Blog

  • லைஃப் ஆஃப் பை

    Life-of-Pi-Movie-Poster-Horizontal1லைஃப் ஆப் பை – திரைப்படத்தை இன்று பார்த்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தைகள் இல்லாமல் தனியாக நானும் என் மனைவியும் சென்று பார்த்த படம் என்ற சிறப்பு இப்படத்திற்கு கிடைத்திருக்கிறது. வார நாள் என்பதால் கூட்டமில்லாமல் இருக்கும்; காலை 10 மணிக்காட்சிக்கு ஒன்பதரை மணிக்கு சென்றால் எளிதில் டிக்கட் வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் மல்டிப்ளெக்ஸுக்குள் நுழைந்தால் கவுன்டரில் நீளமாக க்யூ. இளவட்டங்கள் கையில் புத்தகங்களில்லாமல் கேர்ள்-ஃப்ரண்ட்ஸ் சகிதமாக அதிகாலை ஒன்பது மணிக்கே படம் பார்க்க வந்து விட்டிருந்தனர். அக்காலத்தில் கல்லூரியில் படிக்கும் நாட்களில் கட் அடித்து விட்டு மாடினி ஷோ தான் போவது தான் நம்மூர் வழக்கம். தில்லியில் கல்லூரிகள் அதிகாலையில் துவங்குவதால் பத்து மணி ஷோவுக்கு வர முடிகிறது போலும். ஹ்ம்ம் இனிமேல் வார நாட்களில் வருவதாக என்றாலும் இணையம் வாயிலாக டிக்கெட் வாங்குவதே உத்தமம். தொந்தி வயிறுடன், மஞ்சள் நிற டர்பன் அணிந்து க்யூவில் என் முன்னால் நின்றிருந்த சர்தார்ஜி இளைஞன் மோபைல் போனில் “இப்போது என்னால் பேச முடியாது…என் லெக்சர் ஹாலில் இருக்கிறேன்” என்று யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தான்.

    என்னுடைய நண்பர் ஒருவர் “லைஃப் ஆஃப் பை பார்த்தாயா?” என்று இரண்டு நாட்கள் முன்னால் என்னிடம் கேட்டார். “பார்க்க ஆசை…ஆனால் இன்னும் இல்லை” என்றேன். அதற்கு அவர் “நான் பார்த்துவிட்டேன். எனக்கொன்றும் சிறப்பான படமாக எனக்கு தோன்றவில்லை. ஒரு வேளை எனக்கு புரியாத எதாவது ஒன்று உனக்குப் புரியலாம். அப்படி புரிந்தால் எனக்கு சொல்.”. இவரைப் போல சிலரை நான் சந்தித்திருக்கிறேன். ”படம் மோசமான படம் இல்லை. ஆனால் தூக்கி வைத்துக் கொண்டு ஆடத் தகுந்த படமும் இல்லை. இப்படத்தை எப்படி விமர்சிப்பது?” என்ற குழப்பத்தில் இருப்பார்கள்

    திரைப்படம் முடிந்து ஹாலை விட்டு வெளியே வந்த போது நண்பருக்கேற்பட்ட அதே குழப்பம் எனக்கும். குறை சொல்கிற மாதிரி இல்லை…ஆனாலும் ஒரு நிறைவு இல்லை.

    யான் மார்டேல் என்ற கனடிய எழுத்தாளர் எழுதி 2001இல் வெளிவந்த ஆங்கில நாவல் – லைஃப் ஆப் பை (Life of Pi) – தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். அமெரிக்க அதிபர் ஒபாமா தம்மை மிகவும் கவர்ந்த கதை என்று யான் மார்டேலுக்கு கடிதம் எழுதிப் பாராட்டியிருக்கிறார் என்பது இந்நாவலுக்கான கூடுதல் கவர்ச்சி. இந்நாவலை படமாக எடுப்பது முடியாத காரியம் என்ற கருத்து நிலவி வந்திருக்கிறது. மனோஜ் ஷ்யாமளன் அவர்கள் இப்படத்தை இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தின் கதாநாயகன் போன்று மனோஜும் புதுச்சேரியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Hidden Dragon Crouching Tiger, Brokeback Mountain போன்ற மிகவும் பேசப்பட்ட படங்களை இயக்கிய அங் லீ இயக்கியிருக்கிறார்.

    லைஃப் ஆஃப் பை-யில் எல்லாமே அழகாக இருக்கின்றன. வன விலங்குகள், கடும் சூறாவளி, தாவி வரும் ராட்சத கடல் அலைகள், ஒளிரும் விண்மீன்கள், நாயகன் வந்தடையும் ஒர் ஊனுண்ணித் தீவு – எல்லாமே சுந்தர சொரூபம். 3D தொழில் நுட்பத்தில் பகட்டுடன் செதுக்கப்பட்ட காட்சிகள். இத்திரைப்படத்தின் முக்கியமான ப்ளஸ் காட்சியமைப்பே. Visually Brilliant.

    கதையின் நாயகன் பை தான் ஒரு புலியுடன் ஒர் ஆபத்துப்படகில் சிக்கி 227 நாட்கள் தங்கி பின்னர் கரையொதுங்கிய அனுபவத்தை ஒரு எழுத்தாளரிடம் பகிர்ந்து கொள்வது தான் கரு. வளர்ந்த பை-யாக இந்தி நடிகர் இர்ஃபான் கான் நடித்திருக்கிறார். பை கதை சொல்லத் தொடங்கும் போது “இக்கதையின் முடிவில் கடவுள் இருக்கிறார் என்பதை நீ ஒத்துக் கொள்வாய்” என்ற பீடிகையோடு துவங்கும்; பீடிகை ஏற்படுத்திய எதிர்பார்ப்பு தான் என் நண்பரின் குழப்பத்துக்கு காரணமாகியிருக்கும் என்று இப்போது புரிகிறது.

