Tag: தொன்மம்

  • ஐக்கியமும் எதிர்ப்பும்

    From Waris to Heer – நாவலை வாசித்து முடித்ததும் என்னுள் எழுந்த வினா ஒன்று தான் – மத ரீதியாக பிளவுபட்ட ஒரு பண்பாடு பஞ்சாபி மொழிக் காவிய நூலொன்றினால் மீண்டும் ஒன்றிணைந்துவிடக் கூடுமா? நூல்கள் என்றும் இத்தகைய மந்திரங்களை நிகழ்த்தியதில்லை. ஆனால் வினாவின் கற்பனையில் லயித்திருப்பது ஒன்றும் புதிதில்லையே!

    சீக்கிய சமய நூல்களைச் சரி பார்த்து தொகுத்ததில் வரலாற்றுப் பங்களித்தவர் பாய் மணி சிங். சீக்கிய மதத்தின் கடைசி குரு – குரு கோபிந்த் சிங் – அவர்களின் பால்யத் தோழர். லாகூர் நகரில் முகலாயர்களின் பிரதிநிதியாக இருந்த ஸகாரியா கான் பாய் மணி சிங்-கை சிறைப்பிடிக்கிறான். பொதுமக்கள் முன் நிறுத்தப்பட்டு ஒவ்வொரு பாகமாக பாய் மணி சிங் – கின் அவயங்கள் வெட்டியெறியப்படுகின்றன. அடுத்து வந்த பிற வருடங்களில் “ஹீர் ராஞ்சா” காதல் காவியத்தை பஞ்சாபி மொழியில் எழுதப்போகிற வாரிஸ் ஷா இளைஞனாக பாய் மணி சிங்-கின் கொடூர மரணத்தை லாகூரின் வீதியொன்றில் கண்ணுறும் காட்சியிலிருந்து நாவல் துவங்குகிறது.

    இச்சம்பவத்தைத் தொடர்ந்து சீக்கிய போராளிக் குழுக்கள் (ஒன்றிணைந்த) பஞ்சாப் கிராமங்களின், நகரங்களின் மீது கொரில்லா தாக்குதல்களை நடத்தத் தொடங்கின. பஞ்சாப் மீதான முகலாயர்களின் பிடி ஆட்டம் கண்டது. மராத்தியர்கள் ஆட்சி தில்லியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. ஆப்கானிய மன்னன் நாதிர் ஷா இந்துஸ்தான் மீது படையெடுத்து வர வேண்டும் என்ற எண்ணம் இஸ்லாமிய அறிவுஜீவிகளுக்கு மத்தியில் பலப்பட்டு வந்தது. முகலாயர்கள் “நல்ல முஸ்லிம்களாக” இல்லாதது தான் இந்துஸ்தானில் முஸ்லிம்களின் ஆட்சி பலவீனமடைந்ததற்கு காரணமாக சொல்லப்பட்டு வந்தது. இந்த அறிவுஜீவிகள் “சூஃபி ஞானி” ஷா வலியுல்லாவின் கருத்துகளை துணைக்கழைத்துக் கொண்டனர். மராத்தியர்களின் அரசியல் வளர்ச்சியை அறவே வெறுத்தார் ஷா வலியுல்லா. இஸ்லாமியரல்லாதவரின் சமய ஊர்வலங்களை விழாக்களை தடை செய்ய வேண்டும் என்று முகலாய மன்னர் அஹ்மத் ஷாவுக்குப் பரிந்துரைத்தார். அவரின் கருத்துக்களுக்கு எதிரும் புதிருமாக பஞ்சாபின் அறிவுஜீவிகளுக்கு நடுவே உரையாடல்கள் நிகழ்ந்தன. இதனை மூன்று பாத்திரங்களுக்கிடையிலான உரையாடலாக பதிவு செய்கிறார் நாவலாசிரியர் ஹரூன் காலித்.

    கசூர் நகரில் உள்ள ஒரு மத்ரஸாவில் ஒன்றாகப் படிக்கும் மூன்று மாணவர்கள் – வாரிஸ், உமர், அஃப்தாப். வாரிஸ் தான் ஹீர் ராஞ்சா காவியத்தை பிற்காலத்தில் இயற்றப்போகிறவர். அஃப்தாப் இஸ்லாமிய பெயரை வைத்துக்கொண்டு படிக்கும் இந்து மாணவன். ஷா வலியுல்லாவின் புத்தகங்களை வாசித்த அஃப்தாப் வாரீஸிடம் சில கேள்விகளை எழுப்பி அதற்கான விடைகளை அளிக்க முயல்கிறான்.

