Category: Uncategorized

  • ஆகாசஜன்

    turner-snowstorm
    மகாப்பிரளயத்தில் எல்லாரும் அழிந்துவிட்டனர்
    கொல்லாமல் விடப்பட்ட ஜீவர்களைத்தேடி
    ஒருவர் விடாமல் அழித்து வந்தான் மிருத்யூ.
    அவன் பாசக்கயிறிட்டு
    எல்லாரையும் அழித்துவிட்டான்.
    ஒரே ஒருவனைத் தவிர,
    “பிரம்ம”ப்பிரயத்தனம் செய்தும் முடியவில்லை.
    எஜமானன் எமன் முன்னர் சென்று முறையிட்டான்.
    “எல்லோரையும் நீ
    அழித்துவிட இயலாது.
    ஜீவர்களின் கருமங்களை நீ அறிந்தால் மட்டுமே
    அவர்களின் ஆயுட்காலத்தை நீ அறியமுடியும்”
    என்றான் எமன்.
    சாகாமல் எஞ்சியிருந்தவனின்
    கருமங்களைத் தேடி பிரபஞ்சமெங்கும்
    தேடி அலைந்தான் மிருத்யூ
    எஞ்சிய கருமங்கள்
    ஏதும் இருப்பதாக தெரியவில்லை.
    வெறும் கையுடன்
    எமனிடம் திரும்பினான் மிருத்யூ
    “அந்த மனிதனின் அடையாளங்களை சொல்கிறேன்
    அவன் தானாவென்று சொல்”
    எமன் அடுக்கத் தொடங்கினான்
    ”நிர்மல சொரூபம் ;
    பஞ்சபூதங்களுடன் தொடர்பில்லை
    அமைப்பும் உருவமும்
    அவனுக்குக் கிடையாது
    யாருமறியா
    மூல காரணத்தை தழுவியவன்
    பிரத்யேக காரியங்கள் புரியாதிருப்பவன்
    மாற்றமென்றால் என்ன என்று அறியாதவன்
    கர்ம அனுபவம் அறவே இல்லாதவன்
    சித்த அசைவு சுத்தமாக இல்லை அவனுக்கு
    காண்போரின் கண்ணுக்கு
    அவனின் பிராணம் அசைவது போல தோற்றமளிக்கும்
    ஆனால் அதில் ஒரு நோக்கமும் இராது.
    சித் சொரூபமாக இருக்கிறான்
    எனவே அவனுக்கு அழிவில்லை.
    மரண நினைவுள்ளவனுக்கு மட்டுமே
    மரணம் சம்பவிக்கிறது
    இவனோ
    நினைவுகள் இலாத ஞான சொரூபனாகவும் இருக்கிறான்.”
    மிருத்யு ஆம் / இல்லை என்றேதும் சொல்லவில்லை.
    எமன் தொடர்ந்தான்
    ”உதவிக் காரணங்களின்றி
    சுயசொரூபத்தில்
    சூன்யத்தில்
    நிற்கிறான்
    பின்னர் எப்படி அவன் உன் வசப்படுவான்?”
    தன் முயற்சிகள்
    ஏன் வியர்த்தமாயின
    என்று மிருத்யுவிற்குப் புரிந்தது.
    எமன் மேலும் உரைக்கிறான் :
    ”பிரளயத்தில்
    சர்வமும் ஐக்கியமான பிறகு
    எது மிஞ்சும்?
    சூன்யத்தை தவிர வேறென்ன?
    காரண-காரியங்கள் நசித்துப் போகையில்
    மிஞ்சுவதென்ன? அதுவும் சூன்யம் தானே?
    சொப்பனத்தில் அனுபவிப்பதெல்லாம் என்ன?
    காரணம் சூன்யமாக இருந்தும்
    ஸ்தூலம் அசைவது காணப்படுகிறதல்லவா?
    சூன்யத்தை பூரணமாகவும் கொள்ளலாம்.
    உற்பத்தி தோற்றமும்
    நாசமாகும் தோற்றமும்
    சூன்ய-பூரணத்தில் இருந்தே தோன்றுவன.
    உற்பத்தி – நாசம்
    இவ்விரண்டும் நிகழுகையில்
    இவ்விரண்டின் பின்புலத்தில்
    நிலையாயும் சாட்சியாகவும்
    ஒன்று இருந்தாக வேண்டும்
    சாட்சியென்றால்
    அது விகல்பமாகாததாகவும் இருத்தல் வேண்டும்
    அது
    நம் புத்திக்கு புலப்படுவதில்லை.
    இச்சூன்ய-பூரணத்தில் இருந்து
    எழும் பிரம்மாண்டம்
    அழியும் தோற்றத்தையும் கொண்டதாய் இருக்கிறது…
    இப்போது சொல்
    உன்னால் அழிக்க முடியாத
    அது எது அல்லது யார்?”
    மிருத்யு
    மௌனத்தை பதிலாய்த் தந்தான்.

    (யோக வசிஷ்டத்தின் உற்பத்திப் பிரகரணத்தில் வரும் ஆகாசஜன் கதையிலிருந்து)

  • ப்ளாக் ஸ்வான்

    black-swan-movie-poster
    இசைக்கருவியொன்றை மீட்டும் ஒருவர் சரியான கம்பிகளை அழுத்துகிறோமா என்றோ கருவியை சரியாக ஏந்திக்கொண்டிருக்கிறோமா என்றோ யோசித்துக் கொண்டே வாசிப்பாரானால் அவரால் கேட்பவர்களை மகிழ்விக்க இயலுமா? இலக்கணப்பிழை அல்லது சொற்பிழை பற்றிய ஐயங்களுடன் தன்னுடைய வாழ்நாளின் அதிமுக்கியமான படைப்பை ஒரு எழுத்தாளரால் எழுதி விட முடியுமா? நாட்டியக் கலைஞர் கால்களை சரியான திசையில் உயர்த்தியிருக்கிறோமா என்ற குழப்பத்துடன் ஆடுகையில் அழகான நாட்டிய அனுபவத்தை பார்வையாளர்கள் பெறுவார்களா? கட்டுக்கோப்பான பயிற்சி கலைக்கு அத்தியாவசியமாகிறது. அயராத ஆனால் ஒழுங்குபடுத்தப்பட்ட பயிற்சியின் மூலமாக அடிப்படையான இலக்கணங்கள், இயக்கங்கள் மற்றும் உத்திகளில் முழுமையான Mastery கிடைத்துவிட்ட பிறகு தன் செயல் திறனில் அளவற்ற நம்பிக்கை கொள்கிறான் கலைஞன்.

    செயல் திறனில் அசைக்க முடியா நம்பிக்கை கொண்டு கலையுலகின் வாசல் வழி உள் புகுவோர் – அங்கு நுழையும் பாக்கியம் பெற்றோர் – யதார்த்த உலகத்தை தாண்டியதோர் அனுபவத்தை பெறுவதோடு பார்வையாளர்கட்கும் அவ்வனுபவத்தை பகிர்ந்தளிக்கின்றனர். உள்ளார்ந்த ஆனந்த உணர்வில் திளைத்தபடி பூரணத்துவத்தை நோக்கியதொரு பயணத்தை கலைஞர்கள் மேற்கொள்கிறார்கள். அமர நிகழ்த்து கலைஞர்கள் பலரின் கலை முறைமை இவ்வாறே இருந்திருக்கிறது என்பதற்கு வரலாற்றில் பல உதாரணங்கள் இருக்கின்றன.

    யதார்த்த உலகம் மற்றும் நிகழ்த்து கலையில் ஏற்றுள்ள பாத்திரத்தின் உலகம் – இவையிரண்டிற்குமான இடைமுகத்தில் சஞ்சரிக்கும் கலைஞர்கள் சில சமயம் அபாயகரமான மனப்போக்கு நிலைகளில் சிக்குண்டு, மனச்சாய்வில் வீழ்ந்து அல்லலுறுவதும் உண்டு. அத்தகையதொரு கலை மங்கையின் கதையைச் சொல்லும் ஒரு திரைப்படத்தை சமீபத்தில் தொலைக்காட்சியில் பார்த்தேன். 2010-இல் வெளியான பழைய படம் தான் என்றாலும், “Black Swan” திரைப்படத்தைக் காணும் சந்தர்ப்பம் இதற்கு முன்னர் அமையவில்லை. படம் வந்த பொழுது வாசித்த விமர்சனங்கள் இப்படத்தை காணும் ஆர்வத்தை ஏற்படுத்தினாலும் ஏனோ திரையரங்கில் சென்று பார்க்க முடியவில்லை. “ஏ” சான்றிதழ் தரப்பட்டதும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். வாரிசுகளை வீட்டில் விட்டுவிட்டு திரைப்படம் பார்க்கும் பழக்கத்தை இது நாள் வரை கைக்கொள்ளாததால் “யூ” சான்றிதழ் படங்களையே திரையரங்கில் காண முடியும் என்றாகிவிட்டது.

    mila-natalie

    அச்சத்தை உண்டு பண்ணும் அதே சமயத்தில் அழகால் கண்களை வசியப்படுத்துதல் “ப்ளாக் ஸ்வான்” திரைப்படத்தின் அரிய சாதனை. கொடூரமான கனவுகளைப் போல “ப்ளாக் ஸ்வான்” மிகவும் இருண்ட விளிம்புகளை நோக்கி மெல்ல சரிவதை அழகுறப் படம் பிடித்துக் காட்டுகிறது. எழிலார்ந்த நடனம் பற்றிய படத்திற்குள் ஒரு திகில் நாடகம் முறுக்கி வைக்கப்பட்டுள்ளது. கனவைப் போன்று நகரும் இப்படத்தின் சிகரமாகத் திகழ்வது நடாலி போர்ட்மேனின் நயநுணுக்கமிக்க நடிப்பு. ; அவஸ்தையுறும் ஒரு பால்லரீனாவாக கச்சிதமாக தன் பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம்.

    “Black Swan” ஓர் உடனடி குற்றவுணர்வில் தோய்ந்த இன்பத்தை நல்குகிற படம். பகட்டான காட்சியமைப்புகள் நிறைந்தது. காட்சி ரீதியாக ஒரு சிக்கலான படம். மனதை மரத்துப்போகச் செய்யும் கடும் பாலே நடன இயக்கங்களின் பின் புலத்துடன் மனோவியாதியை இணைத்துக் கதை சொல்ல அபரிமிதமான தைரியம் வேண்டும். கொந்தளிக்கும் உருவத்தொகுதிகளும் இரு நாட்டியக்காரிகளுக்கிடையிலான போட்டியும் மிகநேர்த்தியாக வெளிப்பட்டிருக்கின்றன.

    பால்லரீனா நினா (நடாலி போர்ட்மேன்) திண்ணிய தசையும், மெலிந்த உடலமைப்பும் கொண்டவள் ; , படுக்கையில் இருந்து எழும் போதெல்லாம் அவளின் உடலில் அங்கங்கு கீறல்கள் தோன்றும். எனினும் அவற்றையெல்லாம் பொருட் படுத்தாமல் ஒரு நாள் தவறாமல் நடன ஸ்டூடியோ சென்று ரத்தம் கசியும் கால்பெருவிரலூன்றி சுற்றாட்டம் ஆடுவாள்.

    படத்தின் ஆரம்பக் காட்சியிலிருந்தே நினாவின் மனம் பிறழ்ந்து கொண்டிருப்பதை பூடகமாக காட்டிக்கொண்டே வருகிறார் இயக்குநர் அரொநோஃப்ஸ்கி. எல்லா திகில் படங்களைப் போல நாயகிக்கு மிக அருகில் மோதியவாறு காமெராவை வைத்து படம் பிடித்திருப்பது பிற பாத்திரங்களோ அல்லது பொருட்களோ நாயகிக்கு வெகு அருகில் திடீரென தோன்றி பார்வையாளர்களை பயமுறுத்துவதற்காக மட்டுமில்லாமல் நினாவின் சித்தப்பிரமையையும் தனிமை மருட்சியை குறிக்கவும் தான்.

