Blog

  • அத்தி பூத்தது

    யாரோ எழுப்பிவிட்டது போல ஆறு மணிக்கே எழுந்துவிட்டேன். வார நாட்களில் கூட ஏழரை அல்லது எட்டு மணிக்கு குறைவாக எழும்பிய ஞாபகம் இல்லை. ஞாயிற்றுக்கிழமைகளில் ஒன்பதறைக்கு முன்னர் எழுந்ததாக சரித்திரமே இல்லை. இன்று என்னவோ சீக்கிரம் விழித்துவிட்டேன்.

    இயற்கையின் அழைப்பு வரும்போது தூக்கத்திலிருந்து எழுந்து சிறுநீர் கழித்து பின்னர் படுக்கைக்கு திரும்பி தொடர்ந்து தூங்குதல் நிறைய நாள் நடந்திருக்கிறது. இன்றும் அப்படிதான் நினைத்தேன். சிறுநீர் கழித்தவுடன், என்ன தோன்றியதோ பற்பசையையும் பிரஷ்ஷையும் எடுத்து பல் துலக்கினேன். பல் துலக்கிவிட்டேனென்றால், அந்த நாள் துவங்கிவிட்டது என்று அர்த்தம்.

    மனைவி போர்வையால் முகத்தை மூடி உறங்கிக்கொண்டிருக்கிறாள். குழந்தைகள் அவர்களின் அறையில் தூங்கிக்கொண்டிருந்தார்கள். கைத்தொலைபேசியில் மின்னஞ்சல்கள் ஏதாவது வந்திருக்கிறதாவென பார்த்தேன். ட்விட்டரில் முகம் தெரியாத நண்பர்களுக்கு காலை வணக்கம் சொன்னேன். அப்புறம் என்ன செய்வது என்று தெரியவில்லை. இதற்குத்தான், தினமும் சீக்கிரம் எழுந்து பயிற்சி இருக்கவேண்டும்.

    இன்று புத்தாண்டின் முதல் நாள். வாழ்த்து சொல்கிறேன் பேர்வழியென்று மனைவியை எழுப்பலாமா என்று யோசித்தேன். அதற்கு வாய்ப்பு இல்லை. நள்ளிரவு வரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப்பார்த்துவிட்டு “ஹாப்பி நியு இயர்” சொல்லிவிட்டுதான் தூங்கினோம்.

    குழந்தைகளை எழுப்பினால், இன்று பள்ளி லீவு பின்னர் ஏன் சீக்கிரம் எழுந்துகொள்ளவேண்டும் என்று கடுப்புடன் ஒரு லாஜிக் சொல்லிவிட்டு போர்வை இழுத்து போர்த்திக்கொள்வார்கள்.

    வீட்டின் நிசப்தத்தை தொலைக்காட்சியை போட்டு குலைக்க எனக்கு மனமில்லை. இத்தனை ”அதிகாலை” யாருக்கும் தொலைபேசியில் பேசி பழக்கமில்லை. தொலைபேசியில் நண்பர்களுக்கு “ஹாப்பி நியு இயர்” சொல்ல மதியம் 12மணி வரை காத்திருக்கவேண்டும்.

    யோசனையை நிறுத்தும்படி, ஒரு கைத்தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. இவ்வளவு சீக்கிரம் யார் போன் செய்கிறார்கள்? என் அம்மாதான் பேசினாள். அவளின் பிறந்த நாள் வாழ்த்துகளை தூங்கும் குரலில் பேசி ஏற்றுக்கொண்டே பழக்கமாகிப்போன எனக்கு, இன்று விழிப்புடன் பேசுவது த்ரில்லாக இருந்தது. “ஏண்டா ரொம்ப நாளாக போன் செய்யவில்லை” என்ற வழக்கமான பாட்டை பாடினாள், “வேலைப்பளு தான் காரணம்” என்று சொன்னேன். புத்தாண்டின் முதற்பொய்.

    போனை வைத்த பிறகு, பொய் சொன்ன பாரத்தோடு இருந்தேன். பின்னர், பாதி படித்து வைத்திருந்த நாவலை படிக்க முயன்றேன். முடியவில்லை. நாவல் படிப்பது என்றால், இரவுத்தூக்கத்துக்கு முன்னர் என்று ஆகிவிட்டது. மற்ற நேரங்களில் எதுவும் படிப்பது இல்லை.