    “பாபா ஃபரித் கஞ்ஜ் பற்றி ஷா வலியுல்லா என்ன சொல்வார்? பாபா ஃபரித் கவ்வாலி பாடினார். தமால் (நடனம்) ஆடினார். பாடும் ஆடும் மரபுகள் எங்கிருந்து வந்தன? இந்து பஜனைக்கும் கவ்வாலிக்கும் இடையில் உள்ள தொடர்பு விளங்கவில்லையா? தமாலுக்கும் சிவ தாண்டவத்துக்கும் உள்ள தொடர்பும் இதே போலத்தானே? இந்த நடைமுறைகளை புது சமயத்தின் மொழியில் விவரிப்பதன் வழியாகவும் புறச்சமயங்களின் நடைமுறைகளை உட்புகுத்தியதன் வாயிலாகவும் சமயத்தைக் கெடுத்தார்களா என்ன சிஷ்டிகள்1? பாபா ஃபரித் தூய முஸ்லீம் இல்லையென்றும் தூய இஸ்லாத்தைப் பின்பற்றாதவர் என்றும் ஷா வலியுல்லா தைரியமாகச் சொல்வாரா?”

    வாரீஸின் பதில் – “பாபா ஃபரீதைப் பற்றி ஷா வலியுல்லா அப்படிச் சொல்ல மாட்டார். ஆனால் பாபா ஃபரீதும் பிற சூஃபி குருமார்களும் புறச்சமயத்தின் நடைமுறைகளை இரவல் பெற வேண்டியிருந்தது என்பார். ஏனெனில் துணைக்கண்டத்துக்கு அந்தக் காலகட்டத்தில் இஸ்லாம் புதிது. உள்ளூர் ஜனங்களுக்கு இஸ்லாத்தைப் புரிய வைக்க உள்ளூர் சமயத்தின் சின்னங்களை அந்த சூபிக்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். இப்போதோ துணைக்கண்டத்தில் இஸ்லாம் உறுதியாக நிலைநிறுத்தப்பட்டு விட்டது எனவே புறச்சமயங்களின் நடைமுறைகளை உதறித்தள்ளுவதில் ஓர் இழப்பும் இல்லை என்று ஷா வலியுல்லா சொல்வார்”

    அஃப்தாப் சொல்கிறான் – “ஆம். அவர் மறுகண்டுபிடிப்புச் செய்ய விழையும் மூல சமயத்தை தேடிக் கண்டுபிடித்தல் சாத்தியமில்லை என்பதை நீ ஒப்புக்கொள்ள மாட்டாயா? பதினெட்டாம் நூற்றாண்டு தில்லியின் சொந்த அனுபவங்களால் மூலச் செய்தியின் கண்ணோட்டம் கறை படிய வாய்ப்புள்ளதல்லவா? நீ கூறிய படி பாபா ஃபரித் புதிய மதத்தை அக்கால மக்களுக்கு போதிக்க நேர்கையில் அவர்களின் ஆன்மீக மொழியைப் பேச வேண்டியிருந்தது. இந்த ஆன்மீக மொழியை புறச்சமயத்திடமிருந்து அவர் இரவல் பெற வேண்டியிருந்தது.”

    அஃப்தாபின் கருத்துப்படி ஒரு மதத்தின் அசல் சாரத்தை மீள்-கண்டுபிடிப்பது சிரமம். ஏனெனில் இது போதகரின் சொந்த அனுபவங்களால் சூழமைவினால் வடிவமைக்கப்படுகிறது. எது தூய்மை எது கலப்படம் என்ற ஆராய்ச்சி உறுதியான முடிவை என்றும் தரப்போவதில்லை!