    நினாவின் தாய் எரிகா (பார்பரா ஹெர்ஷே). மூச்சு முட்டுமளவுக்கு தாய்மைப் பாசத்தை காட்டுபவள். மகளைச் சுற்றி மிகைப்பாசத்துடன் வட்டமிடுபவள். மகளின் உணவுப்பழக்கம் முதல் ரத்தம் வருமளவுக்கு தோலை சொறிந்து கொள்ளும் பழக்கம் வரை எல்லாவற்றையும் கவனிப்பாள். இத்திரைப்படத்தில் பிற காட்சிகளைப்போல – உடையும் எலும்புகள், ரத்தம் கசியும் நகங்கள், துளை விழுந்த காயங்கள், காயங்களின் தையல்கள் –இவைகள் மெய்த்தன்மை கொண்டவை என்று கொள்ள முடியாது. அவைகள் நினாவின் கனன்றெழும் கற்பனைகளாகவும் இருக்கலாம்.

    IMG_7135.CR2

    நியூயார்க் நகர பாலே கம்பெனியின் கலை இயக்குநர் தாமஸ் (ஃபிரெஞ்சு நடிகர் வின்செண்ட் கேஸ்ஸல் – திரைப்படத்தின் ஒரே தெளிவான பாத்திரம்) “ஸ்வான் லேக்” என்ற புகழ் பெற்ற பாலே நாடகத்தை புது நடிகையை வைத்து மேடையேற்ற திட்டமிடுகிறான் ; நினாவை வெள்ளை அன்னம் மற்றும் கறுப்பு அன்னம் எனும் இரட்டை வேடங்களுக்கு தேர்ந்தெடுக்கிறான்.. வெள்ளை அன்னம் பாத்திரத்தில் நினா வெகு எளிதாகப் புகுந்து விடுவாள் என்று தாமஸுக்கு தெரிகிறது. ஆனாம் கறுப்பு அன்னம் பாத்திரத்தின் இருண்ட பகுதிகளுக்கு உருக்கொடுக்க முடியுமா என்ற சந்தேகம் அவனுக்கு. அதனால் லிலி (மிலா குனிஸ்) என்ற இன்னொரு நாட்டியக்காரியையும் வரவழைக்கிறான். லிலியின் சாமர்த்திய குணமும் தந்திர குணமும் கறுப்பு அன்ன வேடத்திற்கு பொருத்தமானவளாக்குகிறது. ஸ்வான் ராணியின் பாத்திரத்துக்கு நினாவின் மாற்றாக லிலியாக நியமிக்கப்படுகிறாள் – ஆகவே நினாவின் எதிரியாகவும் ஆகிறாள்.

    தாமஸ் கம்பெனியின் பிரதான நடனக்காரி பெத்தை (வினோனா ரைடர்) தூக்கி எறிந்த காரணத்தினாலேயே நினாவுக்கு அந்த வேடம் கிடைக்கிறது. பெத் படத்தின் சில காட்சிகளில் மட்டும் வருகிறாள் – கெட்ட வார்த்தை சொல்லி சீறிக் கொண்டும், நினாவின் மேல் பழி கூறிக் கோண்டும். பின்னர் ஒரு கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் படுத்த படுக்கையாகிறாள். எரிகாவின் பாத்திரம் போலவே, பெத்தின் பாத்திரமும், நினாவின் சித்தப்பிரமையையும் இறுக்கத்தையும் மேலும் அதிகமாக்கும் விதத்தில் படைக்கப்பட்டிருக்கிறது. மனக்குழப்பம் அயராது நினாவை பாடாய் படுத்துகிறது.

    கலையில் தோஷமிலாப் பூரணத்துவத்தை எட்டுவதற்கான நினாவின் ஓட்டம் அவளின் உடல்நலம் மற்றும் நட்புகளை காவு வாங்குகிறது. பாலியல் முறைகேடுகள் வாயிலாகவும் “உன்னை மறக்க நீ கற்றுக் கொள்ள வேண்டும்” என்ற வார்த்தை தூண்டுதல்களாலும் தாமஸ் நினாவுக்கு கடுமையான உந்துதல் கொடுக்கிறான். ஆனால் இருண்மைக்கு நினா தன்னை பலியாக்கிக் கொண்டிருக்கிறாள் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. தன்னுடைய யதார்த்தம் பற்றிய பிரக்ஞையை கொஞ்சம் கொஞ்சமாக நினா இழக்கிறாள்.

    ட்சைகோவ்ஸ்கியின் தலை சுற்ற வைக்கும் ஆர்கெஸ்ட்ரா, நியுயார்க் நகர பாலே நட்சத்திரம் பெஞ்ஜமின் மில்லபீட்-டின் நடன அமைப்பு மற்றும் மேத்யூ லிபாடிக்கின் விரைவான ஒளிப்பதிவு – இவைகள் இந்த உளவியல் நாடகத்தின் சுருதியை கூட்டுகின்றன. ”ஸ்வான் லேக்” பாலே நாடகத்தின் முதல் காட்சி துவங்குகையில் படம் முழுமையான கனவுத் தன்மையை எட்டி விடுகிறது ; நினாவின் உடம்பில் சிறகுகள் முளைப்பதுவும் பின்மேடையில் நிகழும் கொடூரமான தாக்குதல் காட்சிகள் வெடுக்கென மறைதலும் என ஒரு சர்ரியல் உலகுக்குள் நுழைந்து விடுகிறது.

    நாடகத்துக்குள் ஒரு நாடகம் என்ற பாணியில் “ப்ளாக் ஸ்வான்” படத்துக்குள் இடம் பெறும் “ஸ்வான் லேக்” பாலே நடனத்தின் கதையின் குறியீடுகளையே “ப்ளாக் ஸ்வான்” திரைக்கதை வைத்து பின்னப்பட்டிருக்கிறது.

    நாட்டிய ஒத்திகை காட்சிகளிலும் நாட்டியக் காட்சிகளிலும் நம்பகமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் போர்ட்மேன். இதற்காக கிட்டத்தட்ட ஆறு மாதம் பயிற்சி செய்தாராம். லிலியாக வரும் மிலா குனிஸ் போர்ட்மேனின் பாத்திரத்துக்கு எதிர் பொருத்தமான இணையாக நடித்திருக்கிறார். போர்ட்மேன் தன் அகன்ற விழிகள் வாயிலாக பயத்தை வெளிப்படுத்துகையில் மிலா புன்னகை கலந்த தன்னம்பிக்கையை தன் உடல் மொழியில் வெளிப்படுத்துகிறார்.

    LV1F9083.CR2

  • மாயை – ராம் சின்னப்பயல்

    நண்பர் ராம் எழுதிய கவிதையொன்றை வல்லினம் இதழில் வாசித்தேன். கவிதைகள், நகைச்சுவை கட்டுரைகள் மற்றும் இசை விமர்சனங்கள் என்று எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறார். தகவல் தொழில் நுட்பத்துறைப் பணியில் இருக்கும் இந்த இளைஞர் பல உயரங்களை தொடப் போகிறார். ராமின் அனுமதியுடன் கவிதையை இங்கு இடுகிறேன்.

    மாயை

    எந்த மனநிலையிலிருப்பினும்
    ஒரு பாடல் என்னைத் திசை திருப்பிவிடுகிறது,
    இன்று எவ்வளவு விட்டேற்றியாயிருப்பினும்
    ஒரு கவிதை எனக்கு புன்முறுவலைத் தந்துவிடுகிறது,
    எதுவுமே வேண்டாம் என்று சூன்யமாயிருப்பினும்
    வெகு உயரே பறக்கும் ஒரு பறவை
    என்னை அவதானிக்கவைத்துவிடுகிறது,
    மனம் போன போக்கில்
    எங்கு சென்றாலும் எதோ ஒன்று
    என் அனுமதியின்றி நடந்து கொண்டுதானிருக்கிறது.

    இப்படியாகவே இருக்கும்
    என்னைத்தொடர்ந்தும்
    உற்றுநோக்கி கவனித்துக் கொண்டிருப்பவனுக்கு
    ஒரு காட்சியாகவே
    எப்போதும் நான்
    இருந்துகொண்டுதானிருக்கிறேன்.

    நன்றி : வல்லினம்

  • கதவுடன் ஒரு மனிதன் – சச்சிதானந்தன்

    சமீபத்தில் நேஷனல் புக் ட்ரஸ்ட் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பங்கு கொள்வதற்காக நண்பர் எம்டிஎம் தில்லி வந்திருந்தார். இக்கருத்தரங்கில் பார்வையாளனாக கலந்து கொண்டேன். கருத்தரங்கை மட்டுறுத்தியவர் மலையாளக் கவிஞர் சச்சிதானந்தன் அவர்கள். சர்வதேச அளவில் கவனத்தை பெற்றிருக்கும் சச்சிதானந்தன் இரு வருடங்களுக்கு முன்னர் நோபல் பரிசுக்கான இறுதிப் பட்டியலில் இடம் பெற்றிருந்தார் என்று சொல்லப் படுகிறது. சாஹித்ய அகாடமியின் முதன்மை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெறுவதற்கு முன்னர் கேரளாவில் ஆங்கிலப் பேராசிரியாக இருந்தார். ஏகப்பட்ட தேசிய சர்வ தேசிய விருதுகளுக்குச் சொந்தக்காரர்.

    1996 முதல் தில்லியில் வசிக்கிறாராம். தில்லியில் வசிப்பது பற்றி அவரிடம் கேட்ட போது “எனக்கும் தில்லிக்குமான உறவு அன்பு – வெறுப்பு இரண்டுங் கலந்தது” என்று பதிலளித்தார்.

    இச்சந்திப்புக்கு முன்னர் அவருடைய கவிதைகளைப் படித்ததில்லை. எம்டிஎம் சச்சிதானந்தனின் எழுத்தை சிலாகித்துப் பேசினார். ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சில கவிதைகளை இணையத்தில் வாசித்தேன். அவருடைய கவிதை நூல்களை வாங்கி ஆழ்ந்து படிக்க வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியிருக்கிறது. அவருடைய மூன்று கவிதைத் தொகுதிகளின் தமிழாக்கங்கள் இதுவரை வெளிவந்திருக்கின்றன என்று அவருடைய இணைய தளம் (http://www.satchidanandan.com/index.html) சொல்கிறது. வாங்க வேண்டும்.

    கவிஞர் சச்சிதானந்தனின் அனுமதியுடன் “A man with a door” என்ற அவருடைய கவிதையின் தமிழாக்கம் கீழே.

    கதவுடன் ஒரு மனிதன்
    ஒரு மனிதன் கதவைச் சுமந்த படி
    நகரத்தெருவினூடே நடக்கிறான் ;
    அவன் அதனுடைய வீட்டை தேடுகிறான்.

    அவனின் மனைவியும்
    குழந்தைகளும் நண்பர்களும்
    அக்கதவின் வழி உள்ளே வருவதை
    அவன் கனவு கண்டிருக்கிறான்.
    இப்போதோ முழுவுலகமும்
    அவனால் கட்டப்படாத வீட்டின்
    கதவினூடே நுழைந்து செல்வதை
    அவன் பார்க்கிறான்.

    கதவின் கனவு
    உலகை விட்டு மேலெழுந்து
    சுவர்க்கத்தின் பொன் கதவாவது.
    மேகங்கள்;வானவிற்கள்
    பூதங்கள், தேவதைகள் மற்றும் முனிவர்கள்
    அதன் வழி நுழைவதை
    கற்பனை செய்கிறது,

    ஆனால் கதவுக்காக காத்திருப்பதோ
    நரகத்தின் உரிமையாளர்.
    இப்போது கதவு வேண்டுவது
    மரமாக மாறி
    இலைச்செறிவுடன்
    தென்றலில் அசைந்தவாறே
    தன்னைச் சுமந்திருக்கும்
    வீடற்றவனுக்கு
    சிறு நிழலைத் தருவதே.

    ஒரு மனிதன் கதவைச் சுமந்த படி
    நகரத்தெருவினூடே நடக்கிறான் ;
    ஒரு நட்சத்திரம் அவனுடன் நடக்கிறது.

