Category: Buddhism

  • நகர்ந்த ஸ்தம்பங்கள்

    வைசாலியில் உள்ள அசோக ஸ்தம்பம்
    வைசாலியில் உள்ள அசோக ஸ்தம்பம்

    அசோகர் என்ற ஒருவர் இருந்தாரா அல்லது வெறும் தொன்மக்கதைகளில் சித்தரிக்கப்படும் பாத்திரமா என்ற ஐயம் துவக்க கால பிரிட்டிஷ்-இந்திய வரலாற்றறிஞர்களிடையே இருந்து வந்தது. “அசோகாவதானம்” என்னும் இரண்டாம் நூற்றாண்டு சம்ஸ்கிருத நூலொன்றும்,  இலங்கையின் நாளாகமங்களான  – தீபவம்சம், மகாவம்சம் – இரண்டும் புராணக்கதையின் மிகைப்படுத்தல்களோடு அசோகரின் வாழ்க்கை சம்பவங்களை சித்தரிக்கின்றன. ஒரு நாடகீயமான பாத்திரம் போன்று கலிங்கப் பெரும் போரை நிகழ்த்தி பின்னர் போரை வெறுத்து பௌத்த நெறிமுறையின் படி தேசத்தை ஆண்டு வந்தவர் என்றவாறு மேற்சொன்ன பௌத்த இலக்கியங்களில் அசோகர் பற்றிய குறிப்புகள்  வந்தாலும் அசோகரின் ஆட்சி பற்றிய உறுதியான வரலாற்றுப் பதிவுகள் கிடைக்காமலேயே இருந்தன. அசோக சக்கரவர்த்தியைப் பற்றிய தொன்மச் செய்திகளே ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளாக உலவி வந்தன.

    James Prinsep என்னும் ஆங்கிலேயர் தில்லியில் இருக்கும் ஒரு ஸ்தம்பத்தில் பொறிக்கப்பட்டிருந்த பிராமி வடிவ எழுத்துகளைப் புரிந்துகொண்டது ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. “தேவனாம்பிய” (தெய்வங்களுக்கு பிரியமானவன்) “பியதஸ்சி” (மக்களை அன்புடன் கருதுபவன்) போன்ற பட்டப்பெயர்கள் தில்லி ஸ்தம்பத்தில் மட்டுமில்லாமல் வேறு ஸ்தம்பங்களிலும் பொறிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    19ம் நூற்றாண்டில் துணைக்கண்டம்  முழுமையும் (இந்தியா, நேபால், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான்) அசோகரின் கல்வெட்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன. ஸ்தம்பங்களிலும், கற்பாறைகளிலும், குகைச்சுவர்களிலும் பொறிக்கப்பட்ட  அரசாணைகள், பிரகடனங்கள் எல்லாம்  அசோகரின் சீர்திருத்தங்களையும் கொள்கைகளையும் குடிமக்களுக்கு வழங்கிய அறிவுரைகளையும் நவீன உலகிற்கு பறை சாற்றின. நன்னெறிகளின் அடித்தளத்தில் ஒரு பேரரசை நிறுவிய ஆற்றல் மிகு பேரரசரின் நுண்ணறிவை இக்கல்வெட்டுகள் நமக்கு அறியத்தந்தன. இந்திய வரலாற்றின் மிகப் பழமையான, குறிப்பிடத்தக்க நீளமான, முழுதும் புரிந்து கொள்ளப் பட்ட கல்வெட்டுகள் அசோகர் காலத்தவை தாம்!

    அசோகரின் கலைத்திட்டங்களுள் முதன்மையானவை மௌரியப் பேரரசு முழுமையும் அவர் நிறுவிய தூண் சாசனங்கள். 40 முதல் 50 அடி உயரத்தினதாய் வான் நோக்கிய தூண்கள். அவைகள் இரண்டு வித கற்களிலிருந்து சமைக்கப்பட்டவை – தூணின் நடுக்கம்பத்திற்கு ஒன்று ; தூண் சிகரத்திற்கு இன்னொன்று. நடுக்கம்பம் ஒற்றைக் கல்லிலிருந்து வெட்டப்பட்டதாக இருக்கும். மதுராவிலும் காசிக்கு முப்பது கிலோ மீட்டர் தெற்கில் இருக்கும் சுனார் பகுதியிலிருந்தும் இருந்த சுரங்கங்களில் வெட்டப்பட்டு தூண்கள் நிறுவப்பட்ட இடங்களுக்கு தள்ளிச் செல்லப்படும். ஒவ்வொரு தூணும் கிட்டத்தட்ட 50 டன் எடை கொண்டவை. இன்று 19 தூண்களே எஞ்சியிருக்கின்றன ; அவற்றிலும் பல உடைந்த துண்டுகளாகிவிட்டன.

    பௌத்த சமயக் கொள்கைகளை அடிக்கோடிட்டுக் காட்டும் பொருட்டு நிறுவப்பட்ட தூண்களின் சிகரத்தில்  விலங்குகளின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பௌத்த சமயத்தின் பரவலான சின்னமாக இருக்கும் தாமரை மலரை தலைகீழாக்கி அதன் மேல் விலங்குகளின் சிலை அமைக்கப்பட்டிருக்கும் ; சிங்கம் அல்லது நின்ற நிலை அல்லது உட்கார்ந்த நிலையில் மாடு.

    சில ஸ்தம்பங்களில் சமர்ப்பண கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் தேதிகள் குறிப்பிடப்பட்டு அசோகர்  புரவலர் என்ற தகவலும் அவற்றில் இருக்கும் பிராமி எழுத்தே கல்வெட்டுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் மேற்குப்பகுதியில் காணப்பட்ட கல்வெட்டுகளில் சமஸ்கிருதத்துக்கு தொடர்புடைய எழுத்து வடிவம் பயன்படுத்தப்பட்டுள்ளது. கிழக்குப் பகுதிகளில் உள்ள ஸ்தம்பங்களின் கல்வெட்டுகள் அசோகர் காலத்து மகதி மொழியில் செதுக்கப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் கண்டெடுக்கப்பட்ட ஸ்தம்பத்தில் அரமைக் மற்றும் கிரேக்க மொழிகளில் செதுக்கப்பட்டுள்ளது. தன் முடியரசின் பல்வேறு பண்பாட்டு, இனக்  குழுக்களைச்  சென்றடைய அசோகர்  விழைந்ததின் பிரதிபலிப்பாக இதைக் கொள்ளலாம். சில கல்வெட்டுகள் மதச் சார்பற்றவையாக இருக்கின்றன. கலிங்கப்  பேரழிவிற்கு அசோகர் மன்னிப்பு கேட்கிறார் ; மக்களின் நலமே தன்  குறிக்கோள் என்று உறுதி கூறுகிறார். சில கல்வெட்டுகள் அசோகர் மக்களுக்கு செய்த நன்மைகளை புகழ்ந்து கூறும் முகமாக செதுக்கப்பட்டுள்ளன.

    அசோகர் ஸ்தம்பங்கள் பிற்காலத்தில் வந்த சில பேரரசர்களின் கவனத்தை கவர்ந்தன. புராதன கௌஷம்பி நகரத்தில் நிறுவப்பட்ட ஸ்தம்பம் இன்று அலஹாபாத்தில் திரிவேணி சங்கமத்துக்கு அருகில் முகலாயப் பேரரசர் அக்பர் கட்டிய கோட்டைக்குள் காணப்படுகிறது. கௌஷம்பியில் இருந்த தூணின் சிகரமாய் இருந்த விலங்குச் சிலை தூணின் அலஹாபாத்  நகர்வுக்கு முன்னர் அகற்றப்பட்டிருக்கலாம்.  அலகாபாத் ஸ்தம்பத்தில் பிராமி எழுத்தில் அசோகரின்  கல்வெட்டில்  கி மு 232ம் ஆண்டின் தேதியிடப்பட்டிருக்கிறது. அதே ஸ்தம்பத்தில் குப்தவம்சப் பேரரசர் சமுத்திரகுப்தர் கி பி 375 இல் குப்தர் கால பிராமி எழுத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டில் தான் பெற்ற வெற்றிகளைப் பற்றி பெருமிதத்துடன் பேசுகிறார். அதே ஸ்தம்பத்தில் பாரசீக மொழியில் முகலாயப் பேரரசர் ஜஹாங்கிரும் ஒரு கல்வெட்டை பதிந்திருக்கிறார்.

    அலஹாபாதின் அசோகா ஸ்தம்பம் போல், தில்லியில் இருக்கும் இரண்டு அசோக ஸ்தம்பங்களும் முறையே மீரட் மற்றும் அம்பாலாவில் இருந்து இடம் பெயர்ந்தவை. 14ம் நூற்றாண்டில் தில்லியை ஆண்ட பெரோஸ் ஷா துக்ளக் என்கிற  சுல்தானால் நகர்த்தப்பட்டவை. இவ்விரண்டு ஸ்தம்பங்களிலும் சிகரம் இல்லை.

    ஆப்கானிய நகரம் காண்டஹாரில் எழுப்பப்பட்ட ஸ்தம்பம் இன்று காபூலில் இருக்கும் தேசிய மியுசியத்தினுள் இருக்கிறது. இந்த ஸ்தம்பத்தில் தான் அரமைக், கிரேக்க மொழிக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன.

    சாரனாத்தின் அசோக ஸ்தம்பத்தை அலங்கரித்த நான்கு சிங்கங்களின் சிகரம் அதிமுக்கியமானது. நம்  தேசியச் சின்னம் கூட. ஒற்றைத் தொகுதியான பளபளப்பூட்டப்பட்ட மணற் பாறையில் செதுக்கப்பட்டது. நான்கு ஆசிய சிங்கங்கள் பின்னுக்குப் பின்னாக நிற்பதை சித்தரிக்கிறது. ஒரு வட்டச்சட்டத்தின் மேல் பொருத்தப்பட்டிருக்கின்றன அந்த சிங்கச்சிலைகள். வட்டச்சட்டத்தைச்  சுற்றி செதுக்கப்பட்ட யானை, ஓடும் குதிரை, மாடு, சிங்கம் – இவற்றுக்கிடையிடையே 24 ஆரங்களையுடைய  சக்கரங்கள். எல்லாம் மணி வடிவ தலைகீழ்த் தாமரையின் மேல் வைக்கப்பட்டுள்ளன.

    பௌத்த நெறியின் குறியீடாக சிங்கச் சின்னத்தை பார்க்க முடியும். பௌத்த மரபுகளில் சிங்கத்தை புத்தரின் குறியீடாக சித்தரிப்பது வழக்கம். நான்கு சிங்கங்கள் நான்கு  திசைகளில் நோக்குவது சம முக்கியத்துவம் கொண்ட நான்கு விஷயங்களைக் குறிப்பதாகக் கருதலாம். அவைகளை  நால்வகை வாய்மைகள் (Four Noble Truths ) என்றும் சொல்லலாம்  வட்டச்சட்டத்தில் காணப்படும் நான்கு விலங்குகளுக்கும் குறியீட்டர்த்தம் உண்டு. புத்தரின் தாய் புத்தரைக் கருவுற்ற போது அவர் வயிற்றுக்குள் யானை நுழைந்ததைப் போல கனவு கண்டாள் ; யானை புத்தரின் பிறப்பைக் குறிக்கிறது. புத்தரின் இளமைப்பருவத்தை மாடு குறிக்கிறது. மனைவியை விட்டு விலகி புத்தர் தேடலில் ஈடுபட்டதை குறிப்பது ஓடும் குதிரை. நிர்வாண நிலையை புத்தர் எய்தியதை குறிப்பது சிங்கம். புத்தர் போதித்த தர்மத்தை சக்கரம் குறிக்கிறது.

