Tag: வேகம்

  • அவசர உரைநடை

    ருஷ்டியின் கதைகளை வாசிக்கையில் வேக வேகமாக நகரும் காமெராவின் காட்சிகளைப் பின் தொடர்வது போல உணரலாம். அவசர அவசரமாக கதையைச் சொல்லிச் செல்வது போன்றதொரு தோற்றம். ஒரு வித பதற்றத்துடன் கதையை எழுதுகிறாரோ என்று தோன்றும். மெதுவாக சொற்களை வைத்து காட்சியை, நிகழ்வை செதுக்கியவாறு சொல்லிக் கொண்டு போகும் படைப்புகளை வாசித்துப் பழக்கப்பட்டவர்க்கு ருஷ்டியின் அவசரம் புதிதாகப் படும். அவரின் சில நாவல்களின் “வாசிக்கும் தன்மை குறைவு” என்று சொல்லும் சில வாசகர்களின் விமர்சனம் – அவர்களின் பழக்கப்பட்டுவிட்ட வேகமான வாசிப்புக்குத் தடையாக இருக்கிறது என்பதனால் தான். இந்த “அவசர”த் தோற்றம் அவரது நாவல்களில் ஏன் நிகழ்கிறது?

    (1) நிகழ்வுகளின் பன்முகத்தன்மை – யோசனை, நிகழ்வுகள், பாத்திரங்கள், துணைக்கதைகள் – ஆகியவற்றை ஒரு சூறாவளி போன்று தொகுத்து தனது நாவலில் இணைப்பதால், அடுக்கடுக்கான கதை சொல்லல் விரைவான முன்னேற்றமாக கதையை நகர்த்துகிறது. வாசகர்களுக்கு தொடர்ந்து ஏதாவது ஒரு புதுக்கூறை அளித்தவண்ணம் இருப்பதால், தொடர்ந்து புதுக்கூறுகளை அசை போடும் கட்டாயத்தில் வாசகர்கள் தள்ளப்பட்டு விடுகின்றனர்.
    (2) வாய்வழி மரபின் தாக்கம் – “கதா” “கிஸ்ஸா” போன்ற இந்தியக் கதை சொல்லும் மரபுகளின் தாவிச் செல்லும் உட்கதைகளின் பாணியை ருஷ்டி அதிகம் பயன்படுத்துவார்.
    (3) ருஷ்டியின் ஃப்ளாஷ்பேக்குகள், திசைதிருப்பல்கள் மற்றும் கண்ணோட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை பெரும்பாலும் காலவரிசைகளைச் சுருக்கி, வேகத்தின் மாயையை உருவாக்குகின்றன.
    (4) அவர் பயன்படுத்தும் மொழி ஆற்றல் மிக்க உயிர்ப்புடன் நாவலை ஓடுகின்ற பிராணி போல ஆக்கிவிடுகிறது.
    (5) ருஷ்டியின் படைப்புகள் பெரும்பாலும் அடர்த்தியான வரலாற்று, கலாச்சார மற்றும் அரசியல் கருப்பொருள்களைக் கொண்டவை. இந்த கூறுகளை இறுக்கமாகப் பின்னி, அவர் சித்தரிக்கும் குழப்பமான, துடிப்பான உலகங்கள் பிரதிபலிக்கும் வேகத்தை அவர் தன் கதையில் பராமரிக்கிறார்.
    (6) ருஷ்டி தன் கதைகளில் சித்திரிக்கும் larger than life முக்கியப் பாத்திரங்களும் கதைகளின் ஒட்டுமொத்த வேகத்திற்குப் பங்களிக்கின்றன.

    மிட்நைட்ஸ் சில்ட்ரன் நாவலின் மின்னல் வேக உரைநடை இந்தியாவின் குழப்பமான மற்றும் கொந்தளிப்பான வரலாற்றை பிரதிபலிக்கிறது. தி சாத்தானிக் வெர்ஸஸ் நாவலின் அவசர உரைநடை கதைக்களத்தின் சர்ரியல், கனவு போன்ற மாற்றங்களுடன் பொருந்துகிறது. இந்த “அவசரம்” ருஷ்டியின் படைப்புகளை வரையறுக்கும் ஆற்றலையும் உயிர்ப்பையும் ஒருங்கிணைந்ததாகும்.