    “பஞ்சாபியத்”-தின் சாரம் ஒன்றிணைந்த கலாச்சாரம். அது தப்பிப்பிழைத்தவாறே தன் பயணத்தை வரலாற்றுப்பாதையில் தொடர்கிறது. அதற்கு நிறையவே தடங்கல்களும் இடைஞ்சல்களும் விளைந்த வண்ணமுள்ளன. ஆனால் இல்லாமல் ஆகிவிட்டதொன்றல்ல அது. புல்லே ஷா-வின் காஃபி2 வடிவச்செய்யுட்களில் அது இன்னமும் உயிருடன் இருக்கிறது. இந்த பஞ்சாபி சூபியின் மனித நேய உணர்வு மிக்க பாடல்கள் ஊர் தோறும் பாடப்பட்டாலும் ஆச்சாரவாதிகளின் ஏளனத்துக்கு அவர் உள்ளானார். மத அதிகார சக்திகள் லாகூர் நகரத்தின் ஸ்திரத்தன்மைக்கு அவர் ஓர் அச்சுறுத்தல் என்று கதை கட்டின. பல வருடங்களுக்கு லாகூர் நகருக்கு வராதபடி புல்லே ஷா மீது தடை விதிக்கப்பட்டது.

    ஷா இனாயத் காத்ரி எனும் சூபியைக் கண்டதும் ஆடினார் புல்லே ஷா. கஞ்சரி என்னும் நாட்டியக்காரியின் வீட்டில் தங்கி அவர் கற்றுக் கொண்ட தமால், ஷா இனாயத் மீதான அன்புப்பெருக்கில் அவரை மீறி வெளிப்பட்டது. அவரின் உதட்டிலிருந்து கவ்வாலி பிறக்கிறது.

    “என் ராஞ்சாவின் பெயரை அழைத்து அழைத்து

    நானே ராஞ்சாவாகிவிட்டேன்

    என்னை ராஞ்சாவென்றழை

    நான் இனி ஹீர் இல்லை”

    புல்லே ஷாவின் சமகாலத்தவர் வாரிஸ் ஷா என்று நாவலில் கூறப்படுகிறது. ஹீர் – ராஞ்சா கதையை வாரிஸ் ஷா-வுக்கு முன்னம் – அதாவது அக்பர் ஆண்ட காலத்திலேயே – தாமோதர் என்பவர் செய்யுள் வடிவில் எழுதிவிட்டார். எனினும் வாரிஸ் ஷா எழுதிய ஹீர் ராஞ்சா அடைந்த பிரபலம் மகத்தானது. வாரிஸ் ஷாவின் ஹீர்-ராஞ்சா பஞ்சாபி இலக்கியத்தில் ஒரு தலைசிறந்த படைப்பாக கருதப்படுகிறது. அதன் பாடல் அழகும் மொழியின் பயன்பாடும் தத்துவ ஆழமும் பஞ்சாபி இலக்கிய, கலாச்சார பாரம்பரியத்தின் மைல்கல்லாக நிலைநாட்டியுள்ளன.

    புல்லே ஷா போல ஹீர் ராஞ்சா கதையும் பஞ்சாபியத்தின் அணையாச் சுடர். ஒரு தொன்மக் கதை அல்லது நாட்டார் கதை எப்படி ஒரு மாகாணக் கலாச்சாரத்தின் அடையாளமாகும்?

    மத எல்லைகளைத் தாண்டி, இந்து, முஸ்லீம் மற்றும் சீக்கிய மரபுகள் இணைந்து வாழும் பஞ்சாபின் ஒத்திசைவான கலாச்சாரத்தை இந்தக் கதை பிரதிபலிக்கிறது. ராஞ்சாவின் பாத்திரப் படைப்பு பகவான் கிருஷ்ணரையொட்டி அமைந்துள்ளது. ராஞ்சா மாடு மேய்க்கிறான். கண்ணனுக்கு கோபிகைகள் போல ஹீரின் தோழிகளனைவருடனும் அவன் ஓடி விளையாடுகிறான். கண்ணனுடைய கோபிகைகள் போலவே ஹீரின் தோழிகள் அனைவரும் ராஞ்சாவைக் காதலிக்கின்றனர். ஆனால் அவனோ ஹீரை மட்டுமே காதலிக்கிறான். ராதையின் அச்சுஅசலானவள் ஹீர்.

    ஹீர் – ராஞ்சாவின் காதல் பெரும்பாலும் தெய்வீக இணைப்புக்கான, மனித ஆன்மாவின் ஏக்கத்திற்கான ஓர் உருவகமாக பார்க்கப்படுகிறது. சூஃபித்துவம், சீக்கிய மதம் மற்றும் பக்தி இயக்கங்களின் ஆன்மீக மரபுகளுடன் எதிரொலிக்கும் ஒரு கருப்பொருள் இது.

