ஒரு கிளைக்கதை

வில் வித்தையில் தன் மானசீக குருவாக நினைத்திருந்த துரோணர் தன்னை சீடனாக ஏற்க மறுத்ததால் விரக்தியில் கொஞ்ச காலம் அலைந்து கொண்டிருந்த பிறகு, ஏகலைவனுக்கு ஒர் எண்ணம் பிறந்தது. துரோணர் என்ன துரோணர் ? அவர் மட்டும் தான் குருவா? கல்வித்துறையில் அரசு செய்த மாறுதல்களுக்கு பிறகு வீதிக்கு வீதி வில் வித்தை கற்றுத்தரும் தனியார் பள்ளிகள் முளைத்து விட்டனவே? அவற்றில் ஏதாவது ஒன்றில் போய் சேர்ந்து விட வேண்டியது தான் என்ற முடிவுக்கு வந்தான் ஏகலைவன். தனியார் பள்ளியில் சேர கொஞ்சம் நிதி பற்றாக்குறை. குபேரன் நடத்திய வங்கியில் தேவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்ட காரணத்தாலும், வேடுவர்களுக்கென வங்கியெதுவும் நிறுவப்படாததாலும் யாரிடம் கடன் வாங்குவதென்று தெரியவில்லை. ரிசர்வேஷன் காரணமாக துரோணரின் பள்ளியில் கற்க முடியவில்லை. அக்ரெடிட் பண்ணப்படாத தனியார் பள்ளிகளோ பகல் கொள்ளைக்காரர்களென லூட் செய்கிறார்களே! நிராசையுற்ற ஏகலைவன் ஜென்டில் மேன் அர்ஜுனிடமிருந்து தொழில் கற்றுக்கொண்டு, கொள்ளையடிக்க ஆரம்பித்தான்.

இந்திரப்பிரஸ்தத்தை தலைநகராகக்கொண்டு பாண்டவர்கள் ஆண்டுகொண்டிருந்த பகுதிகளிலேயே தன் கைவேலையை காட்டி நிறைய செல்வம் சேர்த்தான். வில்லுக்கு விசயன் என்று போற்றப்பட்டு வந்த அர்ஜுனனின் இருபதாவது மனைவியின் தந்தையார் வீட்டில் ஏகலைவன் ஒருமுறை கன்னமிட்டு கொள்ளையடித்த போது வெஞ்சினம் கொண்டான் அர்ஜுனன். ஏகலைவனை கைது செய்ய ஒரு சிறப்புப்படை அமைக்கப்பெற்றது ; அர்ஜுனனே அதன் போறுப்பேற்றுக்கொண்டான்.

ஏகலைவனின் பினாமியாக இருந்தவன் ஒரு பாஞ்சால நாட்டான். பத்து தனியார் பள்ளிகளை லம்ப்-பாக வாங்கினான். ஏகலைவன் தான் வாங்கிய பள்ளிகளில் இலவசக்கல்வி தரப்படவேண்டும் என்று சொல்லப்போக – "ஜென்டில்மேன் உதவி செய்தார் என்பதற்காக, அதே இயக்குனர் தந்த சிவாஜி பாதையில் போக வேண்டும் என்று அவசியமில்லை. நமக்கும் ரிடர்ன்ஸ் வேண்டாமா?" என்று சொல்லி கன்வின்ஸ் செய்தான்.

கல்வித்துறையில் மோனோபொலி உருவாகிவருவதை கண்ணுற்ற துரோணர் (இப்போது, பாண்டவநாட்டு அரசு கல்வித்துறைக்கு சிறப்பு ஆலோசகராக பார்ட்-டைம் செய்து வந்தார்), தருமரிடம் அதைப்பற்றி ப்ரஸ்தாபித்து, "மோனோபோலிஸ்டிக் டென்டென்சி சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய தீங்குகள்" என்ற தலைப்பில் பவர் பாயிண்ட் ப்ரசென்டேஷன் செய்தார். சில நாட்களில் ஒர் அவசரச்சட்டம் பிரகடனப்படுத்தி, தனியார் பள்ளிகள் எல்லாம் லைசென்ஸ் பெறுதல் அவசியம் என்றானது. பாஞ்சால நாட்டு பினாமி துவாரகையில் இருந்து ஒரு அரசியல் தரகனை தன் ஆலோசகனாய் நியமித்து உரிமம் பெற முயன்றான்.

