இது நடந்தது நபிகளார் பிறந்த ஆண்டு. பல கடவுள் வழிபாட்டாளர்களின் கட்டுப்பாட்டில் காபா இருந்த காலம். இப்ராஹீம் நபியும் அவரது மகன் இஸ்மாயில்-லும் நிர்மாணித்த அமைப்பு – ஆதி காலத்தில் ஆதம் நபி முதன் முதலாக வழிபட்ட பிரார்த்தனைத் தலம் – பல கடவுள் வழிபாட்டில் திளைத்த குரைஷிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சமயத்திலும் அது அரேபிய நிலத்தின் முதன்மை வழிபாட்டுத் தலமாக விளங்கியது. ஏமன் மட்டுமல்லாது அபிசீனியா போன்ற ஆப்பிரிக்க பிரதேசங்களிலிருந்து யாத்திரிகர்கள் காபாவுக்கு வருவார்கள். காபா பிரதேச பொருளாதாரத்தின் முக்கிய அங்கம்.
அப்போது ஏமனில் உள்ள சனாவை ஆட்சி செய்த அபீசீனியாவை பூர்வீகமாய்க் கொண்ட மன்னன் அப்ரஹாவுக்கு காபாவுக்கு இணையாக வேறொரு புனித த்தலத்தை கட்டி விட வேண்டும் என்ற எண்ணம். சினாயில் ஒரு தேவாலயத்தை அமைத்து, அதை அல்-குலைஸ் எனப் பெயரிட்டான். அரபு யாத்திரிகர்கள் மக்காவின் கஅபாவில் திரளாமல், அல்-குலைஸில் திரளச் செய்ய வேண்டும் என்று எண்ணினான். காபாவை அழித்தால் தான் இது சாத்தியம் என ஒரு பெரும் படையைத் திரட்டிக் கொண்டு காபாவை நோக்கிப் புறப்பட்டான்.
காபாவின் வாயிலுக்கு சற்று தூரத்தில் நல்ல கூட்டம். குரைஷிகள் எதிர்க்கத் தயாராக நிற்கிறார்கள் என்று தோன்றியது! முத்தலீப் என்ற அவர்களின் தலைவர் அப்ரஹாவைச் சந்தித்து தமது கால்நடைகளை கூட்டிக் கொண்டு மக்காவின் மலைப்பிரதேசங்களுக்குச் சென்று விடுவதாகவும் தமது மக்கள் குழுவைத் தாக்க வேண்டமென்றும் கேட்டுக் கொண்டார். அப்ரஹாவுக்கு ஓரே சிரிப்பு! “சரியான பயந்தாங்கொள்ளிகள் இவர்கள்” என்று நினைத்துக் கொண்டான்.
அவனிடம் மிகப் பிரம்மாண்டமான ஆப்ரிக்க யானை ஒன்று இருந்தது. அதனை அடக்கி தன் படையின் பிரதம யானையாக வைத்திருந்தான். குரைஷிகள் நகரை விட்டு விலகிச் செல்லும் முன் படைகளை அனுப்பாமல் தனது பிரதம யானையை காபாவை நோக்கி முன்னகர்த்தினான். அப்போது ஒரு விசித்திரம் நிகழ்ந்தது. தனது கால்களை மடக்கிக் கொண்டு தரையில் உட்கார்ந்து கொண்டது யானை. படை வீரர்கள் அதனை எழுப்பி ஓட வைக்க முயன்றனர். யானையோ ஏமன் போகும் திசையில் ஓடத் துவங்கியது. அதனைப் பிடித்து காபாவின் திசையில் துரத்தினாலோ அது சில அடிகள் ஓடி மறுபடியும் நின்று விட்டது. அதே சமயம் வானில் திடீரென ஆயிரக்கணக்கில் கடற் பறவைகள்! அவற்றில் அலகிலும் கால்களிலும் சிறுசிறு கற்கள்! வானிலிருந்து அப்ரஹாவின் படைகள் மீது கல் மழை! கற்களின் அளவு பச்சைப் பட்டாணியின் அளவாக இருந்தாலும் யார் மீதெல்லாம் அக்கற்கள் பட்டனவோ அவர்கள் வலியில் துடித்தனர். ஒரு சிலரின் கண்களில் கற்கள் பட்டு பார்வையிழந்தனர். அப்ரஹா திகைத்தான். “குரைஷிகள் ஓடி விட்டனர்! பறவைகளின் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை! யார் ஏவுகின்றனர் இவர்களை?” – படைகள் பயந்து போய் பின் செல்லத் தொடங்கின. அப்ரஹா அவர்களை ஓட வேண்டாமெனச் சொன்னான். அவனது வீர ர்கள் பயந்திருந்தனர். ஏமனை நோக்கித் திரும்பி ஓடினர். அவர்கள் கடந்து வந்த ஒவ்வொரு நிலத்திலும் அவர்களின் உடல் பாகங்கள் உதிர்ந்து விழுந்து கொண்டிருந்தன. அப்ரஹாவின் விரல் நுனிகள் விழத் தொடங்கின. ஒவ்வொரு விரல் நுனியும் விழுந்த பிறகு, அதைத் தொடர்ந்து சீழும் இரத்தமும் வெளியேறியது. அவர்கள் யேமனை அடைந்தபோது வெகு சிலரே எஞ்சியிருந்தனர். சில நாட்களில் அப்ரஹா இறந்து போனான்.
பின் வந்த சில பத்தாண்டுகளில் காபாவின் புனிதத்தன்மையை மீட்டெடுக்கப் போகும் நபியின் பிறந்த ஆண்டில் நடந்தது இது. காபாவின் அருகில் வாழ்ந்தவர்கள் பலதெய்வவாதிகள் – சிலைகளை வணங்கியவர்கள். அப்ரஹாவினுடைய படைகளின் அழிவு என்னும் அற்புத அடையாளம் – காபாவினருகில் வாழ்ந்தவர்களுக்காக அல்ல – அதே ஆண்டில் பிறந்த நபிக்காக நடந்தது.
“நபியே! யானை(ப் படை)க்காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா? மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங்கூட்டமாக அவன் அனுப்பினான். சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன. அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கிவிட்டான்.” (105:1-5)
Leave a reply to உரிமையாளன் மீட்டுக் கொள்வான் – இலைகள், மலர்கள், மரங்கள் Cancel reply