    +++++

    மார்ச் மாதத்தில் ஒரு நாள்  பின் மதியம்  சாரநாத் சிதிலங்களைக் காணச் சென்றேன் ;   உடைந்து கிடந்த அசோகா ஸ்தம்பத்தை மூடிய கண்ணாடி அறைக்குள் பூட்டி வைத்திருக்கிறார்கள். அசோகர் சிங்கங்கள் மெருகு குலையாத பளபளப்புடன் சாரநாத் மியுசியத்தினுள் இருக்கிறது. ஸ்தம்பத்தின் மேல் சிங்கச்சின்னத்தையும் அதன் மேல் ஒரு காலத்தில் இருந்த தர்ம சக்கரத்தையும் என் மனக்கண் முன்னால்  தோற்றுவித்தேன். சிதிலங்கள் மறைந்து அசோகர் ஸ்தம்பத்துக்கு பின்னிருந்த மூல கந்த குடி விகாரமும் வளாகத்தில் இருந்த மற்ற விகாரஙகளும் அவற்றுக்கெல்லாம் பின்னணியில் இருந்த தமேக் ஸ்துபமும் (இப்போது தரை மட்டமாகியிருக்கும்) தர்ம ராஜிக ஸ்தூபமும் என பல நூற்றாண்டுகளுக்கு முன்னதான காட்சிகள் உயிர் பெற்றன. இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு முன்னம் நினைவுக்காட்சிகள் நகர்ந்த போது விகாரைகள் ஸ்தம்பங்கள் ஏதுமில்லை. பசுமையான காட்டுக்கு நடுவே  மான்கள் துள்ளிக் குதித்தாடின. கால வரிசையில்லாமல் காட்சிகள் மாறிக் கொண்டேயிருந்தன. வேறொரு காட்சியில் துருக்கிய தளபதியொருவனின் படைகளால் வளாகத்தில் இருந்த சைத்யங்கள் இடித்துத் தள்ளப்பட்டன. புத்தர் சிலைகள் அருவங்களாக்கப்பட்டன. காலத்தின் இன்னோர் அசைவில் தமேக் ஸ்துபத்திலிருந்து உருவப்பட்ட செங்கற்களின் பொதி  கழுதைகளின் மேல் ஏற்றப்பட்டு காசி நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டன.  ஒருமுறை பொதியினுள் கிடைத்த புத்தரினுடைய தியானக் கூழாங்கல்லொன்று  குப்பையெனக்  கருதப்பட்டு நதிக்குள் எரியப்பட்டது. பின்னொரு காட்சியில் கன்னிங்ஹாம் பிரபு தமேக் ஸ்தூபத்தினுள் இறங்கி அதன் சுவர்களுக்குள் பொறிக்கப்பட்டிருந்த ‘யெ தம்ம ஹேதுப்ப பவ’ என்னும்  பாலி சுலோகத்தை வாசிக்க முயன்று கொண்டிருந்தார்.

    சுற்றுலா பயணிகளுக்கான இருக்கையில் அமர்ந்து முத்தமிட்டுக் கொண்டிருந்த இளஞ்ஜோடியொன்றை  சீருடையிட்ட காவலாளி  ஒருவன் அங்கிருந்து விரட்டிக் கொண்டிருந்த சத்தம் நிகழ்காலத்துக்கு அழைத்து வந்தது.  மண் தரையில் பரவியிருந்த என்னை விட நான்கு மடங்கு நெடிய என் நிழலை நோக்கியவாறு  வெகு நேரம் அங்கே நின்றிருந்தேன்.

  • சுட்டுணர்வு

    சில வாரங்களுக்கு முன்னர் நான் வலைப்பதிவிட்ட “தர்மகீர்த்தியின் பரிசோதனை”  கட்டுரை ஆங்கிலத்திலிருந்து மொழி மாற்றம் செய்யப்பட்டது ; அதில் வரும் pure sensation எனும் கலைச்சொல்லை தூய உணர்ச்சி என்ற உரிச்சொல்லாக மொழி பெயர்த்திருந்தேன். தூய உணர்ச்சி என்னும் சொல் முழுமையான திருப்தியை ஏற்படுத்தவில்லை. கொஞ்ச நேரம் யோசித்துப் பார்த்து அப்படியே இருக்கட்டும் என்று விட்டு விட்டேன். பிறகு கட்டுரையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றி சிந்திக்க சரியான நேரம் அமையவில்லை.

    நேற்று ஒரு முகநூல் உரையாடலின் போது மணிமேகலையின் 29-ம் அத்தியாயத்தில் ஒன்றைத் தேட வேண்டியிருந்தது. எதையோ தேடும் போது முன்னர் தேடிக் கிடைக்காது போன பொருள் கண்ணுக்குத் தட்டுப்படுமே அது மாதிரி கீழ்க்கண்ட வரிகள் என் பார்வையில் பட்டன.

    ஆதி சினேந்திர னளவை யிரண்டே

    ஏதமில் பிரத்தியங் கருத்தள வென்னச்

    சுட்டுணர் வைப்பிரத் தியக்க மெனச்சொலி

    விட்டனர் நாம சாதிக்குணக் கிரியைகள்

    மற்றவை யனுமா னத்துமடை யும்மென    (29 : 47-51)

    “ஒரு பொருளின் பொருண்மை மட்டும் கண்டுணரும் உணர்வை காட்சியளவை என்று மேற்கொண்டு பிறராற் கொள்ளப்படும் பெயர், சாதி, குணம், தொழில் என்பவை கருத்தளவையிலும் அடங்கும் என அவற்றை இலக்கண மேற்கொள்ளாது நீக்கி விட்டனர்”

    – ஔவை.துரைசாமிப் பிள்ளை உரை

    Pure sensation என்ற சொற்றொடரை சுட்டுணர்வு என்று மொழி பெயர்த்திருக்க வேண்டும் ; மணிமேகலை ஆசிரியர் வேறோர் இடத்திலும் சுட்டுணர்வை வரையறுத்திருக்கிறார்.

    “சுட்டுணர் வெனப்படுவது ஏனைப் பொருளுண்மை மாத்திரை காண்டல்” (26 : 61-62)

    சுட்டுணர்வு நிர்விகற்ப காட்சி ; நாம சாதிக் குணக்கிரியையின் வைத்து உணரும் உணர்வு சவிகற்பக் காட்சி. இவற்றை முறையே இந்திரிய ஞானம் என்றும் விசிட்ட ஞானமென்றும் கூறுவர். திக்நாகர் நாம சாதி முதலியவற்றை “பஞ்சவித கற்பனை” என்று குறிப்பிடுகிறார். சுட்டுணர்வென்பது சவிகற்ப காட்டிக்கு அடிப்படை ; சுட்டுணர்வு சவிகற்ப காட்சிக்கு வித்திடாவிடின் அது குறையுடையதாகும். இக்குறையை தருக்கவியல் நூலார் “பிரமாணாபாசங்கள்” எட்டனுள் ஒன்றாகக் குறிப்பிடுகின்றனர்.

  • கரணிய மெத்த சுத்தம்

    Trees

    சாவத்தியில் புத்தர் தங்கியிருந்த போது ஆற்றிய பேருரைகளைக் கேட்ட பிக்‌ஷுக்களின் குழுவொன்று பிக்‌ஷுக்களின் மரபுப்படி மழைக்காலத்தில் வனத்துக்கு சென்று தங்க முடிவு செய்தனர். காட்டு மரங்களின் தேவதைகளுக்கு காட்டில் பிக்‌ஷுக்கள் வந்து தங்குதல் பிடிக்கவில்லை. ஆதலால் பிக்‌ஷுக்களைத் துரத்த இரவு நேரத்தில் பலவகையிலும் பயமுறுத்தும் காட்சிகளை உண்டு பண்ணி துன்புறுத்தினர். பிக்‌ஷுக்கள் இதைப்பற்றி புத்தரிடம் சென்று முறையிட்ட போது, “கரணிய மெத்த சுத்தம்” (KARANIYA METTA SUTTA — THE DISCOURSE ON LOVING-KINDNESS) என்னும் பாலி சூத்திரத்தை அவர்களுக்கு போதித்தருளினார். இந்த சூத்திரத்தை சுத்தத்தை உச்சரித்து வருமாறும் இது அவர்களுக்கு பாதுகாப்பளிக்கும் என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தினார். பிக்‌ஷுக்கள் வனத்திற்கு திரும்பிய பிறகு இச்சூத்திரத்தை பயிற்சி செய்து வரலாயினர். பிக்‌ஷுக்களின் பயிற்சி மர தேவதைகளினுள் மனமாற்றத்தை உண்டாக்கிற்று. பிக்‌ஷுக்களின் இதயத்துள் எழுந்த அன்பெண்ணத்தின் விளைவாக தேவதைகள் இளகின. பிக்‌ஷுக்கள் அங்கேயே தங்கி அமைதியாக தியானப்பயிற்சிகளில் ஈடுபட அனுமதித்தன.

    பாலி நெறிமுறை நூல்களில் இரு இடங்களில் இச்சூத்திரம் சொல்லப்பட்டிருக்கிறது. சுத்தநிபாதத்திலும் குத்தகபத்தயாவிலும் இச்சூத்திரம் இடம் பெறுகிறது. தேரவாதத்தில் சொல்லப்படும் நான்கு பிரம்மவிஹாரத்தில் மெத்த (அன்பெண்ணம்) வும் ஒன்றாகும் ; சக-மனித ஒற்றுமையுணர்வை, தியானத்திற்கான  மனக்குவியத்தை வளர்ப்பதற்காக இச்சூத்திரத்தின் வாசிப்பு பரிந்துரைக்கப் படுகிறது. பின் வந்த பௌத்த நெறி முறைகளில் மெத்த பத்து பாரமிதைகளில் ஒன்றாக வகைப்படுத்தப்படுகிறது.

    தேரவாத பௌத்த வழிபாட்டு முறைகளில் மெத்தா சுத்தத்தின் வாசிப்பு பிரபலம் ; இந்த சூத்திரத்துக்கு பயம் நீக்கும் சக்தியிருக்கிறதென்ற நம்பிக்கை பௌத்த சமயத்தில் பரவலாகக் காணப்படுகிறது.

    தனிஸ்ஸாரோ பிக்குவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம் கீழே –

    குறிக்கோள் திறமுடையோரில்
    அமைதி நிலைக்குள் நுழையும் எண்ணமுடையோர்
    இதைச் செய்தல் அவசியம் ;
    இயலுமையுடன் இருத்தல்,
    நேர்க்குணம் மிக்கவராய்,
    எளிதில் போதனையேற்கத்தக்கவராய்,
    மென்மையானவராய்,
    அகந்தையற்றவராய்,
    சிற்சில கடமைகளுடன்,
    இலேசாக வாழ்ந்து,
    அமைதியான குணங்களுடன்,
    தலை சிறந்து,
    எளிமையானவனாய்,
    ஆதரவாளர்களின் எண்ணிக்கை மேல் பேராசையின்றி.
    ஞானியர் ஒறுக்கும்
    சிறு செயலையும்
    செய்யாமலிரு

    சிந்தி: இளைப்பில் மகிழ்ச்சி கொள்ளட்டும் ;
    அனைத்துயிரும் தம் இதயத்துள் மகிழ்வாயிருக்கட்டும்.
    உயிர்கள் எத்தன்மையாய் இருப்பினும்,
    வலியுள்ளோரும் நலிவுற்றோரும், விதிவிலக்கின்றி
    நீளமானதும், பெரிதாக இருப்பதும்
    நடுத்தரவடிவினதும், குட்டையானதும்
    நுட்பமானதும், வெளிப்படையானதும்
    காண்பதும், காணப்பெறாததும்
    அருகிருப்பதும், தள்ளியிருப்பதும்
    பிறந்ததும், பிறப்பை நாடுவதும்

    அனைத்துயிரும் தம் இதயத்துள் மகிழ்வாயிருக்கட்டும்.
    ஒருவரும் அடுத்தவரை ஏமாற்ற வேண்டாம்
    அல்லது எங்கும் யாரையும் வெறுக்க வேண்டாம்
    அல்லது கோபத்தாலோ, எரிச்சலாலோ
    அடுத்தவர் துயருற நினைக்க வேண்டாம்

    தன் மகவை, ஒரே மகவைக் காக்கும் பொருட்டு
    தன் உயிரைப் பணயம் வைக்கும் தாயொருத்தியைப் போல்
    அனைத்துயிர்கள் குறித்தும்
    எல்லையிலா இதயத்தை வளர்த்துக் கொள்.