    எட்டு மணிவாக்கில் மனைவி எழுந்திருப்பாள். பின்னர், காபி கிடைக்கும். குழந்தைகள் எழுவார்கள். அவர்களுடன் கொஞ்ச நேரம். பின்னர், தொலைக்காட்சி உயிர் பெறும். செய்தித்தாள்களின் பக்கங்கல் புரட்டப்படும். குளிக்காமலேயே மதியவுணவு. பின்னர் குளியல். அதற்குள், சாயந்திரமாகிவிடும். யோசிக்கும்போது, ஒரு மிஷின் மாதிரி, ஒரே மாதிரி என் ஞாயிற்றுக்கிழமைகள்.

    இன்றாவது, சாவி கொடுக்கப்பட்ட பொம்மை போல இயங்காமல், பிரக்ஞையோடு ஏதாவது உருப்படியானவற்றை செய்யவேண்டும். அம்மாவிடம் பொய் சொல்லி புத்தாண்டின் முதல் தினத்தை துவங்கியாயிற்று. இல்லை. போக்கை விரும்பும்வகையில் மாற்றிக்கொள்ளும் ஆற்றல் என்னிடமிருக்கிறது. என்ன செய்யலாம்?

    ஹும்ம்ம்….என் மனைவி எழுவதற்குமுன்னர், காபிக்கு டிகாக்‌ஷன் போட்டு வைக்கப்போகிறேன்…..

    புத்தாண்டு வாழ்த்துகள்!……….

  • சமரசம்

    சுவரேறி குதித்து

    தனியார் நிலமொன்றில்

    தெருவோரக்கிரிக்கெட்

    விளையாடினார்கள் சிறுவர்கள்.

    மட்டைக்குரிமையாளனே

    முதலில் மட்டை பிடிப்பான்.

    அவ்வளவு எளிதில்

    ஆட்டமிழப்பதுமில்லை.

    ஒங்கி அடித்தான் பந்தை.

    சுவரைத்தாண்டி

    ரோட்டில் விழுந்தது.

    பந்து சுவரைத்தாண்டிப்போய் விழுந்தால் அவுட்.

    ஆட்டமிழக்கவிருப்பமில்லை மட்டையாளனுக்கு.

    தானே அம்பயராக வேண்டுமென்று

    அடம் பிடிக்க ஆரம்பித்தான்.

    அவன் கருத்துப்படி

    அவன் “நாட் அவுட்”

    அவனைப்பெவிலியனுக்கு

    அனுப்ப பேச்சு வார்த்தை துவங்கியது.

    ரோட்டில் விழுந்து

    லாரியொன்றின்

    டயரில் சிக்கி நசுங்கிப்பொயிருந்த பந்தை

    எடுத்துவந்தான் ஒரு பீல்டர்.

    ஆட்டம் தொடர வேறொரு பந்து வேண்டும்.

    வேறொரு பந்து வாங்கிவர

    மட்டைக்குரிமையாளனை

    வேண்டிக்கோண்டார்கள்.

    அவன் இன்னொரு பந்து கொண்டுவந்தால் போதும்.

    மூன்று முறை அவுட் ஆவதுவரை

    மட்டை பிடிக்கலாம்.

    அவன் அவுட் ஆனானாவென்று

    அவன் தான் அம்பயராக இருந்து முடிவெடுப்பான்.

    கொடுக்கப்பட்ட சலுகைகளை

    பெரியமனது பண்ணி ஏற்றுக்கொண்டு

    கடைவீதி வரை சென்றான் மட்டையின் உரிமையாளன்.

    அவன் திரும்பிவரும்வரை

    அவன் விட்டுப்போயிருந்த

    மட்டையில்

    சிறுகற்களை அடித்து பயிற்சி செய்தார்கள் மற்ற சிறுவர்கள்.

  • குன்றின் உச்சியில்…

    முழுதும் மொட்டையடிக்கப்பட்ட

    ஒற்றைக்குன்று

    அதன் உச்சியில்

    ஒரே ஒரு மரம்.

    குன்றின் பின்னிலிருந்து

    உதித்துக்கொண்டிருந்த

    சூரியனின் கதிர்களை

    மறைத்தது

    உச்சியில் இருந்த ஒற்றை மரம்.

    +++++

    மருந்துக்கு

    ஒரு புல் கூடமுளைத்திருக்கவில்லை.

    குன்றின் சொறசொறப்பான உடம்பை

    இறுக்கப்பற்றி ஏறிக்கொண்டிருக்கையில்

    கைகள் சிவந்துபோயின.