    பை தன் குழந்தைக் கால அனுபவங்களை பகிரத்தொடங்கி, இந்து, கிறித்துவ, மற்றும் இஸ்லாமிய சமயங்களில் தனக்கேற்பட்ட ஆர்வத்தைப் பற்றி பேசுகிறான். நிஜமாகவே இப்படம் கடவுளைப்பற்றித் தான் பேசப் போகிறதாக்கும் என்று சீட்டின் முன்பாகத்தில் உட்கார்ந்து பார்க்கத் தொடங்கினேன். பையின் தந்தை நடத்தி வந்த விலங்குக் காட்சி சாலையை மூடி தன் குடும்பத்தோடு தன்னுடைய விலங்குகளையும் எடுத்துக் கொண்டு கனடா பயணமாகும் போது கப்பல் மூழ்கி குடும்பத்தினர் எல்லாம் இறந்து போக, ஒரு கழுதைப் புலி, ஒராங்-உடாங், வரிக்குதிரை, புலி – இவற்றுடன் பை மட்டும் உயிர்க்காப்புப் படகில் உயிருக்குப் பாதுகாப்பின்றி சிக்கிக் கொள்கிறான். மற்ற மிருகங்களெல்லாம் இறந்து போய், புலியும் பையும் மற்றும் மிஞ்சுகிறார்கள். பதின் பருவ பையாக புது நடிகர் – சூரஜ் ஷர்மா – சிரத்தையாக நடித்திருக்கிறார், நடிப்புத்துறையில் ஒரு சுற்று வருவார் என்று நம்பலாம்.

    தப்பித்து உயிர் வாழ்வதற்கான போராட்டம் தொடங்குகிறது. பைக்கு மட்டுமில்லை. புலிக்கும் தான். பை சந்திக்கும் ஆபத்துகளிலிருந்து தப்பி, தன்னைக் காத்துக்கொண்டு, புலியையும் காக்கும் முயற்சிகளை அழகான ஆழச்சித்திரங்களால் (3D துணை கொண்டு) உயிர்ப்படுத்தி இருக்கின்றார் அங் லீ. கரடுமுரடான கடல்,தொண்டை வறட்சி, அபூர்வ கடல் உயிரினங்களை எதிர் கொள்ளல், பட்டினி…இவற்றுடன் லேசான மேஜிக் ரியலிச அனுபவங்கள் என்று பையின் அனுபவம் நீள்கிறது. நிஜமும் கிராஃபிக்ஸும் ஒன்றிணையும் படியான காட்சிகள் தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளன. கணினியால் உருவாக்கப்பட்ட 3D உருவத்தொகுதிகள் முற்றிலும் நம்பும் படியாக அமைந்துள்ளன.

    கடவுளுக்கான ஆதாரங்கள் என்று இத்திரைப்படம் எதைச் சொல்ல வருகிறது என்று எனக்கு கடைசி வரை புரியவில்லை. எழுப்பப்பட்ட வினாக்களுக்கு விடை கடைசியில் கிடைக்கும் என்று பார்த்தால், பை-யை விட்டுவிட்டு காட்டுக்குள் சென்று மறைந்து விடும் நன்றி கெட்ட புலியின் மீதான கோபம் தான் எஞ்சுகிறது. ஜப்பானிய விசாரணையாளர்களுக்கு சொன்ன வெர்ஷன் என்று பை கூறும் இரண்டாவது கதை எதற்கு என்று விளங்கவில்லை. ஒரு மாதிரி தொய்ந்த சாதாரணமான முடிவின் மூலமாக கடவுள் பற்றிய என்ன ஆதாரத்தை படம் சொல்ல வருகிறது? பை கடலில் இருக்கும் போது காணும் பறக்கும் மீன் கூட்டங்கள், மினுங்கும் ஊனுண்ணி பாசிகள் என்ற விதவிதமாக, அறிவியல் பூர்வமாக விளக்கத்தக்க விஷயங்களையா கடவுளின் ஆதாரம் என்று சொல்வது? அல்லது 227 நாட்கள் நம்பிக்கையிழக்காமல் போராடிய பையின் மன தைரியத்தையா? எனக்கென்னவோ இத்தகைய தருக்க பாவனையில்லாமல் இத்திரைப்படம் எடுக்கப் பட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று படுகிறது. லைஃப் ஆஃப் பை நாவல் வடிவத்தில் இத்தருக்கம் ஒழுங்காக அடுக்கப்பட்டிருக்கலாமோ என்னமோ? நாவலைப் படித்தவர்கள் தான் சொல்ல வேண்டும்.

    நிச்சயமாக லைஃப் ஆஃப் பை மோசமான படம் இல்லை. ஒரு பதின் பருவத்தினன் கடலில் இருந்து தப்பும் உயிர்ப் போராட்டம் மற்றும் ஒரு புலியுடனான பிணைப்பு – இது தான் சாரம். கடவுள், ஆன்ம வேட்கை போன்ற கடினமான கேள்விகளுக்கான விடைகள் எதையும் லைஃப் ஆஃப் பை தேடவில்லை. வெறும் ஓசைகளை மட்டும் எழுப்புகிறது.

  • ரயில் பெருச்சாளிகள்

    சென்னை செல்லும் மனைவி குழந்தைகளை ரயிலேற்றி விடுவதற்காக நிஜாமுத்தின் ரயில் நிலையம் சென்றிருந்தேன். ஆன் – லைன் வழி முன் பதிவு செய்த ஈ-டிக்கெட் சகிதம் வண்டிக்காக காத்திருந்தோம்.

    தண்டவாளத்தில் தடிதத பெருச்சாளிகள் ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. தண்டவாளத்துக்கடியில் சிறு சிறு பொந்துகளுக்குள் நுழைந்தவாறும் வெளிவந்தவாறும் இயங்கிக் கொண்டிருந்தன. ரயில் நிலையங்களில் ஒரு சுண்டெலி கூட ஏன் தென்படுவதில்லை? வெறும் பெருச்சாளிகளைத் தான் காண முடிகிறது. இவ்விதமாக என் சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது.

    என் மொபைல் போனில் கீழ்க்கண்ட வரிகளை டைப் செய்தேன் :-

    இரயில் நிலையங்களில்

    சுண்டெலிகள் காணப்படுவதில்லை

    வெறும் பெருச்சாளிகள் தாம்

    சீருடையிட்டவர்களை சொல்லவில்லை.

    பெருச்சாளிகளைக் கண்டதும் உயிர் பெற்ற என் கற்பனையிலிருந்து உதித்த வரிகள் இவை. இவ்வரிகள் கவிதையாகுமா? பல முறை கவிதை போல ஏதோவொன்றை எழுதி விட்டு இது கவிதையா இல்லையா என்று யோசித்து மண்டையைப் பிய்த்துக்கொள்வது என் வழக்கமாகிவிட்டது. வெறும் நான்கு வரிகளை எழுதிய பிறகு என் கற்பனை தடை பட்டு விட்டது.