    18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட வாரிஸ் ஷாவின் ஹீர்-ராஞ்சாவின் பதிப்பு சூஃபி தத்துவத்தில் ஆழமாக ஊன்றியுள்ளது. அலைந்து திரியும் ஃபகீர் (சூஃபி துறவி) – ஆக சித்தரிக்கப்படும் ராஞ்சா இறையுடன் கூடுதலைத் தேடும் ஆன்மாவின் ஆன்மீகப் பயணத்தைக் குறிக்கிறான். காதல், துன்பம் மற்றும் தெய்வீகக் கூடல் போன்ற சூஃபி இலட்சியங்களை உள்ளடக்கிய கதையாக ஹீர் ராஞ்சா விளங்குகிறது.

    ஹீர்-ராஞ்சாவில் வரும் தடைசெய்யப்பட்ட காதல், சமூக எதிர்ப்பு மற்றும் தியாகம் ஆகிய கருப்பொருள்கள் உலகளாவியவை. மத, கலாச்சார பிளவுகளைத் தாண்டி அனைவரின் கருத்தையும் ஈர்ப்பவை. சமூக விதிமுறைகளுக்கு எதிரான காதலர்களின் போராட்டம் – சுதந்திரம், அடையாளம் மற்றும் சத்தியத்திற்கான பரந்த மனித தேடலைச் சுட்டுவதுமாகவும் உள்ளது.

    சாதி பிளவுகள், கடுமையான ஆணாதிக்க விதிமுறைகள் போன்ற ஒடுக்குமுறை சமூக கட்டமைப்புகளுக்கு எதிரான எதிர்ப்பின் அடையாளமாக இந்த கதையை வாசிக்க முடிகிறது. பஞ்சாபில் புழங்கும் பெரும்பாலான நாட்டுப்புறக் கதைகள் அதிகாரத்தின் விமர்சனங்களாக செயல்படுகின்றன. அவற்றுள் ஹீர் ராஞ்சா தொன்மக்கதை முக்கிய அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

    ஹரூன் காலித் தனது எழுத்து நிறத்தால் பஞ்சாபியத்தின் ஓவியத்தை சில புதிய உத்திகளைக்கொண்டு வரைந்துள்ளார். சித்திரத்தின் பன்முகத்தன்மையை நிகழ்த்திக்காட்டுகிறது ஹரூன் காலித்தின் நாவல். கம்பனின் வாழ்க்கைக் கதையையும் ராமாயணத்தையும் இணைத்து ஒரே கதையாக எழுதுவது போன்ற ஓர் உத்தியை இந்நாவலில் கையாண்டுள்ளார். ஒன்று வரலாற்று நாவல், இன்னொன்று பஞ்சாப் மண்ணின் புகழ் பெற்ற காதல் கதை. ராமாயணத்தின் ஒவ்வோர் அத்தியாயத்தையும் அந்த அத்தியாயத்தில் தோன்றும் ஒவ்வொரு பாத்திரத்தின் கண்ணோட்டத்திலும் சொல்வதாகக் கொண்டால் விளையக் கூடிய அற்புதத்தை ஹீர் – ராஞ்சா காவியத்தின் மறுகூறலில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் ஹரூன். செனாப் நதிக் கரையில் நடந்த ஒரு காதல் தொன்மத்தின் முதல் அங்கத்தை செனாப் நதியே கூறுகிறது. கவிதை மொழியும் வரலாற்றுக்குறிப்புகளும் வளமான வாசிப்பனுபவத்தை நமக்கு நல்குகிறது.

    பெரும்பான்மைவாதத்தின் குரல் ஓங்கும்போது அதனை மட்டுப்படுத்தும் பொறுப்பு பெரும்பான்மை சமூகத்தின் அங்கத்தினர்களினுடையது. பெரும்பான்மைவாதத்தால் சிறுபான்மையின் கழுத்து கவ்வப்படும் போது பெரும்பான்மை சமூகத்தினுடைய தாராளவாதிகளின் கைகள் உதவிக்கு வர வேண்டும் என்று உறைக்கத்தக்க விதத்தில் கதையில் ஒரு சம்பவம் சொல்கிறது. ஹரூன் காலித் அவ்வரிகளைத் தம் நாட்டு பெரும்பான்மையர்களுக்கு அறிவுறுத்துவதற்காக எழுதியிருக்கக் கூடும். எல்லையின் இரு புறங்களுக்கும் அறிவுரை பொருந்தும் – புல்லே ஷாவின், வாரிஸ் ஷா-வின் கவிதைகளைப் போலவே!