    MDM&KSatchidananthan

    (எம்டிஎம், நான், கவிஞர் சச்சிதானந்தன்)

  • குகை வாயிலில் ஒரு சிலந்தி வலை

    spider and web

    மக்காவின் எல்லா முஸ்லீம்களும் மதினாவிற்கு இடம் பெயர்ந்து விட்டிருந்தனர். நபிகள் நாயகமும் அபு-பக்கரும் மட்டும் எஞ்சியிருந்தனர், மக்காவை விட்டு வெளியேறுவதற்கு அல்லாஹ்-வின் அனுமதிக்காக நபிகள் நாயகம் காத்திருந்தார். இறுதியில் ஒரு நாள் ஜிப்ரீல் அவரிடம் வந்து சொன்னது : ”இன்றிரவு உன்னுடைய படுக்கையில் படுக்காதே” இரவு நெருங்கிய போது, அலியும் நபிகள் நாயகமும் மட்டும் வீட்டில் தனியே இருந்தனர். திடீரென்று, அவர்கள் வீட்டுக்கு வெளியே சில சத்தங்களைக் கேட்டனர்.

    வெளியில் பார்த்தபோது, நபிகளின் எதிரிகள் வீட்டைச் சுற்றி நின்றிருந்ததைக் கண்டனர். நபிகள் அச்சப்படவில்லை. அல்லாஹ் அவருடன் இருப்பதை அவர் அறிந்திருந்தார். அவர் அலியிடம் சொன்னார் : ”நீ என்னுடைய உடையால் உன்னை மறைத்துக் கொண்டு என் படுக்கையில் படுத்துக் கொள். நான் அபு-பக்கருடன் வெளியேறப் போகிறேன். பிறகு நீ எங்களைப் பின் தொடர்ந்து வா”

    நபிகள் வீட்டை விட்டு அந்த இரவே நீங்கினார். இருட்டின் போர்வையில், அவர் அபு-பக்கரின் வீட்டை அடைந்தார் ; அங்கு இரண்டு ஒட்டகங்கள் தயார் நிலையில் இருந்தன. ஓட்டகங்களில் ஏறி, இருவரும் நகரை விட்டு வெளியேறினர். தாவ்ர்-மலையை அடைந்து அங்கு ஒரு குகையில் ஒளிந்திருந்தனர். அக்குகையில் அவர்கள் மூன்று நாட்கள் இருந்தனர். ஒவ்வொரு இரவிலும் அபு-பக்கரின் மகன் அப்துல்லா அவர்களை குகையில் சந்திப்பான். நகரில் நிகழ்வனவற்றை அவன் அவர்களுக்கு தெரிவித்தான். அப்துல்லா சொன்னான் : “மக்காவின் குரைய்ஷ் மிகவும் கோபமாகிவிட்டான். அவர்கள் உங்களை எல்லா திசைகளிலும் தேடி வருகிறார்கள். உங்களைச் சிறைப்பிடிக்க உதவுபவருக்கு நூறு ஒட்டகங்கள் பரிசளிக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்கள்”

    ஒரு நாள், குகைக்கு வெளியே அவர்கள் சில குரல்களை கேட்டனர். அவர்களைத் தேடிக் கொண்டு குகை வரை எட்டியிருந்த குரைய்ஷின் ஆட்கள். அபு-பக்கர் பயந்தான். “நாம் எந்த சமயத்திலும் கண்டுபிடிக்கப்பட்டு விடுவோம்” என்று எண்ணினான். ஆனால் நபிகள் நாயகம் “நம்பிக்கை இழக்காதே, அல்லாஹ் நம்முடன் இருக்கிறார்” என்றார். நபிகளைத் தேட வந்தவர்கள் அங்கும் இங்கும் தேடினார்கள் ; பிறகு சென்று விட்டார்கள். ஆச்சர்யமுற்ற அபு-பக்கர் குகைக்கு வெளியே நோக்கிய போது  நுழைவாயிலில் ஒரு சிலந்தி வலை பின்னியிருப்பதைக் கண்டு அதிசயித்தான். கூடவே அதன் பக்கத்தில் ஒரு புறா ஒரு கூட்டை அமைத்திருந்தது. குகைக்குள் ஒருவரும் நுழைந்து தேடாமல் விட்ட காரணம் புரிந்தது.  இருவரும் பத்திரமாக குகையை விட்டு அகன்றனர். ஒரு வழிகட்டியை துணைக்கழைத்துக் கொண்டு பாலைவனத்தைக் கடந்து மதினாவை அடைந்தனர். மதினாவை சென்றடைய அவர்களுக்கு ஏழு நாட்கள் பிடித்தன.

  • பாரதி கவிதைகள்

    போன வருடம் ஒரு கட்டுரையில் “பாரதி மாயை” என்ற சொற்றொடரை முதல் முறையாகப் படித்தேன். அப்போது பாரதியின் ”மாயையைப் பழித்தல்” என்ற கவிதையின் கீழ்க்கண்ட வரி என் நெஞ்சில் ஓடிற்று :-

    “உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ?”

    எனக்கும் பாரதிக்குமிடையிலான உறவு எப்போது தொடங்கியது? கையடக்க ”பாரதியார் கவிதைகள்” புத்தகம் அன்பளிப்பாக கிடைத்தபோதுதான் என்று நினைக்கிறேன். ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்புத்தகம் கிடைத்தவுடன் நான் புத்தகத்தைப் பிரித்து படித்த முதல் பாடல் என்ன என்று எனக்கு இன்னும் நன்றாக ஞாபகமிருக்கிறது.

    “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்”

    எங்கள் வீட்டின் பின்புறம் துணி துவைக்கும் கல் ஒன்று இருந்தது. என் அன்னையார் என்றும் அக்கல்லை துணி துவைக்கப் பயன்படுத்தியது கிடையாது. ஈரமே ஆகாமல், உட்கார ஏதுவாக இருக்கும். வீட்டின் பின்புறம் யாரும் இல்லாதபோது துணி துவைக்கும் கல் ஆசனத்தில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு ஒரு வித கர்வத்துடன் பாரதியின் கவிதைகளை சத்தம் போட்டு படிப்பது வழக்கமாகி விட்டது.

    “எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே – அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே” என்று ஒரு நாள் பாடிக் கொண்டிருந்தேன். ”என்ன சத்தம் அங்கே?” என்று வீட்டின் பின்புறச் சந்திலிருந்து ஒரு குரல் கேட்டது. நான், “யாரு கேக்கறது?” என்று கேட்டுவிட்டு என் உரத்த வாசிப்பை சற்று நிறுத்தினேன். கிணற்றுக்குப் பின்னால் உயரமாக வளர்ந்து நிற்கும் தென்னை மரத்தின் கீற்றுகள் அசைந்து இனிமையான ஒலியெழுப்பின. ”பாடம் படிக்கிறிங்களா தம்பீ?” என்று மீண்டும் அந்த குரல். பழக்கப்பட்ட குரலாக தெரிந்தது. ஆனால் யாருடைய குரல் என்று என்னால் ஊகிக்க இயலவில்லை. ”இல்லை…பாடம் இல்லை…பாரதி பாடல் படிச்சுக்கிட்டு இருக்கேன்” என்றேன். “அப்படியா….” என்று சொல்லி விட்டு அக்குரல் பாடத் துவங்கியது.

    “தேடியுனைச் சரணடைந்தேன், தேச முத்து மாரி! கேடதனை நீக்கிடுவாய், கேட்ட வரந்தருவாய்”

    முத்துசாமியின் குரல். எங்கள் காலனியின் தோட்டக்காரன். பின்புறச் சந்தில் இயற்கையின் அழைப்புக்கு பதிலளித்துக் கொண்டிருந்தான். கையில் புகையும் பீடி. வாயில் பாரதி பாட்டு.

    ஒருநாள் மாலை எங்கள் வீட்டு முன்புறத் தோட்டத்தில் ”வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே” படித்தவாறு அமர்ந்திருந்தேன்.

    “ஒற்றைக் குடும்பந் தனிலே – பொருள் ஓங்க வளர்ப்பவன் தந்தை; மற்றைக் கருமங்கள் செய்தே – மனை வாழ்ந்திடச் செய்பவள் அன்னை ஏவல்கள் செய்பவர் மக்கள் – இவர் யாவரும் ஓர் குலமன்றோ மேவி அனைவரும் ஒன்றாய் – நல்ல வீடு நடத்துதல் கண்டோம்”

    ஒரு பந்து வந்து புத்தகம் மீது விழுந்தது. கையடக்கப் புத்தகம் தவறி தரையில் எகிர்ந்தது. அட்டை கழண்டு வந்துவிட்டது. பக்கத்து மாளிகை வீட்டின் தோட்டத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த என் நண்பன் – மணிகண்டன், மதிற்சுவரின் மேலிருந்து எட்டிப் பார்த்து “பாலை எடுத்துக் குடுடா” என்ற ஆணையிட்டான். “தர மாட்டேன் போடா!” என்று திரும்பக் கத்தினேன். “பால் இன்னும் ஒரு நிமிஷத்துல என் கைக்கு வராட்டி உன் கையில் இருக்கும் புக்கை தூக்கி சாக்கடையில் போட்டு விடுவேன்” மணிகண்டன் சொன்னதைக் கேட்டவுடன் என் கோபம் எல்லை மீறி பக்கத்து வீட்டுக்கு போனேன். நானும் மணிகண்டனும் ஆக்ரோஷமான சண்டையில் ஈடுபட்டோம். மணிகண்டன் வாயில் “பொன்மொழிகள்” கொப்பளித்தவாறு இருந்தன. நான் அவன் கன்னத்தில் இரண்டு முறை அறைந்து விட்டேன். அவன் என்னை எத்தனை முறை அறைந்தான் என்று நினைவில்லை. மண்ணில் உருண்டு புரண்டோம். மற்ற நண்பர்களுக்கு நல்ல கேளிக்கையாக இருந்தது. மணிகண்டனின் தந்தை வந்து எங்களை விலக்கினார். திண்ணையில் கிடந்த பாரதியார் கவிதைகள் புத்தகத்தை எடுத்து கிழிந்து வந்திருந்த அட்டையை ஒட்ட முயற்சித்தேன். மணிகண்டன் மட்டுமல்ல, மற்ற பிற நண்பர்களும் என்னைச் சீண்ட நினைக்கும்போது, பாரதியைப் பற்றி ஏதாவது சொல்லி என்னைக் கோபப்படுத்துவார்கள். கோபம் மீறி அழுதும் இருக்கிறேன். அப்படி ஒரு கண்முடித்தனமான பித்து. வளரும் வயதில் சினிமா நடிகர்கள் அல்லது விளையாட்டு வீரர்கள் மேல் இருக்கும் பக்தி மாதிரி. என் சொந்த அண்ணன் ஒரு முறை செய்த சீண்டலில் கேவிக் கேவி அழுது தொண்டை வலி ஏற்பட்ட கதையும் உண்டு. தண்டனையாக என் அண்ணனிடம் பல நாட்கள் பேசாமல் இருந்தேன்.

    “உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ? – நன்னெஞ்சே! தெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும் சேர்த்தபின் தேனோமோ? – நன்னெஞ்சே!”

    என் தந்தைக்கு தெரிந்த ஒருவர் இல்லறம் துறந்தவர். கதிர்காமத்தைச் சேர்ந்தவர். எங்கள் ஊரை ஒட்டி ஓடும் காவிரியின் கிளை நதி ஒன்றின் கரையில் குடிசை போட்டு வசித்திருந்தார். அவருடைய குடிலுக்கு ஒரு நாள் என் தந்தையுடன் சென்றிருந்தேன். பாரதியார் கவிதைகள் மேலிருந்த என் காதலைப் பற்றி பெருமையுடன் அவரிடம் என் தந்தை சொன்னார். ”பாரதியார் எழுதியதில் உனக்குப் பிடித்ததொன்றை சொல்” என்று என்னைக் கேட்டார்.

