண்டுக்கும் விடை ஆம்தான். சற்று கூர்மையாக யோசித்தால், இந்தக் கதை கதை சொல்லலின் இயல்பைப் பற்றிய கதை என்றும் சொல்லலாம்.
—
The Garden of Forking Paths – சிறுகதையில் வரும் உளவாளி டாக்டர் யூ ஒரு சிக்கலான பாத்திரம். அவன் ஏன் உளவுத் தொழிலில் ஈடுபட்டான் என்பது கதையில் கூறப்படவில்லை. கதையில் வரும் அவனது சில எண்ணவோட்டங்கள் வாயிலாக அவன் உளவில் ஈடுபட்ட காரணத்தை சற்று ஊகிக்க முடியும். ஜெர்மனிக்காக இங்கிலாந்திலிருந்து உளவு பார்த்த யூ அடிப்படையில் சீனன். அவன் இங்கிலாந்திலிருந்து வந்த ஒருவனை சந்தித்ததாக குறிப்பிடும் போது அவன் ஜெர்மனியில் இருந்தபோது உளவாளியாக பணியமர்த்தப்பட்டான் என்று யூகிக்க முடியும். அவனைச் சந்தித்த போது ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும் அந்த ஒரு மணி நேரம் சந்தித்த மனிதன் ஜெர்மன் தத்துவவாதி Goetheயாக தொனித்ததாகவும் யூ கூறுகிறான். ஜெர்மனி மீது கொண்ட நேசத்தின் காரணமாக உளவுப் பணியை ஏற்றுக் கொண்டதாக அவன் நினைக்கவில்லை. ஜெர்மனி பற்றி பெரிய மதிப்பேதும் அவனுக்கில்லை. Barbarous என்று ஜெர்மனி பற்றி வர்ணிக்கிறான். சீனாவிலிருந்து அவன் ஏன் ஐரோப்பா வந்தான் என்பதற்கு ஒரு காரணமும் தரப்படுவதில்லை. அகதியாகவோ அரசியல் காரணத்துக்காக நாடு கடத்தப்பட்டவனாகவோ இருக்கலாம். ஒரு வித தாழ்வு மனப்பான்மை கொண்டவனாக இருக்கலாம் என்று கதையில் வரும் இரு வரிகள் நம்மை எண்ண வைக்கின்றன.
“I did it because I sensed that the chief somehow scorned the people of my race – …….I wanted to prove to him that a yellow man could save his armies.”
தேசம் என்ற கருத்தியல் மீது அவனுக்கு குறிப்பிடத்தக்க நாட்டம் எதுவும் இருந்திருக்க முடியாது என்று அவனுடைய எண்ணவோட்டம் நமக்குத் தெரிவிக்கிறது.
“I thought that a man can be an enemy of other men, of the moments of other men, but not of a country : not of fireflies, words, gardens, streams of water, sun sets.”
அவனுடைய குடும்ப மூத்தோர் ஒருவர் சீனாவின் யுன்னான் பிராந்தியத்தின் கவர்னராக இருந்தார் என்ற தகவல் வருகிறது. சீனாவிலிருந்து ஜெர்மனிக்கு உயர் படிப்பு படிக்க வந்தவனாகவும் அவன் இருந்திருக்கலாம்.
—
“In a riddle whose answer is chess, what is the only prohibited word?”
I thought a moment and replied, “The word chess.” - from the short story - The garden of forking paths (by borges)
போர்ஹேஸ் எழுதிய சிறுகதையொன்றின் ஆங்கில மொழிபெயர்ப்பை அனுப்பி வைக்குமாறு நண்பர் Vasu Devan அவர்களிடம் கேட்டிருந்தேன். அதன் தலைப்பு – Tlon, Uqbar, Orbius Tertius. பொதுவாக போர்ஹேஸின் சிறுகதைகளில் வரிக்கு வரி நிறைய குறிப்புகள் அடங்கியிருக்கும். இந்தக் கதையிலும் இது போலத்தான். நொடிக்கு நொடி இணையத்தில் தேடி அந்தக் குறிப்புகளின் அர்த்தத்தைத் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. சில குறிப்புகளைப் புரிந்து கொள்ள சில கட்டுரைகளை வாசிக்க வேண்டியிருந்தது. வாசிப்பாளரின் உழைப்பைக் கோரும் கதைகளையே போர்ஹேஸ் எழுதியுள்ளார். இணையம் எல்லாம் இல்லாத நாட்களில் எழுதப்பட்ட சிறுகதை. இத்தகைய கதைகளை எழுதுவதற்கு எத்தனை வாசித்திருக்க வேண்டும்! அவரின் ஒவ்வொரு கதையையும் வாசிக்கும் போது தோன்றும் வியப்புணர்வும் மலைப்புந்தான் இன்றும் தோன்றியது. இந்தக் கதைக்கு நான் வந்தடைந்ததும் ஒரு கட்டுரையில் படித்த குறிப்பு வாயிலாகத்தான். யாருக்கும் தெரியாமல் ஒரு பேரரசன் கொல்லப்பட அவனைப் போல பாவனை காட்டும் ஒரு போலி அரசனாக இன்னொருவன் வாழ்ந்திருக்க அவன் போலி என்று சரியாக ஊகித்து அவனைக் கொன்று அக்கமெனிட் வம்சத்தின் அரசனானார் முதலாம் டேரியஸ். இந்த சம்பவத்தை டேரியஸ் பெஹிஸ்துன் மலைகளில் செதுக்கிய கல்வெட்டுகளில் பதிவு செய்திருக்கிறார். கிரேக்கர் ஹெரடோடஸும் இதைப்பற்றி எழுதிவைத்துள்ளார். இது பற்றி ஏராளமான தொன்மக் கதைகளும் இருக்கின்றன. போலியாக வேடமிட்டு மன்னனான ஜொராஸ்ட்ரிய சமய பூசாரி பற்றிய குறிப்பை மேல் சொன்ன கதையில் போர்ஹேஸ் பயன்படுத்தியுள்ளார் எனுந்தகவலே இந்தக் கதையிடம் என்னைக் கொண்டு போய் சேர்த்தது. குறிப்புகளிலிருந்து கதைகளுக்குச் சென்று குறிப்புகளைத் தரிசித்து இதன் வாயிலாக மேலும் பல குறிப்புகளைச் சேகரித்துக் கொண்டு….குறிப்புகளில் தொலைந்து….போர்ஹேஸின் இந்தச் சிறுகதை சேர்க்கப்பட்டுள்ள தொகுப்பின் தலைப்பு Labyrinths….தேடல்களின் பாதையை இதைவிடப் பொருத்தமாக வர்ணித்துவிட முடியுமா?
“Of the historical names, only one: the impostor magician Smerdis, invoked more as a metaphor.”