    From Waris to Heer

    Author : Haroon Khalid

    Publisher : Penguin Random House India

    Price : Rs 499/-

    நன்றி : கனலி

    1. சிஷ்டிகள் இஸ்லாத்தின் முக்கியமான சூஃபிகளின் வரிசையைக் குறிக்கிறது. ஆன்மீகம், அன்பு, சகிப்புத் தன்மை மற்றும் திறந்த உள்ளம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தவர்கள் சிஷ்டிகள். 10ம் நூற்றாண்டில் நவீன ஆப்கானிஸ்தானின் ஹேரத் நகருக்கருகில் உள்ள சிஷ்ட் என்ற இடத்தில் உருவான சூஃபி மரபு என்பதால் சிஷ்டி என்று அடையாளப் பெயர் இந்த சூஃபி குருக்களின் வரிசைக்கு சேர்ந்துவிட்டது. அஜ்மீரின் மொய்னுதின் சிஷ்டி போன்றவர்களால் இந்தியத் துணைக்கண்டம் முழுதும் சிஷ்டி வரிசை பிரபலமடைந்தது. உலகளாவிய அன்பின் செய்தியை ஊக்குவிப்பதற்காக அறியப்படுபவர்கள் சிஷ்டிகள். மத, கலாசார எல்லைகளை மீறுபவர்கள். தொண்டு, மனிதக்குலத்திற்கான சேவை, தன்னலமற்ற பக்தி ஆகியவற்றை வலியுறுத்துபவர்கள். “கவ்வாலி” (சூஃபி பக்தி இசை) அவர்களின் ஆன்மீக நடைமுறைகளில் குறிப்பிடத்தக்கப் பங்கை வகிக்கிறது. ↩︎
    2. காஃபி என்பது இந்தியத் துணைக்கண்டத்தில், குறிப்பாக பஞ்சாப், சிந்த் பகுதிகளில் உருவான சூஃபி பக்தி கவிதை மற்றும் இசையின் ஒரு வடிவமாகும். இது பொதுவாகப் பஞ்சாபி, சிந்தி, சிராய்கி மொழிகளில் எழுதப்பட்டது. காஃபி செய்யுள்களும் கீதங்களும் தெய்வீக அன்பின் கருப்பொருட்களைக் கையாள்பவை. கடவுளுடன் ஒன்றிணைவதற்கான ஏக்கம் இவ்வடிவக் கவிதைகளில் அதிகம் வெளிப்படும். பாபா பரீத், ஷா ஹுசைன், ஷா அப்துல் லத்தீப் பிட்டாய், புல்லே ஷா போன்ற பெருங்கவிஞர்கள் காஃபி வடிவத்தைத் தமது கவிதைகளின் வடிவமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். ↩︎
  • Kashmir’s Transition to Islam – by Ishaq Khan – விமர்சனம்

    வரலாற்று மூலங்களைத் திறந்த மனதுடன் அதே சமயம் விமர்சன பூர்வமாக அணுகுதல் அதிமுக்கியம். இல்லையேல் வெறும் விவாதமாக முடிந்துவிடக்கூடும். கருத்து நிலைகளுக்கேற்றவாறு சாயும் அணுகுமுறை வரலாற்றாளர்களின் பலவீனமாகக் கருதப்படும். என்னுடைய பார்வையில், இஷாக் கான் அவர்களின் Kashmir’s Transition to Islam ஒரு பலவீனமான நூல் என்றே சொல்வேன்.

    இஷாக் கான் இரண்டு பார்வைகளை முன் வைக்கிறார். (1) Syncretism – அதாவது சமயங்களின் சேர்ந்தியங்குதல் – எனும் கருத்தை அவர் நிராகரிக்கிறார். இஸ்லாம் கஷ்மீரின் புராதன கலாசார அம்சங்களை ஏற்றுக் கொண்டதை மாறும் முறை என்று வர்ணிக்கிறார். இஸ்லாமின் இறுதி இலக்கு “ஷரியா” எனப்படும் இஸ்லாமிய உயர் கொள்கைகளே என்கிறார். (2) நந்த் ரிஷியும் அவருக்குப் பின் வந்த ரிஷிகளும் கஷ்மீரியத் என்ற அடையாளத்தை இஸ்லாத்தின் அடிப்படைச் சித்திரத்தின் பின்ணனியில் வரைய வந்தவர்கள்.