பாண்டவர்களின் புதுமையான சட்டத்தை கௌரவர்கள் காப்பியடித்து தங்கள் நாட்டினிலும் அமல் படுத்தினார்கள். ஏற்கெனவே அதிகம் பள்ளிகள் இல்லாமல் அறியாமையின் பீடியில் சிக்கியிருந்த கௌரவ நாட்டுக்கு இச்சட்டம் சரி வராது என்று விதுரர் சபையில் உரையாற்றினார். துரோணர் தான் மோனோபோலிஸ்டிக் கொள்கையை நிலைநிறுத்தி வருகிறார் என்றும் பாண்டவ நாட்டுக்கு அரசாங்க கஜானாவை நிரப்பித்தரும் சட்டங்களை இயற்றித்தந்து, கௌரவ நாட்டை மட்டும் இலட்சிய வாத சங்கிலிகளில் துரோணர் பூட்டுகிறார் என்றும் சகுனி குற்றம் சாட்டினார். துரோணர் தன் குடும்பத்துடன் மலைவாசஸ்தலமொன்று சென்றிருக்கிறார் என்றபடியால், எழுப்பப்பட்ட வாதங்களுக்கு பின்னர் பதிலளிப்பார் என கூறி விவாதத்தை முடிவு செய்தார் திரிதராஷ்டிரர்.

துரியோதனனின் அதிகாரியொருவன் ஏகலைவனின் பினாமியை அஸ்தினாபுரம் அழைத்து விருந்தளித்தான். கௌரவ நாடு அன்னிய முதலீடுகளை வரவேற்பதாகவும், பள்ளிக்கூடங்கள் நிறுவ இலவசமாக இடம் ஒதுக்கி தரப்படும் என்று ஃப்ரி-பைஸ்களை அடுக்கிகொண்டு போக, 25 பள்ளிகளை ஸ்தாபிக்க எம் ஒ யூ கைசாத்திடப்பட்டது. துரியோதனனுக்கு கிக்-பேக்காக 5% வழங்கப்படுமென்றும் பாஞ்சால நாட்டான் ஒப்புக்கொண்டான்.

அர்ஜுனனின் சிறப்புப்படையால் ஜென்டில்மேன் ஏகலைவனை பிடிக்கமுடியவில்லை. அவன் எங்கிருக்கிறான் என்றொ, எப்படி இருப்பான் என்றோ யாரும் அறிந்திருக்கவில்லை. “ஒட்டகத்தை கட்டிக்கோ” என்ற கீர்த்தனை பாடிக்கொண்டிருந்த பாகவதர் ஒருவர் மதுராவிலிருந்து கடத்தப்பட்டிருக்கிறார் என்ற புகாரின் பேரில் விசாரணைக்கு வர, அவரிருக்கும் போதே மதுராவிலுள்ள கோவிலில் இருந்து உண்டியலை காலி செய்தான் ஏகலைவன். அவனுக்கு துணையாக கவுடமணியென்பவன் வந்தான் என்றும் பின்னர் விசாரணை மூலம் தெரிய வந்தது. அர்ஜுனன் ஏகலைவனை பிடிக்கும் வரை முடிவளர்க்கப்போவதில்லை என சூளுரைத்து மொட்டையடித்துக்கொண்டான். அவன் வீடு திரும்பியதும் “பேன் இருப்பது தெரியாமல் ஒட்டடை மாதிரி வழிந்த முடியை எத்தனை முறை வெட்டும்படி நான் சொல்லும் போதும் மகாபாரத தோனி நான் என்று உளறிக்கொட்டி என் தலைக்கும் பேனை தானமாக தந்தீரே, நல்ல வேளை இப்போதாவது புத்தி வந்ததே!” என்று சந்தோஷம் கொண்டாள் சுபத்திரை. திரௌபதியோ “நல்ல வேளை இப்போது நகுலனின் டர்ன்…அர்ஜுனனின் சான்ஸ் வர இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கின்றன.” என்று ஆசுவாசம் கொண்டாள்.