    சில இடங்களில்

    கல்குவாரிக்காரர்கள் ஏற்படுத்திய

    வழுவழுப்பில்

    கால்கள் வழுக்கினாலும்

    கரங்கள் சுகம் பெற்றன.

    சற்றுநேரத்தில்

    சூரியன் மரத்திற்கு பின்னிலிருந்து

    உயர எழுந்து

    கண்ணைக்கூசவைத்தது.

    கூசிய கண்களை

    சுருக்கியபடி

    ஏறி உச்சியை அடைந்தேன்.

    +++++

    சூரியனை

    புறக்கணித்தவாறு

    முதுகைக்காட்டி

    நின்றிருந்தேன்.

    எதிரே விரிந்திருந்த

    சமவெளியின் காட்சி

    கண்ணை நிறைத்தது.

    பல மைல்களுக்கு

    நீண்டு,

    வெயில் காயும்

    கரும்பாம்பு போன்றதொரு

    பிரமிப்பை தந்த

    நெடுஞ்சாலை.

    அதன்மேல்

    எறும்புகள் போல்

    ஊறிக்கொண்டிருந்தன

    சின்னதும் பெரியதுமான

    ஆட்டோமொபைல் வாகனங்கள்.

    கொஞ்சம் தள்ளி

    பெரும் ஆற்றின் திசையை

    மாற்றிய பெருமிதத்தோடு

    மல்யுத்தவீரன் மாதிரியான தோற்றத்தில்

    பிரம்மாண்டமானதொரு அணைக்கட்டு.

    இன்னொரு புறத்தில்

    ராட்சத குழாய்கள் வழியே

    புகை கக்கிக்கோண்டிருந்த

    இரண்டு தொழிற்சாலைகள்.

    +++++

    அடிவாரத்தில்

    சாலையோரக்கடையொன்றில்

    அமர்ந்தபடி

    குன்றின் உச்சியை அண்ணாந்து மீண்டும் பார்த்தேன்.

    குன்றின் பரப்பை

    மதிய சூரியன்

    சுட்டெரித்துக்கொண்டிருந்தது.

  • காட்சி –> சிந்தனை –> கருத்து?

    வெண்மணல்.

    உடைந்த சிறுசிறு கண்ணாடித்துண்டுகள்.

    காயாத செந்நிற திரவம்.

    ஒர் இறுக்கமான ஒவியத்தின்

    சாத்தியக்கூறுகள்.

    திருட்டுத்தனமாக

    புகைக்க வந்த சிறுவன்

    மணல்மேட்டில்

    சிதறிக்கிடந்த

    கூறான கண்ணாடித்துண்டுகளை

    கவனிக்காமல்

    தடுக்கிவிழுந்திருக்கலாமோ?

    ஆற்றோரமாயொரு சமயவிழாவில்

    நடந்த குரூரமான

    வன்முறையின்

    குறியீடோ?

    காதலனொருவன்

    காதலியின் மேல்

    சிவப்புநீரடித்து

    ரகசியமாக

    “ஹோலி” கொண்டாடுகையில்

    உடைந்துபோன

    வெண்ணிற வளையல்துண்டுகளோ?

    உரிமம் பெறாத

    மருத்துவர் செய்த

    கருக்கலைப்புக்கான

    ஆதாரங்களின்

    குவியலோ?

    +++++

    மணற்புயலுருவாகி

    மணல் மூடி

    கண்ணாடித்துண்டுகள் மற்றும்

    செந்நிற திரவம்

    மறைந்து போயின.

    +++++

    விழியிலிருந்த காட்சி

    சிந்தனைகளாக உருமாறின.

    சிறுவனின் கள்ளம்,

    வன்முறை தூண்டும் மதங்கள்,

    ரகசியக்காதல்கள்,

    நெறிமுறையற்ற உத்தியோகங்கள்

    எனப்பல சிந்தனைகள்.

    சிந்தனைகளும் விரைவில்

    உருமாறக்கூடும்….

    கருத்துகளாக!

  • ஒர் ஆப்பிளும் ஆறு விதைகளும்

    பழத்தில் உள்ள விதைகளை

    எண்ணுதல் எளிது.

    விதைக்குள் இருக்கும் பழங்களை

    எண்ணுவது எப்படி?

    +++++

    அறுத்துவைத்த ஆப்பிளுக்குள்

    இருந்த விதை ஆறு !

    பத்திரப்படுத்தி வைத்திருந்த

    விதைகளைக் கவர்ந்ததாரு?

