Category: Buddhism

  • ஒரு கை

    zen2-03
    “நான் எண்ணற்ற பௌத்தர்களுக்கும் ஏழை-எளியவர்களுக்கும் தான தர்மங்கள் செய்கிறேன் ; பல புத்த கோயில்களுக்கு நிவந்தங்கள் அளிக்கிறேன். இத்தகைய செயல்கள் எனக்கு என்ன மாதிரியான நல்-விளைவுகளைத் தரும்?” என்று அரசன் கேட்டபோது தயக்கமோ, முதன்முதலாக தென் – சீனாவின் பேரரசனைச் சந்திக்கிறோம் என்ற வியப்புணர்வோ இல்லாமல் அந்த அயல் நாட்டு பௌத்தர் மறுப்பது போல் தலையசைத்து, “ஒரு விளைவும் தராது”என்றார்.

    அரசன் நெற்றி சுருக்கினான்; பிறகு சுதாரித்துக் கொண்டு, வினவினான். “புத்தர் இருக்கிறாரா? அவரைக் காணுதல் சாத்தியமா?”

    இம்முறை போதி தர்மர் பதிலளிக்கச் சில வினாடிகள் எடுத்துக் கொண்டார்,. “இல்லை”

    போதி தர்மரின் பதில்கள் அரசனுக்குச் சினமளித்தன. “. என் முன் நில்லாதீர். இங்கிருந்து எங்காவது சென்று விடுங்கள்”என்று அவன் ஆணையிட்டதும். போதி தர்மர் புன்னகைத்தார். அவர் உதடுகள் திறந்த மாதிரி தெரியவில்லை என்றாலும் உள்ளுக்குள் ஒரு பதற்றமுமில்லாமல் அவர் சிரித்துக் கொண்டிருக்கிறார் என்பதை அவரின் விழிகள் சபையோருக்கு உணர்த்தின.

    சில வினாடிகளில் அவர் அவையை விட்டு நீங்கினார். அவையில் மௌனம் வெகு நேரம் நீடித்தது. அரசனின் கேள்விகளுக்குப் பின்னர் தொக்கி நின்ற குணங்களைப் புரிந்து சுருக்கமான பதில் தந்து போதி தர்மர் காத்த மௌனத்திற்கும், சபையோரின் மௌனத்திற்கும் புரியாததொரு பொதுத்தொடர்பு இருந்தது போன்று தோன்றியது. சபை வேறொரு அலுவல் எதுவுமின்றி அன்று கலைந்தது.

    பேரரசன் வூ-வுக்கு அன்றிரவு தூக்கம் வரவில்லை. அந்தப்புர நங்கையரிடமும் அவன் செல்லவில்லை. அவையை விட்டு நீங்கும்முன் போதி தர்மர் பார்த்த பார்வை அரசனுக்குள் ஒரு வித அவஸ்தையை ஏற்படுத்தியிருந்தது. அவர் நீங்கிய பிறகு சபையோரின் கண்கள் வெட்கமுற்று அரசனின் பார்வையைத் தவிர்த்தது மாதிரி தோன்றியது பிரமையா அல்லது உண்மையா?

    மந்திரிகளிடமோ அதிகாரிகளிடமோ யாரிடமும் அன்று சபையில் நடந்தவற்றைப் பற்றி அவனால் பேச முடியவில்லை. அப்படி பேசினால், அவர்கள் இவனை ஏளனமாகப் பார்த்து சிரிப்பார்களோ? சிரிக்கமாட்டார்கள். பேரரசன் முன் தைரியத்துடன் எதிர் வார்த்தை பேச அவர்கள் எல்லாம் என்ன போதி தர்மர்களா!

    கோபமாக போதி தர்மரை விரட்டியடித்து விட்டாலும்வூ-வுக்கு போதி தர்மர் மேல் உள்ளுர கோபம் வரவில்லை என்பதுதான் உண்மை. சாதாரண குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை அளித்து பல மணி நேரங்கள் ஆனபின்னர், குற்றவாளிகள் மேல் எழுந்த அடக்கவொண்ணா சினம் காரணமாக தான் முன்னர் அளித்த தண்டனையை மரண தண்டனையாக மாற்றச் சொல்லியிருக்கிறான். இம்முறையோ அந்த பௌத்தரை துரத்தி அனுப்பியிருக்காமல் இருந்திருக்கலாமோ என்ற சிந்தனை ஏற்பட்டு வூ-வுக்கு குற்றவுணர்ச்சி அதிகரித்தது.

    அடுத்த நாள், நான் – ஜின்-னுக்குக் கிளம்ப வேண்டும். அவனுடைய முன்னாள் தளபதியும் இந்நாள் பௌத்த துறவியுமான ஷென் – குவாங்-கை சந்திக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

    நான் – ஜின் நகர மத்தியில் இருந்த பூங்காவொன்றில் மக்கள் திரளாகக். கூடியிருந்தனர். பல போர்களில் தலைமையேற்று வெற்றி கண்டு பேரரசின் எல்லைகளை விஸ்தரித்த ஷென் – குவாங் சில வருடங்களுக்கு முன் பௌத்த சமயத்தை தழுவி துறவு ஏற்றிருந்தார். நாடெங்கும் சுற்றி மக்களுக்கு பௌத்த சமயம் பற்றியும் சீன சாம்ராச்சியத்தின் பழம்பெருமைகள் பற்றியும் உரைகள் நிகழ்த்தி வந்தார் அவர். அன்றும் நல்ல கூட்டம் ; குறிப்பாக, இளைஞர் கூட்டம் அலை மோதியது.

    பேரரசர் வூ-வின் சபையிலிருந்து துரத்தி விரட்டப்பட்ட போதி தர்மர் கூட்டத்தின் முதல் வரிசையில் நின்று கொண்டிருந்தார். அங்கு இருந்த மக்கள் திரளில் போதி தர்மரை எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. கருத்த தோல், சுருங்கிய கன்னங்கள், நல்ல உயரம், தீர்க்கமான பெரிய கண்கள்

    வழக்கம் போல தேச பக்தி பாடலை பாடி தன் உரையைத் தொடங்கினார் ஷென் – குவாங். கூட்டத்தில் சலசலப்பு. துறவிகளுக்கான அங்கி அணிந்திருந்த ஷென் – குவாங் இரு கைகளால் சைகைகள் புரிந்தவாறு பேசினார். சாக்கிய முனியின் அரச குடிப்பிறப்பு பற்றியும் சிறு வயதில் அவருக்குப் பயில்விக்கப்பட்ட வீரக்கலைகள் பற்றியும் அவர் பேசியபோது, சீன மக்களும் அத்தகைய கலைகளைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று சொன்னார். அவர் பேச்சு ஒரு மணி நேரம் தொடர்ந்தது.

    ஷென் – குவாங்-கின் உரையை கவனத்துடன் கேட்ட போதிதர்மர் உரை முடிந்தவுடன் அங்கிருந்து நகர்கையில் ஷென் – குவாங்-கின் உதவியாளர் ஒருவர் அவரை அணுகினார் ; ஷென் – குவாங் அழைத்து வரச் சொன்னதாக சொன்னார், தலையை ஆட்டி “ஹ்ம்ம்- செல்லலாம்”என்று பதிலளித்த போதிதர்மர் ஷென் – குவாங்-கிடம் அழைத்துச் செல்லப்பட்டார்.

    “எங்கிருந்து வருகிறீர்கள்?” – கம்பீரமான குரலில் முன்னாள் தளபதி வினவினார்.

    தலையை சற்றுச் குனிந்தவாறே மெலிந்த குரலில் பதில் சொன்னார் போதி தர்மர்.

    “ஹ்ம்ம் வெகு தொலைவிலிருந்து வருகிறீர்கள்”

    போதி தர்மர் ஷென் – குவாங்கின் முகத்தை நோக்கிக் கொண்டிருந்தார்.

    “நான் பேசும்போது உங்களைப் பார்த்தேன். நான் சொல்லிய சில வார்த்தைகளை ஆமோதிப்பது போல தலையசைத்தீர்கள் ; பல சமயம் மறுப்பது போன்று உங்கள் தலையை பலமாக ஆட்டினீர்…அதற்கு என்ன அர்த்தம்?”

    “எப்போதெல்லாம் உங்கள் கருத்து சரியென்று எனக்குப் பட்டதோ அப்போதெல்லாம் ஆமோதித்தேன்; சரியென்று படாதபோது மறுத்தேன்”

    ஷென் – குவாங் போதி தர்மரை எரித்து விடுவது போன்று பார்த்தார்.

    “நான் யாரென்று உமக்கு தெரியாது…சீனப் போர்படை தளபதியாக இருந்தவன். என் பேச்சைக் கேட்பவர்கள் படையில் இன்னும் இருக்கிறார்கள்”என்று சொல்லி நிறுத்தினார்.

    போதிதர்மர் ஒரு சலனமும் இல்லாமல் புன்னகைத்தார். வெண் பற்கள் ஒளிர்ந்தன. அவர் சிரிக்கும்போது அவருடைய கண்களும் சேர்ந்து சிரித்தன.

    ஷென் – குவாங் முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவரைவிட்டுத் திரும்பி, அவ்விடத்திலிருந்து நகர்ந்தார். உதவியாட்கள் ஷென் – குவாங்கின் கட்டளைக்காக காத்திருந்தனர். ஷென் – குவாங்கின் கண்கள் கோபத்துடன் காணப்பட்டாலும் அவர் ஒன்றும் சொல்லவில்லை ; மௌனமாயிருந்தார். போதி தர்மர் அவர் பார்வையிலிருந்து விலகும்வரை வாயிலையே நோக்கிக் கொண்டிருந்தார்.

    பேரரசர் வூ இரண்டு நாட்கள் கழித்து நான் – ஜிங் வந்து பால்ய சினேகிதரைச் சந்தித்தார். இருவருமே போதிதர்மர் பற்றிய தத்தம் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இருவராலும் நீலக் கண் கொண்ட புத்தபிக்‌ஷுவை தம் நினைவுகளிலிருந்து அகற்ற இயலவில்லை.

    போதி தர்மர் எங்கு சென்றார் என்று யாருக்கும் தெரியவில்லை. அவருக்கு சிஷ்யர்களோ புரவலர்களோ யாரும் இல்லை. வூ-வின் ஒற்றர்கள் போதி தர்மரை தேடிய வண்ணம் இருந்தார்கள். ஷென் – குவாங்கின் சீடர்கள் சீனாவின் பல்வேறு புத்த விகாரங்களிலும் அயல்-நாட்டு பௌத்தரைத் தேடினர். ஒரு கட்டத்தில் அந்த சன்னியாசி சீனாவை விட்டுச் சென்றிருக்கக் கூடும் என்ற முடிவுக்கு வந்து விட்டனர்.

    ஆண்டுகள் பல சென்றன. வெய் பேரரசனின் ஆளுகைக்குட்பட்ட வட-சீனத்தின் வட எல்லையில் இருந்த மலைக்குகையொன்றில் ஒரு துறவி கண்களைத் திறந்தவாறே குகையின் சுவற்றைப் பார்த்துக் கொண்டு பல வருடங்களாக அமர்ந்திருக்கிறார் என்ற செய்தி ஷென் – குவாங்-கை எட்டியது. அது பல வருடங்களுக்கு முன் அவர் சந்தித்த “நீலக் கண் காட்டுமிராண்டியாக இருக்கலாம் என்ற ஐயம் அவருக்கு ஏற்பட்டது. கிடைத்த செய்திகளின்படி சுவர் நோக்கி அமர்ந்திருந்த துறவியின் அங்க அடையாளங்கள் நான் – ஜிங்கில் சந்தித்த இந்தியத் துறவியின் அங்க அடையாளங்களுடன் ஒத்துப் போயின.

    பகை ராச்சியத்துக்குள் வூ-வால் நுழைய முடியாது. மாறுவேடம் அணிந்து வட-சீனாவுக்குள் நுழையும் திட்டத்தை வூ பிரஸ்தாபித்தபோது ஒற்றர் படை அதனை நிராகரித்துவிட்டது. ஷென் – குவாங் இப்போது நாடறிந்த பௌத்த துறவி. எனவே அவர் வட-சீனாவில் நுழைவதில் பிரச்னை இருக்காது. ஷென் –குவாங் தானே சென்று காட்டுமிராண்டி பௌத்தனை தென் – சீனாவுக்கு அழைத்து வருவதாக உறுதியளித்தார்.

    வட-சீனாவின் வட எல்லை மலைக் குகையை அடைய பல மாதங்கள் பிடித்தன. ஷென் – குவாங்-குடன் வந்த உதவியாளர்கள் எல்லாம் வழியிலேயே இறந்து போயினர். மலையடிவாரத்தை அடைந்தபோது அவர் குழுவில் ஷென் – குவாங் மட்டுமே மிஞ்சியிருந்தார்.

    ஆயிரம் ஆடிகள் மலையில் ஏறி குகையை கண்டு பிடித்தார் ஷென் – குவாங் . சுவற்றைப் பார்த்தபடி கண்களை திறந்திருக்க போதி தர்மர் உட்கார்ந்திருந்தார். ஜடாமுடியாக அவரின் கேசம் நீண்டு, முடிச்சிட்டு வளர்ந்திருந்தது. புதராக முகமெல்லாம் தாடி. கண்கள் இமைக்காமல் சுவரை வெறித்து நோக்கியபடி இருந்தன. புருவங்கள் இல்லாமல் பிறந்தவரோ என்ற கேள்வி ஷென் – குவாங்கின் உள்ளத்தில் பூத்தது. நான் – ஜிங்கில் பாரத்தபோது போதிதர்மருக்கு புருவம் இருந்ததே!

    ஷென் – குவாங் “காட்டு-மிராண்டி”என்று உரக்க அழைத்தார். அதட்டினார். தோளைத் தட்டி கூப்பிட்டார். போதி தர்மரிடமிருந்து ஒரு மறுமொழியும் இல்லை. அவரின் சுவாசம் ஓருவித தாளலயத்துடன் குகையெங்கும் எதிரொலித்தது.

    அன்றிரவே ஷென் – குவாங்-குக்கு கடும் குளிர்க் காய்ச்சல் பீடித்தது. கிராமத்துக்காரர்கள் ஷென் – குவாங்கிற்கு உணவும் மருந்தும் எடுத்து வந்தார்கள். சில நாட்களில் அவர் குணமானார். கிராம மக்கள் வருவதோ, தீபமேற்றிச் செல்வதோ, ஷென் – குவாங் அதே குகையில் தன்னுடன் இருந்து உணவு உண்பதோ, குகையை வளைய வருவதோ போதி தர்மருக்கு ஓர் இடையூறும் தரவில்லை. சுவரோடு சுவராக உயிரற்ற சிலை போல் அமர்ந்திருந்தார். விளக்கேற்றப்படாத நாட்களில்கூட அக்குகை ஒளியுடன் திகழ்வதாக ஷென் – குவாங்குக்குத் தோன்றியது.

    மாதங்கள் பல சென்றன. ஷென் – குவாங்-கின் விண்ணப்பங்கள், அழைப்புகள், கூவல்கள் எதுவும் போதி தர்மர் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை.

    குளிர் காலத்தில் ஒரு நாள் குகை வாசலை பனி மூடியது. அச்சிறு குகையில் போதி தர்மரும், ஷென் – குவாங்கும் மட்டும் இருந்தனர். ஷென் – குவாங்கிற்கு உணவு கொடுக்க கிராமத்தார் யாரும் பல வாரங்களாக வரவில்லை. பசி மீறி மயக்க நிலையில் ஷென் – குவாங் தரையில் விழுந்தார். சுவர் முன் ஒரு கல் போல உட்கார்ந்திருந்த போதி தர்மரை காண முடியாமல் போனது ; அவரது கண்கள் மூடியே கிடந்தன. மிகப் பிரயத்தனப்பட்டு சுவர்ப் பக்கம் ஒரு முறை நோக்கினார். போதி தர்மரைச் சுற்றி ஒளி வட்டம் பிரகாசமாய்ச் சூழ்ந்திருப்பது போல அரை மயக்கத்திலிருந்த ஷென் – குவாங்குக்கு தோன்றியது. மனதுள் அழுகை பீறிட்டு எழுந்தது. கண்ணீர்த் துளியும் தோன்றாத அளவுக்கு அவர் உடல் வலுவிழந்திருந்தது.