    குடும்பத்தை ரயிலேற்றி விட்டு வீடு திரும்பியதும், மேற்கண்ட ’பெருச்சாளிக் கவிதையை’ தொடரும் முயற்சியில் ஈடுபட்டு முழுத் தோல்வி கண்டேன்.

    பல வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த ஒரு சம்பவம் ஒன்று என் ஞாபகத்துக்கு வந்தது. நான் தில்லி வந்த புதிதில் ஒரு சிறு நிறுவனத்தில் பணி புரிந்து கொண்டிருந்தேன். ஒரு வட இந்திய நகருக்கு அலுவலக வேலை தொடர்பாக பயணம் சென்றிருந்தேன். மூன்று நாள் அங்கே தங்கியிருந்து நிறுவனத்தின் சில சப்ளையர்களையும் வாடிக்கையாளர்களையும் சந்திக்கும் வேலை எனக்களிக்கப்பட்டிருந்தது. இரண்டாவது நாளே என் அதிகாரி எனக்கு போன் செய்து என்னை அன்று இரவே தில்லி திரும்பச் சொன்னார். அடுத்த நாள் ஏதோ அவசர வேலையாம். அதனால், மாலையில் கிளம்பும் ரயிலில் டிக்கட் எடுக்க காலை பத்து மணிக்கு ரயில் நிலையம் வந்தேன்.

    இரண்டே இரண்டு கவுன்டர்கள். க்யூ ரயில் நிலையத்தின் பிரதான வாசல் வரை நீண்டிருந்தது. கவுன்டர் வரை வந்தடைய பல மணி நேரம் பிடிக்கும் போலிருந்தது.

    ஒரு ஆள் என்னை அணுகினான். அவன் வேகமாக பேசின ஹிந்தியை என்னால் ஆரம்பத்தில் தெளிவாகப் பின்பற்ற முடியவில்லை. ஊரிலிருந்து புக் செய்து கொண்டு வந்திருந்த டிக்கட் என் கையில் இருந்ததை பார்த்திருப்பான் போலிருந்தது. “என்னிக்கான டிக்கட் உங்க கிட்ட இருக்கு” என்று கேட்டான். முதலில் நான் பதில் சொல்லவில்லை. “டிக்கட்டை கேன்சல் செய்யாதீங்க சார்….நான் வாங்கிக்கறேன்” என்றான்.

    “என் டிக்கட்டை வாங்கி நீ என்ன செய்யப் போகிறாய்? இது நாளை மாலை கிளம்பும் ட்ரெயினின் டிக்கட் இது”

    ”இந்த டிக்கட்டை கேன்சல் செஞ்சீங்கன்னா…30% சார்ஜைக் கழிச்சிருவாங்க. நான் 10% மட்டும் கழிச்சிட்டு உங்களுக்கு பணம் தந்துடுவேன். இல்லைன்னா உங்களுக்கு வேற டிக்கட் வேணும்னா அதை அரேஞ்ச் பண்ணித் தருவேன்”

    அவனிடம் கூடுதல் விசாரித்ததில் விஷயம் இதுதான். என்னுடைய டிக்கட்டை வேறு யாருக்கோ “ப்ரிமியத்தில்” விற்று விடுவான். வேறு யாரோ கேன்சல் செய்ய வந்த டிக்கட்டை எனக்கு கொடுத்து விடுவான். அதற்காக ஒரு “சர்வீஸ் சார்ஜ்” மட்டும் பெற்றுக்கொள்வான். ”ஆண் பயணி” என்று குறிப்பிடப்பட்டுள்ள டிக்கட்டை சில சமயம் பெண் பயணிகளுக்கு கூட விற்றிருக்கிறானாம். ”அது எப்படி சாத்தியம்? டிக்கட் பரிசோதகர் கண்டிபிடித்தால் பயணிக்கு பிரச்னையாகுமே?” யெனக் கேட்டதில் “எல்லாம் பெரிய மனிதர்களின் ஆசீர்வாதம்..ஆண் பால் – பெண் பால் வேற்றுமைகள் பாராட்ட மாட்டார்கள்” என்று நக்கலடித்தான். அவனுடைய பெயர் சந்து என்று தெரிவித்தான்.

    அன்று மாலை ரயிலுக்கான டிக்கட்டை ரயில் கிளம்புவதற்கு அரை மணி நேரம் முன்னதாக தருகிறேனென்றான். அடுத்த நாள் பயணத்திற்கான என் டிக்கட்டையும் நான் அப்போது தான் தருவேன் என்று சொல்லி விட்டேன்.

    நான்கு மணிக்கு ரயில் நிலையம் வந்து விட்டேன். ஒரு சிறு தோல் பை மட்டும் தான். பால் இனிப்புகள் விற்கும் ஒரு கடை முன், இரண்டாம் பிளாட்ஃபார்மில் நிற்குமாறு சந்து சொல்லியிருந்தான். ஏற வேண்டிய ரயில் இரண்டாம் பிளாட்ஃபார்மிற்கு வந்து விட்டது. நகத்தை கடித்தவாறு நின்றிருந்தேன். சந்து ஒரு வழியாக வந்து சேர்ந்தான்.

    “இன்னும் ஐந்து நிமிடத்தில் உங்க டிக்கட் என் கைக்கு வந்துடும்…உங்களோட நாளைய டிக்கட்டை குடுங்க” என்றான்.

    “குடுக்கறேன்…அதுக்கு முன்னாடி இங்க நிக்கற ரயிலுக்கான கன்ஃபர்ம் டிக்கட் என் கைக்கு வந்தா மட்டும் தான் குடுப்பேன்”

    “அப்ப டிக்கட்டை நீங்களே வச்சுக்குங்க….எனக்கு ஒண்ணும் வேணாம்….”

    “என்னப்பா சொல்ற..நீ தானே எனக்கு டிக்கட் தரேன்னு சொன்னே”

    “நான் இல்லேன்னா சொன்னேன்…..இருங்க ஒரு நிமிஷத்துல வரேன்” என்று சொல்லி நகர்ந்தான் சந்து.

