பட்டுப்போன மரமொன்று
பரம சிவன் போல் தெரிந்தது
உயரமான மரத்தின்
இரு புறத்திலும்
இரு கரங்களென
பெருங்கிளைகள்
மேல் நோக்கி வளைந்த
இடப்புற கிளையின்
இறுதியில் பிரிந்துயர்ந்திருக்கும்
திரிசூலக் கிளைகள்
முன் நோக்கி வளைந்து
கண்ணில் படா தண்டத்தின் பிரிவில்
தொங்கும் கையென
வலப்புறக் கிளை
தண்டின் உச்சியில்
உருண்டைச் சிரத்தை நினைவு படுத்தும்
கொத்தான கிளைகள்
பறவைகள் காலி செய்துவிட்டுப் போன
கூடுகள்
சிரப்பாகத்திற்குக் கீழ்
சுற்றியிருந்தது ஒரு கொம்பு வீரியன்
சிவனே என்று
இருந்த மரத்தின் தலையில்
ஆகாய கங்கை வந்தமர்ந்து
கூடுகளில்
நீர் நிரம்பி வழிந்து
வேர்களை ஈரப்படுத்தவும்….
மரமெங்கும்
இலைகள் துளிர்த்தன
சிவனுருவை இழந்தது சிவமரம்
மரத்தடியில்
யானை வடிவத்தில்
கல்லொன்று முளைத்தது
அழகு மயிலொன்று
அன்றாடம் புழங்கியது
புதருக்குள்
குடிபெயர்ந்த கொம்பு வீரியன்
மறைவில் நின்று
தினமும் மயிலை பார்த்தது
Author: Ganesh Venkatraman
-
சிவமரம்
-
ஆகாசஜன்

மகாப்பிரளயத்தில் எல்லாரும் அழிந்துவிட்டனர்
கொல்லாமல் விடப்பட்ட ஜீவர்களைத்தேடி
ஒருவர் விடாமல் அழித்து வந்தான் மிருத்யூ.
அவன் பாசக்கயிறிட்டு
எல்லாரையும் அழித்துவிட்டான்.
ஒரே ஒருவனைத் தவிர,
“பிரம்ம”ப்பிரயத்தனம் செய்தும் முடியவில்லை.
எஜமானன் எமன் முன்னர் சென்று முறையிட்டான்.
“எல்லோரையும் நீ
அழித்துவிட இயலாது.
ஜீவர்களின் கருமங்களை நீ அறிந்தால் மட்டுமே
அவர்களின் ஆயுட்காலத்தை நீ அறியமுடியும்”
என்றான் எமன்.
சாகாமல் எஞ்சியிருந்தவனின்
கருமங்களைத் தேடி பிரபஞ்சமெங்கும்
தேடி அலைந்தான் மிருத்யூ
எஞ்சிய கருமங்கள்
ஏதும் இருப்பதாக தெரியவில்லை.
வெறும் கையுடன்
எமனிடம் திரும்பினான் மிருத்யூ
“அந்த மனிதனின் அடையாளங்களை சொல்கிறேன்
அவன் தானாவென்று சொல்”
எமன் அடுக்கத் தொடங்கினான்
”நிர்மல சொரூபம் ;
பஞ்சபூதங்களுடன் தொடர்பில்லை
அமைப்பும் உருவமும்
அவனுக்குக் கிடையாது
யாருமறியா
மூல காரணத்தை தழுவியவன்
பிரத்யேக காரியங்கள் புரியாதிருப்பவன்
மாற்றமென்றால் என்ன என்று அறியாதவன்
கர்ம அனுபவம் அறவே இல்லாதவன்
சித்த அசைவு சுத்தமாக இல்லை அவனுக்கு
காண்போரின் கண்ணுக்கு
அவனின் பிராணம் அசைவது போல தோற்றமளிக்கும்
ஆனால் அதில் ஒரு நோக்கமும் இராது.
சித் சொரூபமாக இருக்கிறான்
எனவே அவனுக்கு அழிவில்லை.
மரண நினைவுள்ளவனுக்கு மட்டுமே
மரணம் சம்பவிக்கிறது
இவனோ
நினைவுகள் இலாத ஞான சொரூபனாகவும் இருக்கிறான்.”
மிருத்யு ஆம் / இல்லை என்றேதும் சொல்லவில்லை.
எமன் தொடர்ந்தான்
”உதவிக் காரணங்களின்றி
சுயசொரூபத்தில்
சூன்யத்தில்
நிற்கிறான்
பின்னர் எப்படி அவன் உன் வசப்படுவான்?”
தன் முயற்சிகள்
ஏன் வியர்த்தமாயின
என்று மிருத்யுவிற்குப் புரிந்தது.
எமன் மேலும் உரைக்கிறான் :
”பிரளயத்தில்
சர்வமும் ஐக்கியமான பிறகு
எது மிஞ்சும்?
சூன்யத்தை தவிர வேறென்ன?
காரண-காரியங்கள் நசித்துப் போகையில்
மிஞ்சுவதென்ன? அதுவும் சூன்யம் தானே?
சொப்பனத்தில் அனுபவிப்பதெல்லாம் என்ன?
காரணம் சூன்யமாக இருந்தும்
ஸ்தூலம் அசைவது காணப்படுகிறதல்லவா?
சூன்யத்தை பூரணமாகவும் கொள்ளலாம்.
உற்பத்தி தோற்றமும்
நாசமாகும் தோற்றமும்
சூன்ய-பூரணத்தில் இருந்தே தோன்றுவன.
உற்பத்தி – நாசம்
இவ்விரண்டும் நிகழுகையில்
இவ்விரண்டின் பின்புலத்தில்
நிலையாயும் சாட்சியாகவும்
ஒன்று இருந்தாக வேண்டும்
சாட்சியென்றால்
அது விகல்பமாகாததாகவும் இருத்தல் வேண்டும்
அது
நம் புத்திக்கு புலப்படுவதில்லை.
இச்சூன்ய-பூரணத்தில் இருந்து
எழும் பிரம்மாண்டம்
அழியும் தோற்றத்தையும் கொண்டதாய் இருக்கிறது…
இப்போது சொல்
உன்னால் அழிக்க முடியாத
அது எது அல்லது யார்?”
