முடிவிலாச் சுழல்

Bhavacakra

கறுப்பு-வெள்ளை திரைப்படங்களில் பாத்திரங்கள் கனவு காணத் துவங்கும் போது சுழன்று ஒரு மையப்புள்ளியில் குவியும் வட்டங்களை காட்டுவார்கள். வெளிப்புறத்தில் உருவாகும் வட்டம் பல வட்டங்களை உருவாக்கியவாறு மையப் புள்ளியை நோக்கி நகர்வது போல தோன்றும்; மையப் புள்ளியிலிருந்து புதிதாக ஒரு வட்டம் தோன்றி பல வட்டங்களை வடிவமைத்தவாறே வெளிப்புற வட்டத்தை நோக்கி வளர்வது போலவும் தோன்றும். ஆரம்பம் முடிவு போலவும் முடிவே ஆரம்பம் போலவும் காட்சி தரும் கனவுச் சுழற்சி வட்டத்தின் மையத்தில் ஓர் உள் நோக்கிய வெடிப்பு நிகழ்ந்து வட்டம் மறைந்து அதில் இருந்து இன்னொரு வட்டம் ஜனிப்பது போன்ற பிரமையை நம் கண்களுக்குத் தரும். முடிவிலியாக சுழன்று கொண்டிருக்கும் வட்டத்துக்குள் உள் நோக்கி வெடிக்கும் புள்ளியை சுய-நிர்மூலமாக்கும் புள்ளியாகக் கொள்ளலாம் ; திரும்ப திரும்ப தன்னுடைய பிரதியை முடிவிலாது உருவாக்கிக் கொள்ளும் இயல்பு அதனுடைய முடிவற்ற பரப்பிலிருந்து எழுவது. தனி நபர் வாழ்க்கை, நகரங்களின் வாழ்க்கை, அல்லது பிரபஞ்சத்தின் ஆயுள் ஆகியவை இப்போது சொல்லிய வட்டங்களின் இயல்பினதாய் தவிர்க்கவியலா மீள் சுய நிர்மூலமாகும் போக்கைப் பின் தொடர்கின்றன. அச்சமூட்டும் இம்முறையின் எரிபொருளாக இயங்கி ஆற்றலை ஏற்படுத்துவதை “மறதி” (the ignorance of forgetting) என்று பௌத்த மதம் சொல்கிறது.

தனிப்பட்ட அளவில் இந்த வட்டம் அல்லது சுழலை ‘சார்புடைத் தோற்றம்’ என்று பௌத்தம் சொல்கிறது. ‘பிரதீத்ய சமுத்பாதம்’ என்று சமஸ்கிருதத்திலும் “பதிச்ச சமுப்பாத” என்று புராதன பாலி மொழியிலும் அழைக்கப்படும் இந்த தத்துவம் பௌத்த மதத்தின் ஆணி வேர்.

“பிரதீத்ய சமுத்பாதம்” பௌத்தத்தின் முக்கியமான பிரத்யேகமான தத்துவம். பாலி நெறிமுறையின் எண்ணற்ற பத்திகளில் புத்தர் இத்தத்துவத்தை இயற்கையின் நியதி என்றும் அடிப்படை உண்மை என்றும் விவரித்திருக்கிறார். ஞானமடைந்த மனிதர்களின் பிறப்பைச் சாராத உண்மையிதுவென்றும் அவர் சொல்லியிருக்கிறார்.

சம்யுத்த நிகாயத்தில் புத்தர் சொல்கிறார் :

“ததாகதர் தோன்றினாலும் தோன்றாவிட்டாலும், இது இருக்கிறது ; இது இயற்கையின் உண்மை ; இயற்கையின் சட்டம் ; இது நிபந்தனைக்குட்பட்ட தோற்றம்”