    “எண்ணிற் கடங்காமல் எங்கும் பரந்தனவாய் விண்ணிற் சுடர்கின்ற மீனையெல்லாம் – பண்ணியதோர் சக்தியே நம்மைச் சமைத்ததுகாண் நூறாண்டு பக்தியுடன் வாழும் படிக்கு”

    இது என்ன பா என்று தெரியுமா உனக்கு?”

    அதெல்லாம் தெரியாது… ஆனால் இவ்வரிகள் பிடிக்கும்”

    “இது வெண்பா. இதை சங்கராபரண ராகத்தில் பாடினால் பொருத்தமாக இருக்கும்” என்று புன்னகைத்தார். விடைபெறும்போது சுவாமி சித்பவானந்தரின் கீதை உரைப் புத்தகத்தை எனக்கு பரிசளித்தார் அந்தப் பெரியவர். பள்ளியில் போட்டிகள் எதிலும் பங்கு கொண்டதில்லை. எனவே பரிசு எதுவும் கிடைத்ததில்லை. முதன்முதலில் எனக்குக் கிடைத்த அந்தப் பரிசையும் பாரதி கவிதைதான் பெற்றுத் தந்தது. துரதிர்ஷ்டவசமாக அந்த பரிசுப் புத்தகம் தொலைந்து விட்டது.

    “வேத வானில் விளங்கி ‘அறஞ்செய்மின், சாதல் நேரினுஞ் சத்தியம் பூணுமின் தீத கற்றுமின்’ என்று திசையெலாம் மோத நித்தம் இடித்து முழங்கியே ………………………………………………………………………………… மலர்ச் செங்கணாய நின் பதமலர் சிந்திப்பாம்”

    பாரதியார் கவிதைகள் புத்தகத்தை சதா கையில் சுமந்த வண்ணம் அலைந்து திரிந்த நாட்கள் மறைந்து, பாரதியின் கருத்துகளை மனதில் சுமக்கும் இளைஞனானேன். பாரதியின் பல பாடல்கள் மனப்பாடம். யாராவது பாரதியைப் பற்றி பேசினால் “என் சொந்தக்காரரைப் பற்றி இவர் எப்படி பேசலாம்?” என்பது மாதிரி பாரதியை சொந்தம் கொண்டாடிய தருணங்கள் பல உண்டு.

    “வாயினால் சொல்லிடவும் அடங்கா தப்பா; வரிசையுடன் எழுதிவைக்க வகையும் இல்லை ஞாயிற்றை சங்கிலியால் அளக்க லாமோ? ஞானகுரு புகழினை நாம்வகுக்க லாமோ?”

    கல்லூரி முடிந்து வேலை செல்லத் துவங்கியபிறகு பாரதியுடனான பிணைப்பு புறவுலகுக்கு அவ்வளவாக தெரியாவண்ணம் வைத்துக் கொண்டேன். மனக்குழப்பம் ஏற்படுகின்ற பொழுதுகளில் மட்டும் பாரதியின் கவிதைகள் மருந்து சாப்பிடுவது போல படிப்பேன். எதிர்காலம் பற்றிய பயம் ஏற்படுகிறபோதெல்லாம், மனந்தளர்வுறும் பொழுதுகளில் எல்லாம், கீழ்க்கண்ட வரிகளை மந்திரம் போல் உச்சரிப்பேன் :-

    “சொல் ஒன்று வேண்டும் தேவ சக்திகளை நம்முளே நிலை பெறச் செய்யும் சொல் வேண்டும்”

    “தெளிவுறவே அறிந்திடுதல் ; தெளிவுதர மொழிந்திடுதல் ; சிந்திப் பார்க்கே களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவுபல காட்டல்; கண்ணீர்த் துளிவரஉள் ளுருக்குதல், இங்கிவையெல்லாம் நீ அருளும் தொழில்களன்றோ?”

    பேச்சிலராக இருந்த நாட்களில் பாரதி வெறும் புகைப்படமாக நான் தங்கிய அறைகளில் தொங்கிக் கிடந்தார். நெடுநாளாய் பத்திரமாய் வைத்திருந்த கையடக்கப் பிரதி எங்கோ தொலைந்து போனது. இன்னொரு பிரதியெதுவும் வாங்கவில்லை. பாரதியுடனான உறவு உறைந்து போய்விட்டதென்று நினைத்துக் கொண்டிருந்தேன். “பாரதி மாயை” என்ற சொற்றொடரை படித்ததும் என்னுள் பழைய நினைவுகள் புத்துயிர் பெற்றன. கட்டுரையாசிரியருக்கு நன்றி செலுத்த வேண்டும். பாரதியின் கவிதைகளில் சில கவிதைகள் மட்டுமே நல்ல கவிதைகள்; மற்றவையெல்லாம் சாதாரணமான கவிதைகள்தாம் என்று அவர் வாதாடினார். பாரதியைக் கொண்டாட அவருடைய இலக்கிய அந்தஸ்து முக்கியமில்லை என்ற கொள்கைக்கு வந்துவிட்டவன் நான். சோர்வுற்ற நெஞ்சுக்கு மருந்தளிக்கும் வரிகளைத் தருபவர் மகாகவியா இல்லையா என்பது முக்கியமில்லை. வாழ்வுப் பயணத்தின் வழி நெடுக தன்னுடைய ஜீவவரிகளால் முன்னேறும் உந்துதலைத் தந்து கொண்டிருக்கும் பாரதி, மிகச்சிறந்த கவிஞராக இல்லாது போகட்டும். எனக்கு கவலையில்லை.

    “பிழைக்கும் வழி சொல்ல வேண்டுமென்றாலொரு பேச்சினிலே சொல்லு வான் உழைக்கும் வழி வினை யாளும்வழிபயன் உண்ணும் வழியுரைப் பான் அழைக்கும் பொழுதினிற் போக்குச் சொல்லாமல் அரைநொடிக் குள்வரு வான் மழைக்குக் குடை பசி நேரத் துணவென்றான் வாழ்வினுக் கெங்கள் கண்ணன்”

    கடந்த ஒரு வருடத்தில் பாரதியுடனான தொடர்பு புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. ஒர் இலக்கிய மன்றத்தில் உரையாடும் வாய்ப்பு முதல்முறையாக எனக்கு கிடைத்தபோது மேடைபயம் வாட்டியது. உரையைத் தொடங்கும்போது பாரதியின் மந்திரம் ஒன்றோடுதான் தொடங்கினேன்.

    “பயமெனும் பேய்தனை அடித்தோம் பொய்மைப் பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்”

    பாரதி மாயை” விடாது வளர்ந்து வருகிறது. அடுத்த தலைமுறையையும் விடவில்லை. தில்லியில் வசிப்பதால் என் மூத்த மகள் பூஜாவுக்கு பாரதி கவிதை மட்டுமல்ல தமிழே தொலைதூரம்தான். கோடை விடுமுறை ப்ராஜெக்ட் வொர்க்கில் சுதந்திர போராட்ட வீரர் ஒருவரை பாத்திரமாக வைத்து காமிக்ஸ் தயாரிக்க வேண்டியிருந்தது. அவளாகவே ஒருவருடைய துணையுமில்லாமல் தயாரித்த காமிக்ஸின் நாயகனாக வருவது சாக்‌ஷாத் நம்ம தலைப்பா கட்டு பாரதிதான். o

    “மந்திரங் கூறுவோம். உண்மையே தெய்வம் கவலையற்றிருத்தலே வீடு. களியே அமிழ்தம். பயன்வருஞ் செய்கையே அறமாம். அச்சமே நரகம். அதனைச் சுட்டு நல்லதை நம்பி நல்லதே செய்க”

    நன்றி : ஆம்னிபஸ் வலைதளம் (http://omnibus.sasariri.com/2012/12/blog-post_11.html?spref=fb)

  • லைஃப் ஆஃப் பை

    Life-of-Pi-Movie-Poster-Horizontal1லைஃப் ஆப் பை – திரைப்படத்தை இன்று பார்த்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தைகள் இல்லாமல் தனியாக நானும் என் மனைவியும் சென்று பார்த்த படம் என்ற சிறப்பு இப்படத்திற்கு கிடைத்திருக்கிறது. வார நாள் என்பதால் கூட்டமில்லாமல் இருக்கும்; காலை 10 மணிக்காட்சிக்கு ஒன்பதரை மணிக்கு சென்றால் எளிதில் டிக்கட் வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் மல்டிப்ளெக்ஸுக்குள் நுழைந்தால் கவுன்டரில் நீளமாக க்யூ. இளவட்டங்கள் கையில் புத்தகங்களில்லாமல் கேர்ள்-ஃப்ரண்ட்ஸ் சகிதமாக அதிகாலை ஒன்பது மணிக்கே படம் பார்க்க வந்து விட்டிருந்தனர். அக்காலத்தில் கல்லூரியில் படிக்கும் நாட்களில் கட் அடித்து விட்டு மாடினி ஷோ தான் போவது தான் நம்மூர் வழக்கம். தில்லியில் கல்லூரிகள் அதிகாலையில் துவங்குவதால் பத்து மணி ஷோவுக்கு வர முடிகிறது போலும். ஹ்ம்ம் இனிமேல் வார நாட்களில் வருவதாக என்றாலும் இணையம் வாயிலாக டிக்கெட் வாங்குவதே உத்தமம். தொந்தி வயிறுடன், மஞ்சள் நிற டர்பன் அணிந்து க்யூவில் என் முன்னால் நின்றிருந்த சர்தார்ஜி இளைஞன் மோபைல் போனில் “இப்போது என்னால் பேச முடியாது…என் லெக்சர் ஹாலில் இருக்கிறேன்” என்று யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தான்.

    என்னுடைய நண்பர் ஒருவர் “லைஃப் ஆஃப் பை பார்த்தாயா?” என்று இரண்டு நாட்கள் முன்னால் என்னிடம் கேட்டார். “பார்க்க ஆசை…ஆனால் இன்னும் இல்லை” என்றேன். அதற்கு அவர் “நான் பார்த்துவிட்டேன். எனக்கொன்றும் சிறப்பான படமாக எனக்கு தோன்றவில்லை. ஒரு வேளை எனக்கு புரியாத எதாவது ஒன்று உனக்குப் புரியலாம். அப்படி புரிந்தால் எனக்கு சொல்.”. இவரைப் போல சிலரை நான் சந்தித்திருக்கிறேன். ”படம் மோசமான படம் இல்லை. ஆனால் தூக்கி வைத்துக் கொண்டு ஆடத் தகுந்த படமும் இல்லை. இப்படத்தை எப்படி விமர்சிப்பது?” என்ற குழப்பத்தில் இருப்பார்கள்

    திரைப்படம் முடிந்து ஹாலை விட்டு வெளியே வந்த போது நண்பருக்கேற்பட்ட அதே குழப்பம் எனக்கும். குறை சொல்கிற மாதிரி இல்லை…ஆனாலும் ஒரு நிறைவு இல்லை.

    யான் மார்டேல் என்ற கனடிய எழுத்தாளர் எழுதி 2001இல் வெளிவந்த ஆங்கில நாவல் – லைஃப் ஆப் பை (Life of Pi) – தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். அமெரிக்க அதிபர் ஒபாமா தம்மை மிகவும் கவர்ந்த கதை என்று யான் மார்டேலுக்கு கடிதம் எழுதிப் பாராட்டியிருக்கிறார் என்பது இந்நாவலுக்கான கூடுதல் கவர்ச்சி. இந்நாவலை படமாக எடுப்பது முடியாத காரியம் என்ற கருத்து நிலவி வந்திருக்கிறது. மனோஜ் ஷ்யாமளன் அவர்கள் இப்படத்தை இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தின் கதாநாயகன் போன்று மனோஜும் புதுச்சேரியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Hidden Dragon Crouching Tiger, Brokeback Mountain போன்ற மிகவும் பேசப்பட்ட படங்களை இயக்கிய அங் லீ இயக்கியிருக்கிறார்.