    என்னிடமிருப்பது ஒரே ஒர் ஆப்பிள்.

    விதைகளை கொண்டு தாரும் !

    கடைசி ஆப்பிளை தரவும் சம்மதம்.

    விதையிருந்தால் போதும்.

    +++++

    காணாமல்போன விதைகளைத்தேடி

    கானகம் வரை வந்துவிட்டேன்.

    நிறைய மரங்கள் !

    என் வீட்டிலிருந்து

    களவு போன விதையிலிருந்து

    எந்த மரம்

    முளைத்தது?

    யாராவது சொல்லுங்கள் !

    +++++

  • நண்பனின் மரணம்

    மும்பையில் என் நண்பன் – நினாத் – உயிரிழந்துவிட்டான். பூனாவிலிருந்து இன்னொரு நண்பன் போன் செய்துசொன்னான். எதாவது வம்புக்காக மட்டும் போன் செய்து கொஞ்சம் "போர்"அடிக்கும் பூனா நண்பனின் தொலைபேசி அழைப்பை நிறைய நேரம் எடுக்காமல் இருந்திருக்கிறேன். இன்று நான் அப்படி செய்யவில்லை. எடுக்காமல் விட்டிருக்கலாமோ? இல்லை இன்று என்றில்லை, நினாத் (Ninad) தின் மரணச்செய்தி எப்போது எட்டியிருந்தாலும், இன்றைய மாலையில் எனக்குள் ஏற்படுத்திய அதே அதிர்ச்சியை மாறாமல் தந்திருக்கும்.

    இறக்கும் வயதல்ல நினாத்துக்கு. 35 வயதுதான் ஆகியிருக்கும். அவனின் அழகான சிரிப்பு அவனது இம்மியளவு கூட தீங்கற்ற மனப்பாங்கை பிரதிபலிக்கும். களங்கமற்ற குழந்தை மனதுதான் அவனுக்கு என்பது மிகையில்லாத வருணனை. அவனை தெரிந்தவர்கள் எல்லாரும் இதை ஒப்புக்கொள்வார்கள்.

    ஐந்து வருடங்கள் நானும் நினாதும் சேர்ந்து ஒரே நிறுவனத்தில் பணி புரிந்தோம். கல்லூரியிலிருந்து வெளிவந்து வேலையில் சேர்ந்த வாலிபனாக அவனை நான் அறிவேன். நிறுவனத்தில் திடீரென்று பெருந்தலைகள் வேலையை விட்டபோது, நாங்கள் இருவரும் ஒரே அணியில் இணைந்து இரவு பகல் என பேரார்வத்துடன் பொறுப்புடன் பணிபுரிந்த தினங்கள் எனக்கு ஞாபகமிருக்கிறது.

    நிறுவனத்தலைவர் மேல் அவ்வப்பொழுது எழும் வெறுப்பை இருவரும் மதியவுணவு சேர்ந்து உட்கொள்ளும்போது பகிர்ந்துகொள்வது வழக்கம். அப்போதெல்லாம், நினாத் புன்னகை வழிய "நீ சொல்லு…நாளைக்கே இருவரும் சேர்ந்தே வேலையை ரிசைன் பண்ணிவிடுவோம்" என்று சொல்வான். அப்போது அவன் திருமணமாகாத பிரம்மச்சாரி. எனக்கோ இருகுழந்தைகள் பிறந்திருந்தன. எனவே இந்த சம்பாஷணை ஒரு நகைச்சுவைக்காக மட்டுமே என்று இருவருமே அறிந்திருந்தோம். வேடிக்கை என்னவென்றால், அவன் நகைச்சுவைக்காக சொன்னது உண்மையாகவே நடந்தது. ஜூலை 2008 இல் எங்கள் இருவருக்கும் ஒரே சமயத்தில் வேறு நல்ல வேலை கிடைத்தது. எனக்கு தில்லியில். அவனுக்கு பெங்களூரில். ஒரேசமயத்தில் ராஜினாமா கடிதத்தை தந்தபோது, "என்ன பேசிவைத்துக்கொண்டு ராஜினாமா செய்கிறீர்களா?" என்று நிறுவனத்தலைவர் கேட்டார். அறையிலிருந்து வெளிவந்ததும், நானும் அவனும் சேர்ந்து பலநிமிடங்கள் சிரித்தோம்.