“இந்த தத்துவம் பற்றிய ஞானத்தை அடைந்து விழிப்புற்ற ததாகதர், இதை பயில்விக்கிறார் ; காட்டுகிறார் ; உருவாக்குகிறார் ; அறிவிக்கிறார் ; வெளிப்படுத்துகிறார் ; அறியப்படுத்துகிறார் ; தெளிவுபடுத்துகிறார் ; இதைச் சொல்லி எடுத்துக் காட்டுகிறார்”
“பிக்ஷுக்களே! இது அடிப்படைப் பண்பு ; இது மீளாத்தன்மை ; இது மாறுபடாத் தன்மை ; நிபந்தனைக்குட்பட்ட தோன்றும் தன்மையை நான் சார்புடை தோற்றக் கொள்கையென்று அழைக்கிறேன்” (S.II.25)

புத்தருக்கும் அவருடைய முக்கிய சீடரில் ஒருவரான ஆனந்தருக்கும் இடையில் நடந்த ஓர் உரையாடலில் “பிரதீத்ய சமுத்பாதத்தின்” ஆழத்தை புத்தர் விளக்குகிறார்.

“எத்தனை அருமை! இதற்கு முன்னர் எனக்கு இவ்வாறு தோன்றியதில்லை, ஆழமானதாக இருந்தாலும், புரிந்து கொள்ள கடினமானதென்றாலும், சார்புடை தோற்றக் கொள்கையானது என்னைப் பொறுத்தவரை எளிமையானதாகவே தோன்றுகிறது”

“அப்படிச் சொல்லாதே ஆனந்தா! சார்புடை தோற்றக் கொள்கை மிக ஆழமானது ; புரிந்து கொள்ள கடினமானது. இந்த தத்துவத்தை அறியாமலும், புரிந்து கொள்ளாமலும், முழுக்க உணராமலும் இருத்தலின் மூலம் மனிதர்கள் சிக்கலுற்ற நூல் போல குழப்பத்துடன் இருக்கிறார்கள் ; ஒன்றாக தூக்கி எறியப்பட்ட நூல் கட்டுகள் போல இருக்கிறார்கள் ; வலையில் பிடிபட்டு இருக்கிறார்கள் ; மற்றும் நரகம், கீழ் உலகம், சம்சார சக்கரம் – இவற்றிலிருந்து தப்ப இயலாதவர்களாக இருக்கிறார்கள்” (மஹா நிதான சூத்திரம்)

tibetan art

பிரதீத்ய சமுத்பாதத்தை பற்றி விளக்கும் உரைரீதியான மேற்கோள்களை இரு பிரிவுகளாகப் பகுக்கலாம். ஒன்று, பொதுவாக இத்தத்துவத்தை விளக்குபவை ; இரண்டு, சங்கிலித் தொடராக இணைந்திருக்கும் தத்துவத்தின் காரணிகளை வரிசைப்படுத்துபவை.

பொதுவான தளத்தில் பௌத்த மரபின் மையக் கருத்தை இப்போதனை குறிக்கிறது – எல்லா விஷயங்களும் பல்வேறு காரணங்களையும் காரணிகளையும் பொறுத்து எழுகின்றன.

இது இருக்கிறது, ஏனென்றால் அது இருக்கிறது
இது இல்லை ஏனென்றால் அது இல்லை
இது இல்லாமல் போகிறது, ஏனென்றால் அது இல்லாமல் போகிறது. (S.II.28,65)

சார்புடைத் தோற்றக் கோட்பாட்டின் படி எல்லா விஷயங்களும் நிகழ்வுகளும் ஒன்றை ஒன்று சார்ந்தே எழுகின்றன, சார்ந்திருக்கும் நிகழ்வுகளும் விஷயங்களும் தோன்றவில்லையெனில் எந்த விஷயமும் நிகழ்வும் தோன்றுவதில்லை அடிப்படையாக எதையும் சாராதது என்று எதுவும் இல்லை. சார்ந்த தன்மையின் காரணமாக உருவாகும் எதற்கும் உள்ளார்ந்த மெய்ம்மைக் கூறு இருப்பதில்லை. ஒரு நாற்காலியை உதாரணம் காட்டி தலாய் லாமா ஒரு கட்டுரையில் விளக்குவார் : “நான்கு கால்கள், ஒர் இருக்கை,, மரம், ஆணிகள், தரை, அறையை வரையறுக்கும் சுவர்கள், சுவர்களைக் கட்டிய ஆட்கள், நாற்காலி என்று அதை அழைத்து அது உட்கார்வதற்கான சாதனம் என்ற அடையாளாம் கொடுத்த மனிதர்கள் – இவைகள் இல்லாமல் நாற்காலி என்ற ஒன்று இல்லை”