    எனக்கு ஒரே டென்ஷன். பேசாமல் இன்று இரவு இந்த ஊரிலேயே தங்கி விட்டு கன்ஃபர்ம் டிக்கெட்டில் அடுத்த நாள் பயணப்படலாமா என்று யோசித்தேன். ஆஃபீசில் டிஏ தர மாட்டார்களே? அதிகாரி ”ஒன்ன யாரு எக்ஸ்ட்ராவா ஒரு நாள் அந்த ஊரில் இருக்க சொன்னாங்க…நீ ஊரு சுத்திப் பார்க்கறதுக்கெல்லாம் கம்பெனி பணம் குடுக்காது” என்று திட்டவட்டமாகப் பேசுவாரே? ஹோட்டல் அறை நானூறு ரூபாய் ஆகிறது. அத்தனை செலவு செய்யும் நிதி நிலைமை இச்சம்பவம் நடந்த காலத்தில் என்னிடம் இருந்திருக்கவில்லை.

    ரயில் கிளம்ப இன்னும் இருபது நிமிடங்கள் இருந்தன. கோச்சுகள் நிரம்பத் துவங்கின. ரயில் பிளாட்ஃபார்முக்குள் நுழையும் போது ஜெனரல் டப்பாவுக்குள் நிறைய பேர் உட்கார்ந்திருந்ததை நான் பார்த்திருந்தேன். அவர்களெல்லாரும் யார்டில் ஒளிந்திருந்து பின்னர் ஜெனரல் டப்பாவில் ஏறியிருப்பார்களோ? ஒரு முறை மும்பை சென்ட்ரல் (அப்போது பம்பாய் சென்ட்ரல்) ஸ்டேஷனில் பொது டப்பாவில் இடம் இருக்கிறதே என்று அமரப்போனால் ஒரு முரட்டு ஆள் “ஹ்ம் எடுங்க பதினைந்து ரூபாய்” என்றான். நான் எடுத்திருந்த அன்ரிசர்வ்டு டிக்கட்டை அவனிடம் காண்பித்தான். ஏளனமாய் சிரித்து விட்டு, ”இந்த இடத்தில் உட்கார வேண்டுமென்றால் எனக்கு பைசா கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நின்று கொண்டே வா” என்றான். அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே இன்னொரு பயணி பதினைந்து ரூபாய் கொடுத்து காலியாக இருந்த இன்னொரு இருக்கையில் அமர்ந்து கொண்டான். “எழுந்திரு” என்றான் முரடன். நான் கோச்சில் இருந்து இறங்கி பொது கோச்சிற்கு அருகே நின்றிருந்த சீருடையிட்ட ரயில் அதிகாரியிடம் போய் முறையிட்டேன். “அதுக்கு நான் எதுவும் செய்ய முடியாது. நீ கொஞ்ச நேரம் நின்னுக்கிட்டிரு…ட்ரெய்ன் கிளம்பினவுடன் அவர்கள் இறங்கிவிடுவார்கள்..அப்புறம் நீ காலியா இருக்கிற சீட்டில் உட்கார்ந்துக்கலாம்” என்று ஆறுதல் சொன்னார். அப்போது முரடன் அவரை நெருங்கி “சலாம் யாதவ் சாப்” என்றான். எனக்கு முதுகு காண்பித்துக்கொண்டு முரடன் தோளில் கை போட்டு கலகலப்பாக பேச ஆரம்பித்த யாதவ் என்கிற ரயில் அதிகாரிக்கு பின்னால் நான் ஒருவன் நின்று கொண்டிருக்கிறேன் என்கிற பிரக்ஞையே இல்லை.

    சந்து ஒரு வெய்ட்டிங் லிஸ்ட் டிக்கெட் கொண்டு வந்து என்னிடம் நீட்டினான். பால், வயது எல்லாம் சரியாக குறிப்பிடப்பட்டிருந்தன.

    “இது கன்ஃபர்ம் ஆயிருச்சா” என்று கேட்டேன்

    “சார்ட்டில் பேரு இருக்காது..ஆனா S-9 கோச்சில் ஏறி நில்லுங்க. யோகேஷ் என்று ஒரு டிடி டிக்கட் செக் பண்ண வருவார். அவர் கிட்ட பேசியாச்சு. உங்களுக்கு சீட் அலாட் பண்ணுவார். அவருக்கு டீ காபிக்கு காசு குடுங்க போதும்.”

    தயக்கத்துடன் அந்த டிக்கட்டை பெற்றுக் கொண்டேன். அடுத்த நாளுக்கான என் டிக்கட்டை அவனிடம் கொடுத்தேன்.

    “டிக்கட் மட்டும் போதாது சார்…என் சர்வீஸ் சார்ஜ் யாரு தருவாங்க….ஏற்கெனவே சொன்னேனே…..இருநூறு ரூபாய் குடுங்க”

    டிக்கட் விலையே நூற்றி இருபது ரூபாய் தான். என் பர்ஸை எடுக்கும் போது தான் அவரைப் பார்த்தேன். “யோகேஷ்” என்ற பேட்ஜ் அணிந்திருந்தார்.

    “சலாம் யோகேஷ் சாப்” என்றான் சந்து.

    யோகேஷ் முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டு “என்னடா உங்களுக்கெல்லாம் எத்தனை முறை சொன்னாலும் அறிவு வராதா? சந்து இந்த தடவை கண்டிப்பா ஜெயில் தான் உனக்கு” என்று என் கையிலும் அவன் கையிலும் இருந்த டிக்கட்டுகளை வாங்கிக் கொண்டார்.

    “என்ன சார்..உங்களைப் பார்த்தா படிச்சவர் மாதிரி தெரியுது…இந்த மாதிரி ஆளுங்க கிட்டேர்ந்து ப்ளாக் டிக்கட் வாங்கறீங்களே?”

    நான் பதற்றமும் வெட்கமும் கலந்த தொனியில் “இல்லை சார்..அவசரமாக ஊருக்கு போக வேண்டியிருந்தது.” என்றேன்.

    “ஹ்ம்ம்..போங்க…இந்த வெய்ட் லிஸ்ட் டிக்கட்டை வச்சுகிட்டு நீங்க ஜெனரல் டப்பாவில் தான் ஏற முடியும்…போங்க” என்றார்.

    நான் அவரைப் பார்த்து “சார்…சார்..உதவி பண்ணுங்க சார்” என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அந்நேரத்தில் சடக்கென சந்து ஓடி விட்டான். யோகேஷ் “புடிங்க அவனை” என்றார். அவர் சொன்னதை யாரும் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. “திருட்டு பசங்க” என்று என் காது பட சொன்னார். பிறகு என்னைப் பார்த்து “போங்க சார்…சிக்னல் போட்டுட்டாங்க…அன்ரிசர்வ்டு பொட்டில ஏறிக்கங்க” என்று சொன்னார்.