    லைஃப் ஆஃப் பை-யில் எல்லாமே அழகாக இருக்கின்றன. வன விலங்குகள், கடும் சூறாவளி, தாவி வரும் ராட்சத கடல் அலைகள், ஒளிரும் விண்மீன்கள், நாயகன் வந்தடையும் ஒர் ஊனுண்ணித் தீவு – எல்லாமே சுந்தர சொரூபம். 3D தொழில் நுட்பத்தில் பகட்டுடன் செதுக்கப்பட்ட காட்சிகள். இத்திரைப்படத்தின் முக்கியமான ப்ளஸ் காட்சியமைப்பே. Visually Brilliant.

    கதையின் நாயகன் பை தான் ஒரு புலியுடன் ஒர் ஆபத்துப்படகில் சிக்கி 227 நாட்கள் தங்கி பின்னர் கரையொதுங்கிய அனுபவத்தை ஒரு எழுத்தாளரிடம் பகிர்ந்து கொள்வது தான் கரு. வளர்ந்த பை-யாக இந்தி நடிகர் இர்ஃபான் கான் நடித்திருக்கிறார். பை கதை சொல்லத் தொடங்கும் போது “இக்கதையின் முடிவில் கடவுள் இருக்கிறார் என்பதை நீ ஒத்துக் கொள்வாய்” என்ற பீடிகையோடு துவங்கும்; பீடிகை ஏற்படுத்திய எதிர்பார்ப்பு தான் என் நண்பரின் குழப்பத்துக்கு காரணமாகியிருக்கும் என்று இப்போது புரிகிறது.

    பை தன் குழந்தைக் கால அனுபவங்களை பகிரத்தொடங்கி, இந்து, கிறித்துவ, மற்றும் இஸ்லாமிய சமயங்களில் தனக்கேற்பட்ட ஆர்வத்தைப் பற்றி பேசுகிறான். நிஜமாகவே இப்படம் கடவுளைப்பற்றித் தான் பேசப் போகிறதாக்கும் என்று சீட்டின் முன்பாகத்தில் உட்கார்ந்து பார்க்கத் தொடங்கினேன். பையின் தந்தை நடத்தி வந்த விலங்குக் காட்சி சாலையை மூடி தன் குடும்பத்தோடு தன்னுடைய விலங்குகளையும் எடுத்துக் கொண்டு கனடா பயணமாகும் போது கப்பல் மூழ்கி குடும்பத்தினர் எல்லாம் இறந்து போக, ஒரு கழுதைப் புலி, ஒராங்-உடாங், வரிக்குதிரை, புலி – இவற்றுடன் பை மட்டும் உயிர்க்காப்புப் படகில் உயிருக்குப் பாதுகாப்பின்றி சிக்கிக் கொள்கிறான். மற்ற மிருகங்களெல்லாம் இறந்து போய், புலியும் பையும் மற்றும் மிஞ்சுகிறார்கள். பதின் பருவ பையாக புது நடிகர் – சூரஜ் ஷர்மா – சிரத்தையாக நடித்திருக்கிறார், நடிப்புத்துறையில் ஒரு சுற்று வருவார் என்று நம்பலாம்.

    தப்பித்து உயிர் வாழ்வதற்கான போராட்டம் தொடங்குகிறது. பைக்கு மட்டுமில்லை. புலிக்கும் தான். பை சந்திக்கும் ஆபத்துகளிலிருந்து தப்பி, தன்னைக் காத்துக்கொண்டு, புலியையும் காக்கும் முயற்சிகளை அழகான ஆழச்சித்திரங்களால் (3D துணை கொண்டு) உயிர்ப்படுத்தி இருக்கின்றார் அங் லீ. கரடுமுரடான கடல்,தொண்டை வறட்சி, அபூர்வ கடல் உயிரினங்களை எதிர் கொள்ளல், பட்டினி…இவற்றுடன் லேசான மேஜிக் ரியலிச அனுபவங்கள் என்று பையின் அனுபவம் நீள்கிறது. நிஜமும் கிராஃபிக்ஸும் ஒன்றிணையும் படியான காட்சிகள் தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளன. கணினியால் உருவாக்கப்பட்ட 3D உருவத்தொகுதிகள் முற்றிலும் நம்பும் படியாக அமைந்துள்ளன.

    கடவுளுக்கான ஆதாரங்கள் என்று இத்திரைப்படம் எதைச் சொல்ல வருகிறது என்று எனக்கு கடைசி வரை புரியவில்லை. எழுப்பப்பட்ட வினாக்களுக்கு விடை கடைசியில் கிடைக்கும் என்று பார்த்தால், பை-யை விட்டுவிட்டு காட்டுக்குள் சென்று மறைந்து விடும் நன்றி கெட்ட புலியின் மீதான கோபம் தான் எஞ்சுகிறது. ஜப்பானிய விசாரணையாளர்களுக்கு சொன்ன வெர்ஷன் என்று பை கூறும் இரண்டாவது கதை எதற்கு என்று விளங்கவில்லை. ஒரு மாதிரி தொய்ந்த சாதாரணமான முடிவின் மூலமாக கடவுள் பற்றிய என்ன ஆதாரத்தை படம் சொல்ல வருகிறது? பை கடலில் இருக்கும் போது காணும் பறக்கும் மீன் கூட்டங்கள், மினுங்கும் ஊனுண்ணி பாசிகள் என்ற விதவிதமாக, அறிவியல் பூர்வமாக விளக்கத்தக்க விஷயங்களையா கடவுளின் ஆதாரம் என்று சொல்வது? அல்லது 227 நாட்கள் நம்பிக்கையிழக்காமல் போராடிய பையின் மன தைரியத்தையா? எனக்கென்னவோ இத்தகைய தருக்க பாவனையில்லாமல் இத்திரைப்படம் எடுக்கப் பட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று படுகிறது. லைஃப் ஆஃப் பை நாவல் வடிவத்தில் இத்தருக்கம் ஒழுங்காக அடுக்கப்பட்டிருக்கலாமோ என்னமோ? நாவலைப் படித்தவர்கள் தான் சொல்ல வேண்டும்.

    நிச்சயமாக லைஃப் ஆஃப் பை மோசமான படம் இல்லை. ஒரு பதின் பருவத்தினன் கடலில் இருந்து தப்பும் உயிர்ப் போராட்டம் மற்றும் ஒரு புலியுடனான பிணைப்பு – இது தான் சாரம். கடவுள், ஆன்ம வேட்கை போன்ற கடினமான கேள்விகளுக்கான விடைகள் எதையும் லைஃப் ஆஃப் பை தேடவில்லை. வெறும் ஓசைகளை மட்டும் எழுப்புகிறது.

  • எழுத்துக்குத் தடை

    “Writer’s Block” என்று சொல்வார்கள். தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் ஒர் எழுத்தாளருக்கு எதுவுமே எழுதத் தோன்றாமல் இருக்கும் ஒரு phase-ஐ அப்படி சொல்வார்கள். கற்பனை சரிவர எழாது. “rhythm”ஐ இழந்து போயிருப்பார். சொந்த வாழ்க்கை ஏற்பட்ட சில துயர சம்பவங்களாலோ, துக்க நிகழ்வுகளாலோ எழுத்தாளருக்கு இப்படியொரு “block” ஏற்படக்கூடும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.

    ஆகஸ்டு 16க்குப் பிறகு ஒன்றும் எழுதவில்லை. ஒரு வரி கூட. அலுவலகத்தின் வேலைப் பளுவோ, அலுவல்கள் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களோ, அலுவலகம் இடம் மாறிய பிறகு தினமும் இரண்டு மணி நேரம் காலை – மாலை பயணம் செய்ய வேண்டியிருப்பதால் ஏற்பட்ட உடற் களைப்போ…..எது காரணம் என்பது புரியவில்லை?

    எழுதத் தொடங்கு முன்னர் எனக்கு கணினி திரை அவசியம். எல்லாருக்கும் தான் இது அவசியம். இக்காலத்தில் யார் பேனாவை எடுத்து தாளில் எழுதுகிறார்கள்? எல்லோருமே நேராக கணினியில் தட்டச்சு தானே செய்கிறார்கள் என்று ஒருவர் கேட்கலாம். உண்மை தான். நான் அதை சொல்ல வரவில்லை. ஒரு கரு சிந்தனையில் தோன்றுகிறது. அதை மனதிலேயே வார்த்தைகளைப் போட்டு முழு வடிவம் தர முடிவதில்லை. ஒரு கணினி முன்னால் உட்கார்ந்து தட்டச்சு செய்ய ஆரம்பிக்கும் போது தான் சரியான வார்த்தைகள் வந்து விழ, சிந்தனையில் உருவான கருவும் வளர்ந்து கவிதையாகவோ கதையாகவோ அல்லது கட்டுரையாகவோ வடிவம் கொள்கிறது.

    கணினி இல்லையென்றால் என்னாகும்? காகிதத்தை வைத்துக் கொண்டு எழுத உட்கார “மூட்” வருவதில்லை. அலங்காரமில்லாமல் சொல்வதானால், சோம்பேறித் தனத்தை உதறி எழுத ஆரம்பிக்க முடிவதில்லை என்பதே உண்மை. அப்படியே எழுத ஆரம்பித்தாலும் கோழிக் கிறுக்கலாகப் போய் விட்ட என் கையெழுத்தைப் பார்க்கும் போது எனக்கே அவமானமாக இருக்கும். கையால் எழுதியவற்றை பின்னர் தட்டச்சு செய்யும் போது என்ன எழுதியிருக்கிறோம் என்று தடுமாறி விழிக்கும் பிரச்னை வேறு. “என்னப்பா…இவ்ளோ அசிங்கமா இருக்கு உன் கையெழுத்து” என்று என் மூத்த மகள் வேறு கேள்வி கேட்பாள். “இல்லேடா கண்ணு….அப்பா ஆஃபீஸில் பல வருஷங்களா கம்ப்யூட்டர்லயே வேலை பண்றதால கையில் எழுதி பழக்கமில்லாம போயிடுச்சு…சின்ன வயசுல என் கையெழுத்து மணி மணியா இருக்கும்” என்று மொட்டைக் காரணத்தோடு ஒரு பொய்யையும் சேர்த்து சொல்லி தப்பிக்கப் பார்ப்பேன்.

    இதில் இன்னொரு விஷயத்தையும் நான் கவனித்திருக்கிறேன். இரண்டு வரிகள் தமிழில் எழுதியவுடன் கை வலிக்க துவங்கிவிடும். என்னுடைய நண்பன் ஒருவன் ஒரு விசித்திரமான ஆலோசனை வழங்கினான். ஆங்கிலத்தில் எழுதினால் கை வலி குறைவாக இருக்கும் என்று. இது எத்தனை தூரம் உண்மை என்று எனக்கு தெரியாது.

    ரீடிங் ரூமில் இருக்கும் கணினி திரையில் ஏதோ கோளாறு. குழந்தைகள் இப்போதெல்லாம் ஐ-பேட்-ல் பிசியாக இருப்பதால் கணினி பக்கம் வருவதில்லை. எனவே அவர்களால் இந்தப் பழுது ஏற்பட்டிருக்க சாத்தியமில்லை. மூன்று வாரங்களாக கம்ப்யூட்டர் டெக்னீஷியனை கூப்பிட்டு சரி செய்ய வேண்டும் என்று பார்க்கிறேன். ஆனால் தள்ளிக் கொண்டே போகிறது.

    ஆகஸ்ட் 16க்கு பிறகு ஏற்பட்ட இந்த எழுத்து இடைவெளி “writer’s block” ஆக இருக்கலாமோ என்ற ஐயம் அவ்வப்போது தோன்றி என்னை மகிழ்ச்சிப் படுத்திக் கொண்டிருந்தது. எழுத்தாளர்களுக்கு தான் block வரும் எனில் நான் எழுத்தாளன் ஆகி விட்டேன் என்று தானே பொருள்.