மிருத்யு
மௌனத்தை பதிலாய்த் தந்தான்.(யோக வசிஷ்டத்தின் உற்பத்திப் பிரகரணத்தில் வரும் ஆகாசஜன் கதையிலிருந்து)
-
ப்ளாக் ஸ்வான்

இசைக்கருவியொன்றை மீட்டும் ஒருவர் சரியான கம்பிகளை அழுத்துகிறோமா என்றோ கருவியை சரியாக ஏந்திக்கொண்டிருக்கிறோமா என்றோ யோசித்துக் கொண்டே வாசிப்பாரானால் அவரால் கேட்பவர்களை மகிழ்விக்க இயலுமா? இலக்கணப்பிழை அல்லது சொற்பிழை பற்றிய ஐயங்களுடன் தன்னுடைய வாழ்நாளின் அதிமுக்கியமான படைப்பை ஒரு எழுத்தாளரால் எழுதி விட முடியுமா? நாட்டியக் கலைஞர் கால்களை சரியான திசையில் உயர்த்தியிருக்கிறோமா என்ற குழப்பத்துடன் ஆடுகையில் அழகான நாட்டிய அனுபவத்தை பார்வையாளர்கள் பெறுவார்களா? கட்டுக்கோப்பான பயிற்சி கலைக்கு அத்தியாவசியமாகிறது. அயராத ஆனால் ஒழுங்குபடுத்தப்பட்ட பயிற்சியின் மூலமாக அடிப்படையான இலக்கணங்கள், இயக்கங்கள் மற்றும் உத்திகளில் முழுமையான Mastery கிடைத்துவிட்ட பிறகு தன் செயல் திறனில் அளவற்ற நம்பிக்கை கொள்கிறான் கலைஞன்.செயல் திறனில் அசைக்க முடியா நம்பிக்கை கொண்டு கலையுலகின் வாசல் வழி உள் புகுவோர் – அங்கு நுழையும் பாக்கியம் பெற்றோர் – யதார்த்த உலகத்தை தாண்டியதோர் அனுபவத்தை பெறுவதோடு பார்வையாளர்கட்கும் அவ்வனுபவத்தை பகிர்ந்தளிக்கின்றனர். உள்ளார்ந்த ஆனந்த உணர்வில் திளைத்தபடி பூரணத்துவத்தை நோக்கியதொரு பயணத்தை கலைஞர்கள் மேற்கொள்கிறார்கள். அமர நிகழ்த்து கலைஞர்கள் பலரின் கலை முறைமை இவ்வாறே இருந்திருக்கிறது என்பதற்கு வரலாற்றில் பல உதாரணங்கள் இருக்கின்றன.
யதார்த்த உலகம் மற்றும் நிகழ்த்து கலையில் ஏற்றுள்ள பாத்திரத்தின் உலகம் – இவையிரண்டிற்குமான இடைமுகத்தில் சஞ்சரிக்கும் கலைஞர்கள் சில சமயம் அபாயகரமான மனப்போக்கு நிலைகளில் சிக்குண்டு, மனச்சாய்வில் வீழ்ந்து அல்லலுறுவதும் உண்டு. அத்தகையதொரு கலை மங்கையின் கதையைச் சொல்லும் ஒரு திரைப்படத்தை சமீபத்தில் தொலைக்காட்சியில் பார்த்தேன். 2010-இல் வெளியான பழைய படம் தான் என்றாலும், “Black Swan” திரைப்படத்தைக் காணும் சந்தர்ப்பம் இதற்கு முன்னர் அமையவில்லை. படம் வந்த பொழுது வாசித்த விமர்சனங்கள் இப்படத்தை காணும் ஆர்வத்தை ஏற்படுத்தினாலும் ஏனோ திரையரங்கில் சென்று பார்க்க முடியவில்லை. “ஏ” சான்றிதழ் தரப்பட்டதும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். வாரிசுகளை வீட்டில் விட்டுவிட்டு திரைப்படம் பார்க்கும் பழக்கத்தை இது நாள் வரை கைக்கொள்ளாததால் “யூ” சான்றிதழ் படங்களையே திரையரங்கில் காண முடியும் என்றாகிவிட்டது.
அச்சத்தை உண்டு பண்ணும் அதே சமயத்தில் அழகால் கண்களை வசியப்படுத்துதல் “ப்ளாக் ஸ்வான்” திரைப்படத்தின் அரிய சாதனை. கொடூரமான கனவுகளைப் போல “ப்ளாக் ஸ்வான்” மிகவும் இருண்ட விளிம்புகளை நோக்கி மெல்ல சரிவதை அழகுறப் படம் பிடித்துக் காட்டுகிறது. எழிலார்ந்த நடனம் பற்றிய படத்திற்குள் ஒரு திகில் நாடகம் முறுக்கி வைக்கப்பட்டுள்ளது. கனவைப் போன்று நகரும் இப்படத்தின் சிகரமாகத் திகழ்வது நடாலி போர்ட்மேனின் நயநுணுக்கமிக்க நடிப்பு. ; அவஸ்தையுறும் ஒரு பால்லரீனாவாக கச்சிதமாக தன் பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம்.
“Black Swan” ஓர் உடனடி குற்றவுணர்வில் தோய்ந்த இன்பத்தை நல்குகிற படம். பகட்டான காட்சியமைப்புகள் நிறைந்தது. காட்சி ரீதியாக ஒரு சிக்கலான படம். மனதை மரத்துப்போகச் செய்யும் கடும் பாலே நடன இயக்கங்களின் பின் புலத்துடன் மனோவியாதியை இணைத்துக் கதை சொல்ல அபரிமிதமான தைரியம் வேண்டும். கொந்தளிக்கும் உருவத்தொகுதிகளும் இரு நாட்டியக்காரிகளுக்கிடையிலான போட்டியும் மிகநேர்த்தியாக வெளிப்பட்டிருக்கின்றன.
பால்லரீனா நினா (நடாலி போர்ட்மேன்) திண்ணிய தசையும், மெலிந்த உடலமைப்பும் கொண்டவள் ; , படுக்கையில் இருந்து எழும் போதெல்லாம் அவளின் உடலில் அங்கங்கு கீறல்கள் தோன்றும். எனினும் அவற்றையெல்லாம் பொருட் படுத்தாமல் ஒரு நாள் தவறாமல் நடன ஸ்டூடியோ சென்று ரத்தம் கசியும் கால்பெருவிரலூன்றி சுற்றாட்டம் ஆடுவாள்.