    வலது கைக்கு தரையில் ஏதோ தட்டுப்பட்டது. ஒரு முனை கூர்மையாக இருந்த கனமாக கல். உணர்ச்சி அலை மோத, கொஞ்சநஞ்ச சக்தியை ஒன்று திரட்டி. ஒருக்களித்துப் படுத்துக் கொண்டு, அக்கல்லால் தன் இடது கையை பலமுறை குத்திக் கொண்டார் ;. ரத்தம் பெருகி வழிந்தது. முட்டிக்குக் கீழ் தன் இடது கையை பெயர்த்தெடுத்தார். வலது கையால் அதை போதி தர்மர் முன் வீசியெறிந்தார். சுவற்றுக்கும் போதிதர்மருக்கும் இடையில் இருந்த இடைவெளியில் ஷென் – குவாங்கின் இடக்கை விழுந்தது.

    போதி தர்மரின் தலை ஒன்பது வருடங்களுக்குப் பிறகு அன்று அசைந்தது. ஷென் – குவாங் தரையில் குற்றுயிராகக் கிடந்தார்.

    ஷென் – குவாங்கை தன் மடியில் கிடத்தி வெட்டப்பட்ட இடக்கையின் நீள் வெட்டு தோற்றத்தை போதிதர்மர் சோதித்துக் கொண்டிருந்தபோது குகைவாயிலின் பனிக் கதவை உடைத்துக் கொண்டு கிராமத்தினர் குகைக்குள் நுழைந்தனர்.

    Bodhidharma_and_Huike-Sesshu_Toyo

    984072310_Hpu6F-S-1

    நன்றி : பதாகை (http://padhaakai.com/2014/03/23/bodhi-dharma/)

  • மனம்-மட்டும்

    mind-quotes-buddha

    லங்காவதார சூத்திரம் நூலில் விவரிக்கப்படும் மன அமைப்பு பற்றி ஒரு குறிப்பு முன்னர் எழுதியிருந்தேன் (http://wp.me/pP1C7-hU) அதன் தொடர்ச்சியாக மனம்-மட்டும் கோட்பாடு பற்றி எழுத எண்ணம். பேராசிரியர் சுஸுகி எழுதிய லங்காவதார சூத்திரக் கட்டுரைகளை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்து வந்தாலும் அதில் வரும் கலைச்சொற்களின் தெளிவான புரிதல் இன்னும் கிட்டவில்லை. நன்கு புரியாமல் கட்டுரை எழுத வேண்டாமே என்று கொஞ்சம் இடைவெளி விட்டிருக்கிறேன்.

    நேற்றிரவு உறக்கம் வராமல் புத்தக அலமாரியில் இருக்கும் புத்தகங்களை நோண்டிக் கொண்டிருந்த போது இரண்டு வருடம் முன்னர் ஜப்பான் சென்ற போது தங்கியிருந்த ஓட்டல் அறையிலிருந்து சுருட்டிக் கொண்டு வந்த “The Teaching of Buddha” (Published by Bukkyo Dendo Kyokai – http://www.bdk.or.jp ) என்ற புத்தகம் என் கால் பெருவிரல் மேல் வந்து விழுந்தது. பொருளடக்கத்தை மேய்ந்தால் மனம்-மட்டும் கோட்பாட்டைப் பற்றிய குறிப்புகள் அப்புத்தகத்தில் இருப்பது தெரிய வந்தது. மகாயான பௌத்தத்தின் மிக முக்கியமான கருத்தாக்கமான மனம்-மட்டும் என்ற கோட்பாடு பற்றி தத்துவ கலைச்சொற்கள் இல்லாமல் எளிய வாசகர்களுக்கு புரியும் படியாக கட்டுரை எழுதப் பட்டிருந்தது. இது ஓர் அறிமுகமே! இதே சப்ஜெக்டில் விளக்கமான விரிவான கட்டுரையொன்று எழுத வேண்டும் என்ற எண்ணம் ஓயவில்லை.

    +++++

    பல வித உருவங்களையும் காட்சிகளையும் ஓவியமாக தீட்டும் ஓர் ஓவியன் போல நம் மனதும் பல்விதமான வடிவங்களை தனக்குள்ளாகவே உண்டு பண்ணிக் கொள்கிறது. நம் மனம் உருவாக்காத ஏதும் இவ்வுலகில் இல்லை. நம் மனதைப் போன்றவனே புத்தன் ; எல்லா உயிரினங்களும் புத்தனைப் போன்றவர்களே. மனம், புத்தன், உயிரினங்கள் – இவர்களுக்கு நடுவில் விஷயங்களை உருவாக்கிக் கொள்ளும் தன்மையில் ஒரு வித்தியாசமும் இல்லை.

    அழியும் தன்மையதான மனம் செய்து கொள்ளும் கற்பனைகளை அல்லது உருவாக்கிக் கொள்ளும் விஷயங்களைப் பற்றிய சரியான புரிதல் புத்தனுக்கு இருக்கும். இக்கூற்றை அறிந்தவர்கள் உண்மையான புத்தனைக் காணுதல் சாத்தியம்.

    சுற்றுச்சூழலை உருவாக்கும் மனம் எப்போதுமே நினைவுகளிலிருந்தும், பயங்களிலிருந்தும் குறைகளிலிருந்தும் இறந்தகாலத்தில் மட்டுமல்லாது, நிகழ் மற்றும் வருங்காலத்திலும் – என்றும் விடுபடுவதில்லை ; ஏனெனில் அந்நினைவுகள், பயங்கள் மற்றும் புலம்பல்கள் எல்லாம் அறியாமையிலிருந்தும் பேராசையிலிருந்தும் எழுவன.

    அறியாமையிலிருந்தும் பேராசையிலிருந்துமே ஒரு மயக்கமாக இவ்வுலகம் திரிக்கப்பட்டிருக்கிறது ; பரந்து பட்ட, சிக்கல் வாய்ந்த ஒன்றையொன்று பிணைந்திருக்கும் காரணங்களும் சூழல்களும் மனதிற்குள்ளேயே இருக்கின்றன ; வேறெங்கிலும் இல்லை.

    வாழ்வு, மரணம் – இவ்விரண்டுமே மனதிலிருந்து எழுகின்றன ; மனதிற்குள்ளேயே இருக்கின்றன. மரணம், வாழ்வு பற்றிய கவலையில் நிறைந்திருக்கும் மனம் இல்லாமல் போகும் போது, வாழ்வும் மரணமும் மிக்க உலகமும் இல்லாது போகிறது.

    தானுருவாக்கிய மயக்கமிக்க உலகத்தில் உழன்று குழப்பமுற்றிருக்கும் மனம் உள்ளொளியற்ற வாழ்க்கையை தோற்றுவிக்கிறது. மனதுக்கு வெளியே மயக்கமிக்க உலகம் இல்லையென்பதை அறியும் போது, குழப்பம் கொண்ட மனது தெளிவு பெறுகிறது ; தூய்மையற்ற காரணங்களையும் சூழல்களையும் உருவாக்குவதை நிறுத்தும் போது ஞானம் வந்தடைகிறது.

    இப்படித்தான், மனதால் உருவாக்கப்பட்டு, அதன் அடிமையாக வாழ்வும் மரணமும் நிறைந்த உலகம் கட்டியாளப்படுகிறது. எல்லா சூழ்நிலைகளிலும் மனமே எஜமானனாக இருக்கிறது. துக்கம் நிறை உலகம் மயக்கமிகு அழியக் கூடிய மனதால் உண்டு பண்ணப்படுகிறது.

  • இந்தோனேசிய அம்பிகை – பிரஜ்னபாரமிதா

    Prajnaparamita_Java_Front

    கிழக்கு ஜாவாவில் தொல்பொருளறிஞர்களால் 19-ஆம் நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்ட சிலையொன்று ஜாகர்த்தாவில் உள்ள இந்தோனேசிய தேசிய மியுசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

    புராதன இந்து-பௌத்தக் கலையின் தலை சிறந்த படைப்பாக இந்த ‘பிரஜ்னபாரமிதா” சிலை கருதப்படுகிறது. சாந்த சொரூபமும் தியான தோற்றநிலையும் அமைதியையும் ஞானத்தையும் குறிக்கின்றன ; இதற்கு மாறாக வளமும் நுட்பமும் மிக்க அணிகலன்களும் அலங்காரங்களும் இச்சிலையில் சித்தரிக்கப்படுகின்றன. தேவியின் தன் கூந்தலை ஒரு கிரிடத்துக்குள் அழகாக செருகி வைத்திருக்கிறாள். பத்மாசனத்தில் ஒரு சதுர பீடத்தில் தேவி அமர்ந்திருக்கிறாள். தர்மச்சக்கர முத்ரையை பிடித்துக் கொண்டிருக்கிறாள். அவளின் வலது கை ஒரு நீலத் தாமரையின் மேல் இருக்கிறது ; அந்நீலத் தாமரையின் மீது பிரஜ்னபாரமித சூத்ரப் பனையோலை ஏடு வைக்கப்பட்டிருக்கிறது. தேவியின் உயர்ந்த ஞானநிலையையும் தெய்வீகத்தனமையையும் குறிக்க தலைக்குப் பின்னால் ஒளிவட்டமும் காட்டப்பட்டிருக்கிறது.

    பிரஜ்னபாரமிதா மகாயான பௌத்தத்தின் மையக் கோட்பாடுகளில் ஒன்று. இக்கோட்பாட்டின் புரிதலும் பயிற்சியும் போதிசத்துவ நிலையை அடைவதற்கு மிகவும் இன்றியமையாதன என்பது மகாயான பௌத்தர்களின் நம்பிக்கை. இப்பயிற்சிகளுக்கான வழிமுறைகளும் தத்துவங்களும் பிரஜ்னபாரமிதா என்ற சூத்திர வகைமை நூல்களில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. பிரஜ்னபாரமித சூத்திரங்களின் முக்கியமான சாராம்சம் எல்லாப் பொருட்களும் முழுப்பிரபஞ்சமும் (நம்மையும் சேர்த்து!) வெறும் எண்ணத்தோற்றங்கள் மட்டுமே ; கருத்தாக்ககட்டமைப்புகளேயன்றி வேறொன்றுமில்லை என்பதேயாகும்.

    பிரஜ்னபாரமித கோட்பாடு போதிசத்வதேவியாக (பெண் போதிசத்வர்) உருவகிக்கப்பட்டு பெண் தெய்வ உருவங்கள் சமைக்கப்பட்டன. நாலந்தாவில் கிடைத்த அரும் பொருட்களில் பிரஜ்னபாரமிதா பெண்தெய்வ உருவங்களும் உண்டு. புராதன ஜாவா மற்றும் கம்போடிய கலைகளிலும் பிரஜ்னபாரமிதா பெண் சிலைகள் காணப்படுகின்றன.

    தற்போதைய வங்காளம், பீகார் மற்றும் ஒடிஷா சேர்ந்த ராச்சியத்தை பால் அரசர்களில் ஒருவரான தேவபாலர் (கி.பி.815-854) ஆண்ட போது, ஸ்ரீவிஜய மகாராஜா பாலபுத்ரா நாலந்தாவின் முக்கிய பௌத்த மடாலயம் ஒன்றைக் கட்டினார். அதற்குப் பிறகு ஜாவாவை வந்தடைந்த “அஷ்டசஹஸ்ரிக பிரஜ்னபாரமித சூத்ரத்தின்’ வாயிலாகவே பிரஜ்னபாரமிதா தேவியின் வழிபாடு துவங்கியிருக்கக்கூடும்.

    எட்டாம் நூற்றாண்டில் தாராதேவி வழிபாடு ஜாவாவில் தொடங்கியிருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர், மத்திய ஜாவாவில் எட்டாம் நூற்றாண்டில் கலசான் என்ற ஊரில் கட்டப்பட்டதொரு கோயிலில் முதன்முதலாக தாரா என்னும் பெண் தெய்வம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த சமயத்தில் தாரா தேவி வழிபாடு மிகப் பிரசித்தமாக இருந்தது. பிரஜ்னபாரமிதாவின் சில செயல்பாடுகளும் பண்புகளும் தாரா தேவியோடு நிறைய ஒத்துப் போகும். பதிமூன்றாம் நூற்றாண்டு வாக்கில் தாந்திரீக பௌத்தத்திற்கு கீர்த்திநகாரா என்ற அரசனின் ஆதரவு கிட்டவும், சுமத்ராவிலும் கிழக்கு ஜாவாவிலும் பிரஜ்னபாரமிதா சிலைகள் பல இடங்களில் அமைக்கப்பட்டன.

    பிரஜ்னபாரமிதாவின் வழிபாடு இன்றளவும் திபெத்திய பௌத்தத்தில் நிலைத்திருக்கிறது. திபெத்திய வஜ்ராயன பௌத்ததில் அவள் ”ஷெராப்க்யி ஃபாரொல்டுசின்மா” என்று அழைக்கப்படுகிறாள். அவள் ‘ஓம் ஆஹ் திஹ் ஹம் ஸ்வா;’ (om ah dhih hum svah) என்ற மந்திரத்தால் வழிபடப்படுகிறாள்.

    Tibetan Prajnaparamita

  • மனம் – மகாயான பௌத்தப் பார்வை

    bodhidharma

    மன அமைப்பு
    ஒரு பிரஸ் ரிப்போர்ட்டர் பார்ப்பவற்றையெல்லாம் தன் காமிராவில் பதிந்து தலைமை அலுவலகத்துக்கு அனுப்புகிறார். தலைமை அலுவலகம் காமிராவில் பதிந்த காட்சிகளையும் வர்ணனைகளையும் பார்த்து கிரகித்து நல்ல செய்தியா கெட்ட செய்தியா, செய்தித்தாளில் இடம்பெறத் தக்கதா இல்லையா என்று அலசி ஆராய்ந்து ஒரு முடிவெடுக்கும்.

    மனம் இயங்குவதும் இப்படித்தான்! ரிப்போர்ட்டர் என்பது புலன்கள் (கண், காது, வாய், மூக்கு, தொடுவுணர்ச்சி)! ரிப்போர்ட்டர் தன் காமிராவில் பதிந்த செய்திக்குறிப்பு அப்புலன்களை ஒட்டிய மனங்கள். மகாயான பௌத்தம் ஒவ்வொரு புலனுக்கும் ஒரு மனமிருப்பதாக சொல்கிறது. கண் ஒரு பூனையைப் பார்க்கிறது என்று வைத்துக் கொள்வோம். அது பூனை, அது கருமை நிறமுள்ளதாக இருக்கிறது. அதன் கண்கள் சிவப்பாக இருக்கின்றன என்றெல்லாம் கண் பார்த்தவற்றின் தகவல்-அர்த்தங்களை பட்டியலிட அக்கண்ணுடன் சேர்ந்த ஒரு மனம் இருக்கிறது. அது கண் – மனம்; இது போலவே மற்ற புலன்களுக்குத் துணையாகவும் மனங்கள் இயங்குவதாக லங்காவதார சூத்திரம் சொல்கிறது. தலைமை அலுவலகமாக இயங்கி புலன்கள் பதிவு செய்தவை, கிரகித்தவையெல்லாவற்றையும் எத்தகைய தன்மை கொண்டவை, அவை நல்லனுபவங்களா, வேண்டுவனவையா, என்றெல்லாம் பகுத்து, புலன் – மனங்களின் உயர் அடுக்காக செயல் பட்டுவரும் மனம் ஒன்று இருக்கிறது. ஐம்புலன்கள் மற்றும் புலன் மனங்கள் வந்திணையும் மையப்புள்ளி! அது தான் பகுக்கும் அல்லது சிந்திக்கும் மனம். நன்மை-தீமை, நல்லது-கெட்டது, சுகம்-துக்கம், வேண்டியது – வேண்டாதது என்றவாறு ஐம்புலன்-மனதினால் அறியப்பட்ட / பெறப்பட்ட அனுபவங்களை பகுக்கின்ற இயல்பு கொண்டதால் பகுக்கும் மனம் என்று அது கொள்ளப்படுகிறது.

    அனுபவங்கள் பகுக்கப்பட்ட பிறகு அவற்றின் மேல் தீர்ப்புகள் இடப்படுகின்றன. வழங்கப்பட்ட தீர்ப்புக்கேற்றவாறு அவ்வனுபவம் விரும்பத்தக்கதாகவோ வெறுக்கத்தக்கதாகவோ ஆகிறது. இவ்வாறு தொடர்ந்தும் பின்னிப்பிணைந்தவாறும் மனம் எனும் முழு அமைப்பும் இயங்குகிறது.