பிரத்யேக தளத்தில் பொதுவான போதனையின் பயன்பாட்டை குறிக்கிறது – பனிரெண்டு நிதானங்கள் வாயிலாக

முதலில் பேதைமை என்கிற அறியாமை (1) (“மறந்தபேதைமை” – மணிமேகலை 30 ; 161) ; பிறகு செய்கை, இன்னும் குறிப்பாகச் சொன்னால் செயல் (கருமம்) (2) ; பேதைமை சார்ந்து எழும் செய்கையானது உணர்வை (3) நிலைப்படுத்துகிறது. உணர்வைச் சார்ந்து எழுவது அரு-உரு (நாமரூபம்) (4) ; புலன்களைச் செயல்படுத்துதல் பின் வருவது – வாயில் (5), ஊறு (6) மற்றும் நுகர்வு (7) ; புலன்களின் செயலாக்கத்தை தொடர்ந்து பின் வருவன அழிவு இயக்கிகளான வேட்கையும் (8) பற்றும் (9) ; வேட்கையும் பற்றும் முன்னிலைபட்டு பவம் (10) தோன்ற சந்தர்ப்பமேற்படுத்துகின்றன ; பவத்திற்குப் பிறகு தோற்றம் (11) ; பிணி, மூப்பு, சாவு (12) என்பன பிறகு எழுவன.
newtable

மேற்சொன்ன பனிரெண்டையும் நிதானங்கள் என்று சொல்வர் ; நிதான என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு ”தொடர்ச்சியுறக் கட்டுதல்” என்பது அர்த்தமாகும்.. சங்கிலியின் இணைப்புகள் போல பனிரெண்டு நிதானங்களும் ஒன்று அடுத்ததை சார்ந்தவாறு எழுகின்றன என்பதை பிரதீத்ய சமுத்பாதம் விவரிக்கிறது. ஒரு நிதானம் இல்லாமல் அடுத்தது இல்லை.

மணிமேகலை காப்பியத்தின் முப்பதாவது காதையில் அரவண அடிகளால் கதையின் நாயகி மணிமேகலைக்கு போதிக்கப் படுவதாக வரும் இடங்களில் “பிரதீத்ய சமுத்பாத” தத்துவத்தை எளிய முறையில் விளக்குகிறார் சாத்தனார். சாத்தனாரின் விளக்கம் புதிதானதோ அவருக்கே உரித்தானதோ அல்ல என்றாலும் பௌத்த சமயத்தின் பிரசித்தமான முக்கிய தரிசனத்தை. உகந்த வகையில் தமிழ்ப்படுத்தியிருப்பது சாத்தனாரின் கவித்திறன்.

இப்பன்னிரு நிதானங்களை மூன்று கால அடிப்படையிலும் பகுக்கிறார் மணிமேகலை ஆசிரியர்.

கால மூன்றுங் கருதுங் காலை
இறந்த கால மென்னல் வேண்டும்
மறந்த பேதைமை செய்கையா னவற்றை
நிகழ்ந்த காலமென நேரப் படுமே
உணர்வே யருவுரு வாயி லூறே
நுகர்வே வேட்கை பற்றே பவமே
தோற்ற மென்றிவை சொல்லுங் காலை
எதிர்கா லம்மென விசைக்கப் படுமே
பிறப்பே பிணியே மூப்பே சாவே
அவல மரற்றுக் கவலைகை யாறுகள் (மணிமேகலை, 30 : 159-168)

பேதைமையும் செய்கையும் இறந்த காலம் எனக் குறிக்கப்படுகின்றன ; உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நுகர்வு வேட்கை, பற்று, பவம் – இவை நிகழ் காலமாகக் கொள்ளப் படுகினறன. பிறப்பு, பிணி, சாக்காடு இவையெல்லாம் எதிர்காலமாகக் கருதப்படுகின்றன.