ஐபோனை தொலைத்தல் ஓர் அனுபவம். மனித வாழ்க்கையில் அனுபவிக்கும் பல்வேறு சோக ரசத்தை நாம் தொலைத்த ஐபோனும் நமக்குத் தரும். ஊபர் டாக்ஸியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது அந்த போனில் எனக்குத் தெரிந்த ஒருவரைத் தொடர்பு கொண்டேன். அது தான் அந்த போன் என் கைகளில் இருந்த கடைசி நினைவு. சாலையில் நல்ல போக்குவரத்து நெறிசல். டாக்ஸி ஊர்ந்து கொண்டிருந்தது. எப்போது கண்களை மூடினேன் என்று தெரியவில்லை. போன் என் மடியிலிருந்து கார் சீட்டில் விழுந்திருக்கலாம். இதெல்லாம் இப்போது அந்த போன எப்படி தொலைந்து போயிருக்கும் என்று யோசித்து யோசித்து கற்பனையில் அரைகுறை ஞாபகத்தில் உருவாக்கி வைத்துள்ள காட்சிகள். டாக்ஸியில் வீடு வந்திறங்கிய போது இருட்டியிருந்தது. தெரு விளக்கு அன்று எரியாமல் இருந்தது என்ற ஞாபகம் தெளிவாக இருந்தது. காரிலிருந்து இறங்குவதற்கு முன்னம் ஒரு முறை உள்ளே நோட்டம் இட்டிருக்க வேண்டும். இது இப்போது புரிகிறது. காரிலிருந்து இறங்கும் போது ஐபோனை இழக்கப்போகிறேன் என்று முன்னமே தெரிந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். பத்து நிமிடங்கள் கழித்து போனை தொலைத்துவிட்டோம் என்ற பிரக்ஞை வந்த பிறகு மறுபடியும் என் வீட்டுவாசலுக்கு வரும் வரை அந்த டாக்ஸி அங்கேயே காத்திருந்திருக்கலாம்.
அதை இழந்த குற்றவுணர்ச்சி பல மாதங்கள் தொடர்ந்தது. ஐபோனை எவனும் தொலைப்பானா? எத்தனை விலை கொடுத்து வாங்கினோம்?…..என் மேல் நான் கொண்ட கோபம் சில நாட்களுக்கு குறையவேயில்லை. இனிமேல் ஒரு போனும் வாங்குவதில்லை என்ற விரதம் வேறு எடுத்துக் கொண்டேன்.
அந்த ஐபோன் என் ஞாபகத்தில் நிரந்தரமாக நிலைத்துவிட்டது. அதை நிஜமாகவே தொலைத்தேனா? தொலைத்திருந்தால் அது அடிக்கடி என் ஞாபகத்தில் ஏன் வரப் போகிறது?
அந்த ஐபோன் அந்த டாக்ஸியின் அடுத்த பயணியின் கையில் கிடைத்ததெனில் அந்த ஐபோன் என் ஐபோனா? இல்லை அந்தப் பயணிக்கு கிடைத்த ஐபோன். நான் தொலைத்த நேரத்திலிருந்து இன்னொரு பயணியின் கையில் அது கிடைக்கும் நேரம் வரை அந்த ஐபோன் இருந்ததா? இருக்கவில்லை என்று கொள்வோமானால் பயணிக்கு கிடைத்த போன் எந்த போன்? அது நான் தொலைத்த போனின் நகல். இருந்தது என்பது பதிலானால் – தொடர்ச்சியை அந்தப் பொருளுக்கு நாம் வழங்குவதனால் – மறைந்த நிலையில் அந்த ஐபோன் மனிதர்களின் உணர்வாற்றலின் எல்லைக்குள் சிக்காமல் எங்கேனும் இருந்திருக்கும்….Tlos, Uqbar, Orbis Tertius – சிறுகதை ஏற்படுத்திய எண்ண வெடிப்புகளிலிருந்து ஓர் இழையைத் திரிக்கப்போக சிறுகதையில் வரும் ஒன்பது தாமிர நாணயங்கள் ஒன்றிணைந்து ஐபோனாக நகலெடுத்தது. தொலைத்தல் என்ற வினையே இல்லாத ஒரு பிரதேசத்தை, ஒரு நாட்டை அல்லது ஒரு கோளை நாம் சிருஷ்டிக்க முடியுமானால்…..நிற்க, பொருட்களை எப்படி தொலைக்காமல் இருக்க முடியும்? தொலைத்தால் அது நம் அகத்திலிருந்து நாம் தொலைத்ததாகவே இருக்கும்…அது தொடர்ந்து ஞாபகத்தில் இருக்குமானால் அது எங்கு தொலைந்தது? “இழத்தல்” “கண்டுபிடித்தல்” எனும் வினைச்சொற்கள் ஐபோனுக்கென ஓர் அடையாளத்தை அனுமானிப்பதாலேயே எழுபவை. ஐபோன் அனெக்டோட் நான் அறியாமலேயே போர்ஹேஸின் கதைக்குள் புகுந்துவிட்டது.
__
மிக சுருக்கமாக, Tlönic கலாச்சாரத்தின் முக்கிய அம்சங்களைப் பின்வருமாறு கூறலாம்: a. நேரம் எனும் கருத்தியல் இல்லை. ஒரு ட்லோனிக் சிந்தனைப் பள்ளி நாம் காலவரையறையற்ற, கடந்த மற்றும் எதிர்காலமாக பிரிக்கப்படாத நித்திய நிகழ்காலத்தில் வாழ்கிறோம் என்பதை உறுதிப்படுத்துகிறது, மற்றொரு பள்ளி எல்லா நேரமும் ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டுவிட்டதாகவும், நாம் வாழ்வது நினைவுகளில் மட்டுமே என்றும் வலியுறுத்துகிறது. b. இந்தக் கருத்தின்படி அடையாளம் என்பது கற்பனைக்கு எட்டாதது, ஏனென்றால் எந்தப் பொருளும் காலப்போக்கில் அதன் தொடர்ச்சியை நீட்டிப்பதில்லை (“தொலைந்த ஐபோன்” – முந்தைய ஸ்டேடஸை பார்க்கவும்) c. நேரம் அல்லது பொருளின் தொடர்ச்சி மறுக்கப்படும் உலகில் வேறு எந்த பொது வகையினங்களும் இருக்க முடியாது.