  • வேகத்தின் சாட்சி – உள்ளே வெளியே

    கவிஞர் ஆனந்த் அவர்களின் முழுக் கவிதைத் தொகுப்பு காலச்சுவடு பதிப்பாக சமீபத்தில் வெளி வந்தது. தலைப்பு சுவாரஸ்யமோ அல்லத்ய் முகப்பின் அழகான புகைப்படமோ – எதுவெனத் தெரியவில்லை – புத்தகம் என்னை ஈர்த்தது. ஆன்மீகத் தத்துவ தொனி தூவிய அவரது “சுற்றுவழிப்பாதை” நாவலை இதற்கு முன்னர் வாசித்துள்ளேன். அனேகமாக அவரது கவிதைத் தொகுப்பில் நிறைய ஆன்மீக கருப்பொருளில் எழுதப்பட்ட கவிதைகள் இருக்கும் என்பது ஊகம் (எதிர்பார்ப்பும் கூட, இப்போது வரும் கவிதைத் தொகுதிகளில் ஆன்மீக கருப்பொருள் அதிகம் வாசிக்கக் கிடைப்பதில்லை என்பது ஒரு குறை!).

    350 பக்கங்கள் கொண்ட நூலில் ஏராளமான கவிதைகள். புத்தகம் வந்தடைந்ததும் இயைபின்றி ஒரு கவிதையை எடுத்து வாசித்தேன்.

    வேகம்

    பூமியைப் பிளந்து

    வெடித்துச் சிதறி

    வான் நோக்கிப் பாய்கிறது

    தென்னை மரம்

    உச்சியில் நாற்புறமும்

    மட்டையும் ஓலையுமாய்

    பீய்ச்சி அடிக்கிறது

    சொட்டுச்சொட்டாய்

    துளிர்த்து உடன்

    வளர்கின்றன 

    தேங்காய்க் குலைகள்

    மலைகளும் மடுக்களும்

    கண்ணெதிரெ உருவாகும்

    கதி மாறிய உலகில்

    உள்ளே சுற்றுமுற்றும்

    பார்த்து வியந்து நிற்கிறேன்

    என்னை மட்டும்

    காணவில்லை

    (“ வானம் கீழிறங்கும்போது”, காலச்சுவடு பதிப்பகம், ஆசிரியர்: ஆனந்த்)

    ஆறு நாட்களில் இறைவன் பிரபஞ்சத்தை உண்டு பண்ணின விவிலியத் தொன்மத்தில் எல்லாம் வேகவேகமாக உருவாக்கப்பட்டிருக்கும். பிரபஞ்சம் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிற நாட்களில் மரங்கள் நிமிஷக்கணக்கில் வளர்ந்து மலர் பூத்து கனி விளைக்கும் மரஙளின் காட்சியை மானிடன் ஒருவன் பார்த்திருப்பானே ஆயின் அவன் வியந்திருப்பானா? மனிதனும் பிரபஞ்சத்தின் பங்கேற்பாளர்களில் ஒருவனாக மட்டும் படைக்கப்பட்டிருப்பானெனில், வியப்புணர்வுக்கு இடம் இருந்திருக்காது. வியப்புணர்வுக்கு இடம் இருந்ததெனில் பிரபஞ்சத்தின் பார்வையாளனாக, உற்று நோக்குபவனாக அவனுக்கொரு பாத்திரம் தரப்பட்டிருப்பதாகக் கருதலாம். பிரபஞ்சமும் மனிதனும் ஒரே நேரத்தில் உருவாயினரா என்பது வேறு கேள்வி. பரிணாமவியலும் சமயத் தொன்மங்களும் இக்கேள்விக்கு வெவ்வேறு விதங்களில் விடையளிக்கும்.

    விடுவிடென்று நிமிடங்களில் வளர்ந்து கனி குலைக்கும் மரம் – ஸ்ராவஸ்தியில் புத்தர் செய்த அற்புதங்களில் ஒன்று – இது போன்ற ஒரு தென்னை மரம் “வேகம்” கவிதையில் வருகிறது. கவிதைசொல்லி வேகவேகமாக வளரும் தென்னை மரத்தைப் பார்ப்பதாகச் சொல்கிறான். கவிதைக்காட்சிக்குள் பங்கேற்பவனாக கவிதைசொல்லியைப் பார்த்தால் அவன் ஒரு சாட்சி. கவிதைக்காட்சிக்கு வெளியே நின்று அந்தக் காட்சியை வெறும் விவரிப்பவனாக கவிதைசொல்லி இருந்தால் கவிதைக்காட்சிக்குள் அவன் இருக்க மாட்டான். கவிதைக்காட்சியைத் தன் மனதுக்குள் சிருஷ்டித்து அதை அவன் தெரியப்படுத்தும் போது அந்தக் கவிதைக்காட்சி அவனுக்குள்ளேயே இருக்கிறது.