    மன அமைப்பின் இயக்கம்

    மன அமைப்பின் இயக்கங்களை மூன்று வழிகளில் பிரிக்கலாம்.

    மனத்தின் இயக்கங்கள் சாதாரணமாக புறவுலகில் காணும் பொருளின் தக்க கூறுகளை முதலில் கிரகித்துக் கொள்ளும். புலன் மனதில் அதற்கேற்ற புரிதலும் உணர்ச்சியும் எழும் ; மற்ற புலன்களிலும், புலன் – மனங்களிலும் கூடவோ குறையவோ புரிதலும் உணர்ச்சியும் எழும், ஒவ்வொரு தோல் துளைகளிலும்…ஏன் உடலின் ஒவ்வொரு அணுக்களிலும் கூட புரிதலும் உணர்ச்சியும் தோன்றும். பொருட்களை பிரதிபலிக்கும் கண்ணாடி போன்று தளம் முழுமையும் புரிந்துணர்ந்து கொள்ளப்படுகிறது.

    இரண்டாம் இயக்கமாக இப்புரிந்துணர்வுகள் பகுக்கும் மனதுடன் எதிர்வினை புரிந்து ஈர்ப்புகள், வெறுப்புகள், உணர்ச்சிகள், செயல்கள் மற்றும் பழக்கங்கள் முதலானவற்றை தோற்றுவிக்கின்றன.

    மூன்றாவது இயக்கம் பகுக்கும் மனதின் வளர்ச்சி, முன்னேற்றம், துவக்கமிலா காலம் முதல் திரட்டப்பட்டு வளர்ந்த பழக்க சக்தி – இவற்றைப் பொறுத்ததாக எழும்.. திரட்டப்பட்ட பழக்க சக்தி உலகளாவிய மனதிலிருந்து பெறப்படுவதாக மகாயான பௌத்தம் விவரிக்கிறது. உலகளாவிய மனம் என்றால் என்ன? உலகளாவிய மனத்தை சமஸ்கிருதக் கலைச்சொல் – ஆலயவிஞ்ஞான – என்ற பிரயோகத்தின் மூலம் சுட்டுகிறது லங்காவதார சூத்திரம். மன – அமைப்பின் முக்கியமான கருத்தாக்கம் – வாசனைகள் (‘வாசனா’) வாசனா என்பது ஞாபகம். ஒரு செயல் செய்த பின் எஞ்சியிருப்பது தான் வாசனா. எஞ்சியிருப்பது ஒரு மனோகாரணியாக இருக்கலாம் அல்லது பின்னால் எழப்போகிற ஜடம் அல்லது நிகழ்வுக்கான மூலக்கூறாக இருக்கலாம். செயல்களின் எச்சங்கள் வெடித்தெழ தயார் நிலையில் இருக்கிற உள்ளார்ந்த ஆற்றலாக ‘ஆலயத்துக்குள்’ சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஞாபகங்களின் குவியல் அல்லது பழக்கங்களின் ஆற்றல் ஒரு தனி உயிருக்கானது மட்டுமில்லை. எல்லா உயிர்களினாலும் அனுபவிக்கப்பட்ட ஞாபகங்களின், பழக்கங்களின் மொத்த குவியலாக அது இருக்கிறது. துவக்கமிலா காலம் முதல் எல்லா நிகழும் எல்லாவற்றையும் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் விதைகள் ஒரு தனி உயிரை மட்டும் சார்ந்தது என்று சொல்ல முடியாது. தனி உயிரைத் தாண்டி எல்லா உயிருக்கும் பொதுவானது. ஆதியில் ‘ஆலயம்’ தனித்தன்மை வாய்ந்த அறிவு மற்றும் பீடிப்பு போன்ற மாசுக்கள் எட்ட முடியாத தூய்மை கொண்டதாக இருந்தது. தூய்மை என்பது தருக்கபூர்வமாக பொதுத்தன்மையை குறிக்கிறது ; மாசு என்பது வெவ்வேறு வடிவங்களில் பற்றுதலை ஏற்படுத்தும் தனிப்பண்புகொள்ளும் தன்மையை குறிக்கிறது. சுருக்கமாக, இவ்வுலகம் ஞாபகத்தில் இருந்து துவங்குகிறது ; ஞாபகம் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ‘ஆலயம்’ தீங்கானது இல்லை. தவறாக பகுக்கும் தன்மையின் தாக்கத்திலிருந்து விலக முடியுமானால், ‘ஆலயத்தை’ மையமாகக் கொண்டு பின்னப்பட்டிருக்கும் மன அமைப்பானது உண்மையான ஞானத்தை நோக்கி பிரிந்து செல்லமுடியும் என்பது தான் லங்காவதார சூத்திரத்தின் சாரம்.

    அனாத்ம வாதத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் பௌத்தம் உலகளாவிய மனம் என்ற கருப்பொருள் பற்றி பேசுவது தகாதது என்று தேரவாத பௌத்தர்கள் இக்கருத்தியலை ஒப்புக்கொள்வதில்லை. தேரவாதத்துக்கும் மகாயானத்துக்குமான முக்கியமான வேறுபாடு இங்கிருந்து தான் தொடங்குகிறது,

    மகாயான பௌத்தர்கள் இக்குற்றச்சாட்டை எப்படி எதிர் கொள்கிறார்கள்?

    பேராசிரியர் D.T Suzuki சொல்கிறார் : அனாத்ம வாதத்தை புறவுலகிற்குப் பொருத்தி விரிவுபடுத்துவதன் விளைவாக எழும் கிளைக் கருத்தியலே உலகளாவிய மனம். இரண்டு கருத்துகளுமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை தாம். எல்லா பொருட்களுக்கும் உயிர்களுக்கும் ஆன்மா இல்லை என்று சொல்வது எல்லா இருத்தல்களுக்கும் இடையே ஒரு சிக்கலான உறவுமுறை இருப்பதை அங்கீகரிப்பதாகும். சார்புடைத் தோற்றத்தை கண்டறிந்த போதே இச்சிக்கலான உறவு முறையை புத்தர் கவனித்திருக்கிறார், ஆனாலும் அவருடைய உடனடி ஆர்வம் சீடர்களின் பேதைமைகளை பற்றுதல்களை விலக்குவதிலேயே இருந்த படியால், அனாத்மாவாதத்தின் முதற்படிகளை விளக்குவதோடு புத்தர் நின்றுவிட்டார். பௌத்த மதச் சிந்தனைகள் அனுபவங்களின் வளர்ச்சியினால், மனோதத்துவம் மீப்பொருண்மையையியலாக வளர்ந்தது ; சூன்யதா கோட்பாடு மகாயான பௌத்தர்களின் கருத்தில் அமர்ந்தது. அனைத்து பொருட்களும் ஆன்மா என்கிற சுயமற்றவை என்பதை வேறு மாதிரியாக சொல்லும் வழிதான் சூன்யதா தத்துவம். அனாத்ம வாதம் நிறுவப்பட்டபிறகு மகாயான பௌத்தர்களின் சூன்யதா (All things are empty), நிஷ்வபாவம் (without self-substance), அனுத்பாதம் (unborn) போன்ற கோட்பாடுகள் முக்கியமான அனுமானங்களே”

    இச்சிறு கட்டுரையை எழுத உதவிய நூல்கள் : (1) பேராசிரியர் D.T Suzuki எழுதிய லங்காவதார சூத்திரக் கட்டுரைகள், (2) அவருடைய மாணவர் Dwight Goddard எழுதிய லங்காவதார சூத்திரம் ; சுருக்கம்

    lankavatara

  • காவியக் கவிஞர் – பகுதி 2

    தைரியத்துடன் செயல் படுங்கள். அரச குடும்பத்தின் செல்வம் இங்கிருந்து மீளாமல் இருக்கட்டும். சாதாரண பெண்கள் தத்தம் வர்க்கத்தில் பிறந்த காதலர்களையே ஈர்ப்பார்கள்; ஆனால் உயர்ந்தோர் தாழ்ந்தோர், எல்லா வர்க்கத்தோரையும் உணர்வால் வளைப்பவரே சிறந்த பெண்கள்”

    உதயனின் பேச்சைக் கேட்ட பெண்கள் உடன் இளவரசனைக் கவரும் வேலையில் இறங்கினர்.

    ஏதோ பயம் கொண்டவர்கள் போல ஆனந்தம் தரும் சில சைகைகளை புருவங்களினால், பார்வைகளால், கொஞ்சும் வார்த்தைகளினால், புன்னகைகளால், அங்க அசைவுகளால் செய்தார்கள்.

    அரச ஆணையின் விளைவால், இளவரசனின் மென்மைத் தன்மையால், போதையூட்டும் காதல் உணர்வின் சக்தியால், அவர்கள் சங்கோஜத்தை களைந்தனர். பெண் யானைக் கூட்டங்களோடு இமய மலைக் காடுகளில் வலம் வரும் ஆண் யானையைப் போல மகளிர் சூழ தோட்டத்தில் இளவரசன் வலம் வந்தான். தேவ மங்கையரால் விப்ராஜனின் இன்ப வனத்தில் சூழப்பட்ட விவாஸ்வத் போல மகளிரின் கவனம் அவன் மேலிருக்க அத்தோட்டத்தில் இளவரசன் பிரகாசித்தான். பின்னர் சில பெண்கள் போதையின் தாக்கத்தில் சிக்குண்டவர்கள் போல் நடித்தவாறே, தம்முடைய உறுதியான, வட்டமான, நெருக்கமான குலை போன்ற அழகான மார்பகங்களால் அவனைத் தொட்டனர். பொய்யாக ஒருத்தி தடுக்கி விழுந்து, தோள்களிலிருந்து தொங்கும் கொடி போன்ற தன்னிளங்கைகளால் அவனுடைய தோளை மடக்கினாள்.

    Ajanta Cave Painting

    மது வாசனை வீசும் தாமிர நிறமான கீழ் உதடுகளை அசைத்து ஒருத்தி “ஒரு இரகசியத்தைக் கேள்” என்று அவன் காதில் முணுமுணுத்தாள். அவனுடைய கரத்தின் தொடுதலைப் பெற்றுவிடும் நம்பிக்கையில் களிம்பு தடவி ஈரம் படிந்த ஒருத்தி அவனிடம் ஆணையிடுபவள் போல் “இங்கு ஒரு கோடு வரை” என்று சொன்னாள்.

    இன்னொருத்தி போதையை சாக்காய்க் கொண்டு இடையின் மேகலை காணும் வண்ணம், திரும்பத் திரும்ப நீல நிற மேலாடையை வீழ வைத்துக் கொண்டிருந்தாள். அது இருட்டான வானத்தில் தோன்றி மறையும் மின்னலைப் போன்றதாய் இருந்தது. தங்களுடைய தங்க ஆபரணங்கள் சத்தமிடும் வண்ணம் சிலர் மேலும் கீழுமாக நடந்தனர்; அப்போது ஒளி ஊடுருவக் கூடிய ஆடையால் மறைக்கப்பட்ட அவர்களின் இடைப்பாகங்கள் தெரிந்தன. ஏராளமான மாம்பூக்கள் மலர்ந்திருந்த மாங்கிளைகளில் சாய்ந்தவாறு, தங்கஜாடிகளைப் போன்ற தம் மார்பகங்களைக் காட்டியவாறு மற்ற பெண்கள் நின்றிருந்தனர். தாமரை-விழி கொண்ட இன்னொரு பெண் தாமரைப் படுக்கையிலிருந்து எடுத்த ஒரு தாமரையுடன் தாமரை முகங் கொண்ட இளவரசனின் பக்கத்தில் பத்மஶ்ரீ போல் நின்று கொண்டாள்.

    இன்னொருத்தி அபிநயங்கள் பிடித்து பாடலொன்று பாடினாள் ; அவனுடைய அலட்சியத்தை பொருட்படுத்தாது அவள் பார்த்த பார்வை “நீர் உம்மையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்” என்று சொல்வது போலிருந்தது. இன்னொருத்தி செந்நிறமான முகத்தில் தன் புருவங்களால் விற்களை வரைந்து அவனைப் போன்று பாவனை காட்டினாள் ; அவனுடைய பவித்திரமான நடத்தையை கேலி செய்வது போல சைகைகளைக் காட்டினாள். எழிலான வட்ட முலைகளும் காதணிகளும் சேர்ந்து குலுங்கும் படி சிரித்துக் கொண்டே ஒருத்தி “ஐயா, முடித்துவிடுங்கள்” என்று கூறி அவனைக் கிண்டல் செய்தாள்.

    இவர்களிடமிருந்து அவன் பின் வாங்கத் துவங்கிய போது, சிலர் பூமாலைகளைக் கயிறாக வீசி அவனைத் தடுத்தனர்; சிலர் மறைமுகக் கிண்டல் தொனிக்கும் மெலிதான வார்த்தைகளை அங்குசத்தைப் போல பயன் படுத்தி அவனைத் தடுத்தனர். கைகளில் பழுத்த மாம்பழத்தைப் பிசைந்து கொண்டு , அவனுடன் விவாதிக்க விரும்புபவள் போல், காமத்தால் தடுமாறிய குரலில் ”யாருடையது இம்மலர்?” என்றாள்.

    ஆணின் நடை-தோற்றப் பாவனையில் ஒருத்தி ”பெண்கள் உங்களை வெற்றி கொண்டார்கள்; நீங்கள் சென்று இப்பூமியை வென்று வாருங்கள்” என்றாள். நீலத் தாமரை மணம் கமழும் இன்னொருத்தி தன் கண்களைச் சுழற்றி, மிகையான உற்சாகம் காரணமாக தெளிவற்ற வார்த்தைகளில் இளவரசனை நோக்கி இவ்வாறு பேசலானாள்:

    “பிரபு! தங்ககூண்டில் அடைபட்டதைப் போன்று குயில் பாட்டு ஒலிக்க, தேன் மணக்கும் மலர்களால் சூழப்பட்ட இம்மாமரத்தைப் பாருங்கள் தீயால் எரிக்கப்படுவன போல் தேனீக்கள் ஒலியெழுப்பும் இவ்விடத்தில் காதலர்களின் துயரைப் பெருக்கும் அசோக மரங்களைப் பாருங்கள் மஞ்சற் களிம்பு பூசிய ஒரு பெண் வெண்ணிற ஆடை அணிந்த ஓர் ஆணைத் தழுவி நிற்பது போல் சிறு மாங்கிளையொன்று திலக மரங்களை தழுவியிருப்பதைப் பாருங்கள் பெண்களுடைய நகங்களின் அழகில் மயங்கி தலை சுற்றியது போல் வளைந்து அரக்கு போல ஒளிரும் குருவக மலர்களைக் காணுங்கள்.

    வெண்ணிற ஆடை பூண்டு சயனித்திருக்கும் சிவந்த பெண்ணைப் போல சிந்துவார புதர்கள் கரைகளில் வளர்ந்து நிற்கும் ஏரியைப் பாருங்கள். பெண்களின் அளப்பரிய வலிமையைக் கவனத்தில் கொள்க; மீன் கொத்தும் வாத்தொன்று ஒரு வேலைக்காரனைப் போல தன் துணையைப் பின் தொடர்வதைப் பாருங்கள். உணர்ச்சியூட்டும் குயிலொன்றின் அழைப்பைக் கேளுங்கள் ; எதிரொலி போன்று பதில் தரும் இன்னொரு குயிலின் சத்ததையும் கேளுங்கள். பறவைகளுக்குள் அதீத உணர்ச்சியை ஏற்படுத்தும் இளவேனிற்காலம், எதைப் பற்றி சிந்திப்பது என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் இந்த அறிவாளிக்குள் எதையும் ஏற்படுத்தாதோ?”