    ரயிலின் ஹார்ன் ஒலித்தது. நான் வேகமாக எஞ்சின் பக்கத்தில் இருக்கும் ஜெனரல் டப்பாவை நோக்கி ஓடினேன். ஜெனரல் டப்பாவை அடையவும் ரயில் நகரத் துவங்கியது. டப்பாவுக்குள் ஏற முடியவில்லை. மக்கள் வெள்ளம். படிக்கட்டிலும் பயணிகள். அவர்கள் உள்ளே என்னை நுழைய விடவில்லை. ரயிலின் வேகம் அதிகரிக்கவும், என் வேகம் குறைந்தது. ஏமாற்றவுணர்வு விரக்தியாக மாறி “ரயிலே…போய்க்கொள்” என்று மனதுக்குள் சொல்லியவாறே பிளாட்ஃபார்மில் நின்றேன். ஒரு பென்ச்சில் கொஞ்ச நேரம் உட்கார்ந்தேன்,

    தில்லிக்கு திரும்ப பேருந்து கிடைக்குமா என்று பார்க்க ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்த போது சந்துவும் யோகேஷும் ஒரு டீக்கடை வாசலில் ஒன்றாக நின்று சிகரெட் புகைப்பதை பார்த்தேன். அவர்களை அணுகி நீங்கள் என்னிடம் எடுத்துக் கொண்ட டிக்கட்டை திருப்பித் தாருங்கள் என்று கேட்கலாமா என்று ஒரு கணம் யோசித்தேன். நான் சாலையை க்ராஸ் செய்யக் காத்திருக்கும் போது தில்லி செல்லும் பேருந்து ஒன்று பச்சை விளக்குக்காக காத்துக்கொண்டிருப்பதை பார்த்தேன். அதில் ஏறிக் கொண்டேன்.

    +++++

    திரு எழுத்தாளர் அவர்களே

    நீங்கள் அனுப்பிய படைப்பை படித்த பிறகு அதை எதில் பகுப்பது என்பது புரிபடவில்லை? என்ன Genre இது? கவித்துவமான பாவனையோடு துவங்கினீர்கள். பின்னர் அனுபவ பகிரல் தொனியோடு புனைவு மாதிரி எழுதியிருக்கிறீர்கள். அனுபவம் ஒரு ஃப்ளேஷ் பேக் மாதிரி வருகிறது. அந்த ஃப்ளேஷ் பேக்கிற்குள் ஒரு ஃப்ளேஷ் பேக் என்று இன்னொரு கதை (அல்லது அனுபவப் பகிரல்). தமிழ்த் திரைக்கதை ஆசிரியர்களின் பாதிப்பு உங்கள் கற்பனையில் தெரிகிறது.

    பெருச்சாளிகள் என்ற ஒரு உருவகம் எதை குறிக்கிறது என்று புரிந்து கொள்ள பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. இரயில் நிலையத்தை கதைக் களமாக வைத்து எழுத வேண்டும் என்ற உத்வேகத்தில் காட்டாற்று வெள்ளமாக உங்கள் எழுத்து ஆழமின்றி அலைகிறது. உள்ளடக்கத்தில் செறிவு இல்லை. இறுக்கமான வடிவமின்றி பஞ்சு மாதிரி சொல்ல வந்த விஷயம் நாலா திசைகளிலும் பறக்கிறது.

    இரயில் நிலையத்தை களமாக வைத்து பல முக்கியமான இலக்கிய படைப்புகளை படைப்பாளிகள் படைத்திருக்கின்றனர் என்பது உண்மைதான். ரபீந்திரநாத் டாகோர் எழுதிய “Hungry Stones” சிறுகதை படித்திருக்கிறீர்களா? எனக்கு மிகவும் பிடித்த சிறுகதைகளில் அதுவும் ஒன்று.

    ரஸ்கின் பாண்ட் எழுதிய “Do you believe in Ghosts?” என்ற கவிதை ரயில் நிலையத்தில் நிகழும் ஒரு உரையாடலை சொல்கிறது.

    “பேய்கள் இருக்கின்றன என்று நீ நம்புகிறாயா?”

    மூன்றாம் பிளாட்ஃபார்மில்

    நின்றிருந்த ஒருவன் என்னைக் கேட்டான்.

    “நான் பகுத்தறிவுவாதி” – நான் சொன்னேன்

    “நான் கண்ணால் காணக்கூடியவற்றையே நம்புபவன் ;

    உதாரணமாக உன் கைகள், உன் கால்கள், உன் தாடி”

    “ஓ! அப்படியானால் என்னைத் திரும்பவும் பார்”

    என்றவன்

    உடன் காணாமல் மறைந்து போனான்.

    நீங்கள் அனுப்பியதை பிரசுரிக்கப் போவதில்லை என்ற எங்கள் முடிவை புரிந்து கொண்டிருப்பீர்கள். உருப்படியாக எதுவும் எழுதினீர்களேயானால் எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.

    அன்புடன்

    எடிட்டர்

    +++++

    சென்னையிலிருந்து திரும்பி வரும் மனைவியையும் குழந்தைகளும் ரிசீவ் பண்ண நிஜாமுத்தின் ரயில் நிலையத்தில் நின்றிருந்த போது பெருச்சாளி ”கவிதையை” மேலும் தொடர உத்வேகம் பிறந்தது.

    இரயில் நிலையங்களில்

    சுண்டெலிகள் காணப்படுவதில்லை

    வெறும் பெருச்சாளிகள் தாம்

    சீருடையிட்டவர்களை சொல்லவில்லை.

    மொத்தமாக முன் பதிவு செய்து

    அதீத விலையில் விற்கும்

    தரகர்களை சொல்லவில்லை

    பயணச் சீட்டின்றி

    கூட்டமான ரயிலில்

    பயணம் செய்பவர்களை சொல்லவில்லை

    ஓசியில் தருகிறார்கள் என்று

    மாதத்துக்கொரு முறை

    நீள் பிரயாணம் செய்யும்

    ரயில் ஊழியர்களை சொல்லவில்லை

    முன் பதிவு செய்யும்

    ரயில்வே இணை தளம் சரியாக இயங்காமல்

    காளானாய் முளைத்திருக்கும்

    தனியார் ட்ராவெல் ஏஜன்சிகளை சொல்லவில்லை

    நிஜப் பெருச்சாளிகளைத்தான் சொல்லுகிறேன்

    தண்டவாளங்களை

    காற்றில் தொங்குவது மாதிரி

    தொங்கவிட்டு

    அடியில் வாழும்

    பெருச்சாளிகளைத் தான் சொல்லுகிறேன்.