    ஒரு நாள் மாலை வீடு திரும்பிய போது என் இளைய மகள் (ஏழு வயதாகிறது !) ஸ்டைலாக உட்கார்ந்து கணினியில் கேம் விளையாடிக் கொண்டிருந்தாள். “அம்மா கம்ப்யூட்டர் காரனை கூப்பிட்டாளா” என்று கேட்டேன். “அதெல்லாம் எதுக்கு…ஸ்க்ரீன் chord லூஸா இருந்தது…அதை நானே சரியா மாட்டி விட்டுட்டேன்” என்று சாதாரணமாக சொன்ன படி கணினித் திரைக்குள் மின்னல் வேகமாக மதில் சுவரில் ஓடிக்கொண்டே இருந்தவனை ஒரு லாங்-ஜம்ப் செய்ய வைத்து குழியில் விழ வைத்து சாகடித்தாள் (கம்ப்யூட்டர் கேமில் அய்யா!). ஐ-பேட்-டின் சார்ஜர் தொலைந்த வேளையில் என் குழந்தைகளின் கவனம் கணினியில் பட அது உயிர் பெற்று விட்டது.

    இந்தப் பகிர்வு மொக்கையான (’தட்டையான’ – இலக்கியச் சிற்றிதழ் படிக்கும் பழக்கம் உள்ளவருக்கு) வாசிப்பனுபவத்தை தந்தால் மிகவும் மெதுவாக விலகிக் கொண்டிருக்கும் என்னுடைய writer’s block ஐத் தான் குற்றம் சொல்ல வேண்டும். இதை வாசித்து மிகவும் சலித்துப் போனவர்கள், இடுகைக்கு தரப்பட்டிருக்கும் தலைப்போடு “வேண்டும்” என்ற சொல்லையும் சேர்த்து மறு தலைப்பிட்டுக் கொள்ளலாம்.

  • எனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்

    Image

    (தில்லிகை இலக்கிய வட்டத்தில் 11.8.2012 அன்று ஆற்றிய உரை)

    எல்லோருக்கும் வணக்கம். நான் மேடையேறிப் பேசுவது இதுதான் முதல் முறை. நெஞ்சுக்குள் நடுக்கம். கொஞ்சம் பதற்றம். நாக்கு குழறலாம். உச்சரிப்பு குளறுபடியாகலாம். வானிலை அறிக்கை வாசிப்பது மாதிரி உன் மனதின் கால நிலை பற்றி எங்களுக்கு ஏன் சொல்லுகிறாய் என்று யாரும் எழுந்து என்னைக் கேட்பதற்கு முன்னால், நான்கு வரி பாரதி கவிதையை சொல்லி விட்டு என் உரையை ஆரம்பித்து விடுகிறேன்.

    ”பயமெனும் பேய் தனை அடித்தோம் – பொய்மைப்

    பாம்பைப் பிளந்துயிரை குடித்தோம்

    வியனுலகனைத்தும் அமுதென நுகரும்

    வேத வாழ்வினைக் கைப்பிடித்தோம்”

    அசோகமித்திரன் எழுதும் கதைகளில் வரும் மாந்தர்கள் நாம் தினசரி வாழ்க்கையில் சந்திப்பவர்கள். சாதாரணத்துவத்தை எழுதிக் கொண்டே இருத்தல் குறித்த அவஸ்தைகளை புட்டுபுட்டு வைக்கும் எழுத்து அசோகமித்திரனின் எழுத்து.

    எளிய சொற்கள் ; அலங்காரங்கள் இல்லாத நடை ; சாதாரண மனிதர்களே பாத்திரங்கள். சிக்கனமான வாக்கியங்கள் ; தேவைக்கு அதிகமாக ஒரு வாக்கியத்தையும் கதைகளில் பயன் படுத்தாதிருத்தல் ; தோலைச் சீவி உட்பொருளை அருகிருந்து உற்று நோக்கும் அணுகுமுறை. இவை அசோகமித்திரனுடைய சிறுகதையின் அம்சங்கள்.

    அவருடைய கதைகள் வாழ்க்கையின் சுவையற்ற தன்மையை விவரித்தாலும்,  தினசரி தவிப்புகளைத் தாண்டிய, அதை விடப் பெரிதான ஏதொவொன்றை நுட்பமாக புலப்படுத்துபவை. அன்றாட கவலைகளை பேசிக்கொண்டே மானுடத்தின் உயர் உணர்வுகளை தொட்டுச் செல்பவை.

    “கண்கள்” என்றொரு சிறு கதை. முதன்முதலாக கண்ணாடி அணிந்து சாலையில் செல்லும் ஒருவனின் சில நிமிட அனுபவங்களை சொற் சித்திரமாக தீட்டியிருப்பார் ஆசிரியர்.

    “ஒரு சிலரை நேருக்குநேர் பார்த்துவிட்டால் உடனே தான் அவர்களுக்குக் கடமைப்பட்டவன் போன்ற உணர்வு வந்துவிடுகிறது.” என்று ஒரு வரி வரும். இவ்வரியை படிக்கும் போது தொடர்ந்து வாசிக்காமல் அந்த வரியையே அசை போட்டுக் கொண்டிருப்போம். சரி, இவ்வரியை அப்புறம் மேலும் யோசிக்கலாம் என்று முடிவெடுத்து கதையைத் தொடர்வோம். அதற்கடுத்து வரும் வரிகள் : “அது அந்த மனிதனுக்கும் தெரிந்துவிடுகிறது. பிச்சைக்காரர்கள் உயிர் பிழைத்திருப்பதற்கு இது ஒரு காரணமோ?”

    இப்படி வாசிப்பை தடுத்து நிறுத்தி சிந்தனையை முடுக்கும் வரிகளை தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தால் எப்போது கதையை படித்து முடிப்பது? கதையில் தொடர்ந்து பல வரிகள் நம் மனதில் புகுந்து எண்ணவோட்டத்தை ஆக்கிரமிக்கும்.

    சினிமாக் கொட்டகை வாசலில் அமர்ந்து பிச்சையெடுக்கும் ஒர் அம்மாளைப் பற்றி வரும். கண்களில் சதை வளர்ந்து அவள் கண் குருடாகும் நிலையில் பிச்ச்சையெடுத்துக் கொண்டிருப்பாள். அதே பிச்சைக்காரி இரவில் நடைபாதையில் தூங்குவாள். சுற்றிலும் பூரான், சுண்டெலி என்று ஜந்துக்கள் அலைந்து கொண்டிருக்கும். இவற்றை வருணித்துக் கொண்டே “சிறு தூறல் போட்டால்கூட ஒதுங்க இடம் தேட வேண்டும். கடைகளுக்கு முன்னால் வழக்கமாகத் தூங்குகிறவர்கள் இருப்பார்கள். புது ஆளுக்கு இடம் கிடைக்காது.” என்று சுருக்கமாக சொல்லி நம் மனசாட்சியை சுருக்கென குத்தி விட்டு கதை நகரும்.

    கதையில் எழுத்தாளர் பயன்படுத்தும் சில சொற்பிரயோகங்கள் மிகச் சுவையாக இருக்கும். அவற்றில் இரண்டை இங்கே பகிர்கிறேன்.

    ”ஏகப்பட்ட நசுங்கல்கள் கொண்ட ஒரு சிறிய அலுமினியத் தட்டு அவளருகில் இருக்கும்”

    ”குடுகுடுப்பைக்காரர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போது ஏதோ சங்கேத மொழி போல இருக்கிறது”

     உண்மையில் சொல்லப் போனால் கதையில் வரும் எல்லா வரிகளையுமே இவ்வுரையில் மேற்கொளாய் சொல்ல வேண்டும்.

    பழைய பிளேடுகளை பிச்சை கேட்கும் ஒரு குடுகுடுப்பைக் காரர் கதையில் வருவார். கம்பீரமான காஸ்ட்யூம் அணிந்து பார்ப்பவரின் கவனத்தை கவரத் தக்கவராக வலம் வரும் குடுகுடுப்பைக் காரரை யாரும் முக்கியமான ஆளாக கருதுவதில்லை. அவர் நல்ல நல்ல விசேஷமான வாழ்த்துச் செய்திகள் கூறினாலும் கூட பழைய பிளேடு தவிர அவருக்கு கிடைக்கக் கூடியதொன்றுமில்லை.

    முச்சந்தி சாலைக்கு நடுவில் கண்ணாடி அணிந்தவனைக் கொண்டு போவார் ஆசிரியர். ஒரு தொலைக்காட்சி காமிரா தோற்கும் வகையில் நாற்புற காட்சிகளை தெளிவுற சொற்களால் படம் பிடித்து நம் கண் முன் கொண்டுவருவார். டிராபிக் விளக்குகள், ட்ராபிக் கான்ஸ்டபிள்கள், அதிரடியாக சாலையைக் கடப்பவர்கள் என்று துல்லியமான காட்சி வர்ணனை.

    ”சாலைக் கடப்பு நிபுணர்கள்” என்று ஒரு சொற்றொடர் வரும். இவர்கள் வேறு யாரும் அல்லர் ; தைரியமாக மயிரிழை வித்தியாசத்தில் விபத்துகளை தவிர்த்து சாலையைக் கடந்து செல்பவர்கள். இத்தகைய ஒரு நிபுணரின் அருகில் சென்று அவருக்குப் பின்னால் நின்று அவரை அடிக்கு அடி சரிவர பின் தொடர்ந்தால் சாலையை எளிதில் கடந்து விடலாம் என்று அவரின் பின்னால் பச்சை விளக்கு விழுவதற்காக காத்திருக்கிறான்.

    அங்கே ஒர் இனிமையான பாத்திரம் நமக்கு அறிமுகப் படுத்தப் படுகிறது. “ஈர்க்குச்சி நுனியில் பஞ்சைச் சுற்றிய பிரஷ்” அதாவது “பட்ஸ்” விற்கும் ஒரு நோஞ்சான் பெண் பதற்றம் மிகு ட்ராபிக் சிக்னலில் இவனை சந்திக்கிறாள். “வாங்கிக்கோங்க” என்றவாறு இவன் பின்னே நிற்கிறாள். இவன் வேண்டாம் என்று சொல்கிறான். அவள் மேலும் இவனை மன்றாடுகிறாள். அன்று ஒன்று கூட விற்கவில்லை என்று ஆதங்கப் படுகிறாள். இவன் அவளிடம் ஒரு பத்து ரூபாயைக் கொடுத்து, “பட்ஸ் வேண்டாம் ; பத்து ரூபாய் வச்சுக்க” என்று சொல்லி சாலைக் கடப்பு நிபுணரின் பின் செல்ல யத்தனிக்கிறான். பச்சை விளக்கு விழுந்து விட்டது. அவளோ அவன் பின்னே தொடர்ந்து வருகிறாள். கிட்டத்தட்ட நடுசாலையில் அவனை நிறுத்தி “இதை வைச்சுக்க, சார். கார் எல்லாம் ரொம்ப நல்லாத் துடைக்கும்.” என்று சொல்லி ஒரு மஞ்சள் துணியை தருகிறாள்.  இவன் என்னிடம் கார் இல்லை ; சைக்கிள் கூட இல்லை என்றவாறே மஞ்சள் துணியை அவளிடம் திருப்பித் தர முயல்கிறான். “கண்ணாடியைத் துடைக்க வச்சுக்குங்க” என்று சொல்லிக் கொண்டு ஒரு மோட்டார் வண்டிக்காரருக்கு “பட்ஸ்” விற்க சென்று விடுகிறாள். அவன் அந்த மஞ்சள் துணியை எப்படிப் பயன்படுத்துவது என்று யோசித்துக் கொண்டே சாலையில் நின்று கொண்டிருப்பது போல கதை முடிவடைகிறது.

    படித்து வெகு நேரம் பின்னும் இக்கதை நம்முடன் பேசுகிறது. சமூகத்தின் apathy-யை விளிம்பு நிலை மக்களின் மேலுள்ள அக்கறையின்மையை இதை விட அழகாக சொல்லமுடியாது என்றே படுகிறது ! நம் பார்வையை துடைக்க நம் எல்லாருக்குமே ஒரு மஞ்சள் துணி தேவைப்படுகிறது என்று சொல்லாமல் சொல்லிவிடுகிறது “கண்கள்” சிறுகதை.

