காகிதத்தின் ஆயுசு

 

ரொம்ப நாளாக ஒரு பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த வெண் காகிதம் அன்று காலை ஒரு மேசையின் மேல் வைக்கப்பட்டது. காகிதத்தை இத்தனை நாள் ஒளித்து வைத்தவன் அந்த காகிதத்தில் சில குறிப்புகளையும் பெயர்களையும் ஒரு நீண்ட கணக்கையும் எழுதி வைத்திருந்தான். ஐந்தாறு தொலைபேசி எண்களும் அந்த காகிதத்தில் கிறுக்கப்பட்டிருந்தன. காகிதத்தின் சொந்தக்காரன் அன்று பல முறை அந்த காகிதத்தை திரும்ப திரும்ப நோக்கிக் கொண்டிருந்தான். அதன் மேல் அன்று ஏற்படுத்தப்பட்ட சுருக்கங்கள் அந்த காகிதத்துக்கு அத்தனை சுகமாயிருக்கவில்லை. இலேசாக வியர்த்திருந்த கையினால் அந்த காகிதத்தை அவன் ஒவ்வொரு முறை ஏந்தியபோது ஒரு சில இடங்களில் லேசாக உப்புச்சுவையான ஈரம் படிந்தது.

அது வைக்கப்பட்டிருந்த மேசையின் பரப்பெங்கும் அந்த காகிதத்தைப் போலவே நூற்றுக்கணக்கான காகிதங்கள். அந்தக் காகித மலையின் மேல் இந்த காகிதத்தில் குறிப்புகளை எழுதி வைத்தவன் எந்த கவனத்தையும் காட்டவில்லை. இந்த காகிதத்தை மட்டும் அடிக்கடி கையில் எடுத்து பார்த்துக் கொண்டிருந்தான். சற்று நேரங்கழித்து அவன் தொலைபேசியில் பேசினான். இந்த காகிதத்துக்கு மனிதர்கள் பேசும் மொழி புரியாது. அவர்கள் பேசும் குரலின் ஏற்ற இறக்கம் மட்டும் அதற்கு நன்கு புலனாகும். தொலைபேசியில் யாருடனோ சண்டையிடும் குரலில் பேசுபவன் போல் நம் காகிதத்துக்கு தெரிந்தது. இரண்டு மின்விசிறிகள் சுழன்று அந்த சின்ன அறையை குளுமைப்படுத்திக் கொண்டிருந்தன. காகித மலையிலிருந்து சில காகிதங்கள் தரையில் விழுந்ததை போனில் பேசிக்கொண்டிருந்தவன் கண்டு கொள்ளவில்லை. காகிதம் சடக்கென மேசையின் விளிம்பு வரை புரண்டு சில கணங்களில் கீழே விழுந்து தரையைத் தொட்டது. மிருதுவான தரை. மின்விசிறி தந்த காற்று அறைக்கதவு இருந்த திசையில் காகிதத்தை நகர்த்தியது. தரையில் ஏற்கனவே சில காகிதங்கள் படிந்திருந்தன. இந்த காகிதம் வேகமாக முன்னேறியது. காகிதத்துக்கு தாம் பிற காகிதங்களுடன் போட்டியில் இருக்கிறோம் என்ற எண்ணம் ஏற்படவில்லை. கிட்டத்தட்ட அறையின் கதவை அது எட்டுவதற்கும் கதவு திறக்கப்படுவதற்கும் சரியாக இருந்தது. சோடாபுட்டி கண்ணாடி அணிந்த பருத்த சரீரமுள்ள ஒருவர் தரையில் கிடந்த காகிதத்தை எடுத்தார். தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தவன் திடுக்கென போனை கட் செய்து அதிர்ந்தவாறு எழுந்து நின்றான்.

அடுத்த சில நிமிடங்களில் காகிதத்தை தன் மேசையில் வைத்து தன் இருகைகளாலும் பிடித்தவாறு அந்த கண்ணாடிக்காரர் அவர் எதிரில் அமர்ந்திருந்த காகிதத்தில் எழுதியவனைப் பார்த்து கடும் வார்த்தைகளால் ஏசிக் கொண்டிருந்தார். அவர் ஏசலில் மிரட்டலும் சரிபங்கில் கலந்திருந்தது. காகிதத்தில் எழுதியவன் தலையைத் தொங்கப்போட்டவாறு அமர்ந்திருந்தான். எந்த கணத்திலும் அழுகைவெடிக்கும் போலிருந்தது. அரைமணி நேரம் திட்டித் தீர்த்தார் கண்ணாடிக்காரர். சற்று களைத்துப் போய் அமைதியானார். கண்ணாடியைக் கழற்றி கைக்குட்டையால் துடைக்கத் தொடங்கினார். கண்மூடி திறக்கும் வேளையில் தான் எழுதிய காகிதத்தை மேசையிலிருந்து எடுத்து கையால் உருட்டி வாயில் திணித்து வேகமாக மெள்ள ஆரம்பித்தான் அதுவரை அழுதுவிடுபவன் போல் முகத்தை வைத்திருந்தவன். அவனுடைய மெள்ளலில் அறைவுற்ற காகிதத்துண்டுகளை – வாயை ஆவெனத் திறந்தவாறு அதிர்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்த – கண்ணாடிக்காரரின் முகத்தில் துப்பினான்.

Comments

One response to “காகிதத்தின் ஆயுசு”

  1. Reid Avatar

    Loved reading this thaanks

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.