    இரண்டு பார்வைகளும் பிரச்னைக்குரியவை. கஷ்மீர தேசியவாதத்தின் அடிப்படை முழுவதையும் “இஸ்லாம்” எனும் ஒற்றை அடையாளத்தில் சுருக்க நினைத்த குழுக்களின் குரல் வலுத்த (“அயல் நாட்டு உதவியுடன் வலுக்க வைக்கப்பட்ட”) தொண்ணூறுகளில் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் – கஷ்மீரக் கலாசாரத்தின் சிறப்பியல்பு என்று கஷ்மீரின் தற்கால சாதாரண நபர்களும் பெருமிதங்கொள்ளும் ஒன்றை மறுக்கிறது. சமயங்களின் ஒருங்கிணைவு என்ற ஒன்றும் இல்லை. பிராமணர்களின் சாதீயத்தால் பாதிக்கப்பட்ட வெகுஜனங்கள் இஸ்லாமைத் தழுவுதலுக்குச் சலுகையாக அவர்களின் முந்தைய கலாசாரத்தின் அம்சங்கள் இணைத்துக் கொள்ளப்பட்டன. இது இறுதியானதில்லை. கஷ்மீரில் இஸ்லாம் மாறும் தன்மையதாக இருக்கிறது. எனவே, சமயங்களின் ஒருங்கிணைவு இலக்கில்லை. இதற்கான தரவுகளை ஆசிரியர் தெளிவாகத் தரவில்லை. நந்த் ரிஷி-யின் பாடல்களில் இருக்கும் இந்து, பௌத்த அடையாளங்களை அவரின் ஆரம்ப காலச் சிந்தனை என்று சுருக்கிவிடும் இஷாக் கான், லல்லா எனும் சைவ சித்தரை முழுவதுமாக இஸ்லாத்தில் பொருத்திக் கொள்கிறார்.

    கங்கைச் சமவெளியில் சாதீய கொடுமைகளுக்கு எதிராக பக்தி இயக்கம் பரவி பதினைந்தாம் நூற்றாண்டுகளில் இஸ்லாத்தின் பரவலை கட்டுப்படுத்தியது என்பதை ஏற்கும் இஷாக் கான், கஷ்மீரில் பக்தி இயக்கம் தோல்வியுற்றது என்று கூறும்போது இஸ்லாம் பிராமணரல்லாத வெகுஜனங்களை அரவணைத்துக் கொண்டதுதான் என்று எளிதில் கூறி விடுகிறார். இதே நிலைமை கங்கைச் சமவெளியில் ஏன் கை கூடவில்லை என்ற கேள்விக்கு பதிலேதும் சொல்லாமலேயே சென்று விடுகிறார் இஷாக் கான்.

    சுல்தான் சிக்கந்தர் இந்துக் கோயில்களை அழித்ததைப் பதிவு செய்யும் ராஜதரங்கிணி நூல் மீது ஆசிரியருக்கு ஏனோ மனத்தாங்கல்! இஸ்லாமிய அரசர்களை காலரீதியாக பெரும்பான்மையான இடங்களில் தெளிவுடன் பதிவு செய்யும் ராஜதரங்கிணியின் விடுபடல்களுக்கு காரணம் கற்பித்தல் எந்த அளவுக்கு வரலாற்று அணுகுமுறை எனத் தெரியவில்லை? சுல்தான் சிக்கந்தரின் சிலை உடைப்புகளுக்கான பழியை புதிதாக மதம் மாறிய முன்னாள் பிராமணர் சுக பட்டர் மீது பழியைப் போடுகிறது ராஜதரங்கிணி! புது இஸ்லாமியராக தமது விசுவாசத்தை நிரூபிக்க சுக பட்டர் செய்த கொடுமைகள் என்று பதிவு செய்யும் ராஜ தரங்கிணி – மீர் அலி சைய்யத் ஹம்தானி-பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்பதற்கு காரணமாக ராஜ தரங்கிணியின் பிராமண ஆசிரியர்களினுடைய மனச்சாய்வு என்கிறார் இஷாக் கான். ஆனால் சைய்யத் ஹம்தானியின் புதல்வர் – முகம்மது ஹம்தானி கஷ்மீருக்கு வந்து, சுல்தானுடைய சபையின் அங்கமாக இருந்ததை ஜோனராஜா (ராஜ தரங்கிணியின் ஆசிரியர்களுள் ஒருவர்) கூறுவதை மேற்கோள் காட்டுகிறார்.