    பங்கேற்பவன் எப்படி சாட்சியாக முடியும்? சாட்சி என்பது உணர்வு நிலை. “நான் இக்காட்சியில், நிகழ்வில் பங்கு பெறுகிறேன்” என்று சொல்லிக் கொள்வது உணர்வு நிலையிலிருந்து எழுவது. பங்கேற்கும் காட்சியில் இருந்துகொண்டே சாட்சியாக இருக்கும் வசதியை நம் உணர்வு நிலை நமக்குத் தருகிறது.

    கவிதையின் தலைப்பு “வேகம்”. வேகம் என்பது காலத்தோடு தொடர்புள்ளது. குறைந்த காலத்தில் அதிக இயக்கம் நிகழ்ந்தால் அதிக வேகம். காலம் என்ற ஒன்று பிரபஞ்ச வடிவம் நம் மேல் நிகழ்த்தும் நையாண்டியாக இருக்கலாம் என்று நியூட்டனிய இயற்பியலுக்குப் பின் வந்த இயற்பியல் முன்னேற்றங்களிலிருந்து நாம் அனுமானித்துவிடலாம். நேரம் முழுமையானது அல்ல, அது ஒரு சார்பியல் கோட்பாடு. வெவ்வேறு பார்வையாளர்களுக்கு அவர்களின் ஒப்பீட்டு இயக்கத்தைப் பொறுத்து மாறுபடும் தன்மையுடையது.

    கவிதையின் இறுதியில் வியப்பின் உச்சியில் அங்கு தான் இல்லை என்று கவிதை சொல்லி அறிவிக்கும் போது அதை இரண்டு விதமாகப் பார்க்கலாம்.

    ஒன்று – ஒரு மரம் வளர்ந்து காய்கனிகள் விளைக்கும் காலத்தை விட மலைகளும் மடுவும் தோன்ற அதிக காலம் பிடித்திருக்கும் என்று தர்க்க ரீதியாக அனுமானிக்க முடியும். மனிதன் வளரும் வேகம் அவன் ஆயுட்காலம். ஒரு மரமோ, மடுவோ, மலையோ வாழும் காலத்துடன் ஒப்பு நோக்கினால் மனிதனின் ஆயுட்காலம் குறைவு. “மலைகளும் மடுக்களும் கண்ணெதிரே உருவாகும் கதிமாறிய உலகில்” அவை உருவாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் “கவிதைசொல்லியாகிய” மனிதனும் நொடியின் சிறு பகுதியில் உருவாகி மறைந்திருப்பான். எனவே, அவன் இக்கவிதையில் அவன் காணப்பட மாட்டான்.

    இரண்டு – கவிதைசொல்லி கவிதைக்கு வெளியே இருப்பானாயின் கவிதைக்காட்சியை அவன் தன் கற்பனையில் சிந்தித்திருக்கிறான் என்று கொள்ளலாமல்லவா?. வெளியே இருந்து கவிதைக்காட்சியை அவன் பார்த்து ஒரு சாட்சியாக “வேகத்தை” ரிப்போர்ட் செய்கிறான் எனில், அவன் பங்கேற்பாளனாக இருக்க முடியாது. 

    கவிதை ஒரு துணைக்கருத்தையும் நிகழ்த்திக் காட்டுகிறது. வேகமாகத் தோன்றும் மரம், மலை, மடு – கவிதையின் ஒற்றைப் படிமம் – பௌத்தத்தின் மூலக்கருத்தான – பாய்வுத்தன்மையில் மாற்றங்களின் குவியலாக இருக்கும் இப்பிரபஞ்சத்தின் தன்மையை பிரதிபலிக்கிறது.

    பங்கேற்கும் சாட்சிக்கும், காட்சிக்கு வெளியே இருக்கும் சாட்சிக்கும் இடையிலான ஒப்புநோக்கல் கவிதைக்கு புதிர்த்தன்மையை ஈந்து, தத்துவ ஆழத்தை நல்கி இக்கவிதை மீதான வாசகனின் தொடர்-ஈடுபாட்டுக்கான வாயிலாகவும் இருக்கிறது.