படத்தின் ஆரம்பக் காட்சியிலிருந்தே நினாவின் மனம் பிறழ்ந்து கொண்டிருப்பதை பூடகமாக காட்டிக்கொண்டே வருகிறார் இயக்குநர் அரொநோஃப்ஸ்கி. எல்லா திகில் படங்களைப் போல நாயகிக்கு மிக அருகில் மோதியவாறு காமெராவை வைத்து படம் பிடித்திருப்பது பிற பாத்திரங்களோ அல்லது பொருட்களோ நாயகிக்கு வெகு அருகில் திடீரென தோன்றி பார்வையாளர்களை பயமுறுத்துவதற்காக மட்டுமில்லாமல் நினாவின் சித்தப்பிரமையையும் தனிமை மருட்சியை குறிக்கவும் தான்.
நினாவின் தாய் எரிகா (பார்பரா ஹெர்ஷே). மூச்சு முட்டுமளவுக்கு தாய்மைப் பாசத்தை காட்டுபவள். மகளைச் சுற்றி மிகைப்பாசத்துடன் வட்டமிடுபவள். மகளின் உணவுப்பழக்கம் முதல் ரத்தம் வருமளவுக்கு தோலை சொறிந்து கொள்ளும் பழக்கம் வரை எல்லாவற்றையும் கவனிப்பாள். இத்திரைப்படத்தில் பிற காட்சிகளைப்போல – உடையும் எலும்புகள், ரத்தம் கசியும் நகங்கள், துளை விழுந்த காயங்கள், காயங்களின் தையல்கள் –இவைகள் மெய்த்தன்மை கொண்டவை என்று கொள்ள முடியாது. அவைகள் நினாவின் கனன்றெழும் கற்பனைகளாகவும் இருக்கலாம்.
நியூயார்க் நகர பாலே கம்பெனியின் கலை இயக்குநர் தாமஸ் (ஃபிரெஞ்சு நடிகர் வின்செண்ட் கேஸ்ஸல் – திரைப்படத்தின் ஒரே தெளிவான பாத்திரம்) “ஸ்வான் லேக்” என்ற புகழ் பெற்ற பாலே நாடகத்தை புது நடிகையை வைத்து மேடையேற்ற திட்டமிடுகிறான் ; நினாவை வெள்ளை அன்னம் மற்றும் கறுப்பு அன்னம் எனும் இரட்டை வேடங்களுக்கு தேர்ந்தெடுக்கிறான்.. வெள்ளை அன்னம் பாத்திரத்தில் நினா வெகு எளிதாகப் புகுந்து விடுவாள் என்று தாமஸுக்கு தெரிகிறது. ஆனாம் கறுப்பு அன்னம் பாத்திரத்தின் இருண்ட பகுதிகளுக்கு உருக்கொடுக்க முடியுமா என்ற சந்தேகம் அவனுக்கு. அதனால் லிலி (மிலா குனிஸ்) என்ற இன்னொரு நாட்டியக்காரியையும் வரவழைக்கிறான். லிலியின் சாமர்த்திய குணமும் தந்திர குணமும் கறுப்பு அன்ன வேடத்திற்கு பொருத்தமானவளாக்குகிறது. ஸ்வான் ராணியின் பாத்திரத்துக்கு நினாவின் மாற்றாக லிலியாக நியமிக்கப்படுகிறாள் – ஆகவே நினாவின் எதிரியாகவும் ஆகிறாள்.
தாமஸ் கம்பெனியின் பிரதான நடனக்காரி பெத்தை (வினோனா ரைடர்) தூக்கி எறிந்த காரணத்தினாலேயே நினாவுக்கு அந்த வேடம் கிடைக்கிறது. பெத் படத்தின் சில காட்சிகளில் மட்டும் வருகிறாள் – கெட்ட வார்த்தை சொல்லி சீறிக் கொண்டும், நினாவின் மேல் பழி கூறிக் கோண்டும். பின்னர் ஒரு கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் படுத்த படுக்கையாகிறாள். எரிகாவின் பாத்திரம் போலவே, பெத்தின் பாத்திரமும், நினாவின் சித்தப்பிரமையையும் இறுக்கத்தையும் மேலும் அதிகமாக்கும் விதத்தில் படைக்கப்பட்டிருக்கிறது. மனக்குழப்பம் அயராது நினாவை பாடாய் படுத்துகிறது.
கலையில் தோஷமிலாப் பூரணத்துவத்தை எட்டுவதற்கான நினாவின் ஓட்டம் அவளின் உடல்நலம் மற்றும் நட்புகளை காவு வாங்குகிறது. பாலியல் முறைகேடுகள் வாயிலாகவும் “உன்னை மறக்க நீ கற்றுக் கொள்ள வேண்டும்” என்ற வார்த்தை தூண்டுதல்களாலும் தாமஸ் நினாவுக்கு கடுமையான உந்துதல் கொடுக்கிறான். ஆனால் இருண்மைக்கு நினா தன்னை பலியாக்கிக் கொண்டிருக்கிறாள் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. தன்னுடைய யதார்த்தம் பற்றிய பிரக்ஞையை கொஞ்சம் கொஞ்சமாக நினா இழக்கிறாள்.
ட்சைகோவ்ஸ்கியின் தலை சுற்ற வைக்கும் ஆர்கெஸ்ட்ரா, நியுயார்க் நகர பாலே நட்சத்திரம் பெஞ்ஜமின் மில்லபீட்-டின் நடன அமைப்பு மற்றும் மேத்யூ லிபாடிக்கின் விரைவான ஒளிப்பதிவு – இவைகள் இந்த உளவியல் நாடகத்தின் சுருதியை கூட்டுகின்றன. ”ஸ்வான் லேக்” பாலே நாடகத்தின் முதல் காட்சி துவங்குகையில் படம் முழுமையான கனவுத் தன்மையை எட்டி விடுகிறது ; நினாவின் உடம்பில் சிறகுகள் முளைப்பதுவும் பின்மேடையில் நிகழும் கொடூரமான தாக்குதல் காட்சிகள் வெடுக்கென மறைதலும் என ஒரு சர்ரியல் உலகுக்குள் நுழைந்து விடுகிறது.