    முழுப் பிரபஞ்சத்தின் மீதான நல்லெண்ணவுணர்வுடன்
    எல்லையில்லா இதயத்தை வளர்த்துக் கொள்.
    மேலே, கீழே, எல்லா பக்கங்களிலும்
    தடையில்லாமல், பகைமை அல்லது வெறுப்பின்றி
    நின்று கொண்டோ, நடந்தவாறோ,
    அமர்ந்து கொண்டோ, அல்லது படுத்துக் கொண்டோ,
    ஒருவன் விழிப்புடனிருக்கும் வரை
    கவனத்துடனிருக்கும் தீர்மானம் கொள்ள வேண்டும்.

    இதுவே
    இங்கு, இப்போது
    உன்னத இருத்தல்
    என்றழைக்கப்படும்.

    தவறான கருத்துகளுக்கிடம் கொடாமல்
    ஒழுக்கத்துடன், முழுமையான தரிசனத்துடன்
    புலனின்ப ஆசைகளை முறியடித்த
    ஒருவன்
    கருப்ப அறைக்குள்
    மறுபடி உறங்குவதில்லை

  • தர்மகீர்த்தியின் பரிசோதனை

    buddhist_logic_large

    Buddhist Logic என்ற இரண்டு புத்தக நூலை இரு வருடங்களுக்கு முன்னர் வாங்கினேன். படிக்காவிட்டாலும் சில புத்தகங்களை நம்முடன் வைத்திருப்பதே ஒரு பெருமிதத்தை கொடுக்கும். ஒவ்வொரு முறையும் பக்கங்களைப் புரட்டிப் பார்ப்பது, சில பத்திகளைப் படிப்பது என்று இந்நூலுடனான தொடர்பை துவக்க (பிரம்ம!) பிரயத்தனம் செய்து வந்தேன். அடர்த்தியான தருக்கவியல் தத்துவங்களை விரிவாகப் பேசும் இந்நூலுக்குள் என்னால் நுழைய முடியவில்லை. பௌத்த தத்துவவியல் வரலாற்றைப் பேசும் முதல் அத்தியாயம் படிப்பதற்கு எளிதாக இருந்தது.

    யோகசார பௌத்தத்தின் தத்துவ நூல்களைப் பற்றி விளக்கும் நூல் இது. பிற்கால பௌத்தத்தின் முக்கிய நூல்களான பிரமாண சமுச்சய (ஆசிரியர் : திக்நாகர் – கி.பி 5-6ம் நூற்றாண்டு), பிரமாண வர்த்திக காரிகா (ஆசிரியர் : தர்மகீர்த்தி – கி.பி 7ம் நூற்றாண்டு – சுமத்ராவின் இளவரசரான இவர் நாலந்தாவிற்கு வந்து “செட்டில்” ஆனவர் என்று சொல்லப்படுகிறது.), மூல மத்யாதம காரிக விருத்தி (ஆசிரியர் : சந்திரகீர்த்தி – கி.பி 7ம் நூற்றாண்டு – இவர் நாகார்ஜுனரின் சிஷ்யர் என்று சொல்லப்படுகிறது) ஆகிய நூல்களின் பொருளுரைகள், மேற்சொன்ன நூல்களினுடைய ஆசிரியர்களின் பிற்காலச் சீடர்கள் உரைத்த தெளிவுரைகள் – இவற்றைப் பற்றி Buddhist Logic விளக்கிப் பேசுகிறது. பௌத்த தருக்கவியல் மரபின் அம்சங்களை வரிசைப்படுத்தி விவரிக்கிறது. Stcherbatsky என்னும் இரஷ்யப் பேராசிரியரால் எழுதப்பட்ட மிக முக்கியமான இரட்டைப் புத்தகம் இது. உலகெங்கும் தத்துவம் படிக்கும் மாணவர்களால் வாசிக்கப்படும் புத்தகம். உலகின் பல்கலைக்கழகங்கள் பல இப்புத்தகத்தை பாட நூலாக அறிவித்துள்ளன. 1932-இல் எழுதப்பட்ட இந்நூலில் சொல்லப்பட்டிருப்பவை கொஞ்சம் காலாவதியானவை என்று சில பௌத்த தத்துவவியலார் கருதுகின்றனர் என்று இணையத்தில் படித்ததையும் இங்கே குறிப்பிட வேண்டும். கான்ட்-டின் தத்துவப் பார்வையின் வழியாக பௌத்த தத்துவத்தை அவர் அணுகியிருக்கிறார் என்பது டேவிட் லாய் என்பவரின் புகார்.

    வழக்கத்துக்கு மாறாக ஒரு நாள் அதிகாலை நாலரைக்கு தூக்கம் விலகிச் சென்றது. படுக்கைக்கு மிக அருகில் இருந்த முதலாம் பாகத்தை கையிலெடுத்தேன். புத்தக கிரிக்கெட் விளையாடுவது மாதிரி குறிப்பான நோக்கமற்று ஒரு பக்கத்தை பிரித்தேன்.

    +++++

    Dharmakirti_25139

    தர்மகீர்த்தியின் பரிசோதனை

    (Buddhist Logic, Volume 1, page 150-153)

    இந்த ஒற்றைக் கணம் ஒரு சுத்தமான உணர்வு தானே, அதன் அனுமானமான கணித வரைபடப்-புள்ளியானது ஒரு வெறும் மரபு என்பதைப் போல்? ஒரு புறப்பொருளின் தூண்டுதலால் அது உற்பத்தி செய்யப்பட்டாலும், ஒரு குணத்தையும் தன் இயல்பில் கொண்டிராத ஒரு பொருளிலிருந்து எழுவதனால், அது யதார்த்தம் என்று கருதப்படலாகுமா? கற்பனை அல்லது ஆக்கபூர்வ உறுப்பின் அடிச்சுவடுகள் முழுதும் உரித்தெடுக்கப்பட்ட ஒன்றாக அது கருதப்படுகிறது. ஆனாலும் அது வெறும் கற்பனை மட்டும் தானே? இந்த வினாக்கள் இந்தியாவில் மட்டும் எழுப்பப்பட்ட ஒன்றல்ல என்பது எல்லாரும் அறிந்தது. கணித வரைபடப்புள்ளி பற்றிய கேள்விக்கு அளித்த பதிலையே பௌத்தர்கள் இக்கேள்விக்கும் அளித்தார்கள். ஒற்றைக் கணம் என்பது ஒர் உருவமாகப் குறிக்கத்தக்கதன்று. ;  அதை “அறிவின் வாயிலாக அடைதல்” சாத்தியமில்லை. அதாவது, அனுபவ ரீதியாக உண்மையானதன்று. ஆனால் மற்றெல்லாவற்றிற்கும் மெய்ம்மையை நல்கக் கூடிய மூலம் அது. உண்மையான மற்றும் நிலையான அறிவிற்கான முன்நிபந்தனை அது. செயலறிவிற்கு அப்பாற்பட்டது ஆனால் அது பொருண்மை சாராததும் அன்று. “வானிலிருக்கும் மலர்” அன்று.

    நையாயிகர்களின் கடவுளைப் போன்றோ, சாங்கியர்களின் பிராகிருதியைப் போன்றோ, வைசேஷிகர்களின் பொதுமைகளைப் போன்றோ அல்லது இவ்வெல்லா மரபுகளின் ஆன்மாவைப் போன்றோ இது பொருண்மை சாரா உட்பொருளன்று. தன்னிலை ஆய்வின் துணை கொண்டு இந்த கணத்தின் யதார்த்தத்தை தர்மகீர்த்தி நிரூபிக்க விழைகிறார். பொருண்மை சாரா உட்பொருட்கள் பொருண்மையற்றவை ஏனெனில் அவை யதார்த்தப் புள்ளி கலக்காத, புலனால் உணரப்படாத, சுத்தமான கற்பிதங்கள். “இடம், காலம் மற்றும் புலன்களால் கண்டுணரும் தன்மை – இவற்றின் வாயிலாக அடையும் தன்மையற்றவை” ஆனால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அனுபவ யதார்த்தத்திலும் அனுபவ அறிவிலும் செய்யப்படும் ஒவ்வொரு செய்கையிலும் இந்த கணம் (இந்தப் புள்ளி) என்னும் உணர்வு இருக்கிறது. இதை நாம் தன்னிலை ஆய்வின் வாயிலாக மறைமுகமாக நிரூபிக்கலாம். (“ப்ரத்யக்‌ஷம் கல்பனாபோதம் பிரத்யக்‌ஷனைவ சித்யதி” – இவை தர்மகீர்த்தியின் சொற்கள் – பிரமாண வர்த்திகாவில் வருபவை). தர்மகீர்த்தி சொல்கிறார் : “அந்த உணர்வு படைப்பாக்க கற்பனையிலிருந்து வேறு பட்டது – ஒரு தற்சோதனை வாயிலாக நிறுபணமாகக் கூடியது. ஓர் உருவம் என்பது உச்சரிக்கப்படக் கூடியது (ஒரு பெயரின் வாயிலாக). {“விகல்போ நாம சம்ஸ்ரயா”}. நாம் ஒரு வண்ண இணைப்பை உற்றுப் பார்க்கத் தொடங்குகிறோம். பிற பொருட்களின் மீதான சிந்தனையை அகற்றி, நம்முடைய பிரக்ஞையை ஒரு கட்டிறுக்க நிலைக்கு சுருக்கிவிடுகையில் (மயக்க நிலை எய்தியதைப் போன்று), நாம் அடையும் நிலை தூய உணர்ச்சி (Pure Sensation) நிலை. அந்நிலையிலிருந்து விழித்து நாம் மீண்டும் சிந்திக்கத் தொடங்குகையில் வண்ணப்பட்டையொன்றை நாம் நோக்கிக் கொண்டிருந்த உணர்வை ஞாபக பூர்வமாக உணர்கிறோம். ஆனால் நாம் அந்த தூய உணர்ச்சி நிலையில் தோய்ந்திருந்த போது அந்த வண்ணப்பட்டையை நோக்கிக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வை (இதற்கு என்ன பெயரிடுவது!) நாம் கவனிக்கவில்லை. ஏனென்றால் அது தூய உணர்ச்சி”

    M.H.Bergson முன்மொழிந்த சோதனையோடு தர்மகீர்த்தியின் சோதனையும் வகையில் பொருந்திப் போவது ஒரு குறிப்பிடத்தக்க தற்செயலேயாகும். பிரெஞ்சு தத்துவாசிரியர் சொல்கிறார் : “ நான் என் கண்களை மூடிக் கொள்ளப் போகிறேன் ; செவிகளை அடைத்துக் கொள்ளப் போகிறேன் ; எல்லாப் புலனுணர்வுகளையும் ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தப் போகிறேன்…என் புலனறிவு நின்று விட்டது. பொருண்மைப் பிரபஞ்சம் அமைதியில் மூழ்கிவிட்டது. என் சமீபத்திய இறந்த காலம் வரையிலான என் நினைவுகளை என்னால் நீக்கிக் கொள்ள முடிகிறது. என் உடல் பற்றிய பிரக்ஞை தவிர நிகழ்காலப் பிரக்ஞையை வறுமையாக்கி மிகவும் சிறிதாக்கிக் கொள்கிறேன்.” “தீவிரமான வறுமை நிலைக்குள்ளாக்கப்பட்ட பிரக்ஞை” என்பது தர்மகீர்த்தியின் நிகழும் கணம் அல்லது “தூய உணர்ச்சி நிலை” யைத் தவிர வேறொன்றுமில்லை. இன்மை என்னும் கருத்தியல் போலியானது (“Creative Evolution” – by M H Bergson) என்பதை நிரூபிப்பதற்கு பெர்க்சன் இந்த சோதனையைப் பயன் படுத்திக் கொண்டார்.  பௌத்தர்களும் அதே குறிக்கோளுக்காக இச்சோதனையைப் பயன் படுத்திக் கொண்டனர். ஆனால் அதே சமயத்தில் அனுபவ யதார்த்தத்துக்கும் அனுபவ அறிவிற்கும் குறைந்த பட்ச எல்லையே உண்டு என்பதற்கும் இதுவே நிரூபணம்.