ட்லோனின் சிந்தனையாளர்களும் ஞானிகளும் ஒரு இலட்சியவாத உலகக் கண்ணோட்டத்தை ஆதரிக்கின்றனர். ட்லோனின் கலாச்சாரத்தில் உள்ள அனைத்தும் தத்துவ இலட்சியவாதத்தை முன்னிறுத்துகின்றன. Tlönic மொழியியல் மற்றும் தத்துவக் கோட்பாடுகளின் விளக்கத்தில் போர்ஹெஸ் மிக உன்னிப்பாகக் கவனம் செலுத்துகிறார். வெளி என்பது தொடர்ச்சியானதில்லை என்றும், இடைவெளி என்பது வரையறையின்படி தொடர்ச்சியற்றது என்றும், காலத்தின் கண்ணோட்டத்தில் விண்வெளியில் உள்ள இடம் அல்லது பொருள் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது என்றும் ஞானிகள் கற்பனை செய்திருக்கிறார்கள். இது அடையாளத்தின் தர்க்கரீதியான கொள்கையையும், உலகத்தை உணர்ந்து அதன் பொருள்களை மதிப்பிடுவதற்கு நாம் பழகிய விதத்தையும் பாதிக்கிறது. (நாம் பயன்படுத்தும் ஐபோன் நேற்று நாம் பயன்படுத்திய அதே ஐபோன்தான் என்று நாம் நினைக்கிறோம், ஏனென்றால் அந்த அடையாளத்தை முன்னிறுத்துவது நமக்கு மிகவும் வசதியாக உள்ளது.)
Tlön இல், காரணம் மற்றும் விளைவு போன்ற கருத்துகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை. அடையாளக் கொள்கை பாதிக்கப்பட்டால், இடஞ்சார்ந்த அல்லது தற்காலிக தொடர்ச்சி இல்லை என்றால், அறிகுறிகள் மற்றும் நிகழ்வுகளுக்கு இடையே எந்த தொடர்பையும் ஏற்படுத்த முடியாது: எரியும் சிகரெட், புகை மற்றும் நெருப்பு ஆகியவை தொடரியல் அல்லது படிநிலையில் பிணைக்கப்படாத ஒரு வரிசையில் தனித்துவமான தருணங்கள் . Tlön கிரகத்தில் அடையாளம் மற்றும் காரணத்தைப் பற்றிய சுருக்கக் கருத்துக்களைக் கருத்திற்கொள்ளும் சாத்தியம் இல்லை. இந்த வரையறையின்படி, அறிவியல் சாத்தியமில்லை. அதற்குப் பதிலாக, als ob (“as if”) கொள்கையில் அடித்தளமிட்ட நூற்றுக்கணக்கான தத்துவங்கள் வெளிப்புறக் குறிப்புடன் எந்தத் தொடர்பையும் கோராத அழகான அமைப்புகளாக வளர்கின்றன – கற்பனாவாத இலக்கியத்தின் அடிப்படை அமைப்பைக் கொண்டவைகளாக. als if கொள்கை என்பது கற்பனாவாத மற்றும் டிஸ்டோபியன் புனைகதை உத்திகளின் அடிப்படையான ஒன்றாகும், அங்கு “எப்படி” எனும் கருதுகோள் அந்தக் கதையின் கண்டுபிடிப்பைத் தொடங்குகிறது. நேரத்தையும் இடத்தையும் தொடர்ச்சியாகக் கருதுவதற்குப் பதிலாக இடைவிடாதவையாகக் கருதுவது Tlonஇன் அடிப்படை உலகக் கண்ணோட்டமாகும், அதே சமயம், ‘als ob’ அடிப்படையிலான கற்பனையான இடத்தைக் கண்டுபிடிப்பதை இது அனுமதிக்கிறது.
Tlön இல் உள்ள இரண்டு மொழிகளுக்கும் பெயர்ச்சொற்கள் இல்லை. இரு மொழிகளில் ஒன்று கூட்டு உரிச்சொற்களை அடிப்படையாகக் கொண்டது; மற்றொன்று, கூட்டு வினைச்சொற்களில். பெயர்ச்சொற்கள், கொள்கையளவில், சாத்தியமற்றது, ஏனெனில் ஒரு பெயர்ச்சொல்லுக்கான அனுபவ/தருக்க அடிப்படையை வழங்கக்கூடிய தொடர்ச்சியான பொருள் எதுவும் இல்லை. பெயர்ச்சொற்கள் தற்காலிக நிலைகளைக் குறிக்கும் உரிச்சொற்களின் திரட்சியிலிருந்து ட்லோனில் எழுகின்றன. நிச்சயமாக, இந்த வகை பெயரடை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட முடியும், ஏனெனில், வரையறையின்படி, எந்த நிலையும் காலக்கண்ணொட்டத்தில் மீண்டும் நிகழாது.
‘கண்டுபிடிப்பது’ மற்றும் ‘இழப்பது’ போன்ற சில வினைச்சொற்களிலும் இதுவே நடக்கும். இரண்டு செயல்களும் Tlön இல் நினைத்துப் பார்க்க முடியாதவை, ஏனெனில், பொருள்களுக்கு இடையே அடையாளம் இல்லை மற்றும் இடம் மற்றும் நேரம் தொடர்ச்சி இல்லை என்றால், எந்த பொருளையும் இழக்க முடியாது; மீண்டும் கண்டுபிடிக்க முடியாது. ‘இழந்தது’ என்று நாம் கருதும் ஒன்று ஒரு பொருளுக்கு நிகழும்போது, ஒரு வகையான இரண்டாம் நிலைப் பொருள் (இழந்த ஒன்றிலிருந்து தெளிவற்ற வேறுபட்டது) பெருகத் தொடங்குகிறது. இந்த உருத்தோற்றங்கள் Hrönir என்று அழைக்கப்படுகின்றன. அவை கடந்த காலத்தை கண்டுபிடிப்பதற்கும் மாற்றியமைப்பதற்கும் பயன்படுத்தப்படலாம், இது Tlön இல் தொல்பொருளியலை ஆக்கிரமிக்கிறது.
ஒரு வருடம் கழித்து இன்னொரு ஐபோன் வாங்கினேன். பழைய கறுப்பு நிற ஐபோனின் நகலாக நினைத்து அதன் மேல் வாஞ்சையை செலுத்தாமல், புதுப்பொருள் மீது புதுக்காதல் கொண்டவனாக மகிழ்ச்சியானேன். சிறுகதையின் இறுதியில் வருவது மாதிரி பூமி இன்னும் முழுமையாக Tlon-இன் தாக்குதலுக்கு ஆளாகவில்லை.
–
போர்ஹேஸின் மிக நீளமான கதைகளில் ஒன்றான, ‘Tlön, Uqbar, Orbis Tertius’ பெரும்பாலும் ஊகப் புனைகதை அல்லது சில சமயங்களில் ‘அறிவியல் புனைகதை’ என்று முத்திரை குத்தப்படுகிறது.