    நாங்கள் வேலை மாறிய பிறகு எங்கள் தொடர்பு இன்னும் வலுப்பட்டது. எங்கள் புதுவேலைகளின் அவஸ்தைகள், போராட்டங்கள் எல்லாம் நீண்ட தொலபேசியுரையாடல்களில் பரிமாறிக்கொண்டிருப்போம். முன்று வருடங்கள் முன்னர் அவனின் திருமணம் நடந்தது. அலுவலகப்பணி தொடர்பாக ஓர் அயல்நாட்டு விஜயம் மேற்கொண்டதால், அவனுடைய திருமணத்துக்கு போகமுடியவில்லை. பின்னர் அவனுடைய நிறுவனம் அவனை மும்பைக்கு இடமாற்றம் செய்யச்சொன்னது. அலுவலகப்பணிக்காக எப்போது மும்பை சென்றாலும், நினாதும் நானும் எங்களுடைய வாடிக்கையான காபி ஷாப்பில் மணி நேரங்கள் உட்கார்ந்து அரட்டை அடிப்பது வழக்கம். கடைசியாக அவனை சந்தித்தது அக்டோபர் 2010 இல். அவனுடைய இரண்டு மாதக்குழந்தை -ஆரவ்-வை தூக்கிக் கொஞ்சியதை இப்போது நினைக்கும்போது நெஞ்சுக்குழியில் இனம்புரியா சங்கடம்.

    நண்பா, உனக்கேன் அவசரம் ! வாழ்வை நகைச்சுவை, ரசனை, கும்மாளம் என்று வாழத்தெரிந்த உனக்கு, இவ்வளவு சீக்கிரமாக உலக வாழ்வை நீங்கும் அவசரம் ஏன்? பக்தி (நினாத்தின் இளம் மனைவி) யையும் ஆரவ்-வை யும் நினைத்தால், உன் மரணத்தின் மேல் கண்ணீரோடு, கோபமும் சேர்ந்து வருகிறது. கொடூரமான மரணத்தின் செயல் முறைகளை புரிந்துகொள்ளமுடியவில்லை.

  • உண்மை ஓர் பிரச்னை

    உண்மை

    ஒர் பிரசினை.

    இரக்கமற்றது.

    நிம்மதியை குலைப்பது.

    எல்லா பக்கங்களிலும்

    நம்மை வளைத்து

    என்ன இருக்கிறது

    என்று வலுக்கட்டாயமாக

    காட்டுகிறது ; பார்க்கவைக்கிறது.

    மொத்தமாக,

    உண்மை எரிச்சலூட்டுவது.

    (translation of a paragraph from "Conversation with the God" written by Neale Donald Walsch)

  • ராஜினாமா

    Resignationவெளியேறும்

    எண்ணம் வந்தது.

    இருக்கையிலிருந்து

    எழ முயலும்போது

    கை கட்டப்பட்டது

    பொன் விலங்கோ?

    மஞ்சள் நூலோ?

    பொருட்படுத்தாமல்

    கையை உதறி

    எழுகையில்

    அழுகை சத்தம்.

    போகாதே !

    என்னை விட்டு போகாதே !

    மேலதிகாரியின்

    குரலென அறிவதற்கு

    கொஞ்ச நேரம் பிடித்தது.

    எங்களை விட்டு போகாதே

    இது அதிகாரியின் அதிகாரி.

    சபாஷ்!

    எல்லாருக்கும்

    நான் எழும் சத்தம் கூட

    தெளிவாக கேட்கிறது.

    என் குரல் பழையபடி

    கேட்க முடியாதவாறு

    இவர்கள் செவிகள்

    மீண்டும் பழுதுபடுமுன்

    இங்கிருந்து விலகுதல் சிறந்தது.