    இரண்டாவதாக நாம் பேசப்போவது “அவனுக்கு மிகப் பிடித்தமான நக்ஷத்ரம்” என்ற சிறுகதை. 1956 இல் தீபம் இதழில் வெளியானது. எளிமையான கதை. நெஞ்சை பிழியும் கதை. அற்ப விஷயங்களில் இருக்கும் ஈடுபாடு, அதன் பொருட்டு பிறரை மன்னிக்க முடியா மனப்பான்மை – இவ்விரண்டும் ஏற்படுத்தும் எதிர்பாரா விளைவுகளை நெகிழ்ச்சியுடன் சொல்லும் இக்கதை.  

    வீடு மாறி செய்திதாள்கள் போடப்படுவது சாதாரணமாக நிகழக்கூடியது தான். அதை வாசிப்பவருக்கு அது நம் வீட்டுக்கு போடப்படவேண்டிய செய்தித்தாள் இல்லை என்று தெரியும். இருந்தாலும், அதை புரட்டி பார்க்காமல் இருப்பதில்லை. இது மாதிரி தான் நிகழ்கிறது இக்கதையில். தவறுதலாக போடப்பட்ட செய்தித்தாளை வாசிக்கிறார் ராமசாமி அய்யர். அந்நேரம் புளி விற்கிறவன் வருகிறான். ஆறு வீசை புளியை வாங்கி செய்தித்தாளில் வைத்து வீட்டுக்குள் எடுத்து போகிறார். இதனால் செயதித்தாளில் புளி படிந்து லேசாக சேதமாகிவிடுகிறது. அந்த செய்தித்தாள் பக்கத்து வீட்டு இளைஞன் ஸ்ரீராமுடையது என்று தெரிந்தவுடன் இயன்ற வரை புளியை தட்டி பேப்பரை கொடுக்கிறார். முதல் பக்கத்தில் பிரபலமான தென்னிந்திய நடிகையின் முழு உருவப் படம் வந்திருக்கிறது. நடிகையின் படமெங்கும் புளியின் கறை. அழகியின் முகம் அலங்கோலமாகியிருந்தது. ஸ்ரீராம் கோபமுற்று ராமசாமி அய்யரிடம் சண்டை போடுகிறான். வாக்கு வாதம் ஏற்படுகிறது.

     இரண்டு நாட்கள் கழித்து ராமசாமி அய்யர் வேப்ப இலைகளை எடுத்துப்போவதை ஸ்ரீராம் பார்க்கிறான். ராமசாமி அய்யரின் மகனுக்கு அம்மை போட்டிருப்பதை ஸ்ரீராமின் அம்மா அவனிடம் சொல்கிறாள். வேலைவாய்ப்பு அலுவலகம், நூலகம், சினிமா – இங்கெல்லாம் ஸ்ரீராமுக்கு அன்று போக வேண்டியிருந்தது. அங்கெல்லாம் போவதற்கு முன்னால் சுகாதார இலாகாவுக்கு ஒரு மொட்டை கடிதம் எழுதி தபால் பெட்டியில் போடுகிறான். மாலையில் திரும்பி வருகிற ஸ்ரீராமுக்கு அதிகாரிகள் வந்து ராமசாமி அய்யரின் மகனை சுகாதார விதிகளின் படி வீட்டிலிருந்து எடுத்து போனதை பற்றி அவன் அம்மாவிடமிருந்து தெரிய வருகிறது. ராம சாமி அய்யர் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்து மகனை தேடி செல்கிறார். எவ்வளவு வேண்டியும் அதிகாரிகள் குழந்தையை வீட்டுக்கு எடுத்து போக முடியாது என்று மறுத்து விடுகின்றனர்.

     ஸ்ரீராமின் குற்றவுணர்வை மிக அழகாக இவ்விதம் பதிவு செய்கிறார் அசோகமித்திரன் :-

     “ஸ்ரீராமால் நிலை கொண்டு இருக்க முடியவில்லை. சாப்பாட்டை ருசித்து உண்ண முடியவில்லை. வீட்டு வெளிச்சுவர் அருகே நின்றுகொண்டு தெருவில் வருவோர் போவோரைப் பார்த்துக் கொண்டிருந்தான். மணி பத்துக்கும் மேலாகிவிட்டது. ஊரோசை அடங்கத் தொடங்கிவிட்டது. ரயில் நிலையம் அவன் வீட்டிலிருந்து அரைமைல் தூரத்தில் இருந்தது. அங்கு வண்டிகள் வந்து போகும் ஊங்கார சப்தம், லெவல் கிராஸிங்கில் அடிக்கும் மணியின் சப்தம், சக்கரங்கள் இருப்புப் பாதையில் உருளும் சப்தம், இவை எல்லாவற்றையும் ஸ்ரீராமால் மிகத் தெளிவாகக் கேட்க முடிந்தது. தன்னைச் சுற்றி ஊர் அடங்கி ஒடுங்கிப் போவதை அவன் அதற்கு முன்னால் உணர்ந்து கவனித்தது கிடையாது. வைத்தியக் கல்லூரியில் படிக்கும் அந்தக் கோடிவீட்டுப் பையனும் விளக்கை அணைத்து விட்டான். தெருவின் இரண்டு வரிசை வீடுகளும் கருத்த நிழல்களாகக் காணப்பட்டன. ஸ்ரீராமின் கண்கள் கனத்தன. அவன் படுக்கையில் சாய்ந்தான். அவனால் தூங்க முடியவில்லை. அவன் மறுபடியும் தெருவுக்கு வந்தான். அவன் வேஷ்டி மட்டும் அணிந்திருந்தான். அந்த வேளையில் எல்லாம் இருட்டாக இருந்தது. எல்லாரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவன் தன்னந்தனியாகத் தெருவில் காத்திருந்தான்.”

    கதையில் அந்த குழந்தை வீடு திரும்பாமலேயே இறந்து விடுகிறது..

    ஒரு மாதம் கழித்து கனமான மனதோடு ராமசாமி அய்யர் வீட்டுக்கு செல்கிறான். குழந்தையின் சுகமின்மையைப் பற்றி சுகாதார அதிகாரிகளுக்கு தெரியப் படுத்தியது தான்தான் என்று தெரிவிக்கிறான். ராமசாமி அய்யர் அதற்கு அமைதியாக தன் மனைவியை அழைத்து ஸ்ரீராமிடம்“இவளிடம் சொல்லு” என்கிறார். தான் செய்த தவறை ராமசாமி அய்யரின் மனைவியிடம் ஸ்ரீராம் சொல்கிறான். அவள் தன்னை கொடூரமாக சாபமிடப்போகிறாள் என்று எண்ணிக்கொண்டிருந்த ஸ்ரீராமிடம் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக நிற்கிறாள்.

    ஸ்ரீராம் என்ற இளைஞனின் பாத்திரம் மிக இயல்பாகப் படைக்கப் பட்டிருக்கிறது இள ரத்தத்துக்குரிய கோபம், கோபத்தை செயலில் காட்டிவிடும் அசட்டு தைரியம்…..விளைவு வேறு மாதிரியானவுடன் ஸ்ரீராமின் மனதில் தோன்றும் அளவுக்கு மீறிய அமைதியின்மை….அமைதியின்மை மெதுவாக குற்றவுணர்வாக மாறும் இடங்கள்….கடைசியில் உண்மையை ஒப்புக்கொள்ளும் மன திடம்…..அசட்டு இளைஞன் பக்குவமான மனிதனாக transform ஆவதை உருக்கமாக சொல்கிறது இக்கதை.

    மூன்றாவது சிறுகதை பற்றி பேசுவோம். குடும்பத்தில் யாராவது ஒருவர் – மனைவியோ, குழந்தைகளோ – நம்முடன் பேசுவதை நிறுத்திக் கொண்டால் நமக்கு எப்படி இருக்கும்? மனைவிகள் கோபத்தைக் காட்டும் போது மவுனத்தை ஆயுதமாக பயன் படுத்துவதை நாமெல்லோரும் கண்கூடாகப் பார்த்து வந்திருக்கிறோம். சில மணி நேரங்களுக்குள் அது சரியாகி விடும் என்ற நம்பிக்கை இருக்கும் வரை நாமும் ரிலாக்ஸ்டாக இருப்போம். மவுனம் சில நாட்களுக்கு தொடருமானால், நாம் கவலையுறுவோம். மவுனத்தோடு புறக்கணிப்பும் சேர்ந்து கொண்டால்….என்ன செய்வது? எப்படி இதனை கையாளப் போகிறோம் என்ற பயம் ஏற்பட்டு, வன்மம், வன்முறை என்று உருமாறும் சாத்தியக்கூறு இருக்கிறது.

    அசோகமித்திரனின் “கணவன், மகள், மகன்” என்ற சிறுகதையில் வரும் மங்களம் என்ற பாத்திரம் அப்படியல்ல. குடும்பத்தினரின் எல்லா உதாசீனங்களையும் தாங்கிக் கொண்டு ”ஆயுட்காலப் பழக்க தோஷமாக”  தனிமையிலும் துக்கத்திலும் காலத்தை கடத்தும். அவளை சுற்றி நிகழ்வது என்ன என்பது அவளுக்கு புரிவதேயில்லை. யாரும் அவளுக்கு சொல்வதும் இல்லை. அவள் கணவன் ”தங்கமான மனிதன்” என்று பெயரெடுத்தவர். குடும்பத்துடனும், மங்களத்திடமும் பாசமாக இருந்தவர் தான். அவர் இன்னொரு குடும்பத்திடமும் பாசமாக இருந்திருந்தது அவளுக்கு அவர் காணாமல் போன பிறகு தான் தெரிய வருகிறது.

    இவ்வாறு ஒரு பத்தி வரும் : “மங்களத்திற்கு ஒவ்வொரு கட்டத்திலும் புதிராக இருந்தது. அவள் இவ்வளவு நாட்கள் எந்த மனிதனோடு வாழ்க்கை நடத்தினாள் ? இருபத்தைந்து ஆண்டுகள் கூடவே இருந்தும் கூட அவளறியாத ரகசியங்கள் இவ்வளவு அவனிடமிருந்ததா ? அவன் மறைத்தானா அல்லது அவள் தான் ஒரேயடியாகக் கண்ணை மூடிக் கொண்டு இருந்து விட்டாளா ? இவ்வளவு குருடாக இருந்தவளால் கணவன் மீது பிடிப்பு வைத்திருக்க முடியுமா ? அதனால் தான் அவன் ஓடிவிட்டானா ?”

    கதையின் இன்னொரு பாத்திரமான மங்களத்தின் மகள் ஒரு நாள் வீட்டிலிருந்து வேலைக்கு செல்லுமுன் ”கைக்கு மோர் சாதம்” எடுத்து சென்றாள். அன்றுதான் அவளுக்கு கல்யாணம் நடந்ததாக மங்களம் கேள்விப்பட்டாள். மகளிடமே கேட்க மங்களத்துக்கு ஆசைதான். ஆனால் கேட்க வாயே வரவில்லை, மகளாவது சொல்லியிருக்கலாம். சொல்லவில்லை.

    இக்கட்டத்தில் சிறுகதையில் வரும் வரிகள் இவை :

    ”பதினைந்து நாட்கள் கழித்து உமாவாகவே தனிக்குடித்தனம் போகப் போவதாகச் சொன்னபோதும் கேட்க முடியவில்லை. அவளுடைய மாப்பிள்ளை இளவயதுக்காரனா, வயதானவனா, சைவமா, அசைவமா என்று கூடக் கேட்க்கவில்லை. உமாவாகவும் அம்மாவுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்ததாக தோன்றவில்லை. வீட்டிலிருந்த பாத்திரங்களிலேயே சிலவற்றை அவள் எடுத்துப் போனாள். அவள் கல்யாணத்தை நினைத்து வாங்கி வைத்திருந்த வெள்ளிப் பாத்திரங்களில் குங்குமச் சிமிழ் ஒன்றுதான் மிஞ்சியிருந்தது. எவர்சில்வர் பாத்திரங்களில் நான்கைந்து இருந்தன. அவள் அம்மாவை மேற்கொண்டு சீர், வரிசை என்று கேட்கவில்லை. அவளுடைய கணவன், அவள் கல்யாணம் செய்து கொண்டது எதைப் பற்றியும் தனியாகச் சொல்லவும் இல்லை.”