    கமலசீலர் (கி.பி எட்டாம் நூற்றாண்டு ; நாலந்தா மகாவிகாரத்தில் இருந்தவர் ; பின்னர் திபெத் சென்றார் ; சாந்திசீலரோடு சேர்த்தே கமலசீலரைக் குறிப்பிடுவது திபெத்தில் ஐதீகம்) இதே சோதனையை கீழ்க்கண்ட வரிகளில் குறிப்பிடுவார். “முதற் கணத்தில் ஒரு பொருள் அறியப்படும் போது, அது தூய உணர்ச்சியால் தோற்றுவிக்கப்பட்ட  பிரக்ஞை நிலையில் அதன் முழுமையான, குறிப்பிட்ட தன்மையில் தோற்றமளிக்கிறது. பெயர் சொல்லி விளக்கத்தக்க உள்ளீடோன்றையும் அது தன்னகத்தே கொண்டிருக்கவில்லை. பின்னொரு சமயத்தில் அதே பொருள் கவனத்துடன் உற்று நோக்கப்படும் போது, கவனம் சிதறி அப்பொருளின் மரபுவழிப் பெயரில் படிந்து போய் விடுகிறது. பெயர் அடையாளத்துடன் கவனிக்கப்பட்ட பிறகு அப்பொருளின் நீடித்த இருப்பு மற்றும் இன்ன பிற காரணிகள் கவனத்தில் எழும். அதற்குப் பிறகு அதன் மீது நம் புலனுணர்வு-பூர்வ தீர்ப்பை வழங்கி விடுவோம். முன்னர் கவனத்துடன் நோக்கப்பட்டு பெயர் வாயிலாக அறியப்பட்ட பொருள் பற்றி எண்ணுகையிலோ அல்லது மீண்டும் காணும் சந்தர்ப்பம் வாய்க்கும் போதோ அப்பொருள் இன்மையற்றதாகி நினைவில் இருக்கும் பொருளாகவே ஆகிறது (ஏனெனில் அக்கணத்தில் அப்பொருள் புலன்களால் கண்டு கொள்ளப் படாமல், நம் முந்தைய புரிதலின் நினைவு வாயிலாக இடும் தீர்ப்பாகவே கொள்ளப்படும்) மனோநிலைகளுக்கிடையீடான தொடர்ச்சி என்று இங்கு கூறப்படுவதற்கு எங்கே நிறுவல்? நம் கவனம் ஒரு செயலில் தோய்ந்திருக்கையில், தகுதியால் வேறுபடாவொன்றின் மாறாத முன்னிலையை நம்மால் அறிய முடிகிறது. நிலைத்திருக்கும் பொருள் என்னும் எண்ணத் தோற்றம் மேற்சொன்ன மாதிரியாக எழுவதால், கவனிப்பவரின் கவனம் ஒன்றில் ஈடுபட்டிருக்கும் போது, வேறொரு பொருளில் கவனத்தை குவிக்கும் போது, கவனிக்கப்படும் பொருளினால் அவன் கவனம் நிறைந்திருக்கும் போது, அவன் முன்னால் இருக்கும் பொருளை (பொருளின் உள்ளீட்டை) அவன் பார்த்தாலும் அவனுடைய கவனம் பார்க்கும் பொருளின் மரபுவழிப் பெயரிலிருந்து விலகியிருப்பதனால், அங்கு (அச்சமயத்தில்) முதற் கணத்தில் (ஒவ்வொர் உணர்தலின்) ஒரு மெலிய, தகுதியொன்றுமிலாத உணர்வு. (“சர்வ உபாதி விவிக்த வஸ்து மாத்ர தர்சனம்”). இது இப்படியிராவிடில், எல்லா பிரக்ஞை பூர்வ நிலைகளும் பெயர் குறிக்கும் தகுதிகள் நிரம்பிய பொருட்களையே காணும் இயல்பு கொண்டதாக இருப்பின், கவனமற்ற மனத்தினன் ஒருவன்  நோக்கும் போது ஒரு வெறுமையான, ஒரு பண்புமற்ற பொருளையே எப்படி பார்க்கிறான்?”

    அபிதர்மசூத்ரத்திலிருந்து திக்நாகர் கிட்டத்தட்ட இதே முடிவைத் தரும்  மேற்கோள் ஒன்றைத் தருகிறார் (பிரமாண சமுச்சய விருத்தி – பிரமாண சமுச்சய-விற்கு திக்நாகரே எழுதிய உரை) :

    “ஒரு நீல வண்ணத் துண்டின் மேல் தியானிப்பில் ஈடுபட்டிருப்பவன், நீலத்தை புலன்களால் உணர்கிறான். ஆனால் அவனுக்கு அது நீலம் என்று தெரியாது. பொருளைப் பற்றி அது பொருள் என்று அவனுக்கு தெரியும் ; ஆனால் எத்தகைய பொருள் என்று அவனுக்கு தெரியாது”

    பின் வந்த ஆசிரியர்கள் பலராலும் இது மேற்கோளாக காட்டப்பட்டிருக்கிறது. தூய உணர்ச்சி பற்றிய கருத்துகளை திக்நாகர் சர்வாஸ்திவாதிகளின் படைப்புகளிலிருந்து பெற்றிருக்கக் கூடும் என்று எண்ண இடமிருக்கிறது.

     

  • பெண்ணியவாதி தெய்வம் – தாரா

    (இன்று சரஸ்வதி பூஜை. இவ்வலைப்பதிவின் இருநூறாவது இடுகை இது. பௌத்த சமயத்தின் சரஸ்வதியான தாராவைப் பற்றிய இக்கட்டுரை இருநூறாவது பதிவாக வருகிறது பிப்ரவரி 2010இல் வலையில் எழுதத் தொடங்கிய போது இருநூறாவது பதிவு வரை போகும் என்று சற்றும் நினைக்கவில்லை. தொடர்ச்சியாக யாரேனும் இடுகைகளை வாசித்து வருகிறார்களா என்று தெரியவில்லை. எனினும் விளையாட்டுத்தனம் கலக்காத சீரிய பதிவுகளையே இடுவது என்ற உறுதியிலிருந்து விலகாமல் இன்று வரை முயன்று வருகிறேன்.)

    Green_Tara,_Kumbm,_Gyantse,_Tibet,_1993

    தாரை வழிபாடு முதலில் எந்த மரபில் தோன்றியது என்பதில் ஆய்வாளர்களுக்கு நடுவில் ஒருமித்த கருத்து இல்லை. சக்தி வழிபாட்டு மரபுகளிலிருந்து ஸ்தாபனமயப்படுத்தப்பட்ட இந்து மதத்துள்ளும், பௌத்த சமயத்துள்ளும் நுழைந்திருக்கலாம் என்பது பெரும்பாலோரின் கருத்து. இந்து புராணங்களில் வரும் துர்கையின் ஒரு வடிவமாக தாரை தேவி வழிபாடு தோன்றியிருக்கக் கூடும் என்றும் ஒரு சாரார் கருதுகின்றனர்.

    மூல பௌத்தத்தில் பெண் தெய்வங்கள் இருந்ததில்லை. மகாயான பௌத்தம் பிரபலமாகத் தொடங்கிய முதல்-இரண்டாம் நூற்றாண்டுகளில் பெண் தெய்வங்கள் பௌத்த சமயத்துள் நுழைந்திருக்கலாம் என்றும் கருத இடமுள்ளது. மிகவும் பழைமையான நூலான பிரஜ்னபாரமித சூத்திரத்தில் தான் முதன்முதலில் பிரஜ்னபாரமிதா என்கிற பெண் தெய்வத்தின் பெயர் குறிப்பிடப்படுகிறது. இந்நூல் சமஸ்கிருத மூலத்தில் இருந்து கி.பி இரண்டாம் நூற்றாண்டில் சீன மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளதற்கான சான்றுகள் உள்ளன. பௌத்தத்தில் பெண்மைக் கொள்கை “பிரஜ்னபாரமிதா” என்கிற பெண் தெய்வத்தின் வடிவத்தில் முதன்முதலாகத் தோன்றியது. தெளிவான ஞானமெனும் கருணையின் வெளிப்பாடாக தாரா  பௌத்தத்தில் வருவது பிற்காலத்தில் தான். (கி.பி 5-8ம் நூற்றாண்டு). மிகப்பழைமையானதும், மிகத் தெளிவாக அடையாளம் காணக்கூடியதுமான தாராவின் உருவம் (கி.பி 7ம் நூற்றாண்டு) நமக்கு எல்லோரா மலைக்குகை எண் 6 இல் காணக் கிடைக்கிறது. இந்தியாவின் வட-கிழக்குப் பிராந்தியங்களை ஆண்ட பால் வம்சத்தின் ஆட்சியின் போது தாரை வழிபாடு மிகவும் பரவலாகத் தொடங்கியது. தாந்த்ரீக பௌத்தம் பிரபலமடைந்த பால் வம்ச ஆட்சியின் போது தான் தாரா வழிபாடு வஜ்ராயன பௌத்தத்திலும் கலந்தது. பத்மசம்பவர் தாரா தேவியையொட்டிய வழிபாட்டு நடைமுறைகளை திபெத்துக்கு கொண்டு சென்றார். காலப்போக்கில் “அனைத்து புத்தர்களின் தாய்” என்று தாரா  வணங்கப்பட்டாள் ; “தெய்வத்தாய்” என்னும் வேத மற்றும் வரலாற்றுக்காலத்துக்கும் பண்டைய கருத்தியலின் எதிரொலியாக இதை எண்ணலாம்.

    தெய்வம், புத்தர் மற்றும் போதிசத்துவர் – எவ்வாறாக கருதப்பட்டாலும் , திபெத், நேபால், மங்கோலியா, பூட்டான் ஆகிய நாடுகளில் தாரை வழிபாடு மிகப் பிரபலம் ; உலகெங்கிலும் உள்ள பௌத்த சமூகங்களில் தாரை தொடர்ந்து வழிபடப்படுகிறாள்.  தாரை வழிபாட்டில் பச்சைத் தாராவும் வெள்ளைத் தாராவும் மிகப் பிரபலமான வடிவங்கள். அச்சம் போக்கும் தெய்வமாக பச்சைத் தாரா விளங்குகிறாள் ; நீண்ட ஆயுள் தரும் தெய்வமாக வெள்ளைத் தாரா இருக்கிறாள்.

    ஒரு போதிசத்துவராக தாராவின் தோற்றத்தைப் பற்றி பல பௌத்த தொன்மங்கள் பேசுகின்றன. பெண்ணியத்தின் முதல் பிரதிநிதி தாரா என்று சொல்லும் ஒரு தொன்மக்கதை இருபத்தொன்றாம் நூற்றாண்டின் பெண்ணியவாதிகளுள் அதிர்வை ஏற்படுத்தலாம்.

