Tag: அற்புதம்

  • நெல் குத்தும் ஞானப்பதம்

    நண்பர் நிஷா மன்சூர் வாட்ஸப்பில் ஒரு மின்னூலைப் பகிர்ந்ந்திருந்தார். அவருடைய தந்தை வழி பூட்டனார் எழுதிய ஒரு கவிதை நூல். “நெல் குத்தும் ஞானப்பதம்” என்பது அதன் தலைப்பு. தமிழ் சிற்றிலக்கிய மரபு, தமிழர்களின் வாழ்வியல், இஸ்லாமிய மெய்ஞானம் – மூன்று அம்சங்களும் கலந்து எழுதப்பட்ட இந்தப் பாக்களை இசைக்கத்தக்க வகையில் இயற்றியுள்ளார் இதன் ஆசிரியர். கவிதைகளின் ஆரம்பத்தில் “இராகம் செஞ்சுருட்டி தாளம் ஆதி” என்று குறிப்பிடப்படுகிறது. யாரேனும் இதை சங்கீதமாகப் பாடியிருக்கிறார்களா என்று தெரியவில்லை என்கிறார் ஆசிரியரின் கொள்ளுப் பேரன் நிஷா மன்சூர்.

    நெல்லுக்குகுத்துகிற பதத்தே நான்
    சொல்லிவாரெனந்த விதத்தை யினி
    அல்லும்பகலும் துற்குணத்தே நீக்கி
    வெல்லு அஜாசீல்மும்மலத்தே வாசி
    ஹாஹா சரம் மாத்திக்குத்தடி ஹுஹு திக்கிர்
    முழக்கிக்குத்தடி ஹீஹீ

    அல்லாஹுவென்ற ஜோதி றப்பில்
    ஆலம்மீனாம் பிரக்யாதி கல்பு
    தில்லாலும் நாவால் ஓதி ஹக்கை
    தினந்துதிப்பதே நீதி வாசி
    ஹாஹா சரம் மாத்திக்குத்தடி ஹுஹு திக்கிர்
    முழக்கிக்குத்தடி ஹீஹீ

    நூலின் முகவுரையில் இக்கவிதைகள் எழுதப்பட்டதன் பின்னணி விளக்கப்ப்டுகிறது.

    “வேலைக்காரப் பெண்கள் உஸ் உஸ் என்ற பெருமூச்சுடன் உலக்கை மாரி மாரி நெல் குத்துவதைக் கண்ணுற்ற உ.அஸன் முகமது றாவுத்தர் இவ்வளவு மூச்சு வீணில் போகிறபடியால் என்ன விதமான வேலைகள் செய்யும் போது மூச்சிலும் ஆண்டவனை திக்கீர் செய்வதெப்படி என்று கேட்டதற்காக அந்த நிமிஷமே பாடலாகக் கோர்வை செய்ப்பட்டது.”

    நான் அடிக்கடி செல்லும் ஷிர்டியில் த்வாரகா மாய்-யில் காணப்படும் அரைகல்லை நினைவு கூர்ந்தேன். ஷிர்டி நாதரின் வாழ்வில் நிகழ்ந்த அந்த அரை கல் சம்பந்தப்பட்ட அற்புதங்களின் பின்னணியில் இருக்கும் மறைஞானமும் நெல் குத்தும் ஞானப்பதம் கூறும் ஞானமும் ஒரே அடிப்படையிலிருந்து எழுவது என்று யோசிக்கலானேன்!

    1930களில் ராமநாதபுரத்தில் பதிப்பிக்கப்பட்ட இச்சிறு நூல் ஏறத்தாழ நாற்பது அடிகளைக் கொண்டுள்ளது. இதுபோல பத்து மடங்கு படைப்புகளை நண்பரின் பூட்டனார் – ஹக்கீம் பீ அய்யூபு சாஹிப் அவர்கள் – எழுதியுள்ளாரெனத் தெரிகிறது. அவற்றை ஒழுங்குபடுத்தி ஒரு முழு நூலாகக் கொண்டுவரும் திட்டம் உள்ளதாகச் சொல்லுகிறார் நிஷா. நூலாகக் கொண்டுவருமுன் கர்நாடக இசையில் ஒரு இசைத்தட்டு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபடுங்கள் என்று நான் சொன்னேன்.