    சென்னை ரயில் வந்து சேர்ந்தது. குடும்பத்தைக் காணும் ஆவலில் “கவிதை” எழுதிய டிஷ்யூ பேப்பரை உட்கார்ந்திருந்த பென்ச்சிலேயே போட்டுவிட்டு எழுந்தேன்.

    டாக்ஸியில் ஏறி வீடு செல்லும் வழியில் ரயில் நிஜாமுத்தின் வந்தடைவதில் ஏற்பட்ட தாமதம் குறித்த என் கேள்விக்கு என் மனைவி அளித்த பதில் என்னை அதிர்ச்சியடைய செய்தது.

    ”நாக்பூர் ஸ்டேஷனில் இரண்டு மணி நேரம் போட்டு விட்டார்கள். யாரோ சிறு பையன் ஸ்லீப்பர் கிளாஸில் ஒரு பெருச்சாளி கடித்து இறந்து விட்டானாம்”

  • தொலைந்த என் செருப்புகள்

    நடந்து கொண்டேயிருக்கையில்
    திடீரென்று
    நான் அணிந்திருந்த
    என் செருப்புகள்
    காணாமல் போயின
    அவற்றை தேடி
    பல இடங்களிலும்
    அலைந்து திரிந்தேன்
    வெகு நேரத் தேடலுக்குப் பின்
    கிடைத்தன என் செருப்புகள்
    அவற்றை என் கையில்
    பத்திரமாய் பிடித்துக் கொண்டு
    இல்லம் வந்தடைந்தேன்.

  • நோயாளி

    நோயாளி

    அமைதியை குலைத்து
    அறைக்குள் நுழைந்த இசையை
    விரட்டியடிக்க முடியாமல்
    தட்டுத்தடுமாறி
    காதை பொத்திக்கொண்டேன்
    இசை இப்போது தென்படவில்லை.
    இசை கண்ணுக்கு தெரியாமல்
    எங்காவது ஒளிந்திருக்கக்கூடும் என்று
    காதிலிருந்து கைகளை எடுக்கவில்லை
    கை வலிக்கத் துவங்கியபோது
    இரு கைகளை தொங்கப்போட்டு
    வலியை துரத்தினேன்.
    இசை
    அவ்விடத்திலிருந்து
    ஏற்கெனவே
    விலகிச் சென்றிருக்கலாமென
    எண்ணிக்கொண்டு
    மீண்டும் உறக்கத்தை
    தேடும் முயற்சியில் இறங்கினேன்

  • பிரதிபலிப்பு


    மிருகக் காட்சி சாலையின்

    முகப்பில்

    கம்பீரமாக

    தசைகள் புடைக்க

    மிடுக்குடன்

    வீரமாக உறுமுவது போல

    நிற்கும் சிங்கத்தின் சிலை.

    கூண்டுக்குள்

    பிடறி எலும்பு தெரிய

    ரோமம் உதிர்ந்து

    பாவப் பட்ட பார்வையுடன்

    தரையில் போடப்பட்ட காய்ந்த புற்களை

    நக்கிக் கொண்டிருக்கும்

    நிஜச் சிங்கம்.

  • எழுத்துக்குத் தடை

    “Writer’s Block” என்று சொல்வார்கள். தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் ஒர் எழுத்தாளருக்கு எதுவுமே எழுதத் தோன்றாமல் இருக்கும் ஒரு phase-ஐ அப்படி சொல்வார்கள். கற்பனை சரிவர எழாது. “rhythm”ஐ இழந்து போயிருப்பார். சொந்த வாழ்க்கை ஏற்பட்ட சில துயர சம்பவங்களாலோ, துக்க நிகழ்வுகளாலோ எழுத்தாளருக்கு இப்படியொரு “block” ஏற்படக்கூடும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.

    ஆகஸ்டு 16க்குப் பிறகு ஒன்றும் எழுதவில்லை. ஒரு வரி கூட. அலுவலகத்தின் வேலைப் பளுவோ, அலுவல்கள் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களோ, அலுவலகம் இடம் மாறிய பிறகு தினமும் இரண்டு மணி நேரம் காலை – மாலை பயணம் செய்ய வேண்டியிருப்பதால் ஏற்பட்ட உடற் களைப்போ…..எது காரணம் என்பது புரியவில்லை?

    எழுதத் தொடங்கு முன்னர் எனக்கு கணினி திரை அவசியம். எல்லாருக்கும் தான் இது அவசியம். இக்காலத்தில் யார் பேனாவை எடுத்து தாளில் எழுதுகிறார்கள்? எல்லோருமே நேராக கணினியில் தட்டச்சு தானே செய்கிறார்கள் என்று ஒருவர் கேட்கலாம். உண்மை தான். நான் அதை சொல்ல வரவில்லை. ஒரு கரு சிந்தனையில் தோன்றுகிறது. அதை மனதிலேயே வார்த்தைகளைப் போட்டு முழு வடிவம் தர முடிவதில்லை. ஒரு கணினி முன்னால் உட்கார்ந்து தட்டச்சு செய்ய ஆரம்பிக்கும் போது தான் சரியான வார்த்தைகள் வந்து விழ, சிந்தனையில் உருவான கருவும் வளர்ந்து கவிதையாகவோ கதையாகவோ அல்லது கட்டுரையாகவோ வடிவம் கொள்கிறது.