    +++++

    Tara Ellora Cave 6

    பல லட்சம் ஆண்டுகட்கு முன் இன்னோர் உலகத்தில் ஓர் இளவரசி வாழ்ந்து வந்தாள். அவள் பெயர் யேஷே தாவா. பல யுகங்களாக அவ்வுலகத்தில் வாழ்ந்த ஒரு புத்தருக்கு அவள் காணிக்கைகள் வழங்கி வந்தாள். அந்த புத்தரின் பெயர் தோன்யோ த்ரூபா. அவளுக்கு போதிசித்தம் (போதிசத்துவரின் மனோ-ஹ்ருதயம்) பற்றிய முக்கிய போதனை ஒன்றை த்ரூபா அளிக்கிறார், போதனை பெற்ற இளவரசியை சில துறவிகள் அணுகி அவள் அடைந்த சாதனையின் பலனாக அடுத்த பிறவியில் ஆணாகப் பிறக்கும் பிரார்த்தனை செய்யும் படி ஆலோசனை சொல்கிறார்கள். அப்போது தான் ஆன்மீகத்தின் அடுத்த நிலைகளை அவள் அடைய இயலும் என்றும் சொல்கிறார்கள். “பலவீனமான சிந்தனை கொண்ட உலகத்தோரே ஞானத்தை எட்ட பாலியல் வேற்றுமையை ஒரு தடையாகக் கருதுவர்” என்று சொல்லி அத்துறவிகளின் பேச்சை மறுதளித்தாள். பெண் ரூபத்தில் உயிர்களின் தொண்டாற்ற விழைவோர் குறைவாகவே இருப்பதை எண்ணி வருத்தமடைகிறாள். பிறவிகளை முடிவதற்கு முன்னர் எல்லாப் பிறவிகளிலும் பெண்ணாகவே பிறக்க உறுதி பூணுகிறாள். பின்னர் பத்தாயிரம் ஆண்டுகள் அவள் தியானத்தில் ஈடுபடுகிறாள். அவளின் தியானம் பல்லாயிரக் கணக்கான உயிர்களை சம்சாரத்திலிருந்து விடுவிக்கிறது. இதை உணர்ந்து த்ரூபா புத்தர் “இனி வரப் போகிற பல்வேறு உலக அமைப்புகளில் உயர்ந்த போதியின் அடையாளமாக நீ பெண் கடவுள் தாராவாக வெளிப்படுவாய்” என்று அவளுக்குச் சொல்கிறார்.

    +++++

    கருணை இயக்கம் என்னும் தலைப்பில் 1989-இல் கலிஃபோர்னியாவில் நிகழ்ந்த மாநாட்டில் வணக்கத்துக்குரிய தலாய் லாமா தாரா பற்றிப் பேசினார்.

    “தாராவின் தொடர்பு கொண்ட உண்மையான பெண்ணிய இயக்கமொன்று பௌத்தத்தில் இருக்கிறது. போதிசித்தத்தின் அடிப்படையும் போதிசத்வனின் உறுதியும் கொண்டு முழு விழிப்பு நிலை எனும் இலக்கை அவள் நோக்கினாள். மிகக் குறைவான பெண்களே புத்த நிலையை அடைந்த தகவல் அவளை பாதித்தது. “ஒரு பெண்ணாக நான் போதிசித்தத்தைக் கைக் கொண்டேன். என் எல்லாப் பிறப்புகளிலுல் ஒரு பெண்ணாகவே பிறக்க உறுதி கொள்கிறேன். என் இறுதிப் பிறப்பில் நான் ஒரு புத்த நிலையை ஒரு பெண்ணாகவே எய்துவேன்” என்று அவள் சபதம் பூண்டாள்”

    +++++

    பௌத்த கொள்கைகளின் உருவகமாக இருக்கும் தாரா பெண் பௌத்த-நடைமுறையாளர்களை ஈர்க்கும் தன்மை உடையவளாக இருக்கிறாள். போதிசத்துவனாக தாராவின் வெளிப்பாடு பெண்களையும் தன் குடைக்குள் ஒருங்கிணைத்து அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமயமாக விரிவடைய மகாயான பௌத்தத்தின் முயற்சியாகக் கொள்ளலாம்.

  • ஆபுத்திரன் – 3

    உதயகுமரனை விஞ்சையன் கொன்று விடுகிறான் ;  அதற்குக் காரணமானவள் என்று மணிமேகலை சிறையிடப்படுகிறாள் ;  பின் இராசமாதேவி அன்பு காட்டுபவள் போல் நடித்து வஞ்சிக்க தன்னுடன் மணிமேகலையை தங்க வைத்துக் கொள்கிறாள். மயக்க மருந்தூட்டுதல், காட்டுமிராண்டி இளைஞன் ஒருவனை தீங்கிழைக்க ஏவுதல், பொய்ந்நோய் சொல்லி புழுக்கறையில் அடைவித்தல் என மணிமேகலைக்கிழைக்கப்பட்ட ஒவ்வொரு இன்னலிலிருந்தும் துன்பமின்றி இருந்தாள். இராசமாதேவி வியந்து நிற்கையில் மணிமேகலை அவளுக்கு தான் முன்பிறவி பற்றிய ஞானம் கொண்டவள் என்பதை தெரிவிக்கிறாள்.

    “உடற்கழு தனையோ வுயிர்க்கழு தனையோ

    உடற்கழு தனையே லுன்மகன்  றன்னை

    எடுத்துப் புறங்காட் டிட்டனர்  யாரே

    உயிர்க்கழு தனையே லுயிர்புகும் புக்கில்

    செயப்பாட்டு வினையாற் றெரிந்துணர் வரியது

    அவ்வுயிர்க் கன்பினை யாயி னாய்தொடி

    எவ்வுயிர்க் காயினு மிரங்கல் வேண்டும்”       (23 : 74 – 79)

    அவள் வாழ்வில் அதுவரை நடந்தவற்றை இராணிக்குச் சொன்னாள். உதயகுமாரனுக்கும் தனக்கும் இருந்த முன்பிறவித் தொடர்பை விளக்கினாள். பஞ்ச சீலத்தை இராணிக்கு போதிக்கிறாள். செய்த தவற்றைப் பொறுக்க வேண்டும் என்று சொல்லி இராணி வணங்கினாள். மணிமேகலை அதைப் பொறுக்காமல் “என் கணவனின் தாயாக இருந்ததோடு மட்டுமல்லாமல் இத்தேசத்து மன்னனின் தேவியாகவும் நீங்கள் இருக்கிறீர்கள் ; எனவே என்னை நீங்கள் வணங்குதல் சரியாகாது” என்று சொல்கிறாள். (சிறை விடு காதை)

    மணிமேகலை இராசமாதேவியின் அரண்மனையில் இருக்கிறாள் என்று மாதவி கேள்விப்பட்டு, அவளும் சுதமதியும் அறவண அடிகளைச் சென்று அதைப் பற்றி சொல்கிறார்கள். அறவண அடிகள் இராசமாதேவியின் அரண்மனைக்குச் சென்று சந்திக்கிறார், மரியாதைகளுடன் அவரை வரவேற்ற இராணிக்கு வாழ்வின் நிலையாமையை விளக்கி பேதைமை முதலான பன்னிரு நிதானங்களை அறிவுறுத்தினார்.

    “தேவி கேளாய் செயதவ யாக்கையின்

    மேவினே னாயினும் வீழ்கதிர் போன்றேன்

    பிறந்தார் மூத்தார் பிணிநோ யுற்றார்

    இறந்தா ரென்கை யியல்பே யிதுகேள்

    பேதைமை செய்கை யுணர்வே யருவுரு

    வாயி லூறே நுகர்வே வேட்கை

    பற்றே பவமே தோற்றம் வினைப்பயன்

    இற்றென வகுத்த இயல்பீ ராறும்

    பிறந்தோ ரறியிற் பெரும்பே றரிகுவர்

    அறியா ராயி னாழ்நர கறிகுவர்”                             (24 : 101 – 110)

     

    அருகில் நின்றிருந்த மணி மேகலையிடம் “நீ பிற அறங்களைப் பற்றி அறிந்தவுடன் உனக்கு இதைப் பற்றி விளக்கமாக உரைப்பேன்” என்று சொல்கிறார்.

    அறவண அடிகள் விடை பெறும் சமயத்து அவரை வணங்கி மணிமேகலை அங்கு குழுமியிருந்த மாதவி, சுதமதி மற்றும் இராசமாதேவி ஆகியோரை நோக்கி “இச்சான்றோர் சொன்ன நன்மொழிகளை மறவாது அவர் கூறியவாறே ஒழுகுமின்; யான் இந்நகரிலிருப்பேனாயின் உதயகுமரன் மரணம் காரணமாக என்னைப் பற்றி தவறாகப் பேசுவர்; இனி நான் இங்கிருந்து செல்வதே சிறந்தது. இனி ஆபுத்திரனாடடைந்து பின்பு மணிபல்லவமடைந்து புத்தபீடிகையைத் தரிசனம் செய்து யாங்கணுஞ்சென்று நல்லறம் செய்து கொண்டிருப்பேன் ; எனக்கு இடரேற்படுமோ என்று நீங்கள் இரங்க வேண்டாம்” என்று சொன்னாள். அவர்களிடமிருந்து விடை பெற்று சூரியன் மறைந்த மாலைப் பொழுதில் சம்பாபதியையும் கந்திற்பாவையையும் துதித்து வணங்கி, மேக மார்க்கமாக பறந்து சென்று இந்திரனுடைய வழித்தோன்றலாகிய புண்ணியராசனது நகர்ப்புறத்திலுள்ள ஒரு பூஞ்சோலையில் இறங்கினாள். அங்கிருந்த முனிவனொருவனை வணங்கி “இந்நகரின் பெயர் யாது? இதனையாளும் அரசன் யார்?” என்று கேட்டாள். “இதன் பெயர் நாகபுரம். இதனையாள்பவன் பூமிசந்திரன் மகனாகிய புண்ணியராசன் என்பான். இவன் பிறந்த நாள் தொட்டு இந்நாட்டில் மழை பிழைத்தறியாது ; மண்ணும் மரங்களும் பல வளங்களை அளிக்கும் ; உயிர்களுக்கு ஒரு நோயும் இல்லை” என்று அம்முனிவன் அரசன் பெருமையைக் கூறினான்.

     

    உரை உதவி : மணிமேகலை – மூலமும் உரையும் – ந மு வேங்கடசாமி நாட்டார் & ஔவை சு துரைசாமிப் பிள்ளை

  • ஆபுத்திரன் – 2

    ஒரு நாள் ஆபுத்திரன் நள்ளிரவில் துயின்று கொண்டிருக்கையில் சிலர் அவனை எழுப்பி “வருத்தும் பெரும் பசி வயிற்றினை வாட்டுகிறது” என்று சொல்லித் தொழுதனர். அதனைக் கேட்ட ஆபுத்திரன் அவர்கள் பசியைப் போக்கும் வழியறியாமல் திகைத்தான். வருத்தமுற்றான். அக்கணம் அவன் தங்கியிருந்த கலை கோயிலில் குடி கொண்டுள்ள சிந்தா தேவி அவன் முன்னம் பிரசன்னமானாள். அவள் கையில் ஓர் அழகிய அட்சயப் பாத்திரம் இருந்தது. அதனை அவனிடம் கொடுத்து “இதனைக் கொள்க; நாடெல்லாம் வறுமை யுற்றாலும் இவ்வோடு வறுமையுறாது; எவ்வளவு கொடுப்பினும் இதில் உணவு குறையாதிருக்கும்” என்றுரைத்தாள். அதனைப் பெற்று ஆபுத்திரன் மகிழ்ச்சியுற்று சிந்தா தேவியைப் பரவிப் பணிந்தான்.

    “சிந்தா தேவி! செழுங்கலை நியமத்து

    நந்தா விளக்கே! நாமிசைப் பாவாய்!

    வானோர் தலைவி! மண்ணோர் முதல்வி

    ஏனோ ருற்ற இடர் களைவாயெனத்

    தான்தொழு தேத்தித் தலைவியை வணங்கி”                  (14 : 17-21)

    அன்று முதல் அவன் எல்லோருக்கும் உணவளிப்பவனானான். அவனை எந்நேரமும் மக்கள் சூழ்ந்திருந்தனர். விலங்குகளும் பறவைகளும் கூட அவனைப் பிரிவின்றி சூழலாயின. அவனின் அறத்தின் மிகுதி தேவராஜன் இந்திரனை பாதித்தது. அவன் வெண்ணிறக் கம்பளமாகிய இருக்கையை நடுங்கச் செய்தது. நடை தளர்ந்து கைத்தடியை ஊன்றிய முதிய பிராமணன் உருக்கொண்டு ஆபுத்திரன் முன் தோன்றினான். “நான் இந்திரன். உனைக் காண உன்முன் வந்தேன். நின் எண்ணம் யாது? உனது தானத்திலாகிய மிக்க பயனை கொள்வாயாக” என்றுரைத்தான். இந்திரன் சொன்னதைக் கேட்ட ஆபுத்திரன் விலாவெலும்பு ஒடியும் படி சிரித்தான்.