தொலைந்த ஐபோன் பற்றி விலாவாரியாகப் புலம்பிவிட்டு அடுத்த சில பத்திகளிலேயே “உண்மையில் நான் வைத்திருந்தது ஐபோன் இல்லை. வேற்று கிரகத்திலிருந்து வந்த யாரோ விட்டுவிட்டுப் போன திசை காட்டும் கருவி” என்று சொல்லி பின்னர் ஐபோனை மறந்துவிட்டு அந்த வேற்றுக் கிரகம் பற்றி பல தகவல்களை அடுக்கி…..கிரகம் ஒரு கற்பனை என்று அறிவித்துவிட்டால்…அடுக்கிய தகவல்கள் அனைத்தும் கற்பனையென்று தானே ஆகும்……ஐபோன் கதைக்குள் விரியும் ஒரு கோள் பற்றிய கதை….இதைச் “சட்டகக் கதை” என்று வகைப்படுத்துவார்கள்…..ஒரு கதையை வகைப்படுத்துவது போர்ஹேஸுக்கு ஒவ்வாத விஷயம்…..இக்கதையை வகைப்படுத்த வேண்டுமென்றால் போர்கேஸியக் கதை என்று தான் வகைப்படுத்த வேண்டும். போர்ஹேஸின் எழுத்து முரண்பாடுகள், கண்ணாடிகளினுடே விரியும் எல்லையற்ற பிரதிபலிப்புகள், சிக்கலான புதிர்ப்பாதைகள் ஆகியவற்றால் நிரம்பியிருக்கும்.
‘Tlön, Uqbar, Orbis Tertius’ இல், போர்ஹெஸ், ‘பிஷப் பெர்க்லி’ என்று அழைக்கப்படும் ஜார்ஜ் பெர்க்லியைக் குறிப்பிடுகிறார். இந்த ஐரிஷ் தத்துவஞானி அவரது அகநிலை கருத்தியல் கோட்பாட்டிற்கு (‘Subjective Idealism’) மிகவும் பிரபலமானவர். அவரது பெயர் ஒரு அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்துக்கு – பெர்க்லி – இடப்பட்டுள்ளது. பெர்க்லி விவரித்த கோட்பாட்டை சுருக்கமாக ஒரு கேள்வி வடிவத்தில் விளக்குவார்கள் – “காட்டில் மரம் விழுந்தால், அதைக் கேட்க யாரும் இல்லை என்றால், அது ஒலி எழுப்புமா?” – என்பது தான் அந்தக் கேள்வி. இதற்கு பெர்க்லியின் பதில் ‘இல்லை’ என்பதாக இருக்கும், ஏனெனில் அவை மனிதர்களால் அந்த ஒலி உணரப்படும்போது மட்டுமே அது ஒலிக்கும்.
பெர்க்லிக்கும், ட்லோனில் வசிப்பவர்களுக்கும், பொருள் அல்லது பொருட்கூறு – அதாவது, பௌதீகப் ‘பொருள்’ – இல்லை. அது மனத்தால் உணரப்பட்ட ஒரு யோசனை மட்டுமே. நான் வைத்திருந்த ஐபோன் இல்லை, ஆனால் அது இருப்பதை நான் உணர்கிறேன். அவ்வளவே. அது ‘தொலைந்து போனதற்கு அழுத நேரத்திலும்” அது என்னுடனேயே ‘இருந்தது’. நிச்சயமாக, Tlön மக்கள் ஒரு கற்பனை. எனவே முரண்பாடாக, அவர்கள் சொல்வது சரிதான் (அவர்கள் இல்லாமல் இருந்தாலும்): அவர்களின் உலகம் போர்ஹேஸ் வாயிலாக, அவரது கதையின் பக்கங்கள் மூலம் நாம் உணரும் உணர்வுகளின் தொகுப்பாக மட்டுமே உள்ளது.
‘Tlön, Uqbar, Orbis Tertius’ இல் போர்ஹெஸ் குறிப்பிடும் பலர் உண்மையான அர்ஜென்டினா நாட்டு ஆளுமைகள். 1940 இல் Sur இதழில் இந்தக் கதையை முதன்முறையாக வாசித்த வாசகர்கள் உண்மை மற்றும் புனைகதை, யதார்த்தம் மற்றும் குழப்பம் – இவற்றின் திசைதிருப்பும் கலவையாக இருப்பதைக் கண்டு அதிர்ந்திருப்பார்கள்.
–
தியரியெல்லாம் எழுதியாயிற்று. இந்தக் கதை ஏன் பிடிக்கிறது?
– குறிப்புச் சிதறல்கள்
– தகவல்களைக் கதையில் செதுக்கியுள்ள லாவகம்
– வகைமைப்படுத்த முடியாத இதன் வடிவம்
– தத்துவங்களைப் பின்னி ஒரு கதையில் கோர்த்திருக்கும் செயல் திறன்
– கருவின் விரிந்த தன்மை
– படித்த வெகுநேரம் கழித்தும் வாசகனை அசை போட வைக்கும் தன்மை
– மர்மக்கதை போலத் தொடங்கி, அறிவியல் புனைவாக மடை மாறி, தத்துவம், மனோதத்துவம், தொல்லியல் என்று பல துறைகளையும் தொட்டு பின்னர் ஒரு புரளியாக வடிவங்கொண்டு டிஸ்டோபியன் முடிவை எட்டும் அபூர்வம்
நண்பர் நிஷா மன்சூர் வாட்ஸப்பில் ஒரு மின்னூலைப் பகிர்ந்ந்திருந்தார். அவருடைய தந்தை வழி பூட்டனார் எழுதிய ஒரு கவிதை நூல். “நெல் குத்தும் ஞானப்பதம்” என்பது அதன் தலைப்பு. தமிழ் சிற்றிலக்கிய மரபு, தமிழர்களின் வாழ்வியல், இஸ்லாமிய மெய்ஞானம் – மூன்று அம்சங்களும் கலந்து எழுதப்பட்ட இந்தப் பாக்களை இசைக்கத்தக்க வகையில் இயற்றியுள்ளார் இதன் ஆசிரியர். கவிதைகளின் ஆரம்பத்தில் “இராகம் செஞ்சுருட்டி தாளம் ஆதி” என்று குறிப்பிடப்படுகிறது. யாரேனும் இதை சங்கீதமாகப் பாடியிருக்கிறார்களா என்று தெரியவில்லை என்கிறார் ஆசிரியரின் கொள்ளுப் பேரன் நிஷா மன்சூர்.
நெல்லுக்குகுத்துகிற பதத்தே நான் சொல்லிவாரெனந்த விதத்தை யினி அல்லும்பகலும் துற்குணத்தே நீக்கி வெல்லு அஜாசீல்மும்மலத்தே வாசி ஹாஹா சரம் மாத்திக்குத்தடி ஹுஹு திக்கிர் முழக்கிக்குத்தடி ஹீஹீ
நூலின் முகவுரையில் இக்கவிதைகள் எழுதப்பட்டதன் பின்னணி விளக்கப்ப்டுகிறது.