    கணினி இல்லையென்றால் என்னாகும்? காகிதத்தை வைத்துக் கொண்டு எழுத உட்கார “மூட்” வருவதில்லை. அலங்காரமில்லாமல் சொல்வதானால், சோம்பேறித் தனத்தை உதறி எழுத ஆரம்பிக்க முடிவதில்லை என்பதே உண்மை. அப்படியே எழுத ஆரம்பித்தாலும் கோழிக் கிறுக்கலாகப் போய் விட்ட என் கையெழுத்தைப் பார்க்கும் போது எனக்கே அவமானமாக இருக்கும். கையால் எழுதியவற்றை பின்னர் தட்டச்சு செய்யும் போது என்ன எழுதியிருக்கிறோம் என்று தடுமாறி விழிக்கும் பிரச்னை வேறு. “என்னப்பா…இவ்ளோ அசிங்கமா இருக்கு உன் கையெழுத்து” என்று என் மூத்த மகள் வேறு கேள்வி கேட்பாள். “இல்லேடா கண்ணு….அப்பா ஆஃபீஸில் பல வருஷங்களா கம்ப்யூட்டர்லயே வேலை பண்றதால கையில் எழுதி பழக்கமில்லாம போயிடுச்சு…சின்ன வயசுல என் கையெழுத்து மணி மணியா இருக்கும்” என்று மொட்டைக் காரணத்தோடு ஒரு பொய்யையும் சேர்த்து சொல்லி தப்பிக்கப் பார்ப்பேன்.

    இதில் இன்னொரு விஷயத்தையும் நான் கவனித்திருக்கிறேன். இரண்டு வரிகள் தமிழில் எழுதியவுடன் கை வலிக்க துவங்கிவிடும். என்னுடைய நண்பன் ஒருவன் ஒரு விசித்திரமான ஆலோசனை வழங்கினான். ஆங்கிலத்தில் எழுதினால் கை வலி குறைவாக இருக்கும் என்று. இது எத்தனை தூரம் உண்மை என்று எனக்கு தெரியாது.

    ரீடிங் ரூமில் இருக்கும் கணினி திரையில் ஏதோ கோளாறு. குழந்தைகள் இப்போதெல்லாம் ஐ-பேட்-ல் பிசியாக இருப்பதால் கணினி பக்கம் வருவதில்லை. எனவே அவர்களால் இந்தப் பழுது ஏற்பட்டிருக்க சாத்தியமில்லை. மூன்று வாரங்களாக கம்ப்யூட்டர் டெக்னீஷியனை கூப்பிட்டு சரி செய்ய வேண்டும் என்று பார்க்கிறேன். ஆனால் தள்ளிக் கொண்டே போகிறது.

    ஆகஸ்ட் 16க்கு பிறகு ஏற்பட்ட இந்த எழுத்து இடைவெளி “writer’s block” ஆக இருக்கலாமோ என்ற ஐயம் அவ்வப்போது தோன்றி என்னை மகிழ்ச்சிப் படுத்திக் கொண்டிருந்தது. எழுத்தாளர்களுக்கு தான் block வரும் எனில் நான் எழுத்தாளன் ஆகி விட்டேன் என்று தானே பொருள்.

    ஒரு நாள் மாலை வீடு திரும்பிய போது என் இளைய மகள் (ஏழு வயதாகிறது !) ஸ்டைலாக உட்கார்ந்து கணினியில் கேம் விளையாடிக் கொண்டிருந்தாள். “அம்மா கம்ப்யூட்டர் காரனை கூப்பிட்டாளா” என்று கேட்டேன். “அதெல்லாம் எதுக்கு…ஸ்க்ரீன் chord லூஸா இருந்தது…அதை நானே சரியா மாட்டி விட்டுட்டேன்” என்று சாதாரணமாக சொன்ன படி கணினித் திரைக்குள் மின்னல் வேகமாக மதில் சுவரில் ஓடிக்கொண்டே இருந்தவனை ஒரு லாங்-ஜம்ப் செய்ய வைத்து குழியில் விழ வைத்து சாகடித்தாள் (கம்ப்யூட்டர் கேமில் அய்யா!). ஐ-பேட்-டின் சார்ஜர் தொலைந்த வேளையில் என் குழந்தைகளின் கவனம் கணினியில் பட அது உயிர் பெற்று விட்டது.

    இந்தப் பகிர்வு மொக்கையான (’தட்டையான’ – இலக்கியச் சிற்றிதழ் படிக்கும் பழக்கம் உள்ளவருக்கு) வாசிப்பனுபவத்தை தந்தால் மிகவும் மெதுவாக விலகிக் கொண்டிருக்கும் என்னுடைய writer’s block ஐத் தான் குற்றம் சொல்ல வேண்டும். இதை வாசித்து மிகவும் சலித்துப் போனவர்கள், இடுகைக்கு தரப்பட்டிருக்கும் தலைப்போடு “வேண்டும்” என்ற சொல்லையும் சேர்த்து மறு தலைப்பிட்டுக் கொள்ளலாம்.

  • தொடர்பு

    வெகு காலமாக
    புரட்டப்படாத
    புத்தகத்தின் பக்கங்களுக்குள்
    கிடந்தது இலை
    பச்சை மங்கி
    வெண்மைப் பட்டுப் போன
    ஆனால் வடிவம் குன்றா
    அந்த இலையில்
    வாசம் தொலைந்திருந்தது
    பழைய புத்தகத்தின்
    வாசனையை விரும்பி முகர்கையில்
    இலையின் வாசமும்
    சேர்ந்து வந்தது.
    இலை கிடந்த பக்கத்தில்
    காணாமல் போயிருந்த
    எழுத்துகள் சில
    இலையில் பதிந்திருந்தன

  • வட்டம்

    சிதறிய
    மாமிசத் துண்டங்களைத் திண்பதற்கு
    ஓடி வந்த நாயொன்றின் மேல்
    கல் வீசப்பட
    அது வள்ளென்று குரைத்தவாறு
    கண்ணாடி ஜாடியின் மேல் வந்து மோத
    ஜாடியின் உள்ளிருந்து விழுந்து
    சிதறிய
    மாமிசத் துண்டங்களைத் திண்பதற்கு
    ஓடி வந்த நாயொன்றின் மேல்
    கல் வீசப்பட
    அது வள்ளென்று குரைத்தவாறு
    கண்ணாடி ஜாடியின் மேல் வந்து மோத
    ஜாடியின் உள்ளிருந்து விழுந்து
    சிதறிய
    மாமிசத் துண்டங்களைத் திண்பதற்கு………
    ஆரம்பம் எது முடிவெது
    என்ற குழப்பத்தில்
    ரங்கராட்டினம் போல்
    ஒரு வட்டத்தில் இலக்கின்றி
    சுழன்று கொண்டிருந்த அது என்ன?
    எண்ணவோட்ட்மா? நினைவுப்பெருக்கா?.