    “காணத்தக்க அழகின் சிறப்பினையுடைய நும் கடவுளர் இவ்வுலகிற் செய்த நல்வினையின் பயனை அவ்வுலகில் நுகர்ந்து கொண்டிருக்கிறார்கள். அறம் புரியும் எளிய மக்களைப் பாதுகாப்போர், நல்ல தவங்களைச் செய்வோர், பற்றுகளைக் களையும் முயற்சியில் ஈடுபடுவோர் ஆகியோர் யாரும் இல்லாத விண்ணோருலகின் தலைவனே! வருந்தி வந்தோருடைய அரும்பசியைப் போக்கி அவர் தம் இனிய முகத்தைக் காணுமாறு செய்யும் என் தெய்வக் கடிஞை (பாத்திரம்) ஒன்றே போதும் ; நின்பாற் பெறத்தக்கது ஏதும் இல்லை” என்று இந்திரனை மதியாதுரைத்தான்.

    “ஈண்டுச் செய்வினை ஆண்டுநுகர்ந் திருத்தல்

    காண்தகு சிறப்பின்நும் கடவுள ரல்லது

    அறஞ்செய் மாக்கள் புறங்காத் தோம்புநர்

    நற்றவஞ் செய்வோர் பற்றற முயல்வோர்

    யாவரும் இல்லாத் தேவர்நன் னாட்டுக்

    கிறைவன் ஆகிய பெருவிறல் வேந்தே

    வருந்தி வந்தோர் அரும்பசி களைந்தவர்

    திருந்துமுகங் காட்டுமென் தெய்வக் கடிஞை

    உண்டி கொல்லோ உடுப்பன கொல்லோ

    பெண்டிர் கொல்லோ பேணுநர் கொல்லோ

    யாவையீங் களிப்பன தேவர்கோன்…..”              (14 : 40-48)

    ஆபுத்திரன் சொன்னதைக் கேட்டதும் இந்திரன் வெகுண்டான் ; உலகில் பசித்தோரே இல்லையெனும் படிச் செய்வேன் என்று நினைத்துக் கொண்டான். எங்கும் மழை பெய்வித்து வளங்கொழிக்கச் செய்தான். அதனால் பசித்தோர் இல்லாதராயினர்.

    ஆபுத்திரன் மதுரையிலிருந்து நீங்கி பசித்தோரைத் தேடி அலையலானான். ஊர்ஊராகச் சென்று “உண்போர் யாரேனும் உண்டா?” என்று வினவினான். அதைக் கேட்டவர்கள் எல்லாம் செல்வக் களிப்பால் அவனை இகழ்ந்தனர். மற்றவர் உண்ண பெரும் ஆவல் கொண்ட ஆபுத்திரனை தேடுபவர் யாருமில்லாததால் தனியனாய்த் திரிந்தான். மரக்கலத்தில் இருந்து திரும்பிய சிலர் “சாவக நாட்டில் மழையின்மை காரணமாக உணவின்றிப் பலர் மடிகின்றனர்” என்று சொல்கின்றனர்.  இந்திரன் ஆணையினால் உண்போரைப் பெறாமல், கன்னியாகவே காலங் கழித்த குமரிப் பெண் மாதிரி பயனற்றுப் போன கடிஞையை ஏந்திக் கொண்டு சாவகம் செல்வதென தீர்மானித்தான் ஆபுத்திரன். காற்று மிகுத்து கடலின் கலக்கத்தால் பாயை மணிபல்லவத் தீவில் இறக்கி கப்பல் ஒரு நாள் தங்கியது. ஆபுத்திரன் அங்கு இறங்கினான். இறங்கிய ஆபுத்திரன் மீண்டும் கப்பலில் ஏறினான் என்று நினைத்து அன்றிரவே பாய் உயர்த்தி கலம் கடலில் சென்றது. மரக்கலம் சென்ற பின்னர் ஆபுத்திரன் மிக்க துன்பத்தையடைந்தான். மணி பல்லவத்தில் வாழ்பவர்கள் ஒருவரும் இல்லாமையால் பல்லுயிரைப் பாதுகாக்கும் பெருமை பொருந்திய இந்த பாத்திரத்தை வறிதே வைத்துக் கொண்டு என் உயிரைக் காப்பதை யான் பொறுக்கிலேன் ; இப்பாத்திரத்தைப் பெற்றுப் பல உயிர்களைக் காக்குமாறு முற்பிறவியில் செய்த தவம் என்னை நீங்கியதால் ஒப்பற்ற துயரில் வீழலுற்றேன்.ஏற்போர் இல்லாத இவ்விடத்தில் இப்பாத்திரத்தை யான் சுமத்தலால் விளையும் பயன் யாது என்றெண்ணியவனாய் கடிஞையை வணங்கி “ஒராண்டுக்கு ஒருமுறை வெளிவருவாயாக” என்று சொல்லி கோமுகி என்னும் பொய்கையில் விட்டான். அருளறத்தை மேற்கொண்டு உயிர்களைப் பாதுகாப்போர் உளராயின் அவர் கைகளுக்குச் செல்லட்டும் என்று கூறி உண்ணா நோன்பிருந்து உயிர் துறப்பானாயினன். அப்போது அங்கு சென்ற நான் (அறவண அடிகள்) “நீ யாது துன்பமுற்றனை?” என்று கேட்டேன். அவன் நிகழ்ந்தவற்றையெல்லாம் எனக்குச் சொல்லிவிட்டு, மணிபல்லவத்துல் உயிர் விட்டு பல்லுயிர்களைப் பாதுகாக்கும் எண்ணத்துடன் சாவக நாட்டரசனின் பசுவின் வயிற்றில் உதித்தான்.

     

    “குணதிசைத் தோன்றிக் காரிருள் சீத்துக்

    குடதிசைச் சென்ற ஞாயிறு போல

    மணிபல் லவத்திடை மன்னுடம் பிட்டுத்

    தணியா மன்னுயிர் தாங்குங் கருத்தொடு

    சாவக மாளுந் தலைத்தாள் வேந்தன்

    ஆவயிற் றுதித்தனன்……”                     (14 : 99-104)

     

    (பாத்திர மரபு கூறிய காதை)

     

    உரை உதவி : மணிமேகலை – மூலமும் உரையும் – ந மு வேங்கடசாமி நாட்டார் & ஔவை சு துரைசாமிப் பிள்ளை

  • ஆபுத்திரன் – 1

    வாரணாசி வாழ் அந்தணன் ஒருவனின் ஒழுக்கங் கெட்ட மனைவி சூல் கொண்டு பிழைக்கு பயந்து தென் திசை குமரி நோக்கிப் பயணமானாள். வழியில் மகவொன்றை ஈன்று இரக்கமின்றி பெற்ற இடத்திலேயே போட்டு விட்டுச் சென்றாள். அழுத குழந்தைக்கு பசுவொன்று ஏழு நாட்கள் வரை பால் சொறிந்து காத்தது. பூதி என்னும் பார்ப்பனன் ஒருவன் குழந்தையை கண்டெடுத்து வீட்டுக் எடுத்துச் சென்றான். குழந்தைப் பேறிலாத பூதி தம்பதியர் அளவிலா உவகை கொண்டனர். குழந்தைக்கு ஆபூத்திரன் என்று பெயரிடப்பட்டது. பூதியின் வீட்டில் வளர்ந்த ஆபுத்திரன் மறைகள் கற்று அந்தணர்க்கு பொருந்துவன அனைத்தும் கற்று தேர்ந்தான்.

    ஒரு நாள் ஒரு மறையவன் வீட்டினுள் சென்றவன் ஊனுண்ணுதலைக் கருதுகின்ற வேள்விச்சாலையில் பசுவின் கொம்பின் கண் சுற்றப்பட்டு மூச்செறிந்துகொண்டிருந்ததைப் பார்க்க நேரிடுகிறது. பசு படும் துயரைப் பார்க்க அவனால் முடியவில்லை. இரவு வரும் வரை காத்திருந்து பிறகு திருட்டுத் தனமாக வேள்விச்சாலைக்குள் நுழைந்து பசுவை விடுவிக்கையில் அவன் கையும் களவுமாகப் பிடிபட்டு விடுகிறான். பசுவை அவன் திருட விழைந்தானென்றெண்ணி ஜனங்கள் அவனை நையப்புடைத்துவிடுகின்றனர். அவன் எவ்வளவு அரற்றியும் அவன் சொன்னதை கேட்டார்களில்லை.

    இதற்கு நடுவில் ஆபுத்திரன் விடுவித்த பசுவானது அங்கு நின்றிருந்த பார்ப்பனத்தி ஒருத்தியை முட்டி மோதி தாக்கி, பின்னர் காடு நோக்கி விரைந்தோடியது.

    ஆபுத்திரன் அங்கு நின்றிருப்போரிடம் கூறலானான் :

    “நோவன செய்யன்மின் நொடிவன கேண்மின்

    விடுநில மருங்கின் மக்கட் கெல்லாம்

    பிறந்தநாள் தொட்டும் சிறந்ததன் தீம்பால்

    அறந்தரு நெஞ்சோ டருள்சுரந் தூட்டும்

    இதனோடு வந்த செற்றம் என்னை”        (13 : 50-55)

    ஆபுத்திரன் சொன்னதைக் கேட்டதும் அவர்கள் “நீ வேத விதியை அறியாமல் வேள்வியை இகழ்கின்றாய் ; எனவே பசுவின் மகனாக இருப்பதற்கு நீ பொருத்தமானவனே” என்று இகழ்ந்துரைக்கிறார்கள். மனம் தளராமல் ஆபுத்திரன் மேலும் உரைக்கிறான் :

    “ஆன்மகன் அசலன்; மான்மகன் சிருங்கி

    புலிமகன் விரிஞ்சி; புரையோர் போற்றும்

    நரிமகன் அல்லனோ கேச கம்பளன்?

    ஈங்கிவர் நுங்குலத்து இருடி கணங்களென்று

    ஓங்குயர் பெருஞ்சிறப் புரைத்தலும் உண்டால்

    ஆவொடு வந்த அழிகுலம் உண்டோ?”   (13 : 63-68)

    நின்றிருந்த சனங்கள் ஆபுத்திரன் சொல்வதை பொருட்படுத்தாமல் இகழ்ந்த வண்ணம் இருக்கிறார்கள். அம்மறையவர்களுள் ஒருவன் “இவனின் குடிப்பிறப்பை நானறிவேன்” என்று ஆபுத்திரனின் கதையை எடுத்துரைக்கிறான். அவன் குமரிக்கரைக்கு சென்ற போது அங்கு சந்தித்த சாலி என்ற பெண்ணைப் பற்றி சொல்லலானான்.

    சாலி வாரணாசியில் தன் கணவனுடன் வாழ்ந்து வந்தாள். அந்தணர்க்குத் தகாத இயல்புடன் ஒழுகி காவலின் எல்லையைக் கடந்து கணவனை அவமதித்தாள். அச்சமுடைமையால் கெடுதலுற்ற மக்களுடன் தென் திசைக் குமரியில் நீராடும் பொருட்டு பயணமானாள். பொன் தேரினை உடைய பாண்டியனது கொற்கை நகரத்தில் ஆயர்களுடைய இருப்பிடத்தில் ஈன்ற சிறு குழவிக்கு இரங்காமல் கண் காணாத தோட்டத்தில் போட்டு விட்டு வந்ததாக தன் கதையை சாலி சொன்னதாக அவ்வந்தணன் சொன்னான். “இவ்வித தீவினை புரிந்த எனக்கு மோட்சமுண்டா?” என்று துன்பமுற்று அழுத சாலியின் மகன் தான் ஆபுத்திரன் என்றும் அவன் தீண்டத் தகாதவன் என்றும் அறிவித்தான்.