    காதல் வயப்பட்டிருந்த மனத்தின் முழுக்கட்டுப்பாட்டில் இருந்த இளம்பெண்கள் இவ்வாறு பல விதங்களில் இளவரசனைக் கவர முனைந்தார்கள். இத்தகைய மருட்சிகளால் கொஞ்சமும் அசைவுறாத மனதினனாக இளவரசன் புலன்களின் மேலான கட்டுப்பாட்டை இழக்காமல் இருந்தான். தவிர்க்க இயலா மரணத்தின் இயல்பு பற்றிய சிந்தனையின் பாற்பட்ட அவன் வேதனைப்படவும் இல்லை; உவகை கொள்ளவும் இல்லை. அவர்களின் கால்கள் வாய்மையில் நிலைப்பட்டதாக இல்லாமல் இருப்பதை அந்த உயர்ந்த மனிதன் கண்டு கொண்டான்; ஒரே சமயத்தில் உறுதியாகவும் குழப்பத்திலும் இருந்த மனதில் இவ்வாறு எண்ணலானான்.

    ”முதுமையால் அழிக்கப்படக் கூடிய மேனி எழிலின் போதையில் சிக்குண்டிருக்கும் இப்பெண்கள் இளமையின் நிரந்தரமின்மையை அறிய மாட்டார்களா? நோய்களே இயற்கையின் விதி என்றிருக்கும் இவ்வுலகு பற்றிய பயம் சிறிதுமின்றி உல்லாசமாயிருக்கும் இவர்கள் நோய்வாய்ப்பட்டவர்களை இதுவரை கண்டதில்லை போலிருக்கிறது! குழப்பம் கொஞ்சமும் இல்லாமல், விளையாட்டும் சிரிப்புமாக வளைய வரும் இவர்களைக் காணும் போது எல்லாவற்றையும் கபளிகரம் செய்து விடும் மரணம் பற்றியதான அறியாமை மிக்கவர்கள் என்றே தோன்றுகிறது.

    மூப்பு, பிணி மரணம் பற்றி அறிந்த மனிதன், சிரிப்பதை விடுங்கள், உட்காரவோ, நிற்கவோ அல்லது படுக்கவோ கூட மாட்டானே! ஒரு மரம் மலர்களை, கனிகளை இழந்து வீழும் போதோ அல்லது வெட்டப்டும் போது, இன்னொரு மரம் அழாமலும் வருத்தப்படாமலும் இருப்பது போல, வயதானவர்களையும், நோய்வாய்ப்பட்டவர்களையும், செத்தவர்களையும் பார்த்தும் கூட பொருட்படுத்தாமல், கலங்காமல் இருப்பவர்கள் பகுத்தறிவற்றவர்களாகவே இருப்பார்கள்.”

    சிந்தனையில் மூழ்கி, புலனுணர்ச்சியில் ஆர்வமில்லாதவனாய் நின்றிருந்த இளவரசனை நோக்கி உலகியல் நடத்தையில், சாத்திரங்களில் வல்லுனனான உதயன் நட்பு மேலிட உரைக்கலானான் :

    ”தகுதி வாய்ந்தவன் என்ற காரணத்தினால் அரசர் என்னை உன் தோழனாக நியமித்தார்; அவர் என்னிடம் வைத்த நம்பிக்கையை நியாயப்படுத்துவதற்காக உன்னிடம் பேச விழைகிறேன். நட்பின் பண்பு மூவகைப்பட்டது. நண்பனை இலாபமற்ற செயல்களில் ஈடுபடவிடாமல் தடுப்பது, இலாபம் தரும் செயல்களில் அவன் ஈடுபட தூண்டுகோலாக இருப்பது மற்றும் கஷ்டங்களின் போது கூடவே இருப்பது. நண்பனாக ஏற்றுக் கொண்ட பிறகு, என் கடமைகளில் இருந்து விலகி, உன் நலன்களைப் பேணாதவனாக இருப்பேனாயின், நட்பு விதிகளை வழுவினவனாக ஆவேன்.

    உன் நண்பனாக இருக்கும் காரணத்தால் நான் இதை சொல்வது அவசியமாகிறது; இப்பெண்களுக்கு உரிய கவனத்தை நீ தராமல் இருப்பது, இளைஞனாகவும் சுந்தரனாகவும் இருக்கும் உனக்கு பெருமை தரக் கூடியது அல்ல. போலியாகவேனும் சரி, பெண்களை நிறைவு செய்வது சாலச் சிறந்தது, அவர்களுடைய நாணத்திற்கு எதிர்வினையாகவோ அல்லது நம்முடைய சுகத்திற்காகவோ! நல்ல பண்புகள் அன்பின் பிறப்பிடமாக இருப்பன. பெண்கள் மரியாதையை விரும்புபவர்கள். பணிவும் இணக்கமும் பெண்களின் இதயங்களை பிணைப்பன.

    உன் இதயம் இஷ்டப்படாவிடினும், நீ மரியாதையுடன் அவர்களை சந்தோஷப்படுத்துவது உன் அழகின் தன்மைக்கு பொருத்தமானதாக இருக்கும். பணிவன்பு மகளிரின் மருந்து; பணிவன்பு ஒர் அழகான ஆபரணம்; பணிவன்பிலாத அழகு மலர்களில்லா புதர் போன்றது. உண்மையான உணர்வுடன் அவர்களை ஏற்றுக்கொள்; அரிய புலனின்பங்களை பெறுகையில் நீ கழித்தொதுக்கக்கூடாது. காதல் உயர்ந்தபட்ச நன்மையைத் தரும் என்றே, புரம்தரா எனும் தேவன் (குறிப்பு : புத்தசரிதத்தில் இந்த பெயரே வருகிறது. இப்பாத்திரத்தை இந்திரன் என்ற பெயரில் நாம் அறிவோம்) கௌதமரின் மனைவி அகல்யாவின் மீது காதலில் விழுந்தான். சோமனின் மனைவி ரோகிணியை மணமுடிக்க அகஸ்தியர் கேட்டாரென்று மரபு சொல்கிறது. ரோகிணி போலவே இருக்கும் லோபமுத்திரையை அவர் மனைவியாகப் பெற்றார்.

    கடும் தபசிற்குப் பெயர் போன பிரகஸ்பதி உதாத்யரின் மனைவி மமதாவுடன் உறவு கொண்டு பாரத்வாஜரைப் பெற்றார். பிரகஸ்பதியின் மனைவியிடமிருந்து சந்திரன் புதனைப் பெற்றான். ஆசையை அடக்கிய பழம்பெரும் முனிவர் பராசரர் காளி எனும் மீனுக்குப் பிறந்தவளை யமுனா நதிக்கரையில் அணுகினார். அக்சமாலா எனும் கீழ் ஜாதிப் பெண்ணுடன் கூடி முனிவர் வசிஷ்டர் கபிஞ்சலாடன் எனும் மகனைப் பெற்றார். ஆயுட்காலம் முடிகின்ற தருணத்திலும் விஸ்வாசி என்கிற தேவமங்கையுடன் களியாட்டமிட்டான் யயாதி.

    பெண்ணுடனான புணர்ச்சி மரணத்தில் முடியும் என்ற சாபம் இருந்தும் கௌரவ வம்ச மன்னன் பாண்டு, மாத்ரியின் சௌந்தர்யத்தில் மயங்கி காதலின் இன்பங்களுக்கு தன்னை பலி கொடுத்தான். இது போனற உயர் நிலை மாந்தர் பலர் உடல் சுகம் பொருட்டு இழிவானதெனினும் புலனின்பங்களை துய்த்திருக்கின்றனர். வீரியம், இளமை, அழகு – எல்லாமிருந்தும் உனக்கு உரிமையாக வரும் இன்பங்களை நீ வெறுக்கிறாய்.”

    dancing_girls

    மறைகள் சொல்லும் மரபைச் சுட்டிக்காட்டி பேசப்பட்ட புறப்பகட்டான சொற்களைக் கேட்ட இளவரசன் இடி-மேகத்தின் குரலில் பதிலளித்தான் :-

    “என் மீதான உன் நட்பினை உன் சொற்கள் எனக்கு நன்கு புரிய வைத்தன. என்னைப் பற்றிய உன் தவறான மதிப்பீடுகளுக்கான என் பதில்களைக் கேள். புலன் வழிப் பொருட்களை நான் வெறுக்கிறேன் என்றில்லை ; இவ்வுலகம் முழுமையும் அவற்றில் லயித்திருக்கின்றன என்பதை நான் அறிவேன். ஆனால் என் மனம் அவற்றில் மகிழ்வதில்லை. ஏனெனில் அவற்றை நான் நிலையற்றவையாகக் கருதுகிறேன்.

    முப்பிணிகள் இல்லாமல் இருந்திருந்தால் நானும் புலன் வழிப் பொருட்களின் இன்பத்தை அனுபவித்திருக்கக்கூடும். பெண்களின் அழகும் சௌந்தர்யமும் என்றும் அழியாதனவாக இருந்திருந்தால், எவ்வளவு கெட்டவையாக இருந்தாலும் என் மனம் காதலின்பத்தை துய்த்திருக்கும். அவர்களின் சௌந்தர்யத்தை மூப்பு பருகிவிட்ட பிறகு, அவர்களுக்கே அது அருவெருப்பாக இருக்கும் ; அதனுடைய இன்பம் மனமயக்கத்தின் காரணமாகவே எழத்தக்கது.

    மரணம், மூப்பு, பிணி இவற்றுக்கு இரையாகப் போகிற ஒரு மனிதன் அவனைப் போன்று முப்பிணிக்கு இரையாகப் போகிற இன்னொருவரோடு குழப்பமில்லாமல் உறவாடுதல் பறவைகள் மற்றும் விலங்குகளின் நிலைக்கு சமானமானதன்றி வேறில்லை. வலிமையான மனிதர்களெல்லாம் உணர்ச்சிகளுக்கு அடிமையானவர்கள் என்கிற உன் வாதம் அவர்களெல்லாம் அழிந்து போனார்கள் என்பதைப் பார்க்கும் போது, மனதுக்குள் பதட்டத்தைத் தான் உண்டு பண்ண வேண்டும்.

    அழியும் தன்மையுடைத்தும், புலன் வழிப்பொருட்களில் பற்றை ஏற்படுத்தக்கூடியதும், சுயக்கட்டுப்பாட்டை அடையச் செய்யாத எதையும் நான் உண்மையான சிறப்புடையதென்று எப்போதும் கருத மாட்டேன். போலித்தனத்தை பயன்படுத்தியாவது ஒருவன் பெண்களுடன் சம்பந்தப்படுத்திக் கொண்டு விட வேண்டும் என்று நீ சொல்வதைப் பொறுத்த வரை, போலித்தனமான மரியாதையுடன் நான் என்றும் ஒத்துப்போக முடியாது.

    நேர்மையற்ற இணக்கத்தையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. முழுமனதுடன் சேராத ஒன்றுதலை நாம் அறவே ஒதுக்க வேண்டும். இது போன்று இருக்கும் போது, பழிப்புக்கிடமான உணர்வுகளுக்குள் என்னை அழைத்து தவறான பாதைக்குள் அனுப்ப வேண்டாம். விரைந்தோடும் உணர்வுகளில் நீ அர்த்தத்தை காண்பாயானால், உன் மனம் உறுதி மிக்கதாகவும் வலுவானதாகவும் இருக்க வேண்டும். மரணப்பாதையில் படைப்பை அவதானிக்கும் போது, மிகக் கடுமையான அபாயத்துக்கு நடுவே, நீ புலன் வழிப் பொருட்களின் மீது பற்றுடன் இருக்கிறாய்.

    பிணி, மூப்பு, நோய்கள் பற்றி தொடர்ந்து சிந்தித்துக் கொண்டே இருப்பதால், எனக்கோ பயமாகவும் கடும் மன உளைச்சலாகவும் இருக்கிறது. உலகமே தீயில் எரிவதை நான் உணர்வதால், மன சமாதானம் கிட்டுவதில்லை. திருப்தியும் அடைவதில்லை. மரணம் இன்றியமையாதது என்று அறிந்தவனின் நெஞ்சில் ஆசை எழுந்ததென்றால், அழுவதற்கு பதிலாக பெரிய ஆபத்தில் உவகை கொள்ளும் அவன் இதயம் இரும்பாலானது என்று நான் கருதுவேன்.”

    முழுமையான தீர்மானத்துடன் உணர்ச்சிகளுக்கு எதிராக இளவரசன் சொற்பொழிவை ஆற்றி முடித்தவுடன் கதிரவன் மேற்கு மலையின் பின்னர் மறைந்து கொண்டான்.

    அணிந்த மாலைகளும் ஆபரணங்களும் பயனற்றுப் போயின ; அவர்களின் அற்புதமான கலைகளும் கொஞ்சல்களும் வீணாயின ; நம்பிக்கைகள் விரக்தியாக மாறிய பிறகு, காதற்கடவுளை தம் இதயங்களுக்கு அடியில் அமிழ்த்தி வைத்துக் கொண்டு பெண்களெல்லாம் நகருக்கு திரும்பினர். மாலையில் நகரத்துப் பெண்கள் எல்லாம் பூங்காவில் இருந்து நீங்கியவுடன் பூமியாளும் மன்னனின் மகன் அனைத்தின் நிலையாமை பற்றியும் சிந்தித்தவாறே தன் குடிலுக்குள் நுழைந்தான்.

    Source : Ashvagosha’s Buddhacarita ; the Act of Buddha – English Translation from Sanskrit by E.H.Johnston

    நன்றி : சொல்வனம் (http://solvanam.com/?p=28557)

  • காவியக் கவிஞர் – பகுதி 1

    ”மனதின் சாராம்சம் நிரந்தரமான தூய்மையை கொண்டதாக இருந்தாலும், அறியாமையின் தாக்கம் சூழல்-சார் மனதை சாத்தியமாக்குகிறது. சூழல் சார்ந்ததாக இருந்தாலும், மனம் நிரந்தரமானது ; மாசுமறுவற்றது ; சுத்தமானது ; மாற்றங்களுக்கு உட்படாதது. அதனுடைய மூல இயல்பு பிரத்யேகத்தன்மையில்லாமல் இருப்பதால், பல்வேறு முறையிலான இருப்பை எங்கும் சிருஷ்டி செய்தவாறு இருந்தாலும், அது தனக்குள் ஒரு மாற்றமுமிலாமல் தன்னை உணர்கிறது.

    விஷயங்களின் ஒட்டுமொத்தத்தின் ஒற்றைத் தன்மை ஏற்கப்படாத போது, பிரத்யேகத்தன்மையுடன் கூடிய அறியாமை எழுகிறது ; சூழல்-சார் மனதின் எல்லா நிலைகளும் வளர்கிறது. இக்கோட்பாட்டின் முக்கியத்துவம் ஆழமானது ; புத்தர்களைத் தவிர யாராலும் புரிந்து கொள்ள இயலாதது.” (more…)

  • முடிவிலாச் சுழல்

    Bhavacakra

    கறுப்பு-வெள்ளை திரைப்படங்களில் பாத்திரங்கள் கனவு காணத் துவங்கும் போது சுழன்று ஒரு மையப்புள்ளியில் குவியும் வட்டங்களை காட்டுவார்கள். வெளிப்புறத்தில் உருவாகும் வட்டம் பல வட்டங்களை உருவாக்கியவாறு மையப் புள்ளியை நோக்கி நகர்வது போல தோன்றும்; மையப் புள்ளியிலிருந்து புதிதாக ஒரு வட்டம் தோன்றி பல வட்டங்களை வடிவமைத்தவாறே வெளிப்புற வட்டத்தை நோக்கி வளர்வது போலவும் தோன்றும். ஆரம்பம் முடிவு போலவும் முடிவே ஆரம்பம் போலவும் காட்சி தரும் கனவுச் சுழற்சி வட்டத்தின் மையத்தில் ஓர் உள் நோக்கிய வெடிப்பு நிகழ்ந்து வட்டம் மறைந்து அதில் இருந்து இன்னொரு வட்டம் ஜனிப்பது போன்ற பிரமையை நம் கண்களுக்குத் தரும். முடிவிலியாக சுழன்று கொண்டிருக்கும் வட்டத்துக்குள் உள் நோக்கி வெடிக்கும் புள்ளியை சுய-நிர்மூலமாக்கும் புள்ளியாகக் கொள்ளலாம் ; திரும்ப திரும்ப தன்னுடைய பிரதியை முடிவிலாது உருவாக்கிக் கொள்ளும் இயல்பு அதனுடைய முடிவற்ற பரப்பிலிருந்து எழுவது. தனி நபர் வாழ்க்கை, நகரங்களின் வாழ்க்கை, அல்லது பிரபஞ்சத்தின் ஆயுள் ஆகியவை இப்போது சொல்லிய வட்டங்களின் இயல்பினதாய் தவிர்க்கவியலா மீள் சுய நிர்மூலமாகும் போக்கைப் பின் தொடர்கின்றன. அச்சமூட்டும் இம்முறையின் எரிபொருளாக இயங்கி ஆற்றலை ஏற்படுத்துவதை “மறதி” (the ignorance of forgetting) என்று பௌத்த மதம் சொல்கிறது.