நாடகத்துக்குள் ஒரு நாடகம் என்ற பாணியில் “ப்ளாக் ஸ்வான்” படத்துக்குள் இடம் பெறும் “ஸ்வான் லேக்” பாலே நடனத்தின் கதையின் குறியீடுகளையே “ப்ளாக் ஸ்வான்” திரைக்கதை வைத்து பின்னப்பட்டிருக்கிறது.
நாட்டிய ஒத்திகை காட்சிகளிலும் நாட்டியக் காட்சிகளிலும் நம்பகமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் போர்ட்மேன். இதற்காக கிட்டத்தட்ட ஆறு மாதம் பயிற்சி செய்தாராம். லிலியாக வரும் மிலா குனிஸ் போர்ட்மேனின் பாத்திரத்துக்கு எதிர் பொருத்தமான இணையாக நடித்திருக்கிறார். போர்ட்மேன் தன் அகன்ற விழிகள் வாயிலாக பயத்தை வெளிப்படுத்துகையில் மிலா புன்னகை கலந்த தன்னம்பிக்கையை தன் உடல் மொழியில் வெளிப்படுத்துகிறார்.
-
மாயை – ராம் சின்னப்பயல்
நண்பர் ராம் எழுதிய கவிதையொன்றை வல்லினம் இதழில் வாசித்தேன். கவிதைகள், நகைச்சுவை கட்டுரைகள் மற்றும் இசை விமர்சனங்கள் என்று எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறார். தகவல் தொழில் நுட்பத்துறைப் பணியில் இருக்கும் இந்த இளைஞர் பல உயரங்களை தொடப் போகிறார். ராமின் அனுமதியுடன் கவிதையை இங்கு இடுகிறேன்.
மாயை
எந்த மனநிலையிலிருப்பினும்
ஒரு பாடல் என்னைத் திசை திருப்பிவிடுகிறது,
இன்று எவ்வளவு விட்டேற்றியாயிருப்பினும்
ஒரு கவிதை எனக்கு புன்முறுவலைத் தந்துவிடுகிறது,
எதுவுமே வேண்டாம் என்று சூன்யமாயிருப்பினும்
வெகு உயரே பறக்கும் ஒரு பறவை
என்னை அவதானிக்கவைத்துவிடுகிறது,
மனம் போன போக்கில்
எங்கு சென்றாலும் எதோ ஒன்று
என் அனுமதியின்றி நடந்து கொண்டுதானிருக்கிறது.இப்படியாகவே இருக்கும்
என்னைத்தொடர்ந்தும்
உற்றுநோக்கி கவனித்துக் கொண்டிருப்பவனுக்கு
ஒரு காட்சியாகவே
எப்போதும் நான்
இருந்துகொண்டுதானிருக்கிறேன்.நன்றி : வல்லினம்
-
முடிவிலாச் சுழல்
கறுப்பு-வெள்ளை திரைப்படங்களில் பாத்திரங்கள் கனவு காணத் துவங்கும் போது சுழன்று ஒரு மையப்புள்ளியில் குவியும் வட்டங்களை காட்டுவார்கள். வெளிப்புறத்தில் உருவாகும் வட்டம் பல வட்டங்களை உருவாக்கியவாறு மையப் புள்ளியை நோக்கி நகர்வது போல தோன்றும்; மையப் புள்ளியிலிருந்து புதிதாக ஒரு வட்டம் தோன்றி பல வட்டங்களை வடிவமைத்தவாறே வெளிப்புற வட்டத்தை நோக்கி வளர்வது போலவும் தோன்றும். ஆரம்பம் முடிவு போலவும் முடிவே ஆரம்பம் போலவும் காட்சி தரும் கனவுச் சுழற்சி வட்டத்தின் மையத்தில் ஓர் உள் நோக்கிய வெடிப்பு நிகழ்ந்து வட்டம் மறைந்து அதில் இருந்து இன்னொரு வட்டம் ஜனிப்பது போன்ற பிரமையை நம் கண்களுக்குத் தரும். முடிவிலியாக சுழன்று கொண்டிருக்கும் வட்டத்துக்குள் உள் நோக்கி வெடிக்கும் புள்ளியை சுய-நிர்மூலமாக்கும் புள்ளியாகக் கொள்ளலாம் ; திரும்ப திரும்ப தன்னுடைய பிரதியை முடிவிலாது உருவாக்கிக் கொள்ளும் இயல்பு அதனுடைய முடிவற்ற பரப்பிலிருந்து எழுவது. தனி நபர் வாழ்க்கை, நகரங்களின் வாழ்க்கை, அல்லது பிரபஞ்சத்தின் ஆயுள் ஆகியவை இப்போது சொல்லிய வட்டங்களின் இயல்பினதாய் தவிர்க்கவியலா மீள் சுய நிர்மூலமாகும் போக்கைப் பின் தொடர்கின்றன. அச்சமூட்டும் இம்முறையின் எரிபொருளாக இயங்கி ஆற்றலை ஏற்படுத்துவதை “மறதி” (the ignorance of forgetting) என்று பௌத்த மதம் சொல்கிறது.
தனிப்பட்ட அளவில் இந்த வட்டம் அல்லது சுழலை ‘சார்புடைத் தோற்றம்’ என்று பௌத்தம் சொல்கிறது. ‘பிரதீத்ய சமுத்பாதம்’ என்று சமஸ்கிருதத்திலும் “பதிச்ச சமுப்பாத” என்று புராதன பாலி மொழியிலும் அழைக்கப்படும் இந்த தத்துவம் பௌத்த மதத்தின் ஆணி வேர்.
“பிரதீத்ய சமுத்பாதம்” பௌத்தத்தின் முக்கியமான பிரத்யேகமான தத்துவம். பாலி நெறிமுறையின் எண்ணற்ற பத்திகளில் புத்தர் இத்தத்துவத்தை இயற்கையின் நியதி என்றும் அடிப்படை உண்மை என்றும் விவரித்திருக்கிறார். ஞானமடைந்த மனிதர்களின் பிறப்பைச் சாராத உண்மையிதுவென்றும் அவர் சொல்லியிருக்கிறார்.