“வேலைக்காரப் பெண்கள் உஸ் உஸ் என்ற பெருமூச்சுடன் உலக்கை மாரி மாரி நெல் குத்துவதைக் கண்ணுற்ற உ.அஸன் முகமது றாவுத்தர் இவ்வளவு மூச்சு வீணில் போகிறபடியால் என்ன விதமான வேலைகள் செய்யும் போது மூச்சிலும் ஆண்டவனை திக்கீர் செய்வதெப்படி என்று கேட்டதற்காக அந்த நிமிஷமே பாடலாகக் கோர்வை செய்ப்பட்டது.”
நான் அடிக்கடி செல்லும் ஷிர்டியில் த்வாரகா மாய்-யில் காணப்படும் அரைகல்லை நினைவு கூர்ந்தேன். ஷிர்டி நாதரின் வாழ்வில் நிகழ்ந்த அந்த அரை கல் சம்பந்தப்பட்ட அற்புதங்களின் பின்னணியில் இருக்கும் மறைஞானமும் நெல் குத்தும் ஞானப்பதம் கூறும் ஞானமும் ஒரே அடிப்படையிலிருந்து எழுவது என்று யோசிக்கலானேன்!
1930களில் ராமநாதபுரத்தில் பதிப்பிக்கப்பட்ட இச்சிறு நூல் ஏறத்தாழ நாற்பது அடிகளைக் கொண்டுள்ளது. இதுபோல பத்து மடங்கு படைப்புகளை நண்பரின் பூட்டனார் – ஹக்கீம் பீ அய்யூபு சாஹிப் அவர்கள் – எழுதியுள்ளாரெனத் தெரிகிறது. அவற்றை ஒழுங்குபடுத்தி ஒரு முழு நூலாகக் கொண்டுவரும் திட்டம் உள்ளதாகச் சொல்லுகிறார் நிஷா. நூலாகக் கொண்டுவருமுன் கர்நாடக இசையில் ஒரு இசைத்தட்டு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபடுங்கள் என்று நான் சொன்னேன்.
ராஜதரங்கிணி நூலில் வரும் கஷ்மீர மன்னர்களின் வரிசையை வாசித்த போது என்னுள் தோன்றிய அதே பெருவியப்பு விஷ்ணு புராணத்தில் வரும் அரசவம்சங்களின் பெயர்களை அவ்வம்சங்களின் அரசர்களின் பெயர்களை வாசிக்கும்போதும் தோன்றியது. ராஜதரங்கிணி போன்று வரலாற்றுப் பிரக்ஞையுடன் புராணங்கள் எழுதப்படவில்லை என்றாலும் புராணமும் வரலாறும் இணைவதைப் பல இடங்களில் அவதானிக்க முடிகிறது.
அசோகரின் பெயரை விஷ்ணு புராணத்தில் வாசித்தபோது அசோகரைத் தொன்ம பாத்திரமாக சித்திரிக்கும் பௌத்த இலக்கியங்கள் ஞாபகத்தில் வந்து சென்றன. புத்தர் வாழ்ந்த காலத்தை நிர்ணயிப்பதில் பௌத்த மூல நூல்களை விட விஷ்ணு புராணம் கூறும் காலவரிசை துல்லியமானது என்று வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.
“நந்தாவின் வம்சம் முடிவுக்கு வந்தவுடன் மௌரியர்கள் பூமியைக் கைப்பற்றுவார்கள், ஏனெனில் கௌடில்யர் சந்திரகுப்தனை அரியணையில் அமர்த்துவார்: அவனுடைய மகன் விந்துசாரர்; அவனுடைய மகன் அசோகவர்த்தனனாவான்…..”
மௌரியர்கள் ஆட்சி முடிவடைந்து சுங்கர்கள் ஆட்சியேறியதைப் பதிவு செய்கிறது விஷ்ணு புராணம் :-
“சுங்கர்களின் வம்சம் அடுத்து இறையாண்மையை உடையதாக மாறும்; கடைசி மௌரிய அரசரின் தளபதியான புஷ்பமித்ரர் தனது எஜமானரைக் கொன்றுவிட்டு அரியணை ஏறுவார்.”
சாதவாகன மன்னர்களையும் வரிசைப்படுத்துகிறது விஷ்ணு புராணம் :-
“சுசர்மன் கன்வாக்களின் (கடைசி மன்னன்) ஆந்திர பழங்குடியினத்தைச் சேர்ந்த சிப்ரகா என்ற சக்திவாய்ந்த வேலைக்காரனால் கொல்லப்படுவான், அவன் பிறகு மன்னனாவான்; அவனே ஆந்திராபிரித்ய வம்சத்தை நிறுவியவன்: அவனுக்குப் பிறகு அவரது சகோதரர் கிருஷ்ணர் ஆட்சிக்கு வருவார்; அவருடைய மகன் ஸ்ரீ ஶதகர்ணி; அவருடைய மகன் பூர்ணோட்சங்க; அவரது மகன் ஷாதகர்ணி (2வது); அவருடைய மகன் லம்போதரா; அவருடைய மகன் இவிலக; அவருடைய மகன் மேகஸ்வதி; அவருடைய மகன் படுமட்; அவருடைய மகன் அஷ்டகர்மன்; அவரது மகன் ஹளன்; அவரது மகன் தலகா; அவருடைய மகன் பிரவிலாசேனா; அவரது மகன் சுந்தரன், ஷாதகர்ணி; அவரது மகன் சகோர சாதகர்ணி; அவரது மகன் சிவஸ்வதி; அவருடைய மகன் கோமதிபுத்திரன்; அவரது மகன் புலிமாத்; அவருடைய மகன் சிவஸ்ரீ சாதகர்ணி; அவருடைய மகன் சிவஸ்கந்தா; அவருடைய மகன் யஜ்ஞஸ்ரீ; அவருடைய மகன் விஜயா; அவரது மகன் சந்திரஸ்ரீ; அவருடைய மகன் பூலோமர்சிஷ். இந்த முப்பது ஆந்திரபிரத்திய மன்னர்கள் நானூற்று ஐம்பத்தாறு ஆண்டுகள் ஆட்சி செய்வார்கள்.”
சாதவாகனர் மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுவிட்டு பின்னர் ஆண்ட வம்சங்களைக் குறிப்பிடுகிறது – குப்தர்கள் வரை குறிப்பிடும். சிந்து நதிக்கரைக்கு அப்பால் “காட்டுமிராண்டிகள்” ஆள்வார்கள் என்ற வரிகள் எட்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் “அராபியர்கள்” சிந்துவை ஆண்ட தகவலை விஷ்ணு புராண ஆசிரியர்கள் அறிந்திருந்தனரோ என்று எண்ண வைக்கிறது.