    தனிப்பட்ட அளவில் இந்த வட்டம் அல்லது சுழலை ‘சார்புடைத் தோற்றம்’ என்று பௌத்தம் சொல்கிறது. ‘பிரதீத்ய சமுத்பாதம்’ என்று சமஸ்கிருதத்திலும் “பதிச்ச சமுப்பாத” என்று புராதன பாலி மொழியிலும் அழைக்கப்படும் இந்த தத்துவம் பௌத்த மதத்தின் ஆணி வேர்.

    “பிரதீத்ய சமுத்பாதம்” பௌத்தத்தின் முக்கியமான பிரத்யேகமான தத்துவம். பாலி நெறிமுறையின் எண்ணற்ற பத்திகளில் புத்தர் இத்தத்துவத்தை இயற்கையின் நியதி என்றும் அடிப்படை உண்மை என்றும் விவரித்திருக்கிறார். ஞானமடைந்த மனிதர்களின் பிறப்பைச் சாராத உண்மையிதுவென்றும் அவர் சொல்லியிருக்கிறார்.

    சம்யுத்த நிகாயத்தில் புத்தர் சொல்கிறார் :

    “ததாகதர் தோன்றினாலும் தோன்றாவிட்டாலும், இது இருக்கிறது ; இது இயற்கையின் உண்மை ; இயற்கையின் சட்டம் ; இது நிபந்தனைக்குட்பட்ட தோற்றம்”

    “இந்த தத்துவம் பற்றிய ஞானத்தை அடைந்து விழிப்புற்ற ததாகதர், இதை பயில்விக்கிறார் ; காட்டுகிறார் ; உருவாக்குகிறார் ; அறிவிக்கிறார் ; வெளிப்படுத்துகிறார் ; அறியப்படுத்துகிறார் ; தெளிவுபடுத்துகிறார் ; இதைச் சொல்லி எடுத்துக் காட்டுகிறார்”
    “பிக்ஷுக்களே! இது அடிப்படைப் பண்பு ; இது மீளாத்தன்மை ; இது மாறுபடாத் தன்மை ; நிபந்தனைக்குட்பட்ட தோன்றும் தன்மையை நான் சார்புடை தோற்றக் கொள்கையென்று அழைக்கிறேன்” (S.II.25)

    புத்தருக்கும் அவருடைய முக்கிய சீடரில் ஒருவரான ஆனந்தருக்கும் இடையில் நடந்த ஓர் உரையாடலில் “பிரதீத்ய சமுத்பாதத்தின்” ஆழத்தை புத்தர் விளக்குகிறார்.

    “எத்தனை அருமை! இதற்கு முன்னர் எனக்கு இவ்வாறு தோன்றியதில்லை, ஆழமானதாக இருந்தாலும், புரிந்து கொள்ள கடினமானதென்றாலும், சார்புடை தோற்றக் கொள்கையானது என்னைப் பொறுத்தவரை எளிமையானதாகவே தோன்றுகிறது”

    “அப்படிச் சொல்லாதே ஆனந்தா! சார்புடை தோற்றக் கொள்கை மிக ஆழமானது ; புரிந்து கொள்ள கடினமானது. இந்த தத்துவத்தை அறியாமலும், புரிந்து கொள்ளாமலும், முழுக்க உணராமலும் இருத்தலின் மூலம் மனிதர்கள் சிக்கலுற்ற நூல் போல குழப்பத்துடன் இருக்கிறார்கள் ; ஒன்றாக தூக்கி எறியப்பட்ட நூல் கட்டுகள் போல இருக்கிறார்கள் ; வலையில் பிடிபட்டு இருக்கிறார்கள் ; மற்றும் நரகம், கீழ் உலகம், சம்சார சக்கரம் – இவற்றிலிருந்து தப்ப இயலாதவர்களாக இருக்கிறார்கள்” (மஹா நிதான சூத்திரம்)

    tibetan art

    பிரதீத்ய சமுத்பாதத்தை பற்றி விளக்கும் உரைரீதியான மேற்கோள்களை இரு பிரிவுகளாகப் பகுக்கலாம். ஒன்று, பொதுவாக இத்தத்துவத்தை விளக்குபவை ; இரண்டு, சங்கிலித் தொடராக இணைந்திருக்கும் தத்துவத்தின் காரணிகளை வரிசைப்படுத்துபவை.

    பொதுவான தளத்தில் பௌத்த மரபின் மையக் கருத்தை இப்போதனை குறிக்கிறது – எல்லா விஷயங்களும் பல்வேறு காரணங்களையும் காரணிகளையும் பொறுத்து எழுகின்றன.

    இது இருக்கிறது, ஏனென்றால் அது இருக்கிறது
    இது இல்லை ஏனென்றால் அது இல்லை
    இது இல்லாமல் போகிறது, ஏனென்றால் அது இல்லாமல் போகிறது. (S.II.28,65)

    சார்புடைத் தோற்றக் கோட்பாட்டின் படி எல்லா விஷயங்களும் நிகழ்வுகளும் ஒன்றை ஒன்று சார்ந்தே எழுகின்றன, சார்ந்திருக்கும் நிகழ்வுகளும் விஷயங்களும் தோன்றவில்லையெனில் எந்த விஷயமும் நிகழ்வும் தோன்றுவதில்லை அடிப்படையாக எதையும் சாராதது என்று எதுவும் இல்லை. சார்ந்த தன்மையின் காரணமாக உருவாகும் எதற்கும் உள்ளார்ந்த மெய்ம்மைக் கூறு இருப்பதில்லை. ஒரு நாற்காலியை உதாரணம் காட்டி தலாய் லாமா ஒரு கட்டுரையில் விளக்குவார் : “நான்கு கால்கள், ஒர் இருக்கை,, மரம், ஆணிகள், தரை, அறையை வரையறுக்கும் சுவர்கள், சுவர்களைக் கட்டிய ஆட்கள், நாற்காலி என்று அதை அழைத்து அது உட்கார்வதற்கான சாதனம் என்ற அடையாளாம் கொடுத்த மனிதர்கள் – இவைகள் இல்லாமல் நாற்காலி என்ற ஒன்று இல்லை”

    பிரத்யேக தளத்தில் பொதுவான போதனையின் பயன்பாட்டை குறிக்கிறது – பனிரெண்டு நிதானங்கள் வாயிலாக

    முதலில் பேதைமை என்கிற அறியாமை (1) (“மறந்தபேதைமை” – மணிமேகலை 30 ; 161) ; பிறகு செய்கை, இன்னும் குறிப்பாகச் சொன்னால் செயல் (கருமம்) (2) ; பேதைமை சார்ந்து எழும் செய்கையானது உணர்வை (3) நிலைப்படுத்துகிறது. உணர்வைச் சார்ந்து எழுவது அரு-உரு (நாமரூபம்) (4) ; புலன்களைச் செயல்படுத்துதல் பின் வருவது – வாயில் (5), ஊறு (6) மற்றும் நுகர்வு (7) ; புலன்களின் செயலாக்கத்தை தொடர்ந்து பின் வருவன அழிவு இயக்கிகளான வேட்கையும் (8) பற்றும் (9) ; வேட்கையும் பற்றும் முன்னிலைபட்டு பவம் (10) தோன்ற சந்தர்ப்பமேற்படுத்துகின்றன ; பவத்திற்குப் பிறகு தோற்றம் (11) ; பிணி, மூப்பு, சாவு (12) என்பன பிறகு எழுவன.
    newtable

    மேற்சொன்ன பனிரெண்டையும் நிதானங்கள் என்று சொல்வர் ; நிதான என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு ”தொடர்ச்சியுறக் கட்டுதல்” என்பது அர்த்தமாகும்.. சங்கிலியின் இணைப்புகள் போல பனிரெண்டு நிதானங்களும் ஒன்று அடுத்ததை சார்ந்தவாறு எழுகின்றன என்பதை பிரதீத்ய சமுத்பாதம் விவரிக்கிறது. ஒரு நிதானம் இல்லாமல் அடுத்தது இல்லை.

    மணிமேகலை காப்பியத்தின் முப்பதாவது காதையில் அரவண அடிகளால் கதையின் நாயகி மணிமேகலைக்கு போதிக்கப் படுவதாக வரும் இடங்களில் “பிரதீத்ய சமுத்பாத” தத்துவத்தை எளிய முறையில் விளக்குகிறார் சாத்தனார். சாத்தனாரின் விளக்கம் புதிதானதோ அவருக்கே உரித்தானதோ அல்ல என்றாலும் பௌத்த சமயத்தின் பிரசித்தமான முக்கிய தரிசனத்தை. உகந்த வகையில் தமிழ்ப்படுத்தியிருப்பது சாத்தனாரின் கவித்திறன்.

    இப்பன்னிரு நிதானங்களை மூன்று கால அடிப்படையிலும் பகுக்கிறார் மணிமேகலை ஆசிரியர்.

    கால மூன்றுங் கருதுங் காலை
    இறந்த கால மென்னல் வேண்டும்
    மறந்த பேதைமை செய்கையா னவற்றை
    நிகழ்ந்த காலமென நேரப் படுமே
    உணர்வே யருவுரு வாயி லூறே
    நுகர்வே வேட்கை பற்றே பவமே
    தோற்ற மென்றிவை சொல்லுங் காலை
    எதிர்கா லம்மென விசைக்கப் படுமே
    பிறப்பே பிணியே மூப்பே சாவே
    அவல மரற்றுக் கவலைகை யாறுகள் (மணிமேகலை, 30 : 159-168)

    பேதைமையும் செய்கையும் இறந்த காலம் எனக் குறிக்கப்படுகின்றன ; உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நுகர்வு வேட்கை, பற்று, பவம் – இவை நிகழ் காலமாகக் கொள்ளப் படுகினறன. பிறப்பு, பிணி, சாக்காடு இவையெல்லாம் எதிர்காலமாகக் கருதப்படுகின்றன.

    பன்னிரு நிதானங்களை பௌத்தம் குற்றம், வினை, பயன் – என்ற வகையிலும் வகைப்படுத்துகிறது.

    வேட்கை, பற்று, பேதைமை  குற்றம்
    பவமும், செய்கை  வினை
    குற்றமும் வினையும் சேர்ந்து ஏற்படுத்தும் பயன்கள்  உணர்ச்சி, பிறப்பு, முதுமை, நோய், சாக்காடு (மணிமேகலை, 30 : 169 -174)

    ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தர் போதித்தார் என்று தொடக்கப் பள்ளி வரலாற்று பாடப்புத்தகத்தில் நாம் படித்தது எல்லோருக்கும் ஞாபகமிருக்கும். “நால்வகை வாய்மை” (Four Noble Truths) களுள் ஒன்று அது. புத்தர் என்ன போதித்தார் என்று ஒரு கேள்விக்கு நம் எல்லாருடைய பொது நினைவில் இருக்கும் நால்வகை வாய்மைகள் கீழ் வருவன :-

    1. துக்கம் : இவ்வுலக வாழ்க்கை துன்பகரமானது. நோய், மூப்பு, இறப்பு முதலியவை நிறைந்த உலக வாழ்க்கை, எளிதில் விலக்கிக் கொள்ள முடியாத துன்பம் நிறைந்தது.
    2. துக்கத் தோற்றம் : ஆசையே துன்பத்தின் காரணம். தான் இன்பமாக வாழ வேண்டும் என்ற ஆசையே துன்பங்களுக்கு காரணமாகும்.
    3. துக்க நீக்கம் : ஆசை ஒழிக்கப்பட்டாலொழிய துன்பத்தை ஒழிக்க முடியாது.
    4. துக்க நீக்க நெறி : எண்வகை வழியே துன்பத்தை ஒழிக்கும் வழியாகும். எண்வகை வழிமுறைகளை கடைபிடித்தால் ஆசைகளை ஒழித்துவிடலாம்.

    பள்ளி மாணவனுக்குப் புரிகிற மாதிரியான எளிமையான போதனைகள் தாம் இவை. சார்புடை தோற்றக் கோட்பாட்டில் ”நால்வகை வாய்மை”யைப் பொருத்திப் பார்க்கலாம்.

    உணர்வே யருவுரு வாயி லூறே
    நுகர்வே பிறப்பே பிணிமூப்புச் சாவே
    அவல மரற்றுக் கவலைகை யாறென
    நுவலப் படுவன நோயா கும்மே
    அந்நோய் தனக்குப்
    பேதைமை செய்கை யவாவே பற்றுக்
    கரும வீட்டமிவை காரண மாகும்
    துன்பந் தோற்றம் பற்றே காரணம்
    இன்பம் வீடே பற்றிலி காரணம்
    ஒன்றிய வுரையே வாய்மை நான்காவ (மணிமேகலை, 30 : 179-188)

    ஒரு கணிதச் சமன்பாடு போன்றதொரு விளக்கம். பன்னிரு நிதானங்கள் இரு கூறுகளாகப் பிரிக்கப்பட்டு நால்வகை வாய்மைகள் இங்கு விளங்கப்படுகிறது.

    (1) துக்கம்  உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நுகர்வு, பிறப்பு, வினைப்பயன் (பிணி, மூப்பு, மரணம்)
    (2) துக்கத் தோற்றம்  பேதைமை, செய்கை, வேட்கை, பற்று, பவம் – இவைகளே துக்கங்களுக்கான காரணங்கள்.
    (3) துக்க நீக்கம்  துன்பத்துக்கு பிறப்புக்கும் பற்றுடைமையே காரணம்.
    (4) துக்க நீக்க நெறி  இன்பத்துக்கும் பிறவாத வீடு பேற்றுக்கும் பற்றற்று இருத்தலே வழி.

    பிரதீத்ய சமுத்பாதக் கோட்பாடு பல்வேறு வகைகளிலும் தளங்களிலும் அர்த்தம் கொள்ளப்படுகிறது.

    தேரவாதப் பௌத்தப் பாரம்பரியம் இக்கோட்பாட்டின் வாயிலாக துக்கங்கள் எழுவதை விளக்குகிறது ; இயற்காட்சிகளுக்கும் நிகழ்வுகளுக்கும் அடிப்படையான மெய்ம்மைக் கூறுகள் இல்லை என்றும் சொல்கிறது. ஆன்ம மறுப்பின் அடிப்படையாகவும் இக்கோட்பாடு கருதப்படுகிறது.

    மஹாயான பௌத்தத்தில் சார்புடை தோற்றக் கோட்பாடு மேலும் விரிவு படுத்தப்பட்டு தோற்றப்பாடுகளின் சார்பு நிலையைக் காரணமாகக் காட்டி இருப்பின் மெய்ம்மையற்ற தன்மை விளக்கப் படுகிறது.

    இக்கோட்பாட்டின் உண்மையான புரிதல் மட்டுமே இல்லாதவற்றை இருப்பவையாகவும் இருப்பனவற்றை இல்லாதவையாகக் கருதும் நம் தவறான பார்வைக்கு ஒரு முடிவு கட்டும் என்று யோக சாரம் என்ற பௌத்த மதத்தின் கிளையொன்று உரைக்கிறது.

    இந்தக் கோட்பாடு நிலையற்ற லௌகீக தொடர்ச்சியை மட்டும் குறிக்கவில்லை : எல்லாவற்றின் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் அடிப்படைத் தன்மையையே குறிக்கிறது என்று பிரஜ்னபாரமித சூத்திரம் வலியுறுத்துகிறது.

    முதல் பத்தியில் வந்த முடிவிலாச் சுழலில் உருவாகும் ஒவ்வொரு வட்டங்களின் அடையாளமும் சுழலில் உருவாகும் பிற வட்டங்களைச் சார்ந்தே இருக்கின்றன. முதல் வட்டம் தோன்றியிருக்காவிடில் இந்த வட்டமும் தோன்றியிருக்காது. மையத்தில் இருக்கும் சுயநிர்மூலமாக்கிக் கொள்ளும் புள்ளியைக் கடந்த அடிப்படை என்று ஒன்றும் இல்லை. இதைச் சூன்ய வாதம் என்று மத்யமிகா சொல்கிறது. சார்புடைத் தோற்றக் கோட்பாடும் சூன்ய வாதமும் ஒன்றே என்று நாகார்ஜுனர் மூலமத்யாத்ம காரிகையில் சொல்கிறார்.