சம்யுத்த நிகாயத்தில் புத்தர் சொல்கிறார் :
“ததாகதர் தோன்றினாலும் தோன்றாவிட்டாலும், இது இருக்கிறது ; இது இயற்கையின் உண்மை ; இயற்கையின் சட்டம் ; இது நிபந்தனைக்குட்பட்ட தோற்றம்”
“இந்த தத்துவம் பற்றிய ஞானத்தை அடைந்து விழிப்புற்ற ததாகதர், இதை பயில்விக்கிறார் ; காட்டுகிறார் ; உருவாக்குகிறார் ; அறிவிக்கிறார் ; வெளிப்படுத்துகிறார் ; அறியப்படுத்துகிறார் ; தெளிவுபடுத்துகிறார் ; இதைச் சொல்லி எடுத்துக் காட்டுகிறார்”
“பிக்ஷுக்களே! இது அடிப்படைப் பண்பு ; இது மீளாத்தன்மை ; இது மாறுபடாத் தன்மை ; நிபந்தனைக்குட்பட்ட தோன்றும் தன்மையை நான் சார்புடை தோற்றக் கொள்கையென்று அழைக்கிறேன்” (S.II.25)புத்தருக்கும் அவருடைய முக்கிய சீடரில் ஒருவரான ஆனந்தருக்கும் இடையில் நடந்த ஓர் உரையாடலில் “பிரதீத்ய சமுத்பாதத்தின்” ஆழத்தை புத்தர் விளக்குகிறார்.
“எத்தனை அருமை! இதற்கு முன்னர் எனக்கு இவ்வாறு தோன்றியதில்லை, ஆழமானதாக இருந்தாலும், புரிந்து கொள்ள கடினமானதென்றாலும், சார்புடை தோற்றக் கொள்கையானது என்னைப் பொறுத்தவரை எளிமையானதாகவே தோன்றுகிறது”
“அப்படிச் சொல்லாதே ஆனந்தா! சார்புடை தோற்றக் கொள்கை மிக ஆழமானது ; புரிந்து கொள்ள கடினமானது. இந்த தத்துவத்தை அறியாமலும், புரிந்து கொள்ளாமலும், முழுக்க உணராமலும் இருத்தலின் மூலம் மனிதர்கள் சிக்கலுற்ற நூல் போல குழப்பத்துடன் இருக்கிறார்கள் ; ஒன்றாக தூக்கி எறியப்பட்ட நூல் கட்டுகள் போல இருக்கிறார்கள் ; வலையில் பிடிபட்டு இருக்கிறார்கள் ; மற்றும் நரகம், கீழ் உலகம், சம்சார சக்கரம் – இவற்றிலிருந்து தப்ப இயலாதவர்களாக இருக்கிறார்கள்” (மஹா நிதான சூத்திரம்)
பிரதீத்ய சமுத்பாதத்தை பற்றி விளக்கும் உரைரீதியான மேற்கோள்களை இரு பிரிவுகளாகப் பகுக்கலாம். ஒன்று, பொதுவாக இத்தத்துவத்தை விளக்குபவை ; இரண்டு, சங்கிலித் தொடராக இணைந்திருக்கும் தத்துவத்தின் காரணிகளை வரிசைப்படுத்துபவை.
பொதுவான தளத்தில் பௌத்த மரபின் மையக் கருத்தை இப்போதனை குறிக்கிறது – எல்லா விஷயங்களும் பல்வேறு காரணங்களையும் காரணிகளையும் பொறுத்து எழுகின்றன.
இது இருக்கிறது, ஏனென்றால் அது இருக்கிறது
இது இல்லை ஏனென்றால் அது இல்லை
இது இல்லாமல் போகிறது, ஏனென்றால் அது இல்லாமல் போகிறது. (S.II.28,65)சார்புடைத் தோற்றக் கோட்பாட்டின் படி எல்லா விஷயங்களும் நிகழ்வுகளும் ஒன்றை ஒன்று சார்ந்தே எழுகின்றன, சார்ந்திருக்கும் நிகழ்வுகளும் விஷயங்களும் தோன்றவில்லையெனில் எந்த விஷயமும் நிகழ்வும் தோன்றுவதில்லை அடிப்படையாக எதையும் சாராதது என்று எதுவும் இல்லை. சார்ந்த தன்மையின் காரணமாக உருவாகும் எதற்கும் உள்ளார்ந்த மெய்ம்மைக் கூறு இருப்பதில்லை. ஒரு நாற்காலியை உதாரணம் காட்டி தலாய் லாமா ஒரு கட்டுரையில் விளக்குவார் : “நான்கு கால்கள், ஒர் இருக்கை,, மரம், ஆணிகள், தரை, அறையை வரையறுக்கும் சுவர்கள், சுவர்களைக் கட்டிய ஆட்கள், நாற்காலி என்று அதை அழைத்து அது உட்கார்வதற்கான சாதனம் என்ற அடையாளாம் கொடுத்த மனிதர்கள் – இவைகள் இல்லாமல் நாற்காலி என்ற ஒன்று இல்லை”
பிரத்யேக தளத்தில் பொதுவான போதனையின் பயன்பாட்டை குறிக்கிறது – பனிரெண்டு நிதானங்கள் வாயிலாக
முதலில் பேதைமை என்கிற அறியாமை (1) (“மறந்தபேதைமை” – மணிமேகலை 30 ; 161) ; பிறகு செய்கை, இன்னும் குறிப்பாகச் சொன்னால் செயல் (கருமம்) (2) ; பேதைமை சார்ந்து எழும் செய்கையானது உணர்வை (3) நிலைப்படுத்துகிறது. உணர்வைச் சார்ந்து எழுவது அரு-உரு (நாமரூபம்) (4) ; புலன்களைச் செயல்படுத்துதல் பின் வருவது – வாயில் (5), ஊறு (6) மற்றும் நுகர்வு (7) ; புலன்களின் செயலாக்கத்தை தொடர்ந்து பின் வருவன அழிவு இயக்கிகளான வேட்கையும் (8) பற்றும் (9) ; வேட்கையும் பற்றும் முன்னிலைபட்டு பவம் (10) தோன்ற சந்தர்ப்பமேற்படுத்துகின்றன ; பவத்திற்குப் பிறகு தோற்றம் (11) ; பிணி, மூப்பு, சாவு (12) என்பன பிறகு எழுவன.