பன்னிரு நிதானங்களை பௌத்தம் குற்றம், வினை, பயன் – என்ற வகையிலும் வகைப்படுத்துகிறது.

வேட்கை, பற்று, பேதைமை  குற்றம்
பவமும், செய்கை  வினை
குற்றமும் வினையும் சேர்ந்து ஏற்படுத்தும் பயன்கள்  உணர்ச்சி, பிறப்பு, முதுமை, நோய், சாக்காடு (மணிமேகலை, 30 : 169 -174)

ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தர் போதித்தார் என்று தொடக்கப் பள்ளி வரலாற்று பாடப்புத்தகத்தில் நாம் படித்தது எல்லோருக்கும் ஞாபகமிருக்கும். “நால்வகை வாய்மை” (Four Noble Truths) களுள் ஒன்று அது. புத்தர் என்ன போதித்தார் என்று ஒரு கேள்விக்கு நம் எல்லாருடைய பொது நினைவில் இருக்கும் நால்வகை வாய்மைகள் கீழ் வருவன :-

1. துக்கம் : இவ்வுலக வாழ்க்கை துன்பகரமானது. நோய், மூப்பு, இறப்பு முதலியவை நிறைந்த உலக வாழ்க்கை, எளிதில் விலக்கிக் கொள்ள முடியாத துன்பம் நிறைந்தது.
2. துக்கத் தோற்றம் : ஆசையே துன்பத்தின் காரணம். தான் இன்பமாக வாழ வேண்டும் என்ற ஆசையே துன்பங்களுக்கு காரணமாகும்.
3. துக்க நீக்கம் : ஆசை ஒழிக்கப்பட்டாலொழிய துன்பத்தை ஒழிக்க முடியாது.
4. துக்க நீக்க நெறி : எண்வகை வழியே துன்பத்தை ஒழிக்கும் வழியாகும். எண்வகை வழிமுறைகளை கடைபிடித்தால் ஆசைகளை ஒழித்துவிடலாம்.

பள்ளி மாணவனுக்குப் புரிகிற மாதிரியான எளிமையான போதனைகள் தாம் இவை. சார்புடை தோற்றக் கோட்பாட்டில் ”நால்வகை வாய்மை”யைப் பொருத்திப் பார்க்கலாம்.

உணர்வே யருவுரு வாயி லூறே
நுகர்வே பிறப்பே பிணிமூப்புச் சாவே
அவல மரற்றுக் கவலைகை யாறென
நுவலப் படுவன நோயா கும்மே
அந்நோய் தனக்குப்
பேதைமை செய்கை யவாவே பற்றுக்
கரும வீட்டமிவை காரண மாகும்
துன்பந் தோற்றம் பற்றே காரணம்
இன்பம் வீடே பற்றிலி காரணம்
ஒன்றிய வுரையே வாய்மை நான்காவ (மணிமேகலை, 30 : 179-188)

ஒரு கணிதச் சமன்பாடு போன்றதொரு விளக்கம். பன்னிரு நிதானங்கள் இரு கூறுகளாகப் பிரிக்கப்பட்டு நால்வகை வாய்மைகள் இங்கு விளங்கப்படுகிறது.

(1) துக்கம்  உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நுகர்வு, பிறப்பு, வினைப்பயன் (பிணி, மூப்பு, மரணம்)
(2) துக்கத் தோற்றம்  பேதைமை, செய்கை, வேட்கை, பற்று, பவம் – இவைகளே துக்கங்களுக்கான காரணங்கள்.
(3) துக்க நீக்கம்  துன்பத்துக்கு பிறப்புக்கும் பற்றுடைமையே காரணம்.
(4) துக்க நீக்க நெறி  இன்பத்துக்கும் பிறவாத வீடு பேற்றுக்கும் பற்றற்று இருத்தலே வழி.

பிரதீத்ய சமுத்பாதக் கோட்பாடு பல்வேறு வகைகளிலும் தளங்களிலும் அர்த்தம் கொள்ளப்படுகிறது.