கௌரவ நாட்டுக்கு தனியார் பள்ளிகள் வந்து ஒரு அறிவுப்புரட்சியை ஏற்படுத்தின. பள்ளிக்கு செல்பவர்களின் எண்ணிக்கை ஆல்-டைம் ஹை ஆனது. புதுமையான மார்க்கெட்டிங் டெக்னிக்குகள், சுலப தவணை திட்டங்கள், காற்றோட்டமான அறைகள் – இவற்றின் காரணங்களால் ஏகலைவனின் பினாமியின் பள்ளிகள் கொழித்தன. இவ்வளவு ஏன், துரோணரின் பள்ளியில் படிக்கும் ராஜ குமாரர்கள் கூட இப்போது தனியார் பள்ளிகளை விரும்பினர். காட்டிலும், வெயிலிலும் ப்ராக்டிஸ் பண்ண வேண்டியதில்லை. அறைகளிலேயே, ஹெல்மெட், கவச ஆடைகள் அணிந்து பயிற்சி செய்யக்கூடியதாக இருந்தது. துரோணரின் பள்ளி மூட வேண்டிய நிலைமைக்கு வந்தது. அசுவத்தாமா துரோணரிடம் சென்று முறையிட்டான். துரோணர், சிறப்புப்படையில் பணியாற்றிய ஒற்றன் ஒருவனின் உதவியுடன் ஏகலைவனின் அப்பாயிண்ட்மென்ட் வாங்கி ராஜபாட்டையின் தாபாவொன்றில் சந்தித்தார்.

இரகசிய சந்திப்பிற்கு பிறகு நடந்தவை :-

(!) ஏகலைவன் தன் பள்ளியில் சேர முயன்ற போது ரிசர்வேஷன் மூலம் துரோணர் இடம் தர மறுத்ததாலேயே அவன் ஜென்டில்மேனாக மாறியதை அறிந்தவுடன் அசுவத்தமா வெகுண்டெழுந்து சொன்னான் “அவன் ஒரு சீட் கேட்டான் ; கொடுத்திருக்கலாம். நீங்கள் தரவில்லை. இன்னைக்கி பாண்டவ நாடு, கௌரவ நாடு – இரண்டு நாடுகளிலும் பள்ளிகளை நிறுவி, சாதாரணமா இருந்தவனை சூப்பர் ஸ்டாராக்கி விட்டுட்டீங்க. எதிரிங்க தானா உருவாறதில்லைங்க..நாமதான் உருவாக்கறோம்”

(2) துரோணர் கை கட்டை விரலை இழந்திருந்தார். தாபா மீட்டிங்கில் வெண்ணெய் வெட்டும் கத்தி தொலைந்து போனது ; ஏகலைவன் வெண்ணெய் நான் வெட்டித்தருகிறேன் என்று உதவ வரும் வேளையில் திடீரென்று பவர்-ஆஃப் ஆக தவறுதலாக துரோணரின் கை விரல் வெட்டுபட்டது.

(3) ஏகலைவனின் பினாமிக்கும் துரியோதனுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கல்வி அமைச்சர் சகுனி பள்ளி லைசென்ஸ்களை கான்சல் செய்ய உத்தரவிட்டார். துரோணரின் பள்ளி வழக்கம் போல் மீண்டும் முண்ணனி பெற்றது. அசுவத்தாமாவிற்கும் சகுனிக்கும் இடையில் ஏதொ ஒர் அமைதியான புரிந்துணர்வு இருப்பதாக பேசிக்கொண்டனர்.

(4) ஏகலைவனின் ராபின்ஹூட் தன கொள்ளைகள் முடிவுக்கு வந்தன. அவன் மீது சட்ட பூர்வ நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. பாண்டவர்கள் காட்டிற்கு செல்ல வேண்டி நேரிட்டதால், ஏகலைவனின் கேஸ் பிசுபிசுத்து போய்விட்டதாக மக்கள் பேசிக்கோண்டனர். ஏகலைவன் மீது ஆக்‌ஷன் எடுக்கப்படாததற்கு துரோணரின் திரைக்கு பின்னரான நடவடிக்கைகளே காரணம் என்றும் சில சாரார் சொன்னார்கள். எது உண்மை என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

(5) ஏகலைவனின் சம்மர் ரிசார்ட் ஒன்றில் துரோணரின் கட்டை விரல் ஃபார்மால்டிஹைட் சொல்யுஷனில் ப்ரிசெர்வ் செய்யப்பட்டு வெகுகாலம் காட்சிப்பொருளாய் இருந்தது.