மேற்சொன்ன பனிரெண்டையும் நிதானங்கள் என்று சொல்வர் ; நிதான என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு ”தொடர்ச்சியுறக் கட்டுதல்” என்பது அர்த்தமாகும்.. சங்கிலியின் இணைப்புகள் போல பனிரெண்டு நிதானங்களும் ஒன்று அடுத்ததை சார்ந்தவாறு எழுகின்றன என்பதை பிரதீத்ய சமுத்பாதம் விவரிக்கிறது. ஒரு நிதானம் இல்லாமல் அடுத்தது இல்லை.
மணிமேகலை காப்பியத்தின் முப்பதாவது காதையில் அரவண அடிகளால் கதையின் நாயகி மணிமேகலைக்கு போதிக்கப் படுவதாக வரும் இடங்களில் “பிரதீத்ய சமுத்பாத” தத்துவத்தை எளிய முறையில் விளக்குகிறார் சாத்தனார். சாத்தனாரின் விளக்கம் புதிதானதோ அவருக்கே உரித்தானதோ அல்ல என்றாலும் பௌத்த சமயத்தின் பிரசித்தமான முக்கிய தரிசனத்தை. உகந்த வகையில் தமிழ்ப்படுத்தியிருப்பது சாத்தனாரின் கவித்திறன்.
இப்பன்னிரு நிதானங்களை மூன்று கால அடிப்படையிலும் பகுக்கிறார் மணிமேகலை ஆசிரியர்.
கால மூன்றுங் கருதுங் காலை
இறந்த கால மென்னல் வேண்டும்
மறந்த பேதைமை செய்கையா னவற்றை
நிகழ்ந்த காலமென நேரப் படுமே
உணர்வே யருவுரு வாயி லூறே
நுகர்வே வேட்கை பற்றே பவமே
தோற்ற மென்றிவை சொல்லுங் காலை
எதிர்கா லம்மென விசைக்கப் படுமே
பிறப்பே பிணியே மூப்பே சாவே
அவல மரற்றுக் கவலைகை யாறுகள் (மணிமேகலை, 30 : 159-168)பேதைமையும் செய்கையும் இறந்த காலம் எனக் குறிக்கப்படுகின்றன ; உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நுகர்வு வேட்கை, பற்று, பவம் – இவை நிகழ் காலமாகக் கொள்ளப் படுகினறன. பிறப்பு, பிணி, சாக்காடு இவையெல்லாம் எதிர்காலமாகக் கருதப்படுகின்றன.
பன்னிரு நிதானங்களை பௌத்தம் குற்றம், வினை, பயன் – என்ற வகையிலும் வகைப்படுத்துகிறது.
வேட்கை, பற்று, பேதைமை குற்றம்
பவமும், செய்கை வினை
குற்றமும் வினையும் சேர்ந்து ஏற்படுத்தும் பயன்கள் உணர்ச்சி, பிறப்பு, முதுமை, நோய், சாக்காடு (மணிமேகலை, 30 : 169 -174)ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தர் போதித்தார் என்று தொடக்கப் பள்ளி வரலாற்று பாடப்புத்தகத்தில் நாம் படித்தது எல்லோருக்கும் ஞாபகமிருக்கும். “நால்வகை வாய்மை” (Four Noble Truths) களுள் ஒன்று அது. புத்தர் என்ன போதித்தார் என்று ஒரு கேள்விக்கு நம் எல்லாருடைய பொது நினைவில் இருக்கும் நால்வகை வாய்மைகள் கீழ் வருவன :-
1. துக்கம் : இவ்வுலக வாழ்க்கை துன்பகரமானது. நோய், மூப்பு, இறப்பு முதலியவை நிறைந்த உலக வாழ்க்கை, எளிதில் விலக்கிக் கொள்ள முடியாத துன்பம் நிறைந்தது.
2. துக்கத் தோற்றம் : ஆசையே துன்பத்தின் காரணம். தான் இன்பமாக வாழ வேண்டும் என்ற ஆசையே துன்பங்களுக்கு காரணமாகும்.
3. துக்க நீக்கம் : ஆசை ஒழிக்கப்பட்டாலொழிய துன்பத்தை ஒழிக்க முடியாது.
4. துக்க நீக்க நெறி : எண்வகை வழியே துன்பத்தை ஒழிக்கும் வழியாகும். எண்வகை வழிமுறைகளை கடைபிடித்தால் ஆசைகளை ஒழித்துவிடலாம்.பள்ளி மாணவனுக்குப் புரிகிற மாதிரியான எளிமையான போதனைகள் தாம் இவை. சார்புடை தோற்றக் கோட்பாட்டில் ”நால்வகை வாய்மை”யைப் பொருத்திப் பார்க்கலாம்.
உணர்வே யருவுரு வாயி லூறே
நுகர்வே பிறப்பே பிணிமூப்புச் சாவே
அவல மரற்றுக் கவலைகை யாறென
நுவலப் படுவன நோயா கும்மே
அந்நோய் தனக்குப்
பேதைமை செய்கை யவாவே பற்றுக்
கரும வீட்டமிவை காரண மாகும்
துன்பந் தோற்றம் பற்றே காரணம்
இன்பம் வீடே பற்றிலி காரணம்
ஒன்றிய வுரையே வாய்மை நான்காவ (மணிமேகலை, 30 : 179-188)ஒரு கணிதச் சமன்பாடு போன்றதொரு விளக்கம். பன்னிரு நிதானங்கள் இரு கூறுகளாகப் பிரிக்கப்பட்டு நால்வகை வாய்மைகள் இங்கு விளங்கப்படுகிறது.
(1) துக்கம் உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நுகர்வு, பிறப்பு, வினைப்பயன் (பிணி, மூப்பு, மரணம்)
(2) துக்கத் தோற்றம் பேதைமை, செய்கை, வேட்கை, பற்று, பவம் – இவைகளே துக்கங்களுக்கான காரணங்கள்.