    லல்லா குறித்தும் ராஜ தரங்கிணி மௌனம் சாதிப்பதை சதி என்ற நோக்கில் நோக்குகிறார் இஷாக் கான். லல்லா குறித்து வரலாற்று ரீதியாக நமக்கு அறியத்தருபவை இஸ்லாமியர்களின் குறிப்புகளே என்பது உண்மைதான். இந்த கூற்று ஒன்றை வைத்துக் கொண்டு லல்லாவை இஸ்லாமுக்கு நெருக்கமானவர் என்று புத்தகம் முழுதும் கூறிச் செல்கிறார். 17ம் நூற்றாண்டின் இஸ்லாமிய குறிப்பாளர்கள் ஹைதர் மாலிக் சதுரா, ஹஸன் பின் அலி கஷ்மீரி போன்றவர்களும் லல்லா பற்றி எதுவும் சொல்லவில்லை. அதைப் பற்றி இஷாக் கான் வாய் திறக்கவில்லை.

    லல்லாவை இஸ்லாமுக்கு நெருக்கமானவர் என்று காட்டுவதற்கு அவர் தரும் ஆதாரங்கள் தொன்மங்களின் அடிப்படையிலானவை. தொன்மங்களைக் கேள்விக்குட்படுத்தவேயில்லை இஷாக் கான். முகம்மது ஹம்தானியை குருவாகக் கொண்டிருந்தவர் என்ற இஸ்லாமியர்களின் தொன்மக்கதையை ஐயமின்றி ஏற்றுக் கொண்டுவிடும் இஷாக் கான் ஶ்ரீ காந்த சித்தர் என்பவரை லல்லேஸ்வரியின் குருவாகக் கூறும் இந்துக்களின் தொன்மங்களை கண்டும் காணாமல் விட்டுவிடுகிறார்.

    லல்லாவின் கருத்துகளைத் தமக்கிஷ்டமான வகையில் வளைத்துக் கொள்ளும் இயல்பும் நூல் முழுக்கக் காணக்கிடைக்கிறது. உதாரணத்திற்கு, பக்கம் 75இல் கீழ்க்கண்ட லல்லாவின் வாக்- மேற்கோள் காட்டப்படுகிறது –

    “வெட்கத்தின் தளைகளை உடைத்தெறிவது எப்போது?
    ஏளனத்தை கேலியை அலட்சியம் செய்வது எப்போது?
    தகுதியின் உடைகளை நிராகரிப்பது எப்போது?
    என் மனதை ஆசைகள் தாக்கிக் கொண்டிருந்தால்”

    இஷாக் கான் அவர்களுக்கு மேற்சொன்ன வாக் – லல்லா வாழ்ந்த காலத்தின் சமூக வேற்றுமைகளை விவரிக்கிறதாம்!

    இன்னொரு உதாரணம் – பக்கம் 74

    “சிவன், எங்குமுள்ள, அனைத்திலும் உறைகிறான்
    எனவே, இந்துவையும், முஸ்லீமையும் பிரித்துப் பார்க்காதீர்
    ஞானமுண்டெனில் உம்மை அறிக
    பிரபுவின் உண்மை ஞானம் அதுவே”

    இஷாக் கானின் கருத்துப்படி மேற்சொன்ன வாக் பிராமணர்களைத் தாக்குகிறதாம்! சடங்கியல்கள் மட்டுமே அறியாமையைத் தெளிவிக்காது – என்ற கருத்து உபனிடத காலப் பழசு என்பதை இஷாக் கான் அறியாதவர் போலிருக்கிறது.