    மகன் பாத்திரம் கணவன், மகள் பாத்திரங்களை விட குரூரம். சுயநலத்தின் மொத்த உருவம். மகன் ராமு எங்கு போகிறான் என்று ஒரு நாளும் மங்களத்துக்கு சொல்வதில்லை. ஒரு நாள் இரவு முழுக்க அவன் வீடு திரும்பவில்லை. மங்களம் அவன் வாடிக்கையாக செல்லக் கூடிய இடங்களுக்கெல்லாம் தானே சென்று தேடினாள். ஆஃபீசிலிருந்து ஐந்து மணிக்கும் மனமகிழ்மன்றத்திலிருந்து எட்டு மணிக்கும் கிளம்பிவிட்டான். விடியற்காலை வரை கண்ணயராமல் காத்திருந்த அன்னையிடம் இரவு எங்கு சென்றிருந்தான் என்பதை ராமு சொல்லவேயில்லை.

    குடிப்பழக்கத்துக்கு ஆளாகிய ராமுவின் ஈரல் பழுதுபட்டு அவன் மருத்துவமனையில் படுத்துக்கிடந்தபோதிலும் அவளால் “குடிக்காதேடா” என்று கூற முடியவில்லை.

    மங்களத்தின் மனவோட்டத்தை அசோகமித்திரன் இவ்விதம் படம் பிடித்திருப்பார் :

    “அவன் குடிப்பது அவளுக்கு தெரியும் என்ற நிலையை உண்டாக்க மனம் வேண்டவில்லை. அவளுக்குத் தன் மகனறிய அவனைக் குடிகாரன் என்று அவள் நினைப்பது கூடச் சாத்தியமாயில்லை. அவனும் அவள் அறியாதவள் என்றுதான் நினைக்க விரும்புவான். இவ்வளவு முற்றிப் போயும் தெரியாமல் இருக்குமா என்ற தோன்றாது. அவளுக்குத் தெரியாதது போல அவள் நடந்து கொள்ளவேண்டும்; அவளுக்குத் தெரியாது, அவளுக்கு தெரிவதை அவன் விரும்பவில்லை என்பது போல அவன் நடந்து கொள்ளவேண்டும்.”

    புருஷனிடம் தான் இப்படி இருந்தாயிற்று. மகனிடமுமா என்று அவளுக்குத் துக்கம் பொங்கிக் கொண்டு வந்தது, ஆனால் அழ முடியவில்லை என்று கதை முடியும்.

    மங்களம் என்கிற பாத்திரத்தின் உளவியல் சிக்கல்களை கருணையுடன் எழுத்தாளர் இழை பிரிக்கிறார். இவ்வுரைக்காக ஆய்வில் ஈடுபட்ட போது, இலங்கை கவிஞர் அனார் அவர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்தேன். அப்போது அனார் இக்கதையை பற்றி இவ்வாறு சொன்னார் “எளிமையான எழுத்து, ஆனால் வலிமையும் வலியும் நிறைந்த எழுத்து” என்று வர்ணித்தார். அது மிக apt ஆன comment என்று நினைக்கிறேன்.

    இக்கதையின் மங்களம் பாத்திரத்துக்கு பொருத்தமான ஒரு கவிதையை தன் படைப்பிலிருந்து எடுத்து வாசித்துக் காட்டினார். அனார் எழுதிய ”இறுதி நிலைகள்” என்ற கவிதை இவ்வாறு செல்லும் :

    சாமர்த்தியங்களுடன் வருவான்
    நேர்மையுடன் வருவாள்
    தந்திரங்களை வழங்குவான்
    நம்பிக்கைகளை வழங்குவாள்
    நிறங்களை மாற்றிக்கொண்டிருப்பான்
    ஒளியினை அணிந்துகொண்டிருப்பாள்
    தொடுவான்
    உணர்வாள்
    அவனுடையவைகள் சுயநலன்கள் சார்ந்தவை
    அவளுடையவைகள் தியாகங்கள் சார்ந்தவை
    நிரந்தரமற்ற திசைகளில் அவனது பயணங்கள்
    அவளது இருப்பு ஊன்றப்பட்ட பாறை
    விரைவில் உதிர்ந்துவிடுகின்ற காயங்கள் அவனுக்கு
    வலியில் ஆழமாகின்ற காயங்கள் அவளுக்கு

    நான்காவது ”எலி’ என்று ஒரு சிறுகதை. மிகவும் ரசனையாக எழுதப்பட்ட கதை. ஓர் எலியைக் கொல்வதற்காக ஒருவன், சூடாக அப்போதுதான் போடப்பட்டுக்கொண்டு இருக்கும் மசால் வடை ஒன்றை வாங்கிக்கொண்டு வருவான். ‘இதை நான் தின்பதற்காக வாங்குகிறேன் என்று இந்த கடைக்காரன் நினைத்துக் கொண்டிருக்கிறான். ஓர் எலியைக் கொல்வதற்காக வாங்கிப் போகிறேன் என்று தெரிந்தால் வருத்தப்படுவானோ?’ என்று அவன் மனசுக்குள் நினைத்துக் கொள்வான். எலிப்பொறியில் வடையைப் பொருத்தி வைத்துவிடுவான். மறுநாள் காலை எலி பொறிக்குள் சிக்கியிருக்கும். அதை எடுத்துக்கொண்டு போய் ஒரு மைதானத்தில் விடுவிப்பான். மைதானத்தில் தள்ளாடி அங்கும் இங்குமாய் ஓடும் எலியை ஒரு காகம் கொத்தி சாகடித்துவிடும். அதன்பின் அசோகமித்திரன் கடைசி வரியாக எழுதியிருந்ததுதான் ரொம்ப டச்சிங்! ‘அந்த வடை துளியும் தின்னப்படாமல் முழுசாக இருந்தது கண்டு அவன் மனம் கலங்கியது’ என்று எழுதியிருப்பார். சாகிற எலி கடைசி நேரத்தில் அந்த வடையைச் சுவைத்துவிட்டாவது சாகக் கூடாதோ! பாவம், அதற்குக் கொடுப்பினை அவ்வளவுதான்!

    இவ்வுரைக்காக நான் தேர்ந்தெடுத்தவை இந்நான்கு சிறுகதைகள் தாம். இருந்தாலும் இன்னுமொரு கதை பற்றி சுருக்கமாக பேசி இவ்வுரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்.

    எந்த கதைகளை பற்றி பேசுவது என்று என் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் “பிரயாணம்” என்ற சிறுகதை படித்திருக்கிறீர்களா? என்று கேட்டார். இல்லை என்று சொன்னேன். அப்படியென்றால் முதலில் அச்சிறுகதையை படியுங்கள்; அதைப் பற்றி எழுதுங்கள் ; பிறகு மற்ற கதை பற்றி எழுதுங்கள் என்றார். இணையத்தில் சிறுகதை படித்தேன். 1969-இல் எழுதப்பட்ட கதை அது. ஆரம்பத்தில் சொன்னேன் ; அசோகமித்திரனின் புனைவுலகம் சாதாரண மனிதர்களையும் சாதாரணத்துவத்தையும் கொண்டிருப்பது. “பிரயாணம்” சிறுகதை அப்படியில்லை. வாசித்து முடித்தவுடன்…..கதையின் கடைசி வாக்கியத்தை படித்தவுடன் ஒரு நீண்ட மௌனம். பிரமிப்பு. இதயத்துள் இச்சிறுகதை தந்த எழுச்சியை  வார்த்தையினால் விளக்க முடியாது. தமிழ்ப் படைப்பிலக்கியத்தின் உச்சத்தை தொட்ட கதை இது என்று பல இலக்கியவாதிகளால் போற்றப் படும் “பிரயாணம்” சிறுகதை என்னை கடும் மௌனத்தில் ஆழ்த்தியது. மனதை சிந்தனையில் தள்ளும் கதைகள் நல்ல கதைகள் என்று வகைப்படுத்தப் படுகின்றன. நீண்ட மௌனத்தில் தள்ளும் கதைகள் எந்த ரகத்தை சார்ந்தன? “மிக அசாதாரண மனிதர்களின் மிக அசாதாரண வாழ்க்கைக்கணங்களைச் சொல்லும் முக்கியமான கதை” என்று எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு முறை எழுதியிருந்தார்.

     “பிரயாணம்” சிறுகதை அம்ப்ரோஸ் பியர்ஸ் (Ambrose Bierce) என்ற அமெரிக்க எழுத்தாளரின் “தி போர்டட் விண்டோ” (The Boarded Window) சிறுகதையின் “காப்பி” என்று சொல்கிறார்கள். அசோகமித்ரன் காப்பி அடித்தாரா இல்லையா என்று நமக்கு தெரியாது. அவருக்கும் அதே கற்பனை வந்திருக்கலாம். இல்லை காப்பியே அடித்திருந்தாலும் ”மறு படைப்பு” என்று கருதத் தக்க சிறப்பம்சங்களை “பிரயாணம்” கதையில் சேர்த்திருக்கிறார் என்று சொல்கிறார்கள். நான் மூலக் கதையை படித்ததில்லை. எனவே, ஒரு வலைப்பதிவர் சொன்ன கருத்துகளை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். “இரண்டு கதைகளுக்கும் பெரும் இடைவெளி உள்ளது. ’பிரயாணத்தில்’ அசோகமித்ரன் கடந்திருக்கும் உயரம் அவ்வளவு எளிதில் மற்றவர்களால் எட்ட முடியாதது. பல தளங்களை சாதாரணமாகத் தாண்டிச் சென்றுள்ள கதை. பியர்சின் கதையில், முடிவு ஒரு அதிர்ச்சியான திருப்பம். அவ்வளவே. கதையில் திரும்பப் படிக்க ஒன்றுமில்லை. ’பிரயாணத்தின்’ முடிவு மனதை என்னவோ செய்து கொண்டேயிருக்கச் செய்வது. கதையைத் திரும்பத்திரும்பப் படிக்கத்தூண்டுவது.”

    இம்மன்றத்தில் பேச வாய்ப்பளித்த தில்லிகைக்கு என்னுடைய உளமார்ந்த நன்றிகள். என்னுடைய பயத்தையும் நம்பிக்கையின்மையையும் காரணம் காட்டி தப்பிக்க நினைத்த என்னை, தப்பிக்க விடாமல் “உன்னால் முடியும் தம்பி தம்பி” என்று பாடாத குறையாய் என்னை ஊக்குவித்த தரன் அவர்களுக்கு  என் இதயங் கனிந்த நன்றிகள். பல்லை கடித்துக் கொண்டு அல்லது பல்லை கடிக்காமல் பொறுமையாக நான் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த உங்கள் எல்லோருக்கும் என் நன்றிகள்.

  • திணைப்பெயர்ச்சி – சுவாதி முகில்

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரிலிருந்து வரும் சிற்றிதழ் ஒன்றில் வெளிவந்த கவிதையை தினமணி (5.8.2012) அன்று தமிழ் மணி பகுதியில் படித்தேன். என்னை மிகவும் கவர்ந்த கவிதை. கவிஞர் சுவாதி முகில் அவர்களின் சம்மதத்துடன் என் வலைப்பூவில் இடுகிறேன்.

    திணைப்பெயர்ச்சி

    டோல்கேட்..ஃப்ளை ஓவர்…

    ஃபோர் லான்..சர்வீஸ் ரோட்…

    மோட்டல்… பெட்ரோல் பங்க்…

    என்று விரல் விட்டு

    எண்ணிக்கொண்டே

    வருகிறாள் ஹேமா

    நெல்லு வயல்… வாழத்தோப்பு…

    கம்மாயி…வெத்தலை கொடிக்கால்…

    செவ்வந்தித் தோட்டம், கமலைக்கிணறு…

    என்று சிறு வயதில்

    என் விரல் வழி எண்ணிக்கையில்

    கடந்து சென்ற

    அதே சாலைவழி பயணத்தில்…