    சூன்ய வாதத்தின் படி மெய்யியல்பு இன்றி இப்பிரபஞ்சமும் இதில் இருப்பனவும் தோன்றிக் கொண்டிருக்கின்றன எனும் போது ஒரு குறிப்பிட்ட நாளில் எதையும் சாராத ஒரு சக்தியாலோ அல்லது கடவுளாலோ இப்பிரபஞ்சம் படைக்கப் பட்டிருக்க முடியாது என்று ஆகிறது. எனவே படைப்புக் கடவுள் என்கிற கருத்தியலையோ அல்லது நவீன அறிவியலாளர்கள் குறிப்பிடும் big bang theory-யையோ பௌத்தர்கள் ஏற்பதில்லை, “நான் ஏன் கிறித்துவன் இல்லை?” என்ற கட்டுரையில் ”இவ்வுலகத்திற்கு துவக்கமென்ற ஒன்று இருக்கிறதென எண்ணுவதற்கு ஒரு காரணமும் இல்லை. கற்பனையின் வறட்சியாலேயே எல்லா விஷயங்களுக்கும் ஒர் ஆரம்பம் இருக்க வேண்டியது அவசியம் என்று நாம் கருதுகிறோம். எனவே முதல் காரணம் எனும் வாதத்தில் ஈடுபட்டு என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை” என்று பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் சொல்லும் போது பிரபஞ்சத்தின் துவக்கம் பற்றிய வினாக்களுக்கு புத்தருடைய மௌனத்தின் உட்பொருளை எடுத்துரைத்த மாதிரி இருக்கிறது.

    காரண காரியத் தொடர்பிலாமல் இப்பிரபஞ்சத்தில் ஒன்றும் இருக்க முடியாது என்கிறபடியால் ஆன்மா என்ற ஒன்றும் சாத்தியமில்லை என்று கொள்கிறது பௌத்தம்.
    நால்வகை வாய்மைகள், அனாத்ம வாதம், கடவுள் மறுப்பு வாதம் – இவையெல்லாவற்றுக்குமே சார்புடைத் தோற்றக் கோட்பாடு தான் அஸ்திவாரம்.

    நியுட்டனின் பௌதீக விதிகளை புவியீர்ப்பு விசை இயங்கும் தளத்தில் மட்டுமே உண்மையென்று நிரூபிக்க முடியும் என்றும் ;புவியீர்ப்பு விசைக்கு உட்படாத இடங்களில் நியூட்டனின் விதிகள் இயங்கா என்றும் நவீன அறிவியல் சொல்கிறது. அணுவியல் பரிசோதனைகளில் எட்டப்படும் முடிவுகள் சோதனையில் பயன்படுத்தப்படும் கருவிகளையும் வழிமுறைகளையும் ஒட்டியே அமைகின்றன என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது. பௌத்தம் சொல்லும் சார்புடைத் தோற்றக் கோட்பாட்டிற்கும் நவீன அறிவியல் சொல்லும் சார்புத் தன்மைக்கும் இருக்கும் ஓற்றுமை குறிப்பிடத்தக்கது.

    புத்தரின் முக்கியமான இரு ஆண் சீடர்கள் – ஷாரிப்புத்தரும் மௌத்கல்யாயனரும். இருவரும் நெருங்கிய நண்பர்கள். சஞ்சயர் என்ற லோகாயதவாத குருவின் சீடர்களாக இரு இருந்தனர். சஞ்சயரின் போதனைகளில் நம்பிக்கையிழந்து ஒரு நாள் ஷாரிப்புத்தர் ஆசிரமத்தில் இருந்து விலகி குறிக்கோளின்றி நடக்கலானார். அப்போது அஸ்வஜித் என்ற புத்தபிக்ஷுவை சந்திக்க நேரிடுகிறது. ஷாரிப்புத்தரின் ஞானப்பசியை உடனடியாக இனங் கண்டு கொள்ளும் அஸ்வஜித் கீழ்க்கண்டவாறு புத்தரையும் அவரது முக்கிய போதனையையும் அறிமுகப்படுத்துகிறார். :-

    ”யே தம்ம ஹேதுப்பபவா
    டேசம் ஹேதும் ததாகதோ
    ஆஹா டேசம் ச யொ நிரொதோ
    ஏவம் வாடி மஹாசமனொ”

    ”காரணத்தில் இருந்து எழும் தர்மங்கள் குறித்தான
    காரணத்தை ததாகதர் கூறி இருக்கிறார்;
    அதனுடைய முடிவையுக் கூட ;
    ஒரு சிறந்த துறவியின் போதனை இது” (குத்தக நிகாயம்)

    சார்புடைத் தோற்றக் கோட்பாட்டினை சுருக்கமாக ஆனால் தெட்டத் தெளிவாக உணர்த்தும் வரிகள்! இதைக் கேட்டவுடன் ஷாரிப்புத்தர் சிலிர்த்துப் போகிறார். ததாகதரின் ஆசிரமத்தை நோக்கி மின்னல் வேகத்தில் ஆர்வம் மேலிட ஓடுகிறார். புத்தரை தரிசித்து, சங்கத்தில் சேர்ந்த இரண்டாவது வாரம் ஷாரிப்புத்தர் அருகரானார்..

    Source :
    (1) மணிமேகலை – மூலமும் உரையும் – ந.மு.வேங்கடசாமி நாட்டார்
    (2) http://www.buddhanet.net
    (3) Cattanar’s Dream Book – an essay by David Shulman (from the Book – A Buddhist Woman’s Path to Enlightenment – an Uppsala University Publication)
    (4) Collected Wheel Publications / Piyadassi Thero & others : 1998
    (5) The universe in a single atom ; The convergence of science and spirituality : by HH The Dalai Lama (from the chapter “Empriness, Reality and Quantum Physics)

    நன்றி : சொல்வனம் (http://solvanam.com/?p=24834)

  • மிலிந்தனின் கேள்விகள் 2

    milin
    சொல்வனம் இதழ் 80 இல் வெளியான கட்டுரையை வாசித்த நண்பர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். “முன்னுரையில் ஆர்வமூட்டும் இரண்டு வினாக்களைப் பட்டியலிட்டு அவற்றிற்கு மிலிந்தா பன்ஹா விடையளிக்கிறது என்றீர்கள்; முழு கட்டுரையிலும் ’ஆன்மா இல்லையென்றால், மறுபிறவியில் பிறப்பது எது?’ மற்றும் ‘ஆன்மா இல்லையென்றால், இப்போது பேசிக்கொண்டிருப்பது எது?’ என்ற வினாக்களுக்கு விடை இல்லையே” என்றார். மற்ற வாசகர்களுக்கும் இது தோன்றியிருக்கலாம்.

    இவ்விரண்டு வினாக்களுக்கும் “மறுபிறப்பு” என்ற இரண்டாவது அத்தியாயத்தில் விடை இருக்கிறது. அதன் சில பகுதிகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்

    (1)

    ”நாகசேனரே, மறு பிறப்பெடுத்த ஒருவன் அதே மனிதனா? அல்லது வேறொருவனா?”

    ”அவனுமில்லை. வேறொருவனுமில்லை”

    ”உதாரணம்?”

    ”பானையில் இருக்கும் பால், தயிராகவும், பின்னர் வெண்ணையாகவும், பிறகு நெய்யாகவும் மாறுகிறது. நெய், தயிர், வெண்ணை இவை எல்லாம் பாலைப் போன்றதே என்று சொல்வது சரியானது அல்ல; ஆனால் அவைகளெல்லாம் பாலில் இருந்து வந்தவையே, எனவே அவைகளெல்லாம் வேறுவேறானவை என்றும் சொல்ல முடியாது”

    (2)

    ”மறுபிறப்பெடுக்காமல் இருக்கப் போகிறவன் அதைப் பற்றி அறிவானா?”

    “ஆம் வேந்தனே”

    ”எப்படி அறிவான்?”

    “மறுபிறப்புக்கான காரணங்களும் சூழ்நிலையும், முடிவுக்கு வருவதன் வாயிலாக. உழாமல், நடாமல், அறுவடை செய்யாமல் இருக்கும் விவசாயி, களஞ்சியம் நிரம்பவில்லை என்பதை அறிவான்.”

    (3)

    ”மறுபிறப்பெடுக்காமல் இருக்கப் போகிறவன் துன்பத்தை உணர்வானா?”

    ”அவன் உடல் வலியை உணரலாம் ; மன வலியை உணர மாட்டான்”

    “அப்படி அவன் வலியை உணர்வானேயானால், அவன் ஏன் உடன் மரணத்தை தழுவி, தத்தளிப்பில்லாமல், துக்கத்தை முடிவுக்கு கொண்டு வரக் கூடாது?”

    ”அருகன் வாழ்வின் மேல் விருப்போ வெறுப்போ கொள்ளாதவன். கனியாத பழத்தை அவன் அசைத்து உதிர்ப்பதில்லை; பழத்தின் முதிர்ச்சிக்காக காத்திருக்கிறான். புத்தரின் முக்கிய சீடரும் வணங்குதற்குரியவருமான சரிபுத்தர் இவ்வாறு கூறுகிறார் :-

    ”மரணமுமில்லை ; நான் நெஞ்சார விரும்புவது வாழ்வுமில்லை.
    சம்பள வேலைக்காரன் போல
    காலம் கடத்துகிறேன்.
    மரணமோ வாழ்க்கையோ அல்ல நான் வேண்டுவது
    கவனத்துடனும் தெளிவான புரிதலுடனும்
    காலம் கடத்துகிறேன்”
    – (தேரகதா 1002-1003)

    (4)

    ”இன்ப உணர்ச்சி ஆரோக்கியமானதா, ஆரோக்கியமற்றதா, அல்லது நடு நிலையானதா?”

    ”இம்மூன்றில் எதுவாகவும் இருக்கலாம்”

    “வணக்கத்துக்குரியவரே, ஆரோக்கியமான நிலைகள் துன்பம் தராதவையாக இருக்குமென்றால், துன்ப உணர்வைத் தருபவை ஒவ்வாதவையாக இருக்குமென்றால், வலியைத் தரும் ஆரோக்கியமான நிலை இல்லாமல்தானே இருக்கும்?” [விளக்கம் : ஆரோக்கியமான கருமங்கள் வலியைத் தருவனவல்ல ஆனால் அக்கருமங்களை செய்தல் கடினம் என்று நாம் எண்ணுவதற்கு காரணம் நம்முடைய பற்றும் வெறுப்புமே. ஒவ்வாத காரியங்களின் விளைவுகள் வலியுணர்ச்சி தருவன ஆனால் அக்காரியங்களைச் செய்து மகிழ்வடையக் காரணம் நம்முடைய மயக்கமே)

    ”அரசனே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதன் ஒரு கையில் சூடான இரும்பு பந்தையும், இன்னொரு கையில் பனிக்கட்டியாலான பந்தையும் எடுத்துக்கொள்ளுமாறு பணிக்கப்பட்டால், இரண்டும் அவனுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துமா?”

    ”கண்டிப்பாக”

    “அப்படியானால், உங்களுடைய அனுமானம் தவறாகிப் போகும். அவை இரண்டும் சூடானவையாக இல்லாதிருக்குமானால், சூடு அசௌகரியத்தை ஏற்படுத்துமானால் மற்றும் அவை இரண்டும் குளிர்ச்சியாக இல்லாதிருக்குமானால், குளிர்ச்சி அசௌகரியத்தை தருமானால், அசௌகரியம் சூட்டிலிருந்தோ குளிர்ச்சியிலிருந்தோ எழுவதில்லை என்றுதானே பொருள்?”

    ”உங்களுடன் என்னால் விவாதிக்க இயலாது. தாங்களே விளக்குங்கள்”

    பெரியவர் மன்னனுக்கு அபிதம்மத்தை போதிக்கலானார். “இவ்வுலகோடு இணைந்த இன்பங்கள் ஆறு. துறவோடு இணைந்தவை ஆறு. உலகியல் துக்கங்கள் ஆறு ; துறவு சார்ந்த துக்கங்கள் ஆறு. இரண்டு வகையிலும் நடுநிலை சார்ந்த உணர்ச்சிகள் ஆறு. மொத்தம் முப்பத்தியாறு. இறந்த, நிகழ் மற்றும் வருங்காலம் எனும் மூன்று காலங்களிலும் எழும் முப்பத்தியாறு உணர்ச்சிகள் ; ஆக மொத்தம் நூற்றியெட்டு உணர்ச்சிகள்.”

    (5)

    “நாகசேனரே, மறுபிறப்பெடுப்பது எது?”

    “மனமும் பருப்பொருளும்”

    “இதே மனமும் பருப்பொருளும்தான் மறு பிறவி எடுக்கிறதா?”

    “இல்லை. ஆனால் இம்மனமும் பருப்பொருளும் சேர்ந்து கருமங்களைப் புரிகின்றன. அக்கருமங்களால் இன்னொரு மனமும் பருப்பொருளும் பிறக்கிறது. ஆனால், மனமும் பருப்பொருளும் அதன் முன்னைய கருமங்களின் விளைவுகளிலிருந்து விடுதலையாவதில்லை”

    ”ஏதாவது ஓர் உதாரணம் தாருங்கள்”

    “ஒரு மனிதன் சிறு கனலை ஊதி தன்னை வெப்பப்படுத்திக் கொண்டபிறகு, அக்கனலை அப்படியே எரியவிட்டு அவ்விடத்திலிருந்து அகல்வது போன்றது இது. அக்கனல் பரவி அண்டை வயலொன்றின் விளைச்சலை எரித்து சாம்பலாக்கிவிட்டது என்று வைத்துக் கொள்வோம். அந்நிலத்தின் உரிமையாளன் இம்மனிதனை பிடித்து, அரசன் முன்னால் விசாரணைக்குக் கொண்டு வந்தானென்றும் வைத்துக் கொள்வோம். அப்போது அம்மனிதன் “இந்த ஆளின் வயலுக்கு நான் தீ வைக்கவில்லை. நான் அணைக்காமல் விட்டுப் போன தீயும் வயலை எரித்து சாம்பலாக்கிய தீயும் வேறு வேறானவை. எனவே நான் குற்றவாளியல்ல” என்று சொல்கிறான். அம்மனிதன் தண்டிக்கப்படத்தக்கவனா?”

    ”நிச்சயமாக. அவன் என்ன சொன்னாலும் பிந்தைய நெருப்பு முன்னர் பற்றி வைக்கப்பட்டதிலிருந்து வந்தது என்பதே உண்மை”

    ”ஆகையால் இம்மனமும் பருப்பொருளும் சேர்ந்து கருமங்களைப் புரிகின்றன. அக்கருமங்களால் இன்னொரு மனமும் பருப்பொருளும் பிறக்கிறது. ஆனால், மனமும் பருப்பொருளும் அதன் முன்னைய கருமங்களின் விளைவுகளிலிருந்து விடுதலையாவதில்லை”

    (6)

    ”மனம்-பருப்பொருள் பற்றி விளக்கினீர்கள். எது மனம்? எது பருப்பொருள்?”

    ”எதெல்லாம் தூலமோ அது பருப்பொருள், எதெல்லாம் நுட்பமானவைகளோ அகம் சார்ந்த மனநிலைகளோ அது மனம்.”

    “இவையிரண்டும் தனித்தனியே ஏன் பிறப்பதில்லை?”

    ”முட்டையின் கருவும் ஓடும் போன்றது இது. இவையிரண்டும் சேர்ந்தே எழுகின்றன ; நினைவுக்கெட்டாத காலந்தொட்டு இவைகள் இணைந்தே இருக்கின்றன.”

    (7)

    “நினைவுக்கெட்டாத காலம்” என்று நீங்கள் சொல்லும்போது, காலம் என்றால் என்ன? அப்படியொன்று இருக்கிறதா?”