    புழங்கும் தொன்மக் கதைகளின்படி, தன்னுடைய மானசீக குருவாக வரித்துக் கொண்ட லல்லாவை அவதாரம் என்கிறார் நூருத்தின் எனும் நந்த் ரிஷி தன்னுடைய ஒரு பாடலில் –

    “பத்மன்புராவின் அந்த லல்லா
    திருப்தியடையும் வரை தெய்வீக அமுதைக் குடித்தவள்
    எங்களுக்கு அவதாரம் அவள்
    கடவுளே, அதே ஆன்மீக ஆற்றலை எனக்கும் அளித்தருள்!” – பக்கம் 77

    அதே பக்கத்தில் இஷாக் கான் கூறுவது –

    “That Lalla, as an ardent lover of Siva, succeeded in reviving Saivism is an argument belied by the very silence of our Saivite chroniclers and poets of her near-contemporary and later times. What is, however, of significance to remember from the viewpoint of social history is the historical dimension of her elevation to avatar by a devout Muslim like Nuruddin”

    இந்தப் பத்தியில் வெளிப்படும் முரண்களைப் பாருங்கள்! சைவத்தின் மறுமலர்ச்சியில் லல்லா வெற்றி பெறவில்லை என்று உறுதிபடக் கூறும் இஷாக் கான் அதற்களிக்கும் ஆதாரம் அவளின் சமகாலக் குறிப்பாளர்கள் அவளைப் பதிவு செய்யாததைக் குறிப்பிடுவது! அவளை “அவதாரம்” என்று நூருத்தின் எனும் ஆசாரமான முஸ்லீம் புகழ்வது சமூக வரலாற்றுப் பரிமாணத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது என்று இஷாக் கான் ஜிலேபி சுற்றுவதைத் தான் கஷ்மீர சமூகவியலாளர்கள் “Syncretism” என்கிறார்கள்.

    நந்த் ரிஷி இஸ்லாமிய சூபி என்பதற்கு மறு கருத்தில்லை. ஆனால், இரண்டாம் தலைமுறை இஸ்லாமியர் என்ற முறையில் அவருடைய தந்தையின் முதல் மதத்தின் தொப்புள் கொடி உறவு அவரின் கவிதைகளில் வெளிப்படுவதை “ஆரம்பகாலம்” என்று கூறுவது நந்த் ரிஷியின் சமயச்சேர்ந்தியல் இலக்கை மறுப்பதாகும். கால வரிசை அடிப்படையிலான நந்த் ரிஷியின் பாடல்கள் தொகுப்பு இன்று வரை வெளிவரவில்லை எனும் போது தமது ஊகத்தை ஒரு வரலாறாக கட்டமைப்பது பிழையான அணுகுமுறை.

  • இறைத்தோட்டம்

    ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமிய சிந்தனைகளையும் ஆளுமைகளைப்பற்றியும் தினம் ஓரிரு குறிப்புகளாக ஃபேஸ் புக்கில் பதிந்தேன். அதைத் தொகுத்து நண்பர் Uvais Ahamed அவர்களுக்கு சில மாதங்கள் முன் அனுப்பியிருந்தேன். இரு வாரங்கள் முன் என்னைத் தொடர்பு கொண்டு தொகுப்பு நூல் வடிவில் தயாராகிக் கொண்டிருக்கிறது எனும் செய்தியைத் தெரிவித்து ஆச்சரியத்திலாழ்த்தினார்.

    “இறைத்தோட்டம்” நூலை சென்னை புத்தக சந்தையில் வாங்கலாம். சீர்மை பதிப்பக வெளியீடு.

    கணேஷ் வெங்கட்ராமன் மதங்களின் வரலாறுகள், அவற்றின் பொதுத்தன்மைகள் என்ற கருத்துலகில் சஞ்சரிப்பதில் விருப்பங்கொண்டவர். புத்த மதம் பற்றிய அவரின் புத்தகத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இஸ்லாத்தையும் அதன் கோட்பாடுகளையும் நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட ஒருவரின் பார்வையிலிருந்து ஆராய்வதில் ஆர்வம் காட்டிவருகிறார். இஸ்லாமிய வரலாறு, தொன்மங்கள், அறிவாளுமைகள் என இஸ்லாத்தின் வண்ணமயமான நாகரிகப் பங்களிப்புகளைப் பற்றி சுருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் ரம்ஜான் மாதம் முழுக்க எழுதியவற்றின் தொகுப்பு இது.

    (பின்னட்டை குறிப்பு)