    சுழன்று கொண்டிருந்த எண்ணத்தை
    அல்லது நினைவை
    நேர்படுத்துவதற்காய்
    இன்னொரு தளத்தில்
    செலுத்தும் போது
    இயந்திரக் கோளாறு
    காரணமாக
    விமானம் தரையிறங்குவதாக
    அறிவிப்பு.
    தரை தட்டும் முன்னர்
    நீர் தட்டியது.
    தலைகீழ் “ட” வடிவில்
    விமானத்தின் சிறகுகள் வளைந்து
    துடுப்பு போல இயங்கின
    மூழ்காத விமானம்
    நீரில் பேருந்தாக
    அசுர வேகத்தில்,
    வட்டப் பாதையில் ஓடியது
    வட்டத்திலிருந்து குதிக்காமல்
    கரையை அடைதல் சாத்தியமா?
    பதற்றத்துடன் நகர்ந்த
    காலத்துளிகளில்
    மாமிசத்துண்டுகளை திண்ண வந்து
    அடிபட்ட நாயின் அவஸ்தையுடனும்
    கண்ணாடி ஜாடியுள்ளிருந்து
    விழுந்த மாமிசத் துண்டுகள் போல
    எல்லா திக்குகளில் சிதறியும்
    ஒய்வற்று சுற்றியது.

    சடக்கென விழித்தெழுந்தது உடல் பிரக்ஞை.
    அடிவயிற்றில் ஒர் இறுக்கம்.
    கழிப்பறை சென்று
    விசையுடன் வெளிவரும் குழாய் நீரென
    சிறுநீரை கழித்து ஆசுவாசமடைந்த பின்னர்
    உறக்கத்தை நிம்மதியாய் தொடர்கையில்
    உடல்பிரக்ஞை மீண்டும் மாயமாய் மறைந்து
    சுழற்சிக்குள் நுழைந்து
    வண்ணத்துப்பூச்சி உருவில்
    ஒவ்வொரு மலராக
    உட்கார்ந்து உட்கார்ந்து
    நீள்வட்டப் பூப்பாதையில்
    போய்க் கொண்டிருந்தது..

    நன்றி : நவீன விருட்சம் (http://navinavirutcham.blogspot.in/2012/11/v-ganesh.html)

  • மரம்


    மரம் போலவொரு
    அழகான கவிதை
    என் வாழ்நாளில்
    என்னால் எழுத முடியாது.
    பசி மிகுந்த
    மரத்தின் வாய்
    பூமித் தாயின்
    வழியும் முலைகளில்
    பொருத்தப்பட்டிருக்கும்.
    கடவுளை தினமும்
    பார்த்துக் கொண்டிருக்கும் மரம்
    தன் இலைக் கரங்களை எழுப்பி
    தொழுகை புரியும்.
    கோடை காலங்களில்
    வண்ணாத்திக் குருவியின் கூடுகளை
    தொப்பிகளாக அணிந்து கொள்ளும்.
    மார்பில் பனி பூசிக் கொண்ட
    மரங்கள்
    மழையுடன் கூடும்
    என் போன்ற முட்டாள்களால்
    கவிதை மட்டுமே
    கிறுக்க இயலும்
    கடவுளால் மட்டுமே
    மரத்தினை படைத்தல் சாத்தியம்.

    [ ஜாய்ஸ் கில்மர் எழுதிய “Trees” என்ற ஆங்கில கவிதையின் தமிழாக்கம்]

  • என்னால் உள்ளே நுழைய முடியவில்லை

    ஒரு பாழடைந்த கோட்டை முன் நின்று கொண்டிருந்தேன். ஸ்பெயின் நாட்டில் ஓலைட் என்கிற ஊருக்கருகில் இருக்கும் கோட்டையது. கோட்டையின் நுழைவாயிலின் முன் ஒருவன் நின்றிருந்தான். என்னை அவன் உள்ளே நுழையக் கூடாது என்று அவன் சொல்கிறான்.

    உள்ளே நுழையக் கூடாது என்று அவன் சொல்வதன் காரணம் என் நுழைவை தடுத்து நிறுத்தி அதன் மூலம் ஒரு விதமான முக்கியத்துவம் பெறுவதைத் தவிர வேறொன்றும் இல்லை என்று என் உள்ளுணர்வு சொன்னது. நான் வெகு தூரத்திலிருந்து வந்திருப்பதை சொன்னேன். அவனுக்கு வெகுமதி தர முயற்சி செய்தேன். அவனுடன் பணிவாகப் பேசினேன். இது பாழடைந்த கோட்டை தானே என்றும் குறிப்பிட்டேன். திடீரென்று அந்த பாழடைந்த கோட்டையில் நுழைவது எனக்கு அதி முக்கியமாகப் போய்விட்டது.

    அவன் திரும்பவும் சொன்னான் “மீண்டும் சொல்கிறேன். நீங்கள் உள்ளே நுழையலாகாது” ஒரே ஒரு வழி தான். அவன் தடுப்பதை பொருட்படுத்தாது உள்ளே போக வேண்டும். பார்க்கலாம், உள்ளே நுழையு முன் அவன் என்னை பிடித்து தள்ளுகிறானா என்று! நான் கதவருகில் செல்கிறேன். அவன் என்னை தடுத்து நிறுத்தவில்லை. வெறுமனே என்னைப் பார்த்த வண்ணம் நிற்கிறான்.

    அந்தக் கோட்டையைப் பார்த்து விட்டு வெளியே வரும் போது, இரண்டு சுற்றுலாப் பயணிகள் கோட்டையைக் காண நடந்து வருவதைப் பார்த்தேன். வாயிலில் நின்றவன் அவர்களை தடுக்க முயலவில்லை. என்னுடைய எதிர்ப்பு புதிதான, முட்டாள் தனமான விதிமுறைகளை கண்டுபிடிக்கும் வேலையிலிருந்து அக்கிழவனுக்கு ஒய்வு வாங்கித் தந்துவிட்டது போலும். சிலமுறை இச்சமூகம் நம்மால் புரிந்து கொள்ளவே முடியாத சில்லறை விஷயங்களுக்காக போரிடச் சொல்கிறது. இதில் விசித்திரம் என்னவென்றால், அவ்விஷயங்களின் முக்கியத்துவத்தை நாம் என்றுமே கண்டுபிடிக்க முடியாது.

    (TRANSLATION OF THE ESSAY – “I CAN’T GET IN” – FROM THE BOOK – “LIKE THE FLOWING RIVER” WRITTEN BY PAULO COELHO)