(6) ஏகலைவன் பினாமி பாண்டவர்களின் ஃபைனான்சியர் ஆனான் என்றும் சொல்வார்கள்.

(7) அர்ஜுனன் காட்டுக்கு கிளம்புகையில் ஸ்பெஷலாக மொட்டையடிக்க தேவைப்படவில்லை. ஏற்கெனவே ஏகலைவனை கைது செய்வதாய் சபதமிட்டு மொட்டையடித்திருந்தபடியால் கொஞ்சம் ட்ரிம் மட்டுமே செய்ய வேண்டியிருந்தது. மற்ற பாண்டவ சகோதரர்களுக்கு மட்டும் ஃபுல்-ஃப்லெட்ஜ் மொட்டையடித்துக்கொண்டார்கள்.

12 Comments

  1. natbas says:

    பிரமாதம் சார். ஜாலியாக இருந்தது.

  2. yosipavar says:

    Arasiyal ulkuthuus are really nice! I’ve shared this in g+

  3. hemgan says:

    அன்புள்ள யோசிப்பவர் (அல்லது பவாரா?)
    உங்கள் பின்னூட்டத்திற்கும் ஜி ப்லஸ்-இல் இப்படைப்பை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி. இந்த வலை தளத்தில் உள்ள மற்ற படைப்புகளையும் படித்துப்பாருங்கள்.
    அன்புடன்
    கணேஷ்

  4. hemgan says:

    நன்றி பாஸ்கர்.

  5. Venkat says:

    நன்றாக இருந்தது கணேஷ்…. நல்ல முயற்சி… இந்த காலத்தில் இருந்திருந்தால் இப்படித்தான் ஆகி இருக்கும்.

    பாராட்டுகள்….

    1. hemgan says:

      பாராட்டுக்கு நன்றி தலைவா !

  6. நல்லா இருந்துச்சு சார் இந்த பகடி… நிகழ்கால அரசியலை செம கலாய்..

    நான் கர்ணன் படத்தைப் பார்த்து விட்டு எழுதிய ஒரு பகடி இது… நேரமிருப்பின் வாசிக்கவும்…

    http://nellainanban.blogspot.com/2012/03/i.html

    1. hemgan says:

      பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. கட்டாயம் படிக்கிறேன்.

  7. ஷா says:

    உங்கள் பதிவை என் பதிவின் தில்லிப்பதிவர்கள் பட்டியலில் சேர்த்திருப்பதால் நீங்கள் புதிதாக எழுதும் எதுவும் உடனே தெரிந்து விடுகிறது. மனஅழுத்த நாட்களினூடே இறுக்கத்தைக் குறைக்க உதவியது. காலையில் பார்த்தவுடனே ஏன் படிக்காமல் விட்டேன் என்று தோன்றுகிறது. நன்றி என்ற வார்த்தை போதாது. தொடர்ந்து இதுபோல் அங்கதச்சுவையுடன் எழுதுங்கள்.

  8. hemgan says:

    வணக்கம், உங்கள் பின்னூட்டம் என்னை தொட்டது. இதற்கு முன்னர் இது போன்றதொரு பின்னூட்டத்தை யாரும் இட்டதில்லை. நன்றி என்ற வார்த்தை நிஜமாகவே போதாது.

  9. GG says:

    நிகழ்காலத்திற்கு ஏற்றவாறு அழகாக மகாபாரதக் கிளைக் கதையை எழுதியுள்ளீர்கள்.ரொம்பவே ரசித்தேன்.பகிர்வுக்கு நன்றி.

    1. hemgan says:

      நன்றி ஜிஜி அவர்களே !

Leave a reply to hemgan Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.