தேரவாதப் பௌத்தப் பாரம்பரியம் இக்கோட்பாட்டின் வாயிலாக துக்கங்கள் எழுவதை விளக்குகிறது ; இயற்காட்சிகளுக்கும் நிகழ்வுகளுக்கும் அடிப்படையான மெய்ம்மைக் கூறுகள் இல்லை என்றும் சொல்கிறது. ஆன்ம மறுப்பின் அடிப்படையாகவும் இக்கோட்பாடு கருதப்படுகிறது.

மஹாயான பௌத்தத்தில் சார்புடை தோற்றக் கோட்பாடு மேலும் விரிவு படுத்தப்பட்டு தோற்றப்பாடுகளின் சார்பு நிலையைக் காரணமாகக் காட்டி இருப்பின் மெய்ம்மையற்ற தன்மை விளக்கப் படுகிறது.

இக்கோட்பாட்டின் உண்மையான புரிதல் மட்டுமே இல்லாதவற்றை இருப்பவையாகவும் இருப்பனவற்றை இல்லாதவையாகக் கருதும் நம் தவறான பார்வைக்கு ஒரு முடிவு கட்டும் என்று யோக சாரம் என்ற பௌத்த மதத்தின் கிளையொன்று உரைக்கிறது.

இந்தக் கோட்பாடு நிலையற்ற லௌகீக தொடர்ச்சியை மட்டும் குறிக்கவில்லை : எல்லாவற்றின் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் அடிப்படைத் தன்மையையே குறிக்கிறது என்று பிரஜ்னபாரமித சூத்திரம் வலியுறுத்துகிறது.

முதல் பத்தியில் வந்த முடிவிலாச் சுழலில் உருவாகும் ஒவ்வொரு வட்டங்களின் அடையாளமும் சுழலில் உருவாகும் பிற வட்டங்களைச் சார்ந்தே இருக்கின்றன. முதல் வட்டம் தோன்றியிருக்காவிடில் இந்த வட்டமும் தோன்றியிருக்காது. மையத்தில் இருக்கும் சுயநிர்மூலமாக்கிக் கொள்ளும் புள்ளியைக் கடந்த அடிப்படை என்று ஒன்றும் இல்லை. இதைச் சூன்ய வாதம் என்று மத்யமிகா சொல்கிறது. சார்புடைத் தோற்றக் கோட்பாடும் சூன்ய வாதமும் ஒன்றே என்று நாகார்ஜுனர் மூலமத்யாத்ம காரிகையில் சொல்கிறார்.

சூன்ய வாதத்தின் படி மெய்யியல்பு இன்றி இப்பிரபஞ்சமும் இதில் இருப்பனவும் தோன்றிக் கொண்டிருக்கின்றன எனும் போது ஒரு குறிப்பிட்ட நாளில் எதையும் சாராத ஒரு சக்தியாலோ அல்லது கடவுளாலோ இப்பிரபஞ்சம் படைக்கப் பட்டிருக்க முடியாது என்று ஆகிறது. எனவே படைப்புக் கடவுள் என்கிற கருத்தியலையோ அல்லது நவீன அறிவியலாளர்கள் குறிப்பிடும் big bang theory-யையோ பௌத்தர்கள் ஏற்பதில்லை, “நான் ஏன் கிறித்துவன் இல்லை?” என்ற கட்டுரையில் ”இவ்வுலகத்திற்கு துவக்கமென்ற ஒன்று இருக்கிறதென எண்ணுவதற்கு ஒரு காரணமும் இல்லை. கற்பனையின் வறட்சியாலேயே எல்லா விஷயங்களுக்கும் ஒர் ஆரம்பம் இருக்க வேண்டியது அவசியம் என்று நாம் கருதுகிறோம். எனவே முதல் காரணம் எனும் வாதத்தில் ஈடுபட்டு என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை” என்று பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் சொல்லும் போது பிரபஞ்சத்தின் துவக்கம் பற்றிய வினாக்களுக்கு புத்தருடைய மௌனத்தின் உட்பொருளை எடுத்துரைத்த மாதிரி இருக்கிறது.

