தாகூர் பைத்தியம்

rabindranath_tagore_03

இளைஞனாக பாரதிப் பித்து பிடித்தலைந்த நாட்கள் இன்னும் நெஞ்சில் பசுமையாக இருக்கின்றன. இப்போது நடு வயதில் வேறொரு பித்து பிடித்தாட்டுகின்றது.

குரு தேவரின் Hungry stones சிறுகதையை ஒரு விபத்தாக படிக்க நேர்ந்தது. இரண்டாம் காதல் என்று தான் இவ்விபத்தை வர்ணிக்க வேண்டும்! 1910இல் மேக்மில்லன் நிறுவனம் சர்வதேச பதிப்பாக வெளியிட்ட Hungry Stones and other stories  சிறுகதைத் தொகுதியில்  ரவீந்திரரின் முக்கியமான சில சிறுகதைகள் அடங்கியிருக்கின்றன. வங்க மொழி மூலத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்களின் பெயரைக் கேட்டாலே ச்சும்மா அதிருதில்லே என்று சொல்ல வைக்கும்! சி.எஃப்.ஆண்ட்ரூஸ், சகோதரி நிவேதிதா (முதல் குருநாதர் பாரதியாரின் ஆன்மீக குரு!) போன்றோர்….The Victory என்ற ஒரு சிறுகதை ரவீந்திரர் ஆங்கிலத்திலேயே எழுதியது. தொகுதியில் ஒவ்வொரு கதையும் முத்து! Hungry Stones சிறுகதை படிக்க படிக்க பேரின்பம்! நெஞ்சை உருக வைக்கும் காபூலிவாலா சிறுகதையும் இத்தொகுதியில் உள்ளது.

அதற்கப்புறம் ரவீந்திரரின் பல சிறுகதைகளைப் படித்தேன். சமீபத்தில் படித்தது Broken Nest (‘Nashtaanir’). புகழ் பெற்ற இக்குறுநாவலை ஒரே அமர்வில் நான் வாசித்து முடித்த போது இரவு பனிரெண்டு. இரவு முழுதும் புரண்டு புரண்டு படுத்தேன். தூங்கவேயில்லை. சிந்தனையை புரட்டி போட்ட நாவல். இந்நாவலை சத்யஜித்ரே ‘சாருலதா’ என்ற பெயரில் படமாக்கியிருப்பதாக அறிந்தேன். அந்தப் படத்தைப் பார்த்தால் என்ன அவஸ்தையாகுமோ தெரியவில்லை. கோரா, கைரெபாய்ரெ, சதுரங்கா – இந்த நாவல்களையும் விரைவில் படித்து முடித்து விட வேண்டும். தாகூரை வாசிக்காமல் நாற்பது வருடங்களை வீணாகக் கழித்து விட்டேன்.

ஆங்கில மொழிபெயர்ப்புகளே வாசகரை பித்துப்பிடிக்க வைக்கும் போது பெங்காலியில் குரு தேவரின் நூல்களைப் படித்தால்……பெங்காலி நண்பர்கள் வெறித்தனமாக ரவீந்திரரைக் கொண்டாடுவது கொஞ்சமும் ஆச்சரியம் தரும் விஷயமில்லை!

ரவீந்திரரின் கதையொன்றின் தமிழ் மொழிபெயர்ப்புக்கான சுட்டியொன்றை கீழே தருகிறேன்……மொழிபெயர்ப்பாளர் யார் தெரியுமா? சாதாரணப்பட்டவர் இல்லீங்க……முதல் பத்தியில ஒருத்தர சொன்னேன் இல்லியா…அவரேதான்…..

https://docs.google.com/file/d/0B7SRknDGRb6JZ1g4aTJ3NFZIejQ/edit?usp=sharing

 

hungry-stones-and-other-stories-400x400-imadgcfqdengz8jd

Comments

3 responses to “தாகூர் பைத்தியம்”

  1. ஷாஜஹான் Avatar

    அந்தக்காலத்தில் பெரிய எழுத்தாளர்கள் கௌரவம் பார்த்ததில்லை. அருமையான ஓர் எடுத்துக்காட்டு – முயலும் ஆமையும் என்ற சிறுவர் கதையை உருதுவில் எழுதியவர் ஜாகிர் உசேன். அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் குஷ்வந்த் சிங். அதற்குப் படம் வரைந்தவர் எம்.எப். உசேன். இன்று கற்பனைகூடச் செய்ய முடியாது.
    பேஸ்புக்கில் இந்தப் பதிவை பகிர்ந்திருக்கிறேன்.

  2. hemgan Avatar

    நன்றி ஷாஜஹான் சார்! இக்கட்டுரையில் ஒரு விவரத்தை குறிப்பிட மறந்து விட்டேன். நான் ஆங்கிலத்தில் வாசித்த நாஷ்தாநீர் நாவலை மொழிபெயர்த்தவரும் பெரிய எழுத்தாளர் தான் – ஷர்மிஷ்தா மொஹாண்டி அவர்கள்!

  3. N.Balasubramanian Avatar
    N.Balasubramanian

    சர்மிஷ்டா,
    மஹந்தி

    யயாதி சர்மிஷ்டை கையைப் பிடித்த கதை ஓர் இதிகாசவரலாறு.

    வங்கர்களும் கலிங்க ஒரியர்[உதிச்யர்] களும்
    ’அ’-வை ’ஒ’ ஆக்கும் நவிற்சி நாம் அறிந்ததே.

    அந்த வகையில், ’மஹந்தி’ ’மொஹந்தி’யெனவுச்சரிக்கப்பட்டு
    ஆங்கில எழுத்திலும் ‘mohanti’ yena நிலவுகிறது.

    அரவிந்தர் ஒரொபிந்தோ ஆவதும், சிவ சரணன் ஷிபு சோரென் ஆவதும் அங்ஙனமே என்மனார் புலவர்!

Leave a reply to ஷாஜஹான் Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.