சியால்கோட்டுக்கு கனவி்ல் பயணமாதல்

ஒரு நகரத்திற்குப் பயணமானபோது அங்கு பார்த்த ஒரு வீதி பலமுறை என் கனவில் வந்த ஒரு வீதிக் காட்சியைப் போலவே இருந்தது. ஒரு பக்கம்
வரிசையாக வீடுகள். இன்னொரு பக்கம் அடர்த்தியாக வளர்ந்த மரங்களுக்கிடையே ஓடும் சிறு நதி. நகருக்கு நடுவே இருக்கும் புகழ்பெற்ற பிரம்மாண்டமான ஏரிக்கு நடுவே அழகான வண்ணவண்ணப் படகு வீடுகள் தெரிந்தன. ஏரியைச் சுற்றி இன்னும் கொஞ்ச தூரம் சென்று புற நகரை அடைந்த போது நான் பார்த்த தற்போது பயன்பாட்டில் இல்லாத பழைய பேருந்து நிலையமும் என் கனவில் ஒரு கட்டில் போட்டு அதில் நான் படுத்திருந்த இடத்தைப் போலவே இருந்தது. கனவில் அந்த இடம் ரொம்ப கூட்டமாய் இருந்தது. நிஜத்தில் அந்த பேருந்து நிலையம் காலியாய் இருந்தது. என் கனவில் வந்தது போன்றே ஷட்டருடனான கடைகள் இருந்தன. ஆனால் மூடியிருந்தன.

கனவில் நான் இருக்கும் இடம் பாகிஸ்தானின் நகரம் ஒன்று என்பதாக நினைத்துக் கொண்டிருப்பேன். சியால் கோட்டாக இருக்கலாம் என்று கனவுக்குள் எண்ணம் ஓடும். நிஜத்தில் பார்த்த நகரத்துக்கும் ஊக நகருக்கும் இடையே உள்ள தொலைவு இருநூறு கிலோமீட்டர் தான். இருநூறு கிலோமீட்டர் என்று சொல்லிக் கொள்வது எத்தனை presumptuous! நடுவே எல்லை இருக்கிறது. எல்லையில் பிரச்னை. எல்லையின் தொலைவு பற்றியச் சிக்கல். கனவுக்கும் நிஜத்துக்கும் இடையில் உள்ள இடைவெளியை இருநூறு கிலோமீட்டராக எப்படி சுருக்கிவிட முடியும்? கனவில் நான் எல்லை தாண்டியதாக எண்ணியது பிழை. எல்லைக்குள்ளாகத்தான் இருந்திருக்கிறேன். கனவின் எல்லைக்குள்.

கண்ட கனவில் வந்த மனிதர்களை கவனிக்கவில்லை. அறிவிப்பு பலகைகள், பேருந்து எழுத்துகள் எதுவும் கனவில் தோன்றவில்லை. அவை தந்திருக்கக்கூடிய தகவல் கொண்டு இடத்தை சரியாக அனுமானித்திருக்கலாம். கனவு என்பதே நமக்கு நாம் சொல்லிக் கொள்வதும் உணர்ந்து கொள்வதும் தான். பலகைகளில் பேருந்துகளில் எழுத்துகள் தெரிந்திருந்தாலும் அவை நமக்குத் தெரிந்த மொழியில் எழுதப்படாவிட்டாலும் நாம் நினைத்துக் கொண்ட ஊரின் மொழியாகவே அது நமக்குத் தெரியும். போர்டில் ஃபார்ஸி எழுதப்பட்டிருக்கலாம். தமிழ் மட்டுமே படிக்கத் தெரிந்தவனுக்கு கனவில் வரும் ஃபார்ஸியை வாசித்துவிட முடியும் பிரக்ஞையில் அவனறிந்த மொழியாகிய தமிழ் கொண்டு. கனவுகளின் மொழி பிரக்ஞையின் மொழி.

நிஜப்பேருந்து நிலையம் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டு பல வருடங்களாகிவிட்டனவாம். சியால்கோட்டுக்கு ஐம்பதுகளின் முடிவு வரை பேருந்துகள் சென்று கொண்டிருந்தனவாம்! இந்தத் தகவலின் துணை கொண்டு அடுத்த முறை கனவில் இந்தப் பேருந்து நிலையத்துக்கு வந்தால் சியால்கோட்டுக்கு பேருந்து பிடித்துச் சென்றுவிடலாம். சியால்கோட்டில் அதே வீதிக்காட்சியையும் பார்த்துவிடுவோம். ஏனெனில் வீதிக்காட்சியை பிரக்ஞைக்குள் ஏற்றிக்கொண்டால் கனவில் அதனை இருநூறு கிலோமீட்டர் நகர்த்துவது அத்தனை சிரமமில்லை. ”நிஜமாகவே” சியால்கோட்டிற்குள்ளும் அதே பேருந்து நிலையத்தை வந்தடைந்து விடுவோம்.

Comments

One response to “சியால்கோட்டுக்கு கனவி்ல் பயணமாதல்”

  1. […] written in Tamil a few years ago under the title சியால்கோட்டுக்கு கனவில் பயணமாதல் (A Dream Journey to Sialkot), this piece has now been translated into English—courtesy of […]

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.