இந்தப் பெயர் வரிசைகள் மிகவும் நம்பகமான வரலாற்று ஆதாரங்களாகப் பயன்படுத்தப்படலாம், இருப்பினும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் கூடிய கவனம் மிக அவசியம்.
மத்ஸ்ய புராணம், வாயு புராணம் – இவற்றிலும் மன்னர்களின் வரிசை வருகின்றன. குறிப்பிடப்படும் அரச வம்சங்களின் பெயர்களை வைத்து எந்த நூற்றாண்டில் இந்தப் புராணங்கள் எழுதப்பட்டன என்பதை ஊகித்துவிடலாம்.
Of Love and other demons –1510இல் ஸ்பானிய மொழியில் எழுதப்பட்ட The Four Books of Amadius of Gaul எனும் புதினம் பற்றிய ஒரு குறிப்பு நாவலில் வருகிறது. பிஷப்பின் தேவாலயத்தில் பாதிரி-நூலகராக இருக்கும் டீலோரா அந்நாவலை பல ஆண்டுகளுக்கு முன் பாதி வாசித்திருக்கிறார். அந்த நாவலுக்கு கத்தோலிக்க சர்ச்சுக்கள் உலகெங்கும் தடை விதித்திருக்கின்றன. தமது சர்ச் நூலகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் நூல்களின் வரிசையிலிருந்து அந்நாவலின் பிரதி தொலைந்து போய் விடுவதால் நாவலின் முடிவு என்ன என்பதை அவர் அறியமுடியவில்லை. பின்னர் ஒருமுறை அந்நாவல் பிரதி அவர் கண்ணில் கிடைக்கிறது. அதனை கையில் ஏந்தி தடவிப்பார்க்கிறார். Chivalric Romance எனும் இலக்கிய வகைமைப் புதினப் பிரதியைப் பார்த்த பிறகு ஒரு ரீஜண்ட் போல சாகசவுணர்வுடன் அவர் எடுக்கும் முடிவுகள் துன்பியல் முடிவைத் தருகிறது. பாதி வாசித்த புதினத்தின் இளவரச-நாயகனாய்த் தன்னை டிலோரா கற்பனை செய்து கொண்டிருக்கக் கூடும்.
அடிமை வியாபாரம் உச்சத்தில் இருக்கும் தென் அமெரிக்கத் துறைமுக நகரத்தில் செல்வந்த ஜோடியொன்றின் மகள் சீர்வா மரியா வீட்டில் இருக்கும் அடிமைகளால் வளர்க்கப்படுகிறாள். ஆப்பிரிக்க அடிமைகள் பேசும் யோருபா போன்ற மொழிகளைச் சரளமாகப் பேசும் மரியாவை வித்தியாசமாகப் பார்க்கிறது காலனீய சமூகம். அவளை ஒரு வெறிநாய் கடித்த பின்னர் கண்டிப்பாக அவளுக்கு Rabies பீடிக்க வேண்டும் என்று சமூகம் எதிர்பார்க்கிறது. அது பீடிக்காத போது மரியாவைப் பேய் பிடித்துக் கொண்டதாக கத்தோலிக்க சர்ச் பேயோட்டுவதற்காக இழுத்துச் சென்று விடுகிறது.
1740களின் தென் அமெரிக்கத் துறைமுக நகரமொன்றில் கொடூரமான கத்தோலிக்க தேவாலயத்தால் ஓர் அப்பாவியான, ஆதரவற்ற 13 வயது சிறுமி மீது சமய நிறுவனம் இழைக்கும் வன்முறையின் உருவப்படம் இந்த நாவல். மதம் மற்றும் தார்மீகப் பிரச்னைகளை உள்ளடக்கிய ஒரு சிக்கலான கதைக்கருவை – மத ஆதிக்கத்தின் மூலம் அடையப்பட்ட தென் அமெரிக்காவின் மீதான ஸ்பானிய காலனித்துவத்தின் சூழலில் – உருவாக்கியிருக்கிறார் மார்க்கேஸ்.
நாவல் பேசும் அடிப்படை பிரச்னையை நாத்திகம் பேசும் மருத்துவர் அப்ரெனுன்ஸியோ ஓர் உரையாடலில் அழகுற சுருக்கிக் கூறிவிடுகிறார் – “மரணத்தின் மதம் உங்களிடம் உள்ளது, அதை எதிர்கொள்ளும் மகிழ்ச்சியையும் தைரியத்தையும் அது உங்களுள் நிரப்புகிறது. நான் அவ்வாறு இல்லை; உயிருடன் இருப்பது மட்டுமே அத்தியாவசியமான விஷயம் என்று நம்புபவன் நான்.”
அவள் அடைக்கப்பட்டிருக்கும் அறையில் பல இரவுகள் மரியாவுடன் கழிக்கும் டிலோரா ஏதாவது ஓர் இரவில் ரகசியமாகத் தான் வரும் வழியாக அவளை அழைத்துச் சென்றிருக்கலாமே என்று யோசித்துக் கொண்டே வாசிக்கையில் அந்த வழியைப் பயன்படுத்தி வேறொருவர் தப்பித்துச் சென்றுவிட பாதிரியார் பயன்படுத்தும் சுரங்க வழி அடைபட்டுவிடுகிறது. நாவலின் முடிவில் பேயோட்ட வரும் பிஷப்பின் வயிற்றை மரியா எட்டி உதைக்கும் கட்டம் கண நேர மகிழ்வைத் தருகிறது. கலக உணர்வுகளை அடக்கும் அதிகாரத்தின் மூர்க்கத்தனத்தை நாவலில் பதிவு செய்கிறார் மார்க்கேஸ்.
ஜோராஸ்ட்ரிய சமயத்தின் வேதம் ஜென்ட் அவெஸ்தா. அது ஐந்து தொகுதிகளைக் கொண்டது. காதா, யஸ்னா, வெந்திதாத், விஸ்ப்-ராத், யஷ்ட். குர்தா அவெஸ்தா அடுத்த படியில் உள்ள புனித நூல் தொகுப்பு. குர்தா அவெஸ்தாவின் பாராயணத்தின் முடிவில் ஜொராஸ்ட்ரியர்கள் சொல்லும் மந்திரம் அஷெம் வஹு. இது தியான வழிபாடு. மிகப் பழமையான இந்த வழிபாட்டிற்கு பலவித மறுவிளக்கங்கள்.
அவெஸ்தன் மொழியின் சிக்கலான தன்மை மற்றும் கூறப்படும் கருத்துகள் காரணமாக குறிப்பிடத்தக்க அளவில் வேறுபடும் பல மொழியாக்கங்கள் உள்ளன. ஆனால் மந்திரத்தை உச்சரிக்கையில் நம் சிந்தனையில் அதன் அர்த்தம் தன்னிச்சையாக வந்து மனதில் படியும் என்பது ஜொராஸ்ட்ரியர்களின் ஐதீகம்.