    ஆபுத்திரன் அதனைக் கேட்ட பின்னர் பெரிதாகச் சிரித்தான். “பெரிய மறையுணர்ந்த அந்தணர்கள் வந்த மரபினைச் சொல்கிறேன். கேளுங்கள். பழமறை முதல்வனான பிரமனுக்கு தெய்வக் கணிகையாகிய திலோத்தமையினிடமாக முன்பு தோன்றிய காதற் சிறுவரல்லரோ அரிய மறை முனிவர்களாகிய அந்தணர் இருவரும் (வசிட்டன் மற்றும் அகத்தியன்). இது இங்ஙனமிருக்க சாலி செய்தது எங்ஙனம் தவறாகும்?” என்று நான்மறை அந்தணரைப் பார்த்து மேலும் சிரிக்கலானான்.

    தந்தையாகிய பூதியும் ஆபுத்திரனை தன் வீட்டிலிருந்து நீக்கினான். பசுவைக் கவர்ந்த திருடன் எனும் பட்டம் அவனுக்கு முன்னால் அவன் செல்லும் கிராமத்தில் எல்லாம் பரவியிருந்தது. அவன் நீட்டிய பிச்சைப் பாத்திரத்தில் கற்களே விழுந்தன. பெருஞ் செல்வர் வாழும், தெற்கின் கண் இருக்கும் மதுரையைச் சென்றடைந்தான். சிந்தாதேவியின் அழகிய கோயில் வாயிலிலுள்ள அம்பலப் பீடிகையில் தங்கியிருந்தான்.

    மதுரை மாநகரில் பிச்சைப் பாத்திரத்தை ஏந்தி, வீதிகளெல்லாம் அலைந்து, பணக்காரர்களின் மாடங்களெல்லாம் திரிந்து, கண் பார்வையற்றோர், காது கேளாதோர், முடவர், பாதுகாப்பற்றோர், நோயால் துன்புறுவோர் ஆகிய அனைவரையும் அழைத்து ஒருங்கு உண்ணச் செய்து, பின் மிஞ்சியதை தான் உண்டும், பிச்சைப் பாத்திரத்தையே தலையணையாக வைத்து உறங்கியும் வாழ்ந்து வந்தான் ஆபுத்திரன்.

     

    (ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை)

     

    உரை உதவி : மணிமேகலை – மூலமும் உரையும் – ந மு வேங்கடசாமி நாட்டார் & ஔவை சு துரைசாமிப் பிள்ளை

     

  • நினைவூட்டி

    SONY DSC

    ஞாபகார்த்த இலை
    காணாமல் போனது
    மரத்திலிருந்து விடுபட்ட
    இலையிடமிருந்து நீ பாடம் கற்கவில்லை
    புத்தகப்பக்கங்களுக்கு நடுவில்
    சிறைப்படுத்தி வைத்திருந்தாய்
    புத்தகயாவின்
    புனித மரத்தின் இலையது
    என்பதை மறந்து போனாயா?

  • புத்தரும் ராவணனும் – பகுதி 1

    lankavatara1

    ராமாயணத்தில் வரும் ராவணன் சிவ பெருமானை வணங்கினான். லங்காவதார சூத்திரத்தின் முதல் அத்தியாயத்தில் வரும் ராவணன் பிரபஞ்ச புத்தரை வணங்குகிறான்; நீண்டதோர் உரையாடலும் நிகழ்த்துகிறான். ராமாயணத்தின் ராவணன் லங்காவதார சூத்திரத்தில் நுழைந்தது எப்படி?

    அதற்கு முன்னால் லங்காவதார சூத்திரம் பற்றிய ஒரு சிறு அறிமுகம்! சீனாவிலும் ஜப்பானிலும் பல நூற்றாண்டுகளாக முதன்மைப் படுத்தப்பட்ட மகாயான பௌத்த நூல் – லங்காவதார சூத்திரம். மகாயான பௌத்தத்தின் முக்கிய கோட்பாடுகளான மனம்-மட்டும், ததாகத கர்ப்பம் மற்றும் ஆலயவிஞ்ஞானம் போன்றவைகளை விரிவாக விளக்கும் நூல். “மொழியைக் கடந்து செல் ; சிந்தனையை தாண்டிச் செல்” என்று சொன்ன போதிசத்துவர் போதி தர்மர் தன் வாழ்நாளில் தன்னுடன் வைத்திருந்த ஒரே நூல் – லங்காவதார சூத்திரம் மட்டுமே ; தன்னுடைய வஸ்திரம், பிச்சைப் பாத்திரம் – இவற்றுடன் லங்காவதார சூத்திரம் நூலையும் போதி தர்மர் தன் சீடர் ஹுய்க்க (Huike) –வுக்கு கொடுத்தார் என்பது தொன்மச் செய்தி. எண்ணற்ற மகாயான பௌத்த நூல்களைப் போலவே இதை இயற்றிய மூலநூலாசிரியர் யார்? எப்போது எழுதப்பட்டது? என்ற விவரங்கள் தெரியாது.

    ”லங்காவதார” என்பதன் சொற்பூர்வ அர்த்தம் “இலங்கைக்கு நுழைதல்” என்பதாகும். புத்தர் இலங்கை சென்ற போது இந்த சூத்திரத்தை வெளிப்படுத்தியிருக்கலாம் என்று எண்ண இடமிருக்கிறது. இலங்கை சென்றவர் வரலாற்று புத்தர் என்று சொல்ல முடியாது. ஆனால் பிரபஞ்ச புத்தர் எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாமே? பிரபஞ்ச புத்தருக்கும் இலங்கையில் குழுமியிருந்த போதிசத்துவர்களின் தலைவராக இருக்கும் மகாமதி என்கிற போதிசத்துவருக்குமிடையில் நிகழும் உரையாடலாக இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. மற்றொரு மகாயான நூலான அவதாம்ஸக சூத்திரத்தில் பிரபஞ்ச புத்தர் தன் உரையை ஒரு தொன்ம லோகத்தில் நிகழ்த்துவார். ராட்சஸர்களின் தலைவனாக உருவகப்படுத்தப்படும் ராவணனுடனான சம்பாஷணை என்றாலும் அது இலங்கையில் நடக்கிறது என்று சொன்ன படியால் லங்காவதார சூத்திரத்துக்கு ஒரு பூலோக பரிமாணம் கிடைத்து விடுகிறது.

    வடமொழியில் இயற்றப்பட்ட இந்த சூத்திரத்தை இந்தியாவிலிருந்து சீனாவுக்குச் சென்ற பௌத்த அறிஞர்கள் வெவ்வேறு கால கட்டத்தில் சீன மொழியில் தந்திருக்கின்றனர். தற்போது கிடைக்கும் பதிப்புகளில் குணபத்ரரின் மொழிபெயர்ப்பு தான் காலத்தால் முந்தியது.

    லங்காவதார சூத்திரத்தின் முதல் மொழிபெயர்ப்பு கி..பி 420க்கும் கி பி 430க்கும் இடைப்பட்ட காலத்தில் தர்மரக்‌ஷர் என்பவரால் செய்யப்பட்டது. ; இரண்டாம் மொழிபெயர்ப்பு ஏறத்தாழ இருபது வருடங்களுக்கு பிறகு நிகழ்ந்திருக்கிறது. இதைச் செய்தவர் குணபத்ரர். மூன்றாவது மொழிபெயர்ப்பு வெளிவர மேலும் நூறு ஆண்டுகள் பிடித்தன. மொழிபெயர்ப்பாளர் போதிருசி. கடைசி மற்றும் நான்காவது மொழிபெயர்ப்பு சிக்ஷானந்தா என்பவரால் எட்டாம் நூற்றாண்டில் செய்யப்பட்டது. முதல் மொழிபெயர்ப்புக்கும் கடைசிக்கும் கிட்டத்தட்ட முன்னூறாண்டுகள் இடைவெளி.

    தர்மரக்‌ஷரின் மொழிபெயர்ப்பு காலப்போக்கில் அழிந்துவிட்டது ; நமக்கு கிடைக்கவில்லை.

    திபெத்திய மொழியிலும் இரண்டு மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன. வெவ்வேறு மொழிபெயர்ப்புகளை ஆய்ந்து, 1923-இல் ஜப்பானிய சமஸ்கிருத மொழி வல்லுனரும் பௌத்த பிரசாரகருமான புன்யூ நான்ஜோ அவர்களால் அச்சிடப்பட்ட வடமொழி பிரதியுடன் ஒப்பு நோக்கிய பின் பேராசிரியர் சுஸுகி பின் வரும் முடிவுகளுக்கு வருகிறார் (1) குணபத்ரரின் பதிப்பு மற்ற பதிப்புகளை விட சுருக்கமானதும் எளிமையானதுமாகும் (2) சமஸ்கிருத வடிவத்தின் அத்தியாயப் பிரிவுகளோடு சிக்‌ஷானந்தரின் மொழிபெயர்ப்பு மற்றும் திபெத்திய மொழிபெயர்ப்புகள் ஒத்துப் போக்கின்றன. (3) போதிருசியின் புத்தகத்தில் அத்தியாயங்களின் எண்ணிக்கை அதிகம் ; மூலத்தின் பெரிய அத்தியாயங்களை சிறு சிறு பிரிவுகளாக பிரித்து எழுதியிருக்கிறார். (4) குணபத்ரரின் பதிப்பில் அத்தியாயப் பிரிவுகளே இல்லை.

    குணபத்ரரின் மொழிபெயர்ப்பு மிகவும் பழமையானது. குணபத்ரருக்கும் போதிருசிக்கும் இடையிலான நூறாண்டு இடைவெளியில் மூன்று உதிரி அத்தியாயங்கள் பிற்காலத்திய மொழிபெயர்ப்புகளில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் இலங்கை மன்னன் ராவணன் பிரபஞ்ச புத்தரை சந்திப்பதும், அகவெளியின் சத்தியத்தை விரித்துரைக்கச் சொல்லி கேட்பதும். “லங்காவதார சூத்திரத்தின் விரிவாக்கத்துக்கான மேலோட்டமான முகவுரையாக கருதப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் இந்த அத்தியாயம் இணைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இது பின்னர் இணைக்கப்பட்டது தான் எனபதில் சந்தேகமில்லை” என்று பேராசிரியர் சுஸூகி கருதுகிறார்.

    ராம-ராவண கதை கி.பி மூன்றாம் அல்லது நான்காம் நூற்றாண்டுகளில் திட்டவட்டமான காவிய வடிவத்தை எய்தியிருக்கக் கூடும் என்று வரலாற்றறிஞர்கள் சொல்கின்றனர். பிற்கால மகாயான பௌத்தர்கள் லங்காவதார சூத்திரத்துக்கு ஓரு ராமாயண இணைப்பு கொடுத்து விட வேண்டும் என்ற விழைவில் ராவண – பிரபஞ்ச புத்தர் சந்திப்பை முன்னுரையாக சேர்த்திருக்கக் கூடும். “குணபத்ரரின் மொழிபெயர்ப்பை வாசிக்கையில் ராவண நிகழ்வின் இடைச்செருகல் சூத்திரத்தை புரிந்து கொள்வதில் எந்த சிறப்பு உதவியையும் ஆற்றவில்லை என்பது தெளிவாகும்” என்கிறார் சுஸுகி.