(3) துக்க நீக்கம் துன்பத்துக்கு பிறப்புக்கும் பற்றுடைமையே காரணம்.
(4) துக்க நீக்க நெறி இன்பத்துக்கும் பிறவாத வீடு பேற்றுக்கும் பற்றற்று இருத்தலே வழி.பிரதீத்ய சமுத்பாதக் கோட்பாடு பல்வேறு வகைகளிலும் தளங்களிலும் அர்த்தம் கொள்ளப்படுகிறது.
தேரவாதப் பௌத்தப் பாரம்பரியம் இக்கோட்பாட்டின் வாயிலாக துக்கங்கள் எழுவதை விளக்குகிறது ; இயற்காட்சிகளுக்கும் நிகழ்வுகளுக்கும் அடிப்படையான மெய்ம்மைக் கூறுகள் இல்லை என்றும் சொல்கிறது. ஆன்ம மறுப்பின் அடிப்படையாகவும் இக்கோட்பாடு கருதப்படுகிறது.
மஹாயான பௌத்தத்தில் சார்புடை தோற்றக் கோட்பாடு மேலும் விரிவு படுத்தப்பட்டு தோற்றப்பாடுகளின் சார்பு நிலையைக் காரணமாகக் காட்டி இருப்பின் மெய்ம்மையற்ற தன்மை விளக்கப் படுகிறது.
இக்கோட்பாட்டின் உண்மையான புரிதல் மட்டுமே இல்லாதவற்றை இருப்பவையாகவும் இருப்பனவற்றை இல்லாதவையாகக் கருதும் நம் தவறான பார்வைக்கு ஒரு முடிவு கட்டும் என்று யோக சாரம் என்ற பௌத்த மதத்தின் கிளையொன்று உரைக்கிறது.
இந்தக் கோட்பாடு நிலையற்ற லௌகீக தொடர்ச்சியை மட்டும் குறிக்கவில்லை : எல்லாவற்றின் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் அடிப்படைத் தன்மையையே குறிக்கிறது என்று பிரஜ்னபாரமித சூத்திரம் வலியுறுத்துகிறது.
முதல் பத்தியில் வந்த முடிவிலாச் சுழலில் உருவாகும் ஒவ்வொரு வட்டங்களின் அடையாளமும் சுழலில் உருவாகும் பிற வட்டங்களைச் சார்ந்தே இருக்கின்றன. முதல் வட்டம் தோன்றியிருக்காவிடில் இந்த வட்டமும் தோன்றியிருக்காது. மையத்தில் இருக்கும் சுயநிர்மூலமாக்கிக் கொள்ளும் புள்ளியைக் கடந்த அடிப்படை என்று ஒன்றும் இல்லை. இதைச் சூன்ய வாதம் என்று மத்யமிகா சொல்கிறது. சார்புடைத் தோற்றக் கோட்பாடும் சூன்ய வாதமும் ஒன்றே என்று நாகார்ஜுனர் மூலமத்யாத்ம காரிகையில் சொல்கிறார்.
சூன்ய வாதத்தின் படி மெய்யியல்பு இன்றி இப்பிரபஞ்சமும் இதில் இருப்பனவும் தோன்றிக் கொண்டிருக்கின்றன எனும் போது ஒரு குறிப்பிட்ட நாளில் எதையும் சாராத ஒரு சக்தியாலோ அல்லது கடவுளாலோ இப்பிரபஞ்சம் படைக்கப் பட்டிருக்க முடியாது என்று ஆகிறது. எனவே படைப்புக் கடவுள் என்கிற கருத்தியலையோ அல்லது நவீன அறிவியலாளர்கள் குறிப்பிடும் big bang theory-யையோ பௌத்தர்கள் ஏற்பதில்லை, “நான் ஏன் கிறித்துவன் இல்லை?” என்ற கட்டுரையில் ”இவ்வுலகத்திற்கு துவக்கமென்ற ஒன்று இருக்கிறதென எண்ணுவதற்கு ஒரு காரணமும் இல்லை. கற்பனையின் வறட்சியாலேயே எல்லா விஷயங்களுக்கும் ஒர் ஆரம்பம் இருக்க வேண்டியது அவசியம் என்று நாம் கருதுகிறோம். எனவே முதல் காரணம் எனும் வாதத்தில் ஈடுபட்டு என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை” என்று பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் சொல்லும் போது பிரபஞ்சத்தின் துவக்கம் பற்றிய வினாக்களுக்கு புத்தருடைய மௌனத்தின் உட்பொருளை எடுத்துரைத்த மாதிரி இருக்கிறது.
காரண காரியத் தொடர்பிலாமல் இப்பிரபஞ்சத்தில் ஒன்றும் இருக்க முடியாது என்கிறபடியால் ஆன்மா என்ற ஒன்றும் சாத்தியமில்லை என்று கொள்கிறது பௌத்தம்.
நால்வகை வாய்மைகள், அனாத்ம வாதம், கடவுள் மறுப்பு வாதம் – இவையெல்லாவற்றுக்குமே சார்புடைத் தோற்றக் கோட்பாடு தான் அஸ்திவாரம்.நியுட்டனின் பௌதீக விதிகளை புவியீர்ப்பு விசை இயங்கும் தளத்தில் மட்டுமே உண்மையென்று நிரூபிக்க முடியும் என்றும் ;புவியீர்ப்பு விசைக்கு உட்படாத இடங்களில் நியூட்டனின் விதிகள் இயங்கா என்றும் நவீன அறிவியல் சொல்கிறது. அணுவியல் பரிசோதனைகளில் எட்டப்படும் முடிவுகள் சோதனையில் பயன்படுத்தப்படும் கருவிகளையும் வழிமுறைகளையும் ஒட்டியே அமைகின்றன என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது. பௌத்தம் சொல்லும் சார்புடைத் தோற்றக் கோட்பாட்டிற்கும் நவீன அறிவியல் சொல்லும் சார்புத் தன்மைக்கும் இருக்கும் ஓற்றுமை குறிப்பிடத்தக்கது.