ஆஷா எனப்படுவதன் முக்கியத்துவத்தை அதன் ஆற்றலைப் பேசுகிறது இந்த மந்திரம். ஆஷா எனும் சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளன.
ஆஷா என்பது ஒரு சிக்கலான மற்றும் அதிக நுணுக்கமான பொருளைக் கொண்ட ஒரு ஜோராஸ்ட்ரியன் கருத்து. இது பொதுவாக ‘சத்தியம்’ மற்றும் ‘நன்னடத்தை’ ‘சரித்தன்மை’ அல்லது ‘நீதி’, ஒழுங்கு’ மற்றும் ‘சரியாகச் செயல்படுதல்’ எனப் பலப்பல அர்ததங்களைக் கொண்டது. குர்தா அவெஸ்தாவுக்கும் பழமையான ஜென்ட் அவெஸ்தாவில் ‘ர்த’ என்ற சொல் ‘ஆஷா’வின் இணைச்சொல். சூழல் சார்ந்த தாக்கங்களுக்கு இணங்க ஆஷாவின் அர்த்தம் வகுத்துக் கொள்ளப்படுகிறது. உலகம் ஆஷா என்ற சொல்லிலிருந்து துவங்கிற்று என்பது சமய நம்பிக்கை. “அழகு”, ”தூய்மை” – இன்னும் எத்தனையோ அர்த்தங்கள் அதற்கு!
இந்த மந்திரத்தின் பொதுவான கருத்து என்ன?
“ஆஷாவில் சிறந்த நன்மை இருக்கிறது அதுவே மகிழ்ச்சி; எவன் ஆஷாவைக் கடைப்பிடிக்கிறானோ அவனுக்கு மகிழ்ச்சி”
முக்குளிப்பவர் ஒருவருடன் நட்புகொள்ளும் ஓர் ஆக்டோபஸ் பற்றிய ஆவணப்படம் My Octopus Teacher. இரைகளை வேட்டையாடும் முறை, வேட்டையாட வரும் உயிரினங்களிடமிருந்து தப்பிக்கும் வழிமுறைகள் என தன் வாழும் முறையை படம் பிடிக்க மனித நண்பனை அனுமதித்தது போல் ஒத்துழைத்திருக்கிறது அந்த ஆக்டோபஸ். மை வீசி இரைக்காகத் துரத்தும் உயிரினங்களின் பார்வையிலிருந்து மறைந்து போதல், தோலின் நிறம், அமைப்பு, உடலின் வடிவம் அனைத்தையும் கண நேரத்தில் மாற்றிக்கொண்டு வேட்டையாட வரும் மிருகங்களின் கண்ணில் படாதிருத்தல், சுறா போன்ற மூர்க்கமான மிருகங்களிடமிருந்து புத்தி சாதுர்யத்தால் தப்பித்தல் – மனித இனம் தோன்றுவதற்கு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே பரிணாம வளர்ச்சி பெற்றுவிட்ட ஆக்டோபஸ் அதன் ஒவ்வொரு இயக்கத்திலும் நம்மை பெருவியப்புக் கொள்ளச் செய்கிறது. அது தன் இரையை வேட்டையாடும் விதமோ நம் வியப்பை பல மடங்கு உயர்த்திவிடுகிறது. அதன் எண்கைகளின் அதிவேகம் ஆக்டோபஸ்ஸின் இரை தேடுதலின் முக்கிய அம்சம். இரையினத்துக்கேற்ற மாதிரி வேட்டைத் திட்டத்தை மாற்றிக்கொள்ளுதல் இன்னொரு சிறப்பம்சம். நண்டை வேட்டையாடுகையில் கைக்கொள்ளும் உத்தியை அது சிப்பி மீனை வேட்டையாடும் போது கைக்கொள்வதில்லை. வேட்டையின்போது அதன் கைகள் துண்டித்துவிடுகையில் காயங்களுக்குத் தானே சுயசிகிச்சை செய்து கைகளை மீள்-வளர்ச்சி செய்துகொள்ளும் விதம் – வியப்பின் சிகரம்! இனப்பெருக்கம் இந்த உயிரினத்தின் மரணத்துக்கு வித்திட்டுவிடுகிறது. ஆண் ஆக்டோபஸ் புணர்ச்சிக்குப் பிறகு சுய-அழிவை நோக்கிப் பயணப்படுகிறது. உணவு உட்கொள்ளாமல், செல்கள் வளர்ச்சியுறாமல், அதன் இயக்கங்களை ஒருங்கிணைக்காமல் மிக எளிதில் வேட்டையாடப்படும் விதத்தில் வளைய வருகிறது. பெண் ஆக்டோபஸ் முட்டைகளை அடைகாக்கும் வரை உயிர் தறிக்கிறது. பிறகு அதுவும் மரணத்தை தழுவி விடுகிறது. இந்த senescence என்னும் உயிரியல் செயல்முறை வேறு சில கடல்வாழ் உயிரினங்களிலும் உள்ளதாம்! ஆவணப்படத்தில் நாயகி ஆக்டோபஸ்ஸை வேட்டையாட முயன்று தோற்றுப்போன சுறாமீன் இறுதியில் அதன் இறந்த உடலைப் புசிப்பது நல்ல சோகநாடகம்!
பெல்ஷஸார் – விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் வரும் டேனியலின் புத்தகத்தில் குறிப்பிடப்படும் பாபிலோனின் பட்டத்து இளவரசன். விவிலியத் தொன்மத்தில் பாபிலோனியப் பேரரசன் நெபுகத் நெஸாரின் மகன் என்று குறிப்பிடப்படும் பெல்ஷஸார் வரலாற்று ரீதியாக நெபுகத் நெஸாருக்குப் பின் வந்த நெபோடினஸ் என்னும் அரசனின் மகனாவான். டேனியலின் புத்தகத்தில் வரும் தொன்மக் கதையின் படி பெல்ஷஸார் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தான். அவ்விருந்தில் அவனுடைய பிரபுக்கள், அமைச்சர்கள், மனைவிகள், அந்தப்புரப் பெண்கள் எனப் பெருந்திரளாக அனைவரும் கலந்துகொண்டனர். நெபுகத் நெஸார் ஜெருசலேமைக் கைப்பற்றி யூதர்களின் தலைமைக் கோயிலிலிருந்து எடுத்து வந்த கோப்பைகளையும் பாத்திரங்களையும் விருந்தில் மதுவருந்த பயன்படுத்துமாறு ஆணையிடுகிறான் பெல்ஷஸார். விருந்தினர் அனைவரும் அந்தக் கோப்பைகளில் மதுவூற்றி அருந்துகின்றனர். பின்னர் அக்கோப்பைகளின் மூலப்பொருட்களான தங்கம், வெண்கலம், வெள்ளி முதலானவற்றுக்கான தேவதைகளை வணங்குகின்றனர். அப்போது விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்த அறையின் சுவரொன்றில் ஓர் ஆண் கரம் தோன்றுகிறது. சுவரில் பின் வரும் சொற்கள் எழுதப்படுகின்றன. அந்தச் சொற்களின் அர்த்தம் ஒருவருக்கும் புரியவில்லை. அமைச்சர் ஒருவரை அழைத்து ஜெருசலேமிலிருந்து பாபிலோனுக்கு அழைத்துவரப்பட்ட யூதர்களிலேயே அறிவு மிக்கவரும் பலவித மொழிகளை அறிந்தவருமான டேனியலை கூட்டிவரப் பணிக்கிறான். டேனியல் அங்கு வந்தவுடன் சுவரில் காணப்படும் சொற்களின் அர்த்தத்தைச் சொன்னால் பாபிலோனிய நாட்டின் மூன்றாவது அதிகாரமிக்கவனாக ஆக்குவதாகச் சொல்கிளான். டேனியல் தனக்கு பரிசோ பதவியோ வேண்டாம் என்று மறுத்துவிட்டு அர்த்தத்தை மட்டும் சொல்கிறார்.