    +++++

    Nanjio

    நான் கேள்விப்பட்டது. பெருங்கடலின் மத்தியில் அமைந்த மலாய மலைச் சிகரத்தின் உச்சியில் இருந்த இலங்கைக் கோட்டையில் ஆசிர்வதிக்கப்பட்டவர் தங்கியிருந்தார். ஆபரணங்களால் செய்யப்பட்ட மலர்களால் அம்மாளிகை அலங்கரிக்கப்பட்டிருந்தது. பிக்‌ஷுக்களும், திரளான போதிசத்துவர்களும் அவரைச் சூழ்ந்திருந்தனர். அவர்களெல்லோரும் வெவ்வேறு புத்த நிலங்களிலிருந்து அங்கு வந்து சேர்ந்திருந்தனர். மகாமதி போதுசத்துவரின் தலைமையில் அங்கு கூடியிருந்த போதிசத்துவர்கள்-மகாசத்துவர்கள் பல்வேறு சமாதி நிலைகளின் வித்தகர்கள்; பத்து வித சுய-தேர்ச்சிகள், பத்து ஆற்றல்கள், ஆறு வித மனோ சித்திகள் – இவைகள் கை வரப் பெற்றவர்கள். மனதின் நீட்சியாகவே புறவுலகம் இருக்கிறது என்ற உண்மையின் மகத்துவத்தை அறிந்தவர்கள். வெவ்வேறு உயிர்களின் மனபோக்கை, நடத்தையைப் பொறுத்து வடிவம், போதனை மற்றும் ஒழுக்க நெறிமுறைகளை எப்படி கட்டுப்படுத்துவது என்று புரிந்தவர்கள். ஐந்து தர்மங்கள், மூன்று சுபாவங்கள், எட்டு விஞ்ஞானங்கள் மற்றும் இருவகை அனாத்மங்கள் – இவை பற்றி முழுமையாக உணர்ந்தவர்கள்.

    கடல்-நாகங்களின் அரசனுடைய அரண்மனையில் போதனை செய்து விட்டு ஏழு நாட்களின் முடிவில் ஆசீர்வதிக்கப்பட்டவர். திரும்பியிருந்தார். சக்கரர்களும், பிரம்மனும், நாக கன்னிகைகளும் அவரை வரவேற்றனர். மலாய மலையின் மேலிருந்த லங்கா மாளிகையை நோக்கிய படி சிரித்தவாறே அவர் சொன்னார் “இறந்த காலத்தில் அருகர்களாகவும், முழு நிர்வாண நிலை அடைந்தவர்களாகவும் இருந்த புத்தர்களால், மலாய மலைச்சிகர உச்சியில் இருக்கும் இலங்கைக் கோட்டையில் தர்மம் எனும் உண்மை அவர்களுடைய உரையாடலின் கருப்பொருளானது – உயரிய ஞானத்தை அடைதல் வாயிலாக உள்ளார்ந்த சுயத்தில் மட்டுமே புரிந்து கொள்ளத்தக்க உண்மை அது ; தத்துவம் பேசும் தத்துவாசிரியர்களாலோ, ஸ்ராவகர்கள் மற்றும் பிரத்யேகபுத்தர்களின் பிரக்ஞை வாயிலாக கற்பனை செய்து பார்க்கவோ இயலாத உண்மை. யக்‌ஷர்களின் எஜமானனான ராவணனுக்காக நானும் அங்கு இருப்பேன்”

    ததாகதரின் ஆன்மீக ஆற்றலால் அருளப்பெற்று, ராவணன், ராட்சசர்களின் தலைவன், அவரின் குரலையும் சிந்தனையையும் செவி மடுத்தான். “ஆசீர்வதிக்கப்பட்டவர் கடல் நாகங்களுடைய அரசனின் அரண்மனையை விட்டு, சக்கரர்கள், பிரம்மன் மற்றும் நாககன்னிகைகள் புடைசூழ, கடலின் மேலோடும் அலைகளை நோக்கியவாறு, கூடியிருப்போரின் மன அதிர்வுகளை புரிந்தவாறு, பொதுநிலையால் தூண்டப்பட்ட விஞ்ஞானங்கள் உட்கலக்கும் ஆலய விஞ்ஞானம் பற்றி சிந்தித்தவாறு வெளியே வருகிறார்.” அங்கு நின்ற ராவணன் சொன்னான் “நான் சென்று ஆசீர்வதிக்கப்பட்டவரை இலங்கைக்குள் வருமாறு கேட்டுக் கொள்வேன் ; அது (அவரின் வருகை) இந்த நீண்ட இரவில் லாபம் ஈந்து, நனமையை அருளி, கடவுளரின் மற்றும் மனிதர்களை மகிழ்ச்சிப்படுத்தும்”

    தன் பணியாளர்களை அழைத்துக்கொண்டு ராவணன் புஷ்பக விமானமேறி ஆசிர்வதிக்கப்பட்டவர் வந்திருந்த இடத்துக்கு வந்தடைந்தான். அவனின் பிரஜைகள் ஆசீர்வதிக்கப்பட்டவரை இடமிருந்த வலமாக சுற்றி வந்தனர். நீலக்கல் பதிக்கப்பட்ட பிரம்பை வைத்து ஓர் இசைக்கருவியை மீட்டத் தொடங்கினர். சஹர்ஷயம், ரிஷபம், காந்தாரம், தைவதம், நிஷாதம், மத்யமம் மற்றும் கைசிகம் முதலிய இசைக்குறிப்புகளை வாசித்தனர். சரியான கணக்கில் பாடும் குரல் சேர்ந்திசைக்கும் குழலோடு இழைந்து ஒலித்தது.

    ”சுய இயல்பு கற்பிக்கப்பட்ட மனம் எனும் கொள்கையுள்ள உண்மைப் புதையல் சுயத்தன்மையற்றது ; தர்க்கத்தினின்று தள்ளி நிற்பது ; அசுத்தங்களில்லாதது ; அது ஒருவனின் உள்ளார்ந்த உணர்வில் அடைந்த ஞானத்தை குறிக்கிறது. ஓ பிரபுவே, நீர் இங்கு எனக்கு இங்கே உண்மையை அடையும் வழியைக் காட்டுவீராக”

    “பல வடிவங்களுக்கு சொந்தக்காரர்களான புத்திரர்களோடு இறந்த கால புத்தர்கள் பலர் இலங்கையில் வாழ்ந்திருக்கின்றனர். ஓ பிரபு! உயரிய ஞானத்தை எனக்கு போதிப்பீராக ; பல்வேறு உருவம் படைத்த யக்‌ஷர்களும் அதைக் கேட்கட்டும்”

    பாடலின் யாப்பு சிதறாது ராவணன் ராகத்தோடு பாடினான்.

    ததாகதருக்கு உரிய காணிக்கைகளை சமர்ப்பித்து விட்டு, மரியாதையுடன் பேசலானான் ராவணன்

    “இங்கு வந்திருக்கும் என் பெயர் ராவணன், ராட்சசர்களின், பத்து தலை கொண்ட தலைவன்.

    மதிப்பு வாய்ந்த கற்கள் பதிக்கப்பட்ட இச்சிகரத்தின் உச்சியில் இறந்த காலத்தில் முழுமையான ஞானம் அடைந்தவர்களால் உள்ளார்ந்த பிரக்ஞை மிக்க முழுமையாக ஞானமானது உணர்த்தப்பட்டது.

    சீடர்களால் சூழப்பட்ட ஆசிர்வதிக்கப்பட்டவர் இப்போது அதே ஞானத்தை இலங்கையில் இருக்கும் எங்களுக்கு போதித்தருள வேண்டும்.

    இறந்த கால புத்தர்களால் புகழப்பட்ட லங்காவதார சூத்திரம் எந்தவொரு குறிப்பிட்ட தத்துவக் கோட்பாட்டு முறையைச் சாராமல் இருப்பதால், உள்ளார்ந்த பிரக்ஞை நிலையை தெளிவுற அறிவிக்கிறது.

    இறந்த கால புத்தர்கள் வெற்றி பெற்றவரின் மக்கள் புடை சூழ இச்சூத்திரத்தை ஓதுவதை நான் கேட்டிருக்கிறேன். ஆசிர்வதிக்கப்பட்டவரும் இப்போது அதைப் பேசுவார்.

    வருங்காலத்தில் புத்தர்களும், புத்த-மக்களும் யக்‌ஷர்களிடம் கருணை கொள்வார்கள் ; ஈடிணையற்ற இக்கோட்பாட்டைப் பற்றி இரத்தினக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட இம்மலையின் உச்சியில் நின்று தலைவர்கள் போதிப்பார்கள்.

    ஆசிர்வதிக்கப்பட்டவரே ! பேராசை எனும் குறையிலிருந்து விடுபட்டுவிட்ட இங்கிருக்கும் யக்‌ஷர்கள் உள்நிறை பிரக்ஞையைத் தெளிந்து விட்டார்கள் ; இறந்த புத்தர்களுக்கு காணிக்கையிடுகிறார்கள். ; அவர்கள் மகாயான போதனையில் நம்பிக்கையுடையவர்கள் ; ஒருவருக்கொருவரை ஒழுக்கப்படுத்திக் கொள்ளும் நோக்கம் கொண்டவர்கள்.

    மகாயானம் பற்றி அறியும் ஆர்வமிக்க இளம் யக்‌ஷர்களும், ஆடவரும், பெண்களும் இங்கிருக்கிறார்கள். ஆசீர்வதிக்கப்பட்டவரே! வாரும்! நீங்கள் எம் ஆசான்! மலாய மலையின் மேலிருக்கும் இலங்கைக்கு வாருங்கள்.

    கும்பகர்ணனின் தலைமையில் இந்நகரில் வசிக்கும் ராட்சசர்கள் மகாயானத்தின் மேலுள்ள அர்ப்பணிப்பால், உங்களிடமிருந்து உட்கருத்து உணர்தலைப் பற்றி அறிய ஆவலாய் உள்ளனர்.

    ஓ முனிவரே! என் மாளிகையை ஏற்றுக் கொள்ளுங்கள், அப்சரஸ் நங்கைகளின் துணையையும், பல்வித அணிநகைகளையும் மற்றும் உல்லாச மிகு அசோக வனத்தயையும் கூட ஏற்றுக் கொள்ளுங்கள்.

    “புத்தர்களுக்கு சேவை செய்ய நான் என்னையே அர்ப்பணித்துக் கொள்வேன்.. அவர்களுக்கு விட்டுக் கொடுக்கத் தயங்கும் எதுவும் என்னிடம் இல்லை. ஓ மாமுனியே! என்னிடம் இரங்குவீராக

    அவன் இவ்வாறு பேசுவதைக் கேட்ட மூவுலகின் பிரபு சொன்னார் “யக்‌ஷர்களின் அரசே! இரத்தினக்கற்கள் பதித்த இம்மலைக்கு இறந்த காலத் தலைவர்கள் பலர் விஜயம் புரிந்திருக்கின்றனர்.

    உன் மேல் கருணை மிகுத்து அவர்களின் உள்நிறை ஞானத்தைப் பற்றி உரையாடியிருக்கிறார்கள். வருங்கால புத்தர்களும் அதே ஞானத்தை மீண்டும் பிரகடனப்படுத்துவார்கள்.

    உண்மைக்கருகில் நிற்கும் பயிற்சியாளர்களுக்குள்ளே உறையும் உள்ளார்ந்த ஞானம். யக்‌ஷர்களின் ராஜனே! என்னிலும் சுகதாவிலும் இருக்கும் இரக்ககுணம் உன்னுள்ளிலும் இருக்கிறது”

    ராவணனின் அழைப்பை ஏற்று, ஆசீர்வதிக்கப்பட்டவர் அமைதியாகவும் குழப்பமில்லாமலும் இருந்தார். ராவணனின் புஷ்பக விமானத்தில் ஏறிக்கொண்டார்.

    இன்ப நகரத்தை அடைந்ததும் புத்தருக்கு மீண்டும் மரியாதைகள் செய்யப்பட்டன ; ராவணன் அடங்கிய யக்‌ஷர்களின் குழுவொன்றும், யக்‌ஷிகளின் குழுவொன்றும் அவருக்கு மரியாதை செய்தன.

    —- (to be continued)

    Source : (1) Studies in the Lankavatara Sutra – D T Suzuki (2) The Lankavatara Sutra – Volume one – Edited by Bunyiu Nanjio

    DTSuzuki