காரண காரியத் தொடர்பிலாமல் இப்பிரபஞ்சத்தில் ஒன்றும் இருக்க முடியாது என்கிறபடியால் ஆன்மா என்ற ஒன்றும் சாத்தியமில்லை என்று கொள்கிறது பௌத்தம்.
நால்வகை வாய்மைகள், அனாத்ம வாதம், கடவுள் மறுப்பு வாதம் – இவையெல்லாவற்றுக்குமே சார்புடைத் தோற்றக் கோட்பாடு தான் அஸ்திவாரம்.

நியுட்டனின் பௌதீக விதிகளை புவியீர்ப்பு விசை இயங்கும் தளத்தில் மட்டுமே உண்மையென்று நிரூபிக்க முடியும் என்றும் ;புவியீர்ப்பு விசைக்கு உட்படாத இடங்களில் நியூட்டனின் விதிகள் இயங்கா என்றும் நவீன அறிவியல் சொல்கிறது. அணுவியல் பரிசோதனைகளில் எட்டப்படும் முடிவுகள் சோதனையில் பயன்படுத்தப்படும் கருவிகளையும் வழிமுறைகளையும் ஒட்டியே அமைகின்றன என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது. பௌத்தம் சொல்லும் சார்புடைத் தோற்றக் கோட்பாட்டிற்கும் நவீன அறிவியல் சொல்லும் சார்புத் தன்மைக்கும் இருக்கும் ஓற்றுமை குறிப்பிடத்தக்கது.

புத்தரின் முக்கியமான இரு ஆண் சீடர்கள் – ஷாரிப்புத்தரும் மௌத்கல்யாயனரும். இருவரும் நெருங்கிய நண்பர்கள். சஞ்சயர் என்ற லோகாயதவாத குருவின் சீடர்களாக இரு இருந்தனர். சஞ்சயரின் போதனைகளில் நம்பிக்கையிழந்து ஒரு நாள் ஷாரிப்புத்தர் ஆசிரமத்தில் இருந்து விலகி குறிக்கோளின்றி நடக்கலானார். அப்போது அஸ்வஜித் என்ற புத்தபிக்ஷுவை சந்திக்க நேரிடுகிறது. ஷாரிப்புத்தரின் ஞானப்பசியை உடனடியாக இனங் கண்டு கொள்ளும் அஸ்வஜித் கீழ்க்கண்டவாறு புத்தரையும் அவரது முக்கிய போதனையையும் அறிமுகப்படுத்துகிறார். :-

”யே தம்ம ஹேதுப்பபவா
டேசம் ஹேதும் ததாகதோ
ஆஹா டேசம் ச யொ நிரொதோ
ஏவம் வாடி மஹாசமனொ”

”காரணத்தில் இருந்து எழும் தர்மங்கள் குறித்தான
காரணத்தை ததாகதர் கூறி இருக்கிறார்;
அதனுடைய முடிவையுக் கூட ;
ஒரு சிறந்த துறவியின் போதனை இது” (குத்தக நிகாயம்)

சார்புடைத் தோற்றக் கோட்பாட்டினை சுருக்கமாக ஆனால் தெட்டத் தெளிவாக உணர்த்தும் வரிகள்! இதைக் கேட்டவுடன் ஷாரிப்புத்தர் சிலிர்த்துப் போகிறார். ததாகதரின் ஆசிரமத்தை நோக்கி மின்னல் வேகத்தில் ஆர்வம் மேலிட ஓடுகிறார். புத்தரை தரிசித்து, சங்கத்தில் சேர்ந்த இரண்டாவது வாரம் ஷாரிப்புத்தர் அருகரானார்..

Source :
(1) மணிமேகலை – மூலமும் உரையும் – ந.மு.வேங்கடசாமி நாட்டார்
(2) http://www.buddhanet.net
(3) Cattanar’s Dream Book – an essay by David Shulman (from the Book – A Buddhist Woman’s Path to Enlightenment – an Uppsala University Publication)
(4) Collected Wheel Publications / Piyadassi Thero & others : 1998
(5) The universe in a single atom ; The convergence of science and spirituality : by HH The Dalai Lama (from the chapter “Empriness, Reality and Quantum Physics)

நன்றி : சொல்வனம் (http://solvanam.com/?p=24834)

1 Comment

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.