  • ஓர் உண்மையின் கதை


    ஒளித்துவைக்கப்பட்டிருந்த
    உண்மையொன்று
    வெளிவர முயன்றது.
    வாசலை
    சார்த்தி வைத்திருந்தார்கள்
    உண்மையை சித்திரவதை செய்து
    அறையில் அடைத்துவைத்தவர்கள்.
    உடைத்து திறக்க
    ஆயுதமேதும் அகப்படவில்லை.
    தலையை முட்டி மோதி
    திண்டாடி தடுமாறி
    வந்தது வெளியே.
    யாரும் அடையாளம் கண்டுகொள்ளவில்லை.
    எங்களில் ஒருவன் போல் இல்லையே! என்று சொல்லி
    நிராகரித்தன பொய்கள்.
    உண்மைக்கு பசித்தது.
    உயிர் போகும்படி பசி.
    நீதி மன்றத்தில்
    நீதிபதிகள் சோறிட்டு
    உண்மையின் உயிரை
    காப்பாற்றுகிறார்கள் என்று கேள்விப்பட்டு
    விரைந்தது.
    உணவருந்திக்கொண்டிருந்த நீதிபதி
    வக்கீலும் துணைக்கு
    வந்து சோறு கேட்டால் மட்டுமே
    சோறளிக்கும்
    சட்டவிதியை விளக்க
    உணவு இடைவேளைக்கு பிறகு
    சந்திக்க சொன்னார்.
    காவலாளி
    பலவந்தமாய்
    உண்மையை வெளியே அழைத்துப்போனான்.
    நாவுலர்ந்தது உண்மைக்கு.
    ஒளிபரப்பு கருவிகளோடு நின்றிருந்த
    தொலைகாட்சி நிருபரொருவர்
    யார் எனக்கேட்டார்.
    அறிமுகம் தந்ததும்
    சுவாரஸ்யம் இழந்தார்.
    அவர் அனுதாபிக்க
    வேறு வகை உண்மையை
    அழைத்து வருமாறு
    இந்த அப்பாவி உண்மையை
    வேண்டினார்.
    உண்மை போல தோற்றமளிக்கும்
    பொய் கூட பரவாயில்லை அவருக்கு.
    உண்மை மயக்கமுற்றது
    அரசு மருத்துவமனையில்
    விழித்தெழுந்தது
    யாரோ தண்ணீர் தெளித்தபோது.
    வெள்ளைக்குல்லா வெள்ளை சட்டை அணிந்த ஒருவர்
    எலுமிச்சை சாறு தந்து கைகூப்பினார்.
    குடித்தவுடன்
    உண்மை மீண்டும் மயக்கமடைந்தது
    எலுமிச்சை சாற்றில் கலப்படம்
    உண்மையும் கொஞ்சம் கலப்படமானது.
    சத்தம்போட துடங்கிய உண்மையின்
    வாயை அடைக்க
    வெள்ளைகுல்லா மனிதர்
    தன் உறவினரென்று
    உண்மைக்காக பொய்சொல்லி
    ஐசியு-வில் படுத்துக்கொள்ள வைத்தார்.
    அங்கே கிடைத்த
    சிசுருஷையில்
    பசி விலகி
    ஆரோக்கியம் பெற்றது
    இப்போது யாரும்
    நீ யாரென்று கேட்பதில்லை
    உண்மைக்கு அடையாளம் வந்துவிட்டது
    பொய்கள் போல் அழகுடன் காட்சியளிக்க
    பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையும் செய்துகொண்டது.

  • குறை போக்கி அருள்


    முடிதிருத்தும் நிலையத்தில்
    நன்கு தூக்கம் வருகிறது.
    திரையரங்குகளிலும்.
    தேர்வு எழுதும் அறைகளில்
    திறம்பட.
    கோவில்களில் மணியோசை
    தாயின் தாலாட்டு போலவே ஒலிக்கிறது.
    ரயிலின் புறப்பாட்டுக்கு காத்திருக்கும்போது துடங்கி
    சேருமிடம் வரும்வரை
    சயனம்தான்.
    வேலை செய்யுமிடத்தில்
    மதியவுணவுக்குப்பின் வரும் கொட்டாவி
    பிறருக்கு தெரியாமலிருத்தல்
    பிரம்மப்ரயத்தனந்தான்.
    மகளின் பள்ளியில்
    ஆசிரியர்களை சந்திக்க
    காத்திருக்கும் பொழுதுகளில்
    குழந்தைகள் பாடும் தமிழ்த்தாய் வாழ்த்து
    திருப்பள்ளிஎழுச்சியாகும்.
    இரவு எத்தனிக்கும்போது மட்டும்
    தூக்கம் காணாமல் போய்விடுகிறது.
    புத்தகம் படித்தாலும்
    காதுக்குள் வைத்து
    கைத்தொலைபேசியில் வானொலி கேட்டாலும்
    போர்வையால் கால் முதல் தலைவரை போர்த்தி
    இருட்டில் கண்ணை அகல விரித்து
    தூக்கத்திற்காக காத்திருந்தாலும்.
    வருவதில்லை…!
    தூக்கம் வர ஏதாவது மந்திரம் இருக்கிறதா?
    மனைவியின் காற்றுநிறை குறட்டை சத்தத்தை
    கவனமுடன் கேட்கிறேன்.
    த்யானம் செய்வது போல.
    தேவியருள் புரிந்தாள்.