מנא מנא תקל ופרסין
Mede Mede Tekel Upharsin
“Mene, தேவன் உமது ராஜ்யத்தின் நாட்களை எண்ணி, அதை முடிவுக்குக் கொண்டுவரப் போகிறார் ;Tekele, நீ எடைபோடப்பட்டாய்…உன் எடை குறைந்து காணப்படுகிறது ; “UPHARSIN”, உனது ராஜ்யம் பாரசீகர்களுக்குக் கொடுக்கப்படும்.”
அன்றிரவே பெல்ஷஸார் பாரசீகர்களால் கொல்லப்படுகிறான். பாபிலோனை பாரசீக பேரரசர் சைரஸ் கைப்பற்றுகிறார். சைரஸ் பாபிலோனில் அடிமைகளாக இருந்த யூதர்களை ஜுடேயாவுக்கே திரும்ப அனுப்பிவைக்கிறார்.
வெளிப்படுத்தும் சுவர் – எமிலி கேதலிக் சமய நம்பிக்கை கொண்டிருந்தவர். இங்கு அவர் சுவர் எனக் குறிப்பிடுவது ஜெருசலேமின் அழிந்து போன சாலமன் கட்டிய யூதர்களின் தலைமைக் கோயிலின் சுவர் (Wailing Wall) சிதிலத்தை. யூதர்கள் சுவர் முன்னால் நின்று அழும் சடங்கில் அவர்கள் அழும் காரணத்தை இறைவன் பெல்ஷஸாருக்கு அளித்த தகவலோடு ஒப்பு நோக்குகிறார் எமிலி.
தெஹ்ரானில் ஒரு உயரமான கட்டிடம். மிகவும் வேறுபட்ட சமூக நிலைமைகள், மத அல்லது மத சார்பற்ற நோக்குநிலைகள், தார்மீக அல்லது ஒழுக்கக்கேடான நடத்தைகளை பிரதிபலிக்கும் அண்டை வீட்டார். பழமைவாத குடும்பங்கள், மூர்க்கத்தனமான வாழ்க்கை முறைகளைக் கொண்ட இளைஞர்கள் (மது, போதைப்பொருள், தேவையற்ற டீனேஜ் கர்ப்பம்), தொழில்முறை குற்றவாளிகள், ஏன் ஒரு செக்ஸ் வொர்க்கர் கூட – எல்லாம் கலப்பு, எல்லாம் முரண், எல்லாம் புதிர்.
ரேடியோவில் மதச் சொற்பொழிவு ஒலிபரப்பை கேட்டுக்கொண்டே கொடூரமான கொலையைச் செய்கிறார்கள் குற்றவாளிகள். அந்தச் சொற்பொழிவில் வரும் மேற்கோள் – “தொழுநோயாளியின் கையில் பன்றி எலும்பு” – மனித இருப்பின் பரிதாபகரமான தன்மையின் வரையறை – ஷியா இஸ்லாமின் புனித இமாம்களில் ஒருவர் தந்தது. செக்ஸ் வொர்க்கர் நம்பிக்கையின்றி காதலிக்கிறாள். படித்த தாய் மூடநம்பிக்கை மற்றும் அதிசய சிகிச்சையின் மூலம் நோய்வாய்ப்பட்ட குழந்தை நலம்பெற ஆசைப்படுகிறாள். மிதமிஞ்சிய பணம் புரளும் குற்றவுலகம், அதில் ஊழலும் கலந்துள்ளது. பின்னணியில், சத்தமில்லாத, மிகவும் மாசுபட்ட பெருநகரத்தின் இடைவிடாத ஓசை. ஈரான் அதன் அனைத்து முரண்பாடுகளிலும் சிக்கலான தன்மையிலும், அங்கு வாழ்ந்த அனைவருக்கும் சாட்சியமளிக்கிறது. எனினும், இறுதி முடிவு விரக்தி தருவதல்ல. ஆனால் மனித பலவீனங்களை இரக்கத்துடன் நோக்குவது.
மையத்தன்மையற்ற கதை சொல்லல். ஒரு திரைப்படத்தின் ஸ்க்ரிப்ட் போல எழுதப்பட்டுள்ள நாவல். ஒரு காட்சிப் பொருளாய் ஒரு புறநகர்ச் சமூகத்தின் சித்திரிப்பு. நூறு பக்கம் மட்டுமே. இரண்டாயிரங்களின் முக்கிய ஈரானிய எழுத்தாளராக மொஸ்தஃபா மஸ்தூரை நிலை நிறுத்திய படைப்பு.
நிச்சயமாக ஈரான் எனும் தேசம் சாடர்கள் (Chador) /அயத்துல்லாக்கள் நிரம்பிய தேசம் மட்டுமல்ல, அதே நேரம் இளம் ட்வீட்டர்கள் மற்றும் மேற்கத்திய சார்பு மதச்சார்பின்மைவாதிகள் மட்டுமே நிரம்பிய தேசமுமல்ல.
அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள் அல்லது பத்திரிகையாளர்களை விட அதிகம் உண்மையைச் சொல்ல முனைபவர்கள் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள். அவர்களைக் கேட்போம். மொஸ்தஃபா மஸ்தூர் ஈரானைப் பற்றிச் சொல்வதைக் கேட்போம்.
தொழுநோயாளியும் பன்றியின் எலும்பும் – மொஸ்தஃபா மஸ்தூர் தமிழில் – பீ எம் எம் இர்ஃபான் சீர்மை பதிப்பக வெளியீடு