  • 23/4/2021

    வெட்டி உரையாடல்கள், எப்போதாவது சில நண்பர்களுடைய அறிமுகம் என நடைமுறை வாழ்க்கையில் காணும் அனுபவங்களை ஒத்தவாறு சுவையற்றதாகவே சமூக வளைதளங்களில் நேரம் கழிந்து வந்தது. இடும் கருத்துகள் ஏதோ இந்தவுலகை மாற்றியமைக்கப்போவது போலக் கூவுதற்கும் சொந்த வாழ்க்கையின் முன்னேற்றங்களை பறைசாற்றிக் கொள்வதற்குமான அரங்காக மட்டுமே சமூக வளைதளங்களைப் பயன்படுத்தி வந்த எனக்கு அவற்றுக்கு உயிர் காக்கும் வல்லமை உண்டு என்ற நேரடி அனுபவத்தைத் தந்த நாள் 23/4/2021.

    கொவிட் பாசிடிவாகி ஏழு நாட்களாகியிருந்தன. ஜூரம் குறையவில்லை. 22ந்தேதி நடுஇரவு SPO2 தொண்ணூறாக குறைந்துவிட்டது. இரண்டு மணி நேரம் கழித்து 86. மனைவிக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. சில பெரிய மருத்துவமனைகளுக்கு போன் செய்தாள். மருத்துவமனைகள் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன. ஆக்ஸிஜன் படுக்கை கிடைக்குமா என்று கேட்டவுடன் இல்லை என்ற ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லி லைனை கட் செய்தார்கள். ஊரில் நண்பர்களுக்கு போன் செய்து என் காதில் விழாவண்ணம் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தாள். கையைப் பிசைந்து கொண்டிருந்தாள். என் ஜுரத்தை விட அவளின் அவஸ்தை எனக்கு மிகுந்த சங்கடமளித்தது.

    நண்பர் ஒருவரை அழைத்துக் களைத்துப் போயிருந்த குரலில் மெதுவாகப் பேசினேன். தொண்டை வறண்டு போயிருந்தது. அவரின் பதிலை கண்ணை மூடிக்கொண்டே கேட்டேன். தற்போதைய சூழ்நிலையில் மருத்துவமனை கிடைப்பது அரிது என்றார். அவருக்கும் கொவிட் பாசிடிவ். ட்வீட் செய்கிறேன் என்று அவர் சொன்ன போது அவநம்பிக்கையோடு தான் போனை வைத்தேன். ஆனால் முற்றிலும் எதிர்பாராதபடி என் நண்பர் இட்ட சின்ன டிவிட்டர் நிலைத்தகவலை படித்துவிட்டு அறிமுகமில்லாத அரசியல் பிரமுகரின் தொண்டர் ஒருவர் அதிகாலை ஐந்து மணிக்கு தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டார்.

    படுக்கைத் தட்டுப்பாடு நிலவிய இரண்டாம் அலை நாட்களில் நடுத்தர அளவிலான மருத்துவமனையில் எனக்கு இடம் கிடைத்ததையும்,

    ஸ்கேனிங் சென்டரில் மிக நீண்ட க்யூ வரிசையில் நான் நின்றிருந்த போது அந்தத் தொண்டர் போனில் யாருடனோ பேசி என்னுடைய முறை உடனடியாக வரும்படி செய்ததையும்,

    விதிமுறைக்கெதிராக மார்பு ஸ்கேன் ரிப்போர்ட் வரும் முன்னதாகவே (CT Severity Score 17/25) மருத்துவமனை என்னை அனுமதித்துக் கொண்டதையும்,

    அனைத்து மருத்துவமனைகளிலும் பிராண வாயு சிலிண்டர்களின் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்த வேளையில் நான் படுத்திருந்த சிறு மருத்துவமனைக்கு மட்டும் ஒரு சின்ன லாரி நிறைய சிலிண்டர் கிடைத்ததையும் –

    அற்புதம் என்ற சொல்லினாலன்றி வேறெந்த சொல்லால் குறிப்பது? நன்றியுணர்வு ஆன்மாவின் மது என்பார் ரூமி. என் உயிர் காக்கப்பட்ட நன்றியுணர்வின் போதை என் வாழ்நாளெல்லாம் நீடித்திருக்கும்.

    ட்வீட் செய்த நண்பர் பெயர் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால் அவர் பெயரை இங்கே குறிப்பிடவில்லை.