புத்தரின் முக்கியமான இரு ஆண் சீடர்கள் – ஷாரிப்புத்தரும் மௌத்கல்யாயனரும். இருவரும் நெருங்கிய நண்பர்கள். சஞ்சயர் என்ற லோகாயதவாத குருவின் சீடர்களாக இரு இருந்தனர். சஞ்சயரின் போதனைகளில் நம்பிக்கையிழந்து ஒரு நாள் ஷாரிப்புத்தர் ஆசிரமத்தில் இருந்து விலகி குறிக்கோளின்றி நடக்கலானார். அப்போது அஸ்வஜித் என்ற புத்தபிக்ஷுவை சந்திக்க நேரிடுகிறது. ஷாரிப்புத்தரின் ஞானப்பசியை உடனடியாக இனங் கண்டு கொள்ளும் அஸ்வஜித் கீழ்க்கண்டவாறு புத்தரையும் அவரது முக்கிய போதனையையும் அறிமுகப்படுத்துகிறார். :-
”யே தம்ம ஹேதுப்பபவா
டேசம் ஹேதும் ததாகதோ
ஆஹா டேசம் ச யொ நிரொதோ
ஏவம் வாடி மஹாசமனொ””காரணத்தில் இருந்து எழும் தர்மங்கள் குறித்தான
காரணத்தை ததாகதர் கூறி இருக்கிறார்;
அதனுடைய முடிவையுக் கூட ;
ஒரு சிறந்த துறவியின் போதனை இது” (குத்தக நிகாயம்)சார்புடைத் தோற்றக் கோட்பாட்டினை சுருக்கமாக ஆனால் தெட்டத் தெளிவாக உணர்த்தும் வரிகள்! இதைக் கேட்டவுடன் ஷாரிப்புத்தர் சிலிர்த்துப் போகிறார். ததாகதரின் ஆசிரமத்தை நோக்கி மின்னல் வேகத்தில் ஆர்வம் மேலிட ஓடுகிறார். புத்தரை தரிசித்து, சங்கத்தில் சேர்ந்த இரண்டாவது வாரம் ஷாரிப்புத்தர் அருகரானார்..
Source :
(1) மணிமேகலை – மூலமும் உரையும் – ந.மு.வேங்கடசாமி நாட்டார்
(2) http://www.buddhanet.net
(3) Cattanar’s Dream Book – an essay by David Shulman (from the Book – A Buddhist Woman’s Path to Enlightenment – an Uppsala University Publication)
(4) Collected Wheel Publications / Piyadassi Thero & others : 1998
(5) The universe in a single atom ; The convergence of science and spirituality : by HH The Dalai Lama (from the chapter “Empriness, Reality and Quantum Physics)நன்றி : சொல்வனம் (http://solvanam.com/?p=24834)
-
முற்றுப்புள்ளி

Acknowledgement : http://openfileblog.blogspot.in/2011/05/john-latham-full-stop.html
“சொற்ஜாலங்கள் கவிதை இல்லைகடைசி வரி திருப்பங்கள் கவிதை இல்லை
புதிர்கள் கவிதை இல்லை
பிரகடனங்கள் கவிதை இல்லை
முழக்கங்கள் கவிதை இல்லை
பிரச்சாரங்கள் கவிதை இல்லை
வசனங்கள் கவிதை இல்லை”
எழுதிய எல்லாவற்றையும்
கிழித்துப் போட்டு விட்டு
வெண் தாளொன்றை
எடுத்து தயாராக வைத்துக்கொண்டு
”எது கவிதை இல்லை என்பது புரிந்தது;
ஆனால் எது கவிதை என்பதைச் சொல்வீரா?”
என்று கேட்ட போது
மௌனமே பதிலாய்க் கிடைத்தது.
வெண் தாளில்
ஒரு கறுப்பு புள்ளி மட்டும் வைத்து
எழுதுகோலை மூடி வைத்தேன்.
-
நீலக்குடை

@ Ben Kelley வித விதமான
கவலைகள்
படைப்பூக்கமிழக்காமல்
ஒன்றன் பின் ஒன்றாக
தோன்றிய வண்ணம்
சங்கிலியை
அறுத்தெறிந்து
ஓரிரு மகிழ்ச்சியை
உளத்துள் புகுத்துவதில் வெற்றி கொண்டு
உவகை தலை தூக்குகையில்
அதீத மகிழ்ச்சி
அபாயம் தரும்
என்று உள்ளுணர்வு சொல்ல
மீண்டும் கவலைக்குள் ஆழ்ந்தேன்
இனி அபாயமில்லை
என்ற நிம்மதியுணர்வை
அடையாளம் காணாமல்
முழுநேரக் கவலையில்
என்னை புதைத்துக் கொண்டேன்
+++++
என் கண்ணீர்த்துளிகளை
மழைத் துளிகள்
மறைத்து விடுதல்
சவுகர்யம்.
நதி உற்பத்தியாகும்
இடத்தை மலைகளும்
குகைகளும்
மறைத்திருக்குமாம்
என் கண்ணீர் நதிக்கு இந்த நீலக்குடை
சாலையோரக் குட்டைகளில்
சேரும் என் கண்ணிரின் வெள்ளத்தை
யாரும் அருந்தப் போவதில்லை
என்ற ஆறுதல் எனக்கு
குடை, ஆகாயம்,
மழை, மழை நீர்க்குட்டை, நீல நிறம் –
இவைகள்
எனக்கு உற்ற தோழர்கள்
எனக்கென்ன கவலை
மழை நிற்கும் வரை !
கவலையின்றி
அழுது கொண்டிருக்கலாம்.
+++++
-
அடுக்குகள்
கணிதத்தில்
முற்றொருமைகளில் வரும்
அடுக்குகளின் விதிகளை
மகளுக்கு
கற்றுவிக்கும் முயற்சியில் தோற்று
துவண்டு ஓய்ந்தேன்.
“அடுக்குகளை கூட்டினால் மதிப்பு பெருகும்.
அடுக்குகளை கழித்தால் மதிப்பு குறையும்
அடுக்குகளை வகுக்க மேலடுக்குகளிலிருந்து
கீழடுக்குகளை கழிக்க வேண்டும்”
ஆறாம் வகுப்பு மாணவிக்கு
சமூகவியல் நியதிகள் புரியுமா
என்ற கேள்வி கூடவா
கணிதப் புத்தக ஆசிரியர்களுக்கு தோன்றியிராது?