    ”காலம் என்றால் கடந்தது, நிகழ்வது மற்றும் வரப்போவது. சிலருக்கு காலம் என்ற ஒன்று இருக்கிறது ; சில பேருக்கு இல்லை. எங்கு மறுபிறப்பெடுப்பவர்கள் இருக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் காலம் என்ற ஒன்று இருக்கிறது. எங்கு மறுபிறப்பு எடுக்காமல் இருக்கப் போகிறவர்கள் இருக்கிறார்களொ, அவர்களுக்கெல்லாம் காலம் என்ற ஒன்று இல்லை”

    “சரியாகச் சொன்னீர்கள் நாகசேனரே. நீங்கள் பதிலளிப்பதில் வல்லவர்”

    ~~~0~~~

    Source : Pesala, Bhikkhu (ed.), The Debate of King Milinda: An Abridgement of the Milindapanha. Delhi: Motilal Banarsidass, 1992. Based on Rhys Davids (1890, 1894)

    நன்றி : சொல்வனம் (http://solvanam.com/?p=23844)

    Milinda Panha

  • மிலிந்தனின் கேள்விகள்

    jcmilinda1
    ”மிலிந்தா பன்ஹா” பௌத்த இலக்கியத்தின் ஒரு புகழ் பெற்ற நூல் : ஏறக்குறைய கி.மு முதலாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம். பௌத்த தத்துவங்களை எளிதாகவும் கவனத்தில் கொள்ளத்தக்க வகையிலும் இந்நூல் பேசுகிறது. பாக்ட்ரியா என்ற பிரதேசத்தை ஆண்டு வந்த கிரேக்க மன்னன் மிலிந்தனுக்கும், பௌத்தத் துறவி நாகசேனர் என்பவருக்கும் இடையிலான உரையாடல் வடிவில் இந்நூல் படைக்கப்பட்டிருக்கிறது. இவ்வுரையாடலில் மிகவும் சுவையான கேள்விகள் எழுப்பப் படுகின்றன. உதாரணத்திற்கு “ஆன்மா இல்லையென்றால், மறுபிறவியில் பிறப்பது எது?ஆன்மா இல்லையென்றால், இப்போது பேசிக்கொண்டிருப்பது எது?” என்பன போன்ற கேள்விகள்.

    அலெக்ஸாண்டரின் இந்தியப்படையெடுப்புக்குப் பிறகு, பாரசீகத்தைத் தாண்டி அவர் வென்ற தேசங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட நாடு தான் பாக்ட்ரியா. இந்நூலில் வரும் அரசன் மெனாண்டர் ஸோடெர் என்ற பெயர் கொண்ட கிரேக்கன். கிரேக்கப் பேரரசு உடைந்த போது அதன் கிழக்குப் பகுதிகள் பாக்ட்ரியா என்ற தனி நாடானதும், அப்பகுதியை ஆண்டவன். இந்தியப் பாலி மொழி நூல்களில் அவன் ‘மிலிந்த’ என்று குறிப்பிடப்படுகிறான். அவன் பாக்ட்ரியாவை கி.மு 150 இலிருந்து 110 வரை ஆண்டிருக்கலாம் என்று வரலாறு கூறுகிறது. எனவே இந்நூல் புத்தரின் பரிநிர்வாணத்திற்கு கிட்டத்தட்ட 400 வருடங்கள் கழித்து எழுதப்பட்டிருக்கக்கூடும்.

    மிலிந்தனின் தந்தை காலத்தில் பாக்ட்ரியப் பேரரசு உட்பூசல்களால் பிளவுற்றது. மிலிந்தன் காபூல் மற்றும் ஸ்வாட் சமவேளிப் பிரதேசங்களை ஆண்டு வந்தான். பின்னர் இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளைத் தன் நாட்டுடன் இணைத்துத் தன் அரசை விரிவுபடுத்தினான். சிந்து சமவெளியை கைப்பற்றியவுடன் புதுத் தலைநகரை நிர்மாணம் செய்தான். “மிலிந்த பன்னா”வின் உரையாடல் நடக்கும் இடமாக கூறப்படும் “சகலா” மிலிந்தனின் தலைநகராக சித்திரிக்கப்படுகிறது. இந்தோ-கிரேக்கர்களின் புராதன நகரமான “சகலா” இப்போது “சியால் கோட்” என்று அழைக்கப்படும் நகரமாகும். “சியால் கோட்” பாகிஸ்தானில் பஞ்சாப் மாநிலத்தில் செனாப் மற்றும் ராவி நதிகளுக்கிடையில் உள்ளது. மிலிந்தன் பாக்ட்ரியாவின் எல்லையை இந்தியா வரை நீட்டியவன் என்ற பெருமைக்குரியவன். அவனுடைய ஆட்சிக்காலத்தில் சிந்து நதி டெல்டா, சௌராஷ்டிரா (கத்தியவார்), யமுனா நதிக்கரையருகில் இருக்கும் மதுரா நகர் வரை வடகிழக்கு இந்தியாவை தன் பேரரசுக்குள் உட்படுத்தினான். அவன் தலைநகர் பாடலிபுத்திரத்தையும் கைப்பற்றப்போவதாக அறைகூவல் விட்டான். ஆனால் பாடலிபுத்திரப்படைகளிடம் அவன் தோல்வியுறும் சமயத்தில் பின்வாங்க வேண்டியதாயிற்று. அவன் பௌத்த சமயத்தை தழுவிய பின்னர் பாக்ட்ரியா பௌத்த நாடாக மாறியது. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகு பாக்ட்ரியாவின் பிரதேசங்கள் எல்லாம் இஸ்லாமிய நாடுகளாக மாறின என்று வரலாறு நமக்கு சொல்கிறது.

    “மிலிந்த பன்ஹா”வின் அறிமுகத்தில் வரும் நாகசேனரின் வளர்ப்பு பற்றிய கதை, மகாவம்சத்தில் (இலங்கையின் நாளாகமம்) வரும் இளம் “மொகாலிப்புத்த திஸ்ஸரின்” கதையைத் தழுவியதாய் இருக்கிறது. மொகாலிப்புத்த திஸ்ஸ தேரர் மிலிந்தரின் காலத்திற்கு நூறு வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர். மேலும் “மிலிந்த பன்ஹா”வில் தேரரின் குறிப்பு இரண்டு இடங்களில் வருவதால், இளம் நாகசேனரின் கதை தேரரின் கதைதான் எனக் கருத முடியும். ஆனால் மகாவம்சத்தை மகாநாமா என்பவர் ஆறாம் நூற்றாண்டில் தான் எழுதினார். எனவே இளம் நாகசேனரின் கதையை “மிலிந்த பன்ஹா”வில் இருந்து மகாநாமா இரவல் வாங்கியிருக்கக் கூடும். ஐந்தாம் நூற்றாண்டில் புத்தகோசர் “மிலிந்த பன்ஹா”விற்கு உரையெழுதியதால், பௌத்த சமயத்தின் வணங்கத்தக்க நூல் என்ற தகுதியை அது பெற்றிருந்தது.

    coin_menander_i_india

    “மிலிந்த டிகா” என்ற மிலிந்த பன்ஹா-வுக்கான உரை நூலில் “மிலிந்த பன்ஹாவின் நூலறிமுகத்தின் பல செய்யுள்கள் மற்றும் இறுதியுரை புத்தகோசரால் எழுதப்பட்டவை” என்று சொல்லப்பட்டிருக்கிறது.

    பர்மியப் பாலி புனித நூல்களில் ஒன்றாக “மிலிந்த பன்ஹா” சேர்க்கப்பட்டுள்ளது. இதன் காரணமான தேரவாத பௌத்தர்களுக்கு இது முக்கியமான நூலாகும். இதன் மூல நூல் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருக்கலாம். இலங்கையில் பாதுகாக்கப்பட்ட பாலி வடிவம் மற்றும் அதையொட்டிய வழித்தோன்றல் வடிவங்களைத் தவிர வேறேதும் கிடைக்கவில்லை.

    சீன மொழியில் கிடைக்கும் “மிலிந்த பன்ஹா” மூல சமஸ்கிருத பிரதியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டிருக்கலாம் என்று வல்லுனர்கள் எண்ணுகின்றனர். ஏனெனில் பாலி நூலுக்கும் சீன மொழிபெயர்ப்பு நூலுக்குமிடையே காணப்படும் வேற்றுமைகள்.

    பாலி வடிவத்தின் முதல் மூன்று அத்தியாயங்கள் மட்டுமே சீன வடிவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆகவே பாலி வடிவத்தில் கிடைக்கும் பிற நான்கு அத்தியாயங்கள்: பின்னால் சேர்க்கப்பட்டவையாக இருக்கலாம்.

    சீனப் படைப்பு “நாகசேன பிக்குசூத்ரம்” என்று துறவியின் பெயரைக் கொண்டிருக்கிறது. பாலி வடிவம் “மிலிந்த பன்னா” என்று அரசன் பெயரைக் கொண்டிருக்கிறது.

    பாலி வடிவத்தில் பனிரெண்டு மேலதிக வினாக்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

    மிலிந்தனின் நாகசேனரின் முன்-பிறவிக் கதைகள் இரு வடிவங்களிலும் வேறுபட்டவையாக இருக்கின்றன.

    சீன பதிப்பில் “அபிதம்மம்” என்ற சொல் வருவதேயில்லை. ஆனால் பாலி வடிவத்தில் “அபிதம்மம்” பல முறை வருகிறது.
    மிலிந்தனின் கேள்விகள்

    Buddha1

    முன்னுரை

    மிலிந்தன் சாகள நாட்டின் மன்னன். அவன் கலைகளையும் விஞ்ஞானத்தையும் கற்றுத் தேர்ந்தவன். எதையும் பகுத்தறிவு கொண்டு ஆராயும் மனத்தினன். விவாதக் கலையில் வித்தகன். அவனுக்கிருந்த சமய ரீதியான சந்தேகங்களை யாருமே தீர்த்து வைக்க இயலவில்லை. புகழ் பெற்ற ஆசான்களையெல்லாம் வினவியும் கூட கிடைத்த வினாக்கள் அவனை திருப்திப்படுத்தவில்லை.

    இமயமலையில் வாழ்ந்து வந்த எண்ணற்ற அருகர்களில் ஒருவரான அஸகுத்தன் தன்னுடைய அமானுட சக்திகளால் அரசனின் சந்தேகங்கள் பற்றி அறிந்திருந்தான். அரசனுக்கு யாரேனும் உகந்த பதிலளிக்க முடியுமா என்று கேட்க ஒர் அவை கூட்டினான். ஆனால் யாராலும் பதிலளிக்க முடியவில்லை. ஆகையினால், அவையுறுப்பினர்கள் எல்லோரும் மேலோகம் சென்று மகாசேனன் என்கிற கடவுளிடம் சமயத்தைக் காக்க மனித உருக்கொண்டு மண்ணில் வருமாறு வேண்டிக் கொண்டனர். துறவிகளில் ஒருவரான ரோஹணன் என்பவர் மகாசேனன் மனிதனாகப் பிறந்து வளர்ந்து வந்த இடமான கஜாங்கலா என்ற ஊருக்கு செல்ல சம்மதித்தார். அங்கே அவர் மகாசேனன் வளர்ந்து பெரியவனாகும் வரை காத்திருந்தார். பையனின் அப்பா – பிரம்மன் சோனுத்தரன் – என்ற அந்தணர் தன் பையனுக்கு மூன்று வேதங்களை பயில்வித்தார். ஆனால், பாலன் நாகசேனன் :

    “மூன்று வேதங்களும் வெறுமையானவை ; பயனற்றவை
    அவற்றில் நிஜம் இல்லை ; மதிப்பு இல்லை
    அடிப்படை உணமை கூட இல்லை”

    என்று அறிவித்தான்.

    பையன் தயாராகிவிட்டான் என்பதை உணர்ந்த ரோஹணர் அப்போது பிரசன்னமானார். பெற்றோர்கள் சம்மதத்துடன் நாகசேனன் ரோஹணரின் சீடரானான். நாகசேனன் அபிதர்மத்தைக் கற்றான். துறவியாகவும் ஆனான். ரோஹணர் நாகசேனனை வட்டனியா ஆசிரமத்தில் இருந்த அஸகுத்தனிடம் அனுப்பி வைத்தார். அங்கு தங்கியிருந்த காலத்தில் ஒரு மழைப் பருவத்தில் சமயப்பற்றுள்ள ஒரு பெண்ணுக்கு உபதேசம் செய்விக்க நாகசேனன் பணிக்கப்பட்டான். இவ்வுபதேசத்தின் போது அப்பெண்ணும் நாகசேனனும் தம்மத்தின் கண் – எவற்றுக்கெல்லாம் துவக்கம் இருக்கிறதோ அவற்றுக்கெல்லாம் முடிந்து போகும் உள்ளார்ந்த குணம் இருக்கிறது – என்ற அறிவை பெற்றனர். அஸகுத்தன் நாகசேனனை பாடலிபுத்திர நகரத்தில் இருந்த அசோகா பூங்காவில் வசித்து வந்த தம்மராக்கிதர் என்பவரிடம் அனுப்பினார். அங்கே மூன்றே மாதங்களில் திரிபீடகங்களை கற்றுத் தேர்ந்தான். தம்மராக்கிதர் “வெறும் புத்தக அறிவோடு நின்று விடுதல் பயன் தராது” என்று தன் மாணவனுக்கு சொல்லவும், அன்றிரவே நாகசேனர் அருகரானார். பின்னர் இமயமலை சென்று அங்கிருந்த மற்ற அருகர்களுடன் தங்கியிருந்தார். சமயப்படிப்பை முடித்து விட்ட படியால், எவருடனும் சமயத்தைப் பற்றி வாதாடத் தயாராக இருந்தார்.

    அரசன் மிலிந்தன் ஆன்ம வேட்கை கொண்டு சம்கேய்ய மடத்தில் இருந்த ஆயுபாலர் எனும் பிக்குவை சந்தித்தான் ; அவரிடம் கேட்டான் “துறவிகள் உலகவாழ்க்கையை ஏன் துறக்கிறார்கள்?” இதற்கு மூத்தவர் பதிலளித்தார் “ “நல்வழியில் வாழ்வதற்கும் ஆன்மீக அமைதியை அடைதற்கும்” அரசன் தொடர்ந்து கேட்டான் “மரியாதைக்குரியவரே, அப்படியானால் சமயதம்மத்தில் இல்லாத சாதாரண மனிதன் யாராவது இப்படி வாழ்கிறார்களா?” அத்தகையவர்கள் இருக்கிறார்கள் என்று ஆயுபாலர் ஒப்புக்கொண்டார்.

    அரசன் விடவில்லை. “வணக்கத்துக்குரிய ஆயுபாலரே, நீங்கள் இப்படி சுற்றியலைவது ஒரு பயனுக்குமாகாது. உலக வாழ்வைத் துறப்பதும், எளிய காவி உடைகள் அணிதல், தினம் ஒரு முறை மட்டுமே உண்ணுதல், தரையில் படுத்துறங்குதல் போன்று தம்மையே வருத்திக் கொள்ளுதலுமாகிய துறவு வாழ்க்கை முன் ஜென்மத்தில் புரிந்த பாவ வினைகளாலன்றி வேறில்லை. இதில் ஒரு நல்லொழுக்கமும் இல்லை; மெச்சத்தக்க தவிர்ப்பும் இல்லை ; நல்வாழ்க்கையும் இல்லை.”

    அரசன் சொன்னதைக் கேட்டு ஆயுபாலர் அமைதியானார் ; ஒரு பதிலும் பேசவில்லை. அரசனுடன் கூட வந்திருந்த ஐநூறு பாக்ட்ரிய கிரேக்கர்கள் அரசனிடம் சொன்னார்கள் “பெரியவர் மெத்தப் படித்தவர், ஆனால் தன்னம்பிக்கை குன்றியவர். எனவே வாய்மூடி மௌனியாக இருக்கிறார்,” என்றார்கள். அதற்கு அரசன் வார்த்தைகளால் தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினான் “இந்தியா ஒரு வெறுமையான இடம். இங்குள்ளவர்கள் எல்லாம் அக்கப்போர். என்னுடன் விவாதித்து என் சந்தேகங்களை தீர்க்கப்போகிறவர்கள் இங்கு யாருமிலர்”

    அரசனின் வார்த்தைகளை அங்கிருந்த ஐநூறு பாக்ட்ரிய கிரேக்கர்களும் ஒப்புக்கொண்டதாகத் தெரியவில்லை. அரசன் மேலும் வினவினான் “ என் துணைவர்களே, அப்படியானால் சொல்லுங்கள், என்னுடன் உரையாடி என் குழப்பங்களை தீர்க்க வல்லவர் யாரேனும் இருக்கின்றார்களா?”

    அமைச்சர் தேவமாந்தியர் தொண்டையைக் கனைத்தவாறு பேசலானார் “பேரரசே, நாகசேனர் என்ற பெரியவர் இருக்கிறார், உயர்ந்த சான்றோர். அடக்கமான நடத்தையுடையவராக இருந்தாலும் மிக்க தைரியமிக்கவர். உங்களுடன் விவாதிப்பதற்கு அவரே ஏற்றவர். தற்காலம் அவர் சம்கேய்ய மடத்தில் தான் தங்கியிருக்கிறார். நீங்கள் அவரிடம் சென்று தங்கள் கேள்விகளைத் தொடுக்க வேண்டும்” “நாகசேனர்” என்ற பெயரைக் கேட்டவுடன் மிலிந்தனுக்கு மெய் சிலிர்த்தது; உடலெங்கும் மயிர் கூச்செறிந்தது. ஒரு காவலாளியை அனுப்பித் தான் வருவதாகத் தகவலனுப்பினான். ஐந்நூறு பாக்ட்ரிய கிரேக்கர்கள் புடை சூழ, தன் ராஜ ரதத்தில் ஏறி, நாகசேனர் தங்கியிருந்த இடத்துக்குச் சென்றான்.

    ஆத்மா – முதல் அத்தியாயத்திலிருந்து சில பகுதிகள்

    அரசன் மிலிந்தன் நாகசேனரை அணுகி அன்பான, நட்பு மிகுந்த வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டான். மரியாதையுடன் நாகசேனருக்கு அருகே அமர்ந்தான். பிறகு நாகசேனரை கேள்வி கேட்கத் தொடங்கினான் :

    “”உங்களது கீர்த்தி எப்படிப் பரவிக் கிடக்கிறது? ஆசார்யரே, உங்கள் நாமம் என்ன?”

    “அரசே, நான் நாகசேனன் என்ற பெயரோடு அறியப்படுபவன். அது சாதாரண பொதுப்பயனுக்காக இருக்கும் அடையாளம் மட்டுமே. நிரந்தரமான, தனித்துவமான பொருளல்ல”

    பிறகு மன்னன் பாக்ட்ரிய கிரேக்கர்களையும் சாதுக்களையும் சாட்சிக்கு அழைத்தான். “நிரந்தரமான தனித்துவத்தை அவருடைய பெயர் குறிக்கவில்லையென இந்த நாகசேனர் சொல்லுகிறார். இதை ஒப்புக்கொள்ளுதல் சாத்தியமா?” பின்னர் நாகசேனரை நோக்கித் திரும்பி, “மரியாதைக்குரிய நாகசேனரே, அது உண்மையென்றால் யாரது உங்களுக்கு உடையை, உணவை, குடிலைக் கொடுத்தது? யார் நன்னெறி மிகுந்த வாழ்க்கை வாழ்கிறார்கள்? அல்லது யார் உயிர்களைக் கொல்கிறார்கள், திருடுகிறார்கள், பிறன்மனை விரும்புகிறார்கள், பொய்யுரைக்கிறார்கள் அல்லது கள் அருந்துகிறார்கள்? நீர் சொல்வது உண்மையென்றால், பலனென்பதும் இல்லை துர்பலன் என்பதும் இல்லை. நல்லவனும் இல்லை. தீயவனும் இல்லை. கர்ம விளைவும் இல்லை. உங்களை யாரவது கொன்று விட்டால், கொலையாளி என அவர்கள் கருதப்பட மாட்டார்கள். ஆசானோ, ஆண்டானோ இருக்க மாட்டார்கள். நீர் நாகசேனர் என்று அழைக்கப்படுகிறீர்கள் என்று சொன்னீர்கள்? யார் அது நாகசேனர்? உங்கள் முடியா? “

    “பேரரசே, அப்படிச் சொல்ல முடியாது.”

    “பின்னர் அது நகமா, பல்லா, தோலா அல்லது உடலின் வேறெதாவதொரு உறுப்பா?”

    “நிச்சயமாக இல்லை.”

    “”பின்னர் அது என்ன உடம்பா, உணர்ச்சிகளா, எண்ணங்களா, அல்லது பிரக்ஞையா? அல்லது இவை எல்லாம் ஒன்றாகக் கலந்ததா? அல்லது இவைகளெல்லாம் அல்லாது புறத்தில் இருக்கும் ஏதோவொன்றா?”

    நாகசேனர் புன்னகை மாறாது பதிலுறுத்தார் “நீங்கள் சொன்னவை எதுவும் இல்லை.”

    “அப்படியானால் ஒரு நாகசேனரையும் இங்கு நான் காணமுடியாது. நாகசேனர் என்பது வெற்றுச்சொல்லே. எங்கள் முன்னால் நாம் யாரைக் காண்கிறோம். உங்களின் பொய்யான மரியாதையைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோமா நாம்?”

    “ஐயா, உயர்குடியில் பிறந்து வசதியிலும் சொகுசிலும் வளர்ந்திருப்பீர்கள் அல்லவா? நீங்க இங்கு எப்படி வந்தீர்கள் – நடைப்பயணமாகவா அல்லது ரதத்திலா?”

    “ரதத்தில் தான் வந்தேன்.”

    “ரதம் என்றால் என்ன? கொஞ்சம் விளக்குங்கள். ரதம் என்பது அச்சா? அல்லது சக்கரங்களா? அடிப்பீடமா? நுகத்தடியா? அல்லது கடிவாளங்களா? இவையெல்லாம் சேர்ந்ததா ரதம் என்பது? இல்லையெனில் இவையில்லாமல் வேறெதாவதா?”

    “நீங்கள் சொன்னவை எதுவும் இல்லை”

    “அப்படியானால் ரதம் என்பது ஒரு வெற்றுச்சொல் தானே? ரதத்தில் தான் வந்து சேர்ந்தேன் என்று நீங்கள் சொன்னது பொய்யன்றி வேறென்ன? நீங்கள் இந்தியாவின் மன்னர். நீங்கள் யாருக்கு பயந்து பொய் சொல்லும் அவசியம் ஏற்பட்டது?’

    நாகசேனர் பாக்ட்ரிய கிரேக்கர்களையும் சாதுக்களையும் அருகழைத்து சாட்சிகளாக்கினார். “அரசர் மிலிந்தன் இங்கே என்னைச் சந்திக்கும் பொருட்டு ரதத்தில் பயணப்பட்டு வந்ததாக சொன்னார். ஆனால் ரதம் என்றால் என்ன கேட்கையில் அவரால் ஒரு விளக்கமும் தர முடியவில்லை. இதனை ஒப்புக்கொள்ளுதல் சாத்தியமா?”

    ஐந்நூறு பாக்ட்ரிய கிரேக்கர்களும் சாதுக்களும் அவர்களின் ஒப்புதலை ஆரவாரமிட்டு தெரிவித்தனர். மன்னரை நோக்கி “உங்களால் முடியுமானால் இவ்வாதத்திலிருந்து வெளி வாருங்கள்.”

    “வந்தனைக்குரிய ஐயா! நான் பொய் சொல்லவில்லை. நீங்கள் சொன்ன எல்லா பாகங்களும் இருக்கும் காரணத்தால் “ரதம்” என்ற சொல் நான் வந்த வாகனத்தை குறிக்கிறது.”

    “மிக அழகாகச் சொன்னார், அரசர் பிரான் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார். அவர் சொன்னது போலவே முப்பத்திரண்டு வகை உயிர்மங்கள் சேர்ந்து உருவான மனித உடம்பு மற்றும் ஐவகைக் கந்தங்கள் (“உருவம், வேதனை, குறிப்பு, பாவனை, விஞ்ஞானம்” – மணிமேகலை) – இவைகள் சேர்ந்தே “நாகசேனன்” என்று நான் அழைக்கப்படுகிறேன். ததாகதரின் முன்னிலையில், சகோதரி வாஜீரா சொன்னது போல, பல்வேறு பாகங்கள் இருப்பதாலேயே ரதம் என்று ஒன்றை நாம் அழைக்கிறோம். ஐவகை கந்தங்கள் இருப்பதானாலேயே இருத்தல் என்பதைப் பற்றி பேசுகிறோம்.”

    Yathà hi aïgasambhàra, hoti saddo ratho iti. Evaü
    khandhesu santesu, hoti ’satto’ ti sammutã’ti.

    “மிகவும் அற்புதம் நாகசேனரே…கடினமானதொரு விஷயத்தை மிக எளிதாக, அழகாக விளங்கச் செய்தீர்கள். புத்தர் இங்கிருந்திருந்தால், அவரே உம்முடைய பதிலுக்கு ஒப்புதல் அளித்திருப்பார்.”

    +++++

    அரசன் மிலிந்தன் நாகசேனரை அணுகி அன்பான, நட்பு மிகுந்த வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டான். மரியாதையுடன் நாகசேனருக்கு அருகே அமர்ந்தான். பிறகு நாகசேனரைக் கேள்வி கேட்கத் தொடங்கினான் :

    “(அருகரான பிறகு) எத்தனை மழைப் பருவங்களை கடந்தவர் நீங்கள்?”

    “ஏழு”

    “நீங்கள் உங்கள் ஏழு என்று எப்படி சொல்ல முடியும்? நீங்கள் ஏழா? அல்லது நீங்கள் குற்ப்பிடுவது எண் ஏழையா?”

    நாக சேனர் பதில் கேள்வி கேட்டார் : ”உங்கள் நிழல் தரையில் விழுகிறது. நீங்கள் அரசரா? அல்லது உங்களின் நிழல் அரசரா?”

    ”நானே அரசன், நானிருப்பதால் நிழல் இருக்கிறது.”

    ”எனவே, அரசே, வருடங்களின் எண்ணிக்கை ஏழு. நானல்ல ஏழு; நான் இருப்பதால் என் ஏழு வருகிறது. உங்கள் நிழலுடன் உங்களுக்கு இருக்கும் தொடர்புதான் ஏழுடன் எனக்கு இருக்கும் தொடர்பு.”

    ”மிக அற்புதம். மிகவும் நன்றாக இந்த புதிருக்கு விடை கண்டீர்கள்.”

    +++++

    தேவமாந்தியர், அனந்தகாயர் மற்றும் மங்குரா ஆகியோர் பிக்குகளை அரண்மனைக்கு கூட்டிச் செல்வதற்காக நாகசேனரின் குடிலுக்கு வருகின்றனர். அவர்கள் அரண்மனைக்குச் செல்லும் வழியில் அனந்தகாயர் நாகசேனரைப் பார்த்துக் கேட்கிறார் ”ஐயா, நான் உங்களை நாகசேனர் என்றழைக்கும் போது, யார் ”நாகசேனர்”?”

    ”யார் அந்த நாகசேனர் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?”

    “ஆத்மா, வந்து போகிற சுவாசம்.”

    “வெளியே போகிற சுவாசம், அம்மனிதன் உயிருடன் இருக்கும் பட்சத்தில் திரும்பி வரவேண்டும் அல்லவா?”

    “வரவேண்டியதில்லை.”

    “ஊதுகுழலில் ஊதும் இசைக்கலைஞர்கள் அவர்களின் மூச்சை ஊதுகிறார்கள் இல்லையா? அப்போது தானே இசை பிறக்கிறது! அவர்கள் ஊதிய மூச்சு அவர்களிடமே திரும்பி வருகிறதா?”

    ”இல்லை. வருவதில்லை.”

    “பிறகு ஏன் அவர்கள் இறப்பதில்லை?”

    ”உங்களுடன் விவாதிக்கும் திறன் எனக்கில்லை. அது எப்படி என்று சொல்லுங்கள்”

    “சுவாசத்தில் ஆத்மா என்ற ஒன்றில்லை. இந்த உள்வாங்குதலும், வெளிவிடுதலும் உடற்சட்டகத்தின் சக்தியினால் நடப்பவை.”

    நெடுநேரம் நாகசேனர் அபிதம்மத்தின் சாரத்தை பற்றி உரையாடிக் கொண்டிருந்தார். அவரின் வாதங்கள் அனந்தகாயருக்கு திருப்தியைத் தந்தன.

    +++++

    பிக்குக்கள் அரண்மனை வந்தடைந்து போஜனம் முடித்ததும், அரசன் கீழிறங்கிய இருக்கையில் அமர்ந்து கொண்டு ”எதைப் பற்றி உரையாடலாம்?” என்று கேட்டான்.

    “நம் உரையாடல் தம்மத்தைப் பற்றி இருக்கட்டும்.”

    ”உங்களின் பயணத்தின் குறிக்கோள் என்ன? இறுதி இலக்கு என்ன?”

    “எங்கள் பயணத்தின் நோக்கம் துக்கங்கள் தணிவதும், மேலதிக துக்கங்களைச் சேகரிக்காமல் இருப்பதும் தான். தத்தளிப்பில்லாமல், எஞ்சிய துக்கங்களின் பூரண அழிவுதான் எமது இறுதி இலக்கு.”

    “சொல்லுங்கள் ஐயா, இது போன்ற உன்னதமான குறிக்கோள்களுக்கா எல்லாரும் சங்கத்தில் சேர்கிறார்கள்?”

    “இல்லை. சிலர் அரசர்களின் கொடுங்கோன்மையிலிருந்து தப்பிக்கவும், சிலர் திருடர்களிடமிருந்து பாதுகாப்பாக இருக்கவும், மேலும் சிலர் வறுமையிலிருந்து தப்பிக்கவும், இன்னும் சிலர் கடனீந்தோர்களிடமிருந்து தப்பிக்கவும் சங்கத்தில் சேரக்கூடும். ஆனால் உண்மையான குறிக்கோளுடன் சேருபவர்கள் மிச்சமிருக்கும் ஆசைகளில் இருந்து விடுபடும் நோக்கமுடையவர்கள் தான்.”

    +++++

    அரசன் : “மரணத்திற்குப் பின் மறுபிறப்பெடுக்காதவர் யாராவது இருக்கிறார்களா?

    “ஆம். இருக்கிறார்கள். களங்கங்களில்லாதவன் மறு பிறப்பெடுப்பதில்லை ; களங்கங்களுள்ளவன் மறுபடியும் பிறக்கிறான்.”

    “நீங்கள் மீண்டும் பிறப்பீர்களா?”

    ”மனதில் பற்றொடு நான் இறப்பேனானால், ஆம் ; இல்லையேல், இல்லை.”

    +++++

    “தர்க்க அறிவின் துணையுடன் ஒருவன் மறுபிறப்பிலிருந்து தப்பிக்க இயலுமா?”

    ”தர்க்க அறிவினால் மட்டுமல்ல,ஞானத்தால், நம்பிக்கையால், ஒழுக்கத்தால், அக்கறைத்-தன்மையால், ஆற்றலால் மற்றும் தியானத்தால் கூட ஒருவன் தப்பிக்க இயலும்.”

    ”தர்க்க அறிவும் ஞானமும் ஒன்றா?”

    :இல்லை. விலங்குகளுக்கு அறிவு உண்டு ஆனால் ஞானம் கிடையாது.”

    +++++

    பாலி மொழியில் புதைந்திருந்த பல பொக்கிஷங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நவீன உலகிற்கு ஈந்த டி.ரீஸ் டேவிட்ஸ் “மிலிந்த பன்ஹா” பற்றி இவ்வாறு குறிப்பிட்டார் : “இந்திய உரைநடையின் தலைசிறந்த படைப்பு “மிலிந்த பன்ஹா” என்று நான் நினைக்கிறேன். இலக்கிய கண்ணோட்டத்தில், உலகின் எந்த நாட்டிலும் படைக்கப்பட்ட இவ்வகைக்கான புத்தகங்களில் ஆகச்சிறந்த புத்தகம் இது.”

    Source : Pesala, Bhikkhu (ed.), The Debate of King Milinda: An Abridgement of the Milindapanha. Delhi: Motilal Banarsidass, 1992. Based on Rhys Davids (1890, 1894).

    ரீஸ் டேவிட்-இன் மூல ஆக்கமும் பெசாலாவின் சுருக்கப்பட்ட ஆக்கமும் மின் நூல்களாகக்கிடைக்கின்றன.

    நன்றி : சொல்வனம் (http://solvanam.com/?p=23490)